மனமே மலர்க - மெய்யியல் பாகம் 21.பக்குவம்

ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை. ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது. உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம். உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும். பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை. அவர் காயப்படுத்துவதும் இல்லை. தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள். மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.

கவன ஈர்ப்பு

தர்க்கம் செய்து, குதர்க்கம் செய்து, கடித்து, ஜோக் சொல்லி, பாடி, அலங்காரம் செய்து, ஒதுங்கி நின்று, கூடி கும்மியடித்து, அடுத்தவரை மட்டம் தட்டி, தன் கதை பேசி, ஊர் வம்பு பேசி, அறிவுத் திறனைக் காட்டி, தனது இயலாமையை பறை சாற்றி, இறுமாப்பு காட்டி, தன் நோயைச் சொல்லி, தன் வலிமையை காட்டி, இப்படி எதையாவது செய்து அடுத்தவரின் கவனத்தைக் கவர வேண்டும். அதுவே உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கிய உணவாக இன்றைய மனிதனுக்கு இருக்கிறது. தனிமை இதனாலேயே மிரட்டுகிறது. அடுத்தவர் கவனம் இல்லாமல் ஒரு கணமும் வாழ முடியாத மனநோய் பிடித்த ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கியுள்ளோம்.

ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனில் ஆட்பட்டுவிட்ட மனித மனம்தான்.

ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது.அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது.பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது. எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை. ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது. அதன் அலகும் வளைந்துதான் இருந்தது. ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது. இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது. அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை. எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது. சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.

ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது.அப்போது பெருந்தலைவர் கேட்டது,''நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே?இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?'' இந்த காகம் பதில் சொன்னது,''நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன். அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன். இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்.'' என்றது பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது. அப்போதுதான் இக்காக்கை கவனித்தது, பெரிய காக்கையின் அலகு தன் அழகைவிட மோசமாக வளைந்திருந்தது.

நீங்கள் தான் இயேசு..நீங்கள் தான் யூதாஸ்.

யாராவது உங்களை அவமரியாதை செய்தால் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்கள். தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள். எப்படிப் பழி வாங்குவது என்று யோசிக்கத் தொடங்குகிறீர்கள். அந்த மனிதன் உங்களைக் கைப் பற்றிவிட்டான். இப்போது நீங்கள் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நாள் கணக்காக,இரவு பகலாக,பல மாதங்களாக,பல வருடங்களாகக் கூட இதை நினைத்துஉங்களால் தூங்க முடியாது. உங்களுக்குக் கெட்ட கனவுகள் வரும். மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள். மற்றவர்,அது தாய் தகப்பன்,நண்பர்,உறவினர் யாராக இருந்தாலும் உங்களை அவமரியாதை செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை. அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல் இருக்கும். யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள். இந்தக் காயத்தை வளர விடாதீர்கள். இது உங்களைக் காயப்படுத்தி விட அனுமதிக்காதீர்கள். 24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள். யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள். என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள். நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள். ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும். பிறகு நீங்கள் இதுவரை செய்து கொண்டிருந்த முட்டாள் தனத்தைப் பார்த்து சிரிப்பீர்கள். வருத்தங்கள்,எதிர்ப்புகள்,பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பீர்கள்.

உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது.உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.நீங்கள் தான் இயேசு..நீங்கள் தான் யூதாஸ்.

வெளிபடுத்துதல்

அடக்கி வைத்தல் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லாது. அடக்கி வைத்தல் வெளிபடுத்துதலை விட மோசமானது. ஏனெனில் வெளிப்படுத்துதல் மூலமாக என்றாவது ஒருநாள் அந்த நபர் விடுதலை பெறக்கூடும், ஆனால் அடக்கி வைத்தல் மூலமாக அவர் எப்போதும் அதன் பிடியில் இருப்பார். வாழ்வு மட்டுமே உனக்கு சுதந்திரத்தை தரும், வாழும் வாழ்க்கை உனக்கு விடுதலை தரும், வாழாத வாழ்க்கை ஈர்ப்பைத் தருவதாகத்தான் இருக்கும். ஒரு பாடல் பாடு, அது ஒரு லா..லா..லா.. என்பதாகக் கூட இருக்கலாம். அது உயிர்ப்போடு இருக்கும். அது சந்தோஷத்தின் வெளிப்பாடு. அது தன்னுணர்வற்ற நிலை. அதனால்தான் அதை காதலில் விழுவது என்று நாம் சொல்கிறோம்.உனது மௌனத்தில், ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் கணத்தில் உனது வெளிபடுத்துலில் இரு.

