Skip to main content

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் பாகம் 03


மெசொபொத்தேமியா சுமேரியர் (நடுவர் ):

நறுக்கென்று மூன்று வினாக்கள் தொடுத்து  அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டு தன்பாட்டில் போய்விட்டார் கரும்பு. அவரின் முதலாவது வினாவிலேயே அத்தனையும் ஆட்டங்காண  வைத்துவிட்டார்.

பலாப்பழத்தை நாம் இரண்டாகப் பிளந்துதான்  கொடுத்தோம். ஆனால் எம்மிடம் பலாச்சுளைகள் தான்
வந்தன என்று கரும்பு கூறுவதை, எதிரணியினரின் அடுத்த அம்பு வந்து வீழ்ந்த பின்னர்தான் நிரூபிக்க முடியும்.  எதிரணியினரும் லேசுப்பட்டவர்கள் இல்லைஎன்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இசைக்கலைஞன் அணித்தலைவர்:

நடுவர் அவர்களே..! :D

அன்று சதாம் அனுப்பிய ஸ்கட் ஏவுகணையை அமெரிக்கன் கொடுத்த பேட்ரியட் ஏவுகணை தடுத்தாடியது..!  :D  ஆனால் இன்று அதற்குத் தேவை கிடையாது..!  :unsure:  கலைஞனின் ஈக்குவாணத்தை தடுத்து ஆட :D வில்வித்தை வீரர் எங்கள் அர்ஜுன் அண்ணா :icon_mrgreen: தனது எதிர் அம்புகளை விடத் தயாராக உள்ளார்..!! :lol:

மெசொபொத்தேமியா சுமேரியர் (நடுவர் ):

அடுத்து எதிரணியினர் வில்வித்தை வீரர் அர்ஜுன் அவர்களைக் களமிறக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். அம்பாரியை மட்டும் மாட்டிவிட்டு அம்பை வைக்க மறந்துவிடாதீர்கள். அம்புடன் வில்லையும் எடுத்துவந்து எப்படித் தொடுக்கிறீர்கள் அம்பை என்று பார்க்க அனைவரும் ஆவாலாய்க் காத்திருக்கின்றனர். எங்கே அர்ஜுன் விரைந்து வாருங்கள். வித்தையைக் காட்டுங்கள்.

arjun:

சபையில் உள்ள அனைவருக்கும் எனது அன்பு
வணக்கங்கள். எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுமல்லாது
வேறொன்றும் நான் அறியேன் என் பராபரமே .
இணையில்லா இணையத்தை எத்திக்கும் எவ்விடர்
நேரினும் மாசுபடா மானுட பாங்குடன் நாடாத்தும் யாழ் மையமே .

பட்டிமன்றம் என்ற ஒன்றை யாழ் அகவை  பதினைந்தில் சுவை நிறைய படைக்க நினைத்த சுண்டலே அவர்தம் வால் அவல்களே.

இரு பக்க இடி கேட்டும் தலைமை நிலை மாறாமல் மின்தாங்கியாய் ஆடும் கோமகனே, மின்னலாய் இடை அசைக்கும் சுமோவே வணக்கம் .

எமது பக்கத்தில் இருப்பவர்களை பார்க்கின்றேன்
இசை ,தமிழச்சி ,ஜீவா புங்கை ,சுபேஸ் யாழ்வாணன் இப்படை தோற்கின் எப்படி வெல்லும் எனும் அக புற ஆழுமையின் மிடுக்கில் நிமிர்ந்திருக்ன்றார்கள்.

எதிரணி யாழ்வாலி,வாத்தியார் ,பகலவன் ,சாத்திரி
,தும்பளையான் ,கரும்பு, குமாரசாமி. ஏதோ சாத்திரம், குறி, கைரேகை, கிளி ஜோசியம்,காண்டம் பார்க்க வந்தவர்கள் போல, தாறதை தாங்கோ போறம் என்று  தருமி கணக்கு, சாமிக்கு நேர்ந்தவர்களை  போல இருக்கின்றார்கள்.

பார்வைக்கு எதிரணியினர்  அப்படி இருந்தாலும் சில அரிய பெரிய கருத்துக்களை அவர்களும் அவ்வப்போது அள்ளி எறிந்தார்கள் என்பதையும்  மறுப்பதற்கு இல்லை . மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதில் மாற்று கருதில்லாதவவர்கள் எமது அணியினர் .

புலம் பெயராமல் இருந்திருந்தால்?

