Skip to main content

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் ( நடுவர்கள் தீர்ப்புரை ) பாகம் 06


மெசொபொத்தேமியா சுமேரியர் நடுவர் :

யாழ் களத்தில் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு நடாத்தப்பட்ட பட்டிமன்றத்தை ஆவலோடும் பொறுமையோடும் இத்தனைநாள் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், இரு அணியிலும் வாதாடித் தம் பக்கத்துக்கு வலுச்சேர்த்தவர்களுக்கும் முக்கியமாக யாழ் இணையத்துக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தம் வாதத் திறமையால் இரு அணியினரும் சோடை போகாது மிகச் சிறப்பாக வாதாடி நடுவர்கள் எம்மைத் திணற அடித்துவிட்டனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பார்வையாளர்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் "நாம் புலம் பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம்" என்று வாதாடிய அணியினரே முன்னணியில் உள்ளனர். ஆனாலும் அதை மட்டும் வைத்துத் தீர்ப்புக் கூற முடியாதல்லவா!

"நாம் புலம்பெயராது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே" என்னும் அணி சார்பாக வாதாடியோர் நாம் அங்கு இழந்த வாழ்வின் வசந்தங்களை எம் கண்முன்னே கொண்டு வந்தனர். இயற்கையுடன் கூடிய எம் வாழ்வும் அதன் நினைவுகளையும் மீட்டி எம்மை மனச் சங்கடத்துக்கு உள்ளாக்கினர்.

புலம்பெயர்ந்ததனாலேயே நாம் அடிமைகளாக அந்நிய மண்ணில் எம் தன்மானத்தை இழந்து வாழ்கின்றோம் என்னும் அவர்கள் வாதம் பொய்யல்ல. நாம் யார்?? எம் தேசம் எது?? என்னும் அவர்களின் வினாக்களுக்கும் எம்மிடம் விடையில்லை. அதைவிட எம் அடுத்த சந்ததி நாடோடிகளாக வாழும் வாழ்க்கைக்குத் தம்மை பழக்கப்படுத்தி, எல்லாம் மறந்து தம் அடையாளம் இழந்து நிற்கப் போகின்றனர் என்பதும் ஆணித்தரமான உண்மை.

எம் தேசத்தில் எம் சுய சம்பாத்தியத்தின் மூலம் நாம் நிறைவு கண்டோம். ஆனால் இங்கோ எல்லாம் தந்து எம்மை வாழ்வின் உயர்நிலைக்கு இட்டுச் செல்வதான மாயம் காட்டி, வாழ்வு பூராகக் கடன் அடைத்தே வாழ்நாளின் முடிவுவரை வாழும் அவல வாழ்வையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனாலும் அவர்களின் வாதங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்ததில் நாம் எம் தேசத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இங்கு வாழ்வதுபோல் சிறப்பாக வாழ்ந்திரும்போமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. எம்மக்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வும், ஆண்டாண்டுகளாக ஆழமாய் வேரூன்றிவிட்ட சாதீயமும், சமத்துவமற்ற வாழ்வும், பணமுள்ளவனுக்கே கிடைக்கும் சொகுசு வாழ்வும் எல்லோருக்கும் கிடைத்திருக்கவே முடியாது. தன் வீட்டைக் கட்டும் கொத்தனாரையே, தன் கிணற்றில் தண்ணீர் அள்ள விடாத அறிவற்ற மக்கள், எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனை கல்வியறிவைப் பெறினும்,
திருந்திவிடப் போவதில்லை என்பதே உண்மை.

எமக்கு வேறு ஒன்று கிடைக்கும் வரை, எம்மிடம் இருக்கும் சிறியதே எமக்கு உயர்வாகத் தோன்றும். அதனால்த்தான் எம்மூர்க் கோயிலும் குளமும் காற்றும் கூட எமக்கு உயர்வாக இருக்கிறது. அதைவிடச் சிறப்பாகப் புலம்பெயர் வாழ்வில் எத்தனையோ இருந்தும் அவற்றை அனுபவிக்காது, மனதில் பதிந்தவற்றையும், இழந்தவற்றையும் எண்ணிப் புலம்புவதில் என்ன நியாயம்??

