Sunday, March 23, 2014

கறுப்பி

கறுப்பி
ஒரு பேப்பருக்காக கோமகன்


அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டார் . அமைதியாக இருந்த அவர் வாழ்வில் இப்பொழுதுதான் புயல் ஒன்று வீசி ஓய்ந்திருந்தது. அந்தக் கிராமத்தின் இறுதியில் இருந்த கந்தப்புவின் கொட்டிலில் இருந்து தூரத்தே தெரிந்த கைதடியில் அங்காங்கே ஒளிப் பொட்டுகள் மின்னி முழித்தது அந்த அமாவாசை இருட்டில் நன்றாகவே கந்தப்புவுக்கு தெரிந்தது . கடந்த மூன்று வருடங்ளுக்கு முன்பு நடந்த செல்லடியில் மனைவி பறுவதத்தைப் பறி கொடுத்த கந்தப்புவுக்கு சொல்லிக்கொள்ள பெரிதாக உறவுகள் ஒன்றும் இல்லை. ஊரின் கடைசியில் இருந்த கந்தப்புவுக்கு அந்தக் கொட்டிலும் அருகே இருந்த பிள்ளையார் கோவிலும் போதுமானதாகவே இருந்தது . கந்தப்பு வாழ்க்கையில் பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று விட்டேந்தியாக இருந்த கந்தப்புவின் வாழ்கையில் சீலன் கறுப்பியின் வருகை , வாரிசுகளே இல்லாத கந்தப்புவுக்கு பாலைவனத்துப் பொட்டல் வெளியில் தோன்றிய ஈச்சை மரமும் அதனுடன் இணைந்த கிணறும் போல ஓர் புது வசந்ததையே கொண்டு வந்தது . ஒரு நாள் காலைப்பொழுதில் கந்தப்பு தனது தோட்டத்தில் மிளகாய் கண்டுக்கு களை புடுங்கி கொண்டிருந்த பொழுது சீலன் கறுப்பியினது அறிமுகம் அவருக்கு கிடைத்தது. தாங்கள் விசுவமடுவில் இருந்து வருவதாகவும் அண்மையில்தான் கலியாணம் செய்தவர்கள் என்றும் தங்களுக்கு இருப்பதற்கு இடம் தரமுடியுமா என்ற கோரிக்கையில் , கந்தப்புவுக்கும் அவர்களுக்குமான உறவு துளிர்விடத் தொடங்கியது . கறுப்பியின் பெயர்தான் கறுப்பியே தவிர பிரம்மன் அவளில் எதுவித கஞ்சத்தனத்தையும் காட்டவில்லை . கனங்கரேலென்ற முழங்காலைத் தொடும் நீண்ட தலை முடியும் , வட்ட வடிவ முகத்தில் செதுக்கி எடுத்த அழவான மூக்கும் , வில்லாக வளைந்த கண் இமைகளும் , தொய்வே இல்லாத எடுப்பான மார்பகங்களும் , அகன்ற பின்புறமும் , திரட்சியான கெண்டைகால்களும் கறுப்பியை பேரழகியாகவே காட்டின .சீலன் அவளைவிட சிறிது நிறம் குறைந்தாலும் வன்னியின் கடுமையான உடல் உழைப்பு அவனை ஓர் குத்துச்சண்டை வீரனைப் போலவே வைத்திருந்திருந்தது . பறுவதத்தை தொலைத்த கந்தப்புவின் வாழ்வில் மீண்டும் வசந்தத்தின் மொக்கு மெதுமெதுவாக அரும்பத் தொடங்கியது. சீலன் அவரின் வீட்டுக்கு முதுகெலும்பாகவும் கறுப்பி வீட்டைத் தாங்குபவளாகவும் இருந்தாள். பொதுவாகவே நல்ல உள்ளங்களின் வாழ்வு காலம் என்ற கடவுளுக்குப் பிடிப்பதில்லைப் போலும். அது கந்தப்புவின் வாழ்விலும் விளையாடத் தொடங்கியது.