நினைக்கவே பயமாக இருக்கின்றது. வெறுமன புலம்
பெயர் வாழ்வில் கிடைக்கும் சடப்பொருள் மோகத்தில் திளைத்து அது கிடைக்காமல் போயிருக்குமோ
என்ற  பயம் இல்லை எனது  பயம். வாழ்வின் அதிஉன்னத அர்த்தத்தையே உணராமல் போயிருப்பேனோ என்ற உணர்வால் உண்டாகும் பயம் இது.

பாரதி கண்ட காணியும் வீடும் வேப்பமரமும் குயிலும் ஒரு கவிஞனின் கற்பனை உலகில் கட்டிய அழகிய வீடே ஒழிய நிஜமல்ல.பாரதிக்கு இருந்த வசதிக்கு அதைவிட அழகான வீட்டில் வாழ்ந்திருக்கலாம் அதைவிட்டு சுதந்திரம் ,பெண்விடுதலை,மானுடம் என்ற நிஜ தேடல்தான் அவனை மகாகவி ஆக்கியது.

தேடல் இல்லாத மனிதன் வெறும் ஜடம்.அந்த தேடல்
இல்லாவிடில் கற்கால மனிதனாக இன்றும் மனிதர்கள் அவர் அவர் ஊர்களில் குகைகளில் இதுதான்
சந்தோசம் என்று இருந்திருப்பார்கள் .அந்த தேடல் நாம் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வீதம் சாத்தியம். அரசியல் ,பொருளாதாரம் ,தொழில்நுட்பம் எல்லாமே மிக பின் தங்கிய ஊழலால் நிரம்பிய நாடு அது. அதுவும் ஒரு போர்சூழலில் எதுவும் சாத்திய மற்ற ஒரு பிடிப்பிலாத
வாழ்வைத்தான் நாம் வாழ்ந்திருக்க முடியும் .

இங்கு நாம் வாழும் நாடுகளும் அங்கு நாம்
வாழும் வாழ்வும்  உலகின் அதிஉச்ச சுதந்திரம்,விஞ்ஞானம்,பொருளாதாரம்
ஒருங்கே கொண்டவை.இப்படியான மிக நேர்த்தியான திட்டமிட்ட வசதியான  வாழ்வை நாம் எமது நாட்டில் ஒரு காலமும் வாழ்திருக்க முடியாது. எங்கு திரும்பினும் பாடாசாலைகள்,ஆசுப்பத்திரிகள் ,நூலகங்கள்
என்று அனைத்து வசதிகளும் நிரம்பியிருக்கு .ஒரு தொலைபேசியில் சாப்பாடு வீடு தேடி வரும்.(.நாட்டில் ஈர விறகை அம்மா ஊதி ஊதி சமைத்ததை நினைக்க இன்றும் கண்ணீர் வருகின்றது.).  இதை விட நினைத்த மாத்திரத்தில் உலகெங்கும் பறக்க வசதியான கடவுசீட்டு.வேலை சற்று பழு என்றால் விடுமுறை என்று ஜமேக்கா,கியூபா என்று பெயர் தெரியா நாடுகளில் சுற்றுலா.என்னுடன் படித்து கொழும்பில் மிக வசதியாக இருக்கும் நண்பன் சொன்னான் எப்படி வசதியாக நான் இங்கு இருந்தாலும் ஒருநாளைக்கு தங்க இருநூறு டொலர்கள் எடுக்கும் ஒரு கொட்டேலை நான் கண்ணால் மட்டும் தான் பார்க்கமுடியும் என்று .அதே கொட்டலில் வெளிநாட்டில் இருந்து வந்து கோஷ்டியாக பாட்டி போடுகின்றார்கள் .இவர்களெல்லாம் வெளிநாட்டில் சுமாரான வாழ்கை வாழ்பவர்கள் தான்.ஆனால் அவர்களால் அது சாத்தியமாகின்றது .

இதுதான் ஊருக்கும் புலம் பெயர் நாட்டிற்கும் இருக்கும் வாழ்க்கை முறை வித்தியாசம்,உண்மைநிலை.யதார்த்தம் .
அதைவிட்டு சும்மா வெட்டிக்கு எமது ஊர் புழுதியில் உழுவததில் உள்ள சுகம் எங்கு கிடைக்கும் என்றும்,மாங்காய் களவெடுத்த சந்தோசம் இனி கிடைக்குமா என்றும் வெறுமன பீத்திக்கொண்டு பால்ய பருவத்து சிறு சிறு குறும்புகளை ஒட்டு மொத்த வாழ்க்கை என்று நினைத்துவிடகூடாது. இங்கு நாம் புலம் பெயர்ந்ததால் தான் அங்கிருப்பவர்களையே வாழாவைக்க முடிகின்றது .நாமும் வாழ்ந்து நாலு பேர்களையும் வாழ வைக்கும் இந்த வாழ்க்கையில்  இருக்கும் சந்தோசம் வேறு எங்கு கிடைக்கும் .

