" இலங்கையில் நீடித்த போருக்குப் பிந்திய இலக்கியப்படைப்புகள் காலத்தின் தேவை "" ஈழத்து இலக்கியவளர்ச்சியில் முன்னர் மறுமலர்ச்சிக்காலம், முற்போக்கு - பிMr.Vanniyakulam.02JPGரதேச இலக்கியம் - மண்வாசனை, தேசிய இலக்கியம் என்பன பேசுபொருளாக இருந்தமைபோன்று, யுத்தம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும் ஈழத்தமிழர்களின் வெளிநாட்டு புலப்பெயர்வையடுத்து புகலிட இலக்கியமும் பேசுபொருளாகின. இன்று யுத்தம் முடிந்துள்ளது. இனி எழுதப்படும் இலக்கியங்கள் போருக்குப்பிந்திய இலக்கியமாகப் பேசப்படவிருப்பதனால் ஷோபா சக்தியின் (BOX) பொக்ஸ் முதலான படைப்புகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. எனவே இதனை வளர்த்தெடுக்கவேண்டிய கடமை அனைத்து படைப்பாளிகளிடமும் இருக்கிறது. " 


என்று அண்மையில் அவுஸ்திரேலியா - மெல்பனில் நடந்த வாசிப்பு அனுபவப்பகிர்வில் உரையாற்றிய இலக்கியத்திறனாய்வாளர் திரு. சி. வன்னியகுலம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு சங்கத்தின் நடப்பாண்டு துணைத்தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெல்பனில் Mulgrave Neighborhood House மண்டபத்தில் நடந்தது.


வாசிப்பு அனுபவப்பகிர்வில் பிரான்ஸில் வதியும் ஷோபா சக்தியின் பொக்ஸ் (BOX) நாவல் பற்றிய தமது வாசிப்பு அனுபவத்தை சங்கத்தின் உறுப்பினர் திரு.ஜே.கே. ஜெயக்குமாரன் பகிர்ந்துகொண்டார். அதனையடுத்து சங்கத்தின் உறுப்பினர்கள் டொக்டர் நடேசன், திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி, திரு. அறவேந்தன் ஆகியோர் முறையே வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்ச்சியாக இல்லை (சிறுகதைகள்) சாத்திரியின் (பிரான்ஸ் ) ஆயுதஎழுத்து (நாவல்) கோமகன் (பிரான்ஸ்) எழுதிய கோமகனின் தனிக்கதை ( சிறுகதைகள்) ஆகியனவற்றின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

வாசிப்பு அனுபவப் பகிர்வில் உரையாற்றியவர்கள் தமது குறிப்புகளை எழுத்தில் சமர்ப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.


வருகை தந்திருந்தவர்களின் கலந்துரையாடலையும் கருத்துப் பகிர்வுகளையுமடுத்து இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த இலக்கியத்திறனாய்வாளர் திரு. சி. வன்னியகுலம் போருக்குப்பின்னர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: " இலங்கையில் சமகாலத்தில் கொழும்பிலிருந்து ஞானம், வடக்கிலிருந்து ஜீவநதி, கிழக்கிலிருந்து மகுடம், அநுராதபுரத்திலிருந்து படிகள் முதலான சிற்றிதழ்கள் வெளியாகின்றன. இவற்றிலும் ஏனைய தமிழ்த்தினசரிகளின் வாரவெளியீடுகளிலும் தொடர்ச்சியாக சிறுகதைகள் வெளியாகின்றன. சில பத்திரிகைகள் தொடர்கதைகளுக்கும் களம் வழங்குகின்றன. அத்துடன் கவிதைகளும் அதிகமாக பிரசுரமாகின்றன.


போர் நடந்த காலத்தில் நாம் போரை விரும்பாது விட்டாலும் அதன் பாதிப்புகளை சித்திரிக்கும் இலக்கியப்படைப்புகளை படித்தோம். இன்று போர் முடிந்து ஏழு ஆண்டுகளாகப்போகிறது.

அப்படியாயின், இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கிலும் தவிர்க்கமுடியாத புதிய அறிமுகம் தோன்றும். போரில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம், வாழ்வாதாரம், உளவியல் பாதிப்புகள் அனைத்தும் பிரசார வாடையின்றி கலை நேர்த்தியுடன் வெளிவரவேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

முன்னர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தி ஆய்வுசெய்த மரபு இருந்தது. அந்த ஆய்வுகள் இலக்கிய மாணவர்களுக்கும் பயன் அளித்தது.

இலங்கையில் போர் பற்றியோ அதன் விளைவுகள் பற்றியோ வெளிப்படையாக இலக்கியத்திற்கு கொண்டுவருவதில் சிலருக்கு தயக்கம் இருந்தது. ஆனால், புகலிடத்தில் அந்நிலை இல்லை.

அதனால் புகலிடத்தில் எழுதுபவர்களின் படைப்புகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு புதிய வரவாகின்றன. அதேசமயம் புகலிடத்தில் வெளியாகும் வாய்ப்புள்ள, இன்று இந்த வாசிப்பு அனுபவத்தில் பேசப்பட்ட நூல்கள் பரவலாக கிடைப்பது சாத்தியமற்றிருக்கிறது. இந்தத் தேக்கத்தையும் நிவர்த்திசெய்யவேண்டியிருக்கிறது.

எனவே, போருக்குப்பிந்திய வாழ்வை இலக்கியத்தில் சித்திரிக்கும் புகலிட எழுத்தாளர்களுக்கும், அவற்றை வாசிக்கும் புகலிட வாசகர்களுக்கும் இலங்கைக்கும் புகலிடத்திற்கும் இடையே ஆரோக்கியமான வாசிப்புத் தளத்தை வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பும் தோன்றியுள்ளது.

இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், திருமதி சாந்தினி புவநேந்திரராஜா, திருவாளர்கள் சங்கர சுப்பிரமணியன், ருத்ராபதி, பாலநாதன், கலாநிதி ஸ்ரீகாந்தன் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.


Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.