Monday, September 30, 2013

தமிழன் கண்ட சித்திரக்கவிதமிழன் கண்ட  சித்திரக்கவி


தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் .

தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திரக் கவி பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன .

எங்களால் உருவாகப்பட்ட அனைத்துக் கலை வடிவங்களுமே இலக்கியத்தை மையபடுத்தியே சுற்றிச் செல்கின்றன . எப்படி என்றால் , ஒரு இலக்கியத்தைக் கேட்பதாலும், எழுதுவதாலும், பேசுவதாலும், உணருவதாலும், காட்சியாக வரைவதாலும், காட்சியாகக் காண்பதாலும் மனித மனத்தை மகிழ்ச்சி அடையச் செய்ய இயலும் ஒரு கவிதையை இசையோடு இனிமையாகப் பாடினால் அதைக் கேட்பவர் மகிழ்ச்சி அடைகின்றார் . இதன் மூலம் இலக்கியம் இசையோடு கலந்து விடும் கலையாகி விடுகிறது.

அதேபோல் ஒரு கவிதையை அபிநயம் பிடித்து நடனம் ஆடினால், அது நாட்டியக் கலையாக அமைந்து விடுகிறது. அதே கவிதை தரும் பொருளை, இருவர் உரையாடும் நாடகக் காட்சியாக மாற்றி நடித்தால் நாடகக் கலை உருவாகி விடுகிறது. இதையே திரைப்படமாக , அசையும் படமாக , தொலைக்காட்சித் தொடராக , காட்சிப் படமாகவும் ஆக்கவும் முடியும் . இவ்வாறாக இலக்கியமானது மற்றய கலைகளுக்கு மையமாகவும், மற்ற கலைகள் இலக்கியத்தைச் சார்ந்து அமைவனவாகவும் விளங்குகின்றன.

இலக்கியத்தில் இடம் பெறும் மொழியே, சொல்லே, எழுத்தே ஓவியம் போல அமைந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அவ்வாறு எழுத்துகள் செய்யுளுக்குள்ளேயே ஓவியமாக மடங்கி நிற்கும் முறையே, அமைப்பே சித்திரகவி என்று வகைப்படுத்திக் கொள்ளலாம் .

ஒரு கவிதைக்குள் , எழுத்துகள் மடங்கி, மடங்கி நின்று ஓவியமாக அமைவதை சித்திரகவி என்று சொல்லலாம் . உதாரணமாகப் பின்வரும் பகுதியைப் பார்ப்போம் .


இந்தப் படத்திலே , "பாப்பா" என்ற சொல்லு நெடுக்கு வாட்டிலும், குறுக்கு வாட்டிலும் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட படத்தில் ஆறு இருமுனை அம்புக்குறிகள் காட்டப் பட்டுள்ளன . இதன் மூலமாக 12 முறை பாப்பா என்ற சொல்லை நீங்கள் எடுக்க முடியும். இது ஒருவகையான வடிவ விளையாட்டாகும் ஆனால் . இந்த விளையாட்டைக் கவிதைக்குள் செய்வது, சித்திரகவி எனப்படுகிறது.
இந்த சித்திரக் கவியின் வகைகளை இதன் ஆதி மூலமான தண்டியலங்கரத்தில் ஒரு நூற்பா வடிவத்தில் நாங்கள் காணலாம் ,

கோமூத் திரியே, கூட சதுக்கம்,

மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,

நாக பந்தம், வினாவுத் தரமே,

காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,

சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,

அக்கரச் சுதகமும் அவற்றின் பால

(தண்டியலங்காரம்-97)

அதாவது , கோமூத்திரி , கூடச் சதுக்கம் , மாலைமாற்று , எழுத்து வருத்தனம் , நாக பந்தம் , வினாவுத்தரம் , காதை கரப்பு , கரந்துறைப்பாட்டு , சக்கர பந்தம் , சுழிகுளம் , சருப்பதோ பத்திரம் , அக்கரச் சுதகம் , என்று பன்னிரெண்டு வகைப்படும் . இந்த பன்னிரெண்டு வகையான சித்திரக் கவிகளுக்குமே விதிமுறைகள் உள்ளன . அவற்றை ஒவ்வன்றாக நாங்கள் பார்க்கலாம் .

01 கோமூத்திரி :
ஒரு பசுமாடு வீதியில் நடந்து செல்லும் பொழுது சிறுநீர் கழிப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . அந்த மாடு இயற்கையான முறையிலே சிறுநீரைக் கழித்து இருந்தால் அந்தச் சிறு நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அந்த வளைவு அமையும். அதுவே இரண்டு மாடுகள் சிறுநீர் கழிப்பதாக இருந்தால் இரு எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அந்தக் கவிதையை அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ = பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்). கோ மூத்திரி சித்திரக் கவிதை எழுதும் பொழுது பின்வருமாறு எழுதப் படவேண்டும் .

