"போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் "- நேர்காணல் - கோமகன்.வடபகுதியில் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கோமகன், தனது இளமைக்காலத்திலேயே நாட்டின் சூழ்நிலைகளினால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து நீண்டகாலமாக அங்கு வசித்து வருகின்றார்.தமிழ் எழுத்துப் பரப்பில் வேகமாக வளர்ந்துவரும் படைப்பாளிகளில் கோமகனும் ஒருவர் .சட்டகங்களில் குறுக்காத இவரது படைப்புகள் எளிமையான சொல்லாடல்களுடன் பலதரப்பு வாசகர்களை வசப்படுத்துவது இவரது பெரிய பலமாகும் .தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கோமகனின் "தனிக்கதை " என்ற சிறுகதை தொகுதி கடந்த வருடம் இவரால் கிடைக்கப் பெற்றுள்ளது . அடுத்த கட்ட முயற்சியாக தான் இதுவரை செய்த நேர்காணல்களை தொகுப்பாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் .இவர் பிரான்சில் இருந்து வெளியாகும் "நடு" இலக்கிய மின் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார் .அண்மையில் தாயகம் வந்திருந்த கோமகனை எமது பத்திரிகை குழு வாசகர்களுக்காக நேர்காணல் செய்திருந்தது .

000000000000000000000000000000


இலக்கியத் துறையில் தங்களின் ஈடுபாடு தொடர்பாக ….....?


சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கம் இருந்தது. மூத்த சகோதரர் வடகோவை வரதராஜன் ஓர் எழுத்தாளராக இருந்தமையால் அவரது கையெழுத்துப் பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் ஆர்வம் செலுத்தினேன். அதனால் புனைவில் அதிகளவான ஆர்வம் காணப்பட்டது. பின்னர் புலப்பெயர்வினால் பிரான்ஸில் தஞ்சமடைந்த நிலையில் எனது படைப்புக்களும் முடங்கின. அங்கு வெளியாகிய இரு தமிழ் சஞ்சிகைகளில் கதை, கவிதைகள் எழுதினேன். பின்னர் அவை மூடப்பட்ட நிலையில் 2011 இல் மீண்டும் இணையத்தளமொன்றில் கோமகன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். அது இணைய சஞ்சிகையாகவே அமைந்தது. அதில் "நெருடிய நெருஞ்சி" என்ற நீண்ட கதை முதன்முதலாக வெளியாகியது .இந்தக் கதையானது 25 வருடங்களின் பின் இலங்கையில் (2011 இல்) நான் நேரில்கண்ட விடயங்களை பிரதிபலிக்கும் ஒன்றாக அது அமைந்தது. தொடர்ந்து வல்லினம், ஒரு பேப்பர், ஆட்காட்டி, முகடு, மலைகள் , அம்ருதா , ஜீவநதி , எதுவரை , காலச்சுவடு போன்றவற்றில் சிறுகதைகள் ,கட்டுரைகள் ,நேர்காணல்கள் என்று தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றேன். கடந்த வருடம் கோமகனின் "தனிக்கதை" என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளேன்.

தங்களின் படைப்புகளில் தமிழ் மக்கள் யுத்தத்தின் முன்னரும் பின்னும் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டிருந்ததா ?
ஆம், உண்மையில் நெருடிய நெருஞ்சி அடிப்படையில் பயண அனுபவம். புலம்பெயர்ந்த ஓர் அகதி நாடு திரும்பும் நிலையில் தாய்நாட்டை எவ்வாறு தரிசிக்கின்றான். அதில் அவன்பெற்ற அனுபவம் என்ன என்ற களத்தை அடிப்படையாகக் கொண்டது.

"பாண்" என்ற கதையானது ஓர் உண்மை சம்பவம். இந்திய அமைதிப்படையினரின் வருகை காலத்தில் ஒரு பாண்போடும் தொழிலாளி வடமராட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரது மகன் பிரான்ஸ் சென்று அங்கு பாண்போடும் பேக்கரியில் வேலைபார்க்கின்றார். அவரது மன உணர்வுகளையும் அனுபவத்தையும் அந்தக் கதை கொண்டிருந்தது.

