Wednesday, December 23, 2015

கோமகனின் 'தனிக்கதை ' ( (அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)கோமகனின் ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது.
குறும்படமோ திரைப்படமோ தயாரிக்கத்தக்க கதைகள்.

*****************************************************

இந்த 16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள், சமூKomakan Book Coverகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், சாதிப் பிரச்சினைகள் இவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளன.

சமூகத்தின் அவலங்களை அப்படியே தத்ரூபமாக தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். இவர் பயன்படுத்தும் கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் இன்றைய இளையதலைமுறையினர், குறிப்பாக புலம்பெயர்ந்து பல திசைகளில், வெளிநாடுகளில் சிதறியிருக்கும் அம்மண்ணுக்குச் சொந்தங்கள் அறிவார்களா?

ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. அதற்கு கோமனின் கிராமிய மண்வாசனை கலந்த வார்த்தைகளின் அழகும், அதில் அவர் புகுத்தியிருக்கும் உணர்வுகளின் அழுத்தமும் மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.

‘சின்னாட்டி’ கதையின் நாயகன், சின்னாட்டி ஒரு கீழ்ச்சாதிக்காரன், பறையடிப்பதில் வில்லாதி வில்லன். ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சடங்குகள் அப்படியே தெள்ளத்தெளிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கதையில் பறையடிக்கும் ஒலியை ஆசிரியர் கோமகன் தெளிவாய் உள்வாங்கி வார்த்தையில் வடித்துள்ளார். சின்னாட்டி அடித்த பறை “டண்டணக்கு டண்டணக்கு டடாண்டணக்கு ணக்குணக்குவென” என ஓங்கி அதிர்ந்ததாக எழுதியுள்ளார். அந்த வரியை இரண்டு முறை திரும்பிப் படித்தால் நம் ஊரில் பறையடித்து ஆடும் ஆட்டம் கண்முன்னே விரிகிறது.
அதே போல ‘பாண்’ கதையில் பாண்போடுவது எப்படி என்று அப்படியே ஒரு குறிப்பையும் விடாமல் வர்ணித்திருப்பது எவ்வளவு ஆழமாக கோமகன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை கவனிக்கிறார் என்று காட்டுகின்றது.

‘அவன் யார்?’, ‘விசாகன்’ இருகதைகளில் அகதிகளாய் புலம்பெயர்ந்தோர் கையில் முறையான விசா கிடைக்க நடக்கும் போரட்டத்தை மையமாக வைத்திருக்கின்றன. இரண்டிலும் சட்டத்திற்கு விரோதமான முறையிலேயே முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நம்மவரின் நிலை, அவர்களின் மனப்போரட்டங்கள் நம் மனதைப் பிழிவதாய் அமைந்துள்ளன.

’அவன்யார்’ கதையில் விசாவுக்காக பலமுறை தன் உண்மையான பெயரையே மாற்றவேண்டியவனின் மனக்குழப்பத்தையும், மன உளைச்சலையும் வெளிக்காட்டுகிறது.

அவன் யார்? கதையின் முக்கிய கதாபாத்திரம் குகன். கதை முழுதும் குகன் என்ற பெயர் சுமார் 60 முறை வருகிறது. கதை முடிந்ததும் பின்குறிப்பில் ஒரு வார்த்தை குசன் அதற்கு பொருள் அரபு மொழியில் மச்சான். அடடே எங்கே அதை விட்டுவிட்டோமே என்று கதை முழுதும் தேடிக் கண்டுபிடித்தேன். தவிர்த்திருக்கலாம்.
’விசாகன்’ கதையில் முறையற்ற வகையில் ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் பெற்று அவளின் உதவியால் விசா கிடைக்கப்பெற்ற பின் அவளுக்கு துரோகம் இழைப்பதுடன் ஒப்பந்தத்தின்படி கொடுக்கவேண்டிய பணத்தை சேர்ப்பிக்கக் கொண்டுவந்தும் கொடுக்காமல் ஏமாற்றுவதும், நம்மவர் மேல் நமக்கே வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்குவதாய் அமைந்துள்ளது.

’குட்டிபாபர்’ என்னை அந்தக் கால நினைவுகளில் தள்ளிவிட்டது. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். சிறுவனாய் இருக்கும் போது மாதம் ஒருமுறை எங்க ஊரில் இருக்கும் ஒரு முடிதிருத்துபவர் எங்கள் வீட்டுக்கே வருவார். வாசலில் மணை போட்டு முதலில் என் அப்பா, பிறகு நான், அடுத்து என் தம்பி என எங்கள் மூன்று பேர் தலையிலும் கைவைத்துவிட்டுத்தான் கிளம்புவார். இந்தக் கதையிலும் அதே போன்ற காட்சி. ஆனால் 3 தலையையும் திருத்த 80களில் என் தந்தையார் சுமார் பத்தோ, பதினைந்தோ ரூபாய்தான் தருவார். ஆனால் இந்தக் கதையில் காசுவாங்க மறுக்கும் குட்டிபாபருக்கு தேத்தண்ணி தந்து, கமத்தால் வந்த நெல்லு கொஞ்சம் அதோடு நூறு ரூபாயும் கொடுப்பதாக இவர் எழுதியிருப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது.

இன்னொரு உள்ளத்தைப் பிழியும் கதை ‘கிளி அம்மான்’. ஒரு புலம்பெயர்ந்த போராளி வாழ்க்கையில் பிடிப்பற்றுக் கெட்டு நொந்து கவனிப்பாரற்று திரியும் இழிநிலையை அப்படியே படம் எடுத்துக் காட்டுகிறது. அந்நிலையிலும் அவரின் சில ஒழுக்கமான கட்டுப்பாடுடனுடைய நடவடிக்கைகள் அவர்மீது நம்மையும் அறியாமல் ஒரு மரியாதையை ஏற்படுத்துகின்றன. தாயகத்தில் ஒரு குண்டுவெடிப்பில் அவருடைய மொத்தக்குடும்பமும் பலியாக, புலம்பெயர்ந்த நாட்டில் அகதிக்கான அனுமதியும் ரத்துசெய்யப்பட மனநிலை குழம்பியரவராக கவனிப்பாரற்றுத் திரிந்து, அந்த அன்னியதேசத்தில் ரயிலில் அடிபட்டு சாவது அப்படியே நம் இதயத்தைப் பிழிந்து நம்மை உலுக்குகிறது.

அதைவிட ஒருபடி மேலாக அவர் செத்தபிறகு “மேஜர் கிளி அம்மானுக்கு வீரவணக்கம்” என இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினாலும், அவர் உடலைப் பொறுப்பெடுத்து பெற்று இறுதிச்சடங்கு செய்ய ஒருவரும் முன்வராமல் இருப்பது நம் விழியோரங்களில் கண்ணீரை வழியவிடுகின்றது.

இதைப் படித்ததும் ஏனோ எனக்கு சுதந்திரக்கவி பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் சிலர் மட்டுமே பங்கேற்றதை நினைவுபடுத்துகிறது. ஒரு கவிஞன் அவரது இறுதி ஊர்வலத்தைப்பற்றி குறிப்பிடும்போது அதில் பங்கேற்றோரின் எண்ணிக்கையைவிட அவர் மீது மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.

‘மனிதம் தொலத்த மனங்கள்’ கதையில் புலம்பெயர்ந்த பிறகு பெற்ற அன்னையின் சாவுக்கு, கொள்ளியிடக் கூட செல்லமுடியாத ஒருவனின் மனப்போராட்டத்தை ஆழமாக சித்தரிக்கிறார்.
அதுபோலவே ‘வேள்விகிடாய்’ கதையில் புலம்பெயர்ந்த ஒருவனின் உழைப்பில் சொந்த நாட்டில் அவன் குடும்பத்தார் சொகுசு பெறுவதும், இவனைப்பற்றிய கவலையோ இவனுக்கும் வயதாகிறதே ஒரு துணையைத் தேடுவோம் என்று பொறுப்பேற்கவோ மறந்த சுயநல குடும்பத்தைப்பற்றி சித்தரிக்கிறது.

மொத்தத்தில் அனைத்து கதைகளும் ஒரு டுவிஸ்ட்(TWIST) இருக்கும், ஒரு டெர்ன்(TURN) இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் நகர்ந்தாலும், அப்படியெதுவும் கதைக்காக புனையப்படாமல் உள்ளதை உள்ளபடியே அது சமூக இழிநிலைச் சம்பவமாக இருந்தாலும் ஒரு சாதிக்கொடுமைச் சம்பவமாக இருந்தாலும் சரி அப்படியே எடுத்துக் காட்டுகிறார்.

இயற்கை அழகை ஆங்காங்கே வர்ணிக்கும் விதம் எவரையும் மிகவும் கவரும் விதம் உள்ளது. ஆனால் பல இடங்களில் கோயில் மணி அடிப்பதும், கூழைக்கிடாக்கள் அரைவட்டமாகப் பறப்பதுவும் காட்டப்பட்டுள்ளன.

கதைகளின் ஊடே அவர் புகுத்தியிருக்கும் வர்ணனைகள்:

நாறல் மீனைக் கண்ட பூனை போல
முகிலிடையே ஓடிப்பிடித்து விளையாடும் நிலவைப்போல
ஜென்மத்தில் சனி போல
நெல்லிக்காய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது போல
வழிதவறிய செம்மறி ஆட்டுக் குட்டியைப் போல
அன்று உதித்த பூரண நிலவு போல

சரியான இடத்தில் பொருந்தி அதிக சுவையூட்டுவதாக உள்ளன.
கிராமிய வழக்கில் சொற்களை அப்படியே பயன்படுத்தியிருப்பது அனைத்துக் கதைகளிலும் பெரும் பலம்.

மொத்தத்தில் இவரின் இப்படைப்பில் பல கதைகளை வைத்து குறும்படம் தயாரிக்கலாம், அல்லது ஓரிரு கதைகளை இணைத்து திரைப்படமே தயாரிக்கலாம்.

இதுபோல பல கதைகளை கோமகன் நம் தமிழுலகுக்குத் தரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

- மெல்போர்ன் அரவிந்த் - அவுஸ்திரேலியா

Sunday, December 20, 2015

சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை

சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை 

               
மேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர்.  இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.

ஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.

அந்தக்கவிஞரே  மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம். அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.

குடும்பப்பாசம்  சகோதர வாஞ்சை உறவுகளுடன் தீராத நேசம் ஆன்மீக நம்பிக்கைகள்  நட்புகளை பேணும் இயல்பு கலை இலக்கியம் ஊடகம் வானொலி திரைப்பட ரசனை சமூகம் குறித்த கரிசனை மனிதநேயத்தொண்டுணர்வு இவற்றுக்கிடையே சிறுமைகண்டு பொங்கிடும் தர்மாவேசக்குரல் அனைத்தும் கொண்டிருந்த ஒரு ஆளுமையாக எம்மத்தியில் வாழ்ந்தவர் சகோதரி திருமதி அருணகிரி விஜயராணி. அவர் இரண்டு ஆண்செல்வங்களுக்குத்தான் ஒரு அம்மா என்பதுதான் எமக்குத்தெரியும். ஆனால்  - அவருக்கு அருணகிரி என்ற ஒரு மகனும் இருக்கிறார் என்பது நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

அப்பாவைப்போல் கணவர் வேண்டும் என்பாள் மகள். அம்மாவைப்போன்று மனைவி வேண்டும் என்பான்  மகன். இதுதான் எங்கள் தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரிய குணாதிசயம்.  அவ்வாறு வாழ்ந்தவர்கள்தான் விஜயாவும் அருணும். 

ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்த விஜயா திருமணத்தின் பின்னர் எங்குசென்றாலும் தனது கணவரையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். ஆனால் இந்தப்பயணத்தில் அது சாத்தியமே இல்லை. ஏனென்றொல்  இனி எமது இரண்டு செல்வன்களுக்கும் நீங்கள்தான் அம்மாவும் அப்பாவும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச்சென்றுள்ளார் எங்கள் சகோதரி.

எனவே எங்கள் அனைவரதும் அருமைச்சகோதரனே அன்பு நண்பரே அருண் நீங்கள் தைரியமாக இருக்கவேண்டிய காலம் இதுதான். நாம் அனைவரும் உங்களுடன் இருக்கின்றோம். ஆயினும் விஜயாவின் இடத்தை எவராலும் நிரப்பமுடியாதுதான். ஆனால் உங்கள் விஜயா உங்களுடன்தான் நினைவுகளாக என்றென்றும் இருப்பார்.

ஒரு வருடகாலத்தில் தாயையும் தாரத்தையும் இறைவனிடம் கையளித்த தைரியத்தை அந்த இறைவனே உங்களுக்கு வழங்கியிருக்கிறார்.  எனவே தாயும் தாரமும் என்றும் உங்களுடன்தான் இருக்கிறார்கள். அந்த தைரியத்தில்தான் நீங்கள் இருக்கவேண்டும்.

உங்கள் மகன்மார் அன்பு மருமகள் பேரக்குழந்தை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் உங்களுடனேயே இருக்கிறார்கள்.  அன்புள்ள எங்கள் சகோதரி விஜயா -  எங்களுடன் அடிக்கடி உரையாடும் உங்களுக்கும் ஒரு செய்தி சொல்லவேண்டும்.  நீங்கள் அரைநூற்றாண்டுக்கும் மேலாக வாழும் இந்த மெல்பனில்தான் இன்று உங்களை இவர்கள் அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.
அப்படி அல்ல. தமிழர்கள் வாழும் தேசங்களில் எல்லாம் இன்று உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இலங்கையில் நேசித்த படைப்பிலக்கியாவதிகளும் கலைஞர்களும் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் உங்கள் நினைவுகளைத்தான் அங்கு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல நீங்கள் எமது கல்வி நிதியம் ஊடாக உதவிய இலங்கையில் நீடித்த அந்தப்போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களும் அவர்களை கண்காணிக்கும் தொடர்பாளர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் செல்லாத இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் உதவிய பாடசாலையில் உங்களை நினைவுகூர்ந்து பெரிய பதாகைகள் (பெனர்கள்)  எல்லாம் தொங்கவிட்டும் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சான்றோராக இருக்கும் உங்களை உங்கள் பெற்றோர்களும் மாமா மாமியும் - நீங்கள் ஆதர்சமாக கருதிய மகாகவியும் கவியரசும் உங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள் என்றுதானே எங்களையெல்லாம் விட்டு விட்டு அவர்களிடம் செல்கிறீர்கள்.  செல்லுங்கள். தாராளமாகச்செல்லுங்கள். உங்களை வழியனுப்பிவைக்கின்றோம்.   அந்தத்தைரியத்தை நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

ஏனென்றால் மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும். நீங்கள் செல்வத்துரை அய்யா - சிவபாக்கியம் அம்மா - நாகலிங்கம் மாமா நாகேஸ்வரி மாமி ஆகியோரிடம்தான் செல்கிறீர்கள். நீங்கள் மீண்டும் வந்து அவர்களின் குடும்பத்திலேயே தோன்றுவீர்கள். அது நிச்சயம். மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும்.

இனி விஜயா பேசுறன் என்ற குரலை நாம் கேட்கமாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கள் என்றென்றும் பேசிக்கொண்டே இருப்பீர்கள். உங்களை வழியனுப்புவதற்கு நீங்கள் அங்கம் வகித்த எமது கல்வி நிதியம் மற்றும் தமிழ் கலை இலக்கியச்சங்க  உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சார்பிலும் எனது அஞ்சலியை தெரிவிக்கின்றேன். மலர்களைப்போல் உறங்கும் எங்கள் பாசமலரே சென்றுவாருங்கள்.
                   
லெ  முருகபூபதி     (20-12-2015)                         

Wednesday, December 16, 2015

" இலங்கையில் நீடித்த போருக்குப் பிந்திய இலக்கியப்படைப்புகள் காலத்தின் தேவை "

" இலங்கையில்  நீடித்த  போருக்குப் பிந்திய இலக்கியப்படைப்புகள்  காலத்தின்  தேவை "


" ஈழத்து  இலக்கியவளர்ச்சியில்  முன்னர் மறுமலர்ச்சிக்காலம்,   முற்போக்கு -  பிMr.Vanniyakulam.02JPGரதேச  இலக்கியம் - மண்வாசனை,  தேசிய   இலக்கியம்  என்பன    பேசுபொருளாக இருந்தமைபோன்று,  யுத்தம் தொடங்கியதும்    போர்க்கால இலக்கியமும்   ஈழத்தமிழர்களின்   வெளிநாட்டு   புலப்பெயர்வையடுத்து  புகலிட  இலக்கியமும்   பேசுபொருளாகின.   இன்று  யுத்தம்  முடிந்துள்ளது.   இனி   எழுதப்படும்   இலக்கியங்கள் போருக்குப்பிந்திய  இலக்கியமாகப் பேசப்படவிருப்பதனால் ஷோபா சக்தியின்  (BOX)  பொக்ஸ்   முதலான   படைப்புகள்  வெளியாகத் தொடங்கிவிட்டன.   எனவே இதனை    வளர்த்தெடுக்கவேண்டிய கடமை   அனைத்து படைப்பாளிகளிடமும்   இருக்கிறது. "  


என்று  அண்மையில்  அவுஸ்திரேலியா -  மெல்பனில்  நடந்த வாசிப்பு  அனுபவப்பகிர்வில்  உரையாற்றிய இலக்கியத்திறனாய்வாளர்  திரு. சி. வன்னியகுலம்  தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு   சங்கத்தின்  நடப்பாண்டு துணைத்தலைவர்  திரு. லெ. முருகபூபதியின்  தலைமையில் மெல்பனில்  Mulgrave Neighborhood House  மண்டபத்தில்    நடந்தது.

வாசிப்பு  அனுபவப்பகிர்வில்  பிரான்ஸில்  வதியும் ஷோபா சக்தியின்  பொக்ஸ்  (BOX)   நாவல்  பற்றிய  தமது  வாசிப்பு அனுபவத்தை   சங்கத்தின்  உறுப்பினர்   திரு.ஜே.கே. ஜெயக்குமாரன் பகிர்ந்துகொண்டார்.   அதனையடுத்து  சங்கத்தின் உறுப்பினர்கள் டொக்டர்  நடேசன்,   திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி,   திரு. அறவேந்தன்  ஆகியோர் முறையே  வடகோவை   வரதராஜனின்   நிலவு குளிர்ச்சியாக   இல்லை  (சிறுகதைகள்)   சாத்திரியின் (பிரான்ஸ் ) ஆயுதஎழுத்து  (நாவல்)  கோமகன்   (பிரான்ஸ்)  எழுதிய கோமகனின்  தனிக்கதை  ( சிறுகதைகள்) ஆகியனவற்றின்   வாசிப்பு அனுபவங்களை   பகிர்ந்துகொண்டனர்.

வாசிப்பு  அனுபவப் பகிர்வில்  உரையாற்றியவர்கள்  தமது குறிப்புகளை எழுத்தில்  சமர்ப்பித்தனர்  என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

வருகை  தந்திருந்தவர்களின்   கலந்துரையாடலையும்  கருத்துப் பகிர்வுகளையுமடுத்து  இலங்கையிலிருந்து  வருகை  தந்திருந்த இலக்கியத்திறனாய்வாளர்  திரு. சி. வன்னியகுலம்   போருக்குப்பின்னர்  ஈழத்து   இலக்கிய  வளர்ச்சி  என்ற  தலைப்பில் உரையாற்றினார்.

அவர்  மேலும்  உரையாற்றுகையில்  தெரிவித்ததாவது:  " இலங்கையில்  சமகாலத்தில்  கொழும்பிலிருந்து ஞானம், வடக்கிலிருந்து  ஜீவநதி,   கிழக்கிலிருந்து   மகுடம், அநுராதபுரத்திலிருந்து  படிகள்  முதலான    சிற்றிதழ்கள் வெளியாகின்றன.   இவற்றிலும்  ஏனைய  தமிழ்த்தினசரிகளின் வாரவெளியீடுகளிலும்   தொடர்ச்சியாக  சிறுகதைகள் வெளியாகின்றன.    சில  பத்திரிகைகள்  தொடர்கதைகளுக்கும் களம் வழங்குகின்றன. அத்துடன்  கவிதைகளும்  அதிகமாக பிரசுரமாகின்றன.

போர்  நடந்த  காலத்தில்  நாம்  போரை  விரும்பாது  விட்டாலும் அதன்   பாதிப்புகளை  சித்திரிக்கும்  இலக்கியப்படைப்புகளை படித்தோம். இன்று  போர்  முடிந்து  ஏழு  ஆண்டுகளாகப்போகிறது.

அப்படியாயின்,  இலக்கியத்தின்  வளர்ச்சிப்போக்கிலும் தவிர்க்கமுடியாத   புதிய  அறிமுகம்  தோன்றும்.   போரில் பாதிக்கப்பட்டவர்களின்   எதிர்காலம்,   வாழ்வாதாரம்,   உளவியல் பாதிப்புகள்   அனைத்தும்  பிரசார வாடையின்றி  கலை நேர்த்தியுடன் வெளிவரவேண்டிய   தேவை   உருவாகியிருக்கிறது.

முன்னர்  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியை   கட்டம்  கட்டமாக அறிமுகப்படுத்தி   ஆய்வுசெய்த  மரபு  இருந்தது.   அந்த  ஆய்வுகள் இலக்கிய    மாணவர்களுக்கும்  பயன்  அளித்தது.

இலங்கையில்  போர்  பற்றியோ   அதன்  விளைவுகள்  பற்றியோ வெளிப்படையாக    இலக்கியத்திற்கு  கொண்டுவருவதில் சிலருக்கு தயக்கம்    இருந்தது.  ஆனால்,  புகலிடத்தில்  அந்நிலை   இல்லை.

