Thursday, August 28, 2014

வாடாமல்லிகை பாகம் 13
எங்களை தபால்பெட்டி இறக்கத்தில் இறக்கிவிட்டு இ போ சா பருத்தித்துறையை நோக்கி நகர்ந்தது. மாலை நேரம் நெருங்கியதால் வெய்யிலின் கொடுமை தணிந்திருந்தது. நான் வீட்டினுள் நுழைந்ததும் நேரடியாக கிணற்றடிக்கு சென்றேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை அள்ளி அள்ளி உடலில் ஊற்றினேன். உடம்பில் ஒட்டியிருந்த புழுதியும் வியர்வைப் பிசுபிசுப்பும் ஒரேசேர சவர்க்கார நுரையில் கறுப்பாகக் கரைந்தன. குளிர்ந்த நீர் உடலில் பட்டதும் உடலும் மனமும் ஒரேசேரப் புத்துணர்வாயின. மனைவி தந்த தேநீரை எடுத்துக்கொண்டு முற்றத்து மாமர நிழலில் அமர்ந்துகொண்டேன். மாமரத்தில் புலுனிகள் கலகலத்துக் கொண்டிருந்ததன. தூரத்தே இருந்து வந்த ஒற்றைக்குயிலின் கூவலில் என்மனதைப்போலவே ஒருவித சோகம் இழையோடியிருந்ததது. வானம் மீண்டும் சிவக்கத் தொடங்கியிருந்தது.ஒழுங்கையினால் மேச்சலுக்குப் போன மாடுகள் பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் தனக்கு பின்னேரப்பூசை ஆரம்பமாகப் போவதை கோயில் மணிமூலம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ பிள்ளையாரிடம் போய் குசலம் விசாரிக்கத் தோன்றவில்லை. தனது தம்பிக்காக ஒரு பெண்ணிடம் தூது சென்ற இந்தப் பிள்ளையார் இங்கிருந்த தம்பிகளும் தங்கைகளும் அப்பா அம்மாக்களும் தங்கள் உயிரைக்காத்தருள கூக்குரல் இட்ட பொழுது ஏனோ மறந்து போய் விட்டார் .தனக்குத் தனக்குத்தான் என்று வந்தால்தான் இந்த கடவுள்களும் செயலில் இறங்குவார்களோ ?? என்று என்மனம் என்னிடம் தத்துவ விசாரணை செய்துகொண்டிருந்ததது. தங்கை தயாரித்த கல்லு ரொட்டியையும் சம்பலையும் சாப்பிட்டு விட்டு படுக்கப் போய் விட்டேன். யாழ்ப்பாணப் பயணம் தந்த உடல் மனக் களைப்பு சயனசுகத்தை எனக்கு இலகுவாகவே தந்தது.

ஆழ்நிலைத் தூக்கம் என்னையும் மனதையும் ஒரேசேரக் கிளரச் செய்தது. கனவில் அம்மா அருகில் இருந்து பல கதைகள் எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தா. காட்சியமைப்புகள் யாவுமே கலரில் ஓடின. அதிகாலை சேவலின் முதல் கூவல் கனவில் பயணித்த என்னை விழிப்பு நிலைக்கு கொண்டுவந்தது .என்னருகே என்னை அணைத்துக்கொண்டு படுத்திருந்த மனைவி நித்திரையில் சிரிதுக்கொண்டிருந்தாள். அவளும் எதோ கனவுலகில் பயணம் செய்வதாகவே எனக்குப் பட்டது. அவளைக் குழப்பாது மெதுவாக எழுந்து கையில் சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டுப் படலையடியில் நின்றேன். ஒழுங்கை அமைதியாக இருந்தது. மெதுவாக வீசிய காற்றில் மாமரத்து இலைகள் சலசலத்துக் கதை பேசின. லைட்டர் எனது சிகரட் முனையை சிவப்பாக்கியது. புகையை இழுத்தவாறே அன்று நான் செய்யவேண்டியதை மனதில் பட்டியல் இட்டேன். நாங்கள் இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. முதலில் பருத்தித்துறைக்கு போகவேண்டும் என்று முடிவு செய்தேன். நாங்கள் மீண்டும் விமானம் ஏற ஒரு கிழமையே இருந்தது. அதற்குள் பல வேலைகளை பார்க்க வேண்டும். முக்கியமாக யோ கர்ணனையும் கருணாகரனையும் பார்க்க வேண்டும் என்று திட்டங்களைப் போட்டுக்கொண்டிருந்தேன். காலை ஆறு மணியாகி விட்டிருந்ததது. நான் முதல் ஆளாக குளித்து விட்டு தங்கைச்சி போட்டுத்தந்த கோப்பியை குடித்துக்கொண்டு பருத்தித்துறைக்கு வெளிக்கிடதயாரானேன்.

நாங்கள் தபால் பெட்டியடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்றபொழுது பருத்தித்துறை வீதி சோம்பலுடன் விழித்துகொண்டிருந்ததது. பஸ் நிலையத்திற்கு முன்னே இருந்த காத்தார் வீடு இல்லாமல் போய் இப்பொழுது வேறு யாரோ வீடு கட்டிக்கொண்டிருந்தார்கள். காத்தார் வீடு அப்பொழுது எனது கனவு வீட்டாகவே இருந்ததது. பருத்தித்துறை வீதியில் இருந்து வீட்டிற்கு உள்ளே போக அதிக தூரம் முட்டை வடிவில் இரண்டு பக்கமும் தார்வீதி போடப்பட்டு, போர்ட்டிக்கோவுடன் கூடிய விசாலமான நாற்சார வீடு அது. உள்ளே இருந்த தார்வீதியில் இரண்டு பக்கமுமே பூக்கண்டுகளால் நிரம்பி வழிந்து உள்ளே ஒரு மினி பூந்தோட்டமே இருக்கும். சிறுவயதில் இந்தப் பூந்தோட்டங்களை பார்க்கவென்றே இந்த வீட்டிற்கு அடிக்கடி போய்வருவேன். இப்பொழுது அந்த வீடு இல்லை .எங்கள் வாழ்க்கையைப் போலவே கோப்பாயும் மாற்றங்களை கண்டுவிட்டது. என்னில் மாற்றங்களை அனுமதித்த நான் கோப்பாய் மட்டும் மாறாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று தெரிந்தும் ஞாபகவீதியில் பறக்கவே என்மனம் ஆலாய் பறந்தது.

தூரத்தே இ .போ .ச .பஸ் வருவது தெரிந்தது .எங்களைக்கண்டதும் அது தனது வேகதைக்குறைத்தது. அதிகாலை வேளையாகையால் அந்த பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கவில்லை. எங்களை ஏற்றிக்கொண்டு பஸ் பருத்தித்துறையை நோக்கி வேகமெடுத்தது .என்கண்கள் வெளியே காட்சிகளை சுவார்சியத்துடன் பார்த்துக்கொண்டு வந்தன. பூதர் மடமும் அருகிலேயே இருந்த பெரிய ஆலமரமும் கால ஓட்டத்தில் தங்களைத் தொலைத்து விட்டிருந்தன. முன்பு இந்த மடத்திலும் ஆலமர நிழலிலும் பெரிசுகள் வம்பளந்து கொண்டிருப்பார்கள் இப்பொழுது அந்த இடம் வெட்டை வெளியாக இருந்ததது. மெதுமெதுவாக கோப்பாய் எனது கண்களில் இருந்து மறைந்துகொண்டிருந்ததது. இப்பொழுது நீர்வேலி தனது காட்சிகளை என் கண்கள் முன்னே விரித்தது .வாழை மரத்தோட்டங்களும், வெங்காயத்தோட்டங்களும் இரண்டு பக்கங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. கிளாஸ் பக்ரறியும் காலவோட்டத்தில் தன்னைத் தொலைந்து விட்டிருந்தது. இதனை நடாத்திய சேவியர் பல ஏழைகளின் வீடுகளில் அடுப்பெரிய வைத்தவர். காலம் அவரையும் தொலைத்து விட்டிருந்தது. சனங்கள் தொடர்ந்தும் இந்த கடவுள்கள் தங்களை காத்துக்கொண்டிருக்கின்றார் என்று நம்புகின்றபடியால் கந்தசுவாமி கோவிலும் வாய்க்கால் தரவை பிள்ளையார் கோயிலும் அப்படியே இருந்தன .நான் ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டேன். காலம் முக்கால் மணித்துளிகளை விழுங்கி பஸ்ஸை பருத்தித்துறை பஸ்நிலையத்தில் நிறுத்தியது .