*********************

இலங்கை என்ற மாம்பழத் தீவில் காலத்தின் குரூரம் சிறிது சிறிதாக முளைவிடத் தொடங்கிய காலகட்டம் அது . அது பௌத்த இனவாதம் என்ற பேயை சிங்களத்தில் ஏவி விட்டு தமிழர் வாழ்வில் மெதுமெதுவாக ஒரு ஊழித்தாண்டவத்துக்கான ஒத்திகையை ஆரம்பிபதற்காக தனது கால்களை அகலப் பரத்தியது. பௌத்த இனவாதப் பேயை ஓட்ட பல பூசாரிகள் வந்து போனார்கள். சிங்களத்தின் அரசியல், இனவாதப் பேயால் உண்டு கொழுத்தது. தமிழர்களும் இந்தப் பேயை ஓட்ட பல ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் இருந்தார்கள். தமிழர்களின் முன்னெடுப்புகளைப் பார்த்து அனைத்து நாடுகளுமே பீதி அடையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் ஒரு தீவினுள் இரண்டு நாடுகள் என்ற நிலையில் தமிழர் முன்னெடுப்புகள் இருந்தன .பௌத்த இனவாதப் பேயும் ஓவ்வரு சிங்கள இரத்தத்திலும் அணு அணுவாக ஊறி மூர்க்கமாக தமிழர் மேல் பாய்ந்தது. போதாக்குறைக்கு தன்னையொத்த கூட்டாளிப் பேய்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது பௌத்த இனவாதப் பேய் . ஒரு சிறு குழந்தையின் பாலுக்காக அழுத அழுகுரலை , காலம் என்கின்ற கடவுள் மனித உருவில் வந்து போக்கியதாக தமிழர் வாழ்வில் வரலாறு என்கின்ற வடிவில் பதிந்தது . ஆனால் , அதே காலம் என்கின்ற கடவுள் மிலேனியத்தில் தமிழர்கள் பெருங்குரலெடுத்து கதறி அழுத பொழுது அவர்களை திரும்பியும் பார்க்கவில்லை என்கின்ற காலப் பிறழ்வும் தமிழர் வாழ்வில் நடந்து தான் இருந்தது. ஒரு நாள் அதிகாலை கந்தப்புவின் அழகிய கிராமம் இந்தப் பேய்களால் சிதைக்கப்படபோவது தெரியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது . ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள் தங்கள் எஜமானர்களைக் காப்பதற்காக அரை உறக்கத்தில்தான் எப்பொழுதும் இருப்பவை . அதில் நாய்களின் பங்கு அளப்பரியது. தூரத்தே கைதடிப் பக்கமாகவும் செம்மணிப் பக்கவாகவும் கந்தப்புவின் கிராமம் நோக்கி நகரத் தொடங்கிய பேய்களின் அசுமாத்தத்தினை , இந்த நாய்கள் தங்கள் நுண்ணிய புலன் உணர்வால் உணர்ந்து « குரைப்பு « என்கின்ற எச்சரிக்கை மணி மூலம் அந்தக் கிராம மக்களை தட்டி எழுப்பிய பொழுது பேய்கள் அந்தக் கிராமத்தை நெருங்கியிருந்தன. எச்சரிக்கை மணி அடித்த நாய்களின் குரல்கள் துப்பாக்கிக் குண்டுகளின் கைங்கரியத்தால் பரலோக சமாதி அடைந்து கொண்டிருந்தன. தூரத்தில் இருந்தே எண்ணையின் துர்வாசத்தை அந்தக் கிராமத்து மக்கள் உணரத் தொடக்கி விட்டனர். அவர்கள் கண் மூடி முழிப்பதற்குள் தடதடத்த சப்பாத்துக் கால்கள் அந்த கிராமத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தன. எங்கும் தாடிகளும் தலைப்பாகைகளுமே நிரம்பி இருந்தன. அந்தக் கிராமத்தின் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக அனேகமாக எல்லோருமே முழங்காலில் இருத்தி வைக்கப்படிருந்தனர். தனது தோட்டத்தில் மிளகாய் கண்டுகளுக்கு தண்ணி மாறிக் கொண்டிருந்த கந்தப்புவும் நிறுத்தப்பட்டிருந்தார். ஒருபகுதி இவர்களை மேய்த்துக்கொண்டிருக்க மறுபகுதியோ தனது வேட்டையை ஆரம்பித்தது. பருத்தித்துறை வீதியில் இருந்து கேணியடிப்பக்கமாக நகர்ந்த பேய்கள் ,ஒவ்வரு வீட்டின் வேலிகள் பொட்டுகள் என்று பிரித்து வெளியாக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. அந்தப் பேய்களின் அந்த வேலி பிரிப்பிலும் பொட்டுப்பிரிப்பிலும் தங்கள் வாகனத் தொடரணியின் கண்ணிவெடித் தாக்குதலின் வெறியே மேலோங்கி இருந்தது . அவர்கள் தேடிவந்தவர்கள் அந்த இடத்தில் இல்லாததும் அவர்கள் வெறியை மேலும் அதிகப்படுத்தியது. அவைகள் கறுப்பியின் கொட்டிலை நெருங்கிய பொழுது சீலன் கொட்டிலின் பின்பக்கமாக தனது ஆடுகளுக்கு இப்பிலிப்பில் குழைகளைப் பறித்துக் கொண்டிருந்தான். கறுப்பியோ தோட்டத்துக்குப் போன கந்தப்புவுக்கும் ,சீலனுக்கும் சமைத்துக்கொண்டிருந்தாள். பின்புறமாக நுழைந்து கொண்டவர்களுக்கு சீலனே முதலில் கண்ணில் பட்டான். சீலனின் உடல்வாகு தங்கள் தொடரணியை தகர்த்த ஆட்களில் ஒருவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளறி விட, சீலனை அருகே இருந்த தென்னை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கத் தொடங்கின அந்தப் பேய்கள். சீலனது அலறலில் கொட்டிலுக்குள் இருந்து கலவரப்பட்டு ஓடிவந்த கறுப்பியைக் கண்ட அந்தப் பேய்கள் கள்ளுக் குடித்த குரங்குகளாயின. இருவரை சீலனுக்கு காவல் காக்க விட்டு விட்டு கறுப்பியை சுற்றிவளைத்தன அந்தப் பேய்கள். அங்கே தனது சொந்த மண்ணில் அன்னியப் பேய்களினால் கறுப்பியின் கற்பு மூர்க்கத்தனமாக கரைந்துகொண்டிருந்தது. கறுப்பி ..............என்று குளறிக்கொண்டிருந்த சீலனது தொண்டையை நோக்கி ஒரு குண்டு சீறித் துளைத்தது. ஆள் மாறி ஆள் மாறிக் கறுப்பி மீது படர்ந்த இறுதிப் பேய் ஒன்று, அவளது பிறப்புறுபினுள் தன் கையில் இருந்த கிறனைட்டின் கிளிப்பை விலத்திக் கிறனைட்டை நுழைத்து வீட்டு ஓடியது. சீலன் ......... என்ற அலறலுடன் கறுப்பி சிதறினாள் . அதன் பின்பு சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அந்தக் கிராமத்து சம்பு புல்லுத் தரவைப் பக்கம் நடுநிசியில் கறுப்பீ............... என்ற சீலனின் அலறலும் , சீலன்…………. சீலன்…………… என்ற கறுப்பியின் தீனமான அலறலும் அவ்வப்பொழுது நடு நிசியை குலைத்து, கந்தப்புவையும் அந்தக் கிராம மக்களினது நித்திரைக்கு வேட்டு வைத்துக்கொண்டிருந்தது.


