Skip to main content

என்ரை தீபாவளி - பத்தி - கோமகன் .

சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் நல்லாய் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசணத்தாலை பேசும் . எங்களுக்கு அந்த நேரத்திலை உதெல்லாம் காதிக்கை ஏறாது . 

அடுத்தநாள் விடியப்பறமே அம்மா எங்களை எழுப்பாமல் எழும்பீடுவம் . நல்லபிள்ளையளாய் உமிக்கரி எடுத்துக் கொண்டுபோய் , அண்டைக்கெண்டு பாத்து தேய் தேய் எண்டு தேய்ப்பம் . அம்மாச்சி அண்டைக்கெண்டு எங்களுக்கு வில்லியாய் நிக்கும் . சுடவைச்ச நல்லெண்ணையை தலையிலை வைச்சு கண் எரிய எரிய நல்லாய் தேச்சு மசாஜ் பண்ணிவிடும் . அதோடை இலுப்பை அரப்பை வைச்சு தேச்சு விட்டு எங்களைப் படாதபாடு படுத்தும் . நாங்கள் கண்எரிவிலை கத்தினாலும் மனிசி முன்னுக்கு வைச்சகாலை பின்னுக்கு வைக்காது . பக்கத்திலை அண்டாவிலை சுடுதண்ணி கொதிச்சு கொண்டு இருக்கும் . மனுசி கிணத்து தண்ணியை வாளியாலை கிள்ளி அண்டாவிலை விளாவும் . நல்ல இதமான சுடுதண்ணியாலை குளிப்பாட்ட தொடங்கத்தான் எங்களுக்கு போன உயிர் திரும்பிவரும் . இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டு குளிச்சுமுடிச்சு அம்மா தைச்ச உடுப்புகளை போடுவம் . 

அந்த நேரம் எல்லா வீட்டிலையும் குறைஞ்சது ஐஞ்சு ரிக்கற்றுகளுக்கு மேலை . சிலவீட்டில பன்ரெண்டு ரிக்கற்றுகளும் பாத்திருக்கிறன் . இவ்வளவுபேருக்கும் உடுப்புகள் எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை . அந்த நேரம் எங்கடை அப்பாமார் சீத்தை துணியள்தான் வண்ணம் வண்ணமாய் வாங்குவினம். அப்ப லக்ஸசல சீத்தையும் , பூகொட சீத்தையும் தான் பேமஸ் . லைற்றான மண்ணெண்ணை வாசம் அடிச்சாலும் , நாங்கள் அதுகளின்ரை டிசைனுகளிலை மருண்டிடுவம் . நாங்கள் எல்லாரும் உடுப்புகளை போட்டுக்கொண்டு விடயப்பறமே கோயிலுக்கு ஓடிப்போவம் . அங்கை எங்களுக்கு வேலை ஆரார் என்ன உடுப்புகள் போட்டு வந்தவை எண்டு பாக்கிறது . கோயில் மணிக்கூட்டு கோபுரத்திலை காண்டாமணியை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறது எண்டு ஏகப்பட்ட சோலியள் . பேந்து கோயிலாலை வந்த எங்களுக்கு அம்மாச்சி எல்லாருக்கும் பலகாரங்கள் பங்கிட்டு தரும். அதோடை சொந்தக்காறர் வீட்டுக்கும் பலகாரம் குடுக்கச்சொல்லி தரும் . 

எனக்கு ஐஞ்சாறு மச்சாளவை இருந்தவை . ஆனால் எல்லாரும் என்னைவிட வயசு கூடினவை. அவைக்கு குட்டிமச்சான் எண்டு என்னிலை செரியான பட்சம் . எல்லாரும் என்னை தங்கடை மடியிலை தூக்கி வைச்சு தாங்கள் சுட்ட பலகாரங்களை தருவினம் . நான் நல்ல புழுகமாய் சாப்பிடுவன் . பேந்து எல்லாரும் விளையாடுவம் . அப்ப கீ அடிக்கிறது , கிட்டி புள்ளு , ஒப்பு , கிளித்தட்டு இப்பிடியான விளையாட்டுகள்தான் பேமஸ் . கிளித்தட்டிலை பெட்டையள் அளாப்புவாளவை . சிலநேரம் அடிபாடுகள் முத்தி முகத்திலை காயங்கள் வந்து ரணகளமாய் போடும் . அம்மாச்சி எங்கடை அசுமாத்தங்களை கேட்டு ஓடியந்து எல்லோருக்கும் முதுகிலை நல்ல போடு போட்டு வீட்டை கூட்டிக் கொண்டு போவா . நாங்கள் அங்கை போனால் நல்ல மரக்கறியோடை ஆட்டுப்பங்கு கறியும் சேத்து , சோத்தை ஒரு பெரிய பாத்திரத்துக்குள்ளை போட்டு குழைச்சு , அம்மாச்சி எல்லாருக்கும் பூவரசம் இலையிலை வைச்சு தருவா . நாங்கள் அப்பவும் விளையாடி விளையாடித்தான் சாப்பிடுவம் . பேந்து கொஞ்ச நேரம் எல்லாரும் நித்திரை கொண்டுபோட்டு , திரும்பவும் கிட்டி புள்ளு விளையாடப் போவம் . இந்தக் கூத்துகள் சின்னவயசிலை .

பேந்து வெடிவால் முளைக்க , நியூமார்கற் நானா ரெயிலரிட்டை தைச்ச பெல்பொட்டமும் , உடம்பை இறுக்கின சேர்ட்டும் போட்டுக்கொண்டு ரவுணுக்கு, தீபாவளியளுக்கு வந்த படங்களை பாக்கப் போவம் . அப்ப வின்ஸர் தியேட்டரும் , ரீகல் தியேட்டரும் தான் எங்கடை முதல் தெரிவு . இதிலை ரிக்கற் கிடைக்காட்டில்தான் ராஜா தியேட்டருக்கும் , ராணி தியேட்டருக்கும் போவம் . இதுக்குள்ளை அவனவன் தங்கடை சரக்குகளையும் விக்னா ரியூட்டரியிலை ஸ்பெசல் கிளாஸ் எண்டு வீட்டிலை டிமிக்கி குடு​த்துப்போட்டு கூட்டியருவாங்கள் . இப்பிடியெல்லாம் எங்கடை தீபாவளி கொண்டாட்டங்கள் அப்ப போச்சுது . ஆனால் இப்ப இந்த தேன் கூடுகள் இல்லை . எல்லாம் திக்குதிக்காய் கலைஞ்சு போச்சுது . என்ரை அம்மாச்சியும் போய்சேந்திட்டா . எந்தக்காலத்திலையும் எங்கடை அனுபவங்களை இப்பத்தையான் குஞ்சுகுருமனுகள் எடுக்கப்போறேலை . கிட்டிபுள்ளு , கிளித்தட்டு எண்டால் இப்பத்தையான் யாழ்ப்பாணத்து பிள்ளையளுக்கு தெரியுதில்லை .......... சிலநேரம் நாங்கள் தான் லூசுகளோ???


கோமகன்

12 கார்த்திகை 2012


Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…