Skip to main content

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 25.நாங்கள் புகையிரத நிலையத்தில் நுளைந்தபொழுது அதிக சனக்கூட்டம் இருக்கவில்லை . சின்னத்தான் புகையரதமேடை சீட்டு எடுக்கப்போய் விட்டார். நான் புகையரத நிலையச் சூழலை விடுப்புப் பார்க்கத்தொடங்கினேன். இப்பொழுதும் இராணுவ வாகனங்கள் படையனரை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தன ,அவர்கள் கிராமங்களுக்குப் போவற்கு. சீருடைகளின் பிரசன்னத்தால் ஒருவித இறுக்கமான சூழ்நிலை அங்கு பரவியிருந்தது . இப்பொழுது மக்கள் மெதுமெதுவாக புகையிரத நிலையத்திற்குக் கூட்டம் சேர்த்தார்கள் . நான் சின்னத்தானுடன் , நான் முன்பு தலையிடி போக்கின மூலைத் தேத்தண்ணிக் கடைக்குப் போனேன் . நாங்கள் இருவரும் பச்சைத் தேத்தண்ணியை எடுத்துக்கொண்டு ஆளுக்கு ஒவ்வொரு சிகரட்டின் முனையைச் சிவப்பாக்கினோம். நான் மீண்டும் என் கண்களால் சுற்றாடலைத் துளாவினேன்.

அந்தப்புகையிரத நிலையம் ஆகப்பெரிதாகவும் இல்லாது , சிறியதாகவும் இல்லாது அடக்கமாக இருந்தது . அங்கே , இப்பொழுதும் அதே வெள்ளைச் சீருடையில் , தலையில் தொப்பியுடன் புகையிரதநிலைய அதிகாரிகளைக் கண்டேன். எங்களை ஆண்ட வெள்ளைகள் தங்கள் நிலையை மாற்றி இரண்டு மூன்று தலைமுறை ஆனாலும் இவர்கள் மட்டும் மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றார்கள். என்னைச் சுற்றி இரண்டு மூன்று தேத்தண்ணிக்கடைகள் இருந்தன. அதில் எல்லோரும் தேத்தண்ணி குடிக்கும் மும்மரத்தில் இருந்தார்கள். கடைகளின் முன்னால் கதலி , இதரை வாழைக்குலைகளும் , அன்றைய பத்திரிகைகளும் தொங்கின.

எனக்குப் பத்திரிகைகளில் மேய விசேடமாக ஒன்றும் இருக்கவில்லை . இறந்ததாகச் சொன்ன புலியை எப்போதும் உயிர்ப்பிக்கின்ற சாரம்சங்களே அதில் தெரிந்தன.அதிலும் உள்ளுக்கை இருந்து சரத் வேறு நல்ல பம்பல் அடிச்சுக் கொண்டிருந்தார். வெளியே இருந்து நெம்பிய சரத்தின் நிலமை இன்று கவலைக்கிடம்.......... இதை , நான் சிங்கள தேசிய இனவாதப் பூதத்தின் அதிஉயர் கோரப்பதிப்பாகவே உணர்ந்தேன். சிங்களக் கிறீஸ்தவ பரம்பரைகளால் ஆளப்பட்ட பௌத்தம் , பின்பு விச ஊசி அடித்துப் பூதமாகி இன்று இரண்டு இனத்தையும் விழுங்கிய நிலையையும் கண்டேன்.எனது விரல் நுனி சுட்ட எரிவினால் எனது சிந்தனை கலைந்தது.நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

மக்கள் கூட்டத்தால் புகையிரத நிலையம் முழி பிதுங்கியது. யாழ்தேவி வருவதற்கான அறிவிப்பு சிங்களத்தில் , தமிழர்கள் செறிந்து வாழும் இடத்தில் தொடங்கியது.எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்ன சொல்கின்றார்கள் ? என்பது போல் மனைவியைப் பார்த்தேன். அவா ஒர் குறுநகையுடன் யாழ்தேவி வரப்போவதாகச் சொன்னா. நாங்கள் எல்லோரும் புகையிரதமேடையில் போய் நின்று கொண்டோம்.எனக்கும் யாழ்தேவிக்குமான உறவு எண்பத்தி நாலுகளுடன் முற்றாகவே அறுந்து விட்டது. நான் இந்தியாவில் படித்த காலங்களில் , விடுமுறைக்கு வந்து யாழ்தேவியில் பயணப்பட்டேன்.அதன்பின்பு இது தான் முதல்தடவையாகையால் யாழ்தேவியைப் பற்றிய எதிர்பார்ப்பால் மண்டை சூடாகியது.

