Saturday, December 24, 2011

25 வருகை


25 வருகைநிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றோர்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன்

எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனெனில் ,

நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!

கோமகன்

Tuesday, December 13, 2011

தமிழர் பழக்கவழக்கங்கள்


தமிழர் பழக்கவழக்கங்கள்

தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களையும் அவைகளைப் பற்றிய சில விளக்கங்களையும் தரலாம் என நினைக்கின்றேன் நாம் யாரையாவது சந்திக்கும்பொழுது இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறோம் அதாவது இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும்.

எம்மிலும் பார்க வயதில் பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல்.

காலணிகளை வெளியே கழட்டிவிட்டு வீட்டிற்குள் உள்ளடதல் முறையும் குறிப்பிடத்தக்கது வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.

மேலும் வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு.

அத்துடன் ஒப்பீட்டளவில் மேற்கு நாட்டோருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் பொதுவாக உணர்சிவயப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.உதாரணமாக செத்த வீட்டில் ஓவென நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது இதற்கு ஒர் நல்ல எடுத்துக்காட்டு.

தமிழர்கள் நேரம் தொடர்பாக இறுகிய கட்டுப்பாட்டை அற்றவர்கள். அதாவது ஒரு நிகழ்ச்சி 6 மணிக்கு என்று அறிவித்தால் அது 6:45 ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது பொதுவாகத் தமிழர்களுக்கிடையேயான நிகழ்வுகளுக்கே பொருந்தும்.

Wednesday, December 7, 2011

நெருடியநெருஞ்சி 24
பஸ் மட்டுநிறுத்தியதும் எனக்கும் முகத்தில் கலவரரேகைகள் என் முகத்தில் எட்டிப்பார்க்கக் கொடுக்குக் கட்டின . நான் அணிந்திருந்த கருங்கண்ணாடி அவைகளை ஓரளவு மறைத்துக் கொண்டிருந்தது . பஸ்சினுள் ஏறிய படைவீரன் , எல்லோரையும் இறங்கி சோதனைச்சாவடிக்குப் போகச்சொல்ல முதலே , நானும் மனைவியும் எமது முக்கிய கோப்புகளை எடுத்துக்கொண்டு பஸ் நடத்துனருடன் சோதனைச் சாவடியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.அங்கே அடையாளத்தைத் தொலைத்தவர்களிடம் அடையாளம் பார்பதற்காக பச்சை உடைகள் இருந்தார்கள் . மக்கள் வரிசைகட்டி நின்றார்கள் . ஒருவேளை இவர்களுக்கு வரிசைகட்டி நின்று பழகிவிட்டதோ . மக்கள் வரிசை சிற்ரெறும்பாக ஊர்ந்தது . எனக்கு வெய்யில் வெக்கையும் , மனவெக்கையும் , சேர்ந்து உடல் கொதித்தது . எங்களை ஏற்றி வந்த பஸ் சோதனைச் சாவடியின் மறுபக்கம் போய் , வவுனியா போகும் பக்கம் தனது முகத்தைத் திருப்பியவாறு நின்றது . எங்கள் முறை வந்ததும் என் மனைவி தனது எம்ஓடி பாஸ் ஐக் காட்டிவிட்டு பாதுகாப்பு சோதனைக்குப் போய்விட்டா . நான் எனது கடவுச்சீட்டையும் , எம்ஓடி பாஸ் ஐயும் கொடுத்தேன் . அந்த அதிகாரி எனது கடவுச்சீட்டை நோண்டுவதிலேயே குறியாக இருந்தான் . இவன் எனது கடவுச்சீட்டில் பூராயம் பார்த்துக்கொண்டிருக்க , எமது பஸ் என்னை விட்டு விட்டு ஓடி கண்டிவீதியில் தாவியது . நான் கோபத்தில் அந்த அதிகாரியிடம் பஸ வெளிக்கிடுவதை சொல்லி என்னை விடும்படி சொன்னேன் . அவனோ வீதி தடையில் நின்ற மந்திக்கு பஸ்சை நிப்பாட்டும்படி தொலைதொடர்புக் கருவியால் செய்தி அனுப்பினான் . பஸ்சினுள் மனைவியும் , இங்கு நானும் அல்லாதுப் பட்டோம் . ஒருவாறு எனது பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்துக்கொண்டு நொந்த மனதுடன் பஸ்சை நோக்கி நடந்தேன் . எல்லோரும் என்னையே பார்த்தார்கள் . இதே மண்ணில் பிறந்து வளர்ந்து , வெளிநாட்டுக்காறன் என்ற முத்திரையுடன் பஸ்சைநோக்கி மனம் முட்ட வலியுடன் விரைந்தேன் . அங்கு நான் முன்பு கொழும்பில் இருந்து வந்தபொழுது , அந்த தனியார் பஸ்சில் இருந்த எல்லோரும் வெறுப்புடன் பார்த்தது போல் இல்லாமல் , இந்த பஸ்சில் எல்லோரும் அனுதாபத்துடன்,

" ஏதும் பிரச்சனையே தம்பி "?

என்று கேட்டார்கள் . நான் சிரிப்புடன் அவர்களை மினைக்கெடுத்தியதிற்கு மன்னிப்புக் கேட்டவாறே , எனது இருக்கையில் இருந்தேன் . எனக்கு நாக்கு வறட்டியது . மனைவியிடம் இருந்த தண்ணிப் போத்தலை வாங்கி வாயில் கவிட்டேன் . பஸ்சும் இந்தக் கிரகங்களின் பிடியில் இருந்து விடுபட்ட புழுகத்தில் கண்டி வீதியில் கடுகியது . பஸ்சினுள் மீண்டும் எண்பதுகள் ஒலிக்கத்தொடங்கியது . என்மனம் அதில் லயிக்கவில்லை எனது கண்கள் என் மண்ணைக் களவெடுத்தது . வீதியின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரை வறண்ட பூமியில் சிறு சிறு திட்டுக்களாகப் பசுமை எட்டிப்பார்த்தது.எல்லோருக்குமே உலை பொங்கப்பண்ணிய பூமி இன்று மீட்பாரின்றி அனாதையாக நின்ற காட்சி என்னுள் ஏதோ செய்தது . ஓருகாலத்தில் வேலையற்றோருக்கான ஐந்தேக்கர் திட்டத்தில் ஒருசிலரே ஆர்வப்பட்டார்கள் . வெள்ளை உடுப்புகளின் வழித்தோன்றல்களான தாங்கள் காடுகள் வழியே போய் கஸ்ரப்படுவதா என்ற மிதப்பு . அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் , வன்னியின் மைந்தர்களுமே எல்லையில் இருந்த காட்டைக் களனியாக்கி சிங்கங்களின் சீண்டலுக்கும் பதில் சொல்லி , மற்றையவர்களையும் வாழவைத்தார்கள் . ஆனால் இன்று அந்த மைந்தர்களையே வியாபாரப்பொருளாகவும் , காட்சிப்பொருளாகவும் , மாற்றியவர்களை நினைக்க , எரிகின்ற மனதிற்கு விறகு எடுத்து வைத்த மாதிரி இருந்தது . பஸ் வவுனியாவை நெருங்குவறகு அறிகுறியாக வீதியின் இருபக்கமும் அடர்ந்த குடிமனைகள் போட்டி போட்டு முத்தமிட்டன . நானும் அவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு வந்தேன் . எனது உடைகள் வியர்வையினால் மணக்கத்தோடங்கினாலும் , மண்ணின் வெக்கை தந்த மணமானதால் அது எனக்கு சந்தோசத்தையே தந்தது . பஸ்சில் இருந்தவர்கள் தாங்கள் இறங்குவதற்கு இப்போதே ஆயத்தப்படுத்தத் தொடங்கி விட்டார்கள் . எனக்கு அவர்களின் பரபரப்பு வேடிக்கையாக இருந்தது . பஸ் நகருக்குள் வந்தாலும் தனது குணத்தை நிப்பாட்டவில்லை . நகரின் மையத்தைத் தொட்டு , அதனூடே ஊடறத்து மிதந்து வவுனியா பஸ் நிலையத்தில் தன்னை நிறுத்தும்பொழுது நேரம் பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது . நெருப்புக்கோளம் தலைமீது ஏறி அனலைக் கக்கியதால் , உடம்பில் வியர்வை மழை பெருக்கெடுத்தோடியது . நாங்கள் இறங்கியதும் எங்கள் அருகே ஓட்டோ ஒன்று வந்து நின்றது . அதை ஓட்டிவந்தவர் சின்னக்காவின் மகனைப் பள்ளிக்கூடம் ஏற்றுபவர் . யாழ்பாணத்தில் நன்றாகப்படித்து நல்ல நிலையில் இருந்த அவர் , இடப்பெயர்வினால் அல்லல் பட்டு வவுனியா வந்திருந்தார் . வவுனியாவில் அவர் கௌரவம் பார்க்காது கிடைத்ததைக்கொண்டு ஓட்டோ வாங்கி ஓடிய அவரது உளப்பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது . எங்களை ஏற்றிக் கொண்டு ஓட்டோ அக்காவின் வீட்டிற்குப் போனது .வவுனியாவின் பரபரப்பில்லிருந்து சற்றே விலகி அக்கா இருக்கும் வீட்டிற்கு ஓட்டோ வேகமெடுத்தது . வீதியின் இருபக்கத்து வீட்டு மதில்களின் பின்பு மயில்கொன்றை , போகைன் வீலா , அலரி ,மற்றும் நொச்சி பூக்களும் அணிவகுத்து நின்றன .நாங்கள் அக்கா வீட்டை அடைந்தபொழுது , எனது மருமகன் பள்ளிக்கூடத்தால் வந்திருந்தான் . ஓடிவந்து மாமா என்றவாறே என்னைக் கட்டிக்கொண்டான் .


அக்காவின் அன்பும் சந்தோசமும் முகத்தில் தெரிந்தது . நான் அக்கா தந்த கோப்பியுடன் வீட்டிற்குப் பின்பக்கம் சிகரட்டுடன் போனேன் .அங்கு மாவும் , தென்னைகளும் வெய்யிலுக்கு நிழல் பரப்பி இருந்தன . மாமரத்தில் மாங்காய்கள் பெரிய அளவில் காய்த்துக் குலைகளாக தொங்கின பாரம் தாங்குவதற்காக அக்கா ஒரு தடியால் அவைகளுக்கு முண்டு கொடுத்து வைத்திருந்தா . முன்பு நான் கண்ட தூக்கணாங் குருவிக்கூட்டில் நான்கு புதுவரவுகளால் அந்தப்பகுதி கிலுமுலுவென்று சங்கீதமேடையாக இருந்தது . அம்மா அப்பா குருவிகள் இரையைக் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தன . இந்தக் குஞ்சுகளக்காவது அப்பா அம்மா இருக்கின்றார்கள் . ஆனால் , இப்ப எங்களுக்கு....... நான் சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டேன் . வீட்டு மதிலைத் தாண்டிப் பரந்து விரிந்திருந்த இரம்பைக்குளத்தினால் காற்று சிறிது குளிர்சியாக வந்தது . அதன் சிறிய அலைகள் மெதுவாகக் கேட்டன . அக்கா சாப்பிடவரும்படி கூப்பிட்ட குரல் என்னைக் கலைத்தது . நான் குளிப்பதற்கு குளியலறைக்குள் உள்ளட்டேன் . எனக்குப் பருத்தித்துறையில் கடைத்த கிணற்றுக் குளியல் இங்கு இல்லை . நாகரீகமான காகக் குளியல் எனக்கு வெறுப்பாக வந்தது . நான் கொண்டுவந்த சாம்பல் புழுதியும் நான் குளிக்கும்பொழுது , சொல்லாமல் சொல்லி என்னிடமிருந்து விடைபெற்றது . நான் வெளிக்கிட்டு சாப்பிட வெளியில் வரும் பொழுது , அங்கே மேசையில் எனது இரண்டு அத்தான்களும் எனக்காகச் சாப்பிடக் காத்திருந்தார்கள் . அக்கா என்மீது உள்ள அன்பைச் சாப்பாட்டில்க் காட்டி மேசையெங்கும் பரத்தியிருந்தா . அங்கு எனது விருப்பமான பன்குளம் முட்டித்தயிரும் காத்திருந்தது . நான் குறைவாகச் சாப்பிட்டு முட்டித்தயிரை சீனியுடன் சேர்த்து முட்டக் குடித்தேன் . சாப்பிட்டு முடிந்தவுடன் எல்லோரும் வீட்டு முன் போர்ட்டிக்கோவில் இருந்து பல கதைகளைக் கதைத்த பொழுது எனக்கு நித்திரை சொக்கியது . நான் மனைவியை அவர்களிடம் கதைக்க விட்டு விட்டுப் போய்ப் படுத்துக் கொண்டேன் . விடிய எழும்பி பஸ்சில் வந்த களைப்பு என்னை விரைவிலேயே கனவு நிலைக்குக் கொண்டு போய் விட்டது . என் கனவில் நான் கண்ட இடங்களும் , மனிதர்களும் , மீண்டும் நலம் விசாரித்தார்கள் .

