அவர்கள் அப்படிதான் - சிறுகதை - கோமகன்.
1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி. அவனைப் பார்த்துப் புன்னகை ஒன்றை தவழ விட்டபடியே தேநீரை எடுத்துக்கொண்டான் இளம்பிறையன்.

வெளிநாடு சென்றிருந்த ஒரு குடும்பத்தின் இரட்டை மாடி வீடு ஒன்று அவர்களின் முகாமாக மாறியிருந்தது.அந்த இரட்டை மாடி வீடு விஸ்தாரமாக பல அறைகளுடன் இவர்களுக்கு வசதியாகவே இருந்தது. முகாமின் நுழைவாயிலிலும் பின்பக்கமாகவும் மண் மூட்டைகள் அடுக்கி சென்றிப் பொயின்ருகள் இருந்தன. அந்த சென்றியில் ஆள்மாறி ஆள் இருபத்திநாலு மணிநேரமும் காவலுக்கு இருப்பார்கள். அந்தமுகாம் விசாரணைகள் நடைபெறும் முகாமாக இருந்தது. முகாமின் உள்ளே இருந்த அறைகளில் முக்கால்வாசிப் பகுதி சிறைகளாக மாறியிருந்தன.தேநீரைப் பருகியபடியே தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்த இளம்பிறையனின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றன. அந்த அறிக்கையைப் படிக்கும் பொழுது கோபத்தால் இளம்பிறையனது உடலில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அருகே இருந்த முகாம் பொறுப்பாளர் சிவாவைப் பார்த்து அந்தப்பெரியவரை அழைத்துவருமாறு சொன்னான் இளம்பிறையன். சிவா தயங்கியவாறே நின்றதைப் பார்த்த இளம்பிறையன் “என்ன” என்பது போல சிவாவைப் பார்த்தான் . “இல்லை அண்ணை இந்த கேசை நாங்கள் பாப்பம் தானே? நீங்கள் வந்திருக்கிறியள்….. என்று இழுத்தான் சிவா. “ஆளை கூட்டிக் கொண்டுவா சொன்னதை செய்” என்றான் இளம்பிறையன். பிராந்தியப்பொறுப்பாளரின் சொல்லைத் தட்ட முடியாதவாறு அந்தப் பெரியவரை அழைத்துவரச் சென்றான் அவன் . அந்தப் பெரியவர் ஏற்கனவே தனது எறிசொறிக் கதைகளால் முகாமுக்கு அழைத்து வரப்படும் பொழுதே பெடியள் நன்றாக அடித்தே இழுத்து வந்திருந்தார்கள் . சிவா அவரை கைதாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து இளம்பிறையனுக்கு முன்னால் குந்தி இருக்கப் பண்ணினான் .

