Saturday, December 28, 2013

பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்


பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்கிட்டடியிலை ஒரு படம் ஒண்டு முகனூலிலை பாத்தன் . எனக்கு பழைய நினைவுகள் மண்டைக்குள்ளை சாம்பிராணி புகை மாதிரி சுழண்டு ஊரிலை போய் றொக்கி எடுத்துது . எங்கடை ஊரிலை பிள்ளையார் கதை படிக்கிற காலங்களிலை பிள்ளையார் கோயிலடி முழுக்க ஒரே பக்தி பழமாய் இருக்கும் ஊரிலை நிண்ட ஆடு கோழியெல்லாம் தாங்கள் தப்பீட்டம் எண்டு சந்தோசமாய் திரிவினம் . பிள்ளையார் கோயிலடியிலை காலமை பூசை தொடங்கி ஒரு மத்தியான நேரம் மட்டிலை ஒரு பழசு பிள்ளையார் கதை படிக்க தொண்டைய செருமும் . இந்தக் கதை படிச்சு முடிய கிட்டமுட்ட ஒரு அரை மணித்தியாலம் எண்டாலும் எடுக்கும் .  இப்பிடி 21 நாளைக்கு ஒவ்வருநாளும் இந்த றொட்டீனிலை நடக்கும் .

அந்த நேரம் எங்கடை பிரச்சனையள் வேறை . எங்கடை கோயில்லை குளறி சின்னத்
தம்பியர் எண்டு ஒரு நாட்டாண்மை இருந்தவர் . அவற்றை வேலை எங்களை கொண்றோல் பண்ணுறது . பொம்பிளையளுக்கு முன்னாலை தான் ஒரு பயில்வான் எண்டு காட்டிறது . அவரை ஏன் குளறி சின்னத்தம்பி எண்டு சொல்லிறனாங்கள் எண்டால் அந்தாள் ஒருக்காலும் மெல்லிசாய் கதைக்கிற மனுசன் இல்லை . பக்கத்திலை நிண்டால் காது கன்னம் எல்லாம் வெடிக்கும் . அவருக்கு தண்ணி வென்னியோ சுருட்டு அடிக்கிற பழக்கமோ இல்லை . அனாலும் வஞ்சகம் சூதுவாது இல்லாத மனுசன் . குளறி சின்னத்தம்பியாருக்கு சொந்தமாய் ஒரு பொயிலை தோட்டமும் ஏழெட்டு மாடுகளும் நிண்டது . அவற்றை பிரச்னை எல்லாம் நாங்கள் கோயிலடியிலை அடக்க ஒடுக்கமாய் இருக்கவேணும் அதுக்காக எதுவும் செய்வார் . எங்களுக்கு உந்த அடக்க ஒடுக்கமெல்லாத்துக்கும் எழிலை சனி .


பிள்ளையார் கதை படிக்கிற நாளுகளிலை எங்கடை சோலியள் எக்கச்சக்கம் . வாற பெட்டையளுக்கு பொக்ஸ் அடிக்கிறது . அவையளுக்கு  வாற வெளி ஆக்களின்ரை பிரைச்சனையளுக்கு நாங்கள் செண்றி   குடுக்கிறது . கதை வாசிச்சு முடியிற நேரத்திலை ஐயர் ஆலாத்தி காட்டினால் பிறகு படைச்ச பிரசாதம் குளறி சின்னத்தம்பியர் தான் மெயின் ஆளாய் நிண்டு குடுப்பர் . நாங்கள் லையினிலை நிண்டால்தான் ஒழுங்காய் கிடைக்கும் . அதுவும் அண்டைக்கு எவன் நல்லவனாய் இருந்தானோ அவனுக்குதான் கூட . எனக்கு ஒரு சின்ன கிள்ளல் தான்  கிடைக்கும் . அதோடை குளறியர் பஞ்சமிர்தம் குடுக்கிற ஸ்ரைலைப் பத்தி இந்த இடத்திலை நான் உங்களுக்கு கட்டாயம் சொல்லவேணும் . குளறியர் எந்த நேரமும் கொடுக்கு கட்டிக் கொண்டுதான் நிப்பார் . ஆளுக்கு வேர்வை உடம்பு வேறை , பஞ்சாமிர்தம் குடுக்கிற நேரம் குளறியருக்கு வேர்வை எண்டால் அப்பிடி ஒரு வேர்வை . அதோடை ஆளுக்கு சொறி வேறை . ஆள் ஒரு கையாலை வேர்வையையும் துடைச்சு கொண்டு டிக்கியிலையும் சொறிஞ்சு கொண்டு பஞ்சாமிர்தம் குடுப்பார் பாருங்கோ சொல்லி வேலையில்லை .  அந்த நேரம் சிவ சத்தியமாய் அது எங்களுக்கு ஒரு வித்தியாசமான ரேஸ்ராய் இருக்கும் . இப்ப நினைச்சால் வயித்தை பிரட்டும் .