 மாலை நான்கு மணியளவில் விழிப்பு நிலைக்கு வந்த நான் , மீண்டும் முகங்கழுவி என்னைப் புத்தணர்வு நிலைக்கு எடுத்துக்கொண்டேன் . நான் குசினிக்குள் போய் அக்கா போட்டுத் தந்த தேத்தண்ணியை எடுத்துக்கொண்டு , எமது அன்றய இரவு பயணம் சம்பந்தமாகப் பேச்சுக் கொடுத்தேன் . தான் அன்று இரவு யாழ் தேவியில் முதலாம் வகுப்பில் கொழும்புக்கு இரண்டு இடம் பதிவு செய்திருப்பதாக அக்கா சொன்னா . எனக்கு கடைசியாக பக்கத்தில் இருந்த இறம்பைக் குளத்திற்குப் போகவேண்டும் போல இருந்தது . எனது மருமகனைக் கூட்டிக் கொண்டு குளத்திற்கு நடையைக் கட்டினேன் . மருமகனும் எனக்கு வழிகாட்டும் புழுகத்தில் என்னுடன் கூட நடந்தான் . வழியில் தனது பள்ளிக்கூடக் கதைகளைக் கதைத்தவாறே என்னுடன் அவன் நடந்தான் . இடையில் நின்ற அவன் , றோட்டில் இரண்டு மூன்று கல்லுகளைப் பொறுக்கத் தொடங்கினான் . நான் என்ன என்பது போலப்பார்த்தேன் . அவன் ,

"அங்கை பாருங்கோ மாமா , இவைக்கு இண்டைக்கு ஒரு வழிபண்ணவேணும் ".

அவன் காட்டிய திசையில் எனது கண்கள் அளவெடுத்தது . அங்கே , ஒரு வேலியின் பின்னால் இருந்த சீமைக்கிழுவை மரக்கொப்பில் ஓர் அழகான பெரிய தேன் வதை தொங்கியது . அதில் இருந்த தேன் வெய்யில் வெளிச்சத்தில் மின்னியது . தேனீக்கள் வருவதும் போவதுமாக தமது வேலையில் கண்ணுங்கருத்துமாக இருந்தன . நான் அவனை கல்லால் எறியவேண்டாம் என்று தடுத்தேன் .

"ஏன் மாமா ?"

அவனது குரலில் ஏமாற்றம் தெரிந்தது .

"நீ இப்பிடியோரு வீடு கட்டுவியா ?"

" இல்லை மாமா . மண்ணில கட்டுவன் அது உடைஞ்சுபோகும் ".

"இந்த தேனியள் எவ்வளவு கஸ்ரப்பட்டு இந்த வீட்டை கட்டுது . ஒவ்வொரு சின்ன அறைக்கையும் தாங்கள் எடுத்த தேனை கொண்டுவந்து வைக்கினம் . அங்கை பார் தேன் எப்பிடி மின்னுது எண்டு . இப்ப நீ கல்லாலை எறிஞ்சியெண்டால் , அவையள் கோபத்தில உன்னைக் குத்திப் போடுவினம் . உப்பிடித் தான் நாங்களும் ஒரு நல்ல பெரிய தேன்கூடு கட்டின்னாங்கள் . பெரிய கறடியள் எல்லாம் ஒண்டாய் வந்து எங்கடை தேன்கூட்டை கலைச்சு, தேனையும் குடிச்சுப் போட்டுதுகள் . இப்ப தேன் கூடும் இல்லை . தேனும் இல்லை ".

அவன் விளங்கியமாதிரி ,

" நீங்கள் மாமா ஆமி எங்களுக்கு அடிச்ச கதையைத்தானே சொல்லுறியள் ".

நான் அவனை அணைத்தவாறே குளத்திற்கு போக முயற்சித்தேன் . சிறுவனாக இருந்தாலும் அவனது மனதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை . சிறிது தூரம் நாங்கள் போனதும் ,

"மாமா இதிலை நில்லுங்கோ , உடனை வாறன் ".

என்றவாறே , ஒரு வீட்டினுள் ஓடினான் . அந்த வீட்டில் அவனது வயதை ஒத்த பல பிள்ளைகள் விழையாடிக்கொண்டிருந்தனர் . நான் வீட்டின் முகப்பைப் பார்த்தேன் < முல்லை சிறுவர் காப்பகம் > என்று பெயர்பலகை போட்டிருந்தது . மருமகன் ஒரு சின்னப்பெடியனுடனும் , பெட்டையுடனும் என்னைக் காட்டியவாறே கதைத்துக் கொண்டிருந்தான் . நான் அவனைக் கூப்பிட்டதும் , அவர்கள் கையில் எதையோ திணித்து விட்டு ஓடிவந்தான் .

" என்னடா அவையோடை கதைச்சனி "?

அது மாமா , அவை என்னோடை படிக்கிறவை . உங்களுக்கு தெரியுமே ? அவைன்ர அம்மா அப்பாவை ஆமிக்காறன் முல்லைத்தீவில சுட்டுப்போட்டான் . எங்கடை அம்மாவும் , அப்பாவும் இவையளை இங்கை விட்டு படிப்பிக்கினம் . நான் ஒவ்வொரு நாழும் எனக்கு கிடைக்கிறதை இவைக்கும் கொண்டு வந்து தாறனான் . இண்டைக்கு நீங்கள் தந்த ரொபியள் கொண்டு வந்து குடுத்தன். என்றான் சிரித்தவாறே நாங்கள் இருவரும் கதைத்தவாறே குளைத்தை அடைந்தோம் . என்னுடன் குளத்து அணைக்கட்டில் ஏற மருமகன் கஸ்ரப்பட்டான் . நான் அவனைத் தூக்கிக் கொண்ட்டு ஏறினேன் . நான் அங்கே போனபொழுது என் கண் முன்னே இறம்பைக் குளம் அகன்று விரிந்து பரந்திருந்தது . குளத்தின் நடுவே இருந்த மண் புட்டிகளில் வாத்துகள் சில ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன . சில பரந்த நீரில் மிதந்தன . தூரத்தே வானத்தின் முகம் வெட்கத்தால் சிவந்து கொண்டிருந்தது . குளத்தின் நடுவே மொட்டையான மரங்கள் வானத்தை நோக்கி நீட்டிக்கொண்டு இருந்தன , எனது மக்களைப்போல . எங்கிருந்தோ வந்த நாரையொன்று சர்ர்ர் என்று தலைகீழாக வந்து நீரில் மூழ்கி எழும்பியபோது , அதன் வாயில் ஒரு மீன் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது . மருமகன் வாயைப் பிழந்து பாத்துக் கொண்டிருந்தான் . சிறிது தூரம் தள்ளி கட்டில் இருந்து இறங்கி சில எருமைகள் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தன . இருள் மங்கியதால் அவை சிறு கருங்குன்றுகளாகவே தென்பட்டன . மருமகன் போவதற்கு அரையண்டப்படுத்தவே , அரைமனதுடன் குளத்தை நிதானமாகப் பார்த்துக் குளக்கட்டில் இருந்து அவனுடன் இறங்கி வீடு நோக்கி நடந்தேன் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது நன்றாக இருட்டிவிட்டிருந்தது . இரண்டாவது அக்கா கேற் வாசலில் எங்களைப் பாத்துக்கொண்டு நின்றா .


நான் வீட்டினுள் நுளைந்த பொழுது தோசையின் வாசம் மூக்கைத் துளைத்தது . நான் பினபக்கம் போய் முகம் கழுவி வந்தபொழுது , அக்கா தேத்தண்ணி வந்து எடுக்கும்படி குசினிக்குள் நின்று குரல்தந்தா . நான் தேத்தண்ணியைப் போய் எடுத்துக்கொண்டு போர்ட்டிக்கோவில் வந்து இருந்தேன் . எனது மனைவி பயணப் பொதிகளை எல்லாம் போர்ட்டிக்கோவில் அடுக்கி வைத்திருந்தா . நன்றாக இருட்டியதால் வெளிச்சத்திற்கு ஈசல்களும் , மின்னி மின்னிப் பூச்சிகளும் பறந்து திரிந்தன . சிறிது நேரம் எல்லோரும் குடும்பக்கதைகளை இரைமீட்டிக்கொண்டிருந்தோம் . நேரம் ஒன்பது மணியைக் கடந்து கொண்டிருந்தது . மருமகன் களைப்பால் நித்திரையாகி விட்டிருந்தான் . எங்களுக்குப் பத்தரைக்குப் புகையிரதம் என்றபடியால் நானும் மனைவியும் வெளிக்கிட்டுக்கொண்டு சாப்பிட இருந்தோம் . சிவப்புச் சம்பலில் உறைப்புத் தூக்கியது . மனது கனத்ததால் , நாலு தோசைக்கு மேல் இடங்கொடாது வயிறும் கனத்தது . நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தபொழுது எங்களை ஏற்ற ஓட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது . நான் பயணப் பொதிகளை ஓட்டோவுக்குள் வைத்துவிட்டு எல்லோருடனும் விடைபெற்றேன் . அக்கா என்னைக் கட்டிப்பிடித்து ,

" அடுத்த வரியமும் வா , என்ன "?

என்று கண்ணீருடன் சொன்னா . நான் கலங்கிய முகத்தைத் திருப்பிக் கொண்டேன் . ஒட்டோ எங்களை ஏற்றிக்கொண்டு புகையிரத நிலையத்திற்கு விரைந்தது . எங்களுக்குப் பின்னால் இரண்டு அத்தான்களும் தங்கள் மோட்டசைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர் . சிறிது நேரத்தில் எங்கள் படையணி வவுனியா புகையிரத நிலையத்தினுள் நுளைந்தது .

தொடரும்Thursday, December 1, 2011

மனதின் வலிப்பு

மனதின் வலிப்பு

 


உண்மையின் குரல் கேட்குமா???

ஐந்து கண்டங்கள் விட்டும் கேட்குமா ???

நாம் ........... நலமடித்த மாடுகள்

உள்ளேயும் வெளியேயும்

வெள்ளையின் அடிப்பாகத்தை 

நக்கித்தின்னி என்றும்,

கோப்பை கழுவி...................... என்றும்

அவதாரங்கள் எடுத்தாலும்,

விழவில்லை எங்கள்

மனிதம் 

விழவில்லை!!!!!!

என்றுமே நாம்

மனிதத்தை புரியாத ஐந்துகளுக்கு

முன்,

ஆடைகள் அற்ர நிர்வாண மனிதர்கள்

அன்றும் இன்றும் என்றும்....................

கோமகன்
12 தை 2011

Wednesday, November 23, 2011

விடுதலை


விடுதலை
காலை வேளை 5 மணியாகி இருந்தது . தூரத்தே சேவல் ஒன்று காலை விடிவதற்குக் கட்டியங் கூறியது .இருட்டுக்கும் பகலுக்கும் நடந்த போரில் இருட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது . எனக்குப் பக்கத்தில் படுத்திருந்த றொனியன் காலை நக்கி அதன் சந்தோசத்தைக் காட்டியது . இன்னும் கடைசி மகள் எழுந்திருக்கவில்லை . நான் மெதுவாக எழும்பி உடம்பை சிவருக்கு முட்டுக்குடுத்துக் கொண்டு இருந்தேன் . இடுப்பில் கட்டி இருந்த மூத்திரப்பை முட்டியிருந்தது . எனக்கு வாய் நமநமத்தது . பக்கத்தில் இருந்த வெத்திலையையையும் , பொயிலையையும் பாக்கையும் , கலந்து வாய்க்குள் வைத்துக்கொண்டேன் .என் மனமோ காலம் என்னும் சக்கரத்தை திருப்ப முயன்று வெற்றியுங் கொண்டது .

எனது அப்பா மலாயாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது நான் பிறந்தேன் . எனக்கு ஒரு அண்ணை இருந்தார் .நான் பிறந்து இரண்டு வயசாகும் போது எனது அம்மா செத்துப்போனா . நாங்கள் எல்லோரும் இங்கை வந்திட்டம் . அப்பா வேலையால எங்களை விட்டிட்டு மலாயாக்குப் திரும்பவம் போய்விட்டார். நானும் அண்ணையும் அம்மாச்சியோடையும் மாமாக்களோடையும் வளர்ந்தோம். அம்மாச்சி என்னில் கூடப் பட்சம் காட்டினாலும் , எனக்கு யாரும் அம்மாவைப் போல வரவில்லை . சின்ன வயதிலேயே ஏக்கம் என்னுடன் சொந்தங் கொண்டாடியது . நானும் வளரந்து பெரியவளானேன் . எனது முறை மச்சானை அப்பா கலியாணம் செய்து வைத்தார் . கலியாணத்திற்குப் பிறகு சிறிது அம்மாவின் குறை எனக்குத் தெரியவில்லை . எங்கடை சந்தோசத்திலை ஆறு பிள்ளையள் பிறந்தினம் . அதுகளை வளக்கப்பட்ட பாடு கொஞ்ஞநஞ்சமில்லை . இப்ப அவையள் எல்லாம் வளந்து ஒவ்வொரு குடும்பத்தில போய் இருக்கினம். கடைசி மகள் என்னோட இருக்கிறாள் . என் கண்ணில் கண்ணீர் என்னை அறியாது பொளக்கென்று விழுந்தது . இலைப்பையடியானே எப்ப என்னைக் கூப்பிட் போகின்றாய் ? என்று என் மனம் ஏங்கியது . ஏனோ எனது மனம் பிரான்ஸ்சில் இருக்கும் எனது கடைக்குட்டியை சுற்றி வட்டமிட்டது . 21 வயசில அம்மா நான் வெளீல போனால் தான் எங்கட குடும்பம் உருப்படும் எண்டு போனவன் இப்ப என்ன செய்யுறானோ ? பாவம் , அவன் தான் என்னைப் பேசிப் பேசி காசு அனுப்புவான் . எப்பவும் அம்மா அம்மா என்று கையுக்கை காலுக்கை நிப்பான் . குளிருக்கை என்ன கஸ்ரப்படுகின்றானோ ? என்னால் எனது விசும்பலை அடக்கமுடியவில்லை . இப்போழுது நிலம் நன்றாக வெளித்திருந்தது . பிள்ளையார் கோயில் மணியோசை காற்றில் கலந்து வந்தது . திடீரென பக்கத்தில் இருந்த தொலைபேசி சிணுங்கியது .மெதுவாக தொலைபேசியை எடுத்தேன் . அம்மா............. என்று கடைகுட்டியின் குரல் கேட்டது,

"எப்பிடி அம்மா இருக்கிறியள் ?"

என்று ஆசையுடன் கேட்டான் .

