Monday, October 27, 2014

வாடாமல்லிகை பாகம் 15


வாடாமல்லிகை பாகம் 15


அந்த அதிகாலை வேளை பருத்தித்துறை பஸ்நிலையம் பல சோலிகளை கொண்ட மக்களால் திணறியது .வவுனியா செல்லும் பஸ் புறப்பட நேரம் இருந்ததால் பஸ் சனங்களின்றி வெறுமையாக இருந்தது நான் வழக்கமாக செல்லும் தேநீர்கடையினுள் நுழைந்து ஓர் வடையையும் தேநீரையும் எடுத்துக்கொண்டு கடைவாசலில் நின்று தேநீரை அருந்தியவாறே பஸ்நிலையத்தை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். ஐரோப்பாவின் இறுகிய வாழ்க்கை சூழலும் தலைதெறித்த பரபரப்பும் இல்லாத இந்த சூழல் என்னை கொள்ளை கொண்டது. இருந்தால் போல் என் மனதோ உன்னால் இங்கு தொடர்ந்து இருக்க முடியுமா?? நீ இந்த விடயத்தில் நடிக்கின்றாய்தானே?? என்று என்னை நக்கலாக கேட்டது. மனதுடன் பேச எனக்கு ஓர் சிகரட் தேவைப்பட்டது. கடையின் பின்னால் போய் அதில் இருந்த மா மரத்து நிழலில் நின்று கொண்டு சிகரட்டை பற்ற வைத்தேன் . என்மனமோ பதிலுக்கு காத்திதிருந்தது. சிகரட் புகையை ஆழமாக இழுத்து பின் பிடரி முழுவதும் தடவி மூக்கால் வெளிவிட்டுக்கொண்டே நான் மனத்திடம் பேச ஆரம்பித்தேன்." இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலனவர்கள் காசை தேடவே போனார்கள். அப்படி போன இடத்தில் காசை தேட வசதிகள் வந்தது.அவர்கள் அதில் சுகம் கண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த காசும் வசதியும் சொந்த இடத்தில் வைத்து கொண்டு வெளியில் போனவர்களது மனநிலை பெரும்பாலும் இங்கேயே இருக்க ஆசைப்படும். காரணம் அவர்களை இந்த காசும் வசதியும் எதுவும் செய்யாது. " என்று சொன்னேன் எனது பதிலால் அப்போதைக்கு அது தன் வாலை சுருட்டிக்கொண்டது .தேநீருக்கு காசைக் கொடுத்து விட்டு ஓர் உதயன் பேப்பரையும் வாங்கிகொண்டு பஸ் நிற்கும் இடத்துக்கு வந்தேன்.

பஸ்ஸினுள் ஓரளவு சனங்கள் நிரம்பி இருந்தார்கள். நான் ட்றைவரின் இருக்கைக்கு இரண்டு நிரை தள்ளி ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டேன். பஸ் புறப்பட்டு பருத்தித்துறை வீதியில் வேகமெடுத்தது. நான் உதயன் பேப்பரை மேயத்தொடங்கினேன். அரசியல் வெடில்களே அதில் அதிகம் இருந்ததன .சனங்கள் ஓவ்வருமுறையும் புதியவர் வரும் பொழுது , இவரவாவது தங்கள் பிரச்சனைகளை அக்கறையுடன் கவனித்து தங்களுக்கு விடிவை தருவார் என்ற நம்பிக்கையிலேயே புதியவர்களை தெரிவு செய்கின்றார்கள் .ஆனால் வந்தவர் நாற்காலியில் அமர்ந்ததும் அந்த நாற்காலி எந்த நல்லவரையும் தனக்கேற்பவே மாற்றி விடுகின்றது .நான் அவற்றை ஒரு பக்கமாக தள்ளி விட்டு அங்காங்கே கிடக்கும் சனங்களின் பிரச்சனைகளை மேயத்தொடங்கினேன். பஸ் ஒருவாறாக கிளம்பி பருத்துத்துறை வீதியில் வேகமெடுத்தது. நேரத்தைப் பார்த்தேன் காலை ஏழு மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது வீதியில் ஓரளவு வாகன நடமாட்டங்கள் தெரிந்தன. அந்தக்காலையிலும் வெய்யில் கொழுத்த தொடங்கியது. திறந்த ஜன்னலினூடக வந்த காத்து என்னில் வழிந்த வியர்வையை ஓரளவு கட்டுப்படுத்தியது .காலம் ஒரு சில நேரத்துளிகளை ஏப்பமிட்டவாறு பஸ்ஸை முள்ளி வெளியினூடாக செலுத்தி கொடிகாமத்தை அண்மிக்க வைத்தது. கொடிகாமம் சந்தை களைகட்டத் தொடங்கியிருந்தது. வியாபாரிகள் சந்தையில் சாமான்கள் கூவி விற்கும் சத்தம் என்காதில் நன்றாகவே விழுந்து கொண்டிருந்தது.தோட்டங்களில் வீழ்ந்த ஏழை விவசாயிகளின் வியர்வையானது விளைச்சலாகி அங்கே காசாக மாறிக்கொண்டிருந்தது. பஸ் கொடிகாமத்தில் சிறிது நேரம் நின்று விட்டு வவுனியா நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.பஸ்ஸில் பயணிகளுடன் வந்த பிலாப்பழமும் வாழைப்பழமும் வித்தியாசமான வாசத்தைக் கொடுத்தன .நான் பேப்பர் படிப்பதை நிறுத்தி விட்டு வெளியே வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.


பஸ் பளையை நெருங்கும் பொழுது ஓர் இளைஞன் பஸ்ஸில் ஏறினான். அவன் நெடிய உருவத்தையும் கட்டுமஸ்தான உடம்பையும் கொண்டிருந்தான். ஆனால் அவனது நடை வழமைக்கு மாறாக இருந்தது. விந்தி விந்தி நடந்து வந்த அவன் என்னருகில் இருந்து கொண்டான். பஸ் நகரத்தொடங்கியதும் அவன் என்னிடம் பேச்சுக் கொடுத்தான். நான் வரும் இடத்தை அறிந்து கொண்ட அவன், " அண்ணை எப்பிடி அங்கை செல் அடி ஒண்டும் இல்லையோ ?? நேற்றும் செல் அடியிலை உங்கடை இடத்திலை கன சனம் செத்து போட்டுதுகள். எப்படி தப்பி வந்தியள்?? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினான். நான் அவனது வழமைக்கு மாறான கதைகளால் அவனை உன்னிப்பாக பார்க்கத்தொடங்கினேன். அவன் மேலும் தொடர்ந்தான், அண்ணை நாங்கள் இந்த முறை இவையளை விடமாட்டம். தலைவர் நல்ல பிளான் ஒண்டு வைச்சிருக்கிறார். பொறுத்து பாருங்கோ நாங்கள் தான் வெல்லுவம் ".என்றான். அவனது நினைவு எதோ ஒரு நிகழ்வால் அப்படியே நின்று விட்டுருந்தது. அவனது நடையை வைத்து அவனது கால்கள் செயற்கை கால்களாக இருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.நான் ,அவன் கதைப்பதை கவனிப்பது போல பாவனை செய்தேன். யுத்தத்தின் கோரப்பிடியின் நேரடிசாட்சியமாக அவன் எனக்குத்தெரிந்ததான். அவனைப்போல எத்தனை இளைஞர்கள் தங்கள் வாழ்வைத்தொலைத்து விட்டு மனதாலும் உடலாலும் அங்கவீனர்களாகப் போய் விட்டார்கள் ?? அவனது கதைகள் என்மனதை நன்றாகவே விளாறி விட்டிருந்தன.அதிலிருந்து மனவலியென்ற குருதிப்பொட்டுக்கள் மெதுவாக எட்டிப்பார்த்தன.எனது முக மாற்றத்தை சூரியக்கண்ணாடி மறைத்து இருந்தது . நான் அவனது கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தத்தால் அவனும் தனது கதைகளை எனக்கு சொல்லி மன ஆறுதல் பட்டான்போலும் .அவன் இயக்கச்சியில் இறங்கும் பொழுது ,"அண்ணை அடுத்தமுறை நாங்கள் எங்கடை சொந்த நாட்டிலை சந்திப்பம். தலைவர் இருக்கிறார் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ". என்று எனக்கு சொல்லி விட்டு இறங்கிகொண்டான்.