பிள்ளையார் கதை நேரதில்லை குளறியரின்ரை அலப்பரையள் ஒரு கட்டத்துக்கு மேலை எங்களுக்கு கொலைவெறியை கொண்டு வந்துட்டுது . என்ரை கூட்டிலை இருந்த தோப்பிளாண்டி ,

" மச்சான் குளறியருக்கு மறக்கேலாத ஒரு சொட் குடுக்கவேணுமடாப்பா "

எண்டு தன்ரை வெப்பிராயத்தை சொன்னான் . ஒருநாள் பின்னேரம் கேணியடியிலை நான் , தோப்பிளாண்டி , வைத்தி , உதயன் எல்லாரும் காலை கேணித் தண்ணிக்குள்ளை விட்டுக்கொண்டு யோசிச்சம் . உதயன் தோப்பிளாண்டியிட்டை சொன்னான் குளறியர் என்னென்ன டெயிலி செய்யிறார் எண்டு பாக்கச் சொல்லி , அதுக்குப் பிறகு ஏதாவது செய்வம் எண்டு ஐடியா தந்தான் . நாங்களும் தோப்பிளாண்டியிட்டை பொறுப்பை குடுத்துப் போட்டு ரெண்டு நாளைக்குப் பிறகு சந்திப்பதாய் இடத்தை விட்டு கலைஞ்சம் .

ஒரு நாள் பின்னேரம் நாங்கள் எல்லாரும் வைத்தியின்ரை ஆள் வாறதுக்காக கேணியடியிலை இருந்தம் . அந்த நேரம் தோப்பிளாண்டி குளறியரின்ரை றொக்கியளை எடுத்து விட்டான் . குளறியர் முக்கியமாய் இரவு 9 மணிக்குப் பிறகு அவரின்ரை பொயிலை தோட்டத்துக்குப் போய் ஒரு அரை மணித்தியாலம் அங்கை மினைக்கெடுறதாய் சொன்னான் . இடையிலை உதயன் குறுக்காலை விழுந்து,

" இதுதான் மச்சான் சரியான நேரம் . குளறியருக்கு பட்டுச் சாத்தலாம் "

எண்டு சொன்னான் . எனக்கு குளறியர் அந்த நேரத்திலை அங்கை என்ன செய்யிறார் எண்டு பாக்கவேணும் போலை கிடந்திது . அடுத்த நாள் இரவு நாங்கள் கைகாவலாய் ஒரு சாக்கு , ரெண்டு மூண்டு பூவரசங்கொட்டன் எண்டு எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போனம் . அண்டைக்கு எண்டு நல்ல அம்மாவாசை இருட்டு . வானம் வழிச்சு துடைச்சு நட்சத்திரங்கள் மட்டும் இருந்து எங்களுக்கு வழிகாட்டீச்து .
வைத்தி குளறியற்றை தோட்டத்து படலையை மெதுவாய் திறந்து போக , நாங்கள் அவனுக்குப் பின்னாலை போனம் . எங்கடை மூக்கிலை சுறுட்டு வாசம் வந்து அடிச்சுது . சுறுட்டு வாசத்துக்குப் பயந்த வைத்தி சொன்னான் ,

" மச்சான் நான் வரேலை . உது நாச்சிமார் தான் . அம்மாச்சி சொல்லுறவா நீங்கள் போங்கோ எண்டு " ,

உதயன் வைத்தியின்ரை நாரியிலை ஒரு சொட் குடுத்து சத்தம் போடாமல் வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு வந்தான் . அங்கை நாங்கள் போனால் , போயிலை கண்டுகளுக்கு நடுவிலை குளறியர் எங்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு குந்தி இருந்து கொண்டு கள்ளும் , சுறுட்டும் அடிச்சுக் கொண்டு ஒரு பாட்டு பாடிக்கொண்டு தனக்குள்ளை சிரிச்சுக் கொண்டு இருந்தார் . நாங்கள் மெதுவாய் போய் , வைத்தி ஒரு உதை முதுகுக்கு குடுக்க , உதயன் கொண்டு வந்த சாக்காலை படக்கெண்டு குளறியற்ரை மூஞ்சையை மூட , மின்னி முழிக்க முதல் தோப்பிளாண்டி கொண்டு வந்த பூவரசங்கொட்டனாலை கை கால் எல்லாம் டான்ஸ் ஆடத் தொடங்கினான் . ஒரு கட்டத்திலை நாங்கள் விட்டு போட்டு ஓடீட்டம் . அடுத்த நாள் பின்னேரம் நாங்கள் கேணியடியிலை பம்பல் அடிசுக் கொண்டு இருந்தம் . குளறியர் மாடுகளை ஓட்டிக்கொண்டு எங்கடை பக்கம் நொண்டி நொண்டி வந்தார் . அவர் கிட்ட வர நான் அப்பாவியாய் முகத்தை வைச்சுக்கொண்டு ,

" என்ன சின்னத்தம்பியண்ணை கை காலெல்லாம் காயமாய் கிடக்கு . என்ன நடந்தது ? "எண்டு கேட்டன் . அதுக்கு குளறியர் சொன்னார் ,

" அதையேன்ராப்பா கேக்கிறாய் என்ரை பட்டியிலை நிண்ட உவள் வெள்ளைச்சியை மாறிக் கட்டேக்கை இழுத்த இழுவையிலை கை காலெல்லாம் சிராய்ச்சுப் போட்டுதடாப்பா " எண்டு சொல்ல வைத்தி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிச்சான் .
இப்பிடியெல்லாம் பிள்ளையர் கதையோடையும் குளறியரோடையும் மல்லுக்கட்டி கடைசி நாள் திருவிழா அண்டு சனத்துக்கு பக்தி முத்தி சுத்த பத்தமாய் இருக்குங்கள் . நாங்கள் மெதுவாய் கைதடிப்பக்கமாய் போய் பதநீரும் கள்ளும் குடிச்சுப்போட்டு நல்லபிள்ளையளாய் பீடாவும் போட்டுக்கொண்டு பின்னேரம் போலை பிள்ளையார் வெளி வீதி சுத்திற நேரத்துக்கு கோயிலடியிலை நிப்பம் . குளறியரோடை சேர்ந்து நாங்களும் சவுண்ட் விட குளறியர் ஹப்பியாயிடுவர் . பிள்ளையார் இருப்புக்கு வந்தால் பிறகு நாங்கள் குளறியருக்கு எண்டு கொண்டு வந்த கள்ளுபோத்திலை நாங்கள் அப்பாவியாய் குடுக்க , குளறியற்ரை முகத்தைப் பாக்கவேணும் அப்பிடி ஒரு சந்தோசம் . இப்ப அந்த குளறியரும் ஊரிலை இல்லை . அப்பிடி ஒரு பிள்ளையார்  கதையையும் பாக்கேலாமல் கிடக்கு . 

