சுந்தரி - சிறுகதை -கோமகன்.



வேம்படியில் வாழ்ந்த வந்த தங்க வேலாயுதத்தாருக்கும் தெய்வானைபிள்ளைக்கும் மூத்த மகளாக பிறந்த கனக சுந்தரிக்கு நண்டும் சிண்டுமாக நான்கு தம்பிகளும் மூன்று சகோதரிகளும் இருந்தார்கள். தங்க வேலாயுதம் ஆசிரியர் தொழிலுடன் பதினைந்து பட்டி தோட்டமும் செய்துவந்ததால் அந்தப் பெரிய குடும்பம் ஓரளவு வசதியாக இருந்து வந்தாலும் ,யுத்தத்தின் கோரப்பிடியினுள் சிக்கிய அந்தக் குடும்பம் படிப்படியாக அதன் வளங்களை இழக்கத் தொடங்கியது. தங்க வேலாயுதத்துக்கு  பிள்ளைகளின் எதிர்காலம் அவரை பயமுறுத்தியது. கனக சுந்தரி வேறு கலியாண வயதை எட்டி விட்டாள் .கனக சுந்தரியின் பலகலைக்கழகப் பட்டப் படிப்பும் முடிந்து விட்டிருந்தது .கடவுள் அவளது அழகில் எதுவித வஞ்சகமும் செய்வில்லை. கனக சுந்தரியின் அழகில் மயங்காத பெடியளே வேம்படியில் இல்லை. .ஆனாலும் கனகசுந்தரிக்கு பேசிவந்த கலியாணங்கள் எல்லாம் அவளது செவ்வாய் குற்றத்தினால் தட்டுப்பட்டுக் கொண்டே வந்தன . இது தெய்வானைப்பிள்ளைக்கு மனதளவில் பெரிய தாக்கமாக இருந்தது. இதன் தொடராக தெய்வானைபிள்ளை பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டாள். பாரிசவாதத்தல் பாதிக்கப்பட்ட தெய்வானைக்கு பிறகு  கனகசுந்தரியிடமே குடும்ப பொறுப்புகள் வந்து சேர்ந்தன. கோழி தன்குஞ்சுகளை எப்படி பார்க்குமோ அப்படியே தேவசுந்தரி தனது தம்பி தங்கைகளை பொத்தி பொத்தி வளர்த்தாள்.

கோடைக்காலத்தின் ஓர் மாலைப்பொழுதில் புறோக்கர் சவரிமுத்து கனக சுந்தரிக்கு ஓர் குறிப்பை கொண்டுவந்தான். பிரான்ஸில் பிரெஞ் பிரஜையான மனோகரன் அண்மையில் தனது மனைவியை விபத்தொன்றில் பலிகொடுத்து இருந்தார். அவருக்கு சிறிய வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். முக்கியமாக மனோகரன் தனக்கு எதுவித சீதனமும் வாங்கப்படாது என்று நிபந்தனை போட்டிருந்தார். அவருக்கு தேவை தனது சிறிய பிள்ளைகளைப் பார்பதற்கு ஓர் அன்பான அம்மா வேண்டும் அவ்வளவே . சவரிமுத்து இந்த சம்பந்தத்தால் வரப்போகும் நன்மைகளை தங்க வேலாயுதத்துக்கு எடுத்து சொன்னாலும், தனது மகள் இரண்டாம் தாரமாக ஒருவனுக்கு வாழ்க்கை படபோவதையிட்டு அவரின் மனம் கலங்கியது. கனக சுந்தரியோ அப்பாவின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது மனோகரனை கலியாணம் செய்ய சம்மதித்தாள். அவளைப்பொறுத்த வரையில் இந்தக் கலியாணம் ஓர் லாப நட்ட கணக்கு அவ்வளவே. இந்த கலியாணத்தால் தனது சகோதரங்களின் எதிர்காலமே அவளுக்கு முக்கியமாக பட்டது. வேம்படியே வெப்பிராயத்தில் புகை கக்க மனோகரன் கனக சுந்தரியை கலியாணம் செய்து கொண்டார்.

