Thursday, August 25, 2011

நெருடிய நெருஞ்சி 15


எல்லோரும் ஒழுங்கையில் இறங்கினார்கள். நான் சிறிது தாமதித்தேன் என்னைப் பாரத்த மனைவி ,

" என்ன " ? என்பது போலப் பார்த்தா .

" நீங்கள் போங்கோ நான் வாறன் "?

" ஏன் " ?

" நீங்கள் போங்கோ எண்டுறன் " .

கலங்கிய கண்களுடன் கடுமையாக எனது வாயில் இருந்து வார்த்தைகள் துப்பின . எனது மனவலிகளுக்காக மனைவியுடன் கடுமையாக நடக்கின்றேனோ ? எனது நிலையைக் குறிப்பால் உணர்ந்த மனைவி ,

" நிண்டு மினைக்கெடாமல் கெதீல வாங்கோ" என்றவாறே , வீட்டை நோக்கித் தங்கைச்சி பிள்ளைகளுன் நடக்கத் தொடங்கினா . தனித்து விடப்பட்ட என்னுள் ஊழிப் பிரளயமே நடந்தது. எனது 25 வருடத்து ஏக்கம் என்னை அறியாமல் கண்ணால் பெருக்கெடுத்து ஓடியது . காலை வேளையாகையால் வீதி ஓரளவு பரபரத்துக் காணப்பட்டது . சிறுவயதில் ஓடி ஆடி பல கதைகள் பேசி, புழுதி மண் தோய நடந்த ஒழுங்கையும் அதன் வாசலும் என்னை அன்னியனாகவே வெறித்துப் பார்த்தன. என்னை யரும் அடையாளம் காணுகின்றார்களா ? என்ற ஏக்கத்துடன் இருபக்கமும் திரும்பிப் பார்த்தேன் . யாருமே என்னை அடையாளம் காணவில்லை நான் உடைந்து நொறுங்கிப்போனேன் ஒரு பாடலில் ஓளவையார் இப்படிப் பாடுவார் " கொடிதிலும் கொடிது அன்பிலாப் பெண்டில் இட்ட உணவு " என்று என்னைக் கேட்டால் , " கொடிதிலும் கொடிது பிறந்து வழர்ந்து தவள்ந்து விளையாடிய இடத்தில் யாரும் அடையாளம் காணாது அன்னியனாகப் பே முழி முழிப்பது தான் ". அம்மாவின் நினைவு வேறு வந்து தொலைத்தது . எப்படி அம்மா இல்லாத வீட்டைப் பார்க்கப் போகின்றேன் ? என்னுடன் தானே அம்மா இட்டமாக இருந்தா . கண்ணால் வந்த வெள்ளத்தால் மனது இலேசாக இருந்தது . தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தேன் . வீட்டு வாசலில் எனது வரவை எதிர்பார்த்து எனது கடைசித் தங்கைச்சி தனது பிள்ளையுடன் நின்றிருந்தாள் . என்னைக் கண்டதும் தங்கைச்சி பெரிதாக அழத்தொடங்கி விட்டாள். குழந்தையோ மலங்க மலங்க முழித்தது. நான் அவளின் முகத்தை நேரடியாகப் பார்க்கத் தையிரியம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கைகால் முகம் கழுவிக் கொள்ளப் போய்விட்டேன் . மனைவி தங்கைச்சியைத் தேற்ரிக்கொண்டிருந்தா . கைகால் கழுவப் போன நான் கிணத்தைக் கண்டதும் , வந்த புழுகத்தால் வாழியால் அள்ளிக் குளிக்கத் தொடங்கினேன் . குளிர்ந்த நீர் கொதித்த மனதிற்கும் உடலுக்கும் இதமாக இருந்தது . கிணற்றினுள் இரண்டு சோடி தங்கமீன்கள் ஓடித்திரிந்தன . சிறுவனாக இருந்தபொழுது அண்ணைக்குத் தெரியாமல் நண்பனுக்கு கொடுப்பதற்காக மீன்பிடித்தபொழுது வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தது , எனக்குள் சிரித்துக் கொண்டேன் . குளித்து முடிந்தபின் சாமி அறைக்குள் உள்ளட்டேன் . அம்மாவும் அப்பாவும் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . அம்மாவை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . அம்மா நல்ல வடிவு. சாவித்திரி மாதிரி இருப்பா . நான் படுத்து எழும்பிய பெரிய கட்டில் என்னுடன் பல கதைகள் கதைத்தது . தங்கைச்சி சீனி போடாமல் தேத்தண்ணி கொண்டுவந்து தந்தாள் . அவளுடன் வந்த குழந்தை அவளுக்குப் பின்னால் நின்று எட்டிப் பாத்தது . அவளிற்கும் கலியாணம் நடந்தது எனக்குச் செய்தியாகத் தான் வந்தது . அவளின் கணவர் ஏகத்துக்கம் வெக்கப்பட்டார் . அண்ணை வெளியில் போயிருந்தபடியால் , எங்கள் பிள்ளையார் கோயலடிக்கு தங்கைச்சியின் பிள்ளையுடன் போனேன் . ஒழுங்கையால் மருமகளுடன் நடப்பது மனதிற்கு இதமாக இருந்தது . மருமகள் மழலையில் ஏதேதோ கதைத்துக்கொண்டு என்னுடன் தளிர்நடையில் வந்ததால் எனது நடைவேகம் குறைந்தது . நான் மழைகாலத்தில் நீச்சலடித்து விழையாடிய கோயில் கேணி என்னைப் பாத்துச் சிரித்தது. கேணியடியும் காலத்தின் கோலத்தால் ஓரளவு வயதாகி இருந்தது . கேணியின் அருகே இருந்த சம்புப்புல் தரவை பரந்து விரிந்திருந்தது . தூரத்தே கைதடிப் பாலம் தெரிந்தது. இந்தத் தரவையால் சிறிது தூரம் நடந்து போனால் கோப்பாய்க் கடல் ( உப்பங்களி ) வரும். கோடைகாலத்தில் உப்பு எடுக்கப் போவோம். இதில் மாரிகாலத்தில் இடுப்பளவிற்கு தண்ணி நிக்கும். கைதடிப்பாலம் தான் எங்கட நீச்சல் இடம். இந்தப் பாலத்தடீல கண் சிவக்கச் சிவக்க நீந்திப்போட்டு , அப்படியே கைதடிச் சந்திக்குப் போய் மலையாளத்தான்ரை கடைல போய் மாசால் தோசையும் பிளேன் ரீயும் குடிக்கிறது அப்ப எங்களுக்கு உலகமகா திறில். தூரத்தே மாடுகள் புல்லு மேய்ந்து கொண்டிருந்தன . பக்கத்தே நின்ற இலுப்பை மரத்தில் அணில்களும் , குருவிகளும் , சத்தத்தில் போட்டி போட்டன . கோயிலில் பூசை முடிந்து , கோயில் வளாகம் அமைதியாக இருந்தது . கண்ணை மூடிப் பிள்ளையாரைக் கும்பிட்டேன் . என்னைப் பார்த்து மருமகளும் கும்பிடுவது போல் பாவனை செய்தாள் . எனக்குச் சிரிப்பாக வந்தது . நானும் , தங்கைச்சியும் சிறுவயதில பஞ்சாமிர்தம் வாங்க இதில நிண்டு சண்டைபிடிச்சது ஞாபகம் வந்தது . ஐய்யரும் கூட கும்பிடிற பிள்ளையளுக்குக் கனக்க பஞ்ஞாமிர்தம் குடுப்பர் . தங்கைச்சியும் இதைசாட்டிக் கொஞ்சம் கூடக் கும்பிடுவள் . கோயிலை விட்டு வெளியேறி வந்து கேணிக் கட்டில் வந்து அமர்ந்தேன் . பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்பைக்கற்ரினுள் இருந்து ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ர வைத்தேன் . சோழகம் வரவதற்கு அறிகுறியாக காத்து உரப்பாக வீசியது . சிறு வயதில் பட்டம் விடுவதும் எங்கடை பிரதான பொழுது போக்கு . எட்டுமூலை , கொக்கு , வட்டம் , சதுரம் , எண்டு அண்ணை விதம்விமாகக் பட்டம் கட்டுவார். நாங்கள் அவருக்கு உதவியளர்கள் மட்டுமே . மட்டுத்தாள் பேப்பராலைதான் பட்டத்தை ஒட்டுவம் . பின்னேரத்தில விண் பூட்டி , அதின்ர சத்தத்தோட பட்டங்கள் இந்த தரவைவேல அணிவகுக்கும் . இதுக்குள்ள மற்றவ எங்கடை பட்டங்களை அறுக்கவும் வருவினம் . அதில எங்களுக்கை அடிபாடும் வரும் . நாங்கள் அண்ணைக்குப் பின்னால நிண்டு கொண்டு காய்கூய் எண்டு சத்தம் போடுவம் . நேரம் 11 ஐத் தாண்டி இருந்தது . ஒழுங்கையால் ஒரு நடுத்தர வயது பெண்ணும் இரு இழம் பெண்களும் கேணியடியை நோக்கி வந்தார்கள் . கிட்ட வர அவர்களை உற்றுப்பார்த்தேன் . எங்கையோ பாத்தமாதிரி இருக்கே ? அவர்கள் கிட்ட வர எனது பார்வையால் , அவர்களது நடை தயங்கியது . எனக்குப் பொறி தட்டியது அவளேதான் சின்ன வயதில் எனக்கு கடிதம் தந்தவள் . எனது நண்பனின் தங்கைச்சி பாமினி. ஒரு புன்சிரிப்புடன்,

