Monday, June 29, 2015

என் பார்வையில் "'விடமேறிய கனவு" நூல் வெளியீட்டு நிகழ்வு

என் பார்வையில் "'விடமேறிய கனவு" நூல் வெளியீட்டு  நிகழ்வு


இன்று மாலை குணா கவியழகனின் விடமேறிய கனவு வெளியீட்டு நிகழ்வுக்கு சென்றிருந்தேன் . நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பமாகியது . நான் இது வரை சென்ற இலக்கிய நிகழ்வுகளைப் போல் இல்லாது புதுமையான அனுபவத்தைப் பெற்றேன். அது என்னவென்றால், நூலை எழுதியவரே நிகழ்வை நெறியாட்கை செய்து ஏற்புரையையும் அவரே செய்ததுமாகும். இதனூடாக நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு ஓர் மறைமுக செய்தி ஒன்றை நூலாசிரியர் கூறியிருக்கின்றார் . அதாவது, "நான் யாருக்கும் கீழ் நின்று இந்த நிகழ்வைச் செய்யவில்லை" என்பதாகும். அத்துடன் நிகழ்வை மூவர் திறனாய்வு செய்தனர். குறிப்பாக நூலாசிரியரின் முதல் நாவலான "நஞ்சுண்ட காட்டிற்கு" வாசகர் மனநிலையை சொல்வதற்கு அழைக்கப்பட ஆக்காட்டி இலக்கிய சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் தர்மு பிரசாந் தவிர்த்து எல்லோருமே குணாகவியழகனையும் நூலையும் புகழ்ந்து தள்ளுவதில் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது என்மனதில் சலிப்பு நிலையை ஏற்படுத்தியது. அதாவது நூல் பற்றிய எதிர்வினைகள் நேர்வினைகளை தங்கள் பார்வையில் வைக்காது வெறும் தட்டையாக சிலாகிப்புடன் திறனாய்வு இருந்து. அத்துடன் திறனாய்வு செய்தவர்கள் எல்லோருமே ஏறத்தாழ 45நிமிடங்களுக்கும் மேலாக தங்கள் திறனாய்வைச் செய்து வந்தவர்களை உறங்கு நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

ஏற்புரையை செய்த நூலாசிரியர் , தனக்கு அனுபவம் இல்லாத ஒன்றை தான் எழுத மாட்டேன் என்றும், அதில் கிடைக்கும் தனது அனுபவத்தில் உண்மையை சொல்வேன் என்று குறிப்பிட்டார். இது என்மனதில் பெரிய கேள்வி ஒன்றை எழுப்புகின்றது .ஓர் படைப்பில் உண்மை அனுபவம் மட்டும் பேசப்பட வேண்டுமானால் அங்கு புனைவு என்பது ஓர் கேள்விக்குறியாக நிற்கின்றது. அண்மையில் ஆக்காட்டி இலக்கிய சஞ்சிகைக்காக ஆதவன் கதிரேசர்பிள்ளையுடன் நான் செய்த நேர்காணலில் ஆதவன் உண்மைக்கும், புனைவுக்கும், இலக்கியதரத்துக்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு குறிப்பிடுகின்றார், "இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம் ஆனால் உண்மைகள் எல்லாம் இலக்கியமாகி விடாது ".அதாவது, ஓர் உண்மையை சொல்வதானாலும் அது இலக்கியத்தரம் பெறுவதற்கு அங்கு புனைவு என்பது அத்தியாவசியமாகின்றது என்பதை ஆதவன் இடித்துச் சொல்லியுள்ளார். 

இறுதியாக இவை எல்லாவற்றையும் நிகழ்வில் கேக்காது இங்கு எழுதுவதின் எனது நுண்ணரசியல் என்ன ?என்ற கேள்வி வாசகர் மத்தியில்  எழுகின்ற கேள்விக்கு , எல்லா இலக்கிய நிகழ்விலும் அனல் பறந்த விமர்சனங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு இந்த நிகழ்வு, ஒர் நிகழ்ச்சி நிரலுடன் அமைக்கப்பட்டது போலான தோற்ரத்தை ஏற்படுத்தியதால் அங்கு ஓர் திறந்த விமர்சனவெளி ஏற்பட சாத்தியமில்லை என்பதே எனது பதிலாகும். அத்துடன் வழமையான நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் விமர்சனங்கள் காரசாரமாக இருக்க இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு "சாரமாக" ( இனிப்பாக) மட்டுமே இருந்தது.

கோமகன் 
28 ஆனி 2015

Sunday, June 14, 2015

கோமகனின் 'தனிக்கதை ' ( என்னுரை )

கோமகனின் 'தனிக்கதை ' ( என்னுரை ) 


எனது வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும்
பணிவான வணக்கங்கள். இன்றைய நாள் வரை வலைப்பூவிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும், இணையங்களிலும் எழுதி வந்து கொண்டிருந்த எனது முதலாவது சிறுகதை தொகுதி முயற்சி இது.

இந்த சிறுகதை தொகுதியில் மொத்தம் பதினாறு சிறுகதைகளைக் கதைகளாகத் தொகுத்திருக்கின்றேன் . இந்தக் கதைசொல்லிகள் ஏற்கனவே இலக்கிய சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து பலவாசகர்களது நெஞ்சை அள்ளிச்சென்றவை. ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது, தனது பிள்ளை அப்பாவாலும், மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே. 

ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும், அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை. அந்த வகையில் இந்த முதல் முயற்சியை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த சிறுகதை தொகுதியில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகளும், பின்னர் எழுதிய கதைகளும் அடங்குகின்றன. நான் எழுதிய ஆரம்ப கால சிறுகதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது,எழுத்து வசப்பட்டதால் ஏற்பட்ட அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும், ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையை அம்மணமாகப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா ? அந்த வகையில் அவற்றை அப்படியே விட்டிருக்கின்றேன்.

இந்த பதினாறு கதைசொல்லிகளும் எதோ ஒருவிதத்தில் எம்மைச்சுற்றி இருக்கும் குறைகளைத் தொட்டுச்செல்கின்றன. என்னைப்பொறுத்த வரையில் ஓர் எழுத்தாளன் என்பவன் வெறும் அழகியல் குறிப்புகளை எழுத்தில் வடிக்காது, எம்மைச்சுற்றியுள்ள கறுப்புப் பக்கங்களைத் தொட்டு வாசகர் மனதில் ஓர் பொறியை ஏற்படுத்துபவனாக இருக்கவேண்டும். அந்தவகையில் இந்தக் கதைகளில் ஓர் கதையாவது வாசகர் மனதில் ஓர் சிறு பொறியைக் கிளப்பியிருந்தால் நான் தொகுத்த இந்த சிறுகதை தொகுதியானது அதனது நோக்கில் வெற்றியடைந்திருக்கின்றது என்று எடுத்துக்கொள்கின்றேன்.

நான் எழுதத்தொடங்கிய காலங்களில் எனது கதைகளைப் பிரசுரித்து அதன் மூலம் பல வாசகர் வட்டங்களை உருவாக்கித்தந்த யாழ் இணையம், நிலாமுற்றம்,தமிழ்நண்பர்கள் இணையம்,"ஒருபேப்பர்"(பெரியபிருத்தானியா), "ஆக்காட்டி" இலக்கிய சஞ்சிகை, (பிரான்ஸ்),"எதுவரை" இலக்கிய சஞ்சிகை (பெரிய பிருத்தானியா) ,"மலைகள்" இலக்கிய சஞ்சிகை (இந்தியா),"அம்ருதா" இலக்கிய சஞ்சிகை (இந்தியா) ஆகியவற்றின் ஆசிரியர் குழுவினரையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவுகூர்கின்றேன். இந்த சிறுகதை தொகுதியை அழகாக வடிவமைத்து வெளியிடும் மகிழ் பதிப்பகத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி...................... வணக்கம் !!!

கோமகன்
மின்னஞ்சல் தொடர்பு : koomagan93@gmail.com

Saturday, June 13, 2015

கோமகனின் "தனிக்கதை " முன்னுரை (தாட்சாயணி இலங்கை, யாழ்ப்பாணம்)

கோமகனின் "தனிக்கதை " முன்னுரை (தாட்சாயணி இலங்கை, 
யாழ்ப்பாணம்) 

Posted Image

எழுத்து என்பது எப்படி சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது? எழுத்தை நேசிப்பவர்கள் வாசிப்பின் மூலம் தம் நேசத்தைக் காட்டுபவர்களாகவும், எழுதுவதன் மூலம் அதை வசப்படுத்துபவர்களாகவும் இருக்கின்ற வேளைகளில் எழுத்து சிலரை இளம் பருவத்தில் ஆகர்சித்துக் கொள்வதாகவும், சிலருடைய வாழ்வில் நடுப்பகுதியில் வந்தமர்வதாகவும், இன்னும் சிலருக்கு அவர்களின் ஓய்வுக்காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாவதாகவும் அமைந்து விடுகின்றது. சிறு சோம்பலுணர்வு, எழுத்துச்சூழலின் கிறுக்குத்தன்மை பல பேனாக்களுக்கு ஓய்வு கொடுத்ததுண்டு. எழுதாத பேனாக்கள் இன்னுமிருக்கின்றன.எழுதக்கூடாத பேனாக்கள் எழுதிக் கொண்டுமிருக்கின்றன. எவ்வகையிலோ எழுத்துக்கள் நகர்கின்றன. தக்கன நிலைக்கின்றன. அல்லன காலப்போக்கில் காணாமல் போகின்றன.

