"குரலற்றவரின் குரல்“ –நேர்காணல்- கருணாகரன்.ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன்தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார்கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர்இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும்ஊடகவியலாளராகவும்தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவுமபதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார்இவர் "வெளிச்சம் கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் "காட்சிஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன்விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும்வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர் போராளியாவார்.
இதுவரையில், "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்", "ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்“, "பலியாடு", "எதுவுமல்ல எதுவும்", “ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்“, “நெருப்பின் உதிரம்“, “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்என்று ஏழு கவிதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளனதவிர, “இப்படி ஒரு காலம்“ என்ற கட்டுரைத் தொகுப்பும் “வேட்டைத்தோப்பு“ சிறுகதைத் தொகுதியும் இவருடையவை.

சமூகவியலாளராகவும்அரசியல் ஆய்வாளராகவும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வரும் கருணாகரன்இலக்கியம்ஈழத்தின் சமகால அரசியல்சமூக நோக்கு போன்ற பலவிடயங்களை “ஜீவநதி“ வாசகர்களுக்காகப் பேசியிருக்கிறார்.

கோமகன்

00000000000000000000உங்களை எப்படியாக தெரிந்து கொள்வது?

அவரவர் தாம் விரும்புகிற மாதிரியாக அளக்காமல்.உண்மைகளின் வழியாக. வாழ்வை அறிந்து கொள்வதன் மூலமாக.

இந்தப் பதிலை கவிஞர்களுக்கே உரிய ஞானக்கிறுக்காக எடுத்துக்கொள்ளலாமா ?

அப்படியல்ல. இது எல்லோருக்கும் பொதுவான – நியாயமான ஒன்றே. ஒருவரை அறிந்து கொள்வதும் மதிப்பிடுவதும் பொறுப்பு மிக்கமுறையில் இருப்பது அவசியம். ஆனால், தமிழ்ச் சூழலில் இது குறைவு. ஒருவரைப் பற்றித் தங்கள் அபிப்பிராயங்களை தாங்கள் விரும்புகின்ற மாதிரியாகவே ஏற்றி வாசிக்கிறார்கள். ஒருவரை உன்னிப்பாகக் கவனிக்காமல், அவருடைய வாழ்க்கையை உணர்ந்து கொள்ளாமல், அவரைப்பற்றிப் பிறர் சொல்லும் வதந்திகளையும் தகவல்களையும் பகுத்தாராயாமல், அவருடைய நிலைப்பாட்டையும் நியாயத்தையும் புரிந்து கொள்ள முற்படாமல், மாற்றுக்கருத்துப் பற்றிய எண்ணமில்லாமல் தங்கள் நிலைப்பாடே சரியென்று வாதிடும் போக்கு இது. இதைத் தலைமுறைகளின் வாய்பாடாகத் தமிழ்ச்சாதி தொடருகிறது.

இது அதிகாரம். அநீதி. தவறு. இந்தத் தவறு,
பிழையான இடத்துக்கே எல்லோரையும் 
வரலாற்றையும் கொண்டுபோய் விடும். பிழைகள் 
அந்தச் சமூகத்தை நிச்சயமாக அழித்தே தீரும். 
உய்விக்காது.

ஆரம்பகால கட்டங்களில் ஓர் போராளியாக உங்களை இனங்காட்டிய நீங்கள்ஓர் கவிஞராகவும்கதைசொல்லியாகவும் வரவேண்டிய அழுத்தங்கள் எப்படி உருவாகின?

அரசியல்வாதிகள் தங்களை இனங்காட்டுவதைப்போல, போராளியாக இனங்காட்டினேன் என்று சொல்வது சரியெனப்படவில்லை. போராளிகள் தங்களை முதன்மைப்படுத்துவதில்லை. அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு சூழலின் விளைவு அல்லது உருவாக்கம். நானும் அன்றிருந்த சூழலில் அப்படி உருவாகினேன் என்பதே சரி. அன்றைய சூழலின் விளைவும் நியாயமும் அது.  
தவிர, வாசிப்புத்தான் எழுத்தில் ஆர்வத்தை உண்டாக்கியது. ஒன்றிலும் நேரடி அழுத்தம் இல்லை. ஆனால் ஆழ்ந்து யோசித்தால் எல்லாமே சமூக அழுத்தங்களின் விளைவுகள்தான் என்று தோன்றுகிறது.

துப்பாக்கிகள் இருந்த பொழுது பேனைகளின் வீச்சு எப்படியாக இருந்தது?

துப்பாக்கிகளுக்குப் பணிந்த பேனைகளும் உண்டு. பணியாத பேனைகளும் உண்டு. பணியாத போது தலைகள் போனதும் உண்டு.

அப்படியானால் விடுதலைப்புலிகள் உச்சம் பெற்ற வேளையில் மட்டிறுத்தப்பட்ட ஜனநாயகப் பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட பேனைகளே உச்சம் பெற்றிருந்தன என்பதை ஆமோதிக்கின்றீர்களா ?

இல்லை. உங்களுடைய கேள்வியும் சிந்தனையும் புலிகளை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், இந்த மாதிரிக் கேள்விகள் வருகின்றன. “புதியதோர் உலகம்“ நாவல் புலிகளுக்கப்பாலானது. அஸ்வகோஸின் “வனத்தின் அழைப்பு“, ஓட்டமாவடி அரபாத்தின் “ஸ்டேஷன் மாஸ்ரர்“, ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் கதைகள், சேரனின் “எலும்புக் கூடுகளின் ஊர்வலம்“ சுகன், கற்சுறா, தமயந்தி, அற்புதன், பானுபாரதி, சி. புஸ்பராஜா, சிவரமணி, செல்வி எனப் பலருடைய எழுத்துகள், முறிந்த பனை, செழியனின் வானத்தைப் பிளந்த கதை எல்லாம் முக்கியமானவையாக இருக்கின்றன.

இதைப்போல புலிகளின் பக்கத்திலிருந்து வந்த படைப்புளும் உண்டு. குறிப்பாக அம்புலி, மலைமகள், வசந்தன், தமிழ்க்கவி, கோளாவிலூர் கிங்ஸ்லி, புதுவை இரத்தினதுரை, குணா கவியழகன், தமிழினி, கரும்பறவை, தூயவன், மலரவன், மருதம், சுதாமதி என்று அங்கும் ஒரு நீள் வரிசை உண்டு.

இது தவிர, இன்னொரு போக்கில் பா. அகிலன், நிலாந்தன், சித்தாந்தன், எஸ்போஸ், பிரதீபா, தான்யா, த. அகிலன், கருணை ரவி, திருக்கோவில் கவியுவன், திசேரா, அனார், பஹீமா ஜஹான், சோலைக்கிளி, நௌசாத், உமா வரதராஜன், இளையவன் எனப் பலருடை எழுத்துகளைச் சொல்ல முடியும்.

அதிகளவு ஜனநாயகப் பண்புகள் காயடிக்கப்பட்டது புலிகளின் காலம் என்பது வரலாறுஅதனாலேயே எனது கேள்வியும் சிந்தனையும் புலிகளைச் சுற்றியே வருவதில் தவறேதும் இல்லையே ?

அப்படிச் சொல்ல முடியாது. தமிழ் அரசியல் சூழலில் மட்டுமல்ல, இலக்கியம், பொதுவாழ்வு, ஊடகம், நிர்வாகம் போன்ற பலவற்றிலும் ஜனநாயகப் பண்புகள் காயடிக்கப்பட்ட ஒன்றே. புலிகளுக்கு முந்தியும் புலிகளுக்கு பிந்தியும்கூட இதுதான் நிலைமை. தமிழ்ச்சமூகத்தில் முறையான ஜனநாயகம் இருக்குமானால் சாதியமும் பிரதேசவாதமும் ஆணாதிக்கமும் இருக்குமா? ஜனநாயக மறுப்புச் செயல்கள் தொடருமா ? ஏகப் பிரதிநிதித்துவக் கதையாடல்கள் நீளுமா ?
கையில் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்பதற்காக ஒரு சமூகத்தில், அல்லது ஒரு மனிதரிடத்தில் ஜனநாயகம் தளைத்தோங்கியிருக்கிறது என்று பொருளில்லை. துரோகி – தியாகி போன்ற சொற்பிரயோகங்களும், ஏகத்துவ மனப்பாங்கும், எதையும் கறுப்பு – வெள்ளையாகவே பார்க்க முனையும் ஒற்றைப்படைத்தன்மையும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் வாழ்க்கைக்கும் முரணானவை.

தமிழ்ப்பொதுமனம் என்பது பெருமளவுக்கும் ஜனநாயகப் பண்புகளை மறுக்கும் விதமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகமே ஜனநாயக விரோதச் சமூகம்தான். குடும்பத்திற்குள்ளிருந்து பொதுவெளிவரை பல அடுக்குகளில், பல நிலைகள் இதைப் பார்க்க முடியும். ஆகவே, ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமில்லை. புலிகள் தமிழ்ச்சமூகத்தின் விளைபொருள். அதனால்தான் அவர்களைத் தங்களுடன் நெருக்கமாக தமிழர்கள் அடையாளம் காண்கிறார்கள்.

“புதியதோர் உலகம்“ மற்றும் “முறிந்த பனைகள்“ என்று எழுதிய பேனைகள் புலிகளுக்கப்பால் வந்திருந்தபோதிலும் அவைகளின் முனைகள் முறிக்கப்பட்டனஆனால் புலிகள் உச்சம் பெற்ற வேளையில் ஜனநாயக பண்புகள் என்றால் என்னவிலை என்று கேட்க வேண்டியிருந்ததே ?

உண்மை. ஆனால், ஜனநாயக மறுப்பை புலிகள் மட்டுமல்ல, ஏனைய இயக்கங்களும் தரப்புகளும் தமக்குள் கொண்டிருந்தன. புளொட் வதைமுகாமாகியதன் வெளிப்பாடே “புதியதோர் உலகம்“, “தீப்பொறி“ இன்ன பிற. ரெலோவுக்குள் நிகழ்ந்த உள்வெடிப்புகளும் – ஜனநாயக மறுப்புகளுமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த மோதலும் மற்றும் தாஸ் அணியின் கொலையும். ஈ.பி.ஆர்.எல்.எவ் புக்குள் நடந்த உள்முரண்பாடுகளும் ஜனநாயக நெருக்கடியுமே அது பல அணிகளாகப் பிரிந்ததும் பலர் ஒதுங்கியதும் ஒதுக்கப்பட்டதும். ஈரோசுக்குள் நிகழ்ந்த ஜனநாயகப் பிரச்சினைகளே பவானந்தன் போன்றவர்களை நியாயமற்று வெளியேற்றியதும் உள் முரண்பாடுகளில் அது நலிவுற்றதும் பின்னாளில் அந்த அமைப்பு அடையாளமே தெரியாமல் போனதும்.

எதிர் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தன்னுடைய இயக்கத்துக்கே – தானிருந்த அமைப்புக்கே - பயந்து பயந்து வாழவேண்டியிருந்த நிலை எல்லா இயக்கத்தின் போராளிகளுக்கும் இருந்திருக்கிறது. சக போராளிக்கு இன்னொரு போராளி அச்சப்படுவதும் சக போராளியாலேயே இன்னொரு போராளி கொல்லப்படுவதும் வதைக்கப்படுவதும் நடக்கவில்லையா ?