பஸ்நிலையத்தில் காலை சூரியன் என்னை வியர்க்க வைத்தது. நாங்கள் காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்குள் நுழைந்தோம். முன்பு பருத்தித்துறை சந்தைப்பகுதியும் பஸ் ஸ்ராண்டும் பலகாலமாக சனங்கள் நடமாடமற்ற சூனியப் பிரதேசமாகவே இருந்தது .பல அழிவுகளையும் இரத்தக் குளியல்களையும் தினசரி நிகழ்வுகளாக கண்ட இடமாகும். இப்பொழுது இந்த இடம் மீண்டும் நிழல் கண்காணிப்பில் மக்கள் பாவனைக்கு வந்திருக்கின்றது. சனங்கள் இப்பொழுது இந்த இடத்தில் பரபரத்தாலும் அவர்கள் மனதில் ஐந்தாவது பரம்பரையில் வந்த மன்னர்கள் விதைத்த கோரவடுக்கள் மறையாதே காணப்படுகின்றன. சந்தையில் மரக்கறிகளில் மண்ணின் வாசம் அப்படியே இருந்ததது. சிலதில் சிவப்பு மண்ணும், கறுப்பு மண்ணும் ஒட்டிக்கொண்டிருந்தன. மரக்கறிகளை பைக்கட்டுகளில் பார்த்துப் பழகிய எனக்கு இவை புதிதாகவே இருந்ததது. கீரைகளில் பலவிதமான கீரைகள் நீர் சொட்டச் சொட்ட இருந்தன. கீரைகளில் இருந்து வழிந்து கொண்டிருந்த நீர்த்திவலைகளில் சூரிய ஒழி பட்டுத்தெறித்தது .அதன் வேர்களில் இருந்த மண் அது உடனடியாக பிடுங்கப்பட்டது என்பதை சொல்லியது. எனது தெரிவு கீரைகளாகவே இருந்ததது. மாமிக்கும் மாமாவுக்கும் தீயல் பிடிக்கும் என்பதால் நெத்தலி மீன் வாங்க மீன் சந்தைக்குள் நுழைந்தோம் .அங்கு மீனவர்களின் உழைப்பு நன்றாகவே தெரிந்தது .மீன்கள் கும்பி கும்பியாக குவிந்து கிடந்தன. அந்தக் காலை சூரிய வெளிச்சத்தில் எல்லாமே வெள்ளியாக மினுங்கின. அவைகளில் மீனவர்களின் வியர்வை வாசம் இருந்ததால் அவைகளின் இயற்கை வாசம் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. அவற்றையும் வாங்கிகொண்டு நாங்கள் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

காலை வேளை வியர்த்து விறுவிறுக்க ஒழுங்கையில் வரும் தெரிந்தவர்களின் தலையசைப்புக்கு தலையசைத்தவாறே நடப்பது எங்களுக்கு பிடித்தமானதாகவே இருந்தது .என்னதான் வெளிநாடு எங்களைக் குளிப்பாட்டி வைத்திருந்தாலும், சொந்த மண்ணில் இனசனங்களின் கள்ளங்கபடமற்ற முகத்தில் முழித்து புழுதி தோயத் தோய மண் ஒழுங்கையில் நடப்பதில் உள்ள சுகம் எங்களைக் குளிப்பாட்டி வைத்திருந்த நாட்டில் கிடைக்கவில்லை .ஏனெனில் அங்கு எமது இருப்பு எப்பொழுதுமே இலைமேல் தண்ணி போல் இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் இருவரும் பலவிடயங்களைக் கதைத்தவாறே எமது வீட்டுப் படலையை நெருங்கி விட்டிருந்தோம். எம்மைக்கண்ட சந்தோசத்தில் வீட்டு நாயும் பூனையும் எங்கள் கால்களில் தங்கள் வால்களால் வருடின. எங்களைக் காணாததால் பூக்கண்டுகள் எல்லாமே தண்ணீர் இல்லாது வாடிப்போய் இருந்தன. நான் தண்ணீர் விடுவதற்கு தொட்டியில் மோட்டாரால் தண்ணியை நிரப்பினேன். தொட்டியில் நிரம்பிய நீர் வாய்க்கால் வழியாக ஓடி வாழைப் பாத்திகளுக்கு சென்றது. வாய்க்காலில் வரிசைகட்டி ஊர்ந்து சென்று கொண்டிருந்த கட்டெறும்புகளும் சிவப்பு எறும்புகளும் தண்ணீரைக்கண்டவுடன் வாய்க்காலின் மேல்ப்பக்கதுக்கு ஓடின .சில தங்களைக் குழப்பிய கோபத்தில் எனது காலைக் கடித்தன. அந்த இடைப்பட்ட நேரத்தில் விளக்கு மாற்றால் முற்றத்தை கூட்டினேன். இரண்டுநாட்களாக கூட்டாததால் கணிசமான குப்பைகள் சேர்ந்திருந்தன. குப்பையுடன் புழுதியும் சேர்ந்து கிளம்பி என் மூக்கை அடைத்தது. நான் தொட்டியில் நிரம்பிய தண்ணியை வாளியால் நிரப்பி பூக்கண்டுகளுக்கு தண்ணீரை விடத் தொடங்கினேன். காய்ந்து கிடந்த மண் தீராத்தாகத்துடன் தண்ணீரை உள்ளே இழுத்தது. நான் இலைகளிலும் படுமாறு தண்ணீரை ஊற்றியதால் இலைகளில் இருந்த புழுதிகள் எல்லாம் கரைந்தோடி பச்சைப்பசேலென்று பூக்கண்டுகள் புத்துயிர் பெற்றன. சூரிய வெளிச்சத்தில் அவை வர்ணஜாலம் காட்டின. நான் முற்றத்துக்கும் தண்ணீர் தெளித்து முடிய மனைவி தேநீர் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

களைத்த உடலுக்கு அந்த தேநீர் தேவையாகவே இருந்ததது. தேநீரில் இருந்து கிளம்பிய மெதுவான ஆவி என்னை மயக்க நிலைக்குக் கொண்டு சென்றது. ஒவ்வொரு முறையும் நான் தேநீர் குடிக்கும்பொழுதும் இந்தப் பரவசநிலையை அடைந்திருக்கின்றேன் .இதற்கு தேநீரில் இருந்து வரும் ஆவியா இல்லை தேநீரின் சுவையா என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை .தேநீரைக் குடித்தவாறே நீரில் குளித்த பூக்கண்டுகளை வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டு நின்றேன். மாமியின் தோசையும் இடிசம்பாலும் தொண்டைக்குள் வழுக்கியது. காலை உணவை முடித்தபின் சிகரட்டை கையில் எடுத்துக்கொண்டு வீட்டின் முன்னால் நின்ற பூவரச மரத்து நிழலில் நின்று கொண்டு யோ கர்ணனின் தொலைபேசி இலக்கத்தை எனது தொலைபேசியில் தடவினேன். இடிசம்பலின் உறைப்புக்கு சிகரட் நாக்கிற்கு இதமாகவே இருந்ததது.சிறிதுநேர இடைவெளியின் பின்பு லைனில் கர்ணனது குரல் கேட்டது .நாங்கள் அருகிலேயே இருப்பதால் பின்னேரமே சந்திப்போம் என்று எங்கள் சந்திப்பை உறுதி செய்தார் யோ கர்ணன். கர்ணனின் எழுத்துக்களில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். எழுத்தாளர்கள் என்றாலே ஒருவிதமான ஞானக்கிறுக்கு அவர்களிடம் காணப்படும். இணையத்தின் மூலம் அறிமுகமான யோ கர்ணனும் கருணாகரனும் எப்படி இருப்பார்களோ ? என்று எனக்குப் பதற்றமாக இருந்ததது . பருத்தித்துறை பஸ்நிலையத்தில் மாலையிலும் வெய்யில் சுட்டெரித்தது. யாழ்ப்பாணம் செல்லும் பஸ் செல்வதற்கு இன்னும் அரைமணிகள் இருந்தன. நான் இடம் பார்ப்பதற்கு வசதியாக முன்பக்கமாக இருந்துகொண்டேன். பஸ்நிலையத்தில் பலர் பலவிதமான மனநிலைகளில் இருந்தார்கள். தனியார் மினிபஸ்கள் மக்களை தங்களிடம் வருமாறு கூவிக்கொண்டிருந்தன. பயணிகள் சேர்ந்ததும் ஒருவாறு பஸ் யாழ்நகரை நோக்கிப் புறப்பட்டது .கொண்டக்ரர் என்னருகே வர காசு கைமாறியது .நான் நெல்லியடியில் இறங்க ரிக்கெற் எனது கைக்கு வந்தது. பஸ் மந்திகை சந்தியை கடந்து நெல்லியடியை அண்மித்துக் கொண்டிருந்ததது. பஸ் நெல்லியடி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பொழுது நான் பஸ்ஸில் இருந்து இறங்கிகொண்டேன் .முதன் முதல் ஒருவருடைய வீட்டுக்கு போகும் பொழுது ஏதாவது வாங்கிக்கொண்டுபோவது யாழ்ப்பாணத்தவரது பண்பாடு என்பதால் அருகில் இருந்த கடை ஒன்றில் மஞ்சி பிஸ்கெட் பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டேன். நான் யோ கர்ணனுக்கு போன் செய்துவிட்டு காத்திருக்கத் தொடங்கினேன். பருத்தித்துறை வீதியில் எதிரும் புதிருமாக வாகனங்கள் கார்பெட் வீதியில் வழுக்கின. நான் சிகரெட்டை பற்றியவாறே அவற்றை வேடிக்கை பார்த்தேன்.

