"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.


ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............

கோமகன்

00000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இந்தக் கேள்வி எப்போதும் இருக்கிறது. உலகிற்கு என்னைத் தெரியாது. எனவே அடையாளத்தை நிலை நிறுத்துவது முழுவதும் என் பொறுப்பு.

இயற்கை எழில் சூழ்ந்த இயந்திர வாழ்வை தள்ளி வைத்து சுத்தமான சுதந்திரக் காற்றும், இயற்கையை மருந்துகளாகக் கொண்ட செழிப்பான ஊர் எம் ஊர். இன்பமானாலும் துன்பமானாலும் இங்கு சொந்தங்கள் சொர்க்கமாக இருப்பர். அழகிய இயற்கை வனப்புமிகுந்த எம் கிராமம் இலங்கையின் வடபகுதியில் உள்ள வடமாராட்சி பகுதியான தம்பசிட்டி எனும் சிறு கிராமம், எனது பிறப்பிடம்.

எனது தந்தை வைத்தியத்துறையில் கடமை நிமித்தம் வெவ்வேறு இடங்களில் வேலை காரணமாக இருந்ததனால் நானும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் பல்கலாச்சாரத்தில் வாழவேண்டிய சூழல். இந்த வாழ்ந்த அனுபவம் மறக்க முடியாதவை.

நான் கல்வி கற்றது ஹாட்லிக்கல்லூரியில். உயர்கல்வியை விவசாய விஞ்ஞானம் கிழக்கு பல்கலைக்கழகத்திலும், 83 கலவரத்தின் பின் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து பொருளாதார தொழில்நுட்ப விஞ்ஞானத்தில் Göttingen, Germany ஜோரஜ் அகௌஸ்ட் பல்கலைக்கழகத்தில் எனது பல்கலைக்கழக படிப்பை தொடர்ந்திருந்தேன்.

1985ல் எனது பல்கலைக்கழக நண்பர்கள் அன்றய ஜேர்மன் அதிபர் கெல்மூட் கோல் (German Chancellor Helmut Kohl) மகன் பீற்றர் கோல் (Peter Kohl) & ரல்வ் குரூஹர் (Ralf Kruger) உடன் சேர்ந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, தயாரிப்பு (Consulting & Development) நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஜேர்மனியில் ஒரு வெளிநாட்டவர் ஆரம்பித்த முதல் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் என்ற பெயர் என்னையே சாரும். இதற்கு திறவுகோலாக அமைந்தவர் அன்றய ஜேர்மன் அதிபர் கெல்மூட் கோல், அத்துடன் உறுதுணையாக இருந்தவர்கள் Infosys நாராயணமூர்த்தியும் மைக்கிரோசொவ்ட்(Microsoft) நிறுவனத்தினரும். மொத்தம் 14 வருடங்கள் ஜேர்மன் அரசினது பல்வேறு தளங்களுக்கு, தொழில்நுட்பம் திட்டமிடல் ஆலோசகராக எனது நிறுவனம் இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

a)   1983 - 1988 காலப்பகுதியில் அகதியாக வருபவர்க்கு மிகவம் மோசமான சட்ட நடைமுறைகள் இருந்தன. நான் இங்குள்ள அதிஉயர்நீதிமன்றத்தினூடாக நடைமுறையில் இருந்த சட்டத்தை மாற்றியமைத்து அகதியாக வருபவர் இங்கு உயர்கல்வி கற்றலுக்கு அனுமதியழித்தமை.

b)   ஜேர்மன் பாடசாலைகளில் எமது தமிழ் பள்ளிகளில் தமிழ்மொழிக்கான பெறுபேறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டமை.

c)   ஜேர்மன் அரசினது முதல் தொழில்நுட்பம் திட்டமிடல் ஆலோசகர் (அதற்கு முன் இப்படியான பதவி இருக்கவில்லை, அத்துடன் ஆசிய நாட்டவர் இப்படியான பதவியில் அமர்வதும் முதற்தடவை)

d)   1992ம் ஆண்டு Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய Microsoft Solution Provider பரீட்சையின் அதிகூடிய புள்ளிகள் பெற்று ஜேர்மனியின் முதல் Microsoft Partner ஆக தெரிவுசெய்யப்பட்டேன்.

e)   எனது நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம், மற்றும் மென்பொருட்கள் (மக்கள் தொகை நிர்வாகம், வெளிநாட்டவர் நிர்வகிப்பு, வாகன அனுமதிப்பத்திரம், பொலீஸ் மற்றும் இராணுவ ஆயுத நிர்வாகம், அமைச்சு அதற்கு கீழான அலுவலக நிர்வாகம்) இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

f)    2000 ம் ஆண்டு Payback System தை முதன்முதல் ஜேர்மனியில் அறிமுகப்படுத்தியது. (வாடிக்கையாளர்கள் பொருட்கள் கொள்முதல் செய்யும்போது புள்ளிகள் சேகரித்து அதனால் விசேட கழிவுவிலை அல்லது பணம் அல்லது விசேட பரிசுகள் பெறும் வழிமுறை) «வாடிக்கையாளர்கள் - சில்லறை வர்த்தக விசுவாசத்திட்டம்“ இது.

g)   சற்றலைற், தொலைத்தொடர்பு ஊடாக தெரு விளம்பர பலகைகள் அபிவிருத்தி, தயாரிப்பு மற்றும் அதன் பின்னால் உள்ள விளம்பர நிபுணத்துவம் (Marketing Concept).

h)   எனது நண்பரும் ஜேர்மன் பொருளாதார அமைச்சருமாக இருந்த பிலிப் றொஸ்லர் (Phillip Rössler) உடன் கலந்தாலோசித்து ஜேர்மன் தொழில் நுட்பக்கல்லூரியை அறிவியல் நகர், கிளிநொச்சியில் நிறுவியது.

i)    2004 ம் ஆண்டு ஜேர்மன் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஜேர்மனிய வங்கி நிர்வாகிகள், தொழில் நிறுவனங்கள், அரச அரசசார்பற்ற நிறுவன நிர்வாகிகள், நகரபிதாக்கள், மானில முதல்வர்கள் என மொத்தம் 225 நிறுவனத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து 2005 ல் இருந்து இன்று வரையில் 493 திட்டங்களை ஜேர்மன் துதரகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினூாக இலங்கையில் நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். இவற்றுள் 94 திட்டங்கள் வடக்கு கிழக்கில் செயல்படுத்தப்பட்டன. இப்படியான ஒரு செயல் அமைப்பு இலங்கை தவிர்ந்து வேறு எந்த நாடுகளிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படவில்லை. இதில் எனது இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் நண்பர்கள் பலமாக இருந்து உதவியுள்ளார்கள், அவர்களுக்கு இந்த நேரத்தில் எம் நன்றிகள்.

(Position f & g) = தற்போது உலகம்பூராக பல மிகப்பெரிய நிறுவனத்தினர் இந்த வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். காப்புரிமை (Patent) பண்ணாத காரணிகளால் பலர் இலவசமாக பயன்பட வாய்ப்பாக அமைந்தது என் துர்அதிஸ்டமே.

இவைகள் எல்லாம் பலர் தெரிந்திராத எனது மைல் கற்கள்
தற்போது பொருளாதாரம், திட்டமிடல் நிதி துறை சார் வல்லுனராக பல நாடுகளில் பணிபுரிகின்றேன். எனது சுயவிபரம் வெறும் தொகுப்பாக மட்டும் அல்லாது நான் கற்றதை உபயோகிக்கவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் எண்ணுகிறேன். அதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முயற்சியும் செய்கிறேன். எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லா இடங்களிலும்; என்னை பொருத்த வரையில் வாழ்க்கையில் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது மிகவும் முக்கியம். நான் வேண்டுவது, நாம் கற்றவற்றை பயன்படுத்தும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.

பல்வேறு அரச, அரசசார்பற்ற சமூக அமைப்புகளோடு சேர்ந்து என்னால் இயன்றவரை சில பொது காரியங்களில் ஈடுபட்டு வருகிறேன். அன்பு, அமைதி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை உலகம் முழுவதும் நிலைபெற என்னால் இயன்ற வரை செயலாற்றி வருகின்றேன். இன்னும் பல்வேறு நல்ல கனவுகளோடு இந்த சமூகத்தில் என்னுடைய வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ளதாக மாற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். வாய்ப்புகள் வரும்போது அதை சரியாக பயன்படுத்தக்காத்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து ஏறத்தாள 33 வருடங்களை கடந்து விட்ட உங்களது இளமைக்காலம் தாயகத்தில் எப்படியாக இருந்தது ?

என்னுடைய பால்ய பருவத்தில் என் தந்தை என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். பண்டிதர் K.S. கிருஸ்ணமூர்த்தி மற்றும் தத்துவமேதை ஜே.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரை தன் குருவாக ஏற்று நடந்த உன்னதமான மனிதர். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். 

எல்லோருக்கும் இருப்பது போன்று என் இளமைக்காலத்தின் மையப்புள்ளி ஹாட்லிக்கல்லூரி தான். படிக்கும் போது சில நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்தாலும் எனது பள்ளிப்பருவம் முழுவதும் பொறுப்பான மாணவனாகத்தான் இருந்தேன்.
என் தந்தையார் வழியிலும் தேச உணர்வு, விடுதலையுணர்வு என் நெஞ்சில் குடியேறிற்று. காந்தி, நேரு, நேதாஜி முதலியவர்கள் மீது அளவுகடந்த மரியாதை இருந்தது. நான் முதல்தரமான தமிழிலக்கிய மாணவன். எனக்கு வாய்த்த பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, சிவா கிருஸ்ணமூர்த்தி, Prof. கணேசலிங்கம் தகுதிமிக்கவர்கள். தமிழ் இலக்கியம், புதுக்கவிதை, அரசியல், ஆகியவற்றிற்கு வித்திட்டவர்கள். நான் என் இளமைக்காலம் முதலே மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன். என் தந்தை என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியது இல்லை. இதனால் என் எல்லா ஆர்வங்களுக்கும் நல்ல தீனி கிடைத்தது…

ஜெர்மனியின் அரசியல் கட்சியான சோசலிச ஜனநாயக கட்சியில் (FDP) அடிப்படை உறுப்பினராக இருக்கின்றீர்கள் .அதில் உங்கள் பங்களிப்பு எப்படியாக இருந்தது ?

