Skip to main content

பரித்தித்துறை வடை -பத்தி .
பருத்தித்துறையும் கள்ளத்தீனும்

எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.

கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.

பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம். 

தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது. 

இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ‘ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன. 

ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??கோமகன்  
4 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…