Monday, June 19, 2017

குரலற்றவரின் குரல் - வாசகரின் குரல்.


இன்றைய நாள் மிக அற்புதமானது.கோமகன் முதலாவதாக தொலைபேசியூடாக நூல் வெளியீட்டுக்கு அழைத்த போது வகுப்புகள் இருந்த காரணத்தால் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தேன்.ஆனால் அவர் மீண்டுமொரு முறை அழைத்ததும் கட்டாயம் சென்று விடுவது என முடிவு செய்தேன்.

எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் அறிவும்,பண்பாடும் நிரம்பி வழியும் மனிதர்களிடையே நான் அமர்ந்த முதலாவது நூல் வெளியீட்டு விழா. கோ மகனின் அன்புடன் துவக்கப்பட்டது.விழாவை பூரணப்படுத்தாமல் நோன்பு திறக்க வேண்டி இருந்ததால் இடையில் வந்தது மிக வருத்தமடையச் செய்தது.

என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு என்னைக் கவர்ந்த முறையில் பேசினார் அந்த மனிதர்.அவர் யார்,இலக்கியத்தில் அவர் பங்கு என்பதை இன்னும் அறியவில்லை.ஆனால் பெயரை மாத்திரம் பாய்வா என அறிந்து கொண்டேன்.இலக்கியத்தில் அடுத்த படைப்பிற்கான இடைவெளி எடுக்கும்போது படைப்பாளியின் சரக்கு தீர்ந்து விடுவதாக நினைப்பவர்கள் பற்றிய அவர் கூற்றும், மூத்த இலக்கியவாதிகள் பலர் புதியவர்களுக்கு வழிவிட்டு தங்கள் மகுடங்களை இறக்கி வைக்கும் மனநிலைக்கு பெரும்பாலும் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்...

அதே போல நவீன மேற்கத்திய இலக்கியபாணியுடன்,தமிழ் இலக்கியத்தை கலந்ததான புதிய படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள் பெரும்பாலும் யோசிக்க மறுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.அவரின் குரல் வளத்தில் கொஞ்சம் லயித்துப் போயிருந்தேன் என்றும் சொல்லலாம்.கோ மகன் பதில் சொல்ல வேண்டுமென குரலற்றவர்களின் குரலில் இருந்து தலித்தியம் மற்றும் இலக்கிய சர்ச்சைகள் சார்பாக அவர் வைத்த சுவாரசியமான இரண்டு கேள்விகளுக்கும் கோ மகன் என்ன பதிலளித்தார் என்று அறியும் ஆர்வமும் எனக்கிருக்கிறது.

எது எவ்வாறு கோ மகனை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி.அவருக்கு எனது அரிந்த ஆப்பிளை அளித்ததும் பெரு மகிழ்ச்சி.

Naseeha Mohaideen 

0000000000000000000000000000000000

தோழர் கோமகனின்,

குரலற்றவரின் குரல் - நேர்காணல் :

எனது வாசிப்புக் குறிப்பு.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

மேற்படி தொகுப்பினை இன்று காலை முதல் வாசிக்கத் தொடங்கி அதனை முழுவதுமாக சுமார் ஆறு மணிநேரத்துள் வாசித்து முடித்திருந்தேன்.

பின்வருவோர்களது நேர்காணல் தொகுப்பாக 322 பக்கங்களை அது கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யோ. கர்ணன் - பொ. கருணாகரமூர்த்தி - அ.யோசுராசா - லெ. முருகபூபதி - கருணாகரன் - புஷ்பராணி சிதம்பரி - சோ. பத்மநாதன் - புலோலியூரான் - ஆர்.எம்.தீரன் நௌஷாத். - இளவாலை விஜயேந்திரன் - கேசாயினி எட்மன்ட் - நிவேதா உதயராஜன் - க. சட்டநாதன் - சோலைக்கிளி.

தோழர் கோமகன் அவர்களால் நேர்காணப்பட்டவர்களை நோக்கி முன்வைக்கப்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையளிக்கப் பட்டவர்களுல் கவிஞர் சோலைக்கிளியைத் தவிர ஏனைவர்களால் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், காத்திரமாகவும், ஏனைய எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்கியாகவும், ஆரோக்கியம் பொதிந்தவண்ணமும், மனவிருப்புடன் பதில்கள் வழங்கப்பட்டிருந்தமை சிறப்பாக இருந்தன.

ஆனால் சோலைக்கிளி மட்டும் மிகவும் சொதப்பலாகவும், நக்கல்,நையாண்டித்தனம் மிக்கதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெளியே நின்று ஒரு உப்புச்சப்பற்ற பதில்களையே மனமின்றி வழங்கியிருப்பது இப்பெறுமதியான நேர்காணல் தொகுதிக்கு வலுச்சேர்க்கவில்லை என்பது எனது மனக்கருத்தும், ஆதங்கமுமாகும் என்பது இத்தொகுதியை நான் முழுமையாக ஆள ஊடுருவி வாசிக்கும் போது புலனாகியது.

ஒரு விடயத்தைப்பற்றி நேர்காண்பவர் கேட்டால் அதற்கு தன்பக்கமுள்ள பொருத்தமான பதிலைத்தான் கூறவேண்டுமே தவிர, அவரது கேள்வியைத் திரும்பத் திரும்பச் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்வாராயின் அவருக்கும் நேர்காணலுக்கும் ஏழாம் பொருத்தமென்றே பொருள்படும்.

கோமகன் அவர்கள் சோலைக்கிளியிடம் உங்களைப்பற்றி சொல்லுங்கள் எனக்கூறவே, அதற்கு சோலைக்கிளி அவர்கள் "அல்லாமத்துக்" கதை சொல்கிறார்.
அவரை பல ஆண்கள் "குமர்" என எண்ணி இன்றைவரைக்கும் காதலிப்பதாகவும், கைப்பிடிக்க வருமாறு கேட்பதாகவும் கதையளக்கிறார்.

அது மட்டுமன்றி 
கோமகனின் இப்படியான ஒருகேள்விக்கு,

• உங்கள் கவிதைகள் எதைத்தான் சனங்களுக்கு சொல்ல முயலுகின்றன ?
இதற்கு கவிஞர் சோலைக்கிளியின் பதில் பின்வருமாறு உள்ளது.
" நம்பமாட்டீர்கள் ,எதையுமே இல்லை. "
என்றும்,,

கோமகனின் மற்றுமொரு கேள்வியான,

•• ஒரு கவிதையானது உங்களுக்குள் எப்படியாகப் பிறக்கின்றது ? என்பதற்கு கவிஞர் சோலைக்கிளியின் பதில்: 
" கேட்கக் கூடாத விடயத்தையெல்லாம் கேட்கிறீர்கள்" என்று பதிலிறுக்கிறார். இப்படியாகவே இவரது எல்லாப் பதில்களும் அமைந்துள்ளன. இனி, இந்த நேர்காணல் தொகுதியை தோழர் கோமகன் அவர்கள் மீள் பதிப்புச் செய்யும் எண்ணம் அல்லது நோக்கம் இருந்தால் இதுபோன்றவர்களின் நேர்காணலைத் தவிர்த்துக் கொள்வது இத்தொகுதிக்கு மேலும் வலுச்சேர்க்கும் என நம்புகிறேன்.

நன்றி.

Mohamed Naleer

Tuesday, May 2, 2017

எங்கே செல்கின்றோம் ???


"கையில் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்பதற்காக ஒரு சமூகத்தில் அல்லது ஒரு மனிதரிடத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கியிருக்கிறது என்று பொருளில்லை. துரோகி - தியாகி போன்ற சொற்பிரயோகங்களும் ஏகத்துவ மனப்பாங்கும் எதையும் கறுப்பு - வெள்ளையாகவே பார்க்க முனையும் தன்மையும் ஜனநாயக அடிப்படைகளுக்கு முரணானவை. தமிழ்ப் பொதுமனம் என்பது பெருமளவுக்கும் ஜனநாயகப் பண்புகளை மறுக்கும் விதமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகமே ஜனநாயக விரோதச் சமூகம்தான். குடும்பத்திற்குள்ளிருந்து பொதுவெளிவரை பல அடுக்குகளில், பல நிலைகளில் இதைப் பார்க்க முடியும்."

குரலற்றவரின் குரலுக்காக
கருணாகரன்

0000000000000000000000

இளையதலைமுறையை சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகரும் இலக்கிய செயல்ப்பாட்டாளருமான யதார்த்தனை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு ஒன்றில் ஒருசிலர் மிரட்டியதாகவும் தாக்க முயற்சி செய்ததாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் "விதை குழுமம்" அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டிருக்கின்றது. உலகளவிலும் தாயகத்திலும் பேனைகளுக்கும் வாய்களுக்கும் எதிரான வன்முறைகள் காலங்காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தாயகத்தில் ஒருகால கட்டத்தில் வன்முறைகளுக்கு எதிராகப் பேசிய வாய்கள் மௌனிக்கப்பட்டன அல்லது இல்லாது செய்யப்பட்டன. விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம் அல்லது உளப்பக்குவம் இல்லாதவர்கள் தெரிவுசெய்கின்ற இறுதி ஆயுதம் வன்முறையே. பல அழிவுகளையும் சாவுகளையும் கடந்து வந்தவர்கள் என்று நெஞ்சை நிமிர்த்துகின்ற அதே நாங்கள் தான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பாராது போராட்டம் விட்டுப்போன வன்முறையை முற்றுமுழுதாக நிறுத்த முடியாத அகச்சிக்கல்களில் சிக்கித்தவிக்கின்றோம். இந்த அகச்சிக்கலானது இளைய சமூகத்திடமும் ஆழ வேரோடியிருப்பது எமது தமிழ் சமூகத்துக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.யதார்த்தன் மீதான இந்த தாக்குதல் முயற்சியானது இலக்கிய உபாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே நான் கருதுகின்றேன். இதில் யதார்த்தன் மீதான தாக்குதல் முயற்சி என்பது எமது சமூகத்தின் அகச்சிக்கல்களுக்கான ஓர் குறியீடே. யதார்த்தனின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்காக எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றேன். நன்றி வணக்கம் .

கோமகன்


30 சித்திரை 2017

Sunday, April 23, 2017

குரலற்றவரின் குரல்வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே !!

கோமகனின் "தனிக்கதை"யின் ஊடாக உங்களை சந்தித்த நான் , இரண்டு வருட இடைவெளியின் பின்னர் எனது இரண்டாவது படைப்பின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பெயர் : குரலற்றவரின் குரல்

பகுப்பு : நேர்காணல்கள்

வெளியீடு : மகிழ் பதிப்பகம்

நூல் வெளியீடு தொடர்பான விபரங்களை விரைவில் அறியத்தருகின்றேன். நன்றி .

நேசமுடன் கோமகன் 

23 சித்திரை 2017

Thursday, April 20, 2017

பொது மன்னிப்புக்கேட்டுத் தற்கொலை செய்ய வேண்டியது தமிழ்க்கவியா இல்லை இணையப்போராளிகளா?


இலங்கையைச் சேர்ந்த தமிழ்க்கவி தமிழர் தாயகப் போராட்ட காலத்தில் நேரடிப்பங்காளியாகவும் போராட்டத்தில் தனது மகன்களைக் களப்பலி கொடுத்தவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் மகளிர் முன்னேற்ற செயல்ப்பாடுகளை முன்நின்று நடத்துபவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். கடந்த வாரத்தில் தமிழ்க்கவி மலையகத்தவர் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்று சமூகத்தளங்களில் அதிர்வலைகளையும் பெரும் குழப்பங்களையும் விழைவித்தது நடு வாசகர்கள் அறிந்ததே. அவரது மூலக்கட்டுரையைப் பெரும்பாலானவர் படித்தே பார்க்காது அவர் பொது வெளியில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தமிழ்க்கவி வாழவே தகுதியற்றவர் என்பதன் ஊடாக மறைமுகமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டியவர் என்றும் இணையப்போராளிகள் விசத்தைக் கக்கியிருந்தனர்.

ஒருவர் தனது அனுபவங்களை சொல்லும் பொழுது அதற்கு யாருமே விளக்கம் கேட்கமுடியாது. தமிழ்க்கவி மலையக வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். தமிழ்க்கவி தனது அனுபவத்தை சொல்லும் பொழுது பொது மன்னிப்புக்கேள் என்பதும் அவர் வாழவே தகுதியற்றவர் என்பதும் பாஸசிசத்தின் உச்சக்கட்டம் மட்டுமில்லாது ஓர் பெண் படைப்பாளி என்றவகையில் அவரது கருத்துரிமையை முற்றுமுழுதாக மறுதலிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிந்தது .

சமகாலத்து இலத்திரனியல் இணைய வெளியில் ஓர் இணையத்தளத்தையோ இல்லை ஒரு பத்திரிகைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் குழுமத்தில் இருக்கும் பிரதம ஆசிரியர் எனப்படுபவர் ஒரு ஆக்கத்தில் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதற்கு உரைகல்லாக தமிழ்க்கவியின் கட்டுரையில் ஒரு சில பத்திகளை மட்டும் எடுத்து கட்டுரையின் போக்கையே திசைமாற்றிய தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தி வியாபாரமும் ( விபச்சாரமும் ) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேவேளையில் “கரை எழில் ” நூலின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர்கள் இக்கட்டுரையை செம்மைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும் செம்மைப்படுத்தலில் போதிய கவனம் செலுத்தப்படாததும் இக் கட்டுரை குறித்த சர்ச்சைகளுக்கு மூலகாரணிகளாகின்றனர். இதை கரைச்சி பிரதேச சபையின் வருத்தம் தெரிவித்த கடிதமும் விநியோகிக்கப்பட்ட பிரதிகள் மீளபெறப்பட்டு கட்டுரை இல்லாதே நூல் வெளியாகும் என்ற அறிவித்தலும் எமக்கு உறுதி செய்கின்றன.

