Thursday, September 25, 2014

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை பற்றிய எனது பார்வை ( எதிர்வினை )

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை பற்றிய எனது பார்வை ( எதிர்வினை )

Posted Image

இந்த பெண்கள் எப்பொழுதும் சொல்கின்ற ஓர் சுலபமான சொல்லாடல் ஆணாதிக்கம். ஆனால் இவர்கள் பெண்ணாதிக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆம்பிளையானவன் என்ன காரணத்துக்காக 2-3 வேலைகள் செய்கின்றான் ?? அவனுக்கென்ன வயித்து வலியா ?? இத்தினை பவுணிலை தாலிக்கொடியும்( கலியாணத்திலை கட்டினதை திருப்பி செய்ய ), பவியோன் வீடும் (தனி வீடு வளவுடன் கூடியது ) , பீ எம் டபிள்யூ காரும் , அவனா கேக்கிறான்?? இந்தப் பெண்மணிகள் தங்கள் இனிஷல் பிரச்சனைக்காக இங்கிருந்து கொண்டு தாயகத்தில் இருந்து மாப்பிள்ளை எடுத்து கலியாணம் கட்டுகின்றார்கள். அவனுக்குரிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்களா என்றால் அதன் விடை துயரமானது அவனை செல்லப்பிராணி போலத்தான் அவர்கள் பார்கின்றார்கள் . இதன் மூலம் இந்தப் பெண்மணிகள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால், புலத்தில் உனக்கு நான்தான் வாழ்வு கொடுத்தேன் என்பதே. ( இதுவும் ஒருவகையான உளவியல் வன்முறையே) இதற்கு பல உதாரணங்களை என்னால் தரமுடியும் அனால் சம்பந்தப்பட்டவர்களின் கௌரவப் பிரச்னை என்ற ஒன்று உள்ளது. பிரச்சனைகள் என்று வரும் பொழுது இந்தப் பெண்மணிகள் நடுநிலைமையுடன் சொல்வதில்லை . வட்டம், சதுரங்களுக்கு நடுவில் நின்று கொண்டே செய்திகளை சொல்லி ஒருவித அனுதாப அலைகளை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள். குடும்பத்தில் வன்முறையென்பது, அது ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். "நான் " என்ற மனோபாவம் எந்தப்பக்கத்தில் அதிகரிக்கின்றதோ, அந்தப்பக்கதால் வன்முறை துளிர்விடும் .இந்த வன்முறையானது அருவருக்கத்தக்கதொன்றாகும். எல்லா பெண்மணிகளும் இவ்வாறு நடப்பதாக எண்ண வேண்டாம் தங்கள் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன் குடும்பத்தை பிக்கல் பிடுங்கல் இன்றி நடத்தும் பெண்மணிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஆனால் அவர்களது விகிதாசாரம் புலத்தில் குறைவாகவே உள்ளது.

குடும்பம் என்பதே இருவர் கூட்டணியுடன் நடைபெறும் ஓர் நிறுவனம். அதில் கருத்து முரண்கள் வரத்தான் செய்யும். கணவன் நிதி நிர்வாகம் என்றால், மனைவி அவனது இணை இயக்குனர். அதில் "நான் " என்ற மனோபாவம் எங்கு தூக்கலாக இருக்கின்றதோ, அதன்வழியாக பிரச்னை வெளியே கசியும். அதை ஊதிப் பெரிதாக்க பலர் " நட்பு " என்ற போர்வையில் இருப்பார்கள். அமைதியாக இருந்த குடும்பம் சந்தைக் கடையாக மாறும். வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் ,மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது மாறுகின்றதோ , அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம் . பிரச்சனைகள் என்றுமே நிறம் பார்ப்பதில்லை. இந்தப் பெண்மணிகள் தங்கள் வாதங்களுக்கு என்றுமே வெள்ளை இனத்தவர்களை முன் உதாரணம் காட்டுவதுண்டு . தோல் வெள்ளை என்பதால் அங்கு பிரச்னை இல்லை என்பதல்ல அர்த்தம். இதைவிட கொடுமையான சம்பவங்கள் வெள்ளையின மக்களிடமும் உண்டு. அவை செய்திகளில் வந்த படிதான் உள்ளன.  பிரான்சில் உள்ள குடும்ப வன்முறை பற்றிய சமீபத்திய அறிக்கைகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன ...........

" One woman dies every three days of domestic violence in France

47,573 events were recorded by the gendarmerie and the police, which is an increase of over 30% compared to 2004 (36,231), but not an increase in the number of cases: there are more reports before (encouraged by the police and justice), and there is a new definition of domestic violence that now includes violence by a former spouse.

Domestic violence represents more than a quarter of all acts of violence.

In 2006, 137 women died of beatings by their partners (a woman every three days) and more than 3,000 acts of violence led to an inability to work more than eight days (down slightly from 3 360-3 103).

Statistically, this corresponds to 18.7 acts of domestic violence for 10,000 women, but with spikes in certain departments beyond 30 per 10,000 women.

This number is compared to a victimization survey conducted in 2007 for acts of 2005 and 2006: 410,000 women reported having experienced violence from their spouse or ex-spouse, or 2.3% of all women aged 18 to 60. Less than a quarter have therefore resulted in a complaint (21%).

One man dies every ten days of domestic violence in France

But the victimization survey also reveals that 127,000 men are victims of violence by their partner, or 0.7% of all 18 to 60 for the same period men. However, only 2,317 complaints were recorded for such deeds, men giving more than women to complain.

This means that just under a quarter of the facts of domestic violence are exercised over men.

In 2006, 37 men died, killed by their wives, but in three quarters of cases, the men beat their partners.

Origins of violence causing death

The circumstances of the deaths by domestic violence are relatively conventional and predictable: argument, alcohol, separation and jealousy."


http://www.agoravox....en-france-41980

எதோ எங்கள் சமூகத்தில் மட்டும்தான் இந்த குடும்ப வன்மூறை (violence conjugales) இருப்பது போன்ற தோற்றத்தை இந்த பெண்மணிகள் உருவாக்குகின்றார்கள் . இது எல்லா இன குழுமங்களிலும் உள்ளது. அதற்கான தீர்வு மேலே நான் கூறிய " வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் , மற்றவர்களுடன்  ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது மாறுகின்றதோ , அப்பொழுது இந்த குடும்ப வன்முறை என்ற பிரச்சனைகளும் மாறும். "

கோமகன்
25 புரட்டாசி 2014

Tuesday, September 23, 2014

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு 
நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை  இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும்  ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? "கோமகா... அவதானமாய் நடந்துக்கோ ராசா" எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் "அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்" எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல்  அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன்.

நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி புஸ்பமாய் குளிச்சு பல்கணியிலை நிண்டு ரீயும் சிகரட்டும் அடிச்சு, நாலே  முக்கால் போலை ரெயில்வே ஸ்டேசனுக்கு போனன். அங்கை கொஞ்சப்பேர் நிண்டினம். நேரம் செல்லுது  கோச்சி வாற அறியும் இல்லை குறியும் இல்லை.  ஐஞ்சு மணிக்கு வாற கோச்சி ஐஞ்ச முக்காலுக்கு ஆடிப்பாடி வந்துது. சனங்கள் கோச்சிக்குள்ளை ஏறுறதில்லை அடிபாடு. எனக்கெண்டால் விடியக்காத்தாலை இதுகள் இப்பிடி அடிபடுகுதுகளே எண்டு வாழக்கை வேறுத்துப்போச்சுது. ஆறுமணிக்கு வேலைக்கு ஏழுமணிக்கு வேலையிடத்துக்கு போய் சேர்ந்தன். நான் வேலை செய்யிற நேரமமும், எனக்கு இவர் அறிமுகப்படுத்திற ஆள் ஆராய் இருக்கும்? எண்டு எனக்கு ஒரே மண்டை குடைச்சல். இண்டைக்கு எண்டு பாத்து எல்லாரும் காலமை சாப்பிடவேணும் எண்டு லைன் கட்டி நிக்கிறாங்கள். வேலை பிராக்கிலை சோபாசக்தி சொன்ன விசயம் எனக்கு மறந்து போச்சுது.வேலை முடிஞ்சு வெளியிலை வந்து ரெலிபோனை பாத்தால் நாலைஞ்சு ரெக்ஸ்ரோ கிடக்கு இண்டையான் சந்திப்பை பற்றி. ஆனால் ஆர் ஆள் எண்டு சொல்லேலை.