தூரத்தே ஆனையிறவு வருவதற்கு இசைவாக உப்பும் சேறும் கலந்த காற்று எனது முக்கை அடைத்தது. உப்பளத்தில் வழக்கமாய் நிற்கும் கொக்குகளைக் காணவில்லை. அவைகளும் பிரச்சனையால் இடம் மாறிவிட்டனவோ?? உப்பளம் வெறுமையாகவே இருந்தது. சாதாரணமாகவே இந்த உப்பளம் மீன் பிடிக்க கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும். பஸ் சோதனைச் சாவடியில் சிறிது வேகத்தை குறைத்து நல்ல பிள்ளையாக நடித்துக்கொண்டு மீண்டும் வேகம் எடுத்தது.என்மனமோ கருணாகரனை சந்திக்கும் ஆவலில் தடம்புரண்டு கொண்டிருந்ததது. இலங்கையில் பெயர் சொல்லும் பெரிய எழுத்தாளர். அவர் என்னையும் தனக்குச் சமனாக வைத்துக் கதைப்பாரா?? பொதுவாகவே எழுத்தாளர்கள் என்றால் ஞானக்கிறுக்குப் பிடித்தவர்கள் என்று படித்திருக்கின்றேன். இவர் எப்படி இருப்பாரோ??என்று என்மனம் என்னிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தது. பஸ் கரடிப்போக்கு சந்தியைக் கடந்து கிளிநொச்சிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. நான் கச்சேரியடியில் இறங்குவதற்கு தயாரானேன். பஸ் நிறைந்து இருந்ததினால் முன்னதாகவே இறங்கும் வழிக்குப் போகவேண்டியிருந்தது. பஸ் என்னை கச்சேரியடியில் இறக்கி விட்டு வவுனியா நோக்கி நகர்ந்தது. கண்டி வீதியில் வாகனங்கள் எதிரும் புதிருமாக விரைந்து கொண்டிருந்தன. நான் கருணாகரனுக்கு போன் செய்துவிட்டு நகரை சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் போனமுறை வந்த பொழுது இருந்த பாழடைந்த கிளிநொச்சியை பார்க்க முடியவில்லை. மிகவும் பரபரப்பான புதுப்பொலிவு பெற்ற நகரையே என்னால் பார்க்க முடிந்ததது. ஆனாலும் மக்கள் என்னவோ இனம்புரியாத கலவரத்துடனும், ஆழப்புதைந்த சோகங்களுடனுமே வளையவந்தார்கள்.அவர்களோ வேறு உலகில் இருந்தார்கள் . அவர்களை இந்தப் புதுப்பொலிவுகள் எதுவும் செய்துவிடவில்லை. நாட்டின் குடிமக்களை காக்கத்தவறிய முடிக்குரிய அரசர்களை அவர்கள் என்றுமே மன்னிக்கத்தயாராக இல்லை என்பதை அவர்களின் பேச்சுகளின் மூலம் என்னால் அறியமுடிந்தது.

நான் கண்டி வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றபொழுது என்பின்னால் ஓர் மோட்டசைக்கிள் வந்து நின்றது. அதில் நான் எதிர்பார்த்த கருணாகரன் வந்திருந்தார். தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டவாறே நட்புடன் கைதந்தார். இருவரும் திருநகரில் இருந்த அவர் வீட்டிற்கு சென்றோம். அவர் வீடு குளிர்மையின் நிழல் போர்த்தி இருந்தது. மாவும், வாழையும், பிலாவும் வளவெங்கும் சடைத்து நின்றன. வேலியின் அருகே குரோட்டன்கள் நிரை கட்டி நின்றன. முதல் பார்வையிலேயே அவரின் வீடு எங்கள் வீடு போல் இருந்தமையால் நான் அதில் லயிக்கத்தொடங்கினேன். நாங்கள் இருவரும் பல விடையங்களை மணிக்கணக்காக கதைத்துக்கொண்டிருந்தோம். நாம் இருவருமே இலக்கியம் சம்பந்தமாக ஒரே நேர்கோட்டில் சென்றதால் அவரின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் பொங்கி வழிந்தன. நான் எதிர்பார்த்ததை விட மிகவும் இயல்பாகவே பழகிக்கொண்டார். அவர் தயாரித்த தேநீரை அருந்தி விட்டு இருவரும் கிளிநொச்சி பார்க்க கிளம்பினோம். நான் சிறுவயதில் ஓடித்திரிந்த கிளிநொச்சி பலதழும்புகளை உள்வாங்கி எனைப்பார்த்து இளித்தது. பிரதம தபாலகம், கண்டிவீதி , கந்தசாமி கோவில் ,மத்திய கல்லூரி, புகையிரத நிலையம், கிளிநொச்சி குளம் என்று எமது மோட்டார்சைக்கிள் வலம் வந்தது. நாங்கள் கிளிநொச்சி குளத்து அணைக்கட்டில் ஏறிநின்றபொழுது , கிளிநொச்சி குளம் என் கண்முன்னே பரந்து விரிந்து இருந்தது. வழக்கமாக நீர் முட்டியிருக்கும் குளம் என்மனதைப் போலவே வறண்டு இருந்தது. அங்கு வழக்கமாக கூடியிருக்கும் நாரைகளும் இல்லை. கொக்குகளும் இல்லை. எங்குமே ஒருவிதமான வெறுமை படர்ந்தது இருந்தது. இந்த கொக்குகளும் நாரைகளும் இப்பொழுதும் உயிருடன் இருக்கின்றவா ? எனக்கு விடை தெரியவில்லை. நான் பலநேரமாக அணைக்கட்டில் வெறித்துப்பார்த்துகொண்டு நின்றேன். எனது தோளில் கருணாகரனின் கைகள் ஆதரவாக விழுந்தது. எனக்கு இந்த இடங்களில் கால்கள் வைக்க கூசியது. இந்த மண்ணின் கீழ் எத்தனை துயரங்கள் புதைந்து கிடக்கின்றன ?என்கண்கள் என்னையறியாது கலங்கின. எமக்கு வந்த துயர் இலகுவில் மறக்க கூடியதா ? எத்தனை எத்தனை பேரின் வாழ்வின் வேரையே ஆட்டி அவர்களை நடைப்பிணமாக்கியது. சிந்தனையில் வசப்பட்ட என்னை கருணாகரனின் கலகல பேச்சு இயல்புநிலைக்கு திருப்பியது. தினம் தினம் மரணத்தை அருகில் நின்று பார்த்தவருக்கு எப்படி கலகலப்பாக இருக்கமுடிகின்றது என்று மனதில் வியந்தேன்.
நாங்கள் கதைத்தவாறே வீடு திரும்பும் பொழுது கிளிநொச்சி சந்தைக்கு சென்றோம். நான் சிறுவயதில் சென்ற இடம். இந்த சந்தைக்கு அம்மாவுடன் வந்திருக்கிறேன். பலகாலத்தின் பின்பு இப்பொழுதுதான் வருகின்றேன். பச்சை காய்பிஞ்சுகளும், மீன்களும் சந்தையெங்கும் கும்பிகும்பியாக குவிந்திருந்தன. நான் விலைகளையும் சனங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.ஒருமூலையில் பாலைப்பழம் குவிந்து இருந்தது. அதைக்கண்டவுடன் எனது கால்கள் நின்றன.அவற்றில் சிறிது வாங்கிக்கொண்டேன். பாலைப்பழம் இனிமையுடன் வாயினுள் வழுக்கியது. நாங்கள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பும்பொழுது, கருணாகரன் மத்தியானம் கனடாவிலிருந்து மீராபாரதி வருகின்றார் என்றும் அவரையும் அழைக்க புகையிரத நிலையத்துக்கு போகவேண்டும் என்று சொன்னார். நாங்கள் இருவரும் புகையிரத நிலையம் நோக்கி சென்றோம். அப்பொழுது மதியம் ஒருமணியாகி விட்டிருந்தது. கோடை வெய்யில் உச்சி மண்டையில் இறங்கியது. சிறிதுநேர தாமதிப்பின் பின்பு தூரத்தே யாழ் தேவி வருவது தெரிந்தது. புகையிரத மேடை சனங்களால் பரபரத்தது. நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும் மீராபாரதி யாழ்தேவியில் இருந்து இறங்கினார். மீராபாரதி என்னை அங்கு எதிர்பார்க்கவில்லை. கருணாகரனும், எனக்கு மீராபரதியை தெரியும் என்று எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் அந்த சந்திப்பு மூவருக்குமே அதிசயமான சந்திப்பாக அமைந்தது. 


