Wednesday, August 19, 2015

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 09

தவறணையில் தத்துவ விசாரணை ( தேர்தல் )


லொக்கேசன் : பருத்தித்துறை ( கூவில் )

முகத்தில் ஆயிரம் சோகத்தை வைத்துக் கொண்டு சுறுக்கர் கள்ளுப் போத்தலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் . ஐமிச்சம் ஐயம்பிள்ளை கையில் சுறுட்டுக்கட்டுடன் தவறணைக்குள் என்ரர்  ஆகின்றார் .

ஐயம்பிள்ளை : என்னைக் காய் வெட்டிப்போட்டு வந்திட்டாய் என்ன? 

சுறுக்கர் : இல்லையடா பங்காளி எனக்கு இண்டைக்கு மனம் கொஞ்சம் சரியில்லை கண்டியோ . வா இதிலை குரு மண்ணுக்கை இரு .

ஐயம்பிள்ளை : வானமே பிஞ்சு கொண்டுண்டாலும் கிறுங்க மாட்டாய் நீ .உனக்கென்ன கோதாரி இப்ப வந்தது ?

சுறுக்கர் : இப்ப உனக்கே தெரியும் நேற்று காலங் காத்தாலை ரெண்டுபேரும் போய் உந்த சுமந்திரன் வரக்கூடாது எண்டுதானே போட்டுட்டு வந்தம் இப்ப பார் எல்லாம் தலைகீழாய் கிடக்கு .

ஐயம்பிள்ளை : அண்ணை உண்மையிலை லெக்சன் எண்டால் என்ன ?

சுறுக்கர் : இரண்டு பேருக்கும் கள்ளை வார்த்தவாறே நக்கல் சிரிப்புடன்," தம்பி இங்காலை ஐயம்பிள்ளைக்கு மூளை பிரட்டல் குடு ராசா" . ஆ ........ என்ன கேட்டனி ? உனக்கு விளங்கிற மாதிரி சொல்லுறன் .லெக்சன் எண்டால் மச்சான், ஒருத்தனை சனம் எல்லாம் ஒண்டு கூடி ரகசியமாய் வாக்கு போட்டு எங்கடை அடுத்த நாட்டாம்மை நீதான் எண்டு முடிக்கிறது தான் லெக்சன் .ஆனால் இப்ப என்னடாவெண்டால் சனங்களை வெறும் மடயராக்கி சனங்களுக்கே தெரியாத முதலாளியளும், பெரிய பெரிய வங்கியளும், வேறை நாடுகளும் தான்  எங்கடை நாட்டிரை நாட்டாமையை டிசைட் பண்ணுகினம். இதுகள் விளங்காமல் இங்கத்தையான் சனங்கள் எதோ தங்கடை கோயில் திருவிழா மாதிரி கூடி கும்மியடிக்கிறதும், ஒருத்தனை ஒருத்தன் டக்கால்ட்டி பண்ணுறதும் தாங்கேலாமல் கிடக்கடா ஐயம்பிள்ளை. இல்லாட்டில் எப்பிடி சுமந்திரன் வரேலும் ? சொல்லு பாப்பம்? அதோடை பார் அடுத்த கூத்தை, சிவாஜி லிங்கம் மகிந்தரோடை கேம் கேட்டு கவிண்டு கொட்டிண்டிருக்கிறார். அதோடை கண்டியோ  பிள்ளைப் பெறப்போறவள் சும்மா கிடக்க பக்கத்திலை கெல்ப்புக்கு நின்டவள் வயித்து வலியிலை ஊரைக் கூட்டின மாதிரி உந்த வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் பட்ட பாட்டை பாத்தியே ? விட்டால் இவையே எங்களுக்கு தமிழ் ஈழம் எடுத்து தந்து போடுவினம் எண்ட மாதிரி பேஸ் புக்கிலை அவையின்ரை டான்சுகள். இங்கை சனம் படுற பாடுகளை பத்தி அவைக்கு அக்கறை இல்லை . தங்கடை குடும்பத்திலை இங்கை இருக்கிறவையை வைச்சு கொண்டு வடக்கு கிழக்கு சனம் எல்லாம் சோக்காய் இருக்கினம் எண்ட நினைப்பு அவைக்கு . இதெ ல்லாம் எனக்கு பண்டி விசர் கண்டியோ. உதுகள் எல்லாம் சந்தனம் மெத்தின கேசுகள் . இல்லாட்டில் சும்மா கிடந்த சைக்கிளுக்கு காத்து அடிச்சு விட்டிருப்பினமே ?