" எனக்கென்னடா நீ இருக்கேக்கை குறை".

" என்ன குரல் ஒரு மாதிரி கிடக்கு ".

" இப்பதானே எழும்பின்னனான் என்னம் சலம் எடுக்க ஆள் வரேலை . செரியா நோகுது ".

"ஏன் தங்கைச்சி இன்னும் எழும்பேலையே "?

"அவள் பாவமடா , கைக்குழந்தையோட கஸ்ரப்படுறாள்".

கடக்குட்டி நெருப்பெடுக்கத் தொடங்கீட்டான் .இனி இவனை நிப்பாட்டேலாது . தான் வரப்போறதாய் சொன்னான் . நான் தான் தடுத்து விட்டேன் .எனக்கு ஏன் இப்பிடி கடவுள் சோதிக்கிறார் ? போனவருசம் கடைசி மருமோள் வரும்பொழுது நடந்து திரிந்த என்னை , இந்த வருடம் நடக்கேலாமல் படுக்கையில் போட்டு விட்டாரே ? என்று மனம் கடவுளுடன் சண்டை பிடித்தது . குசினியில் வந்த சத்தம் மகள் எழும்பியதிற்கான அறிகுறியாகத் தெரிந்தது . எனக்கு தேத்தண்ணியை கொண்டுவந்து தந்து விட்டு , எனக்கு பல்லு மினுக்கி , மூத்திரப்பை மாத்தி விட்டாள் . என்ர பிள்ளை இப்படி , செய்வது எனக்குப் பெரிய மனக்கஸ்ரமாக இருந்தது . என்னை ஏன் கடவுள் எல்லாருக்கும் பாரமாய் வைத்தருக்கின்றார் ? என்று என் மனம் அழுதது.

"பிள்ளை அக்காவுக்கு ஒருக்கால் போன் போட்டு அவாவை வரச்சொல்லுறியே ? எனக்கு அவாவைப் பாக்கவேணும் . தம்பி வேலைக்கு வெளிக்கிட்டானே "?

"இல்லையம்மா பிள்ளையளுக்குப் படிப்பிக்கிறார் . போகமுதல் அவனை ஒருக்கால் என்னைப் பாக்கச் சொல்லு."

எனது மனம் வளக்கத்துக்கு மாறாக எல்லோரையும் நினைத்துக் கொண்டிருந்தது . மகள் குசினியில் இடியப்பம் அவித்துக் கொண்டிருந்தாள் . அவளிற்கும் வேலைக்கு நேரமாகி விட்டிருந்தது . மூத்தமகள் சிறிது நேரத்தின் பின்பு வந்தாள் .

"என்னம்மா பாக்கவேணும் எண்டு சொன்னியளாம் ?"

"ஓம் பிள்ளை எனக்கு உன்னைப் பாக்கவேணும் போல கிடக்கு ".

கடைசி மகள் வேலைக்குப்போய்விட்டிருந்தாள். மூத்தமகள் , எனக்கு இடியப்பத்தையும் சம்பலையும் கொண்டு வந்து என்னருகே இருந்து எனக்குத் தீத்திவிட்டாள் . என் கண்களிலில் இருந்து கண்ணீர் வந்தது .

"ஏன் அம்மா அழுகிறியள் சின்னப்பிள்ளையள் மாதிரி"?

"உங்களுக்கெல்லாம் பாரமாய் போட்டன் பிள்ளை".

என்று விசும்பலுடன் சொன்னேன் .

"ஆ....... சொல்ல மறந்து போனன் .காலமை வெள்ளன உன்ரை கடசித்தம்பி பிரான்ஸ்சில இருந்து போன் பண்ணனான்".

"என்னவாம் அம்மா"?

"விசர்பெடி என்னைப் பாக்க வாரப்போறராம் .உங்கள்ளை நம்பிக்கை இல்லையாம் . விசர்பெடிக்கு நல்ல பேச்சுப் பேசி வரவேண்டாம் எண்டு சொன்னன் ".

"இருங்கோ அம்மா வாறன் ".

என்று மூத்த மகள் முன் விறாந்தைக்குப் போய்விட்டாள். நான் எனக்குப் பக்கத்தில் இருந்த மருந்துகளை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டேன். தம்பி வேலைக்கு போக ஆயுத்தமாகி என்னிடம் வந்தான் . வளர்ந்து பெரிய பதவியில் இருந்தாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போகும் குணம் உள்ளவன் . நான் தம்பியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் . ஏனோ அவனைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது .

"அம்மா நான் போட்டவாறன் . என்ன உங்களுக்கு வாங்கிறது "?

"நீ போட்டு வா . வரேக்கை கொஞ்ச வெத்திலை வாங்கியா தம்பி ."

தம்பி விடைபெற்று வேலைக்குப் போய் விட்டான் . என்னைச் சுற்றி அமைதியாக இருந்த்து சூழல். இவர்கள் திரும்பி வரும் வரையும் நான் தனியாகவே இருப்பேன் . என்றும் பிள்ளைகளால் கலகலவென்று இருந்த வீடு , இன்று எல்லோரும் ஒவ்வொரு திக்கிலுமாக பாழடைந்து போய் இருந்ததைப் பார்க்க மனசு ஏக்கத்தில் வெம்பியது . எனக்குத் திடீரென நெஞ்சுக்குள் செய்வது போல் இருந்தது . தங்கைச்சீ................ என்று கூப்பிட்டேன் . மகள் ஓடிவருவது எனக்கு மயங்கிய கண்ணில் மங்கலாகத் தெரிந்தது . நான் பொத்தென படுக்கையில் அலங்கமலங்க விழுந்தேன் . என்னிடம் கிட்ட வந்த மகள் அழுது கொண்டே , பக்கத்தில் இருந்த சிறீதரன் டொக்ரரிடம் ஆள் அனுப்புவது எனக்கு மெதுவாகக் கேட்டது . என்னைச் சுற்றி இருளும் வெளிச்சமும் இரட்டை வேடத்தில் நடித்தன . சிறீதரன் என்னிடம் வந்து என்னைப் பரிசோதித்து விட்டு

"அம்மாக்கு காலம் கிட்டீட்டுது எல்லாருக்கும் சொல்லுங்கோ , என்னம் ஒரு நாள் மெத்த இப்பவே அடங்கத் தொடங்கீட்டா ".

என்று சொன்னது எனக்கு தெளிவாகவே கேட்டதால் , கண்களைத் திறந்தேன் . மகள் அழுது கொண்டு நின்றாள் .

"என்ன பிள்ளை ஏன் அழுகிறாய் ? சிறீதரன் என்னவாம் "?

" ஒண்டுமில்லையம்மா , உங்களுக்கு சீனி குறைஞ்சு போச்சாம் , அதாலை மயங்கிப்போனியள் ".

எனக்கு மகள் தெரிஞ்சே பொய் சொல்வது புரிந்தது . நான் ஆயசத்துடன் கண்களை மூடிக் கொண்டேன் . நான் மெதுவாக என்னை இழப்பதை என்னால் உணர முடிந்தது . நான் இருளிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் போய்ப் போய் வந்தேன் . நான் விடுகின்ற மூச்சு எனக்கே கேட்டது . ஏன் இப்படி எனக்கு நடக்கின்றது என்று அதிசயமாக இருந்தது . என்றும் இல்லாத அதிசயமாக வீடு ஆட்களால் நிரம்பி இருந்தது . நான் மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன் . மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது . எனது கடைசி சம்மந்தி என்னருகில் வந்து என்னுடன் கதைப்பது , எங்கோ இருந்து கேட்பது போல் கேட்டது .

"என்னணை ? உனக்கு ஒண்டுமில்லை . இங்கை என்னைப்பார் . என்னோடை உன்ரை கடைசிமோன் வந்து , உனக்கு தண்ணி விடுறார் ."

என்னால் எனது கண்களை திறக்க முடியவில்லை , கண்ணில் கண்ணீர் வந்தது . ஆவேசமான பலம் உந்த என்ரை கடைக்குட்டியைத் தடவக் கையைத்தூக்கினேன். தூக்கிய கை பட்டென இறங்கியது . நான் மிதந்து கொண்டிருந்தேன் . நான் எதுவித வலியும் இல்லாமல் பஞ்சாக உணர்ந்தேன் .


கோமகன்

Thursday, November 17, 2011

எங்கள் துலா

எங்கள் துலாஎமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில் ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான , ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும். ஆடுகால்கள் முன்பு பூவரசங்கதியால்களாலும் , பின்பு சீமந்தினாலும் உருவாக்கப்பட்டது .

அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் விடக் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் அல்லது பட்டை கட்டப்பட்டும் கட்டப்பட்டும். 

பட்டை
துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.

சூத்திரக்கிணறு 


நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புகின்றோம். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம். இந்தத் துலா முறையானது அருகி சூத்திரக்கிணறு முறைக்கு மாறி , ( இது சம்பந்தமான போதிய விளக்கம் எனக்கு இல்லை யாரும் விளங்கப்படுத்தினால் நல்லது ) , கப்பி முறையாகி , இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் மோட்டர் பம்மில் வந்து நிற்கின்றது .

கோமகன்

Sunday, November 13, 2011

நெருடிய நெருஞ்சி 23கடற்கரையின் கூதல் காற்று அந்த பஸ்ராண்டை நிரவியிருந்தது . சுற்றியிருந்த தேநீர்கடைகளில் இருந்து சுட்ட வடையின் வாசமும் , சீர்காழியின் பக்திப் பாடலுமாகக் கலந்து வந்தன . பஸ் வெளிக்கிடுவதற்கு நேரமிருந்ததால் நானும் மச்சானும் தேநீர்கடைக்குள் உள்ளட்டோம் . எங்களைக் கண்டதும் கடைப் பெடியன் எமது வழமையான இஞ்சித் தேத்தண்ணியையும் , கடலை வடையையும் கொண்டு வைத்தான் . வடையில் சூடு ஆறாது மொறுமொறுப்பாக இருந்தது . எதிரே இருந்த மீன் சந்தைக்கு மீன்கள் முனையிலிருந்து வரத்தொடங்கியிருந்தன . அவற்றைக் கும்பி கும்பியாகக் குவித்து வைத்திருந்தனர் . சிறிது சிறிதாக அந்த இடம் அமைதியை இழந்தது . நாங்கள் இருவரும் தேத்தண்ணியைக் குடித்து விட்டு ஆளுக்கொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு பஸ்சை நோக்கி நடையைக் கட்டினோம் . தூரத்தே மாமா மனைவியுடன் கதைத்துக் கொண்டிருந்தார் . நாங்கள் பஸ்சை அண்மித்தபொழுது ஓரளவு பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது . நான் மாமவிடம் சொல்லி விட்டு பஸ்சினுள் ஏறி அமர்ந்து கொண்டேன் .பஸ் சாரதி தனது இருக்கையில் ஏறி இருந்து கொண்டு இறுதியாக கோர்ணை அடித்து பஸ்சைக் கிளப்பினார் . மாமாவும் மச்சானும் எங்களை விட்டு மெதுவாக மறைந்தார்கள். மனைவியின் கண்கள் கலங்கியிருந்தன . நான் எதுவும் பேசாது ஜன்னாலால் எனது பார்வையைத் திருப்பினேன். பஸ் பருத்தித்துறை வீதியினூடாக வேகமெடுத்து , பருத்தித்துறைக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தது . எனது கண்கள் இவைகளை இனி எப்போது காண்போம் என்ற ஏக்கத்துடன் வழயில் கண்ட மதில்கள் , வேலிகள் , மரஞ் செடி கொடிகளுடன் , மௌனக் கதை பேசியது . இப்பொழுது பஸசினுள் 80 களின் பாடல்களை பஸ் சாரதி ஒலிக்க விட்டார் . மனைவி இயல்பு நிலைக்குத் திரும்பி என்னுடன் கதைக்கத் தொடங்கினா . மனைவியின் தங்கை குடும்பம் மூன்று நாட்கள் கழித்துக் கொழும்பில் இணைவதாக ஏற்பாடு செய்திருந்தோம் . அதனால் மாமா , மாமி , அன்ரிக்கு எமது பிரிவு பெரிதாக தோற்ற வாய்பில்லை என்று மனைவியை ஆறுதல் படுத்தினேன் . பஸ் இப்பொழுது மந்திகைச் சந்தியைக் கடந்து , நெல்லியடி பஸ்ராண்டை நெருங்கிக் கொண்டிருந்தது . பஸ்சும் தன்னை முக்கால்வாசிப் பயணிகளால் நிறைத்திருந்தது .அதில் பாடசாலை மாணவர்களும் , அலுவலகம் போவோருமே நிறைத்திருந்தனர் .நான் அவர்களை வேடிக்கை பார்கத் தொடங்கினேன் . படாசாலை மணவர்களுக்கு இடையே நடந்த குசுகுசுப்புகள் சுவாரசியமாக இருந்தன . இதற்கு எதிர்பாட்டுகள் எதிர்பக்கத்திலும் வந்துதான் கொண்டிருந்தன . எனக்கு அவர்களின் நடவடிக்கைகள் எனது பள்ளிக்காலத்திற்குக் கொண்டு சென்றன. 80களில் நான் கா பொ தா சாதாரணம் படித்துக்கொண்டிருந்த காலமது , கூடவே வெடிவாலும் முளைத்திருந்தது . எனது இயல்பான இலக்கிய ரசனையும் , நகைச்சுவை உணர்வும் , குண்டு றாகினிக்கு என்னால் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது . ஆரம்பத்தில் நான் லெவல் காட்டினாலும் , என்னைச்சுற்றியிருந்த கூட்டுகளின் உசுப்பலினால் நானும் குண்டு றாகினியிடம் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டேன் . பின்பு அவளே எனக்குப் பேரழகியாக எனது கண்களுக்குத் தெரிந்தாள் . நானும் அவளுக்கு லெவல் காட்ட , கா .பொ . தா . சாதாரண பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற்று , கல்லூரியிலேயே முதல் ஆளாக வந்தேன் . இதனால் குண்டு றாகினியும் தன்ர லெவலை மற்றப் பெட்டையளுக்குக் காட்ட என்னுடன் கூட ஒட்டினாள். எங்கடை சரித்திரம் இப்பிடியே ஓடிக்கொண்டிருக்க , ஒரு நாள் மாலைப்பொழுதில் , தனது அப்பாவிற்கு இடமாற்றம் கிடைத்தால் தாங்கள் வவுனியாவிற்கு இடம் மாறப்போவதாகக் குண்டு றாகினி எனக்கு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள் . அவள் போட்ட குண்டால் என் மனம் குண்டும் குளியுமாகப் போனது . எனக்கு விசர்பிடிக்காத குறை . நான் பின்பு அவளைக் கணவில்லை . காலம் என்னுள் பலமாற்றங்களைத் தந்து . ஆனாலும் , அவளின் நினைவு மனதில் ஓரிடத்தில் பசுமையாகவே ஒட்டியிருந்தது . எனது நண்பனுடன் பேச்சுவாக்கில் அவளின் கதை வந்தபொழுது , அவள் இன்று நாவலர் பாடசாலையின் அதிபராக இருப்பது தெரிய வந்தது . எனது மனம் ஏனோ குண்டு றாகினியை சந்திக்க மறுத்தது . அவள் எனது தங்கைச்சியின் நண்பியாக இருந்ததும் ஒரு காரணமோ தெரியாது . நான் என்னையறியாமல் சிரித்துக் கொண்டேன் . எனது மனைவி என்னை வினோதமாகப் பார்த்தா .