கடுமையான பனிப்பொழிவு பொழிந்த ஓர் பனிக்காலப் பொழுதொன்றில் கனக சுந்தரியின் வருகை பிரான்ஸில் பதிவானது. இந்த சூழலை இயல்பாக்குவதற்கு கனக சுந்தரி நிறையவே போராட வேண்டி இருந்தது. அந்த போராட்டம் அவ்வளவு சுலபமாக அவளுக்கு இருக்கவில்லை. புரியாத மொழியும், முற்றிலும் மாறான வாழ்கை முறைகளும் அவளை திணறடித்தன. காலம் செல்ல செல்ல பாரிஸின் நெளிவு சுழிவுகளை மெதுவாக பிடித்து கொண்டாள். காலம் லாவகமாக இரண்டு வருடங்களை முன்னோக்கி தள்ளி விட, கனக சுந்தரி மேலும் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவானாள். நான்கு பிள்ளைகளையும் ஒரு வித வித்தியாசம் இல்லாமலேயே வளர்த்தாள் கனகசுந்தரி. பிள்ளைககளை பராமரிப்பதற்கு அரசாங்கம் உதவித்தொகைகளை வழங்கியது. அத்துடன் வீட்டு வாடகையில் குறிப்பட்ட தொகை உதவிப்பணமாக வந்தது. இதனால் கனக சுந்தரிக்கு வேலைக்குப் போய் கடுமையாக உழைத்து வெட்டி அள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய் விட்டது. ஆனால் உதவித்தொகைகளால் வந்த பணத்தின் ருசி அவளை மெதுமெதுவாக வளைத்துக்கொண்டது. இலகுவான வழியில் பெரிய முதலீடு இல்லாமல் காசு பார்க்க கனகசுந்தரிக்கு காலம் ஓர் வழியைக்காட்டியது.

0000000000000000000000

இந்த தொழில் இருக்கிறதே தமிழரின் பழமை வாய்ந்த தொழில். அன்றாடம் காச்சிக்கு முழு நிலவு போல எட்டத்தில் நின்று அழகு காட்டும் காசை பலரின் சப்போர்ட்டுடன் குறுகிய நேரத்தில் பெருமளவு காசை கிட்ட வைத்து பாக்கும் செப்படி வித்தைக் கலை இது. ஒருபக்கத்தில் தமிழரது சேமிப்பாக இருந்தாலும் இந்த சீட்டு தொழிலால் புலம் பெயர் தேசங்களில் பல குடும்பங்கள் சிக்கி சிதறி சின்னா பின்னாமானதுதான் மிச்சம். அதைவிட சீட்டு காசு கட்டப்பிந்தினால் அவர்களிடம் கேட்கும் கேள்விகளும் வில்லங்கமானவை. சில இடங்களில் மனைவிமாரையே படுக்கைக்கு அழைத்த சம்பவங்களும் இந்த பாரிஸ் பட்டினத்தில் நடந்து இருக்கின்றது. அநேகமான களவு கொலைகளுக்கு மூலம் தேடிப்போனால் இந்த சீட்டு தொழிலே முக்கிய பாத்திரமாக இருக்கும். இருந்தாலும் இந்த தமிழ் சனங்கள் இருக்கிறார்களே இந்த சீட்டு கட்டுவதில் எவ்வளவுதான் ரிஸ்க் இருந்தாலும் இந்த சீட்டு கட்டுதலை அவர்கள் வெறுத்ததே கிடையாது. சீட்டுப்பிடித்தல் தொழில் கனக சுந்தரியை வலு சிம்பிளாக தன்னுள் இழுத்துக்கொண்டது . ஆரம்பத்தில் ஒன்று இரண்டு ஒன்று சீட்டுக்களைப் பிடித்த கனகசுந்தரி, காலப்போக்கில் ஒரே நேரத்தில் பல சீட்டுக்களை பிடிக்கும் முதலாளியாக்கி விட்டிருந்தது. காசே அவளின் குணத்தையும் தீர்மானித்தது. ஊரில் இருந்த தனது சகோதரங்களை பாரிஸுக்கு கூப்பிட்டு நல்ல இடங்களில் கலியாணம் செய்துவைத்தாள் கனகசுந்தரி .நான்கு பவியோன்களை (வளவுடன் கூடிய தனி வீடு ) வாங்கிப் போட்டு, அதை எங்கடை சனத்துக்கு எழுதாமல் வாடகைக்கு ( வரிகளில் இருந்து தப்ப ) விட்டாள். தானும் ஓர் பவியோன் வீட்டில் இருந்து கொண்டாள்  .இப்பொழுது இருக்கின்ற பாரீஸ் சனங்களுக்கு கனக சுந்தரி "சீட்டு சுந்தரி " என்றே அறியப்பட்டாள்.



