வாடாமல்லிகை - குறுநாவல் - பாகம் 13.


எங்களை தபால்பெட்டி இறக்கத்தில் இறக்கிவிட்டு இ போ சா பருத்தித்துறையை நோக்கி நகர்ந்தது. மாலை நேரம் நெருங்கியதால் வெய்யிலின் கொடுமை தணிந்திருந்தது. நான் வீட்டினுள் நுழைந்ததும் நேரடியாக கிணற்றடிக்கு சென்றேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை அள்ளி அள்ளி உடலில் ஊற்றினேன். உடம்பில் ஒட்டியிருந்த புழுதியும் வியர்வைப் பிசுபிசுப்பும் ஒரேசேர சவர்க்கார நுரையில் கறுப்பாகக் கரைந்தன. குளிர்ந்த நீர் உடலில் பட்டதும் உடலும் மனமும் ஒரேசேரப் புத்துணர்வாயின. மனைவி தந்த தேநீரை எடுத்துக்கொண்டு முற்றத்து மாமர நிழலில் அமர்ந்துகொண்டேன். மாமரத்தில் புலுனிகள் கலகலத்துக் கொண்டிருந்ததன. தூரத்தே இருந்து வந்த ஒற்றைக்குயிலின் கூவலில் என்மனதைப்போலவே ஒருவித சோகம் இழையோடியிருந்ததது. வானம் மீண்டும் சிவக்கத் தொடங்கியிருந்தது.ஒழுங்கையினால் மேச்சலுக்குப் போன மாடுகள் பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் தனக்கு பின்னேரப்பூசை ஆரம்பமாகப் போவதை கோயில் மணிமூலம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ பிள்ளையாரிடம் போய் குசலம் விசாரிக்கத் தோன்றவில்லை. தனது தம்பிக்காக ஒரு பெண்ணிடம் தூது சென்ற இந்தப் பிள்ளையார் இங்கிருந்த தம்பிகளும் தங்கைகளும் அப்பா அம்மாக்களும் தங்கள் உயிரைக்காத்தருள கூக்குரல் இட்ட பொழுது ஏனோ மறந்து போய் விட்டார் .தனக்குத் தனக்குத்தான் என்று வந்தால்தான் இந்த கடவுள்களும் செயலில் இறங்குவார்களோ ?? என்று என்மனம் என்னிடம் தத்துவ விசாரணை செய்துகொண்டிருந்ததது. தங்கை தயாரித்த கல்லு ரொட்டியையும் சம்பலையும் சாப்பிட்டு விட்டு படுக்கப் போய் விட்டேன். யாழ்ப்பாணப் பயணம் தந்த உடல் மனக் களைப்பு சயனசுகத்தை எனக்கு இலகுவாகவே தந்தது.

ஆழ்நிலைத் தூக்கம் என்னையும் மனதையும் ஒரேசேரக் கிளரச் செய்தது. கனவில் அம்மா அருகில் இருந்து பல கதைகள் எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தா. காட்சியமைப்புகள் யாவுமே கலரில் ஓடின. அதிகாலை சேவலின் முதல் கூவல் கனவில் பயணித்த என்னை விழிப்பு நிலைக்கு கொண்டுவந்தது .என்னருகே என்னை அணைத்துக்கொண்டு படுத்திருந்த மனைவி நித்திரையில் சிரிதுக்கொண்டிருந்தாள். அவளும் எதோ கனவுலகில் பயணம் செய்வதாகவே எனக்குப் பட்டது. அவளைக் குழப்பாது மெதுவாக எழுந்து கையில் சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டுப் படலையடியில் நின்றேன். ஒழுங்கை அமைதியாக இருந்தது. மெதுவாக வீசிய காற்றில் மாமரத்து இலைகள் சலசலத்துக் கதை பேசின. லைட்டர் எனது சிகரட் முனையை சிவப்பாக்கியது. புகையை இழுத்தவாறே அன்று நான் செய்யவேண்டியதை மனதில் பட்டியல் இட்டேன். நாங்கள் இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. முதலில் பருத்தித்துறைக்கு போகவேண்டும் என்று முடிவு செய்தேன். நாங்கள் மீண்டும் விமானம் ஏற ஒரு கிழமையே இருந்தது. அதற்குள் பல வேலைகளை பார்க்க வேண்டும். முக்கியமாக யோ கர்ணனையும் கருணாகரனையும் பார்க்க வேண்டும் என்று திட்டங்களைப் போட்டுக்கொண்டிருந்தேன். காலை ஆறு மணியாகி விட்டிருந்ததது. நான் முதல் ஆளாக குளித்து விட்டு தங்கைச்சி போட்டுத்தந்த கோப்பியை குடித்துக்கொண்டு பருத்தித்துறைக்கு வெளிக்கிடதயாரானேன்.