சிறுவயதில் கோண்டாவிலுக்கு அப்பாச்சி வீட்டிற்குப் போனால் , பின்னால் உள்ள தண்டவாளத்தில் காதை வைத்து யாழ்தேவியின் வருகையைக் கேட்டு , தண்டவாளத்தில் ரின்பால் பேணி அல்லது சில்லறைக் காசுக் குற்றியை வைத்து அதன்மேல் யாழ்தேவியை ஓடவிடுவது எங்களுக்கு முக்கியபொழுது போக்கு. அன்றய காலகட்டத்தில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் அந்தஸ்து அடையாளமாக யாழ்தேவியும் தபால் , சேவையுமே பெரிய பங்கு வகித்தன. கோவில் திருவிழாக்களிற்கு வரும் கொழும்ப அரசசேவைக் கனவான்கள் இந்த இரண்டில் ஒன்றில் வந்ததாகப் பீற்றிக்கொள்வார்கள்.பின்பு இதே கனவான்கள் கப்பல்களிலும் , கிளாலியாலும் அல்லாடியது வேறுகதை.

தூரத்தே சிறிது இரைச்சலும் ஒளிப்பொட்டும் தெரிந்தன , மக்கள் திமிறினார்கள். புகையிரத என்ஜின் நிற்கப்போகும் இடத்திற்கு அருகாமையில் ஒரு அதிகாரி கையில் ஓர் ரெனிஸ் மட்டையப் போன்ற ஒரு வளையத்தை வைத்துக்கோண்டு நின்றார். யாழ் தேவி ஹோர்ணை அடித்துக்கொண்டு புகையிரத நிலையத்திற்குள் நுளைந்து கொண்டிருந்தது. அப்பொழுது கையில் வளையத்தை வைத்திருந்தவர் சாகசம் செய்பவர் போல் யாழ்தேவியுடன் ஓடி வளையத்தைக் கொடுத்து வளையத்தை வாங்கிக்கொண்டார். உண்மையில் எனக்கு இதைப்பார்க்க சிரிப்பாக இருந்து. இதுதான் வெள்ளை விசுவாசத்தின் உச்சக்கட்டமோ ? புகையிரதம் நின்றதும் மக்கள் சுழண்டு பொங்கியது எனக்கு எரிச்சலாக இருந்தது. நாங்கள் முற்பதிவு செய்ததால் ஓரமாக நின்று அவர்கள் ஏற வழிவிட்டேன். சின்னத்தான் எங்கள் பயணப்பொதிகளை உள்ளே ஏற்றினார். புகையிரதம் புறப்படத் தயாராக புகையிரத நிலைய அதிகாரி பச்சக் கொடி காட்ட விசில் சத்தம் கேட்டது. இதைப் பரம்பரைகள் கடந்தாலும் விடாப்படியாகச் சம்பிரதாயமாகவே வைத்திருந்தார்கள். நானும் மனைவியும் அத்தான்களிடம் விடைபெற்றுக்கொண்டு எமது இருக்கைகளைத் தேடிப் போனோம்.

அந்த முதல் வகுப்புப் பெட்டி ஓர் சிறய ரக விமானத்திற்குண்டான வசதிகளுடன் இருந்தது. விசாலமான நடைபாதையும் , வசதியான இருக்கைகளுமாக ஐரோப்பியப் புகையிரதங்களை எனக்கு நினைவுபடுத்தியது. மேலே பல மின்விசிறிகள் நாலாபக்கமும் சுழண்டடித்துக் காற்றைத் துப்பிக் கொண்டிருந்தன.எனது வியர்த்த உடம்புக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது. நாங்கள் எமது இருக்கைகளைத் தேடிப்பிடித்து வசதியாக இருந்துகொண்டோம்.

இப்பொழுது யாழ்தேவி வந்ததிசையிலேயே நகரத்தொடங்கயது. நான் சந்தேகத்துடன் மனைவியை நோக்கினேன்.எனது பார்வையைப் புரிந்து கொண்ட மனைவி , ஓமந்தைக்கு பாதைமாறி வருவதற்காகப் போகின்றது என்று சொன்னா.இப்பொழுது யாழ்தேவி ஆடி அசைந்து ஓமந்தை நோக்கி நகர்ந்தது.அருகே இருந்த வீடுகளின் லைற் வெளிச்சங்கள் பொட்டுக்களாகத் தெரிந்தன.எனக்கு ஓமந்தை என்றவுடன் மீண்டும் வியர்த்தது. ஆமியின் தொல்லைகள் இங்கும் இருக்குமோ ? என்று மனம் பலவாறாக அலைபாய்ந்தது. ஓமந்தையை அடைந்த யாழ்தேவி அங்கேயே நின்று சில நிமிடங்களை விழுங்கித் துப்பியது. தூரத்தே படைகள் ஏறுவதும் , இறங்குவதும் மங்கிய ஒளியில் தெரிந்தது. நான் யன்னலினூடக விடுப்புப் பாத்துக்கொண்டிருந்தேன். மீண்டும் யாழ்தேவி மெதுவாக நகர்ந்து வேகமெடுத்தது. வவுனியா மெதுவாக என்னிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது.