நாட்டில் படித்து பெரும் பதவியில் இருந்தவன்
மட்டும் அல்ல  புலம் பெயர்ந்து சந்தோசமாக
இருக்கின்றான். மிக அடிமட்ட தொழிலாளியாக இருந்தவனும் புலம் பெயர்ந்து  தன் உழைப்பால் உயர்ந்து மிக வசதியாக சுய மரியாதையுடன் இருக்கின்றார்களே இதுவெல்லாம் எமது நாட்டில் சாத்தியமா? எனது கிராமத்தில் எட்டாம் வகுப்பும் படிக்காத குஞ்சன் பிரேக் இல்லாத சயிக்கிளில் கால்பிரேக் போட்டு பாதத்தை தேய்த்துக்கொண்டு திரிந்தவன் புலம் பெயர்ந்து  ACURA DMX  இல் போவதை பார்க்கும் போது இதுவெல்லோ நாடு என்று மனதில் தோன்றும். போர் ஒன்றுதானா நாமெல்லாம் புலம் பெயர்ந்ததன் காரணம்? இல்லவே இல்லை. வெளிநாட்டு டொலர் ,பவுன்ஸ்,மார்க் ,பிராங்குகளின் பெருக்கல் கணக்குத்தான் பலரை அனுப்பி வைத்தது.

உறவுகளே கடைசியாக ஒன்று சொல்லுகின்றேன்,

சொந்த நாட்டில் இரெயில் பயணத்தில் வவுனியா வர
வாயை மூடும் அவலத்தை அனுபவித்தவன் சொல்லுகின்றேன், தரப்படுத்தல் என்ற பெயரில் நடந்த கபடத்தை முகம் கொடுத்தவன் சொல்லுகின்றேன்.எனக்கான உண்மையான மன கிடக்கையை சொல்ல தடுத்த அரசியலை கண்டவன் சொல்லுகின்றேன் ,ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் புலம் பெயர்ந்ததால் அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் உணர்வு இருக்கே அதற்கு இணை இவ்வுலகில் எதுவுமில்லை.

நான் மட்டும் அந்த சுதந்திரத்தை அனுபவித்து
மகிழவில்லை அனைத்து மக்களும் அதை அனுபவிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்த சுகமும் அனுபவவும் மகிழ்சியும் எமது மக்களும் விரைவில் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன் .

நன்றி .

மெசொபொத்தேமியா சுமேரியர் ( நடுவர் ):

அர்ஜுன் ஆணித்தரமாக தன் வாதத்தை வைப்பார் என்று எண்ணியிருக்க, அவரின் வாதங்கள் அவரணிக்கே எதிராகத் திருப்புகிறதோ என்னும் தோற்றம் எழுகிறது. வாழ்வின் அதி உன்னத அர்த்தம் என்று எதை வரையறுக்கிறார் என்பது புரியவில்லை.
அர்ஜுன்  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசம் உண்டென்பதை ஒத்துக்கொண்டதன் மூலம் எதிரணியினரின் கருத்துக்களும் சரி என்று ஒத்துக்
கொள்கின்றாரா?? என்னும் சந்தேகம் எழுகிறது.

 பாரதிக்கு இருந்த வசதிக்கு, அவன் வசதியான வாழ்வைத்  துறந்து  மற்றவர் துன்பம் நீக்க முயன்றதே அவனை மகாகவி ஆக்கியது என்றால்,  உன்னதத்தை அடைய பொருளோ, பணமோ, வேறு வசதிகளோ தேவை இல்லை என தங்கள் பக்கமே பந்தை வீசிவிட்டார்.

அதுமட்டுமல்ல முழுச் சுதந்திரத்தோடு தான் வாழ்வது மட்டுமன்றி மற்றவரும் வாழ்வதை இட்டுமகிழ்கிறேன் என்கிறார். சுதந்திரம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது எனக்கே மறந்துவிட்டது அர்ஜுனின் வாதத்தால். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நல்லா.... வசதியா.... எந்தத் துன்பமுமின்றி  வாழ்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. அதுக்காகக் கடன் கேட்டுப் போய்விடாதீர்கள்.