விரைந்து செல்லும் வாகனங்களில் மனம் லயிக்க மறுத்து ஞாபக வீதிகளிலேயே ஓடவேண்டும் என்று அடம் பிடித்தது .இந்த பொலிஸ் நிலையமும் அதை சுற்றிய இடமும் எவ்வளவு பாடு பட்டிருக்கும் ? நாளும் பொழுதும் ரதங்களை சுவைத்து உண்டு கொழுத்த இடம் இந்த மத்திய மகாவித்தியாலயத்தில் தானே இயக்கம் புதிய பாதையை திறந்தது. கூட்டுப்படை முகாமை அழிக்க எத்தனை நாள் காத்திருப்புகள் ? கூட்டுத்தயாரிப்புகள். சக்கையை அடைந்து கொண்டு போனவனின் மனம் எதை நினைத்திருக்கும் ? இன்று எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு இந்த இடம் தன் முகத்தில் புதிய அரிதாரம் பூசிக்கொண்டிருப்பது எனக்கு வியப்பையும், அயர்ச்சியையும் தந்து கொண்டிருந்ததது. அதே நேரம் நீ மட்டும் சுகமாக இருந்து கொண்டு சனங்களை தொடர்ந்தும் அழ சொல்கின்றாயா ?என்று என் மனம் என்னுடன் கொழுத்தாடு பிடித்துக்கொண்டிருந்தது. என் ஞாபகவீதி ஓட்டத்தை என்னருகே மெதுவாக வந்து நின்ற ஸ்கூட்டி நிஜத்துக்கு கொண்டுவந்தது. ஸ்கூட்டியில் யோ கர்ணன் இருந்தார். பரஸ்பர விசாரிப்புகளின் பின் அவரின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். சுற்றிவர கிடுகு வேலியும், வீட்டின் முன்பு மாமரமும் வாழைகளும் என்று அவரின் வீடு குளிர்ச்சியாகவே. இருந்தது கர்ணனின் மெலிந்த நெடுநெடுவென்ற தோற்றம் எனக்கு எழுத்தாளர் சுஜாத்தாவையே நினைவுக்கு கொண்டு வந்தது. என்னை எதுவித வித்தியாசமும் பாராது என்னுடன் பழகிய அவரது குணவியல்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாங்கள் கதைதுக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எமது கதையை எனது கைத்தொலைபேசி குலைத்தது .அதில் என்னை தனது மாமி பார்க்க வந்திருப்பதாக மனைவி சொன்னா. யோ கர்ணன், நான் போகும்பொழுது தனது "கொலம்பஸின் வரைபடங்களும்"," சேகுவாரா இருந்த வீடும் " கையொப்பமிட்டு எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் .தனது நூல் வெளியீட்டு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார். அதில் தான் நிலாந்தனை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். நான் மனம் நிறைந்த சந்தோசத்துடன் வீடு திரும்பினேன்.

பஸ் பருத்தித்துறையை அடைய இரவு ஏழுமணிக்கு மேலாகி விட்டது. வீட்டிற்கு வந்த மாமியை காக்க வைக்கின்றேனே என்ற அந்தரத்துடன் எனது நடையை மாரியம்மன் கோயில் ஒழுங்கையூடாக வேகப்படுத்தினேன் .அப்பத்தட்டிகளில் இருந்து அப்பம் சுடும் வாசம் மூக்கை துளைத்தது. வந்த வாசத்தால் எனது கால்கள் வேகத்தைக் குறைத்தாலும் மனதைக்கட்டுப்படுத்தி வேகத்தை அதிகரித்தேன். ஆவோலைபிள்ளையார் கோவலடியை நான் நெருங்கும் பொழுது, நிறங்களுக்கிடையான வேறுபாட்டால் கருமை படர்ந்திருந்ததது. நட்சதிரங்களின் ஒளியில் ஒழுங்கை ஓரளவு தெரிந்தது .நான் வீட்டை அடையும் பொழுது மாமி எனக்காக எள்ளுப்பாகுவுடன் காத்திருந்தா. நான் அவாவுடன் நாலு வார்த்தைகள் கதைத்து விட்டு குளிக்கப் போனேன். நடந்து வந்ததால் எனது உடுப்புகள் யாவுமே வியர்வையால் தொப்பலாகி இருந்தன. வெக்கையால் சூடாகி இருந்த உடம்புக்கு குளிர்ச்சியான கிணற்று நீர் இதமாகவே இருந்தது. அதுவும் கப்பியால் அள்ளி அள்ளிக்குளிக்கும் போதுவந்த சுகம், எனக்குப் புலத்தில் ஷவரில் குளிக்கும் பொழுது கிடைக்கவில்லை .ஒருவேளை இந்த குறுக்குமறுக்காகப் பாயும் இந்த குரங்கு மனம்தான் காரணமோ என்று என்று என்மனம் ஐயப்பட்டு என்னைப் பார்த்தது. நான் குளித்து முடிந்து வரும் பொழுது மாமி வீட்டில் இருக்கவில்லை. நாங்கள் போகமுன்பு தான் மீண்டும் வருவதாக சொல்லிச் சென்றதாக மனைவி சொன்னா. 


மாதுளம் பழத்துடன் அவித்த மரவள்ளிக்கிழங்கும் சம்பலும் இரவுச்சாப்பாடாக இருந்தன. எனக்குப் பக்கத்தில் இருந்து மாமி மாதுளம் பழத்தை உடைத்துத் தந்து கொண்டிருந்தா. எனக்கு அவா அப்படிச் செய்தது பெரிய அந்தரமாக இருந்தது. புலத்தில் எனது கைகளால் எல்லாம் செய்து பழக்கப்பட்ட எனக்கு,மாமியின் உபசரிப்பு ஒருவித அந்தரத்தை ஏற்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. நான் ஏதாவது சொன்னால் "சும்மா இருங்கோ" என்று எனது வாயை அடைத்து விடுவா என்பதால் நான் பேசாது சாப்பாட்டை தொடர்ந்தேன். பக்கத்தில் நாய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. மாமி மாலுக்குச் சென்றநேரம் பார்த்து ஒரு அவித்த மரவள்ளிக்கிழங்கை நாய்க்குத் தள்ளி விட்டேன். அது எனது காலடியில் இருந்து எனது காலையும் நக்கி மரவள்ளிக்கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதன் வழுவழுப்பான நாக்கு எனக்கு கூச்சத்தையே ஏற்படுத்தியது .சாப்பாடு முடிந்ததும் மரவள்ளிக்கிழங்கு எனக்கு மொய்ப்பைத் தந்ததால் அன்றைய இரவு நித்திரை இலகுவில் வசப்பட்டது.

அடுத்தநாள் காலமை வழமை போலவே மந்திகைச்சந்திக்கு போய் பால் வாங்கி விட்டு உதயன் பத்திரிகையும், சிகரட் பெட்டியுடனும் வியர்த்து விறுவிறுக்க நடந்து வந்து கொண்டிருந்தேன். வரும் பொழுது "இன்று வல்வெட்டித்துறைக்குப் போனால் என்ன" என்று எனது மனம் பவ்வியமாக ஒரு கோரிக்கையை வைத்தது .அதன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே முதலாம் கட்டை சந்தியில் வேகமாக திரும்பினேன். தம்பசிட்டி இந்து மகளிர் கல்லூரி,மகளிர் அணிவகுப்பால் திணறியது. நான் எல்லோரையும் விடுப்பு பார்த்தவாறே வீடு வந்து சேர்ந்தேன். உதயன் பேப்பரை கோப்பியுடன் மேய்ந்து விட்டு பரபரவென்று நான் காலையில் செய்யவேண்டியதை செய்துகொண்டிருந்தேன். எனது கைபட்டு பூக்கண்டுகழும் முத்தமும் புத்துணர்ச்சி பெற்றன.நான் தெளித்த நீரால் புழுதி வாசம் மூக்கை அடைத்தது. காலை உணவை உண்டு விட்டு காலை ஒன்பது மணிபோல பண்டாரி அம்மன்கோயிலடியால் நடந்து வந்து தம்பசிட்டி பள்ளிக்கூடத்துக்கு முன்னால் உள்ள பஸ் நிலையத்தில் 751 க்காக காத்திருக்கத் தொடங்கினேன்.

தொடரும்

கோமகன்

28 ஆவணி 2014


Friday, August 22, 2014

மனமே மலர்க 20


அவரவர் பாடு அவரவர்க்கு.

ஒரு பூனை ஒரு நாயிடம் சொன்னது,''நண்பா,நீ முழு மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்.தொடர்ந்து நீ அவ்வாறு செய்தால் ஒரு நான் இறைவன் உனக்கு அருள் புரிவார்.இதில்  சந்தேகத்திற்கே இடமில்லை.இறைவனின் அருட்பார்வை உன் மீது பட்டுவிட்டால் போதும்.வானிலிருந்து எலிகள் மழையாய்ப் பொழியும்.நீ விரும்பும் அளவுக்கு அள்ளியள்ளி உண்ணலாம். ''இதைக் கேட்ட நாய்,விழுந்து விழுந்து சிரித்தது.அது பூனையிடம் சொன்னது, ''ஏ,முட்டாள் பூனையே,எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்து விட்டாயா?என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்,'மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் எலி மழை பொழியாது,எலும்பு மழை தான் பொழியும்.அதை நாம் ஆசை தீரக் கடித்துத் தின்று மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.''

கொல்லு அவனை....

ரோமாபுரியில் சீசர் வஞ்சகர்களால் கொல்லப்பட்டார்.எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்.சீசர் கொலைக்கு உடந்தையானவர்கள் என்று யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்பட்டனர்.சீசரின் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாய் வெறியோடு அலைந்தனர்.அப்போது நிலைமையின் தீவிரம் தெரியாது,சின்னா என்பவன் தனக்குள்  ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் போனான்.கும்பலில் ஒருவன் கத்தினான்,''அதோ போகிறானே சின்னா,அவன் எதிரிகளின் ஆள்.அவனைக் கொல்லுங்கள்,''உடனே கும்பல் அவனை சூழ்ந்து கொண்டது.எல்லோரும் அவனைத் தாக்க முற்படுகையில் சின்னா சப்தம் போட்டு,''ஐயோ,நான்,நீங்கள் நினைக்கும் சின்னா அல்ல.நான் கவிஞன் சின்னா..''என்றான்.அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது,''மோசமான கவிதைகள் எழுதி எல்லோரையும் கொல்லும் அந்த சின்னாவா நீ? நண்பர்களே,இவன் கவிதைக்காகவே இவனைக் கொல்லலாம்.கொல்லுங்கடா இந்த சின்னாவை.''