கோமகன் 

23 பங்குனி 2013

Thursday, March 20, 2014

இனியும் முட்செடிகள் முளைக்கலாம்

இனியும் முட்செடிகள் முளைக்கலாம்


"தம்பி சங்கர் ! இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை .சனத்திலை பாதிபேருக்கு மற்றவயின்ரை பிரச்சனையிலை அக்கறையில்லை ,பாதிப்பேருக்கு மற்றவைக்கு பிரச்சனையெண்டால் சந்தோசம் .எங்கடை பெடியள் எங்கடை பெடியள் சொல்லித்திரிஞ்ச ஆருக்கும் உண்மையிலை எங்கடை பெடியளிலை எந்த அக்கறையும் இல்லை "

குலசேகரத்தாரின் என் சிந்தனை சரிதான் என்ற நம்பிக்கையை தந்தது .இன்று முழுவதும் இதே நினைப்பாகவே இருந்தது .நீண்ட நாட்களின் பின் கடந்தமூன்று ஆண்டுகளாக தேவையற்ற விடயம் என நான் சிந்திக்க விரும்பாத விடயத்தில் சிந்தனை ஓடுவதை தடை செய்ய முடியவில்லை .சரியென்றும் பிழையென்றும் மனம் அல்லாடியது ." யாருக்காகப் போராடினமோ அவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் யாருக்கு எதிராகப் போராடினமோ அவர்களால் ஆதரிக்கப்படுகின்றோம் " என்பதை நினைக்க அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது .

"தம்பி சங்கர் !இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை " என்ற ஒற்றைப் பதிலில் அத்தனை யதார்த்தமும் அடங்கியிருப்பதாகப்பட்டது .குலசேகரத்தாரால் மட்டும் இவ்வளவு யதார்த்த பூர்வமாகவும் தெளிவாகவும் ,சிந்திக்க ,சிந்திப்பதை தெளிவாகவும் சொல்ல முடிகின்றது என்ற பிரமிப்பும் அதிர்வும் ஒவ்வரு தடவையு ம் குலசேகரத்தாரைச் சந்திக்கன்றபோது ஏற்படத் தவறுவதில்லை .

குலசேகரம் அவ்வளவு படித்த மனிதன் இல்லை .ஆனால் உலகத்தைப் படித்த மனிதன் .புத்தகங்களைப் படிக்கின்ற இன்றைய கல்விமான்களை விட மனிதாபிமானம் உள்ள மனிதன் .

என் தந்தையின் தூரத்து உறவினரும் நண்பருமான குலத்தாரோடு நான் அறிமுகமாகி மூன்று வருடங்களாகின்றது .முதல் சந்திப்பில் இருந்து இன்று வரை சந்திக்கின்ற ஒவ்வரு சந்திப்பிலும் மனதில் ஒவ்வரு புதிய பிரமிப்பு தோன்றும் .மற்றவர்களுடைய மனதை துல்லியமாகப் படித்து பிறர் மனங்கோணாமல் உறவுகொள்ளும் திறன்மிக்க அற்புதமான மனிதர் .மக்களைப் பற்றியும் அவர்களின் நலனையும் பற்றியும் சதா சிந்திக்கின்ற மனிதாபிமானம் ,எளிமை மென்மையான மனம் கொண்ட மனிதர் .

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஊரோடு இருந்த தொடர்பு முற்றாக மறந்தும் மறைந்தும்போய் வாழ்வின் பலவருடங்களை வன்னி மண்ணில் தொலைத்து ஊர் திரும்பியபோது எனது குடும்பத்தினர் உட்பட இங்கு எல்லாமே அறிமுகமில்லாதவையாகவே இருந்தது .முன்னாள் போராளி என்ற காரணத்துக்காகவே என்னைப் பார்க்கவும் பேசவும் தயங்கிய ,சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட ,ஒருகாலத்தில் என்னோடு பேசிய குடும்ப அங்கத்தவர் அல்லாத முதல் மனிதர் குலசேகரம் .