அதோடைமச்சான்  ஐயம்பிள்ளை,  சனம் எல்லாம் இப்ப எல்லாம் வலு முன்னேத்தம் கண்டியோ. அவைக்கு முந்தின மாதிரி அமுதர் மங்கையர்கரசி  மாமி, இங்காலை சிவசிதம்பரம் மாதிரி டக்கால்ட்டி பேச்சுகள் எல்லாம் எடுபடாது. என்னத்துக்கு கூட்டத்துக்கு போய் மினைக்கெடுவான்  எண்ட நினைப்பு சனத்துக்கு சனம் எல்லாம் வெள்ளனவே டிசைட் பண்ணிப் போட்டு எல்லாற்றையும் உரு ஆட்டத்தைப் பாத்து சிரிச்சு கொண்டு நிண்டுதுகள் . ஆனாலும் மச்சான், மைத்திரி சும்மா இருக்காமல் பொலிஸ் காணி அதிகாரத்தோடையாவது பிரச்சனயை சோட் அவுட் பண்ண வேணும். . அதோடை வீட்டுக்காறர் உள்ளுக்கை போய் கடிபடாமல் வெளியாலை நிண்டு மைத்திரிக்கு சப்போர்ட் பண்ணவேணும் கண்டியோ. இதுதான் இண்டையான் சுறுக்கன்ரை தவறணை பேச்சு மச்சான் ஐயம்பிள்ளை .

சுருக்கு சுறுக்கர்

18/08/2015 

Saturday, August 15, 2015

எனது பார்வையில் சோபசக்தியின் BOX,(பெட்டி) நாவல் (திறனாய்வு ).


எனது பார்வையில் சோபசக்தியின் BOX,(பெட்டி) நாவல் (திறனாய்வு ).


அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் "பெட்டி"  நாவல் வாசிக்க நேர்ந்தது. அந்த வாசிப்பின் பொழுது என்மனதில் வந்த தீர்மானங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

பொதுவாகவே கதை சிருஷ்டிகர்த்தாக்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை  இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX ("பெட்டியை ") வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. இதற்காக நூலாசிரியருக்கு ஓர் கைதட்டல் கொடுக்கலாம். நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் கதைமாந்தர்களினூடாக, அவர்களினுடைய பார்வையில் இருந்துகொண்டே கருத்தியல் வாதங்களை முன்வைக்கின்றது. இதுவும் நூலாசிரியரின் புதிய கதைசொல்லும் பாணியாக என்னால் உணரமுடிந்தது. அத்துடன் வாய் பேச முடியாத குழந்தைக்கு அந்தக்கதை மாந்தர்கள், யுத்தத்தின் வலியையும் இராணுவத்தின் கொடுமைகளையும் போரம் தியேட்டர் (Forum Theatre) நாடக அரங்க முறையில் அந்தக்குழந்தைக்கு விளக்கிக் கொண்டு சென்றதும்  நூலாசிரியரின் புதிய அணுகுமுறை என்றே எண்ண இடமுண்டு.

"பெட்டியின்" ஆரம்பமான காணிக்கைப்பத்திரம் பின்வருமாறு வருகின்றது " இரத்த சாட்சியான பாலச்சந்திரனையும், ஈழப்போரில் மாண்ட ஆயிரமாயிரம் குழந்தைகளையும் நினைவுகொள்கின்றேன். எங்களது சந்ததியைக் காக்க நாங்கள் தவறியிருந்தோம். அந்த மாசில்லாக் குழந்தைகளின் இரத்தப்பழி நம்முடனேயே இருக்கின்றது ". இந்தக் காணிக்கைப்பத்திரம் தாயகத்தின் விடுதலைப்போரில் பங்கு பற்றிய அனைத்துத்  தரப்பு போராளிகளின் வலியாகவே என்னால் உணரமுடிந்தது. இந்த வரிகளைத் தட்டிக்கழித்துவிட்டு யாருமே ஈழத்துப் போரியல் வரலாறு பற்றிப் பேசமுடியாது.