அதனால்   புகலிடத்தில்  எழுதுபவர்களின்   படைப்புகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு    புதிய வரவாகின்றன.   அதேசமயம் புகலிடத்தில்   வெளியாகும்  வாய்ப்புள்ள,   இன்று இந்த  வாசிப்பு அனுபவத்தில்  பேசப்பட்ட  நூல்கள்  பரவலாக  கிடைப்பது சாத்தியமற்றிருக்கிறது.  இந்தத் தேக்கத்தையும் நிவர்த்திசெய்யவேண்டியிருக்கிறது.

எனவே,  போருக்குப்பிந்திய  வாழ்வை   இலக்கியத்தில் சித்திரிக்கும் புகலிட   எழுத்தாளர்களுக்கும்,  அவற்றை  வாசிக்கும்  புகலிட வாசகர்களுக்கும்  இலங்கைக்கும்  புகலிடத்திற்கும்  இடையே ஆரோக்கியமான    வாசிப்புத்  தளத்தை   வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பும்  தோன்றியுள்ளது.

இந்நிகழ்வில்  இலக்கிய  ஆர்வலர்கள்,  திருமதி  சாந்தினி புவநேந்திரராஜா,  திருவாளர்கள்  சங்கர  சுப்பிரமணியன்,   ருத்ராபதி, பாலநாதன், கலாநிதி  ஸ்ரீகாந்தன்  ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

நன்றி : http://www.thenee.com/161215/161215.htm

Friday, December 11, 2015

மாதுமை

மாதுமை


ராகவனின் சொந்த மண் கோண்டாவிலாக இருந்தது. அவன் அவனது மச்சாள் மகேஸ்வரியை கலியாணம் செய்து மாதுமை என்ற பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்தான் .நாட்டு நடப்புகள் அவனை சிப்பிலி ஆட்டின. ரெண்டு பக்கத்து சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது .கோண்டாவில்  இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓர் இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர்  பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. அந்த அறை ஒன்றும் பெரிய மாளிகை இல்லை. அந்த அறைக்குள்ளேயே குசினி இருந்தது. ஒரு காஸ் குக்கர், ஒரு பானை, ரெண்டு பெரிய சட்டிகள், தேத்தண்ணி போட ஒரு லெக்ரிக் கேத்தில், இவ்வளவும் தான் அந்த குசினியின் அசையாச் சொத்துக்கள். அறையின் ஓரத்தில் சின்ன மறைப்பு போட்டு ரொய்லெட் பிளஸ்  நிண்டு குளிக்கிற அறை இருந்தது. அந்த  ரொய்லெட்டில் யாரும் விட்டுவீதியாக ரொய்லெட் போக முடியாது. எட்டுப் பெடியளுக்கு முன்னால் அவதானமாகத்தான் போகவேண்டும். அனால் ராகவனுக்கு விட்டு வீதியாகத்தான்  ரொய்லெட் போகவேண்டும். ஆரம்பத்தில் அவனுக்கு பெரிய வெக்கமாக  இருந்தது.அறையில் சோறும் ஒரு இறைச்சிகறியும் ஒரு மரக்கறியும் தான் சாப்பாடு. இதை ரேர்ண் வைத்து அவர்கள்  சமைத்தார்கள். சோறு முடிந்தால் சோறை முடித்தவர் ரைஸ்குக்கறில் போடவேண்டும். விடுமுறை நாள்களில் இரவில் புட்டு அல்லது றொட்டி சமைக்கப்படும். இதுதான் குணாவின் அறை ரொட்டீன் ஆக இருந்தது .

பாரீசுக்கு  வந்த புதிதில் இருந்த பயமும் குழப்பமும் இப்பொழுது அவனுக்கு இல்லாமல் போய் விட்டது. பாரிஸின் பரிசுகெட்ட சீவியத்துக்கு அவன் அவனை பழகிக்கொண்டான். அவனின் அறை நண்பனான  ரகுதான் ஒருமுறை அவனை ஒப்றாவுக்கு வழக்கு எழுத தனக்கு தெரிஞ்ச மாசிலாமணியிடம்  கூட்டிக்கொண்டு போனான்  மாசிலாமணி அப்புக்காத்துக்கு மேல் அப்புக்காத்தாய் இருந்தார். புலிக்கும் அவருக்கும் ஜென்மத்து சனி போல் கிடந்தது. புலியை வைச்சு கேஸ் எழுதினால் தான் வழக்கு நிக்கும் எண்டு ஒரு தேற்றத்தை போட்டார். அதோடை தான் எழுதிறதுக்கு பக்கத்துக்கு 30 யூறோ தரவேணும் எண்டும் சொன்னார். ராகவனுக்கு மாசிலாமணியரின்  கதையும் எடுப்பு சாய்ப்பும் துண்டாக பிடிக்கவில்லை யோசிச்சு சொல்லுறதாக சொல்லிவிட்டு வந்துவிட்டான். இப்பிடி ராகவன் செய்தது ரகுவுக்கு சின்ன கடுப்பு இருந்தது ஏனெனில் அவனுக்கும் மாசிலாமணியருக்கும் ஓர் சின்ன டீல் இருந்தது. ராகவன் ஒப்றாவுக்கு தானே ஆங்கிலத்தில் தனது அகதி அந்தஸ்துக்  கோரிக்கையை எழுதி அனுப்பினான். ராகவன் தனது வழக்கை எழுதி அனுப்பிய நேரம்  பிரான்சின் தொண்டர் நிறுவனமான அக்சன் பாம் ஊழியர்கள் ஓர் எறிகணை தாக்குதலில் தாயகத்தில் உயிர் இழந்தார்கள். காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக உடனடியாக பிரான்ஸ் தனது நாட்டில் இருந்த கிட்டத்தட்ட ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்கி தான் பெரிய கருணை உள்ளம் கொண்டவன் என்று உலகத்துக்கு காட்டியது. இதனால் ராகவனுக்கு அவனது தபால் பெட்டியில் நிரந்தர வதிவிட உரிமை காட் வந்து விழுந்தது. ராகவனோ தனது ஆங்கிலப்புலமையால் தான் தனக்கு காட் கிடைத்தது என்று தனக்குத்தானே சுயஇன்பம் கண்டுகொண்டான். ராகவன் காட் கிடைத்த சந்தோசத்தில் பாரிஸின் புறநகர் பகுதி ஒன்றிற்குப் போய் அங்கு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ரெண்டு கோழிகளை பிடித்து அடித்து அறை நண்பர்களுக்கு விருந்து வைத்தான்.

அவனுக்கு கார்ட் கிடைத்தாலும் ஒழுங்கான வேலைகள் கிடைக்கவில்லை. முதலில் சிறிய விளம்பர பேப்பர்கள் போடும் வேலை செய்தான். அவன் வேலை செய்த முதலாளி சொல்லாமல் கொள்ளாமல் கொம்பனியை இழுத்து மூடிவிட்டு ஓடியதால் அவனை ஓர் சீன உணவகம் தத்து எடுத்தது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஜோன் மிஷேல், பிரான்ஸின் தெற்கு மூலையில் இருக்கும் பஸ்ரியா தீவின்  வடகோடியில் இருக்கும் செயிண்ட் பஃளோரண்ட்  (Saint-Florent ) கடற்கரையோரக் கிராமத்தை சேர்ந்தவர். அவரது மனைவி ஆன் மேரி வியட்நாமை சேர்ந்தவள். அவர்கள் பிரான்ஸின்  கிராமப்பக்கத்தை சேர்ந்தவர்கள் ஆகையால் பாரிஸின் நகரத்து பழக்கவழக்கங்கள் அவர்களிடம் ஒட்டவில்லை. ராகவனை தமது குடும்பத்தில் ஒருவனைப்போலவே பார்த்துக்கொண்டார்கள்.  அந்த உணவகத்தில்   ஒரு வியட்நாமியன் ஷெஃப் ஆக  இருந்தான். இவன் வியட் நாமியனுக்கு எடுபிடியாக இருந்தான்.

அந்த உணவகம் நாற்பது இருக்கைகளைக் கொண்டது.  ராகவனுக்கு ஒன்றைரை நாள் லீவுடன் தினமும் இரண்டு நேர வேலை. காலையில் "ரெஸ்ரோரண்ட்" க்கு வந்தால் ராகவனுக்கு, காலையில் வந்த சலாட்டுகளை தண்ணியில் கழுவவேண்டும். ஐஸ் பெட்டிகளில் வந்த மீனுகள் எல்லாத்தையும் செதில் இல்லாமல் செய்து தலை வெட்டி கிளீன் பண்ணி வைக்கவேண்டும். புரூட் சலாட் செய்யவேண்டும். வெங்காயம் உரிக்க வேண்டும். உருளைக்கிளங்கு சீவி கொடுக்க வேண்டும். றால்கள் கோது உடைத்து வைக்கவேண்டும் என்று  தலை முட்டிய  வேலைகள் இருக்கும். இவை எல்லாம் முடிய மத்தியானம் பன்னிரண்டு மணியாகி விடும். பின்னர் இரண்டு மணிவரை சேர்விஸ் நடக்கும். அப்பொழுது ராகவன் காலில் நாலு சில்லு பூட்டி கொண்டு நிற்பான். இரவும் இதே கதைதான். வேலை முடிந்து சாமம் பன்னிரண்டு மணிக்கு அறைக்குப் போகும் பொழுது ராகவன் எலும்புகள் எல்லாம் கழண்டுதான் போவான். மூவர் செய்கின்ற வேலையை ஒருவன் செய்வதால் வந்த வினை இது . ஆனால் ஜோன் மிஷேலின் பண்பாலும் நல்ல சம்பளத்தாலும் ராகவன் இவைகளை எல்லாம் தாங்கித் தரிக்க வேண்டியதாகி விட்டது.

***************************************

ராகவன் பாரிஸ் வந்து இரண்டு குளிர் காலங்களைக் கண்டபொழுது கோண்டாவிலில் மாதுமைக்கு நான்கு வயது முடிந்து விட்டிருந்தது. அவள் ராகவனை படத்திலேயே கண்டு அப்பா என்று கூப்பிட்டாள். ஒருநாள்  கோண்டாவில் நெட்டிலிப்பாய் ஏரியா பலாலி றோட்டில் நடந்த தொடர் தாக்குதலால் அல்லோலகல்லோலப்பட்டது. கிபீர் கனதரம் குத்தி எழும்பியது. மகேஸ்வரியும் மாதுமையும் பங்கருக்குள் பாய்ந்தாலும், கன சனத்துக்கு கண் மூடிமுழிக்க முதல் செல் சிதறல்கள் பாய்ந்து பரலோகம் அனுப்பின. .பங்கருக்குள் இருந்த மகேஸ்வரியை மாதுமை கட்டிப்பிடித்திருந்தாலும் நன்றாக பயந்து போய் விட்டிருந்தாள்.அவளின் சின்ன கண்கள் பிதுங்கி வெளியே வரும் போல இருந்தன. சத்தங்கள் எல்லாம் ஓய்ந்த பின்னர் மகேஸ்வரி மாதுமையுடன் பங்கரை விட்டு  வெளியே வந்தாள் .பங்கரை சுற்றி  சில மீற்றருக்கு அப்பால் உள்ள இடங்கள் எல்லாமே மனித சிதறல்களாக இருந்தன. . மகேஸ்வரிக்கு தலை சுற்றியது. . இவைகளைப் பார்த்தகணமே மாதுமை வீரிட்டு அழுதாள். மகேஸ்வரி அவள் தலையை வேறுபக்கம் திருப்பியவாறே வீட்டுப்பக்கம் ஓடினாள். வீட்டு ஹோலின் நடுப்பக்கத்தில் செல் கோறி எடுத்து இருந்தது. சிவரெல்லாம் பாளம் பாளமாக வெடித்து இருந்தது. அந்தநாளில் இருந்து அவளின் மனம், மாதுமையும் தானும் எப்படிப்பட்டாவது ராகவனிடம் போய் சேர்ந்து விடவேண்டும் என்று முடிவு கட்டியது.

