மனமே மலர்க -மெய்யியல் - பாகம் 18.


துன்பம் நிரந்தரமாய் நீங்க...


துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

பிறரைக் கவர்வது எப்படி?

ஒருவரை நாம் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று எடை போட ஆரம்பித்து விடுகிறோம். இதேபோல மற்றவர்களும் நம்மை எடை போடுவார்களே! அவர்களது மனதில் இடம் பிடிக்கிற மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டாமா?அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன?

இனிமையான குணத்தை விரும்பாதவர் யாருமில்லை. புதிதாக ஒருவரை சந்திக்கும்போது உங்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் வெளிப் படுத்துங்கள். அளவாகப் பேசுங்கள்; அழகாகப் பேசுங்கள்; இயல்பாகப் பேசுங்கள்; இனிமையாகப் பேசுங்கள்; சிரிக்க சிரிக்கப் பேசுங்கள். தேவைப்படும் போது ஆழமாகப் பேசுங்கள். உங்களது பேச்சும் செயலும் அடுத்தவர் மனதில் அட்டை போல ஒட்டிக் கொள்ளும்.

எப்போதும் எந்த சூழ் நிலையிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். போலித் தனம் வேண்டாம். நீங்கள் செயற்கையாக நடந்து கொள்ள முயற்சிப்பது ஆபத்து. ஏனெனில் உங்கள் செயற்கை சாயம் அடுத்தவர்க்கு அப்பட்டமாகத் தெரியும்.

உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய உறுப்பு கண் தான். மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டோ, தரையைப் பார்த்துக் கொண்டோ அடுத்தவரிடம் பேசுவது உங்கள் தாழ்வு மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். அடுத்தவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசினால் உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும்.

பலர் இருக்கும் இடத்தில்,சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ.எப்படி எதிர் பார்க்கிறார்களோ அதற்கேற்றபடி உங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கினால் தூண்டில் போல மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் கவ்வி இழுக்கப்படும்.

முக மலர்ச்சியும்,கலகலப்பும் உங்களை உயர்த்திக் காட்டுகிற உன்னதமான குணங்கள். வருத்தத்தோடு உங்களிடம் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவரும் கவலையை மறந்து கலகலப்பாகி விடுவார்.
இந்த உத்திகளைப் பயன்படுத்தினால் பிறரைக் கவர்வதில் சிறந்த மனிதர் நீங்கள்தான்!

கடவுளிடம் ஒரு பேட்டி.

கடவுளைப் பேட்டி காண்பது போல கனவொன்று கண்டேன்.
''ஓ.என்னைப் பேட்டி காண வேண்டுமா?''என்று புன்னகையுடன் கடவுள் கேட்டார்.
'உனக்கு நேரம் ஒதுக்க முடியுமானால் ...''என்று இழுத்தேன்.
''காலமே நான் தானே?.சரி,என்ன கேள்விகள் கேட்க விரும்புகிறாய்?''
என்று கடவுள் என்னைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார். நான் கேட்டேன்,
''மனித குலம் எந்த வகையிலாவது உன்னை ஆச்சரியப் படுத்துகிறதா?
''கடவுள் சொல்ல ஆரம்பித்தார்,''மனிதன் குழந்தையாய் இருக்கும்போது விரைவில் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.பெரியவன் ஆகிய பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா,என்று ஏங்குகிறான்.அடுத்து,உடல் நலம் கெட்டாலும் பரவாயில்லை என்று ஓய்வின்றிப் பணம் சேர்க்கிறான்.பின்னர் நோய் வந்து பணத்தை முழுவதும் உடல் நலத்திற்காக செலவழிக்கிறான்.இதை விட முக்கியமானது ஒன்று உள்ளது.எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு நிகழ் காலத்தை மறந்து விடுகிறான்.ஆனால் அவன் நிகழ் காலத்திலும் வாழ்வதில்லை.எதிர் காலத்திலும் வாழ்வதில்லை.
தனக்கு மரணமே கிடையாது என்ற எண்ணத்தில் வாழ்கிறான்.ஆனால் எப்போதுமே வாழாமல் இறக்கிறான்.
''பின் சிறிது நேரம் எங்களுக்குள் மௌனம் நிலவியது. மீண்டும் நான் கேட்டேன்,

