Skip to main content

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 13.
ஒட்டோ நின்ற சத்தத்தைக் கேட்டதும் பெறாமக்கள் துள்ளிக்குதித்து ஓடி வந்தார்கள். அங்கிள் என்று கட்டிப்பிடித்துத்  தொங்கினார்கள். அவர்களது "பம்மல்" ஏன் என்று தெரிந்தாலும் அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தேன். ஒழுங்கையின் இரண்டுபக்கமும் எங்கள் வீடு இருந்தது. என்னைக் கண்ட சந்தோசத்தில் மாமாவும் அன்ரியும் கதைகாது இருந்தார்கள். நானும் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டாது அவர்களுடன் இயல்பாகவே பழகினேன். இவர்கள் இருவரும் என்னை பாதித்த மனிதர்கள். எனது மனைவிக்கு 3 சகோதரிகளும் 1 சகோதரனும் இருந்தர்கள். ஆனால், இவர்கள் இவர்களது சிறுவயதில் தந்தையை இனக்கலவரத்தில் பறிகொடுத்தார்கள். சகோதரன் நாடு காக்கப் போய்விட்டார். தகப்பன் இல்லாத பிள்ளைகளை இன்றுவரை தாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் பேணிப்பாதுகாத்தவர்கள் தான், நான் முதலே சொன்ன மாமாவும் அன்ரியும். இப்படியான மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு அவர்களது வடமராட்சி வட்டாரப் பேச்சு சில சொற்கள் விளங்கவில்லை, மனைவியிடம் தனிய கேட்கவேண்டியிருந்தது. உதாரணமாக நெம்பல், தகடுகுடுத்தல், கசளி குடுத்தல், என்பன சுவாரசியமானவை. பின்பு அவர்களிடம் அவர்களது பாணியிலேயே கதைத்தேன். மாமி எனது அம்மாவின் உயிர்பிரியும் போது தான் அம்மாவிடம் கதைத்தவற்றை சொல்லத் தொடங்கினா. கலங்கிய எனது கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பி வீட்டு வளவுகளை பார்க்க பெறாமக்களுடன் போனேன். மனைவி எனது அம்மாவைப் பற்றி அவருடன் கதைத்து உள்ள கவலையைக் கூட்டவேண்டாம் என்று தாயிடம் சொல்வது எனது காதுகளில் விழுந்தது. வீட்டு வளவில் தென்னைகளும், கமுகமரங்களும், மாதுளை மரங்களும் நிறைந்து இருந்தன. வெய்யிலின் அகோரத்திற்கு அவற்றின் நிழல் இதமாக இருந்தன. கமுகுவிலும், மாதுளை மரத்திலும் அணில்பிள்ளைகள் துள்ளிளையாடின. வீட்டின் அருகே சமைக்க தென்னை ஓலையால் வேய்ந்து மால் கட்டியிருந்தார்கள். எனக்கு மாலைப் பர்க்கப் புதினமாக இருந்தது. மாலின் உள்ளே மட்டுச்சாணகத்தால் மெழுகியிருந்தார்கள். மூக்கை அரிக்கின்ற அமில நெடி இல்லாத குளர்சியைத் தரும் இயற்கைக் கிரிமிநாசினி. சிறுவயதில் கோண்டாவிலில் அப்பாச்சியிடம் போகும்பொழுது பார்த்ததிற்குப் பிறகு இப்போழுது தான் மாலைப் பார்த்ததால் எனக்குப் பெரிய புழுகமாக இருந்தது. ஆனால் கவலையான விடையம் இந்த மால்களின புழக்கம் இப்பொழுது ஒருசில வீடுகளைத் தவிர இல்லை என்பது மனதை நெருடியது. வீட்டல் இருந்த நாயும் முதல் என்னை எதிரியாகவே பார்தது பின்பு என்னிடம் ஒடி விழையாடியது. வீட்டுக் கிணற்றில் கப்பி கட்டி கயிற்றில் இரண்டு பக்கமும் வாளி கட்டியிருந்தார்கள். கிணற்றில் ஆசை தீர அள்ளி அள்ளிக்  குளித்தேன். கப்பியும் ஆரம்பத்தில் எனக்கு இடைஞ்சலையே தந்தது பின்பு  பழகிவிட்டது. கிணற்றடியில் துலாக்கால் இருந்ததிற்கான அடையளம் இருந்தது. சாப்பிட்டுவிட்டு மத்தியானம் நல்ல நித்தரை அடித்தேன். மனைவி பருத்தித்துறை வடையும் பிளேன் ரீ யும் தந்தா. ரீயைக் குடித்துவிட்டு தங்கைச்சிக்குப் போன் பண்ண தொலைபேசியை எடுத்தேன். நாளை கோப்பாய்க்கு வருவதாகச் சொல்லி விட்டு போனை வைத்தேன். நானும் மச்சானும் வெளிக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தோம். வெய்யில் குறைந்து காத்து வந்தது.