மங்கிய வெளிச்சத்தில் எனது கண்கள் நீர் நிறைந்து பளபளத்தது. என்நிலை உணர்ந்த என்னுடன் கலந்தவள் எனது கையை எடுத் ஆதரவாக இறுகப் பற்றிக்கொண்டாள். நான் ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டேன். நேரம் இரவு 11 30 ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது இரயிலின் காவலர் எல்லா ஜன்னல்களையும் பூட்டிக் கொண்டு வந்தார் , திருடர்கள் பயமாம். எனக்கு வெளியே புதினம் பார்கின்ற வேலையும் போய்விட்டது யாழ்தேவி கொழும்பை நோக்கி விரைந்தது. எமது பெட்டியில் எல்லோருமே நித்திரைக்குப் போய் விட்டார்கள். எனது மனைவியும் எனது தோளில் சாய்ந்து நித்திரைக்குத் தன்னைக் கடன் கொடுத்திருந்தாள். எனக்கும் நித்திரைக்கும் பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது. என் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.


சிறுவயதில் அம்மா என்னை ஒரு இறைபக்கதனாக வளர்த்தாலும் , இன்று அந்தக் கடவுளே எனக்கு முதல் எதிரியாக இருந்த வினோதத்தை என்னவென்று சொல்ல ??? விபரம் அறியாவயதில் என்னை என் மண்ணிலிருந்து பிய்த்து எடுத்த அந்தக்கடவுள் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. புழுதி தோயத்தோய ஓடிவிளையாடிய குச்சொழுங்கையும் , கேணியடியும் , சகோதரங்களுக்கும் , நான் நேசித்த வீட்டிற்கும் , நான் அன்னியதேசத்து சுற்றுலாப்பயணி. எல்லாக் கழுகுகளும் எங்களைத் தின்ன கண்ணை மூடிக்கொண்டு தானே இந்தக்கடவுள் இருந்தான். சிலநேரம் அவனும் அகதியாகப் போய்விட்டானோ ??? ஒரு குழந்தைப்பிள்ளை பாலுக்கு அழ , தனது மனைவியை அனுப்பி அந்தக்குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டினவனுக்கு , எமது குழந்தைகள் உயிர்பிச்சை கேட்டு அழுதபோது இந்தக் கடவுளுக்கு என்னவேலை இருந்தது ????? பலத்த மனப்போராடத்திலேயே நித்திரையைக் கட்டுக்குள் கொண்டுவந்தேன்.

யாழ்தேவி என்னைத் தாலாட்டியபடியே விரைந்து கொண்டிருந்தது. என்னுடன் அம்மா கனவில் கலராக வந்துகொண்டிருந்தா. அம்மா என்னைக் கூப்பிடுவது காதில் கேட்டது. நான் திடுக்கிட்டு விழித்தேன்.யாழ்தேவி அலங்கமலங்க நின்றுகொண்டிருந்தது. இரயிலில் ஒரே இருட்டாகவும் வியர்வையாகவும் இருந்தது. எமது பெட்டிக் காவலர் சிறிய ரோச்லையிற்றால் வெளிச்சத்தை எம்மீது அடித்துப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். இரெயில் மாகோ சந்திக்கு அருகே கொழும்பிலிருந்து வரும் இரெயிலுக்காகக் காத்திருந்தது. பெட்டியில் எழுந்த வெக்கையை போக்க மின்விசிறிகள் போராடித் தோற்றன. நான் சூனா அறைக்குள் இருந்தது போல் உணர்ந்தேன். உடம்பு நான் வேலை செய்யாமல் வியர்த்து ஊத்தியது. மனைவி தந்த சிறிய துவாயும் மணக்கத்தொடங்கியது. நான் நேரத்தைப்பார்த்தேன் , அதிகாலை 1 மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. எதிர்பக்கத்தில் இருந்து வந்த புகையிரதம் எங்களைக் கடந்ததும் , எமது இரயில் நகர்ந்து வேகமெடுத்தது. நான் மீண்டும் நித்திரைக்குப் போராட்டத்தைத் தொடங்கினேன். நித்திரையால் என்னைத் தத்து எடுக்க முடியவில்லை. என்னுள் நினைவுகளே எங்கும் அலை பாய்ந்து என்னைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது.

