சுவைத்(தேன்)- கவிதைகள் -பாகம் 04.01 கொல்லப்பட்ட தேன்கூடுகொன்ற பிணத்தை மொய்த்துக் கொண்டிருந்தன
வண்ணத்துப்பூச்சிகள் .
அந்த பிணத்திலிருந்து வடிந்து கொண்டிருந்தது தேன்.
ஊன்றிக் கவனித்த போது
அது ஒரு தேன் கூடாக மாறிக் கொண்டிருந்தது.

பிணத்தை அலங்கரிக்க வந்தவன் ,
தேனை எடுத்துச் செல்லலாம் என்று எண்ணியபோது
அந்த கணமே துக்கத்தின் வேர்கள்
அவனுடைய தொண்டையில் இறங்கின.

"பிணத்தை அலங்கரிப்பதுன் தொழில்
தேனெடுக்க வந்ததுன் யோகம்"
என்ற குரல்கள் அவனைத் தடுமாற வைத்தன .
தான் இப்போது என்ன செய்யலாம் என்று
அந்த பிணத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் நெடுநேரமாய் .

கொல்லப்பட்ட பிணம் சட்டத்தின் பிடியிலிருந்து
எப்போது விடுபடும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஒரு தேன்கூடு எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பது
எதிர்காலத்தில் கேள்வியாக எழக்கூடிய சாத்தியமும் உண்டு.

நன்றி : கருணாகரன்

0000000000000000000000000
02 முறிவுஅகன்ற தெருக்களை அமைப்பதற்காக
எங்கள் தெருக்கரையில் நின்ற புளியமரத்தைச்
சீனர்கள் வெட்டி வீழ்த்தியபோது
காலைச் சூரியன் ஒஸ்லோவில் ஊடுருவ முடியாமல் திணறியது.
அப்பொழுது அமெரிக்கத் தூதுவர்
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைப்பற்றி
யாழ்ப்பாண ஆயருடன் தொலைபேசிக் கொண்டிருந்தார்.
போதை வஸ்துக் குற்றச்சாட்டில்
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை
இந்தியா எங்கும் பட்டாசுகளில் வெடித்துப் பறந்தது.
தலைவர்களுக்கிடையில் ரகசிய ஒப்பந்தங்களும் பரகசிய ஒப்பந்தங்களும்
நடந்து கொண்டிருந்தபோது அரிசி விலையேறியது
பெற்றோல் விலை கூடியது.
கட்சி தாவும் ஆட்களுக்குப்

பாலங்களை அமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் திருப்பணியை
இரவு பகலாகச் செய்து கொண்டிருந்த பத்திரிகையாள நண்பர்கள்
தேர்தலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
அதே பத்திரிகையாள நண்பர்கள் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள்.

மூன்று போத்தல் பியரை உள்ளே இறக்கிய ஊடகப்போராளி ஒருவன்
தேர்தலுக்கு முன்பே தலைவரைத் தெரிந்தெடுத்து விட்டிருந்தான்.
இன்னொருவன் தேர்தலுக்கு முன் தலைவரைக் கைவிட்டிருந்தான்

தவற விட்ட பந்தை நினைத்துக் கவலைப்பட்ட கிரிக்கெற் வீர்களுக்கு
அருகில் நின்றவனின் கவலையெல்லாம்
தானொரு கிரிக்கெற் வீரனாக வரவில்லை என்றேயிருந்தது
அப்படி வந்திருந்தால் எந்தப் பந்தும் தவறாது விக்கெற்றை வீழ்த்தியிருக்கும்
அல்லது சிக்ஸராகியிருக்கும் என்று நினைத்தான்.

எல்லாம் ஒருகணத்தில் நிகழ்ந்த போது
மறுகணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தேன்.

00000000000000000000000000000

03 நெருப்புபோர்க் கைதிகளைப் பற்றி
நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள்
போர்க்குற்றவாளிகளைப் பற்றி
நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள்
ஆனாலுமென்ன

கைதிகளை மீட்க முடியாமலும்
குற்றவாளிகைளத் தண்டிக்க முடியாமலும்
நழுவிச் செல்லும் காலம் நமது.
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்

கைதுக்கும் சரணடைவுக்கும் இடையில்
மன்றாட்டத்துக்கும் வெறிக்கூச்சலுக்குமிடையில்
எப்பொழுதும் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்
கூட்டத்திலொருவனாய்