கல்வியை எடுத்துக் கொள்வோம். உலகத்துக்கே எழுத்து மொழி தந்து, உலகின் உன்னதங்கள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருந்தவன் தமிழன். முதன் முதலில் பள்ளிக்கூடங்களை உலகுக்கு அறிமுகம் செய்தது கூட தமிழரின் மூதாதைகள் தானெனினும், காலப் போக்கில் எல்லாச் சிறப்புக்களும் இழந்து தமிழன் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து வந்தான். பொறிமுறைகளைக் கண்டறிந்து, உலகின் முதல் பொறியியலாளர் என்னும் பெருமையும் எம்மினத்தையே சேர்ந்தாலும் அதனால் எமக்கு தற்போது என்ன பயன் எனில் ஒன்றுமே இல்லை.

எம்மூரில் எமக்குக் கல்வி கிடைத்ததுதான். ஆனால் எப்போது?? பிரித்தானியர் ஆட்சி அங்கு வந்ததன் பின்னர்தான். அதுவரை அனுபவக் கல்வியாகவும், திண்ணைகளின் சமய சார்பான கல்வியாக்கவுமே அங்கு இருந்திருக்கிறது. அதனால் எல்லோரும் பயனடந்தார்களா? என்றால் இல்லை. ஊரில் 95% படித்த மக்கள் என்று கூறினீர்களே தவிர, அத்தனைபேர் படித்திருந்தும் எதை அங்கு பெரிதாகச் சாதித்தீர்கள். வல்லரசுகளுடன் வேண்டாம், அண்டை நாடுகளுடனாவது போட்டிபோடும் திறன் எமக்கு இருந்ததா எனில் அதுவும் இல்லை. ஆனால் புலம்பெயர்ந்ததனால் எத்தனையோ சாதனைகளைத் தமிழன் படைத்துவிட்டான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

அடுத்து "புலம்பெயர் தமிழரது ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே" என வாதாடியவர்கள், புலம்பெயர் தேசங்களில் எம் மக்கள், எத்தனை வசதிகளோடு வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை தெளிவாகவே கூறியிருக்கின்றனர்.

எம்மிடையே ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வற்ற வாழ்வு, கல்வி, பொருளாதார மேம்பாடுகள் என்பவற்றையும், புலம்பெயர்ந்து நாம் இங்கு வந்ததனால், எம்மினத்திற்கு ஏற்பட்டுள்ள செழுமையான வாழ்வையும் அக்குவேறு ஆணிவேறாக அலசியுள்ளனர்.

மனித வாழ்வின் தேடல்களுக்கும், அவர்களின் அளவற்ற ஆசைகளுக்கும், அதனூடாக அவன் அடைய எண்ணிய அத்தனைக்கும் புலம்பெயர் தேசமே எல்லைகளற்ற வழிகளைக் காட்டியுள்ளது என்கின்றனர். ஒருவரிடம் திறமையும் முயற்சியும் இருந்தால் அவர் எத்துணை தூரத்தையும் எளிதில் கடந்து தன் இலக்கை அடைவதற்கு, புலம் பெயர் தேசத்தின் வரைமுறைகளே வழிசெய்கின்றன என்பதும் உண்மைதான்.இத்தனை வசதிகளை வாய்ப்புக்களை விட்டு நீங்கள் யாராவது மீண்டும் தாயகம் சென்று வாழ முடியுமா?? வாழ்வீர்களா?? என்பதற்கு இல்லை என்பதுதான் என்பதில் கூட.

புலம் பெயர்ந்ததனாலன்றோ நாம் முப்படைகளை ஆக்கும் வல்லமை பெற்றோம் என்னும் இவர்கள் வாதம்தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் படை நடத்தவில்லையா?? அயல் தேசங்களை வென்று தம் ஆட்சியின் கீழ் கொண்டுவரவில்லையா??? எம் அறிவையும் ஆற்றலையும் கண்டு அயர்ந்து யவனர்கள் கூட எமக்கு அடிபணிந்து வாழ்ந்ததெல்லாம் எம் வரலாற்றில் உண்டு. ஆனால் அதன்பின் தமிழரின் வாழ்வு காட்டிக் கொடுப்புக்களாலும் கயவர்களாலும் பாரிய அழிவையும் சரிவையும் சந்தித்ததையும் நாம் மறுக்க முடியாது.