தினசரிக் குறிப்பேட்டில் இருந்து தனது பார்வையை எடுக்காது “ஐயா உங்கடை பேர் என்ன ?” என்று அவரைப்பார்த்துக் கேட்டான் இளம்பிறையன். ” என்ரை பேர் ஊரிலையே தெரியும் .உங்களுக்கு தெரியாட்டில் ஊருக்கை போய் கேக்கலாம்”என்று எகத்தாளமாகப் பதில் வந்தது அவரிடமிருந்து. “ஐயா இது விசாரணை . நான் கேக்கிற கேள்வியளுக்கு மறுமொழி தரவேணும் “என்றவாறே அவரைப் பார்த்தான் இளம்பிறையன். அவனது இதயம் அதிரத்தொடங்கியது யாரை தனது வாழ்நாளில் சந்திக்கக்கூடாது என்று இருந்தானோ அவரே தன்முன்னால் விசாரணைகைதியாக நிற்கின்றார். தனது மாற்றங்களை முகத்தில் காட்டாது “சொல்லுங்கோ உங்கடை பேர் என்ன? “என்றான் இளம்பிறையன் . ” அட்வகேற் பேரம்பலம் ” .”உங்களைப்பற்றி ஒரு ரிப்போர்ட் வந்திருக்கு. அதை விசாரிக்கத்தான் உங்களை கூப்பிட்டனாங்கள்” என்றான் இளம்பிறையன். ” செத்த சவத்துக்கு சங்கு ஊதிறனிங்கள் எப்பதொடக்கம் கோடு நடத்த வெளிக்கிட்டியள் ?”என்று நக்கலாக கேட்ட அட்வகேற் பேரம்பலத்தை இருந்த நிலையிலேயே எட்டி உதைத்தான் இளம்பிறையன். அலங்க மலங்க விழுந்த அவரை சிவா தனது பங்கிற்கு போட்டு அடித்தான் . அட்வகேற் பேரம்பலத்துக்கு மூக்கும் பல்லும் உடைந்து இரத்தம் பெருகியது .சாதியை பற்றி கதைத்தால் வெட்டிப்பொழி போட்டுவிடுவேன் என்று இளம்பிறையன் அடித்தான் . இருவரும் அடித்த அடியால் பேரம்பலம் நிலைமையை சுமூகமாக்க இறங்கி வந்தார் . “இப்ப நான் கேக்கிற கேள்வியளுக்கு மறுமொழி சொல்லும் அட்வகேற் பேரம்பலம் ” என்று கடுமையாகச் சொன்னான் இளம்பிறையன் .அவன் முகத்தில் கோபத்தின் ரேகைகள் ஓடின . குடிக்கத் தண்ணி கேட்ட பேரம்பலத்துக்கு சிவா தண்ணி கொண்டு வந்து தந்தான். தண்ணீரை மடக் மடக்கென்று குடித்த அட்வகேற் பேரம்பலம் “நான் என்ன சொல்லவேணும் எண்டு என்னை இங்கை கூட்டி வந்தியள்?” என்று இளம்பிறையனைப் பார்த்துக் கேட்டார் . ” நீங்கள் ஒரு பெட்டையை கீப்பாய் வச்சிருந்து ஒரு பிள்ளையும் அவான்ரை வயித்திலை வளரருது . அவா கலியாணம் செய்யச் சொல்லி கேட்டால் நீங்கள் முடியாது எண்டு சொல்லுறியளாம். இதுக்கு என்ன சொல்லுறியள் அட்வகேற் பேரம்பலம் ?” என்று குறிப்பேடை பார்த்தவாறே கேள்விகளை அடுக்கினான் இளம்பிறையன் .

“தம்பி இதெல்லாம் ஒரு பிரச்னை எண்டு கூட்டிவந்தியளோ ? சொந்த செலவிலை சூனியம் வைக்கிறியள் .நான் ஊரிலை ஒரு முக்கியமான ஆள் . இந்த விசயங்கள் ஊர் உலகத்திலை நடக்காததே ? ” என்று தொடர்ந்த அட்வகேற் பேரம்பலத்தை இடைவெட்டினான் இளம்பிறையன்,” ஏன் அந்த பெட்டையை கலியாணம் செய்ய மாட்டன் எண்டு சொல்லுறியள் ?” தம்பி உங்களுக்கு தெரியும் தானே நான் நல்ல சாதிசனத்திலை இருந்து வந்தனான் . அந்த பிள்ளை வீட்டை நாங்கள் சபை சந்தியிலை அடுக்கிறேலை.எப்பிடி இந்த கலியாணம் நடக்கும் ? இதுகளை நீங்கள் கணக்கிலை எடுக்காதையுங்கோ ” என்று அவர் நீட்டிக்கொண்டிருக்க , அவரின் பக்கமாக நின்றிருந்த சிவா ஆவேசமாகி “உங்கடை வயசுக்கு உங்களுக்கு சின்ன வயசிலை பெட்டையள் கேக்குதோ ?”என்றாவாறே பேரம்பலத்தாரின் நெற்றியில் தனது பிஸ்டலை வைத்து அழுத்தினான் . சிவாவின் செய்கையினால் மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பேரம்பலம் “தம்பியவை இடம் தெரியாமல் விளையாடுறியள். என்ரை பவர் உங்களுக்கு தெரியாது .எனக்கு எல்லா இடத்திலையும் ஆக்கள் இருக்கு”. என்று கத்திய பேரம்பலத்தை சிவா அடித்து நொருக்கத் தொடங்கினான் .இருவரையும் விலத்திய இளம்பிறையன் விசாரணையை மறுநாள் ஒத்தி வைத்து விட்டு உரும்பிராய்க்குத் திரும்பினான் .அவனது மனதை அட்வகேற் பேரம்பலம் ஆழமாகவே கீறியிருந்தார். அவனது நினைவுகள் ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னே சென்றன.

