கோமகனின் 'தனிக்கதை ' - என்னுரை.எனது வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும்
பணிவான வணக்கங்கள். இன்றைய நாள் வரை வலைப்பூவிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும், இணையங்களிலும் எழுதி வந்து கொண்டிருந்த எனது முதலாவது சிறுகதை தொகுதி முயற்சி இது.

இந்த சிறுகதை தொகுதியில் மொத்தம் பதினாறு சிறுகதைகளைக் கதைகளாகத் தொகுத்திருக்கின்றேன் . இந்தக் கதைசொல்லிகள் ஏற்கனவே இலக்கிய சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து பலவாசகர்களது நெஞ்சை அள்ளிச்சென்றவை. ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது, தனது பிள்ளை அப்பாவாலும், மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே. 

ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும், அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை. அந்த வகையில் இந்த முதல் முயற்சியை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த சிறுகதை தொகுதியில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகளும், பின்னர் எழுதிய கதைகளும் அடங்குகின்றன. நான் எழுதிய ஆரம்ப கால சிறுகதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது,எழுத்து வசப்பட்டதால் ஏற்பட்ட அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும், ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையை அம்மணமாகப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா ? அந்த வகையில் அவற்றை அப்படியே விட்டிருக்கின்றேன்.

இந்த பதினாறு கதைசொல்லிகளும் எதோ ஒருவிதத்தில் எம்மைச்சுற்றி இருக்கும் குறைகளைத் தொட்டுச்செல்கின்றன. என்னைப்பொறுத்த வரையில் ஓர் எழுத்தாளன் என்பவன் வெறும் அழகியல் குறிப்புகளை எழுத்தில் வடிக்காது, எம்மைச்சுற்றியுள்ள கறுப்புப் பக்கங்களைத் தொட்டு வாசகர் மனதில் ஓர் பொறியை ஏற்படுத்துபவனாக இருக்கவேண்டும். அந்தவகையில் இந்தக் கதைகளில் ஓர் கதையாவது வாசகர் மனதில் ஓர் சிறு பொறியைக் கிளப்பியிருந்தால் நான் தொகுத்த இந்த சிறுகதை தொகுதியானது அதனது நோக்கில் வெற்றியடைந்திருக்கின்றது என்று எடுத்துக்கொள்கின்றேன்.

நான் எழுதத்தொடங்கிய காலங்களில் எனது கதைகளைப் பிரசுரித்து அதன் மூலம் பல வாசகர் வட்டங்களை உருவாக்கித்தந்த யாழ் இணையம், நிலாமுற்றம்,தமிழ்நண்பர்கள் இணையம்,"ஒருபேப்பர்"(பெரியபிருத்தானியா), "ஆக்காட்டி" இலக்கிய சஞ்சிகை, (பிரான்ஸ்),"எதுவரை" இலக்கிய சஞ்சிகை (பெரிய பிருத்தானியா) ,"மலைகள்" இலக்கிய சஞ்சிகை (இந்தியா),"அம்ருதா" இலக்கிய சஞ்சிகை (இந்தியா) ஆகியவற்றின் ஆசிரியர் குழுவினரையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவுகூர்கின்றேன். இந்த சிறுகதை தொகுதியை அழகாக வடிவமைத்து வெளியிடும் மகிழ் பதிப்பகத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி...................... வணக்கம் !!!கோமகன்
மின்னஞ்சல் தொடர்பு : koomagan93@gmail.com

2 comments

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.