Sunday, February 21, 2016

மற(றை)க்கப்பட்ட லெனின் சின்னத்தம்பி ( திறனாய்வு )

மற(றை)க்கப்பட்ட லெனின் சின்னத்தம்பி ( திறனாய்வு )தாயகத்தில் குடும்பம் சுற்றம் சூழல் என்று உன்னதமான வாழ்வைக் கொண்ட ஓர் இனக்குழுமம் தங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் கோரப்பிடியால் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள விருப்பமின்றிப் புலம்பெயர்கின்றது. அதன் இறுதி இலக்கானது, எதிலி என்ற முத்திரையும், தங்கள் வாழ்நாளில் எண்ணியே பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் கோலங்களையும்  இந்த எதிலிகளை எதிர்கொண்டன. வாழ்வியலிலும் சரி சொல்லாடலிலும் சரி மிகவும் கொடுமையான உளவியல் தாக்கத்தைக் கொண்டு வருவது இந்த எதிலி என்ற இருப்பு ஆகும். ஈழத்தவர்களது புலப்பெயர்வையும் அவர்களது வாழ்வியில் விழுமியங்களையிட்டுப் பல படைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வரு கோணத்தில் கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் கொண்டுள்ளன. அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் ஜீவமுரளியின் "லெனின் சின்னத்தம்பி " நாவல் உயிர்மை வெளியீடாக கடந்த ஆண்டு வெளியாகியது. ஆனாலும் இந்த நாவல் புலம்பெயர் இலக்கிய உலகில் மறக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம்.

பனியும் அதன் வீரியமும் ஐரோப்பா கண்டத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுபவன. அப்பொழுது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற மனஅழுத்தங்கள் சொல்லில் வடிக்கமுடியாதவை. ஒரு சிலர் தம்மைத்தாமே அழித்துக்கொள்வதும் இந்தப்பனிப்பொழிவு நாட்களில்தான். ஓர் இலையுதிர் காலமொன்றின் ஊடாக மெதுமெதுவாக நாவல் விரிகின்றது. ஓர் இலையுதிர் காலமும் பனிப்பொழிவும் , மனித வாழ்க்கையை அதன் போக்கில் வாழவிடாத கடிகாரங்களால் சிறைப்பிடிக்கப்பட்டு  ஒரு மனிதனை எப்படியெல்லாம் உளவியல் ரீதியாக வாட்டிவதைக்கின்றது என்பதை முதல் பதினைந்து பக்கங்கள் நாவலின் பிரதான கதைசொல்லியாகிய லெனின் சின்னத்தம்பியூடாக சொல்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே லெனின் என்ற பெயர் அடைமொழியாக ஏன்  சின்னதம்பிக்கு வந்தது என்ற எதுவித விபரணங்கழும் இல்லாது நாவல் விரிகின்றது. ஆனாலும் லெனின் என்ற சொல்லாடல் ஆனது  நாவலின் தொடர்ச்சியில் ஒன்றுமே அறியாது நிறத்தால் மட்டுமே வெள்ளைகளாக இருந்த தொழிலாளர்களுக்கு, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாடுகளையும், வர்க்க சிந்தனைகளையும் சின்னத்தம்பி அங்காங்கே சொல்லியதால் "லெனின்" என்ற அடைமொழிப் பெயரானது  மார்க்ஸிய சித்தாந்தங்களுக்கு ஓர் இடுகுறிப்பெயராக வந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது . அதே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புரைகள் நூலுக்கு இல்லாது தங்களது எழுத்துக்களில் பரிபூரண நம்பிக்கை வைத்து வெளிவந்த படைப்புகளில் லெனின் சின்னத்தம்பியும் அடங்குவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

பின்னர் லெனின் சின்னத்தம்பி நேரடியாக கதைக்களமான உணவகத்துக்கு வருகின்றார். ஓர் உணவகத்தில் உணவுகள் எப்படி எப்படியெல்லாம் தயார்ப்படுத்தப்படுகின்றது. அங்குள்ள அதிகார மட்டங்கள் என்னென்ன. அந்த அதிகாரவர்க்கத்தின் பழக்க வழக்கங்கள் என்ன ? இந்த பழக்கவழக்கங்களுக்க்கு ஏற்றவாறு லெனின் சின்னத்தம்பி எப்படி இசைவாக்கம் பெறுகின்றார் ? என்பதனை நாவலின் பெரும்பகுதி தொடுகின்றது.
நண்பர் ரிஷான் ஷெரீப் தனது துன்புறுத்தல்கள் தொடர்பான திறனாய்வில் இவ்வாறு கூறுகின்றார்  " ஒரு மனிதனை எப்படியெல்லாம் துன்புறுத்தலாம் சொற்களால் வார்த்தைகளால் நடத்தைகளால் செய்கைகளால் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஓர் மனிதனை மிக இலகுவாகத் துன்புறித்திவிடலாம் ஆனால் அந்த துன்புறுத்தலை எல்லோராலும் மிக இலகுவாக தாங்கி விட முடியாது துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனிதனின் உணர்வுகளும் உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை இந்த துன்புருத்தளைச் செய்பவன் சகமனிதனே துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்டுபவனைப் போன்றே ரத்தமும் நரம்புகளும் அவையவங்களை கொண்டவனே இந்த துன்புறுத்துபவனும் அவனுக்கு மட்டும் அந்த மனநிலை எப்படி வாய்கின்றது ? அதிகாரமும் ஆணவமும் பழிவாங்கலும் இந்த துன்புறுத்தலுக்கு மனிதனைத் தூண்டுகின்றன இந்த வகையான துன்புறுத்தல்களை " சித்திரவதை " எனப் பொதுப்பெயர் கொண்டு அழைக்கலாம் இந்த சித்திரைவதைகள் இருப்பிடங்கள் வேலையிடங்கள் போன்றவற்றில் சகமனிதர்களால் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றன எனினும் இந்த மனித உரிமை மீறலானது எந்தவித கேள்விகளுக்கும் உட்படாதவாறு நடைபெற்று வருகின்றது இந்த நடைமுறையானது ஓர் அதிகார அமைப்புக்கு எதிராக இருப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அடக்கி வைப்பதற்கும் வைப்பதற்கும் இந்தவகையான சித்திரவதைகள் அதிகார வர்க்கத்தால் பிரையோகப்படுத்தப்பட்டு வருகின்றது " 