நேசமுடன் கோமகன்
28 மார்கழி 2013
  

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின்  படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான  தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

******************************************************************
01 செங்காந்தாள் அல்லது கார்திகைப்பூ ( ( glory lily ,  Gloriosa superba)


செங்காந்தள் அல்லது காந்தள் ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப் பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு.

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் 'கோல்சிசின்' மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான 'கோல்ச்சிகோஸைடு' கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன் படுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது. இக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் எனப்படுகிறது.

இந்த செங்கந்தள் பல பெயர்களில் அழைக்கப் படுகின்றது அவையாவன
அக்கினிசலம்

கலப்பை 

இலாங்கிலி

தலைச்சுருளி

பற்றி

கோடல் அல்லது கோடை

கார்த்திகைப் பூ

தோன்றி

வெண்தோண்டி

வெண்காந்தள் அல்லது செங்காந்தள்


02  அகில் மரம் ( Agarwood ,  Aquilaria )


அகில் மரத்துக்கு இலக்கியத்தில் ஓர் தனிச் சிறப்பு உண்டு சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடனின் புகழையும் மாட்சியையும் பின்வருமாறு சொல்கின்றார்

……………………..மென்தோள்
துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்
அகில் உண விரித்த அம்மென் கூந்தலின்
மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி
செல்இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. [262-269]

கருத்துரை :  

மென்மையான தோளும், ஆடையணிந்த இடையும் அசைந்தாடும் நடையுமுடைய மகளிர், அகில் புகை ஊட்டுவதற்காக விரித்துப் போட்டிருக்கும் கூந்தலைப் போன்று, நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான, மழை மேகங்கள், வெண்மேகங்களுக்கிடையே பரவித் தவழ்ந்து செல்லும். இம்மழை மேகங்கள் மூங்கில்கள் விளையும் உயர்ந்த சிகரங்களை முட்டி இடி இடித்து வீழ்ந்து ஏறிச் செல்லுகின்ற பெருமை பொருந்திய மலையுச்சியினையுடைய மலை நாட்டுக்குத் தலைவன். நல்லியக்கோடன் அப்போது பறித்த இளந்தளிரினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்தவன். புகழ் நிலைத்து நிற்றற்குரிய பண்புகளால் சிறந்தவன். இத்தகைய நல்லியக்கோடனை விரும்பி நீவீர் சென்றால், (அன்றெ பரிசில் கொடுத்து அனுப்பி வைப்பான்) (அடி 261ஐ இயைத்துப் பொருள் கொள்க)

அகில் பட்டைகள் வாசனைத் திரவியங்கள் செய்வதற்கும் பாவிக்கப் படுகின்றது . இந்த மரம் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகமாகக் காணப் படுகின்றது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :


03 அக்காரக்கிழங்கு கன்று(  Beetroot Beta vulgaris) 


பீற்றூட் என்று பலராலும் அறியப்பட்ட இந்தக் கிழங்கு வகைச் செடி வட , மத்திய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் பிறப்பிடமாகக் கொண்டது . இதில் பிவரும் தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளன .

ஹாபோவைத்றேட் 9.96 g
சர்க்கரை 7.96 g
நார்சத்து 2.0 g
கொழுப்பு 18 g
புறோட்டீன் 1.68 g
விற்றமின் A equiv. 2 μg (0%)
தைமின் (vit. B1) .031 mg (3%)
Riboflavin (vit. B2) .027 mg (2%)
Niacin (vit. B3) .331 mg (2%)
Pantothenic acid (B5) .145 mg (3%)
விற்றமின் B6 .067 mg (5%)
Folate (vit. B9) 80 μg (20%)
விற்றமின் C 3.6 mg (4%)
கல்சியம் 16 mg (2%)
அயர்ன் .79 mg (6%)
மக்னீசியம் 23 mg (6%)
பொஸ்பரஸ் 38 mg (5%)
பொட்டாசியம் 305 mg (6%)
சோடியம் 77 mg (5%)
Zinc .35 mg (4%)

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :


04 அதவம் , இற்றி அல்லது அத்தி மரம் (  fig tree , Ficus )


அத்தி மரமென்று பலராலும் அறியப்பட்ட இந்த அதவம் அல்லது இற்றி மரத்தில் , நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

இந்த மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது. உலர வைத்துப் பொடி செயப்பட்ட இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் பால் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.

இந்த அதவம் அல்லது இற்றி மரம் இலக்கியத்திலும் இடம்பெற்றதாகும். உதாரணாமாக குறுந்தொகையில் கபிலர்,  தலைவிக்கும் அவள் தோழிக்கும் இடையிலான கருத்தாடலைப் பின்வருமாறு சொல்கின்றார் .........

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர் கொண்டு
தான் மணந்தனையம் என விடுகம் தூதே.

 மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :05 அலரி மரம் ( Nerium oleander )


அலரி மரம் மருத்துவ குணங்களை உடையது .அலரி ஐந்தடி முதல் பத்தடி வரை உயரமாக வளரும் . இந்த மெல்லிய செடியில் கண்ணைக் கவரும் வாசமில்லாத அழகான பூக்கள் இருக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் கொத்து, கொத்தாக வளர்ந்து இருக்கும். இந்த மூன்று நிறங்களிலும் ஒரே வகையான குணம் காணப்படுகிறது. ஆயினும், சிவப்பு நிற அலரி அதிகப் பயனுள்ளதாக இருக்கின்றது. அலரி வேரை பச்சைத் தண்ணீரில் அரைத்து மூலக் கட்டிகளின் மீது பூசி, அதன்பின் மூலக்கட்டிகளின் மீது படும்படி புகைப் பிடித்தால் மூலக்கட்டிகள் சுருங்கிவிடுகின்றன. சிலருக்கு ரத்தம் கெட்டுவிடுவதால் தோல் கரடு முரடாக மாட்டுத் தோல் போல் காணப்படும். இதற்கு அலரிச் செடியின் பட்டையை அரைத்துத் தினசரி தோல் மீது பூசுவதால் தோல் மென்மையாகிவிடும். இலைகளைக் கொதிக்க வைத்து அரைத்து எண்ணையில் கலந்து மூட்டு வலியின் மீது பூசினால் வலி குறைகிறது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :06 செவ் அகத்தி மரம் ( swamp pea or  Sesbania grandiflora )


அகத்தி என்னும் சிறிய மரம் கெட்டித்தன்மை இல்லாதது, இந்த அகத்தி மரம் செவ் அகத்தி மஞ்சள் அகத்தி என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும் . இந்தமரம் சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. இந்த மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.

 அகத்தியின் மருத்துவச் சிறப்பைப் பின்வருமாறு கூறலாம்.....

"மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு" .


அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.

அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்ப்டுகிறது.

அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன் படுகிறது.

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத்தோட்டட்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.07 அரச மரம் ( Ficus religiosa or sacred fig )


அரச மரம் பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இது அண்ணளவாக 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது . அரசமரத்தின் அடி விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது .

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவமாகவும் அமைந்திருக்கும் . இந்த இலை 10 தொடக்கம் 17 சென்ரி மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சென்ரி மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் காணப்படும் .

08 அதிமதுரம் (liquorice or Glycyrrhiza glabra)


அதிமதுரம் (liquorice) ஒரு மருத்துவ மூலிகை ஆகும் . அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.

09 ஆடாதோடை ,பாவட்டை அல்லது வாசை  ( Malabar nut or Justicia adhatoda )


ஆடாதோடை ஒரு மருத்துவ மூலிகையாகும். இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது. இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, வேர் என்பன மருத்துவ குணமிக்கவை இதன் சுவை கைப்புதன்மையாக இருக்கும் இதன் மருத்துவ குணங்களாக சளியை அகற்றும் நுண்புழு கொல்லியாக செயல்படும் சிறுநீரைப் பெருக்கும் வலியை நீக்கும் இந்த மரத்தின் முக்கிய வேதிப் பொருட்களாக வாசிசின் , வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின் , வைட்டமின் சி , கேலக்டோஸ் போன்றன காணப்படுகின்றன .இந்த மூலிகையினால் இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றைகே கட்டுப் படுத்தலாம் .

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”


(அகத்தியர் குணவாகடம்)

 இந்த மூலிகையைப் பின்வருமாறு பயன்படுத்தினால் ,

சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும். இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல்,இளைப்பு,சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும். இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும். ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.

இந்தச் செடியை பாவட்டை அல்லது வாசை என்றும் அழைப்பார்கள் .http://en.wikipedia....sticia_adhatoda

10 அன்னமுன்னா மரம் அல்லது சீத்தா பழமரம் ( custard apple, Annona  or Annona squamosa )


சீத்தா பழம் அல்லது அன்னமுன்னா அல்லது அன்னமின்னா , வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

சீதளப் பழம் என்பதே சீத்தாப் பழம் என மருவியது. சீதளம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கிறது.
 http://en.wikipedia....Annona_squamosa
 

Friday, December 27, 2013

அழையா விருந்தாளிகள்


அழையா விருந்தாளிகள்எங்கள் கைகள் ஓங்கிய பொழுது

உங்கள் குரலும் ஓங்கியே இருந்தன

எங்களைப் பாடாத வாயும் இல்லை

போற்றாத குரலும் இல்லை....

நாங்கள் ,உங்கள் வாழ்வை

புதுப்பிக்க வந்த நவீன

நாயகர்கள் என

பொங்கியே பூரித்தீர்கள் !!


உங்கள் குரலால் நாங்களும்

செருக்குடனே

செருக்களம் ஆடினோம்...நாளொரு வண்ணம்

பொழுதொரு வண்ணம்

புதுப் புதுப் படமாய்

வெளியே விட்டோம்...என்னதான் நாங்கள்

வலுவாக ஆடினாலும்

காலம் போட்ட ஆட்டம்

எங்களை விட மூர்க்கமாய் ஆடியது


வல்லவனுக்கு வல்லவன்

உலகில் உண்டு என்பதை

எங்கள் ஆட்டம்

நன்றாகத்தான் காட்டியது !!

