Skip to main content

தனிக்கதை - சிறுகதை - கோமகன்.


Posted Image

முப்பாட்டன் பெயர் : நாகலிங்கம்

பாட்டன் பெயர் : இளையதம்பி

தொழில் : இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் மலாயா ( மலாயன் பெஞ்சனியர் )

தகப்பன் பெயர் : ஆழ்வார்க்கு அடியான்.

பெயர் : சின்னதம்பி.

சாதி :வீரசைவ வேளாளர்.

பொழுது போக்கு : தவறணையும் வெண்டிறேசனும்.

000000000000000000எனக்கு சந்திரவதனா அக்காவை இப்பொழுதும் நன்றாக நினைவு இருக்கின்றது . எனது சிறுவயது பிராயம் பெரும்பாலும் அக்காவுடனேயே கழிந்திருக்கின்றது . அத்துடன் சிறுவயதில் அக்காவிடம் டியூசனும் படித்திருக்கின்றேன் . பெயருக்கு ஏற்றவாறு சந்திரவதனா அக்கா மிகவும் அழகாக இருப்பா . வெள்ளையும் கறுப்பும் இல்லாத நடு நிறத்தில் உயரமான தோற்றமும் , அகன்ற மார்புகளும் , பெரிய அகன்ற விழிகளும் , அளவான முன்புறங்களும் , சின்னஞ் சிறிய இடுப்பும் , என்று சந்திர வதனா அக்காவை சினிமா ஸ்டார் மட்டத்துக்கு உயர்த்தி இருந்தன . அப்பொழுது எங்கள் ஊர் ரோமியோக்களில் இருந்து சுற்று வட்டார ரோமியோக்கள் எல்லோருமே சந்திரவதனா அக்காவை யார் விழுத்துவது என்பதில் போட்டியே இருந்தது. இதனால் அவா எங்கு போனாலும் என்னை தன்னுடன் கூட்டிக்கொண்டு செல்வா . நானும் அக்காவின் கையை பிடித்துக் கொண்டு பெரிய புழுகத்துடன் அவாவுடன் செல்வேன் . சந்திர வதனா அக்கா ஒரு புத்தக பூச்சி . எப்பொழுதும் பெரிய பெரிய நாவல்களை தனது வீட்டு முன் விறாந்தையில் வாசித்துக்கொண்டிருப்பா . காலை ஒன்றின் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு , சிறிய கால் ஆட்டலுடன் ஒரு கை அவாவின் நீண்ட தலை மயிரை மெதுமெதுவாக தடவிக்கொண்டிருக்க சந்திரவதனா அக்கா புத்தகம் வாசிக்கும் அழகே அழகு .

சினத்தம்பியரை எங்கள் ஊரில் தெரியாதவர்கள் இல்லை. பரம்பரை பணக்கரதனமும் கொழுத்த சாதி தடிப்பும் அவரை படங்களில் வரும் ஊர் நாட்டாமை மட்டத்தில் வைத்திருந்தன .சினதம்பியர் எப்பொழுதும் எட்டு முழவேட்டியுடன் கழுத்தில் புலிநகம் வைச்ச இரட்டை பட்டு சங்கிலி போட்டிருப்பார் .அதை வெளியே காட்டவேண்டும் என்பதற்காகவே சின்னத்தம்பியர் ஒருபோதும் மேலே உடுப்பு போடுவதில்லை .ஏதாவது விசேடங்கள் என்றால் மட்டும் நாசனல் அணிவார். சின்னதம்பியருக்கு எப்பொழுதும் மற்றவர்களை மட்டம் தட்டி தனது குலப் பெருமைகளை அவிட்டுவிடுவதில் அலாதி பெருமை . இதனால் நாங்கள் எப்பொழுதும் அவரை செல்லமாக " வெண்டிறேசன் சின்னதம்பி " என்றே கூப்பிடுவோம். சின்னதம்பியருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாழ்பாணத்து இயற்கை தந்த கள்ளை குடிப்பதில் அவர் ஒரு பெருங்குடிமகன். அதிலும் சின்னகுட்டியின் தவறணைக்குப் போய் சின்னக்குட்டியின் விசேட தயாரிப்பில் வந்த கள்ளை மணலில் குந்தி இருந்து பனை ஓலைப் பிளாவில் குடித்தால் தான் அவருக்கு குடித்த கள்ளு பத்தியப்படும். இந்த இடத்தில் மட்டும் சின்னத்தம்பியர் தனது சாதித் தடிப்பை தளர்த்தி இருந்தார். அவர் தவறணைக்குப் போனாலே அங்கு இருப்பவர்களின் தோள்களில் இருந்த துண்டுகள் தானாகவே கமக்கட்டுக்குள் போய் விடும்.