0000000000000000000000000000000000

இருபாலையில் வைத்தியர் வையாபுரி குடும்பம் மிகவும் பிரபலமானது. அந்தக்காலத்திலேயே மாடிவீட்டில் வாழ்ந்தவர்கள் வையாபுரி குடும்பத்தார் .ஊரில் வையாபுரி வைத்தியராக இருந்ததும், உயர்குடி பரம்பையில் வந்ததினாலும், பல சொத்துப்பத்துக்களுக்கு அதிபதியானதாலும் வையாபுரி வைத்தியரை ஊரில் உள்ள அனைத்து நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முதல் ஆளாக அந்த ஊர் மக்கள் அழைப்பார்கள். வையாபுரி தனது சொந்த ஊரிலேயே சிவகாமி என்ற பெண்ணை அதே உயர்குடியில் கொழுத்த சீதனத்துடன் கலியாணம் செய்திருந்தார் ?அவர்களுக்கு ஒன்றே ஒன்று கண்ணே கண்ணாக ஒரு மகன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்கு தில்லையம்பலத்தானின் நினைவாக பேரம்பலம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் வைத்தியர் வையாபுரி தம்பதிகள். தங்கள் மகன் விடும் தவறுகள் கூட வையாபுரி தம்பதியினருக்கு குறும்பாகத் தெரிந்தன. அவர்களும்தான் என்ன செய்வார்கள் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த கறிவேப்பிலைக் கொத்தல்லவா பேரம்பலம் ? சிறுவயதிலேயே சரளமாகப் பொய் பேசுவதும் அவனது குடும்பப் பின்னணியும் அவனை எதிலும் அதிகாரம் செய்யும் மனோபாவத்திலேயே வளர்த்து விட்டிருந்தன. வயது ஏற ஏற இவைகள் எல்லாம் அவனிடம் கூடியதே அல்லாமல் குறைந்ததாக இல்லை. அவனைப் படிப்பித்த ஆசிரியர்கள் கூட வைத்தியர் வையாபுரியின் செல்வாக்குக்குப் பயந்து அவனை மாற்ற முன்வரவில்லை .

கால ஓட்டம் தன்பங்கிற்கு அதன் கடமையைச் செய்ய சிவகாமி நோய் வாய்ப்படத் தொடங்கினாள். எல்லோரது நோய்களையும் பிணிகளையும் தனது சூரணத்தால் தீர்த்து வைத்த வைத்தியர் வையாபுரிக்கு தனது மனைவி சிவகாமியின் நோய்க்கு தீர்வுகாண முடியவில்லை. இந்த நேரத்தில்தான் சிவகாமிக்கு தனக்கு எடுபிடியாக ஒரு வேலைகாரப் பெட்டை தேவை என்ற யோசனை அவளது மூளையில் உதித்தது . தனது கணவரை இது சம்பந்தமாக நச்சரிக்கத் தொடங்கினாள் சிவகாமி. சிவகாமியின் கண்ணீரில் கரைந்த வையாபுரி நுவரெலியாவில் கடை வைத்திருக்கும் தனது மச்சான் கனகரத்தினத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு ஒரு நல்ல வேலைக்காரி எடுத்துதரும்படி சொல்லியிருந்தார். கனகரத்தினமும் ஓரிரு கிழமைக்குள் மச்சான் சொல்லியபடி மிகவும் எழ்மைப்பட்ட, பதினைந்தே வயது நிரம்பிய செல்லம்மாவை அவளது தாய் தகப்பனுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். செல்லம்மாவும் ஒருவித பயத்தினுடனேயே தாய் தகப்பனுடன் யாழ்ப்பாணத்திற்குப் பயணமானாள். அவளிற்கு இந்த டீலில் உடன்பாடு இல்லையென்றாலும் அவளது வீட்டில் மாதத்தில் முக்கால் வாசி நாளும் அமைந்த பட்டினி நிலையும், அவளது தாயின் நோயாளி நிலைமையும் அவளை அரைமனதுடன் சம்மதிக்க வைத்தன .