நான் யோசனையோடை லாச்சப்பலுக்கு மெட்றோ எடுத்து போனன் .நாங்கள் வழக்கமாய் சந்திக்கிற பாண்டிச்சேரி ரெஸ்டோரன்ட்க்கு போனால், அங்கை ஆக்காட்டி பிரபாவும் இன்னுமொரு கூட்டாளியும்  நிண்டாங்கள். அவங்கள் என்னை சந்திக்கிறதுக்கு நிக்கிறதாய் சொன்னாங்கள்.என்ன விசயம் எண்டு கேட்டன் .வாங்கோவன் ஒருக்கால் வாசுதேவனையும் சந்திசுப்போட்டு வருவம் எண்டாங்கள் .எனக்குப் பசிக்களை ஒருபக்கம் அவங்கடை முகத்தையும் முறிக்கேலாமல் இருந்திச்சுது. சரி போவம் எண்டு வாசுதேவவன்ரை  ஒபிசுக்குப் போனம். அங்கை வெள்ளை தாடி சனமில்லாமல் இருந்திச்சுது. எனக்கும் வாசுதேவனை சந்திக்க வேணும் போலைதான் இருந்தது. ஏனெண்டால் போனகிழமை நடந்தை திறனாய்வு விழாவுக்கு வந்தவருக்கு என்னாலை ஒரு நன்றி சொல்லவேணும் போலை கிடந்திது. எங்களை கண்டது ஆளுக்கு பெரிய புழுகமாய் இருந்திது. நான் அவர் வந்ததுக்கு நன்றி சொல்லி அவரோடை கொஞ்ச நேரம் தத்துவ விசாரம் செஞ்சம். தாடிக்கு தத்துவம் எண்டால் சீனி திண்ட மாதிரி. பிரபா நாங்கள் பாண்டிச்சேரி ரெஸ்டொரண்ட் க்குப் போறதை நினைவு படுத்தினான். நாங்கள் அவரிட்டை விடைபெற்றுக்கொண்டு பாண்டிச்சேரி ரெஸ்டொரண்ட் க்குப் போய் உள்ளுக்கை உள்ளட்டம்.   பிரபாவும் கூட்டாளியும் பசிக்குது எண்டு கொத்து றொட்டி எடுத்தாங்கள். நான் றோல்சும் ரீயும் எடுத்தன். நாங்கள் ஆக்காட்டியிலை என்னென்ன செய்யவேணும் எண்டு கதைச்சு கொண்டு இருந்தம். நாங்கள் சாப்பிட்டு முடிய நான் வெளியிலை வந்து ஒரு சிகரட்டை எடுத்து பத்த வைச்சன். பேந்தும் நான் உள்ளுக்கை போய் ஆக்காட்டியை பத்தி கதைச்சு கொண்டிருந்தன்.

நாங்கள் கதைச்ச நேரத்திலை சோபா சக்தி ஒரு பொம்பிளையோடை  ரெஸ்டோரன்ட்க்குள்ளை என்ரர் ஆனார். எல்லாரையும் சுகம் கேட்டார்  நான் ஒரு தந்திரோபாய பின்வாங்கலிலை ஒண்டும் பேசாமல் இருந்தன். உடனை என்ரை பக்கம் திரும்பி அந்நியன் ஸ்ரைலில தலையை மேசைப்பக்கம் கவிட்டுக்கொண்டு, "கோமகன் நான் சொன்ன ஆள் இவாதான். இவான்ரை பேர் "ராஜாத்தி சல்மா". தமிழகத்திலை இருந்து வந்திருக்கிற பிரபல பெண்கவிஞர்" எண்டு என்னையும் அவாக்கு அறிமுகம் செய்து வைச்சார் .எவ்வளவு பெரிய கவிஞர்  என்னை பாக்க வந்திருக்கிறாவே எண்டு எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சுது. அவாவும் பெரிய கெப்பர் இல்லாமல் எங்களோடை சாதாரணாமாய் கதைச்சா. நாங்கள் எங்களுக்கு நடைமுறை இலக்கியதிலை இருக்கிற ஐமிச்சம் எல்லாம் கேட்டு தெரிஞ்சு கொண்டம். அவாவும் எங்கடை கேள்வியளுக்கு மறுமொழி சொன்னா. நாங்கள் பம்பலாய் கதைச்சதிலை நேரம் போனதே தெரியேலை. ஐஞ்சு மணிபோலை நான் ராஜாத்தி சல்மாவிடமும் சோபாசக்தியிடமும் விடை பெற்றேன். மொத்தத்திலை இண்டையான் நாள் நொந்து நூடில்ஸ் ஆன பரபரப்பான  நாள் எண்டாலும், ராஜாத்தி சல்மாவை இலக்கியசம்பந்தமாக சந்தித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


கோமகன் 
23 புரட்டாசி 2014

Monday, September 22, 2014

வாடாமல்லிகை பாகம் 14

வாடாமல்லிகை பாகம் 14

Posted Image

அந்தகாலை வேளையிலேயே வெய்யில் முகத்தில் பட்டு தன் குணத்தைக் காட்டியது. வியர்வையை அவ்வப்பொழுது கண்டு வந்த எனக்கு இந்த வெய்யிலும் அதனால் வரும் வியர்வையும் நன்றாகவே பிடித்துக்கொண்டது .சூரியக்கண்ணாடியை அணிந்து கொண்டு அருகே இருந்த மரத்தின் கீழே ஒதுங்கிக் கொண்டேன். ஊரையே கொழுத்திய எறிகணைகளின் நடுவே இந்த மரங்கள் சில தப்பிப் பிழைத்தது அதிசயம்தான். துரத்தே 751 பஸ் வருவது தெரிந்தது .என்னருகே வந்து பஸ் என்னையும் ஏற்றிக்கொண்டது . பஸ்ஸில் அதிகம் கூட்டம் இருக்கவில்லை . நான் இடம் பார்க்க வசதியாக முன்பக்கத்தில் ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டேன். பஸ்ஸில் இப்பொழுது வேலைக்கு செல்லும் ஆட்கள் ஏறத்தொடங்கினார்கள் . பஸ் கப்பல் கட்டும் தொழிற்சாலையை கடந்து சென்று, நாவலடி சந்தியில் வியாபாரி மூலைப்பக்கமாக திரும்பியது.

வியாபாரி மூலை காணுமிடமெல்லாம் பச்சைகளைப் போர்த்தி செழிப்பாகவே இருந்தது. புகையிலையும், வெங்காயமும், வாழைகளும் போட்டி போட்டு அந்த மண்ணை நிரவியிருந்தன. சிறிது நேர ஓட்டத்தின் பின்பு கடற்கரை சாலையில் திரும்பிய பஸ் இன்பிருட்டியினூடாக வேகமெடுத்தது. கடற்கரை காற்று உப்புக்கமறலுடன் என் முகத்தில் வீசியது. இன்பிருட்டி அடிப்படையில் மீனவக்கிராமமாகவே இருந்தது. இடதுபக்கம் தென்னை மரங்களுடன் கூடிய பெரும் கல்லு வீடுகளும் , இடதுபக்கம் வாடிவீடுகளும் காணப்பட்டன. வீடுகளில் பலர் வலைகளை செப்பனிட்டுக் கொண்டிருந்தனர். சிறிய ரக வள்ளங்களும், கட்டுமரங்களும் கடற்கரையெங்கும் அணிவகுத்து நின்றன. தூரத்தே கடல் கருநீலத்தில் பரந்து விரிந்து இருந்தது. இதே போல ஒரு கடற்கரை சாலை கொழும்பிலும் இருந்தது .இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் அதிகமாகவே இருந்தன.