251 பக்கங்களில் பல பெட்டிகளுடன் நாவலாக விரிந்த "பெட்டியை"  ஒரு பெட்டியாகச் சுருக்கினால் " சிங்களக் கிராமமான மதவாச்சியில்  "ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன்" என்ற பெரும் செல்வந்தரின் ஒரேயொரு மகனாகப் பிறக்கும் சந்த, அந்தக்கிராமத்தில் இருக்கும் புத்த விகாரைக்கு துறவியாக வருவதற்குப் பெற்றோரால் நேர்ந்து விடப்படுகின்றான். செல்வச்செழிப்பில் வளர்ந்த சந்தவுக்கு மடாலயத்தின் கட்டுப்பாடுகள் குடைச்சல்களை ஏற்படுத்துகின்றன. இறுதியில் அங்கிருந்து தப்பி கால் போன போக்கில் சென்று வன்னியில் உள்ள " பெரிய பள்ளன் குளம் " என்ற குக்கிராமத்துக்கு வருகின்றான். அங்கு சந்த ," கார்த்திகை" என்று  அந்த மக்களால் அழைக்கப்பட்டு, அவர்களின் செல்லப்பிள்ளையாக  பெரிய பள்ளன் குளத்து அணைக்கட்டில் இருந்த ஆதாம் சுவாமியின் கல்லறை வீட்டில் வாழ்ந்து வருகின்றான்.அங்கு அவன் கூடுதலாக "அமையாள் கிழவியின்" அரவணைப்பில் இருந்தான். பசிக்கு அந்த கிராம மக்கள் போடும் சோற்றை யாசகமாக பெற்று உண்கின்றான். அவன் அந்த மக்களின் செல்லப்பிள்ளையாக மாற வேண்டிய முக்கிய காரணமாக கார்த்திகை வாய் பேசமுடியாத ஊமையாக இருந்ததே . சிறிய கால ஓட்டங்களின் பின்னர் இலங்கை இராணுவம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பெரிய பள்ளன் குளம் கிராமத்தை பிரகடனப்படுத்தி அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு சொல்கின்றது. அமையாள் கிழவியையும் கார்த்திகையையும் தவிர எல்லோருமே அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இராணுவம் இறுதியாக ஆதாம் சுவாமி கல்லறை வீட்டை பெட்டியடித்து சுற்றி வளைத்த பொழுது, கார்த்திகை அந்த ராணுவத்துடன் சிங்களத்தில் உரையாட ஆரம்பித்து தனது பூர்வீகத்தை சொல்கின்றான். குளத்திலே இறந்த அமையாள் கிழவியின் நிர்வாண உடலை துறவிகளுக்குரிய போர்வையைப் போர்த்தி இராணுவ உதவியுடன் சந்த ஸ்வஸ்திக தேரர் அடக்கம் செய்ய செல்வதுடனும் , பின்இணைப்பு ஒன்றுடனும்  "பெட்டி" ( box)  நிறைவடைகின்றது .

நாவலை வாசிக்கும் பொழுது பல "உபபிரதிகள்" நாவலினூடாகச் செல்கின்றன. பிரான்சிலே இருந்து பெரிய பள்ளன் குளத்துக்குச் செல்லும் சகோதரர் டைடஸ் லேமுவேல் "உபபிரதியை" விட மற்றைய உபபிரதிகள் பெட்டியின் வாசிப்புச் சுவாரசியத்துக்கு இடைஞ்சல் தந்து மனதில் ஒருவித அயர்சியை ஏற்படுத்துகின்றன. அதாவது வாசகன் பல பெட்டிகளைக் கடந்து மெயின் பெட்டிக்கு வரவேண்டியிருக்கின்றது. நாவலின் இரண்டாவது கதை சொல்லியாகிய கார்த்திகை என்ற குழந்தை ஒரு கட்டத்தில் அதனது நண்பர்கள் மத்தியில் நிர்வாணமாக நின்று " சுயஇன்பம்" செய்கின்றது. பெரிய பள்ளன் கிராமத்து மக்களால் வாய் பேசமுடியாதவன், யாருமற்ற அநாதை என்ற அனுதாப அலைகளால் வளர்ந்து கொண்டிருந்த ஓர் குழந்தை சுயஇன்பம் செய்வதை என்னால் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் காணிக்கைப்பத்திரத்தில்  போரில் மரணித்த குழந்தைகளின் இரத்தப்பழிக்கு கசிந்துருகிய நூலாசிரியர்  இந்த இடத்தில் சிறுவர்கள்  பாலியல் ரீதியாக எதையும் செய்வதற்கு பச்சைக்கொடி காட்டுவதன் மூலம் தனது குழம்பிய மனநிலையை வாசகர்களுக்குக் கொடுப்பதாகவே எண்ணுகின்றேன். 

இருந்தபோதிலும் இன்னுமோர் கோணத்தில் இந்த சூழ்நிலையைப் பார்த்தால், குழந்தை மனது என்பது கார்பன் பிரதி போன்றது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். பெற்றோரால் மடாலயத்துக்கு நேர்ந்துவிடப்பட்ட குழந்தைமீது  மடாலயத்தில் இருந்த பௌத்த பிட்சுக்கள் தங்கள் பாலியல் வக்கிரங்களை தீர்த்திருப்பதாலும் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்க வாய்புகள் உண்டு. இந்தக்கோணத்தில் பார்த்தால் நூலாசிரியர், புனிதங்களை இறுக்கமாகக் கட்டிக்காக்கும் இலங்கையின் பௌத்தமத மடாலயங்கள் மீதான தனது  காட்டமான விமர்சனம் ஒன்றைப் பதிந்திருக்கின்றார்  என்றே எண்ண இடமளிக்கின்றது.