கையில் ஒரு பையுடன் வந்து இறங்கிய அவர்களை வீட்டு முற்றத்திலேயே வைத்து வையாபுரி உபசரித்தார். செல்லாம்மாவின் தாய் தகப்பனை தனது வீட்டின் உள்ளே அழைத்து உபசரிக்க அவரது சாதி இடம் கொடுக்கவில்லை. செல்லம்மா பயத்துடன் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டாள். வையாபுரி செல்லம்மாவின் தகப்பன் முனியாண்டிக்கு, தான் செல்லம்மாவுக்கு உடுப்பு சாப்பாட்டுடன் மாசம் நூறு ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாகச் சொன்னார். சிவகாமி பக்கத்திலே இருந்த கடையிலே நெக்ரோ சோடா வாங்கி வந்து இவர்களுக்கு கொடுத்தாள். அவர்கள் அதைப் பயபக்தியுடன் வாங்கி நிலத்தில் குந்தி இருந்து குடித்தார்கள். அவர்கள் போகும் பொழுது முனியாண்டிக்கு ஒரு போத்தல் கள்ளும் வாங்கி கொடுத்தார் வையாபுரி. முனியாண்டி முதலாளியின் செய்கையால் உச்சி குளிர்ந்து போனான். தங்கள் மகள் ஒரு நல்ல இடத்தில் தான் வேலைக்கு வந்திருகின்றாள் என்ற மனத் திருப்தியுடன் அவர்கள் நுவரெலியா திரும்பினார்கள். மொத்தத்தில் செல்லம்மாவால் தமது குடும்பம் உயரப்போவதாக இப்பொழுதே கற்பனை பண்ணத் தொடங்கினான் அந்த அப்பாவி முனியாண்டி.

முனியாண்டி குடும்ப வறுமைகாரணமாக செல்லம்மாவை எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டிருந்தான். இயல்பாகவே புத்திக்கூர்மையும் சூடிகையுமான செல்லம்மா தனது படிப்பு நின்று போனதையிட்டு ஆரம்பத்தில் கவலைப்படவே செய்தாள். ஆனால் அவளது குடும்ப வறுமை வாழ்வின் அடுத்த படியை தேடு தேடு என்று அவளைத் தள்ளிக்கொண்டிருந்தது. இந்த தேடலினால் தான் தொடர்ந்து படிக்க முடியவில்லையே என்ற கவலையுணர்வு அவளிடம் இருந்து மெதுமெதுவாக விடைபெற்றது. ஒருபக்கம் மூடினால் மறுபக்கம் திறக்கும் என்பதற்கமைய கடவுள் செல்லம்மாவுக்கு சிறுவயதில் ஏழ்மையைக் கொடுத்தாலும் செல்லம்மாவின் அழகு விடையத்தில் கடவுள் பெரும் பணக்காரத்தனத்தையே காட்டியிருந்தார். நெடுநெடுவென்ற உயரமும், அகன்ற பெரிய விழிகளும், வெண்மையும் கறுப்பும் இல்லாத கோதுமை நிறமும், அகன்ற மார்பில் அளவான திரட்சிகளும், சிறுத்த இடையும், அளவான பின்புறமும் என்று செல்லம்மா பார்ப்போரை கிறுங்கடிக்கும் வகையிலேயே இருந்தாள்.