பஸ் கடற்கரை சாலையில் ஓடி வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை நெருங்கியது. சிவன் கோவில் அமைதியாக காணப்பட்டது. கோவிலின் முன்னால் பெரிய ஆலமரம் ஒன்று சடைத்து நின்றது .வெய்யிலில் ஓடிவந்த பஸ்சிற்கு அந்த இடம் குளுமையாகவே இருந்தது. எனது மனமோ ஒரு சிறிய ஞாபக வீதியில் பயணம் செய்ய ஆசைப்பட்டது. நான் சிறுவனாக இருந்த பொழுது இந்தக்கோவிலில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அப்பா என்னைக் அழைத்துச் சென்று இருந்தார். அதில் எல் ஆர் ஈஸ்வரியும் கலந்து கொண்டிருந்தா. அந்த நிகழ்வில் அவா பாடிய "பைலட் பிறேமநாத்" படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில்" நாலு பக்கம் சூழ்ந்த சிங்கள தீவு "என்ற வரி வந்தது. அதை எல்.ஆர் ஈசுவரி வாய் தவறி பாட , பார்க்க வந்த சனங்கள் எல்லோரும் அவாவுக்கு எதிராக கோசம் போட, எல் ஆர் ஈசுவரி அதை திருத்தி "நாலு பக்கம் சூழந்த இலங்கை தீவு" என்று பாடினா. அப்பொழுதுதான் சனங்கள் அவாவை தொடர்ந்து பாட அனுமதித்தார்கள். அவ்வளவு தூரத்திற்கு இந்த வல்வெட்டித்துறை வாசிகள் வளமானவர்களாகவும், எதிலும் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருந்தார்கள். நான் ஞாபகவீதியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, பஸ் சிவன் கோவிலைத்தாண்டி சிறிது தூரம் ஓடி வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் நுழைந்தது. இறங்குவதற்கு முண்டியடிக்கும் சனங்களின் ஊடாக நான் மிதந்து சென்று இறங்கிக்கொண்டேன்.

வல்வெட்டித்துறை பஸ்நிலையம் பருத்திதுறையப் போல அதிக சந்தடி இல்லாது இருந்தது . நகரம் என்றாலே ஒருவித பரபரப்பு மக்களிடம் காணப்படும் .ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இருந்தது எனக்கு ஒருவித எச்சரிக்கையுணர்வையே ஏற்படுத்தியது. நான் கடலைப்பார்க்கும் ஆவலில் ஓர் ஒழுங்கையினூடாக கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஓர் அருங்காட்சியகம் போல குண்டுத்தாக்குதல்களிலும், எறிகணைதாக்குதல்களிலும் சிதைவடைந்த கட்டிடங்கள் அங்கே கொட்டிக் கிடந்தன . அவற்றைச் சுற்றி பற்றைகள் வளர்ந்து இருந்தன. எல்லா இடத்திற்கும் வசந்ததை கொண்டுவந்த மன்னர்களின் சேவகர்கள், இங்கு மட்டும் இருட்டையே இந்த மக்களுக்கு காட்டினார்கள். நான் ஒழுங்கையினால் நடந்து சென்ற பொழுது சூரியன் சுட்டெரித்தாலும், பச்சைகளின் நிழல் குடைகள் பல்வேறு வண்ணங்களில் நான்கு புறமும் பரந்து விரிந்து இருந்ததைக் கண்டேன். என்கால்கள் கடல் தண்ணீரில் அமிழ்ந்த பொழுது என் மனமும் நினைவலைகளில் சேர்ந்தே அமிழ்ந்தது. இந்தக் கடற்கரை எத்தனை தண்டையல்களையும், கடலோடிகளையும் பார்த்திருக்கும்?? எத்தனை விதமான சாகசங்களைப் பார்த்திருக்கும்?? இதில்தானே எமது முதல் பாய்மரக்கப்பல் அன்னபூரணி அமெரிக்கா நோக்கி சென்றாள். எத்தனை கடல் சமர்களை இந்த கடல் சந்தித்தது ?? இன்று எல்லாவற்றையும் தன்னுள் புதைத்துக்கொண்டு என்னை நோக்கி பால்குடிக் குழந்தையைப் போலத் தன் அலைகளைத் தவழ விட்டுக்கொண்டிருக்கின்றது இந்தக்கடல். கால்களுக்கடியில் சிறிய நண்டுகள் கடித்ததால் நிஜத்துக்கு வந்தேன்.

நேரம் மதியத்தை தாண்டிக்கொண்டு இருந்தது .கடல் நீர் இளஞ் சூடாக இருந்தது .தூரத்தே சிறிய ரகப் படகுகளும் கட்டுமரங்களும் கடல் நீரில் தவம் செய்து கொண்டிருந்தன.இன்னும் சற்று தூரத்தில் மங்கலாக சரக்குக்கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.மத்தியான நேரமாகையால் கடற்கரை ஓரிரு மனித சஞ்சாரத்துடன் காணப்பட்டது ஒருவித திகில் உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. நான் கைகளில் செருப்புகளை எடுத்துக்கொண்டு, கடல் குரு மண்ணில் கால்கள் புதையப் புதைய மீண்டும் நான் வந்த ஒழுங்கையை நோக்கி நடந்தேன். அப்பொழுது ஒருவர் ஒற்றைக் காலுடன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். சாப்பிடக் காசில்லை எனவும் காசு இருந்தால் தரும்படி கூசிக் கூசி என்னிடம் கேட்டார். அவரின் முகம் பசியின் கொடுமையை அப்படியே காட்டியது. உடல் மெலிந்து கட்டுக்குலைந்து இருந்தது. நான் அவருடன் கதைத்ததில், தான் ஒரு முறை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுது கடல் கண்ணி வெடியில் சிக்கி கால் போய்விட்டது என்றார். கால் இல்லாமையால் தான் இப்பொழுது தொழில் செய்வதில்லை என்றும், வலை பின்னுவது,மீன்களை கருவாடு போடுவது போன்ற சிறு சிறு உதவிகளை சம்மாட்டிகளுக்கு செய்து கொடுப்பதாக சொன்னார். நான் தொடர்ந்தும் அவரது மனதை புண்படுத்த விரும்பாது எனது கால்சட்டை பொக்கற்ருக்குள் இருந்த நூறு ரூபாய் நோட்டுக்களில் ஐந்தை அவரிடம் கொடுத்தேன். அவர் கண்களில் இயலாமையின் வெளிப்பாடாக கண்ணீர் முட்டியது. நான் அவரின் முகத்தை பார்க்க முடியாது பார்வையை திருப்பிக்கொண்டு அவரிடம் விடை பெற்றேன்.


Posted Image

யுத்தம் வெறுமனே களத்தில் ஆயுதங்களுடன் மோதவில்லை .மனிதமனங்களுடனும் உடலுடனும் நிறையவே மோதியிருக்கிறது .மனதை இழந்து அங்கத்தை இழந்து நடைபிணங்கள் பல யுத்த வெற்றியின் எதிர்வினையாக நேரடிசாட்சியாக நடமாடுவதை கண்ணாரக் கண்டு என்மனம் துவண்டது. சோர்ந்த நடையுடன் சிவன் கோவில் பக்கமாக எனது கால்கள் நகர்ந்தன. மீன்றும் கோவிலடி ஆல மர நிழலில் நின்று சிறிது நேரம் வேடிக்கை பார்த்தேன் .எதிரே இருந்த வல்வெட்டித்துறை மத்தியமகா வித்தியாலயத்தில் உள்ளே இருந்து மாணவர்களது இரைச்சல் காதுகளை துளைத்தது. வெளியே மாணவர்களை அழைத்துச் செல்ல பெற்றவர்கள் காத்து நின்றார்கள். ஒவ்வோர் முகத்திலும் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் கனவுகளாய் விரிந்து இருந்தது. திடீரென அரசசேவகர்களின் பச்சைப் படையணி ஒன்று சைக்கிள்களில் பருத்தித்துறை நோக்கி விரைந்து சென்றது. அவர்களுக்கும் என்ன அவசரமோ சிலவேளை இல்லாத புலியை அதன் புழுக்கை வாசத்தில், இருப்பதாக நினைத்து ஓடுகின்றார்களோ என்று என் மனம் என்னிடம் கிண்டல் தொனியில் கேட்டது நான் அதை சும்மாய் இரு என்று அடக்கினேன் சிலவேளைகளில் இந்த மனது அடங்கிய மாதிரி நடித்தாலும் அது