இவ்வகையிலேயே கோமகனின் எழுத்துக்கள் அவரது நடுவயதில் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கையில் போராடி ஈழத்தின் யுத்தச் சூழலுக்குள் அலைக்கழிந்து, புலம் பெயர் தேசமொன்றில் கரையேறிய அவரது உணர்ச்சிப் பெருக்குகள் சொற்சித்திரங்களாகியிருக்கின்றன. கோமகனை நான் முதலில் அறிந்து கொண்டது அவரது வலைப்பூக்கள் வழியாகத்தான். இயற்கை மீதான நேசத்தின் விளைவாக விருட்சங்கள், பறவைகள் பற்றிய தேடலொன்றின் போது காணக் கிடைத்ததே அவரது வலைப்பூப் பக்கம். அதன் வழியே நீண்டு, நீண்டு போன தேடலில் கோப்பாயின் மண்வாசனை கலந்த எழுத்துக்கள் வாசிப்பினூடே நெருக்கத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர் எழுத்தாளர் வடகோவை வரதராஜனுடனான ஒரு உரையாடலின் போதே கோமகன் அவருடைய சகோதரர் என்பதையும் அறிந்து கொண்டேன். இந்தப் பின்கதை இருந்ததனால் தான், முன்னுரைக்கான தகுதி என்னிடம் இருக்கிறதோ இல்லையோ கோமகன் முன்னுரை எழுதித் தரமுடியுமா எனக் கேட்டபோது மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.

செம்மண்ணும், வியர்வையும் கலந்த விவசாய பூமியாய், வெங்காயப்பூ மணமும், வாழைச் சலசலப்பும் நிறைந்த கோப்பாயில் மாலைப் பொழுதுகளில் தரவைக்கு ஓட்டிச் செல்லப்படுகின்ற மாடு,கன்றுகளின் கலகலப்பும் கோப்பாய்-கைதடி நீரேரியில் நீரோட்டம் அதிகரிக்க அங்கு வந்தமரும் எண்ணிறந்த பறவைகளின் இரைச்சலும் மனதுக்கு நெருக்கமாயிருக்கும் போது, கோமகனின் கதைகளின் ஊர்வாசம் என் மனதில் எளிதில் ஒன்றிப் போவதற்கு வேறு காரணம் தேவையில்லை.

இந்தத் தொகுப்பில் அவரது பதினாறு கதைகள் இருக்கின்றன. ஏற்கனவே வேறு,வேறு இணையங்களில் தொட்டந்தொட்டமாக அவற்றைப் படித்திருந்தாலும், இந்த முன்னுரைக்காக வேண்டி அவற்றைத் திரும்பவும் படித்தேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈழத்தின் சமூக, அரசியல் காரணிகள் கதாசிரியரது வாழ்விலும், எழுத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறன. நாட்டை விட்டுப் புலம் பெயரல், அதைத் தொடர்ந்த தனித்த இயந்திரகதியான வாழ்க்கை, பாதுகாப்பான இடத்தைச் சென்றடைவதற்கான உத்தரவாதமின்மை, இராணுவத்தாலும், இயக்கத்தினாலும் தொடர்ச்சியாக மக்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள், இராணுவத்தின் அட்டூழியங்கள்,புலம் பெயர் வாழ்வின் மீதான அக,புற அழுத்தங்கள், தாய்மண் மீதான ஏக்கம் என உணர்ச்சிகளுக்கு வடிகால் கட்டியிருக்கிறார் கோமகன். இத்தனைக்குள்ளும் இயல்பான எள்ளலும்,கிண்டலும் தொனிக்கும் எழுத்துக்கள் இவ்வளவு பிரச்சினைகளையும் எவ்வாறு கடக்கலாம் என்பதையும் உள ஆற்றுப்படுத்தலுக்கு நகைச்சுவையும் பங்களிக்கும் என்பதையும் தம் வழியில் சொல்லிப் போகின்றன. இந்தப் பதினாறு கதைகளையும் ஒருங்கே பார்க்கிறபோது அவற்றை மூன்று வகைகளுக்குள் அடக்கிவிட முடிகிறது.

ஒன்று, புலம் பெயர்வதற்கு முன் சொந்த மண்ணில் அவர் கண்ணுற்ற சாதீய அடக்குமுறைகள், சமூகப் போக்குகள் மற்றும் போராட்டச்சூழல்.

இரண்டு, புலம் பெயர்ந்த சூழலின் சுற்றாடல், அங்கு வாழ்கின்ற எம்மவரின் நெருக்கடிகள், முற்றிலும் புதிய வாழ்க்கைக் கோலங்கள்.

மூன்று,புலம் பெயர்ந்த நிலையிலிருந்து மீள ஊர் சென்ற பின் காண்கின்ற அவலங்கள்,தாய் மண் மீதான பற்றுக்கு அப்பால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனம்.

இம்மூன்று நிலையிலும் நின்று கொண்டு கோமகன் தன்னால் புரிந்த, புரியப்பட்ட உலகத்தை ஏனையவர்களுக்கும் இனங்காட்டியுள்ளார்.

புலம் பெயர்தலின் இன்னொரு விளைவு என்னவெனில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுவிட்டு நாடு காண் பயணங்களை நம்மவர்க்கு சாத்தியமாக்கியுள்ளது. ஒரு காலத்தில் மணியன், சிவசங்கரி போன்றோரின் பயணக் கட்டுரைகள் தோற்றுவித்த ஆவலையும், வியப்பையும் இன்று நம்மவர்களின் புலம் பெயர்வுப்படைப்புக்கள் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் கோமகனின் சில குறிப்பிட்ட கதைகளும் புதிய தேசங்களை எமக்கு அருகாமையில் கொண்டு வருகின்றன.
இனப்பிரச்சினை வேர் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் கோமகனின் புலம் பெயர்தல் நிகழ்ந்திருந்தமை அவரது கதைகளை ஒருசேர வாசிக்கின்ற போது புலப்படுகின்றது. நேரடியாக ஒரு சம்பவத்தை உணர்வதற்கும் அதையே இன்னொருவர் வாயிலாகக் கேட்பதற்குமிடையே நுண்ணிய வேறுபாடுகளேனும் இருக்கத்தான் செய்யும். இந்தக் கதைகளைப் படித்தபோது எனக்குத் தெள்ளெனத் தெளிந்த விடயங்களிலிருந்து ஊகிக்க முடிந்தது, அவரது நேரடித் தரிசனங்களையும், மறைமுகப் பார்வைகளையும். எனினும் கோமகன் எந்தக் காலத்தில் நின்று கதையை எழுதினாலும் தான் ஊரில் வாழ்ந்த காலப் பகுதிக்கு கதையை எப்படியோ நகர்த்திச் சென்று விடுகிறார்.அதனால் கதையின் சில பலவீனங்கள் காணாமல் போகின்றன.

இயக்கங்களுக்கு அலையலையாய் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களும், அதற்கு சற்று முற்பட்ட காலத்தில் சாதியின் பெயரால் நலிவுற்றோர் மீது ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளும் சகிக்க முடியாத துவேஷத்தின் துர்நாற்றங்களும் கோமகனின் எழுத்தில் பிரதிபலிக்கின்றன. (சின்னாட்டி, அவர்கள் அப்படித்தான்) தீர்ப்பினைக் கையிலெடுக்கும் அதிகாரத்தைத் தாமே எடுத்துக் கொண்டபின் சமூகக் குற்றங்களுக்கான மரண தண்டனையை இயக்கங்களே வழங்கிய கதை 'அவர்கள் அப்படித்தான்'. பல இயக்கங்கள் முகிழ்த்தெழுந்த காலத்தில் மாற்று இயக்கத்தவர்கள் துரோகிகளாகவும்,காட்டிக் கொடுப்பாளர்களாகவும் மின் கம்பங்களில் கட்டப்பட்டு துரோகிகளாய் அடையாளப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட ஒரு அவலம் எங்கள் மண்ணுக்கிருக்கிறது. இன்று சம்பந்தப்பட்டவர்கள் அது தொடர்பான மன உளைச்சல்களும்,சுய பரிசோதனையுமாக இருக்கும்போது, சாதீயம் என்ற காரணத்திற்காக அந்தக் கொலை இக்கதையில் நியாயப்படுத்தப்படுகிறது போலத் தோன்றுவதை என்னால் மறுக்க இயலவில்லை.
மேலும் 'பாஸ்போர்ட்' கதை மூலம் அரசாங்கத்தின் பாஸ்போர்ட் நடைமுறைக்கு மேலதிகமாக இயக்கத்தின் பாஸ் நடைமுறையால் மக்கள் அலைக்கழிந்தமையையும், மக்களிடம் நல்லபேர் எடுப்பது போல் பாஸ் கொடுத்து அனுப்புவதும், பின்னர் இன்னொருவர் மூலம் தடுத்து நிறுத்தி மேலும் பணம் அறவிடுதல் பற்றியும் சற்று எள்ளல் தொனியோடு விளக்கப்படுகின்றது. இக்கதையிலேயே அப்துல் ஹமீது புட்டான் எனும் போலிப் பெயரில் ஏஜென்டினால் அனுப்பப்படுவதைச் சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் கடல் தாண்டிய ஏராளம் பேரின் அனுபவத் தெறிப்பாக வந்து வீழ்கின்றன.
இந்திய அமைதிப்படையின் வரவால் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அவலங்கள் கோமகனின் கதைகளில் ஆங்காங்கே தொனிக்கின்றன. அதனொரு தொனிப்பாகவே 'சொக்கப்பானை' தன்னை வெளிப்படுத்துகிறது. இதில் போராளிகளின் மன உணர்வுகள் துல்லியமாய் வெளிப்படுத்தப்பட்டிருப்பது போலவே, புலம் பெயர் தேசங்களில் புலிகளின் பெயரைச் சொல்லிப் பிரகாசித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வாறு போராடிய ஒரு போராளி கெட்டு நொந்த காலத்தில் அவனைத் தெருவில் நிற்க வைத்து விட்டுப் பின்னர் அவன் இறந்த பின்னர் போஸ்டர் அடித்து ஓட்டுகின்ற கேலிக் கூத்தினை ‘கிளி அம்மான்’ கதையில் சிறப்பாக விளக்கியிருக்கின்றார். இக்கதையிலும் கதாசிரியரின் மனதினுள் இழையோடுகின்ற மனிதாபிமானத்தின் நுண்ணிழையை நம்மால் தரிசிக்க முடிகின்றது.

