Thursday, November 19, 2015

வேலி

வேலி


அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் அறைக்கு வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த போன் வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே  என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . "உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை  எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்" என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலைகணியைக் கட்டிப்பிடித்தேன் .போன நித்திரை திரும்பி என்னிடம் வர சண்டித்தனம் செய்தது. ஆவி பறக்கும் தேத்தண்ணியை போட்டுக்கொண்டு அறையில் கிடந்த செற்றியில் இருந்தேன் .தேத்தண்ணி சாயத்தின் மணம் மூக்கில் நுழைந்து உடம்பை முறுக்கேற்றியது. தேத்தண்ணியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் இந்தக் காலமை நேரத்தில் எனக்கு சூராவத்தை பிள்ளையார் கோயிலின் கொடியேத்தம் முக்கியமா ? என்று மனம் யோசித்தது.

************************************

எங்கடை  சனங்களால் செல்லமாய் அழைக்கப்படுகின்ற ஜப்(F)னா பட்டினத்தில் ஒரு சின்னப் புள்ளியாகத் தெரிவதுதான் சூராவத்தை. மொத்த குடிகளாக ஓரு  முன்னூறு குடும்பங்கள் இருந்தன. சூராவத்தையில் இருந்து பத்துப் பதினைஞ்சு ஒழுங்கைகள் தள்ளி வண்ணான் குண்டு குறிச்சியின் எல்லை தொடங்குகின்றது . இவர்களின் தொழிலாக ,சூராவத்தையார் விவசாயமும் வண்ணங்குண்டார் உடுப்புகள் தோய்ப்பதுமாக  இருந்துவந்தது . ஜப்(F)னா பட்டினத்தில் காலங்கள் பலகட்டங்களில் அதன் வாழ்க்கை முறையை மாற்றி இருந்தாலும் இந்த இரண்டு பகுதியும் தங்கள் நிலையில் இருந்து அசைவதாகத் தெரியவில்லை. சூராவத்தையாருக்கு தாங்கள் தோட்டம் செய்யாவிட்டால் வண்ணங்குண்டார் சோற்றில் கைவைக்க மாட்டார்கள்  என்ற இழி பார்வையும், தாங்கள் சூராவத்தையாரின் உடுப்புகளைத் தோய்க்காவிட்டால் உடுப்பே போட மாட்டார்கள் என்ற மிதப்பும் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு பகுதியும் சூராவத்தை பிள்ளையார் கோவில் கொடியேத்தத்தில் மட்டும் ஒன்றாக இருப்பார்கள் .கொடியேத்தத்துக்கு  வண்ணாங்குண்டில்  இருந்துதான் வெள்ளைத்துணி சூராவத்தை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துவரப்படும் இது இரண்டு பக்கத்திற்கும் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த பாரம்பரியம்.

ஒருநாள் மாலை தவறணையில் பம்பலுக்கு இரண்டு பக்கத்து பெடியளும்  வெவ்வேறு இடங்களில் இருந்து குடித்துக்கொண்டிருக்க, வெறிவளத்தில் நக்கல் கதைகள் இரண்டு பகுதிக்கும் நடந்து அதன் உச்சக்கட்டமாக," நாங்கள் வெள்ளை துணி தராவிட்டால் உங்கடை பிள்ளையார் கோயில் கொடி ஏறுமோடா" ?என்று வண்ணாங்குண்டார், எகிற சூராவத்தையார் இவர்களை துவைத்து எடுத்து விட்டார்கள். இதில் அடிவாங்கியவர்களில் நரேனின் ஒன்றவிட்ட தம்பியும் ஒருவன். பிரச்சனை விதானையார் வரை போய் விதானையாரின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு விதானையார் சூராவத்தை பகுதி என்பது ஒரு காரணமாக இருந்தது .வண்ணாங்குண்டு பெரிசுகளுக்கு பெடியள் "வெள்ளைத்துணி கொண்டு பொகக்கூடாது" என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். இந்த நேரத்தில் தான் நரேன் காலமை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடியேத்தத்தைப் பற்றி எனது காதில் போட்டிருக்கின்றான்.

****************************************

நரேன் என்னுடன் நட்பாக இருந்து பல வருடங்களாகின்றன. இருவரும் ஒரே ஊர் என்பதாலும் எமது நட்பு உடையாது இருந்தது. நரேன் பாரிஸ் வந்தபின்னர் சில காலம் வேறு வேலைகள் செய்துவிட்டு வங்கியில் இருந்து கடன் எடுத்து இங்கும் உடுப்புகள் தோய்க்கும் நிறுவனம் ஒன்றின் முதலாளியாகிப் பல வோஷிங் மெசின்களைப் போட்டு உடுப்புகள் தோய்த்துக் கொண்டிருந்தான். அவனது நிறுவனத்தில் பல தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவன் எவ்வளவு வளர்ந்தாலும் என்னுடன் இருந்த நட்பைக் குலைக்கவில்லை. நிறுவனத்தில் வரும் வருமானத்தின் ஒருபகுதியை வண்ணாங்குண்டு  வளர்ச்சிக்காக செலவழிப்பான். நான் ஏதாவது கேட்டால்," எனக்கு தெரிஞ்ச தொழிலை கொஞ்சம் மொடேர்னாய்  செய்யிறன். என்ரை ஊருக்கும் குடுக்கிறன். நீ ஏன் குத்தி முறியிறாய் ? என்று எனது வாயை அடக்கிவிடுவான். நானோ எனது வருமானத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓர் தொண்டு நிறுவனம் ஊடாக யாருக்கும் தெரியாது செய்து வந்தேன். 

****************************************


அன்று பின்னேரம் மீண்டும் நரேனது ரெலிபோன்  அழைப்பு வந்தது ," மச்சான் உனக்கு காலமை என்னமொரு விசயம் சொல்ல மறந்து போனன். முந்த நாள் என்ரை ஒண்டவிட்ட தம்பிக்கு உங்கடையாக்கள் வெறிவளத்திலை அடிச்சுப்போட்டாங்கள். நாங்கள் என்ன மசிரே................? இல்லை நாங்கள் என்ன மசிரோ எண்டு கேக்கிறன் ? என்ன இருந்தாலும் உங்கடை ஆக்கள் எங்களிட்டைதானே வரவேணும் ? இருந்துபாரடி எங்கடை விளையாட்டை. எப்பிடி பிள்ளையார் கோயில் கொடி ஏறுது எண்டு பாப்பம் ?" என்றான் நரேன். எனக்கு மெதுவாக கோபம் எட்டிப்பார்க்க தொடங்கியது " உன்ரை குடும்ப பிரச்னைக்கு ஏன்ராப்பா இதை ஊர் பிரச்சனையாக்கி பிள்ளையாரை இதுக்குள்ளை இழுக்கிறாய் ? "என்றேன். " நீ என்னதான் சொல்லு உதிலை நாங்கள் விட்டுத்தரமாட்டம். நீயும் பாக்கத்தானே போறாய் " என்று போனை துண்டித்தான் நரேன். இவனைத் திருத்தவே முடியாதா ? என்று எண்ணியவாறே வேலைக்குச் சென்று விட்டேன் . நாகரீகங்களையும் ஜனநாயகப் பண்புகளையும் மதிக்கின்ற இடத்தில் பலகாலம் நரேன் இருந்தும் தன்னை முன்னிலைப்படுத்த சிறு சிறு பிரச்சனைகளைக் கூடக் கிண்டிப் பெருப்பிக்கும் அவனது சிறுமைக்குணம் என்மனதை ஆட்டிப்படைத்தது. நான் ஊருக்குப் போகும் பொழுது இரண்டு பகுதியையும் சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

******************************************

என்னையும் சேர்த்துக்கொண்டு பாரிஸில் இருந்து பறந்த கட்டார் எயார்வேய்ஸ் பன்னிரண்டு மணித்துளிகளை முழுமையாக வானத்தில் கழித்து விட்டு அதிகாலைப் பொழுதொன்றில் கொழும்பில் வந்திறங்கியது.எயார்ப்போர்ட் சம்பிரதாயங்களை விரைவாக முடித்துக் கொண்டு காலை இன்ரர் சிற்ரியில் ஜப்(F)னா பட்டினம் நோக்கிப் புறப்பட்டேன். மத்தியானப் பொழுதொன்றில் ஜப்(F)னா பட்டினம் என்னை அணைத்துக்கொண்டது . நான் சூராவத்தயை அடையும் பொழுது ஒரு தாயின் அணைப்பில் குழந்தை கரைவதுபோலவே  இருந்தேன். சொந்தங்கள் பந்தங்கள் என்று நாட்கள் என்னை முன்னோக்கித் தள்ளின. ஒருநாள் மாலை வீட்டு வாசலில் இருந்து அம்மாவுடன் வீட்டுக் கதைகள் கதைத்துக்கொண்டிருந்த பொழுது "வீரகேசரி" விநாசித்தம்பியரே அந்தக் கதையைக் கொண்டுவந்தார்.

இந்த இடத்திலை "வீரகேசரி" விநாசித்தம்பியை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேணும். சூரவத்தையிலை ஆர் சாதிமான் எண்டு கேட்டால் தவ்வல் கூட விநாசித்தம்பியைத்தான் கையைக் காட்டும். தன்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினாலும் செம்பிலை தண்ணியை விட்டு ஆண்ணாந்து சொண்டு படாமல் குடிக்கிற ஆசார சீலன். அதோடை காய் தீட்சை எடுத்த சைவப்பழம். தனக்குப் பிறந்த ரெண்டு பெட்டையளையும் பொத்திப் பொத்தி வளத்து லண்டனிலை தனக்குத்தோதான இடத்திலை கலியாணம் கட்டிக்  குடுத்திருக்கிறார். அவனவன் வயிற்றுப்பாட்டுக்கு குனிஞ்சு வளைஞ்சு எழும்ப, லண்டன் பவுண்ஸாலை இவருக்கு​ மெயின் பொழுது போக்கு ஊர்த்துளவாரம்தான். ஜப்னா பட்டணத்திலை இருக்கிற கோயில் திருவிழாவிலை சாமியள் கேக்கினமோ இல்லையோ முதல் ஆளா நிண்டு விரதம் பிடிச்சு பக்திப் பழமாகவே விநாசித்தம்பியர் இருந்தார். ஆனாலும் அவரிலை இருக்கிற ஒரு அழுகல் பழக்கம் என்னவெண்டால், சூராவத்தையிலை ஒவ்வரு குடும்பத்திலையும்  நடக்கிற நிகழ்சி நிரல் எல்லாம் விரல் நுனியிலை வைச்சு ஊர் முழுக்க காவிக்கொண்டு திரிவார்.  இதாலை அவருக்கு "வீரகேசரி" எண்ட பட்டப் பெயரை சூராவத்தை பெடியள் வைச்சிருந்தாங்கள். இனி வீரகேசரி விநாசித்தம்பி  கதையிலை என்றி ஆகிறார் ............