" என்ன நீங்களே சிரிக்கிறியள் . சொன்னால் என்ன குறைஞ்சு போவியளே ?"

" இல்லை குண்டு றாகினியை நினைச்சன் , என்ர சேட்டையளையும் நினைச்சன் , சிரிப்பாய் வந்திது ".

" உங்களுக்கு வேறை வேலையில்லை ". 

என்னை முழுமையாகத் தெரிந்த மனைவி . எதையும் எதிர்மறையாக எடுக்காதவா . பஸ் இப்பொழுது குடிமனைகளைக் கடந்து முள்ளி வெளியனூடாகச் சீறிப் பாய்ந்தது.முள்ளிவெளி ஒன்றிரண்டு செல் அடிபட்ட பனைமரங்களுடன் தலைவாரி கோலமாக இருந்தது . ஒடுக்கமான வீதியில் இருமருங்கும் கிடுகுவேலிகளும் கல்லு மதில்களும் போட்டிபோட்டுக் கொண்டு ஓடி மறைந்தன . பஸ் முள்ளிவெளியைக் கடந்து வறணியூடாக ஊடறுத்துப் பாய்ந்தது . நான் சுவாரசியமாக இருபக்கமும் புண்ணாக்குத் தண்ணி குடிக்கும் கண்டுக்குட்டி போல பார்த்துக் கொண்டு வந்தேன் . ஓரிடத்தில் பஸ் நின்றபொழுது எதிரே ஓர் பெரிய கோயில் வளாகமும் ,அதனை ஒட்டிய உயர்ந்த தேர்முட்டியும் ,ராஜகோபுரமும் , வானைமுட்டி நின்றன. அந்த ராஜகோபுரத்தை ஒட்டி ஓர் ஆலமரம் விழுதுகளால் அகலப் பரப்பி நின்று குளிர்சியாக நின்றது . அதன் கீழ் பக்தர்களின் பொங்கல் பானைகள் அணிவகுத்து நின்று பொங்கிப் பிரவாகிக்கத் தயாராக இருந்தன . அவைகளின் பின்னே ஒரு சிறு கூட்டம் பசியுடன் காத்திருந்தது . அந்த மக்கள் கூட்டதைக் கண்டபொழுது என்மனம் அழுதது . அதில் பக்தகோடிகள் பஸ்சில் ஏறினார்கள் . என்னால் அது எந்த இடம் என்று மட்டுக்கட்ட முடியவில்லை . ஆவல் மேலிட எனது தகவல் களஞ்சியத்தை தட்டி எழுப்பினேன் . எனது தோளில் படுத்து இருந்தவாறே , என்ன எனபது போலப் பார்த்தா .

" இது எந்த இடம் இதால நாங்கள் வரேக்கை வரேலையே ".

கையை எடுத்துக் கும்பிட்டவாறே ,

"இது தான் சுட்டிபுரம் கண்ணைகை அம்மன் கோயில்.இது எங்கடை குடும்பக் கோயில் எங்கடை பாட்டா எங்களை சின்னனிலை கூட்டியருவர் . ஒவ்வருவரிசமும் இங்கை பொங்க வருவம் .எனக்குப் பாட்டா தும்பு முட்டாசும் ,தோடம்பழ இனிப்பும், வாங்கித்தருவர் என்ன ரேஸ்ற் அப்பா சாய்......... நாங்கள் இப்ப வறணீக்கால சுத்துப்பாதைல போறம்." 

தகவல்களஞ்சியமும் தனது பங்கிற்கு தொடங்கிவிட்டா என்று உள்ளுக்குள் நான் சிரித்ததின் விளைவு , எனது உதட்டில் பளீரென ஓர் குறுநகை ஒளிர்விட்டது . ஆனால் , எனக்கு இங்கு நடந்த சீர்காழியின் இன்னிசைக் கச்சேரி தான் ஞாபகம் வந்தது . அப்போது சீர்காழியின் இன்னிசைக் கச்சேரியை ஒலியிழை நாடாவில் தான் கேட்டிருக்கின்றேன் . அந்தக் கச்சேரியும் , கே பி சுந்தராம்பாளின் , இன்னிசைக் கச்சேரிக்குமே அதிக அளவு சனம் தோட்டம் துரவெல்லாம் பரந்து விரிந்து இரவிரவாக கண்முழித்து பார்த்து ரசித்தார்கள் . அப்படிப்பட்ட எங்கள் சனத்திற்கு இந்தியா செய்த துரோகத்தனத்தை நினைக்க என்மனம் உலைகளமாகியது .

பஸ் கொடிகாமம் பஸ்ராண்டில் தன்னை நிலை நிறுத்தியது .கொடிகாமத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டறைவர் தேத்தண்ணி குடிக்கப்போய்விட்டார் . அருகே இருந்த சந்தை காய்கறி வாங்க வந்தவர்களால் திமிலோகப்பட்டது . பலவழிகளாலும் வந்த வானொலி சத்தங்கள் காதைப் பிளந்தன . எனக்குத் தலை இடிக்கத் தொடங்கியது . சந்தைக்கு அருகே தட்டிவான் ஒன்று நின்று கொண்டிருந்தது . அதன் தட்டியில் வாழைக்குலைகளும் , ஒடியல் , புழுக்கொடியல் , பினாட்டுக் கடகங்களும் , ஆரோகணித்து இருந்தன . அந்த தட்டி வானில் கொஞ்ச அப்புமாரும் , ஆச்சிமாருமே இருந்தார்கள் . நான் அதில் இளசுகளை காணவில்லை .சிலவேளைகளில் , தட்டிவானில் போவது கௌவுரவக் குறைச்சலாக அவர்கள் நினைத்தார்களோ தெரியாது . இரண்டு ஆச்சிமார்கள் தங்கள் கொட்டப் பெட்டியில் இருந்து காசை எடுத்து தட்டிவான் பெடியனிடம் ரிக்கற் வாங்கிக் கொண்டிருந்தார்கள் .அவர்களிடம் நகரத்து வாசனைகளைக் காணமுடியவில்லை . கிராமத்தின் மண்வாசம் அவர்களிடம் அப்படியே ஒட்டியிருந்தது . அவர்களது வாஞ்சையான வெகுளியான பேச்சுக்கள் எனது மனதைக் கொள்ளை கொண்டன . உதட்டிலே சிரிப்பையும் அதன் பின்னால் கொடும் விசத்தையும் கொண்ட மக்களிடையே பழகிய எனக்கு , உண்மையில் அந்த சாம்பல் மண் மக்கள் வேற்றுக்கிரக வாசிகளாகவே எனக்குத் தெரிந்தார்கள் . எமது பஸ் சாரதி தேத்தண்ணியைக் குடித்து விட்டு வந்து தனது இருக்கையில் இருந்து நெட்டி முறித்தர் . நடத்துனர் வந்து விசில் அடிக்க தனது இலக்கை நோக்கி பஸ் மூசியது . சாவகச்சேரியில் போகும்பொழுது புகையிரதப்பாதையும் கூட வந்து என்னிடம் நலம் விசாரித்தது . ஒன்றின் பின் ஒன்றாக மனது முட்டிய வலியுடன் எனது மண்ணை இழந்து கொண்டிருந்தேன் .

பஸ் இப்பொழுது முகமாலை படைத்தளத்தை நெருங்குவதற்கு அறிகுறியாகத் தனது வேகத்தைக் குறைத்து ஊர்ந்தது . எனக்கு முகம் இறுகி வெறுப்பு மண்டியது . பஸ்சினுள் வந்த சிங்கபாகுக்கள் படைத்தளத்தில் இறங்கப் , புதியவர்கள் ஏறிக்கொண்டார் கள் ஆனையிறவுப் படைத்தளத்திற்குச் செல்ல . பஸ் மீண்டும் தனது குணத்தைக் காட்டியது . நேரம் காலை 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்து . சூரியன் செம்ஞ்சள் பூசி நிலம் நன்றாக வெளுத்து இருந்தது . தூரத்தே ஆனையிறவுப் பாலத்தின் தொடக்கத்தில் மந்திகள் வழமை போல் காவல் கோபுரத்திலும் பாதுகாப்பு அணிலும் குந்திக் கொண்டிருந்தன . பாலத்தின் இருபக்கமும் நாரைகள் தங்கள் வேலையில் கண்ணுங் கருத்துமாக இருந்தன . கோடையின் கடுமையால் நீர் வற்றி அங்காங்கே திட்டாக நின்றது . வெள்ளை நிறத்தில் எமது உப்பு சூரிய ஒளியில் மின்னியது . அதன் பின்னால் உள்ள குருதி தோய்ந்த சரித்திரம் பலருக்கு வேப்பங்காயாக இருப்பது வேடிக்கையாக இருந்தது . பலகளங்களை குறைந்த வளங்களுடன் அகலக்கால் பரப்பி சூறாவளியாக வலம் வந்த வேங்கைகளின் அனல்மூச்சு என் நெஞ்சினுள்ப் பாரமாக இறங்கியது .ஆனையிறவு உப்புவெளியின் சேற்று மணம் மூக்கை துளைத்தது .சூரிய வெளிச்சத்தால் எஞ்சியிருந்த தண்ணி தங்கத்தாம்பாளமாகத் தகதகத்தது . பஸ் வேகத்தை கூட்டிப் பரந்தனை நோக்கி விரைந்தது . சிறிது நேரத்தில் சாப்பிட்டிற்கு முன்பு இறங்கிய இடத்தில் தன்னை நிலைப்படுத்தியது . நான் பம் பண்ண கீழே இறங்கினேன் . ஏனோ தெரியவில்லை இன்று பம்பிங்ஸ்ரேசன் துப்பரவாக இருந்தது . நான் எனது அலுவலை முடித்து விட்டு கைகால் கழுவினேன். காலில் இருந்த புளுதி வெளியேறி கழிவு நீர் ஓடையில் கலந்தது . நான் முகம் கைகால் கழுவியதால் புத்துணர்வு பெற்றேன் . நான் பஸ்சினுள் நுளைந்தபொழுது பஸ் வெறுமையாக இருந்தது . மனைவி தனது தங்கைச்சி செய்து குடுத்திருந்த உப்புமா பார்சலை அவிட்டா . அது வாழை இலையில் சுற்றி இருந்ததால் அதன் வாசம் பஸ் எங்கும் பரவியது . அன்பானசமையலால் வந்த உப்புமாவும் சம்பலும் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது . மனைவியிடம் தண்ணிப்போத்தலை வாங்கிக் குடித்தேன் . எனக்கு உறைப்பு என்று காட்டுவதற்காக நான் நடிப்பது அவாவிற்குத் தெரிந்திருந்தாலும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா . நான் சாப்பிட்டு முடிந்தவுடன் சிகரட் பெட்டியை எடுத்துக்கொண்டு , நான் முன்பு தேத்தண்ணி கடித்த கடையை நோக்கி நடையைக் கட்டினேன் . அங்கு காலை வேளையாகையால் கடை பரபரப்பாக இருந்தது . என்னைக் கண்ட அந்த அண்ணை ,

"வாங்கோ தம்பி நானும் உங்களை பாத்துக் கனகாலம்".

என்று வெள்ளைச் சிரிப்புடன் என்னை வரவேற்றார்.

" நீங்கள் எப்படியண்ணை இப்ப இருக்கிறியள் ?"

என்றேன். 

"ஏதோ இருக்கிறன் தம்பி . மனிசிக்காறி இப்ப கொஞ்சம் சுகமாகி கொண்டு வாறா தம்பி ".

என்று முகத்தில் உற்சாகம் பொங்கிப் பிராவிகிக்கச் சொன்னார் .

"சந்தோசம் அண்ணை எனக்கு ஒரு தேத்தண்ணி தாங்கோ".

