கருத்துச்சுதந்திரம் ( Freedom of speech, liberté d'expression ) - பத்தி.
நகரின் மத்தியில் ஓர் பிரபல்யமான சீன உணவகம் இருந்தது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் உடனுக்குடன் உயிர் மீனை பிடித்து வெட்டி விதம் விதமான மீன் கறிகளை நாவுக்கு ருசியாக அதன் தலைமை சமையல்காறர் செய்து கொடுப்பார். இதனால் எப்பொழுதும் அந்த சீன உணவகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அந்த சீன உணவகத்தில் அழகான ஓர் பெரிய விசாலமான மீன் தொட்டி இருந்தது. அதில் பலவகையான மீன்கள் தங்களுக்குள் கதைத்தும் பேசியும் மகிழ்வாக ஓடித்திரிந்தன. அந்த மீன்களுக்கு இந்த உலகமானது மிக மிகப்பிரமாண்டமானது என்றதோர் மிகப்பெரிய எண்ணம் இருந்தது. 

அதில் இருந்த ஓர் மீன் வடிவாக மீன் தொட்டியை சுற்றி விட்டு வந்து மற்ற நண்பர்களுக்கு சொன்னது, "நீங்கள் எண்ணுவது பிழை. இந்த மீன்தொட்டிதான் எங்கள் உலகம். இடையில் ஓர் கண்ணாடி இருக்கின்றது" என்று சொன்னது. மீனின் இந்தப் பதிலால் சில மீன்கள் கடும் கோபமுற்று அந்த மீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின அந்த மீனும் மனம் தளராமல் " நண்பர்களே நீங்களும் ஒருமுறை நான் சொன்னதை பரிசோதனை செய்துபாருங்கள் அப்பொழுது நான் சொன்னதன் உண்மை தெரியும்" என்று சொன்னது. அந்த நேரம் மீன் தொட்டிக்கு வெளியில் நின்ற ஓர் வாடிக்கையாளர் ஒருவர் ஓர் மீனைக் கையால் காட்ட, தலைமை சமையல்காறர் அந்த மீனை துடிக்கத்துடிக்க வெட்டுவதற்கு பிடித்துக்கொண்டு போனார்.

தாங்கள் கொல்லப்படுவதற்காகதான் இந்த மீன்தொட்டியில் இருக்கின்றோம் என்ற உண்மை அப்பொழுதான் மற்றைய மீன்களுக்கு தெரிய வந்தது. எல்லா மீன்களுக்கும் பதட்டமும் மரணபயமும் வந்துவிட்டது. அப்பொழுது ஒரு மீன் மற்றைய மீன்களைப் பார்த்து சொன்னது , " நண்பர்களே!! நாங்கள் தலைமை சமையல் காறனால் சாகத்தான் போகின்றோம். ஆனால் எப்பொழுது என்றுதான் தெரியாது. இப்பொழுது இருக்கும் இந்த நிமிடத்தை சந்தோசமாய் கதைத்து மகிழ்ச்சியாக இருப்போமே" ? என்று ஓர் ஆலோசனை சொன்னது . எதை கதைப்பது என்று மற்றைய மீன்கள் மரண பயத்தில் முழுசின. அப்பொழுது அந்த மீன் சொன்னது , " கதைக்கா பஞ்சமில்லை. நாங்கள் இறந்த பின்னர் இந்த தலைமை சமையல் காறர் எந்த விதமான சோசில் எப்படி எப்படியெல்லாம் எங்களைக் கறியாக்குவார் என்பது பற்றி கதைப்போமே" என்றது. மற்றைய மீன்களும் மிக சந்தோசமாக தலைமை சமையல்காறர் செய்யப்போகும் சோசைப் பற்றியும்  தங்கள் எதிர்பார்ப்புகளையும் ஆரூடங்களையும் சொல்லத்தொடங்கின.

நன்றி :

போன கிழமை கலைச்செல்வனின் 10 ஆவது வருட நினைவு நாள் நிகழ்வில் நண்பர் வாசுதேவன் கருத்துச்சுதந்திரம் பற்றிய பேச்சில் இருந்து .கோமகன்

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.