Thursday, November 6, 2014

தமிழ் மொழிக்கு இளையவர்கள் எதிரானவர்களா ???
திருமதி. சுபாசினி ரெம்மல் அவர்கள் ஜேர்மனியில் சர்வதேச கணணினி மேலான்மை நிறுவனத்தில் ஐடி ஆர்க்கிடெக்டாகப் பணிபுரிகிறார்.;.இளம் வயது முதலே தாய்மொழியான தமிழ்மொழிக்கும், தான் தழுவி நிற்கும் சைவத்திற்கும் தொண்டாற்றி வருவதுடன் மலேசியாவில் ரப்பர்,செம்பனைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சமூகப்பணிகள் செய்ததுடன இளம் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம், தமிழ்க் கணிணி போதித்தல் வகையில் சமூகப் பணிகளை மேற்கொண்டவர்.

2001 ஆண்டு டாக்டர் திரு.நா.கண்ணனுடன் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையை நிறுவி அதன் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவ்வறக்கட்டளை மூலம் அழிந்து போகவிருக்கம் பழம் நூல்கள்,ஓலைச்சுவடிகள்,ஆவணங்கள் ஆகிவற்றை கணிணி மின்னாக்கம் வழியாக பாதுகாத்தல்,வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்தல் அவற்றின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றார்.

ஓவ்வொரு ஆண்டும் தமிழகம் சென்று அங்குள்ள கல்வெட்டுக்கள்,ஓலைச்சவடிகள் போன்றவற்றில் காணப்படும் தகவல்களைச் சேகரித்து இணையங்களிலும் வெளியிட்டு வருகின்றார்.இத்தகவல்கள் யாவும் இணையங்கள் ஊடாக ஒருவரிலிருந்து ஒருவருக்கு என் தொடர்பாடல் மூலம் பலரைச் சென்றடைகின்றன.இன்றைய கணிணி யுகத்தில் தமிழ்மொழியின் எதிர்காலம் நோக்கி செல்வது என்பதிலும் பார்க்க தமிழ்மொழியின் மூல வேர் எங்கிருக்கின்றது அதன் வேர்கள் எந்தெந்த நாடுகளிலெல்லாம் வேரூன்றியிருக்கின்றன என்பதைக் கண்டறிவது மிகவும் சிரமமானதே. தமிழ்மொழி சார்ந்த தொல்லியல் தடயங்கள் அந்தந்த காலங்களில் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போய் அவை தேடுவாரற்று சிதைந்து சிதிலமாகி தூசியாகி போய்விட்டன.ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட குறியீடுகளை வெறும் குறியீடாகக் கண்டு குப்பைக்குள் அள்ளிப் போட்ட சம்பவங்கள் நிறையவே உண்டு.

காலில் தட்டுப்பட்ட ஓலைச்சவடிகளில் வெறும்பனை ஓலைச்சட்டங்களாகத் தெரிந்தனவே தவிர அவை பெறுமதிமிக்கவையாக உணரப்படவில்லை. தேடித்தேடி அத்தகைய ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அவற்றின் தகவல்களை இணையங்கள் ஊடாக மக்களைச் சென்றடைய வைப்பவர் திருமதி.சுபாசினி ரெம்மல் அவர்கள்.தமிழினத்தின் கடந்த கால வரலாற்று ஆவணங்களைப் பற்றிய அறிதலை மாணவர்களிடத்தில் கலந்துரையாடலாக பகிர்ந்து அவர்களையும் இத்துறையில் ஈடுபட வைத்து வருகின்றார்.இவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அருங்காட்சியகங்களுக்குச் சென்று தமிழ்மொழி சார்ந்த ஆவணங்கள் உண்டா என அறிந்து அவற்றை இணையங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றார்.

இவரின் பல்வேறு செயல்பாடுகளாக சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன,ஜேர்மனி நினைவலைகள்,மலேசிய நினைவுகள்,அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம், அருங்கலைப் படைப்புகள், மண்ணின்குரல்,விழியக்காட்சிகள்,மரபுப்படங்கள்,தமிழ் மரபு நூலகம்,மின்தமிழ் மேடை,கணையாழி போன்ற ஊடகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் விரிந்து பரந்து செல்கின்றன. அமுதசுரபி,கல்கி போன்றவற்றில் இவருடைய பேட்டி பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்தின் வரலாற்றுக்காகவும் எப்பொழுதும் பணி செய்து கொண்டிருக்கும் திருமதி.சுபாசினி ரெம்மல் என்ற இளையவரின் பணியை என்னால் பாராட்ட இருக்க முடியவில்லை . 

நன்றி முகனூல் 

கோமகன் 

06 கார்த்திகை  2014