கதை பெரிதாக ஒன்றும் இல்லை.," வண்ணாங்குண்டு பெடியள் பிள்ளையார் கோயில் தெப்பக்குளத்துக்கை இறங்கி விசமத்துக்கு குளிக்கிறாங்களாம். உந்த எளிய சாதியளை வைக்கிற இடத்திலை வைக்கவேணும். எங்களுக்கு உடுப்பு தோய்கிறவங்கள். எங்கடை தண்ணியிலை வந்து குளிக்கவோ? அதுவும் கோயில் தெப்ப குளத்துக்கை. உது எக்கணம் இது பெரிய வில்லங்கத்தைக் கொண்டு வரப்போகுது" என்று பதகளிப்பட்டார் "வீரகேசரி" விநாசித்தம்பியர். அம்மாவும் அவருடன் சேர்ந்து," ஓ............ அவங்களுக்கும் இப்ப நல்லாய் குளிர் விட்டுப்போச்சுது. அதோடை இந்த முறை கொடியேத்தத்துக்கு வெள்ளைத்துணி கொண்டு வரமாட்டினமாம். இந்த முறை திருவிழா கலம்பகத்திலைதான் முடியப்போகுது" என்று வீரகேசரி விநாசித்தம்பியருக்கு புகைப் போட்டா. எனக்கு இரண்டு பேரிலும் கோபம் கோபமாக வந்தது ," என்ன மனிதர்கள் இவர்கள் ? எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணி இப்பொழுது இந்த மடையர்களால் குட்டையாக வருகின்றதே! இவர்கள் என்ன படிக்காதவர்களா ? இளம் வயது பெடியளுக்கு இங்கு என்ன பெரிதாகப் பொழுது போக்குகள் இருக்கின்றன? குளம் குட்டைகள்தானே இவர்களது ஸ்விமிங் பூல்கள்? . அதென்ன நாங்கள் மட்டும் குளிக்கலாம் அவங்கள் குளிக்க கூடாது ?இது எந்த ஊர் நியாயம்? "என்று என் மனம் அலைபாய்ந்தது. இவர்களுக்கும் நரேனுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக நான் எண்ணவில்லை. எல்லோருமே எரிகின்ற காஸ் குக்கறில் குளிருக்கு கை காட்டிக்கொண்டு நின்றார்கள்.

எனக்கு எதோ வண்ணாங்குண்டு பெடியளிடம் ஒருமுறை கதைத்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. எல்லோரும் ஒன்றாகத்தானே படித்தோம் ? கதைப்பவன் கதைத்தால் ஒருவேளை சரியாகலாம் என்ற எண்ணத்தில் மறுநாள் காலை நண்பர்களை சந்திக்க சென்றேன். அவர்களை சந்திக்க முதல் பிள்ளையாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி சைக்கிளை விட்டேன் .அங்கு பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை .குருக்கள் ஆறுதலாக இருந்தார் என்னைக் கண்ட சந்தோசம் அவரது முகத்தில் தெரிந்தது. "ஐயா.......... இதுக்கு ஒரு சொலூசனும் இல்லையோ? ஏன் இப்பிடி சனங்கள் விசர் பிடிச்சு திரியுதுகள் ?இவ்வளவுகாலமும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே கொடி ஏறீச்சுது ? உங்களுக்கு ஏதாவது எத்துப் படுதே" என்று குருக்களை நோண்டினேன். "தம்பி நீங்கள் வெளியாலை இருக்கிறதாலை வித்தியாசமாய் யோசிக்கிறியள். இங்கை அப்பிடி இல்லை. இல்லாட்டி எங்கடை சனத்துக்கு எப்பவோ விடிவு வந்திருக்கும். சிங்களவன் இவ்வளவு உழுது தள்ளியும் இதுகள் திருந்தீச்சுதுகளே? கடைசி நேரத்திலையும் புளியம் பொக்கணையிலை நிண்டுகொண்டு குடிக்கிற தண்ணிக்கு  தள்ளுமுள்ளு பட்டுதுகள். இயக்கம் இருந்த நேரம் அடங்கி இருந்துதுகள். இப்ப திருப்பவும் ஆடத்தொடங்கீட்டுதுகள். இதிலை ஆரை எண்டு நோகிறது? காலம் காலமாய் வண்ணாங்குண்டார்தான் கொடித்துணி கொண்டுவாறவை. அது அவங்கடை உரிமை. அதை கொண்டுவரக்கூடாது எண்டு சொல்லுறது கொஞ்சம் கூட சரியில்லை .எல்லாம் பிள்ளையார் பாத்துக்கொள்ளுவார் .நீங்கள் விரும்பினால் எதுக்கும் சின்னாட்டியிட்டை கதைச்சு பாருங்கோ. அவர்தான் காலம் காலமாய் கொடித்துணி  கொண்டு வாறது. " " இந்த பிள்ளையார் எப்பவுமே பிரச்சனைக்குரிய ஆள்தான். இருக்கும் பொழுது சனங்களை சும்மா இருக்க விடமாட்டார் .நடந்து போய் கடலிலையோ குளத்திலை குளிக்க  இறங்கும் பொழுதும் சனத்தை உருவேத்திறதுதான் வேலை. வெட்டுக்கொத்து எண்டு ரத்தம் கண்டுதான் பிள்ளையார் ஒரு நிலைக்கு வருவார். " என்று என்மனம் சொல்லிக்கொண்டது.

எனக்கும் நண்பர்களுக்கும் சந்திப்பில் எதுவித பிரச்சனையும் இருக்கவில்லை. எல்லோரும் சொக்கன்  கடையில் ரீ குடித்துக் கொண்டிருந்தோம்.  நண்பர்கள்  நரேனைப்பற்றி கேட்டார்கள் .நான் இதுதான் சாட்டு என்று கதையை தொடங்கினேன் .அவர்களது முகம் கறுக்கத் தொடங்கியது .குஞ்சன் தான் முதல் கதையை தொடக்கினான் . "மச்சான் சொல்லுறதெண்டு குறைவிளங்கப்படாது. நீங்கள் எல்லாம் கதையிலைதான் இருக்கிறியளே ஒழிய நடைமுறையிலை மாறி நிக்கிறியள். உடுப்பு தோய்க்கிறது எங்கடை தொழில். தோட்டம் செய்யிறது உங்கடை தொழில். நீங்கள் தொழிலை தொழிலாய் பாக்கிறியள் இல்லை. எங்களை உங்கடை அடிமையள் மாதிரித்தான் பாக்கிறியள். அல்லாட்டி பம்பலுக்கு எங்கடை பெடியள் தவறணையிலை  கதைக்க கைவைச்சிருப்பியளா ? அவ்வளவுக்கு நாங்கள் உங்களுக்கு கேவலமாய் போட்டமா? அதாலைதான் எங்களுக்கு நரேன் இந்தமுறை சொன்னான் உங்கடையாக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணும் எண்டு". எனக்கு இப்பொழுது பிரச்சனையின் அடிஆழம் எல்லாம்  கிளியறாக விளங்கியது.

"சரி மச்சான் எங்கடை குரங்குகள் செய்தது செரியான பிழை. அவங்கழுக்காக நான் இப்ப உங்களிட்டை மன்னிப்பு கேக்கிறன். இந்த முறை ஒரு பிரச்சனையும் இல்லாமல் கொடி ஏறவேணும். இந்த கோயில் எங்கடை ரெண்டு பக்கத்துக்கும் பரம்பரை கோயிலடாப்பா. ஒரு அற்ப விசயத்துக்காக நாங்கள் வெட்டுகுத்துப்பட வேணுமோ ? நாங்கள் மனம் விட்டு கதைக்கவேணும். இதிலை ஆர் பெரிசு சின்னன் எண்டதில்லை பிரச்சனை. நாங்கள் இளம் ஆக்கள். பழசுகளின்ரை சேட்டையளுக்கு  சரியான அடி குடுக்க வேணும். பெரியாக்களை விடுங்கோடாப்பா. நாங்கள் பெடியள். நாங்களும் பிழை விட்டால் ஆர் மச்சான்  எங்கடை ஊரை காப்பாத்திறது? இதுக்கே எங்கள் தரவளி பெடியள் எல்லாம் காடுமேடெல்லாம் அலைஞ்சம்? எனது கதை அவர்களை ஆட்டம் காண வைத்தது. குஞ்சனே சொன்னான் ," மச்சான் என்ன பெரிய கதை எல்லாம் கதைக்கிறாய்? நாங்கள் அப்பிடியே பழகினம்? நீ கவலை படாமல் போ. பிள்ளையார் கொடி ஏறும். சின்னாட்டியண்ணை முறையாய் கொடித்துணி கொண்டுவருவார். ஆனால் இதுகளை கெடுக்கிறமாதிரி உங்கடைபக்கம் நடக்காமல் பாக்கிறது உன்ரை பொறுப்பு. கவலைப்படாமல் போட்டுவாடாப்பா " என்றான் குஞ்சன்.

சின்னாட்டியண்ணை முறைப்படி வெள்ளைத்துணி எடுத்துவர, குருக்கள் சின்னாட்டியண்ணைக்குக் காளாஞ்சி கொடுத்து பரிவட்டம் கட்டி கொடித்துணியை பெற்று, சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி பிரச்சனை இல்லாமல் ஏறியது. எமதுபக்கம் வழக்கத்தை விட பயங்கரமான அமைதியாக இருந்தது. இந்த அமைதி என்னை யோசிக்க வைத்தது .வீரகேசரி விநாசித்தம்பிக்குத் தனது பேச்சையும் மீறி நான் அவர்களை சமாதானப்படுத்தியது துண்டாகப் பிடிக்கவில்லை. "தம்பி வெளியாலை இருந்து கொண்டு நீங்கள் சுத்தமானவன் எண்டு காட்டாதையுங்கோ. நீங்கள் வித்தியாசமாய் செய்யிறன் எண்டு எல்லாரையும் குழப்பிறியள். அவை அவையை அந்தந்த இடத்திலை வைக்கவேணும். இல்லாட்டில் எங்கடை தலையிலை மிளகாய் அரைச்சு போடுவங்கள். இண்டைக்கு கோயில் குளத்துக்கை குளிக்கிறவங்கள் நாளைக்கு எங்களோடை சம்பந்தம் பேசுவங்கள். உதெல்லாம் முளையிலை கிள்ளிப் போடவேணும்" என்று சூராவத்தை விசுவாசத்தை என்னுடன் கதைக்கும்போதே காட்டிக்கொண்டார்.

திருவிழா முடிவுக்கு வரும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தால் சூராவத்தை குய்யோ என்றது . தீர்தத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த ஒரு விடியக் காலையில் தெப்பக்குளத்தில் சொப்பிங் பாக்கில் கக்கூசும், ஒரு சோடி செருப்பும் மிதப்பதாக ஊரைக்கூட்டி விட்டார் "வீரகேசரி" விநாசித்தம்பியர். இதை வண்ணாங்குண்டாரே செய்ததாக அழிச்சாட்டியம் செய்தார். பிரச்சனை விதானை மூலம் பொலிசுக்குப் போனது. பொலிஸ் எடுத்த எடுப்பில் எதையுமே  விசாரிக்காது குஞ்சனையும் இன்னும் சில நண்பர்களையும் தூக்கிக்கொண்டு போய் விட்டது. வீரகேசரி விநாசித்தம்பி வலு மும்மரமாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு நடையாய் நடந்தார். பின்பக்கத்தால் உயிர் கோழிக்கறியும்  மென்டிஸ் ஸ்பெசலும் இன்ஸ்பெக்டருக்கு தாராளமாக பாய்ந்தன.