இங்கு ஒன்றை பேச்சுவழக்கில் கூறுவார்கள்;  " அரசியல் இல்லாமல் பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இல்லாமல் அரசியல் இல்லை". இது நடைமுறையில் உண்மைதான். எனது வளர்ச்சிக்கு தேவையாயும் தவிர்க்க முடியாததாகவும் அரசியல் இருந்தது. அதனால் 25 வருடங்களுக்கு முன்னர் இந்தக்கட்சியில் அங்கத்துவமானேன். மிகக் கூடுதலான யூதர்கள் மற்றும் சுயதொழில் புரிவோரை அங்கத்தவர்களாக கொண்ட ஒரு பலமான கட்சி.

கட்சியின் பல்வேறு அரசியல் செயல்பாடுகள், திட்டம் வகுத்தல் ஆகியவற்றில் எனது பங்களிப்புகள் உண்டு, தேர்தல்காலங்களில் ஒருசிலரது தேர்தல் பிரச்சாரப் பிரிவில் அவர்களது வெற்றிக்கு பணியாற்றிய அனுபவங்கள் நிறைய உண்டு. அவர்கள் ஜேர்மனிய அரசின் சபாநாயகராக, சுகாதார அமைச்சராக, உள்நாட்டு அமைச்சராக, பொருளாதார அமைச்சராக வெளிநாட்டு அமைச்சராக இருந்திருக்கிறார்கள். இதனூடாக சர்வதேச ரீதியாக நல்ல பலமான தொடர்புகளையும், நட்புகளையும், ராஜதந்திரிகளினது, அரசியல், பொருளாதார துறைசார் வட்டத்துக்குள் நம்பிக்கை பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாயகத்தில் ஏற்பட்ட சமாதான காலத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் முக்கிய அனுசரணையாளராக இருந்திருக்கின்றீர்கள் .அப்பொழுது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எப்படியாக இருந்தன ?

அரசுத் தரப்பு & புலிகளின் சமாதான பேச்சுவார்த்தையில் முதல் பேச்சுவார்த்தை தொடங்கி மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்தடுத்து நடந்த அமர்வுகளில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வுக்கு அரசுத் தரப்பு ஒத்துக்கொண்டது.

நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து நாட்டின் நாக்கோன் பத்தோம் என்னும் நகரில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 9-ஆம் தேதிவரை நடைபெற்றது. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் உலக நாடுகளிடமிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காகப் பெறப்படும் நிதியினை யார் பெறுவது, எவர் பொறுப்பில் வைத்துக் கையாளுவது என்பதும், பாதுகாப்புவளையப் பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றம், குறித்தும் அவ்வாறு குடியேறும் மக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருந்தால், அவர்கள் ஆயுதங்களைக் களையவேண்டும் என, விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதித் தீர்மானமாக, உலக நிதியளிப்போரிடமிருந்து பெறப்படும் நிதியைக் காப்பது, உலக வங்கியின் பொறுப்பில் விடுவது என்றும் முடிவானது.
ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, 7-8, பிப்ரவரி 2003. பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானதன் காரணமாக, அவரால் அதிகதூரம் பயணம் செய்யமுடியாத நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள நோர்வே தூதரக வளாகத்தில் நடைபெற்றது

நோர்வே மற்றும் பேச்சுவார்த்தைக்குழுவின் வேண்டுகோள்களுக்கு அமைய ஜேர்மனியை தேர்ந்தெடுத்ததில் பல பின்புல அரசியல், பொருளாதார, ராஜதந்திரக் காரணங்கள் உண்டு. எல்லாவற்றையும் நான் இங்கு கூறமுடியாது. ஜேர்மனியர், ஜரோப்பாவின் ஒரு முக்கிய வல்லரசுநாடு, தொழில் நுட்பத்தில், அபிவிருத்தியில் முன்னணியில் இருப்பவர்கள், பலமான சட்டங்களை, வெளியுறவுக் கொள்கைகளை கொண்டவர்கள், மற்றய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பணத்தை வாரி இறைப்பவர்கள், அதைவிட போருக்கு பின்னரான நாட்டின் மீள் கட்டுமானத்தில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் என்ற காரணங்களால் ஜேர்மனையும் பின்தளத்தில் உள்வாங்க போடப்பட்ட திட்டத்தின் ஆரம்பம்தான் ஜேர்மனின் தெரிவு. இதற்கு ஜேர்மன் அரசு தனது 5 பேர் அடங்கிய குழுவை தெரிவுசெய்திருந்தது. அதில் நானும் ஒருவன், மிச்சப்படி நேரடியான பங்காற்றல் எல்லாம் நோர்வேயின் தலைமையில், வழிகாட்டலில் மாத்திரமே நடைபெற்றது.

இந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைத் தொடங்க இருந்த சிறிது நேரத்துக்கு முன்பாக இலங்கை கடற்படையானது, புலிகளின் படகொன்றை வழிமறித்தது என்றும், அதிலிருந்த 3 கடற்புலிகள் சயனைட் அருந்தத் தயாராக இருப்பதாகவும் கடற்பிரிவுத் தலைவர் சூசை, பேர்லினுக்கு பாலசிங்கத்திடம் தெரிவித்தார். அங்கிருந்த அமைச்சர் மிலிண்டா மோரகோடாவிடம், விளைவுகள் மோசமாவதைத் தடுக்கவேண்டும் என்று பாலசிங்கம் கேட்டுக்கொண்டார். இந்தச் செய்திப் பரிமாற்றத்துக்கிடையே 3 கடற்புலிகளிடமிருந்தும், தகவல் தொடர்பு இல்லை என்று மீண்டும் சூசையைத் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்ட், அந்த மூன்று கடற்புலிகளும் சயனைட் அருந்திய நிலையில் படகு தகர்க்கப்பட்டது என்று பேர்லினுக்கு தகவல் தெரிவித்தார். அத்தோடு அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; வடக்கு-கிழக்கு புனரமைப்புப் பணிகளுக்கும் போதிய நிதியாதாரம் வழங்கப்படவில்லை; மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை; போரில் இடப்பெயர்வு ஆனவர்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்த முடியவில்லை; பாதுகாப்புக் காரணங்கள் என்று ராணுவம் மறுக்கிறது என்றும் புலிகளால் புகார் கூறப்பட்டு பேர்லின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்காமல் குழப்பத்தில் முடிந்தது அனைவரும் அறிந்ததே. ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டின் ஹக்கோனே என்னும் இடத்தில் நடைபெற்றது (18-21, மார்ச் 2003).
இரண்டாவது விடயம்; விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன் அரசியல் யாப்பு, பாரளுமன்ற அமைப்புமுறை, இலங்கை பாரளுமன்ற கட்டமைப்பின் பாதகங்கள் பற்றி ஆராய்வதற்கு ஜேர்மன் அரசை அணுகியிருந்தபொழுதும் நான் கடமையாற்றியுள்ளேன்.

கணணித்துறையில் கணனியின் மென்பொருட்களது காப்புரிமைகள் எப்படியாக இருக்கின்றது ?

1983 ல் உலகை கற்பனை செய்து பாருங்கள்.! கணனி இல்லை, Smart Phone or Iphone இல்லை, Laptop இல்லை, சாமானியர்களுக்கு கணனிகளை அணுகும் வசதியும் இருக்கவில்லை. தொழில்நுட்ப திறன் கொண்டவர்களுக்கே அது சாத்தியமாக இருந்தது. அவர்களும் தரவுகளை கையாளவே கம்ப்யூட்டரை பயன்படுத்தினர். 1990 வரை, ஆரம்பகால இமெயில் அமைப்பு இணையத்தை பயன்படுத்தவில்லை.

உலகம் பூராக 1989 ல் காப்பி ரைட் சட்டம் (Copy right law), மென்பொருள் (Software) உரிமையை காக்கும் வகையில் மாற்றப்பட்டன.1990 – 1994 களில் தான் மென்பொருள் காப்புரிமையை (Software patent) உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் துவங்கியது. இந்தியாவில் காப்புரிமைச்சட்டம் 2004ல் தான் நடைமுறைக்கே வந்தது. பல நாடுகளில் இன்னும் காப்புரிமைச்சட்டம் நடைமுறையிலே இல்லை என்பதையும் குறிப்ட வேண்டும்.

மென்பொருட்கள் உரிமையடிப்படையில் இரண்டு வகையுண்டு.

1.காப்புரிமை கொண்டு பெரும்பாலும் விற்பனையிலோ, சிலசமயம் விலையில்லாமலும் வெளிவருபவை.

2. கட்டுப்பாடுகள் இல்லாத உரிமையில் பெரும்பாலும் இலவசமாக வெளிவருபவை.

இந்த இரண்டாவது வகையே கட்டற்ற மென்பொருள் என்று பொதுவாக விலையில்லாமலும், எந்தவிதக் காப்புரிமை இன்றியும் விநியோகிக்கப்படுகிறது. இதனை யாரும் மேம்படுத்தலாம், யாரும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனால் தொழில்நுட்பம் எளிதில் அனைவருக்கும் வந்தடைகின்றது, அதன் பலனை ஒட்டுமொத்தச்சமூகமும் அனுபவிக்கலாம். இவற்றை யார் உருவாக்குகிறார்கள்? பெரும்பாலும் தன்னார்வலர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியும், அதை மேம்படுத்தியும் வளர்க்கிறார்கள். இவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? பொதுவாக நேரடி லாபம் இல்லாவிட்டாலும், நன்கொடைகள், சேவைக்கட்டணம், விளம்பரம் போன்ற வழிகளில் பலனடைகிறார்கள். காப்புரிமை கொண்ட மென்பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள யுக்திகள் வெளிப்படையாக இல்லாததாலும், பணம் கொடுத்து வாங்கியவர்கூட நிரல்களை மாற்றியமைக்க முடியாததாலும் கொள்கையடிப்படையில் கட்டற்ற மென்பொருளுக்கு பெரிய ஆதரவு உண்டு.

