Thursday, June 30, 2011

நெருடிய நெருஞ்சி 08

தன்னுடன் அதிகம் கதைக்க வேண்டாம் என்று சொன்னபடியால் நான் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. வயிறும் மனமும் சண்டை பிடித்து மனமே இறுதியில் வென்றது. பஸ் வன்னிப்பெருநிலத்தினூடாக ஊடறுத்து சென்றது. இந்தப்பாதையால் நான் சுலபமாகப் பயணம் செய்வதாகவே உணர்ந்தேன், எனது மக்கள் பட்ட கஸ்ரத்துடன் ஒப்பிடும்பொழுது. எவ்வளவு தூரம் ஆட்டுமந்தைகள்போல வாட்டி வதைக்கப்பட்டார்கள்?பத்தாயரத்திலிருந்து ஐம்பதினாயரம் வரை காசை வாரிஇறைத்தல்லவா பிளேனிலும் கப்பலிலும் போனார்கள். ஒருபுறம் எங்களை அடக்கி, மறுபுறம் எங்களிடமே பணத்தைப் பறித்த பொடிகாமியும் அப்புகாமியும் எங்கள் அதிமேதாவித்தனத்தால் வெளிவருகின்ற "மோடையர்களாகத்" தெரியவில்லை. இப்பொழுது வருகின்ற "இலங்கைப் பொருட்களைப் புறக்கணி" என்ற கோசத்தை அந்தமக்களும் பிளேனுக்கும் கப்பலுக்கும் கடைப்பிடித்திருந்தால் இந்தப்பொடிகாமிக்கும் அப்புகாமிக்கும் சரியான அடியாக இருந்திருக்கும். யார் பார்த்தார்கள்? எல்லோருக்குமே ஒவ்வொரு அத்தியாவசியங்கள். யார் தான் மக்களைப் பார்த்தார்கள்? அத்தியாவசியங்களே அத்தியாவசியங்களாகின. எதிலுமே கூறுகெட்ட அரசியல் அழுகிநாறும் பொழுது மனிதத்தை எங்கே தேடுவது? பஸ் இடைக்கிடை நின்று இரணுவசிப்பாய்களையும் ஏற்றிக்கொண்டது. எங்கள் மண்டையின் பின்னால் ஒரு மூன்றாவது கண் இருந்து கொண்டே வந்தது. இது எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. பாதையில் பயணம் கடினமாகவே இருந்தது. திருத்தவேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. தூரத்தே தெரியும் புகையிரதப்பாதையையும் திருத்திக்கொண்டு இருந்தார்கள். புகையிரதம் ஓடியதற்கான ஒரு மேட்டு நிலத்தையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. சிலிப்பர் கட்டைகள் தண்டவாளங்கள் எல்லாம் தொலைந்து கனகாலமாகி விட்டிருந்தது. அவை எல்லாமே பங்கர் சென்றிகளுக்குச் சென்றிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெறுமையாகவே இருந்தது இடையில் காணப்பட்ட கட்டிடங்களும் குண்டுகளால் செதுக்கிக் காணப்பட்டன ஆனாலும் மக்கள் அயராது அவைகளில் தமது பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டிருந்தனர். அந்தக் கட்டிடங்கள் மீளக்கட்டுப்படாமலே இருந்தது மனதிற்கு வலியாக இருந்தது. நாங்கள் கஸ்ரப்பட்டுக் கொடுத்த காசுகளே இதற்குக் காணுமே, அவையெல்லாம் எங்கே போய்விட்டன? நாங்களும் ஒருவகையில் ஏமாற்றப்பட்டுவிட்டோமா? எங்களின் உணர்சிகளைத் தூண்டி விடுதலைப்புலிகளின் பெயரைச்சொல்லி பலர் தங்களை வளப்படுத்தினார்களா? பஸ் கிளிநொச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் தலைநகரத்தை பார்கின்ற ஆவலால் எனக்குப் பசி மறந்து போயிருந்தது. கிளிநொச்சி எனக்குப் பழக்கப்பட்ட இடம். எனது அப்பா 78களில் கிளிநொச்சியில் பிரதமதபால் அதிபராக இருந்தபடியால் அடிக்கடி வருவோம். எங்களுக்கு 3ம் வாய்காலில் கமம் இருந்ததாலும் நான் அடிக்கடி இங்கு வருவேன். பஸ் டிப்போவை அண்மித்தது. டிப்போ பெயரளவிலேயே இருந்தது.முன்பு எவ்ளவு வடிவாக இருந்தது. நான் பார்த கடை அப்படியே இருந்தது ஆனால் சேதங்களுடன். பொடிகாமி கிளிநொச்சியில் எதையுமே விட்டுவைக்கவில்லை. பொலிஸ் நிலையத்தையும் இராணுவ முகாமையும் அருகருகே நிர்வாகத்துக்குச் சுலபமாக வைத்திருந்தார்கள். தண்ணீர் தாங்கி உருக்குலைந்து போயிருந்தது. அவ்வளவு தூரத்திற்கு மேலிருந்து துளைத்து எடுத்திருந்தார்கள் குண்டுகளால். அதை போரில் வெற்றி கொண்ட சின்னமாகவும், தொல்பொருள் சின்னமாகவும் அறிவத்து தனது புதிய பரம்பரைக்கு விசஊசி அடித்துக் கொண்டிருக்கிறார் மகிந்தர். அவருக்கு விளங்கவில்லை, அவர் கும்புடுகின்ற புத்தர் நாட்டை விட்டு வெளியேறிக் கனகாலமாகி விட்டது என்று.,தபால் நிலையம் இருந்த இடமே தெரியவில்லை. எனக்கு வலி இறுக்கியது.,இந்தக் கந்தோருக்கு முன்னால் எவ்வளவு விளையாட்டுகளை விளையாடியிருப்போம் அப்போது. எனக்கு மிகவும் பிடிச்சது பாலைப்பழம் தான்.,கெடுவில் செங்காயைத் தின்று பால் ஒட்டி கதைக்கமுடியாது அவதிப்படுவோம்.,என்னால் ஒரு பாலைமரத்தையும் காணமுடியவில்லை, வவுனியாவைப்போல பறவைகளையும் காணமுடியவில்லை. அவைகளும் வீரமரணம் அடைஞ்சுட்டுதோ? ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு தானே நடத்திக்காட்டினோம். இது மற்றய நடமுறை அழுகிய அரசுகளுக்குப் பிடிக்கவில்லையோ?. எங்களுக்கு தலைவணங்கிய மண்ணல்லவா இது. எங்கள் சொல்லைத் தானே இது கேட்டது. இன்று அதன் விசும்பல் என்னைப் பிழிந்தது. பஸ்டிப்போவில் பலர் இறங்கியதால் பஸ் வெளிப்பாகி நல்ல காத்து வந்து வெக்கைக்கு இதமாக இருந்தது. பஸ் கரடிப்போக்குச் சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதில் இறங்கித்தான் எமது கமத்திற்கு செல்ல வேண்டும். இரமநாதபுரம் பஸ் ஏறினால் 2 கட்டை தள்ளி எமது கமம் வரும். சிலவேளைகளில் கரடிப்போக்குச் சந்தியில் இருந்தே நடந்து போவேன் கமத்திற்கு. பழைய கரடிப்போக்குச் சந்தியாக என்னால் பார்க்க முடியவில்லை. செம்மண் பாதை ஒன்று பற்றைகளுடன் இரமநாதபுரம் நோக்கிச் சென்றது தெரிந்தது. பஸ் சிறிது வேகமெடுத்தது. எனக்குப் பக்கத்தில் வந்த கொண்டக்ரர்,

" என்ன தம்பி முகம் செத்துப்போய்கிடக்கது"?