00000000000000000000000

சீட்டு சுந்தரி எப்பொழுதும் கழிவு சீட்டுத்தான் பிடிப்பாள் .குலுக்கல் சீட்டில் பெரிய லாபம் இல்லை என்பது அவள் கணக்கு .முதல் சீட்டு தாச்சி மறிக்கும் அவளுக்கே போய்சேரும் அத்துடன் கொம்நிக்கேசன் செலவு என்று ஒரு தொகையை சீட்டு ஆரம்பிக்கும் பொழுது வாங்குவாள் .இதைவிட சீட்டு காசு கட்ட பிந்தினால் அதை கலெக்சன் செய்யும் முறையில் தான் சீட்டு சுந்தரி பாரிஸில் தனிமுத்திரை பதித்தாள். முதலில் அன்பாக பேசி பின்னர், மீற்ரர் வட்டியில் தொடங்கி அதற்கும் மசியாமல் இருந்தால், சீட்டுசுந்தரியின் கொமாண்டோ படை களத்தில் இறங்கும். இந்த தரையிறக்கம் அனேகமாக லாச்சப்பலில் றொக்கியெடுத்து இறக்கப்படும். ஒன்றில் காசு அல்லது கையை காலை எடுப்பதில் அந்த ஒப்பறேசன் முடியும் .இதற்கென பூனை குறூப் என்றும் கறடி குறூப் என்றும் இரண்டு வகையான குறூப்புகள் (கொமாண்டோ ) அவளுக்கு இருந்தன. முதலில் பூனை குறூப்தான் ஏரியாவில்  இறங்கும். இந்த குறூப் முதலில் வெருட்டல் மட்டுமே சமபந்தபட்டவருக்கு விடும். அதற்கும் மிஞ்சினால் கறடி குறூப் இறங்கும். கறடி  வெட்டுக்கொத்து கேஸ் தான்.. ரத்தம் காணாமல் திரும்பாது. இதனால் லாச்சப்பல் ஏரியா பலதடவை ரணகளப்பட்டிருக்கின்றது. 



இந்த குறூப்புகள் ஏறத்தாள றோட்டு போடும் றோலர் போன்றவைதான். இவர்களுக்கு உள்ள இலக்கு என்பது விளைவுதான். இடையில் இருக்கும் எதையுமே இந்த குறூப்புகள் கணக்கில் எடுப்பதில்லை. பொது இடங்களில் சம்பந்தப்பட்டவர் கூனி குறுகி அவமானப்படுகின்றாரே என்பதெல்லாம் அவர்களுக்கு வேண்டாத கவலை. குறுக்கால் போகின்றவர்களுக்கு வெற்றி என்பது கிட்டவாக தெரியலாம். அதை அவர்கள் தங்களது தனித்திறமை என்று பெருமிதப்பட்டும் கொள்ளலாம். ஆனால் அது நிரந்தர வெற்றி இல்லை என்பதை ஏனோ அவர்கள் மறந்து விடுகின்றார்கள். அதன் விளைவுகள் சந்ததிக்கும் ஆட்டிப்படைக்கவல்லன .