ஒவ்வொரு கலைஞனும் வெளிபடுத்தலில் வேறுபட்ட வகைகளை முயற்சி செய்கிறான். மரங்களும் மனிதனும் வேறுபட்ட வெளிபடுதல்தான் ஆயினும் வாழ்வு என்பது ஒன்றுதான். அதீத சோகத்திலும், மிகப்பெரிய சந்தோஷத்திலும் கண்ணீர்தான் வெளிபடும்.

பொறுமை

பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை. பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு. எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.

நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை. பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது. காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு. உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை. பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.

பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.

அழகு

அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.

அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது. உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும். ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.

வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது. எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள். இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு.

உருகுதல்

அறியாமல் இருப்பதுதான் மிகவும் அணுக்கமானது. உனக்கும் நிதர்சனத்துக்கும் இடையே ஒரு சிறந்த நட்பு, ஒரு அன்யோன்யம் எழும். சூரியன் வரும்போது பனித்துளி கரைவதைப் போல நீ உருகிப் போவாய். அது நேசஉறவு. நீ நிதர்சனத்துடன் ஒன்றி விடுகிறாய். நிதர்சனம் உன்னுள் ஊடுருவுகிறது. காதலர்கள் ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவுவதைப் போல.

அகம்பாவத்தை விட்டுவிடு. அப்போது நீ மலர ஆரம்பிப்பாய், உருக ஆரம்பிப்பாய் – நீ உயிர்ப்புடன் இருப்பாய். ஒரு மலரை முழுமையாக கவனி, ஒன்றிவிடுதலையும் உருகுவதையும் நீ அனுபவப்படுவாய். நீ உண்மையிலேயே ஒருவரை நேசித்தால் உனது ஆணவம் நழுவதையும் கரைவதையும் நீ உணர்வாய்.

சிறந்த நடனமாடுபவர்கள் மெதுமெதுவாக அதனுள் கரைந்து உருகி போவார்கள். நீ அன்பு சக்தியினுள் செல்லும்போது நீ கரைவாய், ஆனந்ததில் மலர்வாய்

தெளிவு

உனது அமைதியில் வார்த்தைகளின்றி இருக்கும்போது மொழியின்றி இருக்கும்போது யாரும் அங்கு இல்லாத போது நீ பிரபஞ்சத்துடன் லயப்பட்டு விடுகிறாய். இந்த தெளிவு இந்த ஒருமை உனக்கு அளவற்ற பரிசுகளை கொண்டு வரும். அது உனது முழு திறனுடன் நீ மலர உதவும். முதல் முறையாக நீ தனிப்பட்டவனாக உணர்வாய், உனக்கு சுதந்திரத்தின் சுவை தெரியும்.

இரவுக்கு அதற்கென ஒரு அழகு உண்டு, அதில் ஆழமும், அமைதியும், தெளிவும் இருக்கும். உறுதியான தெளிவுடனும் அமைதியுடனும் இருக்கும்போது நீ முழுமையான சுமை குறைந்தவனாக உணர்வாய். ஞானமடையும்போது முழுமையான மோனத்தில், தெளிவு பிறக்கும்.

அமைதியாக அமர்ந்திருக்கும்போது தெளிவால் நீ நிறைவாய். தியானம் செய் – தெளிவு, உணர்வு, அமைதி ஆகியவை உன்னுள் வளரும். சலிப்பை மிகவும் சரியான விதத்தில் உபயோகித்தால் அது தெளிவை உருவாக்கும்.

