Skip to main content

செயின் மிஷேல்-சிறுகதை-கோமகன்-பிரான்ஸ்.


1995 ல் இதமான வெய்யிலை கண்ட ஓர் அதிகாலை நேரம் அலாரம் சிவாவினது நித்திரைக்கு உலை வைத்தது.சிவா வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு.இந்த ஏற்பாட்டினால் அவன் தனது பூனைத் தூக்கத்தை மைதிலியின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு.அவனது கை கட்டிலின் மறுபுறம் துளாவியபொழுது அந்த இடம் வெறுமையாகவே இருக்க" இந்த நேரத்தில் மைதிலி எங்கே போய்விட்டாள்"? என்று நினைத்தவாறே கட்டிலில் இருந்து விலுக்கென்று எழுந்தான்.வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது,மைதிலி முழுகிவிட்டு பல்கணியில் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் அவனுக்குத் தெரிந்தது.அந்தக்காலை வேளையில் அவளது நீண்டகருமையான கூந்தல் கருநாகம் போல அவளதுமுதுகில் பரவியிருந்தது.அவள் அவனுக்காகத் தயாரித்திருந்த கோப்பி ஆவிபறந்தபடி குசினிக்குள் காத்திருந்தது.சிவா கோப்பியை எடுத்துக் கொண்டு பல்கணியில் மைதிலிக்குப் பக்கத்தில் நின்று கொண்டான். மைதிலி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

நேற்று இரவு இருவரும் வாயால் சண்டைபிடித்தது மனதில் வந்து அவனை அலைக்கழித்தது க்கொண்டிருந்தது. ஒருபோதுமே அவளைக் கண்டித்துப் பேசாத அவன் அன்று அவளுடைய சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தால் குரலை உயர்த்திப் பேசப்போக அது இறுதியில் அவளது அழுகையுடன் முடிந்தது. மைதிலி தனது தம்பியை பிரான்சுக்கு எடுப்பதற்கு அவனுடன் கதைத்தபொழுது தான் இருவருக்கும் பிரச்சனை கிளம்பியது .சிவாவிடம் அந்தவேளையில் மச்சானைக் கூப்பிடுமளவுக்கு வங்கி இருப்புகள் நேர்த்தியாக இருந்திருக்கவில்லை . அவன் சிங்கப்பூர் போய் மைதிலியைக் கலியாணம் செய்ய எடுத்த வட்டிக் கடனே இன்னும் முடியவில்லை.மைதிலி வந்து ஒருவருடத்திற்குள் பிரெஞ் மொழியைப் படித்து விட்டு வேலைக்கப் போய்க் கொண்டிருக்கின்றாள் . இந்தநேரத்தில் மச்சானைக் கூப்பிடுவதென்றால் சிவாவிற்கு தற்கொலைக்குச் சமனான விடையம் .அவன் மைதிலியை சமாதனப்படுத்தும் எண்ணத்தில் " மைதீ .........." என்று வழக்கத்தைவிட தேனைத் தடவினான் . இந்த இடத்தில் சிவாவின் பருப்பு மைதிலியிடம் வேகவில்லை. அவள் நித்திரையால் எழும்பிய நான்கு வயதான மாதுமையைப் பள்ளிக்கூடத்திற்கு விட அவசரமாக வெளிக்கிடுத்தினாள்.சிவாவும் தான் குளிப்பதற்கு குளியல் அறைக்குள் நுளைந்தான். அவன்குளித்து வெளிக்கிட்டு வெளியில் வரும்பொழுது வீடு யாருமில்லாது அமைதியாக இருந்தது. மைத்திரியும் மாதுமையும் இவனிற்காக காத்திராது வீட்டை விட்டு இறங்கியிருந்தனர் ஆற்றாமையும் கோபமும் அவனுக்கு தலைக்கு ஏறியது. அவன் றெயில் நிலையம் நோக்கி விரைவாக நடத்தான்.

