Tuesday, July 26, 2011

நெருடிய நெருஞ்சி 12

பஸ் நின்றதும் எல்லோரும் இறங்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தோம்.கடைசியாக நாங்கள் எமது சாமான்களுடன் இறங்கினோம். எனக்குப் பின்பக்கம் நன்றாகப் புளித்து விட்டது, அவ்வளவு குலுக்கல். பருத்தித்துறை பஸ்நிலையம் அந்த மத்தியானத்திலும் களைகட்டி இருந்தது. பஸ்நிலையத்தில் நவீனசந்தைக் கட்டிடத்தை திரும்பவும் கட்டிக் கொண்டிருந்தார்கள். சந்தையை தற்காலிகமாக பஸ்வந்து நின்ற இடத்துக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள். மீன் சந்தையையும் முனைக்கு போகும் வழியில் வைத்திருந்தார்கள். நான் இறங்கிய புழுகத்தில ஒரு சிகரட்டை எடுத்து பற்றவைத்தேன். எங்கள் நகரங்களில் இது முக்கியமானதொரு துறைமுகப்பட்டினம். தமிழர்களின் புகழை ஆழப்பதித்து வைத்தநகரம். பல அறிஞர்களையும் ,பல கடலோடிகளையும் எமக்குத் தந்த நகரம். யோசனையில் நின்றிருந்த என்னை மனைவியின் குரல் இடைமறித்தது,

"உங்களுக்கு எங்கையாவது முனியடிச்சுப்போட்டுதோ"

"என்ன சொல்லுறீர் ?? விளப்பமாய் சொல்லுறது"

" இல்லை கொழும்பில இருந்து வெளிக்கிட்ட தொடக்கம் ஒரு மார்க்கமாத்தான் நிக்கிறியள்."

"அதுசரி, உமக்கெங்கை தெரியப்போகுது என்ர வலியள்?. நான் என்ன உம்மைப்போல வரியத்துக்கு ஒருக்கா வாறனானே?"

"இதில நில்லுங்கோ .நான் ஓட்டோ பாக்கிறன்."

" ஏன் பிள்ளை கனதூரமோ?"

அவாவின் பார்வை என்னைச் சுட்டது.

" இந்த நக்கல் எல்லாம் வேண்டாம் நில்லுங்கோ வாறன்".

நானும் புகையைத் தொடர்ந்தேன். கோப்பாய் என்றால் நான்தான் ராசா, வழிகாட்டி. இது எனக்கு புதிய இடம் அவாசொல் கேட்டு நல்லபிள்ளையாக நின்றேன். ஒரு ஓட்டோ ட்றைவருடன் மனைவி வந்தா. நான் ஓட்டோவிற்கு எவ்வளவு என்று கேட்டேன். ட்றைவர் என்னைப்பார்த்துச் சிரிக்க, நான் முழித்தேன்.

"இவையின்ர குடும்பம் எனக்கு தண்ணிபட்டபாடு தம்பி. உள்ளுக்கை ஏறுங்கோ. நான்முந்தி இவையுக்கு கார் எல்லாம் ஓடின்னான், இப்ப கார் ஓட்டோவாய் சுருங்கீட்டுது. நீங்கள் எவ்வளவு காசு எண்டு கேட்டது எனக்கு துண்டாய் பிடிக்கேல".

தேவையில்லாமல் வாயை குடுத்திட்டனோ?

"தம்பி முதல்தரம் வாறிங்களோ."

"ஓம், உங்களுக்கு எப்படித்தெரியும்"?

என்னில ஏதாவது எழுதி ஒட்டி இருக்கோ?

"இல்லைதம்பி முந்தி இவா தனிய வாறவா. இப்ப ரெண்டுபேரும் வாறியள், அதுதான் கேட்டனான்".

மனைவி சிரிச்சுக்கொண்டே,

"அண்ணை விட்டால் இவர் கதைச்சுக் கொண்டு இருப்பர் .நீங்கள் ஓட்டோவை எடுங்கோ".