இதற்கிடையில்  பிள்ளையார் கோயிலை விட்டே போய் விட்டார் என்று சூராவத்தையார் கதையை கட்டிவிட்டார்கள். பிள்ளையார் தேர் ஏறி முடிந்து அடுத்தநாள் தீர்த்தம் ஆடவெளிக்கிடும் பொழுது தான் சூராவத்தைக்கு வீரகேசரி விநாசித்தம்பி மூலம் சனி பிடித்துக்கொண்டது. இரவோடு இரவாக பொலிசைக்கொண்டு ஒருவருமே தெப்பக்குளத்தினுள் போகாத மாதிரி தெப்பக்குளத்தை சுற்றி முள்ளு வேலி அடித்து விட்டார். தெப்பக் குளத்தை சுற்றி அடைக்கப்பட்டிருந்த முள்ளு வேலிக்கு பின்னால் அந்த சபிக்கப்பட்ட வண்ணாங்குண்டு மக்கள் பிள்ளையார் குளிப்பதைக் காண முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அதில் சூராவதையாரும் கலந்து இருந்தார்கள் .சுற்ரிவரப்  போலிஸ் காவலுக்கு நின்றது. பிள்ளையாரோ குருக்களின் உதவியுடன் தன்னந்தனியனாக தெப்பக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார் . எனக்கு ஏனோ வன்னியில் இருந்த செயிண்ட் ஜோசெப், மெனிக் பாம் முகாமின் முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் நின்ற அந்த மக்களின் நிலையே மனதில் நிழலாடியது.


பிற்குறிப்பு :

அடிப்படையில் எங்களிடம் சாத்தியம் இல்லை என்றே எண்ணிவந்தேன். ஆனால் சாதீயமோ, எனது மக்கள் இவ்வளவு அழிவுகளையும் கண்டபின்னரும் இருக்கின்றது என்பதனை எனக்கு அண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் உணர்த்தின.அதன் விழைவே இந்தக்கதை.

எதுவரை ( பெரியபிருத்தானியா )
19 ஐப்பசி 2015
http://eathuvarai.net/?p=5023

Saturday, November 14, 2015

வெள்ளி 13 இன் அடுத்த நாள்


வெள்ளி 13 இன் அடுத்த நாள் 


நேற்றில் இருந்து மனதுக்கு மிகவும் சோர்வாக இருக்கின்றது. இரவு நித்திரை வரவில்லை. காலை 4 மணிக்கு தொடங்கிய எனது இன்றைய நாள் சற்றுமுன் மாலை 4 மணிக்கே நிறைவுக்கு வந்தது . நான் அதிகாலை தொடரூந்து நிலையத்தடியில் நின்றபொழுது எனது தொடரூந்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டது. இது ஸ்ரட் து பிரான்ஸ் புகையிரதநிலயத்தை ஊடறுத்து பாரிஸ் செல்லும் தொடரூந்து . என் மனதில் இனம் புரியாத பயஉணர்வு பரவியது .ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் வந்த இரண்டாவது அவசரகால நிலைபிரகடனம் அதிகாலை 12 மணியில் இருந்து ஆரம்பமாகியது. மக்களை வெளியில் எங்குமே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசே கேட்டுக்கொண்டது. வெள்ளி இரவே ஆரம்பமாகும் ஹப்பி அவேர்ஸ் ஒவ்வரு பார்களிலும் அதிகாலை 4 மணிவரை களைகட்டும். நடக்கப்போகும் விபரீதம் தெரியாது பியரிலும் சாப்பாட்டிலும் இருந்த அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ?? எல்லாமே மனக்கண் முன்னே சுழன்றடித்தன . வேறு வழியில் போய் பாதாள ரெயிலில் ஏறி இருந்தால் ஒரு பெட்டிக்கு நான்கு ஐந்து பேரே இருந்தார்கள். காலை வேளை 6 மணியளவில் போர் வீர்களின் நினைவு ஸ்தூபி இருக்கும் பகுதியான ஆர்க் து ட்ரியோம்ப் மனித நடமாட்டம் இல்லாதது மயான அமைதியாக என்னை வரவேற்றது. காற்றில் உதிர்ந்த பைன் மரத்து இலைகள் சரசரக்க நான் மட்டும் வேலைத்தலத்துக்குத் தனியனாக நடந்து சென்றேன். இதுவும் எனது வாழ்வின் ஓர் அனுபவம் என்று எடுத்துக்கொண்டாலும், இறந்த அப்பாவிகளது உயிர்களுக்கும் , காயப்பட்டவர்களுக்கும் என்னைப்போன்று மனஉளைச்சல் பட்டவர்களுக்கும் இந்த அரசும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும் என்ன பதிலைத் தரப்போகின்றன ?? உயிர் நீத்த அனைத்து அப்பாவி மக்களுக்கு எனது அஞ்சலிகளையும் காயம்பட்ட மக்களின் துயரிலும் மனதாரப் பங்கு கொள்கின்றேன் .

நேசமுடன் 

கோமகன் 

14 கார்திகை 2015
Monday, November 9, 2015

ஒரு விசரனப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை (சேனனின் லண்டன்காரர் )

ஒரு விசரனப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை (சேனனின்  லண்டன்காரர்  )


நான் ஏறத்தாழ இரண்டு வருடங்களாக லண்டன் காரனாக இருந்த காரணத்தால் நாவலின் தலைப்பை பார்த்தவுடன் லண்டன் பீப்பிள்ஸ் உடைய அதிமேதாவித்தனங்களையும், அதனுடன் பயணிக்கின்ற அவர்களுடைய வாழ்வியல் விழுமியங்களையும் சேனன் புதிதாக என்ன சொல்லப்போகின்றார் என்று எண்ணிக்கொண்டே பக்கங்களைப் புரட்டினேன் . எடுத்த எடுப்பிலேயே நான் இருந்த வாழ்கை காலத்தின் மிச்ச சொச்சங்களை லண்டன்காரர் பேசத்தொடங்கியது . உலக மக்களால் "லண்டன்" என்று வாய்பிளந்து பார்க்கப்படுகின்ற பெருநகரின் அடித்தட்டு (இழி ) மக்களது வாழ்வின் அவலங்களையும், அதனூடே பயணிக்கின்ற மூன்றாம் தர அரசியல் நிலைப்பாடுகளையும் , ஓரினசேர்க்கையாளர்கள் தொடர்பான பார்வை, அண்மையில் நடைபெற்ற கலவரம், அந்தக் கலவரத்தின் நுண்ணரசியல் என்று பல கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் லண்டன்காரர் மனத்திரையில் விரியச்செய்தது. இதில் சாந்தெலா "சோசலிஸ்ட் "ஆக சோசலிஸ்ட் கட்சியில் இணைவதும், அதுசம்பந்தமான உரையாடல்களும், கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் எப்படி ஓர் அமைப்பில் புனிதமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதை நூலாசிரியர் எள்ளி நகையாடியிருக்கின்றார்.  

"நாவல் என்றால் எத்தனை பக்கங்கள் இருக்கவேண்டும் என்று வரையறை இல்லை, மாறாக  அது சொல்லவந்த செய்தியை சரியாக சனங்களிடம் சொல்லியிருக்கின்றதா என்பதே முக்கியம்" என்பதற்கு இந்த லண்டன்காரர் ஒரு சரியான எடுத்துக் காட்டு. இதன் அனைத்து செய்திகளும் மொத்தம் 98 பக்கங்களுக்குள் அடங்கியிருக்கின்றன  .
அதற்குள் ஆரவாரங்கள், உருவல் எடுகோள்கள் ஏதும் இல்லாமல் தான் சொல்ல நினைத்ததை நூலாசிரியர் சரியாகவே சொல்லி இருக்கின்றார் நாவலை வாசிக்கும் பொழுது பல இடங்களில் கடும் வறட்சியுடன் கட்டுரைத்தனமாக இருக்கின்றது.

எல்லோரும் தான் கதை சொல்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வாசகனை வசப்படுத்தும் .ஆனால், இந்த நூலாசிரியர்  யாருமே யோசிக்காத ஒரு பக்கத்தைப் பிடித்து தனது நாவலை முடித்திருக்கின்றார். ஒரு படைப்பானது பொதுவெளியில் வந்ததின் பின்னர்  அந்தப் படைப்பை பலர் கூடியிருந்து தங்களது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றமாதிரி "விமர்சனம் " என்ற பார்வையில் கும்மியடிப்பதை தவிர்க்குமுகமாக நூலாசிரியரே தனது நாவலுக்கு தானே விமர்சனம் வைத்து நாவலை முடித்து வைத்திருக்கின்றார். இது உண்மையிலேயே இது பாரா ட்டப்படேண்டிய விடயம்.  

இறுதியாக ஒருசில கேள்விகள் வருவது இயல்பாகின்றது .................

01 நூலாசிரியர் சாந்தெலாவை அடிக்கடி கறுப்பி என்று அழைக்காது பெயர் சொல்லியே அழைத்திருக்கலாம். இது ஒரே நிறத்தை உடைய உயிரி அதே நிறத்தை உடைய அடுத்த உயிரியைப்பார்த்து தனது இழிபார்வையை வெளிப்படுத்துவது போலாகும். 

02 ஓரினச்சேர்க்கையாளர்கள் தனியே இழிநிலை மக்களிலேயா இருக்கின்றார்கள்? நடுத்தர மற்றும் உயர் நிலை மக்களிடையேயும் இந்த ஓரினச்சேர்கையாளர்கள் இருக்கின்றார்கள் தானே?  ஏன் இங்குதான் இருக்கின்றார்கள் என்று தூக்கலாக காட்டவேண்டும்? 

இவைகளை தவிர்த்து பார்க்கும் பொழுது லண்டன்காரர் காத்திரமான நாவல் என்றுதான் சொல்லவேண்டும் .