அரச படைகள் உண்டாக்கியதற்கு நிகரான பயங்கர உணர்வை எல்லா இயக்கங்களும் ஏற்படுத்தியதுண்டு. இந்த ஜனநாயக மறுப்புக்காகப் போராடி மடிந்த, ஓரங்கட்டப்பட்ட போராளிகள் பலர். இப்படியெல்லாம் நடந்தபடியால்தானே நாம் வெற்றியடைய முடியாமலும் விடுதலையைப் பெற முடியாமலும் போனோம். இதில் எவரும் தாங்கள் சுத்தம் என்று சொல்ல முடியாது.

மேலும் நீங்கள் இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்வது அவசியம். ரெலோ மீதான புலிகளின் தாக்குதல் நடந்து சில மாதங்களில் பிரபாகரன் சுதுமலை அம்மன்கோயிலின் முன்பாக உரையாற்ற வந்தபோது 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடினார்களே. இது எப்படி? புலிகள் மீது சுமத்தப்படும் எல்லாவகையான குற்றச்சாட்டுகளின் மத்தியிலும் அவர்களுக்கே அதிக ஆதரவு அலை உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழர்களிடத்தில் இருந்தது. இன்னும் இருக்கிறது. இது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டறியும்போது பல விடயங்கள் தெளிவாகும். தமிழ்ச்சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கேள்விகளுக்கான விடை பெரிதும் உதவும்.தவிர, இயக்கங்களில் மட்டுந்தான் இத்தகைய ஜனநாயக விரோதப்போக்கு இருந்தது என்றில்லை. முன்னரே குறிப்பிட்டிருப்பதைப்போல அரசியற் கட்சிகள், அரசியலாளர்கள், ஊடகங்கள், இலக்கியப் படைப்பாளிகளிடையே, மக்களிடத்தில் எனப் பல இடங்களிலும் இது தாராளமாக உண்டு. தமிழ்ச் சமூகமே ஜனநாயகத்துக்கு மாறான ஒன்றுதான்.

ஏறத்தாழ 27 நாடுகள் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்காளிகளாகி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தமிழரின் தாயக விடுதலைப் போராட்டமானது மீண்டும் ஐந்தாம் கட்ட ஈழப்போராக என்றோ ஓர் நாள் உருவாகும் என்று சொல்வோர் பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?

கற்பனைக்கு எல்லையில்லை. அல்லது யாவும் கற்பனை.தவிர, நீங்கள் குறிப்பிடும் இந்தச் சக்திகளால் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. ஒடுக்கப்படும் மக்களுக்கான நியாயத்தை - தீர்வை வழங்காமல் எவரும் ஒரு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. போரும் புலிகள் இயக்கமும்தான் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. போராட்டம் வேறு நிலையில் வேறு வடிவங்களில் தொடரும். ஏனென்றால் அதனுடைய அடிப்படை நீதிக்கானது. உரிமைகளுக்கானது. நியாயமான மனித இருப்புக்கானது. ஆனால் அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திறப்பாளிகளும் திறப்புகளும் இப்போதில்லை.

ஓர் தேசிய இனத்தின் விடுதலைப்போராட்ட உணர்வானது எப்படி "யாவும் கற்பனை யாக இருக்க முடியும் ?

செயலுக்குத் துணியாத எதுவும் கற்பனையின் கோடுகளைத் தாண்டுவதில்லை. யதார்த்தத்திற்கு பொருந்தாதவை நடைமுறைக்கு ஏற்றவையல்ல. இதை நீங்கள் இனத்தின் உணர்வை நிராகரிப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை. அந்த உணர்வை மெய்யாகவே மதிப்பதாக இருந்தால், அதற்கிணையாகச் செயற்பட வேண்டும். அதற்கான விலைகளையும் கொடுக்கத் துணிய வேணும். “வாய்ப்பேச்சினால் வைகுண்டம் போக முடியாது“. கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை, களைப்பதுமில்லை. இலக்கை எட்டுவதுமில்லை.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் கடந்த பொழுதும் பாதிக்கப்பட்ட சனங்களுக்காக சில கண்துடைப்புகளை செய்துவிட்டு செய்யவேண்டிய பல வேலைகள் கிடப்பில் கிடக்க "தேசியப்பொங்கல் என்ற பெயரில் மாயவித்தை காட்டும் நல்லரசுக்கு ஒத்தூதும் தமிழ் அரசியல் தலைமைகள் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

சொல்வதற்கு ஒன்றுமில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் “தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தலைமைகள்.“ என்பேன். ஏனென்றால், எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே எல்லோரும் (சனங்களும் அவர்களுடைய தலைவர்களும்) இருக்கிறார்கள். அல்லது பாசாங்கு செய்கிறார்கள். எல்லோருக்கும் உண்மைகள் தெரியும். நிலைமைகளும் புரியும்.
ஆனால், தாங்கள் அறிந்த உண்மைகளின் வழி நடப்பதற்குத் துணிச்சல் இல்லை. இதுதான் பேரவலம். பிறர் தங்களைப்பற்றி எப்படியெல்லாம் நினைப்பார்களோ என்ற தயக்கத்தினாலும் அச்சத்தினாலும்தான் பலரும் தவறான முடிவுகளை எடுத்துப் பிழையான தெரிவுகளைச் செய்கிறார்கள். இது தொடரும் தவறுகளுக்குக் காரணமாகிறது.

அரசாங்கத்தை விடுங்கள். எந்த அரசாங்கம் வந்தாலும் அதில் குறைகளும் கறைகளும் இருக்கும் என்ற அபிப்பிராயத்தை ஒருபக்கம் வைத்துக் கொண்டு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு இதுவரையில் தமிழ்த்தரப்புகளும் உலகெங்குமுள்ள தமிழர்களும் முறைப்படுத்தப்பட்ட நிலையில் என்ன விதமாகப் பங்களித்திருக்கிறார்கள் ? அந்தப் பங்களிப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் எதையாவது தந்திருக்கிறதா ? என்றால், எதுவுமே இல்லை.
இதைப்பற்றி மக்களுக்கும் கவலையில்லை. தலைமைகளுக்கும் கவலையில்லை. கவலைப்படாத மக்களும் கரிசனையில்லாத தலைமைகளும் ஒன்றுதான். ஒன்றுக்குள் ஒன்றுதான்.

இந்த அரசியல் தலைமைகள் விடும் தவறுகளுக்காக எப்படி தமிழ் மக்களை குறை சொல்ல முடியும் ?

தமது தவறுகளையும் செயலின்மைகளையும் தமிழ் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள், பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தலைமைகளுக்குக் கொடுத்தது யார் ? மக்கள்தானே ! மக்கள் சரியாக இருந்தால் தலைமைகளால் தவறுகளைச் செய்ய முடியுமா ? தவறு செய்யும் தலைமைகளை நிராகரித்தால், நிமிர்ந்து கேள்விகள் கேட்டால், கூராக விமர்சனங்களைச் செய்தால், அவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்வதில் இருந்து தடுக்க முடியும்.

தவறு செய்வோரையும் செயலில்லாமல் வாய்ப்பேச்சு வீரர்களையும் தமிழர்கள் நிராகரிக்காதிருப்பது ஏன் ? இந்தத் தலைமைகளை நோக்கிக் குறைந்த பட்சம் கேள்விகளையேனும் எழுப்பாதிருப்பது எதற்காக ?

இயக்கங்களிடம் துவக்கிருந்ததால் எதிர்த்துக் கேள்விகளை எழுப்ப முடியவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். அரசியற் கட்சிகளிடம் கேள்வி கேட்க முடியாதா?

“தலைமைகளைக் கேள்விக்குட்படுத்துவதும் விமர்சிப்பதும் எதிரிக்கு வாய்ப்பாகி விடும். ஒற்றுமையைக் குலைத்துவிடும்“ என்ற மோசமான – தப்பித்தலுக்கான கற்பிதம் தமிழ்ச்சூழலில் உண்டு. இந்த எண்ணம் பேரழிவின் வழிப்பாதையாகும்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை ஓர் காலகட்டத்தில் வலியுறுத்திய நாங்கள்இன்று அது எதுவித அதிகாரங்களுமற்ற வடக்கு மாகாணசபை என்ற பெயரளவில் வந்து நிற்கிறோம்கால ஓட்டத்தைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் இதற்காகவா எமது சனங்கள் 30 வருட காலத்தை விரயம் செய்தார்கள்?

“பட்டபின் சுட்ட ஞானம்“. “மக்களுக்கானதை நாமே தீர்மானிப்போம்“ என்ற அதிகாரச் சக்திகளிடம் தங்களுடைய தலைகளைக் கொடுத்ததன் விளைவு இது.

இன்னும் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பைப்பற்றிப் பேசப்படுகிறது. அப்படியென்றால் வடக்கு – கிழக்கு எனத்தனித்தனியாக பிரிக்கப்பட்ட மாகாணசபைகளில் ஏன் இவர்கள் போட்டியிட்டனர் ? சட்டரீதியாக அதை ஏற்றுக்கொண்டபடியால்தானே ! பதிலாக “வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையில்தான் போட்டியிட முடியும். அதையே ஏற்க முடியும்“ என்று வலியுறுத்தியிருக்க வேண்டும்.

இப்பொழுது தமிழ் மக்களுக்கான தீர்வு யோசனைகளையும் அரசியற் சாசனத்தைத் திருத்துவதற்கான எண்ணங்களையும் வடக்கு மாகாணசபை தனித்தே கொடுத்துள்ளது. இதைக்கூட வடக்கும் கிழக்கும் இணைந்து உருவாக்க முடியவில்லை. சம்பிரதாயமாகக் கூட ஒரு முயற்சியை இரண்டு மாகாணசபைகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. இதுதான் யதார்த்தம்.

தவிர, எதுவித அதிகாரங்களுமற்ற மாகாணசபை என்றால், எதற்காக இத்தனை போட்டிகள்? எதற்காக வாக்களிப்பு? எதற்காக முதலமைச்சர்? எதற்காக அமைச்சுகள்? எதற்காக அந்த நிர்வாக இயக்கம்? எதற்காக அதை நம்பியிருத்தல்? எதற்காக விவாதங்களும் தீர்மானங்களும் ?
ஆனால், மாகாணசபை என்பது அத்தியாவசிய சேவைகளின் அமைப்பு. கல்வி, மருத்துவம், விவசாயம், கூட்டுறவு, கடற்றொழில், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சிறுகைத்தொழில், சமூக சேவைகள் இப்படிப் பல அத்தியாவசிய தேவைகளின் – சேவைகளின் அமைப்பு. ஆகவே இவற்றுடன் பொறுப்பற்று விளையாட முடியாது. அப்படி விளையாடினால் அந்த நிர்வாகத்துக்குட்பட்ட சமூகம் சீரழிந்து விடும். ஏறக்குறைய அப்படியான ஒரு அபாயநிலைதான் இப்பொழுதுள்ளது.

மேலதிக அதிகாரங்கள் தேவை என்பது உண்மை. அதற்காக இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் இருந்து விட முடியுமா? தவிர, இவர்கள் “மலர்ந்தது தமிழர் அரசு“ என்று பெருமையுடன் பங்கேற்றிருக்கும் மாகாணபையைப் பற்றித்தான் சொல்கிறேன்.
இனி வரும் காலத்தில் இதையும் விட மோசமான ஒன்றுக்கும் கீழிறங்க வேண்டியிருக்கும். அதைத் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது.

இதன்மூலம் அப்பொழுது விடுதலைப்புலிகள் எடுத்திருந்த நிலைப்பாட்டை முற்றுமுழுதாக மறுதலிக்கின்றீர்களா ?