"கவிதையின் முதலடியில் உள்ள எழுத்துகளும், இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக அமையும் முறையில் சித்திரக்கவி எழுதப் படவேண்டும்". உதாரணமாக ,

பருவ மாகவி தோகன மாலையே

பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)

பொருள் :
தோழி ஒருவள் தனது தலைவிக்குப் பின்வருமாறு கூறுகின்றாள் “தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன. மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள் இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால் உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே”

இதை சித்திரக் கவியாக வரைந்தால் பின்வருமாறு அமையும் ,

(1)
முதல் அடி
இரண்டாம்அடி


(2)
முதல் அடி 

இரண்டாம்அடி

 

(3)
முதல் அடி 

இரண்டாம் அடி

 

இந்த இரண்டு அடிகளிலும் 2, 4, 8,... என்ற இரட்டைப்படை இடங்களில் இடம் பெறும் எழுத்துகள் ஒன்றாய் அமைத்துப்பாட இந்தச் சித்திரகவி அமைப்பை எளிதாய்ப் படைக்க இயலும்.

02 கூடச் சதுக்கம்

ஒரு சித்திரக் கவியில் அமைந்துள்ள கவிதையில் இறுதி அடியில் அமைந்துள்ள எழுத்துக்கள் யாவும் முன்பாக அடியில் உள்ள அடிகளில் இருந்து இயற்ரப்பட்டல் அது கூடச் சதுக்க சித்திரக் கவி என்று வரையறை செய்து கொள்ளலாம் (கூடம் = மறைவு; சதுக்கம் = மறைவான நிறைவு அடியை உடையது) உதாரணமாக ,


2 3 4 5 6 7 8 9 10 11 1
மு க ந க/ ந ட் ப து/ ந ட் பு அ ன் று/ நெ ஞ் ச த் து

அ க ந க/ ந ட் ப து/ ந ட் பு
1 2 3 4 5 6 7 8 9 10 11

இது ஒரு திருக்குறளாகும் . இந்தக் குறளில் கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து பெறப்பட்ட எழுத்துகளால் இயற்றப் பட்டதாகும் .

03 மாலைமாற்று :


மாலை மாற்று (Palindrome) என்பது எந்தத் திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் என்று நாங்கள் வரையறை செய்து கொள்ளலாம் . தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு போன்ற சொற்கள் மாலை மாற்றுகள் ஆகும். உதாரணமாக ,

பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூ நீறு நாளைவா பூ 


பொருள் : 

தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி
தடுத்ததாக இப்பாடல் அமைகிறது.

“ பூப்பு அடையாதவளை அடைய விரும்பிய மேகமே ! நீ
பூமழை பொழிய வந்தாயோ ! பூவும் நீறும் கொண்டு நாளை
வா ! இன்று அவள் பூப்பு அடைந்திருக்கிறாள்.”

இப்பாடல் தலைவி கூடி மகிழும் அளவிற்கு உடல் அளவில்
உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு
உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதாகத் தோழி
பேசுகிறாள்.
இதை விட ஒரு எளிமையான பாடல் ஒன்று ,

தேரு வருதே மோரு வருமோமோரு வருமோ தேரு வருதே

பொருள் :

வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.

தமிழரின் பக்தி இலக்கியங்களில் இந்த மாலை மாற்று ஒன்று வருகின்றது . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. அவற்றில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு சொல்கின்றது ,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
இதன் பொருள் :

யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா-சீர்காழியானே
மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே

04 எழுத்து வருத்தனம் :

வருத்தனம் என்றால் வளருதல் என்று நாங்கள் பொருள் கொள்ளலாம் . ஒரு
கவிதையில் பல கருத்துகள் சொல்லப்பட்டதாகக் கொள்வோம். அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று எடுத்துக் கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்ற சித்திரகவியாகும். இதை எளிய முறையில் சொலவதானால் , மதுரை என்பது ஓர் ஊரின் பெயர். அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும். அதனோடு ந என்ற எழுத்து சேர்ந்தால் நமது என்ற உடமைச் சொல் கிடைக்கும். இவ்வகையில் கிடைத்த சொற்கள் மதுரை, மது, நமது என்பனவாகும்.

இதோ ஒரு உதாரணம் ,

"ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்."


பொருள் :

திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார். அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில் பிரம்மா இருக்கிறார்.