சமூக வலைத்தளங்கள் மீதான அண்மைக்காலமாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் எப்படியாக இருக்கின்றது?

இளம் பருவத்தினர் செல்போன், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளை கணிசமாக பயன்படுத்துகின்றனர். போதிய புரிதல் இல்லாத வயதில் மாணவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால், பல்வேறு தீமைகள் ஏற்படுவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சில சர்வதேச பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர் களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வரும் கல்வி ஆண்டில் இருந்து 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயனாளரின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. தகவல் பரிமாற்றங்கள், நபர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன
சமூக வலைத்தள குற்றங்களை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

புலம் பெயர் சமூகத்தில் நிகழ்ந்துவரும் வங்கி கடன் அட்டைகள் மோசடிகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது ? இந்த வங்கி கடன் அட்டை மோசடி அறிவியல் ரீதியில் எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமானது ?

இது அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது என்பது என்னுடைய பார்வை மட்டுமல்ல. அதனால் தான் இந்த கேள்வியும் இங்கே இடம் பெற்றுள்ளது என்பதை நான் அறிவேன். இன்றைக்கு உலகின் எந்த அளவிற்கு வங்கிகளின் நடவடிக்கைகள் மக்களின் நலன் கருதி கணினி மயமாக்கப்பட்டுள்ளதோ அந்த அளவிற்கு அதற்கு எதிரான நுட்பங்களும் தோன்றி இருக்கின்றன. நியூட்டனின் விதிப்படி ஓர் வினைக்கு எதிர் வினை உண்டு என்பது போல், இந்த மோசடிகள் மிக நுட்பமாக தொழில்நுட்ப அறிவியல் பூர்வமாக மிகப் பெரிய அளவில் பின் பலத்தோடு திட்டமிட்டு செயல்படுகின்றன. இது போன்ற மோசடிகளை ஆய்வு செய்து இதைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விஞ்ஞானம் என்பது காலத்திற்கேற்ப மாற்றத்துக்குரியதும் மற்றும் மேம்படுத்தக்கூடியதுமாகும். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது சம்பந்தப்பட்ட சட்ட ஒழுங்கு நிலைகளும், தண்டனைகளும் காலத்திற்கேற்றப்படி கடுமையாக்கப்பட வேண்டியதும் கட்டாயம்.

முகனூல் போராளிகள் பற்றிய உங்கள் மதிப்பீடுதான் என்ன ?

a) முகனூல் இன்றைய ‘நவீன இளைஞர்களின் முகவரி. பல் துலக்காமல் கூட இருக்க முடியும், முகனூலில் கருத்து போடாமல் இருக்க முடியுமா என்ற நிலை இப்போது. நட்பின் இலக்கணத்திற்குள் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது ஒரு நிபந்தனையாக மாறி வருகிறது. எனினும் பேஸ்புக்கில் அனைத்து உணர்ச்சிகளும் ஒரு வணிக நோக்கத்திற்காகவே திரட்டப்படுகின்றன. ஒரு கவிதையையோ இல்லை படத்தையோ பகிர்ந்தோ புரட்சியாளர் ஆனவர்கள் ஆயிரம்பேர். இந்த மாய உலகம் உருவாக்கியிருக்கும் உணர்ச்சி உண்மை உலகத்தோடு உள்ள உறவை மறைத்து வருகிறது. புரட்சியையும், காதலையும் நடப்பையும் கூட உரமாக போட்டு சமூக வலைப் பின்னலை உருவாக்கியிருக்கிறது பேஸ்புக் நிறுவனம். இப்படி ஒரு சமூக கருத்துப் பரிமாற்றத் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது. பேஸ்புக் உங்களையும் உங்களது விருப்பங்களையும் விற்பனை செய்கிறது. அந்த விற்பனை உண்மையில் வணிக நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இறுதியில் பேஸ்புக்கின் உண்மையான உணர்ச்சி இந்த சரக்கு உணர்ச்சிதான் என்றால் முகநூல் புரட்சியாளர்கள் ஒத்துக்கொள்வார்களா?

b) எகிப்தில் நடந்த புரட்சியில் பேஸ்புக் முக்கிய பிரச்சார ஊடகமானது போல இங்கே அதிகம் பேர் போராளிகள் போல் குரல் கொடுப்பார்கள். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் காணாமல் போய்விடுவார்கள். யார் வீட்டுப்பிரச்சினைக்கோ முன்னின்று குரல் கொடுக்கும் இந்த போராளிகள். சொந்தப்பிரச்சினையில் முக்கால்வாசிப்பேர் மவுனம்தான் காக்கின்றனர். முன்பின் தெரியாதவர்களிடம் சண்டை போடுவது என்பது இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. சரி யாருக்காக சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் அனேகம்பேர் இவர்கள் சார்ந்த கட்சிக்காகவும், கட்சி தலைவர்களுக்காகவும் சண்டை போடுவார்கள். பயனற்ற இந்த சண்டையின் விளைவு ஏதேனும் நல்லது நடக்குமா? அதுவும் கிடையாது.

c) இவர்கள்  முயற்சிப்பது எல்லாம் எப்படியாவது நாமும் முகனூலில் ஒரு பிரபலம் என்று ஆக வேண்டும் என்பதுதான். முயற்சித்தால் எத்தனையோ சீர்திருத்தங்களை இதில் உள்ள பிரபலங்கள் கொண்டு வரலாம். ஆனால் பொழுது போக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைதளம் இன்று வெறும் சாக்கடை போல் ஆகிவிட்டது ஒரு சிலரால்.

வளர்ந்துவிட்ட கணனியுகத்தில் தமிழை பொறுத்தவரையில் எழுத்துப்பிழைகள் அதிகமாக காணப்படுகின்றன இவைகளுக்கு கணனியியலில் தீர்வுக்கான சாத்தியங்கள் உண்டா?

தமிழினம் மற்ற சர்வதேச இனங்களுடன் ஒப்படுகையி்ல் படித்தவர்கள்; பார்த்ததையும் நினைத்ததையும் எழுத்திலே வடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அவர் தம் எழுத்தில் பிழைகள் இருக்கலாமா?

a) இங்கு தமிழ் மென்பொருளுக்கு ஆய்வு செய்யவே ஆட்கள் குறைவு. மேலும் உருவாகும் மென்பொருளையும் வாங்கி ஆதரிக்கும் பொதுப்போக்கு எம்மவர் மத்தியில் இல்லை. மென்பொருளுக்கான நன்கொடைகள் குறிப்பிடுமளவு இல்லை. அதிகமாக இலவசங்களுக்குப் பழக்கப்பட்ட எம்மக்கள் சேவைக் கட்டணத்தை விரும்புவதில்லை. சிறிய சமுதாயம் என்பதால் ஆய்வுகளுக்கான செலவு விகிதம் அதிகம். “தமிழை வைத்து காசு பார்க்கிறார்கள்” என்ற பொதுச்சிந்தனையால் தமிழ் மென்பொருளுக்கு வணிகச்சந்தை அழிந்துவருகிறது.

b) இன்று தமிழ்ப்பிழை திருத்திகளைத் தேடவேண்டிய காலமிது. இணையத் தமிழில் சந்திப்பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப்பிழைகள், மரபுப்பிழைகள் உட்பட பலவானவை மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். சிறந்த எழுத்தாளர்களின் எழுத்திலேயே பிழைகளைக்காணலாம். அவை அப்படைப்பைத் திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். தமிழ்த் தளங்களின், தமிழ்ப்பயனர்களின், தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை.

c) ஆங்கில நூல்களில் பிழைகள் மிக அரிதாகவே காணப்படும். ஆனால் தமிழ் நூல்களில் பிழைகள் மிகுதி. முன்பு நூலின் பிழைகளை 'பிழை திருத்தம்' என்னும் தலைப்பில் வெளியிட்டனர். இப்போது அவ்வாறு செய்வதில்லை. காரணங்கள் இரண்டு.

1. பிழைகளைத் தொகுத்து வெளியிட்டால் பிழை திருத்தமே நூலின் பல பக்கங்களை நிறைத்துவிடும்;

2. நூலாசிரியர்க்கு உண்மையாக தம் நூலில் என்ன பிழைகள் உள்ளன என்பதே தெரியாது.

