Monday, December 31, 2012

நீங்கள் என்ன நினைக்கிறியள் ?????


நீங்கள் என்ன நினைக்கிறியள் ?????
எனக்கு இந்த வரியப்பிறப்பை வரவேற்கிறதிலை அவ்வளவாய் விருப்பம் இல்லை . இப்பிடி நான் சொல்லிறது உங்களுக்கு கட்டாயம் பிடிக்காமல் போகும் . என்னை பொறுத்தவரையிலை எப்ப எங்களுக்கு விடிவு எண்டு வருதோ அப்பதான் எங்களுக்கு வரியம் பிறந்ததாய் அர்த்தம் . ஒரு பொம்பிளை தனிய பஸ்சிலை போகேலாமல் கிடக்கு . ஒரு சின்னப்பிள்ளை றோட்டிலை விளையாடேலாமல் கிடக்கு . இயற்கை அள்ளிக்கொடுத்த கடலிலை நாங்கள் போய் மீன் பிடிக்கேலாமல் கிடக்கு . கிட்டமுட்ட 60ம் ஆண்டிலை இருந்து பிறந்த பரம்பரையளை பலி குடுத்துப்போட்டு நிக்கிறம் . இதெல்லாம் எங்கடை நாட்டிலையும் எங்களுக்குப் பக்கத்திலை இருக்கிற நாட்டிலையும் நடந்து கொண்டிருக்கிற விசையங்கள் . இப்பிடி எங்களுக்கு விடிவை குடுக்காத கொண்டாட்டங்களை நாங்கள் சம்பெயின் உடைச்சோ , வைன் உடைச்சோ , பாபர்கியூ போட்டோ கொண்டாடிறது எங்களை நாங்களே ஏமாத்திறது மாதிரி . அதுவரைக்கும் இப்பிடியான விசையங்களை எங்களை கடந்து போற மற்ற நாளுகள்மாதிரி எடுக்கிறதுதான் நல்லது எண்டு நினைக்கிறன் . நீங்கள் என்ன நினைக்கிறியள் ??

Sunday, December 30, 2012

வேட்டை.............

வேட்டை.............1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கிறன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 98 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார். நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன் . எல்லாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பழகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை . என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார் .

அப்பர் அடிச்ச காயம் எனக்கு செரியான கோபத்தை கிளறி போட்டுது . நான் சாப்பிடாமல் அடம் பிடிச்சன் . அம்மாச்சி வேப்பண்ணை பூசி சமாதானத்துக்கு வந்திது . நான் அம்மாச்சியோடையும் கதைக்கேலை . இண்டைக்கு காலமை எழும்பி தமிழ் புத்தகத்தை துறந்து வைச்சுக்கொண்டு சும்மா படம் காட்டிக்கொண்டிருந்தன் . சந்திரனும் முயலும் பாட்டும் எனக்கு மண்டையிலை ஏறேலை . எங்கடை கறுவல் நாய் காலடியிலை கிடந்து என்னைப் பாத்து கொண்டிருந்திது .

தூரத்திலை நாயள் குலைச்சு கேட்டிது . அதோடை விசில் சத்தங்களும் கேட்டிது . எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை . நாயள் குலைச்ச சத்தம் வரவர கிட்டீச்சுது என்ரை காலடியியைலை கிடந்த கறுவல் காதை நிமித்தி எழும்பி நிண்டு எதிர்பாட்டு பாட ஆயுத்தப்படுத்தீச்சிது . நான் மெதுவாய் ஒழுங்கையை எட்டிப் பாத்தன் . ஒழுக்கையில ஐஞ்சாறு மண்ணிற வேட்டை நாயள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வந்திதுகள் . அவைக்கு பின்னாலை கறுவல் நிறத்திலை கோமணம் கட்டிக்கொண்டு ஒரு ஏழு எட்டு பேர் வந்து கொண்டிருந்தினம் . அவையளுக்கு பின்னாலை வைத்தியும் புண்ணாக்கும் ஓடிக்கொண்டு வந்தாங்கள் . எங்கடை கேற்றடியிலை நிண்டு என்னை பாத்து சொன்னாங்கள் ,

 " டேய் பத்து இடியப்பம் வேட்டைக்காறங்கள் வந்திருக்கிறாங்கள் . வாடா பம்பல் பாப்பம் " எண்டு .