ஓட்டோ எங்களை சுமந்து கொண்டு அம்மன் கோயில் அடியால் திரும்பியது. அந்தவீதி மிகவும் ஒடுக்கமாக இருந்தது. ஓட்டோ சனத்திற்குள் மெதுவாகவே போனது. பருத்தித்துறைக்கு பெருமை சேர்பதில் அதன் வடையும், தோசை, தோசைக்கறி, எள்ளுப்பா, அப்பம், போன்றவையும் அடங்கும். எல்லோரும் தான் இவைகளைச் செய்வார்கள். ஆனால், இவர்களின் தொழில்நுட்பம் யாருக்கும் வராது. இன்றும் அப்பத்தட்டிகள் இங்கு பிரபல்யம். அப்பத்தட்டி என்பது, ஒவ்வொரு வீட்டு மதிலிலும் நிலமட்டத்துடன் ஒரு சிறிய ஓட்டை செய்திருப்பார்கள். இரண்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் முகம் தெரியாது. வாங்குவதும் விற்பதும் ஓட்டை வழியால் தான். காலையிலும் மாலையிலும் வியாபாரம் சூடுபறக்கும். சில வீடுகளில் பேப்பரும் காலையில் விற்பார்கள். பல வீடுகளில் இப்பொழுது அப்பத்தட்டிகளை காணவில்லை. ஆனால் அவை இருந்ததிற்கான அடையாளங்கள் இருந்தன. சிலவீடுகளில் நாங்கள் போன வீதியில் அப்பத்தட்டி வைத்திருந்தார்கள். இடத்தை வடிவாகப் பாத்துக் கொண்டு வந்தேன், பின்பு தனிய வந்து வாங்கி சாப்பிட. பருத்தித்தறையின் கலாச்சாரத்தில் இந்த "அப்பத்தட்டி" ஊறிப்போன விடையம். அப்பம் தோசை சுட்டு விற்பதை இவர்கள் இழிவாக நினைப்பதில்லை. மாறாக, தங்களது பாரம்பரியமாகவும், பெண்களுக்குப் பொழுதுபோக்குடன் கூடிய, தங்கள் சிறிய போருளாதரத் தேவைகளை நிறைவேற்றும் முறமையாகவே பார்க்கின்றார்கள். ஓட்டோ கல்லூரி வீதிசந்தியைக் கடந்தது.

"இதால போனால் காட்லிக் கல்லூரிக்குப் போகலாம். அங்கால போனால் மெதடிஸ் கல்லூரிக்கும் போகலாம்"

"அப்ப நீர் படிச்ச வடஇந்து மகளிர் கல்லூரி?"

"அதுக்கு இடப்பக்கம் திரும்பிபோகவேணும்".

ஓட்டோ சந்தியை கடந்து ஒழுங்கையில் இறங்கியது. ஒழுங்கையின் இரண்டு பக்கமும் கிடுகுவேலியும், மதிலும் மாறிமாறி வந்தன. வழியில் ஆடுகளும், குட்டிகளும் இப்பிலிப்பில் குழையைக் கடிச்சடியே வந்தன. அவைகள் பொட்டுக்குள் போகமல் இருக்கக் கழுத்தில் முக்கோணத் தடி கட்டி இருந்தார்கள். அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அந்த ஆடுகள் உயரமான பெரிய செவிகளுடன் மேய்ந்தன. எனக்குக் கனகாலத்திற்குப் பிறகு ஊர் ஆடுகளைப் பார்க்கப் புதினமாக இருந்தது. ஓட்டோ ஆவோலை பிள்ளையார் கோயிலடியால் திரும்பியது.

"என்னம் கனதூரம் போகவேணுமோ?"

"இல்லை வீடு கிட்டீட்டுது."

எனக்கு மாமி, அன்ரி, மாமாவைப், பாக்கிற அவதி. மாமாவையும் அன்ரியையும் இப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்கப்போகின்றேன். அவர்களுக்கு நான் மனைவியைக் கலியாணம் செய்தது செய்தியாகத்தான் தெரியும். அத்துடன் மனைவியின் தங்கைச்சி பிள்ளைகள் குடும்பத்துடன் குன்னூரில் ( இந்தியா ) இருந்து பள்ளிவிடுமுறைக்கு வந்திருந்தார்கள். அந்தப் பிள்ளைகளும் இப்பொழுதுதான் முதன்முதலாக அம்மாச்சியைப் பார்க்கப்போகின்றார்கள். சிந்தனையில் இருந்த என்னை ஓட்டோ நின்ற ஒலி நிஜத்திற்கு கொண்டு வந்தது. அப்போது நேரம் மதியம் 1 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் ஓட்டோவிலிருந்து இறங்கி சாமான்களை இறக்கினேன்.