காத்திருத்தல்

காத்திருத்தல் தூய்மையானதாக இருக்க வேண்டும். காத்திருத்தலை அதற்காகவே அதன் அனுபவத்திற்காகவே கொண்டாடு. எதற்காக என்று கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லாமல் அதன் தூய்மைக்காக, அதன் வெகுளித்தனத்திற்காக, அதன் வாழ்த்துக்காக வெறுமனே காத்திரு. காத்திரு -

காத்திருத்தலின் அழகை உன்னால் பார்க்க முடியும். என்ன நிகழப் போகிறதென்று அறியாமல் காத்திருத்தல் மட்டுமே செய்யும்போது அதை பார்ப்பாய். காத்திருத்தல் உன்னை உருக வைக்கும், மையம் தன்னை வெளிப்படுத்த, உனது காத்திருத்தல் உதவி செய்யும்.

காத்திருத்தலுக்கு எந்த பொருளும் கிடையாது, அதனால் தான் அது தியானமாகிறது. காத்திருந்து காத்திருந்து காத்திருந்து நீ காலியாவதுதான் பிரார்த்தனை. காத்திருத்தல், முழுமை உன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொள்ள அனுமதிக்கும். ஒரு உண்மையாகவே காத்திருப்பவனால் அவன் எதற்காக காத்திருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது.

தானாய் வாழ்தல்

மக்கள் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். நீ நீயாய் இருக்க முடியும்போது தான் வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும். அப்படி தானாய் இருக்க முடியாததால்தான் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆடுவதில், பாடுவதில், நேசத்தில் நீ நீயாய் இருக்க வேண்டும். எதற்காக பயப்பட வேண்டும் நீ எதையும் இழக்கப் முடியாது. நீ பெற வேண்டியதுதான் உள்ளது.

உன்னுடைய தானாயிருத்தல் யாருக்கும் கெடுதல உண்டுபண்ணவில்லையென்றால் அது மிகவும் ஆன்மீகமானது. மிகவும் நாகரீகமானவனாக இருப்பது ஆபத்தாகக் கூட அமையலாம். ஒரு சிறிதளவாவது தானாய் இருப்பது நல்லது. உன்னுடைய தானாயிருத்தல் உன்னுடைய சுதந்திரத்தன்மையின் வெளிப்பாடே.

நீ நீயாய் இருப்பதற்கு பயப்படுமாறு வளர்க்கப்படுவது எல்லோருக்கும் நிகழும் ஒன்றே. தன்னியல்புப்படி இருப்பதில் எந்த தவறையும் நான் காணவில்லை.

பிரதிபலிப்பு

அறியாமைக்கு அதற்கே உரிய ஒரு அழகு, ஒரு தூய்மை இருக்கிறது. அது ஒரு சுத்தமான கண்ணாடியைப் போன்றது. அது, தளும்பாமல் அமைதியாக இருக்கும் குளம் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கரையில் உள்ள மரங்களையும் பிரதிபலிப்பதைப் போல பிரதிபலிக்கும். தெரியாது என்ற அந்த நிலைதான் மனிதனின் பரிணாமவளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையாகும்.

ஒரு கண்ணாடியைப்போல மிகவும் தூய்மையாக இரு. எதுவாக இருந்தாலும் அதை வெறுமனே பிரதிபலிக்கும் கண்ணாடி போல. நான் வெறும் விழிப்புணர்வு மட்டுமே, எதையும் பிரதிபலித்துக் காட்டும் வெறும் ஒரு கண்ணாடி, என்றார் புத்தர்.

நீ ஒரு கண்ணாடி, எதையும் பிரதிபலிப்பவன் என்பதை நினைவில் கொள்வது மட்டுமல்ல, அதை அனுபவி. அறிவது தன்னை அறிவதுதான், அது கண்ணாடி தன்னைத் தானே பிரதிபலிப்பதைப் போல. பிரதிபலிக்க கண்ணாடி போல எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும், அதுதான் கற்றலுக்கான நிலை.