நான் ஒருக்கா வீட்டை பாத்துப் போட்டு நானும் அவங்களோடை சேந்து ஓடினன் . எங்களோடை சேந்து சின்னன் பொன்னன் எல்லாம் எங்களுக்குப் பின்னாலை ஓடியந்திதுகள் . வேட்டை காறர் கேணியடிக்கு பக்கத்திலை இருந்த சிறாப்பற்ரை பத்தை காணியிலை நிண்டாங்கள் . சிறப்பற்றை காணிக்குள்ளை நாயுண்ணி பத்தையளும் கொஞ்சம் பெரிய மரங்களும்தான் கிடக்கு . நாங்கள் நாயளுக்கு பின்னாலை நிண்டம் . எங்களுக்கு கிட்ட போக பயமாய் கிடந்திது . அதுகள் இடுப்புக்கு கிட்ட உயரமாய் நிண்டுதுகள்.

நாங்கள் நாயளை பாத்துக்கொண்டு நிக்க , சிறாப்பற்றை நாயுண்ணிபத்தைக்கை ஒரு அசுமாத்தத்தை கண்ட வேட்டைகாறன் தன்ரை பீப்பீ குழலை ஊதி கொண்டு , நாயளை பாத்து "சூய்............... " எண்டான் . பத்தைக்குள்ளை ரெண்டு காட்டு முயலுகள் பிச்சுக்கொண்டு ஒட , நாயள் விட்டு கலைச்சுதுகள் . நாங்கள் நாயளைப் பாத்து ஓடு........ ஓடு.......... எண்டு கத்தினம் . வேட்டைக்காறர் பீப்பீயை ஊதிறிதை நிப்பாட்டாமல் ஊதீச்சினம் . ஓடின நாயள் தூரத்திலை போய் காட்டுமுயலை கழுத்தான் குத்தியிலை பிடிச்சு கொண்டு திரும்பி எங்கடை பக்கம் ஓடியந்திதுகள் . முயலுகளின்ரை கழுத்திலை ரத்தம் வந்திது . ஒரு வேட்டைக்காறன் முயலுகளை நாயளின்ரை வாயிலை இருந்து எடுத்து , தன்ரை இடுப்பிலை இருந்த வில்லுக்கத்தியாலை முயலின்ரை தோலை உரிச்சான் . மற்றவன் பக்கத்திலை நிண்ட பனை வடலியிலை பனை ஓலையை வெட்டி தொன்னை செஞ்சு அதிலை முயலுகளை போட்டு கட்டினான் .

பக்கத்திலை நிண்ட இலுப்பை மரத்திலை நிண்டு விளையாடிக்கொண்டு இருந்த அணிலுக்கு அண்டைக்கு பாத்து சனி வக்கிரிச்சு போட்டுது . வைத்தியோடை நிண்ட வேட்டைக்காறன் தன்ரை கையில இருந்த கெற்றம் போலாலிலை கல்லை வைச்சு ஒரு கண்ணை மூடிக்கொண்டு இழுத்து அணிலின்ரை தலைக்கு அடிச்சான் . குறி தப்பேலை அணில் சுறுண்டு விழுந்திது . புண்ணாக்கு அணில் விழுந்ததை வாயை பிளந்து கொண்டு பாத்தான் . அணிலும் பனை ஓலை தொன்னைக்குள்ளை போச்சுது . நாயள் பேந்தும் ஒரு முயலை கலைச்சு கொண்டு ஓடீச்சிதுகள் . இந்தமுறை முயல் நாயளை உச்சிப்போட்டுது . ஆனால் நாயள் முயல் ஒழிச்ச பத்தையை சுத்தி ரவுண்டப் பண்ணீட்டுதுகள் . கடைசியில முயலை ஒரு நாய் பத்தைக்குள்ளை பூந்து கழுத்திலை பிடிச்சு கொண்டு வர , மற்ற நாயளும் ஆரவாரப்பட்டு எல்லாம் ஓடி வந்தீச்சிதுகள் . அந்தமுயலும் பனை ஓலைக்குள்ளை போச்சுது .

வேட்டை காறர் அண்டைக்கு செய்த வேலையாலை எங்கடை மூண்டு கூட்டுக்கும் நல்ல பம்பல் . அவை எல்லா இறைச்சி தொன்னையளையும் இடுப்பிலை கட்டி நாயளை கூட்டி கொண்டு திரும்ப ஒழுங்கையாலை வந்தீச்சினம் . வேட்டைக்காறங்களை பாத்த அம்மாச்சிக்கு அண்டங்கிண்டம் எல்லாம் பத்தீச்சிது . அவங்களை தூசணத்தாலை பேசி எனக்கு நல்ல மண்டகப்படி தந்துதான் விட்டீச்சுது மனுசிசி .

