Wednesday, December 24, 2014

லைக்கா ஏன் சனங்களிடம் லைக்கவில்லை ??

லைக்கா ஏன் சனங்களிடம் லைக்கவில்லை ??

கடந்த சில மாதங்களாக லைக்கா தொலைத்தொடர்பாடல் நிறுவனம் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்வலைகளின் மையப்புள்ளிகள் என்ன என்பதும், லைக்காவின் தோற்றத்தையும் ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். லைக்கா தொடர்பாடல் நிறுவனம் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலைகளை ஆராய முன்பு ,இந்த நிறுவனத்தின் தோற்றுவாய் எது என்பதை ஆராய்வது முக்கியமானதாகும் .

தமிழர்கள் புலம் பெயர்ந்த தேசங்களில் ஒன்றான பெரிய பிருத்தானியாவைத் தலமையகமாக கொண்டு இந்த லைக்கா நிறுவனம் இயங்கி வருகின்றது. உலகில் வாழும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட "லைக்கா" என்ற நாயின் பெயரை தனது நிறுவனத்தின் பெயராக சூட்டிக்கொண்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய தொழில் " ப்ரீபேயிட் கைத்தொலைபேசி சிம் கார்ட்" விற்பனையாகும். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த சுபாஸ் அல்லிராஜா என்ற தமிழரே  இந்த நிறுவனத்தின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று இயக்குனருமாக இருக்கின்றார்.    இந்த ப்ரீபேயிட் கைத்தொலைபேசி சிம் கார்ட் விற்பனையில் ஐரோப்பாவின் மிக முக்கிய நிறுவனங்களில் லைக்கா தொடர்பாடல் நிறுவனமும்  ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் 15 வருட சேவையை பாராட்டுமுகமாக பிரித்தானிய – ஆசிய வணிகர்களுக்கான விருது வழங்கும் நிறுவனத்தால் 3 ஏ ( 3 A ) தர விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த லைக்கா தொடர்பாடல் நிறுவனம் வருடத்துக்கு அண்ணளவாக 19 பில்லியன் நிமிடங்களை விற்பனை செய்து ,வருடாந்த  நிகர வருமானமாக 6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களைப் பெறுவதாக பெரிய பிருத்தானியாவின் வணிக ஏடு ஒன்று தெரிவிக்கின்றது. 2012 ஆண்டளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி,  லைக்கா தொடர்பாடல் நிறுவனம் 12 மில்லியன் வாடிக்கையாளர்களை  தன்னகத்தே கொண்டுள்ளது. சுருக்கமாகக்  கூறினால் கடும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு "அகதி " என்ற இழி சொல்லுடன் புலம் பெயர்ந்த ஓர் ஈழத்தமிழனின் கடுமையான உழைப்பு இந்த தொடர்பாடல் நிறுவனத்தின் பின்னே ஒழிந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களிடையே இவ்வளவு செல்வாக்குப் பெற்ற லைக்கா தொடர்பாடல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக அதன் செயற்பாடுகளால் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. அதில் முக்கியமாக, தமிழர்களின் மூன்று தலைமுறைகளை கருவுடன் வேரறுத்த இலங்கை அரசுடனும், அதன் மூல நாயகனான மிகிந்த ராஜபக்ச வுடன் பல வியாபார ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் மேற்கொண்டது. இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் பலத்த மனித உரிமைகள் மீறல்களை மேற்கொண்டு சர்வதேசத்தின் விசாரணைகளை எதிர்நோக்கிகொண்டிருக்கும் ஓர் அரசுடன் நெருக்கமான உறவுகளை பேண வேண்டிய அத்தியாவசியம் ஏன் லைக்கா தொடர்பாடல் நிறுவனத்துக்கு ஏற்பட்டது ? என்ற கேள்விக்கு விடை சுலபமானது. வியாபரத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் வியாபாரத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு எந்தப்பேயுடனும் கூட்டு சேர்வதற்கு தமிழ் முதலாளிகள் பின்நின்றதில்லை என்பது வரலாறு. யுத்தம் நடைபெற்ற காலத்தில் எண்ணை மகேஸ்வரனில் இருந்து இன்று லைக்கா தொடர்பாடல் நிறுவனம் வரை இதையே செய்துகொண்துதான் இருக்கின்றார்கள். தங்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் நேரடிப்பங்காளிகளான  மக்களின் மன உணர்வுககள் என்பது இவர்களுக்கு இரண்டாம் பட்சமே.

லைக்கா தொடர்பாடல் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன், குறிப்பாக மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புகளைப் பேணிவருவதாக முன்னர் தகவல்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகி இருந்தன. இருந்தபோதிலும்  அவை பெரும்பாலும் ஆதாரப்படுத்த முடியாத ஊகங்களாகவே இருந்துவந்துள்ளன. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுடன் ஒட்டி நடாத்தப்பட்ட Commonwealth Business Forum என்ற வர்த்தக முதலீட்டாளர் கண்காட்சிக்கு லைக்கா தொடர்பாடல் நிறுவனமே தங்க அனுசரணையாளர் ( Gold Sponsor ) ஆக இருந்தமை பகிரங்கப் படுத்தப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மேலும் பல ஆதாரமான தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அதில் முக்கியமாக, மகிந்த ராஜபக்சவின் மருமகன் ஹமால் லலிந்த ஹெட்டியாராச்சிக்கு சொந்தமான போர்த்துகலின் மதீராவில் பதிவு செய்யப்பட்ட Hastings Trading e-Serviços Lda என்ற நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டில்  லைக்கா தொடர்பாடல் நிறுவனம்  வாங்கியதாகவும், திவாலாகியிருந்த இந்த நிறுவனத்தின் 95 வீதமான பங்குரிமை ஹெட்டியாராச்சிக்கு சொந்தமாக இருந்தாகவும் கோப்பரேட் வோட்ச் ( Corporate watch ) என்ற  நிறுவனம் வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தால் வாங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் சிறிலங்காவில் wireless broadband சேவையை வழங்கும் உரிமையை பெற்றதாகவும் கோப்பரேட் வோட்ச் (Corporate watch ) மேலும் இதன்  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சிறிலங்கா ரெலிகொம் இன் பலத்த எதிர்ப்பின் மத்தியில் wireless broadband சேவையை வழங்கும் உரிமையை பெற்றுக்கொண்ட இந்த நிறுவனம், பின்னர் சிறிலங்கா ரெலிக்கொம் உடன் வலிந்து இணைக்கப்பட்டாதாகவும் மேலும் அந்த செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நின்றுவிடாது, லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின்  பிரயாண முகவர் நிறுவனமான Lyca Fly தற்போது சிறிலங்கா எயார்லைன்சின் முதன்மை முகவராக செயற்படுவதாகவும் கூறுகிறது கோப்பரேட் வோட்ச் ( Corporate Watch ) நிறுவனம். அத்துடன் பன்னாட்டு அரசியல் தலைவர்களும் மனிதவுரிமை அமைப்புகளும் இறுதியாக கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில், பெரிய பிருத்தானியாவை தலமையகமாக  கொண்டு இயங்கும் லைக்கா தொடர்பாடல்  நிறுவனம்  பொதுநலவாய நாட்டு மாநாட்டுடன் ஒட்டிய ஒரு நிகழ்வுக்கு பாரிய நிதியுதவி வழங்கியமை முப்பது வருட கால யுத்தத்தில் தமது உறவுகளையும் உடமைகளையும் தொலைத்த  தமிழ்மக்களில் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருப்பினும் விளம்பரங்களில் தங்கியுள்ள தமிழ் ஊடகங்களும், லைக்கா தொடர்பாடல் நிறுவனத்திடம் நிதியுதவி பெற்றுவரும் தமிழரமைப்புகளும் இவ்விடயத்தில் கள்ள மௌனம் சாதித்து வருகின்றன. ஒரு பக்கம் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்குமாறு கோரிக்கைகளை  விடுத்துக்கொண்டு, சிறிலங்கா அரசுக்கு உதவிவரும் நிறுவனங்களிடம் தங்கியிருக்கும் நிலையிலேயே சில தமிழர் அமைப்புகள் உள்ளமை கண்டனத்துக்குரிய  ஒரு விடயமாகும்.