இரண்டாயிரத்து ஒன்பது வைகாசி நடுப்பகுதியும் கடந்து வாழ்வின் இறுதியிலும் இறுதியான நாட்களில் - போர் ஊழித்தாண்டவத்தின் உச்சியைத் தொட்டு கோரமாய் தலைவிரித்தாடிய காலத்தில் .இமையமலை என்று நாங்கள் அண்ணாந்து பாத்திருந்த பலவிடையங்கள் கண்முன்னே பனி மலையாய் கரைந்து போன சோகத்தையும் ,வாழ்வின் அத்தனை அங்கங்களும் உறவுகிளைகளும் பிடுங்கி எறியப்பட்ட காயத்தையும் சுமந்தபடி மரத்துப்போன மனதோடு உயிர் மீண்டு ,நலன்புரி முகாமிலும் புனர்வாழ்வு முகாமிலும் காலங்கழித்து வீடு வந்தபோது, மீள முடியாத நரகத்தில் நாங்கள் எல்லோரும் சிக்கிகொண்டது போன்றே பிரமையும் இழக்கமுடியாத, இழக்கக்கூடாத மிகப் பெறுமதியான எதோ ஒரு பொக்கிசத்தை இழந்து விட்டதான தவிப்பும் , ஒரு ஏக்கமும் மனதில் முள்ளாக உறுத்தும் .

அந்த நாட்களில் அறிமுகமான குலசேகரத்தாரை சம்பிரதாயமான நலன் விசாரிக்கின்ற ஒருநபராகக் கருதி ,அவர் கேட்ட கேள்விகளுக்கு இயந்திரதனமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது என் கண்களைத் தாண்டி மரத்துப்போன இதயம்வரை ஊடுருவிய அந்த தீட்சண்யமான பார்வை முதன்முறையாக என்னை அதிர வைத்தது .எதிர்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்மீது வாஞ்சையோடு இருப்பதும் கரிசனையோடு பேசுவதும் தொடர்ந்தது .பழையவை எல்லாம் மறந்ததும் ,மறைந்துபோய் கொண்டிருந்த கால கட்டங்களிலும் அதிர்வுகள் அடிக்கடி தொடர்ந்தன .எனது பொழுதுகளின் பெரும்பகுதி அவருடன் கழிந்தது .

முடிந்து போன போரும் பின் வந்த புனர்வாழ்வும் என்னைப் போரை வெறுக்கும் மனிதானாக மாற்றியிருந்தன .போர் எவ்வளவு கொடுமையானது ,எவ்வளவு வலியைத் தரக்கூடியது என்பதை நான் நேரில் தரிசித்தவன் என்பதால் ,போர் என்பதை பத்திரிகை ,வானொலி ,தொலைகாட்சியிலும் ,இணையத்தளங்களிலும் பாத்துவிட்டு எங்கள் உரிமைகளை மீட்க்க இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நம்மவர்களைப் பார்கின்றபோது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கும் .

தமக்கு முன்னே இறந்துபோன உறவுகளின் உடல்களை கூட தகனம் செய்ய முடியாமல் ,தமக்குப் பின்னால் நாய் கூட எஞ்சாது என்ற நம்பிக்கையில் மணலைவாரி மூடிவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடியவர்களையும் ,தாய் இறந்தது அறியாது இறந்த தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையையும் ,கர்ப்பிணித் தாயும் நிறைமாத சிசுவும் அருகிலே கணவரும் துடிதுடித்ததையும் நேரில் கண்ட என்னைப் போன்றவர்களால் இங்கு மட்டுமல்ல ,உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க முடியாது .

இருந்தபோதிலும் தோற்றுப்போன மனநிலையும் ,அச்சமும் இன்னும் மிச்மிருந்தன .இதையும் தாண்டி என்னை முழுமையாக மாற்றியவர் குலசெகரம்தான் .ஊர் திரும்பிய இந்த மூன்று வருடத்தில் என்முறைமை முற்றாக மாறிப் போயிருந்ததது .அவரின் அறிமுகம் ,ஒருசில சிறுவயதுத் தோழர்களின் அறிமுகமும் ,ஒரு மாறுதலையும் எதிர்பார்த்த என் உள்மனத்தேவையும் ஒன்றுசேர கோயில் தொண்டர்சபை ,சனசமூகநிலையமென்று பொதுஅமைப்புகளுடன் தொடர்புகளும் அறிமுகமும் வளர்ந்த்தது .

எப்போதோ எதோ ஒரு நோக்கத்துக்காக நான் கற்றுக்கொண்ட மொழியும் ,திறன்களும் ,செயற்கரிய நேர்த்தியும் இப்போது ஆக்கபூர்வமான தேவைகளுக்கு பயன்பட ,நான் பலரின் செல்வாக்குள்ள இளைஞர் என்ற அந்தஸ்தும் கிடைத்தது .ஆனால் பெரிய மொழியறிவையும் திறன்களையும் இபோதுதான் கற்றுக்கொண்டது போலவும் கற்றுக்கொள்வது போலவும் காட்டிகொள்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டியிருந்தது .