நாம் எம் தேசத்தில் இருந்திருந்தால் நாம் எமக்கு மட்டுமே தெரிந்த, நாம் வசதிகள் என எண்ணிய சிலவற்றுடன் மட்டும் திருப்பதி கொண்டு, தொடர்ந்தும் அதே வாழ்வை வாழ்ந்துகொண்டு, எத்தனை ஆண்டுகள் ஆயினும் உலகமயப் படாது அப்படியேதான் இருந்திருப்போம். அதாவது கிணற்றுக்குள் வாழும் உயிரினங்களைப் போல் வெளியே உள்ள சிறப்பான வாழ்வு பற்றி ஒன்றும் அறியாது வாழ்ந்திருப்போம். ஆனால் இன்று நாம் புலம்பெயர்ந்ததனால், உலகம் எம் கண்முன்னே விரிந்து, எமக்கான எல்லாவற்றையும் கண்முன்னே காட்டி, விரல் நுனியில் தகவல்களை உள்ளடக்க
வைத்திருக்கின்றது.

எமக்கென்றொரு அடையாளம் இன்னமும் இருக்கிறது. எம் ஆழ்மனதில் அதில் பற்றும் இருக்கிறது. எமக்கென ஒரு தேசம் என்றோ இருந்திருக்குமானால் நாமும் உலக நாட்டின் முன்னணியில் நின்றும் இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்லவே. நாம் எப்போதும் இயற்கையுடன் மட்டும் ஒன்றி வாழ எண்ணாது, யதார்த்த வாழ்வுடனும் இசைந்து போவதே எமக்கும் எம்மினத்திற்கும் நன்மை பயக்கும். அப்படி இசைந்து போகும் தன்மை இல்லாததால்தான் நாம் இன்று இத்தனை உயிர்களையும் இழந்து, எம் தேசத்தையும் அந்நியன் கால்பதிக்க விட்டு எதுவும் செய்ய முடியாது அனாதரவாய் பார்த்துக்கொண்டு நிற்கின்றோம்.

எனவே நாம் ஊரில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருப்போம் என்னும் வாதம் யதார்த்த வாழ்வியலுக்குப் பொருந்தாதாது மட்டுமல்ல, எம்மை நாமே சமாதானப் படுத்த, நாம் கூறும் நொண்டிச் சாட்டு என்பதே உண்மையின் தரிசனம் எனக் கூறி "புலம் பெயர் தமிழரது ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே" என வாதாடிய அணியினரே வெற்றி வாகை சூடிக்கொள்கின்றனர் எனக் கூறி எனதுரையை நிறைவு செய்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

நன்றி. வணக்கம்.

கோமகன் நடுவர் :

அரங்கம் நிறைந்த ரசிகப்பெருமக்களுக்கு எனது வணக்கங்கள் . தனது பதினைந்தாவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் இணையத்திற்கு எனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு எனது தீர்ப்பை வழங்கலாம் என இருக்கின்றேன் .

இந்தப் பட்டிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கப்போகின்றது என்ற ஆவல் உங்கள் கணகளில் மின்னுவதை என்னால் உணரக்கூடியாக இருக்கின்றது . இரண்டு அணிகளும் அதன் தலைவர்களும் யாழ் இணையத்தின் முத்துக்கள் என்றே சொல்லலாம் . அவர்களது வாதத்திறன் , புலம்பெயர்ந்தும் தமிழ் மீதுகொண்ட அடங்காப்பற்று என்னை நிலைதடுமாற வைத்தது . நான் காய்த்தல் உவத்தல் இன்றி உங்களுக்கு தீர்ப்பை சொல்லவேடிய நேரம் வந்திருக்கின்றது . ஒரு போட்டி என்று வந்தால் அதில் வெற்றி அல்லது தோல்வி தான் இருக்கமுடியும் . இரு அணியும் வெற்றிதோல்வி இன்றி முடிவுக்கு வந்தது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை . இந்தப்பட்டிமன்றத்தில் வாசகர்களாகிய உங்களையும் வாதாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுக்குத் தெரியாது நடுவர்கள் ஆக்கினேன் . அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் தமது விருப்பு வாக்குகளை இட்டார்கள் . நான் அவர்களது புகழ்சிகளுக்கு அடிபணியாது அவர்களது வாதங்களில் மட்டுமே கவனத்தை திருப்பினேன்.

" நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

என்ற அணியில் தமது வாதங்களை வைத்த ஏழுபேருமே

" பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்? அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் " .

என்று தங்கள் வாதங்களால் என்னை ஆட்டங் காணவைத்தார்கள் . முதலாக வந்த

வாத்தியாரும் ,

“ கல்வி கல்வி என்று தான் காணாத கல்வியைப் புலம்பெயர்ந்தவன் தன் குழந்தைக்கு கடமையாக்க பொது அறிவு என்றால் பொருளே தெரியாமல் அக்குழந்தை தவிக்கின்றது தன் கலாச்சாரம் தெரியாமல் அவதிப்படுகின்றது இத்தனை கவலைகளும் இல்லாமல் நாங்கள் சொந்த ஊரில் சிறப்பாக நாம் வாழ்ந்திருப்போம் “

என்று புலம்பெயர் தமிழனது வருங்காலமும் அவனது சந்ததிகளும் ஜிப்சிகளாக மாறிவரும் அபாயநிலையை காட்டமாகத் தனது வாதத்திலே வைத்தார்.

பகலவன் தனது வாதத்திலே,

“ ஒரு மனிதனுக்கு அடுத்ததாக தேவைபடுவது சுயமரியாதை. நாங்கள் எண்களின் தாய்நாட்டை விட்டு இன்னொரு நாடுக்கு எப்போ பிழைக்க வாறோமோ என்றே எங்களின் சுயமரியாதையை இழக்கிறோம். கூனி குறுகி அடிமையாக எத்தனை நாட்கள் வேலை செய்திருப்போம். ஊரிலே பொறியியல் படித்துவிட்டு இங்கே எத்தனை கக்கூஸ் கழுவி இருப்போம். எங்களுக்கு பக்கத்தில் வந்து அமர கூட மாட்டார்கள்.

 ஒரு சாராசரி மனிதனுக்கு தர வேண்டிய மரியாதையைவிட கீழ்த்தரமாக எவ்வளவு இடங்களில் நடத்தி இருப்பார்கள். இப்போது குறைந்துவிட்டாலும், நேருக்கு நேராக காட்டாவிட்டாலும் நிற வெறி அவர்களின் மனசில் இருந்து அகற்ற முடிவதில்லை.”

 
என்றும் ,
 
" புலம்பெயர் தமிழனே உனது குழந்தைகளை தாயகத்திலே இனமானமுள்ளவர்களாக வளர்க்கப் போகின்றாயா ??? இல்லை புலம்பெயர் சூழலிலே அவர்களை " ஜிப்சிகளாக " வளர்க்கப்போகின்றாயா ??? “

 என்று பெரியகேள்வியை எழுப்பி புலம் பெயர்ந்த தமிழினின் அவலத்தை படம்பிடித்து தாயகத்தில் இதைவிட சிறப்பாக இருந்திருப்போம் என்றார்.

அதே கருத்தை பின்பு வந்த தும்பளையான்,

“ புலம் பெயர்ந்து நாம் ஒன்றை இழந்தே இன்னொன்றை பெற்றிருக்கிறோம். எமது நேரத்தை, குடும்ப வாழ்க்கையை, உடல் சுகத்தை, பிள்ளைகளின் கலாச்சாரத்தை, எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மொழியை இழந்திருக்கிறோம். புலம்பெயர் தேசத்தின் பணமும் சுகங்களும் ஒரு விலையுடன் வருபவை.
ஊரின் பல நன்மைகளும் சுகங்களும் இலவசமாக வருபவை. முக்கியமாக விலைமதிப்பற்ற எமது மண் எனும் உணர்வு விலைமதிப்பற்றது. வாழ்க்கையை அணு அணுவாக இரசித்து வாழ்வது ஊரில் மட்டும்தான் சாத்தியம். நாம் பலவருடங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், நாம் அந்நியராகத்தான் அந்தந்த நாட்டு மக்களால் பார்க்கப்படுவோம். அத்துடன் நிறவெறி இல்லை எனக் கூறுபவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றுகிறார்கள் என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன்.”