மேலும் பெரிய பிருத்தானியாவில் தனது இருப்பை தக்கவைக்க அன்றைய ஆளும் கட்சியான கொன்சர்வேர்டிவ் கட்சிக்கு அதிகளவு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களில் லைக்கா லைக்கா தொடர்பாடல் நிறுவனமும்  அடங்குவதாகவும், 2011 ஆம் ஆண்டில்  மாத்திரம் மூன்று இலட்சம் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தி கார்டியன் ( The Guardian ) பத்திரிகை (4 ஜுன் 2012) செய்தி வெளியிட்டிருந்தது. அதே வேளையில் லைக்கா தொடர்பாடல் நிறுவனம் பெரிய பிருத்தானியாவின் வருமானவரி திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய கோப்பிறேஷன் ரக்ஸ் (corporation tax ) ஐ செலுத்தவில்லை என்ற தகவலையும் இப்பத்திரிகை வெளியிட்டது. 2008ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம்  ஆண்டு வரையான காலப்பகுதியில் 260 மில்லியன் பவுண்ஸ்களை லைக்கா தொடர்பாடல் நிறுவனம் மொத்த வருமானமாகப் பெற்றிருந்தபோதிலும், அதற்கான வரி செலுத்தப்படவில்லை என இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்து. தொடர்ந்தும் பலதடவைகள் மனிதவுரிமைகளை மீறிவரும் இலங்கை  அதிகாரமையத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திடம் கொன்சவேர்ட்டிவ் கட்சி நிதியுதவி பெறுவதுபற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு Middlesbrough South and East Cleveland தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Tom Blenkinsop பிரதமர் டேவிட் கம்ரூன் அவர்களுக்கு கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசுடனும் அதன் அதிகார மையங்களுடனும் லைக்கா தொடர்பாடல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருங்கிய தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் தாங்கள் இழந்த நல்ல பெயரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இவர்கள் எடுத்துக்கொண்ட அடுத்த ஆயுதம் இளையவர்கள் ஆகும். தற்பொழுது  இளையவர்கள் பலர் மிகவும் ஆர்வமாக இயங்கிவரும் கலைத்துறையின் பக்கமும் – விளையாட்டின் பக்கமும்  லைக்கா தொடர்பாடல் நிறுவனம் தனது பார்வையைத் திருப்பி இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலான  இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு வெள்ளையடித்தல், ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்தையும், அவர்களது 60 வருட காலமான போராட்டத்தின் விழைவாக வந்த உயிர்நாடியான ஈழ கோரிக்கையை மறக்கடித்தல் போன்றவற்றை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு வழியினை , இந்த இளையவர்களுக்கு தங்கள் ஆதரவுகளை வழங்குவதன் மூலம் லைக்கா தொடர்பாடல் நிறுவனம் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு மறைமுக ஊக்கியாக செயல்பட்டு வருகின்றது. ஈழத்துக்கலைஞர்களின் படைப்புக்களிற்கும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிற்கும் அங்கீகாரம் அளித்து அவர்களை ஊக்குவித்து வளரவைப்பதாக சொல்லிப் பல வியாபார நிறுவனங்கள் தமது விளம்பரத்தை முன்னெடுப்பது பொதுவாகச் செய்வது  வழமையானது. ஆனால், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் தாம் தொடங்கியதை செய்து முடித்தே ஆகவேண்டும் என்கின்ற நிலமையில் சில மோசமான வியாபாரிகள் வலையிலும் தெரியாது விழுந்து விடுகிறார்கள். இதற்கு இந்த லைக்கா தொடர்பாடல் நிறுவனமும் முக்கிய சான்றாக இருக்கின்றது.
லைக்கா தொடர்பாடல் நிறுவனம் ஈழத்தமிழரின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, தமிழகத்தில் இதன் செயற்பாடுகள் அங்குள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களில் வேறுவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்வலைகள் வெறும் மட்டரகமான அரசியல் தகிடுத்தங்களுக்காவே உருவாக்கப்பட்டவையாகவே எண்ண இடமுண்டு. ஏனெனில் தமிழகத்து  மாணவர்களது மனஉணர்வுகளை காலத்துக்கு காலம் தங்கள் அரசியல் தேவைகளுக்காக இந்த தேசிய உணர்வாளர்கள் பயன்படுத்தியதுண்டு. உதாரணமாக, முன்பு அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனீவா கூட்டத்தொடரில் கொண்டுவந்த மனிதஉரிமைகள் மீறல் கண்டனத் தீர்மானத்துக்கு  தமிழகத்து  மாணவர்களை "அமெரிக்காவை எதிர்ப்போம் " என்ற சுலோகங்களுடன் தூண்டி விட்டு தமிழகத்தை செயல் இழக்கச் செய்த இந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் , இப்பொழுது எடுத்துக்கொண்ட புதிய உத்தி "லைக்காவை எதிர்க்கின்றோம்" என்பதேயாகும். இதற்கு முக்கிய காரணமாக லைக்கா தொடர்பாடல் நிறுவனம் தமிழகத்தில் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்து கத்தி என்ற திரைப்படத்தை தயாரித்தது ஆகும் . லைக்கா தொடர்பாடல் நிறுவனத்துக்கு எதிரான அதிர்வலைகள் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன. கத்தி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தை ஆரம்பித்த தொல் திருமாவளவன் போன்ற தமிழ் தேசிய உணர்வாளர்கள் அதைத்  தமிழக மாணவர்களினூடாக பெரும் போராட்டமாக முன்னெடுத்தனர். இந்த நிகழ்வுகள் தமிழகத்தை ஒருபுறம் கலக்கிக் கொண்டிருக்க, இதே தொல் திருமாவளவன் அண்மையில் ஜெர்மனியின் ஹம் நகரில் லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12 ஆவது மகாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளது தொல் திருமாவளவனின் இரட்டை வேடத்தை தோல் உரித்துகாட்டியுள்ளது. இவர்களின் தகிடு தத்தங்களுக்கு காலம்காலமாக ஒன்றும் அறியாத  தமிழக மாணவர்கள் பலியாவது கண்டனத்துக்குரியது. அதே வேளையில் ஈழத்தில் இருந்து தமிழர் தேசியக்கூட்டமைப்பிலிருந்து மாவை சேனாதிராசா இந்த மகாநாட்டுக்கு  சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


இது ஒருபுறம் இருக்க, தமிழ் திரைப்படத்துறையில் தன்னை அதி தீவிர தமிழ் தேசியப்பற்றாளராக காட்டிக்கொள்ளும் சீமான் லைக்கா தொடர்பாடல் நிறுவனத்துக்கு முண்டு கொடுக்கும் வேலைகளையே செய்கின்றார். அது  எப்படியென்றால், தமிழகத்தில் லைக்கா தொடர்பாடல் நிறுவனமே இல்லை. எனவே « லைக்காவை புறக்கணிப்போம் » என்பது சிறுபிள்ளைத்தனமானது என்கின்றார். ஆனால் தமிழகத்தில் லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆதாரபூர்வமாக வெளிவந்துள்ளன. அவையாவன ,

01 . லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின்  இந்திய அலுவலகம் தமிழ் நாட்டிலேயே உள்ளது. அதன் முகவரி :

New No.5 (Old No.2),

9th Avenue, Ashok Nagar,

Chennai – 600 083

02 . லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின் இந்திய இணையத்தள முகவரி :

     http://lycatelecom.in

03 . லைக்கா  தொடர்பாடல் நிறுவனத்தின் துணை நிறுவனமான லைக்கா பிளையின் பதிவு இலக்கம் மற்றும் முகவரி விபரங்கள் :

Company Name Lyca Fly Private Limited

CIN U63040TN2007PTC065877

Registration Date 31-12-2007

04 . லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின் ஹொட்டேல் என்ற மற்றைய நிறுவனத்தின் பதிவு இலக்கம் :

Company Name: LYCA HOTELS PRIVATE LIMITED

Cin : U55101TN2006PTC061776

Registration Date : 19/12/2006

இதைத்  தவிர கத்தி திரைப் படத்தைத் தயாரிக்கும் லைக்கா தொடர்பாடல்  தயாரிப்பு நிறுவனத்தின் பதிவு மற்றும் தொடர்புகள் :

Company Name Lyca Productions Private Limited

CIN U92120TN2007PTC062756

Registration Date 16-03-2007

05 தமிழகத்தில் பிலின்ரொன் குளோபல் ரெக் பார்ட்னேர்ஸ் (Plintron-global-tech-partners ) என்ற நிறுவனத்துடன் லைக்கா தொடர்பாடல்  நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்த ஆதாரம் :

http://www.thehindu.com/todays-paper/tp-business/plintron-global-tech-partners-lycamobile/article2427879.ece

இவ்வளவு செயற்பாடுகளையும் லைக்கா தொடர்பாடல் நிறுவனம் தமிழகத்தில் மேற்கொண்டுள்ளபோது, சீமான் என்ற அதிதீவிர தமிழ் தேசியப்பற்றாளர் “லைக்கா தொடர்பாடல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை " என்று சொல்வது சீமானின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டி நிற்கின்றது. மேலும் தமிழகத்தின் திரைப்படத்துறையில் ஈழத்தவர்கள் தடம் பதிப்பது என்பது மிகவும் கடினமான செயல் ஒன்றாகும். அதற்கு ஈழத்தவர்கள் தமிழ் தேசியப்பிரச்சினை என்று வரும்பொழுது பல விட்டுக்கொடுப்புகளையும், கள்ள மௌனங்களையும் செய்தாலேயே அவர்களால் தமிழகத் திரைப்படத் துறையில் நின்றுபிடிக்க முடியும். உண்மையில் லைக்கா என்ற ஈழத்து அகதி ஒருவன் தமிழகத்தில் திரைப்படம் தயாரிக்க வெளிக்கிடப் புறப்பட்டது தமிழகத்தில் யாருமே மனதார விரும்பவில்லை என்ற யதார்த்த நிலை ஒருபுறமிருக்க, ஈழத்தவர்களை வேருடன் சாய்த்த ஓர் அதிகார மையத்துடன் கைகுலுக்கிக்கொண்டு, மறுபுறம் தமிழர் மத்தியில் கலைகளை வளர்க்கின்றோம் என்ற பெயரில் லைக்கா தொடர்பாடல் நிறுவனம் தமிழகத்து திரைப்படத்துறையில் நுழைந்தது, தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது வரவேற்கப்பட்டாலும், வெளிநாடுகளில் அவர்களின் தகிடுதத்தங்கள் ஆதாரத்துடன் வெளியாகி உள்ளன. இதேவேளையில் இந்தியாவின் பண பலம் பொருந்திய நிறுவனங்களான மாறன் குழுமம் , றியலைன்ஸ் குழுமம்  இலங்கையில் பல வர்த்தக தொடர்புகளை மேற்கொண்டபொழுதும் , அத்துடன் அவர்கள் தமிழகத்தில்  திரைப்படத் துறையில் திரைப்படம் தயாரிக்க குதித்த பொழுதும் இந்த தமிழின உணர்வாளர்கள்  எந்தவித எதிர்ப்பு குரல்கழும் காட்டாது  கள்ள மௌனம் சாதித்து விட்டு, இப்பொழுது லைக்கா என்ற அகதி தமிழனுக்காகவும் அவன் தயாரிப்பான கத்தி திரைப்படத்துக்கும் எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது முரண்நகையாகவே உள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும் . இப்படியானவர்களின் தகிடுதத்தங்களுக்கு  உண்மையில் பலியானவர்கள் தமிழக மாணவர்களே என்பது கவலையான விடயம் .