சொல் வளருதல் 

(1) ஏந்திய வெண்படை
(திருமாலின் வெள்ளை
ஆயுதம்) கம்பு (சங்கு)

(2) (கம்பு என்பதில் ஒரு எழுத்து
நீங்க கம் (தலை) என்பது
கிடைக்கும். கம்

(3) முன்னால் எடுத்தது
(கோவர்த்தன மலையைத்
திருமால் குடையாகப்
பிடித்தார்)

(ந என்ற எழுத்து வர நகம்
(மலை) கிடைத்தது.) (ந) கம் (மலை)

(4) பூந்துகில்
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும்
இணைய கநகம் (பொன்)
கிடைத்தது.) கநகம்
(பொன்னாடை)

(5) மால் உந்தி பூத்தது
(திருமால் தொப்பூழ்க்
கொடியில் தாமரை பூக்க
அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும்
வர கோகநகம் (தாமரை)
கிடைத்தது.) கோகநகம் 

இதில் எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன. இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக - எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு இங்கு நாங்கள் சித்திரகவியாகக் காண முடிகிறது.

தொடரும்


 
Thursday, September 26, 2013

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் !!!!!!! இறுதிப் பாகம்


வணக்கம் கள உறவுகளே !!

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் என்ற போட்டித் தொடரை இத்துடன் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இத்தொடரில் ஆர்வமுடன் பங்கு பற்றி பரிசில்களை அள்ளிக் குவித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . பொதுவாகப் பாம்பு என்றாலே பயமும் அருவருப்பும் அடைகின்றோம்  . அதனால் தானோ " பாம்பென்றால் படையும் நடுங்கும் " என்ற பழமொழியையும் " பாம்பின் காலைப் பாம்பு அறியும் " என்ற சொலவடையையும் எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர் . தமிழர் வாழ்வில் நாக வழிபாடு அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிவிட்டதொன்று . இதற்கு ஈழத்திலே பரந்து விரிந்துள்ள நாகதம்பிரான் ஆலயங்கள் சாட்சியாக எம் முன்னே இருக்கின்றன . அத்துடன் ஈழத்திலே நாகர்கள் வாழ்ந்ததிற்கான பல வரலாற்று தடையங்கள் உள்ளன . நாகர்கள் பாம்பை தெய்வமாக வழிபட்டவர்கள் , இவாறான காரணங்களாலேயே இந்தத் தொடரை பொங்குதமிழ் பகுதியில் ஆரம்பித்தேன் . நேர காலங்கள் கூடிவரும் வேளையில் மீண்டும் ஒரு போட்டித் தொடரில் சந்திக்கும்வரை....................

நேசமுடன் கோமகன்

***********************************************************************


25 கருப்பு மாம்பா ( The black mamba , Dendroaspis polylepis)
கருப்பு மாம்பா என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் அதிகமாகக் காணப்படுகின்றது . பாம்பினங்களில் உலகிலேயே குறுகிய தூரத்தை மிக வேகமாக மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கடக்க வல்லது கருப்பு மாம்பாவாகும் . இந்தப் பாம்பு கடிக்கும் பொழுது இதன் நஞ்சுப் பையிலிருந்து 50 மில்லி கிராமில் இருந்து 120 மில்லி கிராம் வரை விஷத்தைப் பீச்சும் வல்லமையுள்ளது . சாதாரணாமாக 15 மில்லி கிராம் விஷம் இருந்தாலே ஒருவர் உடனடியாக மரணத்தைத் தழுவிக் கொள்வார் .

மேலும் இந்தக் கருப்பு மாம்பா பாம்பு உலகில் அருகி வரும் இனமாக இயற்கை ஆர்வலர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் போட்டித்தொடரின் இறுதிப் பாம்பாகச் சேர்த்துள்ளேன் . ஏறத்தாழ 25 வகையான பாம்புகளை உங்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளேன் . போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் .

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :
http://ta.wikipedia..../கருப்பு_மாம்பா

http://en.wikipedia....iki/Black_mamba

இதுபற்றிய கருத்துக்களை அறிய இங்கே செல்லு ங்கள் :

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129227

Saturday, September 21, 2013

செத்த ஒப்பாரி

செத்த ஒப்பாரி

ஒரு பேப்பருக்காக கோமகன்

                        
தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும் இசையுடன் பின்னிப் பிணைந்தவை . எமது வாழ்வில் நாம் பிறக்கும் பொழுது அம்மாவின் தாலாட்டுப் பாடலிலும் , நாம் இறக்கும் பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும் இசையால் ஒன்று கலந்தோம் . இந்த இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய காலகட்டத்தில் எம்மை விட்டு நீங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் .

ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய கட்டத்தை வகிப்பது அதன் மொழியாளுமையும் கலாசாரப் பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன ஒடுக்குமுறையாளர்கள் , அந்த இனத்தை அழிக்க இந்த இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த வரையில் எமது பண்பாடான தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச்சம் தான் வருகின்றது . ஒப்பாரியைப் பற்றிய இந்தக் கட்டுரையினது நோக்கம் வாசகர் மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே .

ஒப்பாரிப் பாடல்களைச் செத்த வீட்டிலே படிப்பின் வாசம் அறியாத ஆச்சிகள் தங்களுடைய சோக எண்ணங்களைக் கவிதை வடிவில் பாடுவார்கள் . இதன்பொழுது அந்தக் குடும்பத்தில் நடந்த நல்ல விடயங்களோ அல்லது கெட்ட விடயங்களோ இந்த ஒப்பாரி மூலம் பூடகமாக வருவது ஓர் சிறப்பான விடையமாகும் . அந்த படிப்பின் வாசம் அறியாப் பெண்களின் கவி நயத்தையும் சொல் ஆட்சியையும் பார்த்து வியந்து போனவர்கள் பலர் . ஒப்பாரியை எமது மக்கள் அன்றைய காலங்களில் செத்த வீடுகளில் ஓர் கிராமியக் கலையாகவே பயன்படுத்தி வந்தனர் . அன்றைய கால கட்டத்தில் ஒப்பாரிக்கு பெயர் பெற்றவர்களாக வடமராட்சியைச் சேர்ந்தவர்களே இருந்து வந்துள்ளனர்.

இந்த ஆச்சிகள் தங்களது உணர்வுகளையும் துயரங்களையும் ஒரு விதமான இசைக் கட்டமைப்புடன் இழுத்துப் பாடி , செத்தவீட்டில் அழாதவர்களையும் அழ வைப்பதில் திறமை வாய்ந்தவர்கள் . ஒப்பாரி பாடும் ஆச்சிகள் செத்தவரை மிகவும் உரிமையுடன் " என்ரை மோனை , ராசா , ராசாத்தி , ஆத்தை " என்று அழைத்து மிகவும் உருக்கமாக தங்களின் சோகத்தை வெளிபடுத்துவார்கள் . இந்த ஒப்பாரி அன்றைய கால கட்டத்தில் பரம்பரை பரம்பரையாகவே ஆச்சிகளிடம் கடத்தப்பட்டு வந்தது .

நிலவோ நிலவுதவி என்ரை ராசா
எனக்கு
நிலவுபட்டால் ஆருதவி ........
பொழுதோ போழுதுதவி என்ரை ராசா
எனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........


இந்த ஒப்பாரியில் கவித்திறனும் சொல்லாட்சியும் மலைக்க வைக்கின்றன . இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் பின்பு நாட்டுக் கூத்திலும் இடம் பெற்றதாக அறியக் கூடியதாக இருந்தது.

எங்களிடையே ஆச்சிகளால் பாடப்பட்ட ஒப்பாரிப் பாடல்கள் கூடிய அளவு உறவு முறைகளையும் சமூகப் பண்பாடுகளையும் உள்ளடக்கியே பாடப்பட்டன .

கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்
என்ரை நீல நையினார் நீ
எனக்கொரு
கொள்ளி வைச்சால் காணுமடா
பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்
என்ரை நீல நையினார் நீ எனக்குப்
பால் வார்த்தால் காணுமடா .......

நான் பெத்தேன் பிலாப் பழத்தை
இப்ப
பிச்சு வைச்சேன் சந்தியிலை .....
பள்ளிக்கூடம் தூரமெண்டு
என்ரை ராசாவை
நான் பக்கத்தே வைச்சிருந்தேன்
தோட்டம் தொலை தூரமெண்டு
என்ரை ராசாவை நான்
தொட்டிலிலை வைச்சிருந்தேன்

தகவல் : சின்னம்மா கரவெட்டி வயது 80

இந்த ஒப்பாரிப் பாடலிலே அந்தத் தாயானவள் தனது மகனது நிறத்தையும் தனக்குக் கொள்ளி வைக்கவேண்டிய அவன் தனக்கு முதலே மரணமாகி விட்டானே என்று எம்மிடையே வந்த பாண்பாட்டு முறைகளைத் தனது ஒப்பாரியிலே சொல்லி அழுகின்றாள் .

