Tuesday, July 28, 2015

மனமே மலர்க 22

மனமே மலர்க 22


ஈகோ

ஈகோ அல்லது – நான் – என்பதை சுயகற்பனை பிம்பம் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.பிறக்கும் குழந்தை வெளியே பார்க்கிறது. அவைகளைப் பதிவு செய்துகொள்ள தன்னைப் பற்றிய ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைச் சுற்றிப் பதிந்து வைத்தால்தான் மீண்டும் எடுத்தாள முடியும். ஆகவே பயன்பாடு கருதி ஒரு -நான் – குழந்தைக்கு அவசியமாகிறது. அந்த சூழலைப் பயன்படுத்தி குழந்தைக்கு நாம் விரும்புகிற விதமாக அடையாளம் கொடுத்து சுய கற்பனை பிம்பம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறது சமூகம். அன்பு காட்டும் தாய், அரவணைக்கும் குடும்பம், கொஞ்சும் கூட்டம், விளையாட தோழர்கள் என வளரும் குழந்தை தன் உணர்வுகளை மூடிய ஒரு சுயகற்பனை பிம்பத்தை, பொய்யான ஒரு அக உலகத்தை உருவாக்கிக் கொள்கிறது.வளர வளர வாழ்க்கையே சுயகற்பனை பிம்பத்திற்காக போராடும் போராட்டமாக ஆகிவிடுகிறது.
சுய கற்பனை பிம்பத்தை பெரிதாக ஏற்படுத்தி காப்பாற்றக் கற்றுக்கொடுக்கிறது சமூகம். தனது திறமைகள் ஈகோ – வாகின்றன. தனது இயலாமைகள் தாழ்வு மனப்பான்மையாகின்றன. எல்லாம் சேர்ந்ததுதான் – நான்.

சுயகற்பனை பிம்ப கோட்டை கட்டி காப்பாற்ற முடியாதவர்கள்
தோல்வியாளர்களாக பயத்தில் துவண்டு பதுங்கி வாழ ஆரம்பிக்கின்றனர். அவர்களது நானை நியாயப்படுத்தும் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை என விரிகிறது அவர்கள் உலகம்.

வெற்றி பெறுபவர்கள் அந்த வெறியூட்டும் போதையான சுயகற்பனை
பிம்பத்திலிருந்து வெளிவராமலிருக்க அதிகாரம், சூழ்ச்சி, ஆளுமை, அடிமைப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.

******************************************************

"நீ உன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும்போது நீ யாரையும் அடிமை படுத்த மாட்டாய். நீ வெறுமனே கொடுக்கிறாய். நீ அதற்காக ஒரு நன்றியையோ ஒரு நன்றியுணர்வையோ கூட எதிர்பார்க்க மாட்டாய். ஏனெனில் நீ எதையும் பெறுவதற்காக கொடுக்கவில்லை. நீ நிரம்பி வழிவதால்தான் கொடுக்கிறாய், நீ கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவேதான்
கொடுக்கிறாய். எனவே நன்றியை எதிர்பார்க்க மாட்டாய், பதிலாக அவர்கள் வாங்கிக் கொள்வதால் நீதான் நன்றியோடு இருப்பாய்."

*****************************************
பொறுப்புணர்வு

பொறுப்புணர்வு என்பது திறந்திருத்தல், தயாராக இருத்தல், பதிலுணர்வுடன் இருத்தல். யாராவது உன்னை அழைக்கும்போது நீ பதிலளிக்கவில்லையென்றால், நீ திறந்தவனாக இருக்க மாட்டாய். யாராவது உன்னை நேசிக்கவரும்போது நீ அதற்கு உதவி செய்ய மாட்டாய், நீ அதற்கு இசையமாட்டாய். பதிலாக நீ தடைகளை உண்டாக்குவாய். நீ இதுபோல செய்தால் – மற்றவர் அழைக்கும்போது நீ பதிலளிக்கவில்லையென்றால் – நீ அழைக்கும்போது அடுத்தவர் அதை மதிக்க மாட்டார். காதலிப்பவர்களில் அனேகர் பேர் இது போலத்தான் செய்கின்றனர். ஏனெனில் மற்றவர் அழைக்கும்போது பதிலளிக்காமல் இருப்பது ஆணவத்திற்கு மிகவும் உகந்த செயலாக இருக்கிறது. பதிலுணர்வு கொள்ளாமல் இருப்பது. அப்போது நீ உனக்கு எஜமானனாக இருக்கிறாய், நீ தயாராக இல்லாதபோது யாரும் உன்னை இழுக்க முடியாது,. யாரும் உன்னை தள்ள முடியாது. நீ யாரையும் பின்பற்றுவதில்லை என்று உனக்கு தோன்றுகிறது. எனவே அடுத்தவர் அழைக்கும்போது தயாராக இரு. முழுமையாக பதிலுணர்வு கொள். கஞ்சனாக இருக்காதே. அதுதான் பொறுப்புணர்வோடு இருப்பது என்பதன்
பொருள்.


**************************
தனித்தன்மை 

ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ வேண்டும் என்பது பழைய கருத்து. பழைய முறை தனித்தன்மை கொண்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குறிப்பிட்ட விதமாக வாழ்வதற்க்கே ஆனது. அது ஒருவிதமான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.

நான் தனித்தன்மையை போதிக்கிறேன், தனித்துவமான தனித்தன்மையை சொல்கிறேன். உன்னை நேசி, உனக்கு மரியாதை கொடு. ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவன் இதுவரை இருந்தது இல்லை, இருக்கப் போவதுமில்லை. பிரபஞ்சம் ஒருபோதும் மறுபடி செய்வது இல்லை. நீ தனித்துவமானவன். ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானவன். நீ அடுத்தவரைப் போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ காப்பியடிப்பவனாக இருக்க வேண்டிய தேவையில்லை. நீ உன்னைப் போலவே, உனது இருப்பில் இருக்க வேண்டும். நீ உனது விஷயங்களைத்தான் செய்ய வேண்டும்.