இறுதியாக லைக்கா தொடர்பாடல் நிறுவனத்துக்கும் மகிந்த  ராஜபக்ஸ அதிகார மையத்துடன் ஏற்பட்ட தொடர்புகளை  சனங்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையை இணையதளங்கள் மேற்கொண்டன. ஆனால் அவை இன்று சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகி செயல் இழக்கப்பட்டன. இத்தகைய நிகழ்வுகளானது லைக்கா தொடர்பாடல் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளை உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது . பொதுவாகவே தமிழ் முதலாளிகள் தங்கள் இருப்பை தக்கவைக்க எந்தப்பேயுடனும் கூட்டு வைப்பதற்கு தயங்க மாட்டார்கள் என்பதற்கு லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். எதுவிருந்தபோதிலும், லைக்கா தொடர்பாடல் நிறுவனம் ஈழத்தில் போருக்குப் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களைப் பொறுப்பெடுத்து காலத்தில் கைகொடுக்கும் உதவித்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்ற செயற்பாடுகளை மனதாரப் பாராட்டுகின்ற அதே வேளையில், எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இலங்கை அரசின் அனுசரணைகள்  இல்லாது தங்கள் தொண்டுப்பணிகளை  இலங்கையில் செய்யமுடியாது என்ற யதார்த்தத்தையும் இங்கே சுட்டிக்காட்டுகின்றேன் . சனங்கள் மத்தியில் லைக்கா தொடர்பாடல் நிறுவனத்தின் தகிடுதத்தங்கள் ஆதார்பூர்வமாக வெளியாகிய நிலையில் சனங்களே இவர்களைத் தொடர்ந்தும் வளர்ப்பதா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பல லைக்காக்கள் உருவாவது தவிர்க்க முடியாதது ஒன்றாகும். 

கோமகன்
10 கார்த்திகை 2014 

Tuesday, December 23, 2014

அம்மா குஞ்சியும் சொலவடையும்

அம்மா குஞ்சியும் சொலவடையும் 


எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . 

நேசமுடன் கோமகன் 

***********************************************************

கூத்தாடி கிழக்கே பார்த்தானாம், கூலிக்காரன் மேற்கே பார்த்தானாம். 

விளக்கம் :

மேடையில் இரவு இரவாக நடிப்பவனுக்கு விடியக்காலையில் தான் ( சூரிய உதயத்தில் ) சம்பளம் கொடுப்பார்கள் . அதேபோல் கூலி வேலை செய்பவர்களுக்கு மாலை வேளையிலேயே ( சூரியன் மறையும் பொழுது ) சம்பளம் கொடுப்பார்கள் .
பாம்பாடிக்குப் பாம்பிலே சாவாம் , கள்ளனுக்கு களவிலே சாவாம்.

விளக்கம் :


ஒருவர் ஒரு வேலையை எடுத்துச் செய்யும்பொழுது அவரால் அதிலிருந்து மீளமுடியாது . அந்த வேலையில் அவருக்குள்ள பலவீனங்களே , அவரின் வேலைக்கான முடிவுகளையும் தீர்மானிக்கின்றன . 

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் 

விளக்கம் :

ஒன்றை அடையும் வரைதான் அதில் சுவாரசியம் இருக்கும் . அதன்பின் அதனால் ஏற்படுகின்ற நடைமுறைப் பிரைச்சனைகளால் அவதியுறுவர் .

திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?

விளக்கம் :

நேர்மையான நல்வர்கள் சொல்கின்ற சொற்களுக்கு எதிர்கருத்துகள் இருக்க மாட்டாது. 

ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்குமாம்.

விளக்கம் : 

மனிதவாழ்வில் எதுவும் பிரையோசனமற்றது என்று இல்லை . ஒரு விடையம் பிரையோசனமில்லை என்று தோன்றினாலும் ,அதிலும் ஏதாவது நன்மையளிக்கும் விடையம் உண்டு 

அறுப்புக்காலத்திலையும் எலிக்கு ஐந்து பெண்சாதி வேணுமாம் .

விளக்கம் :

ஒருவருக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் பொழுது அதை ஆடம்பரமாக ஊதாரித்தனமாக செலவளித்தல் . 

கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?

விளக்கம்:

தப்பானவழியில வாற காசுகள் ( நட்புகளால் கூட ) எப்பவுமே ஆபத்தானது .
புருசன் செத்து அவதி படும் போது, அடுத்த வீட்டுக்காரன் கமக்கட்டில இடிக்கிறானாம்!

விளக்கம்:

பாதுகாப்பில்லாத பெண்களிடம் , ஆண்கள் பாதுகாப்பில்லாத நிலையை அனுகூலமாக்கிப் பழகுவதைக் குறிக்கும் . 

ஆனான பூனைக்கெல்லாம் ஓட்டங்காட்டிய எலியார்,
வீணான தேங்காய்ச்சொட்டில பொறியுண்டாராம்!

விளக்கம்:

பல பூனைகளிடம் இருந்து தப்பிய எலி, பொறியில் வைக்கப்பட்ட தேங்காய்ச்சொட்டை கடிக்க ஆசைப்பட்டு மாட்டுற மாதிரி...

எவ்வளவு பேருக்கோ போக்குக்காட்டின முதுபெரும் வித்துவான்கள் எல்லாரும் சின்ன வித்துக்களினை நோண்டப்போய் தங்களையே நொந்துகொள்ளுவினம்! 

உடையவன் இல்லாட்டி முழங் கட்டையாம்.

விளக்கம் :

உரிமையாளர் இல்லாத இடத்தில் அங்கு நடைபெறும் செயல்பாடுகள் யாவும் ஏனோதானோ என்று நடைபெறுவதைக் குறிக்கும் . 

எல்லாமாடும் ஓடுது எண்டு பாத்தால் சுப்பற்ரை பட்டியிலை நிண்ட பேத்தை மாடும் ஓடீச்சிதாம்.

விளக்கம் :

திறமையானவர்களுடன் சேர்ந்து திறமையில்லாதவர்களும் தாங்கள் திறமையானவர்கள் என்று காட்டிக் கொள்வதைக் குறிக்கும் 

பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.

விளக்கம்:

திரைமறைவு வேலைகள் எப்பொழுதோ ஓரிடத்தில் அம்பலத்திற்கு வருவதைக் குறிக்கும் . 

அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரனாம் .

விளக்கம்:

அறிவிலிகள் உள்ள இடத்தில் அறிவுள்ளவனின் பேச்சுக்கள் சபையேறாததைக் குறிக்கச் சொல்லப்படுவது . 

தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாதாம்.

விளக்கம் :

சரியான பராமரிப்பில்லாத எந்தச்செயலும் வெற்றியளிக்காது என்பதைச் சொல்லக் குறிக்கும்

அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறானாம், குடிகிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறானாம் .

விளக்கம் :

சொல்லாடல்களில் தப்பான மொழிபெயர்ப்புகளை எடுப்பதிற்குக் குறிக்கச் சொல்லப் படும் 

அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரியாம் சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரியாம் .

விளக்கம் :

ஒரு செயலை செய்தவர் இருக்க அந்தச் செயலுக்கு வேறு ஒருவர் உரிமை கொண்டாடிப் புகழ் பெறுவதைக் குறிக்கச் சொல்வது.

அகன்று இருந்தால் நீண்ட உறவாம் கிட்ட இருந்தால் முட்டப் பகையாம் .

விளக்கம் :

உறவுகளின் பாசப்பிணைப்பைத் தீர்மானிக்கக் குறிக்கச் சொல்வது . 

அங்கே பார்த்தால் ஆடம்பரமாம் இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவாம் .

விளக்கம் : 

மனித வாழ்வில் உள்ள ஏற்றத் தாள்வினைசொல்லச் சொல்லப்படும் .
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதாம் .

விளக்கம் : 

கொள்கைகள் திட்டங்கள் இல்லாத எந்த வேலையும் பயன் தராது என்பதைச் சொல்லப் பயன்படும் . 

அஞ்சு அடிச்சால் சோருமாம் ஆறு அடித்தால் பாயுமாம்.

விளக்கம் :

ஒன்று சேர்ந்த செயல்களின் பயனைச் சொல்லும்பொழுது பாவிக்கலாம்
அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள் படப்பட அடிக்கிறவனும் முட்டாள் .

விளக்கம் :

ஒருவரின் நல்லகுணங்களைத் தமக்குச் சாதகமாக்கி காரியங்களைச் செய்பவர்களைச்சொல்லக் குறிக்கும் 

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்குமாம் .