தமிழைப் பிழையின்றி எழுதத்தெரியாதவரெல்லாம் எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் இருக்கும் இழிநிலை எம் தமிழ்ச்சமூகத்தில் உள்ளது. இது தமிழுக்கு மட்டுமல்லாமல் உலகின் அனைத்து மொழிகளிலும் இந்த சூழ் நிலையைக் காணலாம். எனவே தமிழில் தான் பிழைகளுடன்  நூல்கள் வெளிவருகின்றது என்ற குற்றச்சாட்டைப் பொதுவாக வைக்காமல், அனைத்து மொழிகளிலுமே இந்த தவறு இருக்கின்றது என்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு நூலாசிரியர் தனது எழுத்தையும், அதில் உள்ள சிந்தனையும் வெளிவர எடுக்கும் முயற்சியில் மொழியும், மொழியில் உள்ள இலக்கணப் பிழையும், சில சமயம் எழுத்துப் பிழையையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மேலும் இது அரிதாக காணப்படும் ஒரு விஷயமே. எனவே, திரைப்படங்களுக்கு சென்சார் என்ற அமைப்பு இருப்பதுபோல எழுத்துக்கும் ஒரு குழு அமைத்து, ஒரு நூல் வெளிவரும் முன்பு அதை  நூலாசிரியர் குழுமத்துக்கு அனுப்பி அவர்களை கலந்தாலோசித்து பின்னர் வெளி வந்தால் இந்த சூழ் நிலை மாறலாம்.

d) சமூகம் மேம்பட மாற்றுச்சிந்தனை மிகவும் முக்கியம். அதுவும் கல்வியில், கணனியுகத்தில், செயல்-வழி கற்றல் மற்றும் புதுச்சிந்தனை இல்லாமல் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை. சுயதொழிலும், கல்விக்கான மாற்றமும் இன்றைய அவசியம். ஆனால் இவை இன்று எந்த தளத்திலும் அதிகம் பேசப்படாத ஒன்றாகவே உள்ளது. தமிழில் தோன்றும் ஒரு பிழை, உடலில் ஒரு அழுக்கு! அழுக்கில் உடல் அழிந்து போகும். அதனால் பிழையில்லாமல் தமிழ் வாழக் காப்பது எம் கடமை. பிழையோடு எழுதுவது மொழிக்குத் தீங்கு; பிழை நீக்கி எழுதுவது மொழித் திறனுக்கு அறிகுறி. எனவே பிழைகளையும் அவற்றைக் களைந்தெறியும் முறைகளையும் நாம் காணவேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். செயல்படுத்தல் வேண்டும். மிக நீண்ட முக்கிய பணி இது

இன்றைய தமிழ் இலக்கியத்துறையில் இலக்கியப்பிரபலங்கள் சர்ச்சைகளை உருவாக்குவது மலிந்து காணப்படுகின்றது. இத்தகைய போக்குகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பிரபலங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த வகையில் சிலர் சர்ச்சைக்காகவே இலக்கியத்துறைக்கு வந்தவர்கள், பிரபலமானவர்கள் என கூறலாம். இவர்கள் அடிப்படையில் சுய விளம்பரப் பிரியர்கள். அனைத்துமே சமூக அளவில் சில வார்த்தைகளை உதிர்த்து கொஞ்சம் சர்ச்சைகளை உருவாக்கக் கூடியர்கள். அவர்கள் பேசப்பட வேண்டும்!! இதுதான் அவர்கள் நோக்கம். இதுவும் ஒருவித வியாபாரத்தந்திரம் தான். மற்றவர்க்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர்கள் தங்கள் இருக்கும் அந்தஸ்து மற்றும் பொறுப்புகள் உணர்ந்து வார்த்தைகளை பக்குவமாக கையாளுவார்கள் என நம்புவோம்.

புலம் பெயர்நாடுகளில் இருந்து கொண்டு சகல கலச்சார விழுமியங்களையும் அனுபவித்துக்கொண்டு, போரினால் பாதிப்படைந்து அதிலிருந்து மீண்டு வருகின்ற சனங்களைப் பார்த்து " தாயகத்தில் கலாச்சாரம் சீரழிந்து விட்டது" என்று அலறுபவர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடுதான் என்ன ?

மொழி கலாச்சாரம் இவை இரண்டும் நம் கண்கள், நாம் எந்த அளவு இவற்றை போற்றுகிறோமோ அந்த அளவிற்கு நமது இனத்தின் பெருமை உலகுள்ளவரை பறைசாற்றும். மாற்றம் மாற்றம் என்று சொல்லி, மாறுதலுக்கு உள்ளான இனமாகவும் காலத்தின் நாகரீகத்தின் ஈர்ப்பாலும் மாறுபட்ட அடையாளங்களை கொண்டும் இன்று எமது தேசம் சீரழிந்து நிற்கின்றது என்பது உண்மைதான். சாதனைகள் படைத்தும் நிர்வாகத்தில் ஆளுமை கொண்ட ஆற்றல் மிக்க பெண்கள் இன்று பல ஆபத்தான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டும், பாலியல், அச்சுறுத்தல்கள், என பல கோரதாண்டவம் ஆடத்தொடங்கியுள்ள நிலையில் சுய பாதுகாப்பற்றும் நிற்கதியாக நிற்கின்றார்கள். குடிப்பதும், ஆடம்பர வாழ்வுக்கும் அதிகமாக பணத்தை வாரி இறைக்கின்றார்கள். அதுமட்டும் இல்லை, யாழ்மாவட்டத்தில் மட்டும் 600.000 லட்சம் லீற்றர் மதுபானம் விக்கப்படுவதாகவும் இலங்கை மாவட்டத்தில் முன்னிலைக்கு வந்துள்ளது. 2009 ஆண்டுக்குப்பின்னர்தான் இந்த நிலைமை.

இவர்களுக்கு பணம் வெளிநாட்டில் உள்ள இவர்களது உறவினர்கள் தான் அனுப்புகின்றனர்கள். அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து தாயகத்துக்கு வந்து அங்குள்ள இளசுகளுக்கும் குடிவகைகளை விதம் விதமாக வாங்கி கொடுத்து தாமும் வயது வித்தியாசம் இல்லாமல் குடிக்கின்றார்கள், புகைக்கிறார்கள், கொலை கொள்ளை கலாச்சாரத்துள் மூழ்கித்திழைக்கிறார்கள் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் அறிவு சாலிகள். புலம்பெயர் சமூகத்திற்கும் இந்த சீரழவுகளில் பங்குண்டு. இவர்களை இனம் கண்டு எமது இனத்தின் கலச்சார விழுமியங்களை, அருமை பெருமைகளை காப்பாற்ற வேண்டிய கடமை, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. காலத்தின் தேவையும் இதுவே.

சமகால தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல்தான் என்ன ?

சமகால இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுக வேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப்பண்பும் இல்லாது ஒரு கருத்தை முன்வைத்தல் என்பது கடினமானது. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில ஒரு கருத்தை முன்வைக்கலாமென நினைக்கின்றேன்.

போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒருவகையில் அபத்தமானது. 2000ம் ஆண்டுக்குப் பிறகான ஈழத்திலக்கியத்தில், மிக  நீண்டகாலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரையேனும் கண்டுகொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது.

ஈழத்திலக்கியம் என்பதே அவற்றின் நிலப்பரப்புகளுக்கும், கலாசார தளங்களுக்கும் ஏற்ப உட்பிரதேசங்களிலேயே வித்தியாசப்படுபவை. உதாரணமாக யாழில் வெளிவரும் படைப்புக்களுக்கு, பிரயோகிக்கும் விமர்சன அலகுகளை கிழக்கிலோ, மலையகத்திலோ முன்வைக்கமுடியாது. முற்றிலும் வித்தியாசமான சூழல் கிழக்கினதும் மலையகத்தினுடையதுமாகும்.

புறச்சூழல்களை முன்வைத்தே நாம் படைப்புக்களை அணுக வேண்டியிருக்கின்றது. அதேபோன்று வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களினதும், கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களினதும் வாழ்வு நிலை என்பது கூட முற்று முழுதிலும் வேறுபடக்கூடியது. இந்த வித்தியாசங்கள் அவர்களின் படைப்புக்களில் ஊடாடுவதை விளங்கிக்கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாகச் செய்துவிட முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக வாழ்வு குலைக்கப்பட்டு புதிய நாட்டுச் சூழலில் வாழத்தொடங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் வேறுவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.

ஷோபாசக்தியின் 'கொரில்லா', முத்துலிங்கத்தின் 'மகாராஜாவின் புகைவண்டி' ஆழியாளின் 'உரத்துப் பேச'வும், அகிலனின் 'பதுங்கு குழி நாட்களும்', சக்கரவர்த்தியின் 'யுத்தம்', திருமாவளவன் கவிதைகள், தேவகாந்தனின் 'கதா காலம்', தாமரைச்செல்வியின் 'அழுவதற்கு நேரமில்லை',.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்களும்', பாலகணேசனின் 'வர்ணங்கள் அழிந்த வெளியும், பொ.கருணாகரமூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்', இலண்டனிலிருந்து பத்மநாப ஜயர் இப்படி பலரை உதாரணமாகக் கொள்ளலாம்.

வாசகருக்கு- ஒரு படைப்பாளி ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால் கூட அவர் கவனிக்கக்கூடியவர் என்றுதான் எமது ஈழத்து மரபும் வாழ்வும் கற்றுத்தந்திருக்கின்றது. இந்த மரபு இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது என்பதல்ல, சங்ககாலக் கவிஞர்களை இப்போதும் நினைவுகூர எங்களுக்கு அவர்களின் ஒன்றிரண்டு பாடல்களே போதுமாயிருக்கிறது அல்லவா?

இந்தக் காலகட்டத்தில் இணையம் பல புதிய படைப்பாளிகளை அடையாளங்காட்டுகின்றது. இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.
ஏன் இவர்களின் படைப்புக்களோடு இவர்களின் புறச்சூழல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவர்களைப் போன்ற பல படைப்பாளிகள் பலர் இவ்வாறான இழப்புக்களோடும் துயரங்களோடும் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழத்துப் படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.

ஈழத்திலக்கியம் (ஈழம் & புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் சகாப்தத்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும்.

பெரும் சனத்தொகையைக் கொண்ட,  எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையிருந்தும் தமிழகத்திலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன.
ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகாலத்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்பதும் பிறகு சடுதியாக ஒருவித உறைநிலைக்குப் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை. 3 தசாப்த காலத்தை தங்களுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும்.

நமக்கு விதிக்கப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எமது படைப்புக்கள் தமது தளத்தை உலக அளவிற்கு விரிவடையவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது. நம் படைப்பாளிகள் சக படைப்பாளிகளிடையோ வாசகர்களிடையோ விரிவான உடையாடல்களை நிகழ்த்தாது தங்களின் சாளரங்களை இறுக்க மூடிக்கொண்டிருப்பது இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். மற்றும் நாம் இன்னும் அரசியல், சினிமா தொடக்கம் இலக்கியம் வரை இந்தியா மீதான அடிமை மோகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டியிருக்கிறது.