கோமகன் 

09 கார்த்திகை 2015

Wednesday, November 4, 2015

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 12

சுறுக்கரும் ஐ போனும்


ஹாய் யூத்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

என்ரை ஐ போனை பாத்துப்போட்டு அதென்ன நீ மட்டும் புது புது போனுகள் வைச்சிருக்கலாம் நான் என்ன குறைச்சலோ? எண்டு கொஞ்ச காலத்துக்கு முன்னாலை என்ரை தறும பத்தினி , எனக்கொரு ஐ பாட் வாங்கி தாங்கோப்பா எண்டு என்னட்டை ஆசையாய் கேட்டாள்...சரி பெரிசாய் அவள் ஒண்டும் கேக்கிறேலைத்தானே எண்டு நானும் ஒரு " ஐ பாட் எயார் "வாங்கி குடுத்தன் ..ஆளுக்கு அப்பத்தான் தானும் என்னை மாதிரி ஈக்குவலாய் இருக்கிறதெண்டு புள் ஹப்பியாய் இருந்திச்சுது . றோட்டாலை போற சனியை தூக்கி நடுவீட்டுக்கை செற்றியிலை இருத்தி வைச்சிருக்கிறன் எண்டு எனக்கு சிவசத்தியமாய் தெரியேலை பிள்ளையள் . இண்டைக்கு ஒரு அலுவலாய் வெளியாலை போனன். அலுவலை முடிச்சு போட்டு வீட்டை வர பிந்திப்போச்சுது. நான் பசி அவதியிலை சாப்பிடேக்கை மனுசி கேட்டுது , இன்ன இன்ன இடத்திலை எல்லாம் நிண்டனி. அங்கை உனக்கு என்ன வேலை எண்டு ? நான் போன இடமெல்லாம் எந்த கிரகம் நான் இங்கை வாறதுக்குள்ளை போட்டுக்குடுத்தவன் எண்டு எனக்குள்ளை யோசிச்சு கொண்டு, "என்னப்பா இவ்வளவு நேரமும் அலுவல் பாத்துப்போட்டு வாறன். விசர் ஞாயம் பறையிறீர்" எண்டன். அதுக்கு அவா சொல்லுறா, " இல்லை நீங்கள் போன் பண்ணாட்டிலும் எங்கை நிப்பியள் எண்டு எனக்கு சொல்ல ஆக்கள் இருக்கினம்" எண்டு கூலாய் சொன்னா. பேந்து நான் கொஞ்ச நேரத்தாலை என்ரை ஐ போனை நோண்டினால் அதுலை "பைண்ட் ஐ போன் " எண்ட அந்த சனியன் கிடக்கு . அதாலை பிள்ளையள் வீட்டிலை ஒரு ஐ போன் மட்டும் வைச்சிருங்கோ. இல்லாட்டில் சனி உங்கடை கையுக்கை கிடக்கு . சுறுக்கர் இப்ப ஒருஇடமும் அரக்கேலாமல் கிடக்கு எண்டால் பாருங்கோவன் .

சுருக்கு சுறுக்கர்

********************************************************

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது . சின்னன் பொன்னனுகளை ஞாபகப்படுத்திறது நல்ல விசையம் கண்டியளோ . ஆனால் சுறுக்கருக்கு எப்பவும் வில்லங்கமாய் மண்டை ஓடுறது பரவணி புத்தியாய் போச்சுது. நாங்கள் உண்மையிலை சின்னனுகளை நல்லவிதமாய் பாத்தாமோ எண்டு நெஞ்சிலை கைவைச்சு கேட்டால் பிறசர் தான் ஏறும்.சண்டை பிடிக்கிறம் எண்டு குஞ்சு குருமனுகளை கொண்டு போய் முன்னாலை விட்டுப்போட்டு பின்னாலை நாங்கள் கவர் எடுத்தம் . அங்காலை மகிந்தனும் சின்னனுகளைதான் எயிம் பண்ணித்தான் அடிச்சான் ஏனெண்டால் அதுகள் ரெறறிஸ்ட்டாம். இதுகளுக்கை தப்பி பிழைச்சதுகளை சந்தணம் மெத்தினதுகள் போய் சின்ன வயசிலையே படுக்க கூப்பிட்டீச்சினம். உந்த பழிபாவம் எல்லாம் எங்கடை சனத்தை பிடிச்சு ஆட்டுது கண்டியளோ .
ஆசியாவிலை எங்கடை நாடுதான் மழலைகள் பாலியலிலை கொடிகட்டி பறக்குது . இதுக்கெண்டே வெள்ளையள் அங்கை போய் சொர்க்கத்தை காணினம் . ஏனெண்டால் இங்கை சின்னனுகளிலை கையை காலை போட்டால் பெரிய பிரச்சனையாய் போடும் அவையளுக்கு. .இது காணாதெண்டு அங்கை பள்ளிக்கூடத்துக்கு போற வாற பெடி பெட்டையள் ஒழுங்காய் போய் வரேலாமல் கிடக்கு.எங்கடை சனமே அவ்வளவு காய்ச்சலிலை திரியுதுகள்.அதுகளை ரேஸ்ட் பண்ணிப்போட்டு கோதாரியிலை போவார் மேர்டர் எல்லோ பண்ணுறாங்கள் . சுறுக்கரை கேட்டால் உவங்கள் தரவளிக்கு பாக்குவெட்டி றீட்மெண்ட் தான் சரி.அதோடை அவைக்கு நல்லாய் செக்ஸ் என்னண்டால் என்ன எண்டு படிப்பிக்கவேணும் கண்டியளோ .

சும்மா இண்டைக்கு மாத்திரம் ஹப்பி சில்றன்ஸ் டே எண்டு சொல்லாமல் நாங்களும் மாறவேணும். சின்னனுகளை சின்னனாய் இருக்க விடவேணும். இங்கை அதுகளுக்கு அது பழக்கிறன் இது பழக்கிறன் எண்டு அதுகளை ராச்சர் பண்ணாமல் இருக்கவேணும். முக்கியமாய் சண்டையிலை எபெக்ட் ஆன சின்ன பிள்ளையளை ஒராளை தன்னும் தத்து எடுத்து நாங்கள் படிப்பிக்க வேணும். பேந்து அதுகள் உங்களை கடைசி வரைக்கும் மறக்க மாட்டுதுகள். இதுகளையெல்லாம் உடனை செய்யவேணும். இல்லாட்டில் எங்கடை சின்னனுகளை ஆராலையும் காப்பாத்தேலாது .

சுருக்கு சுறுக்கர்

******************************************************
வணக்கம் பிள்ளையள்,

ஆயிரம் பிக்கல் பிடுங்கலுகள் எங்களுக்கும் சோமாரி சோ வுக்கும் இருக்ககலாம், அனால் பொழுது போகாத கிரகங்கள் கொஞ்சம் அந்தாள் மண்டையை போட்டுட்டுதெண்டு புசத்த ஏரியா ரெண்டு பட்டுப்போய் கிடக்கு. ஆரெண்டாலும் உயிரோடை இருக்கிறவையை செத்துபொனதெண்டு சொல்லுறது சுறுக்கருக்கு துண்டாய் பிடிக்கேலை கண்டியளோ.

சுறுக்கரின் அவதானம்

********************************************


புலத்து விறாண்டல் 

ஹாய்........... போய்ஸ், , கேர்ல்ஸ் ,ஆண்ட்டீஸ், அண்ட் மாம்ஸ் ,
சுருக்கு சுறுக்கர்,ஐமிச்சம் ஐயம்பிள்ளை ஆக்கடை ரேஞ்சுக்கு தவறணையிலை போய் உடன் கள்ளு அடிச்சால்த்தான் திறம் கண்டியளோ , ஆனாலும் இந்த புலம் பெயர் டமில்சுக்கு யாழ்ப்பாணத்திலை இருக்கிற பெடி பெட்டையள் பியர் அடிக்கிறது பெரிய இடைஞ்சலாய் கிடக்கு. வாட் எ சேம் ..............

சுருக்கு சுறுக்கர்

*********************************************

சுறுக்கரும் சோலைவரியும்

ஹாய் "கிறாண்ட்"பாஸ் அண்ட் "கிறாண்ட்மா"ஸ்,

( லண்டனிலை இருந்து ஒரு ஆண்டி தங்களை கூப்பிடேலை எண்டு என்னை பிடிச்சு கடிச்சு போட்டா ) சரி....... பிரச்னைக்கு வாறன் .சுறுக்கர் ஒரு வீடு வாங்கினவர் கண்டியளோ. சுறுக்கற்றை வீட்டுக்கு கார் பார்க்கிங் செப்பறேற்ராய் ஒப்பின் வெளியிலை இருந்தது .இதாலை இன்கம் ரக்ஸ்காறன் வீட்டுக்கு ஒரு சோலைவரியும், பார்க்கிங்க்கு ஒரு சோலைவரியும் போட்டுகொண்டு வந்தான். ஊரிலை திருக்கை மாட்டு வண்டிலை ஓடித்திரிஞ்ச சுறுக்கருக்கு கார் ஒடப் பத்தியப்படேலை கண்டியளோ . எண்டாலும் தான் பாவிக்காத கார் பார்க்கிங்க்கு சட்டத்தை மதிச்சு ஒழுங்கு முறையாய் சுறுக்கர் சோலைவரி கட்டிக்கொண்டு வந்தவர் பாருங்கோ. உது ஐஞ்சாறு வரியமாய் நடந்து கொண்டு வந்துது .


ஒருநாள் ஒரு சமுசியத்திலை தன்ரை கார் பார்க்கிங் உண்மையிலை இருக்கோ? எண்டு பாக்க அந்த இடத்துக்கு போனன் . அட கோதாரி அங்கை ஒரு காரையும் காணேலை. பார்க்கிங் பூட்டிக்கிடக்கு. என்னவாயிருக்கும் ? ஒருவேளை வீட்டை வித்த ஏஜென்சி காறார் எனக்கு பினாட்டு அடைஞ்சு போட்டாங்களோ ? எண்ட பதகளிப்போடை வீட்டு கார்டியனிட்டை மெல்லிசாய் கதையை விட்டன். அவன் சொன்னான் " உங்களுக்கு விசயம் தெரியாதோ சுறுக்கர்? பார்க்கிங்கை இப்ப கவுன்சில் காறங்கள் எடுத்துப்போட்டாங்கள் . இப்ப எல்லாரும் வெளி இடத்திலைதான் கார் பார்க் பண்ணுறவை "எண்டான் . "எடே நான் அதுக்கு சோலை வரி கட்டிக்கொண்டு இருக்கிறன். உவங்கள் எனக்கு அறிவிக்கேலை. எப்ப எடுத்தவங்கள்?" எண்டு கேட்டன். அதுக்கு அவன் சொன்னான்," அது இப்ப மூண்டு வாரியத்துக்கு மேலை ஆகுது " எண்டான் .
எனக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்திப்போய் கவுன்சில் காறனிட்ட போய் லோ எடுத்தன். அவன் சொன்னான், "நீ சொலைவரி காறனிட்டை போய் நாங்கள் தாற கடிதத்தை குடு. நீ இவ்வளவு காலமும் கட்டின காசை தருவாங்கள்" எண்டு . நான் போய் சோலை வரிகாறங்களிட்டை போய் சொன்னன் "பாவிக்காத ஒரு கார் பார்க்கிங்குக்கு நீங்கள் எப்பிடி சோலைவரி போடேலும்? என்னாலை இனி வரி கட்டேலாது. நான் இவ்வளவுகாலமும் கட்டின வரியை திருப்பி தாங்கோ" எண்டு சொன்னன். அதுக்கு அவை சொல்லுகினம்," நீ வீட்டு ப்றோப்பரைட்டர் .பார்க்கிங்கை ஊத்தையாய் வைச்சிருக்கிறது. கார் பார்க் பண்ணிறது உன்ரை பிரச்சனை. கவுன்சில் எடுத்ததாய் சொல்லுறாய். அதாலை உன்ரை சோலை வரியை குறைச்சு விடிறம் " எண்டு சொல்லிச்சினம். எனக்கு மண்டை கலங்கீச்சுது. பிள்ளையள் நீங்களே சொல்லுங்கோ "பார்க்கிங் பாவிக்கேலாத கொண்டிசன் எண்டு அதை கவுன்சில் எடுத்து போட்டுது. என்னட்டை பாவிக்காத இடத்துக்கு சோலை வரி எண்டு ஆட்டைய போட்டுடாங்கள் இன்கம்ரக்ஸ் காறர். மச்சான் பிறான்சுவா ஹோலாந் இன்னும் ரெணடு வரியத்திலை சுறுக்கரை தேடி வருவியள் தானே ? அப்ப இருக்கடி சங்கு..............