நாங்கள் தபால் பெட்டியடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்றபொழுது பருத்தித்துறை வீதி சோம்பலுடன் விழித்துகொண்டிருந்ததது. பஸ் நிலையத்திற்கு முன்னே இருந்த காத்தார் வீடு இல்லாமல் போய் இப்பொழுது வேறு யாரோ வீடு கட்டிக்கொண்டிருந்தார்கள். காத்தார் வீடு அப்பொழுது எனது கனவு வீட்டாகவே இருந்ததது. பருத்தித்துறை வீதியில் இருந்து வீட்டிற்கு உள்ளே போக அதிக தூரம் முட்டை வடிவில் இரண்டு பக்கமும் தார்வீதி போடப்பட்டு, போர்ட்டிக்கோவுடன் கூடிய விசாலமான நாற்சார வீடு அது. உள்ளே இருந்த தார்வீதியில் இரண்டு பக்கமுமே பூக்கண்டுகளால் நிரம்பி வழிந்து உள்ளே ஒரு மினி பூந்தோட்டமே இருக்கும். சிறுவயதில் இந்தப் பூந்தோட்டங்களை பார்க்கவென்றே இந்த வீட்டிற்கு அடிக்கடி போய்வருவேன். இப்பொழுது அந்த வீடு இல்லை .எங்கள் வாழ்க்கையைப் போலவே கோப்பாயும் மாற்றங்களை கண்டுவிட்டது. என்னில் மாற்றங்களை அனுமதித்த நான் கோப்பாய் மட்டும் மாறாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று தெரிந்தும் ஞாபகவீதியில் பறக்கவே என்மனம் ஆலாய் பறந்தது.

தூரத்தே இ .போ .ச .பஸ் வருவது தெரிந்தது .எங்களைக்கண்டதும் அது தனது வேகதைக்குறைத்தது. அதிகாலை வேளையாகையால் அந்த பஸ்ஸில் அதிக கூட்டம் இருக்கவில்லை. எங்களை ஏற்றிக்கொண்டு பஸ் பருத்தித்துறையை நோக்கி வேகமெடுத்தது .என்கண்கள் வெளியே காட்சிகளை சுவார்சியத்துடன் பார்த்துக்கொண்டு வந்தன. பூதர் மடமும் அருகிலேயே இருந்த பெரிய ஆலமரமும் கால ஓட்டத்தில் தங்களைத் தொலைத்து விட்டிருந்தன. முன்பு இந்த மடத்திலும் ஆலமர நிழலிலும் பெரிசுகள் வம்பளந்து கொண்டிருப்பார்கள் இப்பொழுது அந்த இடம் வெட்டை வெளியாக இருந்ததது. மெதுமெதுவாக கோப்பாய் எனது கண்களில் இருந்து மறைந்துகொண்டிருந்ததது. இப்பொழுது நீர்வேலி தனது காட்சிகளை என் கண்கள் முன்னே விரித்தது .வாழை மரத்தோட்டங்களும், வெங்காயத்தோட்டங்களும் இரண்டு பக்கங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. கிளாஸ் பக்ரறியும் காலவோட்டத்தில் தன்னைத் தொலைந்து விட்டிருந்தது. இதனை நடாத்திய சேவியர் பல ஏழைகளின் வீடுகளில் அடுப்பெரிய வைத்தவர். காலம் அவரையும் தொலைத்து விட்டிருந்தது. சனங்கள் தொடர்ந்தும் இந்த கடவுள்கள் தங்களை காத்துக்கொண்டிருக்கின்றார் என்று நம்புகின்றபடியால் கந்தசுவாமி கோவிலும் வாய்க்கால் தரவை பிள்ளையார் கோயிலும் அப்படியே இருந்தன .நான் ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டேன். காலம் முக்கால் மணித்துளிகளை விழுங்கி பஸ்ஸை பருத்தித்துறை பஸ்நிலையத்தில் நிறுத்தியது .