அதே வேளையில் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளையும் பத்திகளையும் உற்று நோக்கும் பொழுது ஓர் விடயம் எமக்குத் தெளிவாகப் புலனாகின்றது. கிளிநொச்சியில் இருக்கின்ற தமிழ்க்கவி மீதான உள்ளூர் அரசியல்களும் இந்த விடயத்தில் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. சர்ச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி இருக்கின்ற படைப்பாளிகளில் பலர் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருந்தையும் இந்த இடத்தில் எம்மால் அவதானிக்க முடிந்தது.

இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் கோருவதற்கு தமிழ்க்கவியை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் “கரை எழில் ” நூலுக்காக எழுதிய கட்டுரையின் கைஎழுத்து வடிவம் இணையபிரதிக்கு ( வேர்ட் ) மாற்றியபொழுது கட்டுரையில் வந்த சொற்தொடரான ” காரணம் தேசப்பற்று மட்டுமல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்தும் தேவைப்பட்டதுதான். ” என்பதில் “மட்டுமல்ல” என்ற சொல் தன்னால் தவறவிடப்பட்டது என்பதனைக் கோடு காட்டினார்.

நடு குழுமம்

நன்றி : http://www.naduweb.net/article/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/

Wednesday, April 12, 2017

ஐரோப்பாவில் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் விதமும் சொல்லும் விதமும்.


ஐரோப்பாவில் ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவர்களது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றே சொல்வேன். இதை இன்னும் இலகுவாக சொன்னால் ஆணுக்கு தந்தையின் வழி பெயர் தொடர்ச்சியும் ( பரம்பரையை நினைவு கூரல் ) அதே போல் பெண்ணுக்கு அவர்களது தந்தையின் பெயரை சொல்லி அழைப்பதும் நடைமுறையில் உள்ளது. அதாவது முதற் பெயரில் தந்தையின் பெயரும் , பெயரில், மகன் அல்லது மகளது பெயரும் இணைத்து எழுதுவது அழைப்பது வழமை. இந்த நடைமுறை திருமணமானாலும் தொடரும். ஆனால் இவர்களது தேசிய அடையாள அட்டையில் இன்னாரின் மனைவி அல்லது இன்னாரின் கணவன் என்ற இன்னுமொரு  பகுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இந்த அழைப்பு முறையானது குடும்பங்களின் தொடர்ச்சியினை பாதுகாப்பதற்கு உகந்தது. 

ஆசிய குடும்ப முறைமையில் பெண் திருமணமானவுடன் இதுவரைகாலமும் பேணப்பட்டு வந்த அவளது தந்தையின் பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் அவளது கணவனின் பெயர் ஒட்டிக்கொள்ளும். இந்த முறையானது அவளது அடையாளப்படுத்துகின்ற அடிப்படை உரிமையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது . ஆனால் ஆணுக்கு மட்டும் அப்படி நேராது கட்டியமைக்கப்பட்டியமைக்கப்பட்டதுதான் ஆசிய குடும்ப அமைப்பு .ஐரோப்பிய பெயர் வைக்கும் / அழைக்கும் முறைமையானது இருதரப்பு அடிப்படை உரிமைகளையும் அவர்களது அடையாளத்தை பேணுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இன்னுமொரு சட்டரீதியிலான வசதியும் உள்ளது. அதாவது திருமணமானவர்கள் இருதரப்பு சம்மதத்தின் பேரில் தங்களது பிள்ளைகளின் பெயரில் "தாய் வழி " பரம்பரை தொடர்ச்சியை பேணும் உரிமை. இந்த முறைமையை ஏனோ புலம் பெயர்ந்த எம்மவர்கள் தொடுவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். ஆனால் ஓரிரு குடும்பங்களில் இந்த முறையை காண்பது மகிழ்ச்சியை தருகின்றது.

கோமகன் 

12 பங்குனி 2017

Thursday, March 9, 2017

மகளிர் தினம் ஓர் நோக்கு


சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம் , எட்டு மணித்தியால வேலை , வாக்குரிமை , பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ் பிளாங்க் மூலம் பெண்களின் அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றய கால கட்டத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல் ,பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகள் உறுதி செய்துகொண்டுதான் இருக்கின்றன. தந்தை வழி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஆசிய சமூகம் இந்த விடயங்களில் தீவிரப்போக்கை கொண்டிருக்கின்றது. என்னதான் பாரதியும் பெரியாரும் தொண்டைகிழியக்கத்தினாலும் ஆண் சமூகத்தின் உளப்பாங்கில் பெரிய மாற்றங்கள் வரவில்லை.

ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்ஸிலும் இதே நிலை தான் தொடர்கின்றது. குடும்ப வன்முறைகளும் சிறுவர் பாலியல் வன்புணர்வுகளும் அதிகரித்த படியே இருக்கின்றன. பிரான்ஸின் குடும்ப வன்முறை பற்றி சமீபத்தைய புள்ளிவிபரங்கள் 10 நாட்களுக்கு ஒரு பெண் இறப்பதாக சொல்கின்றது. இந்தக்குடும்ப வன்முறைகள் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் அதிகரித்துள்ளதாக சொல்கின்றது. என்னைப்பொறுத்தவரை யில் வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் ,மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது புலம்பெயர் தேசத்து ஆசிய சமூகத்தில் மாறுகின்றதோ அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம்.

நீண்ட பெரும் போரை சந்தித்த தாயகத்தில் கூட பெண்களின் நிலை ஆரோக்கியமானதாக இல்லை. ஒருகாலத்தில் போரை முன்னெடுத்த பெண் போராளிகளை தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமூகம்ததான் இன்று அவர்களை அனாதைகளாக தெருவில் விட்டு பாலியல் தொழிலார்களாகப் பார்க்கின்றது. ஆக மொத்தத்தில் இந்தப்போரானது எமது பண்பாட்டுத்தளத்தில் பாரிய மாற்றத்தினைக் கொண்டுவரவில்லை. போர் நடைபெற்ற பொழுதில் மகளிர் சகல மட்டத்திலும் விடுதலையடைந்து இருந்தார்களே என்ற கேள்விக்கு அது ஓர் சந்தர்ப்பவாத முன்னெடுப்பாகவே என்னால் கருதக் கூடியதாக இருக்கின்றது.

பெண்களின் விடுதலைக்கு உண்மையில் ஆண்கள் மட்டுமா தடையாக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பங்குடன் குறிப்பிட்டளவு பெண்களும் தடைகளாக இருக்கின்றார்கள் என்பேன். நான் செய்த நேர்காணல்களில் பல மகளிர்கள் பெண்விடுதலைக்கு பெண்களே முக்கிய எதிரிகளாக இருக்கின்றார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள். விடுதலை அல்லது சுதந்திரம் என்பது யாசித்துப் பெறுவதல்ல மாறாக அது உளரீதியிலான மாற்றங்களுடன் எதிர்தரப்புக்கு வழங்கப்படுவது. எங்களுடன் கூட வருகின்ற பெண்ணை ஓர் சக உயிரியாக அவளுடைய உணர்வுகளை மதிக்கின்ற உளவளத்தை ஆண்தரப்பு ஏற்படுத்த வேண்டும். ஓர் குடும்பத்தில் அம்மா என்ற பெண்ணாலயே அந்தக்குடும்ப அங்கத்தவர்கள் வளர்க்கப்படுகின்றார்கள். பாலியியல் அவமதிப்புகள் அல்லது வேறுபாடுகளை அம்மா என்ற கதாபாத்திரம் தூக்கி உடைக்குமானால் பெண்ணானவள் சுதந்திரமாக உலாவருவாள்.அவள் வருங்காலங்களில் அவளது இருப்பு அங்கீகாரம் போன்றவற்றில் விடுதலையடைந்து இருப்பாள்.


கோமகன்
08-03-2017

Wednesday, February 22, 2017

மனமே மலர்க ( பாகம் 23 )

மனமே மலர்க ( பாகம் 23 )


ஐஸ் கிறீம் வாழ்க்கை

நமக்குள்ளே நாம் பிளவுபட்டுக் கிடக்கிறோம். எதைச் செய்ய நினைத்தாலும் ஏழு கருத்துகள் வருகிறது. நேற்று செய்ததை நினைத்து இன்று வேதனைப்படுகிறோம். செய்யவும் விருப்பம், ஆனால் தயக்கம். விருப்பமிருக்கிறது ஆனால் தைரியமில்லை. நமக்குள்ளேயே குழந்தையுணர்வு ஐஸ்கிரீம் கேட்கிறது. தாய் குரல் குறைவாய் சாப்பிடு என்கிறது. தந்தை குரல் கூடாது என்று மிரட்டுகிறது. ஆசிரியர் திட்டுகிறார். அறிவு அது கெடுதல் என்கிறது. கெளரவம் இடம் பார்த்து சாப்பிடு என்கிறது. அந்தஸ்து உயர்ந்த விலையுள்ளதை கேட்கிறது.

ஆக குழந்தையுணர்வாய் ஒருமையாய் ஒரு ஐந்து நிமிடம் வாழ நம்மால் முடிவதில்லை. அப்படிப் பிளவுபட்டு கிடக்கிறோம். ஆகவே பிளவில் சக்திகள் சிதைந்துவிடுகின்றன. கடைசியில் நாம் ஐஸ்கிரீம் ஆசையைக் கூட வாழாமல் அமுக்கி கட்டாயதனத்துக்குள் நுழைந்துகொள்கிறோம்.

இப்படி நமக்குள் பல குரல்கள், பல மாறுபட்ட கருத்துக்கள், அறிவுகள். இதையெல்லாம் மெல்லும் மன ஓட்டம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த ஓட்டத்திற்கே சக்தி செலவாகிவிடுகிறது. வாழ்வதற்கு சக்தி மீதம் இருப்பதில்லை. இந்த பிளவு நிலை, இந்த சிதறுண்ட நிலையிலிருந்து நாம் மீளவேண்டும். அப்போதுதான் ஓர் உணர்வாய் சக்திப் பெருக்கமாய் வாழ்வைத் தொடுவோம். அப்போது அங்கு தயக்கமும் பயமும் போய் குதூகலமும் கொண்டாட்டமும் பிறக்கும்.

000000000000000000000000

உள்ளுணர்வு 

உள்ளுணர்வுபடி நாம் வாழ்வது இந்தக் காலத்தில் பிறந்து ஒரு 6 மாதம்வரை தான்  பிறகு மனம் வந்து விடுகிறது. நான் என்ற கற்பனையும் அதைச் சுற்றி கட்டடமும் கட்ட ஆரம்பித்து விடுகிறது குழந்தை.

உள்ளுணர்வுபடி வாழும் குழந்தையைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது, இதயம் திறக்கிறது, உணர்வு நெகிழ்கிறது, நாமும் சிறிது உணர்வு பெறுகிறோம், மனதின் பிடி சிறிது தளர்கிறது. ஆகவே உள்ளுணர்வுபடி நாம் இப்போது வாழ துவங்கினால் மீண்டும் நாம் குழந்தை போலாவோம். குழந்தையாக மாட்டோம். குழந்தை போல, அதாவது உள்ளுணர்வுப்படி நான் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து வாழும் மனிதனாக நாம் இருப்போம். குழந்தை உள்ளுணர்வுப்படி வாழ்ந்தாலும் அப்படி வாழ்வதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லாமையால் அதை இழந்துவிடுகிறது. மேலும் அதற்கு தன்னைக் காத்துக் கொள்ளுமளவு அறிவும் உடலும் வளராமையால், அடுத்தவரை சார்ந்தே வாழ வேண்டி இருப்பதால், அடுத்தவரால் தாய் தந்தையால் திணிக்கப்படுவதை மறுக்க சக்தியற்று தன் உள்ளுணர்வை சிறிது சிறிதாக இழந்து விடுகிறது.