என்றும் ,

“அடுத்ததாக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றிய பங்கு அதிகம் எனக்கூறி இருந்தார். இல்லை எனக்கூறவில்லை ஆனால் அதே போராட்டம் அழிவடைவதற்குக் காரணமாக இருந்ததும் புலம்பெயர் சார்ந்த அரசியல், வெளிநாட்டுக்கொள்கைகள் என்பது வெளிப்படை. கப்பல் கப்பலாக ஆயுதத்தை இறக்கினோம் ஆனால் அதனை எடுத்து பாவிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் முடக்கி வைத்தோம். புலம்பெயர்ந்த நாம் அனைவரும் ஊரிலே இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்குமா?”

என்றும் ஒரு மனச்சங்கடமான கேள்வியை என்முன்னே வைத்தார்.

இதிலே நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் . தமிழன் புலம்பயர்ந்துதான் போரியல் வரலாறுகளையும் முப்படைகளையும் நாடாத்தினான் என்றால் , சொந்த நிலப்பரப்பிலே இருந்துகொண்டு தங்களுக்கென்ற கடல் வாணிகப்பாதையையும் முப்படைகளையும் கொண்ட எனது பாட்டன் முப்பாட்டன்களான மூவுடை வேந்தர்களை எந்தவகையில் சேர்ப்பது?????

அடுத்து வந்த கரும்பு,

“ நாம் என்பது யார்? நமது ஊர் என்பது எது? நாம் என்பது ஒருசிலரை குறிக்கின்றதா அல்லது அனைவரும் சம்மந்தப்பட்ட ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகத்தை
குறிக்கின்றதா? ஊர் என்பது ஓர் குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பை குறிக்கின்றதா அல்லது பெருநிலப்பரப்பான தாயகத்தை குறிக்கின்றதா?


இவ்வினாக்களிற்கான பதில்களின் தேடல்கள் உங்கள் வாழ்வில் தொடரும்போது, அந்தப்பதில்களிற்கான புனிதப்பயணத்தில் நீங்கள் தெளிவு பெறும்போது, இவை சம்மந்தப்பட்ட உங்கள் கவலைகள் அத்தனையும் நிச்சயம் ஆயிரங்கோடி அர்த்தங்கள் பொதிந்தனவாகவே காணப்படும். அவை உங்கள் ஆத்மா நிதம், நிதம் சுற்றிச்சுற்றி வருகின்ற அந்த "ஊரில்" "நீங்கள்" சிறப்பாக வாழும் வாழ்க்கையாகவே அமையும்!"

என்று என்னை நன்றாகவே யோசிக்க வைத்தார்.

அதன்பின்பு வந்த குமாரசாமி ஐயா ,

"ஐயா வாணரே! அமெரிக்க ஜனாதிபதிஎன்ன வெள்ளையோ எண்டுறியள்? ரொக்கற்றிலை போன கல்பனா என்ன வெள்ளையோ எண்டுறியள்? நோர்வேயிலை வேறை தமிழன் கவுன்சிலர் எண்டுறியள்? அதாவது இந்த உலகம் ஒரு சமதர்மத்தோடை நடக்குது எண்டு சொல்ல வாறிள்? அப்ப ஏன் இன்னும் தமிழீழம் கிடைக்கேல்லை வாணரே? "

என்று தனது அனுபவத்தின் பெயரால் என்னை கடுமையாகவே சிந்திக்கவைத்தார் .

அதன்பின்பு வந்த ஊடகவியலாளர் சாத்திரி அவர்கள்


“ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் எம் நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் எம் நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் எம் நாடே !!!!!!!! “