காலம் தனது ஓட்டத்தில் ஒரே சீராகச் சென்றாலும் விதி என்ற பாம்பு வளைந்து நெளிந்து சென்று காலத்தின் போக்கையே மாற்றி அமைத்துவிடும் . செல்லம்மாவின் வாழ்விலும் அதுவே நடக்க ஆரம்பித்திருந்தது .பாம்பு தன் இரையை மெது மெதுவாக விழுங்குவது போல சிவகாமி செல்லம்மாவை தனது பிடியினுள் கொண்டுவந்தாள். ஆரம்பத்தில் சிவகாமிக்கு எடுபிடியாக மட்டுமே இருந்த செல்லம்மாவிற்கு இப்பொழுது வீட்டின் சகல வேலைகளும் அவளது தலையிலேயே விழுந்தது.வைத்தியர் வையாபுரி வீட்டில் செல்லம்மா காலையில் எழுந்தால் அவள் படுக்கப்போகும் வரை வேலைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். செல்லம்மா எவ்வளவு வேலைசெய்தாலும் நொட்டைகள் சொல்வதே சிவகாமியின் பிரதான பொழுதுபோக்காக இருந்ததது. ஆரம்பத்தில் சிவகாமியின் நொட்டைகளால் மனமுடைந்த செல்லம்மாவிற்கு காலப்போக்கினால் அதுவே பழக்காமாகிவிட்டது .ஆனாலும் அவளால் சிவகாமியின் “தோட்டக்காட்டாள்” என்ற ஒரேயொரு வார்த்தைப்பிரையோகத்தை மட்டும் தாங்கவே முடியாதிருந்தது.அவளின் மனதைக்காயப்படுத்தத் தொடங்கிய சிவகாமி இப்பொழுது செல்லம்மா வேலைமிகுதியால் விடும் சிறு தவறுகளைக் கூடப் பெரிதாக்கி அவளை உடலாலும் காயப்படுத்தத் தொடங்கினாள். பூரணை நிலவில் ஏற்படும் சிறு கருந்திட்டுக்கள் போல செல்லம்மாவின் அழகிய உடலில் இப்பொழுது சிறு சிறு எரிகாயங்கள் ஏற்படத்தொடங்கின. அந்த அப்பாவி செல்லம்மாவினால் ஒரு மூலையில் இருந்து அழ மட்டுமே முடிந்தது. அப்பொழுது அவளிற்கு ஆதரவாக வையாபுரி வீட்டிற்கு சாமானுகள் வாங்கி வரும் தாழ்த்தப்பட்ட சமூக்கத்தைச் சேர்ந்த ராசாத்தி மட்டுமே இருந்தாள் .

செல்லமாவை இறுக்கிய விதி என்ற பாம்பு பேரம்பலம் வடிவில் மேலும் படமெடுத்தாடியது. அவளின் வரவால் பேரம்பலத்தின் போக்கிலும் மாற்ரங்கள் ஏற்படத்தொடங்கின. செல்லமாவின் பேரழகு பேரம்பலத்தை கிறுங்கடித்தது. அவளை வசப்படுத்துவதற்காகவே அவன் தன்னில் அதிக கவனம் எடுத்துக்கொண்டான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல, இந்த விடயத்தில் கல்லாக இருந்த செல்லம்மாவின் மனது பேரம்பலம்பால் மெதுமெதுவாகக் கரையத்தொடங்கியது. சாட்சிகள் இல்லாமலே காதல் என்ற மொட்டு அங்கே மொட்டவிழ்க்கத் தொடங்கியது. அவளின் பக்கம் காதலும், அவனின் பக்கம் காமமும் போட்டிபோட்டுக்கொண்டு முட்டி மோதின . இறுதியில் காமமே வெற்றிவாகை சூடியது. ஒருநாள் மாலைப் பொழுதில் வையாபுரியும் சிவகாமியும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பேரம்பலத்தின் ஆசைவார்தைகளில் மயங்கிய செல்லம்மா அவனுள் கரைந்தாள். “எந்த எதிர்ப்பு வந்தாலும் அவளையே தான் கலியாணம் செய்வேன்” என்ற பேரம்பலத்தின் வார்த்தை நன்றாகவே அவளில் வேலை செய்தது. இதைச் சொல்லிச் சொல்லியே செல்லம்மாவை பலமுறை பேரம்பலம் அனுபவித்தான்.