விளக்கம்:

ஒருவர் வாழ்க்கையில் உள்ள ஒழுக்கத்தை அளப்பதற்குச் சொல்ல இதனைப் பாவிக்கலாம் .

அதிர்ந்து வராத புருசனும் மிதந்து வராத அரிசியும் பிரையோசனமில்லையாம் .

விளக்கம்: 

ஒருவரின் இயல்பான குணாம்சங்கள் குறைந்து வழமைக்கு மாறாக நடக்கும்பொழுது இதனைப் பாவிக்கலாம் . 

அறுகங் காட்டை விட்டானும் கெட்டானாம் ஆன மாட்டை வித்தவனும் கெட்டானாம்.

விளக்கம் :

தன்னிடம் உள்ள பலன் தரத்தக்க பொருட்களை விற்றால் இறுதியில் ஏழ்மையே மிஞ்சும் என்பதைச் சொல்லச் சொல்லலாம் .

அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதன் பிச்சை எடுக்கவேணும் .

விளக்கம் :

ஒருத்தர் எவ்வளவுதான் போனாலும் அடக்கமாய் இருக்கவேணும் என்பதைச் சொல்ல சொல்லபடும் . 

மேலை போற சனியனை ஏணிவைத்து இறக்கின மாதிரி . 

விளக்கம் :

தேள்வையில்லாத விடையங்களைத் தலையில் போட்டு அதனால் அவதிப்படுபவர்களைக் குறிக்க சொல்லலாம் .

ஆகிறவன் ஐஞ்சு சதத்திலையும் ஆவான் , ஆகாதவனுக்கு ஆயிரம் குடுத்தாலும் ஆகமாட்டான் .

விளக்கம் :

முயற்சியும் கடின உளைப்பாளிகளும் ஒருபோதும் தோற்க மாட்டார்கள் . 

ஆட்டுக்குட்டியை தோளிலை வைச்சுக்கொண்டு ஊரல்லாம் தேடினானாம் .

விளக்கம் :

பிரைச்சனைகளுக்கு தீர்வுகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கான ஆலோசனைகளப் பலரிடம் கேட்பது .

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு , மாட்டைத் தூக்கி மந்தையில போட்டானாம் .

விளக்கம் :

பிரச்சனைகளை திரித்துக் கூறி விகாரப்படுத்தி இன்பமடைவதைச் சொல்லச் சொல்லப்படும் . 

ஆளை ஏய்க்குமாம் நரி அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு .

விளக்கம் :

ஒருவருடைய திறமையை மற்றவர் மதிக்கவேண்டும் . மதிக்காதவர்களை சொல்லப் பயன்படும் .

ஆத்திலை போனாலும் போவனே ஒழிய தெப்பக்காறனுக்கு காசு குடுக்கமாட்டன் எண்டானாம் .

விளக்கம் :

இலகுவாக காசு கொடுத்து செய்யவேண்டிய வேலையை இலவசமாக செய்ய எதிர்பார்ப்பவர்களை சொல்லச் சொல்லப்டும் . 

யானைக்கு கோபம் வந்தால் வீட்டைப் பிளக்குமாம் , பூனைக்கு கோபம் வந்தால் புல்லுப் பாயை விறாண்டுமாம் .

விளக்கம் :

ஆத்திரத்தின் விளைவு வலியவருக்கும் மெலியவருக்கும் ஒன்றானது .
யானைக்குட்டி கொழுக்கவில்லையே எண்டு உட்கார்ந்து அழுதிதாம் சிங்கக்குட்டி .

விளக்கம் :


போலிக்கு ஒருவரின் வீழ்ச்சியை பார்த்து கவலைப்படுகிறவரைக் குறிக்கும் . 

யானை கலக்கின குட்டையில கொக்கு மீன் பிடிக்கப் போச்சுதாம் .

விளக்கம் :

திறமையானவர்களின் வெற்றியில் திமையற்றவர்கள் பலன் அடைவதைக் குறிக்கும் .
யானை தம்பட்டம் அடிக்க ஓனாய் ஒத்து ஊதீச்சுதாம் .

விளக்கம் : 

தமது திறமை மேல் சந்தேகம் கொள்ளம் ஒரு சிலர் திறமையானவர்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பதைக் குறிக்கும் . 

இறைக்கிறவன் இளிச்சவாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடுமாம் .

விளக்கம் :

இரக்க குணமும் இளகியமனமும் உள்ளவர்களிடம் பலர் பலன்களை எதிர்பார்பதைக் குறிக்கும் .

உள்ளங்கை பால்சோறைவிட்டுப் புறங்கையை நக்கினது போலையாம் .

விளக்கம் :

எது முக்கியமோ அதைச் செய்யாமல் விட்டு முக்கியமில்லாததைச் செய்வதைக் குறிக்கும் . 

யானையும் யானையும் தேய்க்க கொசுவுக்குப் பிடிச்சிதாம் சனி .

விளக்கம் :

வலிமையானவர்கள் மோதிக்கொள்ளும் பொழுது இடையில் இருக்கும்மெலியவர்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் .

உழுகிற காலத்திலை ஊர் சுத்திப்போட்டு அறுக்குற நேரத்திலை அரிவாளோடை போனானாம் .

விளக்கம் :

செய்யவேண்டிய நேரத்தில் வேலைகளைச் செய்யாது பின்பு ஒப்புக்காக நடிப்பதைக் குறிக்கும். 

இடுப்பில ரெண்டு காசு இருந்தால் சுருக்கெண்டு ரெண்டு கதை வருமாம் .

விளக்கம் :

பணம் தருகின்ற ஆணவத்தால் தாறுமாறாக கதைப்பவர்களைக் குறிக்கும் .
எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவாம் மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவாம் .

விளக்கம் :

ஏழைக்கு ஏழையே துணையிருப்பான் என்பதைக் குறிக்கும் . 

இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவனும் செவ்வாயாய்ச் சிரைப்பானாம் .

விளக்கம் :

ஒருவர் ஒழுக்கம் கடமை தவறாது இருந்தால் தவறுகள் ஏற்பட வழி இல்லை .
உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .

விளக்கம் :

ஒருவரின் அருமை தெரியாது தூற்றி விட்டு இல்லாதபோது ஒப்புக்குப் புகழ்பாடுபவர்களைக் குறிக்கும் . 

இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காதாம் .

விளக்கம் :

ஒரு சில பழக்கங்களை மனதில் கொண்டவர்கள் வாழ்நாள் முழுக்க அதை மறக்கமாட்டார்கள் .

உடையார் புக்கைக்கு அழுகிறாராம் லிங்கம் பஞ்சாமிர்தம் கேக்கிதாம் .

விளக்கம் :

முக்கியமான தேவைகள் இருக்கும்பொழுது முக்கியமில்லாத தேவைகளை முன்னிலைப் படுத்துவதைக் குறிக்கும் . 

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் பலவீனமானவர் எச்சரிக்கையாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

உழுகிற மாடு எங்கை போனாலும் ஏரும் கலப்பையும் முன்னுக்கு வருமாம் .

விளக்கம் :
முயற்சியும் திறமையும் ஆர்வமும் உடையவர்கள் எந்த இடத்திலும் எங்கு போனாலும் முன்னேறுவார்கள் . 

ஒண்ட வந்த எலி எழும்பி நிண்டுதாம் அண்டியிருந்த பூனை அவதியாப் பறந்திதாம் .

விளக்கம்:
இரக்கம் காட்டி உதவி செய்ய வெளிக்கிட்டால் , உதவி செய்தவரையே தூக்கிச் சாப்பிடுபவர்களைக் குறிக்கும் .

கஞ்சி வாக்க ஆள் இல்லாட்டிலும் கச்சை கட்ட ஆள் இருக்கு .

விளக்கம் :

உருப்படியாக உதவி எதுவும் செய்யாமல் , உதவி செய்பவர்களிடையே கலகத்தை உருவாக்குபவர்களைச் சொல்லக் குறிக்கும். 

வயிலிலை உழுது பருத்தி போடப்போறன் எண்டானாம் அப்பன் அதக்குள்ளை பெடி அந்த நூலிலை தனக்கு வேட்டி நெய்து தா எண்டானாம் . 

விளக்கம் :

ஒரு முயற்சியின் பலனை அடைய முன்பு அந்தப் பலனைப் பற்றி கற்பனைகளில் மிதப்பதைக் குறிக்கும் .

ஒரு குருவி தீனி தேடுமாம் ஒன்பது குருவி வாய் திறக்குமாம் .

விளக்கம் :

ஒருவரின் வருமானத்தில் பலர் பயனடைவதைக் குறிக்கும் . 

சனிபிடிச்ச நாரை கெளுத்தி மீனைப் பிடிச்சு விழுங்கீச்சுதாம் .

விளக்கம் :

பிரச்சனைகளில் இருப்பவர் மேலும் பிரச்சனைகளில் தானாக விழுவதைக் குறிக்கும்

கொதி தண்ணியில விழுந்த பூனை பச்சைத் தண்ணியைக்கண்டாலும் பயப்பிடுமாம் .

விளக்கம்:
ஒருபிரச்சனையில் பிழையான அனுபவத்தை எடுத்தவர் எல்லா பிரச்சனைகளுக்குமே அதே பார்வையைப் பார்ப்பார் 

செத்துப்போன மாடு உயிரோடு இருந்திது எண்டால் , ஓட்டைச் செம்பாலை ஒம்பது செம்பு பால் கறப்பன் எண்டானாம் .