தூரத்ததே பஸ் வருவது தெரிந்தது என்னுடன் ஒருசிலர் ஏறிக்கொண்டனர். வல்வெட்டித்துறை கடற்கரையின் கோலமும் அங்கு சந்தித்த மனிதர்களும் எனது மனதை, பனமட்டைக்கருக்கால் விளாறியது போல செய்திருந்தனர். வல்வெட்டித்துறை என்னை விட்டு மெதுமெதுவாக மறைந்து கொண்டிருந்ததது. வழியில் வந்த காட்சிகளை என்கண்கள் காணமுடியாதவாறு மனதுமுட்ட வலிகளே நிரம்பி இருந்தன. நான் ஆயாசத்துடன் கண்களை மூடிகொண்டேன். முக்கால் மணிகளை விழுங்கிய பஸ் என்னைத் தம்பசிட்டிப் பள்ளிக்கூடதடியில் இறக்கிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. நேரம் மதியம் ஒருமணியைக் கடந்து இருந்தது சனங்கள் வெய்யிலின் கொடுமையினால் வீட்டிற்குள் அடைந்து இருந்தார்கள். ஒழுங்கையினால் வீடு நோக்கி நடக்க தொடங்கினேன் .பூவரசு மரங்களும் இப்பிலிப்பில் மரங்களும் ஒழுங்கை வேலிகளை நிறைத்து இருந்ததினால் ,ஒழுங்கை குளிர்மையாகவே இருந்தது. அந்தக் குளிர்மையை அனுபவித்தபடியே எனது நடையை வேகப்படுத்தினேன். இடையில் வந்த கதிரவேற்பிள்ளை வாசிகசாலையில் சனங்கள் இருந்து படித்துக்கொண்டிருந்தார்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்றும் சனங்களுக்கு வாசிகசாலைகளில் இருந்து படிப்பது ஒரு திறிலாகவே இருந்தது. நடந்து நடந்து கால்கள் வலி எடுத்ததால் பண்டாரி அம்மன் கோவிலடியில் சிறிது நேரம் நிற்கவேண்டும் போல மனது சொல்லியது. கட்டளையை மூளை கிரகிக்க எனது உடல் தானாகவே கோவிலின் முன்னால் இருந்த மரநிழலில் ஒதுங்கியது.

கோவில் சுற்றாடல் அமைதியாக இருந்தது. நான் அமர்ந்திருந்த மரத்தின் மேலே அணில்கள் துள்ளி விளையாடின. தூரத்தே ஓரிரு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வீச வேண்டிய காற்று அமைதி காத்தது. பண்டாரியம்மனுக்கு பூசை செய்யும் நேரத்தில் சிறிது கூட்டம் வரும். மிகுதி நேரத்தில் இந்த அம்மனும் யாருமற்ற அனாதையாகவே இருக்கின்றாள். இந்த இடமும் சூழலும் என்மனதை கிளரச்செய்தன. இப்படியே இந்த சூழலில் இருந்துவிடலாமா என்றுகூட என்மனது ஏங்கியது. இந்தமனம் இருக்கிறதே இயற்கை தந்த ஒரு அற்புதமான அமைப்பு. இந்த மனதில்தான் மனிதன் தான் விரும்பியவாறு பயணம் செய்ய முடியும். இந்த மனமும் இல்லாவிட்டால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான். சிறிது நேரம் சூழலை ரசித்துவிட்டு மீண்டும் நடையைத் தொடங்கினேன். என்னை அதிக நேரம் காணாது வீட்டு கேற்றடியில் எமது வீட்டு நாய் நின்றுகொண்டிருந்தது. என்னைக்கண்டதும் நாலுகால் பாய்ச்சலில் ஓடிவந்து என்மேல் பாய்ந்து புரண்டது. இந்த ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கும் எம்மைப்போல பந்தபாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என்மீது விழுந்து புரண்ட நாய்க்குப் போக்குக்காட்டியவாறே வீட்டினுள் நுழைந்தேன். காலையில் இருந்து அலைந்ததினால் மனதும் உடலும் ஒரேசேரக் களைத்து இருந்தன. மத்தியான சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு சிறிது குட்டிதூக்கம் போட்டேன். நான் மீண்டும் எழும்பிய பொழுது மாலை ஆறுமணியைத் தாண்டி விட்டிருந்தது. மனைவி தந்த தேநீரைப் பருகியவாறே கருணாகரனின் எண்களை எனது தொலைபேசியில் தடவி ஒற்றினேன். சிறிது இடைவெளியில் கருணாகரனின் கரகரப்பான குரல் ஒலித்தது. பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்கிடையே நாளை நான் அவரிடம் வரவிருக்கும் செய்தியை சொன்னேன். தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக சொன்னார்.

நாங்கள் கொழும்பு செலவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மனைவியும் மாமியும் இறுதிநேரத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனக்கோ ரவுணுக்குப் போக வேண்டும் போல இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு பிளெயின் ரீயும், றோல்சுடனும் கையில் சிகரட்டுமாக மம்மல் பொழுதில் தனிய இருக்க என் மனது ஆவல்பட்டது. மாமாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு பருத்தித்துறை ரவுணுக்கு புறப்பட்டேன். நீண்டகாலதிற்குப் பின்னர் சைக்கிள் ஓடுவதால், ஆரம்பத்தில் எனது சொல்கேட்க அடம்பிடித்த சைக்கிள், இப்பொழுது என்சொல்கேட்டு ஒழுங்கையில் ஒழுக்கமாகச் சென்றது. சிறிது நிமிடங்களை விழுங்கிய சைக்கிள் நான் வழக்கமாக ஒதுங்கும் ரீ கடையில் ஒதுங்கியது. என்னைக்கண்டதும் சீனி போடாத பிளெயின் ரீயையும் றோல்சையும் கடைப்பையன் என்னருகே கொண்டுவந்து வைத்தான். ஒருமுறை நான் கொடுத்த பேச்சால் என்னை கண்டதும் சிங்கள பைலாவை நிறுத்தி தமிழ்ப் பாட்டைப் போட்டுவிட்டான். தேநீரின் ஆவியும் வாசனையும் என்னைக் கிறுங்கடித்தன. பொன்னிறமாக இருந்த தேநீர் என்னுடன் மௌனமொழி பேசியது . சிறிது நேரம் அதனை வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தேன் . தேநீரில் பல முகங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. மனதில் இனம்புரியாத வலியொன்று அவ்வப்பொழுது எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. நான் எவ்வளவோ இந்த மனதை சந்தோசப்படுத்த முயற்சி செய்தாலும் இறுதியில் தோல்வியத்தான் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.
தேநீரையும் றோல்சையும் எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்தேன். ரவுணை இருள் மெதுமெதுவாகத் தன்பிடியில் கொண்டு வந்தது. ஓரிரு பஸ்களே பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்ல நின்றிருந்தன. சனங்கள் அவசரமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். நான் சிகரட்டை பற்றவைத்துக்கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்தேன். அப்பொழுது எனது மனமோ "இந்த அமைதியான வாழ்க்கை இன்னும் ஓரிரு நாட்கள் தானே மீண்டும் நாலுகால் பாய்ச்சலில் ஓடத்தானே போகின்றாய்" என்று என்னிடம் நக்கல் அடித்தது. இந்த இடம் எனக்கு அன்னியமாகி போனதன் வலி என்னை ஆட்டிப்படைத்தது. ரீ கடையில் நிற்கப்பிடிக்காமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி மிதிக்கத் தொடங்கினேன் .ஒழுங்கையை இருட்டு அப்பியிருந்தது. வானில் நட்சத்திரங்கள் பாயாக விரிந்திருந்தன .அவற்றின் ஒளியில் சைக்கிளை வேகமாக உழக்கினேன். வீட்டில் இரவுச்சாப்பாடாக தோசையும் இடிசம்பலும் மாமி செய்திருந்தா. சாப்பிட்டுவிட்டு கருணாகரனை சந்திக்கும் ஆவலில் நித்திரைக்குச் சென்றேன்.