ஆனால் வளர்ந்து விட்ட நாம் உள்ளுணர்வை திரும்பப் பெற்று வாழும் சாத்தியம் இருக்கிறது. அதற்குரிய சக்தியும் ஆற்றலும் நமக்கு வந்துவிட்டது. இப்படி உள்ளுணர்வுப்படி வாழ்ந்தால் நாம் ஒழுக்கமற்று, பணிவற்று, மரியாதையற்று, அன்பற்று, காட்டுமிராண்டியாகி விடுவோமா என்று சிந்தித்துப் பாருங்கள்.
உள்ளுணர்வுப்படி வாழ ஆரம்பித்தால் செக்ஸ் இருக்கும், ஆனால் கற்பழிப்பவன் இருக்கமாட்டான். கடமை இருக்காது, ஆனால் கருணையும் அன்பும் இருக்கும். போலித்தனமான மரியாதையும், தந்திரமான பணிவும் இருக்காது, ஆனால் மனிதநேயம் இருக்கும். பாதுகாப்புக்காகவும், சுயநலத்துக்காகவும் உறவு கொண்டாடுதல் இருக்காது, ஆனால் நட்பும் பகிர்தலும் இருக்கும். வியாபாரம் என்ற பெயரில் சுரண்டல் இருக்காது, ஆனால் உழைப்பும் உற்பத்தியும் இருக்கும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் கலை இருக்காது, உணர்வை கூர்மைப்படுத்தும் படைப்பும், கலையும், இசையும் பிறக்கும். தண்டனையின் பயமுறுத்தல் இருக்காது, ஆனால் உள்ளுணர்வின் இயல்பில் இயங்கும் ஒழுங்கு இருக்கும். நாம் உள்ளுணர்வுப்படி வாழ்கிறோம் என்ற உணர்வு இல்லாமல், ஆனால் உள்ளுணர்வுப்படியே அதுவே ஒரு துணையாக, வழிகாட்டுதலாக, வாழும்

பல்லாயிரம் கோடி ஜீவராசிகளைப் பாருங்கள். மரம், செடி, கொடி என பூத்துக் குலுங்கி கனி கொடுக்கும் பல்லாயிரம் கோடி தாவர இனத்தைப் பாருங்கள். எவ்வளவு அமைதியும், பொறுமையும், இயற்கையோடான இணைப்புணர்வும், அழகும், ஆனந்தமும், படைப்பும், ஆராய்ச்சியும் அவைகளிடம் நிறைந்துள்ளன.


00000000000000000000000000000

பயம்

நான் என்னுடைய பயத்தைப் பற்றி விழிப்புணர்வு அதிகம் கொள்ள ஆரம்பித்தேன். – அதிகம் நபர்கள் கூடும் இடத்தில் இருக்க எனக்கு ஏற்படும் பயம் பற்றி, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கு ஏற்படும் பயம் பற்றி, அவர்கள் என்னை விரும்புவார்களா மாட்டார்களா என்பது பற்றி நான் கொள்ளும் பயம் பற்றி – என்னுடைய பயங்களை பார்க்க ஆரம்பித்தேன். இறுதியில் நான் வாழ்நாள் முழுவதும் பயத்திலேயேதான் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்ற
உண்மையை சந்தித்தேன். மற்றவர்கள் என்ன செல்வார்களோ என்ற பயம். 

நான் செய்தது அனைத்துமே மற்றவர்களைப் பொறுத்ததுதான் என்பதை நான் உணர்ந்தேன். அவர்கள் அதை அங்கீகரிப்பார்களா இல்லையா என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது.
இது மனசோர்வையும் தாண்டியது. இது பயங்கரமானதாக இருந்தது. என்னால் இதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. நான் என்ன செய்தாலும், எங்கே சென்றாலும், இது என்னுடைய முகத்தில், வயிற்றில், கால்களில் இருந்தது. நான் பயக்குழியில்
வாழ்வதாக எனக்கு தோன்றியது. அந்த குழி மிகவும் ஆழமானதாகவும் நான் அதிலிருந்து வெளியே வர முடியப் போவதில்லை என்றும் தோன்றியது.


பின்பு….. சிலநாட்கள் கழித்து, (அது எத்தனை நாட்கள் கழித்து என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை,) பயம் குறைந்துள்ளதை உணர்ந்தேன். மேலும் அது குறைந்துகொண்டே போவதையும் உணர்ந்தேன். மிகப்பெரிய மாறுதல் நிகழ்ந்தது, மின்னல் வெட்டியது என்றெல்லாம் என்னால் கூற
முடியாது. அதை பார்ப்பது மட்டுமே போதுமானது. நீ வாழ்ந்து கொண்டிருக்கும் நரகத்தை பார்த்து, நிஜமாகவே அதை உணர்ந்து, அதற்கு காரணம் நீதான், வேறு யாரும் காரணமல்ல
என்பதை நிதர்சனமாக உணர்ந்து கொண்டு, தன்னுணர்வோடு அதை வாழ்ந்து பார்க்கும் போது…….. எத்தனை நாட்கள் உன்னால் அதை செய்ய முடியும்? எத்தனை நாட்கள் நீ தொடர்ந்து நரகத்தில் வாழ்வதை தன்னுணர்வோடு தேர்ந்தெடுப்பாய் ?


உங்களுடைய பயத்தை மதிப்பீடு செய்யாமல், ஒய்வாக, மனதிற்கு வெளியே நின்று பார்ப்பது மட்டுமே போதுமானதாகும். அப்போது விழிப்புணர்வு என்னும் ரசவாதம் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.

0000000000000000000000000

கட்டாயத்தனம்

24 மணிநேரமும், ஒவ்வொரு சின்ன செயலையும், கருத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. நேரத்தை வீணடிக்கக்கூடாது, பணத்தை வீணடிக்ககூடாது, உழைப்பை, அறிவை, உணவை, தண்ணீரை, இப்படி எதையும் வீணடிக்ககூடாது. அதோடு எவ்வளவு சிக்கனமாக, உபயோகமாக, விரைவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அப்படிச் செய்யவேண்டும் . வளரவேண்டும். இப்படி வீணடிக்ககூடாது, அதிகபட்ச ஆதாயம் அடையவேண்டும், வளரவேண்டும், சாதனை படைக்கவேண்டும் என்ற அந்தக் கட்டாயத்தனம் ஒரு நோய் என்கிறார் ஓஷோ. மனிதனைப் பீடித்துள்ள மிக அபாயகரமான சக்தி வாய்ந்த நோய் இது. இது ஈகோவை வளர்ப்பதாக, செயல்களில் திறமையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் இது வெகு
சீக்கிரம் பற்றிக்கொள்கிறது. முழுதாக ஒருவனை ஆக்கிரமித்துவிடுகிறது. இது ஈகோவை வளர்க்கிறது. அறிவும், திறமையும் கொடுக்கிறது. ஆகவே இது ஒருவனுக்கு எவ்வளவு துன்பமாக இருந்தபோதிலும் இதை விடுவது கடினமாக இருக்கிறது. வெளிவரத் தயக்கமாக இருக்கிறது. இதன் வேரை, இது எப்படி நமக்கு வந்தது, எப்படி நம்மை விட்டு விரட்டமுடியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் அறிய ஒருவனால் முடிவதில்லை.

இதனால் ஒருவனால் எதையும் அனுபவித்து வாழ முடிவதில்லை. சந்தோஷம் கொள்ள முடிவதில்லை. தவறுகளை ஏற்க முடிவதில்லை. மற்றவர்களை அவர்களாகவே ஏற்று சந்தோஷப்படமுடிவதில்லை. ஓய்வாகவும், தளர்வாகவும் இருக்க முடிவதில்லை. காரணமற்று, பயனற்று விளையாட்டாய் எதையும் செய்ய முடிவதில்லை. அழகை ரசிக்கவும், அன்பை ஆராதிக்கவும், தனிமையில் வாழவும் முடிவதில்லை. மொத்தத்தில் உண்மையான வாழ்வையும், அதன் ஆனந்தத்தையும் அவனால் என்றுமே அனுபவிக்க முடிவதில்லை. இருக்கும் வாழ்வையே அனுபவிக்கமுடியாதவனுக்கு தியான நிலை என்ற சாத்தியமே இல்லை. மேலும் மிகுந்த முயற்சிக்கு பின்னும் இவனுக்கு பலன் கிடைக்காத கோபத்தில், தியானம் புரியாமல் வாழ்பவர்களைப் பார்த்தே சில நேரம் பொறாமை பிறக்கிறது. தன்னைவிட அவர்கள் சந்தோஷமாய் இருப்பது போல இவனுக்குத் தெரிகிறது. இதனால் இவனது கட்டாயத்தனம் இன்னும் இறுகுகிறது. அல்லது சலிப்பில் வேறு முயற்சிக்கு மாற முடிவு செய்கிறான். ஆனால் சமுதாய போலித்தனமும் ஏற்புடையதாக இல்லாததால் அங்கும் கூட்டத்தில்
ஒருவனாக மாறமுடியாமல் அவதிப்படுகிறான். கடைசியில் புதிய ஈகோவில் புதிய தன்னைப் போன்றவர்கள் கூட்டம் ஒன்றைச் சேர்த்து அதில் ஒரு அங்கமாகிவிடவே முயற்சிக்கிறான்.  
Friday, January 27, 2017

வெந்துருதி தி(த்)றைஸ்.
முடிவு.

ஹொப்பித்தால் ஃவிஷா(L'hôpital Bichat):

அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில்  இருந்து மைனஸ் 20பாகை  உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது அவைகளாகஇலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக்கங்கள் எல்லாமே முழு உருவங்களாக இல்லாது குவியல்களாக இருந்தன. பின்னர் அவை மருத்துவர்களால் சீர்செய்யப்பட்டு உருப்பெறலாம்.

0000000000000000000

அல்ஜீரியாவின் வடக்கு பிராந்தியமான கபிலி-யில் (Kabylie) மார்க்க சிந்தனைகளில் ஊறித்திளைத்த அபூபக்கர் பாத்திமா தம்பதிகளின் மூத்த புதல்வியாக பிறந்த ஆயிஷா பாரிஸ் வந்து பதினைந்து கோடைக்காலங்களைக் கடந்து விட்டாள். தானும் தன்பாடும் என்றிருந்த ஆயிஷா கோடை விடுமுறையின் பொழுது தனது அப்பா அம்மாவைப் பார்ப்பதற்காக அல்ஜீரியா சென்றிருந்தவேளை, நீண்ட காலத்தின் பின்னர் தனது கல்லூரித்தோழனான சுலைமானை ஓர் தேனீர்விடுதியில் சந்தித்தாள். சுலைமான் முகத்தில் அடர்தாடி அப்பியிருந்தது.உடலை  ஓர் வெள்ளை நிற நீண்ட அங்கி மறைத்திருந்தது. தலையை  ஓர்  தொப்பி மறைத்திருந்தது. மொத்தத்தில் அவனது சிவந்த முகமே ஆயிஷாவுக்கு தெரிந்தது. அவன் சாதாரண இளைஞனாக இல்லாது ரிப்பிக்கல் இஸ்லாமியனாகவே இருந்தான். அந்த தேனீர்விடுத்திச் சந்திப்பில்தான் அப்பாவியான ஆயிஷாவின் வாழ்வில் விதி தனது விளையாட்டை  ஆரம்பிக்கப்போவதை அவள்  அறிந்திருக்கவில்லை. சுலைமான் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர ஆவி தள்ளிய தேனீரையும் வெளியே இருந்த தெருவையும்  வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவனது அமைதியைக் குலைக்க விரும்பி ……

"நீ இப்பொழுது முன்பு போல் இல்லை ".

"எப்படியில்லை"?

"படிக்கும் பொழுது எவ்வளவு கலகலப்பாய் இருப்பாய்.? "

"நாம் நினைப்பது போலவா வாழ்க்கை அமைக்கின்றது? "

"ஏன் நன்றாகத்தானே இருக்கிறாய்?"

"நாம் மட்டும் இருந்தால் சரியாகப் போகுமா? எம்மை சுற்றியுள்ளவர்களை பார். எவ்வளவு இழிநிலையில் இருக்கின்றார்கள்?"

"ஏன் எல்லோரும் நன்றாகத்தானே இருக்கின்றார்கள்"?

"இந்த பிரெஞ் வெள்ளை நாய்கள் எங்கள் நாட்டிலும் அக்கம் பக்கம் நாடுகளிலும்  எங்களை படுகொலை செய்வது உனக்கு தெரியவில்லையா? இவர்களை எல்லாம் ஓட ஓட கொளுத்தி எரிக்கவேணும். இதை புனிதப்போரால்தான் செய்ய முடியும் ".

என்று கண்கள் பிதுங்க தொடர்ந்த சுலைமானை இடைவெட்டிய ஆயிஷா, "எமது மார்க்கத்தில் இப்படியெல்லாம் இல்லை. உன்னை யாரோ சரியாகக் குழப்புகின்றார்கள். வயதான  உனது அம்மாவை தவிக்கவிடாதே" என்ற அவளை  கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த சுலைமானின் மூளை வேறு வழியாக செயல்பட்டு கொண்டிருந்தது.

 "உன்ரை பாரிஸ் ரெலிபோன் நம்பரை ஒருக்கால் தா" என்று வாங்கி குறித்துக் கொண்டான்.

00000000000000000

அமெரிக்காவின் வெர்ஜினியாவைச் சேர்ந்த அந்த வீடு குழந்தைகளின் கலகலப்பால் அமளிதுமளிப்பட்டது. ஜோனஸ் சாரா தம்பதிகளும் தங்களது குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறியிருந்தனர். அந்த வீட்டில் ஓர் புதிய வரவு வருவதற்குத்  தயாராகிக் கொண்டிருந்தது.குழந்தைகளுக்கு வரப்போகும் புதிய வரவுக்கு என்ன பெயர் வைப்பது என்ற குழப்பங்களே மிஞ்சி இருந்தன. நிறைமாதக்கர்ப்பணியான மிமி அந்த வீட்டின் வெளிப்புறத்தே ஓர் மூலையில் இருந்த சிறிய கூட்டினுள் படுத்திருந்து, குழந்தைகளது விளையாட்டில் தானும் விளையாட முடியாத ஆயாசத்தால் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கும் கைகாவலாக ஜோனஸ் தனது நண்பனான டொக்டர் நிகேலையும் அழைத்து வந்திருந்தான். நிகேலின் உதவியுடன் அன்று இரவே மிமி கருப்பு நிறத்தில் ஒருசில நிமிட இடைவெளிகளில் மூன்று குட்டிகளை ஈன்றது. அருகில் இருந்த நிகேல்  குட்டிகளை பார்த்து விட்டு,
 "ஹேய் ....... ஜோனஸ் யு கொட் த்ரீ போய்ஸ்".
குட்டிகளின் அழகில் மயங்கிய அவன் தனக்கொன்றை எடுத்துக் கொண்டான். நிகேலின் ஆலோசனையின்படி  மூத்த குட்டிக்கு டோலிஎன்று பெயர் வைக்கப்பட்டது. காவல் துறையில் இருந்த ஜோனஸின் பராமரிப்பில் சில மாதங்களைத் தத்தெடுத்துக் கொண்ட டோலி, பிரான்ஸ் காவல்துறையின் சிறப்பு கொமோண்டோ படையணிகளின் பொறுப்பாளர் பாஸ்கலின் விசேட அழைப்பின் பேரில் பிரான்ஸ் பயணமாகியது. பல சிறப்பு பயிற்சிகளைப் பெற்ற டோலி கமாண்டோ படையணிகள் உற்ற தோழனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தன்னை வளர்த்துக்கொண்டது.