என்று என்னைக் கிறுங்கடித்து,

" வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பது பொய் இங்கு நாம் பெரு முதலாளிகளின் நுகர்வு அடிமைகள். ஊரில் ஒரு சைக்கிள் வாங்குவதென்றாலும் அவன் தனது உழைப்பை சிறுக சிறுக சேமித்து பணத்தை கொடுத்து அதை வாங்குகிறான் ஆனால் இங்கு அப்படியா?? கார் வேண்டுமா ஒரு கையெழுத்து வைத்துவிட்டு கரை கொண்டுபோ என்பார்கள். பத்தாயிரம் யூரோ காரை மாதா மாதம் வட்டியோடு பணம் கட்டி இருபதாயிரத்திற்கு வாங்கிவருவோம்.பணம் கட்டும் காலம் ஆறு வருசமோ ஏழு வருசமோ ஆனால் பணம் கட்டி முடியும் போது கார் ஓடமுடியாமல் பழுதாகிப் போயிருக்கும் ஆனாலும் பணத்தை கட்டிமுடித்தேயாக வேண்டும்.அதே போலத்தான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை வாங்கி விடுவார்கள் . வீட்டின் வங்கிக் கடன் 30 வருடங்களாக இருக்கும் ஆனால் வீட்டை வாங்குபவரிற்கு வயது அப்போ 40 தாக இருக்கும். வீட்டுக் கடனிற்காக ஓடியோடி உழைத்து வீடு அவரிற்கு சொந்தமாகும்போது ஒன்று அவர் உயிரோடு இருக்கமாட்டார் . சொந்த வீடு செத்த வீடாக மாறியிருக்கும்.அல்லது வருத்தங்களோடு வயதாகி மருந்து குளிசைகள் மட்டுமே சாப்பாடாக மறிப்போயிருக்கும்.. இந்த வாழ்வு தேவையா "

என்று என்னை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். நான் இவர்களது வாதங்களை உற்று நோக்கியதில் ஒரு விடையம் தெளிவாகின்றது . இவர்களுடைய வாதங்களின் எடுகோள்களும் சிந்தனை சிதறல்களும் வாதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்தாகத் தெரிந்தாலும் . ஒருவிடையத்தில் கோட்டை விடுகின்றார்கள் . அதை இறுதியில் சொல்கின்றேன் .

 "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???

 என்ற அணியில் வாதாட வந்த தமிழிச்சி,

 “புலம்பெயர்ந்திருக்கும் எமக்கான ஒரேயொரு கவலை ஊரில் எஞ்சியிருக்கும் எமது உறவினர்களே தவிர எமது புலம்பெயர் வாழ்வியல் அல்ல. அவ்வுறவினர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வரும் வசதிகள் எம்மிடம் உண்டு. தாயகத்தில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்வதற்கே கணக்குப் பார்த்து செலவழிக்கும் நிலைதான் இன்றும் பலருக்கு அங்குண்டு. நாம் புலம்பெயராது
இருந்திருந்தால் எம்மில் பலருக்கும் அந்த நிலைதான் இருந்திருக்கும். எதிரணியினர், இக்கரைக்கு அக்கரைப் பச்சைகள்தானே தவிர, யதார்த்தத்தை உணர்ந்தவர்களல்ல நடுவர்களே.”


என்று யதார்த்த வாதத்திற்கு உரமூட்டினார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஜீவாவினுடைய வாதம்,

“ நாம் புலம்பெயராது விட்டால் உலகமே போற்றும் முப்படைகளை வைத்திருந்த இராணுவம் அல்லா அமைப்பை தமிழரால் உருவாக்கியிருக்க முடியுமா? அல்லது போர்க்குற்றவாளிகளையாவது இனங்காட்ட முடிந்திருக்குமா? ஏன் முக்கியமாக சமூக ஏற்றத்தாழ்வுகளையாவது கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? குறிப்பாக சாதீயம்.. சாதீயத்திலேயே ஊறிப்போன தாயகத்திற்கும், சாதீயம் பற்றியே தெரியாத அடுத்தடுத்த சந்ததிகள் வளர்வதற்கும் புலம்பெயர் வாழ்க்கை தானே காரணம்.”

 என்று தமிழினுடைய பெரும் பிளவான சாதீயத்தையும் தொட்டு,

"நுகர்வுக் கலாச்சாரத்தில் தேவைகள் அதிகரிக்கும் போது அவற்றை வாங்க சம்பாதிக்கவும் வேண்டுமே. பேராசையால் ஊணுறக்கம் இன்றி அலைவது அவரவர் செய்கைகளே அன்றி புலம்பெயர்வாழ்வின் அவலமல்லவே "
என்று யாதார்தத்தை தொட்டு நின்றது.