சாட்சிகள் இல்லாத காதல் இப்பொழுது சாட்சியுடன் செல்லம்மாவின் வயிற்றில் வளர ஆரம்பித்தது. அரைகுறைப்படிப்பறிவு செல்லம்மாவை இந்த விடயத்தில் விழிக்கச் செய்யவில்லை. இதேவேளை பேரம்பலம் தனது மேற்படிப்புக்காக கொழும்பு சட்டக்கல்லூரிக்குச் சென்று விட்டான். ஒருநாள் மாலை வாந்தி எடுத்துக்கொண்டிருந்த செலம்மாவை சிவகாமி வீட்டின் முன்னால் இருந்த றோட்டில் வைத்து அடித்துக்கொண்டிருந்தாள் .வருவோர் போவோர் எல்லோரும் இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் அடிபெருத்த வயிறு அவள் கர்ப்பமாக இருப்பதை அவர்களுக்கு சாட்சியமாக சொல்லாமல் சொல்லியது. வேடிக்கை பார்த்த பெண்களில் சிலர் கேட்ட கேள்விகளுக்கும் செல்லம்மா யார் தனக்குப் பிள்ளை கொடுத்தது என்று சொல்லாமல் தன்னை அடிக்கவேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு அழுது கொண்டு நின்றாள். ஒரு வடக்கத்தையாள் தங்களுக்கு உண்மை சொல்ல மறுக்கின்றாளே என்ற ஆவேசம் எல்லோரையும் பிடித்து ஆட்ட சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பெண்கள் ,செல்லம்மா ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவளை அடித்து துவைத்தனர் .அங்கு அவள் பெண் என்பதனை விட “தோட்டக்காட்டாள் ” என்ற அடையாளமே மேலோங்கியிருந்தது. எல்லோரும் அடித்த அடியில் காயம் ஏற்பட்டு றோட்டில் விழுந்து கிடந்து அழுத செல்லம்மாவை வையாபுரியே எல்லோரையும் பேசி மீட்டெடுதார். தங்கள் குடும்ப மானமே கப்பலேறிவிட்டதாக சிவகாமி சாமி ஆடினாள். செல்லம்மாவின் காயங்களுக்கு மருந்து போட்ட வைத்தியர் வையாபுரி இதனை பொலிஸ் கேசாக்க விரும்பாமல் முனியாண்டிக்குத் தகவல் கொடுத்து அனுப்பினார்.

என்னவோ ஏதோவென்று பதறித்துடித்து வந்த முனியாண்டியும் அவன் மனைவியும் செல்லம்மாவின் நிலை கண்டு பதறித் துடித்தனர். வைத்தியர் வையாபுரி எல்லாவற்றையும் விளக்கமாக முனியாண்டிக்கு விளக்கினார். தங்கள் மானத்தை கப்பலேற்றிய செல்லம்மாவை தாங்கள் தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது என்று திட்டவட்டமாக வைத்தியர் வையாபுரி சொல்லி விட்டார். ஆனால் முனியாண்டியோ பிடிவாதமாக செல்லம்மாவுக்காக நியாயம் கேட்டான். தங்களிடம் குடிமை செய்யும் ராசாத்தியிடம் செல்லாம்மாவைக் கொடுத்து பிள்ளை பிறக்குமட்டும் வேறு இடத்தில் வைத்துப் பராமரிப்பதற்கு தான் ஒழுங்கு செய்வதாகவும், முனியாண்டிக்கு இதைப் பெரிது படுத்தாமல் விட ஒருதொகை தருவதாகவும் வையாபுரி ஓர் அருமையான யோசனையை முனியாண்டிக்கு சொன்னார். வறுமையின் கோரப்பிடி முனியாண்டியை இந்த யோசனைக்கு சம்மதிக்க வைத்தது. வையாபுரி விடயம் சுலபமாக முடிந்ததில் கௌரவம் பாராது கோழியடித்து முனியாண்டிக்கு விருந்து வைத்தார். குற்றங்கள் என்று வரும்பொழுது சாதிகளும் கௌரவங்களும் இருந்த இடம் தெரியாமல் இந்த மனிதர்களில் ஏனோ ஓடிஒழித்து விடுகின்றன. விடுமுறையில் வந்த பேரம்பலத்துக்கு சிவகாமி எல்லா விடையத்தையும் கூற அந்தக் கள்ளப் பூனை எதுவுமே தெரியாது போல ஆர்வமாக தன் தாயின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தது .விதி செல்லம்மாவை பள்ள ராசாத்தியிடம் கொண்டு போய் சேர்த்தது. ராசாத்தி ஊர்வாயை மூட செல்லம்மாவுடன் அருகில் இருக்கும் உரும்பிராய் கிராமத்துக்கு தனது தமக்கையுடன் இருப்பதற்கு குடிபெயர்ந்தாள் யாருடமே சொல்லாமல் மறைத்த ரகசியத்தைச் செல்லம்மா ராசாத்தியிடம் சொல்லிக் கதறி அழுதாள். ராசாத்தி அதிர்ச்சியில் உறைந்தாலும் செல்லம்மாவை அன்புடன் அரவணைத்து ஆறுதல் சொல்லி அவளை தேற்றுவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தாள். மாதங்கள் ஓட செல்லம்மா ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்ரெடுத்துவிட்டு கண்ணை மூடிவிட்டாள். பிள்ளைகள் இல்லாத ராசாத்தி அந்தக்குழந்தையை தனது பிள்ளை போலவே வளர்த்தாள். அந்தப் பிள்ளைக்கு ராசய்யா என்று பெயர் வைத்து மகிழ்ந்தாள் ராசாத்தி.