மேலும் 'அவன் யார்?','விசாகன்' போன்ற கதைகள் வெளிநாட்டில் எம்மவர் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் 'தகிடுதித்தங்'களைப் பற்றிப் பேசுகின்றன. சில செயல்கள் சட்டவிரோதமானவையாகவே இருப்பினும் இங்கிருந்து சென்றவர்களின் மனஉளைச்சல்கள், தொடர்ச்சியாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றிலிருந்து அவர்கள் மீளவேண்டிய தேவைப்பாடு போன்றன காரணமாக இயல்பாகவே அவர்களின் முறையற்ற செயற்பாடுகளின் மீதான நியாயத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இருப்பினும் 'விசாகன்' கதையின் மூலம் இக்கட்டான நிலையில் ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தத்தின் ஊடாக தனது தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் விசாகன் தனது தேவையைப் பூர்த்தி செய்வதுடன் உதவி செய்த பெண்ணுக்கும் அநியாயம் இழைத்து (அவளுடைய உடன்பட்டுடனே ஆயினும்) அவளுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தன்னோடு எடுத்துக் கொள்வதானது, நம்மவர்க்கு ஏன் மற்றவர்கள் உதவ மறுக்கின்றனர் என்பதற்குத் தக்கதொரு சான்றாகிறது. கூடவே அவர்கள் நம்மவர்கள் எனும் எண்ணம் நம்மை நாணித் தலை குனியவும் வைக்கிறது.

'குட்டி பார்பர் ', 'பாமினி', 'றொனியன்' போன்ற கதைகள் நீண்ட காலத்தின் பின் புலம்பெயர் தேசத்திலிருந்து ஊருக்குப் போகின்ற போது ஏற்படுகின்ற எதிர்பார்ப்புக்க்களையும், அந்த எதிர்பார்ப்புக்களின் மீது ஏற்படுத்தப்படும் ஏமாற்றங்களையும் கதாசிரியரின் உணர்வுகளோடு எடுத்துச் சொல்கின்றன. இதிலே கதாசிரியர் நேரடியாகவே தொடர்புபடுவதால் இயல்பான உணர்வோட்டங்களோடு அதனை எழுத்தில் தர முடிந்திருக்கின்றது. போராட்டம் வலுப்பெற்ற காலத்தில் ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து பல்வேறு காலகட்ட அரசியல் பிரிவுகளதும் கருத்து மோதல்களை அவதானித்த வகையில், போர் முடிவுற்று அதனால் நேரடிப் பாதிப்புற்ற பெண்ணின் வாக்குமூலமாக பாமினியைப் பேச வைத்திருக்கிறார். போர் முடியும் வரை ஒரே நேர்கோட்டுப் பார்வையிலிருந்தவர்களின் பார்வைக் கோணம் போர் முடிந்தபின் சற்றே திரும்பி ஆராயத் தலைப்பட்டிருக்கிறது என்பது காலமாற்றத்தின் சாட்சி ஆகும்.

'மனிதம் தொலைத்த மனங்கள்', 'வேள்விக்கிடாய்', 'ஊடறுப்பு', 'தனிக்கதை' என்பன சராசரி யாழ்ப்பாணத்து மனங்களிடையே காணப்படக்கூடிய பலவீனங்களைச் சுட்டிக் காட்டும் கதைகளாகும். திரும்பத் திரும்பப் பலவகைகளில் இந்தக் கதைகள் சொல்லப்பட்டு விட்டாலும் ஒவ்வொரு பேனாவாலும் எழுதப்படும் போதும் அவை அவற்றுக்குரிய தனித்துவத்தோடு வெளிவருவதை மறுக்க முடியாதுதான்.

'மலர்ந்தும் மலராத' சிறுகதை குழந்தையை எதிர்நோக்கும் தம்பதியினருக்கு குழந்தை கிடைக்கிறபோது ஏற்படும் மகிழ்ச்சி அதிகநாள் நீடிக்காமலே அந்தக் குழந்தை பிறக்க முதலே கருணைக்கொலை செய்யும் நிலைக்குள்ளாகும் தம்பதிகளின் மனவுணர்வுகளைப் பேசுகிறது.

மொத்தத்தில் எளிய கிராமியச் சொற்கள் இவரின் பலம். அதே போல புலம்பெயர்ந்த நாடுகளின் நவீன பாவனைச் சொற்களும் இவரது தமிழோடு குழைந்து விளையாடுகின்றன. சாதீய ஆதிக்கம் பிடித்தோரால் நலிவுற்றோர் மீது பிரயோகிக்கப்படுகின்ற தடித்த, இழிந்த வார்த்தைப் பிரயோகங்கள் மனத்தை என்னமோ செய்தாலும் கதையின் உயிர்ப்புக்கு அவை அத்தியாவசியமாகலாம்.
மேலும்,கால,தேச வர்த்தமானங்களை உத்தேசத்தில் கொள்ள வேண்டியது எந்த ஒரு படைப்பாளிக்கும் அத்தியாவசியமான ஒரு விடயமாகும். 1985 இற்கு முந்திய 25 ஆண்டுகளுக்கு முன்னம் நெக்டோ சோடா பருகிய சம்பவத்தைப் படித்தபோது எனக்கு அதிசயமாயிருந்தது. எனக்குத் தெரிந்தவரை எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் 'யானை'ச்சோடாவை மட்டும்தான் கண்ட ஞாபகம்.

இது கோமகனின் முதலாவது தொகுதி.அந்த வகையில் அவர் தனது எழுத்தை மெருகூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு அடுத்த தொகுதி ஒன்று வரும்போது அதைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இன்னும் கூடவாக இருக்கும். இத்தொகுப்பின் தரத்தை விட மேலானதான சிறுகதைகளைத் தர வேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கும். எனவே, எழுத்துலகில் புதிதாகக் கால் பாதித்திருக்கின்ற இந்த எழுத்தாளர் தொடர்ந்து வரக்கூடிய விமர்சனங்களை எதிர்கொண்டு தன் பாதையைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதே என் வேணவாவாகும்.

- தாட்சாயணி –
07/03/2015
 

Wednesday, June 10, 2015

இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம். ஆனால் எல்லா உண்மைகளும் இலக்கியமாகிவிட முடியாது. ( நேர்காணல் ,ஆதவன் கதிரேசர்பிள்ளை)

இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம். ஆனால் எல்லா உண்மைகளும் இலக்கியமாகிவிட முடியாது.


ஆதவன் கதிரேசர்பிள்ளை என்று பலரால் அறியப்படும் ஆதவன் தாயகத்தில்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆதவன் கதிரேசர்பிள்ளை இப்பொழுது தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  இவர் 1980 களில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் தமது பன்முக ஆழுமையை வெளிப்படுத்தியவர்.  ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவன் கதிரேசர்பிள்ளை எம்மிடையே இருக்கின்றார் .1980 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் இவரின் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகி இருந்தது .ஆதவன் கதிரேசர்பிள்ளை தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பின்னர் நோர்வேயில் இருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில்  ஒன்றாகிய " சுவடுகள் " சஞ்சிகையில் " மண்மனம் " என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் சிறுவர் அரங்கு தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது இங்கே குறிப்படத்தக்கது . அத்துடன்  தாயகத்தில் விடுதலைப்  போராளிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலங்களில்  இவர் இயக்கிய  " ஒரு இராஜகுமாரியின் கனவு"  என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதுமையிலும் ஓர் இளைஞனுக்கே உரிய உற்சாகத்துடன் ஸ்கைப் தொடர்பாடல் மூலம் பல்வேறு கட்டங்களில் என்னுடன் நடத்திய நேர்காணல் உங்களுக்காக…………………

நேசமுடன் கோமகன்

*******************************************************


உங்கள் இளமைக்காலம் பற்றியும் , குறிப்பாக உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ  உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

எனது இளமைக்காலத்தையிட்டு தாராளமாகவே சொல்லலாம். கலையும் எழுத்தும் சார்ந்த ஓர் கிராமமான அளவெட்டியில் பிறந்தேன்.  நீங்கள் அறிந்திருக்ககூடும். அளவெட்டியில் மிகப்பெரிய நாதஸ்வர வித்துவான்களும் , தவில் வித்துவான்களும் நிறைந்த சூழலும்,அதிக பிரசங்கிகள் நிறைந்த சூழலும்,  அருகே அருணோதயாக்கல்லூரி மகாஜனாக்கல்லூரி என்று எல்லாமே இலக்கியமும் கலையும் சார்ந்த ஓர் சூழலில் நான் சிறு வயதில் வளர்ந்தேன். அத்துடன் எனது தந்தை ஓர் மிகப்பெரிய தமிழ் ஆசான். அவரிடம் கல்வி பெற்ற மாணவர்கள் உலகெங்கும் பரந்து இருக்கின்றார்கள். அவர் கவிஞர் கதிரேசர்பிள்ளை என்றே எல்லோராலும் அறியப்பட்டிருந்தார். அவரை பண்டிதர் கதிரேசர்பிள்ளை என்றும் அழைப்பார்கள். அவருடைய தமிழ் ஊற்றுத்தான் என்னிடம் வளர்கின்றது. அத்துடன் எனது தந்தை ஓர் நாடகாசிரியரும் சைவப்பிரசங்கியுமாவார். அதனால் எனது தந்தையிடமிருந்தே இந்த தமிழும் நாடகமும் எனக்கு வந்தது என்று சொல்வேன். அத்துடன் எனது வீட்டுக்கு முன்புதான் நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன் வீடு இருக்கின்றது. எப்பொழுதும் அவரின் நாதஸ்வர சாதகத்தில் பூபாள இசையில் தான் எனது விடியல் விடிந்து இருக்கின்றது. இந்த இசையில் கவர்ந்து அவரிடம் சிறுவயதில் புல்லாங்குழல் பயின்றும் இருக்கின்றேன். இவ்வாறு எனது பல்துறை சார் திறமைகள் வெளிப்பட்டதிற்கான ஆரம்ப சூழல் எனது கிராமமான அளவெட்டியும், எனது தந்தை கதிரேசர்பிள்ளையும்தான் காரணம் என்று சொல்வேன் .


நாடகத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை ?