இன்னுமொரு தாயோ தனது குடும்பத்தையே பொருளாதார ரீதியில்க் கட்டிக் காத்து வந்த மகளைப் பறிகொடுத்த சோகத்தில் பின்வருமாறு பாடுகின்றாள்,

என்ரை ஆத்தை
நீ
வாரி வரத் திண்டிருந்தன்
என்ரை வண்ண வண்டி வாடுதணை
என்ரை ஆத்தை
நீ
கோலிவரத் திண்டிருந்தன்
என்ரை கோலவண்டி வாடுதணை


தகவல் : செல்லம்மா கரவெட்டி வயது 67

பொதுவாகவே இந்த வகையான ஒப்பாரிப் பாடல்களில் என்ரை ஆத்தை என்ற விழிப்பில் சந்தர்பத்தற்கு ஏற்றவாறு என்ரை ராசா , மோனை , அப்பு என்று உரிமையுடன் விழித்து ஆச்சிகள் தங்கள் சோகத்தினை வெளிபடுதுவதைக் காணலாம் .

ஒரு ஊரிலே வாழ்ந்த ஒருவர் வேறு ஒரு இடத்திலே கலியாணம் செய்கின்றார் . அவர்களது குடும்பத்திலே பிரச்சனைகள் வந்து கணவனும் மனைவியும் பிரிகின்றார்கள் . இந்தநிலையில் அந்தக் கணவன் ஒருநாள் செத்துவிட்டார் . அந்தச் செத்த வீட்டுக்கு பிடிவாதக்கார மனைவியோ வரவில்லை . அபொழுது அந்தக் கணவனின் குடும்பத்தில் உள்ள சொந்தக்காறப் பெண் இப்படி ஒப்பாரி சொல்லித் தனது வேதனையை வெளிப் படுத்துகின்றார்,

ஊரெல்லாம் பெண்ணிருக்க
என்ரை ராசா நீ
ஊர்விட்டுப் போனாயோ .....
பக்கத்தே பெண்ணிருக்க
என்ரை ராசா நீ
பரதேசம் போனாயே.........
பாழ்படுவாள் வாசலிலே
என்ரை ராசா நீ
பவுணாக்குவிச்சாயோ .............


தகவல் மீனாட்சி துன்னாலை வயது 78

தமிழர் வாழ்வின் இறுகிய வாழ்வியல் கட்டமைப்புக்குள் தாய் வழி உறவுகளிலேயே கலியாணம் செயிகின்ற பண்பாட்டு முறை அன்றைய காலகட்டங்களிலே இருந்து வந்துள்ளது . மேலே வந்து விழுந்த ஒப்பாரிப் பாடலானது இதையே காட்டி நிற்கின்றது. இதனையொட்டி வழங்குகின்ற பல சொலவடைகளையும் நாம் காணலாம் . தங்கள் குடும்பங்ககளிலே ஏற்றபட்ட பிரச்சனைகளையும் , ஒருதலைக் காதல்களால் முறிந்த திருமணபந்தக்களையும் செத்தவர் மீது ஒப்பாரி மூலம் சொல்லி அழுகின்ற வழமை அந்தக் காலப் பெண்களிடம் இருந்து வந்துள்ளது .

தங்கள் குடும்பத்திலே பெண் சகோதரங்களிடையே நீண்டகாலமாக ஏற்றபட்ட பகை உணர்சிகளை ஓர் பெரியம்மா செத்தபொழுது , ஒரு ஆச்சி இவ்வாறு பாடுகின்றார் ,

என்ரை ராசாத்தி
நீ பெத்தவை
சீனத் துவக்கெடுத்து என்னைச்
சிதற வெடிக்க வைக்கினமே ..........
என்ரை ராசாத்தி
நீ பெத்தவை
பாரத் துவக்கெடுத்து என்னைப்
பதற வெடி வைக்கினமே .......


இன்னுமொரு பாடல் ஒருத்தி தான் தனது குடும்பத்தவரால் புறக்கணிக்கப் படுவதை எண்ணிப் பெருங் குரலேடுத்துப் பாடுகின்றாள் ,

படலையிலே ஆமணக்கு
என்ரை ராசாத்தி ........
நீ பெத்தவைக்கு
நான்
பாவக்காய் ஆகினனே .............
வேலியிலை ஆமணக்கு
என்ரை ராசாத்தி ..........
நீ பெத்தவைக்கு
வேப்பங்காய் ஆகினனே ...........


அன்றைய காலகட்டங்களிலே செத்த வீட்டிலே ஒப்பாரி சொல்லி வாய் விட்டு அழுவது தமிழர் வாழ்வியலில் ஓர் சிறந்த உளவியல் மருத்துவ முறையாகவே இருந்து வந்துள்ளது . ஏனெனில் உறவுகளைப் பறி கொடுத்தவர்கள் வாய் விட்டு அழுதாலே அவர்களது மனப்பாரமும் துயரமும் குறைவடையும் . அனால் இன்றைய காலகட்டத்திலோ வாய் விட்டு அழுவது நாகரீகக் குறைச்சல் என்று எம்மவர்கள் எண்ணுகின்றார்கள் .