நீ உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை மதிக்க ஆரம்பித்தால் நீ முழுமையடைவாய். பின் அங்கே உன்னை பிரிக்க ஏதுமிருக்காது. அங்கே பிளவை உண்டாக்க எதுவுமில்லை.  


****************************************

ஒப்பீடும் கோபமும்

நீங்கள் ஒப்பீட்டை விட்டுவிடுங்கள். இயற்கையில் புல்லும் நட்சத்திரமும் சம அளவு முக்கியமானவையே என்று ஓஷோ கூறுகிறார். ஆகவே நீங்கள் புதர் என்றால் புதர், புல் என்றால் புல், அரசமரம் என்றால் அதுதான். எல்லாமும் இயற்கையில் கொண்டாடப்படுகிறது. ஆகவே யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒப்பீட்டை விட்டுவிட்டால் மன ஓட்டம் பெட்ரோல் போடாத கார் போல ஓடமுடியாமல் ஆகிவிடும். ஒப்பீடு ஒரு மனிதனை சிதைத்துவிடுகிறது, குலைத்துவிடுகிறது. அவன் அதன் பின் ஒருமையாய் முழுமையாய் இருப்பதற்கே இயலுவதில்லை.

மற்றொன்று கோபம், பொறாமை, பேராசை, வன்முறை, காமம், தந்திரம், சுயநலம், உடமைகொள்ளல், போன்ற விலங்குணர்ச்சிகளை அமுக்கி வைத்துக்கொண்டு வேஷம் போடாதீர்கள். விலங்குணர்ச்சிகளில் தவறோ, அவை குற்றமோ அல்ல. அந்த உணர்ச்சிகளுடன்தான் நாம் பிறக்கிறோம். அவை ‘உயிர் பிழைத்திருத்தல்’ என்ற அடிமட்ட உணர்விலிருந்து அதற்காக பிறந்தவைதான். ஆகவே அவை பாவமல்ல. தாழ்ந்ததல்ல.


************************************
பலம்

ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தான். ஏனெனில் ஒவ்வொருவரும் இறைமை பொருந்தியவர்கள்தான். எல்லோரும் பிரபஞ்சத்தில் இறைவனில் வேர் கொண்டவர்கள்தான். அதனால் எல்லோரும் ஆற்றலுடையவர்கள்தான். இதை நினைவில் கொள். மனித மனம் இதை மறந்துவிடத்தான் நினைக்கும். இதை நீ மறந்துவிட்டால் நீ பலமிழந்துவிடுவாய். நீ பலமிழந்துவிட்டால் பின் நீ பலமடைய ஏதாவது செயற்கைவிதமான முயற்சிகளை மேற்கொள்வாய். இதைத்தான் கோடிக்கணக்கான மக்கள் செய்து வருகிறார்கள். பணத்தைத் தேடும்போது உண்மையிலேயே நீ எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தைத் தேடும்போது நீ உண்மையிலேயே பலத்தைத்தான் தேடுகிறாய். கௌரவத்தைத் தேடும்போது, அரசியல் பதவியைத் தேடும்போது எதைத் தேடுகிறாய். நீ அதிகாரத்தை, பலத்தை, ஆற்றலுக்காக தேடுகிறாய் – ஆனால் ஆற்றல் எப்போதும் கதவு மூலையில் காத்துக் கொண்டிருக்கிறது. நீ தவறான இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறாய்..

*******************************************

கவனம்

அன்பின் சுவை அறியாமல் போலியான இந்த கவனிப்பு சுவையில் விழுந்து வருந்துபவர்களையே நான் பார்க்கிறேன். கவனிப்பு அதிகமாகும் பக்கம் மனம் சாய்வதால் உறவுகளில் விரிதல், நட்பில் விரிசல், வாழ்க்கையே தடம் புரளுதல் என எல்லாம் நடக்கிறது. இந்த கவனிப்பு போதையை பயன்படுத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஏராளமான தீய பழக்கங்கள் மற்றவர்களால் ஏற்றப்படுகின்றன. இதற்குத் தடுப்புச் சுவர்களும் எழுப்பபடுகின்றன. ஆனால் உண்மையான இயல்பான வழி அதுவல்ல. ஒரு குழந்தைக்கு வளர வளர மற்றவர் கவனிப்பில் நாட்டம் குறைய வேண்டும். மற்றவர் கவனம் தேவை என்பதை தாண்டி அது வளர வேண்டும்.

தனக்காக, தன் தன்மையை வாழ்ந்து அனுபவித்து அது ஆனந்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் கிடைப்பார்கள். இல்லாவிடில் புகழுக்கும் பெருமைக்கும் அலையும் கவனிப்பு போதையில் ஆழ்ந்து கிடக்கும் கும்பலே மிஞ்சும்.

****************************************

மனித மனம்

ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனில் ஆட்பட்டுவிட்ட மனித மனம்தான்.