தொடரும்


கோமகன்
22 புரட்டாசி 2014Tuesday, September 16, 2014

கிளி அம்மான்(சிறுகதை) -கோமகன்


கிளி அம்மான்(சிறுகதை) -கோமகன்இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூடி வெண்மையாக இருந்தது.நேர் எதிரே இரண்டு மாடிக்கோபுரங்களுக்கு இடையில் முழு நிலவு அப்பளமாக வானில் பரவியிருந்தது. சாதாரணமாக இந்தக் காட்சிகளில் நேரக்கணக்காக மயங்கி நின்று இருக்கின்றேன்.ஆனால் இன்று கிளி அண்ணையின் நினைவுகள் என் மனதை வலிக்கச்செய்தன.எனது கைகள் தன்னிச்சையாக சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தன.
0000000000000


ஏறத்தாழ இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு இதை விடக் கடுமையான குளிர் காலத்தில் தான் எனக்கு கிளி அண்ணையின் அறிமுகம் கிடைத்தது .அன்று சைபரில் இருந்து கீழே இறங்கி பத்துப் பாகையை பாதரசம் தொட்டுக்கொண்டிருந்தது.வரலாறு காணாத குளிர் என்றபடியால் அந்தக்குளிரில் எல்லோருமே அல்லாடினார்கள்.நான் வேலையை முடித்துக்கொண்டு வெளியில் வந்த பொழுது பனி பெய்துகொண்டிருந்தது.தரையில் சப்பாத்துகளை மூடி பனி கிடந்தது. நான் பாதாள ரெயில் நிலையத்தை அடைய முன்பே எனது கைகால்கள் குளிரால் குறண்டி இழுத்தன.குளிருக்கு கபே குடித்தால் சுப்பறாக இருக்கும் என்று நினைத்துகொண்டே அருகில் இருந்த கபே பாருக்குள் நான் நுழைய முயன்ற பொழுது,”தம்பி நீங்கள் தமிழோ ??”என்ற குரல் கேட்டு எனது கால்கள் நின்றன.குரல் வந்த திசையில் எனது பார்வை போன பொழுது, அங்கே ஒரு கட்டுமஸ்தான நெடிய உருவம் நின்றிருந்தது.”ஓம் வாங்கோ .உள்ளுக்கை போய் கதைப்பம்” என்றவாறே உள்ளே நுழைந்தேன்.அந்த உருவம் என்னருகே தயங்கியவாறே நின்றது.இருவருக்கும் கபே சொல்லிவிட்டு, “சொல்லுங்கோ அண்ணை.என்ன விசயம்??” என்றேன்.” தம்பி என்ரை பேர் கிளி.இப்ப எனக்கு கொஞ்ச நாளாய் இருக்க இடம் இல்லை. வெளியிலைதான் ஒரு பார்க்கிலை படுத்து எழும்பிறன்.இண்டைக்கு செரியான குளிராய் கிடக்கு.நான் உங்களோடை வந்து இருக்கலாமோ”? என்றார். 

முன் பின் தெரியாதவர் ஒருவர் என்னிடம் இப்படி கேட்டது எனக்கு திகைப்பையே ஏற்படுத்தியது.ஆனாலும் நான் அதை வெளிக்காடாமல் அவரயிட்டு விசாரிக்கத் தொடங்கினேன்.”தம்பி என்னை பற்றி பெரிசாய் ஒண்டும் சொல்ல இல்லை.நீங்கள் ஓம் எண்டு சொன்னால் நான் உங்களை என்ரை வாழ்க்கையிலை மறக்க மாட்டன்”என்றார் கிளி அண்ணை.அவருடைய தோற்றமும், கதைக்கும் முறையும் அவர் பொய் சொல்பவராகத் தெரியவில்லை.நாங்கள் எல்லோருமே ஆரம்பத்தில் வரும் பொழுது கையில் ஷொப்பிங் பாக்குடன் வந்தவர்கள் தான்,அதை நான் என்றுமே மறந்தது இல்லை.குளிரில் ஒரே நாட்டை சேர்ந்தவன் ஒருவன் விறைக்க, நான் அவரைக் காய்வெட்ட எனது இளகிய மனதுக்கு உடன்பாடாகத் தெரியவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக,”சரி அண்ணை.என்ரை றூமிலை நாலு பேர் இருக்கிறம்.சின்ன அறை. நீங்கள் இருக்கிறது எண்டால் நிலத்திலைதான் படுக்கவேணும்.உங்களுக்கு பிரச்னை இல்லையெண்டால் சொல்லுங்கோ” என்றேன்.தான் உடனடியாகவே வருவதாக சொன்னார். 

நாங்கள் இருவரும் பாதாள ரயில் நிலையத்தில் இறங்கினோம்.எனது பெயரில் அறை இருப்பதால் அறை நண்பர்கள் பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றே நம்பினேன்.கிளி அண்ணை இறுக்கமாகவே


இருந்தார்.நாலு கேள்வி கேட்டால் ஒரு பதில் வந்தது. நாங்கள் அறைக்குப் போன பொழுது இரவு பன்னிரெண்டு மணியாகி விட்டிருந்தது.அறை நண்பர்களான ரகு,குணா,சுகு வேலையால் வந்து ரெஸ்லிங் கொப்பி போட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.குசினியில் சமைத்து இருந்தது .அனேகமாக ரகுதான் சமைத்து இருப்பான்.ஆட்டு இறைச்சி கறி வாசம் மூக்கைத் துளைத்தது.நான் அவர்களுக்கு கிளி அண்ணையை அறிமுகப்படுத்தினேன்.சுகு என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான்.நாங்கள் சமைத்ததில் கிளி அண்ணைக்கும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு படுத்தோம்.நான் படுத்திருந்த கட்டிலுக்கு கீழே இருந்த கட்டிலில் இருந்த சுகு,” உது ஆர் மச்சான் “?? என்று என்னை நோண்டினான்.சுகுவுக்கு எல்லாம் விலாவாரியாக சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு தலை வெடித்து விடும்.நான் அவனுக்கு விடிய சொல்வதாக சொல்லி விட்டுப் படுத்து விட்டேன். 

மறுநாள் காலையில் “புஸ்… புஸ் ” என்று சத்தம் எனது நித்திரையை குலைத்தது.நான் கட்டிலில் இருந்து இறங்க மனமில்லாது,கட்டிலின் கரைக்கு உருண்டு வந்து கீழே எட்டிப்பார்த்தேன்.கிளி அண்ணை தான் படுத்திருந்த படுக்கையை மடித்து வைத்து விட்டு “புஷ் அப்” எடுத்துக் கொண்டிருந்தார்.சுகு அவருக்கு அருகே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.கிளி அண்ணையின் கட்டான உடல் கீழும் மேலுமாக நடனமாடியது.நான் நித்திரை குலைந்த எரிச்சலில் “என்னண்ணை விடியக்காத்தாலை ??” என்றேன். “தம்பி உமக்குத் தெரியாது.விடியப்பறம் எக்ஸ்சயிஸ் செய்யிறது உடம்புக்கு நல்லது.எழும்பும்.நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன்”.என்று குசினிக்குள் போனார் கிளி அண்ணை.என்னிலும் பார்க்க வயது மூத்தவரை என்னால் எதிர்த்துக் கதைக்க முடியாமல் இருந்தது. நான் ,எனக்குள் புறுபுறுத்தவாறு படுக்கையை மடித்து வைத்தேன். படுக்கையை மடித்து வைக்காத சுகு, கிளியண்ணையிடம் செப்பல் பேச்சு வாங்கினான். நானும் சுகுவும் வேலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் இருவருக்கும் கிளி அண்ணை தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்து தந்தார் ……..
000000000

அறையில் வந்த உடனேயே எதுவும் பாராது தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் கிளி அண்ணையை எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு நிம்மதியாக இருந்தது.ஆனாலும் சுகு உடனடியாக அவருடன் சேராது முரண்டு பிடித்தான்.சுகுவின் சோம்பல்த்தனத்தை கிளி அண்ணை கண்டித்ததால் அவன் அவர்மேல் கடுப்பாக இருந்தான். 

