Skip to main content

நாயன்மார்கள் அறுபத்துமூவர்- மெய்யியல் கட்டுரை - பாகம் 05 .


51 புகழ்ச்சோழ நாயனார் .

“பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்” – திருத்தொண்டத் தொகை .

சோழநாட்டு உறையூர்த் தலைநகரில் இருந்த அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர், அவர் தமது தோள்வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர்.

சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கரும், குடபுலமன்னவர்களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறைபெறற் பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் வழிபட்டு அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள் கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் அருளினர். அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார்.

இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமி ஆண்டார் என்னும் அடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் பட்டத்து யானையினையும், பாகரையும் எறிந்து கொன்ற எறிபத்தரிடம் யானையால் நேர்ந்த சிவ அபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளினை நீட்டித்த் திருத்தொண்டில் தலை நின்றவர்.

இந்நாளில் அளந்து திறை கொணராது முரண்பட்ட அதிகன் என்பவன் அணித்தாகிய மலை அரணில் உள்ளான் என்று அமைச்சர் அரசர்க்கு அறிவித்தனர். படை எழுந்து அவ்வரணியை அழித்து வரும்படி அமைச்சர்க்கு அரசர் கட்டளை இட்டார். அமைச்சர்களும் அவ்வாறே சேனையுடன் சென்று அவ்வலிய அரணை முற்றுகை இட்டு அழித்து அதிகனது சேனையினை வென்றனர். அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான்.

அமைச்சர்கள் வெற்றியுடனே அங்கு நின்றும் யானை, குதிரை முதலியவற்றையும் போர்ச்சின்னமாகத் கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்த தலைக்குவியல்களுள் அரசர், ஒரு தலையிற் புன்சடையைக் கண்டார். கண்டு நடுங்கி தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகா இது என்று தம்மை இகழ்ந்து கொண்டார். ஒன்று செய்யத் துணிந்து தம் குமரனுக்கு முடிசூட்டும் படி அமைச்சருக்குக் கட்டளை இட்டார். தமக்குச் சேர்ந்த சிவ அபராதகமாகிய பழிக்குத் தீர்வு தாமே வகுப்பராகிச் செந்தீமுன் வளர்ப்பித்தார். பொய்ம்மாற்றும் திருநீற்றுக் கோலம் புனைந்தனர். அச்சடையினைப் பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக்கொண்டு, எரியை வலம் வந்து திருவைந்த்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட் புகுந்து இறைவரது கருணைத் திருவடி நிழற்கீழ் நீங்காது அமைந்திருந்தனர்.

52 புகழ்த்துணை நாயனார் .

“புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.
புகழ்த்துணையார் சோழ நாட்டிலுள்ள செருவிலிபுத்தூரிலே சிவவேதியர் குலத்தில் தோன்றினார். சிவனது அகத்தடிமைத் தொண்டிற் சிறந்த அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்தது. அவர் பசியில் வாடினார். அப்போதும் இறைவரை விடுவேனல்லேன் என்று இரவும் பகலும் விடாது பூவும் நீரும் கொண்டு பூசித்து வந்தார். ஒருநாள் பசியால் வாடி இறைவரைத் திருமஞ்சனமாட்டும் பொழுது திருமஞ்சனக்குடத்தைத் தாங்கமாட்டாமையினால் கைதவறிக் குடத்தினை இறைவர் திருமுடிமேல் விழுத்திவிட்டு நடுங்கி வீழ்ந்தார். அப்போது இறைவரது திருவருளால் துயில் வந்தது. இறைவர் அவரது கனவில் தோன்றி ‘உணவுப்பொருள் மங்கிய காலம் முழுவதும், ஒரு காசு நாம் தருவோம்’ என்று அருளினார். புகழ்த்துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ்ப் பொற்காசு கண்டு கைக்கொண்டு களித்தனர். அவ்வாறு பஞ்சம் நீங்கும்வரை இறைவர் நாடோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி, இறைவரது வழிபாடு செய்து வாழ்ந்திருந்து பின் சிவனடி சேர்ந்தனர்.