நாவலின் ஆரம்பத்தில்  அமையாள் கிழவி செத்து மிதந்து கொண்டிருந்த காட்சியின்  வர்ணனை ஏறத்தாழ மூன்று வருடங்களிற்கு முதல் எதுவரை இலக்கிய சஞ்சிகையில் வெளியாகிய "அங்கையற்கண்ணி " சிறுகதையினை எனக்கு நினைவு படுத்தியது. இதில் அமையாள் கிழவியின் இறந்த உடலைப் பற்றிய வர்ணனை வாசிக்கக் கூசுகின்றது. அத்துடன் நாவலின் சில இடங்களில் இழி சொற்கள் ( தூசணங்கள் ) தாராளமாகவே வந்திருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றியே வசைபாடுகின்றன. நூலாசிரியரின்  தொடர்சியான பெண்களையிட்ட இழிபார்வைக்கு எந்தவொரு பெண்ணியவியலாலர்களும் கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமான விடயமாகவே எனக்கு தெரிகின்றது . நாவலில் இப்படியான இழி சொல்லாடல்கள் நாவலின் இலக்கியத்தரத்துக்கு இடைஞ்சல் தருகின்றன. இத்தகைய  இழிசொற்கள் ஒருவேளை மலிவான இலக்கிய ரசனை உள்ளவர்களை சென்றடையலாம். ஆனால், நாகரீகமான வாசகர்களை சென்றடையாது. நாகரீகமானவர்கள் என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பானதே. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பான வாழ்கை நடைமுறைகளையும், பேச்சு நடைகளையும் கொண்ட மனிதர் குழுமத்தை நாகரீகமானவர்கள் என்று பொருள் கொள்ளலாம்.

நாவலில் நூலாசிரியர் வரலாறு சம்பந்தமான இடங்களில் தனது நுண்ணிய  ஏகடியங்களைப்  பரவி புலித் தேசியவாதிகளை கவர முயற்சித்து இருக்கின்றார்  என்றே எண்ணுகின்றேன். நாவலின் பக்கம் 106 இல், "காலையில் யுத்தம் முடிந்திருந்தது. நூற்றுக்கணக்கான கருத்த உடல்களை வெள்ளையப்படை புரட்டிப் புரட்டிப் பார்த்தது .அங்கே கிடந்த பல உடல்கள் அடையாளம் தெரியாமல் சிதைந்திருந்தன .அவற்றிடையே கால்களைப் பரப்பி முகம் முற்றாகக் கருகி நிர்வாணமாகக் கிடந்த குள்ளமும் பருமனுமான உடலொன்றை "பண்டார வன்னியன்" என ஆங்கிலேயப்படைகளுடன் வந்திருந்த "நெடும்மாப்பாணமுதலி" அடையாளம் காட்டினான் .

அந்த உடல் அந்த இடத்திலேயே புதைக்கப்பட்டு அந்தப்புதைகுழியின் மேலே "இங்கே பண்டார வன்னியன் கப்டன் வொண் ட்ரிபோர்க்கால் தோற்கடிக்கப்பட்டான் " என்ற நினைவு கல்லும் நாட்டப்பட்டது. அதனால் அந்த இடம் பின்னர் கற்சிலைமடு என்றாயிற்று.

ஆனால் பண்டாரவன்னியனும் அவனது படைவீரர்கள் எண்மாரும் அந்தப் பெட்டி வடிவ நெருப்பு முற்றுகையை உடைத்துக்கொண்டு ஏற்கனவே வெளியேறி வவுனியாவை நோக்கி காட்டுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தனர் .

அதற்குப் பின்பாக வன்னி ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் முழுமையாக வந்தது .பண்டாரவன்னியன் கற்சிலைமடு சண்டையில் இறந்து போய்விட்டதாகத்தான் வன்னி மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். பண்டாரவன்னியனோ அதற்குப்பின்பும் ஏழு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிற்கும் கண்டி அரசனுக்கும் உறுதியான நட்பு இருந்ததினால் அவன் கண்டி இராச்சியத்துக்கும் வன்னிக்கும் இடையில் மாறி மாறி நடமாடிக்கொண்டிருந்தான். ஆங்கிலேயர்களை விரட்ட ஒரு படையைத் திரட்டக் கடுமையாக அவன் முயற்சித்துக்கொண்டிருந்த போதும் அது சாத்தியமில்லாமலேயே இருந்தது ".