அவ்வப்பொழுது கவிதைகளை எழுதி வருகின்ற நீங்கள் அவற்றை ஆவணப்படுத்த முன்வராமைக்கு ஏதுவான காரணங்கள் தான் என்ன?

இலக்கியத்துறையில் எனது வரவு 1980ல் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே ஆரம்பமான சுவாரசியமான ஒன்று. புலோலியுரான் என அறிமுகமாகி பல கவிதைகளை, கட்டுரைகளை, வரைந்திருக்கிறேன். இலங்கை வானொலி, வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு ஆகியவற்றில் வெளிவந்திருந்தது. இதற்கு, பத்திரிகையாளரகள் திருமதி இரத்தினம், ராஜசிங்கம், பல்கலைக்கழக ஆசான் நித்தி கனகரத்தினம், எஸ்.பொ ஆகியவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்த சிலர். புத்தகங்களாக வெளியிடுவதற்கு நேரமின்மைதான் மிகமுக்கிய காரணம். இந்த வருட இறுதியில் இதற்கான வேலையில் இறங்க திட்டமிட்டுள்ளேன். கவிதைகள் மாத்திரமல்ல, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் சம்பந்தமான புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழிகளில் வெளியிடவுள்ளேன்.

தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து பல வருடங்களை கடந்த நீங்கள் தாயகத்தின் ஒற்றையாட்சி அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றீர்களா ?

இல்லை! ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் எந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதும் ஆகும்.

தற்போது பௌத்த மதத்தை முன்னிறுத்தி ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மீள வரையப்படுகின்றது. இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு கண்டுவிட முடியும் என்கிற முனைப்பு, கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்ற போது எவ்வளவு அபத்தமானது என்பது வெளிப்படையாக புரியும். தமிழ் மக்களின் இறுதி ஆணை என்பது ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கானது. அது, ஒற்றையாட்சி என்கிற விடயத்தை குறித்தானது அல்ல. இந்த நிலையை, தமிழ் மக்களின் நெகிழ்நிலை தரப்பாக தம்மை தொடர்ந்தும் முன்வைத்துக் கொண்டிருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார மையம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பது இதுவரையில் மிகப்பெரிய கேள்விக்குறி.

முள்ளிப்பேரவலம் முடிவடைந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சமகாலத்தில் இருக்கும் அரசியல் தலைமைகளிடம் பேரம் பேசும் வலுவானது எப்படியாக இருக்கின்றது ?

தமிழ் மக்களின் சார்பில் பேசும் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், அத்தகைய நிலையை தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு கொடுத்தனர். இன்று தமிழ் மக்களின் அந்த ஆணை, கூட்டமைப்புக்குள் இருந்தே கொச்சைப்படுத்தப்படும், நிகழ்வுகளும் நடக்கின்றன. இப்போது உடைபட்டுப் போய்விடுமோ என்பது தான், அண்மைக்காலத்தில் தமிழ்மக்களிடம் தீவிரமாகத் தோன்றியிருக்கின்ற கவலை.

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் சூழல் என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான எதிர்க்கட்சி என்ற பலத்தைக் கொடுத்திருந்தாலும், அதன் பேரம் பேசும் வலுவை குறைத்திருப்பதாகவே கருத்து நிலவுன்றது.

தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலு பற்றிய கேள்வி எழுந்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமாகச் சித்திரிக்க முனைந்தாலும், இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் (SLFP + UNP) இணைந்து ஆட்சியமைத்துக் கொண்டதுதான் இந்த நிலைக்குப் பிரதான காரணம். முன்னொருபோதும் நிகழ்ந்திராத இந்த அரசியல் அதிசயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், பேரம் பேசும் வலுவை குறைத்து விட்டது. இதுதான் யதார்த்தம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பின்னர் தமிழர் தரப்பில் இருந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழர் தேசியக்கூட்டமைப்பானது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை இன்றும் ஆதரித்து நிற்கின்றதா ?

இல்லையென்றுதான் கூறவேண்டும். கடந்த வருடம் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப்பதில் விட்டுக்கொடுப்புக்கோ வேறு வகையான இணக்கப்பாட்டுக்கோ இடமில்லை அரசியல் உரிமைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் ஒருமித்த உணர்வோடு வீட்டுச்சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்பதைக் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியமாகும் என்று கூறித்தான் வென்றார்கள், பாரளுமன்றம் சென்றார்கள். பின்னர் இவர்கள் இதயத்தால் இணைந்து வேறு ஒரு நிகழ்ச்சி நிரலில் நடந்து கொள்வது அண்மைக்காலமாக  நாம் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழர்களின் தாயகக் கோட்ப்பாடு, என்ற சொல் இனிமேல் அடுத்த தேர்தலில்தான் இவர்கள் வாயிலிருந்து வரும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் மக்களுக்கான உரிமை குறித்து ஒருவர் பேசவேண்டும் என்பது உங்கள் பார்வையிலே எந்தவகையில் ஆபத்தாக இருக்கின்றது ?

தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்து குறித்த தமிழ்மொழி பேசும் மக்களின் பொது அபிப்பிராயத்தை தெரிந்துகொள்ள வேண்டிய காரியபூர்வமான, தார்மீக முறையிலான கடப்பாட்டிலிருந்து வழுவி, மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல், அனுசரித்து நடந்து கொள்ளுதல் தொடர்பில் சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் அதிகளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனங்கள் மீதான பாரிய மீறுகைகள், அடிப்படைச்சுதந்திரங்களுக்கான உலக மதிப்பை பரிசுத்தமாக மேம்படுத்தும் கடப்பாடுகளில் சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக தவறிழைத்தே வந்திருக்கின்றது/வருகின்றது.

சமகாலத்திலும் கூட, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள், அச்சம்பவங்கள் தொடர்பில் வெளிஉலகுக்கு பகிரங்கப்படுத்த முனைகின்றனர்.
இவ்வளவு சிக்கலான, 60 வருடங்களுக்கு மேலான ஓர் இனத்தின் பிரச்சனைகளை தனி ஒருவர் கையாளுவதற்கு தமிழர் தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. அப்படி இருந்தாலும் அதை பெரும்பான்மையினருடன் கையாள்வது முடியாத காரியம்.
இலங்கை, தமிழகம், புலம்பெயர் நாடுகளிலுள்ள பேராசிரியர்கள், சட்டவாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் – மனித உரிமை செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் பலரை மதிஉரைஞர் குழுமமாகக்கொண்டு, வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள, பல்கலைக்கழக – உயர்கல்வி மாணவர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், சமுக ஆர்வலர்கள் உறுப்புரிமை பெறும், மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாக மாற்றி ஓர் பூரணமான கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக பயணிப்பதே ஆக்கபூர்வமானதாக அமையும்.

இன்றுள்ள தாயக நிலவரங்களை பார்க்கின்றீர்கள்?

இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் என குறுங்கால பிரச்சனைகள். மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளனர். எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போரில் பெற்ற வெற்றி சிங்கள அரசை பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் எனக்குள் நிறைய உண்டு.

இப்படியான சிக்கல்களை தமிழ்சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் ?

நீண்டகால திட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம். பிரகடனங்களும்; வெற்றுத்தந்திரங்களும், உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களும் காலத்துக்கு ஒவ்வாத அறிக்கைகளும் இன்றைய நிலையிலிருந்து எமது இருப்பை மீட்டெடுக்காது. இவ்வாறான நீண்டகால திட்டத்திற்கு தேவையான அடிப்படைகளை நாங்கள் இப்போது அத்திவாரமாக இடுதல் வேண்டும். இதற்கான மூலமான தரப்பாய் இருப்பவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தில் வாழும் மக்களை பலப்படுத்தும் அடுத்த வட்டம் என்றே நான் கணிப்பிடுகின்றேன். இந்த அடிப்படையில், முதலாவது, தாயகத்தில் வாழும் மக்களின் உடனடிப்பிரச்சனைகளை புறக்கணிக்காது, உணர்ந்து செயற்படல் வேண்டும். இரண்டாவது, சிறைப்பட்டுக் கிடக்கும் கைதிகளை பாதுகாத்து அவர்களை வெளியில் எடுத்துவிடும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். மூன்றாவது, தாயகத்தில் செயற்படும் அரசியல் சக்திகளிடையே ஒருங்கிணைப்பினையும், பொது வேலைத்திட்டத்தினையும் ஏற்படுத்தி எதிர்காலம் தொடர்பான நீண்டகாலப் பார்வை கொண்ட போராட்டப் பாதையை வகுக்க வேண்டும். நான் அரசியல் போராட்டத்தினைத்தான் முன்வைக்கின்றேன்.

உங்கள் நீண்டகால புலம்பெயர் வாழ்வில் இருந்து, புலம்பெயர்ந்திருக்கின்ற தமிழர்களது சமூக ஒற்றுமை பற்றிய உங்கள் பார்வையானது எப்படியாக இருக்கின்றது ?

இப்போது சிறிது காலமாக எம்மவர்கள் உச்சரிக்கும் வார்த்தை துரோகி என்பது..! எம்மினத்துக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பை செய்யத் துணிந்தவர்களாக புலம்பெயர்ந்தவர்கள் தெரியவில்லை. புத்திசாலித்தனமாக பேசுவதாகச் சொல்லிக் கொண்டு துரோகங்களையும் துரோகிகளையும் புனிதர்களாக்கும் செயல்களை தான் இவர்கள் மேற்கொள்ளுகிறார்கள்.