பொது வேலைகளில் ஈடுபடுவதற்கு அறிவு ,திறன் கொண்ட பெரியவர்கள் பின்னிற்பதால் கிடைத்த சமூகதலைமைத்துவ இடைவேளை இந்தக் குறுகிய காலத்தில் என்னைப் பலவிடயங்களில் முன்னிலை பெற வைத்தது .மனந்திருந்திய மகனாக கொண்டாடும் பெற்றாரின் அன்பும் ,வளமான குடும்ப பின்னணியும் இபோதைய எனது வாழ்க்கையை சவாலாக்கவில்லை .ஆனால் பல ஆண்டுகளாக மண்ணுக்காக போராடிய பலர் இன்று ஒருவேளை உணவுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். வடமாகணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களில் மாவட்டத்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் 1500 புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மக்கள் பாதுகாப்புப் படைகளில் சேர்க்கப்படவுள்ளனர் .முதற்கட்ட ஆள்சேர்ப்பு இன்று கிளிநொச்சியில் நடிபெறுகின்றது என்ற செய்தியை படித்தபோது கடந்தகாலத்தில் தவறிழைத்து விட்டோமோ ?பச்சதாபம் கலந்த எதோ விபரிக்க முடியாத உணர்வுகளின்கலவை என்னை வேதனைப்படுத்தியது .இந்த உணர்வினைப் பகிர்ந்தபோதுதான் "தம்பி சங்கர் !இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை " என்ற குலசேகரத்தாரின் பதில் கிடைத்தது .போராளிகள் ஒருகாலத்தில் தங்களுக்கு காவலாக இருந்தவர்கள் என்றாலும் அவர்களை மக்கள் முட்செடிகளாகவே கருதினர் .முற்றத்து மல்லிகையாக ஏற்பதில் தயக்கம் இருந்தது .தமிழ் வர்த்தகர்களும் ,தொழிலதிபர்களும் முன்னாள் போராளிகளுக்கு தொழில் கொடுக்க தயங்குகின்ற நிலையில் ,முன்னாள் போராளிகள் என்பதனாலேயே இரண்டாந்தர குடிமக்களாக தமிழர்களால் பார்க்கப்படும்பொழுது இந்த வேலை வாய்ப்பு அவர்களின் பசியைத் தீர்த்து விடும் .

எல்லாகாலங்களிலும் இப்படி நடந்திருக்கின்றது .எல்லாளனுடைய ஆட்சியில் இருந்த மக்கள் துட்டகைமுனு மன்னான போது அவனை மன்னனாக ஏற்று மகிழச்சியாக வாழ்ந்திருக்கின்றார்கள் .எல்லாளனுடைய போரில் துட்டகைமுனு போர்தர்மங்களை மீறினான என விசாரணை நடத்தப்படவேண்டும் என யாரும் ஆர்பாட்டம் செய்ததாக தெரியவில்லை .போர் என்பதே அதர்மம் தான் , இதில் எத்தரப்பு தர்மத்தை மீறினார்கள் ? என்று விசாரிப்பதற்கும் தண்டிப்பதற்கும் என்ன இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை .

யாரேனும் இவர்களை துரோகி என்று என்று சொல்லலாம் .தமிழ் உணர்வாளர்கள் இனிக்கிளர்ந்து எழுவார்கள் .ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் பசிக்கொடுமையில் தற்கொலை செய்வது தான் வீரம் .புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது அவர்களின் நம்பிக்கை .ஆனால் இதில் துரோகம் இருப்பதாக எனக்குப்படவில்லை .

ஆட்சியில் இருக்கின்ற மன்னனை நேசிப்பதும் ,அந்த அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதும் மக்களின் தர்மம் .அதனால்தான் மக்களை எல்லோருக்கும் பொதுவானவர்களாகக் கருதி பொதுமக்கள் என்கின்றார்கள் .மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கும் நாட்டுக்கும் எதிராக நடந்தால் அது துரோகம் .அதை விட்டுவிட்டு பட்டினியை போக்க வேலைக்கு சேர்வதில் என்ன துரோகம் இருக்கிறது என்றவிதமாக சிந்திக்க ,குலத்தார் சொன்னது சரியாகவே பட்டது .

ஆட்சேர்ப்பு விளம்பரம் வெளியிடபட்டு சுயவிருப்பில் 2000அளவிலான போராளிகள் இதுவரை சேர விண்ணப்பிதிருக்கிறார்கள் .தொழில் வாய்ப்பு இருந்திருந்தால் ஏன் இவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் ? கைநிறைய சம்பளம் ,பாதுகாப்பு இதைவிட இவர்களுக்கு வேறு தொழில் இங்கு கிடைப்பது அரிது .அடஹிவிட கைநிறைய சம்பளமும் பாதுகாப்பும் கிடைக்கும் தொழிலை ,தனக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுப்பது அவர்களது உரிமை .நாங்கள் சொல்லும் வேலையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவிடமுடியாது .

...................................................

நாட்டிற்காக என்னை அளிப்பதன் மூலம் அழிவை விதைப்பதற்கு என ஒரு காலத்தில் நான் கற்றிருந்த மொழி இப்பொது பல இடங்களில் கை கொடுத்தது .நான் சிங்களம் பேசுவது எனது குடும்பத்தில் பலருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது குறிப்பாக அண்ணியும் , எனது தங்கையும் அதிசயமாகவும் பெருமையாகவும் பார்த்தார்கள் .