நான் நாடகத்துறையில் நுழைவதற்கு எனது தந்தையே முழுமுதல் காரணியாக இருந்திருந்தார். எனது தந்தையின் "பாரதம் தந்த பரிசு" என்ற புத்தகம். அதில் ஐந்து நாடகங்கள் இருந்தது. மஹாபாரத்ததில் இருந்து ஐந்து வெவ்வேறு கட்டங்களை வைத்து ஐந்து நாடகங்கள் எழுதியிருந்தார் . இந்த ஐந்து நாடகங்களும் அகில இலங்கையில் தொடர்சியாக மேடையேற்றப்பட்டன. அதற்கு சாகித்திய மண்டல விருதும் கிடைத்தது. அதைவிட எனது தந்தையின் சைக்கிள் பார் தான் எனக்கு அதிக பாடங்களைத் தந்தன என்று சொல்லலாம் . என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது பல கதைகளை சொல்லிக்கொண்டு வருவார். எனது 4 ஆவது வயதிலேயே நாடகம் நடிக்க எனது தந்தை பழக்கி விட்டார். நான்கு வயதில் இருந்து இன்று வரை நாடகமே எனது மூச்சுக்காற்றாகியது. அத்துடன் அவர் நாடக வசனங்கள் எழுதும் பொழுதும், காட்சிகளை மற்றயவர்களுக்கு விபரிக்கும் பொழுதும் என்னையே முன்மாதிரியாக வைத்து மாறுபட்ட பரிசோதனைகளை செய்வார் . இதனால் எனது நாடகம் பற்றிய பார்வைகள் கூர்மையடைந்தன.


அந்த நாடக அரங்கமானது  பாரம்பரிய மேடையரங்கமாக இருந்தனவா? இல்லை ஏதாவது நவீனத்துவங்கள் இருந்ததா ?


அவை நவீன நாடக முறையில் இருந்தாலும் கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக மரபும் கலந்தே இருந்தன . நீங்கள் வி வி வைரமுத்துவின் மேடைகளைப் பார்த்தால் அதில் பெரும்பாலும் இசை நாடக மரபைக் கொண்டிருக்கும். பின்னர் டி கே சண்முகம் சகோதரர்கள் "படச்சட்டக அரங்கம்" என்று சொல்லப்படும் மேடை நாடகத்தை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சரித்திர நாடகங்களை படச்சட்டக அரங்கு என்று அழைக்கப்படும் மேடை நாடக வடிவத்தில் எனது தந்தையார் கொடுத்தார். இதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் மனோகரின் நாடகங்கள் உச்சம் பெற்றன .


நீங்கள் யாழ்ப்பாணத்தில் விரிவுரையாளராக  இருந்தபொழுது யாழ் பல்கலைக்கழகம் நாடகத்துறையில் எந்தவிதமான களத்தை உங்களுக்கு உருவாக்கித்தந்தது ?


நான் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவே கடமையாற்றினேன்.1980 களில் என எண்ணுகின்றேன்,பேராசிரியர் கா.சிவத்தம்பியினால் நுண்கலைப் பீடம் முதன் முதலாக யாழ் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்டது . அந்த நுண்கலைப் பீடம் இராமநாதன் கல்லூரியில் இயங்கிக் கொண்டு இருந்தது .பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு, பின்னர் யாழ் பல்கலைகழகத்திலேயே உருவாக்கப்பட்டது .நான் யாழ் பலகலைகழகத்தை விட்டு வெளியேறிய பின்னர்தான்  நாடக அரங்கத்துறை  84-85களில் உருவாக்கப்பட்டது . இது  பேராசிரியர் சிவத்தம்பியின் பின்னர், சிதம்பரநாதன் போன்றோரால் கொண்டு நடாத்தப்படடது .எனவே நான் வெளியேறிய பின்னரே யாழ் பலகலை கழகத்தில் நாடக துறையும், நாடக அரங்கும் வந்ததால் எனக்கு அதில் போதிய அனுபவங்கள் இருக்கவில்லை என்பதே உண்மையாகும் .


திரைப்படங்களில் இருந்து நாடகம் தன்னை எப்படி வேறுபடுத்திக் கொள்கின்றது ?


நாடகம் பார்வையாளர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டது. பார்வையாளர்கள் இல்லாமல் நாடகம் இல்லை. பார்வையாளரையும் பிரதியில் பங்காளராக்கும் சாத்தியங்களைக் கொண்டது நவீன நாடகம் .திரைப்படங்களில் அந்தச் சாத்தியங்கள் இருப்பதில்லை. அதனால்த் தான் ஒரு அறிஞர்  சொன்னார் "நாடகம் ஒருமுறை நிகழ்த்தப்பட்டாலும் செத்து விடுகின்றது என்று ". உண்மைதான் அது .திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டாலும் தன்னை புதிது புதிதாகப் புதுப்பித்துக்கொள்ளும் சாத்தியம் நாடகத்தில் இருக்கின்றது .அச்சாத்தியம் திரைப்படங்களில் இருப்பதில்லை. ஒருமுறை நாடகம் நடித்ததும் அது செத்து விடும் .பின் நாளைக்கே அந்த நாடகத்தைப் போட்டாலும் அது புதிய களம் ,புதிய பார்வையாளர்கள் என்று புதிய உணர்வுகளைக் கொடுக்கும். இதனால்த்தான் ஒரு நாடகம் மூவாயிரம் ,நான்காயிரம் தடவைகள் மேடையேற்றப்பட்டாலும் ஒவ்வரு தடவையும் அது புதிய உணர்வுகளையே கொடுக்கும் .

தாயகத்தில் இருந்து  புலம் பெயர்ந்த பின்னர் நாடகத்துறையில் உங்கள் நோக்கம் வெற்றியடைந்ததாக எண்ணுகின்றீர்களா ?

அதற்கு முதல் சில விடையங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் இந்த கேள்வி முதலாவது கேள்வியுடன் தொடர்புபட்டு இருப்பதால் தாயகத்தில் அளவெட்டியில் இருந்தே ஆரம்பிக்கின்றேன். அளவெட்டியில் எனக்கு மூத்த தலை முறையினரான எனது தந்தையார் கதிரேசர்பிள்ளை, மஹாகவி அதன் பின்னரான இளைய தலைமுறையினரான எனது அயல் வீட்டைச் சேர்ந்த சேரன், நான், கனடாவில் இருக்கும் புராந்தகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து "ஞாயிறு படைப்பாளிகள் வட்டம்" ஒன்றை உருவாக்கியிருந்தோம். அதில் "ஞாயிறு" என்ற கையெழுத்து சஞ்சிகை ஒன்றை நடாத்தினோம். அதன் விரிவாக்கமாக பல கலை நிகழ்ச்சிகளை செய்யத்தொடங்கினோம். அதில் இப்பொழுது இருக்கின்ற இளவாலை விஜேந்திரன், இரவி அருணாச்சலம், பாலசூரியன் , லண்டனில் வாழும் சிறந்த இசையமைப்பாளர் பராபரன் போன்றோர் எனது நாடகப்பட்டறையில்  இருந்தார்கள். அப்பொழுது "சுமைகள்" என்றதொரு நாடகத்தை போட்டோம் . அது ஓர் குறியீட்டு வகையிலான நாடக வடிவம் .அது அப்பொழுது பெரும் வெற்றியீட்டி பலரால் பேசப்பட்ட ஓர் நாடகமாகும். அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருக்கும் மாவை நித்தியானந்தன் எழுதிய "திருவிழா " என்ற அரசியல் நாடகத்தைப் போட்டோம். அதில் தமிழர் விடுதலைக்கூட்டணியையும் பாராளுமன்றத்தையும் அவர்களின் பொட்டுக்கேடுகளையும் சனங்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக மிகவும் காரசாரமாக விமர்சிக்கப்படுவதே அந்த நாடகத்தின் கருப்பொருளாகும். அது ஓர் தெருநாடக வகையைச் சேர்ந்தது . முதன் முதலில் தாயகத்தில் "திருவிழா"  தெருநாடகத்தை உருவாக்கியது நான் தான் .அதன் பின்னரே "மண் சுமந்த மேனியர்"   தெருநாடகம் போடப்பட்டது .


புலம் பெயர் சூழலில் நவீன நாடகங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளனவா ?அவற்றின் பாதிப்புகள் பற்றிச் சொல்லுங்கள் ?


நாடகங்கள் பார்வையாளர்களுடன் நேரடியான தொடர்புகள் இருப்பதால் அது அன்றாட பிரச்சனைகளின் வடிகாலாகும் தன்மை இருக்கின்றது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை நேரடியாக மக்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் .போறம் தியேட்டர் ,இன்சிவில் தியேட்டரில் பார்வையாளர்களும் நாடகத்தில் பங்கேற்பார்கள் .ஆகவே இறுக்கமான புலம் பெயர் சூழலில் நாடகங்கள் இதனால் அவசியமாகின்றன .

இன்றைய புலம் பெயர் நாடகங்களின் போக்கு எப்படி இருக்கின்றது ?

நாடகங்கள் மிகக் குறைவாகவே மேடையேறுகின்றன. அண்மையில் கனடாவில் வெளிவந்த அரங்காடல் ,மற்றும் மனவெளி நாடகங்களின் செயற்பாடுகள் நம்பிக்கையளிபனவாக இருக்கின்றன .

தெரு நாடகத்துக்கும் பாரம்பரிய நாடகத்துக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசங்கள் உள்ளன ?

இதை சற்று விரிவாகப் பார்த்தால், "தெருக்கூத்து" என்பது வேறொரு வகையானதாகும் .அது கூத்தின் அடிப்படையில் உருவாவது .ஆனால் தெருநாடகத்தில் நாங்கள் போர்றம் தியேட்டர் (Forum Theater) வடிவில் நேரடியாக வீதியில் இறங்கி எங்கள் செய்திகள் அல்லது சங்கதிகளை சனங்களுக்கு சொல்லுவோம். அதை,  நவீன முறையாகவோ, இசை வடிவாகவோ, ஆடல் பாடல் மூலமாகவோ, சிலை போல் நிற்றல் மூலமாகவோ ,நாங்கள் எந்த வடிவத்திலும் சொல்லலாம்.இதன் அடிப்படை செய்தி  என்னவென்றால், சனங்களுக்கு ஓர் விழிப்புணர்வை அல்லது எச்சரிக்கையை கொடுப்பதாகும். இதை நாங்கள்  தெல்லிப்பளை சந்தி, மருதனாமடம் சந்தி போன்ற சனங்கள் கூடும் இடங்களில் செய்தோம்.