புலிகள் வேறு விதமாகச் சிந்தித்தார்கள். அதை எட்டுவதற்காக செயற்பட்டார்கள் – போராடினார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவிதமாக சிந்தித்தார்கள் ?

தனிநாட்டை – தமிழீழத்தை.

அது இறுதிவரையில் கிடைத்ததா அதிலும் சனங்கள்தானே அடிமுட்டாள்கள் ஆக்கப்பட்டார்கள்?

புலிகள் வலியுறுத்திய தமிழீழம் மட்டுமல்ல, பிற தரப்புகள் சொன்ன எதுவும் கூட தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. என்றபோதும் இவர்களெல்லாம் சாவதற்குப் பந்தயம் கேட்கிறார்கள். நாமென்ன செய்ய முடியும்?

படித்த சமூகம் என்று சொல்லப்படும், பெருமை கொண்டாடும் ஒரு சமூகத்திற்கு இவ்வாறான அவலம் எப்படி ஏற்பட்டது ? இன்னும் ஒரு சரியான செல்வழியைக் கண்டறிய முடியாமல் அது தத்தளிப்பதேன்? இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், இத்தனை பெரிய தியாகங்களுக்குப் பின்னரும் இவ்வளவு பெரிய இழப்புகளுக்குப் பின்பும் தோல்வியின் அடிவாரத்திற் குந்திக்கொண்டிருப்பது ஏன்?
சொந்த அனுபவத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் எதையும் கற்றுணர விரும்பாதவர்கள் தமிழர்கள். எதையும் கற்றுணர முடியாதவர்கள், அடிமுட்டாள்களாகத்தான் இருக்க வேணும். வரலாறு அப்படித்தான் விதிக்கும்.
ஆனால், குறைபாடுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் பிற சமூகங்களான மலைய மக்களும் முஸ்லிம்களும் தமிழர்களை விட மேம்பட்டுள்ளனர். இலங்கை அரசியலைப் பற்றிய புரிதலும் யதார்த்த நிலையைப் பற்றிய அறிவும் தங்களுடைய சமூகத்தினரின் எதிர்காலம் பற்றிய கரிசனையும் இந்தத் தலைமைகளுக்கு இருந்ததன் விளைவே அவர்களுடைய முன்னேற்றம். தமிழர்கள் உலகம் முழுக்கச் சிறகை விரித்திருந்தாலும் மனரீதியாகத் தங்களைச் சுற்றி எழுப்பிய சுவருக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள். அதை முதலில் தகர்க்க வேண்டும்.

தமிழர்களின் சுயாட்சி தேசியக் கோட்பாடுகளை மறுதலிக்கும் விடயத்தில் இலங்கையின் இரண்டு இனவாதக்கட்சிகளும் ஓரணியில் நிற்கும் பொழுதுதமிழர் தரப்பில் பல்வேறுபட்ட ஒலிகள் மிகுந்து காணப்படுவது எதற்காக ?

பொதுவாகவே இலங்கையின் அரசியற் சூழல் இனவாத மயப்பட்ட ஒன்றுதான். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அத்தனை சக்திகளும் கட்சிகளும் இயங்குகின்றன. இனவாதத்திற்குப் பலியாகிக்கொண்டே இனவாதத்தை வளர்க்கின்றன ஒவ்வொன்றும். இல்லையென்றால் எப்படித் தமிழ்க்கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், சிங்களக்கட்சிகள் என்று வரமுடியும் ?

தவிர, இனவாதத்தில் மட்டுமல்ல, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் ஜனநாயகச் சூழலைப் பேணுவது என்பவற்றிலும் இரண்டு கட்சிகளுக்கிடையிலும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

மறுவளத்தில் “இனவாதத்திற்கு எதிராக“ என்று இனவாதத்தில் நின்று கொண்டு அதிகமதிகம் தமிழர் ஒற்றுமையைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பவர்களும் அதற்காகக் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பவர்களும் தமிழர்களே. இந்த ஒற்றுமைக் கோசத்தை வைத்து அதிகமாகப் பிழைத்துக் கொள்வோரும் தமிழர்களே. ஒற்றுமை வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொண்டு, மறுவளமாக தங்களுக்குள் உட்குத்துகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் தமிழர்களே. அதாவது தமிழ்த்தலைமைகளே. இதில் எங்கே ஒற்றுமை உண்டு என்று நீங்கள்தான் சொல்ல வேணும். எது உண்மை எது பொய் என்றும் கூட.

பௌத்த மதமும் அதனை அடியொற்றிய சனங்களும் முதன்மைப்படுத்தப்பட்ட இலங்கையின் அரசியல் யாப்பில் புதிய மாற்றங்கள் என்பது தமிழர்களுக்கு எந்தவகையில் அனுகூலமாக இருக்கப்போகின்றது?

இந்தக் கேள்விகளும் சந்தேகங்களும் பலரிடமும் உண்டு. அதில் நியாயமும் உண்டு. புதிய அரசியல் அமைப்பு எப்படி அமையும் என்பதைப்பற்றி எவரிடத்திலும் எந்தத் தெளிவும் இல்லை. புதிய யாப்பு எந்த அடிப்படையில் அமையும் என்று தெரியாத நிலையில், அதற்கான பெயரற்ற முறையில், ஏதோவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிய அரசியற் சாசனத்தை உருவாக்குவதில் சிங்களவர்களுக்கு அப்பால் உள்ள பிற சமூகத்தினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மலையகச் சமூகத்தில் உச்சகட்ட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களிடத்திலும் பரவலான உரையாடல்களும் விவாதங்களும் நடக்கின்றன. தமிழ்த்தரப்பிலும் நிறைய உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகப்படியான இழுபறிகள் தமிழ்த்தரப்பிற்குள்தான் உள்ளது.
நீடித்து வரும் பிணக்கை முடிவுக்குக் கொண்டுவருவற்கு, புதிய உருவாக்கங்களுக்கு வழியென்ன? இதற்கு மாற்று என்ன? என்று கண்டுபிடிக்க வேண்டாமா ? காலம் முழுவதும் இப்படியே எல்லாத் தரப்பையும் குற்றம் சாட்டுவதிலும் சந்தேகிப்பதிலும் கழிந்து போக முடியுமா ?

சிங்களத்தரப்பு இனவாதத்தையே அரசியல் முதலீடாக்கியுள்ளது என்பது உண்மையே. இதற்குப் போட்டியாகத் தமிழ்த்தரப்பும் இனவாதத்தைக் கையில் எடுப்பதுதான் தீர்வாகுமா ? இந்தப்போக்கு நிச்சயமாகப் பகையைத்தான் வளர்க்கும். பகையின் விளைவுகள் பயங்கரமானவை.
நல்லவை, நன்மையானவை எதுவுமே நடக்காது என்ற வாதங்களும் ஊகங்களும் பயனற்றவை மட்டுமல்ல, தீங்கானவையும் கூட.
இது அறிவின் யுகம். அறிவினாலும் மாண்பினாலும் எதையும் சாதிக்க முடியும். அறிவினால் உள்நாட்டிலும் வெளியரங்கிலும் தமிழ்பேசும் மக்களுக்குச் சாதகமான நிலைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் புதிய அரசியலமைப்பை தமக்குப் பாதகமில்லாமல் வகுத்துக்கொள்ள முடியும்.. அப்படியே இனவாதத்தை நீர்த்துப் போகச் செய்யவும் வேணும். இதற்கெல்லாம் தமிழ் பேசும் மக்களின் நுண்ணறிவும் இராசதந்திரமும் கூட்டுழைப்பும் முக்கிய பங்கைச் செய்ய வேண்டியது அவசியம்.

எல்லாம் வெறும் ஊகங்கள் என்று எதன் அடிப்படையில் சொல்கின்றீர்கள் ?

அரசியலில் மட்டுமல்ல பல எளிய விடயங்களிலும் தமிழ்ப்பொது மனவெளி ஊகங்களால்தான் நிரம்பிக்கிடக்கிறது. அது அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுமுள்ளது. அதிலும் தவறான ஊகங்களின் சிடுக்கில். அதனால்தான் அது எல்லாவற்றையும் தவறாகவே கற்பிதம் செய்கிறது.

சரி இவ்வாறு சொல்கின்றீர்கள்உங்களைப்பொறுத்தவரையில் மாற்றப்படப்போகும் அரசியல் சாசனமானது எப்படியாக இருக்கவேண்டும் என எண்ணுகின்றீர்கள் ?

பல்லின சமூகங்களுக்கும் உரிய மாதிரி - பல்லினத்தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அனைத்து உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் பண்பைக் கொண்டிருக்க வேணும். பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு நீதியளிக்கும் வகையிலும் அவர்களுடைய நம்பிக்கையை பலப்படுத்தும் வகையிலும்.

சட்டரீதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு மனிதரும் பெறத்தக்கதாக. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற விகித வேறுபாடுகளோ, மத அடையாள முதன்மைப்பாடுகளோ செல்வாக்கைச் செலுத்த முடியாத நீதியின் பாற்பட்டதாக. அறிவுக்கும் ஜனநாயகத்துக்கும் கட்டுப்பட்டதாக.

அண்மையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையை எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?

இன்னொரு வேடிக்கை என்று.

தமிழ் மக்கள் பேரவையை நீங்கள் எப்படி வேடிக்கை என்று சொல்ல முடியும்?

தமிழ் மக்கள் பேரவை மட்டுமல்ல, எல்லாக்கட்சிகளும் அமைப்புகளும் அப்படித்தான் உள்ளன. வாலிபர் காங்கிரஸ் போதாதென்று, அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ். அது திருப்தியி்ல்லை என்று அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி. அதனால் இயலாதென்று தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி. அதனால் முடியாதென்று விடுதலை இயக்கங்கள்.

இயக்கங்கள் ஐக்கியப்பட வேணும் என்று புலிகள், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ இணைந்து, ஈழதேசிய விடுதலை முன்னணி. பிறகு தனியாகப் புலிகள். பிறகு தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மறுவளத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி. இப்பொழுது தமிழ் மக்கள் பேரவை. இதைத் தவிர, இவற்றுக்கிடையில் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை உள்பட இன்னும் பல அமைப்புகளும் இயக்கங்களும் கட்சிகளும்.
இப்படி ஒவ்வொரு தரப்பும் புதிது புதிதாக வரும்போது முன்னர் இருந்தவற்றின் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும் அவற்றைக் குற்றம் சாட்டுவதும் வழமை. புதிதாக வரும்போது ஒரு வகையான உற்சாகத்தோடு புதிய பிரகடனங்களைச் செய்வதும் வழமையே. ஆனால், காலப்போக்கில் இதுவும் பழைய சங்கதியாகிப் புளித்து விடும். அப்படித்தான் நடந்துமிருக்கின்றது.

அதற்காக “நீங்கள் இப்படி அவசரப்பட்டு, எல்லா அமைப்புகளையும் போல பேரவையும் ஊகநிலைப்பட்டு இப்படிச் சொல்லலாமா“ என்று கேட்கலாம். செயலூக்கமும் அர்ப்பணிப்பும் பன்மைத்திறனும் அடிநிலை மக்களுடனான உறவும் உள்ளவர்களிடமே நம்பிக்கை வைக்க முடியும். அத்தகைய செயலூக்கத்தை பேரவை நிரூபித்தால் அதைப்பற்றி யோசிக்கலாம்.