" நீங்கள் குமரன்ர தங்கைச்சி பாமினி தானே ?"

"ஓம் ". 

"நீங்கள்.................. "?

எண்டு இழுத்தாள்.

" என்னைத் தெரியேலையோ ? வடிவாய் யோசியுங்கோ . "ஓ.......... லோசினயக்கான்ர மகன் கண்ணன் தானே". "என்ரகடவுளே எப்ப பிரான்ஸ்சால வந்தனிங்கள் " ?

" இண்டைக்கு தான் இங்கை வந்தனான் ".

" எப்பிடி பாமினி சுகங்கள் "?

" ஏதோ இருக்கிறம் ".

" நீங்கள் வன்னீல இருந்ததாய் தங்கைச்சி சொன்னாள் ".

" ஓ........... இப்பதான் அல்லோலகல்லோப்பட்டு இங்கை வந்தம் ".

" இப்ப அம்மம்மான்ர காணிக்குள்ள இருக்கறம்".

அவளின் முகம் மாறி இருந்தது,

" குமரன் என்ன செய்யிறான்"?

" உங்களுக்குத் தெரியாதே ? அவர் மாவீரனா போட்டார் , புதுக்குடியிரப்புச் சண்ண்டைல நடந்தது ".

"என்ன...........?"

அவளின் கண்கள் குளமாகின.

" அப்ப உங்கடை அவர் "?

" இடப்பெயர்வில எங்கை எண்டேதெரியாது , என்ர பிள்ளையழும் நானும் தப்பனது அருந்தப்பு. இதால அம்மா மனம் பேதலிச்சுப் போனா "

" பாமினி அங்கத்தையான் நிலமையை சொல்லேலுமே"?

" இல்லைக் கண்ணன் நான் மறக்கப் பாக்கிறன்". அவளின் குரல் கரகரத்தது ,

"நீங்கள போய் சாப்பிடுங்கோ வெய்யிலுக்கை நிக்கவேண்டாம்".

கனத்த மனதுடன் வீட்டுக்கு மருமகளுடன் வீட்டை வந்தேன். அண்ணை வேலையால் வந்திருந்தார் . என்னைக் கண்டதும் கண்கலங்கயபடியே கட்டிப்பிடித்தார் .எல்லோரும் சாப்பட மேசையில் இருந்தோம் . தங்கைச்சி சமைத்த சாப்பாட்டைப் பார்த்து அதிர்ந்து விட்டேன் .

தொடரும்

Thursday, August 11, 2011

நெருடிய நெருஞ்சி 14


கொண்டக்ரர் எங்களுக்குக் கிட்ட வந்தார்.

" தம்பி எங்கை போகவேணும்?"

" கோப்பாய் தபால்பெட்டியடிக்கு ரிக்கற் குடுங்கோ". என்னை வினோதமாகப் பார்த்தார் கொண்டக்ரர். "தபால்பெட்டியடியோ?"

" ஓம் பூதர்மடம் கழியவாற நிறுத்தம்".

"அங்கை தபால் பெட்டி ஒண்டும் இல்லையே",

அவரின் வாயில் நமுட்டுச் சிரிப்புத் தெரிந்தது.

"இல்லையண்ணை அதுக்குப்பேர் தபால்பெட்டியடி".