இங்கு நூலாசிரியர் இரண்டு விதமான செய்திகளை சொல்லி நந்திக்கடலில் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும், ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு முயற்சி செய்தாலும் அது நடை பெறவில்லை என்றும் புலித்தேசியவாதிகளைக் குளிர்மைப்படுத்துகின்றார் . இது நூலாசிரியரின் வழமையான புலியெதிர்ப்பு பார்வையை விட்டு விலகிச் செல்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. இதை வேறுவகையில் பார்த்தால் இதுவரைகாலமும் கடும் புலியெதிர்ப்பு வாதங்களை தனது படைப்புகளில் வைத்து "துரோகி" ப் பட்டம் பெற்றுக்கொண்ட நூலாசிரியர், அதை துடைக்க முயற்சிக்கின்றாரா? என்று எண்ணவும் இடமளிக்கின்றது. மனிதர்கள் என்னதான் ஆட்டம் ஆடினாலும் பரிநிர்வாணம் ஒன்றினாலேயே ஆன்ம ஈடேற்றம் பெறலாம் என்ற பௌத்தத்தின் தத்துவங்களை கதையில் ஆங்காங்கே தூவி இருக்கின்றார். இறுதியாக, பல சிறுகதைகள் மூலம் வாசகர்களிடையே பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திய நூலாசிரியர் நாவல் என்று வரும்பொழுது தழும்பல் நிலையையே ஏற்படுத்துகின்றார். BOX (பெட்டி) நாவலில் சில குறைபாடுகள் இருந்தாலும் அது ஓர் காற்றடைத்த கனதியான பெட்டியாகவே என்னால் தீர்மானிக்க முடிந்தது. அத்துடன் இறுதிப்பகுதியான "முற்றுப்பகுதி " ( நாற்பதாம் கதை ,பின் இணைப்பு பக்கம் 245-251) நாவலுடன் ஒட்டாமல் துருத்திக்கொண்டு  இடைஞ்சலாகவே இருக்கின்றது. மாறாக, நூலாசிரியர் அமையாள் கிழவியின் இறுதி யாத்திரையில்  சந்த ஸ்வஸ்திக  தேரர் இராணுவத்தின் திரை மறைவுப் பெட்டிக்குள் நிர்வாணமாக நடந்து செல்வதுடன் நாவலை முடித்திருந்தால் கதை வாசகர்களிடையே அதிக அதிர்வுகளைப் பெற்றிருக்கும் என்பது எனது எண்ணமாகும் .

வல்லினதுக்காக 
கோமகன்
30 ஆனி 2015
நன்றி : http://vallinam.com.my/version2/?p=2228

Monday, August 10, 2015

சுவைத்(தேன்) 05

01 ஆராதனை


உனது ரசனைகள்
எவை என்பது
எனக்குத்
தெரியாமலே போய்விட்டது.

பறவைகளின் வீரக ஒலி,
வெளிறிய
வானில்
சுடரும்  ஒற்றை நட்சத்திரம்
காற்றின் சிறு சலசலப்பு:
சில சமயம்
அதன் சங்கீதம்,
தூரத்தில்… வெகுதூரத்தில்
தெளிவற்றுக் கேட்கும்
மழலைச் சொல்.
பிரியமான
உனது விழிமலரின்
மருட்சி.
கழுத்தோரம் தெரியும்
சிறுமச்சம்
என்று இவை எல்லாம்
எனக்கு….
எனக்கானவை
உனக்கு…..?

கால தாமதமாய்தான்
அந்த செய்தி
எனக்குத் தெரியவந்தது.
நீ என்னை விரும்பினாயாம்!

மரணப்படுக்கையில்
நீ
கிடந்தபோது
உனது மஞ்சள் பாரித்த உடம்பின்
அணுக்கள் தோறும்
உனது காதல்
நிரம்பி வழிந்தது.
உனது மூச்சின் வாசனையில்
அது இருந்தது.
கால தாமதமானாலும்
உனது காதலை
கண்ணீருடன்
நான் ஆராதிக்கிறேன்.

****************************************
02 படிமம்

புழுதி படிந்த
வெளித் திண்ணையில்தான்
நீ
படுத்துக்கிடந்தாய்.
உனது உடலில்
எல்லாமே
உலர்ந்து போய்க் கிடந்தன.
விரல்கள் ஓலை நெட்டியாய்….
கழுத்து நரம்புகள் புடைத்து,
பட்ட வேரின் பழுப்பு நிறத்தில்.
கண் உறையுள்,
சோர்ந்து கிடக்கும் விழிகள்.
கிழிந்த
புள்ளிச்சட்டையின்கீழாகக்
குருக்குத்திக் குட்டிவாழையின்
சவளல் தண்டாயக்
கால்கள்.
உன்னில்,
உயிர் ஒட்டிக் கொண்டிருப்பது
லேசாய்ப் படரும் மூச்சில் தெரிகிறது.
‘எங்களூர் பிள்ளைதான்….
அம்மன் கேயிலடி….’
ஆரோ சொன்னது கேட்டுத்
திரும்பிப்பார்த்தேன்.
லேசாய்க் கால்பதித்து
அசைந்து வருகிறாய்.
வரட்சியால்
கோலங் கெட்டுக் கிடக்கும்
நீ
எங்கள் ஊரின்
அசல்
படிமம்.

நன்றி : க சட்டநாதன் 

*******************
03 இரவு வனம்


இலையுதிர்காலத்தின் ஈரித்த நகரம்
கைவிடப்பட்ட புகையிரதநிலையம்.