மாலை நான்கு மணிபோல் கருணாகரனிடமும், மீராபாரதியினிடமும் பிரியமனமின்றிப் பிரிந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு சிலவேளைகளில் மனிதர்களை புரிந்து கொள்ளமுடிவதில்லை.கடினமான தோற்றத்தை கொண்டவர்கள் இனிமையானவர்களாகவும், மென்மையான தோற்றத்தை கொண்டவர்கள் அதற்கு நேர்மாறாக இருப்பதையும் காண்கின்றோம்.இன்று நான் சந்தித்த இருவருமே முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் எனது பார்வயில் இருந்து கிளிநொச்சி மெதுமெதுவாக விடுபட்டுக்கொண்டிருந்தது. என்மனமோ பல்வேறு சிந்தனைகளில் பின்னிப்பிணைந்து கொண்டிருந்தது. நினைவுகளின் சுழல்களில் மனைவியின் முகமும் தெரியவே நான் வந்துகொண்டிருப்பதாக மனைவிக்கு போனில் சொன்னேன். குளத்தில் எறிந்த கல்லாக நினைவுகளாய் விரியும் என்மனதை கட்டுக்குள் கொண்டுவர என்கண்களை மூடினேன். மனமோ முரண்டு பிடித்து ஞாபகவீதியில் தறிகெட்டு ஓடியது. இறுதியில் ஓடிய மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தேன். அங்கும் இங்கும் அலைந்ததினால் வந்த உடல் அலுப்பு நித்திரையைகொண்டுவந்தது. பஸ்நின்றதாலும் அதனால் வந்த சனஇரைச்சலாலும் நான் கண்விழித்தேன். பஸ் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் நின்றிருந்தது. எனது கால்கள் பஸ்ஸால் இறங்கி வீடுநோக்கி தன்னிச்சையாக நடக்கத்தொடங்கின. நான் வீட்டை அடைந்தபொழுது உடல் வியர்வையால் தெப்பலாக நனைந்து இருந்தது. கிணற்றடியில் உடைகளை களைந்துவிட்டு குளிக்கத்தொடங்கினேன். கப்பியில் இருந்த இரண்டு வாளிகளும் எனதுகைகள் பட்டு வேகமாக இயங்கின. குளிர்ந்த நீர் உடலில் பாய்ந்து உடலைப் புத்துணர்வாக்கியது. நான் உடைகளை மாற்றிக்கொண்டுவர, மனைவி பருத்தித்துறை வடையும் தேநீருடனும் எனக்காக காத்திருந்தா. நான் மாமரத்தடியில் முக்காலியைப்போட்டுவிட்டு அதிலிருந்து தேநீரை குடித்தேன். தேநீரிலிருந்து மெதுவான ஆவி மேலேழுந்தது. நான் அதனுள் அமிழ்ந்துபோனேன். தேநீரைக்குடித்துவிட்டு கையில் சிகரட்டுடன் வீட்டுபடலையில் நின்று ஒழுங்கையை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். நாங்கள் கொழும்பு செல்ல இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. கொழும்பு செல்வதற்கு முதல் வல்லிபுரக்கோவிலுக்கு போகவேண்டும் என்று மனைவி சொல்லியிருந்தா. இரவுச்சாப்பாட்டை எடுத்துவிட்டு மறுநாள் வல்லிபுரக்கோவில் செல்லும் திட்டத்துடன் படுக்கைக்கு சென்றோம்.

தொடரும் 


கோமகன் 

27 ஐப்பசி 2014


Saturday, October 18, 2014

பாண்

பாண்


பெயர் : நரேன்.

தொழில் : பாண் போடுவது.

தகுதி : இலங்கை அகதி .

தந்தை பெயர் :வல்லிபுரம் .

தொழில் :பாண்போடுவது.

உபதொழில் :கள்ளு அடிப்பது .

*************************************************

1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெரிந்த புகைபோக்கியினூடாக அந்த அதிகாலை குளிரைப் போக்க எரிந்த நெருப்பின் புகை வந்துகொண்டிருந்தது. நரேன் அந்த அதிகாலையின் பிறப்பை அணுவணுவாக அனுபவித்து தேநீர் அருந்திகொண்டிருந்தான். அவன் இரவு செய்த வேலையால் கண்முழித்ததால் கண்கள் சிவந்து இருந்தன. காலை வேலையால் வந்தவுடன் தனது அம்மா மீனாட்சிக்கு போன் பண்ணியிருந்தான். நரேனுக்கு கிழமையில் ஒருமுறையாவது அம்மாவுடன் கதைக்காது போனால் விசரே பிடித்து விடும் . தனிய தம்பி தங்கைகளுடன் இருக்கும் அம்மாவுக்கு வல்லிபுரத்தாரின் இழப்புகள் தெரியகூடாது என்ற காரணத்தாலும், அவனுக்கு என்னதான் தலை போகின்ற வேலைகள் இருந்தாலும் அம்மா மீனாட்சிக்கு நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. பல குடும்ப விடயங்களை கதைத்துக்கொண்டு, இறுதியில் இந்த மாத இறுதியில் வரவிருக்கும் அவனது அப்பா வல்லிபுரத்தின் திவசத்தை நினைவு படுத்தினாள் மீனாட்சி .வீட்டிற்கு மூத்தவன் என்ற முறையில் அவனே வல்லிபுரத்தாருக்கு விரதம் இருந்து திவசம் செய்வது வழக்கம். அவன் ரசித்துக் குடித்துக்கொண்டிருந்த தேநீரின் ஆவியுடன் தன்னை மறந்து வல்லிபுரதாரின் நினைவுகளில் ஆழப் புதைந்தான் .

அழையா விருந்தாளிகளாக வந்த ஒட்டகங்கள் கூடாரமடித்து கொட்டமடித்த 1987 இன் ஆரம்ப கால நாட்கள் அது. தொடர் ஊரடங்குசட்டங்களும், மின்சார வெட்டுக்களும் ஆகாய தரைவழி தாக்குதல்களும் மனிதத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கிய காலங்களில், ஒரு திங்கள் கிழமையில் வரணிக் கிராமம் அதன் அதிகாலையை வரவேற்றுக்கொண்டிருந்ததது. அது அதிகாலையானலும் மெதுவான வெக்கை அப்பொழுதே ஆரம்பமாகியிருந்தத்து. என்னதான் இழப்புகள் இருந்தாலும் துக்கங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு சனங்கள் தங்கள் அன்றாட வேலைகளை கவனிக்க பழகிக்கொண்டார்கள். வரணியில்தான் வல்லிபுரத்தின் வீடும் இருந்தது. அந்த வீடு சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் நடுத்தரமாக மூன்று அறைகளுடன் கூடிய வீடாக இருந்தது. வல்லிபுரம் கடுமையான உழைப்பாளி. சிறு வயதிலேயே படிப்பு வராமல் சுன்னாகத்தில் இருந்த அபயசேகராவின் பேக்கறியில் சேர்ந்து பாண் போடும் தொழிலை அச்சர சுத்தமாக கற்றுக்கொண்டார். அபயசேகரா மாத்தையாவும் வஞ்சகமில்லாமல் பாண் போடும் தொழில் நுணுக்கங்களை வல்லிபுரதிற்கு சொல்லிக்கொடுத்தால், வல்லிபுரத்தார் விரைவிலேயே வரணியில் ஒரு பேக்கறி போடும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தார்.

தமிழனும், சிங்களவனும், இஸ்லாமியனும் ஒன்று கூடி வாழ்ந்த யாழ்ப்பாணம், மேய்ப்பர்கள் வழிவந்த சுதந்திரம் என்ற சுத்தமான காற்றால் அல்லாடத் தொடங்கியது.பரம்பரை பரம்பரையாக இருந்த நிலங்களில் இருந்த சிங்களவனும் இஸ்லாமியனும் மெதுமெதுவாக இடம்பெயரத் தொடங்கினார்கள் .இந்த இடப்பெயர்வுகளானது  தமிழர்கள் வருங்காலங்களில் எப்படிப்பட்ட வினையை அறுவடை செய்யப்போகின்றார்கள் என்பதை காட்டி நின்றது .  ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பங்களால் அபயசேகராவின் பாண் பேக்கறி முற்றாக எரிக்கப்பட்டு நாசமாகிப்போனது . அபயசேகரா குடும்பத்துடன் இரவோடு இரவாக தனது சொந்த ஊரான கம்பஹாவிற்கு சென்று விட்டார். அபயசேகரா கம்பஹா சென்றதால் வல்லிபுரமே சுற்று வட்டாரங்களில் பாண் போடுவதில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.