"அவர்கள் அப்படித்தான் " என்ற கதையானது எமது சமூகத்தில் மலையக மக்களின் இருப்பையும், இயக்கங்களின் விருப்பு வெறுப்புகளுக்கமைய இடம்பெற்ற படுகொலைகளை கேள்விக்குட்படுத்தியிருந்தது . "கிளி அம்மான் " என்ற கதை , ஓர் போராளியின் புலப்பெயர்வையும் அங்கு அவன் சந்தித்த இன்னல்களையும்இறுதியில்அவன்மனப்பிறழ்வுக்குளாகித் தற்கொலை செய்வதை சொல்லி நின்றது ."பாஸ்"போர்ட் - கதையானது இயக்கங்கள் உச்சம் பெற்ற வேளையில் எமது சனங்கள் பாஸ் எடுப்பதற்குப் பட்ட அவலங்களையும் அத்துனுடாக ஓர் இளைஞன் எவ்வாறு அந்நிய தேசத்துக்குச் செல்கின்றான் என்பதனைக் கேள்விக்குட்படுத்தி இருக்கின்றேன் .

குறிப்பாகப் போருக்கு முன்னர் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர். பின்னர் போர் நடைபெற்றபோதும், போருக்குப் பின்னரும் தாயகத் தமிழர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர் என்பதனை ஓரளவிற்கு எனது கதைகளில் கேள்விக்கு உட்படுத்தியுள்ளேன்.

இலங்கையில் யுத்தம் நடைபெற முன் ஈழ தமிழ் இலக்கியத்தின் வீச்சும் நோக்கும் ஒரு கட்டமைப்பிலும், போரின் போது வேறொரு கட்டமைப்பிலும் போரின் பின்னர் இன்னொரு வீச்சிலும் பயணித்திருந்தது. தற்பொழுது வெளியாகும் படைப்புகளில் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் ?

போருக்கு முன்னர் வெளியான படைப்புகளில் ஒற்றைப்படை தன்மைகளில், குறிப்பிட்ட அளவிலான எல்லைவரை பிரச்சினைகள் அணுகப்பட்டன படைப்பாளிகள் அந்த எல்லையினை மீறி பேசமுடியாத நிலை காணப்பட்டது. பேசியிருந்தால் அவர்களின் உயிர் இருக்காது. அதாவது பேனைகளின் எல்லைகளானது சுருக்கப்பட்டிருந்தது .ஆனால் போரின் பின்னர் ஓரளவு சுதந்திரமான கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கக்கூடிய நிலை இருந்தாலும் ஓர் இறுக்கமான சூழ்நிலையே காணப்பட்டது. (2009 முதல் 2010 வரை)

இந்தக் காலப்பகுதியில் இறுக்கமான சூழ்நிலை காணப்பட்டிருந்தாலும் போராட்டத்தின் நேரடிப் பங்காளிகளான போராளிகளால் பல போர்க்கால நாவல்கள், மற்றும் கவிதைத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருந்தன. இவை "போரியல் இலக்கியம் " என அழைக்கப்பட்டது. அதில் எமது போராட்டம், ஏன் தோல்வி அடைந்தது, போராட்டத்தின் பாதை சரியா, குழந்தைப்போராளிகள் ,மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரங்கள் என்ற பல விடயங்களை இந்த நேரடிப்பங்காளிகள் கேள்விக்குட்படுத்தியிருந்தார்கள். அத்துடன் பல சுய பரிசோதனைகள் அந்தப்படைப்புகளில் மேற்கொள்ளப்பட்டன.

போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர். ஏனென்றால் அவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்களின் கருத்துக்கள் தீவிர தமிழ் தேசிய உபாசகர்களால் மறுதலிக்கப்பட்டன. இங்கு எதுவுமே அவ்வாறு நடக்கவில்லை என மறுதலித்தனர். ஆனால் சில சம்பவங்கள், சில செயற்பாடுகள் இந்தப்படைப்பாளிகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக யோ.கர்ணனின் "கொலம்பஸின் வரைபடம் " , தமிழ் கவியின் " ஊழிக்காலம் " கவிஞர் கருணாகரனின் கவிதைத்தொகுதிகளான , "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்", "ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்“, "பலியாடு", "எதுவுமல்ல எதுவும்", “ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்“, “நெருப்பின் உதிரம்“, “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்" போன்றவை இறுதிப் போரில் என்ன நடந்தது என்பதனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருந்தன.


