Skip to main content

சுவைத்(தேன்) - கவிதைகள் -பாகம் 01.


01 மரபுவழிபட்ட இயல்புகள்சரித்திர ஆசிரியர்களின் பதிவுகளிலோ
குறிசொல்வான் எதிர்வு கூறலிலோ
அவர்களைப் பற்றிய தகவல் இல்லை .
வேத நூல்கள் -
அழிவுகால ஆதரங்களுள் ஒன்றாய்
அக்கூட்டத்தவரின் வருகை பற்றி எச்சரித்திருக்கவும்மில்லை

செவ்வரியோடிய கனத்த அவர்தம் கண்களில்
மதுவின் நெடியிருந்தது
ஆயுதந்தரித்த கைகளின் இரேகைகள் மறைந்து
இரத்தக்கறை படிந்திற்று .
பிறழ்ந்த பாலுறவுகள் பற்றியும்
பெண்களின் பிறப்புறுப்பைச் சுட்டுவதுமாயுமிருந்த
அவர்களின் பேச்சுமொழிக் கொச்சை
எந்த நாகரீகத்திலும் புழங்கியதாய் இல்லை .

அவர்கள் முதலடி வைத்தபோது :
ஈரம் உலர்ந்த வேர்கள் நாவை நீட்டியபடி பூமிக்கு
வெளியாகி அலைந்தன .
அடுத்ததிற்கு -இலைகள் மஞ்சள்பாரித்து
இருளில் தடுமாறின .

சில்லூறுகளுக்குப் பேச்சு நின்றுபோயிற்று.
வானம் நடுங்கி - வெள்ளிகளை தவறவிட்டது
பொழுதின் வெண் இழைகள் எரிந்து கறுப்பு மீய
ஆயுள்ளுக்குமாய் சூழ்ந்திற்று இருள் .

பிள்ளைகளுக்குப் -
படுக்கையில் சிறுநீர்கழிக்கப் பழக்கிய அவர்கள் :
இன்னும் ஏழேழு தலைமுறைக்கும்
தூக்கத்தை மிரட்டப் போதுமானதாயிருந்த
தடயங்களைப் பதிந்துவிட்டு ஓசைப்படாது
அழுது தேம்பிக்கொண்டிருந்த குழந்தைகளின்
அகல விரித்த மிரண்ட விழிகளுக்குள்
இறங்கிக் கொண்டார்கள் .

அப்போது நான் :
குழந்தைகளுள் ஒருவனாயிருந்தேன் .

ரஷ்மி
ஈதேனின் பாம்புகள்


02 முதுமைகாலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப்போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஓவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்.
கதிர்க் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது
ஓன்றுமில்லை
பரிதிப்பிணம்.

03 இறப்புசிறிதில் பெரிதின் பளு
பாழின் இருளைத் தொட்டுன்
நுதலில் இட்ட பொட்டு
பார்வைக் கயிறு அறுந்து
இமையுள் மோதும் குருடு
ஓன்றும் ஏதும் இன்றி
இ;ன்மை நிலவி விரிதல்
வண்டியை விழுங்கும் பாலம்
மஞ்சம் கழித்த பஞ்சு
கூட்டை அழிக்கும் புயல்
புயலில் தவிக்கும் புள்
வாழ்வின் சூழலைத் துறந்து
என்றோ இழந்த வாசக்
காற்றுள் வீழும் ரோஜா
துணியே நைந்து இழையாய்
பஞ்சாய் பருத்தித் திரளாய்
பின்னே திருகும் செய்தி
காற்றை விழுங்கும் சுடர்
சுடரை உறிஞ்சும் திரி
வினையில் விளைவின் விடிவு
விளையா விடிவின் முடிவு
தொடங்காக் கதையின் இறுதி
நிறுத்தப் புள்ளிகளிடையே
அச்சுப் பிழைத்து
அழித்த வசனம்
வெறும்
வெண்தாள்ச் சூன்யம்.

04 உதயமாகிவரும் அரசியல்வாதிக்குமுட்டைகளை உடைக்காமல்
ஆம்லெட் பண்ண முடியாது
என்று தகவல் தருகிறாய்.
யதார்த்தமான வாதம் - உண்மையும் கூட.
ஆனால்,
எத்தனை முட்டைகள் உடைக்கப்பட்டுள்ளன?
ஏன் இந்தப் பரபரப்பு?

