Wednesday, September 28, 2011

நெருடிய நெருஞ்சி 19

என் முன்னே முனை அகலப் பரந்து விரிந்து இருந்தது . தூரத்தே கட்டு மரங்கள் வரிசை கட்டி சென்றன . சூரியனுக்கும் வானத்திற்கும் நடந்த முத்தமிடல் போட்டியில் , வானத்தின் முகம் நாணத்தால் சிவந்தது . அதன் எதிர்வினை கடலிலும் தெரிந்தது . ஒருபுறம் ஆண்கடலும் , மறுபுறம் பெண்கடலுமாக முனை சரிசமனாகப்பிரித்து வினோதம் காட்டிக்கொண்டிருந்தது . மெதுவாக வலதுபுறம் பெண்கடலைத்திரும்பிப் பாரத்தேன் . அங்கே வெண்மணல் பரவி அதில் அலைகள் மூசி அடித்தன . அருகே மண்மூட்டைகள் அடுக்கி பெரிய பாதுகாப்பு அரண்களில் பொடிகாமியள் விறைப்புடன் இருந்தார்கள் . இங்கிருப்பவர்கள் அங்காலை போகமுடியாது . போவதானால் சுற்ரி மீன்சந்தையடியால் தான் மற்ரப்பக்கத்திற்குப் போகமுடியும் . நான் நின்றபகுதியில் கற்பாறைகள் இருந்ததால் அலைகள் தவழ்ந்தே வந்தன . மெதடிஸ் கல்லூரி அமைதி காத்தது . ஏனோ என்மனம் கொதிகலனாகப் புகைந்தது . எவ்வளவு கதைகளைத் தன்னுள் வைத்து அமசடக்கியாக இருந்தது அந்தக்கடல் . எங்களை தாலாட்டி விளையாடிய இந்தக்கடலே , எங்களையும் விழுங்கியது தான் வேதனை . கடைசியில் எங்களுக்கு அது வழியே விடாமல் நந்தி மாதிரியுமல்வா குறுக்கே நின்றது . ஆனால் , உன்னை மாதிரித்தானே இன்னும் ஒரு கடல் மோனஸ் க்கும் அவன் தோழர்கழுக்கும் ஆபத்து நேரத்தில் இரண்டாகப் பிரிந்து அவர்கள் தப்ப வழி செய்தது . அதன் கருணை கூடவா உனக்கு இல்லை ? எனது மனம் முனைக் கடலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது .

மேற்கே சூரியனை மெதுமெதுவாகக் கடல் விழுங்கிக் கொண்டிருந்தது . நாங்கள் மறபக்கம் போவதற்காக , மீண்டும் கல்லூரி வீதி வழியாக பஸ்ராண்டுக்குச் சென்று , மீன் சந்தையின் ஊடாக மறுபக்கமான பெண்கடலை அடைந்தோம் . அங்கு மீனவர்களின் வாடிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக கரைகட்டி நின்றன . ஒரு சிலர் பிய்ந்த வலைகளைக் கோர்த்துப் பின்னிக்கொண்டிருந்தார்கள் . கரையிலே படகுகள் வண்ண வண்ண நிறங்களில் கையிற்ரால் கட்டி இருந்தன . அவைகழும் அலைகளின் அதிர்வுக்கு ஏற்ப நடனமாடின . பிள்ளைகள் தண்ணியைக் கண்ட புழுகத்தில் தண்ணிக்குள் இறங்கி விளையாடினார்கள் . நான் கடல்நீரில் காலை வைத்து இறங்கியபொழுது , தண்ணியின் அடியில் இருந்த சின்ன ரக மீன்களும் , சிப்பிகளும் , நண்டுகளும் , சங்குகளும் ஓடிப் பாய்ந்து போக்குக் காட்டின . அலையின் இழுவையால் எனதுகாலின் கீழ் இருந்த மண் என்னை நிலைதடுமாற வைத்தது . நான் ஒரு படகில் ஏறி வசதியாக இருந்து கொண்டே கடலை உத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் . என் மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது . என் மனதில் இனம்புரியாத வலி எங்கும் பரவியது . மற்ரயவர்களுக்கு சந்தோசமாக இருக்கன்ற இந்த முனைக் கடல் , எனக்குமட்டும் ஏன் வித்தியாசமாகத் தெரிகின்றது ? சிலவேளை எனது பார்வையில் தான் கோளாறோ ? என்று குளம்பிக்கொண்டு இருந்தேன் . எனது மன ஓட்டத்தை மனைவியின் குரல் கலைத்தது ,

" போவமே கண்ணன் ".

" ஏன் "?

" இருட்டீட்டுது , இனி இங்கை நிக்கேலாது ".

நேரத்தைப் பார்த்தேன் 6 மணியைக் கடந்து இருந்தது . கடலில் கருமை பரவி , தூரத்தே வெளிச்ச வீட்டில் இருந்து விட்டு விட்டு வெளிச்சப்பொட்டு சுழண்டடித்தது .

"சரி போவம்" .

என்று அரைமனதுடன் படகை விட்டு எழும்பினேன் . வாடி வீடுகளில் அரிக்கன் லாம்புகள் மினுக் மினுக் என்று எரிந்தன . அங்கிருந்து தீயலின் வாசம் மூக்கைத் தடவியது . நாங்கள் கோட்டு வாசல் வீதியால் பஸ்ராண்டை நோக்கி நடந்தோம் . இடையில் கோட்டடி பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் இருந்த வௌவ்வாலுகள் வானத்தை நிறைத்தன . எனக்கு அது பெரிய அதிசயமாக இருந்தது . ஒரு சேர இவ்வளவு வௌவ்வாலுகளை முன்பு நான் கண்டதில்லை . அவை வினோத ஒலிகளை எழுப்பிப் பறந்து கொண்டிருந்தது ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது . நாங்கள் பஸ்ராண்டை அண்மித்து விட்டோம் . மனைவியை அம்மன் கோயலடியில் நிக்கச்சொல்லி விட்டு , நானும் , மச்சானும் கிங்பிக்ஷர் பியர் வாங்கப்போனோம் . பியரை இருவரும் வாங்கிக்கொண்டு மனைவி பிள்ளைகளுடன் அம்மன் கோயில் வீதியில் இறங்கினோம் . அப்பத்தட்டிகளில் வியாபாரம் குறைந்திருந்தது . ஒருவாறு நாங்கள் வீட்டை அடைந்தபொழுது இரவு 7 மணியைத் தாண்டி இருந்தது .


முனைக்குப் போனதால் உடலை விட மனது சோர்த்து போய் இருந்தது . சோர்வைப் போக்குவதிற்கு , கிணத்தடியில் போய் கப்பியால் கிணற்ரில் இருந்து தண்ணியை அள்ளி அள்ளிக் குளித்தேன் . மாமா என்னை வினோதமாகப் பார்த்தார் . குளித்ததால் உடலும் மனதும் புத்துணர்சி பெற்ரன . மாமி போட்டுத் தந்த இஞ்சித் தேத்தண்ணி அந்தநேரம் மனதைக் கிளர்சி அடையச் செய்தது . கேற் வாசலில் நின்றிருந்த மச்சானுடன் சேர்ந்து சிகரட் ஒன்றைப் பற்ர வைத்தேன் . மாலின் நடவடிக்கைகள் கூரையினால் வந்த புகையினூடாகத் தெரிந்தன . ஒழுங்கையில் இருந்த இருட்டால் வானம் தெளிவாகவே தெரிந்தது . அதில் நட்சத்திரங்களின் அணிவகுப்பு எனது மனதைக் கொள்ளைகொண்டது. ஒழுங்கை மிகவும் அமைதியாக இருந்தது . அந்த அமைதியும் நட்சத்திரங்களின் அணிவகுப்பிற்கு அழகு சேர்த்தது . நான் அதில் சொக்கிப்போயிருந்தேன் .