" ஏன் செத்ததெண்டு தெரியேலையோ"?

சரி சரி கொஞ்சம் அடக்கும் பரந்தன் களிய நிப்பாட்டுவம். 

"என்னண்ணை"?

" பத்துநூச ஓட்டந்தானே".

எனக்கு வில்லங்கமாக இருந்தது. சிறிது கண்ணை மூடலாம் என்றாலும் என்னால் முடியவில்லை. மீண்டும் சிப்பாய்கள் பஸ்சில் தொற்றினார்கள், பரந்தன் படைமுகாமில் இறங்குவதற்கு. எனக்கு எரிச்சலாக வந்தது. பஸ் தன்னை வேகப்படுத்தியது. நேரம் காலை 9.30 ஆகி இருந்தது.வெய்யில் உக்கிரமடைந்தது நான் எனது சூரியக் கண்ணாடியை அணிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் படைமுகாம் அண்மித்ததால் பஸ் தனது வேகத்தைக் குறைத்தது. சிப்பாய்களும் இறங்கிக் கொண்டார்கள். மீண்டும் பஸ்வேகமெடுத்தது. பரந்தனை அண்மித்த பஸ் ஓரமாக தன்னை நிலை நிறுத்தியது.


தொடரும்.


Thursday, June 23, 2011

நெருடிய நெருஞ்சி 07

சோதனைச்சாவடியில் நான் நேற்று பார்தவர்கள் இருக்கவில்லை. இந்த சோதனைச்சாவடி உண்மையில் புலிகளால் உருவாக்கப்படதாகும். பகல்வேளையில் பார்கும்போது எங்கள் கைவண்ணம் நன்றாகவே தெரிந்தது. இவர்கழுடைய உண்மையான சோதனைச்சாவடி முகமாலையிலேயே இருந்ததாக மனைவி சொன்னா. முன்பு ஓமந்தைக்கு முன்னே படையினரால் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு மூட்டைமுடிச்சுகளுடன் கால்நடையாக இங்கு வந்து புலிகளின் பரிசோதனை முடித்து, அவர்களது பயணிகள் வண்டியலேயே முகமாலைவரை செல்லவேண்டியிருந்தது. அங்கு படையினரின் கெடுபிடிகளை முடித்து, இ.போ.சா பஸ்சில் மீண்டும் பயணத்தை தொடரவேண்டும். இப்பொழுது எங்கள் இடத்தை பிடித்துக் கொண்டு இருக்குதுகள் இந்த ஒட்டகங்கள். கொண்டக்ரரிடம் விசாரனையை நடந்துகொண்டிருந்தான் ஒரு படைவீரன். கடமையிலிருக்கும் ஒரு அரசாங்க உத்தியோகத்தரை இன்னுமொரு அரசாங்க உத்தியோகத்தன் பாதுகாப்பு என்ற போர்வையில் கெடுபிடி செய்யும் வினோதம் அங்கே நடை பெற்றுக் கொண்டருந்தது. காரணம் அவன் பிறப்பால்த் தமிழன். நான் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டு நின்றேன். மனைவி தனது கடவச்சீட்டையும் எம் . ஓ .டி ஐயும் குடுத்தா. மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தள் அந்தப்பெண் சிப்பாய். எனக்கு ஏனோ எரிச்சலாக வந்தது. பிரான்ஸ் கடவுச்சீட்டில் சூனியம் செய்துவிட்டார்களோ? அந்தச் சோதனைச் சாவடி உண்மையில் மிகவும் திட்டமிட்டு நுணுக்கமாக எங்களால் கட்டப்பட்டிருந்தது. பயணிகளுக்கான சகல வசதிகளும் அதில் இருந்தது. என்னை வருமாறு ஒரு சிப்பாய் அழைத்தான். உள்ளர உதறலுடன் போனேன். எனது கடவுச்சீட்டையும் எம்.ஓ.டி.ஐயும் கொடுத்தேன். சரிபார்த்து பதிந்து விட்டு பவ்வியமாக திருப்பித் தந்ததுடன், ஒரு விசர்க் கேள்வி ஒன்று கேட்டான்.

"எங்கள் சேவை உங்களுக்குத் திருப்தி அளித்ததா என்று"?.

என்னுள் உருவான மாற்றத்தை அடக்கியவாறே ஒரு புன்சிரிப்பை அவனுக்கு வழங்கினேன். நாங்கள் மூவரும் பஸ்சை நோக்கி நடக்கத் தொடங்கினோம். 

"அண்ணை உங்களிட்டை ஒண்டு கேட்டால் குறை இனைப்பியளோ"?

" குறை இனைக்காத மாதிரிக் கேளுமென்".

" இல்லை உங்களுக்கு இப்ப வேலை செய்யிறது கஸ்ரமாயில்லையோ"? 

"கஸ்ரம் தான் தம்பி, இடத்துக்கேற்ற மாதிரி மாறவேண்டியதா போச்சுது". "

அதுசரி இப்பதான் நீர் வெளிநாட்டிலை இருந்து வாறீரோ"?

" ஏன் கேட்டனியள்"? 

"நான் நினைச்சன் வவுனியாவிலை இருந்து வாறிங்களாக்கும் எண்டு".

"இல்லை அண்ணை 25 வருசத்துக்குப் பிறகு இப்ப தான் வாறன்".

" என்ர கடவுளே!!!! அப்ப நீர் இடத்துக்கு தவ்வல், பஸ்சுக்குள்ளை இப்பிடி என்னோட கதச்சுப்போடதையும்"

"சரி அண்ணை". 