உள்ளே போவது

ஒரு எளிமையான கூற்று, உள்ளே போவது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று நீ என்னை கேட்கிறாய். உள்ளே செல் என்ற இந்த எளிய வார்த்தையை உன்னால் புரிந்து கொள்ள முடியாதா உனக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் உனக்கு வெளியே போக மட்டுமே சொல்லித்தரப்பட்டிருப்பதால் உள்ளே போவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உன்னுடைய தன்னுணர்வு மற்றவர்களை பார்த்தே பழக்கப்பட்டிருப்பதால் அது தன்னை நோக்கி திரும்பும் வழியை மறந்து விட்டது.

உள்ளே போவது என்பது உண்மையிலேயே உள்ளே போவது அல்ல. அது வெளியே போவதை நிறுத்துவதாகும். சுவாசம் உள்ளே செல்வதை கவனித்தால், அப்போது எண்ணங்களும் உள்ளே செல்வதை உன்னால் கவனிக்க முடியும். நீ உன்னுள் சென்றால் எப்படி ஒருவர் புத்தராக முடியும் என்பதை நீ கண்டறிவாய். உள் நோக்கி செல்வதற்கான வழிகளை ஒருவர் கற்றாக வேண்டும். நினைத்தல் வெளியே செல்வது, எதையும் சிந்திக்காமல் இருப்பது உள் நோக்கி செல்வதாகும்.

நலம் – ஆரோக்கியம்

மதம் ஏற்கனவே நலமாக உள்ள மக்களுக்குத்தான் உதவுகிறது. ஆனால்நலத்தின் சிகரத்தை அறிந்து கொள்ள வேண்டும். நலமாக இருப்பதன் எவரெஸ்ட் சிகரம் போன்ற உச்சியை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சிகர அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. நீ இறுதி அனுபவத்தை பெற வில்லையென்றால் நீ விலைமதிப்பற்ற ஒன்றை பெறாமல் விட்டுவிட்டாய்.

நோய் மேலோட்டமானது, நலம் கூடவே வந்தது. சிரிப்பு நலத்திலிருந்து தான் வரும், அது சக்தி பெருகி வருவது. நலம் என்பது உடல் முழுமையாக இருப்பது, எதையும் விட்டு விடாமல்இருப்பது. நலம் உனது மையத்தில் நிகழ்வது, அது உனது இருப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். எப்படி நோய் வந்து பிடித்துக் கொள்கிறதோ அது போல ஆரோக்கியமும் பிடித்துக் கொள்ளும். 

ஒருவன் பிரபஞ்சத்துடன் லயத்தில் இருக்கும்போது நலமாக இருப்பான்.

மலர்கள் சொரியும்

நீ விரக்தியாகவும் சோகமாகவும் இருக்க விரும்பினால் தவிர மற்றபடி நீ உனது கடந்த காலத்திலிருந்தும் எதிர்காலத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு நிகழ்காலத்தில் வாழ ஆரம்பித்தால் உனது வாழ்வு ஆடலோடும் பாடலோடும் இருக்கும். அப்போது சாப்பிடுவது, குடிப்பது, குளிப்பது, உலாவச் செல்வது ஆகிய யாவுமே திடீரென சிறப்பானதாக மாறும். மலர்கள் சொரிவது எந்த காரணமும் இல்லாமல் நிகழ ஆரம்பிக்கும்.

நான் என்பது இல்லாமல் நீ இருக்கும்போது பிரபஞ்சம் அதை கொண்டாடுகிறது, மலர்கள் உன் மேல் சொரிகின்றன. மலர்கள் சொரிந்து அருள் சுரந்து வழிகிறது – மேலும் ஒருவர் வீடு வந்து சேர்ந்து விட்டார். புத்தர் ஞானமடைந்த போது மலர்கள் வானத்திலிருந்து அவர் மேல் மழையாய் பொழிந்தன. நீ உன் மலரை கொடு, ஆயிரக்கணக்கான மலர்கள் உன்மேல் பொழியும். மலர்கள் உன் மேல் பொழிவதன் பொருள் இந்த முழு பிரபஞ்சமும் கொண்டாடுகிறது என்பதே.கோமகன் 
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.