எனது மனைவி கிட்ட வந்து சாப்பிடச் சொன்னா . நாங்கள் எல்லோரும் விறாந்தையிலும் , மாலிலும் உட்கார்ந்தோம் . மாமி அவித்த மரவள்ளிக் கிழங்கும் , பச்சைமிளகாய் சம்பலும் தந்தா . இங்கு மெழுகு பூசிய மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிட்ட எனக்கு , ஊர் மரவள்ளிக்கிளங்கு காணாததை கண்டமாதிரி இருந்தது . ஒருகாலத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கும் , பாணுமே எமது பிரதான உணவாய் இருந்தன . ஆனால் ,அப்போது எல்லோரிடமும் சந்தோசம் இருந்தது . இப்பொழுது எல்லா வசதிகள் வந்தும் சந்தோசத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடவேண்டியதாக உள்ளது . நான் ஒன்றுமே பேசாது நிதானமாக மரவள்ளிக்கிழங்கை ரசித்துச் சாப்பிட்டேன் . ஊர் அடங்கி விட்டது . நானும் , மச்சானும் இருட்டில் கேற்ரில் நின்று கொண்டு சிகரட் அடித்துக் கொண்டிருந்தோம் . இருட்டில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன . நான் அவைகளின் அணிவகுப்பில் சொக்கிப்போயிருந்தேன் . நாங்கள் படுக்கைக்குத் தயாரானோம் . இரவுப்பூச்சிகளின் மெல்லிய ஒலியில் நித்திரை என்னைக் கட்டிப்பிடித்தது . வழக்கம்போலவே பக்கத்தி வீட்டுச்சேவல் என்னை விடிய 5 மணிக்கு எழுப்பி விட்டது . எனது வழமையான ஆயத்தங்களுடன் அந்தக்காலையில் பால் வாங்க மந்திகைச் சந்திக்கு பால் பண்ணைக்கு நடந்தேன் . நான் ஆத்தியடி பிள்ளையார் கோயலடியால் வட இந்து மகளிர் கல்லூரிக்கு நடக்கும்பொழுது , அனேகமான வீடுகளில் எழும்பி வீட்டு வாசலிற்கு தண்ணி தெளித்துக் கொண்டிருந்தார்கள் . தண்ணிபட்டு புழுதி வாசம் மூக்கை நிறைத்தது . அந்தக் காலை வேளையிலேயே வருங்கால அறிஞர்கள் ரியூசனுக்கு சைக்கிள்களில் வரிசை கட்டினார்கள் . எனக்கு எனது பள்ளிப்பருவம் ஞாபகத்திற்கு வந்து ஏக்கப்பெருமூச்சாக வெளிப்பட்டது . நான் முதலாங்கட்டைச் சந்தியை அடைந்து பரித்தித்துறை வீதியில் எனது நடையைக் கூட்டினேன் . சந்தடி குறைந்த வீதியில் வியர்வை ஆறகப் பெருகி ஓட நடந்தது , மனதிற்குப் புத்துணர்சியையும் உற்சாகத்தையும் தந்தது . நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .

என்னைக்கடந்து யாழ்ப்பாணம் வவுனியா இ போ சா பஸ் போனது . தோட்டக்கறர்கள் லான்ட் மாஸ்ரறில் தோட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் . வீதி ஓரத்து சில வீட்டு மதில்களில் பொயிலை காயப்போட்டிருந்தார்கள் . வழியில் சென்றியில் நின்ற குரங்கு ஒன்று " ஆய்பவான் மாத்தயா " என்றது . நான் பதிலுக்கு ஆங்கிலத்தில் காலைவணக்கம் சொன்னேன் . நான் பால்பண்ணைய அடந்தபொழுது , அங்கே பலர் பால் கொடுக்க வருவதும் போவதுமாக இருந்தார்கள் . உடனடிப் பாலின் மணம் அங்கு நிரவியிருந்தது .நான் அதை நுகர்ந்துகொண்டே பாலை வாங்கிக்கொண்டு , மீண்டும் வந்தவழியே விறுவிறுவென்று நடந்தேன் . இப்பொழுது வீதியில் வாகனநடமாட்டம் அதிகமானதால் , வீதியின் ஓரமாகவே நடந்தேன் . இப்பொழுது சூரியன் வெளியே எட்டிப் பாரத்து சூட்டுடன் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் .நான் முதலாம் கட்டைச் சந்தியில் உதயன் பத்திரிகை ஒன்று வாங்கிக்கொண்டேன் . இப்பொழுது இந்து மகளிர் கல்லூரி வீதி பரபரப்பாகியிருந்தது . மாணவிகள் சைக்கிள்களில் அணிவகுத்தார்கள் . நான் வியர்வை ஒழுக ஒழுக நடந்துகொண்டிருந்தேன் . நான் வீட்டை வரும்பொழுது மனைவி கேற் வாசலில் என்னைப் பாத்துக்கொண்டிருந்தா .

" என்ன ?"
என்று பார்வையால் கேட்டேன்,

" இங்கை பிள்ளையள் எழும்பீட்டாங்கள் , இவ்வளவு நேரமும் என்ன செய்தனிங்கள் "?

" நான் நடந்து போய் வாங்கின்னான் ".

" புது இடத்திலை ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை"?

" ம்.......... நல்லதுக்குக் காலமில்லை ". என்று நான் எனக்குள் முணுமுணுத்தேன் .

" அங்கை உங்களை ஆரோ பாக்கவந்திருக்கினம் ".

" ஆர் "?

" போய்பாருங்கோவன் "

இந்தகாலமை நேரத்தில யாராக இருக்கும் என்று எண்ணியவாறே , நான் மாமாவின் வீட்டை நோக்கிப் போனேன் . அங்கு ஒரு நடுத்தரவயதுப் பெண்மணி இருந்தா. நான் போனதும் ,

" இங்கை எங்கட இடத்துக்கு ஆரோ புதாள் வந்திருக்கெண்டு கேள்விப்பட்டன் . அதுதான் பாக்க வந்தனான்".

எனக்கு தலை சுற்ரியது . யாராக இருக்கும் ? மாமா இடைமறித்து ,

"அது தம்பி என்ர ஒண்டவிட்ட தங்கச்சி , உங்களைப் பாக்க வந்தவா ".

என்று எனது குளப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

" ஓ............ நீங்களே அந்த மாமி . உங்களைப்பற்ரி மனிசி சொல்லியிருக்கிறா ".

" அப்பிடியே , உவள் என்ன சொன்னவள்"?

நான் பொதுவாக சிரித்தேன் .

" என்ன இருந்தாலும் நீங்கள் எங்கடை மருமோன். உங்களுக்கு எள்ளுப்பா செஞ்சு கொண்டு வந்தனான்".

என்றவாறே , ஒரு பனை ஒலையால் செய்த

மூடுபெட்டி ஒன்றைத்தந்தா. அந்த மூடுபெட்டி கலர் சாயங்கள் போட்டு நேர்த்தியாக இழைக்கப்பட்டிருந்தது . நான் கனகாலத்திற்குப் பிறகு பார்ததால் , அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன் .

" என்ன தம்பி திருப்பி பாக்கிறியள் "?

" இல்லை , கனகாலத்துக்கு பிறகு பாக்கிறன் ".

"நீங்களோ இந்தப் பெட்டி செய்தது"?

ஓ.............நான் தான் பின்னீன்னான் . நான் உங்களுக்கு ஒண்டு பின்னித் தாறன் . எங்கட மருமோனுக்கு இல்லாததே "?

" நீங்கள் குஞ்சுப்பெட்டி, கொட்டைப்பெட்டி , எல்லாம் பின்னுவியளே "?

நான் அவாவின் வாயைக் கிண்டினேன் .

"தம்பி நீங்கள் ஆசைப்பட்டுடியள் எல்லோ ? நீங்கள் போறதுக்குள்ள நீங்கள் கேட்டது இருக்கும்".

இவர்களது விகற்பமில்லாத கதைகள் என்னை நெகிழ வைத்தன . இவர்கள் தான் இந்த மண்ணின் உயிர்பு மூல நாடிகள் . இவர்கள் கலத்திற்குப் பிறகு நாங்கள் ஓரு ஜிப்சி இனமாக மாறிப்போய்விடுவோமா ????? , மனது வலித்தது . மாமி நீங்கள் இருந்து சாப்பிடவேணும் , நான் குளிச்சுட்டு வாறன் . என்று சொல்லி விட்டடு கிணத்தடிக்குப் போய் கப்பியால் அள்ளி அள்ளிக் குளித்தேன் . எனது வியர்த உடம்பிற்கு குளித்தது நல்ல புத்துணர்சியாக இருந்தது . மனைவி தந்த கோப்பியை குடித்தவாறே உதயனை மேய்ந்தேன் . டக்குவின் கவர்சிகர மாநகரசபை தேர்தல் வாக்குறுதிகள் உதயனில் அலங்கரித்தன . கொம்பு சீவி விட்ட சுயோச்சைகளின் அலைப்பரைகளையும் பாத்து வியந்தேன் . இதில் எனக்குப் படிப்பித்த தின்னவேலியில் ஒரு பிரபல்யமான ரியூட்டறி வைத்திருந்த ஐங்கரநேசனும் குதித்தது எனக்கு தாங்கமுடியாமல் இருந்தது . நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஏழாலைக்கு அண்ணை வீட்டிற்குப் போக வெளிக்கிட்டோம் . நாங்கள் 750 இ போ சா பஸ்சில், யாழ்ப்பாணம் போக பஸ்சினுள் ஏறி இருந்தோம். பஸ் யாழப்பாணத்தை நோக்கி மூசியது . பஸ் கோப்பாயை கடந்து வேகம் எடுத்தது. நான் எனது பார்வயில் சுவாரசியமானேன் . நான் சிறுவயதில் படித்த கிறீஸ்தவகல்லூரியை நெருங்கியது பஸ் .நான் ஆவலுடன் கல்லூரியைப் பார்த்தேன் . அருகே இருந்த சேர்ச் சிறிது தளர்வுற்ருக் காணப்பட்டது . தூரத்தே கல்லூரி மைதானம் தெரிந்தது . சிறுவயதில் எவ்வளவு தரம் இதனால் நடைபயின்றேன் ? ஆனால் இன்று நான் அன்னியனாக............ கண்கள் குளம் கட்டியது . நான் கண்களை வலிந்து மூடிக்கொண்டேன் .