எனக்கு மனது வலித்தது. ஒருவருடன் கதைக்கக்கூடப் பயப்படுகின்றார்களே என்று. மீண்டும் பஸ் ஏ9 பாதையில் தொடரந்தது தனது பயணத்தை. நேரம் காலை 8 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வெய்யில் மூசியடித்தது. பாதையின் இரண்டு பக்கத்திலும் கந்தகமண்ணை வளமாக்கும் ஓர்மத்துடன் வயலுடன் போராடிக்கொண்டிருந்தார்கள் வன்னியின் மைந்தர்கள். நெல்லுகள் நாற்று நடத்தாயாராகிக் கொண்டிருந்தன. என்னதன் எம்மைப் பாடாய் படுத்தினாலும் எங்கள் குணத்தை உங்களால் வெல்லமுடியாது என்பதை செய்கையில் காட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த வன்னியின் மைந்தர்கள். பஸ் மாங்குளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மாங்குளம் படைத்தளம் கண்முன்னே விரிந்து கிடந்தது. இந்த இடத்தில் மட்டும் ஏ9 பாதை அவர்களுக்கு வசதியாக  வழுவழுப்பாக இருந்தது. ஓமந்தையிலிருந்து பஸ் மெதுவாகவே ஓடவேண்டி இருந்தது. இந்தப் பாதையைப் போல் நான் பார்க்கவே இல்லை. பஸ்சில் ஒரு சிலவும் இல்லாமல் நன்றாக ஜிம் செய்தேன். ஆனால் ஐரோப்பாவில் தவழ்ந்த பஸ்சில் கிடைக்காத திருப்தியும் சந்தோசமும் எனக்கு இந்தக் குலுக்கு பஸ்சில் கிடைத்தது. ஆனாலும் இந்த பஸ்சுக்கும் இந்தப் பாதைக்கும் நான் அன்னியன்தானே என்ற நினைவு என்னை வாட்டியது. அறியாப் பிராயத்தில் என்னை இடம் பெயரச்செய்தது, நான்செய்த முற்பிறப்புப் பாவமோ? பலவிதமான உணர்சிக் கலவைக்கு உள்ளானேன்.சில இடங்களில் எருமைகளை பட்டி கட்டி இருந்தார்கள். முன்பு இந்த இடங்களை பாலையும் முதிரையும் நிறைத்து பச்சை பசேல் என்று இருக்கும். இப்பொழுது பொட்டல் வெளியாக வெறுமை காட்டி இருந்தன. ஆனாலும் எங்கடை ஆக்கள் வலு விண்ணர், எங்களுக்கே உணவு தந்த இடங்களையும் அந்த மக்களையும் தாங்கள் வகித்த பதவிகள் மூலம் தகிடுதத்தங்கள் செய்து பின்தங்கிய பிரதேசங்கள் ஆக்கி தங்கடை சந்ததியை இந்தமண்ணில் உயர்கல்வியை படிக்க விட்டு  பின்தங்கிய பிரதேசக் கோட்டா மூலம் இலகுவாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்கச் செய்தார்கள். ஆனால் எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு தமிழனை சிங்களவன் படிக்க விடுறான் இல்லை தரப்படுத்தல் செய்கின்றான் என்று விசம் ஏத்தினாரகள். உண்மையில் எனக்கு ஐரோப்பா வந்ததின் பின்பு தான் தரப்படுத்தலின் தார்ப்பரியம் புரிந்தது. நேரம் 9மணியை நெருங்கிக் கொண்டருந்தது. எனக்குப் பசியும் ஒண்டுக்கு போகவேண்டும் என்ற உணர்வும் வாட்டின.பயணிகள் இறங்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.பக்கத்தில் வந்த கொண்டக்ரரிடம்

"அண்ணை பசிக்குது எப்ப நிப்பாட்டுவியள்"?

" எனக்கும் தான் பசிக்குது , கிளிநொச்சி கழிய நிப்பாட்டுவம்".

இந்த ஒபீஸ் சனம் கிளிநொச்சியோடை சரி பேந்து நங்கள் தானே" என்றார்.


தொடரும்


Sunday, June 19, 2011

நெருடிய நெருஞ்சி 06

மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்பு இ.போ.சா பஸ்சில் பயணம செய்வதால் ஒரு இனம்புரியாத குறுகுறுப்புக்குள் உள்ளானேன். பஸ்சில் பெரிய மாற்றங்களை என்னால் காணமுடியவில்லை. வவுனியா பஸ்நிலையம் அந்தக்காலை வேளையிலும் பரபரப்புகுப் பஞ்சமில்லாமல் இருந்தது. டறைவர் பஸ்சின் ஹோர்னை அடித்துப் புறப்படுவதை அறிவித்துக் கொண்டிருந்தார். வெளியே ரீ குடிச்சுக் கொண்டு நிண்ட கொண்டக்டர் பஸ்சில் ஏறி விசில் அடிக்க பஸ் வவுனியா பஸ்நிலையத்தில் இருந்து வெளிக்கிட்டது. கொண்டக்ரறைப் பார்க்கும் பொழுது எனக்கு பரித்தித்துறை 750 லைனில் எட்வேர்ட் (செல்லப்பேர் மீசை) உடன் வேலை செய்தவரின் ஞாபகம் வந்தது(பெயர் ஞாபகம் இல்லை இங்கு சார்செயில் நகரில் அவரை ஒருமுறை சந்தித்தேன்). எண்ணை தோய்ந்த சுருட்டைத் தலைமயிர், நக்கல் நளினமான கதைகள் என்று பஸ்சைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். தூரத்தே வவுனியா மெல்லமெல்ல மறைந்து கொண்டிருந்தது. பஸ் ஏ9 பாதையில் வேகமெடுத்தது. பஸ் டறைவர் அடிக்கடி காட்டு விலங்குகளைக் கலைக்கப் பாவிக்கும் ஹோர்னை அடித்து கொண்டு பஸ்சை ஓட்டியது எனக்கு ஒருவித எரிச்சலைக் கொண்டு வந்தது. இவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைக் கவனிக்க மாட்டார்களோ? ஆனால் இ.போ.சா பஸ்சில் எனக்குப் பிடித்தது அவர்கள் போடும் பாடல்கள்தான். எப்பொழுதும் 80களில் வந்த பாடல்களைத்தான் போடுவார்கள். இதை முதன்முறையாக 79களில் பரித்தித்துறை 750 லைனில் பஸ்சிற்கு " வசந்தமாளிகை " என்று பெயரிட்டு ஒடினார்கள்." வசந்தமாளிகை " பெயரைப்போல செமி லக்ஸசறி பஸ்சாக ஓடியது. இதைக் கூடுதலாக ஓட்டியவர் எட்வேர்ட் தான். இந்த பஸ்சுக்கென்றே அப்போது ரசிகர் பட்டாளம் இருந்தது. பகல்ப் பொழுதில் ஏ9 பாதையைப் பார்பதால் இரண்டு பக்கமும் தலயைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே வந்தேன். பஸ் தாண்டிக்குளத்தை நெருங்கிக்கண்டிருந்து. பஸ் டைறவர் வலு விண்ணன் தான். ஒற்றைவழிப் பாதையான ஏ9 இல் எதிரே வரும் வாகனங்களுக்கு வேகத்தைக் குறைக்காமலே விலத்திச் சென்றது எனக்கு வியப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது. சிங்கத்தின் கோரப்பற்களின் வடுக்கள் இருபக்கமும் ஆளப்பதிந்து நிலங்களை விகாரப்படுத்தியிருந்தன. பாதையின் இரண்டு பக்கமும் பல அகண்ட குழிகழும் கருகி மொட்டையான மரங்களும, அன்னியப் படைகள் எமது மண்ணைக் கற்பழித்ததிற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. பஸ் இடிக்கிடையே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. அது உத்தியோகத்திற்கப் போவோர்களாலும் பள்ளி மாணவர்களலும் நிறைந்தது. பள்ளிமாணவர்களைப் பார்கும் பொழுது எனக்கு என்னையறியமலேயே எனது கல்லூரி காலம் ஞாபகம் வந்தது. அவர்களின் பாடப்புத்தகங்களை யூனிசெப் புத்தகப் பை நிறைத்திருந்தது. அவர்களின் தோற்றத்தில் பெரிதான மாற்றங்களை காணமுடியவில்லை. நான் கல்லூரிக்குப் போன மாதிரியே, படிய இழுத்த தலைமையிரும் இடையில் திருநீத்துக்குறியமாக இருந்தார்கள். ஒருசிலர் தமது புத்தகப்பைகளை இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் கொடுத்து விட்டு "கெத்தாக" நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது . நாங்கள் விட்ட அதே விளையாட்டு, எனக்கு சிரிப்பாக இருந்தது. பஸ் கொண்டக்ரர் எங்களுக்கு அருகில் பயணச்சீட்டுப் போட வந்தார். எனது மனவி வாயெடுத்த என்னை சுரண்டிவிட்டு