நான் அன்று மாலை வேலையால் வரும்பொழுது கிளி அண்ணை போடுவதற்கு நான்கைந்து சேர்ட்டுக்களும் கால்சட்டையும் வாங்கி வந்தேன்.முதலில் கடுமையாக வாங்க மறுத்த அவர்,எனது அழுங்குப்பிடியினால் அவற்றை வாங்கிக் கொண்டார்.எதிலும் யாரிடமும் கடமைப்படாத அவரின் குணம் என்னை வெகுவாகவே கவர்ந்தது .அவர் அறைக்கு வந்ததின் பின்பு எல்லோரும் ரெஸ்லிங் பார்ப்பது நின்றது.”வெறும் நடிப்புக்காக யாரோ சண்டை பிடிப்பதை ஏன் நீங்கள் காசுகளை குடுத்து பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள்?” என்பது அவரின் வாதம்.அவரது விளக்கம் ரகு ,சுகு, குணாவைக் கவர்ந்தாலும்,”உப்புடியே எல்லாத்துக்கும் கதை சொன்னால் நாங்கள் பொழுது போக்கிறதுக்கு என்ன செய்யிறது?” என்று கிளி அண்ணையைப் பார்த்து இடக்காகவே சுகு கேட்டான். அவனது கேள்விக்கு கிளி அண்ணை கோபப்படாது “உங்களுக்கு பொழுது தானே போகேலை?நான் உங்களுக்கு செஸ் விளையாட சொல்லித்தாறன் “என்று அதை செயலிலும் காட்டினார்.செஸ் விளையாடுவதில் கிளி அண்ணையை யாருமே வெல்ல முடியவில்லை.எல்லோரையும் உள்ளே வரவிட்டு பெட்டி அடித்து செக் வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்.அவர் செஸ் விளையாடும் பொழுது கைகளும் கண்களும் செஸ் போர்டை ஒருவிதமான குறுகுறுப்புடன் பார்த்தபடியே இருக்கும்.எப்பொழுது செக் வைப்பார் என்று யாருக்குமே தெரியாது.எனக்கு முதலில் இந்த விளையாட்டில் ஆர்வம் இல்லாது போனாலும் காலப்போக்கில் அவரின் விளையாட்டு ரசிகனானேன்.அவர் விளையாடும் பொழுது சுகு வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான்.ஒருநாள் அவன் அடக்க மாட்டாதவனாய் “அண்ணை நீங்கள் இயக்கத்திலை இருந்தியளோ ?ஏனென்டால் அங்கை இருந்தவைதான் உப்பிடி கட்டுசெட்டாய் இருப்பினம்” என்றான். அவர் ஓம் என்றும் சொல்லாது, இல்லை என்றும் சொல்லாது சிரித்தபடியே, ” உமக்கு எப்பவும் பகிடிதான் சுகு” என்றார்.என்னால் அவரை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.இருக்க இடம் இல்லாமல் நடு றோட்டில் குளிருக்குள் விறைத்துக் கொண்டு நின்ற ஒரு சக தமிழனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றேன் என்ற எல்லைக் கோட்டிலேயே நான் நின்று கொண்டேன். 
0000000

அமைதியாக சென்று கொண்டிருந்த கிளி அண்ணையின் வாழ்வில் தாயகத்தில் இருந்தும்,இங்கிருந்தும் இரு புயல்கள் ஒரேநேரத்தில் தாக்கின.தாயகத்தில் பலாலியில் நடந்த ஒரு குண்டு வீச்சில் அவரது அப்பா ,அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பலியான செய்தி அவருக்கு வந்தது.இங்கோ அவருடைய அகதி அந்தஸ்துக் கோரிக்கையை உள்துறை அமைச்சு நிராகரித்து இருந்தது .கிளி அண்ணை இடிந்தே போய் விட்டார்.நானும் குணாவும் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தோம்.அவரால் அந்த இரு சம்பவங்களிலும் இருந்து மீளமுடியவில்லை.நாளடைவில் கிளி அண்ணையின் போக்கில் மெதுமெதுவாக மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.முதலில் பியரில் ஆரம்பித்த அவரின் தண்ணி அடிக்கும் பழக்கம்,இப்பொழுது விஸ்கி வரைக்கும் முன்னேறி இருந்தது .எவ்வளவோ மனக்கட்டுப்பாடாகவும், மற்றயவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்த கிளி அண்ணையின் போக்கு எனக்கு கவலையையே தந்தது.அவரின் திடீர் பழக்கங்கள் சுகுவை எரிச்சல் ஊட்டின.அவன் அடிக்கடி காரணமில்லாது அவருடன் கொழுவ ஆரம்பித்தான்.சில வேலைகளில் கிளி அண்ணை இரவில் நித்திரை கொள்ளும் பொழுது இருந்தாற்போல் கடும் தூசணத்தில் , “அடியடா…… அடியடா……. அந்தா…. அந்தா…. அந்த பத்தையுக்கை நிக்கிறான். இந்தா இங்கை பின்னாலை வாறான். விடாதை……… செவிள் அடி குடு. அடியடா….. அடியடா ……. ” என்று கத்துவார்.அப்பொழுது அவருக்குப் பக்கத்தில் படுத்து இருக்கும் சுகு பயந்து போய் அவரை தட்டி எழுப்பி ” என்னண்ணை செய்யிது? ” என்று கேட்டு குடிக்கத் தண்ணி கொடுப்பான் .அந்த நேரம் கிளி அண்ணை வியர்த்து விறு விறுத்து அலங்க மலங்க முழித்தபடி இருப்பார். கிளி அண்ணை கனவில் கத்துவது தொடர்ந்து கொண்டே இருந்தது. 

ஒருநாள், நான் மாலை வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பிய பொழுது கிளி அண்ணையை வீட்டில் காணவில்லை. அவருடைய உடுப்புகள் வைக்கும் இடம் வெறுமையாக இருந்தது. எனது உதவிக்கு நன்றி சொல்லி தன்னை யாருமே தேடவேண்டாம் என்ற கடிதமே எனக்கு மிஞ்சியிருந்தது.சுகு தன்னால்தான் கிளி அண்ணை கோபித்துக்கொண்டு போய் விட்டார் என்று மறுகினான். நாங்கள் எல்லோருமே அவரைத் தேடினோம்.அது அவ்வளவு சுலபமாக எங்களுக்கு இருக்கவில்லை.ஏனெனில் அவர் தன்னையிட்டு பெரிதாக எதுவுமே எங்களுக்கு சொல்லியிருக்கவில்லை.நாங்கள் அவரைத் தேடிக்கொண்டே இருந்தோம்.இறுதியில் அவர் எங்களுக்கு கிடைக்கவே இல்லை. கிளி அண்ணை சொல்லாமல் கொள்ளாமல் திடீரென தலைமறைவானதால் எங்கள் அறையில் இருந்த சந்தோசம் பறிபோய் விட்டது.

0000000
காலம் தன் கடமையை செவ்வனே செய்து மூன்று வருடங்களை முன்னகர்த்தியது. குணாவுக்கும் சுகுவுக்கும், ரகுவுக்கும் “கலியாணம்” என்ற வசந்தம் வீசியது.அவர்கள் “பச்சிலர் வாழ்க்கையை விட்டு குடும்ப வாழ்வுக்குள் நுழைந்து கொண்டனர்.ஆனாலும் இடைக்கிடை அவர்கள் குடும்பத்துடன் வந்து போனவர்கள் பின்பு படிப்படியாக தங்கள் தொடர்புகளை குறைக்கத் தொடங்கினார்கள். நான் தனித்து விடப்பட்டேன். மறந்திருந்த கிளி அண்ணையின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன. நான் தான் அவரை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேனோ என்றே இப்பொழுது அதிகமாகக் கவலைப்பட்டேன். 