பஸ் முத்திரைச்சந்தியை நெருங்கியிருந்தது . மாமன்னன் சங்கிலி குதிரையில் ஆரோகணித்து அதே முறுக்குடன் நின்றான் . மந்திரிமனையைக் காலம் கற்பழித்திருந்தது . பஸ் இவர்களைத் தாண்டி நல்லூரை எனக்கு விசாலப்படுத்தியது . நல்லைக்கந்தன் அதே பொலிவுடன் இருந்தான் . பஸ் வேகமெடுத்து யாழ்ப்பாணம் பஸ்நிலையத்தில் தன்னை நிலை நிறுத்தியது . நாங்கள் எல்லோரும் இறங்கினோம் . பஸ்நிலயம் புராதன இடம் போல் எனக்குத் தெரிந்தது . நவீனசந்தைக் கட்டிடத் தொகுதி சிதைந்திருந்தாலும், உயிர்புடன் இருந்தது . நாங்கள் கொண்டக்ரரிடம் கேட்டு காங்கேசன்துறை போகும் பஸ்சில் ஏறி இருந்தோம் . பஸ் காங்கேசன்துறை வீதிவழியாக வேகமெடுத்தது . போகும் வழியெங்கும் செம்மண் தோட்டங்கள் பசுமை போர்த்தின . நான் அண்ணயின் வீட்டைப் பார்கப்போகும் ஆவலில் பரபரப்பானேன் . அண்ணையின் கலியாணமும் எனக்குச் செய்தியாகத்தான் தெரிந்தது . இன்று அவருக்கு வளரந்த பிள்ளைகள் . காலம் என்னை இவ்வளவிற்குப் பழிவாங்கும் என்று நான் அந்த வயதில் நினைக்கவில்லை . எந்தவித நல்லது கெட்டதுகளிலும் பங்காளியாகாத நான் , அவரகளுக்கு சகோதரனாவதற்கு என்ன தகுதி இருக்கின்றது??? என்று எனது மனச்சாட்சி என்னைப்பார்த்து உறுமியது . எனதுமனம் எனது கட்டுப்பாட்டில் நிற்க மறுத்த அடம்பிடித்தது . பஸ் குப்பிளான் சந்தியில் எங்களை இறக்கிவிட்டது . அதிலிருந்து நாங்கள் ஓட்டோ பிடித்து அண்ணையின் வீட்டை அடைந்தோம் .தொடரும்
Wednesday, September 21, 2011

நெருடிய நெருஞ்சி 18அன்று ஞாயிற்ருக்கிழமை ஆகையால் பஸ் தூங்கி வழிந்தது . நானும் மனைவியும் பஸ்சின் முன்னே சென்று முன்பகுதி சீற்ரில் இருந்தோம் . எனது மச்சினிச்சியும் பிள்ளைகளும் எமக்கு அடுத்த சீற்ரில் இருந்தார்கள் . பஸ் ஆளில்லாத பரித்தித்துறை வீதியில் தனிக்காட்டு றாஜாவாக மூசிப் பாய்ந்தது . வழக்கம் போலவே தேர்ந்த பாடல்கள் பஸ்சை நிரவின . எனக்கு என்றும் இல்லாதவாறு மனமும் உடலும் களைத்து , நித்திரையைக் கடன் கேட்டுக் கொண்டு இருந்தது . நான் மெது மெதுவாக நித்திரையிடம் மண்டியிட்டேன் . பலவிதமான கனவுகள் சம்பந்தமில்லாமல் மெதுவாக எட்டிப்பார்த்தன . மூசிக்கொண்டு சென்ற பஸ் திடீரென தனது வேகத்தைக் குறைத்து தன்னை நிறுத்தியதும் , கனவில் மிதந்த எனது மனது நிஜத்தில் தொப்பென்று விழுந்தது . நேரம் மாலை 4 மணியைக் கடந்து இருந்தது . பஸ்சில் வந்தவர்கள் எல்லோரும் இறங்குவதில் கிளித்தட்டு விளையாடினார்கள் . நாங்கள் எல்லோரும் இறங்கும்வரை காத்திருந்து விட்டு இறங்கினோம் . என்முகத்தில் கடல் காத்து பட்டு வெக்கையைக் குறைக்க முயன்றது . பரித்தித்துறை பஸ்நிலையம் அன்று அமைதியாகவே இருந்தது . நாங்கள் எல்லோரும் அம்மன் கோயிலடி றோட்டால் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம் . எனது பெறாமகன் எனது கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தான் . நாங்கள் இருவரும் முன்னே நடக்க , மற்ரயவர்கள் எமக்குப் பின்னே வந்தார்கள் . வீதியில் தோசை அப்பம் வியாபாரம் சூடுபிடித்திருந்தது . அப்பம் , தோசையின் வாசம் வீதியெங்கும் நிறைந்திருந்தது . கல்லூரி வீதி கழிய வந்த ஒழங்கைக்கு றோட்டுப்போட சல்லிக்கல்லுகள் பரவியிருந்தார்கள் . யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான அவசரக்கோலங்களாக அவை இருந்தன . எங்களுக்குச் சல்லிக் கல்லின் ஊடாக நடப்பது சிரமமாக இருந்தது . ஓடக்கரை தாண்டச் சாதாரண ஒழுங்கை வந்தது . வீட்டு வாசல்களில் பெண்கள் முகத்திற்குப் பவுடர் பூசிப் பூராயம் பேசிக் கொண்டிருந்தார்கள் . நாங்கள் எல்லோரும் வியர்த்து ஒழுக , ஒழுக வீட்டை அடைந்தோம் . எங்களைக் கண்ட புழுகத்தில் எங்கள் வீட்டு நாய் பிள்ளைகளின் மீது புரண்டு விளையாடியது . நான் முகத்தைக்கழுவி உடுப்பை மாற்ரிக்கொண்டு எங்கள் வீட்டின் முன்னால் இருந்து கொண்டேன் . அன்ரியும் , மாமாவும் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள் . அன்ரி பாக்கு உரலில் வெத்திலை , பாக்கைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தா . மாமி நான் கேட்காமலேயே பிளேன் ரீயும் , பரித்தித்துறை வடையும் கொண்டு வந்து தந்தா . எனக்கு இருந்த தலையிடிக்குப் பிளேன் ரீ இதமாகவே இருந்தது . இரவுச் சமையலுக்கான அடுக்குகள் மாலின் ஊடே வந்த புகையில் தெரிந்தது . நான் பிளேன் ரீ ஐ அனுபவித்துக் குடித்தேன் பறுக்கும் ரீ புகையினூடே எனது மன வெக்கையும் சிறிது சிறிதாகக் கரைந்து என் மனது இயல்பு நிலைக்குத் திரும்பியது . அன்ரி வெத்திலையை இடித்து முடிந்து குழைவான வெத்திலையை இரு சகோதரங்களுக்கும் கொடுத்து தானும் போட்டுக் கொண்டிருந்தா . மாமா தொண்டையைச் செருமிக் கொண்டே ,

"ஏன் தம்பி போன கையோட திரும்பீட்டிங்கள் , நிண்டு ஆறுதலா வரலாம் தானே " ?

"இல்லை மாமா நீங்கள் இங்கை மூண்டுபேரும் தனிய , எனக்கு அங்கை அம்மா இல்லாத வீட்டைப் பாக்கேலாமல் கிடக்கு ".

" நீங்கள் அப்பிடிச் சொல்லக்கூடாது , அவைக்கு நீங்கள் தானே ஆறுதல் ".

"ஏன் மாமா இந்த சுப்பர்மடம் சுனாமி வீடமைப்பு திட்டம் வீடுகள் எல்லாம் ஒடக்கரைக்கை கிடக்கு ? கடல் அங்கை வர வந்ததோ ? எனக்கு தெரிஞ்சு சுப்பர்மடம் கரையில அல்லோ கிடக்கு ".

நான் பேச்சை மாற்ரினேன்

"ஓ...... ஓ...... அது பெரய கதை உங்களுக்குத் தெரியாது . முந்தித் தம்பசிட்டியார் கரைப்பக்கத்தில போய் கெஸ்ற் கவுஸ் கட்டியிருந்தவை . இப்ப மாறி சுப்பர் மடத்தாக்கள் சுனாமியைச் சாட்டி இங்கை கெஸ்ற் கவுஸ் கட்டீட்டினம் ".

என்றார் சிரித்தவாறே ,

" அப்ப தண்ணி சுபர்மடம் மட்டுமே வந்தது ? ஓ........ ஒ...........அதிலையும் , விடுப்புப் பாக்கப் போனதுகள் தான் அல்லாதுப் பட்டதுகள் . அது கனகதையள் சொல்லியடங்காது ".

மாமாவுடன் பகிடியாகக் பம்பல் அடித்ததும் , அவரின் விகற்பமில்லாத கதையளும் எனது மனதைப் பஞ்சாக்கின . மாலின் ஊடாக வந்த புகையின் ஊடாக உப்புமா வாசம் மூக்கைத் துளைத்தது . இந்தியா மச்சினிச்சி தன்ரை வித்தையைக் காட்டுறா என்று ஊகித்துக் கொண்டேன் . பிள்ளைகள் தகப்பனுடன் சுட்டி ரீவீ க்குக் கட்டிப் புரண்டார்கள் . முழு நிலவு தங்கத் தாம்பாளமாக வானை நிறைத்தது . பக்கத்து வீடுகளில் லைற்ருகள் மினுக்கின . எங்கள் வீட்டு நாய் நாங்கள் கதைப்பதை குந்தி இருந்து காதை மடக்கி கேட்டுக் கொண்டருந்தது . எனக்கு றொனியனின் நினைவு வந்து தொலைத்தது .மாமாவின் வீட்டைப் பார்த்தேன் , செல் அடியில் சிவர்கள் பாழாகி இருந்தன . அவர் அவைகளை தனியாளாகத் திருத்திய கைவண்ணமும் அதில் தெரிந்தது . நேரம் 9 மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது .

" அப்ப மாமா , நீங்கள் ஒரு இடமும் இடம்பேரேரைலையோ "?

எனது அப்பாவித்தனமான கேள்வி மாமாக்குச் சிரிப்பைக் கொடுத்திருக்க வேண்டும் . கெக்கட்டம் விட்டுச் சிரித்தார் . நான் ஒரு புன்சிரிப்பை பொதுவாக வைத்தேன் . எனக்கு அவரின் சிரிப்பு ஐமிச்சமாக இருந்தது . இது நக்ஸ் சிரிப்பா ? இல்லை , வில்லண்டமான சிரிப்பா ? என்று . அன்ரி தன் வெற்ரிலையைத் துப்பி விட்டு இடையில் புகுந்தா ,

" அண்ணை உந்த பே சிரிப்பை நிப்பாட்டு . அவர் தெரியாமைத் தானே கேக்கிறார் ? அவர் இங்கை வந்து எவ்வளவு காலம் "?

எனக்குப் பக்கத்தில் இருந்த எனது கைத்தொலைபேசி சிணுங்கியது . அதில் அண்ணையின் பெயர் தெரிந்தது . அழைப்பை அழுத்தினேன் .

" எப்படியடா இருக்கறாய் ? சுகமாய் வந்து சேந்தியே "?

அண்ணை என்னை இன்னும் சின்னப்பிள்ளையாகப் பாவிக்கும் முறை எனக்கு சிறிது எரிச்சலை மூட்டியது .

" சொல்லண்ணை ".

" நான் இங்கை ஏழாலைக்கு வந்திட்டன்ரா . தோட்டத்துக்கு தண்ணி மாறிப் போட்டு வந்து உன்னோட கதைப்பம் எண்டு எடுத்தன் . மற்ரது , நீ எப்ப இங்கை வாறாய் ? நான் லீவு எடுக்கவேணும் ."

" நாளைக்கு இங்கை ரெண்டு மூண்டு வீட்டை போகக் கிடக்கு . பேந்து பின்னேரம் முனைக்குப் போறம் . நான் நாளையிண்டைக்கு உங்கை வாறன் ".

" வரேக்கை ஓட்டோ பிடிச்சுக் கொண்டு வா . பஸ்சிலை கஸ்ரப்படாதை ."

" சரி அண்ணை நீ லீவை எடு ".

எனக்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது . வெளிநாட்டு யூரோக்களும் டொலர்களும் இவர்களையும் அல்லவா புரட்டிப் போட்டு விட்டன . எங்கள் கமத்து ஒவ்வொரு போகத்து முதல் புது நெல்லுடன் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் , வில்லுப் பூட்டின திருக்கை மாட்டு வண்டில்லை சன்னதி கோயிலுக்கு வந்து மடத்தில அன்னதானம் குடுத்தது இப்பொழுதும் பசுமையாக மனதில் பசுமையாக ஓடியது . சிங்கத்தின் பிடியில் சன்னிதியானும் ஒட்டாண்டியாகப் போய் விட்டான் . நாங்கள் குளிரில் விறைத்து உளைக்கும் யூரோக்களின் பெறுமதியும் , வலியும் , இவர்களுக்கு உண்ணமையிலேயே விளங்கவில்லையா ? எனது மனம் வலித்தது . குறிப்பால் உணர்ந்த மாமா என்னைத் திருப்ப ,

" நீங்கள் உதைக்கேக்கிறியள் , ஒப்பறேசன் லிபறேசனைக்கையே நாங்கள் மூண்டுபேரும் , என்ர அம்மாவும் இங்கை இருந்து அரக்கேல . செல் அடி அனல் பறத்துது . எங்கடை பெடியளும் நெம்பிக் கொண்டு நிக்கினம் . சனம் எல்லாம் அங்கை இங்கை எண்டு அல்லாது படுதுகள் . ஆமிக்காறன் கிட்ட வந்திட்டான் . எங்கடை ஒழுங்கைக்கால கொஞ்ச ஆமிக்கறார் வந்தாங்கள் . அதில ஒருத்தன் , இப்பவும் என்ர கண்ணுக்கை நிக்குது . நல்ல நெடுவல் சிவலையா வாட்டசாட்டமா இருந்தான் . எங்கடை இந்த வீட்டில இருக்கப்போறம் எண்டு சொன்னான் . நான் வாங்கோ எண்டு சொன்னன் . அண்டு இரவு எங்கழுக்கு மற்ர ஆமிப்பிள்ளையள் எல்லாம் ராச மரியாதை . பிசுக்கோத்து , பால் பைக்கற் , எல்லாம் தந்து சமைச்சு தந்தீச்சினம். தங்கைச்சி ஆக்களை சமைக்க விடேல . நெடுவல் ஆமி சொன்னான் நாங்கள் தன்ர ஐயா , அம்மே மாரிக் கிடக்கெண்டு . நான் அவரை ஒரு சமசியத்தில கேட்டன் , மாத்தையா நீங்கள் ஆரெண்டு . அப்ப சொன்னான் , தான் தான் டென்சில் கொப்பைக்கடுவா எண்டு . எனக்கு ஐஞ்சுங் கெட்டு அறிவுங் கெட்டுப் போச்சுது . இதுக்குள்ள , எங்கடை வீரவானுகள் தங்கடை சாமானுகளை பொலித்தீன் பையால சுத்தி , உர பாக்குக்கிள்ளை போட்டுக் கண்ட கண்ட கிணறுகளுக்குள்ளை போட்டுத் தகடு குடுத்திட்டீனம் ."

மாமா கிராமியப் பாணியில் சொல்லச் சொல்ல என் மனதில் காட்சிகள் படமாய் விரிந்தது . எவ்வளவு தூரத்திற்குத் துன்பப் பட்டிருப்பார்கள் ? ஆனால் , வந்த துன்பங்களைத் துன்பங்களாக எண்ணாது , அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று எடுக்கும் அவர்களது உளப்பாங்கு என்னை மிகவும் ஈர்த்தது . மாலின் உள்ளே இருந்து வந்த மனைவியின் கையில் உப்புமா தட்டு இருந்தது . நான் மனைவியிடம் ,

"எல்லாரும் மாலுக்குள் இருந்து சாப்பிடுவம்".

" மால் எல்லாருக்கும் இடம் காணது ".

" நான் அங்கை தான் சாப்பிடப் போறன் ".

" சரி வாங்கோ ".

நான் மாலுக்குள் நுளைந்தேன் . நான் மாலுக்குள் நிலத்தில் இருந்தேன் . உப்புமாவும் , செத்தல் மிளகாய்ச் சம்பலும் இருமுறை சாப்பிடத் தூண்டியது . ஆனால் , எனது கட்டுப்பாடு தடுத்தது . சப்பிட்டு விட்டு எல்லோரும் சிறிது நேரம் கதைத்து விட்டுப் படுத்து விட்டோம் . பண்டாரி அம்மன் கோயில் மணியோசை என்னை அதிகாலையிலேயே எழுப்பி விட்டது . மச்சான் பால்போத்திலை எடுத்துக்கொண்டு சைக்கிளில் , மந்திகைச் சந்தி கிட்ட உள்ள பால் கூட்டுறவுப் பண்ணைக்குப் போனார் . நான் அன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசிச்சுக்கொண்டிருந்தேன் . மனைவி எழும்ப முதல் விளக்கு மாத்தால் முத்தத்தை கூட்டினேன் . நான் மோட்டரைப் போட்டுத் தண்ணித் தொட்டியை நிரப்பிய சத்தம் கேட்டு மனைவி எழும்பி வந்த பொழுது , நான் வியர்வையில் குளித்திருந்தேன் . தொட்டியில் நிரம்பிய தண்ணியை வாளியில் அள்ளி முத்தம் எல்லாம் தெளித்தேன் . முத்தத்தில் தண்ணி பட்டதும் புழுதி வாசம் மூக்கைத் தொட்டது . நீண்டகாலம் இதுகளை நான் செய்யாததால் எனக்குப் பெரிய புதினமாக இருந்தது . வீட்டு வாசலுக்கும் தண்ணியைத் தெளித்தேன் . தண்ணீரில் குளித்த குறோட்டன்களில் சூரிய வெளிச்சம் பட்டு வர்ணஜாலம் காட்டியது . எனக்கு அதைக் காணப் புத்துணர்சியாக இருந்தது . மச்சான் பால்போத்திலும் உதயன் பேப்பருடன் வந்து இறங்கினார் . மச்சினிச்சி கோப்பி போடப் பால்போத்திலுடன் மாலுக்குள்ப் போய்விட்டா . நான் உதயன் பேப்பரை மேய்ந்தேன் . அது தேர்தல் செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தது . மச்சாள் சுடச்சுடக் கோப்பியுடன் வந்தா . நான் கோப்பியை விரைவாக் குடித்து முடித்து விட்டு குளித்து வெளிக்கிட்டேன் . மாமாவிடம் நான் பொழுது போக பம்பலடிக்க போனேன் . மச்சான் எங்கள் பம்பலை புன்சிரிப்புடன் பாத்துக்கொண்டிருந்தார் . நாங்கள் மனைவியின் உறவுகள் இரண்டு வீட்டுக்குப் போனோம் . பின்பு , எல்லோரும் மத்தியானம் வந்து வீட்டில் சாப்பிட்டோம் . நாங்கள் பின்னேரம் போல முனைக்கு வெளிக்கிட்டோம் . நாங்கள் கல்லூரி வீதிவழியாக வந்து பொழுது , யுத்தத்தின் கோரவடுவாக கட்டிடங்களின் சாட்சியங்கள் கட்டியங் கூறிக்கொண்டிருந்தன . முன்பு இந்த இடங்கள் ஆளரவம் அற்ர சூனியப் பகுதிகள் . இப்பொழுது தான் மக்கள் பாவனைக்கு திறந்து விட்டுள்ளார்கள் . நாங்கள் காட்லிக் கல்லூரியையும் , மெதடிஸ் சேர்ச்ஐயும் தாண்ட , முனைக் கடல் அகண்டு விரிந்தது .