பஸ்நிலையத்தில் காலை சூரியன் என்னை வியர்க்க வைத்தது. நாங்கள் காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்குள் நுழைந்தோம். முன்பு பருத்தித்துறை சந்தைப்பகுதியும் பஸ் ஸ்ராண்டும் பலகாலமாக சனங்கள் நடமாடமற்ற சூனியப் பிரதேசமாகவே இருந்தது .பல அழிவுகளையும் இரத்தக் குளியல்களையும் தினசரி நிகழ்வுகளாக கண்ட இடமாகும். இப்பொழுது இந்த இடம் மீண்டும் நிழல் கண்காணிப்பில் மக்கள் பாவனைக்கு வந்திருக்கின்றது. சனங்கள் இப்பொழுது இந்த இடத்தில் பரபரத்தாலும் அவர்கள் மனதில் ஐந்தாவது பரம்பரையில் வந்த மன்னர்கள் விதைத்த கோரவடுக்கள் மறையாதே காணப்படுகின்றன. சந்தையில் மரக்கறிகளில் மண்ணின் வாசம் அப்படியே இருந்ததது. சிலதில் சிவப்பு மண்ணும், கறுப்பு மண்ணும் ஒட்டிக்கொண்டிருந்தன. மரக்கறிகளை பைக்கட்டுகளில் பார்த்துப் பழகிய எனக்கு இவை புதிதாகவே இருந்ததது. கீரைகளில் பலவிதமான கீரைகள் நீர் சொட்டச் சொட்ட இருந்தன. கீரைகளில் இருந்து வழிந்து கொண்டிருந்த நீர்த்திவலைகளில் சூரிய ஒழி பட்டுத்தெறித்தது .அதன் வேர்களில் இருந்த மண் அது உடனடியாக பிடுங்கப்பட்டது என்பதை சொல்லியது. எனது தெரிவு கீரைகளாகவே இருந்ததது. மாமிக்கும் மாமாவுக்கும் தீயல் பிடிக்கும் என்பதால் நெத்தலி மீன் வாங்க மீன் சந்தைக்குள் நுழைந்தோம் .அங்கு மீனவர்களின் உழைப்பு நன்றாகவே தெரிந்தது .மீன்கள் கும்பி கும்பியாக குவிந்து கிடந்தன. அந்தக் காலை சூரிய வெளிச்சத்தில் எல்லாமே வெள்ளியாக மினுங்கின. அவைகளில் மீனவர்களின் வியர்வை வாசம் இருந்ததால் அவைகளின் இயற்கை வாசம் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. அவற்றையும் வாங்கிகொண்டு நாங்கள் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

காலை வேளை வியர்த்து விறுவிறுக்க ஒழுங்கையில் வரும் தெரிந்தவர்களின் தலையசைப்புக்கு தலையசைத்தவாறே நடப்பது எங்களுக்கு பிடித்தமானதாகவே இருந்தது .என்னதான் வெளிநாடு எங்களைக் குளிப்பாட்டி வைத்திருந்தாலும், சொந்த மண்ணில் இனசனங்களின் கள்ளங்கபடமற்ற முகத்தில் முழித்து புழுதி தோயத் தோய மண் ஒழுங்கையில் நடப்பதில் உள்ள சுகம் எங்களைக் குளிப்பாட்டி வைத்திருந்த நாட்டில் கிடைக்கவில்லை .ஏனெனில் அங்கு எமது இருப்பு எப்பொழுதுமே இலைமேல் தண்ணி போல் இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் இருவரும் பலவிடயங்களைக் கதைத்தவாறே எமது வீட்டுப் படலையை நெருங்கி விட்டிருந்தோம். எம்மைக்கண்ட சந்தோசத்தில் வீட்டு நாயும் பூனையும் எங்கள் கால்களில் தங்கள் வால்களால் வருடின. எங்களைக் காணாததால் பூக்கண்டுகள் எல்லாமே தண்ணீர் இல்லாது வாடிப்போய் இருந்தன. நான் தண்ணீர் விடுவதற்கு தொட்டியில் மோட்டாரால் தண்ணியை நிரப்பினேன். தொட்டியில் நிரம்பிய நீர் வாய்க்கால் வழியாக ஓடி வாழைப் பாத்திகளுக்கு சென்றது. வாய்க்காலில் வரிசைகட்டி ஊர்ந்து சென்று கொண்டிருந்த கட்டெறும்புகளும் சிவப்பு எறும்புகளும் தண்ணீரைக்கண்டவுடன் வாய்க்காலின் மேல்ப்பக்கதுக்கு ஓடின .சில தங்களைக் குழப்பிய கோபத்தில் எனது காலைக் கடித்தன. அந்த இடைப்பட்ட நேரத்தில் விளக்கு மாற்றால் முற்றத்தை கூட்டினேன். இரண்டுநாட்களாக கூட்டாததால் கணிசமான குப்பைகள் சேர்ந்திருந்தன. குப்பையுடன் புழுதியும் சேர்ந்து கிளம்பி என் மூக்கை அடைத்தது. நான் தொட்டியில் நிரம்பிய தண்ணியை வாளியால் நிரப்பி பூக்கண்டுகளுக்கு தண்ணீரை விடத் தொடங்கினேன். காய்ந்து கிடந்த மண் தீராத்தாகத்துடன் தண்ணீரை உள்ளே இழுத்தது. நான் இலைகளிலும் படுமாறு தண்ணீரை ஊற்றியதால் இலைகளில் இருந்த புழுதிகள் எல்லாம் கரைந்தோடி பச்சைப்பசேலென்று பூக்கண்டுகள் புத்துயிர் பெற்றன. சூரிய வெளிச்சத்தில் அவை வர்ணஜாலம் காட்டின. நான் முற்றத்துக்கும் தண்ணீர் தெளித்து முடிய மனைவி தேநீர் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