என்னையும் , எங்களையும் புரட்டிப்போட்ட விதியின்மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. மனைவி உறங்கியதால் நான் மீண்டும் தனித்தேன். தனிமையின் மறுபதிப்புதான் நானோ ?????எனக்கு சிகரட் பத்தவேண்டும் போல் தோன்றியது. நான் மெதுவாக மனைவியின் கைகளை விலத்தி விட்டு எழுந்து கழிப்பறைக்குள் நுளைந்து கொண்டே , கழிப்பறை ஜன்னலைத் திறந்து வைத்தேன். என் முகத்தில் இதமான குளிர் காத்து ஜன்னலின் ஊடாக வந்து மோதியது. நான் சிகரட்டை எடுத்து அதன் முனையைச் சிவப்பாக்கினேன். அதுவும் என் மனம் போன்று சிவப்பானது. நான் ஆழமாகப் புகையை இழுத்து விட்டேன். என் மனவெக்கையும் புகையுடன் கலந்து வெளியேறியது. நான் நேரத்தைப் பார்த்த பொழுது காலை 5 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வானத்தில் இருட்டிற்கும் சூரியனுக்கும் ஏற்பட்ட ரணகளத்தால் , சிவப்புப் பூச்சு அரும்பத் தொடங்கியிருந்தது. நான் நன்றாகக் குளிர்ந்த தண்ணியால் முகத்தைக் கழுவினேன்.எனது களைப்பு குளிர்ந்த நீரால் என்னிடம் விடைபெற்றது. நான் மீண்டும் எனது இருக்கையில் வந்து இருந்து கொண்டே , எமது இருக்கையின் ஜன்னல்களைத் திறந்து விட்டேன்.

நாங்கள் இப்பொழுது கம்பகா ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது ஓரளவு வெளிச்சம் பரவியிருந்தது. நான் அந்தக் காலை வேளையை ரசிக்கத் தொடங்கினேன் . கிராமங்களுக்கே உரிய அழகும் , பசுமை படர்ந்த வயல்வெளிகளும் அங்கே கொட்டிக் கிடந்தன. வயல்களில் சிங்கள விவசாயிகள் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள். இவர்கள் உண்மையில் அடிப்படையில் அப்பாவிகளாக இருந்தாலும் , பௌத்தம் சிங்களம் என்ற தம்பதிகளுக்குப் பிறந்த புதிய பரம்பரையினர். இவர்களது அன்றாடப் பிரைச்சனைகள் யாவுமே இந்த அம்மா அப்பாவால் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தன. அந்தப் பசுமை படர்ந்த வயல்வெளிகளில் லயித்த எனக்கு , தமிழனாகப் பிறந்த ஒரே கரணத்திற்காக எனது மண்ணும் , விவசாயமும் , மனிதவாழ்வும் வறண்ட பாலைவனமாகியதைத் தாங்க முடியவில்லை . மனதில் இனம்புரியாத வலி ஊடுருவிப் பரவியது.

யாழ்தேவி இப்பொழுது மருதானையில் தரித்து நின்றது . பலர் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள் . காலை நேரம் 7 மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது . எங்கள் பெட்டியில் இருந்தவர்கள் தாங்கள் கோட்டைப் புகையிரத நிலையத்தில் இறங்க இப்பவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள் . எனக்கு அவர்களின் பரபரப்பு சிரிப்பைத் தந்தது . கொழும்பு நகரின் ஊடாக யாழ்தேவி ஊர்ந்தது . சிறிது நேரத்தில் யாழ்தேவி கோட்டைப் புகையிரத நிலையத்தில் தன்னை மட்டுப்படுத்தியது . பயணிகள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு இறங்கினார்கள் . அந்தப் புகையிரத நிலையம் பலவித இரைச்சல்களால் சந்தைக்கடையாக மாறியிருந்தது. நாம் இருவரும் நிதானமாக இரயிலை விட்டு இறங்கினோம். நான் ஆசையுடன் யாழ்தேவியைத் தடவிக்கொடுத்தேன். நாங்கள் இறங்கியதும் எமது பயணப்பொதிகளைக் கண்ட பாரம் தூக்குபவர்கள் எங்களை மொய்துக்கொண்டார்கள். எனது மனைவியோ அவர்களுடன் சிங்களத்தில் கதைத்துக்கொண்டே முன்னோக்கி முன்னேறினா. நான் அவாவிற்குப்பின்னாலே எனது பயணப்பொதிகளைச் சுமந்தவாறே புகையிரத நிலயத்தின்வெளியே சென்றேன்.கோமகன் 
தொடரும். 
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…