தொடரும் 
Thursday, July 21, 2011

நெருடிய நெருஞ்சி 11

பஸ்சின் வேகம் குறைந்ததால் வடிவாக முகமாலை படைமுகாம் கண்முன்னே விரிந்தது. வீதியின் ஆரம்பத்தில் பலமான மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட காவலரண்களுடன் கூடிய மந்திகளும், அதனைத் தொடர்ந்த மேலதிகாரிகளின் குடியிருப்புகளும், பின்பு வந்த படைத்தளத்தின் கம்பீரமும், அடிவயிற்ரை சில்லிடச் செய்தது. இந்தப் படைமுகாம் யாழ்ப்பாணத்திற்கு நுளையும் முதலாவது முன்னரங்கக் காவலரண் பகுதியாகும். இந்தபடைமுகாமை பற்றிப் பல கதைகள் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இதில் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை அமெரிக்காவின் குவான்ட்தமொனோ ( QUANTAMONO )சித்திரவதைக்கூடத்திற்கு இணையான இந்தப் படைமுகாமில் , இரவில் பலபெண்களின் அலறல் சத்தம் பலரது நித்திரையைக் கலைத்தது. மறுநாள் அடையாளம் காணப்படாத உடலங்கள் படைமுகாமைச் சுற்றிய சுற்றாடலில் கிடைக்கும். பஸ்சினுள் திரும்பி மற்றயவர்களின் முகத்தைப் பார்த்தேன் ஒருவரது முகத்திலும் எந்தவித சலனத்தையும் காணமுடியவில்லை. எல்லோரும் தங்களது அலுவல்களில் இருந்தார்கள். இவர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டதோ? எனக்குத்தான் இதெல்லாம் புதிதாக இருந்து அலப்பல் பண்ணுகின்றனோ? பஸ் முகாமைக் கடந்து வேகமெடுத்தது. வீதியின் இருமருங்கிலும் கற்பிழந்த தென்னைகளிடையே எமது பாரம்பரிய கல்வீடுகள் வரத்தொடங்கின. பல வீடுகள் குரோட்டன்கள், கமுகு மரங்கள், மயில்க்கொன்றை மரங்கள், அலரி மரங்கள், என்று செளிப்பாகவும், சிலவீடுகள் பாழடைந்த நிலையிலும் காணப்பட்டன. அனேகமாக இந்த வீடுகளில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த முகாமில் வாடுகின்றார்களோ??????? நினைவுகளால் மனது கனத்தது. நேரம் 11 மணியை கடந்து இருந்தது. பஸ் உசன், மிருசுவில் என்று சிறிய ஊர்களைக் கடந்து கொண்டிருந்து. பலர் அதில் ஏறி இறங்கினார்கள். களைத்த மனதிற்கு பஸ்சனுள் ஒலித்த பாடல்கள் இதமாக இருந்தன. நித்திரையின்மையால் கண்கள் கள்ளுக் குடித்த மாதிரி சிவத்து போயிருந்தன. போட்டிருந்த உடுப்பு வியர்வையினால் தோய்ந்து மணக்கத்தொடங்கியது. "என்னம் எவ்வளவு நேரம் ஓட்டம்?" என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன் "இன்னும் ஒரு மணித்தியால ஓட்டத்தில பரித்தித்துறை". எனது முகத்தில் சந்தோசம் குடிகொண்டது. படிக்கின்ற காலத்தில் அங்கு போனதிற்குப் பிறகு எனக்கும் பரித்தித்துறைக்குமான தொடர்புகள் விடுபட்டுபோய்விட்டது. பஸ் கொடிகாமம் பஸ்நிலையத்தில் தன்னை நிலைநிறுத்தியது . கொண்டக்ரர் தேத்தண்ணி குடிக்கப் போனார். எனக்கும் கீழே இறங்கவேண்டும் போல இருந்தது,

மனைவியைக் கள்ளப்பார்வை பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவா என்னை முறைத்துப்பார்த்தா. நான் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐன்னலினூடாக வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.

