Skip to main content

சாத்திரியின் பார்வையில் கோமகனின் "தனிக்கதை " - வாசிப்பு அனுபவம்கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான்  படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன் .இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு ஊரையும் விட்டு வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் எறியப்பட்டு அவன் அங்கே மீண்டும் பதியமாகி அனைத்தையும் இழந்த அகதியாக பதிந்த வலியை தொட்டுச் செல்கிறது ..வெளிநாட்டில் அதியுயர் வாசனை திரவியத்தை தடவினாலும் மண்ணின் வாசத்தை சுவாசிக்கத் துடிக்கும் நேசம் .அதுக்காகவே அவர் பெரும்பாலான கதைகளில் கோப்பி குடித்தும் சிகரெட்டை பற்றவைத்து அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து ஆகாயத்தை நோக்கி விட்டு தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார் .சமுக ஆர்வலர்கள் யாராவது  சூழல் மாசடைதல் ஓசோனில் ஓட்டை என்று வழக்கு போடாதவரை அவரால் தொடர்ந்து எழுத முடியும் .

புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களை  அதன் வேதனைகளை அவன் யார் ..கிளி அம்மான் .மலர்ந்தும் மலராத ..மனிதம் தொலைத்த மனங்கள் ..ஆகிய கதைகள் சொல்லிச் செல்கின்றன .இதில் கிளியம்மான் என்கிற கதை பிரான்சில் வாழ்ந்த ஒரு முன்னை நாள் போராளியின் உண்மைக்கதை  என்பது மட்டுமல்ல அந்தக் கதையின் நாயகன் எனது நண்பனும் கூட .மக்களுக்காக போரடப்போய் யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமாகி வெளிநாடு வந்த பின்னரும் தனது சொந்த வாழ்வை தொடர முடியாது மன உளைச்சலுக்கு உள்ளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட ஒருவனின் கதை .

தனியாக புலம் பெயர் வாழ்வின் சோகங்களை மட்டும் சொல்லாது வெளிநாடுகளில் தமிழர்கள் தங்களை நிலை நிறுத்தவும்  நிதந்தர வதிவிட உரிமையை பெறவும் தகிடுத் தனங்கள் விசாகன் .அவன் யார் .தோலுரித்துச் செல்கிறது .தமிழன் அனைத்தையும் கைவிட்டு அகதியாகி வெளிநாடுகளில் புதுவாழ்வை பதியமிட்டபோதும் சாதியை மட்டும் கைவிடாது காவிச்சென்று இரத்தத் துணிக்கைகள் போலவே இன்னமும் அவர்களது உடலில் உணர்வுகளோடு அடுத்த தலைமுறைக்கும் கடத்தியுள்ளான் என்பதை மறுக்க முடியாது .கோமகனின் கதைகளும் இந்த சாதியத்தை சாடாமல் பயணிக்கவில்லை .அதில்  சின்னட்டி .அவர்கள் அப்படிதான் என்கிற கதைகள் முக்கியமானவை .இதில் சின்னட்டி என்கிற கதையைப் படித்தபோது உண்மையிலேயே ஊரில் நடக்கும் மரணச் சடங்கு ஒன்றிற்கு என்மனதை அழைத்துச் சென்றுவிட்டார் கதாசிரியர் ...
அடுத்ததாக ஊர் திரும்புதல் .நீண்ட கால வெளிநாட்டு அகதி வாழ்வின் பின்னர் ஊர் திரும்பியதும் தனது ஊரை சுற்றி வந்து பழைய நினைவுகளை மீட்டுகிறான் .அவன் படித்த பாடசாலை ஊர் கோவில் .முடி திருத்திய கடை  குட்டி பாபரிலும் .காதலித்து கலியாணம் செய்யமுடியாமல் கை விட்டு விட்டுப் போன முன்னை நாள் காதலியை தேடுதல் பாமினியிலும் .வெளிநாட்டில் இருந்தபோதே இறந்து விட்டிருந்த அம்மாவின் தொடுகைக்காக ஏங்கியபடி நோய் வாய்ப்பட்டிருந்த அம்மா வளர்த்த நாயை கருணைக்கொலை செய்தலை றோணியனிலும் அழகாக உணர்வோடு கதைகளாக்கியிருக்கிறார் ..

கோமகனின் தனிக்கதையை பொதுக்கதையாக படித்து முடித்த போது .கீதையிலிருந்தோ  .குரானிலிருந்தோ. பைபிளில் இருந்தோ. ஒரு வசனத்தை உருவி உதாரணம் காட்டி நகர்த்தாமல் சொந்த வாழ்வை சம்பவங்களை உதாரணங்களாக காட்டி நகர்த்தியதற்கு ஒரு கை தட்டு ..ஆனால் எல்லாக் கதைகளையும் படிக்கும் போது எழுபது எண்பது கால உத்திகளே பெரும் பாலும் பயன் படுத்தியிருக்கிறார் .அதிக வர்ணனைகளும் ஆலாபனைகளும் உள்ளதாக எனக்குப் படுகின்றது.காலையில் கதிரவன் கண்விழித்தான் என்று கதை தொடங்கினால்  காலையில கந்தசாமி கூடத்தான் கண் விழிக்கிறான் அதை விட்டிட்டு விசயத்துக்கு வா ...என்கிற இன்றைய இளம் தலை முறையினரின் வாசிப்பையும் கவரக்கூடிய முறையில் கோமகன் இனிவரும் காலங்களில் தனது கதைகளில் புதிய உத்திகளை புகுத்த வேண்டும் என்பது கட்டளையல்ல வேண்டுகோள்.

நன்றி : http://eathuvarai.net/?p=4864
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…