**************************************


Wednesday, July 22, 2015

குணா கவியழகனின் விடமேறிய கனவு ( திறனாய்வு )

குணா கவியழகனின்  விடமேறிய கனவு (திறனாய்வு )அண்மையில் பாரிஸில் வெளியிடப்பட்ட குணா கவியழகனின் "விடமேறிய கனவு" நாவல் வாசித்தேன் .நாவல் சொல்ல வந்த செய்தி , "இறுதி யுத்தத்தில்  ஓர் போராளி சரணடைந்து அதன் தொடராக ஓமந்தை, செயின் ஜோசெப் படைத்தளம், மெனிக் பார்ம் முகாம்களில் நடைபெற்ற சித்திரவதைகளையும் ,அங்கிருந்த அவனைப் போன்ற சிறைக்கைதிகளின் வாழ்வு நிலை பற்றியும் நாவல் விபரிக்கின்றது. சிறுவயதில் தமிழகத்தைச் சேர்ந்த   ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்த்த "பட்டாம் பூச்சி" (Papillon ) என்ற பிரெஞ் நாவல் இரண்டு முறை படித்திருக்கின்றேன். இது பிரெஞ் நாவலாசிரியரான ஹென்றி ஷாறியே (Henri Charrière) என்பவரால் 1969 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சுயசரிதை நாவலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம், மானுடத்தின் கௌரவம் என்ற கருவை பட்டாம் பூச்சி அதிகம் பேசியது. மனிதனின் தாக்கு பிடிக்கும் ஆற்றலுக்கும், விடா முயற்சிக்கும், சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்து காட்டாக இந்தக் கதையை அப்பொழுது வாசித்து உணர்ந்தேன்.  பின்னர் இந்த "பட்டாம்பூச்சி"  நாவல், அமெரிக்காவை சேர்ந்த பிறாங்கிளின்  ஜே .ஷஃபைனர் ( Franklin J. Schaffner ) இயக்கி "பப்பியோன்" (Papillon) என்ற ஆங்கிலத்  திரைப்படமாக 1973 ஆண்டு வெளி வந்தது.   அதில், "ஸ்டீவ் மக்வீனும், ஹாஃப்மெனும்" அற்புதமாக நடித்திருப்பார்கள். 

1931 -ம் ஆண்டு கொலையொன்றை செய்ததாக கதையின் நாயகன் மீது குற்றம் சாட்டப் பட்டு  ஆயுள் முழுவதும்  சிறையில்  கழிக்க வேண்டும் என்று  தண்டனை வழங்கப்பட்டது . கொலை செய்யவில்லை என்பது நாவலின் நாயகனின் வாதம். ஒன்றல்ல இரண்டல்ல  பதின் மூன்று தடவைகள் சிறை சிறையாக கதையின் நாயகன்  தப்பி கொண்டிருந்தான் . இறுதியில் பிரெஞ் கயானவை சேர்ந்த "இல் து டியாபிள்" (  l'île du Diable ) என்ற  மனித சஞ்சாரமற்ற தீவில் கதையின் நாயகன் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு மரணமாகின்றான். "பப்பியோன்"  நாவலில் ஓர் சிறை வாழ்க்கையும்  அதன் கொடூரங்களும்  எப்படி இருக்கும் என்று மிகவும் தத்துரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். நான் "விடமேறிய கனவு" நாவலைவாசிக்கும் பொழுது எனது வாசிப்பு மனநிலையில் "பட்டாம் பூச்சி ( பப்பியோன் )"  நாவலின் அரைப்பக்கத்தை தான் நூலாசிரியர் எட்ட முயற்சி செய்திருக்கின்றார் என்பது தெளிவாகியது .நாவலில் தத்துவ மழைகளைக் குறைத்து, சிறை வாழ்வின் அல்லது சித்தரவதை முகாமின் கொடூரங்களை நூலாசிரியர் இன்னும் அதிகமாக விபரித்திருப்பாரேயானால், ஈழத்து போர் இலக்கிய சூழலில் "பப்பியோனை" விட ஓர் படி மேல் சென்று காத்திரமானதோர் இடத்தைப் நூலாசிரியர் பிடித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. 

"எணைப்பிறை ( நஞ்சுண்ட காட்டில்)"  இருந்த சொல்லாடலில் நெகிழ்வுத்தன்மையை நான் "விடமேறிய கனவு" வாசிக்கும் பொழுது என்னால் உணர முடியவில்லை. விடமேறிய கனவின் சொல்லாடல்களில் ஒருவிதமான வறட்சித்தன்மைகளே அதிகமாகக் காணப்பட்டன . நாவலின் தொடக்கத்தில் இருந்து நாவலின் நடுப்பகுதி வரை ஒரே தத்துவ மழையாக இருந்தது . அதாவது ஜெயகோவாவின் நூல்களான "காவல் கோபுரம் " மற்றும் "நம்பிக்கை ஒளி " போன்று இருந்தது. ஓர் படைப்பாளி தனது படைப்பில் அளவுக்கு அதிகமாக தத்துவங்கள் அல்லது போதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை .அதற்கு "மதபோதகர்கள்"  இருக்கின்றார்கள். இப்படியான அதிக தத்துவ மழைகள் அல்லது போதனைகள் வாசகரின் மனதில் ஒருவிதமான சலிப்புத்தன்மையை உருவாக்குமே ஒழிய வாசகரை நாவலுடன் ஒன்றிணைய விடாது தடுத்து விடும் என்பது எனது அவதானிப்பு ஆகும் .

நூலாசிரியர் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்த படியால், நாவலின் புலி எதிர்ப்பு கருத்தியலை மிகவும் நுணுக்கமாக நாவலில் நகர்த்தி இருக்கின்றார் என்றே எண்ண இடமளிக்கின்றது .அதாவது தீவிர தேசியவாதிகளால் தன்னில் "துரோகிப்பட்டம்" விழாமலும், அதே வேளையில் மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் "புலி ஆதரவாளர்" என்ற கருத்து விழாமலும்  தனது கருத்துக்களை நுணுக்கமாக நாவலினூடாக நகர்த்தி இருக்கின்றார். என்னைப்பொறுத்த வரையில் தற்போதுள்ள "குழுமவாதப் போர் இலக்கிய சூழலில்"  இத்தகைய நகர்வு பாராட்டப்பட வேண்டியதொன்று என்றாலும் , மறுதலையாக இந்த வகையான நகர்வு நூலாசிரியரின் நேர்மைத்தன்மையைக்  கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான் பார்த்த அல்லது எனது வாசிப்பு மனநிலையில், ஈழத்துப் போரியல் இலக்கியத் துறையில் இருக்கும் எழுத்தாளர்கள் எல்லோருமே தங்கள் தளங்களை நேர்மையாக வெளிக்காட்டியே தங்கள் படைப்புகளை வாசகர்களுக்குத் தந்தார்கள். அதில் ஆயிரம் விமர்சனங்கள் வாசகர்களுக்கு இருக்கலாம் . அனால் அதில் அவர்களது தளங்களை  தெட்டத் தெளிவாக வாசகர்களுக்கு உணர்த்தியிருந்தார்கள் . ஆனால் விடமேறிய கனவு  நாவலைப் பொறுத்த வரையில் நூலாசிரியர் "நடுவில் வாய்க்கால் வெட்டுவதாகவே"  எண்ண இடமளிக்கின்றது. 