நான் தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு கடைவாசலுக்கு வந்தேன்.சுடுகின்ற தேத்தண்ணியை மெதுவாக உறுஞ்சியபடியே , எனது கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது ,நான் முன்பு சந்தித்த அக்கா கண்ணில் எத்துப்படுகின்றாவா என்று . ஏனோ எனது மனம் அவாவையே சுற்றி வட்டமிட்டது . கடவுளே அந்த அக்காவை எனக்குக் காட்டு என்று உள்ளர மனம் வேண்டியது . எனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை . அந்த அக்கா தனது மகனுடன் கையில் கூடையுடன் பக்கத்துக் கடையில் இருந்து வந்து கொண்டிருந்தா . என்மனம் மகழ்சியால்த் துள்ளியது . நான் அவாவைக் கூப்பிட்டேன் . நின்று என்னை உற்றுப்பார்த்த அவா , என்னிடம் ஓடி வராத குறையாக என்னிடம் வந்த அவா ,

" தம்பி எப்பிடி இருக்கிறியள் ? என்ர கடவுளே என்னால நம்பேலாமல் கிடக்கு ".

நான் வாயில் ஒரு புன்னகையை தவளவிட்டேன் . ஏனோ தெரியவில்லை கையில் புகைந்த சிகரட் என்னையறியாமல் பின்னால் போனது .

" அக்கா உங்களோட ஒரு விசையம் கதைக்க வேணும்".

" என்ன தம்பி "?

"உங்களுக்கு நிவாரண நிதி வந்திட்டுதே"?

" ஓம் தம்பி , உங்களை கண்டாப் பிறகு வந்துது .இவர் இப்ப பள்ளிக்கூடம் போறார் . ஒருநேரச்சாப்பாடு தன்னும் சாப்பிடிறம்".

என்று சிரித்தவாறே வெள்ளேந்தியாக எனக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தா அந்த அக்கா . எனது கை தன்னிச்சையாக மாற்றாமல் வைத்திருந்த நூறு யூரோக்களைப் பொக்கற்றினுள் சரிபார்த்தது .

"அக்கா நாங்கள் கொழும்புக்கு போறம் . எங்களிட்டை பெரிய காசு இல்லை . இதை வைச்சு உங்கடை மகனை படிக்க வையங்கோ".

என்று தயாராக வத்திருந்த யூறோவைக் கொடுத்தேன் . 

"என்ன விளையாடுறியளே தம்பி ? எங்கை உங்கடை மனிசி ? நான் பாக்கவேணும் ".

என்று சூடாக அந்த அக்கா என்னிடம் கேட்டா . என்னடா இது வில்லண்டத்தை விலைக்கு வாங்கீட்டமோ? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே , எனது மனவியிடம் அந்த அக்காவைக் கூட்டிக் கொண்டு போனேன் . என்மனைவி செய்த சமாதானத்தால் ஒருவாறு சகஜநிலைக்குத் திரும்பிய அவா ,

" சரி தம்பி இவ்வளவு சொல்லுறியள் , தாங்கோ .ஆனா , உங்களுக்கு திருப்பி தருவன் ."

" உங்கடை பேர் என்ன தம்பி "?

நான் எனது பேரைச் சொன்னேன் .அவா எனது மனைவியைப் பாத்து ,

"உங்கடை மனுசன் பேருக்கேத்த ஆள் தான் "

என்றா,சிரித்தவாறே .

நான் அவாவிடம் விடைபெற்றுக் கொண்டு பறப்படத்தயாரான பஸ்சினுள் ஏறினேன் . நேரம் 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . ஊழித்தாண்டவமாடிய அந்தக் கந்கபூமிகள் என் அழுகையினூடாக விடைபெற்றுக் கொண்டிருந்தன . பஸ் கிளிநொச்சி , மாங்குளம் ,என்று எகிறிப் பாய்ந்து ஓமந்தை சோதனைச் சாவடியில் தன்னை மட்டுநிறுத்தியது .

தொடரும்

Monday, October 31, 2011

நெருடிய நெருஞ்சி 22எல்லோரும் அவதிப்பட்டு பஸ்சை விட்டு இறங்கினார்கள் . நாங்கள் நிதானமாக கடைசியாக இறங்கினோம் . காலை வேளை செம்மஞ்சள் பூசிச் சூரியன் சுட்டெரித்தான் . பஸ்ராண்ட் ஞாயிற்றுக் கிழமையானதால் தூங்கி வழிந்தது . எனக்கு நன்றாக வியர்த்து ஊத்தியது . தண்ணி விடாயால் நாக்கு வறட்டியது . நான் அம்மன் கோயில் மூலையில் இருந்த கடைக்குத் தண்ணிப் போத்தில் வாங்கப் போனேன் . பெறாமக்களும் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் ரொபி வாங்க . அவர்கள் கையில் ஏற்கனவே வல்லிபுரக் கோயிலில் வாங்கிய விளையாட்டுச் சாமான்கள் நிறைந்திருந்தன . எனக்கு தண்ணிப் போத்திலையும் , அவர்கள் கேட்ட ரொபியையும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி அம்மன் கோயில் வீதியால் நடந்தோம் . வழக்கத்துக்கு மாறாக இன்று அம்மன் கோயில் வீதி வெறிச்சென்று இருந்தது . அங்கொன்றும் இங்கொன்றுமாக சனங்கள் சைக்கிளில் போய் கொண்டிருந்தனர் . நாங்கள் வீதியால் நடப்பது இலகுவாக இருந்தது . வீதியைக் கடந்து ஒழுங்கையில் இறங்கியபொழுது , அங்காங்கே ஆடுகளும் இப்பிலிப்பில் குழைகளைக் கடித்தபடியே எங்களுடன் நடை பயின்றன . பெறாமக்கள் அவைகளுடன் சேட்டை விட்டுக் கொண்டு எங்களுடன் நடந்தார்கள் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது நேரம் காலை 9h30 யைத் தாண்டி இருந்தது . வெய்யிலும் இப்பொழுது நன்றாகவே தனது குணத்தைக் காட்டத் தொடங்கி விட்டது . மாமி எங்களுக்காக வெள்ளை அப்பமும் , இடிச்ச சம்பலும் செய்து வைத்திருந்தா . பெறாமக்கள் பேத்தியாருக்கும், அன்ரிக்கும் , தாங்கள் கோயிலுக்குப் போய் வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் . அவர்களும் ஏதோ புதிதாக கேட்பது போல விடுத்து விடுத்து விண்ணாணம் பறைஞ்சு கொண்டிருந்தார்கள் . அப்பமும் சம்பலும் போய் வந்ததிற்கு நல்ல ருசியாக இருந்தாலும் , எனது உணவுக் கட்டுப்பாட்டால் நாலு அப்பத்திற்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை . மாமா வீட்டு வாசலில் இருந்து புளியம்பழம் உடைத்துக் கொண்டிருந்தார் . பிள்ளைகள் சுட்டி ரீவி யுடன் ஐக்கியமாகிவிட்டார்கள் . நானோ மாமாவின் வாயைக் கிண்ட முயற்சி செய்து கொண்டிருந்தேன் , எனக்கு ஏதாவது பிரையோசனமாய் இருக்கும் எண்ட நப்பாசையில் .

"அப்ப மாமா இந்தமுறை லெச்சனில ஆருக்கு போடப்போறியள்" ?

"அது......... எவன் உள்ளதைச் சொல்லுறானோ பாப்பம் ".

"ஆரும் அப்பிடிச் சொல்லுறதாய் தெரியேலையே மாமா".

"அப்பிடி சொல்லாதையுங்கோ . இப்ப சனம் எல்லாம் நல்ல தெளிவு கண்டியளோ . ஆர் தங்களுக்கு பிரையோசனமாய் இருக்கீனமோ , அவைக்குப் பின்னால நிக்குங்கள் . இப்ப டக்கிளசு சனத்துக்கு எவ்வளவோ நல்ல விசையங்களை செய்யிறார் . ஆனா, அவரோடை இருக்கிற கொஞ்ச குறுக்கால போனதுகளால அந்தாளுக்கு கள்ளப் பேர் " .

"ஏன் அவரும் நீங்கள் சொல்லுற ஆக்களை தட்டி நிமித்தலாம் தானே மாமா "?

நீங்கள் என்ன சொல்லுங்கோ , அந்தாள் வந்தாப் பிறகுதான் சனங்களின்ர பிரச்சனையள் எல்லாம் வெட்டிக் கொண்டுவாறார் . எந்த நேரத்திலையும் அவரைப் பாக்கலாம் . சரியான எளிமையான மனசன் பாருங்கோ".

" நாங்களும் இங்கை இருந்து பாத்தனாங்கள் தானே எல்லாற்ர விளையாட்டுகளையும்".

" ஏன் மாமா அப்படிச்சொல்லுறியள் "?

"உங்களுக்கு கனக்கத் தெரியாது தம்பி......... , நாங்கள் எல்லாம் , எல்லா வழியாலையும் பாவப்பட்ட சீவனுகளாய் போனம் . அதுகளை சொல்லுறதெண்டால் நெஞ்சுக் கொதி தான் ஏறும்".

ஏன் மாமா இப்பிடிச் சொல்லுறார் . இதில் எது பொய் ? எது உண்மை ? மக்களின் அடிப்படைத் தேவைகளை யார் தீர்த்து வைகின்றார்களோ , அவர்கள் மக்களால் முன்னிலைப் படுத்துவது மனித இயல்போ ? என்று எனது மனம் பலவாறாக அலைபாய்ந்தது . நானும் மாமாவோட சேர்ந்து புளியம்பழம் உடைச்சுக் கொண்டே கதையைத் தொடர்ந்தேன்,

"ஏன் மாமா இயக்கம் சனத்தை செரியாக் கஸ்ரப்படுத்திப் போட்டாங்களே"?

"அப்பிடி எல்லாம் இல்லை தம்பி......... ஒண்டுரெண்டு கதைக்ககூடிய மட்டத்தில இருந்தாங்கள் . மிச்சமெல்லாம் கதைக்கப் பேசத்தெரியாது . நாங்கள் ஒருத்தரையும் வித்தியாசம் பாக்கேல பாருங்கோ . பசிச்ச வயித்துக்கு சோறு போட்டம் . சில நேரம் சோறு போட்டதுகளுக்கே உலை வைச்சவங்களையும் கண்டிருக்கிறன் ".

"தம்பி உலகத்தில எல்லா இடத்திலையும் நல்லவனும் இருக்கிறாங்கள் , கெட்டவனும் இருக்கிறாங்கள்."

"ஏன் மாமா இதை இங்கை சொல்லுறியள் "?

"எங்கடை பெடியளுக்கு வீரமும் துணிவும் இருக்குது பாருங்கோ. ஆனால் , விவேகம் கொஞ்சம் மட்டு".

" ஏன் அப்பிடி சொல்லுறியள்?"

" நீங்களும் இந்த உலகத்திலதானே இருக்கிறியள் தம்பி."

" எண்டாலும் மாமா நீங்கள் அனுபவசாலிதானே அதுதான் கேட்டனான் என்னை வித்தியாசமாய் எடுக்காதையுங்கோ".

மாமா கெக்கட்டம் விட்டுச் சிரித்தார் . எனக்கு மாமாவின் சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை . அனுபவப்பட்ட பழுத்த பழங்கள் உப்பிடித்தான் கெக்கே பிக்கே எண்டு சிரிப்பார்களோ ? நானும் பொதுவாய் சிரித்தேன் .

" அப்ப மாமா ஒப்பிறேசன் லிபறேசனில , இந்தியன் ஆமி வந்த மூட்டம் எல்லாம் என்ன நடந்தது ?"

"அதெல்லாம் பெரிய கதை தம்பி . எங்கடையாக்களும் சம்பல் அடி குடுத்தாங்கள் கண்டியளோ . ரெண்டு வளத்தாலையும் ஆட்டித்தான் பாத்தினம் . உவன் அத்துலத் முதலியும் நேர இங்கை வந்து நிண்டவன் , தன்ர முதலாளி ஜெவர்தானாக்கு நேரடி ஒலிபரப்புச் செய்ய , ஒண்டும் நடக்கேல . துண்டைக் காணம் துணியைக் காணம் எண்டு ஓடினாங்கள் பாருங்கோ . இதுக்குள்ள இந்தியாக்காறன் , தான் சாப்பாடு குடுக்கப் போறன் எண்டு கடலுக்கை கப்பல்லை வந்து நிக்கிறான் . பின்னை இவையும் ,அவங்களும் கடலுக்கை நிண்டு விண்ணானம் பறையினம் . அவனும் அம்புலிமாமாக் கதையைக் கதைச்சுக் கொண்டு ..... பிளேனால சாப்பாட்டை கொண்டு வந்து போட்டு , இவைக்கு மூஞ்சயைப் பொத்தி ஒரு குடுவை குடுத்தான் கண்டியளோ சொல்லி வேலையில்லை . ஆனா தம்பி , சனம் செரியா துன்பப் பட்டுபோச்சுதுகள். எவ்வளவு சாவுகள் ? கை கால் இல்லாமல் போனதுகள் எண்டு வகைதொகையில்லை . இதுக்கை ஆரும் தப்பி பிழைச்சு இருக்கிறதெண்டால் அது பெரிய விசையம்".

மாமாவின் கண்கள் கலங்கியிருந்தன. நான் அவரை தேற்றிவிட்டு எங்களது பயண அடுக்குகளை பார்க எங்கள் வீட்டிற்குப் போனேன். நான் உடுப்புகளை அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி வந்து சாப்பிடக் கூப்பிட்டா . மாலில் கைக்குத்தரிசி சோறும் , மரக்கறிகளும் உணவுத் தட்டில் நிறைந்திருந்தன . நான் பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் . ஏனோ என் மனம் அம்மாவைச் சுற்றி வட்டமிட்டது . நாளை வவுனியா போகமுதல் இன்றே கோப்பாய்குப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன் . சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் இருந்து விட்டு , கோப்பாய்குப் போக வெளிக்கிட்டேன் . மச்சான் என்னை சைக்கிளில் கொண்டு வந்து பஸ்ராண்டில் விட்டார் . நான் வருவதைத் தங்கைச்சியிடம் சொல்லும்படி மனைவியிடம் சொல்லியிருந்தேன் . என்னை ஏற்றிக்கொண்டு பஸ் கோப்பாயை நோக்கி விரைந்தது . வெய்யிலின் கடுமை குறைந்து , கூதல் காற்று பஸ் ஜன்னலின் ஊடாக வீசியது . சாப்பிட்ட சாப்பாட்டின் துணையால் நித்திரை என்னைச் சொக்கியது . அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்மா கனவில் ஈஸ்மன்ட் கலரில் மிதந்தா. பஸ் திரும்பிய வேகத்தில் நித்திரை என்னிடமிருந்து விடை பெற்றுக்கொண்டது . பஸ்சோ இப்பொழுது நீர்வேலிச் சந்தியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது . நான் இறங்குவதற்குத் தயாரானேன் . முகத்தில் வழிந்த வியர்வையை துவாயால் துடைத்தேன் . பஸ் என்னை இறக்கி விட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது . நான் ஒழுங்கையில் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன் .