ஒவ்வரு வருட ஜூலை மாதத்து இறுதிக்கிழமையில் இருந்து ஜோன் மிஷேல் என்னதான் தலைபோகின்ற வியாபாரம் இருந்தாலும் அதை மூட்டை கட்டிவைத்து விட்டுக் கோடைகால விடுமுறையைக் கழிக்க தனது சொந்தக்கிராமமான செயிண்ட் பஃளோரண்ட் கிராமத்துக்கு அவர் மனைவி ஆன் மேரியுடன் சென்று விடுவது வழக்கம். அப்பொழுது உணவகத்தில் வேலைசெய்யும் எல்லோருக்குமே விடுமுறைதான். இப்படியான ஒரு ஜூலை மாதத்து அதிகாலையில் ராகவனின் நித்திரைக்கு உலை வைத்தது மகேஸ்வரியின் தொலைபேசி அழைப்பு .எடுத்த எடுப்பிலேயே மகேஸ்வரி அழத்தொடங்கி விட்டாள் .ராகவனுக்கு இருண்டது விடிஞ்சது தெரியவில்லை. அவளது அழுகையை அடக்கி என்ன விடயம் என்று அறிய அவன் அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருந்தது .ஒருவாறு மகேஸ்வரி நடந்த கதையெல்லாம் சொன்னாள் .தன்னையும் மாதுமையையும் எப்பிடியாவது கூப்பிடச்சொன்னாள். ராகவனுக்கு தலை சுற்றியது. ஒருபக்கம் மாதுமையின் எதிர்காலம். மறுபக்கம் ராகவன் இப்பொழுதான் நிமிர தொடங்கி இருக்கின்றான். அவனால் மகேஸ்வரியின் கண்ணீரையும் மீற முடியவில்லை. ஒருமாதத்திற்குள் தான் கூப்பிடுவதாக அவளுக்கு சொல்லி விட்டு போனை வைத்தான்.

ராகவனுக்கு வருடாந்த விடுமுறை முடிந்து மீண்டும் வேலை தொடங்கி விட்டது . வேலைக்கு வந்த ராகவன் மிகவும் குழம்பிப் போய் இருந்தான். அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் அவனையறியாது பல தவறுகளை விட ஆரம்பித்தான். தூரத்தே இவைகளை அவதானித்த ஜோன் மிஷேலின் மனம்," இவனுக்கு என்ன நடந்தது ?" என்று எண்ணிக்கொண்டது.  இதை வளரவிடாது அவனிடம் பேசவேண்டும் என்று அவர் எண்ணிக்கொண்டார். அன்று வேலை முடிந்து ராகவன் குசினியை விட்டு வெளியே வரும் பொழுது ஜோன் மிஷேலின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. அவனை தன்முன்னால் மேசையில்  இருக்கப்பண்ணிய ஜோன் மிஷேல், தனக்கு ஓர் பியரும், அவனுக்கு கபே எகஸ்பிறாசோவும் எடுத்துக்கொண்டு வந்து மேசையில் இருந்தார். ஆன் மேரியும் ஓர் தேநீரை எடுத்துக்கொண்டு அவருடன் இருந்தாள். ராகவன் என்னவோ ஏதோ என்று பயத்தில் குளிர்ந்து போய் இருந்தான். எடுத்த எடுப்பிலேயே ஜோன் மிஷேல், "உனக்கு என்ன நடந்தது ? நீ முன்பு போல் வேலை செய்கின்றாய் இல்லை. எதுவானாலும் என்னிடம் சொல்லு" என்று ராகவனைப் பார்த்துக் கேட்டார். அவனுக்கும் தனது மனப்பாரங்களை இறக்க ஓர் வடிகால் தேவைப்பட்டது. அவனும் மகேஸ்வரிக்கும், மாதுமைக்கும் நடந்த கதைகளை சொன்னான். இதனால் தான் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக தன்னிடம் கூப்பிட இருப்பதாக சொன்னான். அவனின் கதைகளை கேட்ட ஜோன் மிஷேல், "கவலைப்படாதே .ஏதாவது உதவிகள் வேண்டும் என்றால் என்னிடம் கேள்  நான் செய்கின்றேன்" என்று அவனது முதுகில் ஆதரவாகத் தட்டினார். அடுத்த நாள் காலை ராகவன் வேலைக்கு சென்ற பொழுது அவனிடம் ஆன் மேரி, மாதுமைக்கு ஊதா கலரில் பொப்பிக் கை வைத்த ஓர் சட்டையும், மிக்கி மௌவுஸ் படம் போட்ட ஓர் கைக்கடிகாரமும் கொடுத்து தான் தந்ததாக அவளுக்கு அனுப்பி விடச்சொன்னாள். ராகவனால் அழுகையை நிப்பாட்ட முடியவில்லை. 

குழப்பத்தில் இருந்த ராகவனை ரகு என்ன பிரச்சனையென்று நோண்டினான் . ராகவன் இருந்த குழப்ப மனநிலையில் எல்லாவற்றையும் ரகுவுக்கு சொன்னான். நாங்கள் எப்பவும் எமது பிரச்சனைகளை தொடர்ந்து காவும் வல்லமை இல்லாதவர்களாகத்தான் இருக்கின்றோம். உடனடியாக அதை வேறு ஒருவரின் தலையில் போட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் முனைப்பில் தான் இருக்கின்றோம். அதற்கு "மனப்பாரம் குறைகின்றது" என்று நொண்டி சமாதானம் சொல்லுகின்றோம். ஆனால் பிரச்சனை அப்படியேதான் எங்கள் மனதில் இருக்கின்றது. எங்கள் அந்தரங்கங்கள் தேவையில்லாது வேறு ஒருவருக்கு போகின்றதே என்று நாம் அறிவதில்லை. இப்படி செய்வதால் பலவேளை பிரச்சனைகளுக்கு தேவையில்லாத கிளைப்பிரச்சனைகள் வந்து சேர்வதை நாம் ஏனோ அறிவதில்லை. இதுபோலவே ராகவனின் செயலும் இருந்தது.
"மச்சான் உதுக்கே மண்டையை விடுறாய். உதெல்லாம் சிம்பிள் மாற்றார். நீ பொஃறின் மினிஸ்ரியாலை மகேஸ்வரியையும் மாதுமையையும்  கூப்பிட குறைச்சது ரெண்டு வரியம் போகும். அதுக்குள்ளை அங்கை அவை உயிரோடை இருப்பினமோ எண்டது தெரியாது. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் ஆக்களை கூப்பிடிறவன் இருக்கிறான் கண்டியோ.ஆள் பேக்காய். ஒவ்வருமுறையும் புதுப்புது றூட்டாலை ஆக்களை கொண்டு வந்துவிடுவான். நாங்கள் நம்பி அவனை பிடிக்கலாம். முதல் அரைவாசி காசு குடுக்கவேணும். மிச்சம் அவை இங்கை வந்தால் பிறகு குடுக்கவேணும். உனக்கு ஒக்கே எண்டால் சொல்லு உடனை அவனோடை கதைப்பம்" என்று  ராகவனுக்கு புத்தி சொல்வதே ரகுவின் கடமையாக இப்பொழுது இருந்தது. ஏனெனில் மாசிலாமணியரில் இழந்த டீலை இந்த சந்தர்ப்பத்தில் ரகு இழக்க விரும்பவில்லை. குளம்பிய மனதில் இருந்த ராகவனுக்கு ரகு சொல்வதே சரி என்று பட்டது. தான் பிடித்த இருபதினாயிரம் யூறோ சீட்டை எடுத்து தனது குடும்பத்தைக் கூப்பிட முடிவு செய்தான். ஒருநாள் ரகுவுடன் சேர்ந்து ஏஜென்சியுடன் கதைத்தார்கள். ஏஜென்சிக்கு புதுறூட் போட வழிகிடைத்தது. ஒருமாதத்தில் அவனது குடும்பம் இங்கே நிற்பார்கள். என்று கற்பூரம் கொழுத்தி நூக்காத குறையாக ஏஜென்சி சொன்னான். 

**************************************

அல்ஜீரியாவின் வடமேற்கு மூலையில் இருந்த ஒறான் (Oran) மீன்பிடி கிராமத்தின்  மம்மல் பொழுதொன்றில் சிறியதும் இல்லாத பெரியதும் இல்லாத மீன்பிடி றோலர் ஒன்றில் முஸ்தபா, சுலைமான், இப்றாகிம் அபூபக்கர் ஆகியோர் அந்த றோலரை சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த றோலர் தாளக்கட்டு மாறாத கடல் அலைகழுக்கு நடனம் ஆடியவாறு மிதவைகள் போடப்பட்ட சீமந்து கரையுடன் முட்டுவதும் விலகுவதுமாக நடனம் ஆடிக்கொண்டு இருந்தது. முஸ்தபா றோலரின் தலமை ஓட்டியாக இருந்தான். சுலைமான் ரெக்னீசியனாக இருந்தான். அபூபக்கரும் இப்றாகீமும் உதவி ஓட்டிகளாக இருந்தார்கள். முஸ்தபா கொம்பாஸின் உதவியுடன் றோலர் போக இருக்கும் றூட்டைப் போட்டாலும் அவனது மனத்திரையில் வேறு றூட் ஒன்றும் ஓடிக்கொண்டிருந்தது. முஸ்தபாவின் கைகளுக்கு மத்தியதரைக்கடலின் சந்து பொந்துகள் எல்லாம்  அடிமையாக இருந்தது.  ரேடர்களுக்கும், கண்காணிப்பு படைகளுக்கும் முஸ்தபா கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவதில் வல்லவன். அந்த இறங்கு துறையின் வாயிலில் பஸ் ஒன்று ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்றை சத்தம் சந்தடியின்றி இறக்கி விட்டு நகர்ந்தது. அந்தக்குழுவில் ஈரானியர், சிரியர், பாக்கீஸ்தானியர் பங்களாதேசியர் என்று பல நாட்டவர்களுடன் மகேஸ்வரியும் மாதுமையும் இருந்தார்கள் . மாதுமைக்கு புதிய இடம் கடல் எல்லாம் சேர்த்து மிகவும் குஷியாக இருந்தாள். அவள் மகேஸ்வரியின் சொல்லுகேட்காமல் அங்கும் இங்குமாக பறந்து திரிந்தாள். மகேஸ்வரிக்கு மாதுமையை கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இப்படி குழப்படி செய்கின்ற மாதுமையுடன் எப்படி இந்த கப்பலில் இத்தாலிக்கு போகமுடியும்? என்பதே அவளின் கவலையாக இருந்தது. கொழும்பில் இருந்து ஏஜென்சி எயார்ப்போர்ட் செற்றிங் செய்து பிரச்சனை இல்லாமல் அல்ஜீரியாவுக்கு வந்து சேர்ந்தது நெட்டிலிப்பாய் பிள்ளையாரின் கருணை என்றே அவள் நம்பினாள். தொடர் பயணத்தினால் அவள் மெலிந்து போய் இருந்தாள். மகேஸ்வரி மாதுமையை கண்ணுக்குள் எண்ணை விட்டு சாப்பாட்டு விடயத்தில்  பார்த்துக்கொண்டாலும் மாதுமைக்கு அப்பாவை எப்பொழுது தான் பார்ப்பேன் என்ற கனவே இருந்தது .இதனால் அவள் சாப்பாடு சரியாக சாப்பிடாது சோர்ந்து போய் இருந்தாலும் அவளின் துடியாட்டம் குறைந்தபாடில்லை.