ஒரு நாவலுக்கு காலதேசவர்த்தமானங்கள் முக்கியமானது. அதன் அடிப்படியில் இந்த நாவலைப் பார்த்தால் .நாவலின் ஒருசில இடங்களில் நூலாசிரியர் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் கதையை கொண்டு சென்று இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. உதாரணமாகக் கதையின் நாயகன்  தனது வாயில் உள்ள கொடுப்புப் பற்களின் அடியிலும், ஆசன வாயிலிலும் சயனைட் குப்பியை தொடர்சியாக மறைத்து வைத்திருந்ததைக் குறிப்பாகச் சொல்லலாம் . சாதரணமாக சயனைட் குப்பி 2 சென்ரி  மீற்ரர் நீளமுள்ளது. உடலின் இந்த இரண்டு பாகத்திலும் ஏற்படுகின்ற உடல் வெப்ப மாற்றங்களினால் இவை இலகுவில் உடையக்கூடிய வாய்புகளே அதிகம் இருக்கின்றன. உதராணமாக போதைவஸ்துக் கடத்துபவர்கள் தங்கள் ஆசனவாயிலில் வைத்துக் கடத்தும் பொழுது உள்ளே ஏற்பட்ட உடல் சூட்டினால் போதைவஸ்து ஆசனவாயிலின்  உள்ளே வெடித்து பல மரணங்கள் ஏற்பட்டதை நாங்கள் செய்திகளில் படித்திருக்கின்றோம் . அத்துடன் ஆசனவாயிலில் ஓர் பொருளை அடையும் பொழுது குடலின் சுற்றுச் சுருங்கல் முறைகளினாலும், மனிதன் உட்கொண்ட உணவினாலும் அந்தப் பொருள் இருக்கும் இடத்தை விட்டு கீழ் நோக்கி வரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆசனவாயில் ஓர் பொருளை மறைத்து வைத்திருப்பது என்பது ஒருசில மணிநேரங்களுக்கே சாத்தியமானது. ஆனால் நூலாசிரியர் தொடர்ச்சியாக வாயின் பல்லுக்கு அடியிலும், ஆசனவாயிலிலும் சயனைட் குப்பியை வைத்திருப்பதாக சொல்வது உணர்ச்சி பூர்வமாக வாசகரைக் வசப்படுத்துமே ஒழிய உணர்வு பூர்வமாக ஒருபோதுமே அவர்களை வசப்படுத்தாது .அத்துடன் இந்த சயனைட் குப்பி விடயமாக என் மனதிலே தோன்றியது என்னவென்றால் , சமாதான காலங்களின் பின்னர் சர்வதேசத்தின் பூரண ஆசியுடன் தனது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்தி ஆசியாவிலேயே அதிஉயர் பாதுகாப்புகளைக்  கொண்ட இலங்கை அரசின் இராணுவ சித்திரவதை  முகாம்களின் பாதுகாப்பு நிலைகள் பற்றிய பெரிய கேள்வி ஒன்று இங்கே தொக்கி நிற்கின்றது. இன்றைய காலகட்டங்களில் எந்த இடத்திலுமே , ஒருவர் தனது உடலின் எந்தப்பகுதியிலும் ஓர் பொருளை மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கத்தக்க தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து விட்டன. நூலாசிரியர் "தான் சித்திரவதை முகாம்களில் சயனைட் குப்பியை மறைத்து வைத்திருந்தேன்" என்று சொல்வது வாசகர்களை முட்டாள்களாக்குவதுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும் .

இந்த நாவலின் ஊடாக  நாவலாசிரியர் இலங்கைக்கு வெளியே இருந்த மக்களின் பார்வையில் இருந்த "இலங்கை அரசின்  நலன்புரி முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள் " என்ற விம்பத்தை உடைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமே .  குணா கவியழகன் விடமேறிய கனவின் மூலம்  தனது இரண்டாவது படைப்பை வாசகர்களாகிய எங்களுக்குத்  தந்திருக்கின்றார். அவர் மேலும் தனது வாசிப்பு மனநிலையை விசாலப்படுத்தி பல இலக்கிய நயமுள்ள காத்திரமான படைப்புகளைக் கொண்டுவருவார் என்பதே என்போன்ற வாசகர்களது  வேணவாவும் நம்பிக்கையும்  ஆகும். இறுதியாக நான் இந்த நாவலை வாசித்து முடித்தபொழுது ஓர் தினக்குறிப்பு படிக்கின்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தியது. 