53 பூசலார் நாயனார் .

தொண்டை நாட்டில் திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகையார். இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாதவராயினர். இந்நிலையில் மனத்திலே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார். மனத்தின்கண் சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார்.

நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம் வகுத்தமைத்து இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்.

இவரது திருப்பணி இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், காடவர்கோனாகிய வேந்தர்பெருமான் காஞ்சி நகரத்திலே இறைவனுக்குத் திருக்கற்றளி அமைத்துத் தன் பெரிய பொருள் முழுவதையும் அத்திருக்கோயிற் பூசனைக்கென்று வகுத்துத் தான் அமைத்த கற்றளியிலே சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார் அகத்தில் வகுத்த அந்த நாளையே குறித்தார். பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அந்நாளின் முதல் நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி நின்றவூர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுவோம்; நீ இங்கு செய்யத்துணிந்த தாபனத்தினை நாளைய தினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்றொரு நாளில் செய்வாயாக’ என்று பணித்தருளி மறைந்தருளினார்.

பல்லவர்கோன், துயிலுணர்ந்தெழுந்து இறைவர் உளமுவக்கும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு அருகணைந்தவர்களை நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார். அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, ஆசில் வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ‘தேவரீர் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்தருளத் தெரிந்து உம்மைக்கண்டு பணிதற்கு வந்தேன்’ என்றார். பூசலார், அரசன் உரைகேட்டு மருண்டு, ‘இறைவர் என்னையும் பொருளாக அருள்செய்தாராயின் அக்கோயிலின் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அரசன் அதிசயித்துப் பூசலாரை நிலமுற்றத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.

பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைத் தாபித்துப் பூசனைகள் எல்லாம் பெருஞ்சிறப்புடன் பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடிநீழலையடைந்தார்.

54 பெருமிழலைக் குறும்ப நாயனார் .

“பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை .

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர்.

இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார்.

இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார்.

“திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்” என்று எண்ணி ‘இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்’ என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

55 மங்கையர்க்கரசியார் நாயனார் .

“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.

மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையயோரெல்லாம் சமண சயத்தவராகவே இருந்தனர். இவ்வண்ணம் சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். அவர் பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற கருத்தினராய் இருந்தார். 



இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அணித்தாகத் திருமறைக்காட்டில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக் களிப்புற்றார். சம்பந்தப்பிளையார் தொலைவில் இருந்தாலும் அவர் தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார்.
அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானிடம் பரிசனத்தாரை அனுப்பிவைத்தார். பரிசனத்தார் சென்று பரசமயக்கோளரியாரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக் கூறினார்கள். சம்பந்தப்பிள்ளையாரும் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளத் திருவுளம் பற்றினார்.

சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகங்களையும் வணங்கி மதுரையம்பதியை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நன்நிமித்தங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்தவள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.

ஆலவாயமர்ந்தபிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார். 



வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில் முன்றில் வந்தபோது தலைமிசைச் குவித்தகையராய் முன்சென்றார். பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வருமிவரே பாண்டிமாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியார்ப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க “யானும் என்பதியும் செய்த தவம் என்கொல்” (அதாவது நானும் என்கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது) எனவாய் குழறிக் கூறிநின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.



பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் யாதும் பேசாமல் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன?. துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ (அதாவது கண்டதால் துடக்கு) யான் அதனை ‘கேட்டு முட்டு’ (அதாவது கேட்டதால் துடக்கு) எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்?. கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.

அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த (தங்கியிருந்த) மடத்துக்குத் தீவைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இவ்வண்ணம் வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதிற்புக்க அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’ எனப் பணித்தான். 



அரசியார் அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு பெருவெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத்திருவுருவாயும், வேதகாவலராகவும், மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும், சிவபெருமானது சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்தவராய் அடிகளில் வீழ்ந்து அழுது அரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. இத்தீப்பிணியைத் தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனப் பணித்தார். ஆளுடைய பிள்ளையார் ‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார். 



சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள் மங்கையற்கரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். செம்பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் கோலும் நூலும் கொண்டு குரைத்தனர். அநேகராய் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலன் வாயொரு பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவராயின் வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. 



சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டிய மன்னனுக்குப் பரமசமய கோளரியார் திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகரத்துள்ளோரெல்லாம் மங்கல நீறணந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன் ஆதியாரோடு அங்கயற்கண்ணி தன்னோடுமமர்ந்த ஆலவாயண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.

சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டுக் குலச்சிறையார் அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார்.
மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல ஒருப்பட்டனர். பிள்ளையார் அவர் தம் பேரன்பிற்கு உவப்புற்றனரெனினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடையபிள்ளையின் ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடையீந்து சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறியைப் போற்றி இருந்தனர்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயிறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். மன்னனுக்கு நெடுங்காலம் சைவவழித்துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

56 மானக்கஞ்சாற நாயனார்.

"மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்" – திருத்தொண்டத் திருத்தொகை .

மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.

மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்துணந்தவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருளெல்லாம் சிவனடியார்குரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர்.

கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பிறப்பு ஒளிக்கப் பிறந்த அப்பெண் கொடி பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார்.

கஞ்சாறர் குடிக்கு ஒத்த சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசி, முதியவர்கள் சிலர் வந்தனர். கஞ்சாறர் மனம் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார். முகூர்த்தநாள் குறித்தனர். கஞ்சாறு மணக்கோலம் பெற்றது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார். 



திருமண ஊர்வலம் கஞ்சாறு நகருள் வருவதற்கு முன் கஞ்சாறரது சிந்தையுள் உறையும் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு அவர்தம் திருமனைக்கு எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பொக்கணம், பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் பொலிந்தது. மாவிரதிக் கோலத்துச் சிவனடியார் அம்மங்கல நாளில் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம்மிக மகிழ்ந்தார். அவரை அன்போடு பணிந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து இன்மொழி கூறி ஆசனமளித்தார். மாவிரதியார் ‘இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன?’ என்று கேட்டார். ‘அடியேன் பெற்ற மகளது திருமணம்’ எனக் கஞ்சாறர் கூறினார். உடனே ‘மங்கலம் உண்டாகுக’ என மாவிரதையார் வாழ்த்தினார். 



கஞ்சாறனார் திருமணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிரதியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கருமேகம் போன்ற கூந்தலைப் பார்த்து மாவிரதையார் ‘இது நமது பஞ்சவடிக்கு ஆகும்’ எனக் கூறினார். அது கேட்ட கஞ்சாறர் பிறப்பறுப்பவர் போன்று தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடியவரும் அதனை வாங்குவார் போன்று மறைந்தருளி வானிலே உமையம்மையாரோடும் வெள்ளை எருதின்மேல் தோன்றினார். அதுகண்டு மெய்மறந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்ற கஞ்சாறர்க்கு “உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்” என அருளினார். உச்சிமேற் குவித்த கையராய் பெருமானது பெருங்கருணைத் திறத்தைப் போற்றும் பேறு பெற்றார் மானக்கஞ்சாறநாயனார். கஞ்சாறர்க்கு அருள் செய்து கண்ணுதலார் மறைந்தருள், ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணமற் போனதற்கு மனந்தளர்ந்தார். இறைவர் அருளிய சோபன வார்தையின் திறம் கேட்டு தளர்ச்சி நீங்கினார். வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளரப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய மங்கையை மணம் புனர்ந்து தம் மூதூருக்குச் சென்றணைந்தார்.

57 முருக நாயனார் .

“முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். 



ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார்.

சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார்.

58.முனையடுவார் நாயனார் .

“அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை .

முனையடுவார் நாயனார் சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்; போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையாற் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித் கொண்டிருந்தார்.
முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

59 மூர்க்க நாயனார் .

“மூர்க்கற்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை .

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நற்சூதினால் பொருளாக்க முயன்றனர். தம்மூரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.




Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்














000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…