Thursday, April 28, 2011

அழிவின் விளிம்பில் இருக்கும் பவளப்பாறைகள்

அழிவின் விளிம்பில் இருக்கும் பவளப்பாறைகள்


ஒரு நாட்டின் கடல் வளம் பவளப்பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது. பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்பு செயற்கைகோள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதை உணர்வதன் மூலம் பவளப்பாறைகள் மட்டுமின்றி கடல் வளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பவளப்பாறைகள்:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள். இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.

கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும். இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.

இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.

கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும். கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும். பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன.

இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன. கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளை வண்ண மீன்களோடு இணைந்து பார்த்து ரசிக்க கண்ணாடிப்படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் கடல் வளங்களை கண்குளிரக் கண்டு ரசிக்க முடியும்.
Tuesday, April 26, 2011

உடல்மொழி


உடல்மொழி


உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், சலிப்பு, தளர்வான நிலை, போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம்

கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) ஆகியவை அனைத்து வகையான சொல்லில் இல்லாத தகவல்தொடர்பு வகைகளாகும். உடல் அசைவு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், ஆராய்ச்சிகளின் படி இதனால் "தகவல்தொடர்பு கடினமானதாக இருக்கும்போது, மன ரீதியான சிரமம் குறைக்கப்படுகிறது" என்பதே அதற்குக் காரணமாகும்.உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள், அவற்றைப் பயன்படுத்தும் நபரைப் பற்றிய பல விவரங்களை அறியத்தரக்கூடியவை. எடுத்துக்காட்டுக்கு, முகபாவங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அழுத்தமாகக் கூற அல்லது ஒரு செய்தியை வெளிப்படுத்த உதவுகின்றன, உடலின் நிலையானது சலிப்பாக உள்ளதை அல்லது மிகவும் ஆர்வமாக உள்ளதைக் காண்பிக்கலாம், மேலும் தொடுதலானது ஊக்குவிப்பதையோ அல்லது எச்சரிப்பதையோ உணர்த்தலாம்.

ஒரு நபர் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டிருப்பது என்பது மிகவும் அடிப்படையானதும் சக்தி வாய்ந்ததுமான உடல்மொழி சைகையாகும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட நபர் தனக்கும் பிறருக்கும் இடையே தன்னையறியாமல் ஒரு பெரும் உணர்வு நிலையற்ற வேலியொன்றை சிந்தையில் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அந்த நபரின் கைகளைத் தேய்ப்பதன் மூலம் அல்லது சேர்த்துப் பிடிப்பதன் மூலம் உணரக்கூடிய குளிர்ச்சியையும் அவர் கொண்டுள்ளார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். ஒட்டுமொத்த சூழல் உகந்ததாக இருக்கும்பட்சத்தில், அந்த நபர் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்துக் கொண்டுள்ளார் எனவும் உணர்த்துவதாக இருக்கும். ஆனால், தீவிரமான அல்லது சவாலான ஒரு சூழ்நிலையில், ஒரு நபர் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் கொள்ளலாம். குறிப்பாக அந்த நபர் பேசுபவரிடமிருந்து விலகி சாய்ந்திருக்கும்பட்சத்தில் இது அநேகமாக உண்மையாக இருக்கும். கடுமையான அல்லது வெறுமையான முகத் தோற்றமானது பெரும்பாலும் நேரடியான விரோதத்தைக் குறிக்கிறது.