வல்லிபுரத்தான் அவருக்கு வாழ்க்கையில் சிறிது ஏழ்மையை கொடுத்தாலும், பிள்ளைகள் விடயத்தில் அவரைப் பணக்காரனாகவே வைத்திருந்தான். மொத்தம் பன்னிரண்டு குழந்தை செல்வங்கள் அவரது திருமண வாழ்வில் கிடைத்தார்கள். தானும் மீனாட்சியும் எவ்வளவு கஸ்ரப்பட்டாலும் குழந்தைகளை நன்றாகவே வளர்த்தார்கள். சின்னனும் பொன்னனுமாக குழந்தைகள் அவர்களை சுற்றி இருந்து லூட்டி அடிப்பது, அயல் வீடுகளில் குழந்தைகள் விடயத்தில் சிக்கனமாக இருந்தவர்களுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். நரேன் அந்தக் குழந்தைகள் குழுமத்தில் மூத்தவனாக இருந்தான். இதனால் வல்லிபுரத்திற்கு நரேனில் அதிக அக்கறை இருந்தது. இந்த அக்கறையானது வருங்காலத்தில் நரேன் தனது பெயரையும் தொழிலையும் காப்பாற்றப்போகின்றவனாக இருந்ததாலும் வந்திருக்கலாம். இதனால் தான் என்னவோ நரேனுக்கு பள்ளிக்கூடப் படிப்புடன் நின்றுவிடாது தனது தொழில் என்ற வாழ்க்கை அனுபவப்படிப்பையும் சேர்த்தே கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார் வல்லிபுரத்தார்.நரேனும் தனது பொறுப்புணர்ந்து படிப்பிலும் சரி அனுபவப்படிப்பிலும் சரி சுட்டியாகவே வளர்ந்துகொண்டிருந்தான். நரேன் தனது படைப்பை தொடர வடமராட்சியின் பிரபலமான கல்லூரியான ஹாட்லி கல்லூரியில் தனது சக்திக்கும் மீறி வல்லிபுரத்தார் விட்டிருந்தார். அதற்காகவே அவர் தன்னைக் கடுமையாக வருத்த வேண்டியிருந்தது. குடும்பநிலை உணர்ந்த நரேன் தந்தையுடன் சேர்ந்து பாண் போடுவதிலும், அதனைக் கொண்டுபோய் சுற்றுவட்டாரங்களில் விற்பதிலும் அவருக்கு உதவியாக இருந்தான்.

வல்லிபுரத்தார் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தார். எழுந்த கையுடன் அருகில்இருந்த வேப்ப மரத்தில் இருந்த ஒரு கிளையை ஒடித்துப் பல்லுக்குள் செருகிக்கொண் டு வீட்டின் பின்னே இருந்த தோட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அவரது தோட்டம்அவருக்கு சீதனமாக வந்த காணி. அந்த அரைப்பரப்பு காணிக்குள் வாழை, மிளகாய் ,வெங்காயம், மரவள்ளி என்று அவரது கடுமையான உழைப்பு பச்சைகளாக பரந்து விரிந்திருந்தது.வேப்பங்குச்சியை வாயிற்குள் வைத்து சப்பிப் பற்களை தேய்த்தவாறே வெங்காயம் மிளகாய் கண்டுகளுக்கு இடையில் இருந்தகளைகளை வேகமாக பிடுங்கதொடங்கினார். அவரது கைகள் வேகமாக இயங்கினாலும் அவரது மனமோ கடந்த ஒருகிழமையில் நடந்த சம்பவங்களால் மிகவும் கலக்கமடைந்து இருந்தது.

போராளிகளின் நடமாடங்கள் வடமராட்சியில் அதிகம் இருந்தததால்அழையா விருந்தாளிகளுக்கு அதிக இழப்புகள் வந்து கொண்டிருந்தன. வடமராட்சியின் இயல்பு வாழ்க்கை தடம் மாறியது.எங்கும் மரண ஓலங்களும் இரத்தத்தெறிப்புகளும் தினசரி வாழ்க்கையாகின. அதிகாரம் பொருளாதாரத்தடை என்ற இறுதி ஆயுதத்தை தனது குடிகளுக்கு எதிராகக்கொண்டுவந்தது. மின்சாரமும், மருந்துப்பொருட்களும் அத்தியாவசிய உணவுப்பொருட்களும் சனங்களிடம் இருந்து விடைபெற்றே நாட்கள் அதிகம் ஆகி விட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் சனங்கள் மைல்கணக்கில் வரிசையில் நின்றனர். சனங்களின் வாக்குகளிலும் வரிகளிலும் வந்த அதே அதிகாரம் தான் தனது சனங்களை வேண்டதகாதவர்களாக பார்த்துக்கொண்டது . போராளிகளை தாங்கள் அழிக்கின்றோம் என்ற போர்வையில் அதிகாரம் தங்களை பலப்படுத்த புதிது புதிதாக பல ஆள் நடமாட்டமற்ற சூனியப் பிரதேசங்களை வடமராட்சியில் கொண்டு வந்ததது. வல்லிபுரத்தாரின் பேக்கரியும் மின்சாரம் இல்லாததால் தொடர்ந்து இயங்க முடியாது அவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தது. பேக்கரியின் மின்சாரப் போறணை மரத்தால் எரிக்கும் போறணையாக மாறியது. தினசரி போட்டுவந்த பாண் கிழமையில் ஒருதரம் என்று சுருங்கி விட்டது. செல்வாக்குடன் இருந்த வல்லிபுரத்தாரின் வாழ்க்கையில் வறுமை தன் முடிச்சை மெதுமெதுவாக இறுக்கிக் கொண்டு வந்தது. தான் பட்டினி கிடந்தாலும் மீனாட்சியையும் பிள்ளைகளையும் வறுமையின் சாயல் பிடிக்காது பார்த்துக்கொண்டார் வல்லிபுரத்தார். இரண்டு நாட்களாக தண்ணி இல்லாது பயிர் பச்சைகள் எல்லாம் வாடியிருந்தன. இன்று எப்படியும் துலாவால் தண்ணி இறைக்க வேணும் என்றும் நாலுநாளாக போடாத பாணை இன்று போட்டு கொஞ்சம் காசு எடுக்கவேணும் என்றும் நினைத்துக்கொண்டார் .பாண் போடவேண்டும் என்று அவர் நினைத்ததுக்கு காரணமும் இல்லாமல் இல்லை. சனங்களும் கடைக்காரர்களும் பாணுக்கு அவரை நச்சரித்துக்கொண்டிருந்தனர். பசி அவர்களை நச்சரிக்க வைத்தது. அவசரமாகக் களைகளைப் பிடுங்கி விட்டு கிணற்றடிக்கு வந்து துலாவால் தண்ணீர் இறைக்கத் தொடங்கினார் வல்லிபுரத்தார். படித்துக்கொண்டிருந்த நரேன் கிணற்றடிக்கு வந்து அவருக்கு உதவியாக துலா மிதிக்கத் தொடங்கினான். அவனது கால்கள் லாவகமாக துலாவின் முன்னேயும் பின்னேயும் நடைபயின்றன . தண்ணீர் வாய்க்காலில் சலசலவென்று பாயத்தொடங்கியது. துலா மிதிப்பின் சத்தம் கேட்டு மீனாட்சியும் எழுந்து விட்டிருந்தாள். அதன் தொடர்ச்சியாக எல்லா பிள்ளைகளும் வரிசையாக நித்திரையால் எழும்பத்தொடங்கினார்கள். எல்லோருக்கும் தேநீர் தயாரித்த மீனாட்சி இடைக்கிடை தோட்டத்தில் பாத்தி மாறிக்கொண்டிருந்தாள். தண்ணீர் கண்ட பயிர் பச்சைகள் எல்லாம் புத்துயிர் பெற்றுக்கொண்டிருந்தன. தோட்டத்தின் மூலையில் நின்ற இரண்டு மரவள்ளி மரங்களைப் பிடுங்கிய வல்லிபுரத்தார், காலை உணவு செய்யும் படி மீனாட்சியிடம் கொடுத்தார். அன்று காலை அவர்கள் எல்லோரதும் பசி போக்க இயற்கை கொடுத்த அந்த மரவள்ளிக்கிழங்குகளே துணை செய்தன. நரேன் குளித்து விட்டு கல்லூரி செல்ல ஆயுதமாக வந்த பொழுது, வெண் நிறத்தில் அவிந்த மரவள்ளிக்கிழங்குகளும் கல்லுரலில் இடித்த சம்பலும் தயாராக இருந்தன. தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்து தானும் குளித்துவிட்டு விட்டு காலை உணவை அருந்திய வல்லிபுரத்தார் பாண் போடுவதற்கு ஆயதங்களை செய்யதொடங்கினார்.