" இரண்டு பரித்தித்துறை " என்றா.

எங்களை நிமிர்ந்து பாத்தவர்,

"கோவிக்க கூடாது எனக்கு தெரிஞ்சு ஒரு பரித்தித்தறை தான் இருக்கு "

எனக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எவ்வளவுதான் சோகங்கள் ரணவலிகள் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் உருளுகின்றது. சிரிப்பைத் தொலைத்த புலத்து மக்கள் நாங்கள் எங்கே? இவர்கள் எங்கே? பஸ் வேகத்தைக் குறைத்தது முன்னும் பின்னும் படைச் சிப்பாய்கள் ஏறிக்கொண்டார்கள். அவர்களும் காவல் பாத்துக் களைத்து படைமுகாமக்குத் திரும்புகின்றார்கள். இல்லாத புலிக்குக் காவல் காக்கும் மோடையர்கள். பாதையில் பல இடங்களில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பஸ் பயணிக்க சிரமப்பட்டது. பாதையில் இருபக்கமும் ஒரு கி.மீ க்கு ஒன்றாக பங்கர் சென்றிகளைக் கண்டேன். முதல் முறையாக பங்கரைப் பார்த்த ஆள் நானாகத் தான் இருப்பேன். சதுரமாக தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு மரக்குற்றிகளை வெட்டி அடக்கி , அதில் ஒரு சிறிய சதுர ஓட்டையின் மூலம் வெளிச்சுற்றாடல்களை அவதானித்துக் கொண்டிருந்தான் ஒரு படைவீரன். இந்த வெய்யிலிலும் சீருடையுடன் எப்படி இவர்களால் இந்தக் கிடங்கினுள் பொட்டல் வெளியில் இருக்கமுடிகின்றது? இவர்களும் மனிதர்கள் தானே ? யுத்தம் முடிந்தாலும் இயல்பு வாழ்க்கையை தொடரும் உரிமை மறுக்கப்பட்ட பிறவிகள். பாக்கப் பாவமாக இருந்தாலும் இவர்களது கோரமுகம் கண்டு என்மனம் இறுகியது. பஸ் ஓமந்தையை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே சோதனைச்சாவடி தெரிந்தது. பஸ் மெதுவாகச் சோதனைச் சாவடியில் போய் நின்றது. இந்தமுறை பயமில்லாமல் மனைவியுடன் இறங்கினேன். கொண்டக்ரரும் தன்னைப் பதிய இறங்கினார். நாங்கள் மூவரும் சோதனைச்சாவடி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

தொடரும்.


Sunday, June 12, 2011

நெருடிய நெருஞ்சி 05


அந்த வாகனத்தில் நாங்களும், எங்களுடன் இறங்கிய இருவரும் இருந்தோம். வாகனத்தை இரு சிங்களவர் ஓட்டி வந்தனர். என் மனமோ பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியது. இந்த நேரத்தில் படைமுகாமிற்குப் போவது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. ஒருமுடிவிற்கு வந்தவனாக மற்றவர்களைப் பார்த்துச் சொன்னேன் 

"நாங்கள் கொழும்புக்குத் திரும்பவும் போகப்போறம் நீங்கள் என்னமாதிரி"?

"நாங்களும் அங்கதான் போகப்போறம் அண்ணை".

வாகனத்தை ஒட்டியவர்களிடம் விடையத்தைச் சொல்லி வவுனியா புகையிரதநிலயத்தில் இறக்கிவிடும்படி சொன்னேன். நேரமோ அதிகாலை 2.45 ஐத் தொட்டுக் கொண்டிருந்தது. தூரத்தே வவுனியாவை நெருங்குவதற்கு அறிகுறியாக ஒளிப்பொட்டுகள் தெரிந்தன. வாகனத்தை ஓட்டியவர்களுக்கு புகையிரதநிலயத்திற்குச் செல்லும்

வழி தெரியவில்லை. மனைவி சிங்களத்தில் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தா. சிறிது நேரத்தில் வண்டி வவுனியா புகையிரத நிலையத்தனுள் நுளைந்தது. வண்டியில் வந்ததிற்கு 1000 ரூபாய்கள் கேட்டார்கள்,பொக்கற்றில் இருந்ததை எடுத்துக் கொடுத்தேன்.ஆயிரம் ரூபா தாளில் மகிந்தர் சிரித்தார்.வெளியாட்களை வைத்து ராணுவம் நன்றாகத்தான் பிழைப்பு நடத்துகின்றது.முதல் புகைவண்டிக்காக மக்கள் அங்காங்கே குழுமியிருந்தார்கள். நேரம் அதிகாலை 3 மணியைத் தாண்டியிருந்தது. எனக்குத் தொடர்ச்சியான பயணத்தால் தலைஇடித்தது. அருகில் இருந்த தேநீர்கடையில் தேநீர் வாங்கி குடித்துக்கொண்டே ஒருசிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். சிகரட் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். தலையிடிக்குத் தேனீர் இதமாக இருந்தது. நான் ஒரவருக்கும் சொல்லாமல் வந்தது பிழையாகி விட்டதோ ? வவுனியாவில் இருக்கும் பெரியக்காவை எழுப்பவேண்டியது தான். பெரியக்கா கலியாணம் கட்டிய செய்திதான் எனக்குத் தெரியும். அத்தானையும் அக்காவையும் இப்பொழுது தான் பார்ககப் போகின்றேன். மனைவிக்கு எனது வரவை மறைத்து அக்காவிற்கு போன் செய்யும்படி சொன்னேன். அத்தான் மோட்டச்சைக்கிளில் வருவதாக மனைவி சொன்னா. புகையிரதநலையத்தைச் சுற்றி இருள் மண்டியிருந்தது. என்னால் சுற்றாடலை சரியாகப் பார்க்க முடியவில்லை. மற்றய இருவரில் ஒருவர் எங்களைப்போலவே வவுனியாவில் நிற்க முடிவு செய்திருந்தார், மற்றயவர் கொழும்பு போக பயணச்சீட்டு எடுக்கப் போயிருந்தார். முதல் வண்டி காலை 5.30 க்கு என்று வந்து சொன்னார். தூரத்தே மோட்டச்சைக்கிளின் ஒலிகேட்டது. நான் ஓரமாக நின்று கொண்டேன். ஓர் நடுத்தரமான வயது உடையவர் மோட்டச்சைக்கிளை ஓட்டிவந்து எனது மனைவிக்கு அருகில் நிறுத்தி அவாவுடன் கதைக்கத் தொடங்கினார். சிறிது இடைவேளையின் பின்பு அத்தான் அருகே சென்று

"என்ன அத்தான் எப்படிச் சுகம்"? 