யாழ்வாலி அணித்தலைவர்:


நடுவர் அவர்களே, அடுத்ததாக எங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், பிரணவத்தின் பொருளுரைத்து வேலெடுத்து விளையாடும் குமாரசாமி அண்ணர் தமது வாதத்தை முன்வைக்க ஆயத்தமாக இருக்கிறார்.

கோமகன் ( நடுவர் ):

அர்ஜுனின் நாகஸ்திரம் நன்றாகவே வேலை செய்தது . பலபாணங்கள் அவரிடமிருந்து சரமாரியாக வந்தது . அதிலும் ,
" தேடல் இல்லாத மனிதன் வெறும் ஜடம். அந்த தேடல்
இல்லாவிடில் கற்கால மனிதனாக இன்றும் மனிதர்கள் அவர் . அவர் ஊர்களில் குகைகளில் இதுதான் சந்தோசம் என்று இருந்திருப்பார்கள் . அந்த தேடல் நாம் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வீதம் சாத்தியம். அரசியல் , பொருளாதாரம் , தொழில்நுட்பம் எல்லாமே மிக பின் தங்கிய ஊழலால் நிரம்பிய நாடு அது. அதுவும் ஒரு போர்சூழலில் எதுவும் சாத்திய மற்ற ஒரு பிடிப்பிலாத வாழ்வைத்தான் நாம் வாழ்ந்திருக்க முடியும்
." 

என்ற வாதத்தில் நான் மயங்கினாலும் , எமது பாட்டன் முப்பாடன் தேடல் செய்யாமலா இந்த தலைமுறைகள் அவர்களது விளைச்சலை அனுபவித்தோம் ???  நீங்கள் சொல்கின்ற சாதீயங்கள் புலத்தில் வர்க்கவேறுபாடுகளாக விசுபரூபம் எடுத்தன . இங்கும் ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரனாகவும் இருக்கின்றான் . அடுத்தது சுதந்திரம் பற்றிய அர்ஜுனின் கருத்திற்கு வாலியின் நாய் கதையே எனக்கு  நினைவில் வந்தது . புலத்து கார்பவனிகளும் , இன்னபிற சிற்றின்பங்களும்தான் உண்மையான சுதந்திரமா ????  என்ற கேள்வியை எழுப்புகின்றது . பார்க்கலாம் எதிரணியின் காய் நகர்த்தலை . எங்கே குமாரசாமி  ஐயா வாங்கோ . மைக்கை பிடியுங்கோ .

குமாரசாமி:

சபையில் அமர்ந்திருக்கும் தாய்மாரே ,தங்கைமாரே ஐயாமாரே
அண்ணன்மாரே   தம்பிமாரே மதிப்புக்குரிய நடுவர் அம்மா சுமேரி அவர்களே! மதிப்புக்குரிய நடுவர் கோமகன் அவர்களே!  மற்றும் மேடையில் காலுக்குமேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் எதிரணி உறுப்பினர்களே அனைவருக்கும் என் அன்புகலந்த வணக்கங்கள்.

இங்கு நாம் புலம்பெயராது ஊரிலையே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்  என்றகவலையே என்ற அணியில்
வாதாடுகின்றேன்.வாதாடுகின்றேன் என்பதை விட உள்ளதை உண்மையை சொல்கின்றேன் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.நடுவர்களே  என்ரை பக்ககத்திலை இருக்கிற வாலி,வாத்தியார்,பகலவன் தும்பளையான் கரும்பு எல்லாரும் எவ்வளவோ நல்லவிசயங்களை எடுத்து சொல்லியும் அவர்கள்  இன்னும் கதிரையை விட்டு அகலாமல் இருப்பது மனவருத்தத்திற்குரியது.

நாங்கள் அந்த பொன்னான எங்கடை  பூமியை தெரியாத்தனமாய் விட்டுட்டு வந்ததிலை எனக்கு பெரிய மனவருத்தம் நடுவர்களே. எங்களுக்கு எங்கடை நிலமும் வானமும் என்ன குறைவைச்சது? வானுயர்ந்த சோலைகள் இல்லையா?ஆடிப்பாடித்திரிய வயல் வெளிகள் இல்லையா? நீச்சல் அடிக்க குளங்கள் இல்லையா? வானுயர அலையடிக்கும் கடல் இல்லையா?