ஒருநாள் மாலை வேலை முடிந்து லாச்சப்பலுக்கு சாமான்கள் வாங்கப்போனேன்.அப்பொழுது லாச்சப்பலில் ஒரிரண்டு கடைகளும் ,எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்களது உணவகங்களுமே இருந்தன. ஆனால் லாச்சப்பல் பின்னேரங்களில் எப்பொழுதுமே எங்கள் சனங்களால் திமிறும்.வட்டிக்கு குடுப்பவர்களும், சீட்டு கட்டுபவர்களும், உணவகங்களில் வேலை செய்வோரின் இடை நேரப் பொழுது போக்க வந்தவர்களும் தான் இங்கு கூடுதலாக கூடுவார்கள்.அன்றும் அப்படித்தான் சனம் அலை மோதியது.நான் சனங்களின் ஊடாக முன்னேறினேன்.தூரத்தே நடு றோட்டில் ஒரு உருவம் லெப்ட். ரைட்… லெப்ட் … ரைட் … என்று கைகளை விசுக்கியவாறு மார்ச் பண்ணியவாறு வெறும் காலுடன் நடந்து வந்தது.இடையிடையே புழுத்த தூசணத்தில் அடியடா…….. அடியடா ……..அங்கை நிக்கிறான். பின்னாலை நிக்கிறான். செப்பல் அடி குடடா ……….. என்றவாறே கையை துவக்கு மாதிரி வைத்துக்கொண்டு டப் டப் என்று வாயால் அபினயித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. 

எனக்கு இந்த வசனத்தை கேட்டதும் மண்டையில் பொறி தட்டியது. “கிளி அண்ணையாய் இருக்குமோ” என்று நினைத்தவாறே சனங்களை விலத்தியவாறே அந்த உருவத்துக்கு கிட்ட போனேன். எனக்கு உலகமே இருண்டது .அது கிளி அண்ணையேதான். நான் கிட்டப் போய் கிளி அண்ணையை பிடித்து உலுக்கினேன்.அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை.புத்தி பேதலித்தவராகவே அவர் காணப்பட்டார். நான் அவரை பிடித்து இழுத்து றோட்டுக்கரைக்கு கூட்டிவந்தேன். அவரின் முகம் கன நாட்களாக ஷேவ் எடுக்காமல் தாடி புதர் போல் மண்டி இருந்தது.ரவுசரரின் ஒரு பக்கம் முழங்காலுக்கு கீழே இல்லாமல் இருந்தது.கால்களில் சப்பாத்து இல்லை.அவரின் உடலில் இருந்து புளித்த வைனின் வாசம் மூக்கைத் துளைத்தது.கண்கள் இரண்டும் உள்ளுக்குப் போய் பூஞ்சையாக இருந்தது.எனக்கு அவரின் கோலத்தைப் பார்க்க அழுகை அழுகையாக வந்தது.” இதென்னண்ணை கோலம் ?? ஏன் என்னை விட்டுப் போனியள்? வாங்கோ வீட்டை போவம் “என்று அவரை அழைத்தேன். அவர் கையை மேலே காட்டினார். அவரின் பிடிவாதம் எனக்கு தெரிந்ததுதான். “எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்க காசு தா “என்று வாயை கோணியவாறே கேட்டார்.எனக்கு அவர் இருந்த நிலையில் காசு கொடுக்க மனம் வரவில்லை.கொடுத்தால் மீண்டும் “விஸ்க்கி ” அடித்து விட்டு இருப்பார் என்றே நினைத்தேன் .” சரி வாங்கோ சாப்பிடுவோம் ” என்றவாறே எனது நண்பனின் உணவகத்தில் நுழைந்தேன்.” வா மச்சான். என்ன வைன் கோஸ்ரியளோடை தொடுசல் வைச்சிருக்கிறாய்”? என்று ஒருமாதிரியாக வரவேற்றான் நண்பன். “மச்சான் இவர் முந்தி என்ரை அறையிலை இருந்தவர்.இருந்தால் போலை காணாமல் போட்டார். எவ்வளவுகாலமாய் இவர் இங்கை இருக்கிறார் எண்டு உனக்கு தெரியுமே?”என்றேன்.”அதை ஏன் கேக்கிறாய். உந்தாளாலை இங்கை நெடுக பிரச்சனைதான் .ஊத்தை குடி.மண்டையும் தட்டி போட்டுது. றோட்டிலை நிண்டு மார்ச் பாஸ்ற் செய்து கொண்டு போறவாற சனத்தை தூசணத்தால பேசிக்கொண்டு இருக்கும்.ஒருத்தரும் அண்டிறேல .உந்தாள் திருந்தாத கேஸ் மச்சான். நான் பாவம் பாத்து இடைக்கிடை சாப்பாடு குடுப்பன். நீ றோட்டிலை போற ஓணானை தூக்கி கழுத்துக்கை விடுறாய் ” என்றான்.எனக்கு நண்பனது பேச்சு கோபத்தை வரவழைத்தது.” மச்சான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்காதை. இவர் எனக்கு தெரிஞ்சவர். ஒவ்வரு நாளும் இவருக்கு சாப்பாடு குடு.உனக்கு நான் காசு தாறன்” என்றேன் .” இல்லை மச்சான் என்ரை வியாபாரமேல்லோ கேட்டு போடும்? என்ற நண்பனை இடை மறித்து,” மச்சான் எங்கடை முதல் சீவியத்தை ஒருக்கால் யோசிச்சு பார்.இவருக்கு ஒரு சாப்பாடு குடுக்கிறதால உன்ரை வருமானம் ஒண்டும் கெட்டு போகாது.எனக்காக செய்யடாப்பா “என்றேன். “சரி மச்சான் நீ எனக்கு எவ்வளவு செய்தனி உனக்காக செயிறன்” என்றான் நண்பன்.நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கதைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல கிளி அண்ணை தனது உடம்பை சொறிந்து கொண்டிருந்தார்.நான் ஓடர் பண்ணிய மரக்கறி சாப்பாடு வந்தது.கிளி அண்ணை ஒருவித கெலிப்புடன் சோற்றை அள்ளி அள்ளி வாயினுள் அடைந்தார்.அதில் அவரின் பசி அப்பட்டமாகவே தெரிந்தது. கிளி அண்ணை எப்பொழுதுமே நிதானமாக உள்ளங்கையில் சாப்பாடு படாமல் சாப்பிடுபவர்.அவர் சாப்பிட்டதன் பின்பு கோப்பை துடைத்த மாதிரி இருக்கும்.அவ்வளவு தூரத்துக்கு சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்தவர்.இன்று அவர் சாப்பிடுவதைப் பார்க்க எனக்கு விசரே பிடித்தது .அவர் வாயிலும் உடலிலும் சோற்றுப்பருக்கைகள் பரவி இருந்தன.நான் பொறுமையாக ரிஸ்யூ பேப்பரால் அவற்றைத் துடைத்து விட்டேன்.நான் இறுதியாக அவரை வீட்டிற்கு வரும்படி மன்றாடினேன். அவரோ வேறு உலகில் இருந்தார்.கையை மேலே மேலே தூக்கிக் காட்டிக்கொண்டிருந்தார்.நான் மனம் கேட்காமல் அவர் பொக்கற்றினுள் நானூறு பிராங்குகளை வைத்து விட்டுக் கனத்த மனத்துடன் அறைக்குத் திரும்பினேன்.

காலம் மூன்று மாதங்களை விழுங்கி எப்பமிட்டவாறே என்னைப் பார்த்து இழித்தது .காலத்துக்கும் எனது வேலைக்கும் சண்டையே நடந்து நான் அதனுள் அமிழ்ந்து போனேன்.கிளி அண்ணையின் நினைவுகளும் அதனுள் அமிழ்ந்துபோனது.குளிர்காலம் மொட்டவிழ்க்கின்ற மாதத்தின் தொடக்கப்பகுதி ஒன்றின் ஒருநாள் இரவு வேலை முடிந்து அலுத்துக்களைத்து அறைக்குத் திரும்பினேன். தொடர் வேலை உடம்பு இறைச்சியாக நொந்தது.சமைப்பதை நினைக்க கடுப்படித்தது.எனது கைத்தொலைபேசி சிணுங்கல் வேறு எரிசலூட்டியது.வேண்டா வெறுப்பாக அழைப்பை எடுத்தேன். தொலைபேசியில் குணா பரபரத்தான்,” மச்சான் விசையம் கேள்விப்பட்டியோ?? எங்களோடை இருந்த கிளி அண்ணை ரெயிலுக்கை விழுந்து செத்துப்போனாராடா. இயக்கம் வேறை “மேஜர் கிளி அம்மான்” க்கு வீரவணக்கம் எண்டு லாச்சப்பலிலை நோட்டிஸ் அடிச்சு ஓட்டியிருக்கிறாங்கள் .நான் ஆஸ்பத்திரிக்குப் போறன். நீ அங்கை வா. என்று குணா சொல்லி முடிக்க எனக்கு உலகம் இருண்டது.கிளி அண்ணை இயக்கத்திலை பெரிய ஆளாய் இருந்தவரா?? அப்படியெண்டால் ஏன் இயக்கம் அவர் கெட்டு நொந்த நேரம் அவரை பொறுப்படுக்கவில்லை?? இப்ப என்ன மசிருக்கு நோட்டிஸ் அடிச்சு ஓட்டுறாங்கள்?? என்று கேள்விகள் என்மனதை குடைந்தன.