அத்தான் அதிர்ச்சியின் உறைநிலைக்கே போய்விட்டார்.

மற்ற இருவருடமும் விடைபெற்று நாங்கள் ஓர் ஓட்டோவில் பெரியக்காவின் வீட்டிற்குப் போனோம். அக்கா விபரம் அறியாது வீட்டுக் கேற்ரடியில் நின்று கொண்டிருந்தா. என்னைக் கண்டதும் அக்கா அழுதே விட்டா. சத்தம் கேட்டு இரண்டாவது அக்காவும் வந்துவிட்டா. எனக்கு அழுகை எட்டிப் பரத்தாலும் புலம்பெயர் வாழ்வின் இயந்திரத்தனம் கட்டிப்போட்டது. அப்போதைய சூழ்நிலையை மாற்றப் பகிடியாகக் கதைத்துக் கொண்டிருந்தாலும் நான் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கியதன் கோபம் அக்காவின் முகத்தில் அப்படியே தெரிந்தது. இரண்டாவது அக்காவோ தனக்கே உரிய பாணியில் "அப்பன் எங்களத்தான் நீ முதல்ல பாக்கவேணுமெண்டு எழுத்துக்கண்டியோ பாத்தியே கடவுள் ஆமிக்காறன்ர ரூபத்தில வந்தார்.இல்லாட்டிக்கு நீ எங்களுக்கு டிமிக்கி குடுத்திட்டு யாழ்ப்பாணம் போயிருப்பாய்" என்றா.

நானோ பேத்தனமாகச் சிரித்தேன். நேரம் விடிய ஆறுமணியாகி இருந்தது. நான் ஆசை தீர நன்றாகக் குளித்து விட்டு அக்கா தந்த கோப்பியை குடித்துக் கொண்டே சுற்றுச் சூழலைப் பார்கப் போனேன். அக்காவின் வீட்டிற்குப் பின்னே இரம்பக்குளம் பரவியிருந்தது. அதில் நாரைகளும் கூளைகடாக்களும் இரைந்து கொண்டே இரை தேடின. பக்கத்தல் இருந்த முருங்கை மரத்தில்அணில்கள் கத்தியவாறே துள்ளி விளையாடின. பக்கத்தே இருந்த கோயில் மணி ஒலித்தது. இந்தக் காலமை நேரத்திலும் வெய்யில் தன்னுடைய குணத்தைக் காட்டயது. எனக்கு எல்லாமே வியப்பாகவும் புதினமாகவும் தெரிந்தது. பக்கத்தே இருந்த ஒரு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்தக் கூட்டில் அதன் கலைவண்ணம் தெரிந்தது. நாங்களும் தானே இப்படி ஒரு கூடு கட்டினோம். பாத்து பாத்துத் தானே கட்டினோம். எத்தினை பிராந்துகள் எங்கள் கூட்டை சுத்திக் குதறின. அக்காவின் குரல் என்னைக் குலைத்தது.

"உங்கை என்ன செய்யிறாய்"?

"வாவென் சாப்பட"? 

"இப்பவோ"? 

"ஓம். வா வந்து சாப்படு" 

"இந்தக்காலமை என்னால சாப்பிடேலாது".

"9 மணிக்குசாப்பிடுறன்".

"அத்தான் வரட்டாம் கதைக்க". 

"போ வாறன்".

பத்தின சிகரட்டைத் தொடர்ந்தேன். அத்தானிடம் மனைவி எல்லாமே சொல்லி விட்டிருந்தா. அத்தானிடம் எங்கள் இருவரின் கடவுச்சீட்டையும் கொடுத்தேன். இருங்கோ வருகின்றேன் என்று அத்தான் உள்ளே போய் வெளிக்கிட்டு வந்தார். தொலைபேசியை எடுத்து எண்களை ஒத்தினார். பின்பு யாருடனோ சிங்களத்தல் கதைக்கத் தொடங்கினார். நானோ அணில் ஏற விட்ட நாய்போல் அவரைப் பார்த்தேன். அவருடைய கதை விழங்காவிட்டாலும் ஓர் இராணுவ அதிகாரியுடன் கதைக்கன்றார் என்பது விழங்கியது. யாருடன் கதைத்தாலும் கிரகங்கள் மாறப்போவதல்லை என்பது தெரிந்தும் அவரை அவர்போக்கில் விட்டேன். கதைத்து முடிந்தவுடன் "தம்பி நாங்கள் கொழும்புக்கு பக்ஸ் பண்ணி எடுப்பம்" என்றார். நானும் வாறன் அத்தான் என்று அவருடன் மோட்டசைக்களில் தொற்றிக்கொண்டேன். அத்தானுடன் வெளியில் போகும் பொழுது முட்டித் தயிர் கேட்டேன் . ஒன்றுக்கு இரண்டாக முட்டித் தயிர் வாங்கினோம். எனக்கு முட்டித் தயிர் என்றால் உயிர். அதுவும் பன்குளம் தயிர் என்றால் சொல்லிவேலையில்லை. இரண்டு மூன்று தரம் சீனி போட்டு தயிர் சாப்பிட்டேன்

அன்று பின்னரமே கிளியரன்ஸ் திரும்ப பக்ஸ் பண்ணியிருந்தனர். எனக்குத் தலைகால் புரியாத புழுகம். அக்கா இரவு நின்று விட்டு போ என்று அடம்பிடித்தா. என்னால் அவாவை மனம்நோக விட வரும்பவில்லை. அன்று இரவு அக்காவுடன் நிக்கத் தீர்மானித்தோம்.