அனுராதபுரத்தில் மொழி அதிகம் பயன்பட்டது .எனக்கு சிங்களம் தெரிந்திருந்த போதிலும் அதன் அழகையும் இனிமையையும் இதனை நாட்களாக நான் ரசித்து அனுபவிப்பதில்லை .சிங்களப் பெண்கள் சிங்களம் பேசுகின்ற போதுதான் அந்த மொழி எத்தனை இனிமையானது என்பது பிரிந்ததது .அங்கிருந்தவர்களிடம் சிங்களத்தில் விபரம் கேட்டு அண்ணனின் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொன்னபொழுது ,ஒய்வு பெற்ற ஆங்கில ஆசிரியையான அம்மா என் ஆங்கிலத்தின் வேகத்தை பின்தொடர அதிகம் சிரமப்படுவது தெரிந்தது .

கனடாவிலிருந்து வந்திருந்த அண்ணாவின் குடும்பத்துடன் அவர்கள் கனடா திரும்புவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக முழு இலங்கையும் சுற்றுலா செல்வதெனவும் சுற்றுலா முடிவில் திரும்பவும் யாழ்ப்பாணம் வராமல் அப்படியே அவர்கள் கனடா திரும்புவதெனவும் தீர்மானிக்கப்படிருந்தது .அத்தீர்மானம் செயல்வவடிம் பெற்றிருக்க நான்குநாட்கள் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை தரிசித்தோம் .

"எவ்வளவு அழகான நாடு ,அமைதியாக இருந்தால் இதைவிட சிறந்ததேசம் உலகத்தில் இருக்கமுடியாது "அன்னை ஆங்கிலத்தில் ஆதங்கப்பட்டாள் .பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் பார்த்து அண்ணாவின் குழந்தைகள் அதிசயித்தார்கள். "யார் இவர்" என்று ஆங்கிலத்தில் விசாரிக்க ,அம்மா புத்தர் ஞானம் பெற வரலாற்றை கேள்வி வந்த மொழியில் விபரிக்க இன்னும் அதிசயித்தார்கள் .

"யார்தான் எங்கடை காணியளையும் பிடிக்கிறவர் எண்டதையும் சொல்லுங்கோ "அண்ணா அதிகநேரத்தின் பின் வாய்திறந்து பேசினான் .பேச்சில் வெறுப்பு இருந்தது .

"அண்ணா புத்தர் தமிழுக்கோ ,தமிழனுக்கோ விரோதியில்லை .புத்தரும் வள்ளுவரும் பெரியாரும் மட்டும் தான் உலகத்திலை பிறந்த ஞானிகளிலை சமயசார்பில்லாதவை.எந்தச் சமையதைப் பற்றியும் சாமியைப் பற்றியும் புத்தர் போதனை செயவும் இல்லை ,தன்னை கும்பிடச்சொல்லவும் இல்லை.உனக்கு ஒண்டு தெரியுமோ பௌத்தசமயத்துக்கு மணிமேகலை ஏன்டா காப்பியம் செய்தவன் ஒரு தமிழன்தான் . பௌத்தத்துக்கு அந்த ஒரே காப்பியம்தான் இருக்கு அதைவிட்டால் கிடைக்கக்கூடுயதாய் ஒண்டுமில்லை .புத்தரை ஆறும் விரோதியாகப் பார்க்கலாம் ஆனால் தமிழன் பார்க்கக்கூடாது .எனெண்டால் புத்தசமயத்தை வளர்த்தவன் தமிழன்தான் .கனபேர் அதைப் பழுதாக்கிப் போட்டாங்கள் அதற்குப் புத்தர் பொறுப்பில்லை ".

சொன்ன என்னை அதிசயமான பிராணியை பார்ப்பது போல வாய்பிளந்து பார்த்தான் .

"நீ எப்படா புத்தசமயதிலை சேர்ந்தனி ! புனர்வாழ்விலையா !"

அவனது கேள்விக்கு சிரித்த என்னை உற்றுப்பார்த்தான் .புத்தரை நேசிக்கின்ற ஒரு தமிழனைப் பார்க்க அவனுக்கு அபூர்வமாகவும் அதிசயமாகவும் இருந்தது .

"உண்மையாகவே சேர்ந்திட்டியோ ?" என்று மீண்டும் சிரித்தான் ,பௌத்தம் சிங்களவர்களின் மதம் எனவும் பௌத்தமதமும் புத்தர் சிலைகளும் தமிழர் மீதான ஆக்கிரமிப்பின் குறியீடுகளாகவும் அவர்கள் கொண்டிருந்த அபிப்பிராயம் சிரிக்க வைத்திருக்கலாம் .

சர்ச்சை அண்ணாவின் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க அவர்கள் விடயமறிய ஆசைப்பட்டார்கள் .அண்ணியிடமும் அவ்வளவாக ஆதங்கம் தெரிந்தது .