கொடிகாமம் பஸ்நிலையத்தில் பெரியமாற்ரங்களை காணமுடியவில்லை. கொடிகாமம் சந்தை பரபரப்பாகக் காணப்ட்டது. முதன்முதலாக நீண்டகாலத்திற்குப்பிறகு தட்டிவானை இங்கு கண்டேன். பழமை மாறாது அப்படியே நின்றது அதன்பின் தட்டியில் வாழைக்குலைகளும், பினாட்டு கடகங்ளும் , புழுக்கொடியல் கடகங்களும்,

ஏறிக்கொண்டிருந்தன. நான் மிகவும் ஆவலாகப் பார்த்தேன். வந்த கொண்டக்ரரிடம் அண்ணை இந்ததட்டிவான் எந்தரூட்டிலை இப்பபோகுது என்று குழந்தைத்தனமாகக் கேட்டேன்.என்னை ஒரு பார்வை பார்த்தார் கொண்டக்ரர். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. "இப்ப இதெல்லாம் குறைவு தான் தம்பி, இங்கை இருந்து மருதங்கேணி, ஆளியவளைக்குப் போகும். கேள்வியைப் பார்த்தால் இப்பவே ஏறிப்போகப்போறீர் போல கிடக்கு". நான் சிரித்தேன். மனைவி முறைத்துப் பார்த்தா

"கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு வாறியளே?"

"ஏன் பிள்ளை தெரியாததைத் தானே அவரிட்டைக் கேட்டனான்".

பஸ் கொடிகாம் பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்டு பரித்தித்துறை நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பியது. அந்தப் பாதை மிகவும் ஒடுக்கமாக இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் நின்று தான் விலத்த வேண்டியிருந்தது. நேரம் 11.30 ஆகியிருந்தது. பஸ் வேகமெடுத்தது. இரண்டுபக்கமும் ஏழ்மையும் பணமும் (ஓலைக்குடிசைகளும் கல்வீடுகளும்) மாறிமாறி வந்து கொண்டிருந்தன. பலவீடுகளில் கப்பிக் கிணறுகள் எட்டிப்பார்த்தன. சில வீடுகளில் ஆர்பிக்கோ பிளாஸ்ரிக் தண்ணீர்தொட்டிகளின் கூடிய கிணறுகளும் எட்டிப்பார்த்தன. அனேகமாக அவைகள் யூரோக்கள் அல்லது டொலர்களின் ஆதிக்கம் பெற்றவையாக இருக்கவேண்டும். ஆனால் என்னால் ஆடுகாலும் துலாவுடன் கூடிய கிணறுகளை காணாதது வேதனையாக இருந்தது. சில வேளைகளில் அதுவும் பங்கர்சென்றிக்குப் போய்விட்டதோ? இருந்தால் போல ஒரு வெளி வரத்தொடங்கியது. அதன் ஆரம்பத்தில் கவலரண் போட்டு மந்திகள் குந்தியிருந்தன. இது என்ன என்று மனைவியிடம் கேட்டேன். இது தான் முள்ளிவெளி என்றா. முள்ளிவெளி கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருந்து. முடிவிலும் மந்திகள் குந்தியிருந்தன, இலவு காத்த கிளிகளாக இதுகளின் வாழ்க்கையும் போகின்றது. வீதியின் இரண்டு பக்கமும் பனைகளும் வீடுகளும் தோட்டங்களுமாக மாறிமாறி வந்தன. பஸ் வேகமாக முன்னேறி நெல்லியடி பஸ்நிலையத்தில் வந்து நின்றது. அருகே பரித்தித்துறை வீதி நெளிந்தது. நெல்லியடி ஒரே இரைச்சலாக இருந்தது. இந்த நெல்லியடிக்கும் எமக்கும் ஒரு பெரியகதையே உள்ளது.இதே நெல்லியடியில்தான் சிங்கம் திக்கிமுக்காடி அலறியது, ஒருவனின் காற்றோடு கலப்பால். சிங்கம் மட்டுமாஅலறியது? சுற்றுப்பட்டிகளும் தான். ஆம்....... முதல் கரும்புலியான மில்லர் நெல்லியடி  மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்த இருந்த கூட்டுப்படை இராணுவ தளத்தை அழிக்க காற்றுடன் கலந்த இடம் நெல்லியடி . நாங்கள் எங்களையும் ஆயுதமாக்குவோம் என்றதும் இந்த இடத்தில் தான். நேரம் 12 மணியாகியிருந்து பஸ் பரித்தித்துறை வீதியில் வேகமெடுத்தது. காதைப்பிளக்கும் மிகையொலிகோர்ண்களால் நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன். இப்போழுது பஸ்சிற்குள் பத்துப்பேரே இருந்தோம். மனைவியின் முகத்தல் மகிழ்சி. மந்திகைசந்தியைக் கடந்து கொண்டிருந்தது பஸ். ஒடுக்கமாக வந்த வீதி பரித்தித்துறை வருவதை எனக்கு உணர்த்தியது. இரண்டு பக்கமும் இருந்த கட்டிடங்களும் வீடுகள் சிலவும் செல்அடியில் சிதிலமாகக் கிடந்தன. பஸ் முதலாம் கட்டைச்சந்தியை தாண்டியது.