அன்று ,

எங்களைப் பாடிய வாய்களுக்கு

இன்று

நாங்கள் அழையா விருந்தாளிகள் ……..
பின்குறிப்பு :


அண்மையில் முன்னைநாள் பெண்போராளி ஒருவரைத் திருமணம் செய்ய யாருமே முன்வராத நிலை ஒன்றைப்பற்றிய செய்தியின் பாதிப்பினால் எழுதப்பட்டது .


கோமகன்
25 ஐப்பசி 2013

Tuesday, December 24, 2013

தேவனுக்கு ஒரு திறந்த மடல்

தேவனுக்கு ஒர்  திறந்த மடல்


அன்பான பாலகனுக்கு
உலகமே உம் வரவை
உற்சாகமாய் கொண்டாட
என் மண் மட்டும்
ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??

ஆழிப் பேரலையாய்
ஆவேசமாய் வந்தீரோ
ஆரவாரமாய் என்மக்களை
உம்மிடம் இழுத்தீரோ
பல வடுவை சுமந்த எமக்கு
உம் வருகை உவப்பாய் இல்லை

வெளியே நாம் சிரித்தாலும்
உள்ளே நாம் உறைந்துதான் போனோம்
வருடங்கள் பல பறக்கும்
காலங்கள் கலகலக்கும்
ஆனாலும் ,
நீர் வைத்த ஆழ வடு
ஆறவில்லை எங்களுக்கு

வாரும் பாலகனே வாரும்
என்மக்கள் நிலையில்
மாறுதலைத்  தாரும்

கோமகன்
மார்கழி 24 2013

Thursday, December 12, 2013

நீயா அவள் ????

நீயா அவள் ????


நித்தம் நித்தம் வந்து
முத்தம் கொடுத்த என்னை
சித்தம் கலங்கிய பித்தா
என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ??
எந்தன் பிழைதான் என்னவோ??

பள்ளியறையில்
பங்காக சிந்து பாட வந்த பொழுது
என்னை நீ ,
முட்டித் தள்ளியதும் ஏனோ ??

கொத்துக் கொத்தாக
நீயாக ,
வந்து முத்தம் கொடுத்ததும் ,
முன்பு நீ ,
அத்தான் !! அத்தான் !! என்று
நொடிக்கொரு தடவை
அழைத்த நினைவு ,
என் நினைவில் முட்டித் தள்ளியதே........
அடி கள்ளி .............நீயா அவள் ????

கோமகன் 

11 மார்கழி 2013

Saturday, December 7, 2013

எழுகவே !!!!!!!!!!!

எழுகவே !!!!!!!!!!!
ஒரு பேப்பருக்காக கோமகன்
     


எழுகவே எழுகவே

எட்டுத்திக்கும் எழுகவே !!

பட்டி தொட்டி எங்கிலும்

போர்பரணி ,

எழுகவே எழுகவே

எழுக எழுக எழுகவே !!


கட்டுச் செட்டு என்று


வாழ்திருந்த   எங்களை

பட்டு பட்டு என்று

எம்மை


நீங்கள் சுட்டு விட்ட போதிலும் ,

கந்தகமும் பொஸ்பரசும்

எம்மை எரித்து  விட்ட போதிலும் ,

எழுகவே எழுகவே

எழுக எழுக எழுகவே !!!


கொத்துக் கொத்தாய்

எம்மை நீங்கள்

கொத்திக் குதறி எடுத்தாலும் ,

வீறுகொண்டு வீரியமாய்

நாங்கள்,

எழுகவே எழுகவே

எழுக எழுக எழுகவே !!!


ஊனை உருக்கி உதிரம் பாச்சி

வளர்த்த எங்கள் தேசமடா…..

காட்டு நரியும் கூட்டு ஓநாயும்

கூடிக் கொக்கரிக்க

விட்டு விடுவோமா சொல்லடா ??

எழுகவே எழுகவே

எழுக எழுக எழுகவே !!!!!!!கொண்ட கொள்கை

கொண்ட உறுதி

கொட்டிக் கிடக்கு எம்மிடம்…

அழுகை நிறுத்தி

அச்சம் போக்கி

எழுந்து நின்று பாரடா…..

எத்தர்களும் எதிரிகளும்

புறமுதுகு காட்டி ஓடவே

நீயும் ,

போர்பரணி பாடடா…..

எழுகவே எழுகவே

வீரமுடன் எழுகவே !!!!!!!!!


கோமகன்
27 கார்த்திகை 2013

Wednesday, November 27, 2013

துயில் கொள்ளடா வீரா

துயில் கொள்ளடா வீராதுயில் கொள்ளடா வீரா

துயில் கொள்ளடா ...

உன் துயில் கலையாத நினைவுகள்

மட்டும் போதுமெனக்கு ..

உனது தியாகமும் கொண்ட கொள்கையும் ,

கொத்து ரொட்டிக் கடையிலும்

தேநீர் கடையிலும்

வியாபாரப் பண்டங்கள் அவர்களுக்கு .

நான் உனக்குத் தூவும்

கார்த்திகை மலர்களும்

காசாக வடிவெடுக்கும் கலிகாலமடா....


உன்னைப் போல் துவக்குத்

தூக்கிய அக்காவுக்கு வாழ்வு கொடுக்க

அவளின் ,

கற்பை உரசிப்பாக்கும் கூட்டம் ஒருபக்கம் ....

உன்னைப் போன்ற

பல வீரர்களின் வாழ்வு நடுறோட்டில்....