எல்லோரும் பலகதைகளை கதைத்து படுக்க நேரமாகிவிட்டது. அத்தான் விடிய எழும்பி முதல் பஸ் எடுக்கவேணும் எண்டு சொல்லியிருந்தார். விடிய 4 மணிக்கே எழும்பி குளிக்கத்தோடங்கனேன். என்னுடைய அலப்பலில் எல்லோரும் எழும்பி விட்டனர். அக்கா இடியப்பமும் சம்பலும் சாப்பிட செய்து தந்தா. ஓட்டோ ஒன்றை அக்கா ஒழுங்கு செயதிருந்தா. ஓட்டோ எங்களை ஏற்றிக் கொண்டு வவுனியா பஸ் நிலயத்திற்குச் சென்றது. நேரம் காலை 6 மணியாகி இருந்தது. அத்தான் மோட்டச்சைக்கிளில் ஓட்டோக்குப் பின்னால் எங்களை

வழியனுப்ப வந்தார். விடிய 6.30 இ.போ.சா பஸ் எங்களைச் சுமந்து பரித்தித்துறை நோக்கி பறப்படத் தயாரானது.

தொடரும்

Tuesday, June 7, 2011

நெருடிய நெருஞ்சி 04"யார் இவர்" ?

" எனது கணவர்".

"எப்படி நம்பிறது" ? "எனது கணவர் என்பதை உறுதிப்படுத்த என்ன வேண்டும்" ?

" விவாகப்பதிவுப் பத்திரம் உள்ளதா" ?

" பொறுங்கள் பஸ்சில் உள்ளது எடுத்துவருகின்றேன்".

இடையில் ஒரு சிப்பாய் எனது கடவுச்சீட்டை அவதனமாகப் பார்த்தான்.

"உங்கள் விசா எங்கே"? என்று முட்டாள்தனமாய் கேட்டான்.

"பிரெஜ் பிரஜைக்கு இங்கு வர விசா தேவையில்லை."

இருங்கள் வருகின்றேன் என்று கடவுச்சீட்டுடன் உள்ளே சென்று மறைந்தான். எனக்குச் சனி தொடங்கி விட்டதோ? மனைவி பஸ்சிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தா. உள்ளே இருந்து திரும்பிய சிப்பாய்

"நீங்கள் பிறந்த இடம் பிரான்ஸ் தானே" ? எனக்குச் சிரிப்புடன் கோபம் எட்டிப்பரர்த்தது . மனைவி பொறுமையாக விளங்கப்படுத்தினா. அவன் என்னைப் பார்த்து

" எம் ஓ டி பெர்மிற் இருக்கா " ?

" உங்கள் இணையத்தளத்தில் இது தேவையில்லை என்று நாங்கள் வெளிக்கிட்ட அன்று 4ம் திகதி காலை போட்டிருந்தீர்களே அதனால் நான் எடுக்கவில்லை". "இன்று மாலை சட்டம் மாற்றப் பட்டுள்ளது".

"உங்ளை தொடரந்து செல்ல அனுமதிக்க முடியாது நீங்கள் கொழும்பு போய் எம் ஓ டி ஐ எடுத்து வாருங்கள்".

"நீங்கள் யாழ்ப்பாணம் போகலாம்"

என்று மனைவியை பாரத்துச் சொன்னான்.

" இன்று மாலை போட்ட சட்டம் எப்படி எங்களுக்குத் தெரியும் " ?

" எங்களால் அனுமதிக்க முடியாது " .

இவனிடம் பேசிப் பயனில்லை.

" உங்கள் மேலதிகாரியுடன் கதைக்க வேண்டும்" .

மனைவியின் அருகில் நின்ற பஸ் ட்றைவரிடம் எங்களுடைய பயணப் பொதிகளை இறக்கி விட்டு பஸ்சை எடுக்கும் படி கட்டளையிட்டான் .

எங்களின் பயணப்பொதிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டு மறைந்தது. எங்களுடன் இறங்கிய மற்றய இருவருக்கும் இதே நிலை ஏற்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது. இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. சிறிது தூரத்தில் இருந்த ஏ9 பாதையில் வந்த வாகனங்களின் இரைச்சல் அமைதியைக் குலைத்தது. சிறிது நேரத்தில் ஓர் இராணுவ அதிகாரி எங்களை நோக்கி வந்தான். "என்ன பிரச்சனை "?

எனது மனைவி பிரச்சனையை எடுத்துச்சொன்னா. பொறுமையாகக் கேட்டவன் எனது கடவுச்சீட்டை மீண்டும் ஆராய்ந்தான். "உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்". எங்கள் பதிலை எதிர்பாராது இரண்டு சிப்பாய்களை அழைத்து எங்களுக்கு வாகன ஒழுங்கு செய்து எங்களை உரிய இடத்திற்கு சேர்க்கும்படி கட்டளையிட்டான். ஓர் ஹயேர்ஸ் வண்டி எங்கள் முன்னே வந்து நின்றது. எங்கள் பயணப்பொதிகளை ஏற்றிக்கொண்டு செயின்ற் ஜோசெப் படைமுகாம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

தொடரும்

Saturday, June 4, 2011

நெருடிய நெருஞ்சி 03

மாலை 6 மணியானாலும். வெய்யிலின் அகோரம் அடங்கவில்லை. அந்த பஸ் குளீரூட்டிய சொகுசு வண்டியானாலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. மனைவி தந்த தேங்காய்ப்பூ சிறிய துவாய் வியர்வையில் தோய்ந்து ,சிறியதாக வியர்வை மணத்தது.

"இவங்கள் எப்ப வெளிக்கிடுவங்கள் " ?

"ஆக்கள் சேரத்தான் பஸ்சை எடுப்பினம்".

பஸ் போறணை மாதிரி இருந்தது. ஒருவாறு பஸ் வெளிக்கிடத் தொடங்கியதும் முகத்தில் அடித்த காற்று வெக்கைக்கு இதமாக இருந்தது . ஆனாலும் நல்ல வடிவாக இரவு 10 மணிவரையும் பஸ் கொழும்பைக் காட்டியது எனக்கு எரிச்சலாக வந்தது. பின்பு அது கண்டி வீதியில் வேகமெடுத்தது. இருட்டில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. மனைவி களைப்பின் மிகுதியால் எனது தோழில் நித்திரையாகி விட்டா. எனக்கு நித்திரை வரமறுத்தது. பஸ்சில் ஏறும் போதே மனைவி அழுத்தமாக சொல்லியிருந்தா 

" யாரோடையும் தேவையில்லாமல் கதைக்கக் கூடது".