இரவுகளில் புலம்பி.
பகலில் அலைந்து
பரிகசிக்கப்படும் தெருநீளம் திரிகிறேன்.
பாதிக் கைதிகள் சிறைக் கூடங்களில்
பாதிப்பேர் விசாரணையில்
இன்னும் சிலர் விடுதலையாகி
மீதிப்பேர் ஏதுமறியா நிலையில்
இந்தக் கைதிகளின் விதி என்னவென்று உணர்கிறபோதும்

சொல்ல முடியவில்லை வெளியே
அவர் இருக்கிறாரா
இவர் வருவாரா என்று தத்தளிக்கும் மனிதர்களோடு
துக்கமின்றி பசியின்றித் தவிக்கின்ற குழந்தைகளோடு

எப்படி இனியும் வாழ்வதென்று தெரியவில்லை.
யாருக்காகவும் இனிக் காத்திருப்பதில் பயனில்லை
என்றுரைக்கவும் முடியவில்லை.
போரோய்ந்து போயிற்றென்றுதான் சொன்னார்
சொன்னவர் வாயில்
அணையா திந்த நெருப்பைக் கண்டேன்.

00

00000000000000000000000000000

04 துடிக்கும் மீன்களில் கண்ட உலகம்ஆதிகோயில் வளாகத்திலிருந்து வெளியேறிய கிறிஸ்து
என்னைக் கண்டு புன்னதைத்தார்.
மூன்றாவது அகிலத்தை நாம் பார்க்கலாம் வா என்றார்.
சிலுவையில் அறைப்படுவதற்கு முன்
ஒரு கிண்ணம் தேன் குடிக்கலாம்
அல்லது ஒரு கோப்பை தேநீர் பருகலாம் வருகிறீர்களா என்று கேட்டேன்.

அதற்கிடையில் அங்கே
ஒரு முதிய மதகுரு வந்து கிறிஸ்துவை வணங்கினார்.
கிறிஸ்துவின் கவனம் வேறெங்கோ நிலைத்தது.
தெருவில் காய்ந்து கறுத்துக்களைத்துப் போய் வந்த

விவசாயியைக் கண்டதும்
கிறிஸ்து என்னை விட்டுப் போய்விட்டார் அவனிடம்.
அவனுடைய கைகளைப் பற்றிய அவர்
அருகிலிருந்த மரத்தின் கீழே அழைத்துச் சென்றார்.

மரத்திலிருந்து கனிகளைப் பறித்து அவனிடம் கொடுத்தார்.
கனி நிரம்பிய சாற்றில் அந்த விவசாயியின் முகத்தைக் காண்கிறேன்
விதைகள் ஒவ்வொன்றிலும் விவசாயியின் இதயம் உள்ளது
வாருங்கள் உங்களுக்கும் ஒரு கனி என்றார்.

நான் கிறிஸ்துவின் பக்கமாகச் சென்றவேளை அங்கே
நான்கு குழந்தைகள் அவருடைய மடியில் விளையாடிக் கொண்டிருந்தன
கனிகளை அவர் பறித்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.
அந்த வழியே களைத்து வந்தாள் ஒரு மெல்லிய பெண்
அவளுடைய கண்கள் பசிக் கலக்கத்திலிருந்தன

அந்தப் பெண்ணுக்கும் கனிகளைக் கொடுத்தார்
அவளின் குளிர்ந்த கண்களின் வழியே வெளியேறி
நடந்து கடற்கரைக்கு வந்திருந்தோம்.
வலைகளை இழுத்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் சென்ற கிறிஸ்து

கடலோடிக் காய்ந்த கைகளில் துடிக்கும் மீன்கள்
வாழ்வின் ரகசியம் அறிவீர் என்றார்
துடிக்கும் மீன்களின் கண்களில் கண்டேன் அக்கணம்
சிலுவையிலறையப்படும் கிறிஸ்துவின் துடிப்பை.

00

00000000000000000000000000000000

05 ரத்தப்பெருக்குரத்தத்தில் மிதக்கும் காஸாவில்
என்னுடைய குழந்தை தீயில் எரியக்கண்டேன்
எரியும் குழந்தையின் புன்னகையிலிருந்து வடிந்த குருதி
அந்தக் கொடும்பாலையில் பாய்ந்து
என் காலடியில் உறைந்தது
உங்கள் காலடியிலும் உறைந்தது.