தன் வாழ்வில்

பிறந்த நாளே கொண்டாடாத

என் தலைவனுக்கு

கேக் வெட்டி குதூகலிக்கும்

ஒரு கூட்டம் ஒரு பக்கம் ........
வெட்டிப் பேச்சிலும் வீரப் பிரதாபங்களிலும்

வீணாய் கழிக்கும் இன்னுமொரு கூட்டம் ...

இவர்களை எல்லாம் நீ கண்டால்

உன் துயிலுக்கே

தூக்கம் தொலைந்து விடும் .....

துயில் கொள்ளடா

வீரா துயில் கொள்ளடா

கோமகன்
27 கார்த்திகை 2013

Tuesday, November 12, 2013

போரும் உடன் படிக்கையும்


போரும் உடன் படிக்கையும்


கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , அரச பொது விடுமுறையாக அறிவித்து இந்த நாளை மனதில் இருத்துகின்றன .


இன்று காலை 11 மணியளவில் நான் வேலை செய்யும் சார்ல்ஸ் து கோல் எத்துவால் இல் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபியான ஆர்க் து திறியோம்ப் இல் , நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து முதலாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த அனைத்துப போர் வீரர்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்ததுடன் ஜனாதிபதி பங்குபற்றிய முன்னாள் படைவீரர்களையும் கௌரவித்தார் .

எனக்கு இந்த நிகழ்வுகள் நான் வாழும் நாடும் அந்த மக்களும் போர்வீரர்களை எந்த அளவுக்கு நேசிகின்றார்கள் என்று உணர்த்தினாலும் ஏனோ எனது மனம் இந்த நிகழ்வில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை . எனது இனமும் மண்ணும் இவர்களுக்கு ஈடாகவே பல இன்னல்களையும் இழப்புகளையும் நிகழ் காலச் சாட்சிகளாகச் உலகின் மனச் சாட்சிகளை உலுக்கி எடுத்தும் எமக்கான விடிவு தூரத்து விளக்காகத் தெரிவதும் ஒரு காரணம் என்ற வகையில் எனது மனம் ஒன்றுபட முடியவில்லை . இருந்தபோதிலும் நான் வாழுகின்ற இந்த நாட்டை பாதுகாத்த அந்தப் போர்வீரர்களுக்கு எனது அஞ்சலிகள் .

இந்த நிகழ்வுகள் சம்பந்தமான சில புகைப்படங்கள்

1918 டொரோண்டோ வில் நடைபெற்ற போர்வீரர் நினைவு நிகழ்வு

தொடரூந்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல்

போர்காட்சிகளில் ஒன்று
 

கோமகன் 
11 கார்த்திகை  2013 
         
Thursday, October 17, 2013

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 14 ( பனங்காய் பணியாரம் )

பனங்காய் பணியாரம்உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .

பனங்களி செய்யிற பக்குவம் :தேவையான சாமான் :

நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம்.

பக்குவம் :

நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை மணம் போக காச்சி எடுத்து ஆறவையுங்கோ.


தேவையான சாமானுகள்:

பனங்களி – 1 கப்
சீனி- ¼ கப்
எண்ணெய் – லீட்டர்.
வறுத்த உழுந்துமா – ¼ கப்
உப்பு தேவையான அளவு.


பக்குவம் :

காச்சின பனங்களியோடை உழுத்தம்மா உப்பு சேர்த்து கிளறி விடுங்கோ . தாச்சியிலை எண்ணையை விட்டு நல்லாய் கொதிக்க விடுங்கோ . மாவைக் கையில் எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாக எண்ணெயிலை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கோ.

படிமானம்:
எண்ணை ஒத்தி எடுக்கிற பேப்பரிலை போட்டு எண்ணையை வடியவிட்டு , ஆற வைச்சுப்போட்டு ரெண்டு மூண்டு நாள் கழிய வைச்சி சாப்பிடுங்கோ. சொல்லிவேலையில்லை ஐஞ்சு நிமிசத்திலை பலகாரத்தட்டு உங்களைப் பாத்து சிரிக்கும்.     


Saturday, October 12, 2013

தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02


தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02போன தொடரில் சித்திரக் கவியின் தோற்றத்தையும் அதன் பன்னிரெண்டு வகைகளையும் , அதில் நான்கு வகைகளை அதற்கான விதிமுறைகளையும் உதாரணங்களுடன் பார்த்தோம் . இந்தத் தொடரில் மிகுதி நான்கு வகைகளையும் பார்க்கலாம் .

05 நாக பந்தம்:இந்தக் கவிதை இரண்டு பாம்புகள் எப்படி மேல்நோக்கி பிணிப் பிணைந்து இருக்கின்றனவோ அப்படி அமைந்திருக்கும் இதன் விதிமுறையாக , இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இந்த நாக பந்தக் கவிதையாகும் .

ஆகவே நாகபந்தம் என்பது இரண்டு வெண்பாக்களின் இணைப்பால் அமைவது என்பது பெறத்தக்கது. (நாகம் = பாம்பு ; பந்தம் = கட்டுதல்) உதாரணமாக

வெண்பா - 1

அருளின் றிருவுருவே அம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாரு சிர்ச்சீரே - பொருவிலா
வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு
குன்றே தெருள வருள்.


பாடலின் பொருள் : அருளின் திருவுருவாகவும், அம்பலத்தில் ஆடுபவராகவும், தேவரின் துயர் தீர்ப்பவராகவும், உமையாளுடன் இருப்பவராகவும், உறுதிதரும் குன்றாக இருப்பவராகவும் சிவபெருமான் விளங்குகிறார்.