பாண் போடுவதே ஓர் கலைதான் . அதிலும் வல்லிபுரத்தார் பாண்போடும் அழகே அழகு. கோதுமை மாவை கும்பியாக குவித்து, அதன் உச்சியில் ஓர் குழியை கையால் போட்டு, அதனுள் உப்பையும் ஈஸ்ற் ஐயும் அளவு தப்பாது போட்டு ,தண்ணீரை மெதுமெதுவாக கலந்து வல்லிபுரத்தார் மா குழைக்கும் அழகோ அழகு.மாவை குழைத்த பின்பு சிறிது நேரம் குழைத்த மாவை புளிக்க விட்டு பின்பு மீண்டும் குழைக்க வேண்டும். அப்போது வல்லிபுரத்தார் கால்களை நன்றாக கழுவிவிட்டு கால்களாலேயே மாவை குழைப்பார். அப்பொழுது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள். எல்லோர் கால்களிலும் மா படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும். மா பட்டுப்போல குழைந்த பின்பு, சிறிய உருண்டைகளாக உருட்டி அச்சுகளில் அதை வைத்து தட்டி போறணையில் வைப்பார்.அப்பொழுது குழைந்த மா, அச்சுப்பாண் , சங்கிலிப்பாண் , றோஸ் பாண் ,பணிஸ் பல விதங்களில் தன்னை உருமாற்றிக்கொள்ளும். சின்னன் பொன்னன்களுக்கு அவரின் சங்கிலிப்பாணும், பணிசஸ்சுமே மிகவும் பிடித்தவை .போறணையிலும் மின்சார போறணைக்கும் மரத்தால் எரிக்கும் போறணைக்கும் பாணின் சுவையால் வேறுபாடு உண்டு. வல்லிபுரத்தார் இரண்டு போரணைகளிலும் பாண் போடுவதில் வல்லவர். தனது உடல் களைப்பு போக வரணியில் இறக்கிய உடன் கள்ளுப்போத்தல் இரண்டை எப்பொழுதும் அவர் தன்னுடன் வைத்துக்கொள்வார். கள்ளு தந்த சிறிய போதையில் முகம் முழுக்க சிரிப்புடன் அவர் பாண் போடும் அழகே அழகு.

அன்றும் கள்ளுத் தந்த மிதப்பான போதையில் மாவைக்குழைத்து விட்டு போறணைக்கு விறகுக்காக தோட்டக்காணியில் வேலியோரமாக இருந்த பூவரசு மரத்தை தறிக்க ஆரம்பித்தார் வல்லிபுரத்தார். பச்சைப் பூவரசு போறணையில் கொழுந்து விட்டு எரியத்தொடங்கி அந்த இடமெங்கும் புகை மண்டலமாக இருந்தது. பாண் அச்சுக்களை லாவகமாக நீண்ட தடியில் வைத்து போறணையில் வைக்கத் தொடங்கினார் வல்லிபுரத்தார் . சிறிது நேரத்தில் பாண்கள் பொன்னிறமாக வெந்து வாசம் கிளப்பின. காலையில் கல்லூரி சென்ற நரேன் போகும் வழியில் இராணுவ பரிசோதனையில் மாட்டுப்பட்டு கல்லூரிக்கு செல்லாது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டிருந்தான். இராணுவங்கள் றோட்டில் நிற்பதாக நரேன் சொல்லியும் கேளாது , மீனாட்சி தந்த தேநீரை குடித்துவிட்டு தான் குறுக்குப்பாதைகளால் போவதாக சொல்லி விட்டு வல்லிபுரத்தார் தான் போட்ட பாண்களை சைக்கிளின் பின் பக்க பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். தான் எடுத்த காரியத்தை முடித்து நாலு காசு பார்க்கவேண்டும் என்ற கவலை அவருக்கு. போகும் பொழுது வல்லிபுரக்கோவில் இருந்த திசையைப் பார்த்து கும்பிட்டவாறே சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். சின்ராசா கடை, தவம் கடை, காராளி கடை, மற்றும் சில தனிப்பட்ட வீடுகளுக்கும் பாண்களை விற்று விட்டு சிறிது பாண்களுடன் வந்த வல்லிபுரத்தார் அளவுகடந்த புழுகத்துடன் சின்னப்புவின் கள்ளுத்தவறணைக்குள் நுழைந்தார். அவரைக்கண்ட சின்னப்பு அப்பொழுது இறக்கிய இரண்டு கள்ளு முட்டியை அவருக்கு நுரை தள்ளக் கொடுத்தான். சோட்டைக்கு வறுத்த ஈரலை எடுத்து வைத்தான் .வல்லிபுரத்தார் ஈரலைக் கண்ட புழுக்கத்தில் மேலதிகமாக இன்னுமொரு கள்ளு முட்டியை எடுத்துக்கொண்டார். மதிய நேரமாதலால் கள்ளு வல்லிபுரத்தாருக்கு வெறியை கூட்டியது. சின்னப்பு அவரை கைத்தாங்கலாக பிடித்து சைக்கிளில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு அனுப்பினான்.

கள்ளுத் தந்த போதையில் தனது மனைவி மீனாட்சியை நினைத்து " மயக்கமென்ன இந்த மயக்கமென்ன " என்ற வசந்த மாளிகை படப்பாடலை பெரிய குரலில் பாடிக்கொண்டே சைக்கிளை குறுக்கு மறுக்காக ஒழுங்கையில் ஒட்டிக்கொண்டு வந்தார் வல்லிபுரத்தார். மயக்கமென்ன என்று பாடியவாறு வந்த வல்லிபுரத்தாரை விதி மயக்கி வேறுவழியில் இழுக்கத்தொடங்கியது. அவர் வந்த சைக்கிள் வெறி வளத்தில் ஒழுங்கையின் கடைசி சந்தியில் இருந்து தொடங்கிய மக்கள் நடமாட்டம் இல்லாத சூனியப் பகுதியில் நுழையத் தொடங்கியது. அந்த சூனியப்பகுதியின் மத்தியில் இருந்த சென்றியில் இருந்த அழியா விருந்தாளி , வந்தது போராளி என்ற நினைப்பில் தனது இயந்திரத் துப்பாக்கியை விரைவாக இயக்கினான். பறந்து வந்த குண்டுகள் சல்லடையாக வல்லிபுரத்தாரை தாக்கின. அதில் ஓர் குண்டு அவரின் தலையின் பின்புறத்தை பிழந்து இருந்தது. தலையிலிருந்து மூழை வெளியே வந்து இருந்தது. அதை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. சுட்டவன் வெளியே எட்டிப்பார்த்தான். மேலிடத்தில் இருந்து வந்த அழைப்புக்கு, தான் போராளி ஒருவனை சுட்டதாக சொன்னான். உடனடியாக அங்கு வந்த சிறிய படையணி அவரது உடலத்தை ஒழுங்கைக்கு அப்பால் போட்டுவிட்டு சென்றனர். ஆள் அரவம் அகன்றதும் சனங்கள் வெளியே வந்து பார்த்தனர். மீனாட்சி ஓலமிட்டவாறே ஓடி வந்தாள். அவளுடன் கூட வந்த பிள்ளைகள் விபரம் அறியாது தந்தையைப்பர்த்து அழுது கொண்டு நின்றனர். நரேன் விக்கித்து பொய் நின்றான். தந்தையின் சிதையில் தீ மூட்டிய நரேனது மனம் நாளைய பற்றிய நினைவில் கொழுந்து விட்டு எரிந்தது.

