உதிர்ந்த சருகு - கி .பி .அரவிந்தன் நினைவேந்தல்.

"தர்க்கம் செய்து, குதர்க்கம் செய்து, கடித்து, ஜோக் சொல்லி, பாடி, அலங்காரம் செய்து, ஒதுங்கி நின்று, கூடி கும்மியடித்து, அடுத்தவரை மட்டம் தட்டி, தன் கதை பேசி, ஊர் வம்பு பேசி, அறிவுத் திறனைக் காட்டி, தனது இயலாமையை பறை சாற்றி, இறுமாப்பு காட்டி, தன் நோயைச் சொல்லி, தன் வலிமையை காட்டி, இப்படி எதையாவது செய்து அடுத்தவரின் கவனத்தைக் கவர வேண்டும். அதுவே உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கிய உணவாக இன்றைய மனிதனுக்கு இருக்கிறது. "

ஓஷோ 

000000000000000000000000000000

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓஷோ கூறியதா க கவன ஈர்ப்பு பற்றிய   நிலைத்தகவல் ஒன்றை எனது முகனூலில்  பதிவு செய்திருந்தேன் . நாங்கள் எவ்வளவுதான் எங்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கின்றோம் என்று மற்றையவர்கள் முன்பு காட்டிக்கொண்டாலும் இறப்பு என்பது  நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்று என்பதை எவராலும் ஊகிக்கமுடிவதில்லை என்பதனால் இறப்பு பற்றிய பிரக்ஞை இன்றி காற்றில் நடந்துகொண்டிருக்கிறோம். அவ்வப்போது இறப்பு  எமது  கையைப் பிடித்து நிறுத்தி, எமது  காதுக்குள் ”நான் இருக்கிறேன், மறந்துவிடாதே” என்று தன் இருப்பை குசுகுசுத்துவிட்டு நகர்ந்துகொள்கிறது என்று ஒரு சில கிழமையின் முன்பாக சஞ்சயனும்  இறப்பு பற்றிய தனது எண்ண  வெளிப்பாட்டை குறிப்பிட்டிருந்தார். 

வழமை போல இன்றைய காலைப்பொழுதிலும் ஓர் இறப்பு எனது காதில் தான் இருக்கின்றேன் என்று குசுகுசுத்து விட்டுச் சென்றிருக்கின்றது. கிறிஸ்டோபர் பிரான்ஸிஸ் என்ற கி  பி அரவிந்தன் இன்று காலையில் இருந்து எம்மிடம் இல்லை. முன்னைய பந்தியில் ஓஷோ குறிப்பிட்டதில் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சந்தடியின்றி எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் கி  பி அரவிந்தன். ஓர் சிறிய செயலை செய்துவிட்டு அதனை விளம்பரமாக்கி பப்படா வாழ்க்கை வாழ்ந்து வரும் பலரிடமிருந்து கி  பி அரவிந்தன் முற்றிலும் மாறுபட்டவராகவே வாழ்ந்து வந்திருக்கின்றார். ஈழத்தேசிய விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப நிலை உறுப்பினராக இருந்த கி  பி அரவிந்தனைப் பலருக்குத் தெரியாது. 1972 ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்ட அரவிந்தன் மீண்டும் 1976 இல் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.1990 களில் பிரான்ஸில் குடியேறிய கி  பி அரவிந்தன் புலம்பெயர் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்கு ஆற்றியிருக்கின்றார். அடிப்படையில் ஓர் கவிஞராக இனங்காணப்பட்ட கி  பி அரவிந்தனது பல கவிதைகள் பிரெஞ் மொழியில் வெளிவந்தன. மௌனம் என்ற இலக்கிய இதழையும் அப்பால் இனையத்தளத்தையும் நடாத்தி வந்தார். அண்மைக்காலமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டாலும் பல நூல்கள் வெளிவருவதற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார் கி  பி அரவிந்தன். அதில் குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடு " நூல் குறிப்பிடத்தக்கது . தான் சார்ந்த அரசியல் பாதையில் தனது அனுபவங்களை ஓர் வரலாற்றுப்பதிவாக எம்மிடையே விட்டுச்சென்றிருக்கின்றார். ஆரம்ப காலகட்டத்தில் பொன் சிவகுமாரனுடன் போராட்ட அரசியலை ஆரம்பித்து பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் சுந்தர் என்று இனங்காணப்பட்டு மத்திய குழு உறுப்பினராக தனது அரசியல் பங்கினை நீண்டகாலமாக செய்துவந்தார். இங்கு பிரான்ஸில் அரசியலிலும் பொதுவெளிகளிலும் ஒதுங்கியே இருந்தார். அதனால்தான் என்னவோ இன்றைய புலம் பெயர் ஈழத் தேசிய  அரசியல் அமைப்புகள் பல கி  பி அரவிந்தனின் மறைவு செய்தியில் கள்ள மௌனம் சாதிக்கின்றன. இத்தகைய கள்ள மௌனங்கள்  கடுமையான கண்டனத்துக்குரியது .கி  பி அரவிந்தனின் மறைவு ஈழத்தமிழன் போராட்ட வரலாற்றில் ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.கோமகன் 
08 பங்குனி 2015

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.