சுருக்கு சுறுக்கர்

********************************************
சுறுக்கருக்கு ஆப்படிச்ச டமில் மான்

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ,

காத்தாலை சுருக்கருக்கு ஒருத்தன் கொதியை கிளப்பி போட்டான் கண்டியளோ. இண்டைக்கு காத்தாலை நான் வேலையிலை படு மும்மரமாய் இருந்தன் .ஒரு எட்டரை போலை எங்கடை டமில்ஸ் கப்பிள்ஸ் சாப்பிட வந்தீச்சினம். எனக்கு தூர கண்டவுடனையே விளங்கீட்டுது ,இண்டைக்கு நான் துலைஞ்சன் எண்டு. அப்ப அவை வந்து எல்லாத்தையும் சுத்தி சுத்தி பாத்துபோட்டு அலுவலாய் நிண்ட என்னை பிடிச்சு இங்கிலிசுவிலை தங்கடை இன்குவறியை தொடங்கீச்சினம். சுறுக்கர் லேசுப்பட்ட ஆளில்லை கண்டியளோ. அவரும் இங்கிலிசுவிலை மறுமொழி சொல்லி கொண்டிருக்க, இருந்தால் போலை மிஸ்ட்டர் டமில் "நான் சிறிலங்கனோ ?" எண்டு என்ரை நேம் பட்ச்சை பாத்துப்போட்டு இங்கிலிசுவிலை கேட்டார். நான் சிரிச்சன். அப்ப அவர் சொன்னார் "தானும் சிறிலங்கன் தான்" எண்டு . சுறுக்கருக்கு வாய் கேக்காமல் "நீ சிறிலங்காவிலை எந்த இடம்?" எண்டு கேட்டார் .அதுக்கு அந்த மிஸ்ட்டர் டமில் சொன்னார் " தான் ஒறிஜின் சிறிலங்கன் பட் ஐ ஆம் ப்ரொம் அவுஸ்த்திரெலியா " எண்டு .அப்ப பாருங்கோ பிள்ளையள்............ சுறுக்கர் கேட்ட கேள்விக்கு அந்த மிஸ்ட்டர் டமில் குடுத்து மறுமொழியை .உங்களாணை கேக்கிறன் எனக்கு உதெல்லாம் தேவையோ ?அவை வந்தால் வந்த அலுவலை பாத்து கொண்டு போகவேண்டியது தானே.? என்னை கண்ட உடனை விடுப்பு வித்தாரங்கள் பிறகு வந்து சுறுக்கற்றை வாயை கிண்டிப்போட்டு பேந்து எறிசொறி கதையள் கதைக்கிறது . பிளடி பக்கேர்ஸ் .................

சுருக்கு சுறுக்கர்

**********************************************

ஒரு பெண்போராளி தமிழினி செத்தது சுறுக்கருக்கு கவலையாய் தான் கிடக்கு .என்னெண்டாலும் ஒரு உயிர். அவாவின்ரை ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யிறன். ஆனால் ஒரு டவுட்டு ,சும்மா செத்த ஆக்களுக்கெல்லாம் கண்டமாதிரியெல்லாம் பட்டங்கள் குடுத்தவை இதிலை மட்டும் சைலண்டாய் இருக்கினம் ?? அட்லீஸ்ற் "தேசத்தின் அக்கா" அல்லாட்டில் "தேசத்தின் மூத்த மகள்" எண்டாலும் போட்டிருக்கலாம் .எனகெண்டால் ஒண்டுமாய் விளங்கேலை ...............


சுருக்கு சுறுக்கர் 

Monday, November 2, 2015

கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும் ( நேர்காணல் யேசுராசா )

கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்  ( நேர்காணல் யேசுராசா )


அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றிஇருக்கின்றார் . மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990)  துணை ஆசிரியராகவும் இருந்தவர்.

1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார். இதுவரை வெளியாகிய படைப்புகள் , தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989),அறியப்படாதவர்கள் நினைவாக (கவிதை, 1984),பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" (கவிதை, 1984, 2003),மரணத்துள் வாழ்வோம்" - (கவிதை, 1985, 1996),காலம் எழுதிய வரிகள்" - (கவிதை, 1994) தூவானம் - (பத்தி, 2001), பனிமழை" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002), "பதிவுகள்" (பத்தி, 2003), குறிப்பேட்டிலிருந்து" (கட்டுரைகள் 2007), திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013) நான் தாயகத்தில் நின்றபொழுது ஆக்காட்டி வாசகர்களுக்காக நடத்திய நேரடி நேர்காணல் இது

நேசமுடன் கோமகன்

*********************************

தாயகத்தின் முதுபெரும் பன்முக ஆளுமை கொண்ட உங்களை இளையதலை முறையினருக்கு அறிமுகம் செய்யுங்கள் .....

என்னைப்பற்றிய அடைமொழி சற்று ‘வீங்கி’யுள்ளது எனத் தோன்றுகிறது! யாழ்ப்பாணத்தில்  குருநகர் என்ற கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த  நான், ‘தபாற்கந்தோர்த் தலைவரும் தந்தியாளரும்’ சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். பாடசாலையில் கல்விகற்கும் பருவத்தில்  ஆரம்பித்த வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து, ஓரளவு சிறுகதை, கவிதை, பத்தி, விமர்சனம் போன்றவற்றை  எழுதுவதிலும் மொழியாக்கங்களிலும் ஈடுபட்டேன். திரைப்படம், நாடகம், ஓவியம், பொது அறிவு சார்ந்த  விடயங்களிலும் ஆர்வமுண்டு. அலை, கவிதை, தெரிதல் சிற்றிதழ்ச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளேன். இதுவரை ஏழு நூல்கள் இங்கும் தமிழகத்திலுமாக வெளிவந்துள்ளன. தற்போது முன்னரைப்போல் தீவிரமான செயற்பாடுகள் இல்லை; ஆயினும்,  ‘ஜீவநதி’ இதழிலும் முகநூலிலும்  கொஞ்சம் எழுதிவருகிறேன்.

தாயகத்தில் திரைப்படத்துறையில் உங்கள் பங்கு எப்படியாக இருந்தது ?

திரைப்படத் தயாரிப்பு, நடிப்பு என்றெல்லாம் இல்லை. சிறுவயதிலிருந்தே திரைப்படங்களைப்  பார்ப்பதில் ஆர்வம் உண்டு. பின்னர் எனது கொழும்புக் காலத்தில், விமர்சகர் கே.எஸ். சிவகுமாரனின் வழிகாட்டலில் பிறமொழிப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. கொழும்பு, பேராதனை ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான நல்ல படங்களைப் பார்க்க இயலுமானது. இதன் தொடர்ச்சியாக, 1979 – 1982 காலகட்டத்தில், மதிப்புக்குரிய  ஏ.ஜே. கனகரத்தினாவின் தலைமையின் கீழ் ‘யாழ். திரைப்பட வட்டம்’ என்ற அமைப்பின்மூலம், நல்ல பிறமொழிப் படங்களை யாழ்ப்பாணத்தில் திரையிடுவதில் ஆர்வத்துடன் இயங்கினேன். 1998 – 2006 வரையான ஆண்டுகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா. சிவச்சந்திரனுடன் இணைந்து, ஒவ்வொரு கிழமையும் பிறமொழிப் படங்களையும் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் விடியோவில் காட்டினோம்; காட்சியைத் தொடர்ந்து கலந்துரையாடலையும் நடத்தினோம். நல்ல திரைப்படங்கள் பற்றி அவ்வப்போது சிற்றிதழ்களில் எழுதியும் வந்துள்ளேன். அவ்வெழுத்துக்கள் ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’ என்னும் நூலாக வந்துள்ளன. அண்மைக் காலங்களில் நடைபெறும் இளைஞர்களின் சில குறும்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் எனது மதிப்பீட்டுக் கருத்துக்களை முன்வைத்து,  உரையாடி வருகிறேன். நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதிலும், நல்ல திரைப்பட இரசனையை ஊக்குவிப்பதிலும் கடந்த காலத்தில் செயற்பட்டமை உளத்திருப்தியைத் தருகிறது!

கலை இலக்கியத் துறைகளில் பெரும்பான்மை இனத்தினருடனான உங்கள் தொடர்புகள் எப்படி இருக்கின்றன?

எனது அரசாங்கப் பணி காரணமாக, பதின்மூன்று ஆண்டுகள் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்திருக்கிறேன். சிங்களத் திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியக் காட்சிகள் என்பவற்றுக்குச் சென்று பார்க்கும் வழக்கம் தொடந்து இருந்தது. சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் இவைபற்றி வருவனவற்றை வாசிக்கும் பழக்கமும் இருந்தது. ‘மல்லிகை’ போன்ற இதழ்களில் சிங்கள இலக்கியப் படைப்புகளைப் படிக்க முடிந்தது. எமது ‘அலை’ இதழிலும் சிங்களக் கவிதைகள், சிறுகதைகளின் மொழியாக்கங்களை வெளியிட்டுள்ளோம். சிங்களத்திலிருந்து மொழியாக்கமாக வரும் நூல்களைச் சேகரித்தும் வாசிக்கிறேன். ஆயினும், சிங்கள இலக்கியக்காரருடன் தொடர்புகள் ஏற்படவில்லை. திருமறைக் கலாமன்றம் 2003 அல்லது 2004 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடத்திய எழுத்தாளர் கலைஞர் சந்திப்பில், சிலருடன் உரையாட முடிந்தது. அண்மையில், ஆனைமடுவையில் செயற்படும் தோதென்ன வெளியீட்டு நிறுவனம், சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீட்டையும், சிறியளவில் எழுத்தாளர் சந்திப்பையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அங்கு சிங்கள எழுத்தாளர் சிலருடன் கருத்துப் பரிமாற முடிந்தது. முக்கியமாக, தோதென்ன அமைப்பின் அதிபரான சிட்னி மாக்கஸ் டயசுடன் தொடர்பு ஏற்பட்டது; இடைக்கிடை தொலைபேசியிலும் இப்போது அவர் தொடர்பு கொள்கிறார். அவரது சிறுகதைத் தொகுதி  ‘ஊரடங்குச் சட்டம்’ என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது; எனக்குப் பிடித்த தொகுதி அது! அதைக் கட்டாயம் வாசிக்கும்படி நண்பர் பலருக்கும் சொல்லியுள்ளேன்.  