நாசிகள் யூதர்களை ஏற்றிச்சென்ற, இரயிற் தண்டவாளங்கள்
இறுக அடித்துப் பூட்டிட்ட பெட்டிகளின் அதிர்வில் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

வெறுமனே திரும்பி,
கிடந்து துருப்பிடித்த புகையிரதப்பெட்டிகளுள்
மூச்சுக்காற்றுகள் இன்னமும் விலக விரும்பாது மிக மிக நெருங்கி
உழன்றுகொண்டிருக்கின்றன.

இப்பெட்டிகள் இன்று,
மனதில் உறைந்தநிலமிசை வாழா
நியமங்கள் ஒழுகா மனிதர்களின் கிராமமாயின.

கஞ்சாப்புகை வளையங்களில் தொங்கி மிதக்கும் குர்திஸ்காரனின் சொற்களை
ஆர்மெனியக்காரன் தன் கிளாரினெற்றுக்குள் இழுத்துக்கொள்கிறான்.

நான்கு அரக்கர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பழம் பெரும்
நாகரீகத்தின் செருக்குக் கொண்ட சொற்கள்
உருச்சுருங்காதுள்ளம் விரிந்து நடனமிட
பல்கெரியன் தனது வயலின் நரம்புகளால் அவற்றை வருடுகிறான்.

அவன் காதலி கைகள்விரித்து இடுப்பை நெளித்து மோகம் செய்கிறாள்
கள்ளுண்டதென நிலவு நிமிர்கிறது.

வைன் கிண்ணங்கள் சிணுங்காத
வாசனைத்திரவியங்கள் மணக்காத
நகரக் கோடியிற்
கேசத்தைக் கோதியும்
காது மடல்களை நீவியும்
மலைகளைக் கட்டியணக்கும்
காற்றும் காதலும் பெருகும் இரவு
ஆழங்களின் வனமாகிறது.

நான் அள்ளி வந்த நதியோ இதயத்தில் இருந்து பல்கிப் பெருகி
வெந்த புனத்து வாசமடக்கும் விழிநீரானது.

நன்றி : தேவ அபிரா 

************************
04 பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி!


இந்தக்கதையை
பெரியப்பு
சுருட்டுக்கொட்டிலிலை
சொல்லக்கேட்டு
அறுபது வருசமிருக்கும்
ஆனால் இது
அவர்காலத்துக்கும்
ஒரு தலைமுறை முந்திய கதை

யாழ்ப்பாணத்தை
வெள்ளையரான ஏசண்டுத்துரை
ஆண்டகாலம்
‘செம்மூக்கன்’ என்பது
அவரது பட்டப்பேர்
நீதிவான் (அவரும்வெள்ளையர்)
தீர்க்கமுடியாத வழக்குகள்
செம்மூக்கனெட்டைப் போகும்
தையலம்மை கைம்பெண்
தனியே வாழ்ந்து வந்தவள்
சீவியத்துக்கு
ஆடு, கோழி வளர்த்து வந்தாள்
பக்கத்துக்காணி
சொந்த மச்சானுடையது
அவன் ஒரு மிண்டன்
இவை இரண்டு பேருக்கையும்
காணிப்பிணக்கு
தலைமக்காரனால்
தீர்க்க முடியாது போகவே
நீதிவானிடம் போனது
கையுறையோடு
நீதிவானை
போய்க்கண்டாள் தையல்
தனக்குத் தெரிஞ்ச தமிழிலை
‘கவனிக்கிறன்’ என்றார் அவர்

ஒரு மாதம் ஆச்சு
மாரிகாலம்
பிரச்சினை கூடிப்போச்சு
தையலம்மை
நீதிவான் வீட்டுக்குப் போனாள்
குறுக்குக் கட்டு
வெத்திலை குதப்பிய வாய்
காதிலை
கல்வைத்த, கனத்த காதோலை
நீதிகேட்டு நின்றாள்
தையலம்மை

“சோனாசாரி மழை
அவற்றை (காணி) மேலை!
என்ரை கீழை!
வெள்ளமெல்லாம்
என்ரை வளவுக்கை!
ஏலுமெண்டா
தீர்ப்புச் சொல்லும்!
இல்லாட்டி
செம்மூக்கனெட்டை விடும்!
பட்டை என் முட்டை
பதினாறையும் தாரும்!”

********************************
05 காசியர் பேசிய கவிதை

காசியர் கமக்காரன்
தானுண்டு
தன் ஓறனை மாடுண்டு
வயலுண்டு
என வாழ்கிறவர்
அவருக்கு ஒரேயொரு
ஆம்பிளைப்பிள்ளை
‘கணேசு’ என்றழைக்கப்படும்
கணேசபிள்ளை!