தமிழகத்தை சேர்ந்த நாடகத்துறையை சேர்ந்தவரும் நடிகருமான  நாசர் உடனான உங்கள் தொடர்பு பற்றி சிறிது கூறுங்கள் ?


1985 களில் நான் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழ் நாட்டில் இருந்தபொழுது பிரச்சாரத்துக்கும் நிதி திரட்டுவதற்கும் என்னை நாடகம் போடும்படி தேசியத்தலைவர் பிரபாகரன்  என்னுடன் நேரிடையாக பேசியிருந்தார் .அப்பொழுது கவிஞர் விக்கிரமாதித்தன்  உடாக பரிக்க்ஷா ஞானியின் தொடர்பு கிடைத்தது. அப்பொழுது அவர் தான் நாசர், பாலாசிங், ப்ரீதம் சர்க்கரவர்த்தி ஆகியோர் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வார்கள் என்று எனக்கு கூறியிருந்தார். நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் மூலமாகவே நான் "சங்காரமே என் று…….." மூன்று மணித்தியால நாடகத்தைப் போட்டேன். அதுவும் பலரால் பேசப்பட்ட ஓர் நாடகமாகும். அப்பொழுது நாசர் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முயன்று கொண்டிருந்த காலம். அப்பொழுது கே.பாலச்சந்தரின் "கலியாண அகதிகள் " என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அவர் தனது திரைப்படப் படப்பிடிப்புகளை முடித்து விட்டு, செங்கல்பட்டில் இருந்து எனது நாடகத்துக்கு ஒத்திகை பார்க சென்னைக்கு வருவார். அவர் அந்த நாடகத்திற்காக முழு ஈடுபாட்டுடன் பங்காற்றினார் .அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் குடும்ப நண்பர்களாகவும் இருக்கின்றோம் .


இன்றைய நாட்களில் சிறுவர் இலக்கியம் என்பது முதன்மை பெறுகின்றது. இதில் சிறுவர் அரங்கு எத்தகைய இடத்தை பிடிக்கின்றது ?

சிறுவர் அரங்கம் பற்றி நிறைய ஊடகவியலாளர்களுடன் கதைத்திருக்கின்றேன். அத்துடன் பாரிஸில் இருக்கும் அரியநாயகம் அவர்களால் நடாத்தப்படும் "உடல்"  சஞ்சிகையில், "உலகமயமாதலும் சிறுவர் அரங்கு எதிர்நோக்கும் சவால்களும்" என்ற தலைப்பில் ஓர் கட்டுரை தொடர்ச்சியாக எழுதிவந்தேன். என்னைப்பொறுத்தவரையில் சிறுவர் அரங்கு தமிழர் மத்தியில் மிக மிகப் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழர் மத்தியில் சிறுவர் அரங்கில்  நவீன உலக ஒழுங்குகளை தெரியாதவர்களும், நவீன அரங்கு பற்றிய சரியான புரிதல்கள் இல்லாதவர்களும் தான் சிறுவர் அரங்கை செய்துகொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக ஓர் உடல் பருத்த சிறுவனாக இருந்தால் அவனை "பீமன்" கதாபாத்திரத்துக்குப் போடுகின்றார்கள். அத்துடன் உலகமயமாதலினால் சிறுவர்களுக்கு கூடுதலாக ஊடகங்கள், கணணி விளையாட்டுக்கள், ஸ்பைடர் மான், ஹரி போட்டர்,சுப்பர் மான் போன்ற நிகழ்சிகளை தொடர்ச்சியாக வழங்கி சிறுவர்களை உடற் பயிற்சியற்றவர்களாக்குகின்றன. இப்படியான சிறுவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான உடற்பயிற்சிகளை கொடுப்பது என்பது மிகப் பெரும் சவால்களைக் கொண்டது. அந்தப் பணியை பெரும்பாலும் சிறுவர் அரங்கை நடாத்துபவர்கள் செய்வதில்லை. இதை தமிழர் சமூகத்தில் மிகப்பெரிய பின்னடைவு என்றே தான் சொல்வேன். நான் சிறுவர் அரங்கை  ஓர் சவாலாக எடுத்து முன்னெடுப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுப் பல சிறுவர் அரங்கை தமிழர்களுக்கும் இங்கு வாழும் டெனிஷ் சிறுவர்களுக்கும் நிகழ்த்தியிருக்கின்றேன். அத்துடன் நோர்வேயிலும், பாரிஸில் சுபாசுடன் சேர்ந்தும், சுவிஸில் பல சிறுவர் அரங்குகளையும்  நிகழ்த்தியிருக்கின்றேன். ஆனாலும் தமிழர் சூழலில் சிறுவர் அரங்கமானது மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதுதான் இந்த நிலமைக்கு இன்னுமோர் முக்கிய காரணமுண்டு அது என்னவென்றால்  சிறுவர் அரங்கு பற்றிய விழிப்புணர்வானது கடும் வறட்சி நிலையிலேயே சிறுவர் அரங்க ஆசிரியர்களுக்கு உள்ளது. சிறுவர் அரங்காடலை எவ்விதமாக நிகழ்த்துகின்றீர்கள் ?

சிறுவர்களின் மன ஆழுமையை விருத்தி செய்யும் படச்சட்டக அரங்கைத் தவிர்த்து அரங்கம் பார்வையாளர்களையும் உள்ளடக்கிய அரங்கமாகவே இருக்கும் .உதாரணமாக காடு இருக்கின்றது என்றால் அந்த அரங்கம் முழுவதையுமே காடாக்கி வைத்திருப்பேன். பார்வையாளரிடைடேயும் மரங்கள் இருக்கும் .

இன்றைய காலகட்டத்தில் தாயகத்திலோ இல்லை புலம்பெயர் தேசங்களிலோ நாடகத்துறை வளர்ச்சியடைந்துள்ளதா ?


உண்மையாக தாயகத்தில் தமிழர் நாடக அரங்கத்துறைக்கு உண்மையான அரச அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இங்குள்ள அரசுகள் நாடக அரங்குகளுக்கு அரச அங்கீகாரத்தையும் கொடுத்து அதற்கு வேண்டிய நிதி உதவிகளையும் செய்கின்றன என்பது முக்கியமான விடயம். அத்துடன் இங்குள்ள அரசுகள் நாடகத்துறைக்கென்றே பிரிவுகளை உருவாக்கி நிதிஉதவிகளையும் செய்கின்றன. இது ஒருபுறமிருக்க புலம் பெயர் தேசங்களில் ஒரு சிலரின் முயற்சியினால்  நாடகக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக சுவிஸில் தமிழர் நாடக அரங்கக் கல்லூரி உருவாக்கப்படாது. இக்கல்லூரியை அன்ரன் பொன்ராஜாவே உருவாக்கினார் பின்னர் நானும் அவருடன் இணைந்து கொண்டேன். அதில் பன்னிரண்டு மாணவர்கள்  தெரிவு செய்யப்பட்டு  மூன்று வருட நாடக அரங்கக் கற்கை நெறி வழங்கப்பட்டது.இந்தக் கற்கை நெறியை ஓர் பெரும் சவாலாக எடுத்து மேலைத்தேய நாடக அரங்குகளுக்கு ஈடான ஓர் பயிற்சிப்பட்டறைகளாக தமிழர் நாடக அரங்கக் கல்லூரியினால் வழங்கப்பட்டது. தாயகத்தில் விடுதலைப்புலிகளின் ஆழுகை மேலோங்கியிருந்த காலத்தில் நாடக அரங்கானது மிகவும் உச்சநிலையடைந்து காணப்பட்டது என்றுதான் சொல்வேன். இதை வேறுவடிவமாகச் சொல்வதானால், இந்த உச்ச நிலையை, " மண்சுமந்த மேனியருக்கு முற்பட்ட காலம்". " மண்சுமந்த மேனியருக்கு பிற்பட்ட காலம்"  என்று வரையறை செய்துகொள்ளலாம். அந்த நேரங்களில் 4 வருடங்களாக வன்னியில் இருந்தேன். அரங்கச் செயற்பாடுகளிலும், சிறுவர் அரங்கங்களையும் இந்தக்காலங்களில் அங்கு நடாத்தினேன். ஆனால் இங்கு புலம்பெயர் நாடுகளில் தமிழர் சமூகத்திற்கு தியேட்டர்கள் பெரிதாக இல்லையென்றே சொல்லலாம். அதுவும் சுவிஸ் நாடக அரங்கு கல்லூரிக்குப் பின்னர் அழிந்து விட்டன என்றுதான் சொல்வேன். ஆனால் சுவிஸில் உள்ள விஜயன், பற்றிக் போன்றவர்கள் முன்னெடுத்துச் செய்கின்றார்கள். இதில் பற்றிக் நாடக அரங்கில் முதுகலை மானிப்பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .தாயகத்தில் திருமறைக்கலாமன்றம், கனடாவில் மனவெளியரங்காடல், லண்டனில் பாலேந்திரா போன்றார் செய்தாலும் விஜயன், பற்றிக் போன்றோர் போல "சீரியஸ் நாடக அரங்காடலை"  செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்


தாயகத்தில் அவைக்காற்றுக் கலை கழகத்தின் செயற்பாடுகள் நாடக அரங்கில்  எப்படியான மாற்றத்தை உருவாக்கியிருந்தன ?


தாசியஸ், பேராசிரியர் சண்முகலிங்கம் மாஸ்ரர், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் " நாடக அரங்க கல்லூரி" என்று ஒரு குழுவாகவும், நிர்மலா நித்தியானந்தன், நித்தியானந்தன், பாலேந்திரா ஆகியோர்  " அவைக்காற்றுக் கலை கழகம் " என்று இன்னுமொரு குழுவாகவும் இயங்கினார்கள். அவைக்காற்றுக் கலை கழகம் பல மொழிபெயர்ப்பு நாடகங்களை தந்தது. அத்துடன் அவைக்காற்று கலை கழகத்தின் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், நன்கு அறியப்பட்ட அரங்கத்தையும், பல மொழி பெயர்ப்பு நாடகங்களையும், நாடக அரங்கில்  நவீன உத்திகளையும் தமிழுக்குக் கொண்டுவந்தது மிகப்பெரிய விடயமாகும் .