விளக்கம் : 

பிரையோசனம் இல்லாத வீண் வெட்டிப் பேச்சுகள் கதைப்பவர்களைக் குறிக்கும்.

சோத்திலை கிடக்கிற கல்லைப் பொறுக்காதவன் , சொக்கநாதர் கோயில் அத்திவாரக்கல்லை பேர்ப்பன் எண்டானாம் .

விளக்கம் :


முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பெரும் எடுப்பில் கதைப்பவர்களைக் குறிக்கும் . 

சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்கு சிம்மாசனம் போட்டிச்சிதாம் .

விளக்கம்:
கஸ்ரமான நிலையில் இருந்துகொண்டு வெறும் பட்டிற்காக தகுதிக்கு மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்ய முயலுவதைக் குறிக்கும்

தடவிப் பிடிக்க மயிர் இல்லையாம் அவள்பேர் கூந்தல் அழகியாம் .

விளக்கம்:

திறமைகள் இல்லது புலுடா விட்டப் பெயர் எடுப்பதைக் குறிக்கும். 

தென்னை மரத்தில ஏன்ரா ஏறினாய் என்றால் ,கண்டுக்குட்டிக்கு புல்லு புடுங்க எண்டானாம் . தென்ன மரத்திலை எங்கை புல்லு எண்டால் ,j அதுதான் கீழை இறங்கிறன் எண்டானாம் .

விளக்கம் :

அத்தியாவசிமான விடையங்களில் தேவையற்ற நேரவிரையங்களிச் செய்வதைக்குறிக்கும் .

தொடாத தொழிலை தொட்டவனும் கெட்டானாம் தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டானாம் .

விளக்கம் :
எதுவித அனுபவமும் இல்லாத வேலையும் , முயற்சியும் இல்லாமல் பேருக்கு செய்கின்ற வேலையும் , தோல்வியிலேயே முடிவதைக் குறிக்கும் . 

கோமகன் 
23 மார்கழி 2014

Sunday, December 14, 2014

வாடாமல்லிகை இறுதிப்பாகம்

வாடாமல்லிகை இறுதிப்பாகம் 

Posted Image


அந்த அதிகாலை வேளையில் வல்லிபுரத்தாழ்வாரின் சன்னதி மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் வல்லிபுரத்தாழ்வார் அனந்த சயனமாகியிருந்தார். மனைவி கோயிலின் உள்ளே செல்ல நான் வெளியே இருந்த மர நிழலில் நின்று வேடிக்கை பார்த்தேன். காலைவேளையின் சீரான தென்றல் முகத்தில் அடித்தது. தூரத்தே கடல் அலையோசை மெதுவாகக் கேட்டது. நான் நின்ற மரத்தின் மேலே புலுனி ஒன்று தனியாக குரல் கொடுத்துக்கொண்டது. அதற்கும் என்னைப்போல யாரும் இல்லையோ என்னவோ. அதன் குரலில் ஒருவித சோகம் இளையோடியிருந்தது. அந்த சந்தடியில்லாத அமைதியான  சூழல் மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் ஒருவிதத்தில் பயம் தருவதாகவே இருந்தது. தூரத்தே பச்சைப் படையணி ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தது .பச்சைக்கச்சான் வறுக்கும் மணமும், தோசை சுடுகின்ற மணமும் ஒரேசேர மூக்கில் நுழைந்தன. மனதில் பலவிதமான சிந்தனைகள் ஒரேநேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பின்னிப்பிணைந்தன. அதில் ஒர்  சிந்தனை என்ற பாம்பு "எதுவாகினும் நீ ஒரு அந்நியன் தானே .இந்த மண் உனக்கு சொந்தமானதா? வீண் ஆசைகளை ஏன் வளர்க்கின்றாய் "? என்று என் மனதில் ஓங்கி ஓர் கொத்து கொத்தியது. மனதில் ஓர் சிறிய இரத்தத்துளி மெதுவாக எட்டிப்பார்த்தது. பரிதாபமாக வல்லிபுரத்தாழ்வார் இருக்கும் திசையை நோக்கிப்பார்த்தேன். கடிவாய் விண் விண்ணென்று வலித்தது. இந்த மனம் என்ற ஒன்று இருக்கின்றதே அது எப்பொழுதுமே தனக்குப் பிடித்ததைத்தான் பற்றிக்கொள்ளும். ஆனால் நடைமுறை யதார்த்தமோ வேறுமாதிரி இருக்கும். தனது பிடித்தனங்களுக்கு  எதிராக வரும் எதையுமே அது ஏற்றுக்கொள்ளாது சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கும். எனது நிலையும் அதுவாகவே இருந்தது. நான் ஓர் அந்நியன் என்று தெரிந்தும் என் மனம் இந்தப் பாழாய்ப்போன மண்ணைச்  சுற்றியே கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தது. என்னையறியாது என்கண்களில் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தன. விடுமுறை என்ற நாடகத்தின் இறுதி அங்கத்தில் நடிப்பதையிட்டு எனக்கே வெறுப்பாக இருந்தது. ஆனால் அதுதான்  உண்மை என்ற யதார்த்தத்தை மனம் ஏற்க மறுத்து என்னுடன் சண்டைபிடித்துக்கொண்டிருந்தது.

என்பின்னால் குளிர்ந்த விரல்கள் என்னை ஆதரவாகத்தொட்டன. நான் திரும்பிய பொழுது என்மனைவி பக்திப்பழமாக நின்றிருந்தாள். வழக்கமாக கோவில் பக்கம் செல்லாதவள் இந்தக்கோவிலில் மட்டும் அவளுக்கு ஒரு லயிப்பு. அவள் நெற்றியில் திருமண்ணும் குங்குமமும் பளீரிட்டன. என்னிடம் திருமண்ணை நீட்டினாள். எனக்கும் திருமண்ணை போடவேண்டும் போல் இருந்தது. என்னிடம் சில காசுக்கற்றைகளை நீட்டி உள்ளே போய் உண்டியலில் போட்டுவரும்படி சொன்னாள். மறுத்த என்னை பலவந்தமாக உள்ளே அனுப்பினாள். நான் உண்டியலில் போட்டுவிட்டு திரும்பி இருவரும் கச்சானும் பட்டாணியும் வாங்கிக்கொண்டு மீண்டும் பருத்தித்துறை செல்ல பஸ்சுக்கு நின்றோம். எனக்கு தேநீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. அருகே இருந்த தேநீர்க்கடையில் தேநீரும் வடையும் வாங்கினேன் சூடான தேநீருக்கும் உழுந்து வடைக்கும் எதோ ஜென்ம பந்தம் போலும் .எத்தனை முறை இவையிரண்டையும் குடித்தாலும் அதனால் வரும் புத்துணர்ச்சி ஒரு தனிரகம் தான். அத்துடன் ஓர் சிகரட்டும் சேர்ந்து கொண்டால் அந்தக்கணம் மிகவும் அழகாக இருக்கும். என்நிலையும் அப்பொழுது அப்படித்தான் இருந்தது. தூரத்தே பஸ் வருவது தெரிந்தது. பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கவில்லை .மக்கள் கூட்டம் கோயிலில் இருந்தே தொடங்கியது. என் கண்களில் இருந்து வல்லிபுரத்தாள்வார் மெதுவாக மறையத்தொடங்கினார். என்மனதிலிருந்து ஓர் ஏக்கப்பெருமூச்சொன்று வெளிப்பட்டது. எனது மனநிலைமையை மாற்ற மனைவியுடன் குடும்பக்கதைகளைக் கதைத்துக்கொண்டு வந்தேன்.

தும்பளை வீதியினூடாக பருத்தித்துறையை அண்மித்துக்கொண்டிருந்த பஸ் திடீரெனத் தன்  வேகத்தைக் குறைத்துக்கொண்டது .நான் ஜன்னலினூடாக  எட்டிப்பார்த்த பொழுது பஸ்ஸின் முன்னே நடுவீதியினூடாக பச்சை படையணிகள் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தன .எனக்கு மெதுவாக எரிச்சல் எட்டிப்பார்த்தது. நான் பஸ்சினுள் பார்வையைத்திருப்பினேன் சனங்கள் எதுவுமே நடக்காததுபோல் இருந்தார்கள் .இவர்கள் சனங்களின் இயல்பு வாழ்க்கைக்கு எப்பொழுதுமே இடைஞ்சலாக இருந்து கொண்டு இருக்கின்றார்கள். இதுவும் ஒருவகை உளவியல் யுத்தமாகவே எனக்குப்பட்டது. தங்கள் இருப்பை அடிக்கடி காட்டிக்கொண்டு இருப்பதன் மூலம் தாங்கள் முன்பு விதைத்த சமன்பாடுகளை சனங்களுக்கு நினைவு படுத்துவது ஒருவகைத்தந்திரமாகவே எனக்குப்பட்டது. சைக்கிள் படையணி யாழ்ப்பாணப்பக்கம் திரும்ப பஸ் பருத்தித்துறைப் பக்கம் திரும்பி  நோக்கி வேகமெடுத்தது.

