Skip to main content

சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை               


மேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர். இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.

ஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.

அந்தக்கவிஞரே மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம். அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.

குடும்பப்பாசம் சகோதர வாஞ்சை உறவுகளுடன் தீராத நேசம் ஆன்மீக நம்பிக்கைகள் நட்புகளை பேணும் இயல்பு கலை இலக்கியம் ஊடகம் வானொலி திரைப்பட ரசனை சமூகம் குறித்த கரிசனை மனிதநேயத்தொண்டுணர்வு இவற்றுக்கிடையே சிறுமைகண்டு பொங்கிடும் தர்மாவேசக்குரல் அனைத்தும் கொண்டிருந்த ஒரு ஆளுமையாக எம்மத்தியில் வாழ்ந்தவர் சகோதரி திருமதி அருணகிரி விஜயராணி. அவர் இரண்டு ஆண்செல்வங்களுக்குத்தான் ஒரு அம்மா என்பதுதான் எமக்குத்தெரியும். ஆனால் - அவருக்கு அருணகிரி என்ற ஒரு மகனும் இருக்கிறார் என்பது நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

அப்பாவைப்போல் கணவர் வேண்டும் என்பாள் மகள். அம்மாவைப்போன்று மனைவி வேண்டும் என்பான் மகன். இதுதான் எங்கள் தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரிய குணாதிசயம். அவ்வாறு வாழ்ந்தவர்கள்தான் விஜயாவும் அருணும். 

ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்த விஜயா திருமணத்தின் பின்னர் எங்குசென்றாலும் தனது கணவரையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். ஆனால் இந்தப்பயணத்தில் அது சாத்தியமே இல்லை. ஏனென்றொல் இனி எமது இரண்டு செல்வன்களுக்கும் நீங்கள்தான் அம்மாவும் அப்பாவும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச்சென்றுள்ளார் எங்கள் சகோதரி.

எனவே எங்கள் அனைவரதும் அருமைச்சகோதரனே அன்பு நண்பரே அருண் நீங்கள் தைரியமாக இருக்கவேண்டிய காலம் இதுதான். நாம் அனைவரும் உங்களுடன் இருக்கின்றோம். ஆயினும் விஜயாவின் இடத்தை எவராலும் நிரப்பமுடியாதுதான். ஆனால் உங்கள் விஜயா உங்களுடன்தான் நினைவுகளாக என்றென்றும் இருப்பார்.

ஒரு வருடகாலத்தில் தாயையும் தாரத்தையும் இறைவனிடம் கையளித்த தைரியத்தை அந்த இறைவனே உங்களுக்கு வழங்கியிருக்கிறார். எனவே தாயும் தாரமும் என்றும் உங்களுடன்தான் இருக்கிறார்கள். அந்த தைரியத்தில்தான் நீங்கள் இருக்கவேண்டும்.

உங்கள் மகன்மார் அன்பு மருமகள் பேரக்குழந்தை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் உங்களுடனேயே இருக்கிறார்கள். அன்புள்ள எங்கள் சகோதரி விஜயா - எங்களுடன் அடிக்கடி உரையாடும் உங்களுக்கும் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் அரைநூற்றாண்டுக்கும் மேலாக வாழும் இந்த மெல்பனில்தான் இன்று உங்களை இவர்கள் அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி அல்ல. தமிழர்கள் வாழும் தேசங்களில் எல்லாம் இன்று உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இலங்கையில் நேசித்த படைப்பிலக்கியாவதிகளும் கலைஞர்களும் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் உங்கள் நினைவுகளைத்தான் அங்கு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல நீங்கள் எமது கல்வி நிதியம் ஊடாக உதவிய இலங்கையில் நீடித்த அந்தப்போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களும் அவர்களை கண்காணிக்கும் தொடர்பாளர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செல்லாத இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நீங்கள் உதவிய பாடசாலையில் உங்களை நினைவுகூர்ந்து பெரிய பதாகைகள் (பெனர்கள்) எல்லாம் தொங்கவிட்டும் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சான்றோராக இருக்கும் உங்களை உங்கள் பெற்றோர்களும் மாமா மாமியும் - நீங்கள் ஆதர்சமாக கருதிய மகாகவியும் கவியரசும் உங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார்கள் என்றுதானே எங்களையெல்லாம் விட்டு விட்டு அவர்களிடம் செல்கிறீர்கள். செல்லுங்கள். தாராளமாகச்செல்லுங்கள். உங்களை வழியனுப்பிவைக்கின்றோம். அந்தத்தைரியத்தை நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

ஏனென்றால் மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும். நீங்கள் செல்வத்துரை அய்யா - சிவபாக்கியம் அம்மா - நாகலிங்கம் மாமா நாகேஸ்வரி மாமி ஆகியோரிடம்தான் செல்கிறீர்கள். நீங்கள் மீண்டும் வந்து அவர்களின் குடும்பத்திலேயே தோன்றுவீர்கள். அது நிச்சயம். மானிடர் ஆன்மா மறுபடி பிறந்திருக்கும்.

இனி விஜயா பேசுறன் என்ற குரலை நாம் கேட்கமாட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கள் என்றென்றும் பேசிக்கொண்டே இருப்பீர்கள். உங்களை வழியனுப்புவதற்கு நீங்கள் அங்கம் வகித்த எமது கல்வி நிதியம் மற்றும் தமிழ் கலை இலக்கியச்சங்க உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சார்பிலும் எனது அஞ்சலியை தெரிவிக்கின்றேன். மலர்களைப்போல் உறங்கும் எங்கள் பாசமலரே சென்றுவாருங்கள்.லெ முருகபூபதி 

20-12-2015 


Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…