தரப்புகளும் தலைமைகளும் புதிது புதிதாக வருவதும் வெற்றியடைவதும் முக்கியமல்ல. மக்கள் வெற்றியடைய வேணும். அவர்களுடைய பிரச்சினைகள் தீர வேணும். அதுவே முக்கியம்.

‘அடிநிலை மக்களுடனான உறவுள்ளவர்களிடமே நம்பிக்கை வைக்க முடியும்“ என்று சொல்கின்றீர்கள்தமிழ் மக்கள் பேரவைக்கு அப்படியான தகுதிகள் இல்லையா?

தமிழ் மக்கள் பேரவை மட்டுமல்ல, ஏனைய தமிழ்த்தரப்புகளுக்கும் இது பொருந்தும். தமிழ்ப்பிரதேசங்களில் இடைவிலகும் பாடசாலை மாணவர்களின் தொகை பெருகிச் செல்கிறது. ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லங்கள் பிரமாண்டமாக வளர்கின்றன. அவை இன்று வணிக மையங்களாக மாறியுமுள்ளன. சிறார்களை வைத்துப் பிழைக்கும் நிலையங்களாக. சிறார் பிரச்சினைக்குத் தீர்வு சிறார் இல்லங்களை உருவாக்குவதா ?

யுத்தத்தால் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்தவர்கள் மீள முடியாமல் இன்னும் தவிக்கிறார்கள். உளச்சிதைவுக்குள்ளாகி தினமும் நூற்றுக்கணக்கானவர்கள், உளவளத்துணை நிலையங்களுக்குச் செல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பெண்கள். இப்படிப் பெருகி வருவோரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறவேண்டியிருக்கிறது என உளவளத்துணை நிலையத்தினரும் துறை மருத்துவர்களும் கவலையோடு சொல்கிறார்கள். ஆண்துணை இழந்த நிலையில் இளைய பெண்கள் வாழ்க்கையின் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமா ?
யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிகின்றன. இதற்குள் மக்கள் மீள் நிலைக்குத் திரும்பியிருக்க வேணும். ஆனால், அப்படி நடக்கவில்லை. பொதுவெளியை அரசியல் உரையாடல்களால் நிரப்புவோர் சனங்களின் துயரைப் பொருட்படுத்துவதில்லை. அது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கை வேறு (மேல்)தளங்களில் நிலைகொண்டுள்ளது. எளிய சனங்களின் வாழ்க்கை கீழ் நோக்கி, துயர்க்கொடிகளில் சிக்கியிருக்கிறது.
இந்த நிலையில் இதற்குப் பொறுப்பாக இருக்கின்ற – பொறுப்பெடுக்க விரும்புகின்ற தரப்புகளின் மீது விமர்சனங்களும் கேள்விகளும் இருக்கும்.
இதை விட அரசியல் ரீதியாக இவர்கள் எதைச் சாதிக்கப்போகிறார்கள்? அதற்கான வழிமுறையென்ன ? செயற்திட்டம் என்ன ?

ஈழத்திலே உள்ள அனைத்து தரப்புப் பிரதிநிதிகளையும் உள்வாங்கி தலைவர் உபதலைவர் என்று பல்வேறு பட்ட படிநிலைகளை கொண்டு உருவாக்கப்பட்டசமகால தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதுதானே தமிழ் மக்கள் பேரவை ?

நீங்கள் பிரமுகர்களைப் பற்றிக் கதைக்கிறீர்கள். நான் சாதாரணர்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தவிர, இன்னும் “தமிழ் மக்கள் பேரவை“ அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கவில்லை. ஒத்த சிந்தனைப்போக்குடையவர்களே இதுவரையில் ஒன்றிணைந்திருக்கின்றனர். பேரவை புதிதாகச் சிந்தித்தால், அடிமட்டத்திலிருந்து சிந்திக்குமாக இருந்தால், அப்படிக் கட்டமைக்கப்படுமாக இருந்தால் சிறப்பு. அதாவது புதிய அமைப்பொன்றின் உருவாக்கம் என்பது ஏனையவற்றின் குறைபாடுகளைக் களைவதாகவும் புதிய சாத்தியங்களை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பழைய கலவையாக இருக்க முடியாது.

அரசியல் பத்தி ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சாதாரணர்களைப் பற்றி சிந்திக்கின்றார்கள்தானே ?

அப்படி எழுதப்படும் பத்திகளைப் பற்றிச் சொல்லுங்கள். அல்லது அப்படியான ஆய்வாளர்களைக் குறிப்பிடுங்கள், அறியலாம். எல்லோரும் அரசியலை மட்டுமே எழுதி “மயிர்“ பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஈடேற்ற முடியாத அரசியலை. சனங்களோ நாளாந்த வாழ்வில் உயிர்போகும் பிரச்சினைகளால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகவியலைப்பற்றி, சமூக நிலையைப்பற்றி, சனங்களின் வாழ்க்கைச் சவால்களைப்பற்றி யார் எழுதுகிறார்கள் ? அப்படி எழுதினால் அரசியற் தலைமைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அது நடக்கவில்லை. இது சனங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. அநீதி. நிச்சயமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மற்றது தன்னார்வ அமைப்புகளின் உதவிப்பணிகளும் சர்வதேசத் தொண்டர் நிறுவனங்களின் பணியும் தற்காலிக “தண்ணீர்ப்பந்தல்“ என்ற அளவில்தான். அதற்கு அப்பால் எதுவுமே இல்லை. அவை சனங்களை ஈடேற்றவில்லை. அப்படி ஈடேற்றியிருந்தால் அதை யாராவது குறிபிடட்டும்.

யுத்தத்திற்குப் பிந்திய இந்த ஏழு ஆண்டுகளில் இலங்கையின் பிற இடங்களை விட வடக்கிலும் கிழக்கிலும்தான் அதிகளவு நிதியை தொண்டர் அமைப்புகள் செலவிட்டிருக்கின்றன. மட்டுமல்ல, பெரிய தொகுதி ஆளணியும் பிற வளங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அரச நிதியும் அதிகளவில் இந்தப் பிராந்தியத்தில் (மக்களுக்காக ?) செலவழிக்கப்பட்டுள்ளது.
விளைவு ?

இதைப்பற்றிய மதிப்பீட்டை யாராவது செய்தார்களா? இவ்வளவு பணமும் வளமும் செலவழிக்கப்பட்ட பின்னும் மக்கள் இன்னும் வறுமையில் இருப்பதற்கான காரணம் என்ன? என்று எவரும் ஆராயவில்லை. இதைப்பற்றிய கரிசனையைக் கொள்ள வேண்டிய அரசியல் மற்றும் நிர்வாகத் தலைமைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இதைப்பற்றி எத்தனை ஆய்வாளர்கள் கருத்திற் கொண்டுள்ளனர்? குறைந்த பட்சம் பல்கலைக்கழகங்களின் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத்துறை போன்றவை கூட இவற்றைப் பொருட்படுத்தியுள்ளனவா ? புலம்பெயர்ந்தவர்கள், நாடுகடந்தவர்கள் எனப்பலர் உள்ளனர். எல்லோரும் தேர்தற்கால அறிக்கைகளை விட்டால் மட்டும்போதும் என்ற அளவுக்குச் சுருங்கிக் காய்ந்து விட்டனர். அல்லது அரசியல் வியாக்கியானத்துடன் திருப்திப்பட்டுக்கொள்கின்றனர். எல்லாத் தவறுகளையும் “தமிழ்த்தேசியம்“ என்ற மாயச்சொல் மறைத்து விடும் என்று நம்புகின்றனர்.

“எல்லாத் தவறுகளையும் தமிழ்த்தேசியம் என்ற மாயச்சொல் மறைத்துவிடும்“ என்று பலரும் நம்புவதாக சொல்கின்றீர்கள்அப்படியானால் தமிழ்த்தேசியத்துக்கான வரையறைதான் என்ன ?

“தமிழ்த்தேசியம் என்பது பேசிக்கடக்கும் இலகுவான ஒன்றாக உள்ளது. ஆனால், அது அப்படியானதில்லை. அது தொடக்கத்திலிருந்தே இழப்புகளையும் தியாகங்களையும் செய்யுமாறு வற்புறுத்தியிருக்கிறது. “செயலின் விளைவாகவே அதைக் கட்டமைக்க முடியும்“ என்று கேட்கிறது. இந்த நிலையை உண்டாக்கியவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தியோரே. ஆரம்பத்தில் “சிங்கள மொழியைப் படிக்க மாட்டோம்“ என்று அரச உத்தியோகத்தை இழந்ததில் இருந்து தொடங்கிய தியாகச் செயல்கள், பின்னர் ஊர்களை இழக்கவும் வாழ்க்கையின் அடிப்படைகளைத் தியாகம் செய்யவும் உயிரைக் கொடையாக்கவும் வற்புறுத்தின. ஆகவே தமிழ்த்தேசியம் என்பது தியாகங்களைச் செய்யக் கூடியவரும் இழப்புகளைச் சந்திக்கத் துணிந்தவர்களும் முன்னெடுக்கும் அரசியல் வழிமுறையாகும். அதில் தியாகங்கள் செய்யாதவருக்கும் இழப்புகளைச் சந்திக்கத் தயாராக இல்லாதவருக்கும் இடமில்லை. ஆனால், இன்று தமிழ்த்தேசியம் பேசுவோர் அல்லது தம்மைத் தமிழ்த்தேசியர்களாகக் காட்ட முனைவோர் எப்படி இருக்கின்றனர்? வெறும் வாய்ச்சொல் வீர்களாக. இணையப் போதகர்களாக.
இவர்கள் தம்மை அர்ப்பணிக்கவும் செயலாற்றவும் தயாரா? ஜனநாயக அடிப்படையில் தங்களை விரிக்கவும் விமர்சிக்கவும் மறுபார்வைக்குட்படுத்தவும் தம்மைப் புதுப்பிக்கவும் ஆயத்தமா ?
இதற்கெல்லாம் தயாரில்லாமல், தம்மை ஒப்புக் கொடுக்காமல், வெறும் பேச்சில் வீறாப்புக் காட்டுவதும் வித்தைகள் செய்வதும் மாயைத்திரை இல்லையா?
தவிர, கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் பிரயோக நிலையில் அல்லது கருதுநிலையில் இப்போதுள்ளது தமிழ்த்தேசியம் அல்ல. இது தமிழ் இன மானம் அல்லது அதனை வலியுறுத்த முனையும் தமிழ் இனவாதமாகும். இதை மாற்றி தமிழ்த்தேசியத்தை வளப்படுத்த வேண்டுமானால் அதை பன்முகத்தன்மையோடும் ஜனநாயக அடிப்படைகளோடும் நெகிழ வைக்க வேண்டும். முஸ்லிம்களையும் மலைய மக்களையும் சமனிலையில் பேணவும் கரிசனை கொள்ளவும் வேணும். சிங்களவர்களைப் பகை நிலையில் பார்க்கும் நிலையிலிருந்து விடுபட வேணும். சாதிய, பிரதேச, பால் வேறுபாடுகளை நீக்க வேண்டும்.  

ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்பது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமானது?

அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கமைவாகத் தமிழர்களிடத்திலுள்ள சக்திகளும் அரசியல் சாசனத்தைத் திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுகளை மும்முரமாகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்றேன். ஏனைய சமூகங்களும் இதில் இணைந்திருக்கின்றன. இப்பொழுது ஆட்சியிலிருப்பது கூட்டரசாங்கம். சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கை இந்த அரசாங்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கூடவே இந்த அரசாங்கம் மேற்கின் அனுசரணையோடு அமைந்தது. (கூட்டரசாங்கமாக இருந்தாலும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் மேற்கின் அனுசரணையோடிருந்தாலும் இனவாதத்திலேயே இந்த அரசாங்கமும் ஊறியிருக்கிறது என்பது உண்மைக்கதை).
தவிர, தமிழர்கள் தங்களை நம்புவதை விட, பிற சக்திகளை நம்புவதை விட, வெளியாரை நம்புவது அதிகம். முன்பு இந்தியாவை. இப்பொழுது மேற்கை. ஆகவே இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும், என்ன செய்ய இயலும்?

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல முயற்சிகள் மாற்றங்கள் என்று சனங்கள் பலதைக் கண்டதுதானே?

எதுவும் சாத்தியமாகவில்லை, நிறைவேறவில்லை என்பதற்கு மக்களும் பொறுப்பு.

எந்த விதத்தில் மக்கள் பொறுப்பாக முடியும்மக்களை கேட்டா விடுதலை போராட்டம் நடைபெற்றதுமக்கள் இந்த விடுதலைப் போராட்டத்துக்கு கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமாஎப்படி நீங்கள் மக்களை மட்டும் குற்றவாளிகளாக்க முடியும்?

நான் மக்களைக் குற்றவாளிகள் ஆக்கவில்லை. அவர்கள் பொறுப்பாளிகள் என்றேன். நிச்சயமாகப் பொறுப்பாளிகள்தான். ஒவ்வொரு நியாயப்பாட்டோடும் ஒவ்வொரு விதமான அறிவிப்புகளோடும் அவ்வப்போது வரும் தரப்புகளை கைதட்டி வரவேற்பதோடு நிற்காமல் அவற்றை வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களுக்குண்டு. ஏனென்றால் சுமைகளைச் சுமப்பவர்களாக அவர்களே உள்ளனர். காயங்களையும் வலிகளையும் ஏற்பவர்களாகவும் அவர்களே இருக்கின்றனர். அப்படித்தான் நடந்து கொண்டுமிருக்கிறது. இந்த அனுபவங்களை மக்கள் தங்களுக்கான படிப்பினைகளாகக் கொள்ள வேண்டாமா? ஆகவே குருட்டு நம்பிக்கைகளில் தலையைப் புதைக்காமல், ஒவ்வொரு தரப்புகளின் பின்னும் இழுபடாமல் சிந்திக்க வேண்டும். தெளிய வேண்டும். புதியன தெரிய வேணும்.
ஆயுதந்தாங்கிய தரப்புகளின்போது மக்களின் செயற்பாடுகள் சில வேளை விதிவிலக்காக இருக்கலாம். 

வரையறுக்கப்பட்டிருந்திருக்கலாம். அப்பொழுது அவர்கள் குரலற்றிருந்திருக்கலாம். அந்தச் சந்தர்ப்பங்களில் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் இருக்க வேண்டியிருந்திருப்பது உண்மை. ஆனால், அதைத் தவிர்ந்த பின், தேர்தல் முறைகளின்போதும், பிற அரசியற் செயற்பாடுகளின்போதும் மக்கள் விழிப்பாகவும் சரியாகவும் இருப்பது அவசியம். மக்களுக்கு இந்த விழிப்புணர்வையும் துணிவையும் ஏற்படுத்த வேண்டியது, மக்கள் சார்ந்த அமைப்புகளுக்கும் மக்களின் மத்தியிலுள்ள சிந்திப்போருக்கும் உண்டு. முக்கியமாக ஊடகங்களுக்குண்டு.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே கவலையும் வெட்கமும்.

ஊடகவியலாளர்களும்புத்திஜீவிகளும் ‘நல்லரசு தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயல்படுகின்றது’ என்றும் தமிழர் தரப்புத்தான் போதிய அக்கறை காட்டவில்லை என்பது போல சித்தரிக்கின்றார்களே?

அப்படியல்ல. “கூட்டரசாங்கம்“ தமிழர் விவகாரத்தில் அல்லது சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயத்தில் என்னவகையில் முன்னேற்றகரமாகச் செயற்பட்டுள்ளது ? என்று உங்களிடம் கேட்கிறேன். குறைந்தபட்சம் செய்யக்கூடிய அரசியல் கைதிகளின் விடுதலை, படைக்குறைப்பு, சீரான புனர்வாழ்வு, காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களையே முறையாகச் செய்யவில்லை. இதற்கப்பால் அரசியல் ரீதியாக இனமுரண்பாட்டைத்தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் விசுவாசமாகவும் முன்னேற்றமாகவும் நடக்கவில்லை. இதையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும் ?

இந்த நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. மக்களை ஒன்றிணைத்து தீர்வுக்கான முயற்சிகளை, போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. தீர்வைக் காணும் முகமாக உள்நாட்டிலும் வெளியுலகிலும் அணுகுமுறைகளை உருவாக்கிச் செயற்படவில்லை என்பதெல்லாம் உண்மையே.
தவிர, கூட்டரசாங்கத்தைக் குறித்து தமிழர் தரப்பு வேறுவிதமாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தமிழர் தரப்பு எப்படியாக சொல்லிக்கொண்டு இருக்கின்றது?

நல்லாட்சி பற்றி இரண்டு விதமான பரந்த அபிப்பிராயங்கள் தமிழர்களிடத்தில் உண்டு. ஒரு தரப்பினர், நல்லாட்சியை “ஏமாற்று வித்தை“ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பாகவும் சந்தேகமாகவுமே நோக்குகிறார்கள். நல்லாட்சியைப் பற்றிய சந்தேகத்தின் விளைபொருள்தானே தமிழ் மக்கள் பேரவை. மற்றும் வடக்கு மாகாணசபையின் தீர்மானங்கள்.
இன்னொரு தரப்பினர் இந்த ஆட்சியில் நம்பிக்கை வைத்து இணைந்து செயற்படுவோர். மக்களுடைய ஆதரவும் தேர்தலின் மூலம் இவர்களுக்கே கிடைத்திருக்கிறது. தங்களுடைய நடவடிக்கைகளைக் குழப்பாமல் இருக்க வேண்டும் என்று இந்தத் தரப்பு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) கேட்கிறது. எல்லாவற்றுக்குமான பரிகாரத்தை (மைத்திரி – ரணில் மற்றும் மலையக, முஸ்லிம் தரப்பினர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என எல்லாம் கூட்டிணைந்த) இந்த அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறார்கள்.
நாட்டுக்கு வெளியிலும் இந்த இரண்டு நிலைகளும் உள்ளன.

கடந்துவந்த போராட்டப்பாதையானது ஈரோஸ் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தவிர்ந்து மலையகத்தமிழரை ஏன் உள்வாங்கியிருக்கவில்லை?

அவையவை கொள்ளும் பாத்திரத்தின் அளவே எதுவும்.

இந்தப்பதிலை தந்திரோபாயப் பின்வாங்கல் என்று எடுக்கலாமா?

இல்லை. எப்படி இது தந்திரோபாயப் பின்வாங்கலாக அமையும்? தமிழ்த்தேசியம் குறுகலான அடிப்படைவாதப் பண்புகளை அதிகமாகக் கொண்டிருந்ததன் விளைவே பிற சமூகங்களின் மீதான கரிசனைக்குறைவுக்குக் காரணமாகியது. இது மலையகத் தமிழர்களை மட்டுமல்ல, முஸ்லிம்களைக்குறித்த குறைபாட்டு அக்கறைக்கும் பொருந்தும். எனவே தான் தமிழர்களும், தமிழ்த்தேசியமும் மேலும் மேலும் பலவீனமடையும் நிலையுள்ளது.

தமிழ் நவீனக் கவிதைக்கான பிரதிகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பவர்கள் பற்றி உங்களுடைய புரிதல் எப்படியாக இருக்கிறது?

இந்தப் பிரச்சினை புதிய கவிதைகளுக்கு மட்டும் உரியதல்ல. ஏனைய பிரதிகளுக்கும் பொருந்தும். மட்டுமல்ல, அரசியலுக்கும், பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் உரிய ஒன்று. புதிதாக வரும் ஒன்றை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனம் பலருக்கும் ஏற்படுவதில்லை. இவர்கள் பயிலும் ஆர்வமில்லாத, அறிவியலை, இயற்கையின் விதியை, பரிணாமத்தைப் பற்றிய அக்கறைகளற்ற சோம்பேறிகள் என்பேன்.

வாசகனுக்கு புரியாத படைப்புகளை கொடுக்காத படைப்பாளியால் யாருக்கு என்ன லாபம்?

படைப்பென்பது புதிது. புதிது என்றால் புதிரும் மர்மமும் புதுமைகளும் அத்றகான கற்பனையும் நிச்சயமாக இருக்கும். எழுத்தாளரோ படைப்பாளியோ பழகிப்போன இலக்கியப் பண்டங்களை உற்பத்தியாக்கி விற்கும் கொம்பனிகளை வைத்துக் கொண்டிருப்பதில்லை. அதில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு அவர்கள் இயங்குவதுமில்லை. தங்கள் எழுத்தின் மூலம் பல்வேறு விதமான வாழ்க்கை முறைகளை வாசகர்களுக்கு அறிமுகமாக்குகிறார்கள். பல பண்பாடுகளை. பல மனநிலைகளை. பலவிதமான காட்சிகளையும் காலங்களையும் நிலப்பரப்புகளையும் இன்னும் தீராத காதலையும் துயரையும் சமூக ஊடாட்டங்களையும் சிக்கல்களையும் என எண்ணற்ற கோலங்களையும். வெவ்வேறு உலகங்களை. வெவ்வேறு வண்ணங்களை.
இது வாசர்களுக்காக அவர்கள் படைத்தளிக்கும் கொடை. இதைப் பயிலாதிருப்பது எவ்வளவு இழப்பு? ஓவியம், சிற்பம், இசை, நாடகம் என்று எத்தனை அருமையான படைப்புகள்....!
எதையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் முயற்சியும் பயிற்சியும் தேவை. எதுதான் முயற்சியின்றி விளைவாகும்? அறிதலும் புரிதலும் வாழ்வின் கலையே. மனித அடையாளமே அதுதான்.

அப்படியானால் இலக்கியத் தரப்படுத்தல்கள் என்ன காரணத்துக்காக வந்து கொண்டிருக்கின்றனஇதனால் படைப்பாளியானவன் உளச்சிக்கல்களை எதிர்கொள்கின்றான் அல்லவா?

முதலில் “படைப்பாளியானவன்“ என்பதைத் திருத்திக் கொள்வோம். படைப்பாளி அல்லது படைப்பாளர் என வைத்துக் கொள்ளலாம். இருபாலாருக்குமுரியதாக.

இலக்கியத்தில் தரப்படுத்தல் என்பது நுண்மையான ஒன்று. அது உணர்வும் அறிவும் கலந்த ஒரு பொறிமுறை. இதை விமர்சனம் சற்றுத்தூக்கலாக அறிவு சார்ந்து அணுகுகிறது. ஒரு படைப்பின் தரம் என்பது அதனுடைய மொழிதல் முறைகள், அதனுடைய உள்ளடக்கம், அது அந்தச் சமூகத்திலும் அதற்கு வெளியிலும் உண்டாக்கும் புரிதல்கள், அதன்வழியான விளைவுகள், அது பண்பாடாக அந்த மொழியிலும் அந்தச் சமூகத்திலும் அதற்கு அப்பால் பொது வெளியிலும் மாறும் விதம் எனப் பலவிதமானது.