முன்னய காலங்களில் இருந்த நாடக வடிவத்துக்கும் இப்போதுள்ள நாடக வடிவத்துக்கும் இடையில் ஏதாவது வித்தியாசங்களை  உணருகின்றீர்களா?


ஆம்…….. நிச்சயமாகப் பாரிய வித்தியாசங்களை உணருகின்றேன். அரங்க வகைகளில் பாரிய வளர்ச்சி இப்பொழுது வந்துள்ளது. தமிழர்களுக்கு மிகப்பரிச்சயமான கூத்து, வடமோடி, தென்மோடி போன்ற பாரம்பரிய அரங்க வகைளும். பின்னர் வந்த வி.வி. வைரமுத்துவின் இசை நாடக வடிவும், அதன் பின்னர் வந்த மேலைத்தேய நாடக அரங்குகள் நவீன உத்திகளுடன் இறக்குமதியாக்கப்பட்டன. அதில் முக்கியமாக நவீன நாடக அரங்க உத்திகள் அவைக்காற்று கலை கழகத்தின் வழியாகவும்,தாயசிஸ் , பேராசிரியர் சண்முகலிங்கம் மாஸ்ரறினுடாகவும்  தமிழர் மத்தியில் நுழைந்தன. இப்பொழுது பேராசிரியர் மௌனகுரு இதை மேலும் வழிநடாத்தி செல்கின்றார்.


விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கடமையாற்ரியாதாக குறிப்பிட்டீர்கள் அது பற்றிய உங்கள் அனுபவங்களை  விளக்கமாக சொல்ல முடியுமா?


விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகட்டங்களில் எனக்கு சகல விடுதலை அமைப்புகளினுடனும் தொடர்புகள் இருந்தன. அனைத்து விடுதலை அமைப்புகளையும் ஓர் அணியினுள் கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன் . நான் முழுமையாக விடுதலைப்புலிகள் அமைப்பில் நுழைந்த காலகட்டம், திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட  13 இராணுவத்தினரின் கண்ணிவெடிதாக்குதலின் பின்னரே.  அப்பொழுது நான் அந்த தாக்குதல் சம்பவத்தில் 17 ஆவது சந்தேகநபராக இலங்கை குற்றப்புலனாய்வுத்துறையால் தேடப்பட்டேன். ஏறத்தாழ ஐந்து தடவைகள் பலாலி வீதியில் இருந்த எனது வீடு சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னர்  நான் தலைமறைவாகி விட்டேன். அப்பொழுது யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த பண்டிதர், வண்டி மூலம் என்னை சென்னைக்கு அனுப்பி விட்டார். பின்னர் அங்கிருந்து இயங்கினேன். இவைகள் எனது ஆரம்பகால அனுபவங்கள். அதன் பின்னர் தொடர்ந்து அமைப்பில் கடமையாற்றினேன்.


இன்றைய இலக்கிய உலகில் உண்மை பேசுவோர் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்படுகின்ற ஓர் சூழல் காணப்படுகின்றது. இது பற்றிய உங்கள் பார்வை என்ன ? 


இந்தக் கேள்விக்கான விடையை நான் தத்துவார்த்த ரீதியாகவே அணுக விரும்புகின்றேன். முதலாவதாக இலக்கியம் என்பது உண்மையானதா ? அல்லது புனைவு என்பது உண்மையானதா ? புனைவுக்கும் இலக்கியத்துக்கும் இடையிலான இடைவெளியை, ஓர் நூல் இடைவெளிதான் வேறுபடுத்துகின்றது. கண்ணுக்குத்தெரியாத சில எல்லைகளினால் புனைவும், இலக்கியமும் பின்னிப்பிணைந்து இருக்கின்றது. இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம். ஆனால் எல்லா உண்மைகளும் இலக்கியமாகிவிட முடியாது. உண்மைகள்தான் சொல்லப்படவேண்டுமென்றால் எல்லா உண்மைகளையும் ஓர் ஆவணமாக நாங்கள் சொல்லிவிட்டுப் போகலாமே ? எனவே இங்கு இலக்கியத்துக்கு ஓர் புனைவு என்பது அத்தியாவசிமாகின்றது. ஆனால் நவீன இலக்கிய வரலாற்றில் எல்லாவற்றையும் சேர்த்து ( உண்மை, புனைவு ) பின்நவீனத்துவத்தின் கட்டுடைத்தல் மூலம் நிகழ்கின்றது .ஆனால் நாங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். புனைவு இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா ? அல்லது உண்மை இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா ? யதார்த்த இலக்கியம் என்றால் என்ன ? புனைவு இலக்கியம் என்றால் என்ன ?என்ற கேள்விகளுக்கு நாங்கள் தத்துவார்த்த ரீதியாக மிகச்சரியான பதில்களை தேடாது உங்கள் கேள்விக்கான விடையென்பது மிகவும் கடினமானது .


போரியல் இலக்கியம் பற்றிய உங்கள் பார்வை என்ன ?


போரியல் இலக்கியம் என்ற சொல்லாடல் தவறுதலாக புரிந்து கொள்ளப்படலாம். போரை எப்படி நடாத்துவது என்பது ஒருவகை ( மில்ட்டரி ரைற்றிங்ஸ் , military writings), அடுத்தது போர் பற்றிய இலக்கியம் (The literature of war ). இங்கே நீங்கள் எதைப்பற்றிக் கேட்கின்றீர்கள் என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. எனினும் சில விடையங்களை சொல்கின்றேன் . போராளிகள் எல்லோரும் எழுதுவது எல்லாம் போரியல் இலக்கியமாகாது. போரியல் இலக்கியம் எழுதுவதற்கு போராளியாகத்தான் இருக்கவேண்டும் என்ற சிறப்புத்தகமை தேவையில்லை. யுத்தத்தின் விழுமியங்களையும், அதனால் வருகின்ற சோகங்களையும், அது கூறும் இலட்சியத்தையும் எழுதுவதான் போரியல் இலக்கியம் என்று போரியல் இலக்கியவாதிகள் கருதினால், மார்க்சிம் கோர்க்கியின் " தாய் " நாவலை எந்த வகையில் சேர்ப்பது ? அதுவும் ஓர் போரியல் இலக்கியமே. ஆனால் சில பரபரப்புக்களுக்காக, ஒரு பஷனுக்காக, அல்லது தங்களை எல்லோரும் வித்தியாசமாகக் கவனித்து முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு சிலர் போரியல் இலக்கியம் எழுதுகின்றார்கள். ஆனால் அது போரியல் இலக்கியமாக இருக்குமா ? என்பது எனக்குத் தெரியவில்லை. அதேவேளையில் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். அநேகமான போரியல் இலக்கியங்கள் போலிகளின் இலக்கியமாகவே எனக்குத்தெரிகின்றது .


ஈழத்திலும் சரி புகலிடத்திலும் சரி உங்கள் பார்வையில் குறும்படத்துறை வளர்ச்சியடைந்துள்ளதா ?


தாயகத்திலும் சரி புகலிடத்திலும் சரி மிக நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது என்றுதான் சொல்வேன். அதிலும் தாயகத்தில் விடுதலைப்புலிகள் உச்சநிலையில் இருந்த பொழுது குறும்படத்துறை  நவீன உத்திகளுடன் அதி உயர் உச்சநிலையை அடைந்து இருந்தது. அதிலும் குறிப்பாக "செவ்வரத்தம் பூ" என்ற குறும்படம் பிரபல்யமானது. அடுத்தது எனது இயக்கத்தில் வந்த " ஒரு ராஜகுமாரியின் கனவு " பேசப்பட்ட குறும்படமாகும். அத்துடன் பிரபல இயக்குனர் மகேந்திரன் தாயகத்தில் வந்து நின்ற காலகட்டங்களில் அவர் இயக்கத்திலும் பல குறும்படங்கள் வெளிவந்தன. இப்பொழுது புகலிடத்தில்  குறும்படத்துறை மிகவும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இருக்கின்றது.


நீங்கள் தாயகத்தில் "ஒரு இராஜகுமாரியின் கனவு"என்ற குறும்படம் எடுத்துள்ளீர்கள் அது பற்றிய உங்கள் அனுபவங்களை கூறமுடியுமா ?


விடுதலைப்புலிகளின் நிதர்சனம் மகளிர் பிரிவுக்காக "ஒரு இராஜகுமாரியின் கனவு " குறும்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்குப் பொறுப்பாக நிதர்சனம் மகளிர் பிரிவில் இருந்த இசைப்பிரியா இருந்தார். அப்பொழுது இசைப்பிரியா என்னிடம் ஆங்கிலம் பயின்று கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து இந்த படத்தை செய்தேன். ஆனால் அந்தக்குறும்படத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றின. நான் எதை எதிர்பார்த்து அந்த படத்தை செய்தேனோ அது முழுமையாக நடைபெறவில்லை என்றுதான் சொல்வேன் . உதாரணமாக அதன் கதாநாயகி ஓர் சிறுவயதுப்பிள்ளை .அவர் படப்பிடிப்பின் பொழுது  பூப்படைந்து விட்டார் . அதனால் அவருக்கு ஏலவே நான் தயாரித்த சில வசன அமைப்புகளை மாற்ற வேண்டியதாகிப் போய் விட்டது. அத்துடன் நான் நின்றதற்கான விசா அனுமதி தாயகத்தில் முடிவடைந்து  விட்டது. நான் மீண்டும் டென்மார்க் திரும்ப வேண்டிய சூழ்நிலை. இப்படியான நடைமுறை சிக்கல்கள் அந்தப் படத்துக்கு இருந்தன. சுருக்கமாக சொன்னால், நானும் சரி இசைப்பிரியாவும் சரி எதிர்பார்த்த அளவுக்கு செம்மையாக அந்த படத்தை முடிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்."ஒரு ராஜகுமாரியின் கனவு " குறும்பட உருவாக்கத்தில் நாடகத்தின் பாதிப்பு அதிகமாகத் தெரிகின்றது .குறும்படம் காட்சி ஊடகமல்லவா ?