சிங்கள அரசு அன்றும் இன்றும் என்றும் தமிழர்களை குறிப்பாக விடுதலை உரிமை வேண்டி நிற்கும் தமிழர்களை பயங்கரவாதிகளாக இனங்காண்பதில் இருந்து மாறுபடவே இல்லை. அவர்கள் அதில் உறுதியாக நின்று இறுதியில் உலகுக்கும் எம்மை பயங்கரவாதிகளாக சித்தரித்து எம்மைக் கொண்டே எம்மை அழித்தும் விட்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் எதிரிக்கும் துரோகிக்கும் நண்பனுக்கும் வித்தியாசம் தெரியாமல் எல்லோரையும் ஒரே அளவு கோலால் அளவிட்டு இதயத்தால் இணைந்து இணக்க அரசியல் செய்வோம் எனக் கூறி ஒரே கூடாரத்தில் குந்த வைத்து பந்தி பரிமாறின் உரிமையும் சுதந்திரமும் கிடைத்துவிடும் என்றும் படம்காட்ட ஆரம்பித்துள்ளோம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.! பச்சோந்திகளையும், துரோகிகளையும், விலைபோனவர்களையும், மதில் மேல் பூனைகளையும் சரியாக இனங்காணாத வேளைகளில் எல்லாம் நாம் பலவீனப்பட்டிருக்கிறமே தவிர நாம் ஒற்றுமைப்படுத்தி வெல்ல முடியும் என்ற முயற்சிகளில் தோற்றதே அதிகம். அப்படி இருக்க, காலம் காலமாக பாடப்படும் பல்லவிகள், தேர்தல் கால கோசங்கள்,  முள்ளிவாய்க்காலின் பின் எமக்கு அவசியம் இல்லை. முள்ளிவாய்க்காலை வெற்றி கொள்ள கருணாவும், பிள்ளையானும் மட்டுமல்ல டக்கிளசும், சங்கரியும், சம்பந்தனும் கருணாநிதியும் இன்னும் இன்னும் பலரும் துணை நின்றார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இன்று கூட ஒவ்வொரு தமிழ் அரசியல்வதியும் தன் அரசியல் வியாபாரத்தை எப்படி நடத்துவது என்று கவனிக்கிறானே தவிர தன் இனம், உரிமை, விடுதலை பற்றி எவனும் வாய் திறக்க தயாரில்லை! இவர்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்தி நீங்கள் அவர்களை தமிழினத்தின் தவப்புதல்வர்களாக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள். அது நிச்சயம் நடக்கப் போவதில்லை. ஏனெனில் எமக்கு தான் எதிரிக்கும் துரோகிக்கும் வித்தியாசம் தெரியாது! ஆனால் எதிரிகளும் துரோகிகளும் பச்சோந்திகளும் தமது நிலைகளில் தெளிவாகவே இருக்கிறார்கள்.

ஒரு இனத்துக்கு உறுதியோடு சேவை செய்ய முடியாதவர்களை அந்த இனத்தின் பிதாமகர்களாக காட்ட முனையும் கருத்துக்களையே நான் வன்மையாக வெறுக்கிறேன். இது கற்பனையில் பெருமை வளர்த்துத் திரியும் எமது இனத்துக்கு இன்னும் இன்னும் ஆபத்துக்களையே கொண்டு வந்து சேர்க்கும். இதை தெளிவாக உணர்ந்து அவரவருக்கு அந்தந்த வடிவில் நாம் திட்டம் வகுத்து செயற்பட்டால் அன்றி எம்மினத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

முள்ளிவாய்க்கால் என்கின்ற பேரவலத்தினை தந்த சக்திகள் அதன் அடுத்த கட்டமாக புலத்துத் தமிழர்களை அடுத்த முள்ளிவாய்க்கால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். புலத்தில் வாழும் தமிழ்மக்கள் தமது பங்களிப்புக்களை நிறைய வழங்கியவர்கள். நிறைந்த கனவுகளைக் கொண்டிருந்தவர்கள். மே18 வரையான இழப்புக்களால் அல்லது தோல்விகளால் துவண்டு, விரக்தியுற்று சோர்ந்து போயுள்ளனர். அவர்களை இன்னமும் துன்பப்படுத்தும் விதத்தில் இணையங்கள், ஊடகங்கள் என்கின்ற பெயரில் மக்கள் விரோத, சக்திகள் நடத்தும் மனோவியற்போரினை இந்த முள்ளிவாய்க்கால் இரண்டிற்கான மூல தந்திரமாக நான் பார்க்கின்றேன்.

ஆனால் சமீபகாலமாக புதிது புதிதாகப் பல அதிரடிப் பூதங்கள் கிளம்பியிருக்கின்றனவே ?

இந்தப்பூதங்கள் முள்ளிவாய்க்காலுக்கு முன்னமே புலமெங்கும் வந்தோ/தோன்றியோ விட்டன. நாம் நித்திரையில் இருந்து விட்டோம்!!! தங்களுக்குள் என்று ஒரு வட்டத்தை போட்டு ஒரு பாரிய அழிவிற்குப்பின்னரும் செயற்பாடுகள் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தனமையை கடைப்பிடிக்க தவறிய சந்தர்ப்பத்தை பாவித்து இப்பூதங்கள் கிளப்பப்பட்டு இருக்கின்றது!

சினிமா தயாரிப்பு துறையில் இருக்கின்ற நீங்கள் ஈழத்தில் உருவாக்கி வருகின்ற குறுகிய / நெடும் திரைப்படங்களை எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?

இலங்கையைப் பொறுத்த வரையில் குறுகிய மற்றும் நெடும் திரைப்படங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் வணிக திரைப்படங்களுக்காக நாம் இன்னும் தமிழ் நாட்டையும், பாலிவுட்டையுமே நம்பிக் கொண்டிருக்கிறோம். இலங்கை திரைப்படத்துறை என்பது வணிக ரீதியில் தனித்துவம் இல்லாததாகவே இருக்கிறது. இலங்கை திரைப்படத்துறை பல திறமையாளர்களையும், படைப்பாளிகளையும் கொண்டிருந்தாலும், ஒரு சரியான இயக்கப் பாதை மட்டும், வணிக ரீதியான அங்கீகாரம் என்பது கிடைக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டுக்கொண்டுள்ளது. வணிக ரீதியான அங்கீகாரமும், அதற்கு உண்டான வருமானமுமே எந்தவொரு விஷயத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல கூடிய ஒன்றாகும். இதனால் வளர்ச்சி பாதிப்படைந்து மேற்கொண்டு படைப்புகளைத் தொடர இயலாமல் போகிறது. இன்றைய சூழலின் இந்த பாதையை சரியான திசையை நோக்கி செலுத்துவதே நமது நோக்கமாகும். அந்தப் பொறுப்பை நாம்தான் கையில் எடுக்க வேண்டும். இதற்குண்டான அடிப்படையும் சில வசதிகளும் நமக்குத் தேவையாய் இருக்கின்றது. அதற்குண்டான சில திட்டங்களை நான் எனது திரைப்படத்துறை சார்ந்த நண்பர்களுடன் சேர்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறேன். சரியான காலமும் நேரமும் கைகூடி வரும்போது எனது கடமை ஒரு விதையாக இருந்து பின்வரும் படைப்பாளிகளுக்கு ஒரு வெற்றிப்பாதையாக உருவாக எமது இயக்கத்திலும், மேற்பார்வையிலும் வணிக ரீதியான அங்கீகாரத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவே.

தமிழ் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக இருந்திருக்கின்றீர்கள். அப்படி இருக்க வேண்டிய தேவையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களும் எப்படியாக இருந்தன ?

உங்களது முந்தைய கேள்விக்கான எனது பதிலின்  அடிப்படை தான் இந்த கேள்விக்கும் விடை. இலங்கையில் திரைப்படத்துறையை வணிக ரீதியாகவும் கலாசார வளர்ச்சியையும் வளர்க்க திட்டமிடுள்ளதாக எனது முந்தைய பதிலில் தெரிவித்திருந்தேன். அதற்கு எனக்கு சில பயிற்சியும் அடிப்படை விளக்கங்களும் தேவைப்பட்டன. அதன் காரணமாக நானே சில திரைப்படங்களை, குறும்படங்களை தயாரித்திருக்கிறேன். இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் சீமான், உதவி இயக்குனர் அஸானந், இயக்குனர் C.பாலச்சந்தர்  தாயாரிப்பாளர் சாயி மீரா, நடிகர் சூரியா, நடிகர் கலையரசன், இயக்குனர் மஞ்சு பாஸ்கர் ஆகியோரினது நட்பும் என்னை வளர்த்திருக்கிறது. அவர்கள் தம் அனுபவம் எனக்கு இன்னும் பயனுள்ளதாக இருந்தது. நான் தயாரித்திருந்த கால கட்டத்தில் தமிழ் சினிமா ஒரு முக்கியமான தொழில் நுட்ப மாறுதலை நோக்கி சென்று கொண்டிருந்தது. டிஜிடல் (Digital) முறை அறிமுகமானது. அதனால் திரையில் காண்பிக்கப்படும் ஒலி, ஒளி முறைகள், மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் (Post Production) முறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றம், இவைகளினால் திரைப்படம் தயாரிப்பு செலவில் பொருட்செலவை ஏராளமாக குறைப்பு என்பதே நான் கண்ட அனுபவங்களில் சில. மற்றும் திரைப்படத்துறையில் திரைப்பட தயாரிப்பு மட்டுமல்லாமல் மற்றும் பல துறைகள் உள்ளன என்பதும் நான் கண்ட அனுபவத்தில் சில. கடந்த சில வருடங்களாக அதற்கும் நான் செய்தி சேகரித்தேன். திரைப்படத்துறையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த ஒரு பன்னாட்டு கூட்டு நிறுவனம் ஒன்றை, தமிழகத்தை அடிப்படையாக கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் செயல்படும் விதமாக ஜேர்மன் தொழில் நுட்பத்துடன் உருவாக்கும் அடிப்படை ஆயத்தங்களை நான் தற்போது மேற்கொண்டுள்ளேன். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். சீக்கிரம் இதுபற்றி நிச்சயம் இன்னுமோர் சந்தர்ப்பத்தில் விபரமாக நாம் கலந்தாலோசிக்கலாம் என எண்ணுகிறேன்.