சந்திரவதனா அக்கா இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டா. சின்னதம்பியரிடம் புறோக்கர் கனகசபை குடுக்காத சாதக்குறிப்புகள் இல்லை. சின்னத்தம்பியர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வரு கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார். கனகசபையும் சின்னதம்பியரை விடுவதாக இல்லை .இப்பொழுது எல்லாம் சந்திரவதனா அக்கா முன்பு போல வெளியே வருவதில்லை. வீட்டினுள் இருந்த பூந்தோட்டமே அவாவின் உலகமாக இருந்தது. காலம் தனது கடமையை விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய அவாவின் கன்னக்கதுப்புகளில் இலேசாக இள நரை எட்டிப்பார்க்கத் தொடங்கியது. எனக்கு இப்பொழுது சந்திர வதனா அக்காவைப் பற்றி ஒரே கவலையாக இருந்தது. சின்னதம்பியரில் அளவு கடந்த வெறுப்பே எனக்கு மிஞ்சி இருந்தது. சந்திரவதனாக்கா இப்பொழுது முதிர்கன்னியாகவே வந்துவிட்டா. யாருடனும் பெரிதளவில் கதைக்காது ஒருவித உறைநிலையில் சந்திரவதானாக்கா நடமாடிக்கொண்டு இருந்தா. நான் ஒரு நாள் பொறுக்காமல் அக்காவிடம் , " அப்பாவை நம்பினால் உங்களுக்கு கலியாணம் நடவாது . நான் உங்களை கலியாணம் செய்யிறன் அக்கா . வாங்கோ நாங்கள் விசுவமடு பக்கம் போய் இருப்பம் " . என்று சொல்ல , சந்திரவதனா அக்கா , " முளைச்சு மூண்டு இலை விடலை அதுக்குள்ளை கதையளை பார் . போய் ஒழுங்காய் படிக்கிற வேலையளை பார் . இனிமேல் பட்டு இப்படியான எண்ணங்களோடை இங்கை கால் அடி வைக்காதை". எண்டு செப்பல் பேச்சு பேசிவிட்டா . எனக்கு அக்காவில் கோபத்திற்குப் பதிலாக கழிவிரக்கமே தோன்றியது .

அந்த நிகழ்வுக்குப் பின்பு நான் சந்திரவதனாக்காவை சந்தித்து மாதங்கள் இரண்டுக்கும் மேலாகி விட்டன. ஒருநாள் மாலை நான் ரியூசன் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் இருந்த தவறணைக்கு முன்னால் சின்னதம்பியரும் புறோக்கர் கனகசபையும் கட்டிப்பிரண்டு கொண்டிருந்தார்கள். சின்னத்தம்பியர் வேட்டி அவிழ்வது தெரியாமல் நிறை வெறியில் கனகசபையை அடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயில் இருந்து தூசணம் துவள் பறந்தது. நான் சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரையும் பிடித்து விலக்கி விட்டேன். என்னைக் கண்டவுடன் சின்னதம்பியரிடம் வெண்டிறேசன் கதையள் கூடி விட்டன. « தம்பி……. இவன் கனகசபையன் என்ன துணிவிலை என்னட்டை ஐஞ்சு குடியாரிட்டை என்ரை மோளை குடு எண்டு கேட்டு வரலாம் ?? எங்கடை சாதி சனம் எங்கை அவங்கள் எங்கை ?? » என்று சின்னதம்பியரின் குரல் எகிறிப் பாய்ந்தது. நான் இருவரையும் சமாதானப்படுத்தி சின்னதம்பியரை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு போனேன். சந்திரவதனாக்காவுக்கு கதை முதலே போய் வாசலில் பத்திரகாளியாக நின்றிருந்தா. என்னை கண்டவுடன் அக்காவிற்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சின்னத்தம்பியர் தங்கள் குடும்ப மானத்தை வித்துதள்ளுவதாக மூக்கை சிந்தினா. என்னால் எந்தப்பதிலையும் சொல்ல முடியாமல் இருந்தது. அவாவை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒருநாள் உலக அதிசயமாக கனகசபை மூலம் சின்னத்தம்பியர் ஒரு சம்பந்ததை சந்திரவதனாக்கவுக்கு முற்றாகி இருந்தார். மாப்பிள்ளை கனடாவில் இருந்து வந்ததாய் ஊரில் கதை அடிபட்டது. சந்திரவதனா அக்கா நீண்டகாலத்துக்கு பின்னர் முகமலர்ச்சியுடன் வளைய வந்து கொண்டிருந்தா. இதுதான் கலியாணக்களையோ என்று மனதில் எண்ணி கொண்டேன். என்றுமே கடவுளை கும்பிடாத நான் அன்று மட்டும் சந்திரவதனாக்கா. இனியாவது சந்தோசமாக வாழ வேண்டும் என்று கும்பிட்டேன். சின்னத்தம்பியர் ஊரே மூக்கில் கை வைக்கும் படி கலியாண வீட்டை நடாத்தினார். அதில் அவரின் குடும்ப பெருமையே தூக்கலாக இருந்தது. காலம் என்ற கடவுளை நாங்கள் எங்கள் விருப்பத்துக்கு எதிர்பார்க்க காலத்தின் தீர்ப்போ எங்களுக்கு மாறாகவே சிலவேளைகளில் நடந்து விடுகின்றது. சந்திரவதனாக்காவின் வாழ்விலும் வஞ்சகத் தீர்ப்பே நடந்தது. யார்கண் பட்டதோ தெரியவில்லை கலியாணம் நடந்தஅன்று இரவே மாப்பிள்ளை யாரிடமும் சொல்லாமல் ஓடிவிட்டார். சந்திதிரவதனாக்கா இடிந்து போய் விட்டா. காலப்போக்கில் இதையே நினைத்து சின்னதம்பியரும் போய் சேர்ந்துவிட தனித்து விடப்பட்ட சந்திரவதனாக்கவை பின்பு ஒரு நாள் நகைகளுக்காக ஒருசிலர் கோடாலியால் கொத்தி கொலை செயப்பட்டது தனிக்கதை .
கோமகன் 
ஆக்காட்டி 

03 வைகாசி 2014 
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…