தனது குடும்பத்துடன் ஒரு சொந்தம் கதைக்காமல் இருந்து விட்டுச் செத்த வீட்டிலே வந்து நாட்டாமை செய்வதைப் பொறுக்க மாட்டாத குடுபதுப் பெண் இவ்வாறு பாடுகின்றாள்,

சொருகி வைச்ச எப்பை எல்லாம்
இப்ப
சோறள்ள வந்த தெணை ..........
பொட்டுடைச்ச கோழி முட்டை
இப்ப
போர்ச் சாவல் ஆச்சுதணை .............


இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம் குடும்பத்திலே ஏற்பட்ட பிரச்சனைகளைச் சொல்லி அழுகின்ற பாடல்களாகவும் , இன்னும் சில பல வருடங்களுக்கு முதலே செத்த உறவுகளை நினைத்து வேறு செத்த வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும் காணலாம் ,

என்ரை அப்பு
நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்சை
சோகத்தாலை வாடயில்லை
உங்கடை
சோகத்தாலை வாடுதெண்டு ...........
என்ரை அப்பு நீ போய்ச் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்சை காசாலை வாடயில்லை
உங்கடை
கவலையினால் வாடுதெண்டு...........


செத்த வீட்டிலே தனது கணவனைப் பறிகொடுத்த மனைவியானவள் தமக்குள் இருக்கும் நெருக்கத்தையும் சில வேளைகளில் ஒப்பாரியாக பாடுவாள் . அப்போது அதன் சோகமானது மற்றவர்களையும் கலங்க வைக்கும் ,

முத்துப் பதித்த முகம்
என்ரை ராசா
நீ
முழு நிலவாய் நின்ற முகம்

நினைப்பேன் திடுக்கிடுவேன்
என்ரை ராசா
உன்ரை நினைவு வந்த நேரமெல்லாம்

போகக் கால் ஏவினதோ என்ரை ராசா
இந்தப் பொல்லாதவள் தன்னை விட்டு
நாகரீகம் பேசுகினம் ...........
மூக்குப் படைச்சவையள்
இனி
முளிவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி இவள்
மூதேசி என்பினமே ................


அன்றைய காலகட்டங்களில் மதமாற்றம் என்பது எமது சமூகதில் நடைபெற்றது . அதில் பல கலப்புக் கலியாணங்களும் நடைபெற்றது இருக்கின்றன . இறுகிய கட்டமைப்பைக் கொண்ட எமது சமூகமோ ஆரம்பத்தில் இந்தக் கலப்புக் கலியாணங்களுக்கு முரண்டு பிடித்தனர் . ஒரு செத்த வீட்டில் ஒரு ஆண் கிறீஸ்தவ பெண்ணைக் கலியாணம் செய்திருந்தார் ; அவள் ஒரு நாள் செத்து போய் விட்டாள் . பொதுவாக கிறீஸ்தவர்கள் செத்தால் அழுவது குறைவானதே . அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவருமே அழவில்லை . அபொழுது அந்தப் ஆணின் உறவுப் பெண் ஒருவர் பின்வருமாறு தனது சோகத்தை ஒப்பாரியாக வெளிப் படுத்துகின்றார் ,

என்ரை ஆத்தை , நீ வேத சமயமென
இவை
விரும்பி அழமாட்டினமாம் ...
நாங்கள் சைவ சமைய மெணை
உன்னோடை சருவி அழ மாட்டினமாமம்

ஊர் தேசம் விட்டாய்
என்ரை ராசாத்தி
உறவுகளைதான் மறந்தாய் ...

மேபிள் துரைச்சியென்று
இஞ்சை
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையென என்ரை ராசாத்தி
உன்றை உறவும் அழவில்லையெணை


ஏறதாள 1980 கள் வரை இந்த ஒப்பாரிப் பாடல்கள் வழக்கில் இருந்து வந்துள்ளன . அதன் பின்னர் தொடர்ச்சியாக வந்த விடுதலைப் போராட்டத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி,

நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ........

உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைப் பெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா.......
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்

மகனே நீ
இருந்த இடத்தைப் பார்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா.......
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே.............