குஞ்சுகுருமன் தொடக்கம் காளையர்கன்னியர்  பாக்கு உரலுடன்
திரியும் வயோதிபர் வரை உருண்டு பிரளும் மணல்வெளிகளின் சுகம் யாருக்காவது தெரியுமா? நிலவுநேரங்களிலை அந்தமணல்வீதிகளிலையும் மணல் புட்டிகளிலையும் இருந்து அரட்டை அடிக்கிறசுகம் விடுகதைகள் கேக்கிறசுகம் யாருக்காவது தெரியுமா?

தங்கைச்சி தமிழச்சி சொல்கிறார்  இஞ்சை எல்லாரும்
ஏற்றத்தாழ்வில்லாமல் வாழுனமாம்.... இவ நாலுபேரோடை நல்லவடிவாய் பழகேல்லை எண்டது அப்படியே தெரியுது....இந்த ஏற்றதாழ்வு இல்லாத வாழ்க்கைக்கு இஞ்சை இருக்கிறவன் படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை நடுவர்களே!காலமை விடிய வெள்ளன எழும்பினால்
முதல் வேலை இரண்டு இடத்திலை கிளீனிங்......அதுக்குப்பிறகு மெயின்வேலை அது கோப்பை கழுவுறது தொடக்கம் மரக்காலை எண்டு நீண்டுகொண்டே போகும்....பிறகு முதலாம் சாமத்திலை வேறை எங்கையாவது ஒரு குட்டி வேலை........புலம்பெயர் நாடுகளிலை இயந்திரத்துக்கு கூட ஓய்விருக்கு.....எங்கடை சனத்துக்கு ஓய்வெண்டால் என்னெண்டு தெரியுமோ தெரியாது.  எல்லாரிட்டையும் ரிவி இருக்காம்...கடைசியாய் வந்த புது ரெக்னிக் அதுஇது எண்டு எல்லாத்தையும் அனுபவிக்கினமாம்.....

எல்லாம் வந்து என்னபிரயோசனம் நாளுக்குநாள் வேலையில்லாத
சனந்தான் கூடிக்கொண்டு போகுது...அங்கை அப்பிடியில்லை உனக்கு தைரியம் இருந்தால் ஒரு மண்வெட்டியை தூக்கு ஊர்முழுக்க உனக்கு வேலையிருக்கு.....சில இடங்களிலை சாப்பாடும் தந்து சம்பளமும் தருவினம்...ஆனால் இஞ்சை??? நடுவர்களே ஊரிலை இல்லாத கூட்டுக்குடும்ப சந்தோசம் இஞ்சை எங்கையிருக்கு? ஊரிலை பின்னேரம் 6மணிக்குப்பிறகு தோட்டக்காரன் தொடக்கம் உத்தியோகக்காரன் வரைக்கும் ஓய்வும் குடும்பசந்தோசமுந்தான் முக்கியம்......இஞ்சை ஒருசில புருசன்பொண்டாட்டி வசுவிலையும் ரயிலையும்தான் சந்திச்சு கதைக்கினம் அவ்வளவுத்துக்கு நேரமில்லை

நடுவர்களே.

மருத்துவிச்சியை வைச்சு பிள்ளைப்பெறு பார்த்த
பூமி......பரியாரியார் கைநாடிபார்த்து மருந்து தந்த பூமி....கற்பிணியின் உடல்வாகினைப்பார்த்தே ஆண்பிள்ளையா பெண்பிளையா என அடித்துக்கூறும் நாட்டுவைத்தியர்களை கொண்ட பூமி....ஆனால் இங்கோ எத்தனையோ பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கருவிகளை வைத்துதான்  ஒரு நோயை குணப்படுத்தி இன்னொரு நோயை உருவாக்குகின்றார்கள்.எங்கடை ஊரிலை வேலியிலையும் வடலியிலையும் படர்ந்திருக்கிற கொடிகளும் தாவரங்களும் ஒவ்வொரு வருத்தத்துக்கும் உதவும் எண்டது மேலைத்தேய மோகத்தில் மயங்கிய தமிழச்சிக்கு தெரிய வாய்ப்பில்லத்தான் நடுவர்களே? அங்கை காசுகுடுத்து வாங்காத குப்பையாய் கிடக்கிற முருங்கை இலை முசுட்டைஇலை அகத்தி இலை என்ன விலை விக்குதெண்டு தமிழச்சியிட்டை ஒருக்கால் கேட்டு சொல்லுங்கோ நடுவர்களே? இதெல்லாம் தேவையா?