மலைகள் இலக்கிய சஞ்சிகைக்காக 

கோமகன் 

15 ஆடி 2015

நன்றி :  http://malaigal.com/?p=6998

Sunday, July 12, 2015

சுவைத்(தேன்) 04

01 கொல்லப்பட்ட தேன்கூடு


கொன்ற பிணத்தை மொய்த்துக் கொண்டிருந்தன
வண்ணத்துப்பூச்சிகள் .
அந்த பிணத்திலிருந்து வடிந்து கொண்டிருந்தது தேன்.
ஊன்றிக் கவனித்த போது
அது ஒரு தேன் கூடாக மாறிக் கொண்டிருந்தது.
பிணத்தை அலங்கரிக்க வந்தவன் ,
தேனை எடுத்துச் செல்லலாம் என்று எண்ணியபோது
அந்த கணமே துக்கத்தின் வேர்கள்
அவனுடைய தொண்டையில் இறங்கின.
"பிணத்தை அலங்கரிப்பதுன் தொழில்
தேனெடுக்க வந்ததுன் யோகம்"
என்ற குரல்கள் அவனைத் தடுமாற வைத்தன .
தான் இப்போது என்ன செய்யலாம் என்று
அந்த பிணத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் நெடுநேரமாய் .
கொல்லப்பட்ட பிணம் சட்டத்தின் பிடியிலிருந்து
எப்போது விடுபடும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஒரு தேன்கூடு எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பது
எதிர்காலத்தில்
கேள்வியாக எழக்கூடிய சாத்தியமும் உண்டு.

நன்றி : கருணாகரன் 
*******************

02 முறிவு 
----------- 


அகன்ற தெருக்களை அமைப்பதற்காக 
எங்கள் தெருக்கரையில் நின்ற புளியமரத்தைச் 
சீனர்கள் வெட்டி வீழ்த்தியபோது 
காலைச் சூரியன் ஒஸ்லோவில் ஊடுருவ முடியாமல் திணறியது. 
அப்பொழுது அமெரிக்கத் தூதுவர் 
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைப்பற்றி 
யாழ்ப்பாண ஆயருடன் தொலைபேசிக் கொண்டிருந்தார். 
போதை வஸ்துக் குற்றச்சாட்டில் 
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை 
இந்தியா எங்கும் பட்டாசுகளில் வெடித்துப் பறந்தது.
தலைவர்களுக்கிடையில் ரகசிய ஒப்பந்தங்களும் பரகசிய ஒப்பந்தங்களும் 
நடந்து கொண்டிருந்தபோது அரிசி விலையேறியது 
பெற்றோல் விலை கூடியது. 
கட்சி தாவும் ஆட்களுக்குப் 
பாலங்களை அமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் திருப்பணியை 
இரவு பகலாகச் செய்து கொண்டிருந்த பத்திரிகையாள நண்பர்கள் 
தேர்தலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். 
அதே பத்திரிகையாள நண்பர்கள் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள். 
மூன்று போத்தல் பியரை உள்ளே இறக்கிய ஊடகப்போராளி ஒருவன் 
தேர்தலுக்கு முன்பே தலைவரைத் தெரிந்தெடுத்து விட்டிருந்தான். 
இன்னொருவன் தேர்தலுக்கு முன் தலைவரைக் கைவிட்டிருந்தான்
தவற விட்ட பந்தை நினைத்துக் கவலைப்பட்ட கிரிக்கெற் வீர்களுக்கு 
அருகில் நின்றவனின் கவலையெல்லாம் 
தானொரு கிரிக்கெற் வீரனாக வரவில்லை என்றேயிருந்தது 
அப்படி வந்திருந்தால் எந்தப் பந்தும் தவறாது விக்கெற்றை வீழ்த்தியிருக்கும் 
அல்லது சிக்ஸராகியிருக்கும் என்று நினைத்தான்.
எல்லாம் ஒருகணத்தில் நிகழ்ந்த போது 
மறுகணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தேன்.
00

************************************************
03 நெருப்பு
------------


போர்க் கைதிகளைப் பற்றி 
நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள்
போர்க்குற்றவாளிகளைப் பற்றி 
நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள்
ஆனாலுமென்ன 
கைதிகளை மீட்க முடியாமலும் 
குற்றவாளிகைளத் தண்டிக்க முடியாமலும் 
நழுவிச் செல்லும் காலம் நமது.
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்
கைதுக்கும் சரணடைவுக்கும் இடையில் 
மன்றாட்டத்துக்கும் வெறிக்கூச்சலுக்குமிடையில்
எப்பொழுதும் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்
கூட்டத்திலொருவனாய் 
இரவுகளில் புலம்பி. 
பகலில் அலைந்து 
பரிகசிக்கப்படும் தெருநீளம் திரிகிறேன்.
பாதிக் கைதிகள் சிறைக் கூடங்களில் 
பாதிப்பேர் விசாரணையில்
இன்னும் சிலர் விடுதலையாகி
மீதிப்பேர் ஏதுமறியா நிலையில்
இந்தக் கைதிகளின் விதி என்னவென்று உணர்கிறபோதும் 
சொல்ல முடியவில்லை வெளியே 
அவர் இருக்கிறாரா 
இவர் வருவாரா என்று தத்தளிக்கும் மனிதர்களோடு 
துக்கமின்றி பசியின்றித் தவிக்கின்ற குழந்தைகளோடு 
எப்படி இனியும் வாழ்வதென்று தெரியவில்லை. 
யாருக்காகவும் இனிக் காத்திருப்பதில் பயனில்லை
என்றுரைக்கவும் முடியவில்லை.
போரோய்ந்து போயிற்றென்றுதான் சொன்னார்
சொன்னவர் வாயில் 
அணையா திந்த நெருப்பைக் கண்டேன்.
00

*****************************************
04 துடிக்கும் மீன்களில் கண்ட உலகம்
------------------------------------------------------