இவ்வாறு எமது வாழ்விலும் பாரம்பரியத்திலும் ஊறிவிடிருந்த இந்த ஒப்பாரி , இன்று அழிந்து போகும் நிலையில் உள்ளது . பொதுவாகவே சோகமான இசை வடிவங்களை நாங்கள் விரும்புவது இல்லை . இந்த ஒப்பாரி அழிவதற்கு அதுவுங் காரணமாக இருக்கலாம் . அத்துடன் நாகரீகம் என்ற போர்வையில் எமது வாழ்கையை கூட்டுப்புழு வாழ்க்கை முறைக்கு மாற்றிக் கொண்டதும் ஒரு காரணமாக இருக்கிறது . கால ஓட்டத்தில் நாம் பலதைத் தொலைத்து விட்டோம் , அதில் இந்த ஒப்பாரியும் ஒன்று . இந்த ஒப்பாரி சொல்லும் வழக்கை யார் முன்னெடுத்துச் செல்லப் போகின்றோம் ??????????????

உச்சாந்துணை :

01 . அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52

கோமகன்

20/09/2013

 

Thursday, September 19, 2013

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் !!!!!!! பாகம் 02

11 சங்கிலிப் பாம்பு ( Rattlesnake or Crotalus Linnaeus,)


படம் பதினொன்றுக்கான பதில் சங்கிலிப் பாம்பாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....iki/Rattlesnake

12 உருட்டு வீரியன் (Bothrops alternatus)


இந்த பாம்பின் பெயர் உருட்டு வீரியன் ஆகும் . இது தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Urutu

13 அரத்தோல் பாம்பு ( file snake or Acrochordidae )


படம் பதின்மூன்றிற்கான சரியான பதில் அரத்தோல் பாம்பாகும் . இதை எமது நாட்டில் புடையன் பாம்பு என்றும் ( Little filesnake ) அழைப்பார்கள் அனால் புடையன் பாம்பு தோற்றத்தில் சிறிது வித்தியாசமானது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....i/Acrochordidae

14 மினுங்கல் பாம்பு ( Sunbeam snake or Xenopeltidae )


பதின்நான்காம் படத்தில் உள்ள பாம்பின் பெயர் மினுங்கல் பாம்பாகும் . இந்தப் பாம்புகளின் தோலானது வெளிச்சத்துக்கு வானவில்லைப் போல நிறங்கள் மாறும் இயல்பு உடையது . இந்த வகையான பாம்புகள் தென்னாசியாவிலேயே அதிகம் காணப் படுகின்றன . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....i/Sunbeam_snake

15 மஞ்சள் நாகம் அல்லது செம்பு நாகம் ( yellow cobra Cape cobra copper cobra or Naja nivea) 


படம் பதினைந்திற்கான சரியான பெயர் மஞ்சள் நாகம் அல்லது செம்பு நாகம் ஆகும் ஏறத்தாள 1.5 மீறர்கள் வரை வளரக் கூடிய இந்த நாக பாம்பு அதிக அளவு தென்னாபிரிக்காவிலேயே காணப் படுகின்றது .

http://en.wikipedia....wiki/Cape_cobra

16 மணல் விரியன் ( Cerastes vipera )

 

படம் பதினாறுக்கான சரியான பதில் மணல் வீரியன் ஆகும் . இந்த வகையான பாம்புகள் மணல் பாலைவனங்களைக் கொண்ட வட ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன . இவை 35 செ மீற்றரில் இருந்து 50 செ மீற்றர் வரை வளரக் கூடியவை . இவைகளில் பெண் மணல் வீரியன் ஆண் பாம்பை விடப் பெரியதாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....Cerastes_vipera

17 பவழப் பாம்பு ( coral snake or  elapid snakes ) 

படம் பதினெட்டுக்கான சரியான பதில் பவழப் பாம்பாகும் . இவை பொதுவாக சிவப்பு மஞ்சள் நிறத்திலோ அல்லது கறுப்பு வெள்ளை நிறத்திலோ காணப்படும் . இவை கூடுதலாக வட அமெரிக்காவிலேயே காணப்படுகின்றன . இவை மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன ,

01 வட அமெரிக்காவை கொண்ட கிழக்குப் பவழப் பாம்பு Micrurus fulvius (Eastern or common coral snake),

02 டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் காணப் படும் டெக்ஸ்சாஸ் பவழப்பாம்பு ( Micrurus tener (Texas coral snake),

03 அரிசோனா மாநிலத்தில் காணப் படும் அரிசோனா பவழப்பாம்பு (Micruroides euryxanthus (Arizona coral snake )

இந்த வகையான பாம்புகள் 90 செ மீற்றரில் இருந்து 150 செ மீற்றர் வரை வளரக்கூடியன. மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....iki/Coral_snake

17  காட்டு நாகம் ( forest cobra or Naja melanoleuca) 