''குழந்தைகள் வாழ்க்கையில் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய்?''கடவுள் திருவாய் மலர்ந்து,

''யாரும் நம்மீது அன்பு செலுத்த மாட்டார்கள். நாம்தான் பிறர் அன்பு செலுத்துமாறு நடந்து கொள்ள வேண்டும். நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதில்லை. சில நொடிகளில் பிறரைக் காயப் படுத்தி விடலாம். ஆனால் அதை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும். இரண்டு மனிதர்கள் ஒரே பொருளை வெவ்வேறு கோணத்தில் பார்க்க முடியும். இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே மனதில் படும்படி சொல்லி வையுங்கள்.''

''நன்றி கடவுளே,வேறேதேனும் குழந்தைகளுக்கு சொல்ல விரும்புகிறீர்களா?''என்று நான் கேட்க கடவுள் புன்னகையுடன் சொன்னார்,
''நான் எப்போதும் இங்கு இருக்கிறேன்...''

இயல்பை ஏற்றுக்கொள்.

வாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது.மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும் திணிக்காதே.எதையும் மறுக்காதே.இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்.

00000000000000000000000

குறிப்பிட்ட ஒரு பொருளால் ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்தப் பொருள் அவனை விட்டு நீங்கி விட்டால் அந்த மகிழ்ச்சியும் அவனை விட்டுப் போய்விடும்.குறிப்பிட்ட செயலால், நோக்கத்தால்,ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்த செயல் முடிவடைந்த பின்னர் அந்த மகிழ்ச்சி அவனிடம் காணாமல் போய்விடும்.இங்கே மகிழ்ச்சி வெளியிலிருந்து வருவதல்ல.அது உள்ளிருந்து பொங்கிப் பெருகுவது. எப்போதும் பரவச நிலையில் இருப்பது.

0000000000000000000000

தனிமையைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்,
ஏனெனில் தனிமை என்னைக் கண்டு அஞ்சியதில்லை.
தனிமையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.
ஏனெனில் என்னைப்போல் அதுவும் தனியானது.
தனிமையை நான் விரும்புகிறேன்.
ஏனெனில் அது என்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறது.

000000000000000000

பார்வைகள் ஐந்து.

அர்ஜுனன் மனதை மாற்ற கண்ணன் ஐந்து பார்வைகளை விளக்குகிறார்.

வேதாந்தப்பார்வை :

ஆன்மா ஒன்றுதான் அழிக்க முடியாதது.அழிவது உடல்தான்.

சுயதர்மப் பாதை:

சுய தர்மத்திலிருந்து பின் வாங்கக் கூடாது. குறை யிருப்பினும் கை விடக்கூடாது.நெருப்புக்குப் புகை இருப்பதுபோல எச்செயலிலும் குறை இருக்கத்தான் செய்கிறது.உனக்கென விதிக்கப்பட்ட கடமையை செய்யும் போது அதில் எந்தப் பாவமும் ஏற்படுவதில்லை.

கர்மயோகப் பார்வை:

கடமையைக் கடமைக்காகச் செய்ய வேண்டும்.விருப்பு வெறுப்பு கூடாது.கடமையை செய்.வரப்போகும் பலன் உன்னை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது.பலனை விரும்பியோ,வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை எந்த விதத்திலாவது கட்டுப் படுத்தி விடும்.செயலில் ஆசை ,கோபம்,விரக்தி போன்ற உணர்வுகள் சேரக் கூடாது.உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.இறைவனை எண்ணி,அகங்காரம் இன்றி ,பலன் கருதாது செயல்படு.