அவனது கண்களுக்குத் தூரத்தே மைதிலி நடந்து போய்க்கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.அவன் தனது நடையை வேகப்படுத்தி மைதிலியை நெருங்க முயற்சித்தான்.அவள் விரைவாக றெயில் நிலையத்தினுள் நுளைந்தாள்.அவன் மூச்சிரைக்க ஓடிவந்து படிகளில் இறங்கும்பொழுது றெயில் வரும் இரைச்சல் துல்லியமாகவே அவனுக்குக் கேட்டது.அவன் இன்னும் விரைவாக இறங்கி றெயிலை நோக்கி ஓடினான.மைதிலி இவனக்கு முதல் பெட்டியில் ஏறுவது தெரிந்தது.மைதிலியின் ஊமைக் கோபம் மனோவை மிகவும் படாய்படுத்தியது . கலியாணம் கட்டினநாளில் இருந்து சிவா அவளை முகம்கோண வைத்ததில்லை . தான் அவளைக் கண்ணின் இமைபோல் காத்தும் மைதிலி தன்னைப் புரிந்து கொள்ளாதது அவனை வேதனையை உச்சத்திற்கு கொண்டு வந்தது .

00000000000000000000

றெயில் தனது சுரங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, புத்தில் இருந்து வெளியேறும் சாரைப்பாம்பு போல தன்னைத் தரைப்பகுதிக்குக் காட்டியது.கோடை காலத்து ஜூலை மாத வெய்யில் அவனது முகத்தில் மென்மையாக சுட்டது.மேலே ஏறிக்கொண்டிருந்த றெயில் ஓல்னே சூ வூவா( AULNEY SOUS BOIS) றெயில் நிலையத்தைத் தொட மெதுமெதுவாக முயற்சி செய்து கொண்டிருந்தது.அதனது மெதுவான ஓட்டம் மனோவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனது மனம் அதில் லயிக்காது மைதிலியையே சுற்றிச் சுற்றியே வந்தது.அவளும் தன்னைப்போல நினைத்துக்கொண்டிருப்பாளோ என்னமோ.அவனது வறண்ட மனதில் தென்றாலாய் வந்தவள் அவள்.குடும்பத்தில் ஒரு தம்பியை கொண்ட அவளுக்கு பெரிதாக ஆசைகள் எதுவும் இருந்ததில்லை.அவனது ஆறாயிரம் பிராங் சம்பளத்தில் கட்டுச்செட்டாகவே மைதிலி குடும்பம் நடத்தினாள்.

அவனோ அவளது தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வான். பின்னேரம் வேலையால் வரும் பொழுது தனது முன்னாள் அறைக்கூட்டாளி கண்ணனிடம் காசு வாங்கி மைதிலியின் தம்பியைக் கூப்பிடவேண்டும் என்று மனதுள் உருப்போட்டுக்கொண்டான்.ஓல்னே சூ வூவா (AULNEY SOUS BOIS) றெயில் நிலையத்தின் நுழைவாயிலில் நின்ற றெயில் மின்சாரக்கோளாறால் தனது இயக்கத்தை முற்றாகவே நிறுத்தியது.திறக்கவேண்டிய தானியங்கிக் கதவுகள் அவைகளின் மூச்சை நிறுத்தின.வெளியே புகையிரதமேடை சனத்தால் நிரம்பி வழிந்தது.எல்லோருக்குமே காலை நேரத்து வேலை அவசரம்.அவர்கள் நின்ற றெயினின்மீது வெறுப்பை அள்ளிக் கொட்டினார்கள்.கட்டளைகளின் படி இயங்கும் அந்த ரெயில் பாவம் அதனால் என்னதான் செய்ய முடியும். பத்து நிமிட இடைவெளியின் பின்னர் அது தனது சிக்னலை பெற்றுக்கொண்டு புகையிரத நிலையத்தினுள் ஆடிஅசைந்து நுளைந்தது. வெளியே நின்ற சனங்கள் முண்டியடித்து ஏறியதால் வாசலின் அருகே இருந்த இருக்கையில் சிவா,மற்றவர்களும் நிற்க வசதியாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.அளவுக்கு அதிகமான சனநெருக்கடியால் அவனுக்கு மூச்சுத்திணறியது. சிக்னல் கோளாறினால் றெயில் நேரடியாகவே பரிஸ்சுக்கு செல்ல இருப்பதாக அதை ஓட்டியவர் அறிவித்து எல்லோரது வெறுப்பையும் குறைக்க முயன்று வெற்றிகண்டார்.

றெயில் தனது தானியங்கிக் கதவுகளைப் பூட்டியவாறே பாரிஸ் நோக்கிய தனது பயணத்தை மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் பாய்ந்தது.எதிரும் புதிருமாகவும் பக்க வாட்டாகவும் றெயில்கள் அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தன. இன்றும் தனது முதலாளியிடம் நேரம் தவறிப்போவற்கு பேச்சு வாங்குவதை நினைக்க சிவாவிற்கு மேலும் கடுப்பாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாரிஸ் கார் து நோர்ட் (GARE DU NORD) றெயில் நிலையத்தில் தன்னை நிலைநிறுத்த தனது வேகத்தைக் குறைத்தது.