*************************************************

1988 இன் ஓர் கோடைகாலப் பொழுது ஒன்றில் , தனது கனவுகளை ஆழப்புதைத்து விட்டு அம்மாவையும் சகோதரங்களையும் பார்க்கவேண்டும் என்பதற்காக, இருந்த வீட்டையும் தோட்ட்க்காணிகளையும் ஈடு வைத்து கல்வியங்காட்டில் பிரபலமான பயண முகவர் மூலம் பிரான்சுக்கு வந்து சேர்ந்தான். பிரெஞ் மொழியும், பிரான்ஸ் வாழ்க்கை முறைகளும் நரேனுக்கு கிலியை ஏற்படுத்தின. ஆனாலும் இருத்தல் பற்றிய வேட்கை அவனை வெறிபிடித்தவனாக்கியிருந்தது. அவன் வந்த ஆரம்பத்தில் அவன் வேலை செய்வதற்கான அனுமதியும், தற்காலிக வதிவிட உரிமையும் மட்டுமே பிரான்ஸ் உள்துறை அமைச்சு வழங்கியிருந்தது. அவனது அகதி அந்தஸ்துக்கான வழக்கு நிலுவையிலேயே இருந்தது. வரணியில் பெரிய வீட்டில் வளைய வந்தவனுக்கு இருபது சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அறையில் பத்து பேருடன் இருந்தது மூச்சு முட்டியது .ஒழுங்கான வேலை கிடைப்பது முயற் கொம்பாக இருந்த அந்தக் காலப்பகுதியில் கிடைத்த எந்த வேலை எதையும் செய்ய அவன் தயாராகவே இருந்தான். ஒருநாள் நரேன் வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டு வரும் பொழுது ஓர் பாண் போடுகின்ற பேக்கறியைக் கண்டான். அதில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று போடப்பட்டிருந்தது. அவனது கால்களும் கண்களும் அவனியறியாமல் நின்று உள்ளே நோட்டமிட்டான. அந்த பேக்கறியில் ஓர் வயது முதிர்ந்த பிரெஞ் தம்பதிகள் நின்றிருந்தனர். அவன் தயங்கியவாறே உள்ளே நுழைந்தான். அவர்களுக்குத் தன்னை அறிமுகபடுத்தி விட்டு தான் வேலை தேடி வந்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்தான். அந்த முதியவர் தன்னை மிஷேல் பிரான்சுவா என்று அறிமுகப்படுத்திவிட்டு ,அவனை ஏற இறங்கப்பார்த்து " உனக்கு பாண் போடத் தெரியுமா ?" என்று கேட்டார் .நரேன் தனக்கு ஓர் சந்தர்ப்பம் தரும்படி அவர்களை பார்த்துக்கேட்டான். ஆனாலும் அவனை ஒருவித சந்தேகத்துடன் பார்த்த அந்த முதியவரின் காதுகளை அவரின் மனைவி இரகசியமாக எதோ கடித்தாள் . நரேனை உள்ளே அழைத்துச் சென்ற மிஷேல் பிரான்சுவா தனக்கு பாண் போடடுக்காட்டும்படி அவனைக்கேட்டார்.அந்த பாண் போடும் இடம் விஸ்தாரமாக நவீன போறணைகளுடன் இருந்தது. அதில் டிஜிட்டல் வெப்ப மானிகளும், பாண் வெந்தவுடன் அறிவிக்க அலார்ம் களும் என்று அந்த இடம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. பரபரவென்று இயங்கிய அவனது கைகளை மிஷேல் பிரான்சுவாவின் கண்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன .முயல் பிடிக்கின்ற நாயை மூஞ்சையில் வைத்துப் பிடித்துக்கொண்டார் மிஷேல் பிரான்சுவா .அந்த தம்பதிகள் அவனை வேலைக்கு எடுத்துக்கொண்டனர் .நரேன் தான் வல்லிபுரத்தாரிடம் கற்ற வித்தைகள் எல்லாவற்றையுமே ஓர் ஈடுபாட்டுடன் பாண் போடுவதில் காட்டினான். அவனது தொழில் நேர்த்தியால் பிரான்சுவாவின் பேக்கறியில் கூட்டம் அலை மோதியது. காலம் அவனை அந்த பேக்கறியில் தலமை பாண் போடுபவனாக ஒன்பதினாயிரம் பிராங்குகளுடன் பதவி உயர்த்தியது. இரண்டு பனிக்காலங்களும் , இரண்டு கோடைக்காலங்களும் நரேனின் வாழ்வில் கடந்தபொழுது மைதிலி என்ற தென்றல் அவன் வாழ்வில் நுழைந்து கொண்டது .அவர்களின் இன்ப வாழ்வின் எதிர்வினையாக மிருதுளா வந்து சேர்ந்து கொண்டாள் .

நினைவுகளில் ஆழப்புதையுண்டிருந்த நரேன் போறணையின் அலார்ம் ஒலி கேட்டு நிஜத்துக்கு வந்தான். போறணையைத் திறந்தபொழுது பாண்கள் நீண்ட வடிவில் பொன் நிறத்தில் மொறுமொறுப்பாக வெந்து இருந்தன. பேக்கரியில் அந்த அதிகாலைவேளையில் கூட்டம் அலை மோதத்தொடங்கியிருந்தது. நரேன்போட்ட பாண்களின் வாசம் அந்த இடமெல்லாம் சூழ்ந்து வாடிக்கையாளர்களை மயக்கியது. இரவெல்லாம் கண்முழித்த்தினால் கண்கள் இரண்டும் சிவந்திருக்க வீட்டை நோக்கி நரேன் தனது காரில் பறந்தான். காரில் அவனுக்குப் பிடித்த சுப்பிரபாதம் மெல்லிய குரலில் உருகிக்கொண்டிருந்தது. சிறுவயதில் இருந்தே வல்லிபுரக்கோவிலில் இந்த சுப்பிரபாதத்தை கேட்டு அவனது மனதில் ஆழமாக வேரோடிய விடையம் இது. ஓவ்வரு அதிகாலையிலும் சுப்பிரபாதம் கேட்காவிட்டால் அன்றைய பொழுது அவனுக்கு விடியாது. அப்பா வல்லிபுரத்தின் நினைவலைகள் அவனது மனதை பிழிந்து எடுத்தன. அவனது கார் வீட்டினுள் நுழையும் பொழுது மனைவி மைதிலி மகள் மிருதுளாவுடன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில் மல்லுக்கட்டுவது தெரிந்தது. நரேனைக் கண்டவுடன் மிருதுளா ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தம் தந்தாள். ஐந்தே வயது நிரம்பிய மிருதுளாவை நரேன் என்றுமே கோபித்ததில்லை. மைதிலி மகள் விடயத்தில் கட்டுப்பாடானவள். மிருதுளா அவனுடன் பள்ளிக்கூடம் செல்வதற்கு அடம்பிடித்தாள். வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருந்த மைதிலியை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு ,மிருதுளாவை பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றான் நரேன். அப்பாவின் கையுடன் தனது பிஞ்சுக்கையை இணைத்துக்கொண்டு மிதப்பாக மிருதுளா நடந்துக்கொண்டிருந்தாள் . போகும் வழியில் ஒரு பாண் பேக்கரியைக் கண்டு தனக்கு பண் வாங்கித்தரும்படி நரேனை நச்சரிக்கதொடங்கினாள் மிருதுளா. ஒருகட்டத்தில் அவளது பிடிவாதம் றோட்டில் நின்று அழும் அளவிற்கு வந்து விட்டது. நரேனின் மனது முட்ட அவனது அப்பா வல்லிபுரத்தின் துயர நிகழ்வுகளே நிறைந்து இருந்ததினால் கோபம் தலைக்கேறி அவனது கை மிருதுளாவின் சளீர் என்று முதுகைப் பதம் பார்த்தது.என்றுமே அடிக்காத அப்பாவின் செய்கையால் அந்த பிஞ்சு கண்களில் நீர்முட்ட விம்மியவாறு நின்றது.


மலைகள் இணையத்துக்காக 

கோமகன் 

18  புரட்டாசி 2014                          

http://malaigal.com/?p=5753

Thursday, October 16, 2014

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 06

சுருக்கு சுறுக்கர் பாகம் 06
இண்டைக்கு விடிய காத்தாலை புஸ்பமாய் குளிச்சு நெத்தி முட்ட திருநூத்தை அள்ளி பூசிகொண்டு ஒரு சாம்பிராணி குச்சியும் கொழுத்திப்போட்டு கொம்பியூட்டரை திறந்து அதிலை சுப்பிரபாத்தை மெதுவாய் போட்டுக்கொண்டு ( இங்கையும் பக்தி கமழ வேணுமாம் ) பேப்பருகளிலை பூராயம் பாக்கத்  தொடங்கினன். எல்லா பேப்பருகளும் ஒரு உழுந்தை வித்தியாசம் வித்தியாசமாய் அரைச்சு பலகாரம் பலகாரமாய்  சுடுறாங்கள் .ஆனால் பாருங்கோ பலகாரத்துக்கு உப்பு புளி காணுமோ எண்டு ஒருத்தரும் வாயை திறக்கிறாங்கள் இல்லை.இண்டைக்கு சுறுக்கர் என்ன குளிரிலை பினாத்திறார் எண்டு எல்லாரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது விளங்காமல் இல்லை. உதுகளுக்கெல்லாம் இந்த சுறுக்கர் மசியிற ஆள் இல்லை கண்டியளோ.