தொடர்ந்து கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த நபர் பேசுபவரின் கருத்துக்கு நேர்மறையாக சிந்திக்கிறார் எனப் பொருள். பேசுபவரின் மேல் அந்த நபருக்கு நம்பிக்கையில்லை, அதனால் 'அவர் மேல் ஒரு கண் வைத்தவாறே இருக்கிறார்' என இதற்கு மற்றொரு அர்த்தமும் கொள்ளலாம். பார்வைத் தொடர்பு குறைவாக இருப்பது எதிர்மறையான தன்மையையே குறிக்கும். மற்றொருபுறம், ஏக்க நோய்கள் உள்ள நபர்கள் பெரும்பாலும் இயல்பாக சிரமமின்றி மற்றவருடன் பார்வைத் தொடர்பு வைத்திருக்க முடியாது. பேசும்போதான பார்வைத் தொடர்பு என்பது பெரும்பாலும் இரண்டாம் நிலையிலுள்ளதும், தவறான பொருளை வழங்குவதாகவும் கூட உள்ளது, ஏனெனில் சிறுவயது முதலே நாம் அவ்வாறு கண்களைப் பார்த்துப் பேசுமாறே பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். ஒரு நபர் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் கைகட்டி நின்றால், அப்போது அவரது பார்வையானது, அவருக்கு ஏதோ ஒரு விஷயம் தொல்லையளிக்கிறது அதை அவர் சொல்ல நினைக்கிறார் என்று குறிக்கலாம். அல்லது உங்கள் கண்ணை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவர் உங்கள் பேச்சை ஏதோ ஒன்றினைக் கொண்டு புறக்கணிக்கிறார் எனப் பொருளாகும். அவர் நேராக உங்களையே பார்த்துக்கொண்டிருந்தாலும் அவரது கவனம் உங்கள் பேச்சில் இல்லை எனப் புரிந்துகொள்ளலாம். மேலும் ஒரு நபர் இருக்கும் மூன்று விதமான நிலைகளை வெளிப்படுத்தும் தரநிலையான மூன்று விதமான பார்க்கும் விதங்கள் உள்ளன. ஒரு நபர் ஒரு கண்ணிலிருந்தும் பின்னர் மற்றொரு கண்ணிலிருந்தும் பின்னர் நெற்றியை நோக்கியும் பார்த்தால், அவர் அதிகாரம் எடுத்துக்கொள்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம். அதே ஒருவர் ஒரு கண்ணிலிருந்து மற்றொரு கண்ணிற்கும் பின்னர் மூக்கு நோக்கியும் பார்வையைத் திருப்பினால், அது அவர் இரு சாராருக்கும் பெரும்பான்மை பெறாதபடி சிறந்த "நிலை உரையாடல்" என அவர்கள் கருதக்கூடிய ஒரு நிலைக்குச் செல்கிறார் என்பதற்கு அடையாளமாகும். இதில் கடைசியாக ஒரு கண்னிலிருந்து மற்றொரு கண் மற்றும் பின்னர் உதடுகள் நோக்கிப் பார்வையிடுபவரின் உடல்மொழியாகும். இது வலிமையான காதல் உணர்வின் வெளிப்பாடாகும்.

வேறொரு புறம் திரும்பி உற்றுப்பார்க்கும் பார்வையானது நம்பிக்கையின்மையைக் குறிப்பதாகும், காதைத் தொடுவது அல்லது தாடையைச் சொறிவது ஆகியவையும் இதையே உணர்த்தும் உடல்மொழிகளாகும். ஒரு நபர் அடுத்தவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரது கவனம் எப்போதும் இங்குமங்கும் அலைந்துகொண்டே இருக்கும், மேலும் நீண்ட நேரத்திற்கு கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும்.

ஒருவருக்கு சலிப்பு உள்ளதை, தலை ஒருபக்கம் சாய்ந்திருப்பதைக் கொண்டோ, கண்கள் பேசுபவரையே நேராகப் பார்க்கையிலோ அல்லது கவனம் குறைவாகத் தென்படுவதைக் கொண்டோ கண்டறியலாம்.தலையைச் சாய்த்து வைத்திருத்தல் என்பது புண்பட்ட கழுத்து அல்லது பார்வைத் தெளிவின்மையைக் குறிக்கலாம், மேலும் கவனம் செலுத்தாத பார்வையானது கவனிப்பவருக்கு பார்வையில் ஏதேனும் கோளாறு இருப்பதைக் குறிக்கலாம்.

உடலின் நிலை அல்லது நீடித்த பார்வை ஆகியவை அவரது ஆர்வத்தை உணர்த்தலாம். நிற்பது போன்ற நிலைகளும் முறையாகக் கவனிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

வஞ்சகம் அல்லது ஏதேனும் விஷயத்தை மறைப்பது ஆகியவற்றை பேசும் போது முகத்தைத் தொடுவதைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். அதிகமாக கண்ணடித்தல் (கண்களை மூடித் திறத்தல்) என்பது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதற்கான அனைவரும் அறிந்த அடையாளமாகும். கண்ணிமை மூடாமல் இருப்பதும் கூட பொய் சொல்வதைக் குறிக்கலாம், மேலும் இது அதிகமாக கண்ணிமை மூடித்திறப்பதை விட நம்பகமான உடல்மொழியாகும் என சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சிலர் (மதி இறுக்கக் குறைபாடு உள்ளவர்கள்) உடல்மொழியைப் பயன்படுத்துவதோ அல்லது புரிந்துகொள்வதோ வேறுபடுகிறது, அல்லது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களின் உடல் அசைவுகளையும் முகபாவனைகளையும் இயல்பான உடல்மொழிச் சூழலைப் பொறுத்து புரிந்துகொண்டால் (அல்லது அதைச் செய்வதில் தவறினால்), அது தவறான புரிதலுக்கு வழிகோலக்கூடும் (குறிப்பாக பேசும் மொழியைவிட உடல்மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும்பட்சத்தில்).வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் உடல்மொழிகளை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

Monday, April 18, 2011

இறைச்சிக்கறியில் ஒளிந்திருக்கும் ஆபத்து

இறைச்சிக்கறியில் ஒளிந்திருக்கும் ஆபத்து
பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.

சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது எப்படி? சிவப்பு இறைச்சிகளில் அளவுக்கு அதிகமான குருதிச்சிவப்பு இரும்பு (haem iron) இருக்கிறது. (உதா : இறைச்சி, இறைச்சி உணவுப் பொருட்கள், இரத்த உணவுப்பொருட்கள்). குருதிச் சிவப்பு அல்லாத இரும்புச் சத்து தாவர உணவுகளில் இருக்கிறது.

உதா : (தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள், தௌபு, அத்தி, கொண்டைக்கடலை மற்றும் ஏப்ரிகோட்.) குருதிச் சிவப்பு இரும்பில் புற்றுநோயை வரவழைக்கும் என்-நைட்ரோசோ இருக்கிறது. இந்த வகை சிவப்பு குருதி இரும்பு டிஎன்ஏவுக்கு சேதத்தை விளைவித்து புற்றுநோய் செல் வளர்ச்சிகளுக்கு வித்திட்டு விடுகிறது.

சிவப்பு இறைச்சியில் உள்ள இந்த வகை இரும்பு பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. சமைக்கும் முறை சில வகை சிவப்பு இறைச்சிகள் அப்படியே நெருப்பில் அதிகமான சூட்டில் வாட்டி எடுக்கப்படுகின்றன.

இப்படி வாட்டி எடுக்கப்படும்பொழுது இந்த இறைச்சி கருகி புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் என்ற இரசாயனங்கள் வெளிப்படுகின்றன. தசை இறைச்சிகளான பன்றி, மாடு, மீன் போன்றவற்றை சமைக்கும்பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைன் வளிப்படுகிறது.

இதுவரைக்கும் சுமார் 17 விதமான புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரசாயனங்கள் உருவாகுவதற்கு சூடு மிக முக்கியமான காரணமாகும். பொரித்தல், அணலில் வாட்டுதல், பார்பர்கியூ போன்றவை எல்லாம் மிகப் பெரிய அளவில் இந்த இரசாயனங்களை வெளிப்படுத்துகின்றன.

அவணில் வேகவைப்பது, பேக் செய்வது குறைவான சூட்டில் செய்யப்படுவதால் குறைவான அளவு ஹேடேரோசக்ளிக் எமைனையே வெளிப்படுத்துகின்றன. சூடு அதிகமாக இருக்கும் பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைனும் அதிகமாக வெளிப்படுகிறது

கொழுப்பு விகிதம் இறைச்சியில் கெட்டி கொழுப்பு ஒமேகா-6 கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இதற்கு புற்றுநோயை வரவழைக்கும் தன்மை உண்டு. நாம் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான இறைச்சிகளில் கெட்டி கொழுப்பு (கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், கெட்டி அல்லாத கொழுப்பு (ஆரோக்கியமான கொழுப்பு) குறைவாகவும் இருக்கிறது.

கொழுப்பின் அளவை விட எந்த ரகத்தைச் சேர்ந்த கொழுப்பு என்பதே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. பதனிடப்பட்ட இறைச்சிகள் நீங்கள் உட்கொள்ளும் சிவப்பு இறைச்சி வெகு நாட்களுக்குப் முன்பதாகவே அறுக்கப்பட்ட பதனிடப்பட்ட இறைச்சியாக இருக்கக்கூடாது.

இப்படிப்பட்ட இறைச்சியை நீங்கள் அறவே உட்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட சிவப்பு இறைச்சிதான் பெருங்குடல்-ஆசன புற்றுநோய்க்கு முதன்மையான காரணம். இறைச்சியைப் பதனிடும் பொருட்டு அதில் நைட்ரேட் என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள்.

இந்த நைட்ரேட் இறைச்சியைப் பதனிடவும், இறைச்சிக்கு வர்ணம் கொடுக்கவும், இறைச்சியின் சுவையைக் கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நைட்ரேட் நம்முடைய குடலுக்குள் புற்றுநோயை உருவாக்கும் வஸ்துவாக உருமாறுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது. சோடியம் நைட்ரேட் அறவே உணவில் சேர்க்கப்படக்கூடாத ஒரு பொருளாகும். இறைச்சியின் துணை கொண்டு தயாரிக்கப்படும் சோசேஜ், ஹோட் டோக் போன்றவையும் இதே முறையில்த¡ன் தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு இறைச்சி, பதனிடப்பட்ட இறைச்சி மற்றும் பதனிடப்பட்ட இறைச்சியின் துணை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை பயனீட்டாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 1.7 அவுன்ஸ் அளவில் உட்கொள்ளும்பொழுது பெருங்குடல்-ஆசன புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 21% அதிகரிக்கிறது.