வெண்பா - 2

மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
பெருகொளியான் றேயபெருஞ்சோதி - திருவிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை யொழி.


பாடலின் பொருள் :


சுடராகவும், நஞ்சை உண்டவரே! என் சித்தம் அயரும் நிலையை ஒழிக்க
இந்த இரண்டு வெண்பாக்களும் இணைந்து, நாகபந்தமாக அமைந்த முறையைக் இங்கே பார்ப்போம் 
 

சித்திரக் கவி, அட்ட நாக பந்தம், தமிழழகன் பாடலும் படமும், பாடல் "பாரதிக் கெல்லை பாருக்குள்ளே இல்லை" கருத்து - கலைக்கு எல்லை கற்பனையே06 வினாவுத்தரம் :

கவிதையில் , சில வினாக்களைக் கேட்டு, அவ்வினாக்கலின் வாயிலாலே பதிலைப் பெற்று, அந்தப் பதில்களின் ஒட்டு மொத்தச் சேர்க்கையினால் ஒரு சொல்லைப் பெறுவது இந்த வினவுதரம் சித்திரக் கவியின் விதி முறையாகும் உதாரனதிர்காகப் பின்வரும் உரைநடைப் பகுதியைக் நாங்கள் பார்ப்போம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 
(1) செல்வம் என்பதற்கு உரிய
ஈரெழுத்துச் சொல் யாது? திரு(2) சாப்பிடப் பயனாகும் ; உமி
தரும் பொருள் யாது? நெல்
(3) தோட்டங்களைக் காப்பதற்காக
இடப்படுவது எது? வேலி
(4) சிவபெருமான் இருக்கும் ஊர்
எது? திரு+நெல்+வேலி

அதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும்.

இதைப் போலவே இன்னும் ஒன்றை நாங்கள் பார்க்கலாம் ,

பூமகள்யார்? போவானை ஏவுவான் ஏதுஉரைக்கும்?
நாமம் பொருசரத்திற்கு ஏதென்பார்? - தாம்அழகின்
பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
சேர்வென்? திருவேகம் பம்

(1) பூமகள் (இலட்சுமி) யார்? திரு

(2) போகிறவனைப் ‘போ’
எனச் சொல்லி ஏவுகிற
ஒருவன் கூறும்சொல்
எது? ஏகு

(3) பொரு சரம் எது?
(போரில் பொருகிற போது
உயிர் வாங்கச் செல்லும்
கருவி எது?) அம்பு அம்பு

(4) அழகிற்கு மறுபெயர்
என்ன? அம்

(5) சிவபெருமான் விரும்பி
இருக்கும் இடம் எது? திரு+ஏகு+அம்பு
+அம்

இதுவே திருவேகம்பம் என்னும் ஊராகும்.


 
07 காதை கரப்பு :
 

இந்தவகை சித்திரக் கவியில் தொடக்கமாக அமையும் முதல் எழுத்தை விட்டு விட வேண்டும். அடுத்த எழுத்து அதாவது இரண்டாம் எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 3ஆம் எழுத்தை விட்டுவிட வேண்டும். 4ஆம் எழுத்தை எடுக்க, இவ்வாறாக ஓர் எழுத்து விட்டு ஓர் எழுத்து என்ற அமைப்பில் சேர்க்க, சேர்க்கப் பெற்ற எழுத்து கடைசிச் சொல்லிற்கு முன் உள்ள எழுத்துத் தொடங்கி, முதலடி வரை தலைகீழாகப் படித்தால் ஒரு புதுப்பாடலாக அமைவது இவ்வகைச் சித்திரகவியாகும். (காதை = சொல், கவிதை; காப்பு = மறைவு)

உதாரணமாக ,

தாயே யாநோவவா வீரு வெமது நீ
பின் னைவெருவா வருவ தொரத்த
வெம்பு கல் வேறிருத்தி வைத்தி சினிச் சைர்
தாவாருங்நீயே


பாடல் பொருள்:


தாயானவனே, எம் வருத்தத்திற்குக் காரணமான ஆசையை நீக்கு. எமக்காக இரங்கி வரும் நீ, பின்னர் அச்சத்தை உண்டாக்குவது ஏன்? எம் அச்சம் நீக்கி வேறு இடம் தருக. எங்கள் ஆசைகளை நீக்கு, அரும்பொருளாக விளங்கும் பரம்பொருளே!

மேலே கோடிட்டுக் காட்டப் பெற்ற எழுத்துகள் தலைகீழாகக் கூடிப் பின்வரும் செய்யுளைத் தருகின்றன.

கருவார் கச்சித் திருவே கம்பத்
தொருவா வென்னீ மருவா நோயே


 பாடல் பொருள்:

கச்சி, திருவேகம்பத்தில் உறைபவனை எண்ணினால் கருவாகும் பிறவி நோய் வாராது.

இந்த அமைப்பை காதை கரப்பு என்ற சித்திரகவிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நாங்கள் பார்க்கலாம் .08 கரந்துறைப்பாட்டு :

கரந்துறைப்பாட்டு என்ற சித்திரக் கவியானது பின் வரும் விதி முறையில் அமைந்திருக்கும் . அதாவது ஒரு செய்யுளில் உள்ள எழுத்துகளில் இருந்து சில எழுத்துகளைத் தேர்ந்து கொண்டு, மற்றொரு செய்யுளை அமைத்துக் கொள்வதாகும் (கரந்து = மறைந்து; உறை = இருத்தல்; பாட்டு = செய்யுள்) உதாரணமாக ,


அகலல்குற் றேரே யத முதம்
கர்தற் ரிதிடையும் பார்க்கின் - முகமதிய

முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீ

மைத்தடங்கண் வெவ்வேறு வாள்

பாடலின் பொருள்:

இப்பெண்ணின் அல்குல் தேர்ச் சக்கரம் போன்றது. வாய் இதழ் அமுதம் போன்றது. இடையின் அளவினைச் சொல்லால் கூற இயலாது. முகம் சந்திரனைப் போன்றது. பற்கள் முத்துக்கள் போன்றவை. மை தடவிய

கண்கள் நீலோற்பப் பூப் போன்றவை. அவை வாள் போன்று கூர்மையும் உடையவை.