பஸ் ஒரு உறுமலுடன் பஸ்ராண்ட்டில் இருந்து புறப்பட்டது. பஸ்ராண்டிலிருந்து முதலாம் கட்டை சந்திவரை பஸ் மெதுவாகவே சென்றது. வீதி அவ்வளவு சின்னதாக இருந்தது. இரண்டுபக்கமும் காயப்பட்ட சிகிச்சை அளிக்காத கட்டிடங்களே காணப்பட்டன. ஒரு சோதனை சாவடி வந்தது. பஸ் வழக்கம்போல வேகத்தைக் குறைத்தது. ஒரு சிப்பாய் இரவுப் பணி முடிந்து ஏறிக்கொண்டான். எனது மனமோ இதில் லயிக்கவில்லை கோப்பாயைச் சுற்றியே வட்டமிட்டது. எனது மன ஓட்டத்திற்கு பஸ் ஓட்டம் குறைவாகவே இருந்தது. முதலாம் கட்டைச் சந்தி தாண்டியதும் பஸ் தனது வேகத்தைக் கூட்டியது. பயணிகளை ஏற்ற பஸ் தன்னை கண்ட இடத்தில் எல்லாம் நிறுத்தி ஏற்றிக்கொண்டது. பயணிகளைக் கவர இப்பட ஒரு திட்டம் என்று கொண்டக்ரர் சொன்னார். எனக்கு எரிச்சலாக வந்தது. ஒழுங்கு முறைக்கும் இவர்களுக்கும் வெகுதூரமோ? எனக்கு இதனால் பதட்டமாக இருந்தது. மனைவி தங்கையின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தா. அவாக்கு இந்தப் பயணம் பழகியது. எனக்குத் தானே எல்லாம் புதிதாக இருந்தன. பஸ் மந்திகைச் சந்தியையும் தாண்டி வேகமெடுத்தது. வீதியின் இரண்டு பக்கமும் ஏழ்மையும் பணமும் மாறிமாறி வந்தன. எமது இரக்ககுணத்தை எப்படி சொந்த ரத்தங்கள் வளப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை, இரண்டு பக்கமும் வந்த ஒரு சில வீடுகள் கட்டியம் கூறின. எனக்கு மனம் கனத்தது. இதில் யார் பேயர்கள்? சொப்பிங் பையுடன் புலம் பெயர்ந்த நாங்களா? அல்லது எமது மனவலிகளை உணர்ந்தும் உணராமல் எம்முடன் கூடப்பிறந்த உறவுகளா? இதிலேயே இரண்டு பகுதிக்குமான இடைவெளி ஆரம்பமாகிவிட்டதா? எனது மனம்பெரிய போராட்டத்தையே நடத்தியது. இந்தப் பாழாய்ப் போன பணம் எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிடுமா? குடிமனைகள் குறைந்து தூரத்தே வல்லைவெளி வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. பஸ் ட்றைவர் ஒருகையை ஸ்ரெயறிங்கிலும் மற்றக் கையை கியறிலுமாக பஸ்சை லாவகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். பஸ் இப்போழுது பயணிகளால் நிரம்பியிருந்தது. வல்லைவெளி அண்மித்து விட்டிருந்தது சேற்று மணமும் உவர் காற்றும் மூக்கில் அடித்தன . காற்றை ஆழமாக உள்ளே இழுத்து விட்டேன், எனது தாய் மண்ணின் காற்று அல்லவா? வீதியின் இரண்டுபக்கமும் திருத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பல சாதனைகளையும் வெற்றிகளையும் கண்ட வெளி. எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த வெளி. இன்று, அன்னியன் பிடியில் பொலிவிழந்து நின்ற காட்சி என்னை விசும்பச்செய்து. முகத்தை மறைக்க சூரியக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டேன். தூரத்தே வெண்மையாக உப்புப் படிந்தும், சில இடங்களில் இறால் வளர்க்கவும், தடுப்புகள் கட்டியிருந்தார்கள். வீதியின் ஒருபுறம் செங்கால் நாரைகள் ஒற்ரைக்காலில் உறுமீன் வரும் வரைக்கும் மோனத்தவம் செய்து கொண்டிருந்தன. எங்கள் நிலமையும் இப்படித்தானோ??????? பஸ்சின் இரைச்சலால் அவைகள் தவங்கலைந்து வானில் எம்பிப் பாய்ந்தன. காலை வேளை இவைகளைப் பார்த்தது மனம் மீண்டும் பழைய உற்சாக நிலைக்கு வந்தது. பஸ் இப்பொழுது நெல்லியடி சென்றல் கல்லூரியை தாண்டி