எழுத்தாளர்களுடனான தொடர்பு குறைவாயினும், முக்கியமான சிங்களத் திரைப்பட நெறியாளர் பலருடன் அறிமுகம் உள்ளது. பிரசன்ன விதானகே, தர்மசேன பத்திராஜ, தர்மசிறி பண்டாரநாயக்க, அசோக ஹந்தகம, பராக்கிரம நிரியெல்ல, அனோமா ராஜகருண முதலியோரைக் குறிப்பிடலாம். எண்பதாம் ஆண்டளவில் பிரசன்ன விதானகேயுடன் பழக்கம் ஏற்பட்டது; கொழும்பில் ஜேர்மன் கலாசார நிலையம், அலியான்ஸ் பிரான்சேஸ் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்றவற்றில் நடைபெறும் திரைப்பட நிகழ்வுகளுக்குத் தவறாது நானும் கேதாரநாதனும் செல்வோம்; எம்மைப்போல் தவறாது வரும் இன்னொரு இளைஞன் பிரசன்ன விதானகே. அங்கு ஏற்பட்ட பழக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நெறியாளர்! தர்மசேன பத்திராஜ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்களத்துறையில் விரிவுரையாளராக இருந்தார். 1975 அளவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், ஆனந்த நடராஜா என்னும் பொருளியல்துறை விரிவுரையாளர், தற்செயலாக என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவரது ‘அகஸ்கவ்வ’ (ஆகாய கங்கை) என்னை நன்கு கவர்ந்த படம் எனச்சொல்லிக் கதைத்தேன்; தொடர்ந்து சிங்களத் திரையுலகின் முக்கிய படைப்புகளையும் நெறியாளர்களையும் பற்றிச் சொன்னபோது, அவர் ஆச்சரியப்பட்டார். அவர் மிகவும் எளிமையானவர். 1976 ஆம் ஆண்டில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்று வந்து சுண்டிக்குளி தபாற் கந்தோரில் பணியாற்றிய வேளை, அண்மையிலுள்ள வீடொன்றில் பத்திராஜ, சுனில் ஆரியரத்ன ( ‘சருங்கலே’ என்னும் இருமொழிப் படத்தின் நெறியாளர்; சிங்கள மொழித்துறை விரிவுரையாளர்), சுசரித்த கம்லத் (இவரும் சிங்கள மொழித்துறை விரிவுரையாளர்) ஆகியோர்  தங்கி யிருந்தனர். சில நாள்களின் பின்னேரங்களில், மூவரும் தபாற்கந்தோருக்கு வந்து என்னுடன் உரையாடியுள்ளனர். தர்மசிறி பண்டாரநாயக்க பலமுறை யாழ்ப்பாணம் வந்து, நாடகங்களையும் திரைப்பட விழாக்களையும் ஒழுங்குபடுத்தியுள்ளார். எல்லோருடனும் எளிமையாகப் பழகும் மனிதர் அவர்! அவரது நெறியாள்கையில் உருவான  ‘ஹன்ச விலக், ‘பவதுக்க’, ‘பவகர்ம’ ஆகிய முக்கியமான படங்களைப் பார்த்து இரசித்துள்ளேன்; அதேபோல், வசந்த ஒபேசேகரா நெறியாள்கைசெய்த  ‘பலங்ஹற்றியோ’ படத்தின் கதாநாயகனான அவரது நடிப்பும் மனதில் நன்கு பதிந்தவொன்று!

தாயகத்தில் தற்பொழுது ஈழத்துச் சினிமாவின் ஆளுமை காத்திரமானதாக உள்ளதா ?

குறும்பட முயற்சிகளில் இளைஞர் பலர் ஈடுபட்டுள்ளனர். ஆசை காரண மாகவே பலரும் ஈடுபடுகின்றனர். வழமையான இந்தியத் தமிழ்த் திரைப்படத் தாக்கங்களுக்கு உட்பட்டவையே பல. முறையான பயிற்சிகளும் இல்லை. ஆயினும், சிலர் வித்தியாசமான முறையில் சிலவற்றை உருவாக்க முயல்கின்றனர். எல்லாவற்றையும் என்னால் பார்க்க இயலவில்லை. பார்க்கக் கிடைத்தவற்றில் மதிசுதா, ஜோசித்தன், ஆனந்த ரமணன், கலிஸ், நெடுந்தீவு முகிலன் முதலியோரின் ஆக்கங்களில் பாராட்டத்தக்க அம்சங்கள் உள்ளன. பல குறும்படங்களில்  காட்சிப்படுத்தும் தன்மை பொதுவில் பாராட்டும்படியாக உள்ளது. கதை, திரைச்சுவடி போன்றவற்றில் – பேசுபொருளின் சரியான பார்வை தொடர்பில், கவனம் தேவை. சிறந்த உலகக் குறும்படங்களைப் பார்க்கும் பழக்கத்தின்மூலம், தமது இரசனையை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ளலாம். அண்மையில், ‘ஆர்ட்டிக்கல் – 14’ என்ற அமைப்பின் குறும்படப் பயிலரங்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது; சிங்களத் திரைத்துறையில் முக்கியமான பலர் பயிற்சி வழங்கினர். இதனால் நல்ல விளைவு களை எதிர்காலத்தில் பார்க்கலாம்! இரண்டொரு முழுநீளப் படங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நான் பார்க்கவில்லை; ஆனால் கதைச் சுருக்கம் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டவை அவையென உணர்த்துவது, ஏமாற்றத்தையே  தருகிறது.

தாயகத்து இலக்கிய வெளியில், தலித் என்ற சொல்லாடல் அத்தியாவசியம் என்று  கருதுகின்றீர்களா ?

தலித் என்ற சொல்லை  இங்கு யாரும் இலக்கிய வெளியில் கையாள்வதில்லை; ஓர் அந்நியச் சொல்லாகவே அது இன்றும் இருக்கிறது. அரசியல்  வெளியில் – அதுவும் வெளியிலிருந்து இங்கு வரும் – சிலர்தான்  அதனை உச்சரிக்கின்றனர். புத்திஜீவிகள் மத்தியிலேயே அருந்தலான இச்சொல், சாதாரண மக்களிடம் எந்தளவுக்கு அறியப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் எளிதில் உணரலாம். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றன பொதுவெளியில் முன்பு இயங்கின ; இன்று மறைந்துவிட்டன; அவற்றுக்கான தேவையும் இன்று அதிகமில்லை. ஆக்காட்டியில் வெளியான யோ. கர்ணனின் நேர்காணல், தெளிவாக இதுபற்றி விளக்குகின்றது; அவரின் பெரும்பாலான கருத்துக்கள் எனக்கும் உடன்பாடானவையே!

இலக்கியத்தில் உண்மைகள் இருக்கலாம் ; ஆனால் உண்மைகள் எல்லாம் இலக்கியங்கள் ஆவதில்லை என்பது பற்றி, உங்கள் கருத்து என்ன ?

கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும் என்பன ஏற்றுக்கொள்ளத்தக்கவையே! ஆனால், உண்மைகள் மட்டும் இலக்கியத்துக்குப் போதுமானவை அல்ல. எந்தப் பொருளும், எந்தக் கலை வடிவத்தில் அது வெளிப்படுத்தப்படுகின்றதோ அதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும்; வடிவச் செழுமை, செய்நேர்த்தி என்பவற்றைப் புறக்கணிக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, தமக்குப் பிடித்த விடயங்களை (தாம் நம்பும் உண்மை களை) வெளிப்படுத்தும் படைப்புகளை வெறுமனே  போற்றி ஆராதிக்கும் பண்பே, பொதுவில் காணக் கிடைக்கிறது. முற்போக்குவாதிகள், ஆத்மார்த்தம் பேசும் மெய்யுள்வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் ஆகிய எல்லோருமே இப்பண்பைக் கொண்டுள்ளனர் எனக் கருதுகிறேன்.

முற்போக்குவாதிகள், ஆத்மார்த்தம் பேசும் மெய்யுள்வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் ஆகிய எல்லோருமே இப்பண்பைக் கொண்டுள்ளனர் என்று கூறுகின்றீர்கள் சிறிது விளக்கமாக சொல்வீர்களா? 

மூன்று சாராரும் பொதுவில் தமது கருத்துநிலைகளை வெளிப்படுத்துவனவற்றை ஏற்றுப் பாராட்டுகின்றனர்; கலைக்குறைபாடுகளைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், தமதல்லாத ஏனைய பிரிவினரின் படைப்புகளில் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியும்போது, அவற்றைப் பிரச்சாரம் என்று கூறத் தயங்குவதில்லை! முற்போக்குப் படைப்புகளில்தான் கருத்துப் பிரச்சாரம் உள்ளது என்றே முன்னர் கூறப்பட்டது; ஆயினும், மற்றப் பிரிவுகளிலும் பிரச்சாரப் படைப்புகள் உள்ளன என்பதையே கூறவருகிறேன்.

உங்கள் பார்வையில் ஒரு கவிதைக்கு எது முக்கியம் என்று கருதுகின்றீர்கள் ?

ஒரு கவிதை எந்தக் குறிப்பிட்ட வரையறைக்குள்ளும் அடங்காமல், தனித்துவமானதாக இருக்கலாம். ஆனால், உணர்வுரீதியான தொற்றுதலை ஒரு கவிதை என்னுள் நிகழ்த்தவேண்டுமெனக் கருதுகிறேன். மரபுரீதியிலானதா  புதுக்கவிதையா, நேரே சொல்கிறதா பூடகமாகச் சொல்கிறதா, படிமங்கள் நிறைந்ததா அல்லவா, ஒற்றைப் பரிமாணங் கொண்டதா பல்பரிமாணங் கொண்டதா, செம்மொழி யிலானதா மக்கள் மொழியிலானதா என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை.

உங்கள் காலத்தில் முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம், மெய்யுள் இலக்கியம் என்று, இலக்கியப் பொதுவெளி பல்வேறு குழுமங்களாக இருந்தது. இவை இலக்கியத்துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்ததா ?

இம்மூன்று குழுமங்களுள்ளும் நான் இல்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்.  மூன்று  பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க படைப்புகள் வெளிவந்துள்ளனதான். ஆனாலும், இவை பெரிய “அதிர்வுகளை” இலக்கியத்துறையில் ஏற்படுத்தின எனக் கூறமுடியாது எனவே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியப் பிரிவில் கலைக்குறைபாடு மிக்க – பிரச்சாரப் படைப்புகளே அதிகம்; குறைந்த அளவில்தான்  கலைத்துவமான நல்ல படைப்புகள் உள்ளன. அவர்கள் முன்வைத்த ‘சோஷலிச யதார்த்தவாதம்’ பெரும்பாலான படைப்புகளில் காணமுடியாத ஒன்று! 1954 இல் முன்வைக்கப்பட்ட அக்கோட்பாடு பிழையானது என்ற அறிவிப்பை வெளிப்படை யாகச் சொல்லும் நிலைக்கு, 1988 இல், கலாநிதி கா. சிவத்தம்பி வந்தடைந்தார்!