"இதில இருந்தும் எங்கட வீட்டக்குப் போகலாம்" என்று மனைவி எனது பிராக்கைக் கலைத்தா.

"அப்ப இதில இறங்குவம்" என்று எழும்பினேன்.

"இல்லை, பஸ்நிலையத்தில் இறங்குவம்".

"சரி".

வேகமெடுத்த பஸ் பஸ்டிப்போவை கடந்து, சிறிதுதூரம் ஓடி பரித்தித்துறை பஸ்நிலையத்தில் நின்றது.

தொடரும்


Friday, July 15, 2011

நெருடிய நெருஞ்சி 10

பஸ்சின் ஜன்னலின் ஊடாக உப்புக்காற்று கமறியது.தூரத்தே வெண்பரப்புகளாக உப்பு விளைந்திருந்தது. உப்பை எடுக்க பாத்தி பாத்தியாக கட்டியிருந்தார்கள். சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. எனக்கு அவை இரத்தமாகத் தெரிந்தது. கண்ணைக்கசக்கி விட்டுப் பார்த்தேன். அந்த நீர் குட்டையில் நாரைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. எங்களையும் தானே பல நாரைகள் மீன்பிடித்தன. பஸ் ஆனையிறவு படைமுகாமை நெருங்கியது தெரிந்தது. வீதியின் இரண்டுபக்கமும் உயர்த காவல்கோபுரங்கள் இருந்தன, அதில் சிங்கங்கள் குந்தியிருந்தன. படைமுகாம் பரந்து விரிந்திருந்தது. ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். இந்தப் படைமுகாமின் பாதுகாப்பு அரண்களைப் பற்றி உலகின் இராணுவ வல்லுனர்கள் சிலாகித்துப் பேசி, ஓர் மரபுவான்படைமூலமே இந்த படைமுகாமை தகர்க்கமுடியும் என்று பெரிய சான்றிதளே கொடுத்திருந்தார்கள்.ஆனால் நாங்கள் சரித்திரத்தையல்லவா மாற்றியமைத்தோம். இதே வீதியால்தானே துட்டகைமுனுக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். உலகின் இரண்டாவது பெரிய தரையிறக்கத்தையல்லா செய்து வெற்றிக்கொடி நாட்டினோம். குடாரப்புத் தரையிறக்கம் பல இராணுவல்லுனர்களை பொறிகலங்க வைத்தது.ஆம்........  இரண்டாம் உலகப்போரில் நடை பெற்ற நோர்மண்டி தரையிறக்கத்தின் பின்னர் வந்த இரண்டாவது தரையிறக்கமல்லவா??  ஒரே இரவில் அதிகப்படியான போராளிகளை தரையிறக்கி சிங்கங்களையும் அதன் கூட்டாளிகளையும் கலங்கடித்த தரையிறக்கமல்லவா !!!! சிங்களமும் குப்பற வீழ்ந்தது. நாங்கள் அதிகம் பேசவில்லை, செய்து விட்டு அடுத்தவேலையைப் பார்த்தோம். ஆனால், இப்போ காதுபிய்யுமளவுக்கு ஓரே இரைச்சல்.மீண்டும் குடிமனைகள் வரத்தொடங்கின.பஸ் வேகமெடுத்து வீதியின் இரண்டு பக்கமும் தென்னைமரங்கள் நின்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ஆனால், மேலே பலகருகி மொட்டையாக நின்றன.