அபூபக்கர் அவர்களை நோக்கி வந்து றோலரில் அவர்களை ஏறுமாறு சொன்னான் .இடம் பிடிப்பதில் எல்லா நாட்டவர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள் எல்லோருமே றோலரில் ஏறுவதற்குத்  தள்ளுமுள்ளுப்பட்டார்கள். அபூபக்கர் அவர்களை பேசி ஒழுங்கு படுத்தினான். இயலாதவர்களையும் பெண்கள் பிள்ளைகளையும் முதலில் ஏறவிட்டான். கப்பலில் ஏற கஸ்ரப்பட்ட மகேஸ்வரியை தூக்கி ஏற்றிவிட்டு, மாதுமையை தூக்கி அவளை கொஞ்சியவாறே அவளிடம் கொடுத்தான். முதன்முதலில் ஓர் அந்நியனின் கை தன்மேல் படுவது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் பயணங்களில் இதெல்லாம் பாக்க முடியாது என்று அவள் தனது மனதை தேற்றிக்கொண்டாள். எல்லோரும் ஏறி முடிய றோலர் தனது நிலையில் இருந்து சிறிது கடலுக்குள் தாண்டது. அப்பொழுது கடல் பகுதி நன்றாக இருண்டு இரவு பதினோரு மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இரண்டு எஞ்சின்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்த சுலைமான் தனது பக்கம் சரி என்று முஸ்தபாவுக்கு வோக்கியினால் அறிவித்தான். கடல் நடமாட்டங்களை அவதானித்த அபூபக்கரும் இப்றாகீமும் ரூட் கிளியர் என்று சொன்னார்கள். "அல்லாஹு அக்பர்............"  என்றவாறே முஸ்தபா றோலரின் என்ஜினை ஸ்ராட் பண்ணினான் மற்றைய மூவரும் தரையில் விழுந்து தொழுதார்கள். அவர்களைப் பார்த்த மாதுமையும் எதோ விளையாட்டு என்று நினைத்து விட்டு அவர்களைப்போல தொழுது கைகளை விரித்தவாறு முழங்காலில் இருந்தாள். எதோச்சையாக திரும்பிய சுலைமான் மாதுமையின் செயலைப் பார்த்து சிரித்தான் .றோலர் ஒறான் (Oran) இறங்குதுறையில் இருந்து வடகிழக்குப் பக்கமாக இத்தாலியின் மர்சலா (Marsala) மீன்பிடி கிராமத்தை இலக்கு வைத்து மெதுவாக நகரத்தொடங்கியது. ஒறான் (Oran ) இறங்கு துறையை விட்டு வெளியே வந்த ரோலர் வேகமெடுத்தது. தூரத்தே ஒறான் மெல்லிய வெளிச்சப் பொட்டுகளுடன் (Oran) மெதுமெதுவாக மறைந்து கொண்டு வந்தது.

அன்று  கருநீலக்கடல் அமைதியாகவே காணப்பட்டது. மேலே வானம் குழப்பங்கள் இன்றி துடைத்து விட்டால் போல் இருந்தது. தென் மேற்குபக்கமாக கடலில் இருந்து தெளிந்த வானத்தின் நட்சத்திரப்படுக்கைகளுக்கு இடையில் முழு நிலவு எழுந்து கொண்டிருந்தது, முஸ்தபாவின் மனதில் அல்லா தன்பக்கமே இருக்கின்றார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. றோலரின் அணியத்தில் அபூபக்கர் நின்று கொண்டு கடலைத் தன கண்களால் துளாவிக்கொண்டிருந்தான். எஞ்சின் அறைக்கு கிட்டவாக சுலைமான் நின்று கொண்டான். பின்பக்கமாக இப்றாகிம் நின்று கொண்டான். இந்த கடல் இருக்கின்றதே தரையைவிட பல விசித்திரங்களை தனது வயிற்றில் வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாக அதன் மேலே ஊரும் மனிதர்களுக்கு நடித்துக்கொண்டிருக்கும். எப்பொழுது தனது மறுபக்கத்தைக் காட்டும் ? என்று எந்தப்பெரிய விண்ணாதி விண்ணனான கடலோடியினாலும் கண்டு பிடிக்க முடியாத அற்புதமான சுரங்கம். இதனால் தானோ கடலை எமது இலக்கியங்கள் பெண்ணுடன் ஒப்பிட்டார்கள் ? ஒருபக்கம் மனிதனை வாழ வைத்துக்கொண்டு மறுபக்கம் அவனை பழிவாங்கும் சாகசக்காரிதான் இந்தக்கடல். சிலவேளை அதன் கொடிய நாக்குகள் கரைகளில் தன்பாட்டில் இருந்த மனிதர்களையும் விட்டுவைத்ததில்லை. ஒன்றும் மிச்சம் விடாது அப்படியே வாரி அள்ளித் தன் வயிற்றுக்குள் போட்டுக்கொளும்.

கடலுக்குள் அகன்ற வட்டவடிவான நிலாவைக் கண்ட மாதுமை றோலருக்குள் ஓடித்திரிந்தாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே அவள் எல்லோரது கவனத்தையும் பெற்றுவிட்டாள். றோலரின் பின்பக்கமாக டொல்பின்கள் நீச்சல் அடித்துக் கொண்டு வந்தன. நிலாவைக் கண்ட சந்தோசத்தில் அவையும் குஷியாகி கடலுக்குள் டைவ் அடித்துக்கொண்டிருந்தன. அவைகள்  டைவ் அடிக்கும் பொழுது அவற்றின் தோல்கள் நிலாவொளியில் மின்னின. டொல்பின்களை கண்ட மாதுமைக்கு தலைகால் தெரியவில்லை. ராகவனின் நினைவுகளில் மூழ்கியிருந்த மகேஸ்வரியை கூட்டி வந்து டொல்பின்களைக் காட்டினாள். ஆரம்பத்தில் மாதுமைக்காக அவைகளைப் பார்த்த மகேஸ்வரி இறுதியில் அவைகளின் கீ.......கீ ....... என்ற ஒலிகளாலும், அவற்றின் வரிசைக்கிரமமான நீச்சலாலும்  கவரப்பட்டாள்.

அவர்களுக்கு எல்லாமே சரியாக ஒத்துழைத்து. முஸ்தபாவின் வழிகாட்டலில் றோலர் இத்தாலியின் மர்சலா (Marsala) நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. தூரத்தே மேற்குத்திசையில் விடிவெள்ளி முளைத்து இருந்தது. அண்ணளவாக நேரம் அதிகாலை நான்கு மணியாக இருந்தது. றோலரில் இருந்த முக்கால்வாசிப்பேர் தூக்கத்தில் இருந்தார்கள். மாதுமை மகேஸ்வரியின் மடியில் ஓடிக்களைத்து படுத்திருந்தாள். மகேஸ்வரி கோழித்தூக்கத்தில் இருந்தாள். அலுத்துக் களைத்த முஸ்தபா அபூபக்கரிடம் பொறுப்பை கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் படுக்க கீழ்தளத்துக்கு வந்தான்.
சத்தம் சந்தடியில்லாது தென்மேற்கு மூலையில் செயிண்ட் புளோறண்ட்  பகுதிக்கு அருகே மெடிற்ரிறேனியன் கடற்பகுதியில் தாழமுக்கம் ஒன்று உருவாகி ஒறா பக்கமாக நகர்ந்து கொண்டிருந்தது. தெளிவாக இருந்த வானம் கருமை படரத்தொடங்கியது. இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த கடல் தனது அடுத்த பக்கத்தை காட்டத்தொடங்கியது. புயல் வேகமாக நகரத்தொடங்கியது. அலைகள் எம்பித்தாழ்ந்தன. சிறிதுநேரத்தில் மழைத்துளிகள் வேகமாக கடலைத் தொடத்தொடங்கின. இந்த கூத்துகள் நடந்தது தெரியாமல் றோலர் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. தூரத்தே மின்னலொன்று வெட்டி கிழித்து கடலுக்குள் இறங்கியது. அபூபக்கர் மின்னலைக் கண்டவுடன் றேடரில் றோலரின் நிலையை பார்த்தான். றோலர் மர்சலாவுக்கு 50 கடல் மைல் தூரத்தில் நின்றது. மீண்டும் வெட்டிக்கிழித்த மின்னலில் டொர்னாடோ ஒன்று வருவதை அவதானித்தான். சுலைமான், இப்ராகிம் அபூபக்கருக்கு கிட்ட வந்து விட்டார்கள். சுலைமானின் பேரனார் கடல் பிசாசு பற்றி செவிவழி கதைகளை அவனுக்கு சொல்லியிருக்கின்றார். இது கடல் பிசாசாக இருக்குமோ என்று சுலைமான் சந்தேகப்பட்டான். கடல் கொந்தளித்து அலைகள் தூக்கி அடித்தன. றோலரின் முன்பக்கத்தை அலைகள் முத்தமிட்டன. தண்ணீர் எங்கும் பரவி மீண்டும் கீழே கடலுக்குள் வடிந்தது. இதனால் அபூபக்கருக்கு முன்னே என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருந்தது. அவன் ஓர் குத்துமதிப்பில் சுக்கானை  பிடித்துக்கொண்டிருந்தான். றோலருக்குள் இருந்த எல்லோரும் நித்திரையால் முழித்து விட்டார்கள். இருந்தால் போல் றோலரின் எஞ்சின் இயங்க மறுத்து அடம் பிடித்தது. சுலைமான் நின்ற என்ஜினை முழிக்கப் பண்ண போராடிக்கொண்டிருந்தான். காற்றிலே சிக்கிய றோலர் திசைமாறத் தொடங்கியது.