தொடரும்

Thursday, September 15, 2011

நெருடிய நெருஞ்சி 17பாமினிக்கு உதவியது மனதிற்குச் சந்தோசமாக இருந்தாலும் , அவள் சொன்ன கதைகளின் தாக்கம் என்ன விட்டு , விட்டுச் சாட்டையால் அடித்தது . அவள் இந்தச் சிறுவயதில் எத்தனை கொடுமைகளை அனுபவித்து விட்டாள் . சிறுவயதில் எப்படியெல்லாம் கவலைகள் இல்லாது துள்ளலுடன் இருந்தோம் . இப்போது காயடிக்கப்பட்ட மாடுகள் மாதிரியல்லவா போய்விட்டோம் . என் மனது கனமாகிக் கண்கள் செம்மை படர்ந்தன . வீட்டை அடைந்தபொழுது தங்கைச்சியும் , மனைவியும் முன் விறாந்தையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் . எனது சிவந்த கண்களைப் பார்த தங்கைச்சி பதறியபடியே ,

" என்ன செய்தனி ? என்ன நடந்தது "?

" அதொண்டுமில்லையடி , தரவைக்கை போனன் புழுதி அடிச்சுது , கண்ணைக் கசக்கிப் போட்டன் ".

என்றவாறே நான் நேராக கிணத்தடிக்குப் போனேன் . உடம்பு வியர்வையால் கசகசத்தது . தொட்டியில் நிறைந்திருந்த தண்ணியை அள்ளி உடம்பில் ஊற்ரினேன் . என் மனதைப் போலவே தண்ணீரும் இளஞ்சூடாக இருந்தது . ஆசை தீர அள்ளி அள்ளி தண்ணீரை ஊற்ரினேன் . நான் அதிகம் குளித்தால் கொதித்த மனமும் உடலும் குளிர்ந்தன . உடலைத் துவட்டி உடுப்பை மாற்ரி வெளியே வர , தங்கைச்சி பிளேன் ரீயும் அச்சு முறுக்குடன் நின்றிருந்தாள் . நான் முறுக்கைத் தவிர்த்து பிளேன் ரீயை எடுத்துக் கொண்டேன் .

" முறுக்கையும் எடன்ரா ".

" நான் முந்தின மாதிரி இப்ப சாப்பிடுறேல ".

" நான் நீ வாறாய் எண்டு அக்கா சொல்லேக்கை , உனக்கெண்டு அவதிஅவதியா செய்தது ".

என்று முகம் மாறியபடியே சொன்னாள் .

" சரி மூண்டு முறுக்கு எடுக்கிறன் ".

என்றேன் , அவளின் முகம் மலர்ந்தது .

" இண்டைக்கு உனக்கு வெள்ளை அப்பமும் , சம்பலும் செய்யப்போறன் ".

" சரி உன்ர விருப்பப்படி செய் ".

என்றவாறே , முன் கேற்ரடிக்கு ரீ கோப்பையுடன் நகர்ந்தேன் . இரவு மணி ஏழாகி இருட்டி இருந்தது . என்னுடன் வந்த வானரப்படைகள் நன்றாகக் களைத்துப்போய் , அச்சு முறுக்கை ஆய்ந்து கொண்டிருந்தார்கள் . பிளேன் ரீக்கு முறுக்கின் உறைப்பு நல்ல கூட்டாக இருந்தது . எங்கள் வீட்டு நாய் றொனியனின் ஞாபகம் திடீரென இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்டேன் . வந்தவளிடம் எடுத்த எடுப்பிலேயே ,

" றொனியன் எங்கை "?

" உனக்குத் தெரியாதே ? அம்மா போனகையோட அவன் வடிவாய் சாப்பிடுறேல . அங்கை கக்கூசுக்குப் பக்கத்திலை ஆள் படுத்திருக்கும் , நீ பாக்கேலையே "?

" சும்மா நேரம் எண்டால் இப்ப நீ இங்கை உள்ளடேலாது" .

" ஏன் சுகமில்லையே " ?

" நீ போய்ப் பார் ".

நான் அண்ணையின் மகனுடன் றொனியனைப் பார்க்கப் போனேன் . அங்கே எலும்பும் தோலுமாகப் றொனியன் படுத்திருந்தான் . நான் அருகே போய் அவனுடைய தலையைத் தடவினேன் . அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான் , அவனுடைய வாய் திறந்து இருந்து . அதனால் துர்நாற்ரத்துடன் வீணீர் வடிந்து கொண்டிருந்தது . அவனது நிலமையை என்னால் துல்லியமாக உணர முடிந்தது . அண்ணையின் மகன் தான் இவனைக் குட்டியாகக் கொண்டு வந்தான் . நான் அவனிடம் ,

" ஏன்ராப்பா இவனை டொக்ரரிட்டைக் காட்டேல "?

" நான் குட்டி மாமீட்டைச் சொன்னான் சித்தப்பா , அவாக்கு நேரமில்லையாம் ".

அவனுடைய முகம் சோகத்தில் மூழ்கியது . எனக்குத் தங்கைச்சியில் கோபம் கோபமாக வந்தது . என்ன மனிதர்கள் இவர்கள் ? உயிர்கள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகப்போய்விட்டதோ ?

" சரி நீ ஒண்டுக்கும் யோசிக்காதை . நாளைக்கு இவனை டொக்ரரிட்டைக் கூட்டிக் கொண்டு போவம் . நீயும் என்னோடை வா ".

"சரி சித்தப்பா " .

அவனின் முகத்தில் மகிழச்சியின் ரேகை ஓடியது. இந்த நிலையில் இவனை தூக்கிக் கொண்டு டொக்ரரிடம் போகமுடியாது , அவரைத்தான் இங்கு வரப்பண்ணவேணும் என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுளைந்தேன். தங்கைச்சியின் மகள் மாமா என்றவாறே ஓடியந்து காலைக் கட்டிக்கொண்டாள். அவளைத் தூக்கிக் கொண்டேன் . நேரம் 8 மணியைக் கடந்திருந்தது . நான் முற்ரத்தில் மாமரத்துக்குக் கீழ் கதிரையைப் போட்டு இருந்தேன் . அண்ணை அண்ணி பிள்ளைகள் என்னைச் சுற்ரிவர இருந்தார்கள் . அண்ணை பழைய கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார் . நானோ சுவாரசியமில்லாமல் " உம் " கொட்டிக்கொண்டிருந்தேன் . எனது மனமோ பாமனியையும் , றொனியனையுமே சுற்ரிவட்டமிட்டது . எனது குற்ர உணர்வைப் பாமினியால் தீர்த்துக்கொண்டாலும் , பரந்தன் சந்தியில் சந்தித்த அக்காவிற்கு என்ன செய்தேன் ? ஒரு வேளை உணவு அவாவிற்கும் பிள்ளைக்கும் போதுமா ? என்னால் வடைப் பார்சல் தானே அவாவிற்குக் குடுக்க முடிந்தது ? மனதைப் புளியம் விளார் கொண்டு அடித்தது போல் வலி ஏற்ப்பட்டது . இங்கு வந்ததே பிளையான வேலையோ ? என் நினைவுகள் தவ்வித் தவ்வி அலைபாய்ந்தது . இடையில் அண்ணையை மறித்து ,

" எங்கடை பாலசந்திரன் மச்சான் இப்பவும் இருபாலையிலை கிளினிக் வச்சிருக்கிறாரோ " ?

" ஓம் வச்சிருக்கிறார் . அவர் இப்ப இளைப்பாறிவிட்டார் . சனம் இப்ப அவருட்டை போறது குறைவு .

" ஏன் கேட்டனி "?

" இல்லை , இவன் றொனியனை ஒருக்கால் காட்டவேணும் . ஏன் அண்ணை இதுகளை நீ எல்லாம் பாக்கிறேலையே ? நீ ஒரு பெரிய எழுத்தாளன் , இயற்கை ஆர்வலன் , உனுக்குமே எல்லாம் செத்துப்போச்சுது ? "


என்று சாட்டை அடியாக வார்த்தையைத் துப்பினேன் . அண்ணை என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார் .

" உனக்கு இங்கதையான் நிலமை விளங்குதில்லை . என்ரை வேலை அப்பிடி , விதானையார் எண்டால் சும்மாவே ? எனக்கு ஒண்டில்லை 3 அதிகாரங்களிட்டை வேலை செய்ய வேண்டிக்கிடக்கு . எனக்கு 24 மணித்தியாலமும் காணுதில்லை ".

