Friday, December 23, 2016

சுவைத்தேன் ( பாகம் 08 )

01 உண்ணாச்சொத்து 

 

வேலுப்பிள்ளை வாத்தியார்
வேகமாய்ச் சைக்கிள் ஓடார்
மூப்பால் வந்த நிதானம்
சைக்கிளை நிறுத்தி
அவர் இறங்கும் பாணி
வித்தியாசமானது
கால் ஊன்றும் உத்தி
அந்தத் தலைமுறைலில் இல்லை.
அந்தரப்பட்டுக் குதிப்பார்.
மரியாதை கருதிப் பொறுத்திருந்தது
அலுத்துப்போய்
ஒருநாள் கேட்டே விட்டேன்
'பிறேக் றிம்மைத் தேய்ச்சா
கனகாலம் பாவிக்காது பாரும்'


  தனிக்கட்டை
  ராசம்மாக்கிழவி
  சுறுசுறுப்பான மனுஷி
  வயசு தெரியாத தோற்றம்
  சந்தைக்குப்போய்
  காய்கறிகள் வாங்கி
  ஊர்மனைக்குள்
  வியாபாரம் செய்வாள்
  தலையில் கடகம்
  கடகத்துக்கு மேலே
  காற்செருப்பு
  'ஏன் ஆச்சி செருப்பைப் போடேல்லை'
  என் சின்ன மகள் கேட்டாள்
  'வெயில் கடுமையெண்டால் போடலாம்
  நெடூகப்போட்டுத்திரிஞ்சா
  கெதியில தேஞ்சுபோம், பிள்ளை'

  புதுவவருசம் பிறந்தால்
  சந்திரகுமார் சுறுசுறுப்பாகி விடுவான்
  தொண்டு நிறுவனங்கள்
  வங்கிகள்
  கடைப்படிகள்
  எல்லாம் ஏறிஇறங்கி
  கலண்டர், டயறி சேகரிப்பான்.

  அவனுக்குத் தேவை
  ஒரு கலண்டரும் டயறியுமே.
  ஆனால்
  அவனிடம்
  ஜனவரி முடிவில்
  இருபது முப்பது சேர்ந்து விடும்.
  சந்திரகுமார்
  ஒரு பக்கமேனும்
  டயறி எழுதி அறியான்

  றிம் தேயாது சைக்கிளோடிய
  வேலுப்பிள்ளை வாத்தியார்
  விபத்துக்குள்ளாகி
  மருத்துவமனையில் கிடந்தார்
  செருப்பைப்பாதுகாத்த ராசம்மா
  ஆணிகுத்தி
  ஏற்புவலி வந்து செத்துப்போனாள்
  சந்திரகுமாரின் டயறி
  சலவைக்கணக்கு எழுதப்பயன் படுகிறது.
 
********************************************
02 பொன்னையருக்கு வேலை போனது 

 
  
ரியூற்றறிகள் இல்லாத
  காலத்தில்
  வீடுகளுக்குப்போய்
  ரியூசன் கொடுத்தவர்தான்
  பொன்னையா வாத்தியார்
  கால் நடையில் தான் வருவார்
  குதிக்கால் நிலத்தில் பாவாது
  கற்பித்த பாடங்கள்
  கணக்கும் ஆங்கிலமும்
  அரைமணி நேரத்தில்
  கற்பித்தல் நடந்ததோ இல்லையோ
  எங்கள் செவியில்
  அவர் தொங்குவது தவறாது
  பொன்னையர் தொங்கியதால்
  என் காதுப் பொருத்து
  புண்ணாகியிருந்தது.
  அவர் செய்யும் கொடுமையை
  வெளியில் சொல்ல முடியாது
   'படிப்பு வரட்டும் என்றுதானே
  வாத்தியார் அடிக்கிறார்'
  … இது மாமாவின் சித்தாந்தம்.
  எனக்காக
  அத்தை உருகினாலும்
  தலையிடும் அளவுக்கு
  துணிச்சலில்லை அவவுக்கு
  பொன்னையரை மனசாரத் திட்டினேன்
  என் திட்டுப் பலிப்பதாயில்லை
  காதுப்புண்ணும் ஆறுதில்லை
  கடைசியாக
  கடவுள் கண் திறந்தார்
  ஒருநாள்
  பொன்னையருக்குச் சீட்டுக்கிழிந்தது
  வேறொன்றுமில்லை
  என்னிலை விட்ட சேட்டையை
  அருள் அண்ணாவிலை விட்டிருக்கிறார்
  பெரியம்மா கண்டிட்டா
  வாத்தியார்
  படிக்காட்டி என்ர பிள்ளை
  என்னோடை இருக்கட்டும்
  நீங்கள் வாருங்கோ'
 
****************************************
03 என்ன மரம் 

 கிராமங்களில்
 ஒவ்வொருவருக்கும்
 ஒரு பட்டமிருக்கும்
 அது பொருத்தமாகவுமிருக்கும்
 கதிரவேலுவுக்கு அமைந்த
 'காகம்' என்ற அடையும் அப்படித்தான்

 கதிரவேலு தனிக்கட்டை
 தமக்கை செல்லாச்சியோடு
 வாழ்ந்து வந்தார்
 நல்ல மனிசன்
 மரியாதையான பேச்சு
 மாலையில்
 கொஞ்சம் கள் அருந்துவார்
 அது போதும்
 தளம்பாட .

 அன்று
 இரவு எட்டு மணி
 செல்லாச்சி திண்ணைக் குந்திலை
 கதிரவேலு தட்டுத்தடவி
 இருப்புக்கு வருகிறார்
 முற்றத்து தென்னை முன் நின்று
 அண்ணாந்து பார்க்கிறார்
 அக்கா அக்கக்கா
 இது என்ன மரம்
 காத்திருந்து அலுத்துப்போன
 செல்லாச்சி சொன்னா
 இதுதானடா தம்பி
 வண்ணார்பண்ணைத் தென்னைமரம்!

நன்றி : சோ பத்மநாதன் 

(தொகுப்பில் இருந்து கொய்தவர் கருணாகரன்)