"தமிழர் பூமியில் புத்தர் தூபிகள் இருப்பது அவை சிங்களவருடையது என்பதற்கு சான்றல்ல .தமிழ்நாட்டில்கூட திருவாரூர் மாவட்டத்தில் புதூர் ,குடவாசல் ,திருநாட்டியாதான்குடி, உள்ளிக்கோட்டை ,வளையாமபுரம் ,கண்டிராமாணிக்கம் போன்ற இடங்களில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ..அதற்காக திருவாரூர் மாவட்டத்தின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்களல்ல .தமிழர்கள் ஒருகட்டத்தில் பௌத்தர்களாக வாழ்ந்தனர் .அவை தமிழர்களின் உடமைகள் .முன்னொருகாலத்தில் இலங்கை தமிழர்களிடேயும் புதர் அமைதியின் சின்னமாக அமர்ந்திருந்தார் .தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களும் சமண ,பௌத்த காப்பியங்கள்தான் .புலால் உண்ணாமை ,ஜீவகாருண்யம் இரண்டுமே சமணமும் பௌத்தமும் தந்த கொடைகள் .இந்தியாவின் தேசியக்கொடியில் இருப்பதுகூட அசோகச்சக்கரம்தான் .சமத்துவம் ,சகோதரத்துவம் என்பவற்றை எய்துவதற்கு வலை புத்தமதம்தான் என்பது அம்போத்கரின் முடிவு .இனவெறி என்பது சமூகதின் வக்கிரமே அன்றி சமயக்கோட்பாடுகளின் பிழை அல்ல."

விபரித்தபோது குழந்தைகளிடமும் ,அண்ணியிடமும் கேட்கும் ஆர்வம் தெரிந்தது .அண்ணனிடம் முன்னைய ஏளனத்தை காண முடியவில்லை .புத்தரின் முன்னால் நின்று பௌத்ததை ஆங்கிலத்தில் விபரித்தபொழுது அருகில் இருந்த வெள்ளைகாரர்கள் உன்னிப்பாகக் கேட்டார்கள் .சுற்றுலா வழிகாட்டி என்று நினைத்திருக்கவேண்டும் , விபரித்ததிற்கு நன்றி சொல்லி பணம் எடுத்து நீட்டினார்கள் .விடயத்தை சொன்னபோது சிரித்தபடி வருத்தம் தெரிவித்து விலகினார்கள் .

ஐந்தாம் நாள் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்ந்து .சுற்றுப்பயணம் குடும்பத்தில் எல்லோரும் கலந்து பேசவும் ,பல விடயங்களை விவாதிக்கவும் சந்தர்பமாகவும் அமைந்தது .பயணத்தின் நிறைநாளில் கட்டுநாயாக்க விமானநிலையத்தில் அண்ணாவையும் குடும்பதினரையும் வழியனுப்ப போனபோது தங்கை எதோ அதிசயத்தை பார்ப்பது போல அங்கிருந்த குடியிருப்புகளையும் கட்டிடங்களையும் பார்த்தாள் .

"இஞ்சை எயாப்போட்டை சுத்தி வீடுகள் இருக்குது ,சனங்கள் இருக்குது அப்படியெண்டால் நாங்கள் ஏன் எங்கட ஒட்டகப்புலம் பலாலி காணியளுக்கு போகேலாது எண்டு சொல்லுகினம் " அவள் அதிசயமாக பார்த்த பார்வையின் அர்த்தம் இப்போது விளங்கியது .

"ஒருத்தரும் இவ்வளவுகாலமாய் எங்கடை சனத்தின்ரை பிரச்சனையை தீர்க்கமுடியேலை .ஒரு காலத்திலை எங்கடை சனம் அங்காலுபக்கத்தை நம்பீச்சுதுகள் .எங்களுக்கு எண்டு ஒரு நாடு வந்தால் எங்கடைவீடுகளுக்கு காணியளுக்கு போகலாமெண்டு நம்பினவை கனபேர் .அது எல்லாம் முடிஞ்சு சண்டையும் முடிய ,சண்டை முடிஞ்சால் சண்டைக்காக இஞ்சை நிண்டவை தங்கடை ஊருக்கு போடுவினம் நாங்கள் எங்கடை ஊருக்கு போகலாம் எண்டு சனம் நம்பீச்சுது .இப்ப அதுவும் நடக்கையில்லை இப்பவும் ஓட்டகபுலக்காணியையும் ,பலாலி காணியையும் தங்கைச்சிக்கு சீதனம் குடுக்கப்போறன் எண்டுதான் கொம்மா சொல்லி திரியிறா "என்று அப்பா சிரித்த சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை .


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அண்ணாவையும் குடும்பத்தினரையும் வழியனுப்பி பயணம் எல்லாம் முடிந்து ஊரூக்கு திரும்பிய மறுநாள்காலை ,

"எப்பிடி தம்பி பயணங்ககள் .அண்ணா குடும்பம் கனடாவிலை இறந்கீட்டினமோ ?" கேள்வியோடு குலசேகரத்தார் வந்தார் .வழமையான சம்பிரதாய உரையாடல் முடிந்து வந்த விடயத்துக்கு வந்தார் .