அடுத்த வந்த சுபேஸ் இதே யாதர்த்தவாதத்திற்கு ,

"மனிதமனமே இப்படி விசித்திரமான ஒன்றுதான்...இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது..அதையும் ஊரில் போய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்ற விவாதத்துக்கும் முடிச்சுபோடுவது காளைமாட்டை கட்டிவச்சு கட்டையால் அடித்து பால்கறக்க முயல்வது போன்றதே.. "
 என்று தனது சிந்தனை வரிகளால் உரமூட்டினார்.

அவரைத்தொடர்ந்து வந்த யாழ்வாணனும் தனது வாதத்திலே,

"நீங்கள் எல்லோரும் புலம்பெயர் தேசங்களில் உங்களை கால்களை நன்கு நிறுவி விட்டீர்கள். இந்த நிம்மதியான வாழ்வை விட்டு உங்களால் இனிப் போக முடியாது. ஆகவே இனிமேலும் ஊருக்குத் திரும்பி பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க உங்களால் முடியாது நீங்களும் புலம்பெயர் வாழ்வில் நீங்கள்அனுபவித்த சுகஙகளைத் துறந்து,

பரம்பரைக் காணி

வாத்தியார் ஏங்கிய கேணி

பகலவன் முத்தமிடத் துடித்திட்ட மண்

தும்பளையான் தேடிய வெய்யில்

என்பவற்றுடன் உங்களால் நிச்சயமாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை ,"

என்று யார்த்தத்தையே கோடுகாட்டி நின்றார்.


அடுத்துவந்த அர்ஜுன்,

 " தேடல் இல்லாத மனிதன் வெறும் ஜடம். அந்த தேடல் இல்லாவிடில் கற்கால மனிதனாக இன்றும் மனிதர்கள் அவர் . அவர் ஊர்களில் குகைகளில் இதுதான் சந்தோசம் என்று இருந்திருப்பார்கள் . அந்த தேடல் நாம் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வீதம் சாத்தியம். அரசியல் , பொருளாதாரம் , தொழில்நுட்பம் எல்லாமே மிக பின் தங்கிய ஊழலால் நிரம்பிய நாடு அது. அதுவும் ஒரு போர்சூழலில் எதுவும் சாத்திய மற்ற ஒரு பிடிப்பிலாத வாழ்வைத்தான் நாம் வாழ்ந்திருக்க முடியும் ."
என்று தனது அணி ஒரு நிலையெடுக்க தனது வாதத்தால் நிறுவினார். அதன்பின்பு வந்த அணித்தலைவர் இசைக்கலைஞன்,

“ வாழ்கிற நாட்டுக்கு ஏற்றமாதிரி நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டால் ஏன்
வித்தியாசமாகப் பார்க்கப்போகிறார்கள்? சுடிதாரைப் போட்டுக்கொண்டு கடலில் குளிப்பது..! நண்டுக்கறி வாடையுடன் குளிர் ஆடைகளைப் போட்டுக்கொண்டு திரிவது..! வரி கட்டாமல் ஏய்ப்பது.. முகத்தில் ஒரு புன்முறுவல் இல்லை.. விட்டால் மூஞ்சியைப் பிளந்துவிடுவேன் என்பதுபோல் பிற நாட்டவரைப் பார்ப்பது.. வெயிலுக்கு இரண்டு துண்டு உடையுடன் அவள் போனால் நாக்கை தரை வரையில் நீள விடுவது.. இப்படி இருந்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நடுவர் அவர்களே..!


என்று புலம்பெயர்தமிழனை தனது நகைச்சுவையின்மூலம் எள்ளியதை நான் ரசிக்கவே செய்தாலும் , அவரது அடிமை மனோபாவத்தை என்னால் ரசிக்க முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் . அதாவது , புலம்பெயர் தேசங்களிலே ஒவ்வொரு இனக்குழுமங்களும் தங்களுக்கான பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் கட்டிக்காக்க , புலம்பெயர்தேசங்கள் சட்டவரைபுகளை ஏற்படுத்தியிருக்கின்ற வேளையிலே புலம்பெயர்ந்த தமிழன் மட்டும் வெள்ளையர்களுடன் சமரசங்களையும் நெகிழ்வுத்தன்மைகளையும் பேணவேண்டும் என்று சொல்கின்ற இசைக்கலைஞனது அடிமை மனோபாவத்தை நடுவராகியகிய நான் இந்தப் பட்டிமன்றத்தின் மூலம் மிகவும் மென்மையாகக் கண்டிக்கின்றேன்.