தவிர எதற்கும் தரமும் நல்லது என்ற அடிப்படையும் அவசியம். பொதுவாகவே, தரமில்லாத பொருட்களுக்கு உபயோகமோ மதிப்போ இல்லை. அப்படியிருந்தாலும் அவை நீடிப்பதுமில்லை. உரிய தேவையைப் புர்த்தி செய்வதுமில்லை. மிகக் குறைந்த விலையுள்ள 10 ரூபாய்க்கு வாங்குகின்ற கீரையிலேயே நீங்கள் தரத்தைத்தான் பார்க்கிறீர்கள். அது முற்றியிருக்கிறதா ? இலைகள் பழுத்திருக்கின்றனவா? வாடியிருக்கா செழிப்பாக இருக்கா? புச்சி புழு தின்றிருக்கா? இப்படிப் பலதையும் பார்த்தே அதை வாங்குவீர்கள். அப்படித்தான் கலைக்கும் இலக்கியத்திற்கும் உரிய அவதானிப்பும் தரமும் தேவை.

தங்கத்துக்கும் வைரத்துக்கும்தான் தரம் உண்டென்றில்லை. படைப்பென்பது புதியது. புதுமையானது. புதிய வாழ்க்கையையும் புதிய உலகத்தையும் நமக்குள்ளே விரித்துக் காட்டுவது. இதைச் செய்யாதபோது விமர்சனம் வரும். விமர்சனம் என்பது இலக்கியத்தையும் படைப்பாளியையும் நெறிப்படுத்துவது. அது அறிவுச்செயற்பாடு. இதில் படைப்பாளிக்கு ஏன் உளச் சிக்கல்கள் ஏற்பட வேணும்? இன்னொரு வகையில் சொன்னால் படைப்பாளி சமூகத்தையும் மனிதர்களையும் மனித நடத்தையையும் இயற்கையையும் விமர்சனமே செய்கிறார். அப்படியிருக்கும்போது அவர் மட்டும் தன்னைக்குறித்த விமர்சனங்களிலிருந்து எப்பிடித்தன்னை விலக்கி வைக்க முடியும் ?

போரிலக்கியத்தில் கவிதைகளின் பங்கு எப்படியாக இருந்தது?

சில கவிதைகள் போர்ப்பரணிகளாக இருந்தன. சில போருக்கு எதிராக இருந்தன. போருக்கு எதிராக இருந்த கவிதைகளை தமிழ்ச் சூழல் கொண்டாடியது குறைவு. கவனிக்க வேண்டியது, முஸ்லிம்களாலும் மலையகத்தில் வாழும் தமிழர்களாலும் எழுதப்பட்டவை போருக்கு மாற்றாகவே இருந்தன. அல்லது போரை நீங்கியிருந்தன.

இறுதிப் போர் முடிவடைந்ததின் பின்னர் வெளியாகிய புனைவுகளும் கதைசொல்லிகளும் ஏற்படுத்திய தாக்கத்தை அல்லது அதிர்வைகவிஞர்களோ அல்லது அவர்களினூடாக வெளியாகிய கவிதைகளோ பெரிதாகப் பேசப்படவில்லையே?

அப்படியல்ல. பா. அகிலனின் சமரகவிகள், நிலாந்தனின் யுகபுராணம், சேரனின் காடாற்று, றஸ்மியின் ஈ தனது பெயரை மறந்து போனது, திருமாவளவனின் கவிதைகள், பிரதீபாவின் நீத்தார் பாடல், சுகன் கவிதைகள், கற்சுறாவின் அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை, என்னுடைய பலியாடு, ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள், இரத்தமாகிய இரவும் பகலுடைய நாள், தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களில்லாத நகரத்தைத் தின்ற மிருகம், சித்தாந்தனின் துரத்தும் நிழல்களின் யுகம் தான விஷ்ணுவின் கறுப்பு ஆந்தைகளின் இரவு எனப் பல கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. இந்த கவிதைகள் அவற்றின் தளத்தில் அவற்றுக்குரிய வாசகப்பரப்பில் ஊடாடியிருக்கின்றன. தொடக்கத்தில் இவற்றைக் குறித்த உரையாடல்களே இருந்தன.
புனைவுகளும் அ – புனைவுகளும் இன்னொருதளத்தில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. தவிர எதுவும் எதையும் மிஞ்சியதல்ல. ஆனால், எல்லாவற்றுக்கும் முறையான விமர்சனங்கள் செய்யப்படவில்லை. தவிர, இது உரைநடைகளின் யுகம் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேணும்.

"மரணத்துள் வாழ்வோம்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பானது தமிழர் வாழ்வில் ஆயுதப் போர் முகிழ்ந்த காலத்தைப் பாடுபொருளாகக் கொண்டு கட்டமைத்து வாசகர் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியதுஆனால்இறுதிப் போரின் பின்னரான காலங்களின் சனங்களின் அவலங்களைபோராளிகளின் மன உணர்வுகளை பாடுபொருளாக கொண்டு கவிஞர்களின் கவிதை தொகுப்பு இதுவரை வெளியாகாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கின்றது?

நிச்சயமாக அப்படியான தொகுப்புகள் வந்திருக்க வேணும். அப்படி வந்திருந்தால் புதிய நிலைகளை அறிந்திருக்க முடியும். தவிர, இலக்கியம் என்பது வரலாற்று ஆவணமோ சமகால அரசியல் விளக்கமோ இல்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேணும். “மரணத்துள் வாழ்வோம்“ காலகட்டத்தில் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அரசினுடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான மனநிலையோடேயே இருந்தன. அதனால் ஒரு மையத்தை நோக்கிக் குவிந்த மனநிலை இருந்தது. இதை நீங்கள் “மரணத்துள் வாழ்வோம்“ கவிதைகளில் காணமுடியும். இன்று அப்படியல்ல. இடைப்பட்ட காலத்தின் அரசியல் நிலவரங்களும் நம்பிக்கைச் சரிவுகளும் பல்வேறு மனநிலைகளையும் வேறுபாடான நம்பிக்கைகளையும் உருவாக்கியிருக்கின்றன. பல சிதைவுகளை உண்டாக்கியிருக்கின்றன. ஆகவே இப்பொழுது ஒரு கூட்டுத்தொகுப்பு வருமாக இருந்தால் அது பிரதானமாக மூன்று வகையான அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வகையான நம்பிக்கைகளையும் மனநிலைகளையும் கொண்டிருக்கும். ஒன்று அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையும் எதிர்ப்பதாக. மற்றது நடந்த போராட்டத்தையும் போரையும் மறுபரிசீலனை செய்யும் மானுட விழுமியம் தழுவியதாக. மற்றது இரண்டுக்கும் இடைநிலை ஊடாட்டமுடையதாக. இதைவிட வேறு வகையிலும் அமையக் கூடும். இருந்தும் குட்டி ரேவதியினால் போரின் முடிவுக்குப் பின்னர் ஒரு தொகுதி கடுமையான முயற்சியெடுத்துக் கொண்டுவரப்பட்டது. அதற்கான கவனத்தை துயரத்தைத் தூக்கும் தமிழர்கள் தான் கொள்ள வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில் “காலம் எழுதிய வரிகள்” என ஒரு கூட்டுத் தொகுதி வந்திருந்தது. அரச பயங்கரவாதத்தை அனுபவங்களை இந்தக் கவிதைகள் வெளிப்படுத்தின. இதே காலப்பகுதியில் புலிகளால் ஏற்பட்ட அபாயநிலைகளை மையமாகக் கொண்டு “மீசான்கட்டை மீது எழும் பாடல்கள்” என்றொரு தொகுதி முஸ்லிம் கவிஞர்களின் மூலம் வெளியாகியிருந்தது என்பதும் இங்கே குறிக்கவேண்டியது.

இலங்கை மூன்று அந்நிய நாடுகளால் ஆளப்பட்டது வரலாறுஆனால் உங்கள் வேட்டைத்தோப்புமற்றும் செங்கை ஆழியானின் கடல் கோட்டை தவிர்ந்து போர்த்துக்கேயடச்சுஆங்கிலேய காலத்து புனைவுகள் அதிகஅளவு வெளியாகாமல் இருப்பதற்கு காரணம்தான் என்ன ?இதனால் இளைய தலைமுறையினராகிய எமக்கு அவர்களது பண்பாட்டு விழுமியங்கள் எதுவுமே தெரியாமல் போனது கொடுமையில்லையா ?

வேறு சிலரும் வரலாற்றை மையமாக வைத்துத் தங்கள் புனைவை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக முல்லைமணி, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, முல்லைக்கோணேஸ் இப்படிச் சிலர் இன்னும் உண்டு. நீங்கள் குறிப்பிடுவதைப்போல வரலாற்றை மையப்படுத்தி எழுதப்படும் புனைவுகள் நம்மிடையே குறைவுதான். அதற்கான காலம் இனி வரலாம். எதுவும் முடிந்து விட்டது என்றில்லை. இனித்தான் எல்லாமே என்று நம்புங்கள்.

கடந்த சில வருடங்களாக ஈழத்து எழுத்துப் பரப்பில் வெளியான கதைகள் மற்றும் நாவல்களை பற்றி அவைகள் வெளியாக முன்னரே அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை வாசகர்களுக்கு “பிரபலங்கள்“ எனப்படுவோர் பொதுவெளியில் வாசகர்களுக்குக் கொடுக்கின்றனர்ஆனால் படைப்புகள் வெளியாகிய பின்னர் வாசகன் அந்தப்படைப்பை வாசிக்கும் பொழுது ஏமாற்றத்துகுள்ளாகின்றான் .இத்தகைய போக்கானது எந்தவகையில் நியாயமாக உங்களுக்குத் தெரிகின்றது?

தேர்ந்த வாசகருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.
தவிர, எதையெல்லாம் யாரையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இது வணிக யுகம். மற்றது வாசிப்புக்கு எதிரான காட்சி ஊடகங்களின் காலம். இதனால் புத்தக விற்பனையும் வாசிப்பும் ஒறுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்குரிய வாசகத் தூண்டலுக்கான முயற்சிகள் தவிர்க்க முடியாதவை. இதில் வணிக உத்திகள் பயன்படுத்தப்படுவது காலத்தின் விளைவு. ஆனால், நீங்கள் சொல்வதைப்போல முன்னபிப்பிராயங்கள் வாசகரையும் வாசிப்பையும் திசைதிருப்பி விடக்கூடிய அபாயமும் உண்டு.

இன்றைய தமிழ் நவீன இலக்கியம் பற்றி உங்களுடைய பார்வைதான் என்ன?

மகிழ்ச்சியைத் தருகிறது. புதிய சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன. எண்ணற்ற வடிவங்கள். பல புதுமைகள். வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமான தருணங்கள். ஆனால், இதைக்கொண்டாடக்கூடிய வாசிப்புச்சூழல் இல்லை என்பதே வருத்தம்.

எப்படியான மகிழ்ச்சியை அது உங்களுக்குக் கொடுக்கின்றது?

எண்ணற்ற புதுமைகள் நிகழும்போது மகிழ்ச்சி இயல்பாக உண்டாகுமே. அதுதான். அங்குமிங்குமாக எழுச்சிகளும் உரையாடல்களும் வெளிப்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதால். எல்லாம் பன்முக வெளிப்பாட்டின் களமாக இருப்பதால்.