பருத்தித்துறை சந்தையில் தேவையான மரக்கறிவகைகளை வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தோம். உச்சிவெய்யில் மண்டைக்கு நேராக நின்றது .உடலெங்கும் சூடு பரவி வியர்வை தண்ணியாக ஓடியது. கடையில் வாங்கிய தண்ணிப்போத்தல் அடிக்கடி வாயினுள் சரிந்து கொண்டது. நாங்கள் வீட்டை அண்மிக்கும் பொழுது வீட்டு நாய் எங்களுக்காக வாசலில் பார்த்துக்கொண்டிருந்தது. அது  எங்களைக்கண்ட புழுகத்தில் என் மீது பாய்ந்து விளையாடியது. மனைவி அதைப் பேசியவாறே வீட்டினுள் நுழைந்தா .அது என்னை ஓர் ஏக்கப்பார்வை பார்த்தது. நான் அதனுள்  கரைந்து போனேன் .நான் அதனுடன் விளையாடியதில் அது மீண்டும் மகிழ்ச்சியில் துள்ளியது. மத்தியானம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படுத்துவிட்டு மாலை நான்கு மணிபோல் கோப்பாய்க்கு பயணம் சொல்லப் புறப்பட்டேன். அத்துடன் நான் வவுனியாவுக்கு செல்ல ஆசனங்களையும் பதியவேண்டி இருந்தது. என்னைச் சுமந்து கொண்டு பஸ் யாழ்ப்பாணத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கவில்லை. என் மனமோ வெறுமையாகிக் கிடந்ததது. இதுவே எனது கோப்பாய்க்கான கடைசிப் பயணம். பின்பு நான் அங்குள்ளவர்களை சந்திக்க மாட்டேன் என்ற எண்ணமே மனதெங்கும் வலியாகப் பரவியது. கண்களை ஆயாசமாக மூடிக்கொண்டேன். எனது வாழ்க்கை இப்படித்தான் அமையுமா ?? நான் யாருக்காக இந்த வாழ்க்கையை இப்படி வாழ வேண்டும்??  என்ற கேள்விகளே  மனத்தைக் குடைந்து கொண்டடிருந்தன. பஸ் நடத்தினரின் குரல் கேட்டு என்மனம் ஞாபக வீதியில் இருந்து இறங்கி வந்தது .நான் பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொண்டேன். என்மனமோ  ஒழுங்கை முகப்பில் சிறிது நேரம் நின்று பார்க்க விரும்பியது .நான் ஓடித்திரிந்த ஒழுங்கை வெறுமையாகக் கிடந்தது .முன்னே இருந்த பருத்தித்துறை வீதியில் வாகனங்கள் விட்டதை எடுக்கும் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. யாருமே என்னை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை .நான் தளர்ந்த நடையுடன் வீடு நோக்கிச் சென்றேன்.

நான் வீட்டினுள் நுழைந்த பொழுது அண்ணியும் மருமகளுமே நின்றிருந்தார்கள். அண்ணையும்,தங்கையும், பெறாமக்களும் வெளியே சென்றிருந்தார்கள். அம்மா இல்லாத வீடு ஓ என்று இருந்ததது. அண்ணி தயாரித்த தேநீரை வாங்கிக் குடித்து விட்டு மருமகளுடன் கேணியடிப்பக்கம் சென்றேன். பாரிஸில் எனது வீட்டு பல்கணி தியான மண்டபமாக இருந்தது போல, கோப்பாயில் சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடித்தமான தியான மண்டபம் கேணியடியே. இந்தக் கேணியடி பலசரித்திரங்களை உள்வாங்கியிருந்ததது. எனது சிறுவயது நினைவுகளையும், பின்னர் நான் இல்லாத பொழுது இந்திய அமைதிப்படையினரின் கறுப்புப் பக்கங்களையும், இலங்கைப்படையினரின் இன்னோரன்ன செயல்களையும் உள்வாங்கி கள்ளமௌனம் சாதித்துக்கொண்டிருந்தது.கேணியடிக்கு சிறிது வயது போய் இருந்தாலும் பழைய நடிகைகளைப்போல  தண்ணீரால் நிரம்பி அழகாகவே இருந்தது. நான் கேணிக்கட்டில் கால்களைத் தண்ணியில் நனையுமாறு விட்டு இருந்தேன். கேணியின் முன்னே சின்னன் பொன்னன்கள் என்று இன்றைய தலைமுறை கள்ளன் பொலிஸ் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மருமகளும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள்.காலம் எவ்வளவுதான் சுழன்றடித்தாலும் சில மாற்றங்களை அது செய்ய விரும்புவதில்லைப்போலும்.

தூரத்தே சூரியன் அன்றைய பொழுதை முடிக்கத் தாயாராகியதால் வானம் கோபம் கொண்டு சிவந்திருந்தது. எனது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த இலுப்பை மரத்தில் இருந்த  குயில் ஒன்று பாடியது. அதற்கு எதிர்குரல் சற்றுத்தொலைவில் இருந்து வந்து கொண்டிருந்தது. அகச்சூழல்களால் சூம்பியிருந்த மனசில் மகிழ்ச்சிப் பொட்டுக்கள் மெதுமெதுவாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன .சூரியன் மறைந்து மெதுமெதுவாக இருள் கப்பத் தொடங்கியது. தூரத்தே கைதடி செம்மணிப் பக்கமாக ஒளிப்பொட்டுகள் ஒளிர ஆரம்பித்தன. நான் மருமகளை அழைத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பினேன். விளையாட்டை இடையில் குழப்பியதால் வந்த கோபம் மருமகளின் முகத்தில் அப்படியே தெரிந்தது. நான் அதைத திசைதிருப்ப அவளுக்குக் கதைகள் சொல்லிக் கொண்டு நடந்தேன். நான் வீட்டை அடைந்த பொழுது வெளியில் போன அண்ணையும் தங்கைச்சியும் வந்திருந்தார்கள். நான் அவர்களிடம் விடைபெற்ற பொழுது தங்கைச்சியின் கண்கள் கலங்கியிருந்தன. நான் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தலையை குனிந்தவாறே ஒழுங்கையால் பருத்தித்துறை விதிக்கு  நடந்தேன். பத்து நிமிடக்காத்திருப்புக்குப் பின்னர் எனதருகே பருத்தித்துறைக்குச் செல்லும்  பஸ்  வந்து நின்றது. பஸ்ஸில் சிறிது கூட்டம் இருந்தது. பின் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்து கண்களை மூடிக்கொண்டேன். இருட்டினூடாக பஸ் பருத்தித்துறைய நோக்கி விரைந்தது.பஸ் பருத்தித்துறை பஸ்நிலையத்தை தொட இரவு ஒன்பது மணியாகி விட்டிருந்தது. ஒழுங்கையில் நட்சத்திர வெளிச்சங்களினூடாக என்கால்கள் விரைந்தன. ஒழுங்கை அந்த இருளில் அடங்கியிருந்தது.மறுநாள் வவுனியா செல்ல வேண்டும் என்ற நினைப்பே மனதில் ஒருவிதமான வெறுமையைக் கொண்டுவந்தது.

நான் வீட்டை அடைந்த பொழுது மாமாவும் சித்தியும் வீட்டு முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின் கீழ் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். மாமியும் மனைவியும் மாலுக்குள் இருந்தார்கள். நான் முகத்தை கழுவி வீட்டினுள் நுழைந்தபொழுது, நாளை பயணத்துக்கான ஏற்பாடுகளுடன் வீடு தயாராக இருந்தது. வீட்டின் ஒருமூலையில் எமது சூட்கேசுகளை எனது மனைவி நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள். இரவு சாப்பிட்டு விட்டு மாமாவுடன் சில நிமிடங்கள் இருந்து கதைத்துவிட்டு நான் படுக்கப்போய் விட்டேன். அந்த இரவிலும் வெக்கை சீமெந்து நிலத்தினூடாக வந்து கொண்டுதான் இருந்தது. புல்லுப்பாயில் கூரையை வெறித்துப்பர்த்துகொண்டு படுத்திருந்தேன். ஆரம்பத்தில் புல்லுப்பாயில் படுக்க அவதிப்பட்ட எனக்கு, இப்பொழுது புல்லுப்பாய் இல்லாமல் நித்திரை வசப்படாத நாட்களை நினைத்ததில் என் இதழின் ஊடே ஓர் குறுநகை எட்டிப்பார்த்தது. "என்ன ?" என்று அதனிடம் கேட்டேன். " இல்லை வர வர நீ இப்பொழுது நன்றாகத்தான் நடிக்கப் பழகிவிட்டாய்" என்றது அந்தக்  குறுநகை. எனது மனமோ மௌனத்தையே பதிலாக்கியது. சும்மாவா சொன்னார்கள் மனதை குரங்கு என்று. பிடித்ததை பிடிக்காதது மாதிரியும் பிடிக்காததைப் பிடித்தமாதிரியும் நடிப்பதில் இந்த மனதுக்கு நிகர் எவருமில்லை. நினைவுச்சுழலை விட உடல் அலுப்பினால் நித்திரை இலகுவில் வசப்பட்டது.