தென்னைகளை வைத்து பளை வரத்தொடங்கிவிட்டது என்று அனுமானித்தேன். தூரத்தே ஒருசிலர் வீழ்ந்த தென்னை ஓலைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் பனை வடலி ஓலைகளால் நேர்த்தியாக வேலி போட்டிருந்தார்கள். பனைகளும் பல கற்பிளந்து நின்றன. புதிய வடலிகளும், தென்னம்பிள்ளைகளும் உருவாகிக்கொண்டிருந்தன. ஆனால், இவைகள் வளர்ந்து எப்போது பலனைத் தரப்போகின்றன?? மனது வலித்தது. சிங்கம் பாத்துப் பாத்தல்லவா எழும்பமுடியாதவாறு கடித்து குதறியுள்ளது. பஸ் மீண்டும் பயணிகளை ஏற்றி இறக்கி போய்கொண்டிருந்தது. பாதையின் அருகே மீண்டும் பழைய புகையிரதப்பாதை இணைந்து வந்து கொண்டிருந்தது. பற்றைகளுடன் மேட்டுப் புட்டியாக வீதியுடன் ஒட்டிவந்தது புகையிரதப் பாதையை திருத்திக் கொண்டிருந்தார்கள். தூரத்தே வீதியின் இரண்டுபக்கமும் உயர்ந்த காவற்கோபுரங்களும், மண் அணைகளும் தெரிந்தன. அவை என்ன என்று அப்பாவியாக மனவியிடம் கேட்டேன். முகமாலை இராணுவப்படை தளத்தை நெருங்குகின்றோம் என்றா. என் முகத்தில் கலவரரேகை படர்ந்தது. பஸ் வேகத்தைக் குறைத்து மெதுவாகச்சென்றது.


தொடரும்
Thursday, July 7, 2011

நெருடிய நெருஞ்சி 09

பஸ்சிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள். எனக்கு ராங் முட்டிக் கடுத்தது. கொண்டக்ரரை நோக்கி

"அண்ணை எங்கை பம்பிங் ஸ்ரேசன்"?

"வாரும் நானும் அங்கைதான் போறன்".


நான் விரைவாக அவரைப் பின்தொடர்ந்தேன்.மூச்சைநிப்பாட்டிக் கொண்டு காலச்சட்டை சிப்பை அவசரமாக இழுத்தேன். பம்பிங் ஸ்ரேசனில் அவ்வளவு வெடுக்கு. ராங் குறையத் தொடங்கியது ஆனால் நேரம் எடுத்தது, அவ்வளவு கனம். வெளியே வந்து மூச்சை விட்டேன். பக்கத்தில் இருந்த தண்ணித் தொட்டியில் கைகால்களை அலம்பினேன். காலில் இருந்து ஊத்தை கருப்பாகப் போனது. ஆனாலும் எனது புளுதிமண்ணல்லவா, தண்ணீர் படும்பொழுது மணத்தது. கொண்டக்ரரும் தன்னுடைய அலுவலை முடித்து வட்டு வந்தார். அவரது கை சீப்பால் தலைஇழுத்தது. எனக்கு அருவருப்பாக இருந்தது. இவை கைகழுவ மாட்டினமோ?

"தம்பி நீங்கள் எங்கை சாப்பிடப் போறியள்"?

"எனக்கு அக்கா வீட்டை இருந்து சாப்பாடு கட்டித்தந்தவா".

"அப்ப நீர் குடுத்து வைச்சாள் தான்".

"நான் இங்கை கடைல பாக்கிறன் நீர் போய் சாப்பிடும்".