கார் து நோர்ட்((GARE DU NORD) றெயில் நிலையம் சனவெள்ளத்தில் மிதந்தது.றெயில் நின்றதும் சனங்கள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும் தள்ளுமுள்ளுப்பட்டார்கள்.இறுதியாக நெடுநெடுவென்ற உயரத்தைக் கொண்ட தலைக்கு முக்காடு போட்ட உருவம் ஒன்று கையில் ஒரு பையுடன் சிவாவிற்குப் பக்கத்தில் ஏறி நின்றது.அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசி அவனது குடலைப்புரட்டியது.சிவாவிற்கு அந்த உருவம் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.நாற்றம் தாங்கமுடியாமல் அவன் மூக்கைப் பொத்திக் கொண்டான்.ஒரு சிலர் தங்களிடம் இருந்த பெர்பியூமை றெயில் பெட்டிக்குள் ஸ்பீரே பண்ணினார்கள்.சனநெரிசலில் தள்ளுப்பட்ட அந்த உருவம் மற்றய பயணிகளைப் அசட்டை செய்தவாறே தலையைக் கவிட்டு வைத்தவாறே நின்றது.றெயின் தனது கதவைப் பூட்டிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தது.

சிவா இறங்கவேண்டிய நிலையங்கள் இரண்டே இருந்தன.மைதிலியோ இன்னும் மூன்று நிலையங்களைக் கடக்கவேண்டி இருந்தது.கடிகாரத்தின் முட்கள் ஏழு மணியைத்தொட்ட அந்தக்காலை நேரத்தில் றெயின் இரண்டாவது நிலையத்தை அடைந்தவுடன்,அவனிற்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்த உருவம் தான் கொண்டுவந்த பையை எல்லோரும் அசந்த நேரத்தில் அவனருகில் வைத்துவிட்டு புகையிரத நிலைய மேடையில் இறங்கிச் சனத்தினுள் சனமாக மறைந்தது.சிவா அந்த உருவத்தைக் கூப்பிடத்தொடங்கிய பொழுது றெயிலின் கதவுகள் மூடப்பட்டு அவன் இறங்கவேண்டிய றெயில் நிலையத்தை நோக்கி வேகமெடுத்தது.இப்பொழுது ஓரளவு சனம் குறைந்து காற்று வரஆரம்பித்தது.அவனது மனமோ என்றுமில்லாதவாறு மைதிலியை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது. 


சிவா செயின் மிஷேல் றெயில் நிலையத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாக றெயிலின் வாசல் கதவின் முன்னால் நின்று கொண்டான். அவன் விரைவாக **சோத்தி(SORTI)எடுப்பதற்காக நான்கு கதவுகள் கொண்ட ரெயில் பெட்டியில் எப்பொழுதும் அவன் சரியான கதவைத் தெரிவு செய்வதுண்டு.இன்றும் அப்படித்தான் அவன் சரியான கதவின் அருகினில் நின்று கொண்டிருந்தான்.றெயில் செயின் மிசேல் (SAINT MICHEL) நிலையத்தில் நுளைந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கே எழுந்த பெரும் வெடியோசையினால் ரெயிலும், ரெயில் நிலையமும் குலுங்கியது.எங்கும் புகைமூட்டமும் சனங்களின் அலறல் சத்தங்களும் காதைப் பிளந்தன.சிவா திடீரென தனது உடல் இலேசாகி மேலே வான்வெளியில் மிதப்பதுபோல உணர்ந்தான்.அங்கே அவன் மைதிலியையும்காண முடிந்தது  மாதுமை ?????

பிற்குறிப்பு :

ஜூலை மாதம் 25ம் திகதி 1995 ம் ஆண்டு பாரிசின் இதயப் பகுதியான இந்த செயின் மிஷேல் ரெயில் நிலையத்தில்,இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் இந்த றெயிலில் குண்டு வைக்கப்பட்டது.உயிரிழப்பு அண்ணளவாக பத்துப்பேர்.காயமடைந்தவர்கள் 100க்கும் மேல் . 

** சோத்தி (EXIT)= நிலத்தடி புகையிரத நிலையத்தால் பயணிகள் வெளியேறும் பகுதி .

மலைகள் -இந்தியா 

18 ஐப்பசி 2016
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…