என்னைக் கண்டதும் எனது மருமகள் மாமா........... மாமா.......... என்று கத்தியவாறே தளிர் நடையில் ஓடி வந்தாள் . அவள் கையில் நான் ஞாபகமாக வாங்கி வந்த ரொபி பைக்கற்றை வைத்தேன் . அவள் லஞ்சமாகக் கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் ஒன்றைத் தந்தாள். வீட்டில் ரெண்டு சின்ன லபோறடர் ரக குட்டி நாய்கள் தளிர் நடைபயின்றன . அவை வெள்ளை நிறத்தில் குண்டுக் குட்டிகளாக இருந்தன . நான் அவகளைக் கைகளில் தூக்கிக் கொண்டேன் .நான் போனதும் நான்கொடுத்த காசுகளை வைத்துக்கொண்டு , அண்ணையிடம் அரிச்செடுத்து அவரின் பெடியள் வாங்கினதாய் தங்கைச்சி சொன்னாள் . நான் முன் விறாந்தையில் இருந்து அம்மா அப்பாவின் கறுப்பு வெள்ளைக் கலியாணவீட்டு படத்தை வைத்த கண் வாங்காமல் பாத்துக்கொண்டிருந்தேன் . தங்கைச்சி தேத்தண்ணியும் முறுக்கும் கொண்டு வந்தாள் . எடுத்துக்கொண்டே ,


" அண்ணை எங்கை"?

" இப்ப வந்துடுவற்ரா உன்னை நிக்கச்சொன்வர் . நீ என்னடா கனக்க கதைக்கிறாயில்லை , முந்தின ஆள் இல்லை ".

தங்கைச்சி உடைந்துபோய் சொன்னாள் .

"இல்லையடி நான் ஒரே மாதிரித்தான் இருக்கிறன் ".

வாயில் வலிந்த சிரிப்புடன் சொன்னேன் அவள் சமாதானமான மாதிரி எனக்குத் தெரியவில்லை . எனது மனமோ தனிமையை நாடியது . கேணியடிக்குப் போனால் நல்லது போல் எனக்குத் தோன்றியது .எனது எண்ணத்தைச் செயலாக்கினேன் . என்ர மருமகளும் அடம் பிடித்து என்னுடன் சேரந்து கொண்டாள் . நான் அவள் கையைப் பிடித்து கொண்டு நடந்தேன் . அவளும் பெரிய மனிசியாகத் தனது மொழியில் எனக்கு இடம் காட்டியபடியே நடந்தாள் . நாங்கள் கோயிலடியை அண்மித்து விட்டோம் . நான் கேணிக்கட்டில் அமர்ந்து கொண்டேன் . மருமகளை கோயில் முன்றலில் விளையாட விட்டேன் . பிள்ளையார் அமைதியான சூழலில் மோனத்தவம் செய்தார் . எவ்வளவோ நடத்தும் சாட்சியாக இருந்த இந்தப் பிள்ளையார் பலரைக் காப்பாற்றாதது எனக்குக் கோபமாக வந்தது . காலத்தின் வினோதம் , சிறிய வயதில் பிள்ளையாரே கதி என்று இருந்த என்னை இன்று இப்படி யோசிக்க வைக்கின்றது . சன்னிதியானாவது தனது தேரை எரித்த அப்புகாமியை , அவனின் கனவில் வந்து வெருட்டி அவனைக் காவடி எடுக்கப் பண்ணினான் . ஆனால் இந்தப் பிள்ளையாருக்கு முன்னால் எவ்வளவோ நடந்தது . எனக்கு புரியவில்லை . சிலவேளை புரியாது தான் கடவுளோ ? நான் அலைபாய்ந்து கொண்டிருந்தேன் . மாலைச் சூரியன் வானில் வெத்தலையைத் துப்பி விட்டிருந்தான் . குயில் ஒன்று சோகப் பண் பாடியது . தூரத்தே ஒரு பெண் எங்களை நோக்கி வருவது தெரிந்தது . நானோ சுவாரசியமில்லாமல் பற்றிய சிகரட்டைத் தொடர்ந்து என்மனத்தை சிறகடிக்க விட்டேன் . எங்களை நெருங்கிய பெண் சிறிது நடையைக் குறைத்து ,

" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?"

எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே .

"வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ".

கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் .

"நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ".

பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் .

"பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்".

"என்னகதை ?"

"இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்களுக்கு இப்பிடியெல்லாம்.......... ? இந்தியன் ஆமி நிக்கேக்கை என்ன நடந்திது "?

அவள் முகம் சிறிது இறுகியது . சிரிப்பு மெதுமெதுவாக அவளிடம் விடைபெற்றது . நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது .

"அதுதான் கண்ணன் எனக்கும் விளங்கேல . ஆனால் , இப்ப கால ஓட்டத்தை வைச்சு கூட்டிக்களிச்சுப் பாத்தால் எங்களுக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் மண்டைக்கனத்தால எட்டி உதைச்சுப்போட்டம். இந்தியாக்காறன் எங்களுக்கு ஒரு மானில அரசாங்கத்தை எடுக்கச் சொல்லி அப்ப ஒரு பெரிய கூட்டம் முத்தவெளில நடந்திது . அதில பேசின பத்மநபா சொன்னார் < இது எங்களுக்கு கிடைச்ச சந்தர்பம் . இதை அடிப்படையா வச்சு எங்கடை போராட்டத்தை நடத்துவம் . எங்களுக்குப் பதவி வேண்டாம் . நீங்களே எடுங்கோ . எங்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு > . ஆனா , நாங்கள் என்ன சொன்னம் < ஈப்பி யை இந்தியா வாங்கிப்போட்டுது . நாங்கள் போராட்டத்தை விடேலாது > எண்டு நெம்பினம் . அப்ப வடக்கு கிழக்கு இணைஞ்ச பெரிய நிலப்பரப்பு எங்களிட்டை இருந்திது . ஆனா , இண்டைக்கு............... ஒரு சென்ரிமீற்ரர் நிலம் கூட எங்களிட்டை இல்லை ".
பாமினியின் குரல் உடைந்து கமறியது .அவள் அழத்தொடங்கினாள் . நான் அவளை அழவிட்டேன் .

" எத்தினை , இழப்புகள் , தியாகங்கள் , நாங்கள் உருவாக்கின போரியல் முறைகள் , ஒருகாலத்தில பால்றாஜ் எண்டாலே ஒண்டுக்குப் போனவங்கள் , இண்டைக்கு......... எல்லாமே மூண்டு மாசத்தில முடிஞ்சு போச்சுது கண்ணன் . இந்தியன் ஆமி பெரிய திறம் எண்டு சொல்லேல . உலகத்தில இருக்கிற ஆமியள் செய்யிற வேலையளைத் தான் அதுவும் எங்களுக்குச் செய்தது . ஆனா அவங்களிலையும் கனக்க நல்லபேர் தமிழ் ஆக்கள் மெட்றாஸ் றெஜிமன்ட் இல இருந்தாங்கள் . எங்கடை சனம் படுற கஸ்ரத்தை பாத்து இரங்கினாங்கள் . அப்ப இங்கையும் ஒருக்கா சணல் அடி நடந்திது . இந்தியன் ஆமி உரும்பிராய் சந்தியால கோப்பாய்கு வாறான் . இந்தக் கேணயடில , அங்கால குளறியர் வீட்டு புளியமரத்தடில , எல்லாம் இயக்கப்பெட்டையள் குவிஞ்சு நிண்டு அடிக்கிறாளவை. மேல தும்பி பறக்குது . கோப்பாய் ரணகளமாய் போச்சுது . நாங்கள் இப்படியே தரவைக்கால அங்கால கைதடிக்க போட்டம் . நாங்கள் தரவையைக் கடக்கவே எங்களுக்கு உயிர் போட்டு வந்திது . பேந்து நாங்கள் ஆடு மாடுகளைப் பாக்கவந்தால் , கோப்பாய் சந்தில இருந்து வாசிகசாலை வரைக்கும் ஒரே செத்த சனங்களின்ர சவங்கள் புழுத்து நாறுது . எல்லாம் வயசு போன சனங்கள் .பிறகு எல்லாரும் சேந்து கூட்டிஅள்ளி எரிச்சம் . அப்ப யோசிச்சன் இவங்களுக்கு குடுத்துத் தான் கலைக்க வேணும் எண்டு . நாங்கள் கைதடில நிக்கேக்கை அடுத்த கூத்து நடந்திது".

என்மனம் உலைகளமாகியது . என்னையறியமல் என் கண்ணில் நீர் பொட்டுகள் எட்டிப் பாத்தன .

"பாமினி ஒரு சிகரட் பத்தப்போறன் , குறை இனைக்காதை ".

பாமினி வெறுமையாகச் சிரித்தாள் . நான் அவளின் அனுமதயில்லாமலே சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தேன் . என் வாயில் இருந்து , எனது மன வெக்கை புகையாகச் சீறிப் பாய்ந்தது .

"சொல்லு பாமினி".

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர் . கடைசீல இயக்கம் இவரைப் பாவிச்சுப் போட்டு , நுணாவிலுக்கை வைச்சு போட்டுத்தள்ளிப் போட்டாங்கள் . கைதடில எங்களுக்கு சனி தொடங்கீச்சுது . நாங்கள் சாவகச்சேரி பக்கம் ஓடத்தொடங்கினம் .............

"வேண்டாம் கண்ணன் என்னால ஏலாமல் இருக்கு".

அழுகையுடன் பாமினி சொன்னாள் . இருள் படரத்தொடங்கியிருந்தது . தூரத்தே மோட்டச்சைக்கிள் ஒலி கேட்டது . எங்களை நோக்கி அண்ணை வந்து கொண்டிருந்தார்.எங்களிடம் கிட்ட வந்த அண்ணை என்னை வீட்டை வரும்படி சொன்னார் . நான் பாமினியிடம் விடைபெற்றேன் . நான் அண்ணையுடன் தளர் நடையுடன் வீட்டிற்குப் போனேன் . நேரம் மாலை ஆறு மணியாகியிருந்தது . தங்கைச்சி இடியப்பமும் சொதியும் வைத்திருந்தாள் . என்னை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினாள் . நான் அவளது மனதை நோகப்பண்ணாது சிறிது இடியப்பத்தைக் கொறித்தேன் . இருட்டி விட்டதால் அண்ணை என்னை கெதியில் வெளிக்கிடக் கெதிப்படுத்தினார் . நான் எல்லோருடனும் விடைபெறும் பொழுது , தங்கைச்சி நீண்ட காலத்திற்குப் பிறகு அழுகையுடன் என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினாள் . அண்ணை என்னுடன் பஸ்ராண்ட் வரை வந்தார் . என்னை அதிகம் காக்கவைக்காது பஸ் உடனடியாகவே வந்தது . நான் அண்ணையிடம் சொல்லிக் கொண்டு பஸ்சினுள் ஏறினேன் . பஸ்சில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை நான் வசதியாக ஓரிடத்தில் போய் இருந்து கொண்டேன் . என் மனம் என் சொல்கேளாது விசும்பியது . கடவுள் என்னைத்தான் இப்படிச் சோதிக்கறாரோ ? அம்மா இல்லாத வீடும் , பாமனியின் சந்திப்பும் என்னைக் கொல்லாமல் கொன்றன . பஸ் பருத்தித்துறையை நோக்கி விரைந்தது . இருட்டில் ஒன்றுமே என் கண்களில் எத்துப்படவில்லை . நான் கண்களை மூடிக்கொண்டேன் . சிறிது நேரத்தில் பஸ் பருத்திதுறை பஸ்ராண்டில் தன்னை நிலைப்படுத்தியது . நேரம் எட்டு மணியை கடந்திருந்தது . நான் விரைவாக அம்மன் கோயலடியால் நடையைக் கட்டினேன் . நான் வீட்டை அடையும் பொழுது மனைவியும் பெறாமக்களுடன் கேற்றில் நின்று கொண்டிருந்தா . அவாவின் முகத்தில் கலவரரேகைகள் ஓடியிருந்தன . நான் அவாவைச் சமாதானப்படுத்தினேன் . எமது பயணத்துக்கு எல்லாம் பயணப்பொதிகளாக அடுக்கப்பட்டு ஆயத்தமாக இருந்தன . மனைவி தோசையும் ,தோசைக்கறியும் செய்திருந்தா . நாங்கள் எல்லோரும் இருக்க மனைவி பரிமாறினா . மாமியின் கைவண்ணம் தோசைக்கறியில் தெரிந்தது . சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம் . என்னை நித்திரை கட்டிப்பிடித்தது. நான் போய் படுத்து விட்டேன் .நானும் மனைவியும் விடியவே எழும்பி புறப்படத் தயாரானோம் . மாமியினதும் , அன்ரியினதும் முகங்கள் வாட்டமடைந்து இருந்ததை ,நான் அவர்களது முகக்குறிப்பால் உணர்ந்தாலும் , நான் அவர்களுடன் முசுப்பாத்தி விட்டுக் கொண்டே விடைபெற்றேன் . மாமாவும் , மச்சானும் பஸ்ராண்ட் வரை எங்களுடன் வந்தார்கள் .அங்கு கலைந்தும் கலையாத காலைப்பொழுதில் இ .போ .சா பஸ் எங்களுக்காகக் காத்து நின்றது .