இதையே நூலாசிரியர் லெனின் சின்னத்தம்பி மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

லெனின் சின்னத்தம்பியில் ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள உறவு நிலையை நகைச்சுவையாக கைக்கோ என்ற தொழிலாயின் பாடல் மூலம் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.........

"ஜோ ஒரு பட்டன் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்தார்.

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் என்றான் முதலாளி .

நான் வலக்கையால் வேலை செய்கின்றேன் முதலாளி.

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் .நான் வலக்கையாலும் 

இடைக்கையாலும் வேலை செய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் .நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் வேலைசெய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய். .நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் இடக்காலாலும் வேலை செய்கின்றேன் முதலாளி .

ஜோ இப்பொழுது என்ன செய்கிறாய் நான் வலக்கையாலும் இடக்கையாலும் வலக்காலாலும் இடக்காலாலும் குண்டியாலும் வேலை செய்கின்றேன் முதலாளி ."

(பக்கம் 68)

இந்தப்பாடல் வரிகள் நகைச்சுவையாக இருந்தாலும், ஒரு முதலாளி எப்படி ஓர் தொழிலாளியை சக்கையாகப் பிழிகின்றான் என்பது தெளிவாகின்றது. இதைப்படிக்கும் பொழுது பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்பிளின் ஓர் தொழிற்சாலையில் உதிரிப்பாகங்கள் பொருத்தும் வேலையில் தான் படும் கஸ்ரத்தை தனதுபாணியில் நடித்துக்காட்டிய படமே நினைவுக்கு வந்தது .
வேலைத்தலத்தில் கடைநிலை ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளால் எப்படி நிந்திக்கப்பட்டும் பழிவாங்கப்படுகின்ரார்கள் என்பதை பக்கம் 133 இல் நூலாசிரியர் மனதில் தைக்கும் படி சொல்கின்றார்......................

" லெனின் சின்னத்தம்பி அக்சல் குறுப்பவின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசுவதை எப்பொழுதுமே அவனால் தங்கிக் கொள்ள முடிவதில்லை .அந்த உணர்வு ஒரு பாத்திரம் கழுவும் கடைநிலைத் தொழிலாளி தன்னை எதிர்த்துப் பேசுகின்றான் என்ற அவமரியாதை உணர்விலிருந்து வந்திருக்கலாம் .அல்லது தொழிலாளர்களின் படிநிலைகளில் உயர்வையும் ,தாழ்வையும் கோருகின்ற ஒரு நிர்வாகியப் பார்த்துப் ,பிறப்பால் ஐரோப்பியர் அல்லாத ,கருத்த முடியும்,சாம்பல் நிறத்தோலைகொண்ட ஒருவர் ,வார்த்தைக்கு மறுவார்த்தை பேசுவதென்பது நிந்தனைக்குரிய குற்றமாகவே இருந்திருக்கலாம் .எது எப்படியாயினும் ,இப்படிப்பட்ட நிந்தனைக் குற்றங்களைச்  செய்வோர் நிர்வாகிகளாலும் ,முதலாளிகளாலும் தக்க தருணம் பார்த்து பழிவாங்கப்பட்டு வந்தனர் .
(பக்கம் 133)
இந்த இரண்டு பந்திகளும் வாசகர்களை கட்டிப்போட்ட இடங்களாகும்.