மறுநாள் காலை வழமை போலவே பண்டாரியம்மன் கோவில் மணியும் சேவல் கொக்கரோக்கோவும் என்னை எழுப்பி விட்டிருந்தன. மனைவியோ வழமை போல் என்னைக் கொழுகொம்பாக்கியிருந்தாள். அவளின் கைகளை மெதுவாக எடுத்து வைத்து விட்டு. கையில் சிகரட்டுடன் கேற் வாசலுக்கு வந்தேன். இருள் பிரியாத  அந்தக்காலை பொழுதில் பக்கத்து வீட்டு மாமா மிளகாய் கண்டுகளுக்கு தண்ணி மாறும் சத்தம் மெதுவாகக் கேட்டது.காற்றில் மிதந்து வந்த சுப்பிரபாதம் மனதிற்கு இதமாக இருந்தது. எனது கண்கள் அந்த கன்னிக்காலையை முழுமையாக விழுங்கிக் கொண்டிருந்தன. இதுதான் நான் இங்கு நிற்கும் இறுதி நாள். நான் சோம்பல் முறித்து விரைவாக இயங்கத்தொடங்கினேன். முற்றத்தில் சொரிந்திருந்த குழைகள் எனது விளக்குமாறு பட்டு இருந்த இடம் தெரியாமல் மறையத்தொடங்கியது இப்பொழுது முற்றம் பளிச்சென்று மின்னத்தொடங்கியது. நான் கூட்டியதால் எழும்பிய புழுதி உடலெங்கும் பரவியது. நான் தண்ணித் தொட்டியில் மோட்டரைப் போட்டு தண்ணீர் நிரப்பிய பொழுது மனைவி நித்திரை முறிந்து எழுந்து வந்தாள். இப்பொழுதுதான் அவள் அழகாக இருப்பதாக எனக்குப் பட்டது. காலை வேளைகளில் எல்லா மனைவிமார்களும் இப்படித்தான் இருப்பார்களோ? மறு வீட்டில் இருந்து கொண்டு மாமி பால்க்கோப்பி தயாரித்துக்கொண்டு வந்தா. முற்றத்துக்கு தண்ணீர் தெளித்து விட்டு கோப்பியை எடுத்துக்கொண்டு கேற் வாசலுக்கு வந்தேன். நிலம் நன்றாக வெளுத்து இருந்தது ஒழுங்கை சன நடமாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது. நான் ஆசைதீரக்குளித்து வெளிகிட்டு சூட்கேசுகளை முன் போர்ட்டிக்கோவில் கொண்டுவந்து வைத்தேன்.  காலை 9 மணி போல நாங்கள் சொல்லி வைத்த ஓட்டோ கேற் வாசலடியில் வந்து நின்றது. வீட்டு முற்றத்தில் செழித்து வளர்ந்திருந்த வாடாமல்லிகைகளை ஆசை தீரப் பார்த்துக்கொண்டேன். எங்களைச் சுமந்துகொண்டு ஓட்டோ ஒழுங்கையில் நகரத்தொடங்கியது. மாமா பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஓட்டோ சில நிமிட ஓட்டத்தின் பின்னர்  எங்களை பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டது. பஸ் நிலையம் காலைப் பரப்பரப்பில் மூழ்கி இருந்தது.வவுனியா செல்லும்  இ போ ச பஸ் எங்களுக்காக காத்திருந்தது.

பஸ் காற்றை கிழித்துக்கொண்டு பளபளத்த காப்பெற் தார் சாலையில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்தது. பருத்தித்துறை என் கண்களை விட்டு மறைந்து மணித்தியாலத்துக்கு மேலாகி விட்டது. வீட்டைப் பிரிந்த கவலை மனைவியின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது. அவள் எதுவும் பேசாது வந்து கொண்டிருந்தாள். என் மனமும் கண்களும் வெளியே என்னை விட்டு மறைந்து கொண்டிருக்கும் காட்சிகளுடன் மௌனமொழி பேசிக்கொண்டு வந்தன. வெய்யில் உச்சிக்கு வந்து காற்று வெளியை சூடாக்கிக்கொண்டிருந்தது. வியவைத்துளிகள் என் உடலெங்கும் எட்டிப்பார்த்தன. பஸ் பரந்தனில் சாப்பாட்டிற்காக நின்ற பொழுது நான் தேநீர் குடிப்பதற்காக இறங்கினேன். நான் முன்பு வந்த பொழுது இருந்த அந்த தேநீர் கடை முதியவரை தேடினேன். நான் அங்கு நுழைந்த பொழுது என்னை அடையாளம் கண்டு கொண்ட அந்த முதியவர் என்னை நலம் விசாரித்தார். அவரது கடை இப்பொழுது யுத்த காயங்களை ஆற்றி புதுப்பொலிவுடன் இருந்தது. ஆனால் அதை நடத்தும் முதியவரிடம் யுத்த வடு மாறாமலேயே இருந்தது. நான் அவருக்கு தேநீருக்கும் றோல்சுக்கும் காசைக் கொடுத்து விட்டு கடை வாசலுக்கு வந்து நின்றேன். புகைந்த வயிறுக்கு தேநீரும் றோல்சும் இதமாக இருந்தது என்னைக் கவனிக்க மாட்டாயா என்று சிகரட் என்னைப் பார்த்து இளித்தது.தேநீர் முடியும் தருணத்தில் சிகரட்டை எடுத்து உதட்டில் வைத்து அதை சிவப்பாக்கினேன். என்கண்கள் சுற்றாடலில் லயித்தன. அந்த இடம் யுத்த அழிவுகளில் இருந்து மெதுமெதுவாகவே புத்துயிர் பெறுவதை பார்க்க முடிந்தது .இப்பொழுதும் சில கட்டிடங்கள் சிதைந்துதான் இருந்தன. அவைகளை பளபளப்புகள் மறைக்க முயன்று கொண்டிருந்தன. என்கண்கள் நான் முன்பு சந்தித்த அக்காவைத் தேடிக்கொண்டிருந்தன. பஸ் புறப்படுவதற்கு ஆயுத்தமாக இயந்திரத்தை முறுக்கவும் எனது சிகரட் முடியவும் சரியாக இருந்தது. நான் கடை முதியவரிடம் விடை பெற்றுக்கொண்டு  பஸ்ஸினுள் ஏறியதும் மீண்டும் பஸ் வவுனியா நோக்கி தன்னை விரைவு படுத்தியது.

கார்ப்பெட் வீதியில் விரைந்து வழுக்கிய பஸ் வவுனியாவைத்தொட மத்தியானம் ஒரு மணியாகி விட்டிருந்தது. எனக்குப பசியால் வயிறு சுடத்தொடங்கியது. எங்களைச் சுமந்த ஓட்டோ அக்கா இருக்கும் இறம்பைக்குளம் இருக்கும் இடம் நோக்கிச் சென்றது .சரியாக மூன்று கிழமைகளை ஞாபக வீதிகளில் பயணித்து விட்டு மீண்டும் அக்காவைச் சந்திக்கப்போகின்றேன். அந்த நினைவே இனித்தது. சிறுவயதில் இருந்தே அக்கா என்னைத் தூக்கி வளர்த்தவா. ஓட்டோ அக்கா வீட்டு வாசலில் நிற்க எனது சிந்தனைப்பட்டம் அறுந்து விழுந்தது. என்னைக்கண்டவுடன் அக்காவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது .நான் குளித்துவிட்டு சாப்பிடத்தயாரானேன். அக்கா எனக்குப் பிடித்த வன்னி எருமையின்  முட்டித்தயிருடன் பல கறிகளுடன் சோறு சமைத்திருந்தா. எனது உணவுக்கட்டுப்பாட்டையும் மீறி அவற்றை ஒரு பிடி பிடித்தேன். எல்லோரும் முன் போர்ட்டிக்கோவில் இருந்து கதைத்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு நித்திரை தூக்கியடித்தது. நான் மனைவியைக் கதைக்க விட்டுவிட்டு மெதுவாகக் கழண்டுகொண்டேன்.

உண்டகளைப்பும் பயணக்களைப்பும் நேர்கோட்டில் வர நித்திரையை வரவழைப்பதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை.நான் மீண்டும் நித்திரையை விட்டு எழும்பியபொழுது உடல் புத்துணர்ச்சியாக இருந்தது. நான் மீண்டும் அக்காவுடன் கதைப்பதில் இணைந்துகொண்டேன். நாங்கள் வுனியாவை விட்டுப்பிரிய இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. என்மனதைப்போலவே சுற்றாடலும் கனத்து இருந்தது .அக்கா தந்த இரவுச்சாப்பாட்டை இறுக்கமான மனநிலையில் சாப்பிட்டுவிட்டு வவுனியா புகையிரத நிலையம் நாங்கள் இருவரும் செல்ல ஆயுத்தமானோம் எங்களுடன் அத்தான்கள் இருவரும் வந்தார்கள் நான் ஒருவித எக்கப்பார்வையுடன்  அக்காவிடமிருந்து விடைபெற்றேன். ஒருகாலத்தில் பலசெல்லடிகளையும் நித்தம் கந்தகப்புகைநெடியுமாக இருந்த வவுனியா புகையிரதநிலையம் இன்று பளபளப்பாக இருந்தது ஆனால் அந்தப் பளபளப்புகளுக்குப் பின்னால் பல இரத்த நெடில்களையும் சதைக்குவியல்களையுமே என்னால் பார்க்க முடிந்தது "உனக்கு எப்பவுமே காமாளைக் கண் தானா ?"  என்று என்மனம் என்னிடம் ஓர் கேள்வியை எழுப்பியது. இதைப் பளபளப்பாகியவர்கள் மன்னர்கள். நாங்களோ இந்த இரத்த நெடில்களின் நேரடிப்பங்காளிகள்". என்று நான் மனதிடம் சொன்னேன் எனது மனம் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை.   நாங்கள் புகையிரத நிலையத்தை வந்தடைந்தபொழுது வவுனியாப் புகையிரதநிலையம் சனவெள்ளத்தில் திமிறியது. நாங்கள் அவர்களினூடே நீந்தியே புகையிரதமேடைக்கு செல்ல வேண்டியிருந்தது. சில நிமிட இடைவெளியின் பின்னர் அத்தான்கள் இருவரும் எங்களிடமிருந்து விடைபெற்றனர். நாங்கள் இருவரும் இப்பொழுது தனியர்களாக நின்றிருந்தோம். அதுதான் நிஜமாகவும் இருந்தது. தூரத்தே தெரிந்த சிறிய ஒளிப்பொட்டொன்று வரவரப் பெரிதாகி  சிறிதுநேரத்தில் யாழ்தேவி புகையிரதமேடையில் வந்து நின்றது. எல்லோரையும் ஏறவிட்டு நாங்கள் இருவரும் எமக்காக அக்கா பதிவு செய்திருந்த இருக்கைகளில் இருந்துகொண்டோம். சில மணித்துளிகளை விழுங்கிய யாழ்தேவி மெதுவாக நகர்ந்து கொழும்பு நோக்கித் தன்னை விரைவுபடுத்தியது.