தமிழ் நாட்டில் உள்ள பதிப்பகங்களுக்கு ஈடாக ஈழத்திலே பதிப்பகங்கள் தோன்றமுடியாத சூழலுக்கு அடிப்படியிலான தடங்கல்கள் தான் என்ன?

முன்னர் போர். ஆனாலும் அதற்குள்ளும் பல புத்தகங்கள், பிற வெளியீடுகள் வந்தன. புலிகளிடத்திலும் புலிகளுக்கு வெளியிலும் பதிப்பு முயற்சிகள் ஓரளவுக்கிருந்தன.
இப்பொழுது அதைவிடப் பொருத்தமானதொரு சூழல் உருவாகியிருக்கு. திட்டமிட்டு, ஒத்துழைத்துச் செயற்பட்டால் நிறையச் சாதிக்கலாம்.

தமிழ்ப்பதிப்புத்துறைக்கு என்றொரு சிறப்பான முறையும் வரவாற்றுப் பங்களிப்புமுண்டு. உ.வே. சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுகநாவலர் என்று இந்தப் புள்ளிகள் ஒரு தொடக்க காலம் என்றால், பின்னர் அவற்றிலிருந்து பல புள்ளிகள் விரிந்து உருவாகியிருக்கின்றன. பதிப்பகங்கள் பண்பாட்டின் அடையாளமே. நீண்டகாலத்துக்குப் பின்னர், ஈழத்திலும் பதிப்புத்துறை பன்முகம் கொண்டதொரு பண்பாட்டு மலர்ச்சிக்குரிய எத்தனங்களைக் கொள்ள முயற்சிக்கிறது. இதில் மெல்ல மெல்ல நாமும் செயற்பட்டு வருகிறோம். இதைத் தொழில்முறையாக்கும்போது வெற்றியும் சாத்தியங்களும் உண்டாகும்.

எப்படியான திட்டமிடல் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றீர்கள் ?

சீரான தொடர்பாடல், முறையான ஒழுங்கமைப்பு, சிறந்த பதிப்பாக்கம், முறைப்படுத்தப்பட்ட விநியோகம், பரந்த அறிமுகம், கூரான விமர்சனம், புத்தகம் வாங்க வேண்டும் என்ற பண்பாடு அல்லது சிந்தனை என்ற தொடர் நிகழ்ச்சிகளும் புத்தகக் காட்சி, வாசகர் பெருக்கத்தை ஊக்கல் எனவும் பல தளங்களில் விரியும் இது.
இதற்கு உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களும் புலம்பெயர் படைப்பாளிகளும் ஊடகங்களும் அரச மற்றும் பொது அமைப்புகளும் ஒத்துழைக்கலாம். ஒத்துழைப்பர் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஒருவிதமான அந்நியத்தன்மையுடன் நாட்டிலிருப்பவர்கள் அணுகுவதை அண்மையில் சமூகவலைத்தளங்களினூடாக அவதானிக்க முடிந்தது .இத்தகைய மனநிலையை நடைபெற்று முடிந்த போரின் உளவியல் பாதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமா?

இந்த மாதிரியான நோக்கு நிலை இப்போதல்ல, முன்னரும் இருந்தது. இடங்களின் வேறு பாடல்ல இதற்குக் காரணம். மனங்களின் வேறு பாடே. ஆனால், இது அவசியமற்ற ஒன்று. இன்று உலகம் ஒன்றிணைந்துள்ளது. தவிர, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பாட்டின் குழந்தைகள் இப்படி வேறுபடுத்திப் பல்லிழிப்பது நல்லதல்ல. அதேவேளை வசதியான புலங்களுக்கு நகர்ந்தோர் வசதியற்ற நிலத்திலிருப்போரை நகைத்தலும் பணித்தலும் முறையல்ல.

வன்னி மண்ணிலேயே உங்கள் வாழ்க்கை பலவருடங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றதுமுள்ளிவாய்க்கால் பேரவலம் முடிவடைந்து ஏழு வருடங்களைக் கடந்து விட்ட நிலையில் வன்னிச் சனங்களது இருப்பு தற்பொழுது எப்படியாக இருக்கின்றது ?

முடிவற்ற துயரத்தில் சிக்கியுள்ளது. பிள்ளைகள் படிக்கச் செல்லாமல் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகிறார்கள். தொழில் இல்லை. பேயாட்டம்போடுகிறது வறுமை. பெண்கள் தங்களுடைய உடலை விற்பதைத் தவிர, வேறு கதியில்லை என்ற அளவில் பல கிராமங்கள் உள்ளன. போரிலே காயப்பட்டவர்களும் உடல் உறுப்புகளை இழந்தவர்களும் வாழவழியற்றிருக்கிறார்கள். போராளிகளாகச் செயற்பட்டவர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள். ஆதரவற்ற சிறுவர் இல்லங்கள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இந்த இல்லங்களில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகிறது. போருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்திருக்க வேணும். ஆனால், போர்க்காலத்தை விட இப்பொழுதே எண்ணிக்கை கூடிச் செல்கிறது. புலம்பெயர்ந்த மக்கள் இந்தச் சிறார் இல்லங்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். சிலர் புதிய சிறார் இல்லங்களை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் ஆதரவற்ற சிறார்களின் பெருக்கத்தை நாம் விரும்புகிறோமா? நிச்சயமாக இது தீர்வல்ல. இது சரியுமல்ல. இவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மாதிரி இல்லங்களில் விட்டு வளர்ப்பார்களா?

இதற்குப் பதிலாக சனங்கள் தொழில் செய்து வாழக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கினால், அதன் மூலம் உழைப்பும் வருவாயும் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரோடு, வீட்டோடு வளர்ந்து படிப்பர். சமூகம் சீராகச் சிறப்பாக இயங்கும். இதுதான் தேவை. ஆனால், அப்படி நடக்கவில்லை. பதிலாகச் சிறார் இல்லங்களை நடத்துவதும் பலருக்கு லாபமீட்டக்கூடிய தொழிலாகி விட்டது.

போருக்குப் பிந்திய சமூகத்தை ஒழுங்கமைப்பதிலும், மீள் நிலைப்படுத்துவதிலும் அரசாங்கமும் சரி, தமிழ்தரப்பிலுள்ள அரசியலாளரும் சரி, பொது அமைப்புகளும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்படுவோரும் சரி முறையாகச் செயற்படவில்லை. பதிலாக கோயில்களையும் தேவாலயங்களையும் விகாரைகளையும் கட்டுவதிலேயே எல்லோருடைய குறியும் இணைந்துள்ளது. மனிதாபிமானத்துக்கும் கருணைக்கும் மாறான செயல் இது. மடமையும் அநீதியும்.

மனதில் எவ்வளவோ வடுக்கள் இருந்தாலும் இரண்டு சிங்களக்கட்சிகளை தமிழர்களாகிய நாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியிருக்கின்றோம்தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஆயுதப்படைகளின் பிரசன்னமானது சமகாலத்தில் எப்படியாக இருக்கின்றது ?

நீங்கள் குறிப்பிடுவது ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி என்ற இரண்டையுமே. இப்பொழுது, ஆட்சியில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்திருக்கின்றன. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் அபுர்வமான நிகழ்ச்சி. இதற்குத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்பேசும் சமூகங்கள் இணைந்து ஆதரவளித்திருக்கின்றன.
ஆனால், படைகளின் பிரசன்னத்திலிருந்து ஏனைய விவகாரங்கள் வரை அத்தனையும் வழமையைப்போலவே – மாறாக்கொள்கையாகவே உள்ளது. இன்னும் சரியாகச் சொன்னால், தற்காலிக முகாம்கள் நிரந்தரப்படை முகாம்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கான கட்டுமான வேலை பிரமாண்டமான அளவில் நடக்கிறது. இதைக் கண்டும் காணாதிருக்கின்றனர் “தமிழ் அரசியற் பங்காளிகள்“. அவற்றுக்கிசைவான ஊடகங்கள். அப்படியே பொதுத்தளமும். மாற்றத்தைப் பற்றிப் பேசியவர்கள் இப்பொழுது உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கான தேவை அல்லது காரணம் என்னவாக இருக்கின்றது ?

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அரசும் படையும் படை விலக்கலை விரும்பவில்லை. மற்றது தமிழ்த்தேசிய அரசியலைப் பேசுவோரின் அணுகுமுறைகளும் நிதானமில்லாத பேச்சுகளும்.

படையினரைப் பொறுத்தவரை இப்பொழுது அவர்கள் எட்டியிருக்கும் நிலை மிகப் பாதுகாப்பானது. இன்று தமிழ்ப்பிரதேசங்களில் மிகச் சாதாரணமாகவே படை அதிகாரிகள், அதிலும் உயர்நிலை அதிகாரிகள் திரிகிறார்கள். மாலைவேளைகளில் உடற்பயிற்சிக்காகத் தனியாகவே நடக்கிறார்கள். முன்னர் அப்படியல்ல. மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கவசங்கள் எல்லாம் இருந்துமே பாதுகாப்பற்ற நிலையில் மரணத்தைத் தழுவிக்கிடந்தவர்களுக்கு இன்றைய இந்தச் சுதந்திர நிலை மிகப் பெரிய வாய்ப்பு. அதை அவர்கள் இழக்க விரும்பமாட்டார்கள். ஆகவேதான் அவர்கள் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை, படை முகாம்களை, கண்காணிப்பை, விவரம் திரட்டுவதை எல்லாம் தொடர்ந்தும் செய்கிறார்கள். மீண்டும் அவர்கள் மரணத்தைத் தழுவிக்கிடக்கவும் மரணத்தில் மண்டியிடவும் விரும்பவில்லை.

மேலும் படையினரின் உளவியலே வேறு. அது அரசியலுக்கு அப்பாலானது. இலங்கையில் அரசியற் தரப்பையும் விட அதிக பலமுடையது படையும் புலனாய்வுமே. அது தனக்கு எது சரி, எது தேவை என்று படுகிறதோ அதையே செய்யும். அதை மிஞ்சக்கூடிய அரசியல் ஆளுமை இலங்கையில் இதுவரையில் இல்லை. அப்படியான ஒரு ஆளுமை வந்தால்தான் மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
மறுவளத்தில் போர் முடிந்த பிறகும் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கான தேவையைத் தீவிர தமிழ்த்தேசியவாதிகள் உருவாக்குகின்றனர். இவர்கள் இந்தியாவையும் பிற மேற்குலக நாடுகளையும் துணைக்கிழுக்கும்போது அரசாங்கத்துக்கும் சிங்களவர்களுக்கும் எதிராகப் பிரகடனங்கள் செய்யும்போது அவர்களுக்கு அச்ச உணர்வே மேலிடுகிறது. “மீண்டும் நெருக்கடிகள் தங்களுக்கு உண்டானால்… ?“ என்ற அச்சம் சிங்களத்தரப்பை எச்சரிக்கை அடைய வைக்கிறது. போதாக்குறைக்கு தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரின் வீரப் பிரகடனங்கள். இவையெல்லாம் சிங்களத்தரப்பைக் கலவரமூட்டும் சங்கதிகள். ஏற்கனவே சிங்கள வரலாறு தமிழ்நாட்டினுடைய ஆதிக்கத்தினால் உண்டான அச்சுறுத்தலை தன்னுடைய உளவியலில் கொண்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்தே படைகளை விலக்காமல் தொடர்ந்தும் நிலைகொள்ள வைக்கின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் மீறி, மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். அதற்கான காலம் கனிய வேணும்.