18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு உலகம் எங்கும் அடிமைகள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய காலகட்டங்களில் பல அடிமைகள் பொருகாட்சிகளில் கூடுகளில் அடைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டு பெரும் முதலாளிகளால் வாங்கப்பட்டார்கள். அதன் பின்னர் மேற்குலகம் அடிமை முறை தங்கள் நாடுகளில் இல்லை என்று மார்தட்டியது. ஆனால் அது வடிகட்டிய சுத்தப்பொய். காலப்போக்கில் அடிமை முறைமையின் வடிவங்கள் மாறின. மேற்குலகில் அந்தந்த நாடுகளில் அதன் மக்கள் செய்யத் தயங்குகின்ற இழி நிலை வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். மேற்குலகு வலு குறைந்த நாடுகளில் போர்களை உருவாக்கி அதன் மூலம்  குறைந்த செலவில் விசுவாசமான அடிமைகளை  அரசியல் அகதிகள் என்ற போர்வையில் உள்வாங்கியது. இதனால் மேற்குலகிற்கு இரட்டை இலாபம் கிடைத்தது. ஒன்று சர்வதேசத்தின் முன்பாக தன்னை ஓர் மனிதநேயமுள்ளவனாக காட்டிக்கொள்வதும். இரண்டாவதாக, அதி உயர் விசுவாசமுள்ள அடிமைகள் குறைந்த ஊழியத்தில் கிடைத்ததும் எம்முன்னே வரலாறாக  சொல்லி நிற்கின்றது. அதில் ஒருவர் தான்  லெனின் சின்னத்தம்பி. அவர் வேலை செய்கின்ற உணவகத்தில் நிறம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அவர் சக தொழிலாளர்களால் நடத்தப்பட விதம் கொடுமையானது. இந்த இடத்தில் ஓர் கேள்வி எழுவது இயல்பாகின்றது. தான் தீண்டத்தகாதவனாக சக தொழிலாளர்களால் நடத்தப்படும் பொழுது ஓர் ஜெர்மன் பிரஜையாக இருந்தும் அவர்களுடன் சமரசப்போக்குக்கு ஏன் லெனின் சின்னத்தம்பி செல்லவேண்டும் ? அடுத்ததாக இந்த சமரசங்கள் என்பது லெனின் சின்னத்தம்பிக்கு தனது தொழிலில் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கின்றது. அதே போல ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கென்றே தொழிலார்கள் சட்டங்களும் தொழில் சங்கங்களும் உள்ளன. தங்களது முதலாளியினால் தாங்கள் ஏமாற்றப்படும் பொழுது இவர்கள் தொழில் சங்கங்களின் உதவியினை ஏன் நாடவில்லை என்றதோர் கேள்வி இயல்பாக எழுகின்றது. தான்பட்ட கடன்களுக்காக  தனது நிறுவனத்தை வேண்டுமென்றே நட்டத்தில் இயங்க வைத்து அனைத்து தொழிலார்களையும் நடுத்தெருவில் விட்ட முதலாளிக்கு, லெனின் சின்னத்தம்பி தவிர்ந்த ஏனைய தொழிலார்கள் சட்ட நடவடிக்கை எடுக்காது தொடர்ந்து தங்கள் முதலாளியின் நடவடிக்கைக்கு துணை போனதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாவலில் நூலாசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட வகையில் சம்பவங்களின் விவரணங்களையும் விபரிப்புகளையும் தவிர்த்து இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. உதாரணாமாக உணவுத்தட்டுக்கள் அலங்காரம் செய்யும் முறைகள் மற்றும் சண்டைக்காரனின் பிரோ ( அலுவலகம் ) ஆகியவற்றின் விபரணங்கள் மறுபடியும் மறுபடியும் நாவலில் வந்ததினால் வாசகன் வாசிக்கும் பொழுது ஒருவித சலிப்புத்தன்மை  ஏற்பட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது . இவைகளைத் தவிர்த்துப் பார்க்கும் பொழுது லெனின் சின்னத்தம்பி பேசப்படவேண்டிய நாவலாகும் இதன் நூலாசிரியர் மேலும் பலபடைப்புகளை தரவேண்டும் என்பதே வாசகர்களது வேணவா ஆகும் .

மலைகள் சஞ்சிகை  (தமிழ்நாடு )


18 மாசி 2014 


Saturday, February 13, 2016

மகிழடி வைரவரும் அப்பாகுட்டியரும்

மகிழடி வைரவரும் அப்பாகுட்டியரும்


வைரவர் உக்கிர மூர்த்தி. முந்தி வைரவருக்கு ஒரு தகர கொட்டகையும் இடைக்கிடை மடையும் விளக்கும் ஏத்தினால் காணும்.உப்பிடித்தான் கோப்பாயிலை மகிழடி வைரவர் எண்டு இருந்தார் .அவற்றை அட்ரஸ் வந்து குறிப்பாய் சொல்லுறதெண்டால் கோப்பாய் ஏ ஜி ஏ ஒபிசுக்கு பக்கத்தில் ஒழுங்கையிலை இருக்கிறார் .முந்தி ஆள் வலு சிம்பிளான ஆள். நான் ஊருக்கு போகேக்கை ஒருக்கால் மகிழடி வைரவரை ஒரு எட்டு பாத்திட்டு போவம் எண்டு போனன். இப்பத்தையான் மகிழடி வைரவர் றிச்மான். கோபுரம் என்ன. இப்பீக்கர் என்ன. டெய்லி அய்யர் என்ன. எண்டு சொல்லி வேலையில்லை .