தொடரும்

Thursday, October 20, 2011

நெருடிய நெருஞ்சி 21

கடைவாசலில் கடல் காத்துத் தென்றலாக வீசியது , நடந்து வந்த வியர்வைக்கு இதமாக இருந்தது . ஆவிபறக்கும் தேத்தண்ணியையும் ,றோல்ஸ்சையும் உள்ளே தள்ளினோம் .வெளியே சிறிது தூரத்தில் பஸ்ராண்ட் தனது பரபரப்புகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருந்தது .குடிமகன்கள் தங்கள்பாட்டிற்கு தமிழை வளர்த்துக் கொண்டு கடைவீதியால் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஒருசிலரில் இன்றைய சூழ்நிலையின் மனவெக்கை போதையினூடாக வாயால் வெளிவந்துகொண்டிருந்தன. அவர்களைப் பார்கும்பொழுது பாவமாக இருந்தாலும் , கிடைக்கின்ற சிறிய வருமானத்தை இப்பிடி அனியாயமாக்கின்றார்களே என்று கோபம் கோபமாக வந்தது . ஆனால் எனது மனமோ என்னிடம் சண்டை பிடித்தது .< நீ என்ன பெரிய திறமா ? நீயும் கடையில வந்து ரீயும் றோல்ஸ்சும் சாப்பிடுறாய்தானே > என்றது. நானும் அதனுடன் சமரசம் செய்துகொண்டிருந்தேன் . எனது சிந்தனையை கடைப் பெடியனின் குரல் கலைத்தது.

" என்ன அண்ணை யோசினை? எப்ப போறியள் "?

நான் சிரித்தேன் .

"உங்களிட்டை ஒண்டு கேக்கவேணும் எண்டு இருந்தனான் ".

"சொல்லும்".

"இல்லையண்ணை வெளீல வந்தால் நல்லாய் உளைக்கலாமே"? 

"ஏன் இப்ப உமக்கு என்ன பிரச்சனை? கடை நல்லாத்தானே போகுது"?

"போகுதுதான் அண்ணை காசு மிச்சம் பிடிக்கேலாமல் இருக்கு".

" தம்பி சொன்னால் கோபிக்கக் கூடாது இருக்கிறதை விட்டுட்டு இல்லாததிற்கு பறக்கக் கூடாது . இங்கை உமக்கு வருமானம் கொஞ்சமாய் இருந்தாலும் , நீர் நல்ல சந்தோசமாய் உம்மடை ஆக்களோட இருக்கிறீர். இதுகளைக் கெடுக்காதையும் , இந்தக் கடையை இன்னம் கொஞ்சம் திருத்தும் ,மாமாவோடையும் கதையும் ,நான் முடிஞ்ச உதவியை செய்யிறன் ".

"அண்ணை என்னம் ஒரு ரீயும், றோல்ஸ் உம் எடுங்கோ".

" நான் காசு தருவன் ஓசி தீன் எனக்கு வேண்டாம்".

" சரி அண்ணை".

இடையில் என்னை வெட்டிக் கொண்டு போன மச்சான் கையில் கிங்பிக்ஷர் உடன் வந்தார் . நாங்கள் காசைக் குடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறினோம். நன்றாக இருட்டி விட்டிருந்தது . அன்று அம்மன் கோயில் திருவிழா கடைசி நாள் ஆனபடியால் அம்மன் றோட்டால் வீதிவலம் வந்து கொண்டிருந்தா. 3 கூட்டம் மேளச்சமா நடந்து கொண்டிருந்தது . நாதஸ்வரம் வாசிப்பவர்கள் குறையொன்றும் இல்லைக் கண்ணாவை உருக்கிக் கொண்டிருந்தார்கள் . நான் நீண்ட காலத்திற்குப் பிறகு மேளச்சமாவைப் பார்த்ததால் சுவாரசியமாக நின்று பார்த்தேன் . சிறு வயதில் பத்மநாதனின் நாதஸ்வரக்கச்சேரி முன்வரிசையில் சப்பாணிகட்டிக்கொண்டு இருந்து பாத்தது ஞாபகம் வந்தது . இரவு குறூப் பாட்டுக்காறர் வரும் வரைக்கும் இந்தக் கச்சேரிகள் தான் நடக்கும் .ஆனால் எனக்கு இதுகள்தான் விருப்பம் . குறூப் மேடை ஏற முதல் மைக் ரெஸ்ரிங் எண்டு ஒருமணித்தியாலத்துக்குக் கிட்ட அலப்பரை பண்ணுவினம் . இதுக்குள்ளை ஊரில கொஞ்சம் பெரியாக்கள் எண்ட சொல்லுறவை மேடையில போய் வயர் எடுத்துக் குடுப்பினம் . மைக்கை நேராய் பிடிச்சு வைப்பினம் . நோக்கம் என்னவெண்டால் ஆரும் பொம்பிளையள் தங்களைப் பாக்கினமோ எண்டதுதான். இந்த அலப்பலுகளில்லை எங்களுக்கு நித்திரை வந்துவிடும் . இருந்தால்போல அமுதன்அண்ணாமலை < முருகனைக் காண > எண்டு தொடங்க நாங்கள் நித்திரை முறிஞ்சு எழும்புவம் . அவைகள் எனக்கு தூரத்தே தொலைந்த கனாக்காலமாகவே போய்விட்டன . நாங்கள் சனத்துக்குள்ளாலை முண்டியடித்துக் கொண்டு அம்மனுக்கு முன்னால் போனோம் . அங்கே பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினார்கள் , பார்க்க சுவாரசியமாக இருந்தது . மரணத்தின் எல்லையை ருசித்து வாழ்ந்திருந்தாலும் , கிராமியக்கலைகளை ஊக்கிவிப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விடயம் . என்றுமில்லாதவாறு நான் அம்மனைக் கையெடுத்துக் கும்பிட்டேன் . மச்சான் நமுட்டுச்சிரிப்புச் சிரித்தார் . அம்மன் கல்லூரிவீதியில் திரும்பியதும் , நாங்கள் ஒடக்கரை ஒழுங்கையால் நடையைக் கட்டினோம் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது மாமா வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது . நான் யாராய் இருக்கும் என்று அங்கு நேரடியாகப்போனேன் . அங்கே அன்று வந்த மாமி மாமாவுடன் வெத்திலை போட்டுக்கொண்டு கதைத்துக் கொண்டிருந்தா . என்னைக் கண்டதும் ,

"வாங்கோ தம்பி உங்களைப் பாப்பம் எண்டு ஒரு எட்டு எட்டிப்பாத்தன் ".

"சாப்பிட்டியளோ மாமி ? அதெல்லாம் சாப்பிடலாம் , இந்தாங்கோ தம்பி நீங்கள் கேட்ட மூடுபெட்டி கொட்டப்பெட்டி ".

நான் ஆச்சரியத்தடன் அவற்ரைப் பாத்தேன். மிகவும் கலைநயத்துடன் பின்னியிருந்தா மாமி.எனக்கு நெகிழ்சியாக இருந்தது .நான் போக்கடி போக்காகச் சொன்னதை , சிரத்தையுடன் பின்னி எனக்குத் தந்த அந்த மாமி உண்மையிலேயே என்மனதில் உயர்ந்து நின்றா . அன்ரி எல்லோருக்கும் கல்லு றொட்டியும் இடிச்ச சம்பலும் செய்திருந்தா . நாங்கள் எல்லோரும் முற்ரத்தில் இருந்து நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டோம். மறுநாள் காலை வல்லிபுரக் கோயிலுக்குப் போக முடிவு செய்ததால் வெள்ளனப் படுத்து விட்டோம் . நான் வழமைபோல நாலுமணிக்கே எழுந்து விட்டேன் . விடிய 6 மணிக்கு வல்லிபுரக்கோயிலுக்கு பஸ் பிடிக்க நாங்கள் பஸ்ஸ்ராண்டை அடைந்தோம் . பஸ்ரண்டில் அரைமணிக்கொரு தரம் பொற்பதி பஸ் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் என்று சொன்னார்கள். நாங்கள் நேரம் இருந்ததால் அங்கேயே நின்று பஸ்ராண்டை வேடிக்கை பார்த்தோம் . கொழும்பில் இருந்து ஒரு பஸ் இரைச்சலுடன் அங்கே நுளைந்தது . பஸ்ராண்ட் காலை நேரம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது . கடல் காத்து மெதுவாக ஈரலிப்புடன் வீசிக்கொண்டிருந்து . தூரத்தே பொற்பதி செல்லும் பஸ் வந்து கொண்டிருந்தது . அன்று ஞாயிற்ருக்கிழமை என்பதனால் வல்லிபுரத்தானுக்குக் கூட்டம் நிறையவே இருந்தது . பஸ்நின்றதும் நாங்கள் ஏறி வசதியான இடத்தில் இருந்து கொண்டோம் . ஒடுங்கிய வீதியால் பஸ் வல்லிபுரக்கோயிலை நோக்கி ஓடியது . நான் சிறு வயதில் பள்ளிக்கூடச் சுற்ருலாவில் வந்ததிற்குப்பின்பு இங்கு வரவல்லை . நீண்டகாலம் பாதுகாப்பு வலயத்திற்குள் வல்லிபுரத்தான் இருந்து இப்பொழுதுதான் அந்த மாயவனும் மக்களைச் சந்திக்கின்றான் . பஸ் குடந்தனை , தும்பளை எல்லாவற்ரையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது அனேகமானோர் கோயிலுக்கே பயணமாகிக் கொண்டிருந்தனர். பஸ் பொட்டல் வெளிகளைத் தாண்டி கோயிலை அண்மித்ததிற்கு அடையாளமாக , தூரத்தே ராஜகோபுரம் நிமிர்ந்து நின்றது. எங்களை வல்லிபுரக் கோயில் முன்றலில் இறக்கிவிட்டு பஸ் அதன் பயணத்தைத் தொடர்ந்தது . நான் கோயிலின் சுற்ராடலை நன்றாக அவதானித்தேன் . அந்த அதிகாலைவேளையில் வல்லிபுரத்தான் அமைதியாக இருந்தான் . தூரத்தே அலையோசை தாலாட்டியது மனதுக்கு இதமாக இருந்தது . நாங்கள் எல்லோரும் செருப்புகளை கடையில் வைத்து விட்டு கேணியில் கால் கழுவப் போனோம் . பின்பு பிள்ளையார் கோயிலுக்குள் நுளைந்து விட்டு, வல்லிபுரத்தானைத் தரிசிக்க ராஜகோபுரத்தினூடாக உள்ளே நுளைந்தோம். உள்வீதியில் முருகதாஸ் அலைபாயுதே கண்ணாவை மெதுவா குரலில் உருக்கினார். கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் புதுப்பொலிவுடன் கம்பீரமாக இருந்தது. உள்ளே கோயில் விதிப்படி வெறும் உடம்புடன நின்றது எனக்குச் செரியான வெட்கமாக இருந்தது . நான் முன்பு பார்த்த அதே அமைதியுடன் வல்லிபுரத்தான் அனந்தசயனம் கொண்டு கொண்டிருந்தான் . நாங்கள் உள்வீதி சுத்திவரும் பொழுது பல புராணக்கதைகள் சித்திரங்களாக உயிர்த்துக் கதை பேசின. நான் அவற்ரில் லயித்துக் கொண்டு வந்தேன் . நாங்கள் கும்பிட்டு விட்டு வெளியே வரமுதல் எனது மனைவி எனக்குத் தெரியாமல் கோயில் உண்டியலுக்குள் காசு போடுவதை கண்டும் காணமல் வந்தேன் . கோயிலை விட்டு வெளியில் நடந்தபொழுது கீழே இருந்த குருமண்ணினால் கால்கள் குறுகுறுத்தன . இப்பொழுது நன்றாக நிலம் வெளித்திருந்தது . எங்களுக்கு அருகே ஒரு வயதுபோன முதியவர் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் என்னைப்பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். அவர் பிச்சைக்காறர்களுக்கு உரிய தோற்ரத்தில் இல்லாவிட்டாலும் , போரின் ரணத்தின் வலி அவரின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது . அவரின் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது . ஒரு நிமிடம் எனது இதயம் நின்று ஓடியது . எனது கை தானாகவே பொக்கற்ரைத் தேடியது . எனது கையில் அகப்பட்ட தாள்களை அவரின் கையில் திணித்தேன் . அவரின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை . வல்லிபுரத்தான் என்னைக் கட்டாயம் மன்னிப்பான் என்று எனக்குத் தெரியும் .நான் கனத்த மனதுடன் நடக்கத் தொடங்கியபொழுது , ஒரு ஆச்சி எனது கண்ணில் பட்டா . ஆச்சி ஒரு கையில் அலுமீனியத்தட்டை ஏந்திக்குலுக்கியவாறே , யாருடனோ கைத்தொலைபேசியில் நன்றாக கடலை போட்டுக்கொண்டிருந்தா . நான் அவாவைக் கடந்தபொழுது ,

" தம்பி என்னையும் கவனியுங்கோவன் ".