0000000000000000000

வெறும் ஆறே மாதத்தில் மதுமிதாவைக் கலியாணம் கட்டிய ரட்ணா பாரிஸின் சாதாரண தமிழ் சனங்களின் இயல்புடன்  பத்துடன் பதினொன்றாக இருந்தான். ஆம் ....... அவன்  ஓர் பிரெஞ் பாரில் பார்மன்(Barman) ஆக வேலை செய்து கொண்டிருந்தான். கடந்த இருபது வருடங்களாக அந்த பாரே அவனது சொர்க்க புரியாக இருந்தது. சிறிய வயதில் தந்தையைப் போருக்குப் பறிகொடுத்து தன்னுடன் கூடப்பிறந்த சகோதரிகளுக்கு ஓர் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்குமட்டும் தன்னை ஒறுத்து முப்பத்தி ஏழாவது வயதில் மதுமிதாவைக் கலியாணம் செய்திருந்தான். பக்கத்தில் மதுவென்ற போதை இருந்தாலும் அதனை முழுதாக அனுபவிக்க வக்கில்லாதவகையில் அவனது வேலை நேரம் இரண்டு நேரங்களாக இருந்தது. அவளை விட அவனே இதுபற்றி அதிகம் கவலை கொண்டவனாக இருந்தான். எங்கே அவளைத்  தன்னால் சந்தோசப்படுத்த முடியாமல் போய் விடுமோ என்ற ஆண் மையச் சிந்தனை அவனக்கலங்கடித்தது.

அவன் வேலை செய்த பாரில் ஒவ்வரு வெள்ளிக்கிழமை பின்னேரங்களிலும் "ஹப்பி அவேர்ஸ்" என்றொரு நேரம் உண்டு. கிழமை நாட்களில் வேலை செய்து அலுத்துக்களைத்த வெள்ளையர்கள் ஆண் பெண் பேதமின்றி கிழமை முடிவை கொண்டாட  அன்றிரவே தயாராகுவார்கள். பியரும் கொக்டெயிலும் இளையவர்கள் கையில் கஞ்சாவும் தாராளமாகவே புழங்கும். ரட்ணாவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உயிர் போய் வரும். ஆனாலும், அவனது முதலாளியின் அதிகப்படியான சம்பளமும் வாடிக்கையாளர்களது டிப்ஸ் காசும் அவனது உடல் வலிகளை மறக்கடித்திருந்தன.

00000000000000000000

சுலைமான் ‘இப்றகீம்’ என்ற பெயரில் கபிலியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் வந்து வருடம் ஒன்றைக் கடந்து விட்டிருந்தான். அவன் சார்ந்த ஜிகாத் இயக்கமான இ.பொ.மு-வின் அசைன்மென்ருக்காக பிரான்ஸ் வந்து, முதலில் பிரான்சின் தென்கோடியில் உள்ள ‘மார்செய்ல்’ நகரில் சில காலம் இருந்தான். பின்னர் கட்டளைப்பீடத்தின் உத்தரவின் படி பாரிஸ் வந்து விட்டான். அவன் இப்பொழுது ஓர் கைதேர்ந்த கெரில்லா போராளி. சிரியாவில் விசேட பயிற்சி பெற்றவன். நவீன பாணிக்  கனரக ஆயுதங்களைப் பாவிப்பதிலும், தாக்குதல்களுக்கு ரெக்கி எடுப்பதிலும், அதியுயர் அழுத்தமான வெடிகுண்டுகளை(சக்கைகளை) தயாரிப்பதிலும்  இ.பொ.மு-வில் இவன்  தனிக்காட்டு ராசா. அவனை சுட்டுக் பொசுக்கினாலும் அவனிடம் இருந்து ஒரு உண்மையையும் எடுக்கமுடியாத விசேட தகமைகளால்  இ.பொ.மு ஓர் முக்கிய அலுவலக சுலைமானை பிரான்ஸ் அனுப்பி வைத்திருந்தது. சுலைமான் பல முக்கிய ரெக்கிகளை இ.பொ.மு-வுக்கு அனுப்பிக் கொண்டே அதன் புதிய உத்தரவுக்காகக் காத்திருந்தான். நேர காலம் வரும் வரைக்கும்  அவன் ஆயிஷாவுடன் தொடர்புகளை எடுக்க விரும்பவில்லை.

000000000000000000

நிகழ்வு 01:

அன்றைய வெள்ளிக்கிழமை ரட்ணாவுக்கும் மதுமிதாவுக்கும் திருமண நாளாக விடிந்தது. முதல்நாள் இரவே முதலாளிடம் இரண்டு மணித்தியாலங்கள் முன்னதாக சொல்லி விட்டு வீடு வந்த ரட்ணாவுக்கு அன்று என்னமோ மதுமிதா மிகவும் அழகாக இருந்தது போல் இருந்தது. இது சிலவேளைகளில் அவன் கொஞ்ச நேரத்துக்கு முதல் முதலாளியுடன் சேர்ந்து குடித்த சிவந்த சோமபானத்தின் எதிர்விளைவுகளில் ஒன்றாகவும் இருக்கலாம். அவளும் ஒருவித மார்கமாகவே. இருந்தாள். ஹோர்மோன் சுரப்புகள் இருவர்  பக்கத்தாலும் கலவையில் வேறுபடக்  கட்டில் முயங்கலில் போர்க்களமாக மாறியது. முயங்கிய களைப்பில் நித்திரையாகி இருந்த மதுமிதாவைக் குழப்பாது வேலைக்கு செல்வதற்காக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்து முடித்து வெளிக்கிட்டு வெளியால்  வர கபேயுடன் இரண்டு கப்புகளுடன் அவள் ஓர் கள்ளச்  சிரிப்புடன் நின்றிருந்தாள். கபேயை அவசரமாகக் குடித்து விட்டு அவளது நெற்றியில் ஓர் முத்தத்தைப் பதித்து விட்டு வேலைக்கு ஓடினான் ரட்ணா.

வழக்கத்தை விட அந்த வெள்ளிக்கிழமை மாலை பாரில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பதின்மூன்றாம் திகதி வந்தால் அது அபசகுனமான நாள் என்ற செய்தி பிரெஞ் மக்களின் மனதில்  காலங்காலமாகப் பதியப்பட்டதாகும். ஆனாலும், இளசுகளின் வருகை அந்த பாரை கலகலப்பாக வைத்திருந்தது. இரவு நேரம் பதினொன்றரையைத் தாண்டும் பொழுது உச்ச ஸ்தாயியில் வந்த பாட்டும் அதற்கேற்ற இளசுகளின் நடனங்கள் என்றும் அந்த பார் உச்சத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. பாரில் ரட்ணா பம்பரமாக நின்றிருந்தான். அவனுடன் உதவிக்காக அலெக்ஸ்-உம் சேர்ந்து கொண்டாள்.

0000000000000000

ஓர்  கறுப்புநிற றெனோ  கார் அந்த பாரை மூன்று தடவைகள் கடந்து சென்று கொண்டிருந்தது. அதை சுலைமானின் நண்பன் அபூபக்கர் ஓட்டிக்கொண்டிருந்தான். அந்தக் காரின் டிக்கியினுள்  சுலைமானின் செய்நேர்த்தி கலக்கலாக இருந்தது. பாரில் நின்றிருந்த ரட்ணாவுக்கு இந்த ரெனோவின் வழமைக்கு மாறான சுற்றுகை ஒருவிதமான சஞ்சலத்தைக் கொடுத்தது. ஆனாலும் பார்க்கிங் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் யாராவது அலைந்து கொண்டிருப்பார்கள் என்று அவன் அலையும் மனத்தைத் தேற்றிக்கொண்டான். சுலைமானின் உத்தரவு கிடைத்ததும் நான்காவது சுற்றில்  பாரை அண்மித்திருந்த  அந்த றெனோ மின்னல் வேகத்தில் பாரின் எதிர்ப்பக்கம்  திரும்பி நுழைவாயிலை உடைத்துக்கொண்டு சென்று வெடித்தது. பார் கரும்புகையினால் சூழப்பட்டு ரணகளமாக மாறியது. 

0000000000000000

நிகழ்வு 02:

அன்றைய மாலைப்பொழுதில் சுலைமான் தனது அலைபேசியினால் ஆயிஷா முன்பு கபிலியில் தந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தினான். றிங் சென்று கொண்டிருந்தது.

"ஹலோ.............. "

"நான் சுலைமான் பேசிறன் ".

"நீ எங்கை நிக்கிறாய் "?

"பாரிசிலைதான் நிக்கிறன். உன்னைப் பாக்க வேணும் போலை கிடக்கு ".

"எப்ப பிரான்சுக்கு வந்தனி? நீ ஏன் எனக்கு சொல்லேலை "?

"உனக்கு நேரை சொல்லுறன்".

"சரி இப்பவாவது என்ரை நினைப்பு வந்திதே. உடனை வீட்டை வா ".

"அட்ரஸை சொல்லு ".

அட்ரஸைக் குறித்துக்கொண்டு சுலைமானின் கரியநிற மெர்ஸ்டெஸ் பென்ஸ் செயின்டெனியில் இருக்கும் அவளது வீடு நோக்கிச் சென்றது. ஆயிஷாவின் வீட்டை அடைந்த அவன்  வழக்கத்தை விட கலகலப்பாக ஆயிஷாவுடன் பழைய கதைகளைக் கதைத்துக்கொண்டிருந்தான். ஆயிஷாவும் அவனின் பகிடிக்கதைகளை தன்னிலைமறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். இடைக்கிடை அவன் அவளது ரொயிலெட்-க்குள் சென்று அவனது அலைபேசியில் செய்திகளைத் தனது நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தான். 

அவனது மேற்பார்வையில் அதுவரை பாரிஸின் வேறு வேறு இடங்களில் அவனது நண்பர்கள் வெற்றிகரமாக தங்கள் உயிரிழப்புகளுடன் பாரிய  தாக்குதல்களை நடாத்தி விட்டிருந்தனர். எல்லாத்திலும் சூராதி சுரனான அவனுக்கு அப்பனுக்கு அப்பர்களும்  பிரெஞ் உளவுத்துறையில் இருப்பார்கள் என்பது எனோ தெரியாமல்ப் போனது. அவனது அலைபேசி உரையாடல்களை அட்சரம் பிசகாது ஒட்டுக் கேட்டிருந்த அவர்கள் அவனுக்கு செயின்டெனியில்  முடிவுரை எழுதத் தயாரானார்கள்.

0000000000000000000

அந்த அதிகாலை இரவு சுற்றுச்சூழல் நிகழப்போகும் விபரீதத்தை அறியாது அமைதியாக இருந்தது.சுற்றுச் சூழலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சனங்களின் உறக்கத்தைக் கெடுக்காது மூன்றே தளங்களைக் கொண்ட அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தை  பயங்கரவாதத்  தடுப்புக் கொமாண்டோக்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். தொடர்மாடிக் கட்டிடத்தின் கூரையிலும் பக்க வாட்டிலும் முன்பாகவும் அவர்கள் தயார் நிலையில் நிரவியிருந்தார்கள். அவர்களது முகங்கள் உருமறைப்பு செய்திருந்தன. அந்த ஏரியாவின் மின்சாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அவர்களது  கருத்த சீருடை இருட்டுடன் இருட்டாக இருந்தது. அவர்களுக்குள் சைகை மொழியே வழக்காக இருந்தது.

எடுவாவின் கைகளில் இருந்த டோலி திமிறிக்கொண்டு இருந்தது. அது சத்தமிட்டு நிலைமையை குழப்பிவிடுமே என்பதற்காக அதன் வாய் தோல் மூடியினால் கட்டப்பட்டிருந்தது. எல்லோருமே அணியின் தலைவன் பஸ்காலின் சமிக்கைக்காகக் காத்திருந்தார்கள். பஸ்கால் உளவுத்துறையின் உத்தரவு கிடைத்ததும் கைகளை உயர்த்தினான். கதவின் பக்கத்தில் இருந்தவன் கதவை உடைக்க, எடுவாவின் கைகளில் இருந்து விடுபட்ட டோலி முன்னால் பாய்ந்து சென்ற அதே வேளை தொடர்மாடிக் கட்டிடத்தின் உள்ளே இருந்து வெடித்த வெடியினால் எல்லோருமே குவியலாகினார்கள். மறுநாள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக  டோலியே  முக்கியமாகப் படத்துடன் இருந்தது. சனங்கள் அதற்கு  மெழுகு திரியும் மலர்வளையங்களும் சாத்திக்கொண்டிருந்தனர்.