பயன்

ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.அதன் பின் அந்த ஓட்டினால் எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் ஓட்டின் நோக்கம் நிறைவேறிவிட்டது.ஒரு செடியில் விதை முளைத்து வரும்போது முளையின் இரு புறமும் பருப்புகள் இருக்கும்.செடி வளரத் தேவையான சத்துக்கள் அம்முளையில் அடங்கியிருக்கிறது.செடி வளர வளர பருப்புகள் இற்றுப்போய் விடும்.அதன் பயன் முடிந்துவிட்டது.

சூரியனும் சந்திரனும் ஒளியை வீசி உலகுக்கே பயன் தருகின்றன.ஆனால் அவை எந்த நோக்கத்துடனும் செயல் படுவதில்லை.அதனாலேயே அவை நிலைத்து நிற்கின்றன.நோக்கம் எதுவும் இல்லாத உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும்.தாய் குழந்தையின் மீது செலுத்தும் அன்பிற்கு நோக்கம் எதுவும் கிடையாது.அதனால்தான் உயிருள்ளவரை அந்த அன்பு நிலைத்திருக்கிறது.கடவுள் எந்த நோக்கத்துடன் உலகைப் படைத்தார்.ஒரு நோக்கமும் கிடையாது.அது ஒரு விளையாட்டு.அதனால் தான் அதனை லீலை என்கிறார்கள்.
ஞானிகளுக்கு வாழ்வே ஒரு விளையாட்டு.அவர்கள் எந்த நோக்கமும் கொள்வதில்லை.எந்த வித பயனும் எதிர்பார்ப்பதில்லை.

ஆசை 

ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. .ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை.ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை.ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை.கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம்,வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும்.தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும் ஆசை நிறைவேறுமா,நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப்  பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள். காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது.அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும். நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா?அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம்  அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும்.சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும். இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள்.சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன.

பிரச்சினைக்குத்தீர்வு... 

பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வது விவேகம் அல்ல.பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கூடும் பல கூட்டங்கள் துன்பத்தில் முடிந்துள்ளன. உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லையென்றால் நீங்கள் பிறருக்குப் பிரச்சினையை உண்டாக்குவீர்கள்.ஏதாவது ஒரு பிரச்சினை உங்கள் கையில் இருந்தால்தான் உங்கள் மனம் ஒருமுகப்படும்.எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் நீங்கள் மற்றவர்களுக்குப் பிரச்சினை ஆகி விடுவீர்கள். எனவே பிறருக்குப் பிரச்சினையாக இருப்பதை விட நாம் ஒரு பிரச்சினையோடு  இருப்பது நல்லது.

சலிப்போடு இருந்தால் உங்களை நீங்களே சாந்தப் படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே  திருப்திப் படுத்திக் கொள்ளுங்கள்.இன்னொருவர் உங்களை சாந்தப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது நீங்கள் தெளிவாயில்லை என்பதன் அடையாளம்.இதுதான் அறியாமையின் வேர்.எப்போதும் உற்சாகத்துடன் இருங்கள்.

குறை கூறுகிற முகத்துடன் தெய்வீக அன்பைப் பெறுதல் இயலாதது.அது முன்னுணர்வு இல்லாத மனதின் அடையாளம்.குறை கூற வேண்டும் என்றால் ஆண்டவனிடம்  கூறுங்கள்.ஏனெனில் அவர் காதுகளை மூடிக் கொண்டுள்ளார்.

இன்னொருவர்க்குக் கீழ் வேலை செய்ய மறுப்பது பலவீனத்தின் அடையாளம்.தன்  பலம் தெரிந்தவர்கள் யாருக்குக் கீழ் வேலை செய்தாலும் அதை வசதிக் குறைவாக எண்ண  மாட்டார்கள்.பலவீனமானவர்களும் ஊக்கம் குன்றியவர்களும் தான் இன்னொருவருக்குக் கீழ் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

பின்வாங்குவது தவறா? 
 
பல விசயங்களில்  நாம் ஆர்வமாக ஈடுபடுகின்றோம்.கொஞ்ச தூரம் போனதும்தான்,''ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!ஜகா வாங்க வேண்டியதுதானா?''என்கிற கலவர நினைப்பு வரும்.ஆனால் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நினைப்பும் சேர்ந்தே வரும்.இவை நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தி விட்டுப் போகும்.அதாவது,'என்ன ஆனாலும் சரி,ஒரு கை பார்த்து விடுவது,''என்று இறங்கி,முகத்தைப் பெயர்த்துக் கொள்வார்கள்.இது புத்திசாலிக்கு அழகல்ல.எவ்வளவோ விசயங்களை ஆர்வக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்,அப்போது பிரச்சினை பூதாகரமாகத் தெரிவதில்லை.இறங்க இறங்கத்தான் ஆழம் மட்டுப் படுகிறது.சுட்டுப் பொசுங்கிய பின்தான்  சூடு புலப்படுகிறது.இது பின் வாங்க வேண்டிய தருணம்!அதற்காக எந்த விசயத்தில் தடங்கல் வந்தாலும் உடனே உதறி விட்டு ஓடி விட வேண்டும் என்று பொருள் அல்ல.கடைசி வரை போராட வேண்டியது தான்.ஆனால் நம்பிக்கை ஒளி கொஞ்சம் கூடத் தெரியாத பிரச்னை எண்ணும் மலை முகட்டில்,போலியான கௌரவத்திற்காகவும்,யார் என்ன நினைப்பார்களோ என்ற அர்த்தமற்ற வாதத்திற்காகவும் நடந்து,நடந்து அதல பாதாளத்தில் விழுந்து விடக் கூடாது.சொல்லியும் கேளாமல் சுயமாயும் புரியாமல்,'எனக்கு நானே குழி தோண்டிக் கொள்கிறேன்,''என்ற வரட்டுத் தனத்திற்கு நாம் ஒரு போதும் விலை போய் விடக் கூடாது.இடையில் பின் வாங்குவது அவமானம் எனத் தயங்குபவர்கள் முழுப் பாதையும் கடந்தபின் வாங்கப் போவது அதை விடப் பெரிய அவமானம் என்பதை உணர வேண்டும்.பாதித் தவறை செய்து திருத்திக் கொண்டவனை மன்னிக்க உலகம் தயாராக இருக்கிறது.ஆனால் முழுத் தவறை செய்து விட்டால் சாமான்யமாய் மறக்காது;மன்னிக்கவும் செய்யாது.

நிச்சயமாகத் தவறு என்று தெரிந்து விட்டால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பின் வாங்குவதில் தவறேயில்லை!

தவமாய் தவமிருந்து....

முனிவர் ஒருவர் காட்டில் கடவுளை வேண்டி நீண்ட நாட்கள் தனது உடலை வருத்தி தவமிருந்தார்.கடவுளும் அவரது வேண்டுதலுக்கு இரங்கி நேரில் தோன்றினார்.''பக்தா,உன் பக்தியை மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும்?''என்று கேட்டார்.முனிவரும்  மிக்க மகிழ்வுடன்,''இறைவா,நான் நீரில் நடக்க வேண்டும்:நெருப்பு பட்டு என் உடல் அழியாதிருக்க வேண்டும்,'' என்று கேட்டார்.இறைவனும் அவர் வேண்டிய வரத்தை அளித்து விட்டு மறைந்தார்.முனிவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.தனது வரத்தை சோதித்துப் பார்க்க எண்ணி ஆற்றிற்கு  சென்று நீரின் மீது காலை வைத்தார்.அவர் கால் நீருக்குள் இறங்கவில்லை.அவருக்கு நீரில் நடப்பது மிக எளிதாக இருந்தது. எல்லோரும் அவரை ஆச்சரியத்துடன் வணங்கினர்.மறுநாள் காலை அவர் குளித்துவிட்டு வழக்கமான பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட எண்ணி ஆற்றிற்கு சென்றார்.குளிப்பதற்கு ஆற்றினுள் இறங்கினார்.அந்தோ பரிதாபம்!அவரால் நீரில் நடக்கத்தான் முடிந்ததே ஒழிய அவரால் நீரில் இறங்கிக் குளிக்க முடியவில்லை.குளிக்காமல் பூஜையில் ஈடுபட முடியாது.அவருக்குப் பயம் வந்து விட்டது.குளிக்காததாலும் அதனால் பூஜைகள் செய்ய இயலாததாலும் தான் இதுவரை அடைந்திருந்த சக்திகள் அனைத்தையும் இழக்க நேரிடுமே என்ற அச்சத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.அவரது பிணத்தை எடுத்துச் சென்று அதற்குக்கொள்ளி வைக்க முயற்சிக்கையில் அந்த உடலில் தீப்பற்றவில்லை.அதனால் செய்வதறியாது அவரது உடலை அப்படியே விட்டு சென்றனர்.அவரது உடல் காக்கைக்கும் கழுகுக்கும் இரையானது.

நாம் ஆசைப்படுவதெல்லாம் நமக்கு தேவையானதாய் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.

நான் இங்கே...

ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை   சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றான். வரிசை மெதுவாக நகர்ந்தது.அதே சமயம் பணம் படைத்தவர்களும்,அதிகாரம் படைத்தவர்களும்,தனி வழியில் விரைவாக சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர்.தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான்.நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான்.அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது. அவன், ''கடவுளே!எத்தனை நாளாக சிரமப்பட்டு உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன் .இங்கு வந்தால் உன்னை தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்?என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத் தானே ஆதரிக்கிறாய்!அதோ பார்,அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்'' என்றான்.கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்,'' அடே,பைத்தியக்காரா,அவர்கள் எல்லாம் கல்லை வணங்கிச் செல்கிறார்கள்.இதோ,நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்!''