எல்லோரும் தங்கள் தங்கள் கடவுளை கும்பிடத்தொடங்கினார்கள். மாதுமை வீரிட்டு அழத்தொடங்கினாள். றோலரின் பயங்கர ஆட்டத்தால் நித்திரை குலைந்த முஸ்தபா அபூபக்கரிடம் ஓடி வந்தான். அவனிடம் சுக்கானை வாங்கி றோலரை சரியான பாதைக்கு திருப்ப தொடங்கிய பொழுது சுக்கான் பெல்ட் அறுந்து போனது. அலைகள் றோலரை தூக்கித் தூக்கிப் போட்டன. றோலரை சுற்றி எங்கும் இருள் அப்பியிருந்தது. அதன் அருகே எங்கும் கப்பல்கள் வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. சுலைமான் வெளிச்ச வெடிகளை நாலுபக்கமும் கொழுத்தி எறிந்தான். முஸ்தபாவுக்கு நம்பிக்கையின் ஒளி குறையத்தொடங்கியது. அதை மற்றையவர்களுக்கு வெளிக்காட்டாது அவனது மூளை வேலைசெய்து கொண்டிருந்தது. றோலர் காற்றின் வேகத்தில் திசைமாறி செயிண்ட் புளோரண்ட் பக்கமாக நகரத்தொடங்கியது. திடீரென்று வந்த பெரிய அலையொன்று றோலரை உயரத்தூக்கி ஆழ்கடலின் கீழே நீட்டிக்கொண்டிருந்த இருந்த பாறை ஒன்றில் இறக்கியது. பாறை றோலரின் நடுப்பகுதியை சரியாக உடைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீர் பரவி றோலரின் முன்பக்கம் நீருக்குள் போகத்தொடங்கியது.

சிறிது நேரத்துக்குள் றோலரை கடல் முழுவதும் எடுத்துக்கொண்டது. எல்லோரிடமும் கடைசிநிமிட போராட்டம் இருந்தது. மகேஸ்வரி மாதுமையை ஒருகையால் பிடித்துக்கொண்டு கடலினுள் கால்களை அடித்தாள். குளிர் தண்ணியில் அவள் உடல் விறைக்கத்தொடங்கியது. அவளின் கண்களில் ராகவனின் முகமே வந்து போனது. அலையின் வேகத்தில் மாதுமை அவளின் கைகளில் இருந்து விடுபட்டு அலைகளில் அள்ளுப்படத்தொடங்கினாள். இப்பொழுது வெளிச்சம் கடலில் வரத்தொடங்கி விட்டது. பயணப்பொதிகளும் உடைந்த றோலரின் பகுதிகளும்தான்  கடலில் மிதந்து கொண்டிருந்தன. அன்று மீன்களுக்கு கொழுத்த வேட்டையாக இருந்தது. செக்கல் பொழுதில் கடற்கரையோரமாக ஜோன் மிஷேலும் ,மேரி ஆன் உம் மீன்வாடையுடன் கூடிய காற்றை ஆழமாக உள்ளெழுத்து விட்டவாறு வேகநடையில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது ,தூரத்தில் ஓர் சினஞ்சிறிய உருவம் தலை குப்பற கடல் அலைகளின் தாலாட்டில் கரைக்கும் அலைக்கும் இடையில் போக்குக் கட்டிக்கொண்டு கிடந்தது. அதன் மேலே கடல் பறவைகள் அவல ஒலி எழுப்பி சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அந்த சிறிய உருவத்தை அவர்கள் அண்மித்த பொழுது அதன் உடலில் ஊதா கலர் பொப்பிக் கை வைத்த சட்டையும் , கையில் மிக்கி படம் போட்ட கைக்கடிகாரமும் இருந்தது. கைக்கடிகாரம் ஆறு மணியுடன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது .

யாவும் உண்மைகலந்த கற்பனை.

பிற்குறிப்பு :

ஒப்றா : அகதிகள் தஞ்சக் கோரிக்கையை விசாரணை செய்யும் நீதிமன்றம்.

ஜீவநதி 30 கார்த்திகை 2015 (இலங்கை)

Thursday, December 10, 2015

ஒரு சில படைப்பாளிகளின் பார்வையில் பாலியல் தொழிலார்கள்

ஒரு சில படைப்பாளிகளின் பார்வையில் பாலியல் தொழிலார்கள் 


ஒரு சில படைப்பாளிகளின் சிந்தனைப்போக்குகளை பார்க்கையில் எனக்கு அவர்களின் அறியாமை மீது இரக்கமே ஏற்படுகின்றது. தங்கள் படைப்புகளில் பெண்களின் மீது உள்ள பார்வைகளை முற்போக்கு சிந்தனைகளாகக் காட்டும் இந்தப்படைப்பாளிகள், நடைமுறைகளில் அவ்வாறு காட்டிக்கொள்வதில்லை. அண்மையில் எனது சக படைப்பாளியான ஒரு கவிஞர் டெல்லியில் இருந்த பாலியல் தொழிலார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த மனிதாபிமான உதவிகளை எள்ளி நகையாடி இருந்தார்.அத்துடன் மற்றயவர்களுக்கு போதனையும் செய்திருந்தார். அதில் அவரது பெண்கள் மீதான இழி பார்வையும், ஆணாதிக்க மனோபாவவுமே மேலோங்கி இருந்தது .

குகைகளில் விலங்குகளுடன் விலங்குகளாக இருந்த மனிதனின் சிந்தனை போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களே நாகரீகங்களின் வளர்ச்சி நிலையும் அத்னூடாக வந்த இன்றைய வாழ்வு முறைமைகளும். ஆனால் ஒருசிலருக்கு இந்த வளர்ச்சிகள் ஒவ்வாமையாகக் காணப்படுகின்றது. மானுட வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் சம அளவிலான உயிரிகள். .ஆனால் மானுட நாகரீகப் போக்குகளிலே உடல்வலுவால் பலம் கொண்ட ஆண்களால் பெண்ணானவள் இரண்டாம் தரப்பிரஜையாக நடாத்தப்பட்டாள். இதற்கு உலகிலுள்ள மதங்கள் அனைத்துமே ஊக்கிகளாக செயல்பட்டு வந்தன. அதன் விளைச்சலே பாலியல் தொழிலார்கள்.

பாலியல் தொழில் என்பது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இன்றைய நிலையில் உள்ள மனிதநாகரீகம் பாலியல் தொழிலை இழிநிலையில் கருதாது அதனை சட்டவலு கொடுத்து சமூக அந்தஸ்த்தாக தரமுயர்த்தியுள்ளது. ஆனால் ஒரு சில படைப்பாளிகளோ இந்த நிலை தெரிந்தும் மதம் பிடித்தவர்களாக பாலியல் தொழிலாளர்களை தொடர்ந்தும் அவர்களின் உணர்வுகளை இழிநிலப்படுத்தியே வருகின்றார்கள்.

இப்படியான இரட்டை முகப்படைப்பாளிகளே!! உங்கள் சுயம் வெளிப்படும்பொழுது உங்கள் படைப்புகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை மறவாதீர்கள். உங்கள் படைப்புகள் குப்பைகளுடன் குப்பைகளாக கேட்பாரற்று கிடக்கும். இத்தகைய படைப்பாளிகளுக்கு எனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றேன் நன்றி .

நேசமுடன் கோமகன் 

Sunday, December 6, 2015

நிலவு குளிர்சியாக இல்லை ( திறனாய்வு நோயல் நடேசன் அவுஸ்திரேலியா )

நிலவு குளிர்சியாக இல்லை ( திறனாய்வு நோயல் நடேசன் அவுஸ்திரேலியா )கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.

சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.

நமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.

சமீபத்தில் அமரிக்கா சென்றபோது ஒரு நியூக்கர் சஞ்சிகையை வாங்கிப் வாசித்தபோது அதில் இஸ்ரேலிய ஹிப்ரு மொழியில் வந்த கதை சிறந்த கதை பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் எழுத்தாளர் மாப்பசான் சிறுகதைக்கு தலைமைக் குரு போன்றவர் அவரது புகழ்பெற்ற நெக்கிலஸ் என்ற சிறுகதையில் அழகான இளம் பெண் ஒரு சாதாரமணமான பதவி வகிக்கும் ஒருவரை திருமணம் முடிக்கிறாள் ஆனால் அவளது கனவுகளில் பணம் படாடோபமான விருந்துகள் அழகிய அலங்காரமான வீடு என்பன கனவாக இருக்கிறது. நிஜவாழ்கை, கனவுகளுக்கு எதிர்த் திசையில் அமைகிறது. அந்த தம்பதிகளுக்கு ஒரு பணக்கார விருந்திற்கு அழைப்பு வந்தபோது தனது செல்வந்த சினேகிதியின் விலை உயர்ந்த நெகலஸ்சை இரவல் வாங்கி அணிந்துகொண்டு அந்த விருந்தில் கலந்து கொள்கிறாள். ஆனால் அந்த நெக்லஸ் தொலைந்துவிட்டது. பல இடங்களில் கடன்பட்டு அதைப்போல் புதிதாக நெக்லசை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார்கள் அந்த தம்பதியினர். அந்த நெக்கிலசுக்காக பட்டகடனை அடைப்பதற்காக பத்துவருடங்கள், பல வேலைகள் செய்து கடனை அடைக்கிறார்கள். இந்த பத்துவருடங்களில் அந்த பெண் தனது அழகை, பொலிவை இழந்து போகிறாள். கடனைத் அடைத்த பின்பு எதிர்பாராமல் சந்தித்த பணக்கார சினேகிதியிடம்
உண்மையை சொன்னபோது அந்த சினேகிதி அந்த நெகல்ஸ் விலை குறைந்தது. போலி என்கிறாள். பத்து வருடங்கள் இரவு பகலாக சுகங்களை ஓய்வு நேரங்களை மறந்து கடுமையாக உழைத்தவளுக்கு எப்படி இருக்கும்? இந்த தம்பதியினரது வாழ்வின் தருணங்களை எடுத்துக் காட்டுவதோடு நேர்மை உழைப்பு என்பவற்றை இந்தக் கதை சொல்கிறது. கதைகேட்ட சந்தோசத்திற்கு அப்பால் பலவிடயங்களை இந்தக் கதை சிந்திக்கப் பண்ணுகிறது.

வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்சியாக இல்லை என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் சில மணியான கதைகள் உள்ளன. பல சிறுகதைப் தொகுப்புகளை வாசிக்கும்போது ஒரு கதையாவது தேறாமல் இருபதைக் கண்டுள்ளேன்.

மிகவும் அழகான ஆனால் ஆடம்பரமற்ற புனைவு மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள். பெரும்பாலானவை கோப்பாய் பிரதேசத்தை சுற்றியவை. நில சூழலை மிகவும் அவதானிப்போடு எழுதப்பட்டடிருக்கிறது.. முக்கியமாக தாவரங்கள் பறவைகளின் உடல் மொழிகளை இந்தளவு விபரிப்பாக நான் எந்தக் தமிழ்க் கதையிலும் பார்க்கவில்லை.அவரது தம்பியோடு பேசியபோது விவசாயத்தில் டிப்பிளோமா செய்தவர் என அறிந்தேன்.