நான் காதில் விழுத்தாத மாதிரி மனைவியுடன் கதைத்தவாறே நடந்தேன் . என்மனமோ கொதிகலனாகியது . என்ன மனிதர்கள் இவர்கள் . <அறம் என்பது விரும்பி இடுவது அதை வலியுறத்திக்கேட்பது அடாவடித்தனம் > என்று எனது மனம் என்னுடன் தத்துவவிசாரணை செய்தது . நாங்கள் பஸ்சுக்காக காத்திருந்தோம் . எனக்கோ நடந்த நிகழ்சிகள் தலை இடியைத் தந்தன .ஒரு இஞ்சி தேத்தண்ணி அடித்தால் நன்றாக இருக்கும் என்று மனம் உணர்தவே , பக்கத்தில் இருந்த தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணியம் வடையையும் வாங்கிக்கொண்டேன் . வடையும் தேத்தண்ணியும் நன்றாக இருந்தது . பொக்கற்ரில் இருந்து சிகரட் ஒன்றைப் பற்ர வைத்துக்கொண்டேன் . சிகரட் புகையினூடாக எனது கண்ணும் காரணமின்றி முட்டியது . அம்மாவின் பிரிவை மறைக்க வேறுவழிகளை நாடுகின்றேனோ ? ஏன் இப்படி இருக்கின்றேன் ? ஒருவேளை அம்மாவிற்குப் நான் பக்கத்தில் இருந்திருந்தால் , அம்மாவின் பிரிவுக்கான புரிதல் கூடதலாக எனக்கு இருந்திருக்குமோ ? அதனால் தானோ தங்கைச்சி என்னைக் கண்டவுடன் குளறி அழுதாளோ ? எனது மனம்பலவாறாக அலைபாய்ந்த பொழுது , பஸ் வந்து நின்றது . நாங்கள் எல்லோரும் ஏறிக்கொண்டோம் . இந்தமுறை பஸ் தனது பாதையை மாற்ரிக்கொண்டு போனது எனக்குத் தெரிந்தது . எங்களது பஸ் ஆனைவிழுந்தான் சந்தியால் திரும்பி பரித்தித்துறையை நோக்கி விரைந்தது . இந்த ஆனைவிழுந்தான் சந்தியில் வைத்துத்தான் , அப்பொழுது பரபரப்பாகப் பேசப்பட்ட கமலம் கொலை வழக்கில் கமலம் கொலைசெய்யப்படார் . நாங்கள் இந்தக்கொலை வழக்கை ஒவ்வொரு நாளும் மித்திரன் பேப்பரில் அடிச்சுப்பிடிச்சுப் படிப்போம் . பரித்திதுறைக்கோட்டில் நடந்த வழக்கைப் பாக்கவே சனம் அப்ப அள்ளுப்பட்டுது . ஒரு கொலைக்காக அந்த நாளில் பரபரப்பான மக்கள் , இன்று கொலைகளே நித்திய வாழ்கையானது அவர்களுக்குப் பழகி உறை நிலைக்குப் போய்விட்டர்கள் . பஸ் இப்பொழுது சிவன்கோயலடியால் திரும்பி வேகமெடுத்து , பரித்தித்துறை பஸ்ராண்டில் தன்னை நிலைப்படுத்தியது . தொடரும்


Monday, October 10, 2011

நெருடிய நெருஞ்சி 20

ஏழாலை தொட்டதெல்லாம் பொன்கொழிக்கும் சிவந்தபூமி அரசபதவிகளில் பலர் இருந்தாலும் அவர்களது பக்கவருமானம் தோட்டமே முக்கியமாக சிறுதோட்டப்பயிர்களே அவர்களது முயற்சியாகும். அண்ணையும் இதற்கு விலக்கு இல்லை. நாங்கள் வீட்டை அடந்தபொழுது அந்தச்சூழல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது வீடு எங்கும் பசுமை போர்த்தி மனதிற்கு இதமாக இருந்தது. பலாவும், மாவும் ,கமுகுவும், அழகான பூக்கண்டுகளும் அணிவகுத்தன. ஒரு பலாவில் பழம் பழுத்ததால் அதன் வாசம் எங்கும் பரவியிருந்தது. கமுகுவில் பாழை பிளந்து அழகாக இருந்தது .நான் வீட்டிற்க்குள் போகமல் வளவைச்சுற்ரி வந்து கொண்டிருந்தேன். பிலாமரத்துக்கு அடியில் ஒரு கூட்டிலே, இரண்டு அடுக்கு வசதிகளுடன் பத்துப் பதினைந்து முயல்கள் துள்ளி விழையாடின .அவைகளில் பலவிதமான தரங்களில் புல்லுகளை மேய்ந்து கொண்டிருந்தன. கூட்டுக்குள் அவை இருந்தாலும், அம்மா, அப்பா, அக்கா, அண்ணை, தங்கைச்சி, என்று உறவுகளுடன் சந்தோசமாகத் துள்ளி விழையாடின .எனக்கு இல்லாத ஒன்றை அந்த முயல்கள் பெற்றதை நினைக்கும்பொழுது, மனதில் முள் ஒன்று ஆழமாகக் கோடுபோட்டு இழுத்தது. எனது சிந்தனையை அண்ணையின் குரல் கலைத்தது,

"இங்கை என்னடாப்பா செய்யிறாய் ? "

"உனக்கு என்னம் சின்னப்பிள்ளைக் குணம் விட்டுப்போகேல".

என்றவாறே கோப்பியைத் தந்தார்.

நான் வலிந்து சிரித்தேன் எனது முகமாற்ரத்தை உணர்ந்த அண்ணை,

" என்னடாப்பா நானும் நீ வந்தநேரம் தொட்டு பாக்கிறன் நீ சந்தோசமாய் இல்லை . என்ன பிரச்சனை ? அண்ணைதானே சொல்லு ".

" இல்லை அண்ணை எனக்கு எதிலையும் இங்கை ஒட்டுதில்லை ".

ஏன் அப்பிடி சொல்லுறாய் ? நாங்கள் உன்னை வித்தயாசமாய்ப் பாக்கேலையே ?

" எனக்கும் உங்கள் எல்லாரோடையும் நேரடி தொடர்பு விட்ட காலம் கூட அண்ணை அதால எல்லாமே இயந்திரத்தனமாக் கிடக்கு " .

" நீ தேவையில்லாமல் குளம்புறாய் . கதையோட கதையா நான் என்ர இலக்கிய கூட்டுகள் கொஞ்சப்பேரை நீ வந்திருக்கிறாய் எண்டு வரச்சசொல்லியிருக்கிறன் அவையும் வாறதாய் சொல்லீச்சினம் ".

" ஏன் அண்ணை ? நான் ஒண்டும் எழுதிப் பெரிசாய் வெட்டிக்கிளிக்கேல .

"அவை வாறதாய் சொல்லியிருக்கினம். நீயும் அவையளோட நாலு கதையளைக் கதைச்சால் தானே உனக்கும் இங்கைத்தையான் நிலமையள் விளங்கும் ".

"சரி அண்ணை அவையைச் சந்திப்பம்"

அண்ணையின் பிள்ளைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் . எல்லோரும் என்னைப்பற்ரி நன்றாகக் கற்பனை பண்ணி வைத்திருந்தார்கள் . எனது நிஜம் அவர்களுக்கு ஒரளவு ஏமாற்ரத்தையே தந்திருந்தது . அவர்கள் என்னை ஒரு வெள்ளையாக , நெடியவனாக , உருவகப்படுத்தியிருந்தார்கள் . அவர்களது சிறிய மனதின் கற்பனை அப்படி!!! . நான் அவர்களது கற்பனையைக் கேலி பண்ணிக்கொண்டு இருந்தேன் .நேரம் 11 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . அண்ணையின் கூட்டுகள் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தார்கள் . வீட்டின் பிலாமரத்தின் கீழ் அரட்டை தொடங்கியது . நான் அண்ணைக்கு வாங்கியந்த ஜே பி யும் , மெண்டிஸ் ஸ்பெசலும் ஒரு சிறிய மேசையில் நடுநாயகமாக இருந்தன . பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு தொடங்கியது எங்களது அரட்டை .

எல்லோரும் எனது பார்வையில் இன்றய நிலமையை அறியவே ஆர்வம் காட்டினார்கள் . என்னுடன் சில இடங்களில் உடன்பட்டாலும் , பலதிற்கு அவர்கள் தங்களது வியாக்கியானங்களையே தந்தார்கள் . அவர்களின் வாதங்களில் இருந்து அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே தெரிந்தது .போரின் அவலங்களும் வன்னிப்பேரவலமும் அவர்களிடம் ஆறாவலியாக கீறிக் கிழித்திருந்தது.எனது கேள்வியான இளையசமூகத்தின் கலாச்சார சீர்கேட்டிற்கான அவர்களது பதில் ஏற்ருக் கொள்ளக்கூடியதாகவே இருந்தது . அதாவது ,< ஓர் இறுக்கமான சூழலில் வளர்ந்த இந்த இளையவர்கள் அபரீதமான தொடர்பாடலின் வளரச்சியில் இவர்கள் அள்ளுப்படுவது தவிர்க முடியாததே . ஆனால் , இவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை இதில் தெளிவுடன் இருக்கும்> என்றார்கள் . அத்துடன் புலம்பெயர் சமூகத்தையும் அவர்கள் ஒரு பிடி பிடிக்கத்தவறவில்லை .< புலம் பெயர் சமூகத்தின் அளவில்லாத காசு இவர்களை அடைவதும் ஒருகாரணம் என்று குறிப்பிட்ட அவர்கள் , வடக்கு கிழக்கு மக்களை ஒரு இரக்கத்துக்குரிய நபர்களாகப் பார்பதும் , அதைக் காரணங்காட்டி அந்த மக்களுக்குப் பணத்தை வாரியிறைப்பதாலும் , இந்த இளயசமூகம் திசைமாறுவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்று குமுறினார்கள் >. ஆனால் , எனக்கு அவர்களது வாதம் இறுதியில் இரசிக்கும்படியாக இருக்கவில்லை . இவர்களுக்கு இன்னல்கள் வரும்பொழுது கைகொடுக்கின்ற எங்களுக்கு ,அவர்களிடம் கேள்வி கேட்கின்ற உரிமைகளை அவர்கள் மறுத்தது எனக்கு வலியை ஏற்படுத்தியது . எம்முடன் உள்ள தொடர்புகள் பணத்தின் அடிப்படையில் தானா உருவானது ? அப்போ நாங்கள் இவர்களின் இரத்த உறவுகள் இல்லையா ? எனது மனம் இரத்தம் வழிந்து உறைந்தது .நான் அமைதியாக இருந்ததை பார்த்த அண்ணை என்னை நிஜத்திற்குக் கொண்டு வந்தார்.

"அப்ப எல்லாரும் சாப்பிடுவமே"?

" ஓம் அண்ணை எனக்கும் பசிக்கிது".

எல்லோரும் சாப்பிட இருந்தோம் . அண்ணியின் சமையல் கைப்பக்குவம் ஏனோ அம்மாவை நினைவிற்குக் கொண்டு வந்தது. அன்று இரவு அங்கேயே நின்று அடுத்த நாள் காலை பரித்தித்துறைக்கு வெளிக்கிடத் தயாரானோம். இந்தமுறை அண்ணை எங்களை பஸ் எடுக்கவிடவில்லை. நண்டுபிடித்து நின்று தனக்கு தெரிந்தவரின் ஓட்டோவைப் பிடித்து விட்டு, எங்களிடம் காசு கேட்கக் கூடாது என்று அவரிடம் சொல்லிவிட்டார். எங்களை ஏற்ரிக்கொண்டு ஓட்டோ அந்தக் காலை வேளையில் பரித்தித்துறைக்கு வெளிக்கிட்டது. ஓட்டோ உள்ள ஊரி சந்து பொந்துக்களில் எல்லாம் புகுந்து போனது. எல்லா இடமும் தோட்டங்கள் பசுமை போத்தியிருந்தன. தோட்டத்திற்கு அடித்த மலத்தியனின் நெடி மூக்கை அடைத்தது. ஒழுங்கைகளின் இருபக்கமும் ஏழ்மையும் பணக்காரத்தனமும் போட்டி போட்டு வீடுகளில் அணிவகுத்தன. சில மணி நேர ஓட்டத்திற்குப் பின்பு பரித்தித்துறையை வந்தடைந்தோம்.நாங்கள் மீண்டும் கொழும்பு போகின்ற நாள் நெருங்குகிறதால் மாமி பரித்திதுறை வடை மாலுக்குள் சுட்டுக்கொண்டிருந்தா .அன்ரி வடகம் காயப்போட்டுக்கொண்டிருந்தா .மாமா சாய்மனைக்கதிரையில் இருந்து கொண்டு இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் .

நேரம் மதியத்தை நெருங்கிக்கொண்டிருந்தது .வெக்கை அனல் பறத்தியது. நான் மாமரத்தடியில் கதிரையைப் போட்டுவிட்டு , வரும் வழியில் வாங்கி வந்த உதயன் பத்திரிகையை மேய்ந்தேன். எனக்கு வந்த களைப்பால் நித்திரை எட்டிப்பார்தது. அப்படியே நித்திரையாகி விட்ட என்னை மனைவி எழுப்பினா. நான் எழும்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் படுத்து விட்டேன்.நான் மீண்டும் நித்திரையால் எழும்பியபொழுது பின்நேரம் 4 மணியாகியிருந்தது ஓரளவு வெக்கை அடங்கிக் கடல் காத்து வீசியது நான் கிணற்ரடியில் போய் வாளியால் அள்ளிக் குளித்தேன்.குளித்து வெளிக்கிட்டு நானும் மச்சானும் பஸ்ராண்டுக்கு வெளிக்கிட்டோம் எமது வழமையான பாதையால் நடக்கத்தொடங்கினோம் நாங்கள் பஸ்ராண்டை அடைந்தபொழுது வழமையான பரபரப்பில் அது அமிழ்ந்து போய்இருந்தது. நாங்கள் பஸ்ரண்டில் வவுனியா போவதிற்கு முற்பதிவு செய்தோம்பின்பு பிளேன் ரீ அடிக்க மீன்சந்தைக்குப் பக்கத்திலுள்ள ரீகடைக்குள் உள்ளட்டோம் பிளேன் ரீயையும் றோல்ஸை யும் எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்து நின்று கொண்டோம்.

தொடரும்