சர்வதேச ரீதியாக கடல்நீரை நன்னீராக்கும் பொறிமுறையில் உங்கள் பங்களிப்பு எப்படியாக இருந்தது ?

இன்றைக்கு சர்வதேச உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளுள் மிக முக்கியமாக இருப்பது சுகாதாரமான குடி நீர் வழங்கும் திட்டம் தான். மூன்றாம் உலகப்போரே குடிநீரை அடிப்படையாக வைத்துத்தான் உருவாகும் என்று சொல்கின்ற அளவிற்கு இன்றைக்கு குடி நீர் ஒரு பெரிய பிரச்சனையாக, சவாலாக நம்முன்னே உள்ளது. இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் பருவமழை பொய்த்ததின் காரணமாகவும் மற்றும் நிலத்தடி நீர் பல்வேறு பயன்பாடுகளுக்காக உறிஞ்சப்படுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. இந்த சூழலில் தான் கடல் நீரை நன்னீராக்கும் பொறிமுறை முன்னிலைப்படுத்தப்படுகிறது.

உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்று பங்காக இருக்கக்கூடிய கடல்நீரை பயன்படுத்தி  குடிநீராக தேவைப்படும் அளவிற்கு எடுத்துக் கொள்வதின் மூலமாக குடி நீர் பற்றாக்குறை நிச்சயமாகத் தீரும். இன்றைக்கு உலகில் குடிநீர் எடுப்பதற்கு வழியில்லாத பல்வேறு வளைகுடா நாடுகளில் இந்த திட்டம் இன்றும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் மேற்கத்திய, ஆப்பிரிக்க நாடுகள் பலவும் இப்போது இந்த முறையை பின்பற்ற தொடங்கியுள்ளன. ஆசிய நாடுகளும் முயற்சியில் இறங்கி இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக முன்னோக்கி சென்றுகொண்டுள்ளன. இயற்கையின் வரப்பிரசாதமாக இருக்கக்கூடிய கடலின் இயற்கைத்தன்மை சற்றும் மாசுபடாமல் இந்த திட்டத்தை செயல்படுத்துவது ஓர் கட்டாய விதியாகும். அந்த அடிப்படையில் பல்வேறு விதமான விஞ்ஞான பூர்வ கண்டு பிடிப்பு முறைகள் இன்றைக்கு வந்து விட்டன. இவை கடலின் தன்மையையும் மனித உடலின் தன்மையையும் எவ்வகையிலும் பாதிக்காமல் சிறந்த நன்னீரை இந்த உலகிற்கு கொடுக்க முடியும். இந்த நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்திய பல்வேறு நாடுகளில் ஆலோசனை அமைப்பில் நான் பங்கு கொண்டு செயலாற்றியது எனக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகின்றேன். மிக முக்கியமாக கானா, லிபியா, துனேசியா, எகிப்து, சூடான், துபாய் ஆகிய நாடுகளில் ஜேர்மன் மற்றும் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய அனுபவம் நிறைய உண்டு. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்த துறையைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், எதிர்கால சந்ததிக்கு சுத்தமாக சுகாதாரமான நன்னீரை கடல் நீரிலிருந்து மாற்றிக் கொடுக்க முடியும் என்ற தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈழத்திலே கடல் நீரை நன்னீராக்கும் பொறிமுறையானது உங்கள் பார்வையிலே எப்படியாக இருக்கின்றது ?

அடிப்படை ஆய்வுகள் நடத்தப்பெற்று சிறந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. இன்னும் நிறைய அடிப்படை கட்டமைப்புகள், ஆய்வு நிலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தரமும், சுகாதாரமும் 100 சதவீதம் உறுதிப் படுத்தப் படவேண்டும். வடமாகாணத்திலுள்ள சில அரசியல்வாதிகள் வணிக ரீதியான சிந்தனைகளை தள்ளி வைத்துவிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு இந்தத்திட்டங்கள் செயல்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம். ஒரு சமூக பொருளாதார மேம்பாட்டினை எட்டுவதற்கு அடிப்படையில் சிறந்த மருத்துவமும் சுகாதாரமான நீரும் உறுதி செய்யப்படுதல் வேண்டும். இதை ஆட்சியாளர்களும், சமூக அமைப்புகளும் கவனத்தில் கொள்வது சிறந்தது.

கடல் நீரை நன்னீராக்கும் பொறிமுறையால் கடலில் இருக்கின்ற உப்பின் விகிதங்கள் மாறுதல் அடைவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடுகின்ற நிலை ஏற்படும் என்ற கடுமையான குற்றச்சாட்டு வடமாராட்சி கிழக்கு மீனவர்களால் வைக்கப்பட்டது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?

உப்பின் விகிதங்கள் மாறுதல் என்பது ஒரு முட்டாள்தனமான கருத்து. நான் மேலே சொன்ன கருத்துக்களில் இந்தக் கேள்விக்கான விடை மறைந்திருப்பதை நீங்கள் உணரலாம்.

இங்கே வைக்கப்படுகிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சமூக பொறுப்புணர்வோடு அதை சம்பந்தப்பட்டவர்கள் அணுகுதல் வேண்டும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடல்நீர் மாசுபடாத தொழில்நுட்பம் கண்டெடுக்கப்பட்டு அந்தப் பிரதேசத்தில் சுற்றுப்புற சூழல் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

நான் குறிப்பிட்டது போல மனசாட்சியோடு சமூக நலன் கலந்த அக்கறையோடு எவ்விதமான சுயலாபத்திற்கும் ஆசைப்படாமல் உகந்த தொழில் நுட்பத்தை செயல் படுத்துவதால் இது போன்ற பிரச்சனை எழ வாய்ப்பில்லை.

கடல்நீரில் இருந்து நன்னீர், மனிதஇனம் ஆரம்பத்திலிருந்து நடைமுறையில் இருக்கும் முறை. தற்போது விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. செறிவு கூடிய உப்புநீரை திரும்ப கடலுக்குள் கலக்க வேண்டிய அவசியம் இல்லை, அதிலிருந்து நாம் நன்னீர் மாத்திரமல்ல உப்பையும் மின்சாரத்தையும் பெறக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மறு ஆய்வுகள் செய்தல் வேண்டும். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உறுதி செய்தல் வேண்டும்.

ஈழத்தின் வடபுலமான யாழ். குடாநாடு கடலால் கழுவிச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது ?

உலக வெப்பமயமாதல் பிரச்சனை காரணமாக அது சம்மந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் இதுவரையில் எவ்விதமான முனைப்பும் இதுகுறித்து ஆட்சியாளர்களால் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. இந்த பகுதிகள் கடல் நீரால் சூழக்கூடிய அபாயம் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மிகுந்த கவனத்தோடு இதைத் தடுப்பதற்குண்டான அறிவியல் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வெப்பமயமாதல் தருணத்தை குறைக்கப் பாடுபட்டு கொண்டிருக்கிற அமைப்புகளோடு கலந்தாய்வு செய்து இந்த துறை சம்பந்தப்பட்ட அனைத்து நிபுணர்களோடு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். அதை இனியும் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டிய கடமை சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு.

ஈழத்தின் வடபுலமான யாழ்ப்பாண மாவட்டம் அண்மைக்காலமாக புற்றுநோய் மரணங்களில் முதலிடம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது .இதற்கு ஏதுவான காரணிகள்தான் என்ன ?

இன்று யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை அதிகரித்து வரும் மக்கள் சனத்தொகையால் நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீரின் மாசாக்கம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சுன்னாகம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து இருப்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அதை விட யாழ் மாவட்டம் முழுவதும் உள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு மாசாக்கி நைற்றேற் எனப்படும் ஓர் இரசாயனப் பதார்த்தம். யாழ் குடா நாட்டில் மட்டுமல்லாது இலங்கையில் விவசாய நடவடிக்கைகளை் அதிகமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள நிலத்தடி நீர் நைற்றேற்றினால் மாசுபடுத்தப்பட்டுள்ளமை பல ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்த நைற்றேற் மாசாக்கத்தின் பிரதான காரணமாக விவசாய நடவடிக்கைகள் விளங்குகின்றன. விவசாயத்தின் போது பயன்படுத்தப்படும் சேதன, அசேதன பசளைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைநாசினிகளே நைற்றேற்றின் பிரதான மூலகங்களாகும்.

விவசாயிகளால் மிக அதிகளவில் சேதன அசேதனப் பசளைகள் பயன்படுத்தப்படுவதுடன் அண்மைக் காலமாக பூச்சி கொல்லிகள் மற்றும் களை நாசினிகளின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் மிக அதிகளவான நைற்றேற் மண்ணுடனும் கிணற்று நீருடனும் கலக்கப்படுகிறது. விவசாயிகளால் இடப்படும் சேதன அசேதனப் பசளைகளில் ஒரு பகுதி மட்டுமே பயிர்களினால் அகத்துறுஞ்சப்படுகிறது. ஏனையவை மண்ணுடன் சேர்ந்து மண்ணினூடாக நிலத்தடி நீரைச் சென்றடைகின்றது.
யாழ்ப்பாணத்தில் விவசாயத்துக்காக நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீரோனது நீர்ப்பம்பிகள் மூலம் பயிர்களுக்குத் தேவைப்படும் நீரை விட மிக அதிகளவிலான நீர் இறைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதுடன் இந்த நீரினூடாக நைற்றேற்றுக்கள் கரைந்து நிலத்தடி நீரைச் சென்றடைவதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. நைற்றேற் மாசாக்கத்தின் மற்றுமொரு முக்கிய காரணியாக சேதனப் பசளைகளைத் தேக்கி வைக்கும் இடங்கள் விளங்குகின்றன. இந்தச் சேதனப் பசளைகளில் தாவர மற்றும் விலகுக் கழிவுகள் அடங்குகின்றன.