களைத்த உடலுக்கு அந்த தேநீர் தேவையாகவே இருந்ததது. தேநீரில் இருந்து கிளம்பிய மெதுவான ஆவி என்னை மயக்க நிலைக்குக் கொண்டு சென்றது. ஒவ்வொரு முறையும் நான் தேநீர் குடிக்கும்பொழுதும் இந்தப் பரவசநிலையை அடைந்திருக்கின்றேன் .இதற்கு தேநீரில் இருந்து வரும் ஆவியா இல்லை தேநீரின் சுவையா என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை .தேநீரைக் குடித்தவாறே நீரில் குளித்த பூக்கண்டுகளை வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டு நின்றேன். மாமியின் தோசையும் இடிசம்பாலும் தொண்டைக்குள் வழுக்கியது. காலை உணவை முடித்தபின் சிகரட்டை கையில் எடுத்துக்கொண்டு வீட்டின் முன்னால் நின்ற பூவரச மரத்து நிழலில் நின்று கொண்டு யோ கர்ணனின் தொலைபேசி இலக்கத்தை எனது தொலைபேசியில் தடவினேன். இடிசம்பலின் உறைப்புக்கு சிகரட் நாக்கிற்கு இதமாகவே இருந்ததது.சிறிதுநேர இடைவெளியின் பின்பு லைனில் கர்ணனது குரல் கேட்டது .நாங்கள் அருகிலேயே இருப்பதால் பின்னேரமே சந்திப்போம் என்று எங்கள் சந்திப்பை உறுதி செய்தார் யோ கர்ணன். கர்ணனின் எழுத்துக்களில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். எழுத்தாளர்கள் என்றாலே ஒருவிதமான ஞானக்கிறுக்கு அவர்களிடம் காணப்படும். இணையத்தின் மூலம் அறிமுகமான யோ கர்ணனும் கருணாகரனும் எப்படி இருப்பார்களோ ? என்று எனக்குப் பதற்றமாக இருந்ததது . பருத்தித்துறை பஸ்நிலையத்தில் மாலையிலும் வெய்யில் சுட்டெரித்தது. யாழ்ப்பாணம் செல்லும் பஸ் செல்வதற்கு இன்னும் அரைமணிகள் இருந்தன. நான் இடம் பார்ப்பதற்கு வசதியாக முன்பக்கமாக இருந்துகொண்டேன். பஸ்நிலையத்தில் பலர் பலவிதமான மனநிலைகளில் இருந்தார்கள். தனியார் மினிபஸ்கள் மக்களை தங்களிடம் வருமாறு கூவிக்கொண்டிருந்தன. பயணிகள் சேர்ந்ததும் ஒருவாறு பஸ் யாழ்நகரை நோக்கிப் புறப்பட்டது .கொண்டக்ரர் என்னருகே வர காசு கைமாறியது .நான் நெல்லியடியில் இறங்க ரிக்கெற் எனது கைக்கு வந்தது. பஸ் மந்திகை சந்தியை கடந்து நெல்லியடியை அண்மித்துக் கொண்டிருந்ததது. பஸ் நெல்லியடி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பொழுது நான் பஸ்ஸில் இருந்து இறங்கிகொண்டேன் .முதன் முதல் ஒருவருடைய வீட்டுக்கு போகும் பொழுது ஏதாவது வாங்கிக்கொண்டுபோவது யாழ்ப்பாணத்தவரது பண்பாடு என்பதால் அருகில் இருந்த கடை ஒன்றில் மஞ்சி பிஸ்கெட் பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டேன். நான் யோ கர்ணனுக்கு போன் செய்துவிட்டு காத்திருக்கத் தொடங்கினேன். பருத்தித்துறை வீதியில் எதிரும் புதிருமாக வாகனங்கள் கார்பெட் வீதியில் வழுக்கின. நான் சிகரெட்டை பற்றியவாறே அவற்றை வேடிக்கை பார்த்தேன்.