ஒரு ராஜகுமாரியின் கனவை  குறும்படமாக எடுத்திருந்தாலும் மேலோடி டிராமா தன்மையே அதிகமாக வெளிப்பட்டிருக்கின்றது  என்றுதான் சொல்வேன் .அதை எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அது நல்ல குறும்படத்துக்கான சாத்தியத்தைக் கொடுக்கவில்லை .

நடந்து முடிந்த ஒஸ்லோ இலக்கிய சந்திப்பில் உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது ?

நடந்து முடிந்த ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு என்னைப் பொறுத்தவரையில் மிக நன்றாகவே இருந்தது. அதில் என்னால்  பலதரப்பட்ட ஆக்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. அந்தச்சந்திப்பில்  பலதரப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. சுருங்கக் கூறின் ஒஸ்லோ இலக்கிய சந்திப்பு எனக்குப் பயனுள்ளதாகவே இருந்தது.


இந்த இலக்கிய சந்திப்புக்கள்  ஓர் ஸ்தாபனமயப்டுத்தப்பட்ட ஓர் குழும செயல்பாடாகவும் எல்லாத்தரப்பையும் உள்வாங்கி செயற்படவில்லை. என்ற காட்டமான விமர்சனம் உண்டு. இது பற்றிய உங்கள் கருத்து என்ன ?


முதலில் நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். இந்த இலக்கியச் சந்திப்பின் ஆரம்ப காலப்பகுதிகள் எனக்குப் பரிச்சயமில்லாதவை. பதினாறாம் இலக்கியச் சந்திப்பிலும், பின்னர்  லண்டனிலும், அதன் பின்னர்  பேர்ளினிலும்  இப்பொழுது ஒஸ்லோவிலும் நேரடியாக கலந்து கொண்டிருக்கின்றேன். இதில் இருக்கின்ற நண்பர்கள் எல்லோருமே எனக்கு ஏலவே பரிச்சயமானவர்கள் என்ற போதிலும் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு நான் தயங்கியது கிடையாது. இந்த இலக்கியச் சந்திப்பில் உள்ளவர்கள் பல குழுக்களாக உடைந்துபோனார்கள் என்று அறிகின்றேன். இவர்களுக்குள்ளேயே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் இவர்களால் வருங்காலத்தில் காத்திரமான முன்னெடுப்புகளை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும் என்றே எண்ணுகின்றேன். அத்துடன் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்பவர்கள் ஓர் திறனாய்வை செய்து முடித்தன் பின்னர் வருகின்ற கலந்துரையாடல்களில் அவர்களின் திறனாய்வை முன்னிலைப்படுத்தாது அவர்களின் பின்புலங்களை மனதில் வைத்துக்கொண்டே (துணைக்குறிப்பு, sub text ) திறனாய்வு செய்தவரை நோக்கி கேள்விகள் வருகின்றன. இப்படியான போக்குளால் இந்த இலக்கியச் சந்திப்புகள் இலக்கிய வெளியில் ஓர் காத்திரமான முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


எமது தாயகவிடுதலைப்போராட்டம் ஏறத்தாள முப்பது வருடங்களைக் கொண்டது. அந்த விடுதலைப்போராட்டம் வரலாறுகாணாத வகையில் தோல்வி அடைந்தமைக்குக் காரணம்  "விடுதலைப்புலிகளின் அணுகு முறையே " என்றவோர் காட்டமான விமர்சனம் உண்டு. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?


இதுவும் ஓர் காரணமே ஒழிய, விடுதலைப்புலிகளின் அணுகுமுறைதான் முழுமுதல் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். மாற்றமடைந்த சர்வதேச ஒழுங்குகள், அமெரிக்க அரசின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் விடுதலை அமைப்புகுகளுக்குக் கிடைத்த பயங்கரவாத முத்திரை குத்தல்கள், இந்தியாவின் பிராந்திய நலன்கள், அத்துடன் சீனாவின் சந்தைப்படுத்தல் விஸ்தரிப்புகள் என்று  பல முக்கிய காரணிகள் எமது முப்பதுவருடகால தேசிய விடுதலைப் போரின் தோல்விக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் (இந்தியா, சீனா, அமெரிக்கா ) சதியினாலேயே எமது தேசிய விடுதலைப்போராட்டம் தோல்வியடைந்தது .


இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றீர்களா ?


தமிழர்களுக்கு ஓர் நிரந்தரமான தீர்வு இப்போதுள்ள அரசியல் சூழலில் கிடைக்கும் என்று நான் நிச்சயமாக நம்பவில்லை. வெளிப்படையாகச்சொன்னால் தமிழகத்தில் இருக்கின்ற குப்பைவாளி அரசியல்கள் தான் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியலை  முன்னெடுப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் ஓர் தீர்வை ஏற்படுத்தி தரமுடியாது. அப்படி ஓர் தீர்வை ஏற்படுத்திக்கொடுத்தால் அது அவர்களுக்கான அரசியல் இருப்புகளை  இருட்டடிப்பு செய்து விடும் என்பதே உண்மையானது. வேறுவகையில் சொன்னால் ஒரு கன்னை அடிக்கிற மாதிரி அடிக்க, மறு கன்னை அழுகின்ற மாதிரி அழுகின்றது அவ்வளவே. இதனால் பயனடைவது அடக்கபடும் அல்லது நசுக்கப்படும் தேசிய இனம் அல்ல.

" they don't want to loose the problem they want to use the problem "

ஆக்காட்டி சஞ்சிகைக்காக ,

கோமகன் 

18 சித்திரை 2015

Friday, June 5, 2015

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 08

சுருக்கு சுறுக்கர் பாகம் 8 


ஐமிச்சம் ஐயம்பிள்ளையும் அம்மாக்குஞ்சியும்மெய்யே பிள்ளையள்......... இதை ஒருக்கால் கேளுங்கோவன். இப்ப ரெண்டு மூண்டு நாளைக்கு முன்னம் ஒருத்தனும் ஏன் நாயே எண்டு கேக்காத நேரத்திலை முகப்புத்தகத்துக்கு நான் மண் எடுத்துக்கொண்டிருந்தன். அப்ப அதிலை ஒரு விசையத்திலை எல்லாரும் லைக்கி மோர் கடைஞ்சு கொண்டு இருந்தினம். நானும் ஐமிச்சத்திலை என்ன ஏது எண்டு எட்டிப்பாத்தால் அங்கை இந்த பேரன் பேத்தியளை எப்பிடி அவையின்ர அம்மம்மாமார் பாக்கினம் எண்ட மாற்ரர் ஓடிக்கொண்டிருந்திது.

ஐயம்பிள்ளையருக்கு உந்த பொசிப்பெல்லாம் சிவசத்தியமாய் கிடைக்கேலை பாருங்கோ.அவற்றை அம்மம்மாவும் அம்மப்பாவும் ரிக்கெட் எடுத்துப்போட்டினம். ஆனால் ஐயம்பிள்ளை உறுக்கிணிக்குழுவனாய் இருக்கேக்கை அவற்றை பூட்டியோடை தான் சிங்கன் வாலாயம். அவாவின்ரை பேர் சிதம்பரம் எல்லாரோடையும் கொழுத்தாடு பிடிக்கிற கிழவி இவரோடை மட்டும் ஒரு தனகலும் இல்லாமல் ஒட்டெண்டால் அப்பிடியொரு பிலக்காய்பால் ஒட்டு.


அந்த நேரத்திலை ஐயம்பிள்ளைக்கு ரெண்டு எளிய பழக்கம் இருந்தீச்சுது. ஒண்டு விரல் சூப்பிறது. மற்றது கேட்டு கேள்வியில்லாமல் கண்ட கடியளையும் வாயுக்கை போடிறது. எல்லாரும் தான் சின்னிலை விரல் சூப்பிச்சினம். ஆனால் ஐயம்பிள்ளையின்ரை ஸ்ரைல் வேறை. வலக்கை நடுவிரல் ரெண்டும் வாயுக்கை கிடக்கும். இதாலை ஐயம்பிள்ளையின்ரை ரெண்டு விரலும் சூம்பி பாக்க அரயண்டமாய் கிடக்கும். அதோடை அவற்றை அடுத்த வேலை, அம்மாக்குஞ்சியின்ர சொருசொருத்த கையிலை துப்பலை நல்லாய் பூசிப்போட்டு, அவாக்கு பக்கத்திலை படுத்துக்கொண்டு காதை கையிலை வைச்சு எடுக்க "டொக் " எண்டு ஒரு சத்தம் வரும். இப்பிடி காதை அம்மாக்குஞ்சியின்ரை கையிலை வைச்சு வைச்சு டொக் சத்தம் கேக்கிறதிலை ஐயம்பிள்ளைக்கு ஒரு திறில். இதுகளை பாத்த அம்மாக்குஞ்சிக்கு கடும் கடுப்பு எல்லாரையும் தூசணத்தாலை பேசிற குஞ்சிக்கு இந்த உறுக்குணிக் குழுவனோடை றாட்ட மனம் வரேலை. உறுக்குணிக் குழுவனுக்கு நாலுகதையளை பொழிப்பாய் சொல்லி வேப்பம் எண்ணையை பூசி விட்டுது. ஐயம்பிள்ளைக்கு பேந்து விரல் சுப்பிற நோக்கம் சிந்தனையள் வரேலை கண்டியளோ.