காட்டு நாகம் forest cobra Naja melanoleuca ஆபிரிக்காவின் மத்திய மேற்கு பிராந்தியங்களில் அதிகமாக வசிக்கின்றது . இந்த நாகத்தை கருப்பு நாகம் அல்லது கருப்பு வெள்ளைச் சொண்டு நாகம் என்றும் அழைக்கின்றனர் . இது 1.4 மீற்றி ல் இருந்து 3.1 மீற்றர் வரை வளரக்கூடியது . இதன் விஷம் கொடியது . கடிபட்டவருக்கு விரைவாகவே அதாவது 30 நிமிடங்களில் மரணம் ஏற்படும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் http://en.wikipedia....ki/Forest_cobra

18 கட்டுவீரியன் ( common krait or  Bungarus caeruleus) 


படம் பதினெட்டில் உள்ளது கட்டு வீரியன் பாம்பு ஆகும் இந்தப் பாம்பை நீலக் கட்டு வீரியன் அல்லது கருங் கட்டு வீரியன் என்றும் அழைப்பர் .இந்தக் கட்டு வீரியன் 1.75 மீற்றர் வரை வளரக் கூடியது எங்கள் ஊரிலே இந்தக் கட்டு வீரியனைப் புடையன் பாம்பு என்று அழைப்பர் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....ki/Common_krait 

19 முரல் வீரியன் ( hundred pacer  viper, sharp-nosed viper , snorkel viper or Deinagkistrodon acutus
) 


படம் பத்தொன்பதில் உள்ள பாம்பின் பெயர் முரல் வீரியன் ஆகும் . இந்தப் பாம்புகள் 0.8 மீற்றரில் இருந்து 1.50 மீற்றர் வரை வளரக் கூடியவை . இவை கூடுதலாக தென் சீனாவிலும் வட வியட்நாமிலும் காணப் படுகின்றன . இவைகள் கொடிய விஷமுடையவை . இதனால் கடிபட்டவர் ஏறத்தாள 90 அடி எடுத்து நடக்க முன்னரே இறந்து விடுவார் . மேலதிக தகவலுகளுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....Deinagkistrodon .

20 குத்து மூக்குப் புழுப் பாம்பு ( longnose worm snake or Leptotyphlops macrorhynchus )

 படம் இருபதில் உள்ள பாம்பின் பெயர் குத்து மூக்குப் புழுப் பாம்பாகும் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....s_macrorhynchus

21 அலகுக் கடல்ப் பாம்பு ( beaked sea snake, hook-nosed sea snake, common sea snake,  Valakadyn sea snake, or the Enhydrina schistosa )

படம் இருபத்தி ஒன்றில் உள்ள பாம்பின் பெயர் அலகுக் கடல்ப் பாம்பாகும் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....drina_schistosa

22 நரிப் பாம்பு ( Fox snake or Pantherophis )


நரிப் பாம்பு என்று பொதுவாக அழைக்கப் பட்டாலும் இந்தப் பாம்பு இரண்டு வகையாக வேறு படுத்தப் படுகின்றது . அவையாவன மேற்கு நரிப் பாம்பு ( (Pantherophis vulpina ) கிழக்கு நரிப் பாம்பு ( (Pantherophis gloydi ) என்பதாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....iki/Fox_snake �

 23 சுள்ளிப் பாம்பு அல்லது பறவைப் பாம்பு ( twig snake  bird snake , or Thelotornis )


படம் இருபத்தி மூன்றில் உள்ள பாம்பு சுள்ளிப் பாம்பு அல்லது பறவை பாம்பு ஆகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....wiki/Twig_snake

24 ஓநாய்ப்  பாம்பு ( common wolf snake or Lycodon capucinus )


படம் இருபத்தி நான்கில் உள்ள பாம்பின் பெயர் ஓநாய்ப் பாம்பாகும் . இந்த வகையான பாம்புகள் தென்கிழக்காசிய நாடுகள் , அவுஸ்திரேலியா , மொரீசியஸ் மற்றும் ரெனியொன் தீவுக் கூட்டங்களில் அதிகமாகக் காணப் படுகின்றன . இவை கூடுதலாக இரவு நேரங்களிலேயே உலாவித்திரிய வல்லன . இவை பற்றி மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....wiki/Wolf_snake

25 மழுங்குமூக்கு விரியன் ( blunt-nosed viper, Lebetine viper, Levant viper, or Macrovipera lebetina) 


 படம் இருபத்தி ஐந்தில் உள்ள பாம்பின் பெயர் மழுங்குமூக்கு விரியன் பாம்பாகும் . இவை வட ஆபிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் . இந்தியாவின் காஷ்மீர் பகுதிகளிலும் அதிகமாகக் காணப் படுகின்றன . இவை பொதுவாக 150 செ மீ வரை வளரக் கூடியவை இவை சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....vipera_lebetina