வேகமெடுத்தது. சிங்கத்தின் நாக்கை இழுத்துப்போட்டு அறுத்த இடமல்லவா இந்த இடம். சிங்கம் மட்டுமா முழிபிதுங்கியது? அதன் அடிபொடிகளுக்கும் தானே வயிற்றால் போனது. எமது போர்மரபினை மாற்றியமைத்த இடமல்லவா இந்த இடம். மில்லரின் சிலை உடைத்தெறியப்பட்டிருந்தது. உங்களால் மில்லரின் சிலையை மட்டும் தான் உடைக்கமுடியும் . எங்கள் மனதில் இருந்த அவனின் சிலையை உடைக்கமுடிந்ததா? பஸ் அச்சுவேலியையும் கடந்து சிறிய விவசாயக் கிராமங்களினூடாக வேகமெடுத்தது. நேரம் 8 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் செம்மையான மண்ணை , யாழின் மன்னர்களான தோட்டக்காறர்கள் பச்சையாக்கிக் கொண்டிருந்தார்கள். புகையிலையும், மிளகாயும், வாழையும், போட்டிபோட்டுக் கொண்டு மதாளித்து நின்றன. அவைக்குத் தெளித்த மலத்தியனின் நெடி மூக்கைத் தாக்கியது. சில இடங்களில் மாடுகளையும் ஆடுகளையும் பட்டி கட்டி இருந்தார்கள். இன்றைய காலத்திலும் இயற்கை முறையை இந்த மைந்தர்கள் விடவில்லை. பஸ் சிறுப்பிட்டி புத்தூரையும் கடந்து முன்னேறியது. இரண்டு பக்கமும் வாழைத்தோட்டங்கள் நிரைகட்டி நின்றன. எத்தனை தடைகள் இளப்புகள் வந்தாலும் எமது உழைப்பை உங்களால் தடைசெய்யமுடியாது என்று சொல்லாமல் சொல்லி நின்றன சிறுதோட்டப் பயிர்கள். பஸ் நீர்வேலிக்கந்தசுவாமி கோவிலை நெருங்கியது. எனக்குப் பதட்டமும் கூடவே நெருக்கியது. இன்னும் ஓரிரு நிறுத்தங்கள் கழிய வீடு வந்துவிடும், அழுகையும் வியர்வையும் முகத்தில் போட்டி போட்டன. கைத்துவாயால் முகத்தை அழுத்தத் துடைத்தேன். வியர்வை துடைத்தே துவாய் ஊத்தையாக இருந்தது. அதைப்பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. பஸ்சின் இடதுபக்கத்தால் கோப்பாய் சம்புப்புல் தரவை ஓடிவந்து என்னை நலமா என்று கேட்டது. சூரியக்கண்ணாடி எனது முகமாற்றத்தை வெளியில் காட்டவில்லை. நேரம் 8.15 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ் வில்லுமதவடியை நெருங்கியது. இந்த இடம் என்னால் மறக்கமுடியாதது, சிறுவயதில் 7ஆம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தபொழுது நடந்த முதல் அரசியல் படுகொலை இங்கேதான் ஈனப்பிறவிகளால் அரங்கேறியது. 77 பொதுத்தேர்தல் நடந்த காலகட்டமது இளைஞர்பேரவையும், தமிழர்விடுதலைக்கூட்டணியும் தேன்னிலவு கொண்டாடிய நேரம். கோப்பாய் தொகுதியில் போட்டியிட்ட கதிரவேற்பிள்ளைக்கு, இறுதிப் பிரச்சாரங்களை தேர்தலுக்கு முதல் நாள் முடித்து விட்டு வந்த பரமேஸ்வரனை இலங்கையின் பொலிஸ் நாய்கள் கைது செய்து இதே இடத்தில் சுட்டு வீசிஎறிந்தது. இதை இன்ஸ்பெக்டர் பத்மநாதனே முன்நின்று நடத்தினார். பின்பு அவர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் படுகொலைசெய்யப்பட்டார். அடுத்தநாள் காலை மரண ஓலமாக கோப்பாய்க்கு விடியல் விடிந்தது. அந்தநேரத்தில் ஒரு கொலை என்பது பரபரப்புச் சரித்திரம். எனது அறியா வயதிலும் வயல்வெளிக்கால், ஓடிவந்து இதேபோல் ஒரு காலைப்பொழுதில் அவரது உடலத்தைப் பார்த்தேன். அவர் விழுந்து கடந்த நிலை இப்போதும் கண்ணுக்குள் நிழலாடியது. எனது முகம் பலவித உணர்சிக் கலவையில் மூழ்கிக் காணப்பட்டது. பஸ் தபால்பெட்டியடியில் எங்களை இறக்கியது. கொண்டுவந்த பயணப் பொதிகளை சரிபார்த்தவாறே ஒழுங்கை வாசலில் நின்றோம்.