ராசய்யா வளர்ந்து விபரம் அறியும் வயதில் அவனை எல்லோரும் ” சேமக்கலம் ராசய்யா” என்றே கேலி செய்தனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்தான். அன்று இருந்த அரசியல் சூழ்நிலையில் இதிலிருந்து அவன் விடுபட இயக்கத்தில் சேர்ந்தான். இயக்கம் அவனது பெயரை இளம்பிறையன் என்று வைத்துக்கொண்டது. இளம்பிறையனது விவேகமும் அயராத உழைப்பையும் கண்டு இயக்கம் அவனை அயல்நாட்டுக்கு ஆயுதப்பயிற்சிக்கு அனுப்பியது .அங்கு அவன் ஆயுதப்பயிற்சியில் குறிபார்த்துச் சுடுவதிலும் கனரக ஆயுதங்களை இயக்குவதிலும் சிறந்த போராளியாகி தாயகம் திரும்பினான் .தாயகம் திரும்பிய கையுடனேயே இளம்பிறையனுக்கு பிராந்தியப்பொறுப்பாளர் பதவி காத்திருந்தது. இளம்பிறையன் புதிய உற்சாகத்துடன் தனது தாயைப் பார்க்கப் புறப்பட்டான். அங்கு அவன் தனது தாயை மரணப்படுக்கையிலேயே சந்தித்தான். அப்பொழுதான் ராசாத்தி அவனது பிறப்பின் ரகசியத்தை கூறி தனது மனபாரத்தை இறக்கி விட்டு கண்ணை மூடினாள். அவனுக்கு உலகமே இருண்டது .தான் உயர் குடியில் பிறந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தன்னை தாழ்ந்த சாதியில் வளர்த்ததும் இதற்கு காரணமான பேரம்பலத்தை ஊரறிய தனது மகன் என்று சொல்ல வைக்கவேண்டும் என்று மனதில் கறுவிக்கொண்டான்.

00000000000000000000000000000000

இளம்பிறையனது மனம் நடந்த விசாரணைகளினாலும், அட்வகேற் பேரம்பலம் திருந்துவற்கு எதுவித அறிகுறியும் அவரிடம் இல்லாது இருந்ததும் அவனுள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பின .தனக்கு நடந்தது போல் இனி யாருக்குமே நடக்ககூடாது என்றே அவன் முடிவு கட்டினான். அட்வகேற் பேரம்பலத்துக்கு விசாரணையில் தான் வழங்கபோகும் சாதாரண தண்டனை அவரை எந்தவிதத்திலும் மாற்றாது என்றே அவன் நம்பினான் .அவனது முளையில் அப்பொழுதான் அந்தத் திட்டம் மெதுமெதுவாக கருக்கட்டதொடங்கியது. இளம்பிறையன் மிகுந்த நின்மதியுடன் உறக்கதிற்க்குச் சென்றான்.மறுநாள் காலையில் முகாம் பொறுப்பாளர் சிவாவிடம் தனது திட்டத்தை வோக்கி ரோக்கியில் கூறிவிட்டு அன்றைய இரவுக்காகக் காத்திருந்தான். இளம்பிறையனது ஹையேர்ஸ் வான் இரவு பதினொரு மணியளவில் சிவாவின் பொறுப்பில் இருந்த அந்த முகாமில் நுழைந்தது. அங்கிருந்த அட்வகேற் பேரம்பலத்தை ஏற்றிக்கொண்டு பருத்தித்துறை வீதியில் பறந்தது இளம்பிறையனது ஹையேர்ஸ் வான் .