விரைந்து செல்லும் வாகனங்களில் மனம் லயிக்க மறுத்து ஞாபக வீதிகளிலேயே ஓடவேண்டும் என்று அடம் பிடித்தது .இந்த பொலிஸ் நிலையமும் அதை சுற்றிய இடமும் எவ்வளவு பாடு பட்டிருக்கும் ? நாளும் பொழுதும் ரதங்களை சுவைத்து உண்டு கொழுத்த இடம் இந்த மத்திய மகாவித்தியாலயத்தில் தானே இயக்கம் புதிய பாதையை திறந்தது. கூட்டுப்படை முகாமை அழிக்க எத்தனை நாள் காத்திருப்புகள் ? கூட்டுத்தயாரிப்புகள். சக்கையை அடைந்து கொண்டு போனவனின் மனம் எதை நினைத்திருக்கும் ? இன்று எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு இந்த இடம் தன் முகத்தில் புதிய அரிதாரம் பூசிக்கொண்டிருப்பது எனக்கு வியப்பையும், அயர்ச்சியையும் தந்து கொண்டிருந்ததது. அதே நேரம் நீ மட்டும் சுகமாக இருந்து கொண்டு சனங்களை தொடர்ந்தும் அழ சொல்கின்றாயா ?என்று என் மனம் என்னுடன் கொழுத்தாடு பிடித்துக்கொண்டிருந்தது. என் ஞாபகவீதி ஓட்டத்தை என்னருகே மெதுவாக வந்து நின்ற ஸ்கூட்டி நிஜத்துக்கு கொண்டுவந்தது. ஸ்கூட்டியில் யோ கர்ணன் இருந்தார். பரஸ்பர விசாரிப்புகளின் பின் அவரின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். சுற்றிவர கிடுகு வேலியும், வீட்டின் முன்பு மாமரமும் வாழைகளும் என்று அவரின் வீடு குளிர்ச்சியாகவே. இருந்தது கர்ணனின் மெலிந்த நெடுநெடுவென்ற தோற்றம் எனக்கு எழுத்தாளர் சுஜாத்தாவையே நினைவுக்கு கொண்டு வந்தது. என்னை எதுவித வித்தியாசமும் பாராது என்னுடன் பழகிய அவரது குணவியல்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாங்கள் கதைதுக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எமது கதையை எனது கைத்தொலைபேசி குலைத்தது .அதில் என்னை தனது மாமி பார்க்க வந்திருப்பதாக மனைவி சொன்னா. யோ கர்ணன், நான் போகும்பொழுது தனது "கொலம்பஸின் வரைபடங்களும்"," சேகுவாரா இருந்த வீடும் " கையொப்பமிட்டு எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் .தனது நூல் வெளியீட்டு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார். அதில் தான் நிலாந்தனை அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். நான் மனம் நிறைந்த சந்தோசத்துடன் வீடு திரும்பினேன்.