தொடரும்


Monday, August 1, 2011

நெருடிய நெருஞ்சி 13


ஒட்டோ நின்ற சத்தத்தைக் கேட்டதும் பெறாமக்கள் துள்ளிக்குதித்து ஓடி வந்தார்கள். அங்கிள் என்று கட்டிப்பிடித்துத்  தொங்கினார்கள். அவர்களது "பம்மல்" ஏன் என்று தெரிந்தாலும் அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தேன். ஒழுங்கையின் இரண்டுபக்கமும் எங்கள் வீடு இருந்தது. என்னைக் கண்ட சந்தோசத்தில் மாமாவும் அன்ரியும் கதைகாது இருந்தார்கள். நானும் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டாது அவர்களுடன் இயல்பாகவே பழகினேன். இவர்கள் இருவரும் என்னை பாதித்த மனிதர்கள். எனது மனைவிக்கு 3 சகோதரிகளும் 1 சகோதரனும் இருந்தர்கள். ஆனால், இவர்கள் இவர்களது சிறுவயதில் தந்தையை இனக்கலவரத்தில் பறிகொடுத்தார்கள். சகோதரன் நாடு காக்கப் போய்விட்டார். தகப்பன் இல்லாத பிள்ளைகளை இன்றுவரை தாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் பேணிப்பாதுகாத்தவர்கள் தான், நான் முதலே சொன்ன மாமாவும் அன்ரியும். இப்படியான மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு அவர்களது வடமராட்சி வட்டாரப் பேச்சு சில சொற்கள் விளங்கவில்லை, மனைவியிடம் தனிய கேட்கவேண்டியிருந்தது. உதாரணமாக நெம்பல், தகடுகுடுத்தல், கசளி குடுத்தல், என்பன சுவாரசியமானவை. பின்பு அவர்களிடம் அவர்களது பாணியிலேயே கதைத்தேன். மாமி எனது அம்மாவின் உயிர்பிரியும் போது தான் அம்மாவிடம் கதைத்தவற்றை சொல்லத் தொடங்கினா. கலங்கிய எனது கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பி வீட்டு வளவுகளை பார்க்க பெறாமக்களுடன் போனேன். மனைவி எனது அம்மாவைப் பற்றி அவருடன் கதைத்து உள்ள கவலையைக் கூட்டவேண்டாம் என்று தாயிடம் சொல்வது எனது காதுகளில் விழுந்தது. வீட்டு வளவில் தென்னைகளும், கமுகமரங்களும், மாதுளை மரங்களும் நிறைந்து இருந்தன. வெய்யிலின் அகோரத்திற்கு அவற்றின் நிழல் இதமாக இருந்தன. கமுகுவிலும், மாதுளை மரத்திலும் அணில்பிள்ளைகள் துள்ளிளையாடின. வீட்டின் அருகே சமைக்க தென்னை ஓலையால் வேய்ந்து மால் கட்டியிருந்தார்கள். எனக்கு மாலைப் பர்க்கப் புதினமாக இருந்தது. மாலின் உள்ளே மட்டுச்சாணகத்தால் மெழுகியிருந்தார்கள். மூக்கை அரிக்கின்ற அமில நெடி இல்லாத குளர்சியைத் தரும் இயற்கைக் கிரிமிநாசினி. சிறுவயதில் கோண்டாவிலில் அப்பாச்சியிடம் போகும்பொழுது பார்த்ததிற்குப் பிறகு இப்போழுது தான் மாலைப் பார்த்ததால் எனக்குப் பெரிய புழுகமாக இருந்தது. ஆனால் கவலையான விடையம் இந்த மால்களின புழக்கம் இப்பொழுது ஒருசில வீடுகளைத் தவிர இல்லை என்பது மனதை நெருடியது. வீட்டல் இருந்த நாயும் முதல் என்னை எதிரியாகவே பார்தது பின்பு என்னிடம் ஒடி விழையாடியது. வீட்டுக் கிணற்றில் கப்பி கட்டி கயிற்றில் இரண்டு பக்கமும் வாளி கட்டியிருந்தார்கள். கிணற்றில் ஆசை தீர அள்ளி அள்ளிக்  குளித்தேன். கப்பியும் ஆரம்பத்தில் எனக்கு இடைஞ்சலையே தந்தது பின்பு  பழகிவிட்டது. கிணற்றடியில் துலாக்கால் இருந்ததிற்கான அடையளம் இருந்தது. சாப்பிட்டுவிட்டு மத்தியானம் நல்ல நித்தரை அடித்தேன். மனைவி பருத்தித்துறை வடையும் பிளேன் ரீ யும் தந்தா. ரீயைக் குடித்துவிட்டு தங்கைச்சிக்குப் போன் பண்ண தொலைபேசியை எடுத்தேன். நாளை கோப்பாய்க்கு வருவதாகச் சொல்லி விட்டு போனை வைத்தேன். நானும் மச்சானும் வெளிக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தோம். வெய்யில் குறைந்து காத்து வந்தது.