அந்த நேரம் ஊரிலை அப்பாக்குட்டியர் எண்டு ஒருத்தர் இருந்தவர் அவர் கொஞ்சம் கைவைத்தியமும் பாப்பார். அதோடை என்னமொருத்தர் குளறி சின்னத்தம்பியர் எண்டும் ஒருத்தர் இருந்தவர்; ஆள் கொஞ்சம் கைப்பார்ட் பார்ட்டி .இவரை ஏன் குளறி எண்டு சொல்லுறதெண்டால் செத்தவீடு, நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முன்னுக்கு நிக்கிற அருமையான சீவன் .என்ன எந்தநேரமும் மெல்லமாய் கதைச்சு நான் பாக்கேலை . கதைக்க தொடங்கினால் காதுகன்னம் எல்லாம் வெடிக்கும் அனால் கருட்டு சுருட்டு இல்லாத சீவன் . இவை தண்ணியிலைதான் கூட்டாளிமார். மத்தும்படி ரெண்டுபேரும் கீரியும் பாம்புத்தான் . 

அப்பாக்குட்டியருக்கு மகிழடி வைரவர் கடைசி திருவிழா நேரத்திலை கலை வரும். அப்ப பெரிசுகள் சொல்லுவினம் அவருக்கு வைரவர் வாலாயம் இருக்கெண்டு எங்களுக்கு அந்த நேரத்திலை உதுகள் விளங்கேலை. எண்டாலும் அதுக்கு முதலே அப்பாக்குட்டியர் சுதியும் ஏத்திபோடுவார் . கலை முத்தி காலிலை சலங்கை கட்டி சன்னதம் ஆடி கடைசியிலை அப்பாக்குட்டியர் வைரவருக்கு பக்கத்திலை இருக்கிற மகிழமரத்திலை ஏறிப்போய் இருத்திண்டுவர். இந்த நேரம் பாத்து நம்ம குளறி சின்னத்தம்பியர் வந்து, ஆ .......ஆ ... சரி ..........சரி ..............அப்பாக்குட்டி காணும் காணும் இறங்கு எண்டு சொல்ல, மச்சான் தன்ரை அலப்பலை குறைச்சு பம்மிக் கொண்டு இறங்குவர். அந்த நேரம் அப்பாக்குடியரை பாக்கவேணும் பாவமாய் இருக்கும். அப்பாக்குட்டியரும் சரி குளறியரும் சரி இப்ப உயிரோடை இல்லை .ஆனால் இவையின்ர காலத்திலை நான் சீவிச்சு இருக்கிறன் எண்டதே எனக்கு சந்தோசமாய் இருக்கு .ஏனெண்டால் அவையள் பம்பலாய் நாலு பேரை சிரிக்க வைச்சு தங்களாலை நாலு பேருக்கு உதவி ஒத்தாசை செய்து போய் சேர்ந்த சீவனுகள். இப்பத்தையானுகளை பாத்தால் அவையள் சிரிக்கிறதே பெரிய விசயமாய் கிடக்கு .

யாவும் உண்மையே

Tuesday, February 9, 2016

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 13

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 13சுறுக்கற்றை பார்வையிலை பாலியல் தொழில் 

ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ் ,

காலங் காத்தாலை எழும்பி குளிரிலை நடுங்கின உடம்புக்கு சுடுதண்ணியாலை சுளுக்கெடுத்து திருனூத்தை அள்ளி பூசிக்கொண்டு ஒரு தேத்தண்ணியோடை பெட்டியை துறந்தன். ஐ மீன் கொம்பியூட்டரை . அட ஹப்பியாய் லீவு நாளிலை இருப்பமெண்டு பெட்டியை திறந்தால் அங்கை சனி நிண்டு தைய்யா தக்கா போடுது .  சுறுக்கருக்கு ஒரு கூட்டாளி பெடி ஒருத்தன் முகனூலிலை இருக்கிறான். பெடி கவிதையள் எழுதிறதிலை ஆள் விச்சுழியன் கண்டியளோ. அவன் ஒரு பதிவை போட்டிருந்தான். நானும் என்ன ஏது எண்டு ஒருக்கால் எட்டிப் பாத்தன். பெடிக்கு என்ன கிரகமாற்றமோ தெரியேலை அப்பிடியொரு பதிவு.அவன்ரை பதிவை பாத்து எனக்கு மண்டை விறைச்சுப்போச்சுது. பிரச்சனை என்னவெண்டால் டில்லியிலை இருந்து பாலியல் தொழிலாளியள் காசு செத்து குடுத்தது பெடிக்கு குடைச்சலாய் போச்சுது. அது துடக்கு காசு. அவை எப்பிடி குடுக்கேலும்? அதோடை அவை விபச்சாரியள் ( நாங்கள் ஊரிலை சொல்லுவம் சைவேயள் , டிமூக்கள் ) எண்டு பெடி கொதிக்குது.