ஆதிகோயில் வளாகத்திலிருந்து வெளியேறிய கிறிஸ்து 
என்னைக் கண்டு புன்னதைத்தார். 
மூன்றாவது அகிலத்தை நாம் பார்க்கலாம் வா என்றார்.
சிலுவையில் அறைப்படுவதற்கு முன் 
ஒரு கிண்ணம் தேன் குடிக்கலாம் 
அல்லது ஒரு கோப்பை தேநீர் பருகலாம் வருகிறீர்களா என்று கேட்டேன்.
அதற்கிடையில் அங்கே
ஒரு முதிய மதகுரு வந்து கிறிஸ்துவை வணங்கினார்.
கிறிஸ்துவின் கவனம் வேறெங்கோ நிலைத்தது.
தெருவில் காய்ந்து கறுத்துக்களைத்துப் போய் வந்த 
விவசாயியைக் கண்டதும் 
கிறிஸ்து என்னை விட்டுப் போய்விட்டார் அவனிடம்.
அவனுடைய கைகளைப் பற்றிய அவர் 
அருகிலிருந்த மரத்தின் கீழே அழைத்துச் சென்றார். 
மரத்திலிருந்து கனிகளைப் பறித்து அவனிடம் கொடுத்தார். 
கனி நிரம்பிய சாற்றில் அந்த விவசாயியின் முகத்தைக் காண்கிறேன்
விதைகள் ஒவ்வொன்றிலும் விவசாயியின் இதயம் உள்ளது
வாருங்கள் உங்களுக்கும் ஒரு கனி என்றார். 
நான் கிறிஸ்துவின் பக்கமாகச் சென்றவேளை அங்கே 
நான்கு குழந்தைகள் அவருடைய மடியில் விளையாடிக் கொண்டிருந்தன
கனிகளை அவர் பறித்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.
அந்த வழியே களைத்து வந்தாள் ஒரு மெல்லிய பெண்
அவளுடைய கண்கள் பசிக் கலக்கத்திலிருந்தன
அந்தப் பெண்ணுக்கும் கனிகளைக் கொடுத்தார்
அவளின் குளிர்ந்த கண்களின் வழியே வெளியேறி
நடந்து கடற்கரைக்கு வந்திருந்தோம். 
வலைகளை இழுத்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் சென்ற கிறிஸ்து
கடலோடிக் காய்ந்த கைகளில் துடிக்கும் மீன்கள் 
வாழ்வின் ரகசியம் அறிவீர் என்றார்
துடிக்கும் மீன்களின் கண்களில் கண்டேன் அக்கணம் 
சிலுவையிலறையப்படும் கிறிஸ்துவின் துடிப்பை.
00

*********************************
05 ரத்தப்பெருக்கு
----------------------


ரத்தத்தில் மிதக்கும் காஸாவில்
என்னுடைய குழந்தை தீயில் எரியக்கண்டேன்
எரியும் குழந்தையின் புன்னகையிலிருந்து வடிந்த குருதி
அந்தக் கொடும்பாலையில் பாய்ந்து
என் காலடியில் உறைந்தது
உங்கள் காலடியிலும் உறைந்தது.

நீங்கள் அதை உற்றுக்கவனித்தபோது
அது உங்கள் குருதிதானென்பதை உணர்ந்தீர்களா?
உறைந்த குருதி ஒரு குழந்தையாகிச் சிரித்ததை
நீங்கள் அறிந்தீர்களா,
அது உங்கள் குழந்தையுடைய கலைந்த சிரிப்பின் இறுதிச்சித்திரம்தானென்றும்.

அந்தச் சிரிப்பொலி மெல்ல அடங்கி,
அழுகையாகி, விசும்பலாகி
உங்களைக் கொண்டு சென்றது இடிந்தழிந்த பதுங்குகுழியிடம்
நீங்கள் கடந்து வந்த பிணங்களிடம்
இன்னும் கடக்க முடியாதிருக்கும் பிணங்களின் காலத்திடம்

கண்ணீரும் தீயும் புகையும் சமநேரத்தில் வானை நிறைத்து,
உலகையும் நிறைத்தது
உங்கள் இதயத்தின் ஒவ்வொரு அறையிலும்
தானியங்களுக்குப் பதிலாக
பதிலற்ற கேள்விகள் வலியோடு நிரம்பிக்கிடந்தன.

நெருப்பிலெரிந்தழிந்த கடந்த காலத்திலிருந்து
யாரும் மீளவில்லை
எரிந்துகொண்டிருக்கிறது நிகழ்காலமும்.

எரிந்தடங்கும் நிகழ்காலத்தின் சாம்பலில் மிதக்கிறது கடந்த காலம்
நிகழ்காலம் எரியும்போது எதிர்காலம் மிஞ்சுவதெங்ஙனம்?

எல்லாக் காயங்களையும் பார்த்துக்கொண்டு நிற்போரின் கண்களில்
காஸா தொடக்கமுமில்லை முடிவுமில்லை என்று நீளும் கொடுமுட்கள்
பெரிய காடாகி வளர்ந்திருக்கக் காண்கிறேன்

நமது கடந்த காலம் இன்னும் முடிவறாது நீள்கிறது.

விசித்திரமானதும் அபாயமானதும் என்று அஞ்சும் கடந்த காலத்தை 
நம்முடைய காயங்களின் நீட்சி ரத்தப் பிசுபிசுப்போடு இன்னும் வைத்திருக்கிறது
காஸாவில்.

அடங்கவில்லை ரத்தப்பெருக்கு
இந்த ரத்தப்பெருக்கின் விதி எங்கு முடிவுறும்?
எப்பொழுதுதிது ஆறும்?

நன்றி :கருணாகரன் 
********************
06 கவனயீனமாய் கொல்லப்படலாம்
 

இரவின் கடைசிப் படிக்கட்டில்
அமர்ந்திருக்கிறேன்
பகலின் எல்லைக்குள்
கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன
பகலுக்குள் இறங்கி
வெகு நேரங்களுக்குப் பின்புதான்
இரவு உதிர்ந்த இலை
பகலின் ஓரத்தை தாண்டி
வந்து கொண்டிருக்கின்றது
பழுப்பும் பச்சையுமாக
அதன் நிறத்தை வெளிப்படுத்தியது
இன்னும் சில நாட்கள்
மரத்திலே இருக்க வேண்டிய
வயதுதான் அதற்கு
செடியில் இருந்த போது
இலையின் கீழ்இ
மறைவாக உறங்கிய எறும்பு
இன்னும் கனவிலே இருக்க வேண்டும்
காற்று ஒத்திவிட
தரையில் புரண்டு
குப்புறக் கிடந்தது இலை
அதன் முகட்டில்இ
கண் விழித்த எறும்பு
மலையொன்றில்
சிக்கிவிட்டதைப் போல
திகைத்து நின்றது
தப்பிக்கும் முயற்சியில்
மலையெங்கும் அலைந்தது
இலையின் அருகில்
எனது கால்கள்
நடந்து கொண்டிருக்கின்றன.