தன்மகன்
தன்னைப்போல் மண்ணோடு மாயாமல்
படிச்சு
உத்தியோகம் பார்க்கவேணும்
என்ற கனவு
காசியருக்கு1
ஒருமைலுக்கப்பால் உள்ள
‘குளங்கரைப்பள்ளிக்கூடம்’
என்று ஊரார் குறிப்பிடும்
மிசன் பாடசாலையில்
பொடியனைச் சேர்த்தார்

கணேசு அப்பொழுது
மூன்றாம் வகுப்பில்
காலை பத்துமணி
பக்கத்து ஊரிலை
ஒருகுடிபுகுதலுக்கு
கால்நடையில் புறப்பட்டார்
காசியர்
வெள்ளை வேட்டி
தலைப்பா (கை)
நெற்றியில் திருநீறு
சந்தனப்பொட்டு!

ஐயனார் கோயிலைத்
தாண்டும் போது பார்த்தால்
கணேசு
தன்னை மறந்து
கிளித்தட்டு
மறித்துக்கொண்டிருக்கிறான்!

பிறகென்ன?
குடிபுகுதலை விட்டார்
குலக்கொழுந்தைச்
‘சாய்த்துக்’ கொண்டு
வீடு போனார்
செல்லமுத்து துடித்துப் போனாள்
காசியர் சொன்னார்:

“பல்லுவிளக்கி குளிக்க வா(ர்)த்து
கச்சை பிழிந்து
பழையது கொடுத்து
பழந்தண்ணி பருக்கி
வெள்ளை உடுத்து
ஏடுகொடுத்து
பள்ளிக்குப் போகவிட்டா(ல்)
தொண்டியான் காசிமகன்
யந்திரமாடுகிறான்காண்!”

***********************************
06 கதையின் கதை

கடவுளின் கூடையில்
தின்பண்டங்கள் தீர்ந்து போயிருந்தன
நீண்ட வரிசையில்
அவர்முன் நின்ற குழந்தைகள்
அவரையும் கூடையையும்
மாறி மாறிப் பார்த்தபடி
காத்திருந்தனர்
தரையில் சிந்திப்போயிருந்த
தின் பண்டத் துணிக்கைகளை
காவியபடி
வேறொரு திசையில் போய்க்கொண்டிருந்தன
எறும்புகள்
தமது முறைவந்து வெகுநேரமாகியும்
கடவுள் எதுவும் தராதது கண்டு
ஏமாற்றம் பரவலாயிற்று
குழந்தைகளின் முகங்களில்
அவர்களின் பார்வைகளைத்
தவிர்க்க விரும்பி
கூடைக்குள் பார்வை செலுத்தியபடி
தகைத்துப் போயிருந்தார் கடவுள்
ஆரம்பிக்கும்போது
அட்சயபாத்திரமென நம்பித்தான்
அள்ளியள்ளிக் கொடுத்தார்
எப்போது அது சாதாரண கூடையாய் மாறிற்று

என்பது புரியாமல்
கண்களை இறுகமூடிக்கொண்டார்

நன்றி : சோ பத்மநாதன் 

**********************************
07 திரவியம்


நேசத்தின் திளைப்பையும்
முடிவில் அதன் துரோகத்தையும்
அனுபவத்தில் கற்றறிந்து
சொந்த முகத்தின் விம்பம் இழந்தவளின் இசையிது

அநேகம் பேரின் கைகளில் நாணயமாய்
புழங்கிப் புகழடைந்தவள் அவள்
இரகசியக் குகைகளின் திறவுகோலாயும்
மந்திரச் சாவியாயும்
தன்னை உருமாற்றிக் கொண்டவள்

இனிமை முலாம் பூசிய நிலாக்கிண்ணங்களில்
அமாவாசைகளை நிரப்பி பருகுபவள்
முலைப்பால் போல வெளுத்ததும்
தீர்த்தம்போல குளிர்ந்ததுமான மனதையுடையாள்

துளசி இலைகளுக்குள் பத்திரப்படுத்தியுள்ள
தன் காதலை
கிண்ணங்களில் வார்த்து
மிகக் கவனமாகவே பகிர்ந்தளிக்கிறாள்
எத்தனை பங்கிட்டாலும் தீராமால் சுரக்கிறது
காதல் திரவியம்

பூட்டிப் பாதுகாக்க
காதல்
புராதன புதையலோ பொக்கிஷமோ
அல்லவென நம்புகிறாள்
திரி மாறித் திரி மாறி எரிந்தாலும்
அணையாத தீபத்துடன்
பிரகாசமாய் ஒளிர்கிறதவளின் காதல் சுடர்.