அப்ப நான் சொன்னன் , மோனை ஒருக்காலும் செய்யற வேலையை கிலிசை கெடுத்தாதை. எல்லாருக்குமே செய்யிற வேலை கடவுள் மாதிரி. அதோடை பாலியல் தொழில் செய்யிற பெட்டையளுக்கு  அவையின்ரை உடம்பாலை தான் தூசி பிடிச்சதே ஒழிய மனசாலை இல்லை. அவை குடுத்த காசுக்கு புறட்டணியம் படியாதை. அவையள் தாற காசை உப்பிடி ஆம்பிளைத்தனமாய் பாக்காதை எண்டு சொன்னன். அதுக்கு பெடி சுறுக்கரை பாத்து என்ன சொல்லுறான் எண்டால், விபச்சாரியை விபச்சாரியெண்டு சொல்லாமல் வேறை என்னவெண்டு சொல்லுறது. விபச்சாரியை எங்கடை சனம் ஏத்து கொள்ளுறேலை. நீங்கள் என்ன விசர் கதை கதைக்கிறியள்?  எண்டு என்னைப் பாத்து கேக்கிறான். இதாலை இண்டைக்கு இவன் ஐயம்பிள்ளையோடை கொட்டில்லுக்கு போற புறோக்கிறாமை நிப்பாட்டிப் போட்டன். 

பெடியள் எனக்கு இப்ப ஒரு விசயம் தெரியவேணும். உலகம் இப்ப மாறி எங்கையோ போட்டுது.பெடி சொன்ன சொல்லுக்கு பதிலாய் பாலியல் தொழிலார்கள் எண்டு சொல்லு இப்ப வந்திருக்கு. அதோடை பாலியல் தொழிலை ஒரு தொழிலாய் சட்டமாக்கி அதுக்கு வரியும் கட்டிற நிலமை இபத்தையான் உலகத்திலை இருக்கு. ஒரு பால் ஆக்களையே கலியாணம் கட்டிற அளவுக்கு சட்டமும் சனங்களின்ரை யோசினையளும் முன்னேறின நேரத்திலை இந்தப் பெடி தான் பிடிச்ச லப்பனுக்கு ( முயலுக்கு)  திறீ லெக்ஸ் எண்டு நிக்கிறான் பாருங்கோ. அதோடை இந்த பெடியள் காதும் காதும் வைச்ச மாதிரி தங்கடை அமர் அடக்க  பெடிச்சியளிட்டை  போய் கொண்டு வெளியாலை தாங்கள் எதோ சுத்தம்வெள்ளை எண்ட மாதிரி விலாசம் காட்டிக்கொண்டு பெடிச்சியளை மட்டும் கிலிசை கெடுத்திறது எந்த ஊர் ஞாயம் எண்டு எனக்கு விளங்கேலை கண்டியளோ .  அதோடை அவளவையள் உதவி ஒத்தாசை ஒண்டும் மற்ற சனத்துக்கு செய்யக்கூடாது எண்டு பெடி சொல்லுது. இது ஆம்பிளைத் தனமான செடில் கதை இல்லாமல் வேறை என்னெண்டு சொல்லுறுது ??

சுருக்கு சுறுக்கர் 

******************************************
வணக்கம் பிள்ளையள் ,

தமிழ் நாட்டிலை வந்த மழையும் வெள்ளமும் இப்ப வடிஞ்சு கொண்டு போறது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தாலும் சில விசயங்களை இடிச்சு சொல்லவேணும் .வெள்ளம் வந்த மூட்டம் ஒரு அரசாங்கம் செய்யிற வேலையளை பொது சனம் செய்திருக்கு. அதிலையும் இளந்தாரிப் பெடியள் கொஞ்சப் பேர் ஒண்டாய் சேந்து சனங்களை தொடர்புபடுத்திறதுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறையையே நடத்தி இருக்கிறாங்கள்.ஒரு பெடியன் சனங்களை காப்பாத்த போய் தன்ரை உயிரையே குடுத்திருக்கிறான் . இதிலை அரசியல் செய்யிற பன்னாடையளை கட்டிவைச்சு காஞ்சோண்டி இலை அரைச்சு பூசி, மிளகாய் தூளும் கண்ணுக்கை அடையவேணும்.

வெள்ளம் வடிஞ்சாலும் இனித்தான் பெரிய வில்லங்கமே இருக்கு. தொற்று நோயள் எல்லாம் சனங்களுக்கு பரவும். இதிலை எல்லாரும் வலுகவனமாய் இருக்கவேணும். உந்த டாக்குத்தர்மார் எல்லாம் றோட்டிலை இறங்கி சனங்களுக்கு இலவசமாய் எல்லா சிகிச்சையளும் செய்யவேணும். பெடியள்மார் சனங்களுக்கு இந்த தொற்று நோயாளைப்பத்தி அலேர்ட் பண்ணவேணும். அப்பத்தான் சனங்கள் சாவிலை இருந்து தப்புங்கள் .கவலையீனமாய் விட்டால் சனங்களை ஆராலையுமே காப்பாத்தேலாது .