நன்றி :றியாஸ் குரானா 

********************************************************

07 மரணிக்காத ஆசிரியன்


பறவையைப் பற்றி
எழுதிய பிரதியில்
அது இல்லாமல் போனது கண்டு
நீங்கள் வியப்படைய வேண்டாம்
நமது தேவைக்காக
நமது அவசரத்திற்காக
வரும்படி
பறவையை கட்டாயப்படுத்த முடியாது
அதற்கு வேலைகள் இருக்கலாம்
அல்லது தான் விரும்பிய நேரத்தில்
பிரதிக்கள் வரலாம்
பறவையைப் பிரதிக்குள் வைத்து
வாசிக்க வேண்டுமென்ற
விதிகள் ஏதுமில்லை
வாசிப்பதற்கென்று,
பிரதிக்குள் அடைத்து வைக்கவும் கூடாது
உங்கள் வாசிப்பு பிடித்திருந்தால்
சில வேளை,மனம் விரும்பி
பிரதிக்குள் வரவும் வாய்ப்பிருக்கிறது
வானத்தில், பறந்து கொண்டிருக்கும்
பறவைகளில் ஏதாவதொன்றைப் பார்த்து
அதுதான், பிரதிக்குள்
இருக்க வேண்டியப றவை என
முடிவெடுத்துவிடவும் வேண்டாம்
பிரதியைச் சுற்றி
மிக அருகில் வட்டமிடுகிறதே
அதுகூட பிரதிக்கான
பறவையாக இல்லாமல் போகலாம்
பிரதிக்குள் பறவை பற்றி மட்டுமல்ல
அது வெளியேறிவிடும் படியும்
எழுதினேன்.
உண்மை, யாருக்கும் கேட்காத வண்ணம்
மௌமாக கூவிக்கொண்டு திரிகிறது
பிரதியின் பறவை.

நன்றி :றியாஸ் குரானா 

********************************************************
08 எல்லாமே சரியாக நடந்தன


அச்சுறுத்தும் தொனியில்…
நாய்களைக் குரைக்கச் செய்தேன்
வீட்டைச் சுற்றி
நடமாடவிட்டேன்
பலநூறு காலடிகளைக் கொண்டு
கலவரம் நிறைந்த சப்தங்களை
தொடர்ச்சியாக எழுப்பினேன்
தூக்கமற்ற காவலர்களை
ஆயுதங்களுடன் காவலுக்கு நிறுத்தினேன்
நகர்ந்து சென்று,
அவர்களுக்கருகில் நிற்கும்படி
மரங்களிடம் வேண்டிக் கொண்டேன்
முதலில் அலுமாரியைப் பூட்டினேன்
என்னால் கூட,
கண்டுபிடிக்க முடியாத இடத்தில்
அதன் சாவியை
மிகக் கவனமாக தொலைத்தேன்
வீட்டின் ஒவ்வொரு அறையாகப்
பூட்டி, அனைத்துக் கதவினருகிலும்
நான் ஒருத்தனே
காவலர்களாக நிறுத்தப்பட்டேன்
மிகக் கவனமாக
பாதுகாப்பாக
இப்படி எல்லாமே சரியாக நடந்தன
அவன் திருடிச் செல்லுவதற்கு ஏதுவாய்..
நான் என்ற
இன்னொருவன்தான் அந்தத் திருடன்.

நன்றி :றியாஸ் குரானா 

*********************************
09 ஒரு ஊரின் சோகம் 


நீள விரிந்த
நதியின் இடுக்குகளில்
கூடு கட்டியக னவின் குரல்...
கனத்து வழிகிறது
மீட்சிக்கான வழி ஏதுமற்று...!

மரணம் கவிந்த தெருக்கள்
ஊரெங்கும்
தோரணங்களாய்த்
தொங்கிக் கொண்டிருக்கின்றன...!

இருட்டுக்குள்
கருப்பொன்றே நிறமாகிப் போன
விரக்தியில்
நிறங்கள்
தற்கொலை செய்துகொண்டன...!

ஒளிப் பிசிறல்களைத் தேடும்...
ஒவ்வொரு தடங்களையும்
எட்டி மறைக்கிறது
கருமையின் செறிவு...!

திசைகளைத் தொலைத்த ஆட்காட்டி
தன் குரலைத் தானே
பின்பற்றி அலைகிறது!

இருளின் திரட்சிக்குள்
வரி வரியாய் உலர்கிறது...
காற்றின் மென்னிழைகள்!

புகை உமிழ்ந்துருளும்
வலிய சக்கரங்களின் கீழ்
நடுநடுங்குகிறது...
பூமியின் தேகம்!

நகரின் இரைச்சலுக்குள்
அமுங்கிக் கேட்கிறது!
தன் சுயத்தினை
மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கும்
ஒரு ஊரின் கேவல்!

நன்றி : தாட்சாயணி

******************************
10 ஞானம் 


“நேற்று” என் காலடியில்

சொட்டிப் போனது இரத்தத்தை.....
“நேற்றின்” இரத்தம்
உறைவதற்குள்.....
“இன்றின்” கூக்குரல்
கேட்கிறது!
நாளை..... “இன்றின்” இரத்தம்
என் காலை நனைக்கலாம்.....!
இறுதியில் என்றோ ஒருநாள்.....
“நேற்றின்” இரத்தமும்
எனது இரத்தமும் கலக்கின்றபோது
எனக்கு.....
நாளை என்பதே இல்லாமல் போகலாம்!
அப்போது
“நான்” என்பதும் தொலைந்து போகலாம்!