"தம்பி இண்டைக்கு இரண்டு மணிக்கு ஒரு கூட்டமிருக்குது .கொழும்பிலை இருந்து ஆரோ பெரிய ஆக்கள் வருகினமாம் .மீளிணக்கப்பாடு தொடர்பான கலந்துரையாடல் எண்டு போட்டிருக்குது .வாசிகசாலை சார்பில் இரண்டு பேரை வரச்சொன்னவை .உமக்கு பயணக்களைப்பு நீர் வந்தால் நல்லது எண்டு நான் நினைச்சன் என்ன செய்வம் "

மறுக்கமுடியவில்லை .மறுக்கமாட்டேன் என்பது அவருக்கு தெரியும் .

கூட்டம் இரண்டரை மணிக்குத் தொடங்கியது .நூற்றைம்பது பேர்வரையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள் .கொழும்பில் இருந்து இரு உயர்நிலை அதிகாரிகள் வந்திருந்தார்கள் .இருவரும் சிங்களத்தில் பேசினார்கள் .கூட்டதில் வந்திருந்த உரைபெயர்ப்பாளர் ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார் .அவர்களின் பேச்சக்கள் "வடக்கு கிழக்கு பகுதியில் சுதந்திரம் இல்லாத நிலையே அன்று காணப்பட்டது .ஆனால் இன்று அந்த நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டேடுத்துள்ளோம்.இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன .அவர்களுக்கு பதலளிக்க வேண்டுமாயின் நாட்டில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டல் வேண்டும் .நல்லிணக்கம் இருத்தல் வேண்டும் .நாடு மீட்க்கப்பட்டதன் பின்னர் இறைமை ,ஒருமைப்பாட்டிற்காக பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது .வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம் .அபிவிரித்திக்காக அபிரதேசமக்களுக்கான சகலதேவைகளும் பெற்ருக்கொடுக்கப்படும்" என்ற விதமாக இருந்தது .

கூட்டதில் இருந்தபோது என் தொலைபேசி பலதடவைகள் அமைதியைகுழப்பாமல் அதிர்ந்தது .அம்மா எடுத்திருந்தார் .இதற்காக கூட்ட மண்டபத்தில் இருந்து இடையில் வெளியேற மீண்டும் அதிர்ந்தது .

"அம்மா சொல்லுங்கோ ".

" தம்பி என்னத்தைப்பற்றி கூட்டம் நடக்குது . காணிக்கூட்டமே "

"இல்லை ,ஏன் காணிக்கு என்ன கூட்டம் ?"

"எங்கடை ஒட்டகப்புலம் ,பலாலி காணிஎல்லாம் உரிமையாளரை அடையாளம் காண முடியவில்லை எண்டு சொல்லி பிடிக்கப்[போகினம் .காணியளுக்கை நோட்டீஸ் ஒட்டுகினமாம் .நாங்கள் ஊரிலை இருக்கிறம் எண்டு சொல்லி ஒருக்கால் கதை ".

கூட்டதின் உரைகள் முடிந்தபின் பொதுமக்கள் அபிப்பிராயங்கள் கலந்துரையாடப்பட்டன .காணி சுவீகரிப்பு பற்றி ஒருவர் கேட்க "சட்டவிரோதமாக எதுவும் நடக்காது "என்ற உறுதிமொழி கிடைத்தது .கூட்டம் சசலத்தது .நான் அமைதியானேன் .

உயர் பாதுகாப்பு வலயத்தில் தனியார்காணிகளில் புத்தர் சிலைகள் பற்றி இனொருவர் கேட்க "அர்பணிப்பாலும் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப்போவதில்லை .சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர் .சிலர் இந்த இனஒற்றுமையை விரும்பவில்லை .அவர்கள் பௌத்தர் ,இந்துக்கள் ,இஸ்லாமியர் ,கிறீஸ்தவர்கள் என மக்களைப் பிரித்துப் பார்கின்றனர் .அப்படிப் நின்று செயற்படமுடியாது "என்ற பதில் திணறடித்தது .அதன் பின்பு எல்லோருக்கும் எல்லாமே விளங்கிவிட்டது போலும் கேள்விகள் இல்லை .

நிகழ்வு தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது .இந்துக்கலூரி தமிழ் மாணவிகள் சிங்களத்தில் பாடினார்கள் .மனதில் எங்கோ நெருடியது .தாய் நாட்டின் பெருமையை பாடுகின்றோம் என்பது கூட்டத்திற்கு வந்திருந்த பலருக்கு விளங்கவில்லை .தாய் நாட்டின் தாய் மொழியில் ப[ஆடிப் பெருமைப்பட இந்தப்பிள்ளைகள் விரும்பியிருப்பர்களோ தெரியவில்லை .இவர்கள் விரும்பாவிட்டாலும் வேறுயாரேனும் தாய்மொழியில் பாடவும் ,தனது ஊரில் குடியேறவும்கூடும். அதுகிடைக்காதபோது தாய்மொழியில் பாடக்கூடிய ,தனது ஊரில் குடியேறக்கூடிய ஒருநாட்டை விரும்பலாம் .அதற்காக என்னைப்போல் யாரேனும் இருமொழியைக் கற்கலாம் .தாய்நிலம் பன்படுதப்படாவிட்டால் இங்கு இனியும் முட்செடிகள் முளைக்கலாம் என்று மனதில் பட்டது .


நன்றி : திசைகாட்டி மரத்துக்காக

வே. சிவராசா

அளவெட்டி மத்தி அளவெட்டி

யாழ்ப்பாணம்