என்னால் கிளி அண்ணையின் அவலச்சாவை தாங்க முடியவில்லை.கிளி அண்ணையின் உடலத்தை பொறுப்பெடுக்க வைத்தியசாலை நோக்கி விரைந்தேன்.வைத்தியசாலையில் குணா எனக்காகக் காத்திருந்தான் .சுகுவும், ரகுவும் ,வந்திருந்தார்கள்.சுகு அழுது கொண்டு நின்றான்.நாங்களே செத்தவீட்டை செய்வதாக முடிவெடுத்தோம்.செத்தவீட்டுக்கு ஓர் மலர்ச்சாலையை பதிவு செய்தோம்.எங்கடை சனங்களுக்காகக் களமாடி தன் வாழ்வையே தொலைத்த கிளி அம்மானுடைய செத்த வீட்டுக்கு எந்தச் சனமுமே வரவில்லை,நோட்டிஸ் ஒட்டியவர்கள் உட்பட. நான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு மின்சார அடுப்பின் பொத்தானை தட்ட, கிளி அண்ணை என்ற கிளி அம்மானின் உடலம் மெதுவாக மின்சார அடுப்பினுள் நகர ஆரம்பித்தது.
000000

நன்றி : http://eathuvarai.net/?p=4401

கோமகன்
16 ஆவணி 2014


Friday, September 12, 2014

ஏக்கத்தின் குரல் ஒன்று


ஏக்கத்தின் குரல் ஒன்று 


சோளகக் கொல்லையிலே
ஒற்றையனாய் நிக்கும்
பொம்மையைப் போல ,
வன்னிச் சிறுவன் அவன்
பெருங்குரல் எடுத்துப் பாடுகின்றான் .

பட படவென வலசை போகும் கூளைக்கடாவே
களமாடச் சென்ற அண்ணாவை கண்டாயா??
மைனாவே மைனாவே
மையல் கொண்ட மைனாவே...
ஒரு இரவில் காணமல் போன அக்காவை கண்டாயா ??

ஆக்காட்டியே ஆக்காட்டியே !!!
உனக்கு அம்மா போகும் இடம் சொன்னாளா ??
புலுனியே புலனியே
கொட்டும் மழையில் போன அப்பாவை கண்டாயா ??
ஆத்தில் போட்ட மண் போல
அவலமாய் எல்லாம் முடிய ,

தன்னந் தனியனாய் இழந்தவர்களை தேடி
பறவைகளை தூது விட்டு
பெருங்குரல் எடுத்துப் பாடுகின்றான்
அந்த வன்னிச் சிறுவன் .

கோமகன்
12 ஆவணி 2014

Saturday, September 6, 2014

நானும் என்ரை வாத்திமாரும்

நானும் என்ரை வாத்திமாரும்பிள்ளையள் வணக்கம். எல்லாரும் இண்டைக்கு  ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது,  எண்டு செய்யாத  அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்கை, நாங்களும் கேம்கேட்ட பரம்பரை கண்டியளோ. அதிலையும் நான் ஐஞ்சாம் வகுப்பு படிகேக்கை தமிழ் பாடப் புத்தகத்திலை சந்திரனும் முயலும் எண்ட பாட்டு வெண்பா வரிசையிலை வரும். எனக்கு அந்த பாட்டு சுட்டு போட்டாலும் வரேலை. என்ரை தமிழ் வாத்தி பெட்டையுளுக்கு முன்னாலை அடிச்ச அடி இண்டைக்கும் நினைச்சால் கண்ணாலை ரத்தம் வரும் கண்டியளோ.

என்னமொண்டையும் சொல்லவேணும் இப்பத்தையான் அமைச்சர் ,அப்பத்தையான் வாத்தியார் ஒருதரிட்டை டியூசனில படிச்சன் .அவர் எப்பவும் "அப்பன் " எண்டுதான் கூப்பிடுவர். அடி எண்டால் சொல்லி வேலையில்லை. மொழியிலயும் உள்ளங்கையிலையும் தான் நடக்கும். வெடிவால் முளைச்சு சிங்கங்கள் சிலுப்பி திரியிற நேரத்திலை பெட்டையளுக்கு முன்னாலை அடிச்சால் எப்பிடி இருக்கும்?? என்னோடை இருந்த ஒரு கூட்டாளி ஒருத்தன் எப்பவும் ஒரு ட்ரிக் வைச்சிருப்பான். அவர் உள்ளங்கையிலை அடிக்க முதலையே ஆஆஆஅ நோகுது சேர் எண்டு டிக்கியிலை கையை தேய்ப்பான். அந்த அமைச்சர் ஆரெண்டு சொல்லுங்கோ ?? 

அப்பத்தையான் வாத்திமார் கிட்ட முட்ட 90 வீதமான ஆக்களின்ரை தேசிய மொழி "வன்முறைதான்". இதுகளாலைதான் நாங்கள் வன்முறையிலை காதல் வைச்சமோ தெரியாது.  சோதினை மூட்டதிலை இவங்கடை அடிஅகோரத்திலையே குலைப்பன் காச்சல் அடிச்சு எடுக்க வேண்டிய நல்ல மாக்ஸ்சுகளையும்  எடுக்காமல் விட்டம். அன்பாய் ஆதரவாய் சொல்லி குடுக்க வேண்டிய பாடங்களை இந்த வாத்திமார் வன்முறையாலையே சொல்லி சொல்லி எங்களை வறுத்தெடுத்தாங்கள். அதுக்காக எல்லா வாத்திமாரையும் நான் குறை சொல்லேலை கண்டியளோ.  அச்சா வாத்திமாரும் இருந்தவைதான்.

சின்ன வகுப்பிலை கூட பொம்பிளை ரீச்சர்மார் நல்லவையாய் இருந்தவை. ஆனால் அவையும் எங்களை டிசிப்பிளினாய் நடத்திறம் எண்டு வறுத்தெடுத்தவைதான். எப்பிடியும் தங்கடை பிள்ளையளை டபுள் புறமோசன் போட்டு எங்களை விட ஒருவகுப்பு கூட விடுவினம்.  "எங்களுக்கு ஒழுக்கம் நன்று வகுப்பேற்றப்படவில்லை" எண்டு ரிப்போர்ட்டிலை போட்டு வீட்டிலை அப்பரை சன்னதம் ஆட வைப்பினம். வகுப்பேற்றப் படவில்லையாம்  பேந்தென்ன ஒழுக்கத்துக்கு நல்ல பேர் குடுக்கிறது?? இவையின்ரை இந்த கம்பசூத்திரம்  எனக்கு இண்டைவரைக்கும் விளங்கேலை கண்டியளோ.

இந்த வாத்திமார் கெட்டு நொந்து இருந்த  நேரம் நாங்கள் எட்டிகூட பாக்கேலை. இப்ப இருந்தாப்போலை  நாங்கள் நல்ல பிள்ளையளுக்கு நடிக்கிறது அவ்வளவு நல்லாய் இல்லை பாருங்கோ. ஆனால் அப்ப அவையிட்டை வாங்கின அடியள்தான் இண்டைக்கும் எங்களை நெம்பிகொண்டு நிக்கச் செய்யுது எண்டதையும் மறக்க ஏலாதுதான். மொத்தத்திலை ரெண்டு பக்கமும் கணக்கு தீத்த பள்ளிக்கூடச் சிவியம் தான் எங்கடை காலத்திலை நடந்திது.

கோமகன்
06 ஆவணி 2014