பலி

குயவன் ஒருவன் மண் பாண்டங்கள் செய்து கொண்டிருந்தான்.அவன் வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.அந்த வழியே துறவி ஒருவர் வந்தார்.துறவியை வணங்கி அந்தக் குயவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.பின் அவர் விடை பெறும்போது குயவன் சொன்னான், ''ஐயா,தயவு செய்து இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்லுங்கள்.இங்கு நாளை எங்கள்  குல  தெய்வத்தினை வணங்குகிறோம்.விழா சிறப்பாக இருக்கும்.விழாவில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டினை பலி  கொடுத்து பூஜை செய்யப் போகிறோம்.''துறவி சற்றும் எதிர்பாராத நிலையில்.குயவனின் பானை ஒன்றினை எடுத்து ஓங்கித் தரையில் அடித்து உடைத்தார்.பானை துண்டு துண்டாகச் சிதறியது.குயவன் அதிர்ச்சி அடைந்தான்.அவனால் பேசக் கூட முடியவில்லை.துறவிக்குப் பைத்தியம்பிடித்திருக்குமோ என்று அஞ்சினான். துறவி அவனைப் பார்த்து,''இந்த உடைந்த துண்டுகளை எடுத்துக் கொள்.அவை எல்லாம் உனக்குத்தான்.''என்றார்.குயவன்,''என் பானையை உடைத்து எனக்கே தருகிறீர்களா?''என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி,''கடவுள் படைத்த ஒரு உயிரைப் பலியிட்டு கடவுளுக்கே கொடுக்கப் போகிறேன் என்கிறாயே! அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றால்.இந்த உடைந்த துண்டுகளை நீ ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது?''என்று கேட்டார்.குயவன் பேச வழியின்றி வாயடைத்து நின்றான்.

நம்பிக்கை

துறவி ஒருவர் தினமும் யாருக்காவது உணவு அளித்துவிட்டுத்தான் உணவு அருந்துவார்.ஒருநாள் யாருமே வரவில்லை.சற்று தூரம் நடந்து சென்று வந்தால், யாராவது தென்படுவார்கள் என்று கருதி  நடந்தார்.அப்போது ஒருவர் எதிர்ப்படவே அவரை சாப்பிட அழைத்து வந்தார்.உணவு அருந்தும் முன் அவர்  பிரார்த்தனையில் அமர்ந்தார்.வந்தவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர் ஏன் பிரார்த்தனை செய்யவில்லை என்று கேட்டபோது அவர் ,''நான் தீவிர நாத்திகன். எனக்கு இந்த மாதிரி மூடத்தனங்களில் நம்பிக்கை இல்லை,'' என்றார்.துறவிக்குக் கோபம் வந்துவிட்டது.''உனக்கு உணவு அளிக்க முடியாது.வெளியே போ'' என்றார்.வந்தவர் ,''நானாக ஒன்றும் உணவு கேட்டு வரவில்லை.நீங்களே அழைத்து வந்துவிட்டு இப்போது வெளியே போகச் சொல்கிறீர்கள்.ஆனால் உணவுக்காக என் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.''என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.துறவியும் உணவு உண்ணாது பாதி  மயக்கத்தில் படுத்து உறங்கினார்.அப்போது கனவில் இறைவன் வந்தார்.அவர் ,''அவன் என் மீது நம்பிக்கை இல்லாதவன்.ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவனுக்கு நான் விடாது உணவு அளித்து வந்தேன்.ஒரே ஒரு நாள் உன்னிடம் அனுப்பியதில்,நீ அவனை பட்டினியாய்   அனுப்பி விட்டாயே? இப்போது நான் அவனுக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார். அலறி அடித்துக் கொண்டு எழுந்த துறவி வேகமாக சென்று அந்த நாத்திகனை சாப்பிட அழைத்தார்.திடீர் மாற்றத்திற்கு அவன் காரணம் கேட்டபோது துறவி சொன்னார்,''ஒரு ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று சொல்லத் தைரியம் தேவையில்லை.ஆனால் ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லத்தான் மிகுந்த மன உறுதியும் வைராக்கியமும் தேவை.எனவே நீங்கள் என்னை விட உயர்ந்தவர்.உங்களுக்கு உணவு அளிப்பது எனக்கு பெருமை தரும் செயலாகும்.''

************************

ஒரு சாமியார் கோவில் வாசலில் நின்று மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினர்.

சில நாட்கள் கழித்து அதே கோவில் வாசலில்  ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான்.கேட்டவர் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில்  அவர்கள் எங்கே,தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள்.கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.

இன்னும் சில நாட்கள் கழிந்தன.புதிதாக ஒரு மனிதன் வந்து,ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான்.இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது.பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு;ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா மன்னிப்பாரா என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.

அடுத்து வந்த வேறு ஒருவன்,''கடவுள் மூன்று பேர் உண்டு.அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு,''என்று சொன்னான்.இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர்.கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது  பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும்  அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர் .அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.

 தர்மவழி

அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது.குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு  பிடித்துக் கொடுத்தால்தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது.ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் ஒரு நகை கிடை ப்பதைப்  பார்த்து எடுத்தார்.அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது.ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றான்.தாமதத்திற்குக் காரணமும் கேட்டான்.ஞானி சொன்னார்,''நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு  ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில்  எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை.மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால் நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள்.எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை.நகையை அப்படியே வைத்துக் கொண்டால் அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள்.எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை.அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன். ''மன்னன், ''இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?''என்று கேட்டான்.அதற்கு ஞானி,''தர்ம வழியில் நடக்கும் ஒருவனை தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை,''என்று சொல்லியவாறு கம்பீரமாக அங்கிருந்து நடந்தார்.மன்னன் வணங்கி விடை கொடுத்தான்.

இன்னும் வரவில்லையே!

இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன்  மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும்  வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு  தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது.

நன்றி : http://jeyarajanm.blogspot.fr

Monday, August 18, 2014

அவர்கள் அப்படிதான்

அவர்கள் அப்படிதான்
மலைகள் இணையத்துக்காக கோமகன்

1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி. அவனைப் பார்த்துப் புன்னகை ஒன்றை தவழ விட்டபடியே தேநீரை எடுத்துக்கொண்டான் இளம்பிறையன்.

வெளிநாடு சென்றிருந்த ஒரு குடும்பத்தின் இரட்டை மாடி வீடு ஒன்று அவர்களின் முகாமாக மாறியிருந்தது.அந்த இரட்டை மாடி வீடு விஸ்தாரமாக பல அறைகளுடன் இவர்களுக்கு வசதியாகவே இருந்தது. முகாமின் நுழைவாயிலிலும் பின்பக்கமாகவும் மண் மூட்டைகள் அடுக்கி சென்றிப் பொயின்ருகள் இருந்தன. அந்த சென்றியில் ஆள்மாறி ஆள் இருபத்திநாலு மணிநேரமும் காவலுக்கு இருப்பார்கள். அந்தமுகாம் விசாரணைகள் நடைபெறும் முகாமாக இருந்தது. முகாமின் உள்ளே இருந்த அறைகளில் முக்கால்வாசிப் பகுதி சிறைகளாக மாறியிருந்தன.தேநீரைப் பருகியபடியே தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்த இளம்பிறையனின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றன. அந்த அறிக்கையைப் படிக்கும் பொழுது கோபத்தால் இளம்பிறையனது உடலில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அருகே இருந்த முகாம் பொறுப்பாளர் சிவாவைப் பார்த்து அந்தப்பெரியவரை அழைத்துவருமாறு சொன்னான் இளம்பிறையன். சிவா தயங்கியவாறே நின்றதைப் பார்த்த இளம்பிறையன் “என்ன” என்பது போல சிவாவைப் பார்த்தான் . “இல்லை அண்ணை இந்த கேசை நாங்கள் பாப்பம் தானே? நீங்கள் வந்திருக்கிறியள்….. என்று இழுத்தான் சிவா. “ஆளை கூட்டிக் கொண்டுவா சொன்னதை செய்” என்றான் இளம்பிறையன். பிராந்தியப்பொறுப்பாளரின் சொல்லைத் தட்ட முடியாதவாறு அந்தப் பெரியவரை அழைத்துவரச் சென்றான் அவன் . அந்தப் பெரியவர் ஏற்கனவே தனது எறிசொறிக் கதைகளால் முகாமுக்கு அழைத்து வரப்படும் பொழுதே பெடியள் நன்றாக அடித்தே இழுத்து வந்திருந்தார்கள் . சிவா அவரை கைதாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து இளம்பிறையனுக்கு முன்னால் குந்தி இருக்கப் பண்ணினான் .