பக்திப்பார்வை:

எல்லாவற்றையும் செயலாக்குவது கடவுள்.அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.செயலுக்கு நீ ஒரு கருவிதான்.உன் செயல்களை இறைவனுக்காக செய்.எப்போதும் கடவுள் உன்னிடம் இருப்பார்.

தத்துவப்பார்வை:

செயல்படுவது ஒருவனுடைய சுபாவம்தான்.எந்தக் காரியத்தை செய்ய மாட்டேன் என்று பின் வாங்குகிறாயோ ,அதையே செய்யும்படி உன் சுபாவம் கட்டுப் படுத்தும்.

இறுதியாக கண்ணன் சரணாகதி பற்றி சொல்கிறான்:

உன் சுமையை என் மேல் இறக்கி வை.தருமம் அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீ அல்ல.என்னையே புகலிடமாகக் கொண்டு உன் கடமையை செய்.

வாழ்க்கை ஒரு பரிசு.

வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது பஒரு ரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா விட்டால் அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.

வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,'நான்யார்?'என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன. நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை --இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.

அழகும் கொடூரமும்

ஓவியர் ஒருவர், உலகிலேயே மனிதருள் ஒரு அழகான முகத்தையும் , ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார். முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை. திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார். கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார். பின்,கொடூர முகத்தையும் வரைந்து, இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார். கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது. அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்! ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை. அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை. ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது. அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது. சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார். வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார். அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். ஏன்? அவன் வேறு யாருமில்லை. அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ, அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான் அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.

நத்தைக்கூடு

இளம் காக்கை ஒன்றிற்கு ஒரு நத்தைக்கூடு கிடைத்தது. ஆனால் அதை உடைத்து சாப்பிடத் தெரியவில்லை. அருகிலிருந்த ஒரு வயதான காக்கையிடம் நத்தைக்கூடை உடைப்பது எப்படி என்று கேட்டது. அக்காக்கையும் சற்று உயரே பறந்து சென்று அங்கிருந்து நத்தைக்கூடை அருகில் இருக்கும் பாறை மீது போட்டால் அது உடைந்து விடும் என்று ஆலோசனை சொன்னது. இளம் காக்கையும் அவ்வாறே செய்தது. ஆனால் கீழே திரும்பி வருமுன்னே முதிய காக்கை உடைந்த கூட்டிலிருந்து வெளி வந்த நத்தையை சாப்பிட்டு விட்டது. இது நியாயமா என்று இளம் காக்கை கேட்க முதிய காக்கை சொன்னது, ''நீ என்னிடம் கூட்டை உடைக்க மட்டும் தானே ஆலோசனை கேட்டாய். அதை சொல்லி விட்டேனே!''என்றது. இக்கட்டான சூழ்நிலையில் போகிற போக்கில் யாரிடமாவது ஆலோசன கேட்கக் கூடாது.

இது பிரச்னையா... வாய்ப்பா?

'பிராப்ளம்' ! தினப்படி வாழ்க்கையில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் 'நெகடிவ்' சொற்களில் ஒன்று!
ஆபீஸுக்குப் போனா பிரச்னை..! வீட்டுக்கு வந்தா பிரச்னை...! என்னடா வாழ்க்கை இது?'
இப்படி அலுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு.
எதுதான் பிரச்னை?
இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்:

நீண்ட நாட்களாக வேலை தேடித் தேடிச் சோர்ந்துபோன ஓர் இளம் பட்டதாரி அவன் ! பல வருடங்களுக்குப் பிறகு பத்திரிகை ஆபீஸில் அவனுக்கு 'நிருபராய்' வேலை கிடைத்தது! பயபக்தியோடு முதல் நாள் வேலைக்குப் போகிறான்! பத்திரிகை ஆசிரியர் அவனை அழைத்து 'இன்று சுதந்திர தினம். நமது துறைமுகத்தில் கப்பல் படையைச் சேர்ந்த போர்க்கப்பல் ஒன்று வந்திருக்கிறது. அதில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள். அங்கு போய் செய்தி சேகரித்து வா' என்று இவனை அனுப்பி வைக்கிறார்.