கலவை:

99 வீதம் உண்மை 01 விதம் கற்பனை.

மலைகள்

19 தை 2017

Tuesday, January 17, 2017

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-புஷ்பராணி சிதம்பரி – பிரான்ஸ்.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் இவர் ஆயுதப்  போராட்டத்தினாலேயே எமக்குத் தீர்வு உண்டு என்று அப்பொழுதே எண்ணத்தொடங்கியவர். அண்மையில் இவரால் தமிழ் எழுத்துப் பரப்புக்கு "அகாலம் " என்ற நூல் எமக்கு கிடைத்துள்ளது. ஜீவநதி வாசகர்களுக்காக புஸ்பராணியுடன் நான் கண்ட நேர்காணல் இது.

கோமகன் 
000000000000000000000000000000000

உங்களைப்பற்றி  சிறிது சொல்லுங்கள் ......?

என்னைப்பற்றிச் சொல்லப் பெரிதாக எதுவும்  இருப்பதாகத்  தெரியவில்லை. பொதுவாகச்  சொல்லவேண்டுமென்றால், மற்றவர்களுக்காக எதையும் சமரசம் செய்வதில் எனக்கு எப்போதும்  உடன்பாடு இருந்ததில்லை. இது எனது பிறவிக்குணம் என்றே நினைக்கின்றேன். நான் படிக்கும் காலத்திலேயே இதை  என்னால் உணரமுடிந்தது. முகத்துக்காக எதையும்  செய்வதையும்,பேசுவதையும்  வெறுக்கிறேன். நான் நானாக இருப்பதையே விரும்புகின்றேன். 

உங்கள் இளமைக்காலம் எப்படி இருந்தது?

என்  இளமைக்காலம் அதியற்புதமானது. மூன்று அண்ணன்களுக்குப்பின்  மூத்த பெண் பிள்ளையாகப்  பிறந்ததால்  ஒரு  மகாராணிபோலவே  சீராட்டிவளர்க்கப்பட்டேன், வளர்ந்தேன். வீடு  நிறையச் சகோதர  சகோதரிகளுடன் கலகலப்பாகவே எங்கள்வீடு  எப்போதுமிருக்கும். எமது  இரசனைகள் ஒன்று போலவே  இருந்ததால்  நண்பர்கள் போலவே உல்லாசமாக வாழ்ந்தோம். அரசியல் எம்வாழ்வில்  குறுக்கிடும்  வரை கவலைகள் ஏதும் நெருங்கிட அஞ்சும்  மகிழ்ச்சியின்  வடிவமாகவே நாம் வாழ்ந்தோம்.

எனது  பிறந்த ஊரான மயிலிட்டி  மீன்பிடிப்போர் சமூகத்தால் நிறைந்தது. எமது அயலவர் மத்தியில் எனது குடும்பம்  மட்டும் தனி  நளக்குடியாக இருந்ததால்  சிலரோடு போராடியே வாழவேண்டியிருந்தது. யாருக்கும் தலைவணங்காத போராட்டக் குணம் எமது  இரத்தத்திலேயே உறைந்திருந்ததால் எதுவுமே எமக்குப்  பெரிதாகத் தெரியவில்லை. எனது  தந்தையும், இரண்டு அண்ணன்களும்  புகையிரததிணைக்களத்தில் உத்தியோகம்  பார்த்ததாலும்எமக்கென்று வீடுவாசல்காணியெல்லாம்  இருந்ததாலும் எம்மை எவராலும் எதுவும் செய்ய  முடியவில்லை. எம்மை எதிர்த்தவர்களோடு மல்லுக்கட்டுவதிலும்  நாம் பின்நின்றது  கிடையாது. உயிர் ஒரு  முறைதான்போகும் என்பதை என்பெற்றோரிடம் இருந்து மனதில் பதித்து வளர்ந்தோம்.

எழுத்து எப்படியாக உங்களிடம் சரணடைந்தது?

மிகச்சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.  எங்கு  யார் வீட்டுக்குப் போனாலும் என் கண்கள் புத்தகங்களையேதேடும் படிக்கும் காலத்தில் வீட்டுப்பாடங்கள் செய்து முடித்தவுடன், புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக் கதைப்புத்தகங்கள் படிப்பேன்.படிக்கிறபிள்ளை கதைப்புத்தகம்  படிக்கக் கூடாது என்பது   வீட்டில்  எழுதாத   சட்டம். மிக வேகமாகப் புத்தகங்களைப் படித்து முடித்து  விடுவேன். என்வாசிப்புப் பசி அகோரமாயிருந்ததால்  கிடைப்பவற்றையெல்லாம்  படித்தேன். கொஞ்சம்  வளர்ந்தபின் என் அண்ணன்  தியாகராஜாவே  நிறையப் புத்தகங்கள்  கொண்டுவந்து   தருவார். புத்தகங்களைப்  படித்துவிட்டுப்  பத்திரமாகத்  திருப்பிக்கொடுப்பதால்  எனக்குத் தொடர்ந்து புத்தகங்கள் இரவலாகக் கிடைத்துக்கொண்டேயிருந்தன.
வாண்டுமாமாவிலிருந்து, கல்கி, மு.வரதராசன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், அகிலன், புதுமைப்பித்தன்  என்று  எல்லோரின் நூல்களையும் படித்தேன்.  எனது சகோதரன் புஷ்பராஜா ஜெயகாந்தனின் நூல்களை  அறிமுகப்படுத்தினார்.  அதன்பின் ஜெயகாந்தனின் எழுத்துக்களால் வசீகரிக்கப் பட்டேன். வாசிப்பு என்  மூச்சாகிவிட்டது. எந்த  இரைச்சலின் மத்தியிலும் என்னால் வாசிக்க  முடிகின்றது. இந்த வாசிப்புத்தான்   என்னையறியாமலே என்னை  எழுதத்தூண்டியது.

உங்கள் ஆரம்பகாலப் புலப்பெயர்வு அனுபவங்கள் எப்படியாக இருந்தன ? அப்பொழுது ஓர் பெண்ணாக எந்தவிதமான சவால்களை சந்தித்தீர்கள்?

ஆரம்பகாலப் புலம்பெயர் அனுபவங்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரித்தான் இருந்திருக்கும் என்று  நம்புகின்றேன்.  பிறந்துவளர்ந்து கொண்டாடிய  சொந்தமண்ணை விட்டுப்பிரிந்து  பிரான்சுக்கு  வந்தபோது   அடைந்த   துயரத்தையும், இந்தமண்ணோடும்  இதன்இயல்புகளோடும்  உறவாடப் பின்வாங்கிய   மனவுணர்வுகளை எழுத்துக்களில் வர்ணிப்பது கடினம். வந்தபுதிதில் தூக்கம்மறந்து, துயர்கொண்டு அழுத நாட்களை எப்படி மறக்கமுடியும்? ஊரைத் தொலைத்து, உறவுகளைப் பிரிந்து. இன்னும் எத்தனையை நினைத்து அழுதிருக்கின்றேன். இன்னும் அவை கனவுகளாக  என்னைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

ஒருபெண்ணாக, என்கணவனாக இருந்தவனின் குரூரகுணங்களைச் சமாளிப்பதுதான், அப்போது எனக்குப்  பெரும்சவாலாகவிருந்தது. புலம்பெயர்ந்த  இடத்தில் பெண்ணின் இனசனத்தால், தன்னை எதுவும்  செய்யமுடியாது என்ற  ஆணவம் கொண்டு மனைவிமாரைக் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் இன்னும்   நடந்துகொண்டுதானிருக்கின்றன.

இளைஞர் பேரவையினுடனான தொடர்புகள் எப்படியாக ஏற்பட்டது?

தமிழ் இளைஞர்பேரவையை  ஆரம்பிக்கும் ஏற்பாடுகளில்  என்சகோதரன்  புஷ்பராஜாவும் , அவரது   தோழர்களும்  முனைந்திருந்த போது, என்னிடம்  எல்லா  விபரங்களையும்  சொல்லுவார். வரதராஜப் பெருமாள்பிரான்சிஸ் (கி.பி. அரவிந்தன்) என்று  அனைத்துப்  பெயர்களும் அவர்களைச் சந்திப்பதற்கு  முன்னரே  புஷ்பராஜா மூலம் எனக்குத்தெரிந்திருந்தது.  பத்மநாபாவை  எனக்கு ஏற்கனவே  தெரியும். எனது அதிதீவிர ஆர்வம்  இளைஞர்பேரவையுடன் என்னையும் ஒன்றாக இணைத்துஅதில்  ஒருத்தியாக  நானும் இயங்கினேன். 

அன்றைய காலகட்டத்தில் உங்கள் அரசியல் முன்னெடுப்புகள் எப்படியாக இருந்தன?

அரசியல்  வேலைத்திட்டங்கள்  மூலம் மக்களைச்சந்தித்து அவர்கள்  பலத்தைத்  திரட்டி அதன்பின்னர், ஆயுதப்  போராட்டத்தைக் கட்டிஎழுப்புவதே  இளைஞர்பேரவையின் நோக்கமாயிருந்தது. மக்களோடு உரையாடிக்  கருத்தரங்குகள் வைத்து ஊரூராக அலைந்தோம், இளைஞர்களை அவர்களின் விருப்போடு எம்மோடு  இணைத்தோம். யாரையும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்தது  கிடையாது. இளைஞர்கள் என்ற  பதத்துக்குள்  பெண்களும்  அடங்குகின்றனர்.

அப்பொழுது உங்களுடன் யார் யார் எல்லாம் ஒன்றிணைந்தார்கள்?

இதில் பெண்களை முன்நிலைப்படுத்தவே  விரும்புகின்றேன். பெண்கள் பொதுவெளியில்  வந்து  இயங்கப்  பெரிதும்  தயங்கிய காலமது. கல்யாணி, பத்மினி, டொரத்தி, திலகமணி, திலகவதி, ஊர்மிளா, ஆனந்தராணி  (இவர்கள்  மூவரும்  இளைஞர்  பேரவையின் கொழும்புக் கிளையில்  இயங்கியவர்கள்.) சாந்த, கனகராண, தேவாஅக்கா, பகவதி, கீதாஞ்சலி, சங்கானையம்மா, நவம்அன்ரி, குலம்அக்கா, பாப்பாஅக்கா, செல்வராணி, போன்று  இன்னும்  பலபெண்கள்.

இனி  ஆண்களைப் பார்ப்போம். புஷ்பராஜா, வரதராஜப் பெருமாள், பிரான்சிஸ், பத்மநாபா, சந்திரமோகன், திருஞானம், பீட்டர்பொன்கலன், கமிலஸ், நடேசானந்தம், உமா மகேஸ்வரன், ரகுபதி பாலசிறீதரன் ,சந்திரமோகன், திருஞானம், அன்னலிங்கம் என்று பட்டியல் நீள்கின்றது. பின்நாட்களில் இவர்களில் பலர் பல்வேறு  திசைகளில்  பயணித்து விட்டனர்.

மறைந்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்துடனான தொடர்புகள் எப்படியாக ஏற்பட்டன?

மங்கையற்கரசியக்காவை  நிறையக்  கூட் டங்களில்  முதலில் பார்த்திருக்கின்றேன். முதன்முதலாக  யாழ்  முற்றவெளியில் தமிழர் கூட் டணியினரால்  நடத்தப்பட்ட  உண்ணாவிரத  நிகழ்வின் போதுதான் அவருடன் அருகமர்ந்து பேசும் வாய்ப்புக்கிடைத்தது. பின்னர் எங்கள் தொடர்புகள் நெருக்கமாயின. அவருடன் பல மேடைகளில் ஒன்றாகப் பேசியிருக்கிறேன். பின்நாட்களில் எமக்கும் (இளைஞர்  பேரவைக்கும்) கூட்டணியினருக்குமான முரண் பாடுகள், வாக்குவாதங்கள் கசப்புநிலையை  உருவாக்கினாலும் எதிரிகளாக நாம் மாறியது கிடையாது. கொலைவெறியில் யாரும் அலைந்ததுமில்லை.

புலோலி வங்கிக்கொள்ளை சம்பந்தமாக தமிழ்ஈழவிடுதலை இயக்கமாக (TLO ) அப்போதிருந்த நாம் கைது  செய்யப்பட்டுச்  சிறையிருந்தபோது, எமக்காக  வாதாடிய  சிவசிதம்பரம், கரிகாலன் ஆகியோரை  ஏற்பாடு   செய்தவர்கள் திரு.அமிர்தலிங்கம் அவர்களும், மங்கையர்க்கரசியக்காவுமே.  
எனது   குடும்பத்தினருடன் அவர் இறக்கும்வரை அன்பாகவே இருந்தார்.  எனது சகோதரன் புஷ்பராஜாவின்  10ஆவது  நினைவுதினக்  கூட் டத்தில் மங்கையர்க்கரசி அக்காவும்  பேசுவதாக   இருந்தார். ஆனால் அதற்கு  முன்  மரணம் அவரைச் சூழ்ந்துவிட் டது. இலண்டனில்  நடந்த அவரின் இறுதிநிகழ்வுகளிலும்  கலந்து கொண்டேன்.  