தலையங்கத்திற்கு உரிய கதை- ஒருவிதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்து நனவிடைதோயும் கதை ஆனால் யாழ்ப்பாண கிடுவேலி நாகரிகத்தையும் பாவனைகள் எப்படி பெண்களை வாட்டி வதைத்கிறது என்பதை அழகாக சொல்கிறது.

மனவுரியும் மரவுரியும்- ஒரு வேப்பமரத்தின் கதை அதாவது வைத்த வேப்பமரத்தை அழிக்க சுற்றி பட்டையை எடுத்த பினபும் அது மீண்டும் தழைப்பது கண்டு அதை அழிக்க மறுத்தவரது மனம் பறறிசொல்லும் கதையது. வாடும் பயிரைக் கண்டு வாடும் உள்ளம் எமக்கு வருபோது எம்மை சுற்றி உள்ள மரங்களை பாதுகாத்து எமது உறவினர்போல் அன்பு செலுத்வோம

எனது கிளினிக்கை சுற்றி பெரிய யூகலிக்கப்ரஸ மரங்கள் உள்ளது அவைகள் முன்பகுதியை மறைகின்றன என்பது எனது கவலை. ஆனால் அந்த மரங்களை எனக்குத் தெரிந்த ஒருவர் பாத இரசத்தை செலுத்தி காய்ந்துபோக செய்யவா எனக் கேட்டபோது மறுத்தேன். அப்படி செய்து விட்டு கவுன்சிலிடமிருந்து தப்பினாலும் அந்த மரங்களும் அந்த மரங்களில் வந்து தங்கும் பறவைகள் என்ற சொந்தம் என்னுடன் 18 வருடங்களாக தொடர்கிறது

ஒரு கதை அரேபியநாட்டில் பேச்சுத் துணையற்று இருந்தவன் ஒரு சிற்றெறும்புக் கூட்டத்தை கண்டு ஏதோ இலங்கை எறும்பென அவற்றைப் பார்த்து ஆறுதல் அடைவது தனிமையை விளக்குகிறது.

உப்பு என்பது என்னை மிகவும் கவர்ந்தது. சிறுமி உப்பு அள்ளப்போய் அந்த உப்பு நீருக்குள் உடை நனைந்து அவளது தேகம் எரிவதும் பின்பு உப்பளக் காவலர்களிடம் அடிவாங்கிய பின் வீடு சென்றால் தாய் உப்புக் கொண்டு வந்தாயா என கேட்கும்போது சிறுமி அழுகிறாள். அவள் கண்ணீரில்தான் உப்பு என முடிப்பது மிகவும் கவித்துவமான தருணம்.

கதைகள் எல்லாம் முப்பது வருடத்திற்கு முன்னானவை ஒரு இடத்தில் மட்டும் நண்பன் இறந்த சுவரெட்டி ஆயுதப்போரட்டத்தை நினைவு படுதினாலும் தற்கால கதைகள்போல் இரத்தவாடை இல்லை. 80 முன்னான யாழ்பாண மண்ணின் புழுதிவாசம் பெரும்பாலான கதைகளில் மணக்கிறது.

இந்தக்கதையில் எனக்கு ஏதாவது குறை சொல்ல நினைத்தால் வாசிபவரது ஊகங்களுக்கு இடமில்லை. பெரும்பாலான விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகிறது. வாசகர்களை குழந்தையாக நினைத்து சத்தான உணவை கரண்டியால் ஊட்டியுள்ளார்.

ஒருவிதத்தில் தமிழர்கள் பலவிடயங்களில் குழந்தைகள் என்பதை அறிந்து எழுதினாரோ என நினைக்கிறேன்

கோப்பாய் வடக்கில் வாழுகின்ற வடகோவை வரதராஜன் யாழ் மத்தியகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் குண்டகசால விவசாயக்கல்லூரியில் விவசாயக்கலையில் டிப்ளோமா பட்டம் பெற்றார் பின்னர் சிறிது காலம் சவூதி அரேபியாவில் லாண்ட் ஸ்கேப் போர்மன் ஆக கடமையாற்றி விட்டு தாயகம் திரும்பி பல இடங்களில் கிராமசேவையாளராக இருந்திருக்கின்றார் இப்பொழுது சிறுப்பிட்டி பகுதிக்கு கிராம சேவையாளராக கடமையாற்றுகின்றார் .மல்லிகை சிரித்திரன் வீரகேசரி கணையாழி அலை என்று பல பத்திரிகைகளில் எழுதிவந்த இவரது பல படைப்புகள் போர் மற்றும் இடப்பெயர்வுகளால் தொலைந்து விட்டன இருந்தவைகளை தொகுத்ததே இந்த சிறுகதை தொகுதி.

நன்றி : http://noelnadesan.com/2015/12/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/

Thursday, December 3, 2015

அவுஸ்திரேலியா - மெல்பனில் (05-12-2015) நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு லெ .முருகபூபதி

அவுஸ்திரேலியா - மெல்பனில் (05-12-2015)  நான்கு  நூல்களின் வாசிப்பு  அனுபவப்பகிர்வு லெ .முருகபூபதி
கல்லிலிருந்து  கணினி   வரையில்  அனைத்து மொழிகளும் பயணித்துக்கொண்டிருக்கின்றன.    இனிவரும்  யுகத்தில்  மொழிகள் எதில்  பதிவாகும்  எனக்கூறமுடியாது.  ஆனால் மொழிகள்  வாழும். மறையும்.

வாசகர்களிடத்தில்தான்  மொழியின்  வாழ்க்கை  தங்கியிருக்கிறது. அதனால்தான்  வாசிப்பு  மனிதனை  முழுமையாக்கும்  என்று  எமது முன்னோர்கள்   சொன்னார்கள்.  ஆனால்,  இந்த  நூற்றாண்டில் மக்கள் வாசிப்பதற்காக  தேர்ந்தெடுத்துள்ள  சாதனங்கள் இலகுவாகிவிட்டது. அவற்றில்   படிக்கலாம்.   பார்க்கலாம். ரசிக்கலாம்.  சிரிக்கலாம், கோபிக்கலாம்.  உடனுக்குடன் பதில்களையும்  பதிவேற்றலாம். ஆயினும்  அச்சில்  வெளியாகும் படைப்புகளுக்கும்  பத்திரிகை இதழ்களுக்கும்   மதிப்பு  இன்னமும் குறையவில்லை. இணையத்தளங்கள் ,   வலைப்பூக்கள் வந்தபின்னரும்  அவற்றில் எழுதுபவர்கள்,  பின்னர் நூலுருவாக்குவதற்கு   விரும்புவதற்கும்  பல காரணங்கள் இருக்கின்றன.   இன்றும்  கணினி  அறிவு அந்நியமாகியிருக்கும் வாசகர்களுக்கு,  குறிப்பாக  முதியவர்களுக்கும்   மூத்ததலைமுறையினருக்கும் அச்சுப்பிரதிகள்தான் வாசிப்புத்தாகத்தை   தணித்துவருகின்றன. தமிழ் சமூகத்தில் புத்தகசந்தைகள் -  கண்காட்சிகள்  நடப்பது போன்று ஆங்கிலேயர்கள் உட்பட  வேறு  இனத்தவர்களிடம் வாசகர் வட்டம், புக்கிளப் (Book Club)  முதலான  அமைப்புகள் இயங்கிவருகின்றன.

தமிழ்  மக்கள்  மத்தியில்  நூல்வெளியீடுகள்  தற்காலத்தில் சடங்காகிவிட்ட  காட்சியை யும்  காணமுடிகிறது.   மங்கல விளக்கேற்றல்,   வரவேற்புரை,  தலைமையுரை,  ஆசியுரை, வாழ்த்துரை,   பாராட்டுரை,   பிரதம  விருந்தினர்  உரை, வாழ்த்துப்பா,   மாலை  அணிவித்தல், பொன்னாடை  போர்த்துதல், முதல் பிரதி,  சிறப்பு  பிரதிகள்  வழங்கல், பதிலுரை,   நன்றியுரை முதலான  சம்பிரதாய  சடங்குகளில் வெளியிடப்படும்  நூலின் உள்ளடக்கம் -  மதிப்பீடு  என்பன இரண்டாம்   பட்சமாகிவிடும்.
விழா முடிந்து   வெளியாகும்  பத்திரிகைகள் -  இதழ்களில்  தமது படம்  வெளியாகியிருக்கிறதா...? என்பதில்  ஆர்வமும்  அக்கறையும் காண்பிக்கும்  சிறப்பு  பிரதிகள்  பெறும்  பிரமுகர்கள்,  வாங்கிய நூலை  வாசிப்பதில்,   வாசித்துவிட்டு  நூலாசிரியருக்கு  தனது வாசிப்பு  அனுபவத்தை  பகிர்ந்துகொள்வதில்  ஆர்வம் காண்பிப்பதில்லை. நூலாசிரியரும்  அச்சிட்ட  செலவு  வந்தால் போதும்  என்று ஆறுதலடைந்துவிட்டு,  அடுத்த  நூலை  அச்சிடத் தயாராவார். மீண்டும்  அதே  கதைதான்  தொடரும்.

இந்தப்பின்னணிகளுடன்தான்  அவுஸ்திரேலியாவில்  இயங்கும் தமிழ்   இலக்கிய  கலைச்சங்கம்  தனது  வளர்ச்சியில் அனுபவப்பகிர்வு என்ற   நிகழ்ச்சியை   அறிமுகப்படுத்தி  தொடர்ந்து நடத்திவருகிறது. இதன்மூலம்  அறிந்ததை  பகிர்ந்து  அறியாததை அறிந்துகொள்ளும் மரபை   வளர்த்துவருகிறது.

கடந்த  காலங்களில்  சிறுகதை,   கவிதை,   நாவல்,  மற்றும்  தமிழ் விக்கிபீடியா   பற்றிய  வாசிப்பு  அனுபவப் பகிர்வுகளையும் சமூகத்தின்  கதை  பகிர்தல்  நிகழ்ச்சியையும்  நடத்தியுள்ள இச்சங்கம்,  அண்மையில்  மெல்பனில்  நடந்த  15  ஆவது எழுத்தாளர் விழாவில்   ஏழு   நூல்களின்  விமர்சன  அரங்கையும் நடத்தியது.

குறிப்பிட்ட  நூல்களை  எழுதியவர்கள்  அவுஸ்திரேலியாவில் மெல்பன்,   சிட்னியில்  வசிக்கும்  படைப்பாளிகள்.   சிறுகதை, கவிதை, நடனக்கலை,   அகராதி,  புனைவுக்கட்டுரைகள்  முதலான வகைகளில் அவை   இடம்பெற்றிருந்தன.

எதிர்வரும்   05-12-2015   ஆம்   திகதி   சனிக்கிழமை   மாலை  3.00 மணியிலிருந்து   இரவு   7.00   மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில்   நடைபெறவிருக்கும்   வாசிப்பு  அனுபவப்பகிர்வு சற்று வேறுவிதமாக  ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட   நூல்களின்  படைப்பாளிகள் எவரும் அவுஸ்திரேலியாவில்  இல்லை.  அதனால்  அவர்களின் பிரசன்னமும் இல்லை. ஏற்புரைகளும்  இல்லை.