இருளுக்கும் வெளிச்சத்துக்கும் நடந்த நிறப்பிரிப்பொன்றில் யாழ் தேவி கோட்டே புகையிரத நிலையத்தில் தன்னை அடக்கியது. சனங்கள் கலைந்த நெல்லிக்காய் மூட்டைகளைப் போல சிதறிப் பிரிந்தார்கள். அந்தக்காலை வேளையில் கோட்டே புகையிரத நிலையம் அமைதியை இழந்துதான் இருந்தது. நாங்கள் பரபரப்புக்குள் பரபரப்பாகி ஓர் ஓட்டோவை பிடித்துக்கொண்டு பம்பலப்பிட்டிக்குப் பயணமானோம். கொழும்பை என்மனம் ஏனோ லயிக்க மறுத்தது. ஓர் அந்நிய தேசத்துக்குள் வந்த உணர்வையே அது எனக்கு ஏற்படுத்தியது. நாங்கள் பம்பலப்பிட்டி பிளட்சை அடைந்த பொழுது மனைவியின் நண்பி பல்கணியில் எங்களுக்காகக் காத்திருந்தா. மனைவி நண்பியுடன் ஐக்கியமாக எனக்கு பல்கணியே துணையாகியது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில்  தெரியும் கடலையும் குமுறிப்பாயும் கடலலையும் எனது தற்காலிக நண்பர்களாகினர். பல்கணியில் நின்றிருந்த எனக்கு யாரோ போன் அடிப்பதாகச் சொல்லி எனது மனைவி போனை தந்தா. எதிர்முனையில் எனது கல்லூரி நண்பன் இருந்தான். அவன் என்னை சந்திக்க ஆசைப்படுவதாக தான் இப்பொழுது வந்தால் நிற்பாயா என்று கேட்டான். அவனது தொழில் வைத்தியராக இருந்தாலும் இலக்கியத்திலும் எழுத்திலும் அதிக ஈடுபாடு இருந்ததாலும் ,  எனக்கும் ஒரு பேச்சுத் துணை தேவைப்படதாலும்  நான் அவனைச் சந்திக்கச்  சம்மதம் தெரிவித்தேன். சிறிதுநேரத்தில் அவனது கார் கீழே வந்து நின்றது. நான் அவனை மேலே வரும்படி சொன்னேன். அவனோ என்னைக் கீழே வரும்படி சொன்னான். நான் மனைவியிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கினேன். அவன் என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டியில் இருந்த ரேஸ்ற் ஒப் ஏசியாவுக்கு அழைத்துச் சென்றான். அவனது முகத்தில் என்னைச் சந்தித்த மகிழ்ச்சி அப்படியே ஒட்டி இருந்தது. அவன் ஓரளவு மாறித்தான் இருந்தான். ஒருகாலத்தில் தாம் கற்ற வித்தைகளை காசாக்க வெளிநாடு சென்ற வைத்தியர்களில் அவன் மாறுபட்டு சொந்தமண்ணில் தனது மக்களுக்கு தனது வித்தையை வழங்கியதால்  எனக்கு அவன்மேல் தனிப்பிடிப்பு வரக்காரணமாக இருந்தது.ரேஸ்ற் ஒப் ஏசியாவில் நுழைந்த இருவரும் எமது கண்பார்வை காலி றோட்டை  பார்க்குமாறு இருந்த இருக்கைகளில் இருந்துகொண்டோம்.என்னை முற்றுமுழுதாக அறிந்த அவன் என்னைக் கேட்காமலேயே எல்லாவற்றையும் ஓர்டர் பண்ணினான். நாங்கள் வந்த சாப்பாடுகளை மேய்ந்துகொண்டு பழைய கதைகளை கதைக்க ஆரம்பித்தோம். எமது பேச்சுக்கள் இலக்கியத்தில் மேய்ந்து பின்னர் அரசியல் பக்கம் திரும்பியது. இருவருக்கும் காட்டமான விமர்சனங்கள் ஆரம்பமாகியது. அவனோ நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதற்கு காரணமாயிருந்த மன்னர் பரம்பரையையும் புகழ்வதிலேயே குறியாக இருந்தான். நான் அவன் சொல்வதை எல்லாம் அமைதியாக இருந்து கேட்டுவிட்டு " எல்லாம் சரி உன்னுடைய வாதங்களில் உண்மைத்தன்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மன்னர் பரம்பரை சனங்களில் உருவாக்கிய ரணங்களும் புத்திர சோகங்களும் முற்றுமுழுதாக இல்லாமல் போய் மகிழ்ச்சிக்கடலில் நீந்துகின்றார்களா என்ன ?? உள்ளதைச்சொல் " என்றேன் .அவன் மௌனத்தையே எனக்குப் பதிலாக்கினான். மன்னர்கள் அள்ளியதை மக்களுக்கு சிறிது தெளிக்க, அதைப்பார்த்து வியப்பு மிகுந்திட மன்னர் புகழ் பாடும் புலவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்று என்மனம் என்னிடம் குசுகுசுத்தது.  நான் இறுக்கமான சூழ்நிலயை தளர்த்த விரும்பி மீண்டும் பழைய கதைகளை கதைக்கத்தொடங்கினேன். சிறிதுநேரத்தில் அவனும் சகஜ நிலைக்குத் திருப்பினான். நீண்டநேரம் கதைத்ததால் சாப்பாட்டுக்கோப்பைகள் உலர்ந்துவிட்டன. அவனுடைய போனுக்கு சிறிது நேரத்தில் அவன் செய்யவேண்டிய சத்திரசிகிச்சையை நினைவுபடுத்தி அவனது காரியதரிசி  போன்  அடித்தாள். என்னை வீட்டில் இறக்கிவிட்டு மனைவியிடமும் விடைபெற்றுக்கொண்டு அவன் வைத்தியசாலைக்குப் பறந்தான்.

நேரம் மாலை நான்கு மணியைத் தொட்டுக்கொண்டிருந்ததது. வெய்யில் ஓரளவு தணியத் தொடங்கியிருந்தது. நாங்கள் விமான நிலையத்துக்குப் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரங்களே இருந்தன. நான் பல்கணியில் நின்று தூரத்தே தெரியும் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றேன். என்மனமோ நாங்கள் இங்கு தொடந்து இருக்கத்தான் முடியுமா? என்று என்னிடம் தத்துவ விசாரணை செய்துகொண்டிருந்தது. மனைவி பயணப்பொதிகளை சரிபார்த்து வீட்டு ஹோலினுள் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தா. நான் எனது மனதைத் திருப்ப அவாவுடன் சேர்ந்து பயணப்பொதிகளை ஹோலுக்குள் கொண்டுவைக்கத் தொடங்கினேன். எங்களை அழைத்துச் செல்ல நண்பியின் தம்பியினது கார் வெளியே வந்து நின்றது. நாங்கள் நண்பியிடம் விடைபெற்றுக்கொண்டு விமானநிலையத்துக்குச் சென்றோம். அதிகாலை ஒரு மணிக்கே விமானம் என்பதால் எங்களுக்கு நேரம் நிறையவே இருந்தது. போகும் வழியில் நீர்கொழும்பில் ஓர் உணவகத்தில் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு எமது கார் விமானநிலையத்தில் நுழைந்தது. விமான நிலையத்தில் நான் பதட்டமாகவே இருந்தேன். எனது முதுகுக்குப் பின்னால் இரகசியக்கண்கள் மேய்வது போல உணர்ந்தேன். நாங்கள் இருவரும் குடியகல்வு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு விமானத்தில் எமது இருக்கைகளை தேடிப்பிடித்து அமர்ந்து கொண்டோம். எயார் சவுதியா சிறிது நேர நிமிடங்களை விழுங்கி விட்டு ஓடுபாதையில் மெதுவாக நகரத்தொடங்கியது. ஓடுபாதையில் தன்னை நிலைப்படுத்திய எயார் சவுதியா வேகமாக ஓடி தனது கால்களை எக்கிக்கொண்டு மேல் எழும்பிய பொழுது, எனக்கு எனது வீட்டின் முற்றத்தில் சடைத்து வளர்ந்திருந்த வாடாமல்லிகைகளும் அதன் பூக்களுமே நினைவில் பட்டுத்தெறித்தன. அவைகள் அழகாக இருந்தன ஆனால் அவற்றில் வாசங்கள்  இருக்கவில்லை.

முற்றும்

கோமகன் 

14 மார்கழி 2014