000000000000000000000000

ஓர் வசந்தகால முற்பகுதியில் அம்மாவிடம் இருந்து எனக்கு ஓர் தொலை பேசி அழைப்பு வந்தது அக்காவுக்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஓர் எஞ்சினியர் மாப்பிள்ளையின் குறிப்பு சரிவந்து கலியாணம் முற்றாகி விட்டது என்றும் ,நாப்பது லட்சம் காசும் வீடுவளவும் சீதனமாக மாப்பிளை பகுதி கேட்கின்றது என்றும் அம்மாவின் தொலைபேசி அழைப்பு சொல்லியது ..அக்காவுக்கு கலியாணம் சரிவந்தது  சந்தோசமாக இருந்தாலும், சிமிக் ( அடிப்படை ) சம்பளத்தில் வேலைசெய்து, அறை வாடகை கட்டும் எனக்கு இந்த செய்தி உண்மையில் ஜவல் ( குளோரின் ) குடித்த மாதிரி இருந்தது. .என்னை நம்பி இவ்வளவு காசை யார் தருவார்கள்? என்ற எண்ணமே மண்டைக்குள் எந்தநேரமும் விறாண்டிக்கொண்டு இருந்தது. .வீட்டைப் பொறுத்தவரயில் நான் ஓர் தேவன். .இந்த தேவனால் முடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையை அம்மாவுக்கு வளர்த்துவிட்டேன். அம்மாவும் பாவம் யாரிடம்தான் போவா ? அப்பா இல்லாத இடத்தில் தேவன் பதவியை நான் நிரப்பிக்கொண்டேன். எனது சுகதுக்கம் எல்லாம் அம்மாவுக்கு இரண்டாம் பட்சம்தான். அம்மாவில் எனக்கு வெறுப்பு கொட்டிக்கிடந்தாலும், அம்மா இல்லாவிட்டால் நான் வந்திருப்பேனா ? என்ற நினைப்பே அம்மாவில் இருக்கும் வெறுப்பை கரைக்கப்பண்ணி விடும். இப்பொழுது வந்த அக்காவின் செய்தியும் அப்படியே இருந்தது.

ஒரு நாள் மாலை பொழுதொன்றில் நானும் என்னுடன் ஒன்றாக படித்த யோகேசனும் கபே பார் ஒன்றில் சந்தித்துக்கொண்டோம் வீதி ஓரத்தில் இருந்த மேசையில் இருந்து கொண்டு கபேயின் வாசத்துடன் எனது மன வெப்பிராயமும் சேர்ந்து வந்து விழுந்தது . எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த யோகேசன்  எங்கள் மற்றக்கூட்டாளி ரமணனுடன் சேர்ந்து மூன்று பேரும் முப்பதினாயிரம் யூறோ சீட்டு பெரிய சீட்டாக பிடிப்போம் என்று சொன்னான் சொன்னதும் அல்லாமல் எனக்கு முன்னாலேயே சீட்டு சுந்தரிக்கு தொடர்பெடுத்து பெரிய சீட்டு இப்ப கட்டலாமா என்ற விபரத்தையும் எடுத்து விட்டான்.

ஒருநாள் மாலை நானும் யோகேசனும் ரமணனும் சீட்டு சுந்தரி வீட்டிற்கு போனோம். சீட்டு சுந்தரியின் வீடு பெரிய கேற்றுகளுடன் பிரமாண்டமாக இருந்தது. நாங்கள் அங்கு சென்ற பொழுது ஓர் முப்பது பேர் அங்கு இருந்தார்கள் எல்லோருக்கும் ரீயும் வடையும் தந்தார்கள். சிறிது நேரத்தில் சீட்டு சுந்தரி அங்கு வந்தாள். இப்பொழுது தான் சீட்டுசுந்தரியை முதன் முதலாக பார்க்கின்றேன். அழகென்றால் அப்படி ஒரு அழகு. பார்த்தால் நான்கு பிள்ளைகளுக்கு அம்மா என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இபொழுது எனக்கு விளங்கியது ஏன் சனங்கள் குறிப்பாக சீட்டு சுந்தரியிடம் சீட்டு கட்ட அள்ளுப்படுகின்றார்கள் என்று. சீட்டுசுந்தரி சீட்டு கூறும் அழகே அழகுதான். எல்லோருக்கும் நடுவில் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து கொண்டு சீட்டை இவ்வாறு தொடங்கினாள் ," உங்கடை கஸ்ரங்களை குறைக்கவேணும் எண்டுதான் இந்த சீட்டை தொடங்கினான். மத்தும்படி வியாபாரரப் புத்தி எல்லாம் எனக்கு இதிலை இல்லை. உங்களுக்கு எவ்வளவு கஸ்ரம் இருக்கோ அந்தளவுக்கு  இந்த சீட்டு முடியிற வரைக்கும் எனக்கும் கஸ்ரம் இருக்கு . சீட்டு முப்பதினாயியரம் யூறோ. கட்டு காசு ஆயிரம் யூறோ. முதல் சீட்டு தாச்சி மறிக்கிற எனக்குத்தான். செக்குகள் எடுக்கமாட்டன்.  எல்லாரும் காசாய் தான் தரவேணும். அடுத்த சீட்டு வாற மாசம் பத்தாம் திகதி கூறுவம்" என்று சொல்லி முடித்தாள் . நாங்கள் எல்லோரும் காசை சீட்டு சுந்தரியிடம் எண்ணிக்கொடுத்து விட்டு வந்தோம்.