உப்பிடித்தான் ஒருக்கால் கண்டதையும் வாய்க்குள்ளை போடிற அழுகல் பழக்கத்தாலை ஒருநாள் அம்மாகுஞ்சிக்கு கிட்ட படுத்திருந்த ஐயம்பிள்ளை அம்மாக்குஞ்சியை உச்சிப்போட்டு பக்கத்திலை கைவிளக்கிலை கிடந்த மண்ணெண்ணையை வாய்க்குள்ளை விட்டு குடிச்சுப்போட்டார். என்ன ஐயம்பிள்ளையின்ரை அசுமாத்தத்தை காணேலை எண்டு பாத்த அம்மாக்குஞ்சி, மண்ணெண்ணை ஐயம்பிள்ளையின்ரை வாயிலை மணக்க ஊரைக்கூட்டி ஒப்பாரி வைச்சு ஆளை ஆசுபத்திரியிலை கொண்டு போய் பிழைக்க வைச்சா. இப்பிடியெல்லாம் அன்பாய் பாசமாய் இருந்த அம்மாக்குஞ்சி, ஐயம்பிள்ளை கொஞ்சம் வெடிச்சு வளந்து வர ஒரு நாள் சேடம் இழுத்து செத்துபோனா. அப்ப கிட்ட முட்ட அவாக்கு ஒரு 98 வயசு இருக்கும். அம்மாக்குஞ்சி செத்துப்போனது ஐயம்பிள்ளைக்கு செரியான மனத்தாக்கமாய் போச்சுது. இண்டைக்கும் ஐயம்பிள்ளையர் வட்டுறுட்டிதலையோடை ஹண்ட்சம்மான போய் எண்டால் அதுக்கு ஆம்மாக்குஞ்சியின்ரை வளப்பு விறுத்தம் தான் கண்டியளோ. அம்மாக்குஞ்சியின்ரை நினைப்பு எப்பவும் ஐயம்பிள்ளைக்கு பிலாக்காய்பால் மாதிரி ஒட்டிக்கொண்டுதான் கிடக்கும்.

ஐமிச்சம் ஐயம்பிள்ளை

******************************************************************

ஹாய் பிள்ளையள்!!!!

வந்ததுதான் வந்தன் சுறுக்காயும் ,சுருகெண்டு ஒண்டை சொல்லிப் போட்டு போறன். இப்ப கிடடியிலை வந்த ஜனாதிபதி "என்ரை திரி" ஒரு 100 நாள் திட்டம் ஒண்டை அறிவிச்சவரேல்லோ?? அதிலை ஒண்டு இந்த சம்பளம் கூட்டிறது கண்டியளோ. புதுக்க துணி வெளுக்க வாறவன் கரை கட்டி வெளுப்பான் எண்ட நினைப்புத்தான் எனக்கு அப்ப மண்டையுக்கை அடிச்சது. இப்ப என்னடாவெண்டால் கொர்ணமேந்திலை கோழி மேய்க்கிறவைக்கு ஆக குறைஞ்ச சம்பளம் 330000 ரூபாயாம் ( 218 யூறோ ). என்ரை கேள்வி என்னவெண்டால், கோழி மேய்க்கிறவையின்ரை சிலவு சித்தாயத்தையுமேல்லோ சொல்ல வேணும் பாருங்கோ. எடுக்கிறது ரூபாயிலை விடுறது சூறோவிலை எண்டால் , என்ரை கூட்டாளி ஐயம்பிள்ளையன் எங்கை போறது கண்டியளோ ??


***********************************************************

வணக்கம் பிள்ளையள். ஐ யாம் ஐமிச்சம் ஐயம்பிள்ளை . எனக்கு இண்டைக்கு வந்த ஐமிச்சங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அது என்னவெண்டால் , இப்ப கொஞ்ச நாளாய் நானும் இந்த பேஸ் புக்கிலை பாக்கிறன் , இந்தியாவிலை ஆரோ பெருமாள் முருகனாம்    மாதொருபாகன்  எண்டு ஒரு கதை எழுதினவராம் ,அந்த கதையை எரிச்சு அந்தாளையும் போட்டு கொஞ்ச மோட்டுக்கூட்டம் பாடாய் படுத்தினமாம் உண்மையோ ?? எனெண்டால் இந்த இந்து சமய புராண கதையளிலை இருக்கிற செக்ஸ்சுகள் சொல்லி வேலையில்லை. உதுகளை தத்தாச்சாரி ஐயா எண்ட பெரிய வித்துவான் "இந்துசமயம் எங்கே போகிறது??" விலை கிலோக்கணக்கிலை வித்த நேரம் ஏன் இந்த கோஸ்ரியள் அந்தாளின்ரை புத்தகத்தை எரிக்கேலை ?? உந்த பாரதம், ராமாயணம் எல்லாமே செக்ஸ்சு கலன் கணக்கிலை வழியுது. ஏன் அதுகளை எரிக்கேலை?? இதுகளை பத்தி தமிழ்கவி குஞ்சியும் ரென்சனாகி கேள்வியள் கேட்டிருக்கு .எனக்கு இண்டைக்கு வந்த ஐமிச்சம் , செக்ஸ்சுகள் வழியிற புராண இதிகாசங்களை ஏன் இந்த கோஸ்ரியளாலை எரிக்காமல் போச்சுது ?? ஏன் இந்த மாதொரு பாகனை போட்டு குடையுதுகள் ??விளங்கின ஆராவது இந்த ஐமிச்சத்தை கிளியர் பண்ணுங்கோ . உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

***********************************

வணக்கம் பிள்ளையள் .இண்டைக்கு ஊருலகத்திலை கண்டதைக்காணத மாதிரி பெடிப்புள்ளையள் எல்லாம் சர்வதேச வேட்டிதினம் எண்டு தாங்களும் கட்டி படமெடுத்து பகிடி விடுறாங்கள். நோக்கம் என்னவெண்டால் இதிலையாவது பெடிச்சியள் தங்களை பாத்து மருளுவாளவை எண்ட நினைப்பு தான். வேறை என்ன ?? ஆனால் பாருங்கோ சுறுக்கன் தன்ரை பிடியை ஒருக்காலும் விடமாட்டான். இதுதான் என்ரை உடுப்பு. புடிச்சிருந்தால் சொல்லுங்கோ. கதையோடை கதையாய் உந்தக்கோலத்தை பாத்துத்தான் என்ரை பொன்னாச்சி கவுண்டது எண்டால் பாருங்கோவன். என்னண்டாலும் சுறுக்கன் குறைவிளங்கமாட்டான். அதாலை எப்பிடியெண்டு சொல்லுங்கோ. சுறுக்கனுக்கும் பொழுது போகவெல்லோ வேணும் .


****************************************************

சொக்கிலை முத்தமிட்டால் ......................

மெய்யாலும் காரியம்......... ஐயம்பிள்ளைக்கு நடந்த விசையம் ஒருத்தனுக்கும் வரப்படாது கண்டியளோ . ஐயம்பிள்ளைக்கும் அவரோடை வேலைசெய்யிற பெடிச்சியளுக்கும் ஒட்டெண்டால் அப்பிடியொரு ஒட்டு. ஒவ்வருநாளும் விடியக்காத்தாலை ஐயம்பிள்ளையை கட்டிப்பிடிச்சு சொக்கிலை பிஸு ( உம்மா ) குடுக்காட்டில் அவளவைக்கு வேலை ஓடாது எண்டால் பாருங்கோவன். உப்பிடித்தான் ஐயம்பிள்ளை அண்டைக்கு வேலை செய்துகொண்டிருக்கேக்கை ஒருத்தி வந்து கட்டிபிடிச்சு ஹாய் ஷெரி ( டார்லிங் ) எண்டு ஐயம்பிள்ளையரின்ரை சொக்கிலை ஒரு உம்மா தந்தாள். ஐயம்பிள்ளையும் வஞ்சகமில்லாமல் ஒரு உம்மாவை கொடுத்தார். அதின்ரை எபெக்ட் போன திங்கள் பின்னேரம் தான் ஐயம்பிள்ளைக்கு தெரிஞ்சுது. இண்டை வரை வைரஸ் காச்சல் எண்டால் அப்பிடியொரு காச்சல். ஐயம்பிள்ளை நொந்து நூலாகி போச்சுது . இதுக்குள்ளை மனிசிக்காறி குடிநீர் வைக்கிறன் பேர்வழி எண்டு பரியாரி வேலை பாத்து ஐயம்பிள்ளையை வறட்டி எடுத்துபோட்டாள். அதாலை பெடியள் ஆரும் சும்மா உம்மா தந்தாலும் வேண்டிப்போடாதையுங்கோ சொல்லிப்போட்டன்.

ஐயம்பிள்ளை


***********************************உப்பிடித்தான் அண்டைக்கு கொழும்புக்கு கோச்சி எடுக்க கொடிகாமம் ரெயில்வே ஸ்டேசனிலை நிண்டு கொண்டிருக்கிறன். எனக்கு கொஞ்சம் தள்ளி 3 லேடீஸ் அண்ட் 1 ஜென்டில்மன் நிண்டு கொண்டு தாங்கள் கொண்டு வந்த ஐ பாட்டாலை படம் எடுத்துக்கொண்டு படம் காட்டிக்கொண்டு நிண்டினம். இடைக்கிடை இங்கிலிசு வேறை வந்து கொண்டு இருந்துது. நான் இவை அப்பிடி என்னதான் கதைக்கினம் எண்டு காதை கழட்டி அவைக்கு கிட்டவாய் வைச்சு போட்டு அவையை பாத்துக்கொண்டு நிண்டன். அந்த டமில் லேடீஸ், ஜென்டில்மனுக்கு இங்கிலுசுவிலை வெளுத்துக்கட்டி கொண்டு நிண்டினம். தாங்கள் அப்பத்தான் லண்டனாலை வந்து கொழும்பிலை நிண்டு இப்ப ஆரையோ கொடிகாமத்திலை சந்திக்கப் போகினமாம். அவையளை பாத்தால் அசல் பனங்கொட்டை டமில்ஸ் ஆய் கிடக்கு. பேந்து கொஞ்சத்தாலை கொடிகாமம் பார்ட்டியள் வர அவையோடை தமிழிலை கதைச்சு கொண்டு போச்சினம். அந்த நேரம் கொடிகாமம் ரெயில்வே ஸ்டேசனிலை  நானும் மனுசியும் அவையளோடை என்னம் 2 பேர்தான் நிண்டிச்சினம். உங்களுக்கே தெரியும் கொடிகாமம் நல்ல வடிவான சின்ன கிராமம் எண்டு. சிவசத்தியமாய் பிள்ளையள் எனக்கு அவை இங்கிலிசுவிலை அதுவும் கொடிகாமத்திலை கதைச்சது தாங்கேலாமல் கிடக்கு கண்டியளோ.


சுருக்கு சுறுக்கர்