தினசரிக் குறிப்பேட்டில் இருந்து தனது பார்வையை எடுக்காது “ஐயா உங்கடை பேர் என்ன ?” என்று அவரைப்பார்த்துக் கேட்டான் இளம்பிறையன். ” என்ரை பேர் ஊரிலையே தெரியும் .உங்களுக்கு தெரியாட்டில் ஊருக்கை போய் கேக்கலாம்”என்று எகத்தாளமாகப் பதில் வந்தது அவரிடமிருந்து. “ஐயா இது விசாரணை . நான் கேக்கிற கேள்வியளுக்கு மறுமொழி தரவேணும் “என்றவாறே அவரைப் பார்த்தான் இளம்பிறையன். அவனது இதயம் அதிரத்தொடங்கியது யாரை தனது வாழ்நாளில் சந்திக்கக்கூடாது என்று இருந்தானோ அவரே தன்முன்னால் விசாரணைகைதியாக நிற்கின்றார். தனது மாற்றங்களை முகத்தில் காட்டாது “சொல்லுங்கோ உங்கடை பேர் என்ன? “என்றான் இளம்பிறையன் . ” அட்வகேற் பேரம்பலம் ” .”உங்களைப்பற்றி ஒரு ரிப்போர்ட் வந்திருக்கு. அதை விசாரிக்கத்தான் உங்களை கூப்பிட்டனாங்கள்” என்றான் இளம்பிறையன். ” செத்த சவத்துக்கு சங்கு ஊதிறனிங்கள் எப்பதொடக்கம் கோடு நடத்த வெளிக்கிட்டியள் ?”என்று நக்கலாக கேட்ட அட்வகேற் பேரம்பலத்தை இருந்த நிலையிலேயே எட்டி உதைத்தான் இளம்பிறையன். அலங்க மலங்க விழுந்த அவரை சிவா தனது பங்கிற்கு போட்டு அடித்தான் . அட்வகேற் பேரம்பலத்துக்கு மூக்கும் பல்லும் உடைந்து இரத்தம் பெருகியது .சாதியை பற்றி கதைத்தால் வெட்டிப்பொழி போட்டுவிடுவேன் என்று இளம்பிறையன் அடித்தான் . இருவரும் அடித்த அடியால் பேரம்பலம் நிலைமையை சுமூகமாக்க இறங்கி வந்தார் . “இப்ப நான் கேக்கிற கேள்வியளுக்கு மறுமொழி சொல்லும் அட்வகேற் பேரம்பலம் ” என்று கடுமையாகச் சொன்னான் இளம்பிறையன் .அவன் முகத்தில் கோபத்தின் ரேகைகள் ஓடின . குடிக்கத் தண்ணி கேட்ட பேரம்பலத்துக்கு சிவா தண்ணி கொண்டு வந்து தந்தான். தண்ணீரை மடக் மடக்கென்று குடித்த அட்வகேற் பேரம்பலம் “நான் என்ன சொல்லவேணும் எண்டு என்னை இங்கை கூட்டி வந்தியள்?” என்று இளம்பிறையனைப் பார்த்துக் கேட்டார் . ” நீங்கள் ஒரு பெட்டையை கீப்பாய் வச்சிருந்து ஒரு பிள்ளையும் அவான்ரை வயித்திலை வளரருது . அவா கலியாணம் செய்யச் சொல்லி கேட்டால் நீங்கள் முடியாது எண்டு சொல்லுறியளாம். இதுக்கு என்ன சொல்லுறியள் அட்வகேற் பேரம்பலம் ?” என்று குறிப்பேடை பார்த்தவாறே கேள்விகளை அடுக்கினான் இளம்பிறையன் .

“தம்பி இதெல்லாம் ஒரு பிரச்னை எண்டு கூட்டிவந்தியளோ ? சொந்த செலவிலை சூனியம் வைக்கிறியள் .நான் ஊரிலை ஒரு முக்கியமான ஆள் . இந்த விசயங்கள் ஊர் உலகத்திலை நடக்காததே ? ” என்று தொடர்ந்த அட்வகேற் பேரம்பலத்தை இடைவெட்டினான் இளம்பிறையன்,” ஏன் அந்த பெட்டையை கலியாணம் செய்ய மாட்டன் எண்டு சொல்லுறியள் ?” தம்பி உங்களுக்கு தெரியும் தானே நான் நல்ல சாதிசனத்திலை இருந்து வந்தனான் . அந்த பிள்ளை வீட்டை நாங்கள் சபை சந்தியிலை அடுக்கிறேலை.எப்பிடி இந்த கலியாணம் நடக்கும் ? இதுகளை நீங்கள் கணக்கிலை எடுக்காதையுங்கோ ” என்று அவர் நீட்டிக்கொண்டிருக்க , அவரின் பக்கமாக நின்றிருந்த சிவா ஆவேசமாகி “உங்கடை வயசுக்கு உங்களுக்கு சின்ன வயசிலை பெட்டையள் கேக்குதோ ?”என்றாவாறே பேரம்பலத்தாரின் நெற்றியில் தனது பிஸ்டலை வைத்து அழுத்தினான் . சிவாவின் செய்கையினால் மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பேரம்பலம் “தம்பியவை இடம் தெரியாமல் விளையாடுறியள். என்ரை பவர் உங்களுக்கு தெரியாது .எனக்கு எல்லா இடத்திலையும் ஆக்கள் இருக்கு”. என்று கத்திய பேரம்பலத்தை சிவா அடித்து நொருக்கத் தொடங்கினான் .இருவரையும் விலத்திய இளம்பிறையன் விசாரணையை மறுநாள் ஒத்தி வைத்து விட்டு உரும்பிராய்க்குத் திரும்பினான் .அவனது மனதை அட்வகேற் பேரம்பலம் ஆழமாகவே கீறியிருந்தார். அவனது நினைவுகள் ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னே சென்றன.
*******************************************
இருபாலையில் வைத்தியர் வையாபுரி குடும்பம் மிகவும் பிரபலமானது. அந்தக்காலத்திலேயே மாடிவீட்டில் வாழ்ந்தவர்கள் வையாபுரி குடும்பத்தார் .ஊரில் வையாபுரி வைத்தியராக இருந்ததும், உயர்குடி பரம்பையில் வந்ததினாலும், பல சொத்துப்பத்துக்களுக்கு அதிபதியானதாலும் வையாபுரி வைத்தியரை ஊரில் உள்ள அனைத்து நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முதல் ஆளாக அந்த ஊர் மக்கள் அழைப்பார்கள். வையாபுரி தனது சொந்த ஊரிலேயே சிவகாமி என்ற பெண்ணை அதே உயர்குடியில் கொழுத்த சீதனத்துடன் கலியாணம் செய்திருந்தார் ?அவர்களுக்கு ஒன்றே ஒன்று கண்ணே கண்ணாக ஒரு மகன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்கு தில்லையம்பலத்தானின் நினைவாக பேரம்பலம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் வைத்தியர் வையாபுரி தம்பதிகள். தங்கள் மகன் விடும் தவறுகள் கூட வையாபுரி தம்பதியினருக்கு குறும்பாகத் தெரிந்தன. அவர்களும்தான் என்ன செய்வார்கள் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த கறிவேப்பிலைக் கொத்தல்லவா பேரம்பலம் ? சிறுவயதிலேயே சரளமாகப் பொய் பேசுவதும் அவனது குடும்பப் பின்னணியும் அவனை எதிலும் அதிகாரம் செய்யும் மனோபாவத்திலேயே வளர்த்து விட்டிருந்தன. வயது ஏற ஏற இவைகள் எல்லாம் அவனிடம் கூடியதே அல்லாமல் குறைந்ததாக இல்லை. அவனைப் படிப்பித்த ஆசிரியர்கள் கூட வைத்தியர் வையாபுரியின் செல்வாக்குக்குப் பயந்து அவனை மாற்ற முன்வரவில்லை .

கால ஓட்டம் தன்பங்கிற்கு அதன் கடமையைச் செய்ய சிவகாமி நோய் வாய்ப்படத் தொடங்கினாள். எல்லோரது நோய்களையும் பிணிகளையும் தனது சூரணத்தால் தீர்த்து வைத்த வைத்தியர் வையாபுரிக்கு தனது மனைவி சிவகாமியின் நோய்க்கு தீர்வுகாண முடியவில்லை. இந்த நேரத்தில்தான் சிவகாமிக்கு தனக்கு எடுபிடியாக ஒரு வேலைகாரப் பெட்டை தேவை என்ற யோசனை அவளது மூளையில் உதித்தது . தனது கணவரை இது சம்பந்தமாக நச்சரிக்கத் தொடங்கினாள் சிவகாமி. சிவகாமியின் கண்ணீரில் கரைந்த வையாபுரி நுவரெலியாவில் கடை வைத்திருக்கும் தனது மச்சான் கனகரத்தினத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு ஒரு நல்ல வேலைக்காரி எடுத்துதரும்படி சொல்லியிருந்தார். கனகரத்தினமும் ஓரிரு கிழமைக்குள் மச்சான் சொல்லியபடி மிகவும் எழ்மைப்பட்ட, பதினைந்தே வயது நிரம்பிய செல்லம்மாவை அவளது தாய் தகப்பனுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். செல்லம்மாவும் ஒருவித பயத்தினுடனேயே தாய் தகப்பனுடன் யாழ்ப்பாணத்திற்குப் பயணமானாள். அவளிற்கு இந்த டீலில் உடன்பாடு இல்லையென்றாலும் அவளது வீட்டில் மாதத்தில் முக்கால் வாசி நாளும் அமைந்த பட்டினி நிலையும், அவளது தாயின் நோயாளி நிலைமையும் அவளை அரைமனதுடன் சம்மதிக்க வைத்தன .