1985 ஒருநாள் காலமை நான் பள்ளிகூடம் வெளிக்கிட்டு ஒழுங்கை தண்டி பருத்தித்துறை றோட்டுக்கு வந்தன் . தூரத்திலை ஒரு உறுமல் சத்தம் கேக்கிது . எனக்கு விளங்கீட்டுது வேட்டைகாறங்கள் வாறாங்கள் எண்டு . கவசவாகனத்திலை வந்த வேட்டைக்காறர் என்னோடை வந்த வைத்தி , புண்ணாக்கு , தோப்பிளாண்டி , சுறுக்கன் எல்லாரையும் உடுப்பை கழட்டி பெண்டறோடை றோட்டிலை படுக்க வைச்சுபோட்டாங்கள் . அதுவும் பள்ளிக்கூடம் போக நிண்ட பெட்டையளுக்கு முன்னாலை .நாங்கள் சிறாப்பற்றை நாயுண்ணி பத்தைக்குளால ஓடின காட்டுமுயலுகள் மாதிரி முழுசிக்கொண்டு றோட்டிலை படுத்திருந்தம் .

யாவும் உண்மையே

30 மார்கழி 2012
கோமகன்

Wednesday, December 26, 2012

ஆழாத்துயர்..............

ஆழாத்துயர்..............எட்டு ஆண்டானாலும்
அவலம் மாறாத நிலை
வேண்டும் என்று செய்து
வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா
தாய் என்று மதித்தோர்க்கு
தயவற்ற செயல் செய்தாய்
பேயாக நீமாறி பெருந்துயர்
இளைத்தாயே

 கடல் அம்மா என்று
வாயார வாழ்த்திய மக்களை
வசைபாட வைத்தாயே
உன் நியாயமற்ற செயலால்
நடுத்தெருவில் எத்தனை பேர்
நாதியற்று தனிமரமாய்

 சிறியோரும் பெரியோரும்
சின்ன பச்சிளம் சிறாரும்
சிதறி எத்தனை பேர்
போனவர்கள்
வருவார்கள் என பொய்த்த
வரவுக்காய் வழியை
வழிபார்த்தபடி
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் கூட
ஆழாத் துயருடன் இன்றும்
எத்தனை உள்ளங்கள்


கோமகன்Sunday, December 23, 2012

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும் !!!!!!!!!

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும் !!!!!!!!!


முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தாறன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு )  . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் .

இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீடியோ கிளிப் ஒண்டை காட்டிச்சிது . இதை ஒருக்கால் பாருங்கோப்பா எண்டு . எனக்கு ஐஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டு போச்சிது . இவளவை நோர்மலாயே சீரியலுகளுக்கை சிக்கெடுக்கிறவளவை ,  இதுகளையும் பாத்தாளவை எண்டால் எங்கடை நிலமையை யோசிச்சு பாத்தன் , எனக்கு கிறுதி அடிக்காத குறை கண்டியளோ . அலட்டாமல் நேரை மாற்றறுக்கு வாறன் . என்ரை அம்மாவும் அம்மாச்சியும் செய்து அன்பாய் தந்த சாப்பாடுகள் எல்லாம் மெசின் செய்யிது . இதைப் பாக்கேக்கை எனக்கு கொஞ்சம் குறுக்காலை போன கேள்வியள் வந்து துலைக்கிது பாருங்கோ . இந்த மெசினுகள் இருந்தால் என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த மனுசிமார் எண்ட கேள்வி வராதோ ?? எனக்கு அம்மாச்சியாலையும் அம்மாவாலையும் தந்த அன்பு பாசத்தை இந்த மெசினுகள் தருமோ ?? இப்பவே இந்த அலப்பரை விடுகிற மனுசிமார் இந்த மெசினுகளை வாங்கி போட்டு எங்களை என்ன பாடுபடுத்துவாளவை ?? இந்த மெசினாலை எத்தினை பேருக்கு வேலை இல்லாமல் போகிது ?? இப்பிடி கன கேள்வியள் எனக்கு மண்டையுக்கை அடிக்கிது . தாய்குலங்கள் என்னை கடிச்சு குதறாமல் உங்கைடை அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோவன் . அதுகாக சிங்கனுகள் பம்மிறதை விட்டிட்டு சிலுப்பிக்கொண்டு நீங்களும் உங்கடை பக்கத்து நியாயங்களை சொல்லுங்கோ . இதுதான் மனுசி எனக்கு கீல் ஏத்தின வீடியோ .