இறுதியாக வந்த புங்கையூரான்,

“ இறுதியில் மிஞ்சிப்போயிருப்பது ஒன்றேயொன்று, அது தான் வெறும் உறவுகளின் பிரிவு. அது, எமது கண் முன்னாலேயே குறைந்து வருகின்றது. ஒரு குருவிக்கூட்டைக் குரங்கொன்று பிய்த்து எறிகின்றது. குருவியின் குஞ்சுகள் செத்துப்போய் விடுகின்றன. திரும்பிவரும் தாய்ப்பறவை, துயர் தாங்காமல்
அழுகின்றது. ஒரு நாள், இரண்டு நாள், அல்லது ஒரு வாரம்
என்று வைத்துக்கொள்ளுவோம். அடுத்து அந்தப்பறவை அந்த இடத்திலேயே நின்று உயிரை விட்டுவிடுகின்றதா என்றால் இல்லை என்று தானே சொல்லவேண்டும். பறவையின் பயணம், இன்னொரு மரத்தை நோக்கித்தொடர்கின்றது.
புதிய மரம், புதிய கூடு,என்று அதன் வாழ்க்கை தொடர்கின்றது, காலப்போக்கில் பிரிவுகளைப், பறவை மறந்து புதிய மரத்தை வீடாக்கிக் கொள்ளுகின்றது. இது தான் உண்மை. இது தான் இயற்கையின் நியதி. ஒருவர் புலம்பெயர்ந்த
காலத்தின் அளவுக்கும் (வருடங்கள்), உறவுகள் பற்றிய ஒரு பிரிவுக்கும் ஒரு வரைபடம் கீறினால், அது கீழிறங்கிய படியே செல்லும். அந்த இறக்கத்தின் சரிவானது, ஒவ்வொரு தலைமுறைக்கும் (பதினைந்து வருடங்கள்) ஒரு பாய்ச்சலாகக் கீழிறங்கி, விரைவில் பூச்சியத்தைத் தொட்டு நிற்கும். “

என்று தனது அணிக்காக வைத்த வாதங்கள் , இலக்கியத்தரமாக ஒரு தொகுப்புரையாகவும்

யதார்த்த வாதத்திற்கு வைத்த மணிமகுடமாகவுமே என்னால் சிந்திக்க முடிந்தது .

இரு அணிகளது வாதங்களுமே பயனுள்ள கருத்துகளைச் சொல்லி நின்றாலும் ,

 " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

என்ற அணியில் வாதிடியவர்கள் தாயகம் பற்றிய கவலையில் என் முன்னாலே தங்கள் வாதங்களினால் உயர்ந்து நிற்கின்றார்கள் என்றபோதிலும் , இவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டு இந்த வாதங்களை வைத்தது நடைமுறை யதார்த்தத்திற்கு ஏற்புடையதாக எனக்குத்தெரியவில்லை . மாறாக,

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???

என்ற அணியில் வாதாடியவர்கள் தங்கள் வாதங்களிலே பல இடங்களில கோட்டை விட்டாலும் , தெரிந்தோ தெரியமாலோ நான் எதிர்பார்த்த யாதார்த்த வாதத்தில் கண்ணுங்கருத்துமாக அவர்களை அறியாது இருந்திருக்கின்றார்கள் . எனவே வாசகர்களது விருப்பு வாக்குககள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும் , எனது பார்வையில்,

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியே இந்தப்பட்டிமன்றத்திலே வெற்றிவாகை சூடுகின்றது . இந்த சந்தர்ப்பத்திற்கு ஆதரவளித்த யாழ் இணைய நிர்வாகிகளுக்கு நன்றி கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம் .

நடுவர்
கோமகன்
 
வாழிய தமிழ்!!!! வாழிய யாழ் இணையம்!!!!!!!!!
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…