 
மேல் பாட்டிலிருந்து,

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு
 


என்ற குறளைத் தேர்ந்து கொள்ள இயலும்.

இதேபோன்று பாடலுக்குள் பாடல் ஒன்று மறைந்திருப்பது கரந்துறைப் பாட்டு என்ற சித்திரகவியாகும்.


09 சக்கர பந்தம்:
 
ஒரு சக்கரம் போன்ற  அமைப்பிலே , ஏதாவது  ஒரு சுழற்சி முறையில்  பாடலைஅமைப்பதை சக்கர பந்தம் என்ற சித்திரகவியாகச் சொல்லாம் .

இந்த சக்கர பந்தம் சித்திரக் கவியானது நான்காரைச் சக்கரம் (நான்கு + ஆரம் + சக்கரம்), ஆறாரைச் சக்கரம், எட்டாரைச்சக்கரம் என மூன்று வகைப் படுத்தப் படுகின்றது . இதிலே நாங்கள் நான்காரைச் சக்கரத்திற்கு மட்டும் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம் .


மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே
10 சுழிகுளம்:
சுழிகுளம் என்ற சித்திரகவியானது  செய்யுளின் எழுத்தை  எண்ணிச் செய்யப் படுவதாகும் . இந்த சித்திரக் கவியின் விதியாக , இதில் இடம் பெறும் செய்யுள் 4 அடி கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே  கொண்டிருக்க     வேண்டும். இந்த எட்டு எழுத்துக்களும்   மேலும் கீழுமாகவும் , உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். இதற்கு உதாரணமாக இந்தப் பாடலைப் பார்ப்போம்


 கவிமுதி யார் பாவே

விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்

திருவழிந்து மாயா

பாடல் பொருள் :


வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்

சித்திரமாகும் முறை :என்ற அமைப்பில் மேற்பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்து .


11 சருப்பதோ பத்திரம்:

சருப்பதோ பத்திரம் என்ற சித்திரக் கவியானது பின்வரும் விதிமுறையில் அமைந்திருக்கும் , பாடலுக்கு நான்கு வரிகள் ; வரிக்கு 8 எழுத்துகள் என்ற அமைப்பில் , கீழ் மேல், மேல் கீழ், முன் பின், பின் முன் எப்படிப் படித்தாலும் அதே செய்யுள் வருமாறு அமைக்க வேண்டும். உதாரணமாக ,இதில் நாங்கள் எப்படி வாசித்தாலும் இந்தப் பாடலின்  அடி மாறாது அமையும் சிறப்பு இந்தக் கவிதையில் உண்டு.

12 அக்கரச் சுதகம் :

ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப் படுவதாக எடுத்துகொள்வோம் . அதனைப் பெறப் படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் குறைத்துப் பொருள்களைப் பெறுவது

இந்த வகையான சித்திர கவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் = நீக்கம்)

உதாராணமாக :
(1) இலைகளுள் சிறந்தது = தலைவாழை

(2) தலைவரை விளிப்பது = தலைவா

(3) உறுப்பினுள் சிறந்தது = தலைஇதுவரை சித்திரகவியும் அது சொல்லும் விதிமுறைகளையும் பார்த்தோம் . இன்றையகால கட்டத்தில் இந்த சித்திரக் கவி பாடப் படுகின்றதா என்ற ஒரு கேள்வி எழுகின்றது . என்னைப் பொறுத்த வரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . உதாரணமாக கருத்துகளத்தில் ஆதித்த இளம்பிறையன் பதிந்த வேரில்லா வாழ்வே !!என்ற சக்கர பந்தம் என்ற வகையில் அமைந்த சிதிரகவியும் , 


வேரில்லா வாழ்வே !!


இன்னும் ஓரிரு இளையதலைமுறைகளின் சிந்திரக் கவியும் சிறிது ஆறுதல் தருவதாக இருக்கின்றன .உதாரணமாக ராம் கிஷோர் என்ற கவிஞரின் வேண்டாம் வேண்டும் , காட்சிப் பிழை என்ற சித்திரக் கவிதைகள் ,பிரமிக்க வைக்கின்றன இந்த தமிழர்களின் மதிநுட்பத்தைச் பறைசாற்றும் இந்த சித்திரக் கவி வடிவங்கள் எதிர்காலங்களில் மேலும் முன்னெடுக்கப்படவேண்டும்  .

 வேண்டாம் வேண்டும்

பாடலில் உள்ள மொத்த எழுத்துக்கள்    : 216
வடிவத்தில் உள்ள மொத்த எழுத்துக்கள் : 143


காட்சிப் பிழை

உச்சந்துனைகள் :

01 சித்திரக்கவிகள் விக்கி பீடியா
02 இளவேனிற் கனாக்கள் இணையம் ராம் கிஷோர்
03 சித்திரக்கவிகள் மெய்ஞானப் பல்கலைக்கழகம்