நான் பஸ்சை நோக்கி விரைந்தேன். பஸ் ஆட்கள் இல்லாது வெளிப்பாக இருந்தது. மனைவி இடியப்பப் பாசலை அவிழ்த்தா. வாழை இலையின் மணம் மூக்கைத் துளைத்தது. நான் பலகாலமாக அனுபவிக்காத வாழையிலை மணம். அந்தமணத்துடனே இடியப்பத்துடன் சம்பலை சேர்த்துச் சாப்பிட்டேன். அதில் அக்காவின் அன்பு தெரிந்தது. எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. எனது மனைவி உறைப்பால் அவதிப்படுகின்றேன் எனநினைத்து தண்ணிப் போத்தலைத் தந்தா. அவாவின் மனதை நோகப்பண்ணக்கூடாது என நினைத்து தண்ணீரைவாங்கிக் குடித்தேன். சாப்பிட்டு முடிந்ததும் சிகரட்டை எடுத்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கினேன் சிகரட்டை பற்றவைத்து புகையை ஆழமாக இழுத்தேன் உறைத்த நாக்கிற்கு இதமாக சிகரட் இருந்தது. சுற்றாடலை நோட்டமிட்டேன் அந்த இடத்தில் 6-7 கடைகளே காணப்பட்டன. அவைகளில் ஒருவிதசோகம் காணப்பட்டது. ஒரு ரீக்கடையில் போய்நின்று எட்டிப் பார்த்தேன். ரீ குடிக்கவேணும் போல் இருந்தது. ரீக்கு சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டேன் சிவர்களில் பல ஓட்டைகள் இருந்தது. கடையை நடத்தியவர் நடுத்தரவயதாக இருந்தார்.

"அண்ணை கனகாலமாய் கடைவைச்சிருக்கிறியளோ"?

"ஓம் தம்பி, ஆனால் நாலஞ்சுவரியமா ஒண்டுஞ் செய்யேலாமல் போச்சுது. செல்அடில கூரை எல்லாம் பிஞ்சுபோச்சு இப்பதான் நிவாரணநிதிலை திறந்தனான்"

"நிவாரணநிதி உடன தந்திட்டாங்களோ"?

என்னை ஆளமாகப்பார்த்தார்,

"அண்ணை குறைநினைக்காதையுங்கோ நான் வெளிநாட்டிலை இருந்து கனகாலத்துக்குப் பிறகு இங்கை வாறன்"

"எவ்வளவுகாலம்"?

"25 வரியம்".

"என்ரடவுளே!!!!! நான் ஆரோடையும் கனக்க கதைக்கிறேல தம்பி நீர் வெளிநாடு எண்டபடியால் உம்மை நம்பிறன்".

ஆ!!! என்ன சொன்னான் எல்லாம் உடன கிடைக்குதே எங்களுக்கு ரெண்டு பக்கமும் இடிதம்பி இப்பதான் ஒருமாரிநிமிர்றம். என்ர ரெண்டு பெடியளும் மாவீரராய் போட்டாங்கள், பெடிச்சியும் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது மனிசிக்காறிக்கு இதால கொஞ்சம் மண்டகுழம்பிப் போச்சு. இப்ப வைத்தியம் பாக்கிறன், எல்லாம் முறிகண்டியான் பாப்பான் எண்ட துணிவிலை இருக்கிறன்.எனக்கு மனசு வலித்தது.

"எவ்வளவு ஆண்ணை நான் தரவேணும்"?

"ரீ 15 ரூபாய் தாரும்".

பொக்கற்றுக்குள் கையை விட்டேன் நூறு ரூபா வந்தது.

"அண்ணை இதை வைச்சிருங்கோ".

"நில்லும் மிச்சம் தாறன்".

"இல்லை மிச்சத்தையும் வைச்சிருங்கோ".

"இல்லைதம்பி உழைச்சு வாறது தான் நிக்கும். நீர் மிச்சத்தை கொண்டுபோம்".

" சரி மிச்சத்துக்கு ஏதாவது வடை றோல்ஸ் தாங்கோ" "அப்பிடி எண்டால் தாறன்".