"எங்கை ரெண்டுபேரும் போறியள்"?

" உதிலை பளைய ரவுனுக்குப்போட்டு வாறம்"

" ஏன்"?

"சும்மா இடம் பாக்க".

நமுட்டுச் சிரிப்புடன் மனைவிக்குச் சொன்னேன்.எனது கள்ளச்சிரிப்பைப் புரிந்தவளாக,

" பேந்து உங்கை வைத்தால அடில கிடவுங்கோ செய்யிறன் வேலை".

"ஏனப்பா இந்த எறிசொறி கதையளை நிப்பாட்ட மாட்டீரே"?

"வெள்ளென வாங்கோ".

சரி என்றவாறே இருவரும் ஒழுங்கையால் நடக்கத்தொடங்கினோம். எனது மச்சான் என்னை விட உள்ள ஊரி சந்து பொந்துகள் எல்லாம் தெரிஞ்சு வைத்திருந்தார். அவருக்கு இது இரண்டாது முறை பயணம். ஒரு சில நட்புகளையும் பிடிச்சு வைத்திருந்தார். அவருக்கு பியர் குடிக்க வேணும். எனக்கு சொட்டைத்தீனும் பிளேன்ரீயும் வேணும், பஸ்ராண்டையும் பாக்கவேணும். இருவரும் பல கதைகளை கதைத்துக் கொண்டு பழைய  ரவுணை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். ஒழுங்கையில் ஆடுகள் மேஞ்சு கொண்டு குட்டிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. ஆவோலைப்பிள்ளையார் கோயிலடி தாண்ட ஒரு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பெயர்பலகையுடன் இருந்தது. அதில், "சுப்பர்மடம் சுனாமி மீள்வீடமைப்புத்திட்டம் உதவி யூனிசெப்" என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து சுப்பர்மடம் கரைக்குக் கிட்ட வருகின்றது. அங்கு தானே, அந்தமக்களுக்கு புனர்நிர்மாணம் செய்யேண்டும்? என்ற இயல்பான கேள்வி எழுந்தது. மாமவிடம் கேக்கவேணும் என்று நினைத்தேன். இரண்டு பக்கமும் வீட்டு மதில்களில் மயில்கொன்றை பூக்களும், தேமா, அலரி, குறோட்ன்களால் நிறைந்திருந்தன. நாங்கள் கல்லூரி சந்தியையும், வீ எம் றோட் சந்தியையும், கடந்து வந்த வீதியில் நடந்தோம். அப்பத் தட்டிகளில் அப்பமும் தோசையும் சுட்டு மணம் வீதி எங்கும் பரவியிருந்தது. நான் நின்று  அப்பத்தட்டியை வடிவாகப் பார்த்தேன் .எரியும் நெருப்பையும் தோசைக்கல்லையும் தான் பாக்க முடிந்தது.தோசை சுட்ட "செப்" ஐ பாக்கமுடியவில்லை. எனக்கு அப்பம் சாப்பிடவேணும் போல இருந்தாலும், இன்று றோல்ஸ் உம் பிளேன் ரீ யும் குடிக்க முடிவு செய்தால் மனதை மாற்றிக் கொண்டேன்.

இருவரும் அம்மன் கோயிலடியால் பஸ்ராண்ட் வாசலைத் தொட்டோம்.மாலைவேளையில் பஸ்ராண்டும் கலகலத்தது. மினிபஸ்கள் ஒருபக்கமாகவும், உள்ளூர் இ போ சா பஸ் நடுவாகவும், வெளியூர் செல்லும் பஸ் அருகேயும் நின்றிருந்தன. பயணிகள் வீடு செல்ல அவசரம்காட்டினர் . அந்த இடம் பஸ் கோர்ண் ஒலிகளால் இரைச்சலாக இருந்தது. ராஜன் சைக்கிள் வேக்ஸ் கடை இப்பொழுதும் இருந்தது. பஸ்ராண்டை சுற்றியிருந்த கட்டிடங்களில் சிங்கத்தின் பற்கள் பதிந்திருந்தன. முன்பு இந்த இடங்கள் ஆள்நடமாட்டமற்ற சூனியப் பகுதி. இப்பொழுது தான் திறந்து விட்டுள்ளார்கள். இலங்கை வங்கி கட்டிடத்திற்கு மேல் ராணுவ சிப்பாய் காவல் இருந்தான். பஸ்ராண்டின் முன்பக்கத்து ஒழுங்கை முகப்பில் மச்சானுக்கு தேவையான தவறணை இருந்தது. கடையின் முன்பக்கம் நான் நின்று விடுப்புப் பார்த்தேன். மச்சான் பியர் வாங்க உள்ளே போய் விட்டார். கடையின் முன்னால் குடிமக்களது வேடிக்கை வினோத நிகள்ச்சி நடந்தது . அவர்களின் தூசணம் அனல் பறந்தது. அருகே ஒரு தேநீர் கடை இருந்தது அதற்குள் நான் போக விரும்பவில்லை. மச்சான் வெளியே வந்தார் கையில் இரண்டு கிங்பிக்ஷர் பியர் போத்தலுடன்.