சுறுககரின் இண்டையான் அவதானம்

**********************************
வெளிநாட்டிலை சந்தனம் மெத்தி இருக்கிறவைக்கு ஊரிலை இன்னாருக்கு உதவி செஞ்சம் எங்களாலைதான் அவை நல்லாய் இருக்கினம் எண்டு சொல்லுறதிலை ஒரு கெத்து கண்டியளோ. அங்கை இருக்கிறவையும் இந்த கெத்துகளை வைச்சு வந்தவரைக்கும் வறுகினால் என்ன எண்ட ஒரு நோக்கம் சிந்தனையள் இல்லாமல் இல்லை. இந்த கெத்துகள் இருக்கும்வரை ஊரிலையும் இங்கையும் ஆட்டையை போடுறதிலை பிழையில்லை எண்டுதான் எத்துப்படுகிது. ஏனெண்டால் இந்தக் கெத்துத்தான் எல்லாத்தையும் டிசைட் பண்ணுது. இங்கை இருக்கிறவை முதலிலை தாய் தேப்பன் சகோதரங்களை நல்லமாதிரி பாத்தாலே அங்கை அரைவாசி பிரச்சனை இல்லாமல் போகும். ஆனால் இவை என்ன செய்யினம் கூடபிறந்ததுகள் பெத்ததுகள் அல்லாடிக்கொண்டு இருக்க கெத்துக்காய் ஊர் பேர் தெரியாதவைக்கு காசு சேத்து குடுப்பினம். பேந்து குய்யோ முய்யோ எண்டு கூடி கும்மியடிப்பினம். ஆருக்கு என்னத்தை சொல்ல ?

சுறுக்கரின் இண்டையான் அவதானம்


*****************************

ஹாய் யூத்ஸ் ,

இண்டைக்கு காத்தாலை பேப்பர் படிச்சு கொண்டிருக்கேக்கை ஒரு நியூஸ் எத்துபட்டுது .சுறுக்கருக்கு அண்டம் கிண்டமெல்லாம் பத்தீட்டுது கண்டியளோ .மாற்றர் என்னவெண்டால் பனம் கள்ளுக்கு தடையாம் .எனெக்கெண்டால் உது உந்த மேல்சாதிகாறர் , தலித்துகளை அடக்கிறதுக்கு கொண்டுவந்த பிளான் எண்டது கிளியறாய் தெரியுது . பாரிசிலை உதுக்கெண்டே ஒரு கூட்டம் நடத்தி உந்த மேல்சாதி காறரை கிழி கிழியெண்டு கிழிக்க பிளான் பண்ணியிருக்கிறன் . உதை இந்த சுறுக்கன் சும்மா விடமாட்டான் கண்டியளோ .

சுருக்கு சுறுக்கர்


*********************************************

ஹாய் பிறதேர்ஸ் அண்ட் சிஸ்ரேர்ஸ் ,

வந்த விசயத்தை சுருக்கெண்டு குத்திற மாதிரியும் சுறுக்காயும் சொல்லிப்போட்டு போறன் .இண்டைக்கு சுறுக்கருக்கு டிம் எண்டால் டிம் டிம்முக்கு மேலை டிம் ஆனால் கதை கதையாத்தான் இருக்கும் கண்டியளோ.. தான் ஒரு உயர் குடி பிறப்பிலை பிறந்து கொண்டு லண்டனிலை இருந்த செத்தபாம்பை பிடிச்சு உன்ரை பேரிலை இருக்கிற ஐயர் எண்ட பேரை எடு.............. ஐயர் எண்ட பேரை எடு. எண்டு சலங்கை கட்டி கம்பெடுத்து சிலம்பாட்டம் போடிற பிரான்ஸ் போராளி இலக்கியமொண்டு தான் ஒரு கிழமைக்கு முன்னாலை தன்ரை கதைக்காக அதே ஐயர் குடும்பத்திட்டை ( எஸ் எஸ் வாசனையும் அவற்றை மோன் பாலசுப்பிரமனியத்தையும் நான் சொல்லி உங்களுக்கு விளங்க தேவையில்லை ) வாங்கின .விருதை மூஞ்சையை பொத்தி அடிச்ச மாதிரி திருப்பி குடுத்து போட்டு தையா தக்கா போட்டால் நல்லாயிருக்கும். ஆனால் உந்த பம்மாத்துகள் குடுக்க மாட்டினம் . குடிசனங்களே!!!!!!!! இப்பவுமே உந்த பம்மாத்துகளை நம்பிக்கொண்டு இருக்குறியள் ??????????


