Skip to main content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் - சமையல் குறிப்பு - பாகம் - 15.


உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும், உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து , பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம்.

இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்களவர்கள் விரும்பியுண்ணும் உணவாகவும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் தான் என பல சிங்களவர்களே கூறுகின்றனர். அவ்வாறே, ஈழத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் சிறப்பாக நண்பர்கள் உறவினர்கள் ஒன்று கூடும் போது கூழ் தயாரித்து, கூடியிருந்து கூழை அருந்தி கலந்துரையாடுவது வழக்கம்.

தமிழீழம் முழுவதும் வடக்கிலிருந்து கிழக்கு வரை பரவி வளர்ந்து காணப்படும் பனைமரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உணர்வு பூர்வமான தொடர்புண்டு. போரில் கூட ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அவர்களுடன் சேர்ந்து அவர்களின் பனைமரமும் அழிந்தது. போரில் எமது மக்களுக்கு தமிழர்களின் எதிரிகளுடன் போராட மட்டுமல்ல, தமிழர்களுக்கு பதுங்கு குழிகளை அமைத்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவியது ஈழத்தமிழர்களின் பனைமரம் தான். அதனால் தான் சிங்களவர்களின் அகராதியில் பனங்கொட்டைகள் என்றால் அது யாழ்ப்பாணத்தமிழர்களைக் குறிக்கும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் பலவகையான கூழ் தயாரிப்பு முறைகள் உண்டு. ஆனால் பனங்கிழங்கிலிருந்து பெறப்படும் ஒடியல் மாவில், கடலுணவையும் சேர்த்து கூழ் தயாரிக்கப்படுகிறதா என்று எனக்குத் தெரியாது. 

தேவையானவை: 

ஒடியல் மா (பனங்கிழங்கு) 100g
தண்ணீர் 200 ml
சம்பா அரிசி ¼ cup
இளம் பலாக்காய் 1 , பலாக்கொட்டை 15 / 20 
யாழ்ப்பாண நீல நண்டு 2
புலி (Tiger) இறால் 10
சதையுள்ள மீன் 6
கணவாய் 3
பயற்றங்காய் 1/4 பிடி
மட்டி 300 g (விரும்பினால்)
முருங்கையிலை 1/4 கப்
உப்பு 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி

அரைத்த மிளகாய் கூட்டு :

காய்ந்த மிளகாய் 6
தேசிக்காய் 1
உப்பு 1/2 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி

கரைத்த புளி :

1 சிறிய (தேசிக்காயளவு) உருண்டை
தண்ணீர் 1/2 கப்

பக்குவம்:

அளவான பாத்திரத்தில் ஒடியல் மாவையும் நீரையும் கலந்து ஊறவிடவும். ஒடியல் மா கிடைக்காது விட்டால் அரைத்த மரவள்ளிகிழங்கையும் பயன்படுத்தலாம். (சுவை வேறுபடலாம்) குறைந்தது இரண்டு மணிநேரங்களாவது ஒடியல் மா நீரில் ஊற வேண்டும். செத்தல் மிளகாயை தேசிக்காய்ப்புளி, உப்பு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு, சிறியளவு நீர் விட்டு கட்டியாக கரைத்துக் கொள்ளவும். இன்னொரு பெரிய பாத்திரத்தில் இருமடங்கு தண்ணீரிட்டு கொதிக்க வைக்கவும். அதற்குள் முதலில் அரிசி, பலாக்கொட்டை என்பவற்றையும், அவை அவிந்ததும் கடலுணவுகளை இட்டுக் அவிய விடவும்.

படிமானம் :

ஒடியல் மாவில் மேலேயுள்ள நீரை வடித்து விட்டு கரைசலாம் ஒடியல் மாவையும் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைக் கலந்து, சுவைக்கேற்ப உப்பைச் சேர்த்து கூழ் அவிந்ததும் சூடாக பரிமாறவும்.

முக்கிய குறிப்பு :

இது எனது சொந்த தயாரிப்பு இல்லை . அத்துடன் இதில் வந்த சில கருத்துக்களில் எனக்கு நூறுவீத உடன்பாடு இல்லை.

2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000



உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…