முதல் நாள் - முதல் அஸைன்மெண்ட்!

அதனால், ஆசிரியர் சொன்ன அடுத்த நிமிடமே துறைமுகம் நோக்கி ஓடுகிறான்.

அன்று மாலை சுதந்திரதினச் செய்தி சேகரிக்க கோட்டை, கலெக்டர் ஆபீஸ், கட்சி ஆபீஸ் என்று நாலா திசைகளுக்கும் போன நிருபர்கள் அவரவர்கள் சேகரித்த செய்திகளை வேகவேகமாக எழுதுகிறார்கள். ஆனால், நம்முடைய இளை'ன் மட்டும் செய்தி எதுவும் எழுதாமல் சோகமாக உட்கார்ந்திருக்கிறான்! இதைப் பார்த்த சக நிருபர் ஒருவர் 'நீ ஏன் எதுவும் எழுதவில்லை?' என்று பரிவோடு கேட்கிறார்.

நம்முடைய இளைஞன், என் கெட்ட காலம், நான் மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது! உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது! என் முதல் நாள் அஸைன்மெண்ட்டே பெரிய பிரச்னைக்குள்ளாகிவிட்டது. கப்பல் படையில் நடக்கும் சுதந்திர நிகழ்ச்சிசகளை கவர் செய்யச் சொல்லித்தான் ஆசிரியர் என்னை அனுப்பினார், என் கஷ்ட காலம்... கப்பலில் எந்தக் கொண்டாட்டமும் நடக்கவில்லை! 'செய்தி இல்லை' என்று ஆசிரியரிடம் எப்படி சொல்வது என்று பயமாக இருக்கிறது' என்று புலம்ப ஆரம்பித்தான்.

'அப்படியா! கப்பலில் ஏன் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடக்கவில்லை?' - சக நிருபர் சளைக்காமல் கேட்டார்.

கப்பலில் ஓட்டை இருந்திருக்கிறது, சுதந்திரத்தின ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், இதை யாரும் கவனிக்கவில்லையாம். திடீரென்று ஓட்டை பெரிதாகி கடல் தண்ணீர் 'குபுகுபு வெனப் புகுந்து கப்பலே ழூழ்கும்படி ஆகிவிட்டது. அதைத் தடுப்பதற்குப் பெரிய படையே பாடுபட்டது. இப்படியிருக்க, சுதந்திர தினக் கொண்டாட்டம் எப்படி நடக்கும்?'

சக நிருபர் ஷாக் அடித்த மாதிரி எழுந்து நின்று விட்டார் !

'அடப்பாவி! இதுதானே முதல் பக்கச் செய்தியாக வரவேண்டும்!' என்று சொல்லிக் கொண்டே முழு விவரங்களைத் திரட்ட அந்த நிருபர் ஓடினார்.

ஆக... 'பிரச்னை' என்று நினைத்து இளைஞன் சோர்ந்து உட்கார்ந்தானே. அது அவன் தன் திறமையை நிரூபிக்க கிடைத்த தங்கமான வாய்ப்பு. அதைத்தான் கோட்டை விட்டிருக்கிறான்.

வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம இல்லை! அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம்!

ஒவ்வொரு பிரச்னையும் நமக்குக் கிடைக்கிற ஒரு வாய்ப்புதான்.

யோகி ஒருவர் காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். தூரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர், யோகி காட்டுக்குள் போவதைப் பார்த்து, 'நில்லுங்கள் 'நில்லுங்கள் ! என்று கத்தியபடி தலைதெறிக்கப் பின்னால் ஓடிவந்தனர்!