நற்போக்கு இலக்கியம் என்று தனித்தவில் இசைத்த எஸ்.பொ., அக்கோட்பாடு வெறும் ‘லேபல் மாற்றமே’ என்று, தனது ‘நற்போக்கு இலக்கியம்’ நூலில் கூறியுள்ளார். அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் நல்ல படைப்புகளையும் தந்துள்ளார்.

மெய்யுள் இலக்கியப் போக்குத் தொடரவில்லை. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம், கலையை அழிக்கும் கலை, வடிவமற்ற வடிவம்(!) என்றெல்லாம் சொல்லப்பட்டது. இன்று எஞ்சியுள்ள மு. பொன்னம்பலமும் மெய்யுள் எழுதுவதாய்த் தெரியவில்லை. கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள்தான் எழுதுகிறார்; சிறுகதை என்ற பெயரில் இடைக்கிடை ‘கட்டுரை’யும் எழுதுகிறார்!

இதைவிடவும் முக்கியமான விடயம், இம்மூன்று பிரிவினரின் எழுத்துக்கள் பொது வாசகனைச் சென்று சேரவேயில்லை. ஆதாரம் தேவையானால், நூலகங்களில் உள்ள பெரும்பாலான ஈழத்துப் படைப்புகள் ( பல நூலகங்களில் ஈழத்து நூல்களே இருப்பதில்லை!) வாசகரால் படிக்கப்படாதவையாக இருப்பதைக் கண்டறியுங்கள். நூல்களும் சிற்றிதழ்களும் 200 – 300 பிரதிகள் மட்டும் அச்சிடப்படும் நிலைக்குக் கீழிறங்கியுள்ளன. பொது வாசகன் பரவலாக உருவாக்கப்பட்டிராமையும் முக்கிய காரணியாகும்! “அதிர்வுகளை” இவற்றிலிருந்தும் மதிப்பிடலாம்.

எதன் அடிப்படையில் முற்போக்கு இலக்கியப் பிரிவில் கலைக்குறைபாடு மிக்க – பிரசாரப் படைப்புகளே அதிகம் என்று சொல்கின்றீர்கள் ?

அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளே இலக்கியத்தில் கையாளப்படவேண்டும்; பிரச்சினைகள் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வினை வெளிப்படுத்தவேண்டும் என்றும் முற்போக்கினர் வற்புறுத்தினர். எனவே, சூழலினதும் பாத்திரங்களினதும் இயல்பினை மீறிக் கருத்துக்கள் வெளிப்பட்டுப் பிரச்சாரமாகின. ‘படைப்பு’க்களுக்குப் பதிலாக சூத்திரப்பாங்கான ‘தயாரிப்புக்கள்’ பெருகின. அதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அனுபவ வெளிப்பாடாக இலக்கியம் இருத்தல் வேண்டும் என்பதற்கும், வடிவரீதியான கலை அம்சங்களுக்கும் அவர்கள் (சிலரைத் தவிர) முக்கியத்துவம் கொடுக்கவில்லை; அவ்வாறு கொடுத்திருந்தால் உணர்வுரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவனவாக அவை மாறியிருக்கும். அரசியல், சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் மொழியாக்கப் படைப்புக்களில், பிரச்சாரமாகத் தாழ்ந்துபோகாத – கலைத்துவமான பலவற்றைக் காண முடிகின்றதே!

மெய்யுள் இலக்கியப் போக்குத் தொடரவில்லை என்று சொன்னீர்கள். இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருந்ததா ?

இக்கருத்துநிலையை முன்வைத்த மு. தளையசிங்கம் மறைந்தபின்னர், மு. பொன்னம்பலம் மெய்யுள் என்ற பெயரில் சிலவற்றை எழுதினார். அவரது குழுவி லுள்ள ஏனையோரான சு. வில்வரத்தினமோ இ. ஜீவகாருண்ணியனோ அதிகம் மெய்யுள்  எழுதியதாகத் தெரியவில்லை. சு. வி. மறைந்துவிட்டார்; ஜீவகாருண்ணி யன்  மௌனமாக உள்ளார்; மு.பொவும் தற்போது மெய்யுள் எழுதுவதில்லை. உண்மையில், மெய்யுள் என்பது இலக்கிய உலகில்  பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ, பின்நவீனத்துவம் என்ற பெயரில் ச. இராகவன் என்பவர் எழுதும் தனிமனித வக்கரிப்புக்களையெல்லாம்  ‘வடிவமற்ற வடிவம்’ (!?) என (மெய்யுளைப் போன்றதென), தற்போது மு. பொ. தூக்கிப் பிடித்தபடி உள்ளார்!

நம்மவர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நடைபெறும் இலக்கியச் சந்திப்புகள் பற்றிய உங்கள் பார்வை என்ன ?

சிறு குழு முயற்சியாகத் தொடர்ந்து நடைபெறுவதாக அறிகிறேன்; தமிழ்த் தேசிய எதிர்ப்பு, புலி எதிர்ப்பு  முதன்மை பெறுவதான விமர்சனங்களையும் பார்த்துள்ளேன். ஆயினும், 2001 இல் இலண்டனில் நானும் சு.வில்வரத்தினமும்  நின்றபோது, நோர்வேயில் நடைபெறும் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டோம். ஓர் அமர்வில் எனது ‘அலை’ சிற்றிதழ் அனுபவங்கள் பற்றியும், இன்னோர் அமர்வில். ‘நிதர்சனம்’ அமைப்பின் குறும்படங்கள் பற்றியும் நான் உரையாற்றினேன் என்பதையும் சொல்லியாகவேண்டும்.  எந்த முயற்சியிலும் ஓரளவு பயனாவது  கிட்டும் என்பதை இங்கும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சிற்றேடுகளிலும் இணைய வெளிகளிலும் பெரிதுபடுத்தப்படும் அளவுக்கு, இலக்கியச் சந்திப்பு நடைபெறும் நாட்டில் -  அயலிலுள்ள தமிழ் மக்களிடம், இதுபற்றிய செய்திகள் பரவலாகச் சென்றடைகின்றனவா தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா என்ற கேள்வியும்  உள்ளது!

புலம்பெயர் கதைசொல்லிகளது ஆக்கங்கள் பெரும்பாலும் ஒப்பாரி வகையான படைப்புகள் என்றவோர் விமர்சனம் உண்டு; இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

செங்கை ஆழியான் இவ்வாறு  “ஒப்பாரி” எனச் சொல்லியிருப்பதை அறிவேன்; பலவிதங்களிலும் அவரைக் கவனத்தில் கொள்ளவேண்டியதில்லை எனவும் சொல்வேன். தாயக நிகழ்வுகள் ஏற்படுத்தும் அல்லது தாயகம் பிரிந்த வலி உணர்வுகளைப் படைப்புகளில்  வெளிப்படுத்துவதை ஏன் குறையாகக் காணவேண்டும்? அதுவும் ஒருவகை அனுபவ வெளிப்பாடுதானே! படைப்பியல் அம்சங்களின் குறைபாடுகளை வேண்டுமானால் யாரும் விமர்சிக்கலாம். பல்வேறு அகப் புறத் தாக்கங்களினூடாக வெளிப்படும் புலம்பெயர் கதைசொல்லிகள் பலரின் படைப்புகள், புதிய அனுபவங்களைத் தருபவையாகவும் வித்தியாசமானவையாகவும் அமைந்துள்ளன. தாயக அரசியலை வெளிப்படையாகச் சுட்டிப் படைப்புகளில் விமர் சிக்கும் சுதந்திர வெளியும் அங்குதான் உள்ளது!

மலையக தமிழர்களுக்கு  நாம் பாரபட்சங்களை காட்டவில்லை என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தீர்கள் . ஆனால் இலங்கை அரசு என்றுமே மலையக தமிழர்களை இரண்டாம் பிரஜைகளாகத்தானே பார்த்து வந்திருக்கின்றது ?

‘காலச்சுவடு’ இதழில் கருணாகரனுக்கு நான் எழுதிய பதிலையொட்டிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத் தமிழர்களை முற்றிலும் மலையகத் தமிழர்களுக்கு எதிராகத் தனது கட்டுரையில் அவர் முன்னிறுத்தியதையே,  நான் மறுத்தேன். மற்றும்படி, யாழ்ப்பாணத் தமிழர் பலரால் அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதையோ, மலையகத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரால் பயன் பெற்றதையோ எப்போதும் நான் ஏற்றுக்கொள்பவன். இலங்கையில் உழைக்கும் பெருந்திரள் மக்களைக்கொண்ட சமூகம் மலையகத் தமிழருடையது. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளின் மாறிமாறி வரும் அரசாங்கங்கள், மலையகத் தமிழரை -  இலங்கைத் தமிழரைப் போலவே – இரண்டாம்தரப் பிரஜைகளாய்த்தான் கருதுகின்றன. தமது வர்க்க நலன்பேணும் தந்திரத் தொழிற்சங்க சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளால், மலையகத் தமிழர் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் யதார்த்தம்!

அண்மையில் இலக்கியப் பொதுவெளியில் உங்களுக்கும் கவிஞர் கருணாகரனுக்கும் இடையிலான முரண்கள் புலம்பெயர் இளைய தலைமுறை இலக்கியவாதிகளான எம்மை கவலை கொள்ள வைத்தது .இந்த முரண்களில் உங்கள் பக்கத்து விளக்கம் என்ன ?