ஆம்லெட்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருப்போர் யார்?
ஆம்லெட்டின் ருசிதான் என்ன?
சமைப்பதை விட
முட்டைகளை உடைப்பதில்
உனக்கு ஏன் இவ்வளவு ருசி?
அடித்து உடைக்கப்பட்டுக்கிடக்கின்றனவே
அவை, தரையில்
என்ன செய்து கொண்டிருக்கின்றன?

இந்த அழகுகெட்ட பெட்டைக் கோழிகளுக்கு
நீ ஒருவனே சேவலாகிய சங்கதி
எப்படி நடந்தது?
உனது நிலையிலுள்ள

ஐயா அவர்களுக்கு
இறக்குமதி செய்யப்பட்ட
பழமொழிகளின் உபயோகம் இதுதான்:
உள்ளூர்க் குரல்களை மூச்சடைக்க வைக்கலாம்.

D.J.ENRIGHT
'ENCOUNTER', JULY, 1970
இணை மொழிபெயர்ப்பாளர்:
டேவிட் சந்திரசேகர்.


05 முடிச்சுகள்கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு.

' மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி.
மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லை செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

ஜாதியம்தான் வாய் ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சல்
வேதாந்த வாயலம்பல்.

சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில்

முடியாது மணலைக்
கயிறாய் திரிக்க
காலத்தைக் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு - நான்.

அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்த விதம்
சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது
சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது
சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது.

06 “அற்புதம்”


துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப் பாறைகள்
வரண்ட நதிபோல் கிடக்கும்
ஒரு துறைமுகத் தெரு
எங்கும்
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்
ஒரு தொழிலாளி
சூரியனை அவனது சிரசு மறைக்க
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து
பீடிப் புகையோடு
காறித் துப்புகிறான்
அற்புதம்
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க
பரிதியின் விரித்த கையிலிருந்து
ஒரு மழைத்துளி பிறக்கிறாள்
முகத்தில்
வைரத்தின் தீவிரம் அவள்
மூளையில் ஒரு வானவில்
எச்சில் துளி
என் விழிப்பந்தில் வீழ்கிறது
அக்கணம், ஒரு கணம்
கிரேன்கள் லாரிகள் யாவும்
தொழிலற்றுச் சமைந்தன

07 அருவுருவம்

தூரத்துச் செம்பாறை
சமீபத்திற்குக் களிமண்ணாயிற்று,
கால்பட்டு உள்வாங்கி
கடித்தது.
‘பாம்பு’ என்று பதறி ஒடி
ஆசுவாசும் ஆகி
காலைப் பரிசோதித்து
ரத்தம் கண்டு
கடிவாயின் மேல்
வேட்டிக் கரையால்
கட்டுப் போட்டு
உயிரைக் கையில் பிடித்தபடி
விஷத்தின் வேலையை
எதிர்பார்த்து ஏமாந்து
திரும்பி
தூரத்துச் செம்பாறை
சமீபத்துக்குக் களிமண்ணான
ஸ்தலுத்துக்கு வந்து
கால்பட்டு உள்வாங்கிய
பிலத்தில் எட்டிப்
பார்த்தால்
விளிம்புப் பற்களை
சிரித்துக் காட்டிற்று
களிமண்ணின் அடியில் ஒரு
செம்பாறை.

08 அறைகூவல்இதுபுவியை நிலாவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீறாகு!

09 வாக்கு

சரி இது தவறது
என்று உணர்ந்துருகி
அறிவில் தெளிந்ததை
முறை பிசகற்று
வெளியிடும் தவம்
சுய வெளியீடல்ல.
சுயத்தின் எல்லைக்குள்
நில்லாத உயிருக்கு
அதுவே வேரும்
கிளையும் இலையும்
பிராணனும் பிராண
வெளியின் உயிரும்.
சுயத்தை மீறி
உலவும் வெளியில்
உள்ளல் உடன் பூண்டு
சொல்லாயிற்று.
உணர்வில் நான் நீ
இருமைஉருகி
அறிவில் ஒளிர்ந்து
கருவும் உருவும்
பிசகாது பிறந்து
பொருளாயிற்று.
சுயத்தின் சுமை
அற்ற பொருளே
பறக்கும் பரந்து
ஆழ்ந்து நிலைக்கும்.
இதனால் தான் போலும்,
“ சொல்ல வந்ததை
முறையற்று வெளியிட்டால்,
அர்த்தம் மட்டுமல்ல
உயிரும் ஒருவிததில்
சிதையும்” என்றான்
கிரிட்டனிடம் அன்று
பிளேட்டோ.

Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…