நீங்கள் அதை உற்றுக்கவனித்தபோது
அது உங்கள் குருதிதானென்பதை உணர்ந்தீர்களா?
உறைந்த குருதி ஒரு குழந்தையாகிச் சிரித்ததை
நீங்கள் அறிந்தீர்களா,

அது உங்கள் குழந்தையுடைய கலைந்த சிரிப்பின் இறுதிச்சித்திரம்தானென்றும்.
அந்தச் சிரிப்பொலி மெல்ல அடங்கி,
அழுகையாகி, விசும்பலாகி

உங்களைக் கொண்டு சென்றது இடிந்தழிந்த பதுங்குகுழியிடம்
நீங்கள் கடந்து வந்த பிணங்களிடம்
இன்னும் கடக்க முடியாதிருக்கும் பிணங்களின் காலத்திடம்

கண்ணீரும் தீயும் புகையும் சமநேரத்தில் வானை நிறைத்து,
உலகையும் நிறைத்தது
உங்கள் இதயத்தின் ஒவ்வொரு அறையிலும்
தானியங்களுக்குப் பதிலாக
பதிலற்ற கேள்விகள் வலியோடு நிரம்பிக்கிடந்தன.
நெருப்பிலெரிந்தழிந்த கடந்த காலத்திலிருந்து
யாரும் மீளவில்லை
எரிந்துகொண்டிருக்கிறது நிகழ்காலமும்.

எரிந்தடங்கும் நிகழ்காலத்தின் சாம்பலில் மிதக்கிறது கடந்த காலம்
நிகழ்காலம் எரியும்போது எதிர்காலம் மிஞ்சுவதெங்ஙனம்?
எல்லாக் காயங்களையும் பார்த்துக்கொண்டு நிற்போரின் கண்களில்
காஸா தொடக்கமுமில்லை முடிவுமில்லை என்று நீளும் கொடுமுட்கள்
பெரிய காடாகி வளர்ந்திருக்கக் காண்கிறேன்

நமது கடந்த காலம் இன்னும் முடிவறாது நீள்கிறது.
விசித்திரமானதும் அபாயமானதும் என்று அஞ்சும் கடந்த காலத்தை
நம்முடைய காயங்களின் நீட்சி ரத்தப் பிசுபிசுப்போடு இன்னும் வைத்திருக்கிறது
காஸாவில்.
அடங்கவில்லை ரத்தப்பெருக்கு
இந்த ரத்தப்பெருக்கின் விதி எங்கு முடிவுறும்?
எப்பொழுதுதிது ஆறும்?

நன்றி :கருணாகரன்

000000000000000000000000000000

06 கவனயீனமாய் கொல்லப்படலாம்இரவின் கடைசிப் படிக்கட்டில்
அமர்ந்திருக்கிறேன்
பகலின் எல்லைக்குள்
கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன
பகலுக்குள் இறங்கி

வெகு நேரங்களுக்குப் பின்புதான்
இரவு உதிர்ந்த இலை
பகலின் ஓரத்தை தாண்டி
வந்து கொண்டிருக்கின்றது
பழுப்பும் பச்சையுமாக

அதன் நிறத்தை வெளிப்படுத்தியது
இன்னும் சில நாட்கள்
மரத்திலே இருக்க வேண்டிய
வயதுதான் அதற்கு
செடியில் இருந்த போது

இலையின் கீழ்
மறைவாக உறங்கிய எறும்பு
இன்னும் கனவிலே இருக்க வேண்டும்
காற்று ஒத்திவிட
தரையில் புரண்டு

குப்புறக் கிடந்தது இலை
அதன் முகட்டில்
கண் விழித்த எறும்பு
மலையொன்றில்
சிக்கிவிட்டதைப் போல
திகைத்து நின்றது

தப்பிக்கும் முயற்சியில்
மலையெங்கும் அலைந்தது
இலையின் அருகில்
எனது கால்கள்
நடந்து கொண்டிருக்கின்றன.

நன்றி :றியாஸ் குரானா

000000000000000000000000000

07 மரணிக்காத ஆசிரியன்பறவையைப் பற்றி
எழுதிய பிரதியில்
அது இல்லாமல் போனது கண்டு
நீங்கள் வியப்படைய வேண்டாம்
நமது தேவைக்காக
நமது அவசரத்திற்காக
வரும்படி
பறவையை கட்டாயப்படுத்த முடியாது

அதற்கு வேலைகள் இருக்கலாம்
அல்லது தான் விரும்பிய நேரத்தில்
பிரதிக்கள் வரலாம்
பறவையைப் பிரதிக்குள் வைத்து
வாசிக்க வேண்டுமென்ற
விதிகள் ஏதுமில்லை
வாசிப்பதற்கென்று,
பிரதிக்குள் அடைத்து வைக்கவும் கூடாது

உங்கள் வாசிப்பு பிடித்திருந்தால்
சில வேளை,மனம் விரும்பி
பிரதிக்குள் வரவும் வாய்ப்பிருக்கிறது
வானத்தில், பறந்து கொண்டிருக்கும்
பறவைகளில் ஏதாவதொன்றைப் பார்த்து