நாலு வரியத்துக்கு பிறகு ஐரோப்பிய நீதிமானுகள் புலியளின்ரை தடையை நீக்கி இருக்கினமாம் எண்டது தான் இண்டையான் ஹொற் ரொப்பிக் கண்டியளோ . இந்த  நீதிமானுகள் தான் கிட்ட முட்ட ஏழு வரியத்துக்கு முன்னாலை சனமெல்லாம் றோட்டிலை நிண்டு குழற கையை கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்ட கோஸ்ரியள் . ஒரு தமிழனாய் பிறந்த குற்றதுக்காய் டெய்லி சனங்களை வகைதொகையாய் போட்டுத்தள்ள அதிலை குளிர் காஞ்ச கனவானுகள்  .சரி அதுகள்தான்  போகட்டும், இந்த கேடுகெட்ட  கொலையளை செய்தவங்களை சட்டத்துக்கு முன்னாலை கொண்டு வந்து கிலைசை கெடுத்துவம் எண்டு இல்லை. இப்ப வந்து சும்மா ரைம் பாசுக்கு தடையை எடுக்கிறம் எண்டால் என்ன கணக்கு பாருங்கோ?? அதுக்கு எங்கடை சனங்களும் எதோ தமிழ் ஈழம் கிடைச்ச மாதிரி ஆளாளுக்கு சவுண்டுகள் வுடுகினம். இந்த வழக்கை ஆடின அப்புக்காத்து ஒரு வெள்ளை எண்டு கொஞ்ச பேர் பெருமை படுகினம். முந்தி எல்லாம் வெள்ளையளுக்கு வழக்காடினவங்கள் எங்கடை அப்பன்மார். அப்பிடி ஒரு அப்புக்காத்தும் இங்கை இல்லையோ?? எண்ட கேள்வியும் என்ரை மண்டையுக்கை அடிக்குது. எல்லாம் முடிஞ்சு போய் , எல்லாரும் செத்து புல்லு முளைக்கிற நேரம் வந்து தடையை எடுக்கிறம் எண்டால்  இதை வைச்சு என்ன நாக்கே வழிக்கிறது?? கதைக்கிற நேரம் பாத்து கதைக்காமல் இருந்து போட்டு எல்லாம் முடிய இப்ப ஓடியந்து, நீங்களும் ஒரு மனுசர் எண்டு சாட்டுக்கு அழுகிறது ஆரின்ரை நிகழ்ச்சி நிரலிலை நடக்குது ??

இதிலை என்னம் ஒண்டையும் சொல்லவேணும் கண்டியளோ , எங்கடை வித்துவானுகள் பால்குடி பபாக்கள்,விரல் சூப்பி கொண்டு நிண்ட அதுகளை அநியாயமாய் முடக்கி போட்டினம் எண்டு நான் சொல்லேலை. உப்பு திண்டவன் தண்ணியை குடிக்கவேணும். வினை விதச்சவன் தினை அறுக்கவேணும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம். எங்கடையாக்களும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிச்சினம். நல்லாய் பட்டு தெளிஞ்சிட்டினம். அனால் தீர்ப்பிலை வலு கட் அன்ற் றைற்ராய் ரெண்டு விசயத்தை சொல்லி இருக்கிறாங்கள். ஒண்டு, மூண்டு மாசத்துக்குள்ளை ஐரோப்பா பாளிமென்ற் எடுக்கிறதோ இல்லையோ எண்டு ஒரு முடிவுக்கு வரவேணும். ரெண்டாவதுதான் மெயின் மாற்றார் கண்டியளோ. எந்த வளத்தாலையும் காசு சேக்கப்படாது. இல்லை நாங்கள் பெரிய பிஸ்கோத்துகள், எங்கடை விலாசங்களை காட்டுவம் எண்டு வெளிக்கிட்டால் ஆராலையும் காப்பேத்தேலாது. இதோடை யாகம் வளக்கிறம், அடிக்கடி பாளிமென்ருக்கு லெக்சன் வைக்கிறம் ,ஸ்கைப்பில அரசாங்கம் நடத்திறம், உள்ளுக்கை போன அம்மாவுக்காக கவலைப்படுறம் எண்டு விலாசம் காட்டாமல், நாங்கள் எல்லாரும் ஒண்டாய் சேந்து இந்த கொலையள் செய்தவையை கிலிசை கெடுத்தவேணும் பாருங்கோ. ஒரு பதவியிலை இருக்கிற ஆளை எப்பிடி கோட்டுக்கு கொண்டுவாறது, உது லூசு வேலை எண்டு நினைக்கப்படாது. ஒரு பதவியிலை இருந்தவர் கொலையள் செய்யிற நேரம் ஒண்டும் செய்யாமல், இப்ப வந்து தமிழ் சனங்களே நீங்கள் பாவங்கள் எண்டு அழுகிற நீதிவானுகளாலை மனமிருந்தால் பதவியிலை இருக்கிறவரை கோடேத்தேலும் கண்டியளோ. அதுகளை செய்யாமல் விட்டு போட்டு பேந்தும் எங்கடையாக்கள் சன்னதம் ஆடினால் ஒருத்தராலையும் காப்பாத்தேலாது கண்டியளோ. அப்ப பிள்ளையள் பேந்து ஒரு இடத்திலை சந்திப்பம்.

சுருக்கு சுறுக்கர்              

Monday, October 13, 2014

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 05

சுருக்கு சுறுக்கர் பாகம் 05வணக்கம் பிள்ளையள் கனகாலத்துக்கு பிறகு சுறுக்கன் வந்திருக்கிறன். இண்டைக்கு இருபத்தி நாலு வாரியத்துக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வந்துட்டுது எண்டு சனங்களும், இணையங்களும் ஒரே அல்லோலகல்லோலம். பாக்க பம்பலாய் இருக்கு. ஆனால் பாருங்கோ எனக்கு கொஞ்சம் டவுட்டுகள் மண்டையுக்கை டண்டணக்கா ஆடுது கண்டியளோ. அது என்னெண்டால் உண்மையிலை யாழ்ப்பாணம் சுதந்திர மண்ணாய் கிடக்கா எண்டு. இப்ப பாருங்கோ பாதுகாப்பு வலையங்கள் முழுக்க எடுபடேலை . நிழல் இராணுவ கெடுபெடியள் இன்னம் போகேலை .

இப்பவும் மகிந்தர் வாற ரெண்டு நாளைக்கும் வெளி சனங்கள் எம் ஒ டி பாஸ் எடுக்கவேணும் எண்டு படிச்சன் . இன்னும் புலிவாசம் மணக்குதோ எண்டு மூக்கை நீட்டி கொண்டு திரியிறாங்கள் . ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருக்கவேணும் எண்டமாதிரி , கிளிநொச்சியிலை நாடுகடந்த அரசாங்கம் வந்ததாய் மகிந்தர் கடுப்படிசிருக்கிறார் ( அடுத்த லிஸ்ட் றெடி ). இந்த பயங்கராவாத தடை சட்டம் என்னம் ரோட்டலாய் எடுபடேலை. அதோடை கொழும்புவாழ் டமில்சை குழுத்திப்படுத்த கல்கிசையிலை இருந்து யாழ்தேவி டிரக்ட்டாய் யாழ்ப்பாணம் வருகுது எண்ட நியூசையும் படிச்சன். உண்மையிலை எனக்கு புல்லரிக்குது கண்டியளோ.

அடுத்த லெக்சனிலை மகிந்தர் தான் எண்டது இந்த யாழ்தேவியாலை கொண்போர்ம் ஆயிட்டுது . ஆக மொத்தத்திலை மெயின் சுவிச்சுகள் ஒண்டையும் ஒண் பண்ணாமல், யாழ் தேவி எண்ட மோகினியை விட்டு சனங்களை தன்ரை பக்கம் கொண்டு வந்த மகிந்தற்ரை மண்டை எங்கடை வித்துவானுகளுக்கு இல்லை எண்டதையும் சொல்லத்தான் வேணும் பாருங்கோ. இதுக்காக சனங்கள் இப்பிடியே இருக்கவேணும் எண்டு நான் சொல்லேலை. சனங்களும் பாவங்கள் அதுகளை வைச்சு அரசியல் பண்ணுறது வெரி பாட் கண்டியளோ .சரி பிள்ளையள் என்னமொரு இடத்திலை சந்திப்பம் .