மலையகத்து இலக்கிய சூழலானது சமகாலத்தில் எப்படியாக இருக்கின்றது ?

தவச்செல்வன், பாலமுருகன், மல்லியப்பு சந்தி திலகர், லெனின் மதிவானம், வே. தினகரன். எட்டியாந்தோட்ட கருணாகரன், லுணுகுலை சிறி, இப்படி புதியவர்கள் அங்கிருந்து எழுதுகிறார்கள். ஆய்வு, விமர்சனம் என்ற துறைகளில் சரவணகுமார் போன்றவர்கள் உள்ளனர். புதிய முனைப்புகள் நிறைய உண்டு.

மலையகத்தமிழர்கள் எந்தவிதத்தில் யாழ்ப்பாணத்தமிழர்களால் பயன்பெற்றிருக்கின்றார்கள் ?

கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மலையகத்தில் யாழ்ப்பாணத்தவர்களே கடந்த நூற்றாண்டில் செய்தனர். இதில் கணிசமானளவு பங்களிப்புண்டு. அதேவேளை அந்தச் சமூகத்தை அவர்கள் அடிமைப்படுத்துவதிலும் பின்னிற்கவில்லை.

அண்மையில் பேராசிரியர் மு நித்தியாந்தன் எழுதிய "கூலித்தமிழ் எத்தகைய தாக்கத்தை மலைகயத்தில் ஏற்படுத்தியது ?

கூலித்தமிழ், மலையக வரலாற்றுக்கும் அந்தச் சமூகத்துக்கும் முக்கியமானதொரு விழிப்புணர்வுப் பங்களிப்பு. நேற்றையின் படிக்கல்லில் ஏறி இன்றையின் பீடத்திலும் நாளையின் சிகரத்திலும் ஏறிக்கொள்வதற்கான வாய்ப்பை நித்தி உண்டாக்கியிருக்கிறார். ஒரு முக்கியமான அடையாளத்தை மலையக வரலாற்றுக்கு நித்தி உதவியிருக்கிறார்.

ஈழத்தில் மலையகத்தமிழர்கள் நடத்தப்பட்ட விதத்தை "கூலித்தமிழ்விபரிக்கின்றது .சமகாலத்தில் தமிழகத்தில் இலங்கையர்கள் நடாத்தப்படும் விதத்தை ஒப்பிடும்பொழுது உளவியல்ரீதியான கணக்குத்தீர்த்தல் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

தமிழகத்தில் உள்ள இலங்கைத்தமிழர்கள் கவனிக்கப்படாதிருப்பதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை. மட்டுமல்ல, அங்கே அகதிகளாக இருப்பவர்களில் அநேகர் இந்திய வம்சாவழியினராக இலங்கை வந்து, தென்னிலங்கை வன்முறைகளால் வடக்கிற்கு இடம்பெயர்ந்தவர்கள். பின்னர் வடக்கின் நிலைமைகளால் இந்தியாவுக்குப் பாதுகாப்புத் தேடிச் சென்றவர்கள். ஆகவே இவர்கள் ஒருவகையில் இந்தியவுக்கு – தமிழகத்துக்கு உறவுக்காரர்கள்.

கிராமிய வாழ்க்கை முறையையும் இறுகிய குடும்ப பின்னணிகளையும் கொண்ட ஈழச்சமூகமானது இன்று இயந்திர வாழ்வில் தன்னை தொலைக்கின்றது என்பதனை என்னால் அவதானிக்க முடிந்தது .இதற்கு ஏதுவானகாரணிகள் எதுவாக இருக்க முடியும் ?

எதனாலும் கரையாத பழைய கல்லாகத்தானே ஈழத்தமிழ்ச்சமூகம் மாற்றங்களுக்குட்படாமல் இருக்கிறது என்பதே என்னுடைய அவதானம். தவிர, இயந்திரகதியான வாழ்க்கை என்பது உலகளாவிய விளைவு. அதில் எதுவும் தப்பிவிடமுடியாது.

தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் சாதியமானது மாறிவரும் உலகமாயதலில் நீர்த்துப் போய் உள்ளதாக எண்ணுகின்றீர்களா ?

அப்படியான சுகமான எந்தக் கற்பனைகளுக்கும் இடமில்லை. தவிர, இந்தக் கேள்வி சாதிமான்களைக் கேட்கவேண்டியது. அவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியவர்கள். சாதிமான்களே சாதியைப் பராமரிக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களிடம் கேளுங்கள். எதற்காக இன்னும் சாதி தேவை ? என்று. எதற்காக சாதியைப் பேணுகிறீர்கள் ? என. சாதியை விட்டொழிக்க முடியாமலிருப்பது ஏன் ? என்று.

உங்கள் பார்வையிலே சாதிமான்கள் என்பவர்கள் யாராக இருக்கின்றார்கள் ?

சாதியை இன்னும் அழியவிடாமல், அதை நுட்பமாகப் பராமரித்துக் கொண்டிருப்போர். அதைப் பராமரித்துக் கொண்டே சாதி இல்லை என்றும் அதைத் தாங்கள் பார்ப்பதில்லை என்றும் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருப்போர்.

என்னுடைய பார்வையில் என்றில்லை. சாதிய வேறுபாடுகளினால் தினமும் அவமானங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைவரும் இப்படித்தான் சொல்வார்கள். இது யதார்த்தம். கேவலமான கொடிய அனுபவம்.

ஈழத்திலே நீர்த்துப் போயுள்ள சாதீயத்தை புலம் பெயர்ந்தவர்களே ஊதிப்பெருப்பிக்கின்றார்கள் என்ற விமர்சனம் பொதுவெளியில் உண்டு உங்களது அவதானிப்பில் இது எப்படியாக இருக்கின்றது?

தவறு. ஈழத்தில் சாதியம் நீர்த்துப்போயுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் ? இல்லாத ஒன்றை எவர், எங்கிருந்து, எப்படித்தான் ஊதிப்பெருப்பித்தாலும் அது பெருக்காது. தங்காது. இருக்கின்ற ஒன்றை எப்படி மறைத்தாலும் அது கூடியகெதியில வெளியே தலையைக் காட்டி விடும்.
தவிர, இதைப்பற்றி எத்தனையோ பேர் பேசி விட்டார்கள். இன்னும் இந்தக் கேள்வியா ? சரி, பதில் சொல்லித்தான் ஆகவேணும் என்றால், எந்த ஊரில் சாதி இல்லை என்று சொல்லுங்கள் ? சாதியத்தைக் கடந்தவர்களாக வாழ்க்கை முறையில் எத்தனை வீதமானவர்கள் இருக்கிறார்கள் ? அத்தகைய பண்பாட்டுப்புரட்சி இந்த மண்ணிலே நடந்திருந்தால், அவற்றை ஆதாரமாக முன்வையுங்கள்.

சாதித்தொழில்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட எந்தத் தொழிலையும் மற்றச்சாதிகள் என்று சொல்லப்படுகின்றவை எவையும் செய்யத்தயாராகவில்லை. இன்னும் ஊர்களில் சாதி அடையாளங்களும் பிரிவினைகளும் ஏற்ற இறக்கங்களும் அப்படியேதான் உள்ளன. அரசாங்கப்பாடசாலைகளிலேயே சாதி ஒடுக்குமுறையும் ஓரங்கட்டல்களும் நடக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழும் சாதிய நுண்ணரசியல் பகிரங்கமானது. மறுக்கவே முடியாத ஒன்று. அதிகம் ஏன், சாதியத்தைக் கடப்பதற்கான ஒரு மார்க்கம் என நம்பப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் கூட சாதிய அதிகாரமே உள்ளது. இதுவரையில் வடக்கிலே ஒடுக்கப்பட்ட சமூகப்பின்புலத்திலிருந்து ஒரு ஆயர் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. ஆனால்,அதிகமான கிறிஸ்தவ மதகுருக்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

ஊரை விட்டுப்போனவர்கள், புலம்பெயர்ந்து பன்மைத்துவப் பண்பாட்டு நாடுகளில் சாதிய ரீதியில் வாழ்வது, அந்த அடிப்படையிலேயே, தங்கள் பிள்ளைகளுக்கான திருமணத் தேர்வுகளைச் செய்வதிலிருந்து பல வகையில் இது செழிப்பாக உள்ளது. ஆகவே ஊரிலே சாதி மறையக் கூடிய நிலையிருந்தாலும் நீங்கள் சொல்வதைப்போல இந்த இந்த வகையினர் அதை அனுமதிக்கமாட்டார்கள்.

வடபுலத்தின் நன்நீர் நிலைகள் சுன்னாகத்தில் இருக்கும் மின்சார நிலையத்தால் மாசடைந்ததாக சொல்லப்படுவது பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?

இது ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டு. இந்தப் பேராபத்தைச் சமூக விஞ்ஞானிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தெளிவாகச் சொல்லி வருகிறார்கள். இது தொடர்பான ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. கழிவு ஓயில் பிரச்சினை குடிநீரைப் பாதித்திருப்பது உண்மையே. ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாணசபை இப்பொழுது மறுத்துரைக்கிறது. இந்தத் திடீர் மறுப்புப் பலரையும் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. இதன் பின்னால் தாரளமான ஊழல்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தண்ணீருக்கான போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. கழிவு ஓயிலுக்கு அப்பால் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பது பெரிய பிரச்சினை. நிலத்தடி நீர்மாசடைந்திருக்கும் பிரச்சினை மிக ஆழமானது. அது யாழ்ப்பாணத்தை வேறு விதமாக்கக்கூடியது.

யாழ் பல்கலைக்கழகம் பற்றிய உங்கள் மதிப்பீடும்அண்மையில் அது கொண்டுவந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றிய சுற்று நிருபமும்அதன் தொடரான மீள்பெறுகையும் அதன் பின்னர் கலைப்பீட மாணவர்களினால் ஆடைகட்டுப்பாடு பற்றி விடப்பட்ட ஏற்றுக்கொள்ளல் அறிக்கை பற்றிய உங்கள் எண்ணப்பாடு எப்படியாக இருக்கின்றது ?

பல்கலைக்கழகம் கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டிய காரியங்கள் பல உண்டு. அதையெல்லாம் செய்யாமல் இந்த மாதிரிப் பயனற்ற விழல்களில் விழுந்தெழும்புவது துக்கமே. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பாழடைந்த ஒன்று. புனரமைப்புச் செய்ய வேண்டியநிலையில் உள்ளது. ஆனால், கட்டிடங்களை அல்ல. ஆடைக்கட்டுப்பாட்டு விசயம்கூட ஆச்சரியப்பட வேண்டிய விசயமல்ல. அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். பானையில் உள்ளதே அகப்பையில் வரும்.

அப்போ யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள்சமூக சிந்தனையாளர்கள் இல்லவே இல்லை என்கின்றீர்களா ?

மாற்றங்களை உண்டாக்க வல்ல சிந்தனை, செயல் என்றவகையில் உள்ள ஆளுமைகள் யாருமில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழ்ச்சூழலிலேயே இன்று அப்படியானவர்கள் இல்லை.

கருணாகரனுக்கான இலக்கிய அரசியல்தான் என்ன ?

அப்படியொன்றில்லை. வாழ்க்கையை மையப்படுத்திய, விடுதலைக்கான அரசியல் சார்ந்த இலக்கியம் உண்டு. அதைக் கடந்ததும் உண்டு. வரையறைகள் எதுவுமில்லை.கோமகன் 
ஜீவநதி -இலங்கை 

01ஆடி 2016
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.