எதிர்வரும் நாட்களில் போராட்டத்தின் வலிகள் இருக்கும் வரை இவ்வாறான புனைவுகள் தொடர்ந்து வரும். இவை நடந்தவற்றை பிரதிபலிப்பதுடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்கப்படவேண்டும். அதேவேளை போரியல் இலக்கியம் எதிர்வரும் காலத்தில் முழு வீச்சுடன் செயற்படுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. சில வேளைகளில் வெளிநாட்டு வாசகர்களுக்காக அவை படைக்கப்பட்டாலும் காலப்போக்கில் போரியல் இலக்கியங்கள் இல்லாமல் சென்றுவிடும்.அந்த இடத்தை புலம்பெயர் இலக்கியம் தக்கவைத்துக்கொள்ளும்.

புலம்பெயர் படைப்பாளிகள் இலங்கை சமூகங்கள், நாட்டின் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக சரியான வெளிப்படுத்தல்களைக் கொண்டுள்ளனரா ?


இல்லை, ஏனெனில் 50 வீதமான படைப்பாளிகள் இந்தவிடையத்தில் தொடர்ந்து மௌனத்தையே பேணிவருகின்றனர். அவர்கள் சாதாரண படைப்புகளையே வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் புலனாய்வுத் துறை நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பாடுகளை தொடர்கின்றனர். மறுதலையாக தாயகத்தில் இறுதிப்போர்க்காலங்களில் இடம்பெற்ற அவலங்களை சயந்தனின் "ஆதிரை","சாத்திரியின் "ஆயுத எழுத்து " ஷோபா சக்தியின் "பொக்ஸ் "குணாகவியழகனின் "நஞ்சுண்ட காடு ",விடமேறிய கனவு "அப்பால் ஒரு நிலம் ", தமிழ் நதியின் "பார்த்தீனியம் " மற்றும் நேசக்கரம் சாந்தியின் "உயிரணை " போன்ற நாவல்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டின .

ஈழத்தின் வரலாற்றை பேசும் நாவல்கள் வெளியாவதில் இருக்கும் சவால்கள் ?

தமிழகத்தில் புதினங்கள், நாவல்கள் வெளியாகின்றன. அந்த படைப்புகளுக்கு 4 வருடங்கள் கூட தேவைப்படலாம். இந்தக் கால ஓட்டத்தினை ஈழத்து படைப்பாளிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இது ஓர் கவலைக்குரிய விடயமாகும். ஆனாலும் கனடாவை சேர்ந்த தேவகாந்தன், தனது நாவல்களான "கனவுச்சிறை ", " கதாகாலம் ","கந்தில் பாவை" போன்ற நாவல்கள் மூலம் ஈழத்து வரலாற்று புனைவுகளில் /புதினங்களில் எம்மிடையே தனியான இடத்தைப் பெறுகின்றார் .

போரியல் இலக்கியங்களை படைக்கும் போது போரினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பாக வெளிப்படுத்தல்களை முன்வைக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டு. இந்த நிலையில் எவ்வாறான அணுகுமுறையினை கையாளமுடியும் ?

இந்தச் சந்தர்ப்பத்தில் சில விடயங்களை சூசகமாக வெளிப்படுத்த வேண்டும். அண்மையில் கூட வெளியான சில படைப்புக்களில் கூட இதே விடயங்கள் சூசகமாக கையாளப்பட்டுள்ளது.

சமகால அரசு கருத்துச்சுதந்திர விடயத்தில் தங்களது மென்போக்கை கொண்டிருப்பதாக இருந்தாலும் இதே விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தமும் ஒரு காரணமாகும். அதனாலேயே அரசாங்கம் கருத்துச்சுதந்திர விடயத்தில் நெகிழ்சித் தன்மையைக் கொண்டிருக்கின்றது.

ஈழத்தில் நீண்டகாலத்துக்கு ஒரு சஞ்சிகையை வெளியிடுவதில் சவால்கள் காணப்படுகின்றன. இதற்கு வாசகர்களும் காரணமா ?

மிகவும் முக்கியமான காரணியாக வாசகர்கள் அமைந்து விடுகின்றனர். மல்லிகை, சிரித்திரன் ஆகியவை இருவேறுபட்ட தளங்களில் பயணித்த சுதேசப் பத்திரிகைகள் ஆகும். தற்பொழுது உலகம் மிகவும் சுருக்கியிருக்கும் நிலையில் வாசகர்களின் வாசகப்பரப்பு எண்ணிக்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை மின்சஞ்சிகைகள் கைப்பற்றியுள்ளன.

அவ்வாறெனில் நமது வெளியீடுகள் , இலத்திரனியல் ஊடகப் படைப்புக்களில் சரியாக புகவில்லையா ?