'அந்தக் காட்டில் ஒரு ராட்சஸி இருக்கிறாள். மனித மாமிசம் சாப்பிடும் பூதகி அவள். எத்தனை மனிதர்களைப் பார்த்தாலும், அவர்களைச் சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்டவர்களின் வலது கை கட்டை விரலை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்ததுக் கொள்வாள்! இப்படி இதுவரை 999 கட்டை விரல்களை சேகரித்து வைத்திருக்கிறாள் ! ஆயிரமாவது கட்டை விரல் கிடைத்து விட்டால் அத்தனையையும் சேர்த்து கழுத்தில் மாலையாக மாட்டிக் கெர்ளவதுதான் அவள் திட்டம் ! அதனால் காட்டுக்குள் போகாதீர்கள்! போனால் பிரச்னைதான்!' என்று ஊர்மக்கள் எச்சரித்தார்கள்.

உங்களுக்கு நன்மை செய்ய இதைவிட நல்ல வாய்ப்பு எனக்கு எங்கே கிடைக்கும் என்று சொல்லிவிட்டு யோகி காட்டுக்குள் சென்றார்.

எதிர்பார்த்த மாதிரியே ஆங்காரச் கூச்சலுடன் அங்கிருந்த ஆலமரத்தின் ஒரு பெரிய கிளையை உடைத்துக் கொண்டு புழுதி கிளப்பியபடி யோகியின் எதிரில் வந்து நின்றாள் ராட்சஸி. ஆனால் மற்றவர்களைப் போல ராட்சஸியைப் பார்த்து யோகி பயந்து ஓடவில்லை!

'என்னைக் கொல்வதன் மூலம் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்றால் என்னைத் தாராளமாகக் கொல்லலாம். நீ பலசாலி என்பதை ஏற்கிறேன்! ஆனால், ஒரு விஷயம் ஆலமரத்தின் கிளையை உடைக்க உனக்குச் சக்தி இருக்கிறதே தவிர, நீ என்னதான் முயன்றாலும் உன்னால் அந்தக் கிளையை மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க முடியாது! அழிப்பது சுலபம்! ஆக்குவது சிரமம்! என்று துவங்கி நேருக்கு நேர் பேசத் துவங்கினார் யோகி! அவர் சொன்ன வார்த்தைகளைவிட அவரது குரலில் இருந்த உண்மையும் கரிசனமும் ராட்சஸியைச் சரண் அடையச் செய்தது! அது மட்டுமல்ல பிறகு அந்தயோகியின் சீடராகவே மாறினாள் !

இந்தக் கதை உண்மையில் நடந்ததா! இல்லை கற்பனையா என்ற ஆராய்ச்சி முக்கியம் இல்லை! கிட்டத்தட்ட இதே கதை இந்து மத இலக்கியங்களிலும் இருக்கிறது.

நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி மிக எளிமையானது! காட்டுக்குள் நுழைய விரும்பிய அந்த யோகிக்கு, ராட்சஸி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. ஊர் மக்களைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பாக இருந்தது!

ஆனால், சிலருக்கு சின்ன விஷயங்கள் பூதாகரமான பிரச்னையா தெரியும் ! அப்படி ஒரு பெண்மணியை நான் சென்னையில் சந்தித்தேன்..

பத்ருஹரி

ஒரு முனிவருக்கு மாம்பழம் கிடைத்தது.அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வர்.முனிவர் அம்மாம்பழத்தை தான் சாப்பிடுவதை விட மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் பத்ருஹரி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி மன்னனிடம் கொடுத்தார்.மன்னனோ,அதைத் தான் சாப்பிடுவதை விட தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது தன் ஆசை நாயகனான நொண்டியும் கூனனுமான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.அவனோ,அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை மனைவியிடம் கொடுத்தான்.அந்தப் பெண் மிக நல்ல பெண்.அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்,இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.பழம் எப்படித் தன் கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான்.அடுத்த நாள் அவன் கூறாமல் சன்யாசம் பூண்டான்.

காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.