நடுவர்களே!
தம்பி ஜீவா அவர்கள் எடுத்தமாம் கவுட்டமாம் எண்டுற மாதிரி ஒரு கேள்வியை கேட்டார் அதுதான் மண்ணுக்கே உரிய இயல்பான வாழ்வுதான் மகிழ்வைத்தரும்  என்றால்  ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள்? இங்கே தம்பி ஜீவாவுக்கு  இந்த பட்டிமன்றத்தின் தலைப்பை மீண்டுமொருமுறை கூர்ந்து கவனிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் நடுவர்களே!

அடுத்தது நடுவர்களே! தம்பியர் பியோ எண்டொரு சொல்லை நைசாய் எடுத்துவிட்டார்...இந்த பியோ எண்டால் எல்லாமே விலை கூடத்தான்...அதுசரி பியோ எண்டால் என்ன நடுவர்களே? எங்கடை ஊரிலை சாணகம் ஆட்டுப்புளுக்கை கஞ்சல் குப்பை உமி சாம்பல் எண்டு உதுகளை போட்டுத்தான்விவசாயம் செய்தனாங்கள்.....இப்பவும் செய்யினம்....பெரிசாய் மருந்துகளும் அடிக்கத்தேவையில்லை...இது பியோ!எங்கடை ஊரிலை மரக்கறி,கோழிமுட்டையளை சாப்பிட்டு வருத்தம்வந்ததாய் சரித்திரம் இல்லை நடுவர்களே? இப்ப கொஞ்சநாளைக்குமுதல் ஜேர்மனியிலை பீயோ முட்டையாலை பயங்கரபிரச்சனை. அதை சாப்பிட்டால் கான்சர் வாற அளவுக்கு பிரச்சனை இருக்கு......இது எங்கடை பியோ தம்பிக்கு தெரியாமல்  இருக்காது நடுவர்களே! புலம்பெயர் நாடுகளிலை பொலிடோல் மலத்தியோன் அன்ரிபியோட்டிக் இல்லாத மரக்கறி இறைச்சியளை சாப்பிட்டால் பக்கெண்டு பின் விளைவுகள் வரும்.இவங்கடை கெமிக்கல் அடிச்ச சாப்பாடுகளை சாப்பிட்டல் மூண்டு நேரமும் குளிசை எடுக்க வேண்டி வரும். பியோ எண்டு சொல்லி மூண்டு ஈறோவுக்கு ஒரு தேங்காய் விக்கிறாங்கள் இது என்ன அநியாயம் நடுவர்களே? 
அடுத்தது  நடுவர்களே!


அரைச்சமாவையே ஒருதம்பி மணித்தியாலக்கணக்கிலை அரைச்சார்...அவர்தான் தம்பியர்  சுபேஸ்! என்னத்தை சொல்ல.....நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாம்....நித்திரை கொள்ளுறமாதிரி நடிக்கிறவனை ஒண்டுமே செய்யேலாது நடுவர்களே!
தம்பியரே! அங்கை கூடின பட்சம் ஒவ்வொருவனுக்கும் சொந்தவீடு வளவு தோட்டம் துரவு எண்டு இருக்கும். சொந்தமாய் கிணறு இருக்கும் இல்லாட்டி பொது கிணறு இருக்கும். குண்டி கழுவுறதுக்கு சுடுதண்ணி தேவையில்லை.முகம்கழுவ சுடுதண்ணி தேவையில்லை.இஞ்சத்தையை மாதிரி கிழமையிலை ஒருக்கால்த்தால் குளிக்கிறேல்லை டெய்லி குளியல்.....கக்கூசுக்கு இருந்துட்டு துடைக்க பேப்பர் வாங்கத்தேவையில்லை...கிணத்திலை ஒருவாளி தண்ணி விரும்பின அளவுக்கு அலசி கழுவலாம். தண்ணி பில் கூடுமெண்டு யோசிக்கத் தேவையில்லை.வீட்டிலை சமைக்கிறதுக்கு தேவையான அளவு விறகு இருக்கு..காஸ் கரண்ட் தேவையில்லை.வீட்டுக்கு கீற்றர் தேவையில்லை.இஞ்சத்தையை மாதிரி போகத்துக்கு போகம் உடுப்புகள் மாத்த தேவையில்லை...சாறத்தோடை எப்பவும் வெளியிலை போகலாம் வரலாம்.......