எனது அறிவுக்கு எட்டியவகையில்,தமிழர் தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகர்த்தாக்களில் நீங்களும்  இன்னும்  பலபெண்களும்  இருந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கும் முன்பே 1969 ஆம் ஆண்டில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் கைக்குண்டு வீசிய கம்யூனிஸ் புரட்சிகர அமைப்பின் பெண்போராளி  செல்லக்கிளியும், சங்கானையை சேர்ந்த  மகேஸ்வரியும் முதல்  பெண்போராளிகளாக இருந்திருக்கின்றனர் என்று பத்திரிகைக் குறிப்பொன்றின் மூலம்  அறிய முடிந்தது . இது பற்றி .........?

1969 ம் ஆண்டு  மட்டுவில்  பன்றித் தலைச்சி  அம்மன்  கோவிலில்  கைக்குண்டு  வீசிய கம்யூனிஸ்ட் புரட்சிகர அமைப்பின்  பெண்போராளிகள்  செல்லக்கிளியும்மகேஸ்வரியும் சாதியத்துக்கு எதிராகப்  போராடியவர்கள். நாம் தேசிய இனப்பிரச்னைக்காகவே  போராடியவர்கள். அவர்களின் நோக்கமும் , எமது  கொள்கைகளும் ஒன்றல்ல. அவர்களோடு  எங்களை ஒன்றாகக்  கலந்து குழப்பாதீர்கள். குறிப்பாகத் தேசிய  இனப்பிரச்சனைதான் எம்முன்னே கூர்மையாகத்  தெரிந்தது. இனவிடுதலையூடாக சாதியப்  பிரச்சினை உள்ளிட்ட  எல்லாவற்றையும் ஒழிக்கலாம்  என்று கனவு கண்டோம், நம்பினோம்.

இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்டவர்கள்  என்று கருதப்படுவோர்  நுழைவது  கடுமையாகக்  கடைபிடிக்கப்பட்ட  காலமது. இப்படியான கோவில்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற  என்தந்தையின் கருத்தை என்வீட்டில் எல்லோரும் பின்பற்றினோம்.  உணவுவிடுதிகளில் வெளியில்  நின்று  சாப்பிடுவதையும், கிளாசில் தேநீர் அருந்துவது போன்றவற்றையும்  என்குடும்பத்தார் கடுமையாக  நிராகரித்தனர்.  இதுவே ஒருவிததீண்டாமை  ஒழிப்பு  இயக்கம்  போன்றதுதான்.  சாதிவெறிபிடித்த இந்துமதக்  கொள்கைகளை அடியோடு வெறுத்து  வெறுத்தே கடவுள்  மறுப்புக்கொள்கை  என்னை முழுதாக ஆட்கொண்டு விட்டது.

உங்கள் சிறை அனுபவம் எப்படியாக இருந்தது?

என்  சிறையனுபவம்   மறக்கமுடியாதது.  யாழ்  கிங்ஸ்ஹவுசில் வைத்து  நடந்த  பயங்கரச் சித்திரவதைப்  படலங்கள் முடிந்தபின்  கொழும்பு வெலிக்கடைச்சிறைக்கு அனுப்பப்பட்டோம்.  பலதரப்பட்ட  பெண்களோடு   பழகும்  அருமையான   வாய்ப்புக்  கிடைத்தது.  அவை இனிமையான பரவச நினைவுகள்.  இன,மத,மொழி கலந்த  உன்னதமான சூழலை அங்குதான் கண்டேன். திருடியவர்கள், பாலியல்தொழிலாளிகள், கொலைசெய்தவர்கள், அரசாங்கமோசடிகள் செய்தவர்கள் என்று  பலவிதமான பெண்கள் அங்கிருந்தார்கள். சிலர் தண்டனை  பெற்றவர்கள், வேறுசிலர் விசாரணைமுடியாத  விளக்கமறியல் கைதிகள். இதில்  நிறையப்பேர்   பிணையெடுக்க  ஆளும்பணமுமின்றி வருடக்கணக்காக வாடியவர்கள். இது மிகப்பெரியசோகமாகும்.

எங்களைப்  போலவே  அரசியல்கைதிகளாகவிருந்த  புத்தகோறளை சந்திராபெரேரா, ரோகிணி, கீதாஞ்சலி, மோனிக்கா, சுமணாநங்கி  ஆகியோரும் அரசியல்  தடுப்புக்காவல் கைதிகளுக்கென்று  ஒதுக்கப்பட் ட  நீண்ட   வரிசை கொண்டஅறைகளில் (செல்) எங்களோடு  பக்கமாக  இருந்தனர். இவர்களோடு தான்  நிறையப் பழகினோம்.  அப்போது  என்னோடும், கல்யாணியோடும்  என்தங்கை  ஜீவரட்ணராணியும்  இருந்தாள். அவள்  மூன்று  மாதங்களின்பின்  விடுதலை  செய்யப் பட்டாள்.  நானும் , கல்யாணியும்  தொடர்ந்திருந்தோம். மேலே   குறிப்பிட்ட  சேகுவேரா இயக்கத்தைச்  சேர்ந்த  சிங்களத் தோழிகளின் ஆழமான அன்பை  என்னால்  இன்னும்  மறக்கமுடியவில்லை. இதுபற்றியெல்லாம்  விரிவாக  என் ''அகாலம்''நூலில்   குறிப்பிட்டுள்ளேன்.  இவர்களை   மீண்டும்   சந்திக்க முடியாதா என்ற  ஏக்கம் நெஞ்சைத்  துளைக்கின்றது.  இவர்கள் எல்லோருமே என் மனதிலே இன்னும்  நீடிக்கின்றனர்.

சிறைச்சூழலில் வாசிப்பது, எழுதுவது போன்றவற்றுக்கு  இடையூறற்ற  தெளிவான இடம் இருந்தது. நிறைய  வாசிக்கவும் எழுதவும் முடிந்தது. சிறைப்பிரிவின் தலைமையதிகாரி  சைமன்சில்வாவின் அன்புமிகுந்த முயற்சியால்  தமிழ்நூல்களும், பத்திரிகைகளும்  தாராளமாகக்  கிடைத்தன. சிங்கள இனத்தவரான இந்த   அதிகாரியின் அன்பும், கனிவும்  மனிதாபிமானமும்  காலத்துக்கும்  மறக்கமுடியாது.  இவரைப் பற்றி அப்போது ஆண்கள்பிரிவில்  சிறையிருந்த  கவிஞர் காசியானந்தன்  புகழ்ந்து  கவிதை  பாடியிருக்கின்றார். அரசியல் கைதிகளான எங்களுக்கு விசேட உணவுகளே (பால் ,பழம் உட்பட)  வழங்கப்பட்டன.  இந்தச் சிறைவாழ்க்கையை எனக்குக்கிடைத்த  பொன்னான ஞாபகங்களோடு   பொத்தி  வைத்திருக்கின்றேன்.  

விமர்சனங்களுக்கப்பால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

தமிழ்ஈழ விடுதலைப் புலிப்  பெண்போராளிகள் மீதான என்பார்வை  ஒருபுறம்  இருக்கட்டும்.  எமது  தமிழ்ச் சமூகத்தின்  நோக்கு எத்தகையது  என்பது  எனக்குத் தெரியும்.  தம்மை  முழுதாக அர்ப்பணித்துப் போராட முன் வந்த பெண்களை  எப்படியெல்லாம் தூற்றி  வசை பாடுவார்கள்  என்பதும்  அறிந்தவள் நான்.  இங்கும் எம் கேடுகெட்ட  சமூகத்தின்  பாலியல் கண்ணோட்டம் தான்  முன்னுக்கு  நிற்கும்.  உயிர் தப்பி இன்று வாழ்வோடு  போராடிக்  கொண்டிருக்கும்  பழைய  போராளிப்  பெண்களை  மதித்துக்  கைகூப்புவோர்   இங்கு  எவருமில்லை.  முன்னாள்  ஆண்போராளிகளும்  இதில்  அடங்குவர்.  எந்த  இயக்கத்துக்காகப்   போராடியவர்கள்  என்றாலும்  அந்த வீராங்கனைகள்  என்றும்  வணக்கத்துக்கு   உரியவர்களே. அவர்கள்   உன்னதமானவர்கள்.

"அகாலம் " எழுதவேண்டிய அத்தியாவசியம் எப்படியாக ஏற்பட்டது?

எனது   சகோதரனின் ,''ஈழப்  போராட்டத்தில்  எனது  சாட்சியம் ''நூல்  வந்தபின் பலரும்  என்னிடம், எனது  அரசியல்  அனுபவங்களையும்  எழுதும்படி  தூண்டிக் கொண்டேயிருந்தனர். அதில் ஷோபாசக்தி, அசோக், விஜி, எனதுதங்கை  நவரட்ணராணிஎனதுதம்பி  வரதன் ஆகியோர்  குறிப்பிடத்தக்கவர்கள்.  எமது   போராட்ட  வரலாறுகளும்ஆரம்பப்  போராளிகளும்  பின்னாளில்   வந்தவர்களால்   மறைக்கப்பட்டதும்  இன்னோர் முக்கிய காரணம்.  எனக்குத் தெரிந்தவற்றையும்என்னோடு   இயங்கியவர்கள்என்அனுபவங்கள் என்று  ஓரளவு  எழுதியுள்ளேன்.  இன்னும்  எழுத  எவ்வளவோ  இருக்கு. 

அகாலத்தின்  பின் அல்லது முன் உங்கள் எழுத்துக்கள் என்ன காரணத்துக்காக ஆவணப்படுத்தப்படவில்லை?

ஊரில்  இருக்கும் போது நிறைய எழுதியிருக்கின்றேன். எழுதிய எல்லாவற்றையும் அச்சில் பதிக்கும்  வாய்ப்புக்களோஅறிமுகங்களோ அப்போது  எனக்குப்  பெரிதாகக்  கிடைக்கவில்லை.  சுதந்திரன் ஆசியர்  கோவை  மகேசனின்  பழக்கம்  கூட்டங்களில்  கண்டு கிடைத்ததால் என்கட்டுரைகள்  மலரரசி' என்ற  பெயரில்  சுதந்திரனில் தொடர்ந்து  வெளியாகின.  செய்தி, ‘லண்டன்முரசுபோன்றவற்றிலும்  இலங்கை  வானொலியிலும்  என்படைப்புக்கள்   இடம்பெற்றன.
திருமண  வாழ்க்கையில்  ஏற்பட் ட  மனவுளைச்சலால்  என்எழுத்துக்கள்  இருபது வருடங்களுக்கு  மேல்  நின்றுவிட்டன. இப்போது  மீண்டும்  எழுத  ஆரம்பித்துள்ளேன்.  இந்த  நாட்டின் இயந்திர ஓட்ட  வாழ்க்கையில்  நின்று  ஆறஅமர எழுதுவது  கொஞ்சம்  சிரமமாயிருக்கின்றது.  ஆனாலும், சிறு கதைகள்கட்டுரைகள்புத்தக மதிப்பீடுகள் என்று  வெளிவந்திருக்கின்றன. இப்போது  என்கதையின்  ஒரு  பகுதியை  எழுதிக் கொண்டிருக்கின்றேன்.  மனதுக்குள்  நிறைய  எழுதுவதற்கு  ஓடிக்கொண்டேயிருக்கின்றன. நேரத்தை விரட்டி எழுத வேண்டும்.  மேலும்பெரிய  ஆய்வாளர், கட்டுரையாளர் மு. நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' மட்டும் தானே  நூலாக  வெளி வந்திருக்கின்றது.  நிறைய  நூல்கள்  வெளியிடாததால்  அவரது  எழுத்தைக்  குறைத்து  மதிப்பிட  முடியுமா என்னஎன்  எழுத்துக்கள்  மீது எப்பொழுதும் எனக்கு  நம்பிக்கையுண்டு.

சமகால இலக்கியம் அல்லது எழுத்துப்பரப்பு பற்றி ...... ?

அநேகமானோர் இங்கு  எழுதுபவர்களை ஒருவருக்கொருவர்  தட்டிக் கொடுத்தோபாராட்டிடவோ மனமில்லாதோர்தான்.   இலக்கியக்  குழுமங்களிடையே நன்றாக  எழுதுவோரையும் முடங்கி  மறையும்படி பொறாமையும்வெறுப்பும் கோலோச்சுகின்றது.  ஒற்றுமையைப்  பற்றி எடுத்துரைக்கத்  தேவையில்லை. இலங்கையில் சரி,   புகலிடத்தில் சரி  யாருக்காவது  விருதுகள்  கிடைத்தால்ஆயிரத்தெட்டு நொட்டைகள்  சொல்ல எப்படியெல்லாம்  கிளம்புகின்றனர் என்று தெரியும்தானே.

உங்கள் காலத்திலும் சரி சமகாலத்திலும் சரி பல இலக்கியக்குழுமங்கள் இருந்தன அல்லது இருக்கின்றன. இந்தக்குழுமங்களால் எழுத்துப்பரப்பில் ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?

இலக்கியக் குழுமங்களால் எழுத்துப்பரப்பில் என்ன முன்னேற்றம் கிடைக்க வேண்டுமென்று எதிர் பார்க்கின்றீர்கள்?

இப்பொழுதெல்லாம் ஓர் நூல் வெளியாகும் முன்பே அதுபற்றிய பலத்த எதிர்பார்ப்புகளும் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.  இதுபற்றிய உங்கள் கண்ணோட்டம் தான் என்ன?