நன்றி : தாட்சாயணி

Thursday, July 9, 2015

சாத்திரியின் பார்வையில் கோமகனின் "தனிக்கதை "


சாத்திரியின் பார்வையில் கோமகனின் "தனிக்கதை " 


கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான்  படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன் .இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு ஊரையும் விட்டு வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் எறியப்பட்டு அவன் அங்கே மீண்டும் பதியமாகி அனைத்தையும் இழந்த அகதியாக பதிந்த வலியை தொட்டுச் செல்கிறது ..வெளிநாட்டில் அதியுயர் வாசனை திரவியத்தை தடவினாலும் மண்ணின் வாசத்தை சுவாசிக்கத் துடிக்கும் நேசம் .அதுக்காகவே அவர் பெரும்பாலான கதைகளில் கோப்பி குடித்தும் சிகரெட்டை பற்றவைத்து அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து ஆகாயத்தை நோக்கி விட்டு தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார் .சமுக ஆர்வலர்கள் யாராவது  சூழல் மாசடைதல் ஓசோனில் ஓட்டை என்று வழக்கு போடாதவரை அவரால் தொடர்ந்து எழுத முடியும் .

புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களை  அதன் வேதனைகளை அவன் யார் ..கிளி அம்மான் .மலர்ந்தும் மலராத ..மனிதம் தொலைத்த மனங்கள் ..ஆகிய கதைகள் சொல்லிச் செல்கின்றன .இதில் கிளியம்மான் என்கிற கதை பிரான்சில் வாழ்ந்த ஒரு முன்னை நாள் போராளியின் உண்மைக்கதை  என்பது மட்டுமல்ல அந்தக் கதையின் நாயகன் எனது நண்பனும் கூட .மக்களுக்காக போரடப்போய் யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமாகி வெளிநாடு வந்த பின்னரும் தனது சொந்த வாழ்வை தொடர முடியாது மன உளைச்சலுக்கு உள்ளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட ஒருவனின் கதை .

தனியாக புலம் பெயர் வாழ்வின் சோகங்களை மட்டும் சொல்லாது வெளிநாடுகளில் தமிழர்கள் தங்களை நிலை நிறுத்தவும்  நிதந்தர வதிவிட உரிமையை பெறவும் தகிடுத் தனங்கள் விசாகன் .அவன் யார் .தோலுரித்துச் செல்கிறது .தமிழன் அனைத்தையும் கைவிட்டு அகதியாகி வெளிநாடுகளில் புதுவாழ்வை பதியமிட்டபோதும் சாதியை மட்டும் கைவிடாது காவிச்சென்று இரத்தத் துணிக்கைகள் போலவே இன்னமும் அவர்களது உடலில் உணர்வுகளோடு அடுத்த தலைமுறைக்கும் கடத்தியுள்ளான் என்பதை மறுக்க முடியாது .கோமகனின் கதைகளும் இந்த சாதியத்தை சாடாமல் பயணிக்கவில்லை .அதில்  சின்னட்டி .அவர்கள் அப்படிதான் என்கிற கதைகள் முக்கியமானவை .இதில் சின்னட்டி என்கிற கதையைப் படித்தபோது உண்மையிலேயே ஊரில் நடக்கும் மரணச் சடங்கு ஒன்றிற்கு என்மனதை அழைத்துச் சென்றுவிட்டார் கதாசிரியர் ...
அடுத்ததாக ஊர் திரும்புதல் .நீண்ட கால வெளிநாட்டு அகதி வாழ்வின் பின்னர் ஊர் திரும்பியதும் தனது ஊரை சுற்றி வந்து பழைய நினைவுகளை மீட்டுகிறான் .அவன் படித்த பாடசாலை ஊர் கோவில் .முடி திருத்திய கடை  குட்டி பாபரிலும் .காதலித்து கலியாணம் செய்யமுடியாமல் கை விட்டு விட்டுப் போன முன்னை நாள் காதலியை தேடுதல் பாமினியிலும் .வெளிநாட்டில் இருந்தபோதே இறந்து விட்டிருந்த அம்மாவின் தொடுகைக்காக ஏங்கியபடி நோய் வாய்ப்பட்டிருந்த அம்மா வளர்த்த நாயை கருணைக்கொலை செய்தலை றோணியனிலும் அழகாக உணர்வோடு கதைகளாக்கியிருக்கிறார் ..

கோமகனின் தனிக்கதையை பொதுக்கதையாக படித்து முடித்த போது .கீதையிலிருந்தோ  .குரானிலிருந்தோ. பைபிளில் இருந்தோ. ஒரு வசனத்தை உருவி உதாரணம் காட்டி நகர்த்தாமல் சொந்த வாழ்வை சம்பவங்களை உதாரணங்களாக காட்டி நகர்த்தியதற்கு ஒரு கை தட்டு ..ஆனால் எல்லாக் கதைகளையும் படிக்கும் போது எழுபது எண்பது கால உத்திகளே பெரும் பாலும் பயன் படுத்தியிருக்கிறார் .அதிக வர்ணனைகளும் ஆலாபனைகளும் உள்ளதாக எனக்குப் படுகின்றது.காலையில் கதிரவன் கண்விழித்தான் என்று கதை தொடங்கினால்  காலையில கந்தசாமி கூடத்தான் கண் விழிக்கிறான் அதை விட்டிட்டு விசயத்துக்கு வா ...என்கிற இன்றைய இளம் தலை முறையினரின் வாசிப்பையும் கவரக்கூடிய முறையில் கோமகன் இனிவரும் காலங்களில் தனது கதைகளில் புதிய உத்திகளை புகுத்த வேண்டும் என்பது கட்டளையல்ல வேண்டுகோள்.

நன்றி : http://eathuvarai.net/?p=4864