இவற்றில் ஏராளமான நைற்றேற்றைக் கொண்ட பதார்த்தங்கள் காணப்படுவதுடன் அவை நிலத்தடி நீரில் நைற்றேற் சேர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறான காரணிகளால் யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரில் நைற்றேற்றின் செறிவு அதிகரித்துச் செல்கிறது. உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான குடிதண்ணீரில் நைற்றேற்றின் செறிவு 10mg/L intrate அல்லது 45 mg/L NO3 ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என வரையறை செய்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நைற்றேற் மாசாக்கம் தொடர்பான ஆய்வுகளின் படி நிலத்தடி நீரின் நைற்றேற் நைதரசனின் NO3 – N2 செறிவு 10mg/L ஐ விட அதிகமாக இருப்பதாகவும் அந்த நீர் குடிதண்ணீராகப் பயன்படுத்தப்பட முடியாது எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் குடி தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நைற்றேற்றினால் மாசாக்கப்பட்ட நீரை அருந்துவதால் பல ஆபத்தான நோய் நிலைமைகள் ஏற்படுகின்றன. இவற்றுள் ஒன்று மெத்கீமொ குளோபினீமியா (Methaemo globinemio) எனப்படும் நோய் நிலைமை. நைற்றைற் ஆனது உடலினுட் சென்று நைற்றைற் ஆக மாற்றம் அடைகிறது. இந்த நைற்றைற் ஆனது குருதியிலுள்ள ஒட்சிசனைக் காவிச் செல்லும் கிமோகுளோபின் எனும் பதார்த்தத்தை மெத்கீமோ குளோபினாக மாற்றமடையச் செய்வதனால் ஒட்சிசனை எடுத்துச் செல்லும் தன்மையை இழக்கச் செய்கின்றது. இதனால் குருதியினால் ஒட்சிசன் கொண்டு செல்லப்படுவது குறைவடைகிறது. இதனால் கை, கால், நாக்கு என்பன நீலமாக மாறுவதுடன் (Cyanosis) மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படாத விடத்து இறப்பும் நிகழலாம். இந்த நோயினால் பெரியவர்களை விடச் சிறு குழந்தைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களது முதிர்ச்சியடையாத உணவுக் கால்வாய்த் தொகுதி நைற்றேற் ஆனது றைற்றைற்றாக மாறுவதை இலகுவாக அனுமதிக்கிறது. இதனால் இந்த நோயானது Blue baby synchome என அழைக்கப்படுகின்றது. இரைப்பை மற்றும் உணவுக் கால்வாய்த் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய், உயர் குருதி அமுக்கம் என்பன ஏனைய நோய் நிலைமைகளாகும். புற்று நோயை உருவாக்கும் பல்வேறு காரணிகளில் நைற்றேற்றும் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.

வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட இடம். உலகிலே தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இரசாயனப்பொருட்கள் இந்த இடங்களில் மிகபெரும் அளவில் பாவிக்கப்பட்டு அழிவுகளை சந்தித்ததன் மூலம் வாழ்வதற்கே உரிய இடமல்ல. மண்ணிலும், நீரிலும் சேர்ந்த இரசாயனங்களின் காரணமாக பல்வேறு தீங்குகள் ஏற்பட்டுள்ளன. அப்படியான இடத்தில் விளையும் பொருட்களிலிருந்து தயாரிக்கும் உணவுகளை உண்பதால், நீரை அருந்துவதால் ஏற்படும் விளைவுகளை ஒருதடவை கற்பனை செய்து பாருங்கள். காரணம் இப்போது புரியும்.

நீங்கள் " யோகீசன் அறக்கட்டளை " என்ற ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகின்றீர்கள் அது உருவாக வேண்டிய காரணமும் அதில் உங்கள் அனுபவமும் எப்படியாக இருந்தது ?

என்னைப் பொறுத்த வரையில் மனிதவாழ்வு மூன்று தளங்களைக் கொண்டது.

1. அர்த்தப்படுத்திக் கொள்ளுதல்.

2. பிறர் துயர் துடைத்தல்.

3. சமூகநலன் பேணி சமுதாயத்தை வளர்த்தல், நிலை நிறுத்துதல்.
மேற்கண்ட அடிப்படையில் நான் வாழ்க்கையைப் பார்ப்பதால் இந்த சிந்தனைகளை செயலாக்கம் செய்வதில் எனக்குள் ஏற்பட்ட உந்துதல் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்க செய்தது. இதனுடைய தலையாய நோக்கம் சமூக பொருளாதாரத்தை பரவலாக மேம்படுத்தச் செய்வதும், ஒவ்வொருவரும் மற்றவர்களில் தங்கியிராத பொருளாதார தன்னிறைவை காண்பதும்தான். இனம், மதம், சாதி, நிறம் இன்னும் பிற வேறுபாடுகளை கடந்து இயன்ற உதவிகளை என் சார்ந்த சமூகத்திற்கு செய்ய நான் விழைகிறேன். அதனுடைய தொடக்கமாக இது 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு, கல்வி, மருத்துவம் இன்னும் பிற சமூகதளங்களில் பல பயனாளிகளை உருவாக்கி வருகிறது. இந்த பயணத்தை தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு.
அறக்கட்டளையின் நிறைவேற்றிய பல செயல்பாடுகள் பற்றி நான் கூறமுடியும். எமது திட்டங்கள் எல்லோரும் செய்வது போன்று இல்லாமல் நீண்ட வாழ்வாதாரத்தை கொடுக்கக்கூடிய திட்டங்கள் வழிமுறைகளை இனங்கண்டு அதற்கு செயல்வடிவம் கொடுப்பது முக்கியமானது. அதில் ஒன்றுதான் கடந்தவருடம், ஒரு அரச சார்ற்ற நிறுவனத்திற்கூடாக கிழக்கு மாகாணத்தில் 400 பேரை தெரிவுசெய்து அவர்களுக்கு ஒருவருடத்துக்கு மேலாக சமூக கிராமிய நகர்ப்புற வளர்ச்சி சம்பந்தமான துறைசார் உயர்கல்வியை வழங்கி அவர்கள் இந்த படிப்பின் பின்னர் 5- 10 பேரை உள்வாங்கி அவர்களை பயிற்றுவிப்பதும் வேலைத்திட்டங்களையும், செயல்திட்டங்களையும் செய்வார்கள். இத்திட்டத்தின் முழுச்செலவுடன் படிப்பவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அறக்கட்டளை பொறுப்பேற்றுள்ளது.

சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன்.

ஓர் பயிற்சி விமான ஓட்டியாக இருக்கின்ற உங்களுக்கு இந்த துறையில் எப்படியாக ஓர் ஈர்ப்பு உருவாகியது ?

சிறுவயதிலிருந்தே விமானமோட்டியாக வேண்டும் என்ற மிகப்பெரிய ஒரு கனவு இருந்தது. எனது தாயார் இலங்கையில் முதல் பெண் விமானியாக (Air Ceylon) இருந்தவர். அதன்பின் எனது தகப்பனார் வழி உறவினர்கள் இருவர் அமெரிக்கவிலும் இங்கிலாந்திலும் விமானியாக இருந்தவர்கள். எனது மாமனார் Capt. ஆனந்தப்பா இலங்கை விமானப்படைத் தளபதியாக இருந்து தொழில் அதிபர் உப்பாலி விஜயவர்த்தனாவுடன் விமானத்தோடு 13.02.1983 அன்று மலேசியாவிலிருந்து இலங்கை வரும்வழியில் காணாமல் போயினர். அதன்பின் எனது தந்தை இதற்கு இடமளிக்கவில்லை. பின்னர் ஜேர்மன் வந்த பிறகு ஆர்வக்கோளாறில் பொழுதுபோக்கிற்காக தொடங்கி தனியார் விமானப் பயிற்சி (PPL), கருவி செயல் அறுதிப்பாடு (Instrument Rating), இயந்திரப்பயிற்சி (Multiengine Training) முடித்த நிலையில் கிடைக்கும் நேரத்தில் கெலிகொப்டர் (PHPL) பயிற்சியையும் மேற்கொள்கின்றேன்.

புலோலியூரானின் அரசியல்தான் என்ன ?

a) "பொறுக்கி அரசியலில் பொதிசுமப்பதை விட களத்தில் புழுதியாக இருப்பதே மேல்." என்று நினைக்கிறேன்.

b) புலோலியூரான் அரசியல்வாதியோ, பிரமுகரோ இல்லை. முழுமையான சமூக நலன் நோக்கிய இலக்கியவாதி, ஒரு முதலீட்டாளன் என்ற முகமும் உண்டு. மனிதாபிமானம்தான் எனது இயங்குதிசை. அந்த நிலைப்பாடு என்னிடமிருப்பதனால்தான் புலம்பெயர்ந்த பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் பணிகளில் பலருடன் இணைந்திருக்கின்றேன். எனது செயற்பாடுகளும் மனிதாபிமானம் சார்ந்ததுதான். சுருக்கிச்சொல்வதெனில் மானிட நேயம்தான் எனது அரசியல்.

c) எனக்கு மட்டும் அந்த மண்ணில் நாளை பல முதலீடு, அபிவிருத்தி, தொழிற்சாலைகளை நிறுவும் சக்தியினை எனக்குத் தந்தால், குடிசைகளில் வாழும் இதே மக்களை நான் மீண்டும் பொருளாதார தன்னிறைவு, புதிய தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, கல்வி, நிறைவான சுகாதாரம் மீண்டும் சந்தோசமாகவே வாழும் ஒரு வசதியினை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களை மீண்டுமொரு தடவை தம் பஞ்சு மெத்தையில் உறங்கவைத்து அழகுபார்ப்பேன். இதற்காகவே என் இறுதி வாழ்க்கை அமைய ஆசைப்படுகின்றேன். இதற்கு என்னைச்சுற்றியுள்ள நண்பர்கள் நிச்சயம் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்.முகடு -பிரான்ஸ்.
28 மாசி 2016
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.