சுருக்கு சுறுக்கர்

**************************************************************

மெய்யே பிள்ளையள்............... ஐயம்பிள்ளை ஒரு விசையம் வெள்ளேந்தியாய் தான் கேக்கிறார் கோபிக்கப்படாது பாருங்கோ. எங்கடை ஊரிலை இருந்த கதிரவேற்பிள்ளையர் ,சிதம்பரப்பிள்ளையர், ஐயம்பிள்ளையர், தம்பிப்பிள்ளையர், தேவன் எண்டு கனபேர் இருந்தவை. என்ரை கண்ணுக்கு முன்னாலை இவையை பாத்தனான். ஆனால் பாருங்கோ இப்ப கொஞ்சநாளாய் எனக்கொரு ஐமிச்சம் இவை என்ன சாதியெண்டு . ஏனெண்டால் பிள்ளைமார் எண்டு ஒரு சாதியும் சரி தேவன் எண்ட சாதியும் நான் ஊரிலை கேள்விப்படேலை .கண்டியளோ. தாய் தேப்பன் ஆசையாய் வைச்ச பேருக்கை ஏதாவது சாதி எண்டது ஒண்டு இருக்கோ எண்டு எனக்கு ஒருக்கால் எக்ஸ்பிளிக்கே பண்ணுறியளே பிள்ளையள்? முக்கியமான கொண்டிசன் ஐயம்பிள்ளை சாதிபாக்கிறார் எண்டு என்னோடை கொழுத்தாடு பிடிக்கப்படாது.

ஐமிச்சம் ஐயம்பிள்ளை


****************************************************

குவாலிபிக்கேசனும் சுறுக்கரும்

எனக்கு கண்டியளோ இந்த ஏ எல் மூண்டு நாலுதரம் எடுத்து விட்ட மாட்டை பிடிக்கிறன் பார் எண்டு தன்னையும் ஏமாத்தி சுத்தி இருக்கிறவனையும் லூசுப் பட்டம் கட்டிறவங்களை கண்ணிலை காட்டேலாது.கேட்டால் கம்பசிலை போய் கெத்தாய் படிச்சால்த்தான் வேலை எடுக்கலாம் எண்டுவாங்கள் இப்பத்தையான் கைய்ஸ் . முந்தி சுறுட்டு சுத்துறதுக்கு எந்த குவாலிபிக்கேசனும் கேக்கேலை. சரி அதை விடுவம். இப்ப ஓட்டோ ஓடுறதுக்கும் சாப்பாட்டு கடையிலை சாப்பாடு குடுக்கிறதுக்கும் எந்த குவாலிபிக்கேசன் கேக்கினம்? பாங்கிலை கிளாக்கர் வேலையிலை சேந்து படிச்சு படிச்சு இண்டைக்கு டபுள் எக்கவுண்டனாய் இருக்கிறவங்களையும் என்னாலை உங்களுக்கு காட்டேலும். முதல் தோட்டத்திலை வேலை செய்து கொண்டுதான் சனம் கொர்ணமேந்திலை கோழி மேச்சது இப்ப பட்டியிலை நிக்கிற உழுகிற மாடு இப்பிடித்தான் உழுவன் எண்டால் ஆர் என்ன செய்யேலும் ராசா ?

சுறுக்கரின் அவதானம்


*******************************************************

ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ்,

இந்த வரியம் சுறுக்கற்றை முதல் புசத்தல் இது . காலங்காத்தாலை கோச்சியிலை போற நேரம் பாத்து என்ரை போனுக்கு ஒரு அலேர்ட் மெசேஜ் ஒண்டு வருகுது. நான் கண்டியளோ ரெயினுக்கை உயிர் போனாலும் போன் எடுக்கிறேலை .அவ்வளவு செக்கியுறிட்டி போனுக்கு. தொழில் பாக்கிற இடத்துக்கு கிட்டப்போய் என்ன ஏது எண்டு போனை தடவி பாத்தன். என்ரை பெறாமோன் ஒருத்தன் ஏ எல் எடுத்தவன். தான் ரெண்டு ஏ ரெண்டு சீ யும் எடுத்திருகிறன் சித்தப்பு எண்டு கிடந்துது . நல்ல விசயம், சந்தோசமாய்தான் கிடக்கு. ஆனால் கண்டியளோ எனக்கு உந்த எங்கடை நாட்டு ஏ எல் படிப்பு கொண்டிசனுகள் அவ்வளவு திறுத்தியாய் இல்லை .கிட்ட முட்ட 3இலை இருந்து 4 வரியம் ஒருத்தன்ரை சீவியத்தை முடிக்கிற சாமான் உது . அதுக்கு பிறகுதான் பெடி கம்பசுக்கு போகலாமோ இல்லையோ எண்டு தெரியும். அதுக்கை சறுக்கி என்னமொருக்கால் எடுத்து பாத்தால் என்ன எண்டு ஒரு அருட்டல் வரும். பேந்தும் ஒரு ரெண்டு வரியம் பேந்து அதை பாத்தால் ஒரெப்பன் முன்னுக்கு நிப்பினம். இந்தக்காலத்துக்குள்ளை அவனவன் கிடைக்கிற வேலைக்கு போனால் அந்த வேலையளிலை எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.இந்த காலத்திலை படிப்பு ஒரு பக்க சப்போர்ட்டே ஒழிய அதுதான் மெயின் மாற்றர் எண்டு இல்லை வேலை எக்ஸ்பீரியன்ஸ் தான் ஒருத்தனை முன்னுக்கு எழுப்பி விடும் . சுறுக்கரை பொலிசி என்னவெண்டால், படிக்கிறது எண்டது ஆக்களுக்கு முன்னாலை அன்பாய் பண்பாய் கதைக்கதெரிய வேணும், மற்றவன் பினாட்டு அடையாமல் வாழ்கையை படிக்கவேணும். இவ்வளவும் இருந்தால் காணும்.