இப்போது வரும்  புத்தகங்களில்எத்தனை புத்தகங்களைத்  தொடர்ந்து வாசிக்க முடிகின்றதுஇன்றைய  கடுகதி  யுகத்தில்  கண்டதையும்  அமர்ந்திருந்து படிக்க முடியாது. தொடர்ந்து படிக்குமளவுக்கு எழுத்தோட்டம்  சுவையாக இருந்தால் படித்து முடித்து விடலாம்.  வாசிப்பது என்பது கொடும்  தண்டனையாக இருக்கக் கூடாது.   பலத்த  விளம்பரங்களோடும்எதிர்பார்ப்புக்களோடும் வெளிவரும் நூல்கள் முதலில்  கீழே  வைக்க  மனமின்றி  மெய்மறந்து  படிக்க  வைக்கவேண்டும்அப்படி  எம்மோடு  ஒன்றிய  புத்தகங்கள்  குறைவு  என்பதே  என் எண்ணம்.   

தமிழ் எழுத்துப்பரப்பில் உள்ள பிரபலங்களினால் முன்வைக்கப்படும் படைப்புகளின் தரவரிசை பற்றி ........?

சமீபத்தில் நான் படித்த  புத்தகங்களில்  ஷோபாசக்தியின்  Box  படிக்க  வித்தியாசமாயிருந்தது. அவர்  எழுதும்  மொழி   கைவரப்  பெற்றிருப்பதால் தான் காணாததையும்கண்டது போல்  மிகச்சரளமாக  எழுதுகின்றார். நிறைய  மெனக்கெட்டு  உண்மையான  சம்பவங்களை  உள்வாங்கி   நம்பும்படி   எழுதுகின்றார். இது  இவருக்கு  மட்டும்  உரித்தானது.  குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடும்"  மனதுக்கு  நெருக்கமாயிருந்தது. எல்லோரின்  புத்தகங்களும்   எனக்குப்  படிக்கக்  கிடைக்கவில்லை.

தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்களைத் தந்து கொண்டிருந்த ஓர் படைப்பாளி திடீரென    மௌனிப்பதை   எப்படியாகப் பார்கின்றீர்கள்?

சிலரால்   தொடர்ச்சியாக  முன்புபோல்  எழுத முடிவதில்லைஒருவித வரட்சி  நிலையிது.  ஜெயகாந்தன்   பின்னாளில் எழுதிய  நூல்கள் எதுவும் சரியாக வரவில்லையே. அடித்தட்டு மக்களோடு , ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி , அவர்களின் வாழ்வானுபவங்களை இரத்தமும் சதையுமாக அவர் படைத்தபோது அவை  உயிரோட்டம்  கொண்டு    நின்றன.  பின்னர்  அவர்  வாழ்வுநிலை  மாறி  மேல்நிலைக்கு  வந்தபின்வெறும்  கற்பனையாக  மட்டும்  வலிந்து  எழுத  முற்பட்டார். 'எங்கெங்கு  காணினும் ', 'ஜய  ஜய  சங்கர'ஆகிய  பிந்தைய  நூல்களை  இதற்கு உதாரணமாகக்  காட்டலாம்.  உடல்  நிலை  ஒத்துழைக்காத  போதும், விரக்தி, வேதனை, வெறுப்பிலும்   எழுத்துக்கள்   மௌனிக்கின்றன.  
90 வயதுக்கு  மேலும்  எழுதிக் கொண்டிருந்த  குஷ்வந்த்சிங்  மரணப்படுக்கையில்  இருந்தபோது  யன்னலை  வெறித்துப்  பார்த்துக்கொண்டு  எழுத மனமின்றி  மரணத்தை  மட்டும்  எதிர்பார்த்ததாகப்   படித்திருக்கின்றேன். நிறைய  நூல்கள் எழுதிச் சம்பாதித்த எழுத்தாளர்  ராஜம்கிருஷ்ணன்   இறுதிக்காலத்தில்  உறவினர்களால்  ஏமாற்றப்பட்டு  ஏழ்மையின்  பிடியோடு  முதியோர்இல்லத்தில்  வாழ்ந்து  மடிந்ததையும்   அறிவோம்.  ஒரு  கட்டத்தில்   விரக்தியில்   தான்  எழுதிய  நூல்களை   இவர்  எரித்ததாகவும்  கேள்விப்பட்டிருக்கின்றேன்.  ஒரு  படைப்பாளியின் எழுத்துக்கள்  மௌனிப்பதற்கு  இன்னும்  எவ்வளவோ  காரணங்கள்  இருக்கலாம்.   
 
ஓர் இலக்கிய சஞ்சிகைக்குரிய அறமாக எதைக் கருதுகின்றீர்கள்?

இதைப்பற்றி  நான் சொல்ல என்ன இருக்கின்றது?   சஞ்சிகைகள்  வெளியிடுவோர்  ஒவ்வொருவருக்கும்   ,நோக்கங்கள் மாறுபட்டிருக்கும்.  அதில் தெளிவும்,நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும்  புத்திசாலித்தனமும் வேண்டும். முதலில்  சஞ்சிகை நடத்துவோருக்குச் செறிவான எழுத்தாற்றலும், சரியாகத் தெரிவுசெய்யும்   நுண்ணிய  திறமையும்  இருந்தே ஆகவேண்டும்.  மற்றவர்களைப் புண்படுத்தவும்வசை பாடவுமென்றே   சஞ்சிகை  நடத்தப்படுமாயின்அது நீடித்து  நிற்க முடியாது.  பக்கச் சார்பற்றுப் பன்முக ஆக்கங்களுக்கும் இடமளிக்கவேண்டும்.  அப்போதுதான் ஒரு பத்திரிகை தரமாக மிளிரும்.  முகத்துக்காகக்  கண்ட மலினங்களுக்கும்  இடமளித்தால் அது சஞ்சிகையின்  வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

போரியல் இலக்கியம் பற்றிய உங்கள் அவதானிப்பு என்ன ? வருங்காலங்களில் அது எப்படியாக இருக்கும்?

போரியல் இலக்கியங்கள் உண்மையாகவும்,   அது எழுதப்படும் விதத்திலும் மனதில் பதிய வேண்டும். திரும்பத் திரும்பச்  சொன்னவற்றை எழுதினால் அது எடுபடாது. குணா கவியழகனின்,''நஞ்சுண்ட  காடு தந்த  பாதிப்பை ஏனைய அவரின்  இரண்டு புத்தகங்களும் தரவில்லையே.  உண்மையாகவும்,நேர்மையாகவும்  சொல்லப்படும் போரியல் இலக்கியங்கள் எதிர்காலத்தில்  சிறந்த ஆவணமாகவே  கருதப்படும்.  சார்புநிலை கருதியும் , அளவுக்கு மிஞ்சிய  விளம்பரங்களாலும்  இன்று  குதித்துப்  புகழப்படுபவை நாளை  காணாமல்  போக வாய்ப்புண்டு.

புலம்பெயர் இலக்கியம் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

புலம்பெயர்   இலக்கியங்களில்  பெரும்பாலும், வலியும், விரக்தியுமே மிகுந்து காணப்படுகின்றன. பிரிவுகளும், இழப்புக்களும் அதிகமானதால்  ஏற்பட்ட மனவுளைச்சல்களும், காய்ந்து போகாமல்  இன்னும்  மிச்சமிருக்கும் கண்ணீர்த்துளிகளுமே  கதையாகவும், கவிதையாகவும்கட்டுரையாகவும் கொப்பளிக்கின்றன.  இதுமட்டுமன்றிப்  புதிய கோணங்களிலும் பலர் அருமையாக  எழுதுகின்றனர். ஆச்சரியப்படவும்  வைக்கின்றார்கள்.  இங்கிருப்போருக்கு  நேரமும்  ஒத்துழைக்குமாயின்  புலம்பெயர்  இலக்கியப்பரப்பு  இன்னும் விரிவாகும்.

உங்கள் காலங்களில் இருந்த இலக்கிய படைப்புகளுக்கும் சமகாலத்தில் இருக்கின்ற இலக்கியப்படைப்புகளுக்கும் அடிப்படையில்  வேறுபாடுகளை உணருகின்றீர்களா?

அன்று  இருந்த நல்ல இலக்கியப் படைப்புக்கள்எத்தனை பக்கங்களாயிருந்தாலும் படித்து முடிக்கக் கூடிய  விதத்தில்  எழுதப்பட்டிருந்தன.  இன்று  வெளி வருபவற்றில் பெரும்பாலானவற்றை முழுவதும் படிக்கமுடியாத ஒரு தொய்வும், ஆயாசமும் சட்டென மனத்தைக்  கவ்வுகின்றன.  பலர்  புதிது புதிதாக  நவீனமாக எழுதுகின்றார்கள்தான். சிறுவர் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் அன்றைய  வாண்டுமாமா  போன்றோரைப்போலப்  பளிச்சென்று தெரிய  இன்று  யாரும்  இருப்பதாகத் தெரியவில்லை.  புதிய  சொல்லாடல்களுடன்  நல்ல  கவிதைகள்  இப்போது  இரசிக்க வைக்கின்றன.  இதில்  தர்மிணி, அனார், சுகிர்தராணி  ஆகியோரைத் தயங்காமல் கை காட்டுவேன். பல  பத்திரிகைகளில்  வரும்  நல்ல கவிதைகளை  மனமூன்றிப்  படிக்கமுடிகின்றது. அன்றைய ஜெயகாந்தன், எஸ்.பொ, கல்கிநா.பார்த்தசாரதி என்று  ஒரு பட்டாளமே  எழுத்துலகில்  கொடிகட்டிப்  பறந்தனர். இன்றைய வளர்ந்து வரும்  இளம் எழுத்தாளர்களில் அனோஜன் பாலகிருஷ்ணன், தர்மு பிரசாத், நெற்கொழு தாசன் என்று  புதிதாக  எழுதுபவர்கள்  மிகச் சிறப்பான  எழுத்தோட்டத்துடன்  கண் முன்னே தெரிகின்றனர்.   

தமிழ் எழுத்துப்பரப்பில் நவீனத்துவம் /கட்டுடைத்தல் என்ற பேரிலும் பெண்களைப் பாலியல் பண்டங்களாக சித்தரிக்கும் படைப்பாளிகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

பெண்களைப்  பாலியல்  பண்டங்களாகச் சித்தரிக்கும்  படைப்பாளிகள்  இன்று மட்டுமா இருக்கின்றார்கள். அன்று  தொட்டே  பெண்களைப் பாலியல்  பொருள் போல்  சித்தரிக்கும்  படைப்பாளிகள்  பழைய  இலக்கியங்களிலும்  சரி, கதைகள்  சினிமாக்கள்  என்று  எல்லாவற்றிலும்  இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள். இது காலம் காலமாகத் தொடரும் விடயம்.  பெண்களைப்  பொத்தி வீட்டுக்குள் முடக்குவதற்கு ஆண்கள் செய்யும் தந்திரோபாயங்களில்  இதுவுமொன்று.  வலிந்து  பெண்ணைப் பாலியல் கண்ணோட்டத்துடன் எழுதுவதாயின்  அது  கண்டிக்கப்பட  வேண்டியதொன்றே.

பெண்விடுதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் யாது?

எங்கள்   நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய  எல்லா நாடுகளிலுமே, பெண்களுக்கான முழு உரிமைகளோ, அங்கீகாரங்களோ இன்னும் கிடைக்கவேயில்லை. கொஞ்ச  நாட்களுக்குமுன், அமெரிக்க  இராணுவப்  பிரிவில் உயர்  பதவிகளில்  இருக்கும் பெண்கள் சிலர் வெளியிட்ட,தகவல்கள் எல்லோரையும்   அதிர்வடையச்  செய்தன.  இந்தப் பெண்களுக்கு  மேலான  பதவிகளில் இருக்கும் ஆண்அதிகாரிகளால்   பாலியல்  சீண்டுதல்களுக்கு ஆளானதை அவர்கள்  பகிரங்கமாக வெளியிட்டனர்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் என்று இன்னும் என்னென்னவோ சொல்லிப் பெண்  என்ற  காரணத்துக்காகப் பெண்கள்  பலவழிகளிலும்  கொடுமைப்படுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக்  கிடப்பது தொடர்ந்துகொண்டே  இருக்கின்றது. இன்னமும் பலநாடுகளில்  பெண்களின் கல்வி  மறுக்கப்பட்டு  ஒரு  மூலைக்குள் வைக்கப்படும் அநியாயமும்  தன்பாட்டில் கேட்பாரின்றிப் நடந்துகொண்டேயிருக்கின்றது.    

வெளியிலே பெண் விடுதலை, சமூக  சீர்திருத்தங்கள், சாதியொழிப்பு என்று  முழங்கிக்கொண்டே வீட்டில்  தம் மனைவிமாரை அடக்கி அடிமைகளாக  வைத்திருக்கும்  ஒரு  சிலரை  எனக்கு  நன்கு  தெரியும். பொது  வெளியில் வந்தியங்கும்  பெண்கள் பற்றி இவர்களுக்கே மட்டமான அபிப்பிராயங்கள்  இருப்பதை  அவதானித்திருக்கின்றேன்.