எல்லாத்தையும் விட ஈழத்தமிழன் புலம் பெயரமுன் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை....சிங்களவனால் ஏற்பட்ட எத்தனையோ அழிவுகளினின் பின்னரும் தானாக எழும்பி நின்றவன் ஈழத்தமிழன். புலம்பெயர் தமிழனைப்போல் போலி வாழ்க்கை வாழ்ந்தவனல்ல ஈழத்தமிழன். கஞ்சியை குடித்தாலும் நிம்மதியாய் குடித்தவன் ஈழத்தமிழன்


நடுவர்களே!


எதிரணியில்  இருக்கும் சகோதரம் யாழ்வாணனை பார்க்க கவலையாக்கிடக்கு...மனிசன் நல்லாய்ப்பேசுறார்....ஒரு நல்ல உண்மையான விசயத்தை சொன்னால் நாங்களும் கைதட்டலாம்...ஆனால் சும்மா விசர்கதையெல்லே கதைக்கிறார்.


எமது சிவனின் பாதியும்,சக்தியும் போன்று இருக்கும் எமது மதிப்பிற்க்குரிய  நடுவர் அம்மாவை பார்த்து என்ன கேள்வி கேட்டார்? புட்டு????? இந்த வாணனை பார்த்து ஒரு சிறிய கேள்வி கேட்கின்றேன் நடுவர்களே!
கனடாவில் அடுக்கு மாடிகளில் சந்தோசமாய் இருக்கும் தமிழ்க்குடும்பங்களால் அதாவது கனேடியன் தைரியப்புயல் அல்லது கனேடியன் தைரியலஷ்சுமி இருக்கும் இடங்களில் புட்டுக்கு பச்சையரிசி நனையப்போட்டு  உரலில் இடிக்க முடியுமா?


 ஐயா வாணரே! அமெரிக்க ஜனாதிபதிஎன்ன வெள்ளையோ எண்டுறியள்? ரொக்கற்றிலை போன கல்பனா என்ன வெள்ளையோ எண்டுறியள்? நோர்வேயிலை வேறை தமிழன் கவுன்சிலர் எண்டுறியள்? அதாவது இந்த உலகம் ஒரு சமதர்மத்தோடை நடக்குது எண்டு சொல்ல வாறிள்?


அப்ப ஏன் இன்னும் தமிழீழம் கிடைக்கேல்லை வாணரே?

நடுவர்களே! இரத்தினச்சுருக்கமாக அர்ஜுன் அவர்கள் தனது கருத்தை சொன்னார்.அது உண்மையிலும் உண்மை....அங்கை கண்டகண்ட இங்கிலிஸ்படங்களை ரீகல்,சாந்தி,றியோ தியேட்டரிலை பள்ளிக்கூடத்துக்கு போகாமல் கட்டடிச்சு பார்த்து வெளிநாட்டுமோகம் தலைக்கேறியவர்கள்..அந்த மோகம்தான் கூட இருப்பவர்களையே எதிரியாக காட்டுகின்றது....பாருங்கள் நடுவர்களே? சுற்றுலாவுக்குக்கூட எங்கள் புங்குடுதீவு,நயினாதீவு, அனலைதீவு மருந்துக்கும் ஞாபகத்துக்கு வரேல்லை...ஜமேக்காவாம் கியூபாவாம்....ஏன் எங்கடை ஊரிலை சூடுதணிக்கும்   இளநீர் இல்லையோ?கடுதாசிமல்லிகைப்பூ  இல்லையோ? செவ்வரத்தம்பூ இல்லையோ? 

இப்பிடி எத்தினையோ இயற்கை தந்த நல்ல சீதனங்களை உதறித்தள்ளிவிட்டு வந்த எங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.
கனம் நடுவர்களே!

நான் சொன்ன இந்த கருத்துக்களை  நாலும் தெரிந்த நீங்களாவது எதிரணிக்கு நல்லவிதமாக சொல்லி அவர்களை நல்லவழிக்கு கொண்டு வரும்படி வேண்டுகின்றேன்.பொறுமையுடன் அமைதிகாத்த சபையினருக்கும் என் நன்றியைச்சொல்லி விடைபெறுகின்றேன் வணக்கம்.

