Skip to main content

சுவைத்தேன் - கவிதைகள் - பாகம் 08.

01 உண்ணாச்சொத்து 

 

வேலுப்பிள்ளை வாத்தியார்
வேகமாய்ச் சைக்கிள் ஓடார்
மூப்பால் வந்த நிதானம்
சைக்கிளை நிறுத்தி
அவர் இறங்கும் பாணி
வித்தியாசமானது
கால் ஊன்றும் உத்தி
அந்தத் தலைமுறைலில் இல்லை.
அந்தரப்பட்டுக் குதிப்பார்.
மரியாதை கருதிப் பொறுத்திருந்தது
அலுத்துப்போய்
ஒருநாள் கேட்டே விட்டேன்
'பிறேக் றிம்மைத் தேய்ச்சா
கனகாலம் பாவிக்காது பாரும்'


தனிக்கட்டை
ராசம்மாக்கிழவி
சுறுசுறுப்பான மனுஷி
வயசு தெரியாத தோற்றம்
சந்தைக்குப்போய்
காய்கறிகள் வாங்கி
ஊர்மனைக்குள்
வியாபாரம் செய்வாள்
தலையில் கடகம்
கடகத்துக்கு மேலே
காற்செருப்பு
'ஏன் ஆச்சி செருப்பைப் போடேல்லை'
என் சின்ன மகள் கேட்டாள்
'வெயில் கடுமையெண்டால் போடலாம்
நெடூகப்போட்டுத்திரிஞ்சா
கெதியில தேஞ்சுபோம், பிள்ளை'

புதுவவருசம் பிறந்தால்
சந்திரகுமார் சுறுசுறுப்பாகி விடுவான்
தொண்டு நிறுவனங்கள்
வங்கிகள்
கடைப்படிகள்
எல்லாம் ஏறிஇறங்கி
கலண்டர், டயறி சேகரிப்பான்.

அவனுக்குத் தேவை
ஒரு கலண்டரும் டயறியுமே.
ஆனால்
அவனிடம்
ஜனவரி முடிவில்
இருபது முப்பது சேர்ந்து விடும்.
சந்திரகுமார்
ஒரு பக்கமேனும்
டயறி எழுதி அறியான்

றிம் தேயாது சைக்கிளோடிய
வேலுப்பிள்ளை வாத்தியார்
விபத்துக்குள்ளாகி
மருத்துவமனையில் கிடந்தார்
செருப்பைப்பாதுகாத்த ராசம்மா
ஆணிகுத்தி
ஏற்புவலி வந்து செத்துப்போனாள்
சந்திரகுமாரின் டயறி
சலவைக்கணக்கு எழுதப்பயன் படுகிறது.

 
00000000000000000000000000

02 பொன்னையருக்கு வேலை போனது 

 
  
ரியூற்றறிகள் இல்லாத
காலத்தில்
வீடுகளுக்குப்போய்
ரியூசன் கொடுத்தவர்தான்
பொன்னையா வாத்தியார்
கால் நடையில் தான் வருவார்
குதிக்கால் நிலத்தில் பாவாது
கற்பித்த பாடங்கள்
கணக்கும் ஆங்கிலமும்
அரைமணி நேரத்தில்
கற்பித்தல் நடந்ததோ இல்லையோ
எங்கள் செவியில்
அவர் தொங்குவது தவறாது
பொன்னையர் தொங்கியதால்
என் காதுப் பொருத்து
புண்ணாகியிருந்தது.
அவர் செய்யும் கொடுமையை
வெளியில் சொல்ல முடியாது
'படிப்பு வரட்டும் என்றுதானே
வாத்தியார் அடிக்கிறார்'
… இது மாமாவின் சித்தாந்தம்.
எனக்காக
அத்தை உருகினாலும்
தலையிடும் அளவுக்கு
துணிச்சலில்லை அவவுக்கு
பொன்னையரை மனசாரத் திட்டினேன்
என் திட்டுப் பலிப்பதாயில்லை
காதுப்புண்ணும் ஆறுதில்லை
கடைசியாக
கடவுள் கண் திறந்தார்
ஒருநாள்
பொன்னையருக்குச் சீட்டுக்கிழிந்தது
வேறொன்றுமில்லை
என்னிலை விட்ட சேட்டையை
அருள் அண்ணாவிலை விட்டிருக்கிறார்
பெரியம்மா கண்டிட்டா
வாத்தியார்
படிக்காட்டி என்ர பிள்ளை
என்னோடை இருக்கட்டும்
நீங்கள் வாருங்கோ'

0000000000000000000000000000

03 என்ன மரம்
கிராமங்களில்
ஒவ்வொருவருக்கும்
ஒரு பட்டமிருக்கும்
அது பொருத்தமாகவுமிருக்கும்
கதிரவேலுவுக்கு அமைந்த
'காகம்' என்ற அடையும் அப்படித்தான்

கதிரவேலு தனிக்கட்டை
தமக்கை செல்லாச்சியோடு
வாழ்ந்து வந்தார்
நல்ல மனிசன்
மரியாதையான பேச்சு
மாலையில்
கொஞ்சம் கள் அருந்துவார்
அது போதும்
தளம்பாட .

அன்று
இரவு எட்டு மணி
செல்லாச்சி திண்ணைக் குந்திலை
கதிரவேலு தட்டுத்தடவி
இருப்புக்கு வருகிறார்
முற்றத்து தென்னை முன் நின்று
அண்ணாந்து பார்க்கிறார்
அக்கா அக்கக்கா
இது என்ன மரம்
காத்திருந்து அலுத்துப்போன
செல்லாச்சி சொன்னா
இதுதானடா தம்பி
வண்ணார்பண்ணைத் தென்னைமரம்!

நன்றி : சோ பத்மநாதன்
(தொகுப்பில் இருந்து கொய்தவர் கருணாகரன்)
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…