"நல்லாத்தான் உங்கடை ஆக்கள் இங்கை வியாபாரம் செய்யிறாங்கள்" .

சிரித்தவாறே,

" தேத்தண்ணி கடைக்கு போலாமா"?

இருவரும் முனைக்குப் போகும் றோட்டில் மீன்சந்தைக்கு முன்னால் இருந்த ரீ கடைக்குள் உள்ளட்டோம். கடை துப்பரவாக இருந்தது. கண்ணாடி அலுமாரிக்குள் றோல்ஸ், வடை ,கடலை வடை, சூசியம் போண்டா ,என்று வரிசை கட்டி இருந்தன சோட்டைத் தீன்கள். நான் ஒரு பிளேன் ரீயும் ,ரெண்டு றோல்ஸ் உம் எடுத்துக்கொண்டேன். உள்ளே இருக்க வெக்கையாக இருந்ததால் வெளியில் வந்தோம். வெளியே இருட்டத் தொடங்கியது. றோல்ஸ் நல்ல ருசியாக இருந்தது. பாரிஸ் றோல்ஸ்சை நினைத்தேன், இறைச்சியை தேடிப்பிடிக்கவேணும். நேரம் 7 மணியை நெருங்கியது, காசைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் வெளிச்சம் நன்றாக  இருந்தது. கல்லூரி வீதிச்சந்தியைத் தாண்டியதும் ஒழுங்கை ஒரே இருட்டாக இருந்தது. நாங்கள் அதில் குறிப்புப் பர்த்துத் தான் நடக்க வேண்டியிருந்தது. வீட்டு வாசலில் மனைவியும், தங்கைச்சியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். இரவு மனைவி சாப்பாட்டிற்கு சப்பாத்தி சுட்டு வைத்திருந்தா. பலகதைகள் கதைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு படுத்து விட்டோம். மனவி உடனேயே உறங்கி விட்டா, எனக்கு நித்திரை வரமறுத்தது. எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, சேவல் கோழியின் குரலால் எனது நித்திரை குளம்பியது. நேரம் விடிய 4 மணியைக் காட்டியது. நான் மெதுவாக எழுந்து கேற் வாசலுக்கு வந்து சிகரட் ஒன்றைப் பற்றவைத்தேன். பக்கத்திலிருந்த பண்டாரி அம்மன் கோவில் ஒலிபெரிக்கி சுப்பிரபாதத்தை மெதுவான ஒலியில் தவழவிட்டது, மனதிற்கு இதமாக இருந்தது. மேலே ஆகாயத்தில் நடசத்திரங்கள் கண்சிமிட்டின. நான் விடியவே குளித்து விட்டேன் காலை கோப்பியைக் குடித்து விட்டு விடிய 7 மணிபோல கோப்பாய் போகத்தயாரானோம். நானும் மனைவியும், மனைவியின் தங்கைச்சி குடும்பமும் பஸ் ஸ்ராண்டை நோக்கி ஒழுங்கையால் நடக்கத் தொடங்கினோம்.

பஸ்ஸ்ராண்டில் அந்தக்காலை வேளையில் சனம் அதிகம் சேரத்தொடங்கவில்லை. இ. போ . சா 750 பஸ் ஆட்கள் இல்லாமல் வெறும் பஸ்சாக நின்றது. நான் கொண்டக்ரரிடம் "எத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும்" என்று கேட்டேன் அவர் "7.30 வெளிக்கிடும்" என்று சொன்னார் இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன. சிறிது சிறிதாக பஸ்சில் ஆட்கள் சேரத் தொடங்கினார்கள். நான் டறைவருக்குப் பக்கத்தில் இடங்கள் பார்க்க வசதியாக இருந்து கொண்டேன். எங்களை சுமந்து கொண்டு பஸ் புறபடத் தயாரானது.


தொடரும்