பெரியார் போல பெண்விடுதலை பற்றி  முழுதாகச் சிந்தித்து, மனம்  திறந்து பேச நிறைய  ஆண்கள் முன் வரவேண்டும்.  பெண்களின்  போராட்ட  வலிமை  மிகப்  பெரியது, ஆனால் இடறி  விழுத்த ஆண்கள்  பலர்  மும்முரம்  காட்டுவதுதான் மிகப்  பெரிய  இடைஞ்சல். அதையே பெரும்  சவாலாக  எடுத்துக் கொண்டு  பெண்கள்  அதிவேக  முன்னேற்றம்  அடைவதையும்  நாளாந்தம்  காண்கின்றோம். 

பெண்களுக்குப் பொதுஎதிரியாக யாரை அடையாளப்படுத்துகின்றீர்கள்?

பெண்களுக்குப் பொது எதிரியாக ஆண்களை மட்டும் கூறமுடியாது.  பெண்கள் முன்னேறுவதை வீட்டிலுள்ள  வயதான பெண்கள் தடுத்த காலம்  நிறைய மாறிவிட்டது. பொறாமையின்  நிமித்தம்ஒரு  பெண் முன்னுக்கு  வருவதைப்  பலபெண்கள் விரும்புவதில்லை.  இதை என்அனுபவத்தில்  நிறையப் பார்த்திருக்கின்றேன்.  ஒரு  பெண் சிறப்பாக எழுதுபவற்றைப் பாராட்டுவோர் பெரும்பாலோர் ஆண்களாகவே  இருக்கின்றனர். பெண்கள்  தலைமைக்கு  வருவதைவிட  ஆண்கள் வருவதையே  பெண்கள் ஆர்வம் காட்டிய கதைகளும்  எனக்குத்  தெரியும்.  காரணம ,முன்பு  குறிப்பிட்டதுபோலப்  பொறாமைதான்.

தெற்காசிய நாடுகளிலும் சரி புலம்பெயர்நாடுகளிலும் சரி பெண்களுக்கான இருப்பு அல்லது அங்கீகாரமானது ஏற்கப்பட்டுள்ளதாக உணர்கின்றீகளா ? இல்லையென்றால் ஏன்?

பெண்களுக்கான   முழு  அங்கீகாரமும் உலகெங்கும் இன்னும்  கிடைக்கவில்லையென்றே அடித்துச்  சொல்லுவேன்.  அடிக்கடி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும்  வந்து  எம்மை  அதிர வைக்கும் பெண்கள், சிறுமிகள் மீதான  பாலியல்  வன்கொடுமைச் சம்பவங்களே இதை நிரூபிக்கின்றன. எவ்வளவோ  துறைகளில் பெண்கள் முன்னேறிக் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு முட்டுக்கட்டை  போட்டுப் பின் தள்ளவென்றே  ஆண் திமிர் கொண்டவர்கள் செய்யும் அட்டூழியங்கள்  தொடரவே  செய்கின்றன.  ஊரில்  மட்டுமல்ல, இந்தப்  புலம்பெயர்  தேசத்திலே  கூட  எம்மினப்  பெண்கள்  எத்தனைபேர்  கணவன்மார்களின்  நாளாந்தச்  சித்திர வதைக்கு  ஆளாகி வாய் மூடி இருக்கின்றனர்  என்பது  உங்களுக்குத்  தெரியுமாஇரண்டாம்  தலைமுறையைச் சேர்ந்த  இங்கு பிறந்த  பெண்கள்  நன்கு படித்துநல்ல வேலைகளிலும் சேர்ந்து முன்னேறி வருகின்றார்கள், ஆனாலும் , வேலை  வாய்ப்புக்கள்சம்பள விகிதாசாரங்களில்  இங்கும்  பெண்கள்  பாதிக்கப்படுகின்றார்கள் என்றுதான் செய்திகள்  சொல்கின்றன. பெண்களுக்கான  உரிமைகள் முழுதாகக்  கிடைக்க  வேண்டி இந்த நாட்டுப்  பெண்ணியக்கங்கள்  போராடுகின்றன.

இங்கு  பிறந்த பெண் பிள்ளைகள் பலர் கூட சாதிவெறி  பிடித்த  பெற்றோரின் ஆக்கினையால், ஊரிலுள்ள தம்  சாதி  மாப்பிள்ளைகளுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்டு, அந்தப்  பெண்பிள்ளைகள்  ஒருவர் கூடத் திருமண வாழ்க்கையில்  நீடித்ததாக நான்  நன்கு அறிந்தவரையில்  இல்லை.காரணம் சந்தேகம். நீ  ஆண் பிள்ளை  என்று  சொல்லிச்சொல்லி  அம்மாக்களே   வளர்க்கும்போது   சிலஆண்களிடம்  ஒருவித  ஆதிக்க  மனோபாவம்  இரத்தத்திலேயே  கலந்துவிடுகின்றது.  அதன்  வெளிப்பாடுதான் இவ்விதக்  குரூர குணங்கள்.

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களாக குறிப்பாக பெண்கள் மீது பாலியல் சார்ந்து அவதூறுகளை காண முடிந்தது.   ஆனால் ஒருசில கவிதாயினிகள் தங்களது கவிதைகளில் உடல்அரசியலைப் பாடுபொருளாக வைக்கின்றார்களே?   இது முரண்நகையாக இல்லையா?

சமூக வலைத்தளங்களில் மட்டுமா....ஒரு  பொது வெளியாக இருக்கின்ற முகநூலிலேயே இது பரவலாக இருக்கின்றது. கொஞ்ச நாட்களுக்கு முன் என்னையே சாதியின் பெயராலும், கேவலமான பாலியல் அவதூறுச் சொற்களாலும் ஒரு சிலர்அதுவும்  இளவயதினர் வசைபாடியதை  அறிந்திருப்பீர்கள். இதற்கும் பெண் கவிதாயினிகள்  தங்களது  கவிதைகளில்  உடல்அரசியலைப்  பேசுவதற்கும்  என்ன சம்பந்தம்?.

பண்டைய  இலக்கியங்களிலும், சமய  குரவர்களின்  பாடல்களிலும், திரைப்படங்களிலும் பெண்களின்  அந்தரங்கஉறுப்புக்கள்  உட்பட   வர்ணித்துப்  பாடப்பட்டிருக்கின்றனவே. காளமேகப்புலவர்பட்டினத்தார்  என்று  நீட்டிக்கொண்டு  போகலாம். நான்  பண்டைய இலக்கியங்களைக்  கரைத்துக்  குடித்தவளல்ல. ஆனாலும் ஓரளவு அறிந்திருக்கின்றேன். பெண்ணுறுப்பை  மயிர், அல்குல்  என்று  சர்வசாதாரணமாக  எடுத்து விட்டிருக்கின்றார்களே. ஆண்கள் உடல்அரசியலைப்  பேசலாம்  என்றால் பெண்கள்  ஏன்  உடலரசியலைப் பாடக்கூடாது?

17ஆம் ,18ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்த  ஆர்.ராமாமிர்த அம்மாள், செ.வெள்ளைத்துரைச்சி  நாச்சியார், முத்துப் பழனி போன்றோர்  அந்த  நாட்களிலேயே, நம்புவதற்குக்  கடினமாகப்  பெண்உடல் குறித்துச்  சிருங்காரரசம்  சொட்ட  எழுதியிருக்கின்றார்கள். அப்படி எழுதிவிட்டார்கள்  என்று  ஆண்செருக்குக் கொண்ட கவிஞர்கள்  இந்தப் பெண்கவிதாயினிகளை 'விபச்சாரிகள்’  எனப் பழித்துரைத்தார்கள். ஆனால்,அவற்றைச் செருக்குமிகு அப்பெண்கள் ஏறெடுத்தும்  பார்க்கவில்லை. மீண்டும்  நான் உரைத்துரைப்பது இதுதான், ஆண்கள்  உடல் அரசியலைப்  பேசலாம்  என்றால்  பெண்களும் தாராளமாகப்  பேசலாம்.  அதில்  தப்பெதுவும்  எனக்குத்  தெரியவில்லை.

சாதியமானது உங்கள் காலத்தில் எப்படியாக இருந்தது? சமகாலத்தில் எப்படியாக இருக்கின்றது?

எங்கள் காலத்தில்  இருந்ததை  விடச் சாதியமானது  எந்த  விதத்தில் மாறியுள்ளது? சாதிய  விடுதலைக்காய்   போராடியவர்களின் அளப்பரிய  தியாகங்களாலும், மூர்க்கமான  எதிர்ப்புக்கள்  நாளுக்குநாள்  வலுவேறியதாலும் தான் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகள் கிடைத்தன.
ஆதிக்க சாதியினர் எந்தக்காலத்திலும் தாங்களாக  எதையும்  கொடுத்தது  கிடையாது. ஒடுக்கப்பட்டோர்  என்று  சொல்வோர்  கல்வி  உட்படப்  பல  வழிகளிலும்  தாங்களாகவே  முன்னேறி விட்டதாலும், எதிர்ப்புக் காட்டுவதில் ஓர்மத்துடன்  முன்னுக்கு  நிற்பதாலும்  ஆதிக்கசாதியினர்  என்போரால்  இப்போது  எதுவும்  செய்ய  முடிவதில்லை. மற்றும்படி   சாதிவெறி  அப்படியேதான்  இருக்கின்றது.

இந்த சாதிவெறியை புலம் பெயர் நாடுகளுக்குக் கூட  கடத்தி வந்திருக்கின்றார்கள். இங்குள்ள   பலரிடமும்  சாதியுணர்வு  இருப்பது  வெளிப்படை.  யாழ்ப்பாணத்தில் ஓர் இந்துக்கோவிலில்  ஒடுக்கப்பட்டோர் வரத் தடைசெய்து  முள்வேலி  போட்டதும், தேர்  இழுப்பதில்  நடந்த  இழுபறியில், சிங்கள  இராணுவத்தினர் தேர்  இழுத்த  கேவலமும்  இந்த  2016 இல் தானே  நடந்தனயுத்தத்துக்குப்  பின்னான காலத்தில் முகாம்களில்  கூடச் சாதிப்பிரச்சனைகள்  நடந்ததை  அறிந்திருக்கின்றேன.

நோர்வேயில்  வசித்த  எம்மவர்  ஒருவர்தன் மகன்  ஒடுக்கப்பட்ட  இனத்தைச்  சேர்ந்த ஒருபெண்ணை  மணம் செய்ததற்காகத்  தூக்கு  மாட்டித் தன்னுயிரைவிட்டார்.  இந்தப்பெண்  என்உறவினர்  என்பதால்  இவ்விடயம்  நன்கு தெரியும்.  சாதி  என்றால்  என்னவென்றே தெரியாத  இங்கு  பிறந்து  வளரும்  பிள்ளைகளுக்கே   சில பெற்றோர்  சாதி பற்றிச்  சொல்லிச்சொல்லி  வளர்க்கின்றனர். சாதியில்  குறைந்த  எவரையாவது  காதலித்துத்  தொலைக்கப்  போகின்றார்களே என்ற பயம் அவர்களுக்கு. இதைத்  தெனாவெட்டாக   என்னிடமே  சிலர்  சொல்லி வாங்கிக்  கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சாதி  என்பது  எமது  சமூகத்திலுள்ள  தீர்க்கமுடியாத சீழ்  பிடித்த  நோய்.  இந்துமதக்  கோட்பாடுகளின்  ஆணி வேர்தான்  இது. இதை  நீக்குவது  சிரமத்திலும்   சிரமம்.  

சமகால இளைய படைப்பாளிகளின் படைப்பு வீச்சுப் பற்றியும், அவர்களுக்கு ஓர் மூத்த இலக்கியவாதியாக என்ன சொல்ல விளைகின்றீர்கள்

இப்போது எழுதும்  இளைய  படைப்பாளிகள் புதிதாகச்  சிந்தித்து வேறுபட்டுத்  தெரிகின்றார்கள்.    அவர்களுக்கான வாய்ப்புக்கள்  தாராளமாக  இருப்பதால் உடனுக்குடன் அச்சில்  ஏற்றி   நூலாக  வெளியிடுகின்றார்கள்.  இது  வரவேற்கத்  தக்க  விடயம்.அவர்களுக்கு  நாம்  எதுவும்  சொல்ல  வேண்டியதுமில்லை. வேகமாகச்  சிந்தித்து அதை எழுத்திலும்  வடிக்கின்றார்கள். எவ்வளவு  புத்தகங்கள்   எழுதியுள்ளீர்கள் என்று  எதிர்காலத்தில்  எவரும்  கேள்வி  கேட்க  இடம்  வைக்காத  புத்திசாலிகள்.

தற்போது   வெளிவரும்  படைப்புக்கள்பெரும்பாலும்  ஈழப்போராட்டம்  சம்பந்தப்பட்டவற்றை  மையமாக வைத்தே எழுதப்படுகின்றன.  இதில்  புனைவாகவும் நிறையச் சேர்க்கப்படுவதால், மனதில்  ஒட்டாத   சலிப்பே உண்டாகின்றது. கேட்டவற்றையும், அறிந்தவற்றையும்  வைத்து  எல்லோராலும் உயிரோட்டம்  ததும்ப  எழுதமுடியாது. சமூகத்திலும், வெளியிலும்  எவ்வளவோ நடக்கின்றன. இனி  வேறு  கண்ணோட்டங்களில்  பார்வையைச்   செலுத்தலாமே....சொல்லப்படாத  விடயங்கள்  நிறைய  இருக்கின்றனவே.

ஜீவநதி -இலங்கை.


02 கார்த்திகை 2016.