"எங்கை ரெண்டுபேரும் போறியள்"?

" உதிலை பளைய ரவுனுக்குப்போட்டு வாறம்"

" ஏன்"?

"சும்மா இடம் பாக்க".

நமுட்டுச் சிரிப்புடன் மனைவிக்குச் சொன்னேன்.எனது கள்ளச்சிரிப்பைப் புரிந்தவளாக,

" பேந்து உங்கை வைத்தால அடில கிடவுங்கோ செய்யிறன் வேலை".

"ஏனப்பா இந்த எறிசொறி கதையளை நிப்பாட்ட மாட்டீரே"?

"வெள்ளென வாங்கோ".

சரி என்றவாறே இருவரும் ஒழுங்கையால் நடக்கத்தொடங்கினோம். எனது மச்சான் என்னை விட உள்ள ஊரி சந்து பொந்துகள் எல்லாம் தெரிஞ்சு வைத்திருந்தார். அவருக்கு இது இரண்டாது முறை பயணம். ஒரு சில நட்புகளையும் பிடிச்சு வைத்திருந்தார். அவருக்கு பியர் குடிக்க வேணும். எனக்கு சொட்டைத்தீனும் பிளேன்ரீயும் வேணும், பஸ்ராண்டையும் பாக்கவேணும். இருவரும் பல கதைகளை கதைத்துக் கொண்டு பழைய  ரவுணை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். ஒழுங்கையில் ஆடுகள் மேஞ்சு கொண்டு குட்டிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. ஆவோலைப்பிள்ளையார் கோயிலடி தாண்ட ஒரு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பெயர்பலகையுடன் இருந்தது. அதில், "சுப்பர்மடம் சுனாமி மீள்வீடமைப்புத்திட்டம் உதவி யூனிசெப்" என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து சுப்பர்மடம் கரைக்குக் கிட்ட வருகின்றது. அங்கு தானே, அந்தமக்களுக்கு புனர்நிர்மாணம் செய்யேண்டும்? என்ற இயல்பான கேள்வி எழுந்தது. மாமவிடம் கேக்கவேணும் என்று நினைத்தேன். இரண்டு பக்கமும் வீட்டு மதில்களில் மயில்கொன்றை பூக்களும், தேமா, அலரி, குறோட்ன்களால் நிறைந்திருந்தன. நாங்கள் கல்லூரி சந்தியையும், வீ எம் றோட் சந்தியையும், கடந்து வந்த வீதியில் நடந்தோம். அப்பத் தட்டிகளில் அப்பமும் தோசையும் சுட்டு மணம் வீதி எங்கும் பரவியிருந்தது. நான் நின்று  அப்பத்தட்டியை வடிவாகப் பார்த்தேன் .எரியும் நெருப்பையும் தோசைக்கல்லையும் தான் பாக்க முடிந்தது.தோசை சுட்ட "செப்" ஐ பாக்கமுடியவில்லை. எனக்கு அப்பம் சாப்பிடவேணும் போல இருந்தாலும், இன்று றோல்ஸ் உம் பிளேன் ரீ யும் குடிக்க முடிவு செய்தால் மனதை மாற்றிக் கொண்டேன்.

இருவரும் அம்மன் கோயிலடியால் பஸ்ராண்ட் வாசலைத் தொட்டோம்.மாலைவேளையில் பஸ்ராண்டும் கலகலத்தது. மினிபஸ்கள் ஒருபக்கமாகவும், உள்ளூர் இ போ சா பஸ் நடுவாகவும், வெளியூர் செல்லும் பஸ் அருகேயும் நின்றிருந்தன. பயணிகள் வீடு செல்ல அவசரம்காட்டினர் . அந்த இடம் பஸ் கோர்ண் ஒலிகளால் இரைச்சலாக இருந்தது. ராஜன் சைக்கிள் வேக்ஸ் கடை இப்பொழுதும் இருந்தது. பஸ்ராண்டை சுற்றியிருந்த கட்டிடங்களில் சிங்கத்தின் பற்கள் பதிந்திருந்தன. முன்பு இந்த இடங்கள் ஆள்நடமாட்டமற்ற சூனியப் பகுதி. இப்பொழுது தான் திறந்து விட்டுள்ளார்கள். இலங்கை வங்கி கட்டிடத்திற்கு மேல் ராணுவ சிப்பாய் காவல் இருந்தான். பஸ்ராண்டின் முன்பக்கத்து ஒழுங்கை முகப்பில் மச்சானுக்கு தேவையான தவறணை இருந்தது. கடையின் முன்பக்கம் நான் நின்று விடுப்புப் பார்த்தேன். மச்சான் பியர் வாங்க உள்ளே போய் விட்டார். கடையின் முன்னால் குடிமக்களது வேடிக்கை வினோத நிகள்ச்சி நடந்தது . அவர்களின் தூசணம் அனல் பறந்தது. அருகே ஒரு தேநீர் கடை இருந்தது அதற்குள் நான் போக விரும்பவில்லை. மச்சான் வெளியே வந்தார் கையில் இரண்டு கிங்பிக்ஷர் பியர் போத்தலுடன்.