சுறுககரும் ஒரே ஒருக்கால்த்தான் ஏ எல் எடுத்தார். ரெண்டு பீ யும் ரெண்டு சீ யும் கிடைச்சுது. அதோடை பரிசுகெட்ட ஊருக்கு நடையை கட்டினவர்தான். இண்டைக்கு பேராய் புகழாய் கொட்டிலிலை குந்தி கொண்டு புசத்தல் எல்லாம் செய்யிறா.ர். ஆனால் கண்டியளோ இதெல்லாம் என்ரை பெறாமோனுக்கு எழுதேலை.. இருந்தாப்போலை இண்டைக்கு என்ரை ஏ எல் படிப்பு நினைப்புகள் வந்துட்டுது அவ்வளவுதான்.

சுருக்கு சுறுக்கர்

********************************************

சுறுக்கரை பத்தி ஐயம்பிள்ளையோ இல்லை கொட்டில் கூட்டாளியளோ கதைச்சால் அது மக்கள் கருத்து கண்டியளோ. அட் த சேம் ரைம் சுறுக்கரை பத்தி சுறுக்கரே கதைச்சால் அது விளம்பரம் பாருங்கோ .

சுறுக்கரின் இண்டையான் அவதானம்


*************************************************

ஹாய் ............வீ ஆர் சுறுக்ஸ் அண்ட் ஐமிச்சம் ஐயம்பிள்ளை 
ப்றொம் கள்ளுக்கொட்டில் . இண்டைக்கு காத்தாலை மூஞ்சி புத்தகத்தை துறந்தால் கூட்டாலியள் தினம் என்னமாதிரி உங்கடை பிளான் எண்டு மார்க் கேட்டிருந்தான் .எனெக்கெண்டால் உப்புடியானதுகளை கொண்டுவாறதே பத்திற வேலையள் கண்டியளோ .ஏனெண்டால் கூட்டாளியளுக்கு எப்பவுமே ஹப்பிதான் இண்டைக்குத்தான் வித்தாரம் பிடிக்கிறம் எண்டுறது கொஞ்சம் கூட நல்லாயில்லை .

எனக்கு இந்த மூஞ்சி புத்தகத்தாலை திறம் திறமானதங்கப்பவுனுகள் கிடைச்சிருக்கிறாங்கள் .ஆரும் என்னோடை கொழுத்தாடு பிடிக்கிறேலை .சிலநேரத்திலை இசக்குப்பிசக்காய் பிடிச்சாலும் அதிலையே கைதந்து போட்டு போவங்கள்.இல்லை லாச்சப்பலிலை ஓர் ரீ யோடையும் வடையோடையும் ஒக்கம மாற்றார் ஓவர். 

உப்பிடித்தான் நேற்றும் ஒரு கூட்டாளியோடை கொழுவி கடைசியாய் ஒரு வரியிலை என்ரை நெஞ்சை நக்கிப்போட்டான் .கூட்டாளியள் எண்டால் இப்படித்தான் இருக்கவேணும். கூட்டாளியளோடை எதுவும் விட்டுவீதியாய் கதைக்கலாம் .
ஒருத்தன் கூட்டாளியாய் வரப்போறன் எண்டு கேட்டால் அவனைப்பத்தி தெரிஞ்சுதானே சேக்கிறம் .பேந்து கொஞ்சநாளையாலை இன்னஇன்னாரை தூக்கிறம் இல்லை இத்தினை பேரை தூக்கினம் எண்டு பிலிம் காட்டிறது அழுகல் பழக்கம் கண்டியளோ .என்னையும் ஒண்டு ரெண்டுபேர் தூக்கினவைதான் ;அவை கூட்டாளி எண்டதுக்கு மீனிங் தெரியாதவை . ஒருத்தன் எழுதிற கருத்துக்குத்தான் கருத்தே ஒழிய கூட்டாளிக்கில்லை எண்டதை விளங்கிறேலை ரெண்டையும் போட்டு குழப்பிறது கொஞ்சப்பெரின்ரை வேலை .அதாலையும் இந்த தூக்கலுகள் நடக்குது . என்ரை சீவயத்திலை எல்லாமே கூட்டாளியள்தான் .மூஞ்சி புத்தகத்திலை கனக்க மாற்றுகள் இருக்கு அதை சரியாய் பாவிச்சால் கூட்டாலியள் எப்பவும் நிலைச்சு நிப்பாங்கள் அதாலை இண்டைக்கு எண்டு இல்லாமல் எப்பவும் நாங்கள் எல்லாம் சந்தோசமாய் இருக்கவேணும் சொல்லிப்போட்டன். இத்துடன் எங்கள் புசத்தல்கள் முடிகின்றன .

சுருக்கு சுறுக்கர் அண்ட் ஐமிச்சம் ஐயம்பிள்ளை

***********************************************************