கையில் ஒரு பையுடன் வந்து இறங்கிய அவர்களை வீட்டு முற்றத்திலேயே வைத்து வையாபுரி உபசரித்தார். செல்லாம்மாவின் தாய் தகப்பனை தனது வீட்டின் உள்ளே அழைத்து உபசரிக்க அவரது சாதி இடம் கொடுக்கவில்லை. செல்லம்மா பயத்துடன் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டாள். வையாபுரி செல்லம்மாவின் தகப்பன் முனியாண்டிக்கு, தான் செல்லம்மாவுக்கு உடுப்பு சாப்பாட்டுடன் மாசம் நூறு ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாகச் சொன்னார். சிவகாமி பக்கத்திலே இருந்த கடையிலே நெக்ரோ சோடா வாங்கி வந்து இவர்களுக்கு கொடுத்தாள். அவர்கள் அதைப் பயபக்தியுடன் வாங்கி நிலத்தில் குந்தி இருந்து குடித்தார்கள். அவர்கள் போகும் பொழுது முனியாண்டிக்கு ஒரு போத்தல் கள்ளும் வாங்கி கொடுத்தார் வையாபுரி. முனியாண்டி முதலாளியின் செய்கையால் உச்சி குளிர்ந்து போனான். தங்கள் மகள் ஒரு நல்ல இடத்தில் தான் வேலைக்கு வந்திருகின்றாள் என்ற மனத் திருப்தியுடன் அவர்கள் நுவரெலியா திரும்பினார்கள். மொத்தத்தில் செல்லம்மாவால் தமது குடும்பம் உயரப்போவதாக இப்பொழுதே கற்பனை பண்ணத் தொடங்கினான் அந்த அப்பாவி முனியாண்டி.

முனியாண்டி குடும்ப வறுமைகாரணமாக செல்லம்மாவை எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டிருந்தான். இயல்பாகவே புத்திக்கூர்மையும் சூடிகையுமான செல்லம்மா தனது படிப்பு நின்று போனதையிட்டு ஆரம்பத்தில் கவலைப்படவே செய்தாள். ஆனால் அவளது குடும்ப வறுமை வாழ்வின் அடுத்த படியை தேடு தேடு என்று அவளைத் தள்ளிக்கொண்டிருந்தது. இந்த தேடலினால் தான் தொடர்ந்து படிக்க முடியவில்லையே என்ற கவலையுணர்வு அவளிடம் இருந்து மெதுமெதுவாக விடைபெற்றது. ஒருபக்கம் மூடினால் மறுபக்கம் திறக்கும் என்பதற்கமைய கடவுள் செல்லம்மாவுக்கு சிறுவயதில் ஏழ்மையைக் கொடுத்தாலும் செல்லம்மாவின் அழகு விடையத்தில் கடவுள் பெரும் பணக்காரத்தனத்தையே காட்டியிருந்தார். நெடுநெடுவென்ற உயரமும், அகன்ற பெரிய விழிகளும், வெண்மையும் கறுப்பும் இல்லாத கோதுமை நிறமும், அகன்ற மார்பில் அளவான திரட்சிகளும், சிறுத்த இடையும், அளவான பின்புறமும் என்று செல்லம்மா பார்ப்போரை கிறுங்கடிக்கும் வகையிலேயே இருந்தாள்.

காலம் தனது ஓட்டத்தில் ஒரே சீராகச் சென்றாலும் விதி என்ற பாம்பு வளைந்து நெளிந்து சென்று காலத்தின் போக்கையே மாற்றி அமைத்துவிடும் . செல்லம்மாவின் வாழ்விலும் அதுவே நடக்க ஆரம்பித்திருந்தது .பாம்பு தன் இரையை மெது மெதுவாக விழுங்குவது போல சிவகாமி செல்லம்மாவை தனது பிடியினுள் கொண்டுவந்தாள். ஆரம்பத்தில் சிவகாமிக்கு எடுபிடியாக மட்டுமே இருந்த செல்லம்மாவிற்கு இப்பொழுது வீட்டின் சகல வேலைகளும் அவளது தலையிலேயே விழுந்தது.வைத்தியர் வையாபுரி வீட்டில் செல்லம்மா காலையில் எழுந்தால் அவள் படுக்கப்போகும் வரை வேலைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். செல்லம்மா எவ்வளவு வேலைசெய்தாலும் நொட்டைகள் சொல்வதே சிவகாமியின் பிரதான பொழுதுபோக்காக இருந்ததது. ஆரம்பத்தில் சிவகாமியின் நொட்டைகளால் மனமுடைந்த செல்லம்மாவிற்கு காலப்போக்கினால் அதுவே பழக்காமாகிவிட்டது .ஆனாலும் அவளால் சிவகாமியின் “தோட்டக்காட்டாள்” என்ற ஒரேயொரு வார்த்தைப்பிரையோகத்தை மட்டும் தாங்கவே முடியாதிருந்தது.அவளின் மனதைக்காயப்படுத்தத் தொடங்கிய சிவகாமி இப்பொழுது செல்லம்மா வேலைமிகுதியால் விடும் சிறு தவறுகளைக் கூடப் பெரிதாக்கி அவளை உடலாலும் காயப்படுத்தத் தொடங்கினாள். பூரணை நிலவில் ஏற்படும் சிறு கருந்திட்டுக்கள் போல செல்லம்மாவின் அழகிய உடலில் இப்பொழுது சிறு சிறு எரிகாயங்கள் ஏற்படத்தொடங்கின. அந்த அப்பாவி செல்லம்மாவினால் ஒரு மூலையில் இருந்து அழ மட்டுமே முடிந்தது. அப்பொழுது அவளிற்கு ஆதரவாக வையாபுரி வீட்டிற்கு சாமானுகள் வாங்கி வரும் தாழ்த்தப்பட்ட சமூக்கத்தைச் சேர்ந்த ராசாத்தி மட்டுமே இருந்தாள் .

செல்லமாவை இறுக்கிய விதி என்ற பாம்பு பேரம்பலம் வடிவில் மேலும் படமெடுத்தாடியது. அவளின் வரவால் பேரம்பலத்தின் போக்கிலும் மாற்ரங்கள் ஏற்படத்தொடங்கின. செல்லமாவின் பேரழகு பேரம்பலத்தை கிறுங்கடித்தது. அவளை வசப்படுத்துவதற்காகவே அவன் தன்னில் அதிக கவனம் எடுத்துக்கொண்டான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல, இந்த விடயத்தில் கல்லாக இருந்த செல்லம்மாவின் மனது பேரம்பலம்பால் மெதுமெதுவாகக் கரையத்தொடங்கியது. சாட்சிகள் இல்லாமலே காதல் என்ற மொட்டு அங்கே மொட்டவிழ்க்கத் தொடங்கியது. அவளின் பக்கம் காதலும், அவனின் பக்கம் காமமும் போட்டிபோட்டுக்கொண்டு முட்டி மோதின . இறுதியில் காமமே வெற்றிவாகை சூடியது. ஒருநாள் மாலைப் பொழுதில் வையாபுரியும் சிவகாமியும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பேரம்பலத்தின் ஆசைவார்தைகளில் மயங்கிய செல்லம்மா அவனுள் கரைந்தாள். “எந்த எதிர்ப்பு வந்தாலும் அவளையே தான் கலியாணம் செய்வேன்” என்ற பேரம்பலத்தின் வார்த்தை நன்றாகவே அவளில் வேலை செய்தது. இதைச் சொல்லிச் சொல்லியே செல்லம்மாவை பலமுறை பேரம்பலம் அனுபவித்தான்.

சாட்சிகள் இல்லாத காதல் இப்பொழுது சாட்சியுடன் செல்லம்மாவின் வயிற்றில் வளர ஆரம்பித்தது. அரைகுறைப்படிப்பறிவு செல்லம்மாவை இந்த விடயத்தில் விழிக்கச் செய்யவில்லை. இதேவேளை பேரம்பலம் தனது மேற்படிப்புக்காக கொழும்பு சட்டக்கல்லூரிக்குச் சென்று விட்டான். ஒருநாள் மாலை வாந்தி எடுத்துக்கொண்டிருந்த செலம்மாவை சிவகாமி வீட்டின் முன்னால் இருந்த றோட்டில் வைத்து அடித்துக்கொண்டிருந்தாள் .வருவோர் போவோர் எல்லோரும் இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் அடிபெருத்த வயிறு அவள் கர்ப்பமாக இருப்பதை அவர்களுக்கு சாட்சியமாக சொல்லாமல் சொல்லியது. வேடிக்கை பார்த்த பெண்களில் சிலர் கேட்ட கேள்விகளுக்கும் செல்லம்மா யார் தனக்குப் பிள்ளை கொடுத்தது என்று சொல்லாமல் தன்னை அடிக்கவேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு அழுது கொண்டு நின்றாள். ஒரு வடக்கத்தையாள் தங்களுக்கு உண்மை சொல்ல மறுக்கின்றாளே என்ற ஆவேசம் எல்லோரையும் பிடித்து ஆட்ட சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பெண்கள் ,செல்லம்மா ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவளை அடித்து துவைத்தனர் .அங்கு அவள் பெண் என்பதனை விட “தோட்டக்காட்டாள் ” என்ற அடையாளமே மேலோங்கியிருந்தது. எல்லோரும் அடித்த அடியில் காயம் ஏற்பட்டு றோட்டில் விழுந்து கிடந்து அழுத செல்லம்மாவை வையாபுரியே எல்லோரையும் பேசி மீட்டெடுதார். தங்கள் குடும்ப மானமே கப்பலேறிவிட்டதாக சிவகாமி சாமி ஆடினாள். செல்லம்மாவின் காயங்களுக்கு மருந்து போட்ட வைத்தியர் வையாபுரி இதனை பொலிஸ் கேசாக்க விரும்பாமல் முனியாண்டிக்குத் தகவல் கொடுத்து அனுப்பினார்.