" அப்ப அண்ணை , நானும் என்ர மனிசியும் பிரான்ஸ்சில என்ன களவுக்கே போறம் " .

நானும் பதிலுக்கு எகிறினேன் . சாப்பாட்டை முடித்து விட்டு வந்த தங்கைச்சி முகத்தில் கலவரத்துடன் , என்ன உங்கை ரெண்டுபேரும் புடுங்குப்பாடு ? , சாப்பிட வாங்கோ என்று வாய்க்கால் வெட்டினாள் . நான் சிரித்தபடி வா அண்ணை சாப்பிடுவம் என்றபடியே , பிள்ளைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போனேன் . அங்கு மேசையில் தங்கைச்சியும் மனைவியும் வெள்ளை அப்பத்தையும் பச்சைமிழகாய் சம்பலையும் வைத்திருந்தார்கள் . மனைவி எனக்கு 4 அப்பத்தை எடுத்து வைத்து , சம்பலையும் போட்டா . அண்ணை எனக்கு நேர் எதிரே இருந்தார் . பக்கத்தில் பிள்ளைகள் நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள் .நான் அப்பத்தை விண்டு வாயில் வைத்தேன் . அம்மா ஓரளவு தங்கைச்சியை முன்னேற்ரியிருந்தா . ஆனாலும் மனைவி அப்பம் சுடுவது போல இல்லை . சாப்பிடும்பொழுது நான் ஒன்றும் பேசவில்லை . முன்பு என்றால் அப்பாவுடன் நாங்கள் ஆறு பேரும் சாப்பிடும் பொழுது , சாப்பாட்டு மேசை எவ்வளவு கலகலப்பாக இருக்கும் ? ஆனால் இப்பொழுது சிரிப்பைக் கடன் கேட்கின்றோம் . பாழாய்ப்போன யுத்தமும் ஒவ்வொருவர் தனி வாழ்கை முறைகளை புரட்டியடித்ததைக் கண்கூடாகவே கண்டேன் . வீடியோ பிளேயரில் உள்ளது போல் றீப்பிளே பட்டன் இருந்தால் ஒருவேளை வாழ்க்கை நல்ல சுவாரசியியமாக இருந்திருக்குமோ ? நான் விரைவாக சாப்பாடை முடித்து விட்டு , சிகரட்டுடன் தனிமையை நாடினேன் . அந்த இருட்டில் சிகரட்டின் முனையே வெளிச்சமாக இருந்தது . இருட்டில் வௌவ்வால்கள் கூடிக் கும்மாளமிட்டன . கோப்பாயும் பாழடைந்து விட்டதோ ? நாங்கள் எல்லோருமே படுத்து விட்டோம் . வெக்கையைப் போக்க மின்வசிறி பெரும் சத்தத்துடன் காற்ரை வாரியடித்தது . மனைவி படுத்தவேகத்திலேயே என்னை அணைத்தவறு உறங்கிப்போனா . எனக்கு மட்டும் கடவுள் சயனசுகத்தைத் தருவதில் கஞ்சத்தனம் காட்டகின்றார் . மனைவியின் கையை மெதுவாக எடுத்து வைத்துவிட்டு , கட்டிலில் எழுந்து இருந்து அம்மாவின் படத்தை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . நேரம் 12 மணயைக் கடந்து விட்டிருந்தது . திடீரென முழித்த மனைவி ,

" ஏன் நித்திரை கொள்ளேல "?

" வருகுதில்லை".

" ஏன் "?

நான் பமினியின் கதையைச் சொல்லி , பிள்ளையாருக்கு குடுக்க இருந்த காசை அவளிற்குக் குடுத்ததைச் சொன்னேன் . 

"நல்ல விசயம் தானே பிள்ளையாருக்கு எத்தினை தரம் அம்மாவாலை குடுத்தனிங்கள் . அது ஒண்டுமில்லை உங்களுக்கு எல்லாம் புதுசு . நீங்கள் படுங்கோ ".

நான் கண்ண இறுக்க மூடிக்கொண்டு வராத நித்திரையை வரச்செய்யத் தாக்குதல் நடத்தினேன் . அதிகாலை பிள்ளையார் கோயில் மணியோசை என்னைக் கலைத்தது . ஒருவரும் எழுந்திருக்கவில்லை , ஞாயிற்ருக்கிழமையின் சோம்பேறித்தனம் அவர்களுக்கு . நேரம் ஆறுமணியைத் தொட்டுக்கொண்டிருந்தது . மனைவி எழுந்து தனக்கும் எனக்கும் கோப்பி போட்டுக்கொண்டிருந்தா . நான் கைய்யில் உமிக்கரியுடன் றொனியனைப் பர்க்கப் போனேன் . அவனது நிலை மோசமாக இருந்தது அவனால் எழும்பிக்கூட நிற்கமுடியவல்லை . என்னை அவன் பரிதாபமாகப் பார்த்தான் . எனக்கு அம்மா என்னைப் பார்ப்பது போல் இருந்தது . நான் அவசரமாகக் கரியால் பல்லை மினுக்கிக் , கிணற்ரில் இருந்து வாழியால் அள்ளி அள்ளிக் குளித்தேன் . சூரியன் மெதுவாக ஏறத் தடங்கி வெளிச்சம் வரத்தொடங்கியது . நான் உடுப்புகளை மாற்ரிக் கொண்டு வந்ததும் மனைவி கோப்பியை நீட்டினா . கப்பியை வாங்கியவாறே முன் கேற்ருக்கு நகர்ந்தேன் . மனவியும் தனது கோப்பியுடன் என்னுடன் வந்தா .

" இண்டைக்கு றொனியனுக்கு ஒரு முடிவு கட்டவேணும்ப்பா ".

" ஏன் "?

" நீங்கள் அவனைப் பாத்தனிங்கள் தானே , அவனைப் பாக்க எனக்கு அம்மான்ர ஞாபகம் வருது ".

" இப்ப என்ன செய்யப்போறியள் ? பாலச்சந்திரன் மச்சானைக் கூப்பிட்டுக் காட்டுவம் . பின்னேரம் பரித்தித்துறைக்குப் போவம் . நீங்களும் அவரைப் பாக்கேலத்தானே . சரி போட்டுக் கெதீல வாங்கோ ".

ஒழுங்கையால் மாடுகளும் , ஆடுகளும் மேச்சலுக்கு வரிசை கட்டிப் போய்க்கொண்டிருந்தன . பிறந்த கன்றுக் குட்டிகள் தாய் மாட்டுக்குப் பின்னால் பால்குடித்த வாயால் நுரை தள்ளத் தளிர் நடை போட்டன . நான் குடித்த கோப்பையை மனைவியிடம் கொடுத்து விட்டு , மச்சானைப் பார்க்கப் பெறாமகனின் சைக்கிளில் வெளிக்கிட்டேன் . நான் ஒருவாறு தட்டத்தடுமாறி சைக்கிளில் ஏறி உழக்கினேன் . கனகாலம் சைக்கிள் ஒடாததால் சைக்கிள் தண்ணி அடித்தமாதிரி ஓடியது . நான் றோட்டிற்கு வந்ததும் சைக்கிள் பலன்ஸ்சைச் சரியாக எடுத்தேன் . நெரிசல் குறைந்த றோட்டில் சைக்கிளை எட்டி மிதித்தேன் . எனக்குப் பாலச்சந்திரன் மச்சானில் சின்னவயதில் இருந்தே ஒரு பிடிப்பு . இலங்கையின் மிகச் சிறந்த மிருகவைத்தியர் , பல பதவிகள் அவரது திறமையால் தேடிவந்தன . பல மகாநாடுகளுக்கு அரசசார்பில் ஐரோப்பா முழுவதும் வருவார் . ஒரு முறை 90 களில் பிரான்சில் என்னைச் சந்தித்தார் . இறுதியாக கால்நடைவளர்புப் பணிப்பாளராக இருந்தார் கோப்பாயை விட்டு நீங்காதவர்களில் அவரும் ஒருவர் . அவரை எந்த இடப்பெயர்வும் பாதிக்கவில்லை . ஓய்வெடுக்கும் வரை தனது நாட்டுமக்களுக்காகச் சேவையாற்ரிய ஒரு உதாரணமகன் . நான் அவரது வீட்டு வாசலில் சைக்கிளைக் கொண்டுபோய் நிப்பாட்டினேன். என்னைக் கண்டதும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் ,

" வாடாப்பா எப்ப வந்தனி "?

"ஒருகிழமை மச்சான் ".

"எனக்கு ஒரு உதவி உங்களாலை வேணும் ".

" சொல்லு ".

" எங்கட றொனியனுக்குச் சுகமில்லை . ஒருக்கா வீட்டை வங்கோவன் மச்சான் . என்ர மனிசியும் உங்களைப் பாக்கவேணும் எண்டு ஆசைப்படுறா".

" ஏன் அவனுக்கு என்ன நடந்தது ? இரு வெளிக்கிட்டுக் கொண்டு வாறன் ".