குறுகிய ஏ9 வீதியல் பஸ் இருளைக் கிழித்துப் பறந்தது. பல இடங்களில் புதிய சிறிய விகாரைகள் முளைத்து இருந்தன. புத்தரும் அகதியாகி இருக்க இடமில்லாமல் மீள்குடியேற்றப்பட்டுள்ளாரோ ? பஸ்டைறவரும் பஸ்சை நிப்பாட்டி நிப்பாட்டி எல்லாப் புத்தரையும் கும்பிட்டுக் கொண்டு வந்தார். பஸ்சில் நான் ஒருவன் தான் முழிப்பாக இருந்தேன், என்னடைய நிலையப்படி. என்வாழ்க்கையில் கால் நூற்றாண்டைத் துலைத்து புதிய ஐரோப்பிய முகத்துடன் வருவது மனதை பிழிந்தது. என்னுடன் கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் என்னை ஏற்றுக்கொள்வார்களா ? எப்படியாயினும் கண்ணரில் பங்காளியில்லாதவன் தானே. என்னால் கண்ணீரைத் தடுக்கமுடியவில்லை. இருபக்கமும் அடர்ந்த காடுகளின் எச்சசொச்சங்கள் கரைகட்டி நின்றன. இதில் தானே பரணி பாடினோம். தரணியைத் திரும்ப வைத்தோம். எத்தனை பேர் எங்களைப் பார்க்க வரிசையில் நின்றார்கள். அதில் சூது இருந்ததை எப்படி பகுத்தறியாது விட்டோம்? பஸ் வேகத்தைக் குறைத்தது. தூரத்தே இருளில் பல உருவங்களும், வீதியை மறைத்த வீதித்தடையும் தெரிந்தது. எந்த இடம் என்று சரியாகவும் தெரியவில்லை. நேரம் அதிகாலை 1.30 ஐக் காட்டியது. கலவரத்துடன மனைவியை எழுப்பினேன். மற்வர்களும் பரபரப்பானார்கள்.

"இது எந்த இடம்"? 

"ஏன் பஸ் மெதுவாகப் போகின்றது"? 

சற்றுமுற்றும் பார்த்த மனைவி,

" இதுதான் ஓமந்தைசோதனைச்சாவடி"

"நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் கதைக்கப்படாது". 

எனக்குப் பயத்தில் வியர்த்துக்கொட்டியது.மனைவி நிதானமாகத் தனது இலங்கை அடையாள அட்டையையும் இருவரது கடவுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்துக்கொண்டா. எமது பஸ்சின் முன்னே பல வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. தூரத்தே ஐந்தாறு வரிசைகளில் வாகனங்கள் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தன. பஸ் முற்றாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இடம் ஒரு நிரந்தர படைமுகாமைற்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்தையும் நிறதுத்தி சோதனையிட்டவாறே சாரதிகளை போய் தங்கள் விபரங்களைப் பதியுமாறு கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்கள் இராணுவச் சிப்பாய்கள். எமது பஸ்சில் ஏறிய சிப்பாய்கள் உள்ளூர் ஆட்களை இருக்கும்படியும் வெளிநாட்டவர்களைப் பதியும் இடத்திற்குப் போகும்படி சிங்களத்தில் சொன்னார்கள் . பஸ்சில் இருந்தவர்கள் எங்களை விரோதமாகப் பாரத்தது அப்பட்டமாகவே தெரிந்தது. எங்களால் தங்களுக்குத் தொந்தரவு வரும் என நினைத்தார்களோ? எங்களுடன் இருவருமாக 4 பேர் பஸ்சைவிட்டு இறங்கினோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னே வலிந்த புன்னகையுன் நின்று கொண்டேன். மனைவியின் விபரங்களைப் பதிந்து கொண்டே சிங்களத்தில் உரையாடத் தொடங்கினாள் அந்தப் பெண் அதிகாரி.

தொடரும்.


Wednesday, June 1, 2011

நெருடிய நெருஞ்சி 2


"எதற்கும் பயப்பிடாமல் துணிவாய் வாங்கோ நான் இருக்கிறன்".

எனக்கோ கைகால் வேர்த்தது. பார்தீபனுக்குப் பின் மாலையுடன் செல்லும் வடிவேலு போல மனைவியைப் பின்தொடர்ந்தேன் குடிவரவுப் பகுதியில் நாங்கள் நின்றோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னால் நின்றேன். எங்கள் முறை வந்தது. மனைவி கடவுச்சீட்டை நீட்டினா. மேலும் கீழும் பார்த்துவிட்டு வருகைக்கு முத்திரையை அடித்துக் கொடுத்தார் அந்த அதிகாரி. எனது முறை எனது கடவுச்சீட்டை நீட்டினேன். காலைவணக்கம் சொன்னார், பதிலுக்கு நானும் சொல்லி வைத்தேன். வடிவாகப் பார்த்துவிட்டு, 

"முதன் முறையாக இலங்கை வருகின்றீர்களா"? 

"ஆம்".

"இலங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களை வரவேற்பதில் மகிழ்சி அடைகின்றோம்".

என்னை என்னால் நம்பமுடியவில்லை. நான் காணுவது கனவா இதன்பின்னால் ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?. ஒரு புன்னகையை அவரிற்கு பொதுவாக வளங்கினேன். வருகையைப் பதிந்து புன்னகையுடன் எனது கடவுச்சீட்டைத் திருப்பித் தந்தார் அந்த அதிகாரி. இனித்தானே அடுத்த கண்டம், மனைவி சொல்படி அவாவைப் பின்தொடர்ந்தேன்.

"நான் எதிர்பார்த்தது ஒன்றுமே நடக்கவில்லை, இந்தமுறை ஒருத்தரையும் காணேல அதிசயமாய் கிடக்கு"

மனைவி சிரிப்புடன் என்னுடன் சேர்ந்து நடந்தா.

"என்ன காணேல"?

"குற்றப்புலனாய்வுத்துறையும் தலையாட்டியும் தான்". "என்னெண்டு உமக்குத் தெரியும்"? 

"அது ரெக்னிக் உங்களுக்குத் தெரியாது".

மனைவி தன்னுடைய பதவியைக் காட்டத் தொடங்கி விட்டா. அந்தக் காலை வேளை எங்களைச் சுமந்து பம்பலப்பிட்டி நோக்கி விரைந்தது ரக்சி.

கொழும்பு நிறையவே மாறியிருந்தது. ஏர்ரெல் விளம்பரத் தட்டிகளும், போரின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் விளம்பரத் தட்டிகளும் அதில் மகிந்தரின் ட்றகுல்லாச் சிரிப்பும் மனதைப் பிசைந்தன. ஏதும் அறியா அப்பாவிகளில் தூசி விளாது போரை எதிர்கொண்ட நாங்கள் எங்கே? இந்த ஐந்தறிவு மகிந்தா எங்கே? 25க்கும் அதிகமான கூட்டாளிகளுன் சேர்ந்து பத்துடன் பதினொன்றாக இருந்த மகிந்தா குலைப்பது தான் கலிகாலமோ? ரக்சி களனிப் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டருந்தது. களனி அமதியாக ஓடிக் கொண்டிருந்தது. உன்னில் தானே ஜேவிபி இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் மிதந்தார்கள். நாற்காலி இனபேதம் பார்பதில்லையோ? எல்லோரும் தானே இந்த உழுத்த நாட்டின் தலைவிதியை மாற்ற போராடினோம். ரோகண விஜயவேரவின் காலத்துடன் ஜேவிபி எலும்புத்துண்டுகளுக்குத் தாளம் போட நாங்கள் தானே முழுமூச்சாக நின்றோம். ஏன் எங்கள் நியாயத்தைபுரிகின்றார்கள் இல்லை?