பிரான்ஸில்   வதியும்  ஷோபா சக்தியின்  பொக்ஸ் - BOX  ( நாவல்) சாத்திரியின்   ஆயுதஎழுத்து  ( நாவல்)   கோமகன் எழுதிய கோமகனின் "தனிக்கதை"  (சிறுகதை)   இலங்கையிலிருக்கும் வடகோவை   வரதராஜனின்  நிலவு குளிர்ச்சியாக  இல்லை ( சிறுகதை) முதலான   நூல்களே  வாசிப்பு அனுபவப்பகிர்வில் இம்முறை   இடம்பெறும்  நூல்கள்.


ஷோபா  சக்தியின்  படைப்புமொழி  தனித்துவமானது.   நீண்ட காலத்திற்கு   முன்னர்  பிரான்ஸ_க்குச் சென்றவர். படைப்பிலக்கியம், பத்தி   எழுத்து,   விமர்சனம்  மற்றும் திரைப்படத்துறை  என்பன இவருடைய  ஆளுமையை வெளிப்படுத்தி வருபவை.   இலங்கையின் போர்க்கால வன்முறைகளையும்  அவற்றை   எதிர்கொண்டவர்களின் அகப்புற எழுச்சிகளையும்  பதிவுசெய்து  வாசகர்  மத்தியில் கவனிப்புக்குள்ளானவர். அவருடைய  புதிய  நாவல் பொக்ஸ் (BOX) நீடித்த போருக்குப்பின்னர்   வன்னியில் மீள்குடியேறிய மக்களின்  வெளிப்புற  பாதிப்புகளை   தகவலாக வெளியிட்டு ஆவணப்படுத்தாமல்,  அவர்களின்  அகப்புற மனவிகாரங்களையும்  போரின்  சுவடுகள்  அவர்களின் ஆழ்மனத்தை  எவ்வாறு தாக்கியிருக்கிறது  என்பதையும் பதிவுசெய்கிறது.

இதன்  மீதான  தனது  வாசிப்பு  அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவிருப்பவர்  இன்றைய  தமிழ்  இலக்கிய இணையத்தளப்பரப்பில்  வீச்சுடன்  எழுதிவரும்  ஜே.கே. ஜெயக்குமாரன்.   அண்மையில்  இவருடைய கொல்லைப்புறக்காதலிகள்  என்ற  நூலும்  வெளியானது. படலை (www.padalay.com) என்ற   வலைப்பூவில்  இவருடைய ஆக்கங்களை   காணலாம்.


இலங்கையில்   கோப்பாய்  வடக்கில்  வதியும்  வடகோவை வரதராஜன்  1980 - 1990   காலப்பகுதியில்   இலங்கை  இதழ்களில் எழுதிய   சிறுகதைகளின்  தொகுப்பு  நிலவு  குளிர்ச்சியாக இல்லை. வாரவாரம்   அல்லது  மாதாமாதம்  பிரசுரத் தேவைகளின் அவதியில் எழுதி  நிரப்பிய  கதைகள்  அல்ல.   நிலவு  ஏன் குளிர்ச்சியாக இல்லாமல் போனது  என்பதை  தான்  வாழும் கிராமத்தின் மண்வாசனையுடன்  பதிவுசெய்கிறார்.   இந்த  நூலின் மற்றும்  ஒரு சிறப்பு  இதற்கு  அணிந்துரை  எழுதியிருப்பவர் மறைந்த  மூத்த கவிஞர்  கலாநிதி  இ.முருகையன்.   ஆனால் இந்நூலைப் பார்க்காமலேயே  விடைபெற்றுவிட்டார்.

நிலவு  ஏன்  குளிர்ச்சியாக  இல்லாமல்  போனது  என்பதை  தமது வாசிப்பு  அனுபவத்தின்  ஊடாக  சொல்லவருபவர்  எழுத்தாளர் டொக்டர்  நடேசன்.   வெளிநாடுகளில்  வதியும்  நான்கு படைப்பாளிகளின்   அண்மைக்கால  நூல்கள்  நான்கின்  வாசிப்பு அனுபவப்பகிர்வுக்கு   வித்திட்டதும்  அவர்தான்.   தனது  தொழில் வாழ்க்கை   அனுபவங்களையும் -  சமூகம்,  மனிதர்கள், பிராணிகளின்  உளவியல்  சார்ந்த  நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்திருப்பவர். வலைப்பூவில்  இவருடைய வலைப்பூ - www.noelnadesan'sblog.com


சாத்திரியின்   ஆயுதஎழுத்து  நாவல்,  ஈழப்போரில்  நேரடி சாட்சியாக இருந்தவரின்   அனுபவமும்  சுயவிமர்சனமும் பதிவாகிய  படைப்பு. உண்மைகளை   மறுதலித்துக்கொண்டு முன்னே   செல்லமுடியாது என்பதை   துல்லியமாகச்சொல்லும் இந்நாவல்,  வாசகர்களுக்கு அதிர்வை  ஏற்படுத்தும். இப்படியெல்லாம்  நடந்திருக்குமா...?  என்ற கேள்விகளுடன்தான் பக்கங்களை  புரட்டுவார்கள்.   உண்மைகள்  கலந்த   பொய்மைக்கும் பொய்கள்  சங்கமித்த  உண்மைகளுக்கும் இடையில்  நின்று  ஆயுத எழுத்து  மனச்சாட்சிகளை  உலுக்குகிறது.

இந்த  நாவல்  பற்றிய  தனது  வாசிப்பு  அனுபவத்தை சமர்ப்பிக்கவிருப்பவர்    சிறுகதை,  பத்தி  எழுத்தாளர்  எஸ். கிருஷ்ணமூர்த்தி.    இவருடைய  மறுவளம்  என்னும் கட்டுரைத்தொகுதி  சிலவருடங்களுக்கு  முன்னர்  வெளியானது. உதயம்  பத்திரிகையில்   சினிமா  விமர்சனங்களும் எழுதியிருப்பவர்.ஈழப்போராட்டத்தை   நேரடியாக  சந்தித்த அனுபவம்  பெற்றவர்.


கோமகன்  எழுதியிருக்கும்   கோமகனின் "தனிக்கதை" -  புகலிட வாழ்வின்  வலிகளையும்  சந்திக்கும் தரிசனங்களையும் சித்திரிக்கின்றன.   மண்வாசனை,  பிரதேச  மொழிவழக்கு, சோஷலிஸ யதார்த்தப்  பார்வை,  முற்போக்கு  என்ற வாய்ப்பாடுகளையெல்லாம் கவனத்தில்  கொள்ளாமல்,  புகலிட வாழ்வின்  கோலங்களை   படைப்பு   இலக்கியத்தில் அழுத்தமாக்குபவர்கள்  வரிசையில் இணைந்திருப்பவர்   கோமகன்.
அவருடைய  தொகுப்பினைப்பற்றிய  தமது  வாசிப்பு  அனுபவத்தை பகிரவிருப்பவர்,    தமிழ்நாட்டிலிருந்து  அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ள  அறவேந்தன்.  தேர்ந்த  வாசகர்.  சில  இலக்கிய அமைப்புகளில்   அங்கம்  வகிப்பவர்.   மெல்லினம்  மாத  இதழின் முதன்மை  ஆசிரியர்.

குறிப்பிட்ட  நான்கு  நூல்களில்  இரண்டு  சிறுகதைத் தொகுதிகளையும்   பதிப்பித்திருப்பவர்  கிளிநொச்சியில்   வதியும் கவிஞர் கருணாகரன்.   அவருடைய  மகிழ்  பதிப்பகத்தினால் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட  வாசிப்பு  அனுபவப்பகிர்வு  போன்ற  நிகழ்ச்சிகள் இலங்கையிலும்   தமிழகம்,   சிங்கப்பூர்,  மலேசியா,  கனடா  உட்பட அய்ரோப்பிய   நாடுகளிலும்   நடைபெறவேண்டும்.   பெரும்பாலான நூல் விமர்சன  அரங்குகளில்  தனிப்பட்ட  விருப்பு  வெறுப்பு பார்க்கும் மனப்போக்கும்   மலிந்திருக்கிறது.
இந்நிலையும்   மாறவேண்டும்.  ஒரு  படைப்பாளியின்  படைப்பை சக படைப்பாளி  படித்து  கருத்துச்சொல்லும்  பண்பும்  குறைந்து வருகிறது.

முன்னர்  இலங்கையில்  வருட ரீதியில்  சிறுகதைகள்,  கவிதைகள், நாவல்கள்   என்ற  அடிப்படையில்  விரிவான  தகவல்  பதிவுகள் விமர்சனப்பாங்கில்   வெளியாகின.   இதுவிடயத்தில் இலங்கையில் ஆக்கபூர்வமாக   உழைத்தவர்  மூத்த  எழுத்தாளர்  செங்கை ஆழியான்.   அவர்  அத்துடன்  நில்லாமல்  சிற்றிதழ்களில் வெளியான சிறுகதைகளையும்   தனித்தனித் தொகுப்புகளாக வெளியிட்டு  சிறந்த பணியாற்றியவர்.   அவரைப்போன்று  கலாநிதி ந. சுப்பிரமணியன் மற்றும்  கைலாசபதி,   சிவத்தம்பி ,  தெளிவத்தை ஜோசப்   ஆகியோர் இலங்கையிலும்   சிட்டி  சுந்தரராஜன்,  சோ. சிவபாத சுந்தரம்,  ஜெயமோகன்   முதலானோர்   தமிழகத்திலும்   ஒவ்வொரு காலகட்டத்தையும்  ஆவணப்படுத்தினர்.
ஆனால்,  இணையத்தளங்களின்  பெருக்கத்திற்குப்பின்னர் இந்நிலை இல்லை.   இதனால்  தேர்ந்த  வாசிப்பு  ரசனையிலும்  தேக்கம் வந்துவிட்டது.

தேக்கத்தை  அகற்றி  வாசிப்பு  அனுபவப் பயிற்சிகளை   எழுத்தாளர் -வாசகர்  - இலக்கிய   மாணவர்கள்  மத்தியில்  வளர்க்கவேண்டியது இன்றைய    தலைமுறையினரின்    கடமையாகும்.
குறிப்பிட்ட   நான்கு   நூல்களின்  வாசிப்பு  அனுபவத்தைத் தொடர்ந்து போருக்குப்பின்னர்   ஈழத்து  இலக்கிய  வளர்ச்சி  என்ற தலைப்பில்    மெல்பனுக்கு  வருகைதந்துள்ள இலக்கியத்திறனாய்வாளர்    சி. வன்னியகுலம்   உரையாற்றுவார்.
இவர்  ஏற்கனவே  ஈழத்துப்புனைகதைகளிற்  பேச்சு வழக்கு, புனைகதை  விமர்சனம்   முதலான   நூல்களை    எழுதியிருப்பவர்
அவுஸ்திரேலியா   மெல்பனில் நடைபெறவுள்ள  வாசிப்பு அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சிக்கு, தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் கலை, இலக்கிய    ஆர்வலர்களை    அழைக்கின்றது.லெ முருகபூபதி