 கோமகன் ( நடுவர் ):

மயிலேறும் பெருமாள் என்னப்பன் குமாரசாமி ஐயாவின்ரை வாதம் ஒரே சூரசம்சாரம்தான் . மாறிமாறி அடித்தார் எதிரணியை . அதில் ஒரு விடையத்தில் ஐயாவின் வாதம்  என்மனதில் உயர்ந்து நின்றது . எப்படியென்றால்,

"  ஐயா வாணரே! அமெரிக்க ஜனாதிபதிஎன்ன வெள்ளையோ எண்டுறியள்? ரொக்கற்றிலை போன கல்பனா என்ன வெள்ளையோ எண்டுறியள்? நோர்வேயிலை வேறை தமிழன் கவுன்சிலர் எண்டுறியள்? அதாவது இந்த உலகம் ஒரு சமதர்மத்தோடை நடக்குது எண்டு சொல்ல வாறிள்?
அப்ப ஏன் இன்னும் தமிழீழம் கிடைக்கேல்லை வாணரே? "

மேலும் இன்னுமொரு வாதத்தை எடுத்துவைத்து என்னையே மலைக்க வைத்தார் ".நடுவர்களே! இரத்தினச்சுருக்கமாக அர்ஜுன் அவர்கள் தனது கருத்தை சொன்னார். அது உண்மையிலும் உண்மை....அங்கை கண்டகண்ட இங்கிலிஸ் படங்களை ரீகல், சாந்தி, றியோ தியேட்டரிலை பள்ளிக்கூடத்துக்கு போகாமல் கட்டடிச்சு பார்த்து வெளிநாட்டு மோகம் தலைக்கேறியவர்கள். அந்த மோகம்தான் கூட இருப்பவர்களையே எதிரியாக காட்டுகின்றது....பாருங்கள் நடுவர்களே? சுற்றுலாவுக்குக்கூட எங்கள் புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு மருந்துக்கும் ஞாபகத்துக்கு வரேல்லை...ஜமேக்காவாம் கியூபாவாம்....ஏன் எங்கடை ஊரிலை சூடுதணிக்கும்   இளநீர் இல்லையோ? கடுதாசிமல்லிகைப்பூ  இல்லையோ? செவ்வரத்தம்பூ இல்லையோ?"

நான் குமாரசாமி ஐயாவின் வாதத்தை வைத்துப் பார்த்தபொழுது குமாரசாமி ஐயாவினுடைய " அனுபவம் " என்ற மொழி என்னை நிலைதடுமாறச் செய்தாலும் , எதிரணியில் ஒரு வீரவாகு இருக்கின்றார் , இறுதியாக களமிறங்க . எங்கே இசைக்கலைஞன் அழையுங்கள் உங்கள் தளபதியை .......

மெசொபொத்தேமியா சுமேரியர் ( நடுவர் ): 

குமாரசாமி அண்ணாவின் அனுபவத்தில் பட்டறிந்தவை நறுக்கான வார்த்தைகளில் தெறிக்கின்றது. இதற்குத்தான் சொல்வார் கள் வயதில் மூத்தோர் எம்முடன் இருக்கவேண்டும் என்று. எதிரணியினரின் மாய வார்த்தைகளில் மயங்கிப்போயிருந்த என்னை, இவரின் வாதங்கள் தெளிய வைத்துள்ளன.

மின்சாரமோ சுடுநீரோ தேவையற்ற, இயற்கையோடு இசைந்த எம் வாழ்வின் உன்னதத்தை உயிர்ப்போடு சொல்கிறது அவரது வாதம். நாமெல்லாம் எத்தனை வசதியுடன் இங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வு மாற்றானிடம் கையேந்தும் அடிமை வாழ்வுதான் என்பதை அடித்துச் சொல்கிறார்.

நல்ல காலம் அண்ணா நீங்கள் எனக்கு நினைவு படுத்தியதற்கு. யாழ்வாணனின் வாதத்தில் மயங்கி இடையில் ஒரு முக்கியமான பந்தியை வாசிக்காது விட்டுவிட்டேன். அவருக்கு கூறுவதற்கு புட்டை விட வேறு ஒன்றும் தெரியவில்லைப் போலும். அல்லது புட்டே  வாழ்கையில் உண்ணவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து தற்காலிக பெரும் பதவியா! எந்தப் பதவி என் கைவிட்டுப் போனாலும் என் குடும்பத் தலைவி என்னும் பெரும் பதவி  என்னை விட்டு எப்போதும் போகவே போகாது என்பதை யாழ் வாணனுக்குக் கூறிக்கொண்டு அடுத்து அவரணியில் மிஞ்சி இருப்பவர் புங்கையூரன். அவர் பாவம் என்னத்தைச் சொல்லி ம் .......பாப்பம்.

Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…