**********************************
08 நான் மழை


காணாமல்போனோரின் பட்டியலில் என் பெயர் கிடையா
இனி சேர்க்கவும் இயலா
இனந்தெரியாதோர், வெள்ளை வான்
எல்லாம் ஒன்றே எனக்கு

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கோ
எதிர்கட்சிகளின் அறிக்கைகளுக்கோ
அச்சமில்லை, அடங்கிப்போகவும் மாட்டேன்
கைது செய்தென்னைக் கட்டுப்படுத்தவோ
தேசதுரோக குற்றப்பெயரில் என்னை
நீதிமன்றில் நிறுத்தி தண்டனையளிக்கவோ முடியா

விசாரணைக்கழைத்தென்னை
பூட்சுகளால் மிதிப்பது, நகங்களைப் பிடிங்கி
நாடியுடைய அடிப்பதெலாம் என்னிடம் நடக்கா
தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டென்னை
இடித்தும் இடிக்காததுமான மிளகாய் சாக்கினுள்
முகத்தை புதைப்பது,
ஆண்குறியின் முன்தோலை சீவிப் பிதுக்கி சிரிப்பது
இது எதையும் நிகழ்த்த முடியாதென்னிடம்

பதின்மூன்றாம் திருத்தமாகட்டும்
நிறைவேற்று அதிகாரமும் ஆகட்டும்
என்னிடம் பிடுங்க முடியாதெதுவும்
நான் மழை
ஆட்டுத்தொழுவத்திலும் விழுவேன்
அரச மாளிகையிலும் விழுவேன்
என்னைக் கண்டு ஒதுங்கியே ஆகணும்.
ஆளுநர், அரசாங்க தலைவர் அனைவரும்
குடைபிடித்தாகணும் எனக்கு
நான் மழை
வேறுபாடின்றி நனைப்பேன்.

************************************
09 கடலின் காதலி


என் மென் பாதங்களை
ஈரக் கரங்கள் தளுவுகையில்
நானதை உணர்ந்தேன்
கடல் ஆண்

தீமூட்டலும் குளுமை மயக்கமும்
திருப்தியாய் நிகழ்ந்ததன்
அடையாள அணுக்களை
மோதிக் கொப்பளிக்கும் அதன்
நுரையில் கண்டேன்

தீராத காதலை குளிர் தென்றலிடம்
எனக்கு தூதனுப்பிற்று
என் காதுமடல்களை இதமாய் தடவி
கிளர்ந்து ஆசை மூட்டியது
கடலின் ஈர விரல்கள்

கரையில் எனைக் கண்டதுமே
வா வந்தென்னை அணை
எனக்கூவிற்று

உலர்வறிய இன்முகத்தோடும்
தாழிடமுடியா காதலோடும்
எனை தழுவி இறைந்து மகிழ்ந்தது
கூவிக் கூவி மீண்டும் மீண்டும்
அணைத்து என்னை ஆறுதலூட்டியது
என் தாகங்களின் சிற்றிடத்தையும்
ஈரத்தால் நிரப்பியது
என் தூய்மையில் அது தன்னை
கழுவி திருப்தி கண்டது

அலைக் கரங்களால் என்னையது
வாரியணைக்கும் ஒவ்வொரு கணமும்
எல்லையற்ற இன்பத்தைக் கொப்பளிக்கிறேன்
தொலைவறியா அண்டமொன்றை
எனக்குள் சுமந்துகொண்டு
பிரசவிக்கவோர் இடம்தேடிக் காத்திருக்கிறேன்.

நன்றி : சர்மிளா செய்யத் 
( http://eathuvarai.net/?p=436)


************************************
10 பின்னோக்கிப் பாயும் நதி


பாதை ஒன்று
ஓராயிரம் பயணங்கள்

பாதையிடம்
காலடிகளை ஒப்படைத்துக்
கடந்து செல்கின்றன கால்கள்

ஒவ்வொரு காலடிகளுக்குள்ளும் மரிக்கிறது
நிகழ் காலத்தின் ஆயுள்

நதியின் பாதையாகிப் பெருக்கெடுத்தோம்
பின்னோக்கிப் பாய்கிறது ஒரு நதி

அவரவர் பாதையில்
அவரவர் பயணங்கள்

************************************************
11 வெற்றிடங்களின் தொடுகை

எமது கரங்களறியும்
வெற்றிடங்களின் தொடுகையை

செவிமறுத்து நிகழுவன
நீண்ட உரையாடல்கள்
உள்ளே மெனங்களின் பேரோசை

இப்போதெல்லாம்
நாட்டப்பட்டுப்போனோம் நாம்

உனக்குமெனக்கும்
பதிலீடுகள் தரப்பார்க்கிறது காலம்
வெற்றிடங்களால்
அலைக்கழிக்கப்படுகிறது நட்பு

மீண்டும்,
எப்போது வெளிக்கொணர்வோம்
நம்மிலிருந்து மிகப்பெறுமதியானதை

தொலைந்து மீள்தலில்
மீளத்தொலைகிறேன் நான்
உன்னிடமிருந்தும் என்னிடமிருந்தும்
என்னை

நன்றி : யோகி 
( http://eathuvarai.net/?p=375)