நவீன முறையில் படைப்புக்களை வெளியிட்டாலும் அச்சுப் பத்திரிகைக்கு உள்ள பெறுமதி, பத்திரிகை வாசகரின் கரங்களுக்கு சென்றடையும் போது ஏற்படும் பரவசம் புதிய தொழில்நுட்பத்தினால் வழங்க முடியாது. அதேவேளை இளம் தலைமுறை மத்தியில் வாசிப்பு மனநிலை என்பது குறைவாகவே இருக்கின்றது.

ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் ஊடகத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இதேவேளை ஏனைய சில பகுதிகளில் ஊடகத்துறையில் வளர்ச்சி காணப்படாவிடிலும் ஏனைய இடங்களில் வாசகர்களின் வாசிப்பு நிலை மட்டம் அதிகளவில் காணப்படுகின்றது. இதற்கான காரணங்களை அறிந்து வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

முன்னர் வெளியான படைப்புகளில் சாதிக்கட்டமைப்புகள் மற்றும் அதன் அடிப்படையிலான பிரச்சினைகளும் தொழிலாளர் அடக்கு முறைகள் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டது . அன்று இந்த நிலைமை மாறியுள்ளதா ? அல்லது எதிர்வரும் கால படைப்புக்கள் எவ்வாறான மாற்றங்களைக் கொண்டிருக்கவேண்டும் ?

இன்றைய நிலையில் கதை சொல்லும் உத்திகள் மாறியுள்ளன. புதிய வீச்சுகள் காணப்படுகின்றன. முன்னர் வெளியான சில படைப்புகளை அவற்றின் சொல்லாடல்களுடன் இன்று வாசிக்க முடியாது. இவ்வாறான நிலையில் உலகின் மாற்றத்திற்கு அமைவாக படைப்பாளிகளின் உள்ளீடுகள் மாறவேண்டும். ஆனால் எல்லையற்ற விதத்தில் அவை அமைந்து விடக் கூடாது.

சில படைப்பாளர்கள் சுதந்திரம் என்ற அடிப்படையில் மஞ்சள் பத்திரிகையில் வரவேண்டிய கதைகளைக் கூட இலக்கியத்தரம் என கொண்டாடும் நிலை உள்ளது. அது ஓர் எழுத்தாளனுக்குள்ள அறமல்ல.

படைப்பாளிகளின் வெற்றிக்கான ஆரோக்கியமான சூழல் வடபகுதியில் உள்ளதா ?


முற்றுமுழுதாக உள்ளதெனக்கூறமுடியாது. ஒப்பீட்டளவில் கிழக்கைவிட வடக்கு தாழ்ந்ததாகவே உள்ளது. வாசகர் வட்டம் குறைவடையும் போது சஞ்சிகைகள் வியாபார ரீதியாகப் பலவீனமான தாக்கத்தினை எதிர்கொள்ளும்.

எமது பிரச்சினையை வெளி உலகுக்கு கொண்டுவருவதில் மொழி ஒரு பிரச்சினையாக உள்ளது . இது குறித்து ?


எமது படைப்புகள் நிச்சயமாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். முதல்படியாக வடக்கு, கிழக்கிலுள்ள சகல படைப்புக்களும் சிங்கள மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவை சிங்கள மக்களை சென்றடையவேண்டும் . இருதரப்புப் படைப்பாளிகளால் மாத்திரமே இது சாத்தியமானதாகும் .அரசியல் வாதிகளால் இது சாத்தியமற்ற ஒரு செயலாகும். இதன் முதல் படியாக தமிழினியின் "கூர் வாளின் நிழல் " சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கட்டம் என்றே நினைக்கின்றேன்.அதேநேரம் எமது படைப்புகளானது ஆங்கிலம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும் போதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியும் ஆளுமையும் வேற்று நாட்டவர்களால் அறியக் கூடியதாக இருக்கும்.

தாய்நாட்டில் பிறமொழி படைப்புக்கள் வெளியாவதற்கான சாத்தியங்கள் குறைந்தளவில் காணப்படும் நிலையில், புலம்பெயர் படைப்பாளிகள் நமது மக்களின் பிரச்சினைகளை பிற சர்வதேச மொழிகளில் வெளியிடுவதில் சிக்கல்கள் உள்ளதா ? அல்லது ஏன் அவர்கள் வெளியிடக்கூடாது ?