கோப்பாய் சந்தியில் திரும்பி கைதடிப்பக்கமாக திரும்பிய அந்த ஹையேர்ஸ் வான் இருளைக் கிழித்து ஓடி பாலத்துக்கு கிட்டவாக தன்னை நிறுத்திக்கொண்டது. வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாதவாறு அந்த ஹையேர்ஸ் வானின் ஜன்னல்கள் கறுப்பு கண்ணாடிகளாக மாற்றப்பட்டிருந்தன .வானை ஒட்டிய சிவா தனது இடத்தை விட்டு இறங்கி மறுபக்கமாக வந்து இளம்பிறையனுக்காக கதவைத் திறந்து விட்டான். இவருடைய இடுப்பிலும் மக்னம் பிஸ்டல் செருகப்பட்டிருந்தது. மேலே வானத்தில் பூரணை நிலவினூடே சிறுசிறு திட்டுக்களாக முகில்கள் ஓட்டம் காட்டின. கைதடிப்பாலதினூடாக வந்த உப்புக்காற்றும், பாலத்தின் கீழே இருந்த வற்றிக்கொண்டிருந்த உப்பு நீரின் வண்டல் சேற்று மணமும் அவர்களின் மூக்கை துளைத்தது. அந்த நேரத்தில் யாரும் வரப் பயப்பிடும் கைதடிப்பாலத்தடி அசாதாரண அமைதியாகவே இருந்தது. அருகே இருந்த சுடலையில் ஓர் உடலம் எரிந்து கொண்டிருந்தது . சிவா பின்புறமாக வந்து அட்வகேற் பேரம்பலத்தை இறக்கினான். அவரை அப்படியே நெம்பிதள்ளிய அவன் அவரை அருகில் இருந்த லைட் போஸ்டில் தான் கொண்டு வந்திருந்த கயிற்றால் இறுக்கமாக கட்டினான் .” எதிரிக்கு காட்டிக்கொடுத்திற்கும் பல பெண்களை பாழ்படுத்திய இந்த சமூகக்கிரிமிக்கு நாங்கள் வழங்கிய பரிசு” என்று தாங்கள் ஏற்கனவே எழுதிய மட்டையை அவரின் கழுத்தில் மாட்டினான். அட்வகேற் பேரம்பலத்தின் முகத்தை மூடியிருந்த கறுப்புதுணியை சிவா எடுத்து விட்டான். அட்வகேற் பேரம்பலம் தலையை சிலுப்பியபடியே சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே இளம்பிறையன் அகலக் கால்களை விரித்து கைகளைப் பின்புறமாக கட்டியபடி இவரைப்பார்த்தபடியே நின்றான். அவனது நெடிய திடகாத்திரமான உருவம் அந்த மம்மல் இருளில் திகில் கொள்ள வைத்தது . அவன் கைகளில் மக்னம் பிஸ்டல் தயாராக இருந்தது. என்னத்துக்கடா என்னை இங்கை கொண்டுவந்தனி சங்கூதிப் பரதேசி என்று அட்வகேற் பேரம்பலத்தின் வாயில் இருந்து வார்த்தைகள் துப்பிய அதே நேரம் இளம்பிறையனின் கையில் இருந்த மக்னம் பிஸ்ட லும் குண்டுகளை துப்பியது. தூரத்தே குண்டின் சத்தத்தால் பூவரசு மரத்தில் இருந்த ஆட்காட்டியொன்று வீரிட்டலறியபடி வானத்தில் பாய்ந்தது.

கோமகன்
மலைகள் 
02 ஆவணி 2014
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.