நான் அவரின் வரவேற்பு அறையை நோட்டமிட்டேன். ஒரு புறத்தே மீன் தொட்டியில் மீன்கள் துள்ளி விளையாடின . ஒரு கூட்டில் இரண்டு சோடி காதல் பறவைகள் கிலுகிலுத்தன . வெளிக்கிட்டு வெளியே வந்தவர் கையில் ஒரு மெடிக்கல் கிட் இருந்தது. இருவரும் சைக்கிளில் வீட்டிற்குப் போனோம் . மச்சான் றொனியனை வடிவாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் . அவரைச்சுற்ரி எல்லாச் சின்னப்பட்டாளமும் நின்றனர் . மச்சான் சோதித்து விட்டு என்னைப் பார்த்தார் . றொனியனும் என்னை ஒரு மாதிரிப் பார்த்தான் .

" என்ன மச்சான் ஏதவது சொல்லவேணுமே "?

" இவங்களைப் போகச்சொல்லடாப்பா ".

பிள்ளையள் குட்டிமாமி வரட்டாம் என்று மனைவி கூப்பிட்டா .

" சொல்லுங்கோ மச்சான் . கண்ணன் இவனைக் காப்பாத்தேலாது . ஆள் கனகாலம் இருக்காது . தொண்டைலை கான்ஸ்சர் வந்திருக்குது . வெள்ளனக் கூட்டியந்திருந்தால் ஆளை ஏதாவது செய்திருக்கலாம் ".

" இப்ப என்ன செய்வம் மச்சான்".

" உனக்கு ஓம் எண்டால் சொல்லு . ஒரு ஊசி போட்டுவிடுறன் கருணைக்கொலைக்கு ".

நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன் . பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக ,

"சரி மச்சான் அப்பிடியே செய்வம் ."

மச்சான் தனது கிட்டில் இருந்து ஊசியை எடுத்துச் சரி பார்த்து விட்டு , றொனியனின் முதுகில் ஊசியை ஏற்ரினார் . சிறிது நேரத்தில் அவனது உடல் சிறு துடிப்புடன் அடங்கியது . அண்ணையின் மகன் அழத்தொடங்கி விட்டான் . அவனை , வேறொரு நாய்க்குட்டி வாங்கித்தருவதாகச் சொல்லிச் சமாதானப் படுத்தினேன் . உள்ளே மச்சான் தங்கைச்சியைப் பேசுவது காதில் விழுந்தது . நான் மச்சானைச் சாப்பிட்டு விட்டுப்போகும்படி சொல்லியிருந்தேன் . நான் எனது மனதைத் தேற்ரியவாறு மல்கோவா மா மரத்தடியில் றொனியனுக்கு கிடங்கு வெட்டினேன் . அவனை அதில் வடிவாகக் கிடத்தி விட்டு மண்ணை அள்ளி மூடினேன் . அதில் ஒரு வேப்ப மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்ரினேன் . மத்தியானம் ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்க மனம் பிடிக்காமல் , எல்லோருடனும் பரித்தித்துறைக்கு இ போ சா பஸ்சில் கனத்த மனத்துடன் ஏறினேன் .

தொடரும்.

Friday, September 2, 2011

நெருடிய நெருஞ்சி 16


எனக்குச் சாப்பாடைப் பாத்ததும் நாக்கில் ஊறியது. நான் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் . எல்லோரும் ஏதேதோ மன ஓட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள் . தங்கைச்சி பக்கத்தில் இருந்து கொண்டு ,

" நீ இப்பவும் நல்லா உறைப்புத் தின்னுவியே?"

என்று வெகுளியாகக் கேட்டாள் நான் சிரித்தேன் . எல்லோரும் சாப்பிட்டு விட்டு முற்றத்தில் இருந்தோம் . நான் குருமண்ணில் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தேன் . அண்ணைக்கு அண்ணி வெத்திலை பாக்குக் கொண்டு வந்து தந்தா .அண்ணி எனக்கும் பாக்கு வெத்திலையை நீட்டினா , நான் சிரிப்புடன் வேண்டாம் என்று சொன்னேன் . நான் பொகற்ருக்குள் இருந்த சிகரட்டை எடுத்துப் பத்தினேன் . தங்கைச்சி என்னையே பாத்தாள் . நான் என்ன என்று அவளைக் கண்ணால் கேட்டேன் . அவள் அண்ணையைக் கண் காட்டினாள் . எனக்குச் சிரிப்பாக இருந்தது , இவள் இப்பிடி அண்ணைக்குப் பயப்பிடுகின்றாளே என்று . அண்ணை போட்ட வெத்திலையால் அவரின் வாய் சிவந்திருந்தது . அவரின் வாயைப் பார்த்து எனக்கு ஏனோ அருவருப்பாக இருந்தது . அண்ணை என்னைப் பாத்து ,

" எனக்கும் ஒண்டு தாடாப்பா " .

" இந்தா எடு . லைற்ரர் வைச்சிருக்கிறியோ" ?

" என்னட்டை நெருகுப்பெட்டி கிடக்கு ".

" அப்ப எப்ப போறாய் " ?

" நான் நாளைக்கு பரித்தித்துறைக்குப் போறன் . ஆனா பேந்து இங்கை வருவன் ".*

" ஏன் கேட்டனி " ?

" இல்லையடாப்பா நீங்கள் ரெண்டுபேரும் ஒருக்கா ஏழாலைக்கு எங்கடை வீட்டை வரவேணும் ".

" நான் இங்கை ரெண்டு கிழமை நிப்பன் . அப்ப வாறன் . பேந்து நான் கொழும்புக்குப் போடுவன் ".

எனக்குத் தனிமை தேவைப்பட்டது . எனது மனதில் பாமினியின் நினைவு நிழலாடவே கேணியடிக்கு போக வெளிக்கிட்டேன் . வெளிக்கிடும்பொழுதே கொஞ்சக்காசு எடுத்து கால்ச்சட்டைப் பொக்கற்ருக்குள் வைத்துக் கொண்டேன் . இந்தமுறை அண்ணையின் பிள்ளைகளும் , மனைவியின் தங்கை பிள்ளைகழும் , என்னுடன் கூட்டுச் சேர்ந்துக் கொண்டார்கள் . நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . வெய்யிலின் கடுமை குறைந்து , இதமான காத்து வீசியது . பிள்ளைகளின் கூச்சலால் ஒழுங்கை இரண்டுபட்டது . நான் பலவிதமான யோசனைகழுடன் அவர்களுடன் கேணியடியை நோக்கி நடந்தேன் . மனைவியின் தங்கையின் பிள்ளைகழுக்கு என்னைப்போல் , மைனா , காகம் , புலுனி , பூரான் , கட்டெறும்பு , சித்தெறும்பு , சரக்கட்டை , நெருப்பெறும்பு , முசுறு , என்று எல்லாமே புதுமையாக இருந்தது . அவர்கள் என்னைக் கேள்வியால் துளைத்தெடுத்தார்கள் . நானும் விளக்கிக்கொண்டே வந்தேன் . எனது மண்டையோ வேறு இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது . இப்ப எப்படியும் பாமினியைச் சந்திக்கவேணும் , கேணியடிக்கு கிட்டத்தான் பாமினியின் வீடு இருந்தது . பிள்ளைகள் முசுப்பாத்தியுடன் முன்னேறிக்கொண்டு இருந்தார்கள் . எனது கால்கள் பாமினியின் வீட்டு வேலியடியில் தயங்கி நின்றன . நான் ஆவலுடன் வேலியால் எட்டிப்பார்த்தேன் . பிள்ளைகளின் சத்தத்தால் , அவள் வீட்டு நாயும் வேலிப்பொட்டுக்கால் தனது வீரத்தை காட்டிக் கொண்டிருந்தது . நான் பாமினி என்று அவளைக் கூப்பிட்டேன் . அவள் வீட்டுக்குப் பின்னாலிருந்து இப்பிலிப்பில் குழையுடன் வந்தாள் .

" ஆர் கண்ணனே"? 

" உள்ழுக்கை வாங்கோ "

" இல்லை நான் கேணியடிக்குப்போறன் . உனக்கு நேரமிருந்தா அங்கை வாவென் . சும்மா கதைப்பம் ".

" நான் ஒரு ஐஞ்சு நிமிசத்தில அங்கை வாறன் ".

" சரி நான் போறன் நீவா ".

என்றபடியே கேணியடியை நோக்கி நடந்தேன். கோயிலில் பின்னேரப் பூசைக்கு ஆயத்தங்கள் நடைபெற்ரதைக் காட்ட , மடப்பள்ளியிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது . மாடுகள் , ஆடுகள் , எல்லாம் தரவையில் மேச்சல் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தன . பூமிக்கும் கதிரவனுக்கும் விடை கொடுத்த மோதலில் ஏற்பட்ட இரத்தச்சேதாரமாக மேகங்கள் சிவந்திருந்தன . அதனூடே கூழைக்கடாக்கள் கருமமே கண்ணாக யூ வடிவில் செம்மணி நோக்கி வல்லசை போய்க்கொண்டிருந்த காட்சி மனதை அள்ளியது . பிள்ளைகள் கள்ளன் பொலிஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள் . என்னால் எவ்வளவு யூரோக்கள் கொடுத்தும் பிரான்ஸ்சில்க் கிடைக்காத மன அமைதியையும் , நிறைவையும் , கேணியடியில் சிகரட்புகையினூடே பெற்ருக்கொண்டேன் . கோயில் பூசைக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள் . பலருக்கு என்னைத் தெரியததால் , எனக்கு வசதியாகப் போய்விட்டது எனது மோனத்தவத்தைத் தொடர . பாமினி என்னை நோக்கி வருவது தெரிந்தது . அவளின் வடிவும் , கம்பீரமும் காலதேவனின் கோரப்பிடியால் நன்றாகவே அவளைப் புரட்டிப் போட்டிருந்து. அவளின் தலையில் நரைமுடிகள் எட்டிப்பாத்தன . என்னைக் கண்ட சந்தோசம் அவளின் முகத்தில் நன்றாகவே தவழ்ந்தது .