சுருக்கு சுறுக்கர்


Thursday, October 9, 2014

சுவைத்(தேன்) 01

01  மரபுவழிபட்ட இயல்புகள்  சரித்திர ஆசிரியர்களின் பதிவுகளிலோ
குறிசொல்வான் எதிர்வு கூறலிலோ
அவர்களைப் பற்றிய தகவல் இல்லை .
வேத நூல்கள் -
அழிவுகால ஆதரங்களுள் ஒன்றாய்
அக்கூட்டத்தவரின் வருகை பற்றி எச்சரித்திருக்கவும்மில்லை

செவ்வரியோடிய கனத்த அவர்தம் கண்களில்
மதுவின் நெடியிருந்தது
ஆயுதந்தரித்த கைகளின் இரேகைகள் மறைந்து
இரத்தக்கறை படிந்திற்று .
பிறழ்ந்த பாலுறவுகள் பற்றியும்
பெண்களின் பிறப்புறுப்பைச் சுட்டுவதுமாயுமிருந்த
அவர்களின் பேச்சுமொழிக் கொச்சை
எந்த நாகரீகத்திலும் புழங்கியதாய் இல்லை .

அவர்கள் முதலடி வைத்தபோது :
ஈரம் உலர்ந்த வேர்கள் நாவை நீட்டியபடி பூமிக்கு
வெளியாகி அலைந்தன .
அடுத்ததிற்கு -இலைகள் மஞ்சள்பாரித்து
இருளில் தடுமாறின .

சில்லூறுகளுக்குப் பேச்சு நின்றுபோயிற்று.
வானம் நடுங்கி - வெள்ளிகளை தவறவிட்டது
பொழுதின் வெண் இழைகள் எரிந்து கறுப்பு மீய
ஆயுள்ளுக்குமாய் சூழ்ந்திற்று இருள் .
பிள்ளைகளுக்குப் -

படுக்கையில் சிறுநீர்கழிக்கப் பழக்கிய அவர்கள் :
இன்னும் ஏழேழு தலைமுறைக்கும்
தூக்கத்தை மிரட்டப் போதுமானதாயிருந்த
தடயங்களைப் பதிந்துவிட்டு ஓசைப்படாது
அழுது தேம்பிக்கொண்டிருந்த குழந்தைகளின்
அகல விரித்த மிரண்ட விழிகளுக்குள்
இறங்கிக் கொண்டார்கள் .
அப்போது நான் :
குழந்தைகளுள் ஒருவனாயிருந்தேன் .

ரஷ்மி
ஈதேனின் பாம்புகள்

02 முதுமை


காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப்போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஓவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்.
கதிர்க் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது
ஓன்றுமில்லை
பரிதிப்பிணம்.

03 இறப்பு


சிறிதில் பெரிதின் பளு
பாழின் இருளைத் தொட்டுன்
நுதலில் இட்ட பொட்டு
பார்வைக் கயிறு அறுந்து
இமையுள் மோதும் குருடு
ஓன்றும் ஏதும் இன்றி
இ;ன்மை நிலவி விரிதல்
வண்டியை விழுங்கும் பாலம்
மஞ்சம் கழித்த பஞ்சு
கூட்டை அழிக்கும் புயல்
புயலில் தவிக்கும் புள்
வாழ்வின் சூழலைத் துறந்து
என்றோ இழந்த வாசக்
காற்றுள் வீழும் ரோஜா
துணியே நைந்து இழையாய்
பஞ்சாய் பருத்தித் திரளாய்
பின்னே திருகும் செய்தி
காற்றை விழுங்கும் சுடர்
சுடரை உறிஞ்சும் திரி
வினையில் விளைவின் விடிவு
விளையா விடிவின் முடிவு
தொடங்காக் கதையின் இறுதி
நிறுத்தப் புள்ளிகளிடையே
அச்சுப் பிழைத்து
அழித்த வசனம்
வெறும்
வெண்தாள்ச் சூன்யம்.

04 உதயமாகிவரும் அரசியல்வாதிக்கு


முட்டைகளை உடைக்காமல்
ஆம்லெட் பண்ண முடியாது
என்று தகவல் தருகிறாய்.
யதார்த்தமான வாதம் - உண்மையும் கூட.
ஆனால்,
எத்தனை முட்டைகள் உடைக்கப்பட்டுள்ளன?
ஏன் இந்தப் பரபரப்பு?
ஆம்லெட்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருப்போர் யார்?
ஆம்லெட்டின் ருசிதான் என்ன?
சமைப்பதை விட
முட்டைகளை உடைப்பதில்
உனக்கு ஏன் இவ்வளவு ருசி?
அடித்து உடைக்கப்பட்டுக்கிடக்கின்றனவே 
அவை, தரையில்
என்ன செய்து கொண்டிருக்கின்றன?
இந்த அழகுகெட்ட பெட்டைக் கோழிகளுக்கு
நீ ஒருவனே சேவலாகிய சங்கதி
எப்படி நடந்தது?
உனது நிலையிலுள்ள 
ஐயா அவர்களுக்கு
இறக்குமதி செய்யப்பட்ட
பழமொழிகளின் உபயோகம் இதுதான்:
உள்ளூர்க் குரல்களை மூச்சடைக்க வைக்கலாம்.

D.J.ENRIGHT
'ENCOUNTER', JULY, 1970
இணை மொழிபெயர்ப்பாளர்:
டேவிட் சந்திரசேகர்.

05 முடிச்சுகள்


கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு.

' மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி.
மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லை செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

ஜாதியம்தான் வாய் ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சல்
வேதாந்த வாயலம்பல்.

சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில்

முடியாது மணலைக்
கயிறாய் திரிக்க
காலத்தைக் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு - நான்.

அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்த விதம்

சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது

சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது

சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது.

06 “அற்புதம்” 


துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப் பாறைகள்
வரண்ட நதிபோல் கிடக்கும்
ஒரு துறைமுகத் தெரு
எங்கும்
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்
ஒரு தொழிலாளி
சூரியனை அவனது சிரசு மறைக்க
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து
பீடிப் புகையோடு
காறித் துப்புகிறான்
அற்புதம்
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க
பரிதியின் விரித்த கையிலிருந்து
ஒரு மழைத்துளி பிறக்கிறாள்
முகத்தில்
வைரத்தின் தீவிரம் அவள்
மூளையில் ஒரு வானவில்
எச்சில் துளி
என் விழிப்பந்தில் வீழ்கிறது
அக்கணம், ஒரு கணம்
கிரேன்கள் லாரிகள் யாவும்
தொழிலற்றுச் சமைந்தன

07 அருவுருவம்


தூரத்துச் செம்பாறை
சமீபத்திற்குக் களிமண்ணாயிற்று,
கால்பட்டு உள்வாங்கி
கடித்தது.
‘பாம்பு’ என்று பதறி ஒடி
ஆசுவாசும் ஆகி
காலைப் பரிசோதித்து
ரத்தம் கண்டு
கடிவாயின் மேல்
வேட்டிக் கரையால்
கட்டுப் போட்டு
உயிரைக் கையில் பிடித்தபடி
விஷத்தின் வேலையை
எதிர்பார்த்து ஏமாந்து
திரும்பி
தூரத்துச் செம்பாறை
சமீபத்துக்குக் களிமண்ணான
ஸ்தலுத்துக்கு வந்து
கால்பட்டு உள்வாங்கிய
பிலத்தில் எட்டிப்
பார்த்தால்
விளிம்புப் பற்களை
சிரித்துக் காட்டிற்று
களிமண்ணின் அடியில் ஒரு
செம்பாறை. 

08 அறைகூவல்


இதுபுவியை நிலாவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீறாகு!


09 வாக்கு


சரி இது தவறது
என்று உணர்ந்துருகி
அறிவில் தெளிந்ததை
முறை பிசகற்று
வெளியிடும் தவம்
சுய வெளியீடல்ல.
சுயத்தின் எல்லைக்குள்
நில்லாத உயிருக்கு
அதுவே வேரும்
கிளையும் இலையும்
பிராணனும் பிராண
வெளியின் உயிரும்.
சுயத்தை மீறி
உலவும் வெளியில்
உள்ளல் உடன் பூண்டு
சொல்லாயிற்று.
உணர்வில் நான் நீ
இருமைஉருகி
அறிவில் ஒளிர்ந்து
கருவும் உருவும்
பிசகாது பிறந்து
பொருளாயிற்று.
சுயத்தின் சுமை
அற்ற பொருளே
பறக்கும் பரந்து
ஆழ்ந்து நிலைக்கும்.
இதனால் தான் போலும்,
“ சொல்ல வந்ததை
முறையற்று வெளியிட்டால்,
அர்த்தம் மட்டுமல்ல
உயிரும் ஒருவிததில்
சிதையும்” என்றான்
கிரிட்டனிடம் அன்று
பிளேட்டோ.

நன்றி : http://premil1.blogspot.fr