தமிழர் புலப்பெயர்வை இருவகைப்படுத்தலாம், அவர்களது புலப்பெயர்வானது ஒன்று ஆங்கில பிரிவு நாடுகளுக்கும். மற்றையது போரின் உக்கிரத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம்பெற்றது . முதற் புலம்பெயர்ந்தவர்கள் யாழ், மேட்டிமை கலாசாரத்தை அங்கே தொடர்கின்றவர்களாகவும் ,இரண்டாம் கட்டப் புலம்பெயர்வில் ஈடுபட்டவர்கள் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற இலக்குடனும் செயற்பட்டுவருகின்றனர்.ஆனாலும் புலம்பெயர்ந்துள்ளவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மொழிகளில் படைப்பாக்கம் செய்யும் முயற்சிகள் என்பது பற்றாக்குறையாகவே உள்ளது.

ஆங்கில நாடுகளில் புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது பதவியையும் தராதரத்தையும் தக்கவைத்துக்கொண்டு படைப்புக்களில் போதியளவு ஈடுபாடற்றவர்களாக யாழ் மேட்டிமையை அங்கும் தொடர்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

படைப்பாளிகள் விரும்பியதை படைக்கக்கூடிய சூழல் இலங்கையில் தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றதா ?

இல்லை. முற்றுமுழுதாக பத்திரிகை மற்றும் கருத்துச்சுதந்திரம் இல்லை. படைப்பாளிகளுக்கு தொடர்ந்தும் அச்சம் காணப்படுகின்றது. ஏற்கனவே இந்த அச்சம் படைப்பாளிகள் மத்தியில் புதைக்கப்பட்டுள்ளது. இதனை செய்தால் இதற்கு இதுதான் விளைவு என அவர்கள் அறிந்துள்ளார்கள். அரசாங்கங்கள் மாறலாம் ஆனால் அரசுகள் விதைத்த சமன்பாடுகள் எடுபடப் பல வருட காலங்களை கழிக்கவேண்டும்.

ஆனாலும் , சுயதணிக்கைகள் காணப்படுகின்றன. இதனை அங்கத நடை என்று கூறுவார்கள். அங்கு ஓர் எள்ளல் கிள்ளல் காணப்படும். ஓர் விடயத்தை நேரடியாக தாக்கமாட்டார்கள். அவை ஒருவகையாக மறைமுகமாகவே தாக்கப்படும். அண்மையில் அகர முதல்வன் "சாகாள்" என்ற கதையை எழுதியிருந்தார். இதில் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியை சிவகாமி என விழித்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இவ்வாறான படைப்புக்களை புகலிடத்திலிருந்து வெளியிடமுடியும். ஆனால் தாயகத்தில் இருந்து வெளியிடுவது யோசிக்கவேண்டிய விடயமாகும்.

சமகாலப் படைப்புலகம் தொடர்பாக ?

இலக்கிய படைப்பாளர் தமது பொறுப்புக்களை உணர்ந்து இலக்கியம் படைத்தால் இலக்கிய உலகம் எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கும். மஞ்சள் பத்திரிகையில் வரும் கதைகளை இலக்கிய தரமாக கூறுகிறார்கள். இது பாரதூரமான பின்விளைவுகளைத் தரும். முன்னர் கட்டுக்கோப்பில் இருந்த இளைய சமுதாயம் தற்பொழுது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தில் உள்ளது. அதற்கு படைப்பாளிகள் ஊக்கிகளாக இருக்கக் கூடாது. அவர்களது படைப்புகளானது பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் . சமகாலத்தில் இடம் பெறும் பாலியல் வன்முறைகள் , கூட்டு வன்புணர்வுகள் உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு படைப்பாளிகள் ஏதோ ஒருவகையில் ஊக்கிகளாகவே இருக்கின்றனர்.

தாங்கள் புதிய இணைய சஞ்சிகை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளீர்களா? இது குறித்து?


"நடு", என்ற இணைய சஞ்சிகையை ஆரம்பிக்கவுள்ளேன். "நடு" என்பதனை விதைத்தல்,மத்தி, நீதி என பல்வேறு வகையில்ப் பொருள்கொள்ளலாம் .இதில் எந்தவிதமான வரையறைகளும் இன்றி ஆக்கங்கள் வெளியிடப்படும்.


நன்றி : தினக்குரல் -இலங்கை .
14 ஆவணி 2016
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.