பொய்களையும் அவதூறுகளையும் நான் தொடர்ந்து விற்று வருவதாகவும், நாற்பது ஆண்டுகளில் பலரும் என்னை மறுத்து எழுதியுள்ளதாகவும், அவர்தான் தனது முகநூலில் முதலில் குறிப்பிட்டிருந்தார்; நான் அதற்குப் பதில் எழுதவேயில்லை. உண்மையில் இதுவொரு “கோமாளித்தனமான” குற்றச்சாட்டு என்பது எனது கருத்து! 2009 இல் வன்னியிலிருந்து வந்து அவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் இருந்த சேதி அறிந்து, நானும் மனைவியும் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். 2010 வரை அவருக்கும் எனக்குமிடையில் நெருக்கமான நட்பு இருந்தது; பின்னர் அவரது அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுகளும் பலரைப்போலவே எனக்கும்  அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது இவர் கூறும், நான் “விற்று வருவதான பொய்களுக்கும் அவதூறுகளுக்கும்” இவரால் ஆதாரம் தர முடியாது. 2010 இன் முன்னர் ஒரு சந்தர்ப்பத்திலாவது அவர், என்மீது அதிருப்தியை வெளிக்காட்டியதுமில்லை; கேள்வி எழுப்பியதுமில்லை. மாறாக, அவர் என்னைப் பாராட்டி மொழிந்ததும் எழுதியதும் உண்டு. நாற்பது ஆண்டுகளாகப் பலர் என்னை மறுத்து விமர்சித்து எழுதியதான குறிப்பிலும் தவறுகள் உண்டு. கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக்ஜீவா போன்றோரின் கருத்துகளுக்கு நான் எழுத்திலும் பேச்சிலும் எதிர்வினையாற்றியுள்ளேன்; ஆனால், அவர்கள் என்னை விமர்சித்து எழுதியதில்லை. மு.பொ. சி.சிவசேகரம், டானியல் அன்ரனி, சாந்தன், சித்தாந்தன் ஆகியோர் இலக்கியம் – இலக்கிய உலகு பற்றிய எனது கருத்துக்கள் தொடர்பான ( “எனது அவதூறுகள் பொய்கள்” பற்றி அல்ல) தமது கருத்துக்களை எழுதியுள்ளனர்; நான் இவற்றுக்கான எனது கருத்துக்களை அவ்வப்போது எழுத்தில் முன்வைத் திருக்கிறேன். மூன்று ஆண்டுகள் என்னுடன் பழகி, எனது ‘தெரிதல்’ இதழில் தொடர்ந்து எழுதியும்  வேறு பயன்களும் பெற்ற  ச.இராகவன், என்னைப்பற்றிக் கீழ்த்தரமாக – தனது வக்கரிப்புகளைக்கொட்டி – ‘மகுடம்’ இதழில் எழுதியவற்றுக்கும், தெளிவான பதிலை நான் அளித்துள்ளேன். மேலும், கருணாகரன் கூறுவதுபோல் இலக்கியக்காரர் பலர் என்னைவிட்டு நீங்கிச் செல்லவில்லை; மாறாக சந்தர்ப்பவாத, அறம்சார்ந்த நிலைப்பாடு ஏதுமற்ற, சுயநல இலக்கியவாதிகள் – இதழாசிரியர் பலருடனான தொடர்புகளை, நான்தான் நீக்கிக்கொண்டேன். கருணாகரன் உண்மை யைத் தலைகீழாக மாற்றிக் காட்டுகிறார்! தொடரும் அவரது ‘மனச் சிக்கலை’ – அதன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிகிறது!

ஈழத்து இலக்கியம் என்பதற்கு ஏதாவது தனிப்பட்ட பண்புகள் இருக்கின்றதா ?

உங்களின் இக்கேள்வி  ஆச்சரியமாயிருக்கிறது! நிலத்தாலும் வரலாற்றாலும் வேறு பட்ட வாழ்க்கை முறைகளினாலும் தனித்தன்மை கொண்டவர்களாக ஈழத்தமிழர் இருக்கும்போது, இலக்கிய வெளிப்பாடுகளில் அத்தனித்தன்மைகள் வெளிப்படுவதும் இயல்பானதே! வாழ்க்கைச் சூழல், பேச்சுமொழி, பிரச்சினைகள், யுத்த நெருக்கடி, விடுதலைப் போராட்டம் முதலியவை எல்லாம் இடம்பெறும் ஈழத்து இலக்கியம், தனக்கே உரிய தனித்துவப் பண்புகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது!

விடுதலைப்புலிகள் உச்சம் பெற்ற வேளையில் ஈழத்து இலக்கியம் உங்கள் பார்வையில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தியதா ?

மாறுதலான - கவனத்துக்குரிய முயற்சிகள், எழுத்துத்துறையிலும் பதிப்புத் துறையிலும் நடைபெற்றிருக்கின்றன என்று கூறலாம். அக்காலங்களில், பிரச்சாரத்தை முன்னிறுத்தும் படைப்புக்களும் கலைத்துவமானவையும் கலந்தே வெளிவந்துள்ளன. கலை பண்பாட்டுக் கழகத்துக்கும் ‘வெளிச்சம்’ இதழுக்கும் முக்கியத்துவம் இருக் கிறது. புனைவு இலக்கியம், புனைவுசாரா இலக்கியம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க படைப்புக்கள் வந்துள்ளன. தமிழக இலக்கியப் பரப்பில் இவற்றைக் காணவே முடியாது ; எமது நெருக்கடிமிக்க போராட்டச் சூழலே இவற்றைப் பிறப்பித்தது. பொது இலக்கியவாதிகளின் படைப்புக்களுடன் போராளிகளின் அனுபவ எழுத்துக்களும் வந்துள்ளன. போராளிகளின் கள அனுபவங்களை வெளிப்படுத்துவனவும், மறைந்த தனித்தனிப் போராளிகளைப் பற்றிய எழுத்துக்களும் முற்றிலும் புதிய அனுபவங்களைத் தருபவை; இவ்விதத்தில் மலரவன், மலைமகள், வசந்தன், கப்டன் கஸ்தூரி முதலியோரை உதாரணமாகக் காட்டலாம். போர் உலா, அதிர்ச்சிநோய் நமக்கல்ல, வில்லுக்குளத்துப் பறவை, அம்மாளைக் கும்பிடுகிறானுகள், சமரும் மருத்துவமும் முதலியவற்றை முக்கியமானவையாகக்  குறிப்பிடலாம். வேறு கவிதைத் தொகுதி களும், காலவெளி முதலிய சிறுகதைத் தொகுதிகளும் உள்ளன; அவை போன்ற உதிரிப் படைப்புகளும் உள்ளன. EXODUS என்னும் உலகப் புகழ்பெற்ற நூலின் மொழியாக்கம், ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்னும் பெயரில், இரண்டு பாகங்களாகப் பெரிய அளவில் வெளிவந்துள்ளது; இன்னும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ‘தமிழ்த் தாய் பதிப்பகம்’ எழுத்தாளரின் படைப்புக்களை நூல் வடிவில் வெளிக்கொண்டு வந்ததுடன், நூலாசிரியருக்கு 5000 ரூபாவையும் 25 பிரதிகளையும் வழங்கி, வெளியீட்டு நிகழ்வை நடத்தியும் ஊக்குவித்தது! ஸ்ரீலங்கா அரசினால் அச்சுச் சாதனங்களுக்குத் தடை போடப்பட்டிருந்த - நெருக்கடியான போர்ச் சூழலில்தான் இம்முயற்சிகள் எல்லாம் நடைபெற்றுள்ளன என்பதையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

மல்லிகை, சிரித்திரன் போன்ற சஞ்சிகைகள் சனங்களிடம் ஏற்படுத்திய அதிர்வுகள் போன்று, ஏன் இப்பொழுது சிற்றிதழ்களால் அதிர்வை ஏற்படுத்த  முடியவில்லை ?

‘மல்லிகை’ முன்னர்  1000 பிரதிகளும் (5000 பிரதிகளெனச் சில இடங்களில் டொமினிக் ஜீவா குறிப்பிட்டுள்ளது உண்மையல்ல!), சில வருடங்களின் முன் அது வெளிவராமல் நின்றுவிட்டபோது 300 பிரதிகளுமே அச்சிடப்பட்டது ; வழமையான சிற்றிதழ்கள்போல் இதுவும் குறிப்பிட்ட குறுகிய வாசகரையே சென்றடைந்தது. எனவே, சனங்களிடம் (பொது மக்களிடம்) அதிர்வுகளை ஏற்படுத்திய “சங்கதி” பொருத்தமில்லை! ஆனால் சிரித்திரனோ, 9000 பிரதிகள் வரை விற்பனையானது; பொதுசனங்களாலும் புத்திஜீவிகளாலும் விருப்புடன் படிக்கப்பட்டது. அதன் உள்ளடக்கம் சிரிப்பும் சிந்தனையும் இணைந்ததாக அமைந்ததும், நகைச்சுவையான விளக்கச் சித்திரங்களும் இலகுவில் மக்களைக் கவர்ந்தன. சவாரித்தம்பரும், சின்னக்குட்டியும், Mrs டாமோடிரனும், ஓய்யப்பக் கங்காணியும், மைனர் மச்சானும் எமது மனங்களில் இன்னும் வாழ்கின்றனர்! இவற்றுடன் தரமான சிறுகதைகளும் கவிதைகளும் சேர்ந்து இடம்பெற்றன. சிரித்திரன் அதிர்வை ஏற்படுத்தியமையை உணர முடிகிறது.

தற்போது வெளிவரும் சிற்றிதழ்கள் புத்திஜீவி மட்டத்திலேயே அதிர்வை ஏற்படுத்துவது குறைவாக உள்ள நிலையில், சனங்களிடம் அதிர்வை ஏற்படுத்து வதைப் பற்றிப் பார்க்கத் தேவையில்லை; இச்சிற்றிதழ்களின் பலவீனங்களையும் குளறுபடிகளையும் தனியாகத்தான் பார்க்கவேண்டும். பொதுசனங்களிடம் கலை, இலக்கியம்  பற்றிய பரிச்சயத்தை  ஏற்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, நாம் வேறுவிதமான இதழ்களை வெளியிட முயற்சிக்கவேண்டும். தீவிர சிற்றிதழ்களுடன் சமாந்திரமாக,  பொது வாசகரை அணுகும் – அவரிடம் வாசிப்பு ஈர்ப்பினை ஏற்படுத்தும் - நெகிழ்வான இதழ்களும்  வரவேண்டும். அவ்வாறு வரும் சூழலிலேயே, நாம் “அதிர்வுகளைக்” காண இயலுமெனக் கருதுகிறேன்.

கடந்த 30 வருட போராட்ட அரசியலில் தமிழர்களாகிய நாங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஒன்று பட்ட இலங்கையினுள் எமக்கான தீர்வுகள் சாத்தியம் என எண்ணுகின்றீர்களா ?

பிராந்திய – மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் உச்சக்கட்ட ஒத்துழைப்புடன், எமது உள்முரண்பாடுகளும் தவறுகளும் சேர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட்டன. தமிழ் மக்களின் இன்றைய ‘உண்மையான தேர்வு’ என்ன என்பதை அறியவேண்டுமானால், தனிநாடு பற்றிய சுதந்திரமான பொது வாக்கெடுப்புத் தேவை. ஆனால், இலங்கை அரசாங்கமோ பிராந்திய - வெளிநாட்டுச் சக்திகளோ இத்தகைய பொது வாக்கெடுப்புக்குச் சம்மதிப்பார்களோ,  வெளிப்படுத்தப் படும் முடிவு தமது “தேவை”க்கு மாறானது எனக் காணுமிடத்து அதை அங்கீகரிப்பார்களோ என்பது, சந்தேகமே! கூட்டாட்சி அல்லது சமஷ்டி முறை பொருத்தமான தீர்வாகலாம் எனச் சில தமிழர் தரப்பினர் கருதுகின்றனர். ஆனால், தென்னிலங்கையில்  ஆழ வேரோடிக் காணப்படும் பேரினவாத சக்திகளின் செயற் பாடுகள், எவ்வித நம்பிக்கை ஒளிக்கீற்றையும்  காட்டுவதாயில்லை!
-    16.06.2015

ஆக்காட்டி 
16 ஐப்பசி 2015