பஸ் பருத்தித்துறையை அடைய இரவு ஏழுமணிக்கு மேலாகி விட்டது. வீட்டிற்கு வந்த மாமியை காக்க வைக்கின்றேனே என்ற அந்தரத்துடன் எனது நடையை மாரியம்மன் கோயில் ஒழுங்கையூடாக வேகப்படுத்தினேன் .அப்பத்தட்டிகளில் இருந்து அப்பம் சுடும் வாசம் மூக்கை துளைத்தது. வந்த வாசத்தால் எனது கால்கள் வேகத்தைக் குறைத்தாலும் மனதைக்கட்டுப்படுத்தி வேகத்தை அதிகரித்தேன். ஆவோலைபிள்ளையார் கோவலடியை நான் நெருங்கும் பொழுது, நிறங்களுக்கிடையான வேறுபாட்டால் கருமை படர்ந்திருந்ததது. நட்சதிரங்களின் ஒளியில் ஒழுங்கை ஓரளவு தெரிந்தது .நான் வீட்டை அடையும் பொழுது மாமி எனக்காக எள்ளுப்பாகுவுடன் காத்திருந்தா. நான் அவாவுடன் நாலு வார்த்தைகள் கதைத்து விட்டு குளிக்கப் போனேன். நடந்து வந்ததால் எனது உடுப்புகள் யாவுமே வியர்வையால் தொப்பலாகி இருந்தன. வெக்கையால் சூடாகி இருந்த உடம்புக்கு குளிர்ச்சியான கிணற்று நீர் இதமாகவே இருந்தது. அதுவும் கப்பியால் அள்ளி அள்ளிக்குளிக்கும் போதுவந்த சுகம், எனக்குப் புலத்தில் ஷவரில் குளிக்கும் பொழுது கிடைக்கவில்லை .ஒருவேளை இந்த குறுக்குமறுக்காகப் பாயும் இந்த குரங்கு மனம்தான் காரணமோ என்று என்று என்மனம் ஐயப்பட்டு என்னைப் பார்த்தது. நான் குளித்து முடிந்து வரும் பொழுது மாமி வீட்டில் இருக்கவில்லை. நாங்கள் போகமுன்பு தான் மீண்டும் வருவதாக சொல்லிச் சென்றதாக மனைவி சொன்னா. 
மாதுளம் பழத்துடன் அவித்த மரவள்ளிக்கிழங்கும் சம்பலும் இரவுச்சாப்பாடாக இருந்தன. எனக்குப் பக்கத்தில் இருந்து மாமி மாதுளம் பழத்தை உடைத்துத் தந்து கொண்டிருந்தா. எனக்கு அவா அப்படிச் செய்தது பெரிய அந்தரமாக இருந்தது. புலத்தில் எனது கைகளால் எல்லாம் செய்து பழக்கப்பட்ட எனக்கு,மாமியின் உபசரிப்பு ஒருவித அந்தரத்தை ஏற்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. நான் ஏதாவது சொன்னால் "சும்மா இருங்கோ" என்று எனது வாயை அடைத்து விடுவா என்பதால் நான் பேசாது சாப்பாட்டை தொடர்ந்தேன். பக்கத்தில் நாய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. மாமி மாலுக்குச் சென்றநேரம் பார்த்து ஒரு அவித்த மரவள்ளிக்கிழங்கை நாய்க்குத் தள்ளி விட்டேன். அது எனது காலடியில் இருந்து எனது காலையும் நக்கி மரவள்ளிக்கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதன் வழுவழுப்பான நாக்கு எனக்கு கூச்சத்தையே ஏற்படுத்தியது .சாப்பாடு முடிந்ததும் மரவள்ளிக்கிழங்கு எனக்கு மொய்ப்பைத் தந்ததால் அன்றைய இரவு நித்திரை இலகுவில் வசப்பட்டது.

அடுத்தநாள் காலமை வழமை போலவே மந்திகைச்சந்திக்கு போய் பால் வாங்கி விட்டு உதயன் பத்திரிகையும், சிகரட் பெட்டியுடனும் வியர்த்து விறுவிறுக்க நடந்து வந்து கொண்டிருந்தேன். வரும் பொழுது "இன்று வல்வெட்டித்துறைக்குப் போனால் என்ன" என்று எனது மனம் பவ்வியமாக ஒரு கோரிக்கையை வைத்தது .அதன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே முதலாம் கட்டை சந்தியில் வேகமாக திரும்பினேன். தம்பசிட்டி இந்து மகளிர் கல்லூரி,மகளிர் அணிவகுப்பால் திணறியது. நான் எல்லோரையும் விடுப்பு பார்த்தவாறே வீடு வந்து சேர்ந்தேன். உதயன் பேப்பரை கோப்பியுடன் மேய்ந்து விட்டு பரபரவென்று நான் காலையில் செய்யவேண்டியதை செய்துகொண்டிருந்தேன். எனது கைபட்டு பூக்கண்டுகழும் முத்தமும் புத்துணர்ச்சி பெற்றன.நான் தெளித்த நீரால் புழுதி வாசம் மூக்கை அடைத்தது. காலை உணவை உண்டு விட்டு காலை ஒன்பது மணிபோல பண்டாரி அம்மன்கோயிலடியால் நடந்து வந்து தம்பசிட்டி பள்ளிக்கூடத்துக்கு முன்னால் உள்ள பஸ் நிலையத்தில் 751 க்காக காத்திருக்கத் தொடங்கினேன்.

தொடரும்


கோமகன் 
28 ஆவணி 2014 

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.