ரக்சி மனைவியின் நண்பி வீட்டின் முன்பு நின்றது. நண்பிகளின் கலகலப்பான உரையாடல்களில் மனம் ஒட்டாது தனிமையை நாடியது. சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டு பல்கனிக்கு வந்தேன். காலை வேளை இளஞ் சூரியன் சுட்டது. எதிரே இந்து சமுத்திரம் அமைதியாக விரிந்து கிடந்தது. தேமாப்பூவும் வண்ணக் குரோட்டன்களும் அலரிப்பூக்களும், துள்ளித் திரிந்த அணில் பிள்ளைகளும் மனதை வருடின. மனைவியின் நண்பி கோப்பி சுடச்சுடக் கொண்டுவந்து தந்தா. கோப்பியைக் குடித்தவாறே சிகரட்டைப் பற்றவைத்து புகையை ஆழ இழுத்தேன். பலர் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது தெளிவாகத் தெரிந்தது. கடலில் தூரத்தே சரக்குக் கப்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கரையில் கால்வாசி பச்சை நிறமாக இருந்தது. இதேபோல ஒரு காலையில் தானே கடல் தாண்டவம் ஆடியது. எவ்வளவு இளப்புகள்? அதிலும் கிழக்கில் மனிதத்தைத் தானே காட்டினோம்? மனிதம் இவர்களுக்குப் புரியாதோ? சிங்க வம்சத்திடம் மனிதத்தை எதிர்பார்த்தது எங்கள் பிளையோ?

வீதியில் பெண்கள் கப்பாயம் கட்டி அலவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். வெசாக் பண்டிகையின் வெளிச்சக் கூடுகள் வரிசை கட்டி நின்றன. எனக்கு பிரான்ஸில் அரபுக்களின் நிலைப்பாடும் சார்க்கோசியின் நடவடிக்கைகளும் நினைவுக்கு வந்தன. இவைகள் மற்றயவர்களின் மனதைப் புண்படுத்துமே ஒழிய வளப்படுத்தாது.

இரவு 6 மணியாகியது மனைவி யாழ்பாணத்திற்கு போக சொகுசு பஸ்சில் பதிவு செய்து வைத்திருந்தா. நாங்கள் யாழ்ப்பணத்தை நோக்கி புறப்பட தயாரானோம்.

தொடரும்.

நெருடிய நெருஞ்சி 01


மனைவி கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தா. 

"என்ன பயமோ?"

"என்னதான் இருந்தாலும் இப்ப எங்கட உயிர் ஓட்டுறவற்ற கையுக்கள்ள கதைக்காமால் வாங்கோ".

விமானம் தன்னை நிலைப்படுத்தி மேகக்கூட்டங்களிடையே சீறிப் பாய்ந்தது. இப்பொழுது தான் மனைவி கண்ணைத் திறந்தா.என்னதான் துணிவானவர்களானுலும் இந்த நேரத்தில் தியானிப்பரர்கள்.கீழே பரந்து வயல்வெளிகள் பச்சைக்கம்பளமாக விரிந்தன. என் மனமோ பின்னோக்கிப் பாய்ந்தது. விடலைப் பருவத்தில் வீட்டைப் பிரிகின்ற ஏக்கத்துடன் கண்களில் கண்ணீர் ஒழுக கட்டுநாயக்கா விமானநிலயத்தால் வெளியேறி, ஜேர்மனி வந்து, ஒவ்வொரு இடமாக அல்லாடி அப்பொழது தான் அகதி வாழ்வின் வலி சுட்டது, பின்பு 87களில் பிரான்ஸ் வந்து ஒரு வருடத்தில் அகதி முத்திரை எனது முகத்தில் ஆழமாகக் குத்தியதும், அதுவே வாழ்வின் விதியாகி இழப்புகளையும் வேதனைகளையும் ஆழ மனதில் உழுது மனதே ரணகளமாகியதை யாருமே அறியமாட்டார்கள். மற்றவர்கடைய அழுகையையும் சோகத்தையும் ஆற்றிய எனக்கு எனது வலிகளுக்கு மருந்து போட யாருமே இல்லை. வந்து 6 மாதத்தில் அப்பாவையும் பின்பு போனவருடம் எனது முதல் மொழியையும் காலச்சக்கரத்தின் ஆட்டத்தில் தொலைத்தபொழுது வெறுமையே வெறுமையாகிப் போனது. 

"என்ன மலரும் நினைவுகளோ"? 

மனைவியின் குரல்கலைத்தது. எனது கண்களில் இருந்த கண்ணீரைப் பார்த்துப் பதறிப்போய் விட்டா.

"என்ன சின்னப் பிள்ளையள் மாதிரி, கொஞ்சநேரத்திலை எல்லாரையும் பாக்கத்தானே போறம்". 

" சரி ,எல்லோரும் பழைய மாதிரி இருப்பார்களா"? 

"நான் பாத்த இலங்கை பரித்திதுறையில் வீதியில் ஊர்ந்த கவசவாகனங்களும், சோதனைச் சாவடிகளும் தானே அதன் பின்பு இப்ப தானே போறன் இவங்களை நினைச்சாலே என்னமோ பண்ணுது"

"இப்ப அப்படி எல்லாம் இல்லை நீங்கள் கண்டதையும் யோசிக்காதையுங்கோ"

என்று என்னை மனைவி சமாதனப்படுத்தினா. விமானம் குவைத் சர்வதேச விமான நிலயத்தில் இறங்கத் தன்னைத் தயார்ப்படுத்தியது. மனைவியும் மீண்டும் விமானத்தை ஓட்டுபவரை நினைத்தா. கால்வாசியாக வந்த விமானம் குவைத் இலங்கைத் தொழிலாளர்களால் நிறைந்து வழிந்து. எல்லோருக்கும் உறவுகளைப் பார்க்கும் சந்தோசம். விமானமே சந்தைக்டையாக மாறியது. எனக்கோ தலைஇடியாக இருந்தது.நீண்ட நேரப்பயணம் அசதியாக இருந்தது.கண்கள் இரண்டும் நித்திரையின்மையால் சிவந்து போய் இருந்தன. பலர் பெண்களாகவே இருந்தனர். எல்லோரும் குடிவரவு விண்ணப்பத்தை நிரப்புவதில் மும்மரமக இருந்தார்கள். சிலருக்கு விண்ணப்பத்தை நிரப்பவே தெரியவல்லை. இவர்களது அறியாமை அரபுகளுக்குக் குறைந்த தினார்களாகவும், அரசயல்வாதிகளுக்கு அரசியலாகவும் போவதை நினைக்க மனது கனத்தது. இவர்களும் எங்களைப் போல் தானே வெய்யிலிலும் குளிரிலும் அல்லாடுவரர்கள். நேரம் அதிகாலை 4 மணி. விமானம் பண்டரநாயக்கா சர்வதேச விமானநிலயத்தில் தன் கால்களை அகலப்பரப்பி வேகமாக இறங்கி ஓடுதளத்தில் ஓடி நின்றது.

தொடரும்.