என்னவோ ஏதோவென்று பதறித்துடித்து வந்த முனியாண்டியும் அவன் மனைவியும் செல்லம்மாவின் நிலை கண்டு பதறித் துடித்தனர். வைத்தியர் வையாபுரி எல்லாவற்றையும் விளக்கமாக முனியாண்டிக்கு விளக்கினார். தங்கள் மானத்தை கப்பலேற்றிய செல்லம்மாவை தாங்கள் தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது என்று திட்டவட்டமாக வைத்தியர் வையாபுரி சொல்லி விட்டார். ஆனால் முனியாண்டியோ பிடிவாதமாக செல்லம்மாவுக்காக நியாயம் கேட்டான். தங்களிடம் குடிமை செய்யும் ராசாத்தியிடம் செல்லாம்மாவைக் கொடுத்து பிள்ளை பிறக்குமட்டும் வேறு இடத்தில் வைத்துப் பராமரிப்பதற்கு தான் ஒழுங்கு செய்வதாகவும், முனியாண்டிக்கு இதைப் பெரிது படுத்தாமல் விட ஒருதொகை தருவதாகவும் வையாபுரி ஓர் அருமையான யோசனையை முனியாண்டிக்கு சொன்னார். வறுமையின் கோரப்பிடி முனியாண்டியை இந்த யோசனைக்கு சம்மதிக்க வைத்தது. வையாபுரி விடயம் சுலபமாக முடிந்ததில் கௌரவம் பாராது கோழியடித்து முனியாண்டிக்கு விருந்து வைத்தார். குற்றங்கள் என்று வரும்பொழுது சாதிகளும் கௌரவங்களும் இருந்த இடம் தெரியாமல் இந்த மனிதர்களில் ஏனோ ஓடிஒழித்து விடுகின்றன. விடுமுறையில் வந்த பேரம்பலத்துக்கு சிவகாமி எல்லா விடையத்தையும் கூற அந்தக் கள்ளப் பூனை எதுவுமே தெரியாது போல ஆர்வமாக தன் தாயின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தது .விதி செல்லம்மாவை பள்ள ராசாத்தியிடம் கொண்டு போய் சேர்த்தது. ராசாத்தி ஊர்வாயை மூட செல்லம்மாவுடன் அருகில் இருக்கும் உரும்பிராய் கிராமத்துக்கு தனது தமக்கையுடன் இருப்பதற்கு குடிபெயர்ந்தாள் யாருடமே சொல்லாமல் மறைத்த ரகசியத்தைச் செல்லம்மா ராசாத்தியிடம் சொல்லிக் கதறி அழுதாள். ராசாத்தி அதிர்ச்சியில் உறைந்தாலும் செல்லம்மாவை அன்புடன் அரவணைத்து ஆறுதல் சொல்லி அவளை தேற்றுவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தாள். மாதங்கள் ஓட செல்லம்மா ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்ரெடுத்துவிட்டு கண்ணை மூடிவிட்டாள். பிள்ளைகள் இல்லாத ராசாத்தி அந்தக்குழந்தையை தனது பிள்ளை போலவே வளர்த்தாள். அந்தப் பிள்ளைக்கு ராசய்யா என்று பெயர் வைத்து மகிழ்ந்தாள் ராசாத்தி.

ராசய்யா வளர்ந்து விபரம் அறியும் வயதில் அவனை எல்லோரும் ” சேமக்கலம் ராசய்யா” என்றே கேலி செய்தனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்தான். அன்று இருந்த அரசியல் சூழ்நிலையில் இதிலிருந்து அவன் விடுபட இயக்கத்தில் சேர்ந்தான். இயக்கம் அவனது பெயரை இளம்பிறையன் என்று வைத்துக்கொண்டது. இளம்பிறையனது விவேகமும் அயராத உழைப்பையும் கண்டு இயக்கம் அவனை அயல்நாட்டுக்கு ஆயுதப்பயிற்சிக்கு அனுப்பியது .அங்கு அவன் ஆயுதப்பயிற்சியில் குறிபார்த்துச் சுடுவதிலும் கனரக ஆயுதங்களை இயக்குவதிலும் சிறந்த போராளியாகி தாயகம் திரும்பினான் .தாயகம் திரும்பிய கையுடனேயே இளம்பிறையனுக்கு பிராந்தியப்பொறுப்பாளர் பதவி காத்திருந்தது. இளம்பிறையன் புதிய உற்சாகத்துடன் தனது தாயைப் பார்க்கப் புறப்பட்டான். அங்கு அவன் தனது தாயை மரணப்படுக்கையிலேயே சந்தித்தான். அப்பொழுதான் ராசாத்தி அவனது பிறப்பின் ரகசியத்தை கூறி தனது மனபாரத்தை இறக்கி விட்டு கண்ணை மூடினாள். அவனுக்கு உலகமே இருண்டது .தான் உயர் குடியில் பிறந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தன்னை தாழ்ந்த சாதியில் வளர்த்ததும் இதற்கு காரணமான பேரம்பலத்தை ஊரறிய தனது மகன் என்று சொல்ல வைக்கவேண்டும் என்று மனதில் கறுவிக்கொண்டான்.
 **********************************
இளம்பிறையனது மனம் நடந்த விசாரணைகளினாலும், அட்வகேற் பேரம்பலம் திருந்துவற்கு எதுவித அறிகுறியும் அவரிடம் இல்லாது இருந்ததும் அவனுள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பின .தனக்கு நடந்தது போல் இனி யாருக்குமே நடக்ககூடாது என்றே அவன் முடிவு கட்டினான். அட்வகேற் பேரம்பலத்துக்கு விசாரணையில் தான் வழங்கபோகும் சாதாரண தண்டனை அவரை எந்தவிதத்திலும் மாற்றாது என்றே அவன் நம்பினான் .அவனது முளையில் அப்பொழுதான் அந்தத் திட்டம் மெதுமெதுவாக கருக்கட்டதொடங்கியது. இளம்பிறையன் மிகுந்த நின்மதியுடன் உறக்கதிற்க்குச் சென்றான்.மறுநாள் காலையில் முகாம் பொறுப்பாளர் சிவாவிடம் தனது திட்டத்தை வோக்கி ரோக்கியில் கூறிவிட்டு அன்றைய இரவுக்காகக் காத்திருந்தான். இளம்பிறையனது ஹையேர்ஸ் வான் இரவு பதினொரு மணியளவில் சிவாவின் பொறுப்பில் இருந்த அந்த முகாமில் நுழைந்தது. அங்கிருந்த அட்வகேற் பேரம்பலத்தை ஏற்றிக்கொண்டு பருத்தித்துறை வீதியில் பறந்தது இளம்பிறையனது ஹையேர்ஸ் வான் .

கோப்பாய் சந்தியில் திரும்பி கைதடிப்பக்கமாக திரும்பிய அந்த ஹையேர்ஸ் வான் இருளைக் கிழித்து ஓடி பாலத்துக்கு கிட்டவாக தன்னை நிறுத்திக்கொண்டது. வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாதவாறு அந்த ஹையேர்ஸ் வானின் ஜன்னல்கள் கறுப்பு கண்ணாடிகளாக மாற்றப்பட்டிருந்தன .வானை ஒட்டிய சிவா தனது இடத்தை விட்டு இறங்கி மறுபக்கமாக வந்து இளம்பிறையனுக்காக கதவைத் திறந்து விட்டான். இவருடைய இடுப்பிலும் மக்னம் பிஸ்டல் செருகப்பட்டிருந்தது. மேலே வானத்தில் பூரணை நிலவினூடே சிறுசிறு திட்டுக்களாக முகில்கள் ஓட்டம் காட்டின. கைதடிப்பாலதினூடாக வந்த உப்புக்காற்றும், பாலத்தின் கீழே இருந்த வற்றிக்கொண்டிருந்த உப்பு நீரின் வண்டல் சேற்று மணமும் அவர்களின் மூக்கை துளைத்தது. அந்த நேரத்தில் யாரும் வரப் பயப்பிடும் கைதடிப்பாலத்தடி அசாதாரண அமைதியாகவே இருந்தது. அருகே இருந்த சுடலையில் ஓர் உடலம் எரிந்து கொண்டிருந்தது . சிவா பின்புறமாக வந்து அட்வகேற் பேரம்பலத்தை இறக்கினான். அவரை அப்படியே நெம்பிதள்ளிய அவன் அவரை அருகில் இருந்த லைட் போஸ்டில் தான் கொண்டு வந்திருந்த கயிற்றால் இறுக்கமாக கட்டினான் .” எதிரிக்கு காட்டிக்கொடுத்திற்கும் பல பெண்களை பாழ்படுத்திய இந்த சமூகக்கிரிமிக்கு நாங்கள் வழங்கிய பரிசு” என்று தாங்கள் ஏற்கனவே எழுதிய மட்டையை அவரின் கழுத்தில் மாட்டினான். அட்வகேற் பேரம்பலத்தின் முகத்தை மூடியிருந்த கறுப்புதுணியை சிவா எடுத்து விட்டான். அட்வகேற் பேரம்பலம் தலையை சிலுப்பியபடியே சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே இளம்பிறையன் அகலக் கால்களை விரித்து கைகளைப் பின்புறமாக கட்டியபடி இவரைப்பார்த்தபடியே நின்றான். அவனது நெடிய திடகாத்திரமான உருவம் அந்த மம்மல் இருளில் திகில் கொள்ள வைத்தது . அவன் கைகளில் மக்னம் பிஸ்டல் தயாராக இருந்தது. என்னத்துக்கடா என்னை இங்கை கொண்டுவந்தனி சங்கூதிப் பரதேசி என்று அட்வகேற் பேரம்பலத்தின் வாயில் இருந்து வார்த்தைகள் துப்பிய அதே நேரம் இளம்பிறையனின் கையில் இருந்த மக்னம் பிஸ்ட லும் குண்டுகளை துப்பியது. தூரத்தே குண்டின் சத்தத்தால் பூவரசு மரத்தில் இருந்த ஆட்காட்டியொன்று வீரிட்டலறியபடி வானத்தில் பாய்ந்தது.

நன்றி : http://malaigal.com/?p=5431

கோமகன்
02 ஆவணி 2014