அதுதான், பிரதிக்குள்
இருக்க வேண்டியபறவை என
முடிவெடுத்துவிடவும் வேண்டாம்
பிரதியைச் சுற்றி
மிக அருகில் வட்டமிடுகிறதே

அதுகூட பிரதிக்கான
பறவையாக இல்லாமல் போகலாம்
பிரதிக்குள் பறவை பற்றி மட்டுமல்ல
அது வெளியேறிவிடும் படியும்

எழுதினேன்.
உண்மை, யாருக்கும் கேட்காத வண்ணம்
மௌமாக கூவிக்கொண்டு திரிகிறது
பிரதியின் பறவை.

நன்றி :றியாஸ் குரானா

00000000000000000000000000

08 எல்லாமே சரியாக நடந்தனஅச்சுறுத்தும் தொனியில்…
நாய்களைக் குரைக்கச் செய்தேன்
வீட்டைச் சுற்றி
நடமாடவிட்டேன்
பலநூறு காலடிகளைக் கொண்டு
கலவரம் நிறைந்த சப்தங்களை

தொடர்ச்சியாக எழுப்பினேன்
தூக்கமற்ற காவலர்களை
ஆயுதங்களுடன் காவலுக்கு நிறுத்தினேன்
நகர்ந்து சென்று,

அவர்களுக்கருகில் நிற்கும்படி
மரங்களிடம் வேண்டிக் கொண்டேன்
முதலில் அலுமாரியைப் பூட்டினேன்
என்னால் கூட,
கண்டுபிடிக்க முடியாத இடத்தில்
அதன் சாவியை
மிகக் கவனமாக தொலைத்தேன்

வீட்டின் ஒவ்வொரு அறையாகப்
பூட்டி, அனைத்துக் கதவினருகிலும்
நான் ஒருத்தனே
காவலர்களாக நிறுத்தப்பட்டேன்
மிகக் கவனமாக
பாதுகாப்பாக
இப்படி எல்லாமே சரியாக நடந்தன

அவன் திருடிச் செல்லுவதற்கு ஏதுவாய்..
நான் என்ற
இன்னொருவன்தான் அந்தத் திருடன்.

நன்றி :றியாஸ் குரானா

00000000000000000000000000000

09 ஒரு ஊரின் சோகம்நீள விரிந்த
நதியின் இடுக்குகளில்
கூடு கட்டியகனவின் குரல்...
கனத்து வழிகிறது
மீட்சிக்கான வழி ஏதுமற்று...!

மரணம் கவிந்த தெருக்கள்
ஊரெங்கும்
தோரணங்களாய்த்
தொங்கிக் கொண்டிருக்கின்றன...!

இருட்டுக்குள்
கருப்பொன்றே நிறமாகிப் போன
விரக்தியில்
நிறங்கள்
தற்கொலை செய்துகொண்டன...!

ஒளிப் பிசிறல்களைத் தேடும்...
ஒவ்வொரு தடங்களையும்
எட்டி மறைக்கிறது
கருமையின் செறிவு...!

திசைகளைத் தொலைத்த ஆட்காட்டி
தன் குரலைத் தானே
பின்பற்றி அலைகிறது!

இருளின் திரட்சிக்குள்
வரி வரியாய் உலர்கிறது...
காற்றின் மென்னிழைகள்!

புகை உமிழ்ந்துருளும்
வலிய சக்கரங்களின் கீழ்
நடுநடுங்குகிறது...
பூமியின் தேகம்!

நகரின் இரைச்சலுக்குள்
அமுங்கிக் கேட்கிறது!
தன் சுயத்தினை
மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கும்
ஒரு ஊரின் கேவல்!
நன்றி : தாட்சாயணி

000000000000000000000000000000000

10 ஞானம்“நேற்று” என் காலடியில்
சொட்டிப் போனது இரத்தத்தை.....
“நேற்றின்” இரத்தம்
உறைவதற்குள்.....
“இன்றின்” கூக்குரல்
கேட்கிறது!
நாளை..... “இன்றின்” இரத்தம்
என் காலை நனைக்கலாம்.....!
இறுதியில் என்றோ ஒருநாள்.....
“நேற்றின்” இரத்தமும்
எனது இரத்தமும் கலக்கின்றபோது
எனக்கு.....
நாளை என்பதே இல்லாமல் போகலாம்!
அப்போது
“நான்” என்பதும் தொலைந்து போகலாம்!

நன்றி : தாட்சாயணி
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.