விரைவாக பாசல் கட்டித் தந்தார். பாசலை வாங்கிக் கொண்டு கடை வாசலை விட்டு வெளியேறினேன்.சிறிது தூரம் சென்றிருப்பேன், தம்பி என்று ஒரு குரல் என்னை நிறுத்தியது.அங்கே ஒரு நடுத்தரவயதுள்ள பெண்ணும் ஒரு சிறுவனும் நின்றிருந்தார்கள்.

"தம்பி நாங்கள் கிளிநொச்சில இருந்து இடம்பெயர்ந்தனாங்கள்.இங்கை உமையாள் புரத்திலை இருக்கறம், என்னம் நிவாரண நிதி கிடைக்கேல தம்பி. சொல்ல வெக்கமாய் இருக்கு, நேற்றேல இருந்து நானும் பிள்ளையும் என்னம் சாப்பிடேல".

பஸ் வெளிக்கிடுவதற்கு ஆயுத்தமாக கோர்ண் அடித்தது. மனைவி பரபரப்பது தெரிந்தது. கையில இருந்த பாசலை அந்தப்பெண்ணிடம் கொடுத்தேன்.

" இதை சாப்பிடுங்கோ அக்கா எனக்கு பஸ்வெளிக்கிடப்போகுது".

" அப்ப தம்பி உங்களுக்கு நீங்கள் சாப்பிட வாங்கிக் கொண்டு போறியள் போலகிடக்கு, உங்கடை அவாவும் பஸசுக்கை இருந்து உங்களைப் பாக்கிறா எனக்கு வேண்டாம்".

என்று வெள்ளேந்தியாக சொன்னாள். எனக்கு அக்காவின் ஞாபகம் ஏனோ வந்து மறைந்தது. தன்பசியிலும் மற்றவனை உபசரிக்கும் வன்னியின் பண்பு அவள் பொய் சொல்பவளாக எனக்குத் தெரியவில்லை

எனக்குக் கண்கலங்கியது. கடவுளே இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை எல்லோருக்குந் தானே சாப்பாடு போட்டார்கள் இண்டைக்குக் கூசிக்கூசி அல்லவா சாப்பாட்டுக்குக் கைஏந்துகிறார்கள். எனக்கு வியர்வையுடன் கண்ணீரும் வந்து கண் எரிந்தது.சிறிய துவாயால் முகத்தை இறுக்கமாய் துடைத்தபடி பஸ்சை நோக்கி விரைந்தேன். நான் பஸ்சுக்குள் ஏறியதும் கொண்டக்ரர் விசில் அடித்துக் கொண்டே, "

என்னதம்பி இங்கை மனிசிக்காறி இருக்கறா நீர் கேர்ல் பிரண்ட் பிடிச்சிட்டீர் போல கிடக்கு".

"அதல்லாம் யூறொப்பில நோமல் அண்ணை" என்றேன் சிரித்தவாறே,

"பாத்துதம்பி அவா ரிக்கற் எடுத்தது பரித்தித்துறைக்கு இடம் தெரியாம விளையாடாதையும்".

"தெரிஞ்சு தானே அண்ணை விழுந்தனான்"

எல்லோரும் சிரித்தார்கள். பஸ் மீண்டும் ஏ9 பாதையில் வேகமெடுத்தது." உங்களுக்கெல்லே சொன்னான் ஒரத்தரோடையும் கதைக்கவேண்டாம் எண்டு".

எனக்கு தெரிந்தது அவா எதை மனதில் வைச்சுக் கதைக்கிறா என்று.

" பிள்ளை எங்களுக்கு கடவுள் என்ன குறை வைச்சார், ஒரு யூறோவும் வராது அந்த மனிசின்ர ஒருநேரச்சாப்பாடு கிடைச்சுதே பாவம் அந்த மனிசியப்பா".

"இங்கை உங்களுக்கு இங்கத்தையான் நிலமை தெரியாது பாத்து நடங்கோ".

நேரம் 10மணியை நெருங்கியது. தூரத்தே கடல்நீர் ஏரி தெரிந்தது. அது ஆனையிறவு வருவதைக் கட்டியங் கூறியது.

தொடரும்.