"நல்லாத்தான் உங்கடை ஆக்கள் இங்கை வியாபாரம் செய்யிறாங்கள்" .

சிரித்தவாறே,

" தேத்தண்ணி கடைக்கு போலாமா"?

இருவரும் முனைக்குப் போகும் றோட்டில் மீன்சந்தைக்கு முன்னால் இருந்த ரீ கடைக்குள் உள்ளட்டோம். கடை துப்பரவாக இருந்தது. கண்ணாடி அலுமாரிக்குள் றோல்ஸ், வடை ,கடலை வடை, சூசியம் போண்டா ,என்று வரிசை கட்டி இருந்தன சோட்டைத் தீன்கள். நான் ஒரு பிளேன் ரீயும் ,ரெண்டு றோல்ஸ் உம் எடுத்துக்கொண்டேன். உள்ளே இருக்க வெக்கையாக இருந்ததால் வெளியில் வந்தோம். வெளியே இருட்டத் தொடங்கியது. றோல்ஸ் நல்ல ருசியாக இருந்தது. பாரிஸ் றோல்ஸ்சை நினைத்தேன், இறைச்சியை தேடிப்பிடிக்கவேணும். நேரம் 7 மணியை நெருங்கியது, காசைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் வெளிச்சம் நன்றாக  இருந்தது. கல்லூரி வீதிச்சந்தியைத் தாண்டியதும் ஒழுங்கை ஒரே இருட்டாக இருந்தது. நாங்கள் அதில் குறிப்புப் பர்த்துத் தான் நடக்க வேண்டியிருந்தது. வீட்டு வாசலில் மனைவியும், தங்கைச்சியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். இரவு மனைவி சாப்பாட்டிற்கு சப்பாத்தி சுட்டு வைத்திருந்தா. பலகதைகள் கதைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு படுத்து விட்டோம். மனவி உடனேயே உறங்கி விட்டா, எனக்கு நித்திரை வரமறுத்தது. எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, சேவல் கோழியின் குரலால் எனது நித்திரை குளம்பியது. நேரம் விடிய 4 மணியைக் காட்டியது. நான் மெதுவாக எழுந்து கேற் வாசலுக்கு வந்து சிகரட் ஒன்றைப் பற்றவைத்தேன். பக்கத்திலிருந்த பண்டாரி அம்மன் கோவில் ஒலிபெரிக்கி சுப்பிரபாதத்தை மெதுவான ஒலியில் தவழவிட்டது, மனதிற்கு இதமாக இருந்தது. மேலே ஆகாயத்தில் நடசத்திரங்கள் கண்சிமிட்டின. நான் விடியவே குளித்து விட்டேன் காலை கோப்பியைக் குடித்து விட்டு விடிய 7 மணிபோல கோப்பாய் போகத்தயாரானோம். நானும் மனைவியும், மனைவியின் தங்கைச்சி குடும்பமும் பஸ் ஸ்ராண்டை நோக்கி ஒழுங்கையால் நடக்கத் தொடங்கினோம்.

பஸ்ஸ்ராண்டில் அந்தக்காலை வேளையில் சனம் அதிகம் சேரத்தொடங்கவில்லை. இ. போ . சா 750 பஸ் ஆட்கள் இல்லாமல் வெறும் பஸ்சாக நின்றது. நான் கொண்டக்ரரிடம் "எத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும்" என்று கேட்டேன் அவர் "7.30 வெளிக்கிடும்" என்று சொன்னார் இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன. சிறிது சிறிதாக பஸ்சில் ஆட்கள் சேரத் தொடங்கினார்கள். நான் டறைவருக்குப் பக்கத்தில் இடங்கள் பார்க்க வசதியாக இருந்து கொண்டேன். எங்களை சுமந்து கொண்டு பஸ் புறபடத் தயாரானது.
கோமகன் 

தொடரும்Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…