" வா பாமினி இப்பிடி இங்காலை வந்து இரு". " கனக்க நேரம் போட்டுதோ கண்ணன் " ?

"இல்லை , உன்னோடையும் கதைச்சு கனநாள் தானே".

"இரவு சாப்பாட்டையும் முடிச்சுப்போட்டன் , பிள்ளையள் இங்கை வந்து பசி பொறுக்குதுகள் இல்லை ".

நான் கெக்கட்டம் விட்டுச் சிரித்தேன் .

" உங்கடை சிரிப்பு என்னம் மாறேல கண்ணன் , உங்களைப்ற்ரிச் சொல்லுங்கோ ".

" என்ன பாமனி நீ வன்னில நல்லா கஸ்ரப்பட்டதா சொன்னாய் . அதேயளவு நானும் அகதிவாழ்க்கையை அனுபவிச்சன் . கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் உள்ளுடன் ஒண்டு தான் . ஆனா , நான் அம்மாக்கு கடைசிவரை என்னைப்பற்ரி சொல்லேல . அம்மா இதுகளையெல்லாம் அறியாமல் போட்டா அது எனக்குச் சந்தோசம் தான் ".

ஓம் கண்ணன் அம்மா உங்களைப்பற்ரி கதைக்கேக்க ஆளைப் பாக்கவேணும் , அப்பிடி ஒரு சந்தோசம் அவாக்கு " . நான் சிரித்துக் கொண்டேன் . சரி பாமினி நீ உன்னைப்பற்ரி சொல்லன் . "

நாங்கள் எல்லாம் முதல் இடப்பெயர்வில தென்மராட்சிக்குப் போனம் . அப்ப எனக்கு இருபத்தைஞ்சு வயசு இருக்கும் . அப்பாவை தெரியும் தானே தவறணைக்கு போகாட்டிக்கு அவருக்குச் சரிவராது . பேந்து வன்னிக்கு , போனம் பேந்து , உங்கடை கமத்துக்கு கிட்ட கிளிநொச்சீல இருந்தம் . அப்ப எங்கடை சீவியம் ராச வாழ்கை கண்ணன் . இங்கை இருக்கிறதை விட சந்தோசமாய் இருந்தம் . அப்பதான் குமரனோட வேலை செய்தவரை சந்திச்சன் . அவர் எங்கடை நிலமையப் பாத்து கலியாணம் கட்ட கேட்டார் . நானும் ஓம் சொல்லிப் போட்டன் , அப்ப தலைவற்ர தலைமேல எங்கடை கலியாணம் நடந்துது . அப்பதான் எனக்குத் தெரியும் அவற்ர பவர் . நாங்கள் நல்ல சந்தோசமாய் இருந்தம் . பிள்ளையளும் பிறந்து வளரத் தொடங்கீட்டுதுகள் . பேந்து சண்டை தொடங்க எங்களுக்கும் பிடிச்சுது சனி . அதுகளை சொன்னால் நெஞ்சு வெடிக்கும் கண்ணன் . அதுவும் உச்சக் கட்டமாய் , புதுகுடியிருப்பு இடப்பெயர்வு இருக்கே அதை என்ர வாழ்க்கைல மறக்கேலாது .அவளின் கண்கள் சிவந்து கண்கள் கலங்கி வெளிவரத் துடித்தது . எனக்கு வலியாக இருந்தது .

" ஏன் பாமினி உன்னை கஸ்ரப் படுத்திறேனோ "?

"இல்லை கண்ணன் , என்ர மனப்பாரம் இறங்கவேணும் .

"சரி சொல்லு பாமினி நான் சிகரட் பத்தலாமோ ? உனக்குப் பிரச்சனை இல்லையோ "?

" இல்லை கண்ணன் . ஏன் இந்தபழக்கம் "?

நான் வெறுமையாகச் சிரித்தேன் .

" நான் இந்தியாவில படிக்கேக்கை நண்பர்களோட விளையாட்டா தொடங்கனன் . ஆனா ,பேந்து பிரானசுக்குப் போய் தனிய மனம் வலிக்கேக்கை இது ஆதரவாப்போச்சு . ஆனா , இதை சரி எண்டு சொல்ல மாட்டன் ".

நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன் . பாமினி தொடர்ந்தாள் ,

" கடசீல பிரச்சனை முத்தி கிளிநொச்சீலையும் இருக்கேலாமல் போட்டுது . ரெண்டு பக்கமும் சம்பல் அடி விழுது . என்ர அவரும் பொயின்ருக்கு போட்டார் . சனம் எல்லாம் வெளிக்கிட்டுட்டுதுகள் . நானும் என்ர பிள்ளையளும் அம்மாவோட ஒரு இரவு வெளிக்கிட்டம் .

அந்தநேரம் ஒரு இடத்திலையும் கறன்ற் இல்லை . எல்லாரும் இடம்மாறமல் இருக்க , ஒவ்வொராளையும் கூப்பிட்டு கூப்பிட்டு போனம் . முன்னால பெடியள் றோட்டை கிளியர் பண்ணிக்கொண்டு போவினம் . அதேநேரம் பின்னாலையும் பாதுக்காப்புக்கு வருவினம் . பேந்து நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே கண்ணன் . எத்தினை நாள் பங்கருக்குள்ள சாப்பாடில்லாமல் கிடந்தம் . இதுக்குள்ளை மழையால பங்கருக்குள்ளை பாம்பு , பூரான் எண்டு வந்துட்டுது . கன சனம் இதுகளின்ர கடியாலையே பங்கருக்குள்ளை செத்துப்போச்சு . அதுவும் கடைசீல , பாதுகாப்பு பிரதேசத்துக்குள்ளை நாங்கள் வெள்ளை கொடியோடை போகப்பட்ட பாடு நாய்பாடாபாடு பட்டுப்போனம் . எனக்கு இப்பவும் கடக்கரையைக் கண்டா அங்கத்தையான் ஞாபகம் தான் வரும் ".

என்று பாமினி அழத்தொடங்கி விட்டாள் . எனக்கு மனது கனத்தது . கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் ? தமிழைப் பேசியதிற்கு இவ்வளவு கொடுமையா ? எனது மனதில் ரத்தம் வடிந்தது . நான் பாமினியை சிறிது அழவிட்டேன் .

" பாமினி அழுகையை நிப்பாட்டு . நாங்கள் வாழப் பறந்தனாங்கள் இதெல்லாம் ஒரு தோல்வி இல்லை , கண்ணைதுடை ".

" ஆனா கண்ணன் அவர் இருக்கிறாரோ இல்லையோ எண்டே தெரியாமல் கிடக்கு . கடைசீல சொன்னார் , என்னை பிள்ளையளை புதுக்குடியிருப்புக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி , தான் அங்கை வாறன் எண்டு இண்டைவரைக்கும் ஒண்டும் தெரியேல கண்ண்ணன் " .

எனக்கு அவளிற்கு என்ன சொல்வதென்று தடுமாறினேன். பின்பு ஒரு முடிவிற்கு வந்தவனாக ,

" பாமினி சொன்னா கேள் அழாதை " .

இப்பொழுது அவள் சிறிது சமாதானமானள் . அவளது கண்கள் சிவப்பேறியிருந்தன . "

நான் ஒண்டு சொன்னா குறைஇனைக்கமாட்டியே "?

" இல்லை . என்ன ? என்னால இப்போதைக்கு இது தான் என்னால செய்யேலும் . நீ இதை வைச்சு உன்ரை பிள்ளையள படிப்பி , என்று சொல்லி போக்கற்றுக்குள் இருந்த பத்து ஆயிரம் ரூபா நோட்டுக்களை பாமினியின் கையில் திணித்தேன் " .

"என்ன இது கண்ணன் ? எனக்கு வேண்டாம் ".

" இல்ல , நீ எங்கடை குடும்பத்தில ஒராள் மாதிரி உன்னை இப்பிடி என்னால விடேலாது . இது என்ர ரெலிபோன் நம்பர் நான் போய் உன்ர பிள்ளையளின்ர படிப்புகளுக்கு ஒரு ஒழுங்குசெய்யிறன் ".

பாமினி பிள்ளையாரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் . எனக்குச் சிரிப்பாக வந்தது . உண்மையில இந்தக்காசை அண்ணை கோயில் திருப்பணிக்கு என்று குடுக்கச் சொல்லியிருந்தார் . எனக்குப் பாமினிதான் முக்கியாமாகப்பட்டாள் . பிள்ளைகள் விளையடி முடித்து விட்டு என்னிடம் ஓடி வந்தார்கள் , வீட்டற்குப் போவதிற்கு . நான் கோயிலுக்குப் போக மனம் பிடிக்காமல் வீட்டிற்குப் பிள்ளைகளுடன் தளரந்தநடையுடன் திரும்பினேன் .தொடரும்