0000000000000000000000000

சீட்டு சுந்தரியிடம் காசுகளை எண்ணி கொடுத்து விட்டு வந்ததில் இருந்து மனம் அலைபாய்ந்தது. எனது நம்பிக்கை அங்கும் இங்கும் டான்ஸ் ஆடியது. நம்பிக்கைதானே வாழ்க்கை. நான் இங்கு வரும்பொழுது இந்த பிரான்ஸ் என்னை வாழவைக்கும் என்று எந்த நம்பிக்கையில் வந்தேன் ?தேடலும் நம்பிக்கையும் ஒரு கோட்டில் வரும்பொழுது வெற்றி விளைவாக இருக்கும் .சீட்டு சுந்தரி நாணையமானவள் நாம் முதலில் நம்பகமாக நடக்க வேண்டும் அடுத்தமுறை என்ன கழிவெண்டாலும் எடுக்க வேணும். இந்த புள்ளியை வைத்து தான் நான் பெரிய வட்டங்களும் சதுரங்களும் கீற முடியும். மீண்டும் வீட்டில் இருந்து அம்மாவின் பாச அழைப்பு வந்தது . அது அக்காவின் சீதனக்காசிலேயே சுற்றி சுழண்டு கொண்டிருந்தது .மாப்பிள்ளை பகுதி கலியாணத்தை வருகிற மாத முடிவுக்குள் செய்ய நெருக்குகின்றார்கள் என்றும் இல்லாவிட்டால் கலியாணம் குழம்பி விடும் என்று அம்மா பதகளிப்பட்டா .அக்காவும் பாவம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தன்ரை பிறப்பை நினைச்சு உள்ளுக்கை கவலைப்படும் .இடைக்கிடை நேர்ந்துவிட்ட ஆட்டுக்கு இப்படியான யோசினையள் இருக்க கூடாது என்று மனம் குறுக்கால் ஒரு அறு  அறுத்தது . நான் பலவித மான குழப்பங்களுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன்.

எனது சம்பளத்தில் எடுத்து காசைக்கொடுத்ததால் சிக்கனத்தில் சிக்கனமாக இருக்க வேண்டியதாகிவிட்டது. ஒன்றிற்காக ஒறுத்தலிலும் இன்பம் இருக்கத்தான் செய்கிறது.அடுத்த நாள் சீட்டு எடுக்கிற நாள் என்பதால் அன்றைய பொழுது எனக்கு பதட்டமாகவே இருந்தது. யாரும் சீட்டை வேணுமென்று ஏத்தாமல் விட்டாலே காணும். இதற்காகவே யோகேசனை கொண்டு எல்லாரையும் சரிக்கட்டி இருந்தேன். அடுத்தநாள் வேலையை முடித்துக்கொண்டு பசிக்களையுடன்  சீட்டு சுந்தரியின் வீட்டுக்குப் போனேன் .நான் வந்து இறங்கிய மெத்றோ ( பாதாள புகையிர நிலையம் ) வாசலில் இருந்து சீட்டு சுந்தரியின் வீடு பத்து நிமிடங்களுக்கு மேலாக நடக்க வேண்டும் .நான் றோட்டு சந்தியால் சீட்டு சுந்தரியின் வீட்டுக்கு திரும்பிய பொழுது தூரத்தே றோட்டு முழுக்க பொலிஸ் நிற்பது தெரிந்தது சிவிலில் இருந்த நான்கு  வெள்ளைகள் தங்கள் அடையாள அட்டையை காட்டி எனது விசாவை பரிசோதிக்க தொடங்கினார்கள். மற்றையவர்களது கைகள் என்னை  பக்கத்தில் இருந்த சுவரில்  பின்புறமாக  சாய்த்து வைத்து எனது உடம்பில் ஊர்ந்தன . 


கோமகன் 
முகடு  
02 வைகாசி  2016



                                                                             
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.